Social Icons

Pages

Sunday, January 16, 2011

சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!

நட்டநடு நிசியில் கொதிக்கும் வெய்யிலில் வியர்க்க விறுவிறுக்க சாலையில் நடக்கிறேன். ஔரங்கசீப் நட்டுவைத்த சந்தனமரங்களெல்லாம் நிழல் பரப்பி கிளைகளை அசைத்தது. காற்றில் சந்தனவாசனை மிதந்தது.

'சந்தனக் காற்றே! செந்தமிழ் ஊற்றே" எனக்கவிதை ஒன்று சொந்தமாய் நானே எழுதியது பாட்டாக என்னுள் பிரவாகமெடுக்கிறது. வெள்ளைக்குயில் ஒன்று முழிகளை உருட்டியது. ஆந்தைகீதம் பாடியது. சட்டென மழைத்தூவி எனது கவிதைமேதைத்தனத்திற்கு ஆசிவழங்கிவிட்டு அசரீரி கொடுத்ததுவானம். 'இந்த மழைபோதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?'

'ஓ போதும் வானமே நிறுத்திக்கொள்' என்றதும் ஷவரை ஆ·ப் செய்தது.

அடுத்தகணம்...

மின்னலடித்து என்னைப்பார்த்துக் கண் அடித்தான் வானவன். என்ன அநியாயம் ஒருஇளம்(!)பெண் தனியே நடுஇரவில் நடந்தால் இப்படியா வானவனே கண்அடிப்பதா? 'இதக்கேட்பாரில்லயா?' என வாய் விட்டு அலறியேவிட்டேன். உடனே பெருங்கூட்டம் கூடிவிட்டது.

எல்லாரும் என்னைத் தேற்ற வந்தார்கள் என நினைத்தேன் ஆனால் அத்தனைபேரும்'யாரிந்த இன்னொரு ஐஸ்வர்யா ராய்?' என்றுதான்(ஓவர்தான் பொறுத்துக்குங்க கதை முடிவுவரைக்கும்!) நோட்டமிட்டர்களே தவிர தனியே தவித்தவளுக்கு ஆறுதல் சொல்லக்காணோம்... சரியான ஜொள்ளுப்பார்ட்டிகள்பா! மேலே நடந்தேன்.

யாரது இருட்டில் பதுங்கிபதுங்கி நடப்பது? உடலிருக்கு காலைகாணோம்
யாராயிருக்கும்?

யோசித்தேன்

பிறகு கோபமாய், 'ஏய் ! நீ ரொம்ப அசிங்கமாயிருக்கே!' என்றேன். அப்போதுதான் அந்த மீசையை கவனித்தேன்..ஓ வீரப்பனா? இல்லை இல்லை அவனது ஆவி! ஆவிக்குத்தான் காலிருக்காது.

"ஹேய், உன்னத்தான் விஜய்குமார் சுட்டுட்டாரே உன்னைப்பத்தி இப்போ பேப்பர்ல ஒண்ணும் செய்தி கிடையாது . நீ எதுக்கு இப்போ ஆவியா வேற வந்து அலையறே? இப்பவும் யாரையாவது கடத்ற ஐடியாவா என்ன?"

இப்படி நான் கேட்டதும்,'தாயே! ஆவியாக வந்த என்னை அடையாளம் கண்ட ஆதிபராசக்தி! நீயே காளீ(லி?)! அம்மா! மலைமகளே!(ஷைலஜாக்கு தமிழாக்கம் மலைமகளாம் பாருங்க வீரப்பனுக்கு என்னே தமிழ் அறிவு!) நான் காட்டுல பதுக்கி வச்ச கோடிக்கணக்கான பொருள் எல்லாம் சுருட்டிகிட்டு திரும்ப வந்துட்டுருக்கேன்மா! என்னயக் கண்டுபிடிச்ச உனக்கு தொண்ணூறு லட்சம் தரேன் தாயீ! காட்டிகொடுத்துடாதே கருணைதெய்வமே!' என்று கெஞ்சினான். எனக்குப் பல லட்சங்களை வாரிகொடுத்த அந்த கே(¡)டீஸ்வரனுக்கு நன்றி எல்லாம் சொல்லவில்லை.'சரிசரி..எல்லாம் ஆயிரம் ரூபா நோட்டா இருக்கட்டும்?' என்று மிரட்டிவைத்தேன்.

பணத்தை அப்படியே கைப்பையில் அலட்சியமாய் வைத்தபடி நடையை துரிதமாக்கினேன். பாதிவழியில் போகும்போது எதிரே தூரத்தில் இரண்டு பேர் மிகவும் நட்புடன் மனம்விட்டு பேசிவருவதைக் கண்டேன் ,'ஆ' என சின்னதாய் வீறிட்டுவிட்டேன்.

மஞ்சள்துண்டு தோளில் அசைய வீரநடைபோட்டுவருபவர் யார் கருணா நிதியா? ஆமாமாமாம். அவரேதான். அருகில் யார் பச்சை சேலையை கழுத்து வரை மூடி நடப்பவர்? சாட்சாத் ஜயலலிதா அம்மாதான். ஐய்யெயோ இவங்ககிட்ட மாட்டிகிட்டா ஆபத்துப்பா..

கலைஞர் தனது புது கவிதைத் தொகுப்பிற்கு நல்ல தலைப்பு சொல்லும்படி என்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்கார். இளைஞன் படத்திற்கு விமர்சனம் எழுத சொல்லுவார்!அம்மாவோ என்னிடம்,'எப்படி(குண்டா) இருந்த நீ இப்படி(இளைச்சித்துரும்பா)ப்போனே அதன் ரகசியம் என்ன எனக்கும் சொல்லு?' எனக் கேட்டு என்னை இம்சை செய்வாங்கப்பா...இவங்ககிட்டேயிருந்து தப்பிச்சே ஆகணும்.

துப்பட்டாவை எடுத்து முகத்தை மறைக்கிறேன். சட்டென எங்கும் இருட்டு சூழ்கிறது. நிலவுமுகம் அல்லவா அதான்.. இருட்டுல நான் வேற பக்கமா வந்துடறேன். அப்பாடி அந்த இரண்டு பேருகிட்டேருந்தும் தப்பிச்சேனே? மறுபடி துப்பட்டாவை முகத்திலிருந்து எடுக்கிறேன். பளீரென ஒளீவெள்ளம்!

வெளிச்சத்தில் சாலை ஓரமாயிருந்த அந்தக்கோயிலை கவனிக்கிறேன்! அருகில் சென்று பார்க்கிறேன்,கோயில் கல்வெட்டில் அதை பெரியார் 1965ல் கும்பாபிஷேகம் செய்து வைத்ததாக எழுதிருந்தனர். வாசலில் அருள்மொழியின் பக்திச்சுவை சொட்டும் உபந்நியாசப்பேருரை!

கமல்ஹாசன் நெற்றியில் நாமம் அணிந்து, பட்டுவேஷ்டியுடன் என்னை பார்த்து கைகுவித்தார். கோயிலில் தொண்டு செய்கிறாராம் நடித்தநேரம்போக.ஆஹா என்ன பக்தி பாருங்க அவருக்கு.

சாமிக்கு ஒரு பூமாலை வாங்கிப்போகலாமென எதிரில் தெரிந்த ஒரு கடைக்குள் நுழைகிறேன்.

தங்கத்தாமரை, பொன்மல்லிகைமொட்டுக்களாகவே காணப்பட்டன.

'முழம் மூணு ரூபா தங்கக்கட்டி மாலை" என்றாள் பூக்காரி.

அட! பூமாலை கிடையாதா என்ன?

'இங்கவாமா, வைரக்கட்டி மாலை சாமிக்கு போடு..முழம் ரெண்டே ரூவா?"

இன்னொரு கடைக்காரி அழைத்தாள்.

தங்கமும் வைரமும் சீரழிந்ததை பார்க்கமுடியவில்லை, ஓரத்து குப்பைத் தொட்டியில் பழையமாடல் பிடிக்கவில்லை எனப்பேசியபடி ஒரு கூடை நகைகளை பெண்மணி ஒருத்தி வீசி எறிந்தாள்.

இதாவது பரவாயில்லை வெங்காயம் மூட்டைமூட்டையாக வீசி வெளில எறிந்துகொண்டிருந்தார்கள்.

சட்டென என் செல்போன் ஒலிக்கவும் எடுத்து காதில் வைக்கிறேன், 'ஹலோ?' என்கிறேன்.

ஹலோ.. நாந்தான் ஒபாமா பேசறேன் ..இன்னிக்குபொங்கல் நன்னாள். உங்க வீட்டுக்கு சக்கரைப் பொங்கல் சாப்பிட வரட்டுமா? மூட நெய் பெய்து முழங்கை வழிவார என்று ஆண்டாள் திருப்பாவையைப் படிதது முதல் சக்கரைபொங்கல் சாப்பிட தாளாத ஆசை."
எப்படியோ இவரும் என் செல் நம்பர் தெரிந்து போன் செய்துவிட்டாரே...மகிழ்ச்சியா இருந்தாலும் பொங்கலுக்குப்போட வீட்ல முந்திரிபருப்பு இல்லயே என்ன செய்வது?
யோசிக்கிறேன்,

பிறகு, "ஒபாமா! இன்னொரு நாள் வாங்கப்பா..வீட்ல முந்திரிப்பருப்பு இல்ல..அதில்லாம எனக்கு சக்கரைபொங்கல் செய்ய இயலாது.

”சக்கரைப்பொங்கல் என்று எழுதிய பேப்பரையாவது கண்ணால்பார்த்துப்போகவரேனே ப்ளீஸ்?:” கெஞ்சினார்

சரி வாங்கன்னு சொல்லி முந்திரிப்பருப்பு இல்லாமலே சக்கரைப்பொங்கல் செய்துபோட்டுவிட்டேன். இதற்கு ஆஸ்கார் அவார்ட் தரப்போவதாக சொல்லிப்போனார்.ஒபாமா கொஞ்சம் சமத்து.

ஆனா பில்கேட்ஸ் ரொம்ப மோசம் ஒரு மசால்தோசைக்கு என்னை என்னவெல்லாம் பாடாய் படுதினார் அன்று?

போன வாரம் ஒருநாள்....

பில்கேட்ஸ் சொல்லாம கொள்ளாம எங்க விட்டுக்கு வந்துட்டார். கையும் ஓடல காலும் ஓடல எங்களுக்கெல்லாம். வந்ததும் மசால் தோசை வேணும்னு கேட்டார்.

அதெல்லாம் ரெடி செய்ணும் இருங்கன்னு சொன்னேன் கோபம் வந்து முறைச்சார் நான் உடனே பின்லெடனுக்கு போன் செய்து 'பின்! இந்த பில் ரொம்ப பிடிவாதம் பிடிக்கறார் நீதான் வந்து அதட்டணும்'னு ரகசியமா கத்தினதை பில் கேட்டுவிட்டார்.

கோபம் தலைக்கேற, மீசை துடிக்க பெரிய முழியை உருட்டி பேச ஆரம்பித்தார். "ஆ! அந்த ஒற்றனை உனக்குத் தெரியுமா? அவன் உலக மகாக் கள்ளன். அவனோடு உனக்கென்ன பேச்சு? அவன் உனக்கு மாமனா(ரா)மச்சானா? தமிழ்மணத்தில் பதிவுகள் எழுதிக்குவித்தவனா? என்னோடு போருக்கு வந்தானா டாங்கரை வீழ்த்தினானா எம்குல அமெரிக்கப்பெண்களூக்கு அரிசி உப்பும்மாதான் செய்யக் கத்துக் கொடுத்தானா?"

பில் பாட்டுக்கு வீ.பா.க, டயலாக் சொல்லீட்டே போனார். நல்லவேளையாக என் கணவர் நைசாக பின்கட்டுவழியாகப்போய் ஹோட்டலிலிருந்து மசால் தோசை வாங்கி வந்தாரோ பில்கேட்சின் வாயை அடைக்கமுடிஞ்சிதோ? (தோசைமூணுநாளையதாம். மகா பழசு என பிறகு சரக்குமாஸ்டர் தெரிவித்தார்)


பழைய நினைவுகளில் மூழ்கியதில் எங்கும் ப்ளாக் அண்ட் ஒயிட் டாகவும் புகை புகையாகவும் இருக்கவே தட்டுத்தடுமாறி ஒரு அன்னதான சத்திரவாசலுக்கு வருகிறேன். பசிக்கு ஏதும் சாப்பிடணுமே?

வாசலில் இலவச போஜனம் என்று எழுதி இருக்கவும் சாப்பிடலாமென உள்ளே நுழைகிறேன். எனக்கெல்லாம் போஜனமே கிடையாதாம்...போகச் சொல்லிவிட்டனர்.

காரணம் என்ன உங்களுக்குத் தெரியுமா ?!

(பிகு...கட்டுரையை குழுவில் அளித்தேன் முதலில் மலேசியாவிலிருந்து மீனா இதற்காக எனக்கு வெங்காயமாலையைப்பரிசாக அனுப்பிவிட்டார் இங்க அதான் பாருங்க..அதற்குமுன் தங்க வைர பிளாட்டின மாலைலாம் தூசு என்று கீ......ழே அதைத்தள்ளிட்டேன்!!


மேலும் படிக்க... "சக்கரைப்பொங்கல் சாப்பிடவந்தார் ஜனாதிபதி ஒபாமா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.