Social Icons

Pages

Saturday, September 19, 2015

பாசம் எப்போதும் தொடர்கதைதான்!இரண்டுவருஷமாய் நான் இந்தியாவிற்குப்போகவே இல்லை. அதற்குமுன்புவரை வருடம்ஒருமுறைதவறாமல் போவது வழக்கமாக இருந்தது. ஒவ்வொருமுறையும் இருபதுநாளுக்குமேல் லீவ் எடுத்துக்கொண்டு வீட்டில் அப்பா அம்மா அண்ணா மன்னி தம்பிதங்கை அண்ணாவின் குழந்தை ப்ரியாக்குட்டியுடன் பொழுதினைக்கழித்துவருவேன்.மலைக்கோட்டை, சமயபுரம்,
கல்லணை,முக்கொம்பு,வயலூர் என்று பெரிய திட்டங்களோடுதான்
துபாயைவிட்டுப்புறப்படுவேன் ஆனால் அங்கெல்லாம் போக நேரம் கிடைக்காத அளவுக்கு வீடு என்னைக் கட்டிப் போட்டுவிடும்.இந்தவருடமும் ஊருக்குப்போகவேண்டாமென்றுதான் இருந்தேன் ஆனால் போனவாரம் போனில்ப்ரியாகுட்டி,"சித்தப்பா எப்போ வரே?' என்று கேட்டதும் மனது கேட்கவில்லை.
புறப்பட்டுவிட்டேன்!
காவிரிப்பாலத்தில் டாக்சியில் வரும்போதே காலைநேரத்து இளம்குளிரோடுவீசியகாற்றில் உடலிற்குப் புதுத்தெம்பு வந்துவிட்டது.மாம்பழச்சாலையைக் கடந்து ஊருக்குள் டாக்சிநுழையும்போது எதிரே விண்ணைமுட்டும்ராஜகோபுரம் 'வா வா' என அழைப்பதுபோல இருக்கிறது.


தெற்குவாசலில் டாக்சியை நிறுத்தசொல்லி மன்னிக்குப் பிடிக்குமே என்று ஜாதிமல்லிபத்துமுழமும், கோபுரத்துஅடியில் கூறுகட்டி
விற்றுக்கொண்டிருந்தவளிடம் அம்மாவுக்காக கொய்யாபழமும் வாங்கிக்கொள்கிறேன்.
டாக்சியின் எஃப் எம் கமல்படத்தின் ’ உன்னைக்காணாமல்...’என்றது.போனமுறை ஊர்வந்தபோதுதீப்தா எனக்குப்பாடிக்காட்டிய பாடல்! என் இனிய சிநேகிதியான அவளுக்கும் குடும்பச் சுமை அதிகம்,அதுவும்அவள் அப்பாவின் மறைவிற்குப்பிறகு, உள்ளூரில் ஒருசீட்டுக்கம்பெனியில் பணிபுரிகிறாளாம், மாதம்நாலாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக


சித்திரை வீதிவழியே டாக்சிபோகும்போது இரண்டுவருடங்களில் கொஞ்சமும் மாறாத என்ஊரைப்பெருமையுடன்பார்த்துக்கொள்கிறேன்.


. தேரடியில் ரங்கப்ரசாத் மற்றும் பாபு, சுதர்சனுடன் கிரிக்கெட் விளையாடியதைமனம் அசைபோட்டது.
?யாரு பரத்வாஜனா? ஏண்டாப்பா, ரண்டுவருஷம் கழிச்சி வரபோல்ருக்கு?"
எதிர்வீட்டுதிண்ணையிலிருந்து மூக்குக்கண்ணாடியை எடுத்து மறுபடி அணிந்தபடியேகிச்சாமாமா குரல்கொடுத்தார்.
"ஹைய்யா சித்தப்பா வந்தாச்சு:!" ஓடிவந்தது ப்ரியாகுட்டி. அட! ப்ரியாக்குட்டிஎப்படி வளர்ந்துட்டது!

டாக்சியை அனுப்பிவிட்டு நிமிர்கிறேன்.வீட்டுவாசல்கதவை அடைத்துக்கொண்டு உறவுப்பட்டாளம்!பார்வையாலேயே பாசத்தைப்பொழிந்தார் அப்பா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியராய்பணிபுரிந்தபோது அதிகம் பேசிய களைப்போ என்னவோ ஓய்வுபெற்றதிலிருந்து அப்பாயாருடனுமே அதிகம் பேசுவதில்லை."அதில்லைடா பரத் உங்கப்பாக்கு குடும்பச்சுமையை உன்மேல ஏத்திட்டோ மேன்னுமனசுக்குள்ள குறுகுறுப்பு உங்கண்ணாக்கும் சுமாரான சம்பளம்தான். சேமிப்பும்அதிகமில்லை..குடும்பம் ஓடணும்னுதான் படிச்சதுமே நீ துபாய் போய் பணம்அனுப்பிண்டு இருக்கே..பாவம் ...நாங்கள்ளாம் வாய்விட்டு சொல்லிடுவோம்...உங்கப்பா மனசுக்குள் வச்சிண்டு குமைவார். அதான் மௌனசாமியாராய் ஆயிட்டார்"என்று போனதடவையே அம்மா சொன்னாள்

.


"ரண்டுவருஷமாச்சே கண்ணா எப்டிப்பா இருக்க? என்னவோ இந்தக்குடும்பம் முன்னேறவும்வீட்டுக்கடனை அடைக்கவும் உன்னை
அவ்வளோ தூரத்துக்கு அனுப்பிட்டோ மேன்னு பலசமயம் வருத்தமா இருக்குப்பா"


அம்மா இப்போதும் பார்த்ததும் கண்பனித்தாள்.
"வாங்கோ! போனவருஷம் வருவேள்னு ரொம்ப எதிர்பார்த்தோம்"என்றாள் மன்னி. கல்யாணமாகி ஆறுவருடங்களாகியும் மாறாத புன்னகைமுகம்.
" அதான் லீவே கிடைக்கலை வரமுடியலைன்னு போன்ல சொல்வானே விஜி? இப்போ லீவ்கிடைச்சிருக்கு ஓடிவந்துட்டான் என் தம்பி!...வாடா பரத்...எப்படீ இருக்கே? அம்மா! அவனுக்கு ஃபில்டர்காஃபி புதுப்பால்லபுதுசா போட்டுக்கொடு" அண்ணா ராஜு தோளைத்தட்டி வரவேற்றான்

.


"பரத் அண்ணா! நான் இந்தவருஷம் ப்ளஸ்டூக்கு ரொம்ப ஹார்ட் ஒர்க் பண்ணிபடிக்கறேன்'


'நானும்:தான்"
இரட்டைசகோதர உறவுகள் சேர்ந்துகுரல் கொடுத்தன."இந்தவருஷமும் நீ வரலேன்னா நாங்க கடனை உடனைவாங்கி டிக்கட்போட்டுண்டுதுபாய்வந்துருப்போம்,தெரியுமா அப்படி
ஏங்கிட்டோ ம்டா பரத்! போன்ல எத்தனை பேசினாலும் நேர்ல பாக்றாப்ல ஆகுமா சொல்லு?"
"வந்ததும்வராததுமா அவனை ஆயிரம் கேள்வி கேக்காதங்களேண்டிம்மா.. பரத்! ஊஞ்சல்லஉக்காருப்பா... டீ சித்ரா! fan போடேன் சித்த..குழந்தை வெளிநாட்ல ஏசிகீசின்னு சௌகர்யமா இருப்பான் இங்க வந்த சித்த நாழிலகறுத்துப்போயிட்டான்பாரு.." அத்தை-அப்பாவின் மூத்த சகோதரி- வாஞ்சையுடன் என்
தலையைக் கோதிவிட்டாள்.
. :அம்மா சூடாய் வெண்பொங்கலும் கத்திரிக்காய் சுட்ட கொத்சும் தட்டில் வைத்துஎன்னிடம் நீட்டினாள்.தங்கநிறத்தில் வறுபட்டமுந்திரிகளும், பொம்மைமுயலின்கண்களைப்போல முழித்துக்கொண்டிருந்த மிளகும் நாக்கில் நீர் ஊறவைத்தது.
புழக்கடைப்பக்கம் போய் கிணற்றடியில் கைகால் அலம்பிக்கொண்டுவந்து தட்டைஅம்மாவிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.
"காஃபி முதல்ல தரக்கூடாதோ?" அண்ணா கத்தினான்."பசியா இருக்குமோன்னு முதல்ல டிபனைத் தந்தேன்..முடிச்சதும் காஃபி கலந்துட்டாபோச்சு"


"பொங்கலோட வடையும் பண்ணி இருக்கலாம்னு இப்போ தோண்றது

..சாப்பாட்டுக்குப்பண்ணிடலாம்மா...மச்சினருக்கு தயிர்வடைன்னா ரொம்பவேபிடிக்குமே?" மன்னி உருகினாள்."நேத்தே திரட்டிப்பால் கிளறிவச்சிட்ட்டேன் குழந்தைக்கு தட்ல ஓரமா போடேன்பத்மா,சொல்லணுமாக்கும்? "அத்தை அதட்டினாள் அம்மாவை அன்பாக.


வாங்கிவந்த சாமான்களை அனைவரிடமும் கொடுத்தபோது கண்களில் மகிழ்ச்சிதவழ நன்றிதெரிவித்தனர்.
"எதுக்குடா இப்படி சிரமம் எடுத்துக்கறே?"அண்ணன் அன்பாய்கடிந்துகொண்டான்.


ஊரும் மாறவில்லை என்வீட்டுமனிதர்களும்மாறவில்லை என்னும்போது எனக்குப்பெருமையாகஇருக்கிறது.
"கொள்ளிடம்போய்குளிச்சிட்டுவந்துடறேன்" என்றபோது அப்பா தன் சைக்கிள்சாவியைஎன்னிடம் தந்தார். நடந்துபோகக்கூடாதாம்!
படித்துறையில் தீப்தா துணி துவைத்துக்கொண்டிருந்தவள், என்னைக்ண்டதும்,"பரத்எப்போ வந்தே? "என்று வியப்பாய் கேட்டாள்.சிறிதுநேரம் நாஞ்சில்நாடனையும் ஜெயகாந்தனையும் அலசினோம்."ஜெயகாந்தனும் போயிட்டாரேடா பரத் நம்பவேமுடியல""ஆமா ...மனசுக்கு ரொம்பக்கஷ்டமா இருக்கு..""என்னவோபோ..சொல்லிக்காம வர ஒரேவிருந்தாளி மரணம்தான்...
அதுபோக்கட்டும்..நாளைக்கு ஆடும்பல்லக்குடா, பரத்...வாசல்பூரா
கோலம் வழக்கம்போலப்போடப்போறேன்..நீவந்து பார்த்து கருத்து சொல்லணும் என்ன?""இந்த கம்ப்யூட்டர் யுகத்துலயும் சின்னக் குழந்தைமாதிரி கோலம்போடறதும்கொள்ளிடக்குளியலுமாய் அது இதுன்னு இருக்கியா தீப்தா?""மனசுக்கு சந்தோஷமான விஷயங்களை எதுக்கு மாத்திக்கணும் அல்லதுமறக்கணும் , அதுவேமத்த துக்கங்களை மறக்க ஒருகருவியா இருக்கறப்போ?"நான் சிரித்தபடி வேறுபக்கம் நகர்ந்தேன்ஆயிற்று ஊருக்குபோகிற நாள் வந்தாயிற்று.எந்நேரமும் விரல்பிடித்துக்கொண்டே விளையாடிய ப்ரியாகுட்டி..


பார்வையால் வருடும் அப்பா..


வாய்க்கு ருசியாய் சமைத்துப்போடும் அம்மாவும் அதனை வயிறாரப் பரிமாறியமன்னியும்
..


பாடங்களில் சந்தேகம்கேட்டு என்னைப்பெரிய ஆசிரியர் போல மதிக்கும் என்உடன்பிறப்புகள்..
'துபாய்ல உப்பு,புளிகிடைக்குமா ?நல்ல ஹோட்டல் இருக்கா? உடம்புக்கு ஏதாவதுன்னாயாருடா பக்கத்துல இருக்கா உனக்கு?'

அத்தையின் அன்பான அக்கறையான கேள்விகள்.'பரத்! அம்மா அப்பாவைப்பத்தி கவலையேபடாதே ...நானும்மன்னியும் நன்னாபாத்துக்றோம் என்ன? "

அண்ணாவின் அனுசரணையான பேச்சு..சிநேகிதம் என்கிற எல்லைக்கோடிற்குள்லேயே எப்போதும் இருந்துகொண்டுபழகும்அன்புதோழி தீப்தா...

எல்லாரையும் விட்டு ஊருக்குபுறப்படவேண்டுமே என்றிருக்கிறது.


அப்பாமட்டும் எவ்வளவு தடுத்தும் சென்னை செல்லும் ரயிலில் ஏற்றிவிட ஸ்ரீரங்கம்ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்.ரயில் வருவதற்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போது அப்பா என்னிடம்,


"பரத்! உன்கிட்ட வந்ததுலேந்து கேட்க நினச்சேன் , இப்போ கேட்டுட்றேன்.. உன் தலைலகுடும்பச்சுமைய ஏத்திட்டோம்ன்னு எங்கபேர்ல கோபமா? அதனால்தானே நீ இத்தனை நாளாய்ஊர்பக்கமே வரலயா?" என்றார்.
'ஐயோ அப்பா! இந்தப்பேச்சுக்கு உங்கள் மௌனமே பரவாயில்லை' என்று கத்தவேண்டும்போலிருந்தது.என்னையே பார்த்துகொண்டிருந்த அப்பாவின் விரல்களை பிடித்துக்கொள்கிறேன்.


"அ அ ..அ.ப்.பா! " வார்த்தைகள் உடைந்து வந்தன .
இருபத்தி ஏழுவயதில் இருபதுவயதை முழுங்கிவிட்டு, சிறுவனாய் கதறஆரம்பிக்கிறேன்.


"அப்பா ஒவ்வொரு தடவை ஊருக்கு வந்துவிட்டுப்போகிற போதெல்லாம் உங்க எல்லாருடையபாசத்தையும் பரிவையும் அனுபவிச்சிட்டுதிரும்பி துபாய் போனதும் பலநாட்களுக்கு என்னால் இதிலிருந்துமீளமுடிவதில்லை.. எதையுமே ருசிகண்டால்தானே அவஸ்தை?என்னால் ஆசையை அடக்கமுடியும்போல இருக்கு... ஆனா அவஸ்தையை தாங்கமுடியலப்பா..அதான் இத்தனை நாளா வரல...இப்போ மறுபடி துபாய்போனதும் இந்த அவஸ்தைதொடரபோகிறதுப்பா.." நான் முடிக்கவும் உடனே


"ப..ர..த்!"  என்ற அப்பாவின் குரலில் மேலும் கரைந்துவிடவும் இருந்த நிலையில், நல்லவேளையாய் ரயில் வந்துவிட்டது .
மேலும் படிக்க... "பாசம் எப்போதும் தொடர்கதைதான்!"

Friday, September 18, 2015

இராவண வதம்!
கம்பகாவியத்தின் கடைசிப்பகுதி யுத்தகாண்டம்!

‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்னும்நம்மாழ்வாரின் திருவாய்மொழி பணித்த வண்ணம் இராமபிரானைக்கற்கத்தொடங்கிய கம்பன் வால்மீகியின் வழியில் இராமாயணத்தைப் பாடத்துவங்கினான். வால்மீகியை ஏற்றும் தழுவியும் சற்றே மாற்றியும் மெருகூட்டியும் கதைப்போக்கு, கற்பனை, வருணனை ,பாத்திரப்படைப்பு ,காட்சி அமைப்பு போன்றவற்றில் புதுமை செய்து பாடலானான். ஆழ்வார்களின் அருளிச்செயலில் அவன் கொண்டிருந்த ஈடுபாடு எல்லையற்றதாகவே  தோன்றுகிறது.

கம்பனின்  பிரபலமான  பாடலான ’மைவண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்கு கண்டேன்.

என்பதின்  தாக்கம்  அவன் ஆழ்ந்து நேசித்த ஆழ்வார்பெருமானின் 

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற *
பின்னைவண்ணம் கொணடல்வண்ணம் வண்ணமெண்ணுங்கால்*
பொன்னின்வண்ணம்மணியின் வண்ணம் புரையுந்திருமேனி*
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரிரே!

என்கிறபாடலை நினைக்கவைக்கிறது.

 இனி யுத்தகளத்தை  பார்க்கலாம்.
. இராம- இராவண யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.. இராவணன்  சரமாரியாக அம்புகளை அண்ணல்மீதுவிடுகிறான். இராமரும் எதிரி தளர்ச்சி அடையும்வரை பாணங்களை செலுத்துகிறார். 

இராவணன்  தலை கடலில்  விழும்போது தேவர்கள் நிலையை கம்பன் இப்படிச்சொல்கிறான்.

குதித்தனர்  பாரிடைக்குன்று கூட்டற
மிதித்தனர் வடகமும் தூசும் வீசினர்
துதித்தனர் பாடினர் ஆடித்துள்ளினர்
மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்..

(வடகம்  என்றால்  மெல்லிய ஆடையாம்! தூசு-=அரையாடை)

ஒருகட்டத்தில்  இராமபாணங்களால் இராவணன் தேரில் மூர்ச்சித்து விழுந்துவிட  இராமனின் தேரோட்டி மாதலி சொல்கிறான்.”உணர்வு தெளிந்துவிட்டால் இவனை ஒன்றும் செய்யமுடியாது இதுதான் சமயம்  இப்போதே இவனை அழித்திடுங்கள் ஐயனே” என்கிறான்.

‘அது நீதியல்ல’என்கிறான் இராமன்.

உணர்வு  மீண்ட இராவணன் மறுபடி இராமரைத்தாக்குகிறான். கடைசியில் இராமன் பிரும்மாஸ்திரத்தை எடுத்து இராவணன் மார்பில் செலுத்தவும் அவன்  நிலைகுலைந்து வீழ்கிறான்.இராவண வதம் இறுதியாக  முடிவடைகிறது.

இராகவன் தன்புனித வாளி உடல்புகுந்துதடவியதால் மனச்சிறையில்  சுரந்த காதற்பித்து நீங்க அவன் முகங்கள் மாசு நீங்கி பொன்போல பொலிந்தன என்பதை கம்பன் இப்படி சொல்கிறார்.. அடங்க அடங்க என்று  வரிக்குவரி சொல்லி நம்மை வியப்பில் வாய் அடங்க(அடைக்க) வைக்கிறார்! 

வெம்மடங்கல் வெகுண்டனைய சினம் அடங்க மனம்அடங்க வினையும் வீயத்
தெம்மடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க மயல்அடங்க ஆற்றல் தேயத் தம்அடங்கு முனிவரையும் தலை அடங்க
நிலை அடங்கச் சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தன அம் முறைதுறந்தான்
உயிர்துறந்த முகங்கள் அம்மா.
வீரமும்சினமும் அவனுக்கு தவறாகப் பயன்பட்டமையால் அவனது மேன்மைமிகு ,அனைத்து முனிவர்களின் தலைமைத் தன்மை கொண்ட தவக் களையை அவன் முகம்இழந்திருந்ததுஇன்று அத்தனை சினமும்,வீரமும் அடங்கிப் போனதால் ,தவக் களை உயிர் பெற்று முன்ன தன் நிலை மாறி மூன்று பங்கு பொலிவுற்று இன்று காணப் படுகிறது.

இராவணன் சிரத்தைக்கொய்ததை  திருமங்கை ஆழ்வார் இப்படிச்சொல்லுவார்

 . …… இலங்கைக்கோனை
பானுநேர் சரத்தால்பனங்கனிபோலப்
பருமுடி உதிரவில் வளைத்தோன்..’

பனங்கனிபோல என்னும் உவமை அரக்கனின் பத்துதலைகளையும் கொத்தாகப்பறித்து உதிர்த்த எளிமையைக்காட்டுகிறது. ஆழ்வாரின் இந்த உவமையை அப்படியே ஏற்றுக்கொண்டு கம்பன் இடத்தைமட்டும் மாறி இருக்கிறான்,கதை மாந்தரிலும் மாற்றம் செய்திருக்கிறான்
சடாயு உயிர்நீத்த படலத்தில்  இப்படி ஒரு பாடலை கம்பன் அளிக்கிறான்.

…தத்து உற்று அயரேல்தால பலத்தினேலும்
 கொத்தப்பன கொண்டிவன் கொண்டன வெற்றி வாசை
 பத்திற்கு மின்றே பலியீவது பார்த்தியென்றான்’

.’’  அழாதே சீதை.பனப்பழங்களின் கொத்துபோல ஒரு நிரையாக அடர்ந்துள்ள இவனது பத்துதலைகளையும் நான் அறுத்து  பத்துதிக்குகளுக்கும் பலிகொடுக்கிறேன் பார் ‘என்று ஜடாயு வை பேசவைத்த சிறப்பு கம்பனுக்கே உரியது.

 ஆழ்வார்பெருமக்கள் ராவண வதத்தை புகழ்ந்து பாடினதுபோல ஆண்டாளும்
மாதலிதேர்முன்பு கோல்கொள்ள
 மாயன் இராவணன்மேல்
 சரமாரி தாய்தலை
அற்றற்று வீழத்தொடுத்த
 தலைவன் வரவெங்கும் காணேன்  
என்பதாக  குயிலைநோக்கி நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்..

இராமன் இரதமிருந்துகீழிறங்கி இறந்துகிடக்கும் இராவணனைப்பார்க்கிறானாம்..

பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தவன் இராமன்.சினத்தினால் தென்னிலங்கைகோமானைச்செற்ற மனதுக்கினியானாகிய  இராமனுக்கு இராவணனை  வென்றமை தனக்கு சிறப்பைத்தராதென்று தோன்றுகிறதாம்! புன்சிரிப்புடன்  கூறுகிறான்.
திகைப்பாகத்தான் இருக்கிறது நமக்கு!  இராமனின் இந்த மனநிலைக்குக்காரணம் என்ன?

(
மேலும் படிக்க... "இராவண வதம்!"

Friday, September 11, 2015

கரிசல் பூமிதந்த கனித்தமிழ் கவிஞன்!

கார்த்திகைமாதக்கடைசிநாள் ஒன்றில்  கரிசல்பூமி, கவிபூமிக்கு  ஒரு பரிசினைக்கொடுத்தது.   நெல்லைஜில்லா கொள்ளைப்பெருமை கொண்டது!கோவில்பட்டி கொடுத்துவைத்தது.! எட்டயபுரம் ஏற்றம் கொண்டது. 


சுப்பையாவின்  திறமையை  சொல்லுவதும் எப்படி ஐயா! முண்டாசுக்கவிஞன் பெருமையை  தண்டோரோ போட்டுத்தானா சொல்லவேண்டும்!  மல்லிகைமணத்திற்கு விளம்பரமா தேவை?  இல்லை இல்லை  .. அவனை நினைக்காத நாள் இல்லை.ஆனால்.நினைவுநாளில் சற்று கூடுதலாய் நினைக்கவைக்கிறது ,அவன் விட்டுச்சென்ற பாக்கள் என்னும் பூக்களின் வாசம்!
கல்வடிவக்கடவுளைபோல் அவன் சொல்வடிவத்தமிழ் சிற்பம் காலத்தால் அழியுமா என்ன!வெறும் தமிழ் வண்ணத்தமிழ் ஆனது அவன் கைவண்ணத்தில்! அணையா ஜோதியாக அவன் அறிவு விளக்கு எரிந்துகொண்டே இருந்ததினால்  அளவில்லா கவிதைகளை அள்ளி வழங்கிவிட்டான்! அவனே மரபுக்கும் புதுமைக்கும் நடுவே நின்ற  நெருப்பு!  

முன்னைப்பழமையும் பின்னைப்புதுமையும் அவன் அடிமுடியைக்காணமுடியாமல் இன்னமும் அலைந்துகொண்டிருக்க ஓர் அதிசியமாக  ஓங்கி நிற்கிறான் சுப்ரமண்யபாரதி! இந்த எட்டயபுரத்து சிவகாசிப்பட்டாசின் கவிதைகள் ஒவ்வொன்றும் கந்தகக்கடுதாசி!

தமிழ் அவனுக்குத்தோழி. நஞ்சுதமிழ்தனை ஒழித்து நல்லதமிழில் அவன் எழுதும்  பாட்டினை ரசிக்க உடன் இருப்பாள் பல நாழி.
.முப்பத்தி ஒன்பதுவயதிற்குள்  தன் முழுத்திறமையையும் காட்டிவிட்டு மறைந்த மகாகவிஞனின்  நினைவுதினம் இன்று.


பாரதியின் பன்முக ஆளுமை பலரும் அறிந்ததே ஆயினும் அவனது  பிறந்த ஊர் நேசம் பலபாடல்களில்  பழகிய சொற்களில்  தெறிக்கும்.  பிறந்துவளர்ந்த  ஊரின் மீது பற்று இல்லாதவர்  யார்?

பிறந்த ஊருக்குப்போய்ப்பாருங்கள்அங்கு வீசும் காற்றும் காதோரத்தில்
 கதைபலபேசும்.

பாரதியின் நினைவுநாளில் அவனது  பிறந்த மண் வாசம் வீசும்  சிலபாடல்களைப்பார்க்கலாம்.

தமிழகத்தில்  தமிழின் அழகு  ஊருக்கு ஊர்  வித்தியாசப்படும். பாட்டுப்பாடுதல் என்பதை பாட்டு படித்தல் என்பார்கள் நெல்லையில்.

பாரதியும், தனது தீராதவிளையாட்டுப்பிள்ளை  என்ற பாடலில்

புல்லாங்குழல்கொண்டுவருவான்
அமுது பொங்கித்ததும்பு நல்
கீதம் படிப்பான்..


என்று சொல்லி இருப்பார்.

இந்தப்பாடலை தனது முப்பதாவது வயதில் பாடி இருக்கிறார். அதாவது  பிரந்தமண்ணைவிட்டு  வந்தபலகாலம்  கழித்து!  கீதம் பாடுவான் என்றில்லாமல் கீதம் படிப்பான் என்கிறார்.

படித்தல் வாசித்தல் என்ற இரண்டுமே ஒரேபொருளை வழங்குகிறது. குழல் வாசித்தல்  வீணை வாசித்தல் என்கிறோம். இந்த வழக்கம்  இன்னமும் நம்மிடையே இருக்கிறது.

கண்ணன் என் காதலன் பாட்டில்  ஓர் இடம் பார்க்கலாம்

.கனவுகண்டதிலே  ஒருநாள்
கண்ணுக்குத்தோன்றாமல்
இனம் விளங்கவில்லை எவனோ
என் அகம் தொட்டுவிட்டான்.

இதில் இனம்  என்பதற்கு அடையாளம் என்று பொருள். இன்றும் கோவில்பட்டிபகுதிகளில் இந்த  இனம்  எனும் சொல்லாட்சி இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் அடையாளம் என்றே சொல்கிறோம்.

பாரதியின் சந்திரிகையின் கதை  கடைசிப்பக்கத்தில்  இப்படி  எழுதியிருக்கிறார்.

“….இவர் எத்தனைக்கெத்தனை  அவள் உறவையும் ஊடாட்டத்தையும் விரும்பத்தொடங்கினாரோ அத்தனைக்கும்அத்தனை இவள் இவரிடமிருந்து ஒதுங்கவும் மறையவும் தொடங்கினாள். அவளை நாம் காதலிக்கும் யோக்கியதை இல்லாத மனையடிமைப் புகழ்ச்சியாகவும் குழந்தைவளர்க்கும் செவிலியாகவும் நடத்திவந்தோம். அப்போதெல்லாம் இவள் நமக்கு மிகவும் பணிவுடன் அடிமையிலும் அடிமையாய் நடந்துவந்தாள். இப்போது நாம் பரமார்த்தமாக இவளுடைய அன்பைக்கருதி அதனைவேண்டிச்  சருவப்புகுந்தபோது இவள்பண்ணுகிற மோடியும் இவள் செய்யும் புறக்கணிப்புகளும்  பொறுக்கமுடியவில்லையே…”

சோமநாதய்யர் என்ற கதாபாத்திரம் இவ்வாறு ஆலோசித்ததாக எழுதியிருக்கிறார் பாரதி.
இதில்  முதலில்வரும் ஊடாட்டம் என்ற சொல்லைபார்க்கலாம்.

ஊடாட்டம் என்றால்  கலத்தல் அடிகலந்து பழகுதல் என்று அர்த்தம். மலையாளமொழியிலும் இந்த சொல் உண்டு.  ஊடாட்டம் ஊடுதட்டு ஊடு பாய்ச்சல் ஊடு புகுதல் என்ற வெவ்வேறு பொருள்கொண்ட சொற்களும் நெல்லைப்பகுதியில் சகஜம்.

ஊடாடும் எனும் சொல்லை  ஆரண்யகாண்டத்தில் மாரீசன் வதைப்படலத்தில் சூர்ப்பனகை தன்  அண்ணன் இராவணனிடம் பேசும்போது ‘சீதை என்னும் மானைவைத்துக்கொண்டு நீ இன்பம் துய்ப்பாயாக நான் அனுபவிப்பதற்கு ராமனை அடையும்படி செய்’என்று வேண்டுகிறாள்.

மீன் கொண்டு ஊடாடும் வேலை மேகலை உலகம் ஏத்த,
தேன் கொண்டு ஊடாடும் கூந்தல், சிற்றிடை சீதை என்னும்
மான் கொண்டு ஊடாடு நீ, உன் வாள் வலி உலகம் காண,
யான் கொண்டு ஊடாடும்வண்ணம் இராமனைத் தருதி என்பால்

 ’ஊடாடும்’ என்ற சொல் எத்தனை அழகாக கையாளப்பட்டிருக்கிறது! இந்த சொல் ராமாயணத்தில் கையாளப்பட்டிருப்பதால் அன்றே  தமிழ்நாடெங்கும் வழங்கிவந்த சொல் என்பது தெளிவு ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் நாவில் இந்த சொல் பயின்றுவரப்பார்க்கிறோம்.

அடுத்து சருவுதல் என்ற சொல்லைப்பார்ப்போம்

.இதற்குப்பழகுதல் கொஞ்சிக்குலாவுதல் என்று பொருள். கொஞ்சிப்பழகுவதற்காக நெருங்கிஉறவாடுதல் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்.

.  சருவுதல் என்னும் சொல் கோவில்பட்டிப்பகுதியில் தான் அதிகம்புழக்கத்தில் இருக்கிறது போலும்!

மோடி  என்னும் சொல் செருக்கு கம்பீரம் ஆடம்பரம் ஸ்டைல் என்றெல்லாம் பொருள்தருகிறது(பிரதமரை  நினைக்கவேண்டாமே?:) மோடி  அதிகம் கம்பராமாயணத்தில் வரும்!!.....”…நிந்தன் மோடி கிறுக்குதடி தலையை நல்ல மொந்தை பழைய கள்ளைப்போலே… என்கிறார்  திக்குத்தெரியாத காட்டில்  பாட்டில்!!

ஆத்திரம் என்ற சொல்லை நாம் கோபமென நினைக்கிறோம் அது அசல்பொருள் அல்லவாம்   அவசரம் என்பதே சரியாம். பணம்  மிகுந்திருந்தால் ஆத்திர அவசரத்துக்கு உதவும் என்றபழமொழி உண்டே.  ஆதுரம் எனும் வடசொல்லே ஆத்திரமாம் ஆதுரம் என்றால் அவசரம் என்றே பெயர். கோபம் அவசரம் என்பவைகளுடன் ஆவல் கடமை என்னும் பொருள்களும் கோவில்பட்டிவழக்கில் இந்த சொல்லுக்கு உண்டு.  ‘அவருக்கு உன்னைப்பார்க்கவேண்டுமென ரொம்பவும் ஆத்திரம்’என்றால்  இங்கே ஆத்திரம் ஆவல் ஆகிறது. பாரதி ‘ஆத்திரம்’ என்னும் சொல்லை அழகாகப்பயன்படுத்திய பாடல்களை மறக்கமுடியுமா என்ன!

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடி ஆத்திரம்கொண்டவர்க்கேகண்ணம்மா சாத்திரம் உண்டோடி

ஏதுக்கித்தனை மோடிதானோ? பிரபலபாடல் நினைவுக்குவருகிறது இது திரைப்படப்பாடலா என்ன?

இப்படிப்பலப்பல  பிறந்த மண்ணின்  வாசமிகு வார்த்தைகளை பாரதி தன்கவிதைகளில்  அள்ளித்தெளித்திருப்பார்!..

எழுத்துக்களைத்  தீப்பந்தங்களாக  ஏந்தியபாரதி,தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதத்தில் பிறந்ததாலோ என்னவோ இப்படிச்சொன்னான்,

 தீ இனிது !

ஆம் ஐம்பொறிகளும் தீப்பொறிகளாக  வாழ்ந்துகாட்டிவிட்டு வானமேறிவிட்டான் அந்த வரகவி! நமக்கு  இனி வாராகவி!
மேலும் படிக்க... "கரிசல் பூமிதந்த கனித்தமிழ் கவிஞன்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.