Social Icons

Pages

Thursday, May 24, 2007

உன்னை நினைக்கையிலே....

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு
நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்
=========================================================


இரண்டாம் பரிசுக்குரிய கவிதை
(ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது)
உன்னை நினைக்கையிலே
உல்லாசத் துள்ளலில்
முன்நிற்கும் நெஞ்சத்தை
எந்த முகப்படாமிட்டு
மறைப்பதென்று தவிக்கையிலே
மலையாக உன் நினைவே
முன்னின்று எதிர்கொள்ளும்.


முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச்சுற்றியே
நினைவு.


வழிப்பாதை இடைஇடையே
பொதி சுமக்கும் கழுதையின்
முரண்டாய் பிடிவாத நினவுகள்,
ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.

ஒப்பனைக்குப் பின்னும்,
என் கண்ணில்
உன் முகமே தெரிவதாக
தோழி சொல்கிறாள்.


உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?

ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்.


நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.


- ______________________
அன்புடன்..சுட்டி இங்கே உள்ளது.

http://groups.google.com/group/anbudanunnai_ninaikkaiyilE
unnai_ninaikkaiyil...
Hosted by eSnips
மேலும் படிக்க... "உன்னை நினைக்கையிலே...."

Thursday, May 17, 2007

வீதிச் சித்திரங்கள்!(கவிதை)

மேனிக்கு நீலம்.
மயிற்பீலிக்குப் பச்சை.
கழுத்துமணி மாலைக்குச் சிவப்பு.
ஊது குழலுக்குப் பழுப்பு.
கேசத்திற்கு முழுதும் கறுப்பு.
புன்னகைப் பற்களுக்கு வெள்ளை.
நவரத்தின மாலைக்கு
நவ வர்ணக் கலவை.
பட்டாடைக்கு இளம் ஊதா.
மேலங்கிக்கு மெலிதான மஞ்சள்.

வர்ணச் சாக்கட்டிகள் கொண்டு
வடிவான சித்திரம் தீட்டிவிட்டு
விரித்த சாக்குத் துணி மீது
விழப்போகும் சில்லரைக்காய்
வறுமையின் வர்ணத்தை
விழிகளில் தேக்கியபடி
தன்னை வரைந்து முடித்த
வீதிச் சித்திரக்காரனுடன்
வெய்யிலில் ஸ்ரீகிருஷ்ணரும்!
மேலும் படிக்க... "வீதிச் சித்திரங்கள்!(கவிதை)"

Sunday, May 13, 2007

யாமறிந்த பெண்களிலே......

அன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா?

'அவசரசமையல் வேலையினிடையே
அள்ளிஎடுத்து
அம்மாகொடுத்த
முத்தத்தில்
இப்போதும் மணக்கிறது
அக்மார்க்நல்லெண்ணையும்
அம்மாவின் வாசனையும்.'
*************************************************************************************
அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம்
சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும்
கிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம்
என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.
நல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே?

யாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் அன்பானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.

தாரம் கூட தாய்க்குப் பின் தானாம்!

வளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம் என்றும் குழந்தைகளே!

புதுமுகமாய் பேந்தப்பெந்தவிழித்துக்கொண்டு பூமிக்கு வரும்போதே அழுகைஆலாபனையோடு சுவாசிக்க ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு
ஜீவனை வாரி அணைக்கும் அன்புக்கரம் தாயினுடையது.அந்த அன்பும் அரவணைப்பிலுமான அந்த முதல் ஸ்பரிசம் குழந்தைக்கு லேசான மனஅமைதியைத் தருகிறது.

மூன்றுவயது வரை தாயோடு தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து
பழக்கவழக்கங்களைபோதிப்பது வரை முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.

பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.

அம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா! மகிழ்ச்சி அதிகமானால் அம்மா!

அமெரிக்கா வந்த இடத்தில் நேற்று பார்க்கில் 5வயது கொரியன் சிறுவன் தனியே விளையாடிக்கொண்டிருந்தவனிடம் எதேச்சையாய் 'உங்கள்கொரியமொழியில் அம்மாவை எப்படி அழைப்பீர்கள்?' எனக்கேட்டேன் அவன் 'அம்மா' என்றான் அப்பாவிற்கு அப்பாவாம்.
ஆச்சர்யமாய் இருக்கிறது. அம்மா எனும் வார்த்தை மட்டுமே உலகின் பல பகுதிகளில் ஒரேமாதிரியாகவும்,சற்றே வித்தியாசமாய் ஒலிக்கிறது!

சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
*********************************************************************************************************

'ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்க, அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன?'ன்னுகேட்டார்

'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'

என்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்?ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.

சாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு? அப்பா போனதும் அவர் நினைவாய் இங்கேயே சில வருஷமாய் இருக்கும் உனக்கு வயசாச்சும்மா ...தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்கநம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம்
கட்டிவச்சிட்டேன்..இங்கே உனக்கு குளத்துல குளிச்சிப்பழக்கமே,அதான் உனக்காக ஸ்விம்மிங்பூல் இருக்கற ஃப்ளாட் வாங்கிட்டேன்.
நீ குளிக்கலாம் அங்க போயி...உபந்ந்யாசம், கச்சேரிக்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா
வச்சிப்போம்மா' அப்படீன்னு சொன்னேன்

'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா..உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'

'பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ஢ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'

'சரிப்பா'

நானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம் ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும்! ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ?'

ரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து, சின்னதலையணைவச்சி
போர்வைகொடுத்தேன்.

'அம்மா!எல்லாம் வசதியா இருக்கா? ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல
போயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி டாக்ஸி வச்சீட்டு ஊருக்குபோகலாம் என்ன?'

தலை அசைத்து அம்மா படுத்தாள்.

நான் போயிமேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்!

திடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3 .இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.

கீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,
'என்னம்மா எழுந்திட்டியா சீக்ரமா?'

'இல்லடா நான் தூங்கவெ இல்ல'

'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயா?காத்து வரலயா? பசிச்சிதா? போர்வை கனமா இல்லையா?'

'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்துதூங்க்றபோ ராத்திரிகீழே அடிக்கடி விழுந்திடுவே.. தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'

அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'
************************************************************************************************

வாழ்க்கையில் சில உண்மைநிகழ்வுகள் கற்பனைக்கதையைவிடவும் மனதை பாதிக்கக்கூடியவை.. எனக்கு இது அப்படித்தான் இருக்கிறது, உங்களுக்கு?
மேலும் படிக்க... "யாமறிந்த பெண்களிலே......"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.