Social Icons

Pages

Sunday, January 26, 2014

விடியலின் வெளிச்சம்.






கொலையும் கொள்ளையும்
நாட்டினிலே பெருகிப்போச்சு-இந்தக்
கோயில்கூட பலருக்கிங்கே
பாசறையாச்சு
 
தலைவன் திருடன் என்றிருந்த
பேதமும்போச்சு- அட
தலையை ஆட்டும் பொம்மைக்கிங்கே
ராஜ்ஜியம் ஆச்சு
 
தன்னலம்தான்  நாளும் இங்கே
பொதுநலமாச்சு-உயர்
பொன்னைவிட பதருக்குத்தான்
பெருமையும் ஆச்சு
 
துன்பம் உனக்கு இன்பம் எனக்கு
என்பதுமாச்சு-நமது
தேசத்தந்தை நினைவு இன்றோ
வெறுங் கனவாச்சு
 
 
பறங்கியரை நாம் விரட்டிப்
பல காலமும்ஆச்சு- உடன்
பண்பாடதுவும்  காற்றினிலே
பறந்தே போச்சு
 
 
இரவில்கிடைத்தசுதந்திரத்தை
இன்று புரிந்தவரில்லை-அன்று
வெள்ளையரை விரட்டியதும்
வெறும் கதையாச்சு!
 
நாறுமிந்த சமூகம் இன்று
நரகம் ஆச்சு- அதுவும்
நாலுகாசு உடையவனுக்கே
அடிமையென்றாச்சு.
 
ஆணவத்தின் பெயரும் அதி
காரம் என்றாச்சு  -பலர்
அடித்துக்கொண்டு அழிவதிங்கே
வாழ்க்கையும் ஆச்சு!
 
 
விடியல் வெளிச்சம் என்பதெல்லாம்
  வார்த்தையில்தானா-இளைஞர்
படை திரண்டு எழுந்துவிட்டால் துன்பம்
போயே போச்சு!
 
 
 (ஈகரைத்தளம் நடத்திய  சித்திரைப்புத்தாண்டுக்கவிதைப்போட்டி(2013)தனில் முதல்பரிசுபெற்ற  எனது கவிதை)

http://www.eegarai.net/t98914-6
 
மேலும் படிக்க... "விடியலின் வெளிச்சம்."

Thursday, January 23, 2014

ஆராதனா..(சிறுகதை)


சின்னக்கடிதம்தான் ஆனால்  அது மிகப்பெரிய விஷயத்தை தெரிவித்துவிட்டது. என்றாவது ஒருநாள் இப்படி ஒரு சம்பவம் நேரிடலாம் என நினைத்து அச்சப்பட்டுக்கொண் டிருந்த அகிலாவிற்கு  கடிதத்தைப்படித்ததும்  கண்கலங்கித்தான் போனது. அலுவலகம் சென்றிருந்த  மகனுக்கு உடனே   டெலிபோனில்  விஷயத்தை தெரிவித்தாள்
 
 
அடுத்த சில நிமிடங்களில்  மூச்சிறைக்க வீடுவந்த திவாகரிடம் கடிதத்தைக்காட்டினாள்.”எட்டுவருஷ  உறவை வெட்டிக்கொண்டு போய்விட்டாள் ஆராதனா!.எப்படிடா அவளுக்கு  நம்மைப்பிரிய மனசுவந்தது?  என்னைவிட அவளுக்கு உன்மேல் எத்தனை பாசம் நேசம் அன்பு எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள் அதையெல்லாம் மறந்து போனமாதிரி தெரியலை திவா  எல்லாத்தியும் துறந்துபோன மாதிரி ஒரே வாக்கியத்தில்  எழுதிவிட்டாளே, இந்தப்பிரிவை நாம் எப்படியடா  தாங்கப்போகிறோம்?”
 
அகிலாவின்  நா தழுதழுக்கும் வார்த்தைகளில் நிலைகுலைந்துபோனான் திவாகர்.
 
மௌனம் மட்டும் சிலக்கணங்கள் பேசிக்கொண்டிருந்ததை  டீபாய் மீதிருந்த  தொலைபேசி ஒலி எழுப்பிக் கலைத்தது.
 
“சீக்கிரம் ரிசீவரை எடு திவா  நம்ம ஆராதனாவாகத்தான் இருக்கும்...பஸ் ஸ்டாண்டுபோய் மனசு மாறி இருக்கும்  அவளால் நம்மைவிட்டெல்லாம் இருக்கமுடியாதுடா...வந்துடுவா பாரேன்..போனை எடு சீக்கிரம்”
 
திவாகரும் ஆர்வத்துடன்  ரிசீவரை எடுத்தான்.”ஹலோ’ என்பதற்குபதிலாக,”ஆராதனா?” என்று  பரபரப்பாய் கேட்டான்.
 
“ஆராதனாவும் இல்ல அவரோஹனாவும் இல்ல..நான் பூஜா ,உங்க தர்ம பத்தினி” என்று  கிண்டலாய் எதிர்முனையில்குரல்வரவும் திவாகர் ஏமாற்றமுடன்,”நீயா?” என்றுகேட்டுவிட்டு,”என்ன அதிசியம் செல் போன்லதான் எனக்குப்பேசுவாய் இன்னிக்கு என்ன வீட்டுபோனுக்கு செய்கிறாய்?” என்றான் சற்று எரிச்சலுடன்.
 
 ”வாயும் வயிறுமாய் இருக்கிறவளை  வையாதடா திவா”  அகிலா மெல்லியகுரலில் அவன் அருகில் வந்து  சொன்னாள்.
 
“என்ன சாருக்கு மூட் அவுட் போலிருக்கு? ஏன் அங்கே அந்தத்  திருநங்கை அருகில் இல்லையோ?”  என்று  நக்கலாய்க்கேட்கவும் திவாகருக்குக்கோபம் தலைக்கேறிவிட்டது. கல்யாணமாகிவந்த இந்த  ஒருவருஷத்தில் ஆராதனாவை  பூஜா அவமதிக்காத நாளே இல்லை. 
 
"உன் புருஷன் உயிரைக்காப்பாத்தின தெய்வம்!  அவள் மட்டும் இல்லையென்றால் அன்னிக்கு சாலைவிபத்தில் திவாகர் போய்ச்சேர்ந்திருக்கணும், செல்போனில் பேசிக்கொண்டே ரோடைக்கடந்து கொண்டிருந்தவன் கண்ணில் எதிரில்  தலை தெறிக்க வந்துகொண்டிருந்த லாரி, மோதித்தள்ள இருந்ததை எங்கிருந்தோ ஓடி வந்து கையைப்பிடிச்சி  இழுத்துக்கோண்டு சாலைஓரம் கொண்டுபோய் காப்பாத்தின  மனித தெய்வம்! அன்றிலிருந்து அவள் எங்க குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டாள்.அவளைக்கரிச்சிக்கொட்டாதே பூஜா...உன்னைவிட  ஓரிரு வருஷம்தான் அவள் மூத்தவள்!” என்று அகிலா ஒருமுறை  பூஜாவிடம் சொன்னபோது,”  இன்னொண்ணும் கேள்விப்பட்டேனே  ஆராதனா  உங்க மகன் மேல காதல் பைத்தியமா இருந்ததாக? எல்லாத்தியும் மறைச்சி என்னைக்கல்யாணம் செய்துகிட்டீங்க இல்ல?  நல்ல படிப்பு நல்ல வேலை பார்க்கவும் அம்சமா இருக்கார் மாப்பிள்ளைன்னு எங்கப்பா ஏமாந்துபோயிட்டார். “ என்று சீறினாள்.
 
“என்னம்மா உன்னை நாங்க ஏமாத்திட்டோம்? ஆராதனா எங்க வீட்டோடு இருக்கற விஷயத்தை சொல்லவில்லைதான் அது மகா குத்தமா என்ன? ஆனா ஆராதனா   என் மகன் மேல  காதல் பைத்தியமா  இருந்ததை  பக்குவமா சொல்லி அவள் மனதை மாத்தித்தான்  எங்களோட தங்க வச்சிருக்கோம்.யாருமில்லாத அனாதைக்கு அடைக்கலம்  தந்து ஆதரிப்பதை கேவலமாய் பேசாதே பூஜா ! ஆராதனா படித்தவள் புத்திசாலி சமுக சேவகியும் கூட. அவள் உன் வாழ்க்கையில் குறுக்கே வரமாட்டாள்”
 
 
ஆனாலும் பூஜாவின் அலட்சியமும் ஆராதனா மீது அவள்கொண்ட அருவெறுப்பும்தான்  இன்றைக்கு அவளை வீட்டைவிட்டு வெளியேறச்செய்துவிட்டது என்பதை திவாகரும் அகிலாவும் அறியாமல் இல்லை.
 
ஆராதனா,  ஆறுமுகமாயிருந்து பிறகு மாறிய ஒரு திருநங்கைதான். அதனால் வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டு  பல அல்லல்களிடையே  சில நல்ல உள்ளங்களின்சில நல்ல உள்ளங்களின் உதவியால்  படித்துமுன்னேறியவள். திருநங்கைளைப் பற்றி சமுதாயத்தில் சரியானவிழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அவர்களைக்கேலியாகவும் அருவெறுக்கும் ஜீவன்களாகவும்  நோக்கும் மனிதர்களிடையே அகிலா  முற்றிலும் மாறுபட்டவளாய்  இருந்தாள். ஏற்கனவே  இறந்துபோன கணவன் விட்டுப்போயிருந்த   வள்ளல்குணமும் இயற்கையாக அமைந்த இரக்க குணமும் சேர்ந்து ஆராதனாவை  நிரந்தரமாய் தன்னோடு வைத்துக்கொள்ள   எண்ணம் எழுந்தது.  தாய் சொல்லை என்றுமே திவாகர் தட்டியதில்லை .ஆராதனா  அகிலாவின் வீட்டில் அடைக்கலமானாள். ஆரம்பத்தில்  மனதளவில் பெண்ணாக ஆகிவிட்டதாலும்  உடலும் அந்த மாற்றத்திற்குத்  தயாராகிவிட்டதாலும் திவாகரின் மீது ஆராதனாவிற்குக்காதல் பிறந்துவிட்டது.
ஏச்சும் எள்ளலும் நிறைந்த  சமுதாயத்தில் அன்பையும் பாசத்தையும்  அளவுக்கு அதிகமாகவே  காட்டும்  குடும்பத்தில்  மனம் ஒன்றித்தான் போனது.
 
அகிலா  ஆராதனாவிடம்  பக்குவமாய் சொல்லிப்புரியவைத்தாள், திவாகரை  மணக்க  இயலாதென்பதைப்புரிந்து்  கொண்டாள் ஆராதனாவும். அதற்குப்பின் அவள் திவாகரைக்  காதல்கண்ணோட்டத்தில் பார்க்கவே இல்லை . திவாகரின் திருமண ஏற்பாட்டில்  மனமுவந்து பல வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தாள். உற்றுப்பார்த்தாலே ஒழிய அல்லது  பேச்சுக்கொடுத்தாலே தவிர ஆராதனா திருநங்கை என்கிற விவரம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.அந்த வனப்பும்  உடல் நிறமும்  பெண்மையின் நளினமும் அவளை நங்கையாகவே அடையாலம் காட்டின.
 
இந்த சமுதாயம் ஏன் இன்னும் திருநங்கைகளை சரியாகப்புரிந்துகொள்ள மறுக்கிறது? ஆராதிக்க  வேண்டியவர்களை  ஏன் அலட்சியப்படுத்துகிறது?
திருநங்கைகள் யானைபலம் மிக்கவர்கள்!
 
யானை பலம் என்று பலத்திற்கு உண்மையான உதாரணமாக திகழும் யானைக்குத் தனது பலம் பற்றிய தெளிவானதொரு அறிவு இருந்தால், பாகனின் கட்டளைக்குப் பணியுமா? அல்லது தனது உணவுக்காக மனிதனிடம் பிச்சை எடுக்குமா?

அதுபோலவேதான் திருநங்கைகளுக்கும் தனது பலம் என்ன என்பது தெரியாமல் போய், பலவீனம் என்ன என்பது மட்டுமே மிகவும் தெளிவாக தெரிந்திருக்கிறது.  அதனால்தான் ஆராதனா  இன்று ஒற்றை வாக்கியத்தில்”உங்களை  எல்லாம் விட்டு நீண்டதூரம் விலகிச்செல்கிறேன்” என்று  எழுதிவைத்துவிட்டுப்போய்விட்டாள்! கோழை! தன் பலம் தெரியாத கோழை!
அகிலா  சேலைத்தலைப்பில் கண்ணைத்துடைத்துக்கொண்டாள்.

திவாகர் பெருமூச்சுவிட்டபடி ரிசீவரை கீழே வைத்தான்.
 
“அம்மா!  இவளால்தான்  ஆராதனா  இப்படி நம்மைவிட்டு விலகிப்போவதாய்  கடிதம் எழுதிவச்சிட்டுப் போயிட்டா..பாவம்மா எங்கபோயி எப்படி திண்டாடுகிறாளோ? இன்னமும் நம் சமூகத்தில் திருநங்கைகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டு ஆதரிக்க பலருக்கு மனம் இல்லை அம்மா  ..கேலியும் கிண்டலும் தான்  அவர்கள் பார்வையில்..திருநங்கைகள் என்றால், கை தட்டி, பாலியல் தொழில் செய்து பிழைப்பவர்கள் மட்டுமே என்றிருந்த சமூக அவலநிலையை மதிப்புமிக்கதொரு நிலையாக மாற்றி அவர்களுக்கும் -சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற சம நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற எண்ணத்தை   பரவலாய்  செயல்படுத்த நாம்  திட்டமிட்டிருந்தோம்..  அதற்கு ஆராதனாவை  முன் மாதிரியாய் நிறுத்த நினைத்திருந்தோம் எல்லாவற்றையும்  பூஜா சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டாள்.“

“ஆமாம்ப்பா திவா...உனக்குக்குழந்தைபிறந்ததும் முதல்ல ஆராதனாவைத்தான்  ஆசிர்வாதம் செய்ய  சொல்லணும்னு நினைத்தேன் அதைப்போல  உன்னதம் ஏதுமில்லை...உனக்குக்கொடுத்துவைக்கலை திவா...ஆனாலும் நாம விடாம அவளைத்தேடிக் கண்டுபிடிக்கணும் ...இந்தவீட்டில்   நீ பூஜாவோட வாழ்ந்துகொள்ளப்பா ஆனா வேற வீட்டில் அவளோட நான் வாழத்தான் போறேன்”
 
“என்னம்மா நீங்க?  சின்ன வயசுலேயே அப்பா நிரந்தரமா போயிட்டார்.  இப்ப நீங்களும் என்னைவிட்டுப்பிரியப்போறேன்னு  கனவிலும் சொல்லாதீங்கம்மா...வாழ்க்கையில் பிடிப்பு இருப்பதே மனசுக்கு அணுக்கமான சில மனி்தர்களாலும்  நினைவில் நிற்கும் சில  நல்ல விஷயங்களாலும்தான்,,”
 
 
பூஜாவின் சீமந்தம் முடிந்து பிறந்தவீடுபோகும்போது  வழக்கத்தைவிட பூரிப்பான முகமுடன் சென்றாள்.ஆராதனாவைத்  துரத்திவிட்ட மகிழ்ச்சிதான் அது என்பதை அகிலாவும் திவாகரும் புரிந்துகொண்டு உள்ளுக்குள் வெந்துபோனார்கள்.
 
இடைக்காலத்தில்  இருவரும் ஆராதனாவைத்தேட எடுத்த முயற்சிகள் ஒன்றும் பலனளிக்கவில்லை.
 
திவாகரை அச்சில்வார்த்தாற்போலிருந்த மகன் கௌதமுடன்  பூஜா மீண்டும் வீடுவந்தவள்  கைக்குழந்தையை அகிலாவிடம் விட்டு வேலைக்குப்போக ஆரம்பித்தாள்...அகிலாவால் தனி ஒருத்தியாய் குழந்தையைப்பார்த்துக்கொள்ள சிரமமாக இருக்கவே  “பூஜா! நீ வேலைக்குபோயாகவேண்டிய கட்டாயம் இல்லை .குழந்தைபிறக்கிறவரை பொழுதுபோக்குக்கா போனது சரி இப்போ குழந்தையை  பார்த்துக்கொள்ளணும்  தாய்ப்பால் குடிக்கும் குழந்தையை  பிரிஞ்சி  எட்டுமணி நேரம் வேலைக்குப்போயே ஆகணுமா?”

 எ்ன்று  கேட்டதும்தான் தாமதம்   குழந்தையைத்தூக்கிக்கொண்டுபோய்  அடுத்த தெருவில் இருக்கும்  தூரத்து உறவினர் வீட்டில்  விட்டுவிட்டாள்.
 
“ எனக்கு அவங்க அக்கா மாதிரி  பாவம் அவங்களுக்கு மூணும் பொண்ணு  ..என் பையனை ராஜா மாதிரி பாத்துக்கறேன்ன்னு சொல்லிட்டாங்க...“
 
கௌதமை  ஐந்துவயது வரை  அங்கேயே  விட்டுவிட்டு அலுவலகம் போக ஆரம்பித்தாள் பூஜா.. எப்போதாவதுதான் வீட்டிற்கே அழைத்துக்கொண்டுவருவாள்.திவாகருக்கே தன் மகன் முகம் மறந்துவிடும் போலாகிவிட்டது.
 
ஒருநாள் கூச்சலிட்டான்,”  இனிமேலும் கௌதமைக்கொண்டு அங்கே  விட்டாயானால்  நான் பொல்லாதவனாகிவிடுவேன்...சாது மிரண்டால் என்னாகும்  தெரியுமா?”
 
திவாகரின்  குரலில் சற்று வெலவெலத்துத்தான்  போனாள் பூஜா.
 
         “ஏன்மா   இனிமே பிரியா  வர்ஷா அதிதி கூட நான் விளையாட முடியாதாம்மா?” கௌதம் கேட்டபோது,”ஆமாண்டா அங்கேருந்து   உன் துணிமணி பொம்மை எல்லாம் கொண்டு வந்திடு..உங்கப்பா
கூச்சல்போடறாரே?” என்று முணுமுணுத்தாள் பூஜா 
 
ஆயிற்று, கௌதம்  வீடு வந்து நிரந்தரமாக  தங்க ஆரம்பித்து ஒருவாரமாகிவிட்டது.ஐந்து வருட
-- மாக அந்த மூன்று பெண் குழந்தைகளிடம் அதிகம் பழகியதாலோ என்னவோ கௌதம் பூஜாவைப்போல  அதிர்ந்து பேசாமல்  மிகவும்  மென்மையாக நடந்துகொண்டான் பழகும் விதத்தில்  ஒரு வித்தியாசம் தெரிந்தது

அன்று அவனுக்குப்பள்ளி விடுமுறை. பூஜா  அலுவலகம் போய்விட்டாள்.திவாகர் தலைவலி என  வீட்டில்  ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான்.
 
அகிலா  பேரனுக்குப்பிடித்த   சேமியா பாயசம் செய்துவிட்டு  கௌதமை  அழைக்க அவன் அறைக்குப்போனாள்.
கதவு சற்று  ஒருக்களித்து மூடப்பட்டிருந்தது.   தூங்குகிறானோ என்ற தயக்கமுடன் மெல்ல கதவைத்தள்ளியபடி உள்ளே சென்றாள் அகிலா.
 
அங்கே அவள் கண்ட காட்சி  தூக்கிவாரிப்போட   சட்டென திரும்பி ஹாலிற்குவந்தாள்.அங்கே  சோபாவில் சாய்ந்திருந்த மகனைத்தட்டி எழுப்பி தன்னோடு வரும்படி சைகை காட்டினாள். திவாகரும் குழப்பமாய் தொடர்ந்தான்.
 
இருவரும் ஓசைப்படாமல் கௌதமின் அறைக்குள் போனபோது  கண்ணாடிமுன் நின்று   தன்கண்ணுக்கு மை வைத்துக்கொண்டிருந்தான் கௌதம். பெண்குழந்தைகளின் கவுனை அணிந்திருந்தான்.  தலையில் பூவினை செருகி இருந்தான். லேசான வெட்கம் முகத்தில் தவழ தன்னைக்கண்ணாடியில் ரசித்துக் கொண்டிருந்தான்.

    
  அகிலாவும் திவாகரும்  அதிர்ச்சியும் குழப்பமுமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

***********************************************************************

நன்றி கிழக்குவாசல் மாத இதழுக்கு..டிசம்பர்2013 இதைபிரசுரம் செய்தனர்.மார்கழிப்பதிவு காரணமாக  இங்கே தாமதமாய் அளிக்க நேர்ந்தது! 
  
  
மேலும் படிக்க... "ஆராதனா..(சிறுகதை)"

Tuesday, January 21, 2014

குருபக்திக்கு ஒரு கூரேசர்!



நீங்கள் திருவரங்கம் கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா?

பிரதான வாயில்வழியாக அதாவது ரங்கா ரங்கா கோபுரம்வழியாக திருக்கோவிலில் காலடி எடுத்துவைத்ததுமே  -உடனேயே- உங்களின் வலப்புறத்திலிருக்கும் இருக்கும் முதல்சந்நிதியை ஏறெடுத்துப்பார்த்திருக்கிறீர்களா?



 ரொம்ப ஆடம்பரமாக  எல்லாம் இருக்காது மூலையில் ஒடுங்கினமாதிரிதான் இருக்கும் அந்த  சந்நிதி.

அது என்ன பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரின் சந்நிதியா அல்லது

பரமபக்தன் அனுமனின்சந்நிதியா

அல்லது பக்தபிரஹலாதனின் சந்நிதியா?

எது? என்று கேட்கிறீர்களா?

ம்ஹூம் அவர்கள் யாரும் இல்லை.

பகவானுக்குத்தன் அடியார்களை மிகவும் பிடிக்கும்.

ஆனால் அடியாரைநேசிக்கும் அடியாரை அதைவிடப்பிடிக்கும்.

தன் அடியாரை குருவாக ஏற்று அவருக்குத்தொண்டு செய்யும் அடியவர்தான் ஆண்டவனின் மனத்தில் முதலில் இருப்பவர்.அப்படிப்பட்டவர்தான் கூரத்தாழ்வார். அவருக்கு அடுத்த சந்நிதியில்  அருள்பவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். பிறகு திருப்பாணாழ்வார், இடப்பக்கம்(உள்)  ஆண்டாள் சந்நிதி ரங்கவிலாஸ் என  அரங்கன் கோயில் வளாகம் அழகு மிளிரக்காட்சி அளிக்கும்.

கூரத்தாழ்வாரின் குருபக்திக்கு பலபல சொல்லலாம் .


குருபக்தியில் சிறந்த கூரத்தாழ்வாருக்கே, அரங்கன், அ(ந்த)ரங்கத்தில் உயர்பதவி கொடுத்திருக்கிறான்!

ஆமாம் !கோவிலின் முதல் சந்நிதி கூரத்தாழ்வாருடையதுதான் !

இனி திருவரங்கம் செல்லும்போது கோவிலில் நுழைந்ததும் முதலில் குருபக்தியில் சிறந்துவிளங்கியவரின் திருச்சந்நிதிக்கு சென்றுவாருங்கள்! அரங்கனுக்கு தன் அடியவர்களைக்கணடு வணங்கியபின்னர் தன்னைக்காணவருவதே பிடிக்கும்.



ராமானுசரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் காஞ்சீபுரம் அருகே கூரம் என்னும் கிராமத்தில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர்திருமறுமார்பினன். (ஸ்ரீவத்சாங்கர்)

.தனது செல்வத்தை ஏழை எளியோர்க்கு வாரிவழங்குவதிலேயே செலவிட்டார்.

அவரது அரண்மனை போன்ற பெரிய மாளிகையில் நள்ளிரவு வரை ’பெறுங்கள் கொடுங்கள் மகிழுங்கள்!’ என்ற கோஷமே கேட்கும்.

ஒவ்வொரு நாளும் காஞ்சி வரதராஜப்பெருமாள் கோயில் திருக்கதவுகள் மூடிய பின் தான் இவரது வீட்டுக் கதவுகள் மூடப்படும். ஆனால்ஒரு நாள் ஊர் திருவிழாவிற்கு செல்ல வேண்டியிருந்ததால் சற்று முன்பாகவே அவர் இல்லக்கதவை மூடிவிட்டார். அந்தக் கதவில் கட்டப்பட்டிருந்த விலைஉயர்ந்த மணிகளின் ஒலி, கதவை சாத்தும்போது கோயில் வரை கேட்கும்.

திருக்கச்சி நம்பிகள் என்பவர் காஞ்சி வரதராசப்பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்து வந்தார் . கூரத்தாழ்வார் வீட்டு மணியொலி வரஜராஜப்பெருமாள் சன்னதி வரை கேட்கவும் பெருந் தேவித்தாயார், சுவாமியிடம் "என்ன! அதற்குள் கோயில் அடைக்கும் சத்தம்.. நடை சாத்த நேரமாகிவிட்டதா?" என்று வினவினாள்.

குழம்பிய சுவாமி தனக்கு சேவை செய்து வந்த திருக்கச்சி நம்பிகளிடம் இதைப் பற்றிக் கேட்க, அவரும் நடந்ததைச் சொன்னார்.

அதைக் கேட்ட பெருமாள், "ஆழ்வானின் செல்வத்திற்கு அத்தனை சிறப்பா? கோயில் கதவு மூடும் முன்னே அவன் வீட்டுக்கதவு மூடப்பட்டதே!" என்றார்

தாயார் நம்பியிடம் உத்தம ஆத்மாவான கூரேசனைதான் காணவிரும்புவதாய் கூறினாள்

நான் நாயினும் கடையேன் எனக்குத்தாயாரை தரிசிக்கும் பாக்கியமும் இல்லை தகுதியும் இல்லை என்றார்’.என் வீட்டுக் கதவுகளை அப்படிச் சத்தம் வராப் போலே சாத்தி, என் செல்வத் திமிரைக் காட்டி விட்டேனோ? அந்தச் சத்தம் கேட்டா, அது கோயில் அடைக்கும் சத்தம் என்று தாயார் குழம்பிப் போனார்கள்?-என்பதால் தான் கூரேசன் மிகவும் வருந்தி, வெட்கப்பட்டுப் போகாமல் இருந்தார்.

அப்படியான உள்ளம் கூரத்தாழ்வானுக்கு!\\\\\

.

’செல்வம் அல்ல உய்ய வழி” என்பதைப் புரிந்து கொண்டு எல்லாச் செல்வங்களையும் தானம் செய்ய ஆரம்பித்தார். செல்வச்செருக்கு,குலச்செருக்கு, கல்விச்செருக்கு என மூன்றையும் அறுத்தவர்,அதனால் முக்குறும்பை அறுத்தவர் எனப்பெயர்பெற்றவர்.

மொழியைக் கடக்கும் பெரும்புகழான் வஞ்சம் முக்குறும்பாம்குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடிய பின்
பழியைக் கடத்தும் இராமானுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனி யாது வருத்தமன்றே.

இரமானுஜ நூற்றந்தாதிப்பாடல் இது.

ஒருவரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்வோம் அல்லவா.. அதையே மொழியைக் கடக்கும் பெரும்புகழோன் என்று கூரத்தாழ்வாரைப் பற்றி திருவரங்கத்தமுதனார் தன்னுடைய இராமானுச நூற்றந்தாதியில் சிறப்பித்துள்ளார்


சிறு வயதிலிருந்தே நிறைந்த கல்வியுடன் நற்பண்புகள் அவரிடம் காணப்பட்டன. எல்லோருக்கும் பிடித்த பாத்திரமாக விளங்கிய அவருக்குத் தகுந்தாற்போல, ஆண்டாள் என்ற பெயர் கொண்ட ஒரு நல்ல குணவதி அவருக்கு மாலையிட்டாள்.பெண்குலத்தின் பொன்விளக்கு என்பார்கள்  இந்த ஆண்டாளம்மாவை.

தன் செல்வத்தை எல்லாம் தானம் செய்த பின்னர் குருவைத் தேடிய அவர், ஸ்ரீராமானுஜரைச் சரணடைந்தார். அவருக்குத் தொண்டு செய்து வாழும் எண்ணத்தில் மனைவியிடம் ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீராமானுஜருக்கு சேவை செய்வோம் என்று கூறினார்.

"எத்தனை தூரம் போக வேண்டும். வழியில் எதாவது பயம் உண்டா?"

"மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம்! ஏன் எதாவது எடுத்து வந்திருக்கிறாயா?

"ஆம் சுவாமி,தாங்கள் சாப்பிட என்று ஒரு தங்க வட்டில் கொண்டு வந்திருக்கிறேன்".

அதை வாங்கி வீசி எறிந்தார் ஆழ்வார்.

பின் நீண்ட பயணத்திற்குப் பின் திருவரங்கம் அடைந்து அங்கு ஒரு வீட்டில் தங்கினார்கள். கீழச்சித்திரை வீதியில் தேருக்கு நேராக அமைந்த அந்த வீட்டில் உணவில்லாமல் மூன்று நாட்கள் பட்டினி கிடந்தனர்.

ஆண்டாளம்மாள் தன் கணவர் இப்படிப் பட்டினியாக இருப்பதைப் பார்த்து தவித்துப் போபோய்விட்டாள். அவளுக்குத் தானும் பட்டினி கிடப்பது தெரியவில்லை. நேராக மனதில் ஸ்ரீரங்கநாதனைக் கண்டு பேசினாள், "அப்பா, திருவரங்கனே! உனக்கு மட்டும் மூன்று வேளைகளும் இனிப்புடன் பிரசாதம் போகிறது. உன் பக்தன் இங்கு மூன்று நாட்கள் பட்டினியாக இருப்பது தெரியவில்லையா? நீ மட்டும் அங்கு வயிறாற அமுது உண்கிறாயே!"




என்ன ஆச்சரியம்! உடனேயே கதவைத் தட்டிய ஒரு பரிசாரகன், ஒரு பொட்டலத்தைக் கொடுத்து, "அரங்கன் என்னை அனுப்பி, இதைக் கொடுத்து வரச் சொன்னார்" என்றான். அதைப் பிரித்துப் பார்த்தால் அதில் அரவணைப் பிரசாதம் இருந்தது. ஆண்டாள் அதை எடுத்துத் தன் கணவரிடம் கொடுத்தாள்.

கூரத்தாழ்வார் தன் மனைவியிடம், அரங்கனை வேண்டினாயா என்று வினவ,
"ஆம், மூன்று நாட்கள் என் கணவர் பட்டினி கிடக்கிறார். உனக்கு மட்டும் பிரசாதம் போகிறதே என்று ரங்கநாதனிடம் கேட்டேன் " என்றாள்.

அனைத்தையும் விட்டு வந்தபின்னும் அரங்கனிடம் நீ இப்படிவேண்டிக்கொள்ளலாமா சரி இனி இம்மாதிரி செய்யாதே எனச்சொல்லி அவர் அரங்கபிரசாதத்தில் தானும் சிறிது எடுத்துக்கொண்டு மனைவிக்கும் சிறிதுகொடுத்துவிட்டு இரவு முழுதும் திருவாய்மொழியை ஓதியவண்ணமே கழித்தார்.

(பரமனின் பிரசாதம் உண்ட பலனாய் பத்துமாததில் அவர்களுக்கு இரட்டைக்குழந்தைகள் பிறந்தன.

பராசரபட்டர் வியாசபட்டர் என்று பேரறிவும் மிகுந்த ஞானமும்கொண்டஅவர்களைப்பற்றி பிறகுவிவரமாய் எழுத அரங்கன் அருளவேண்டும்!)


குணங்களில் சிறந்தவரும், ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்யம், பகவத் பாகவத தொண்டு இவைகளில்  சிறப்பு  பெற்றவர் ஆழ்வார் பெருமான், தான் கண்களை இழக்கக் காரணமாயிருந்த "நாலூரான்' என்பானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டவர் ! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாணநன்னயம் செய்துவிடல்’ என்னும்  குறளுக்கு  கூரேசரே சான்று.


சுமார் 12 வருட காலம் கழித்து ராமானுஜரும், கூரத்தாழ்வாரும் காஞ்சியில் சந்தித்தனர். அப்போது ராமானுஜர் காஞ்சிப் பேரருளாளனிடம் வேண்டிக் கொண்டதால், கூரத்தாழ்வார் இழந்த பார்வையை மீண்டும் பெற்றார்.



ஒருநாள் திருவரங்கனின் திரு முன்பு ஆழ்வார் சென்று,”பொன்னி சூழ் அரங்கமேய பூவை வண்ண மாய!  கேள்!’ என்னும் திருமழிசைபிரானின் பாசுரத்தைப்பாடி,”அடியேனுக்கு உன் திருவடி ஏகும் பேற்றினைக்கொடு” என்று வேண்டிக்கொண்டார்.

எம்பெருமான் முகம் மலர்ந்து,”பரமபதம்  தந்தோம்’ என்றார்.

இராமானுஜர்  பதற்றமாய் தன் சீடனிடம்,” கூரேசா நீ ஏன் முந்திக்கொண்டாய்?’ என்று கேட்க அதற்கு கூரேசர்,”  எம் குருவான  உம்மைப்பிறகுவரவேற்க-எதிர்கொண்டழைக்க- நான் முன்னே செல்லவேண்டாமா?’ என்று சொல்லவும், இராமானுஜர்  கண் பனித்துப்போனார்.

கூரத்தாழ்வார்  இராமானுஜரிடம் கொண்டிருந்த குருபக்தி, மதுரகவி, நமாழ்வாரிடம் கொண்டிருந்த குருபக்தியோடு ஒப்பிடவேண்டிய இனிய சிந்தனையாகும்.


.நாளை(22-1-2014) தை ஹஸ்தம் ,கூரத்தாழ்வார் பெருமானின் திருநட்சத்திரம்!



(17.1.2009 அமைந்த இவரின் அவதார தினம், இவரது ஆயிரமாவது ஆண்டாக அமைந்தது.)


மேலும் படிக்க... "குருபக்திக்கு ஒரு கூரேசர்!"

Monday, January 13, 2014

சங்கத் தமிழ்மாலை முப்பதும் .....

வங்கக் கடல் கடைந்த, மாதவனை, கேசவனை,
திங்கள் திரு முகத்து சேய் இழையார், சென்று, இறைஞ்சி,
அங்கு அப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்
பைங் கமலத் தண் தெரியல், பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,
இங்கு இப் பரிசு உரைப்பார், ஈர் இரண்டு, மால் வரை தோள்,
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று, இன்புறுவர் எம் பாவாய்!



*********************************************************************************


‘வங்கம் விட்டுலவும் கடல்  பள்ளியானை..’  என்று பெரியாழ்வார்  தனது பாசுரம் ஒன்றை முணுமுணுக்கவும் கோதை,” என்னப்பா  வங்கமா?  கப்பல் என்றா  பொருள் சொல்கிறீர்கள்?’ எனக்கேட்டாள்.

கடலை அன்று அவன் கடைந்தபோது எங்கும் சுழன்ற மலைகளும் அலைகளும் கப்பல்போலக்காட்சி அளித்த  கற்பனையாகவும் கொள்ளலாம் கோதை .. ஸ்ரீயபதியானவன் அவன் அதாவது  திருமாமகள் தலைவன் மாதவன்..

ம்ம் அப்புறம்?

 அவன் கேசவன்  கண்ணபிரான்... தமிழில் வல்லமை கொண்ட நீ என்னை சோதிக்கிறாயா கோதை? கண்ணனுக்குப்பூமாலையையும்,பாமாலையையும் சூட்டுகிறாய்!

 அவனை மனத்தால்  ஆள்கின்றாய் ஏன் ஆண்டும்விட்டாயே ! நீ ஆண்டாள் !

அப்பா! மகிழ்ச்சியாக இருக்கிறது ஆண்டாள் என்னும் பெயரை அகிலம் நினைவில் கொள்கிறமாதிரி இன்று பாசுரம் பாடி நிறைவு செய்யப்போகிறேன்.

வாழ்த்துகள்  என் அருமை மகளே!

ஆண்டாள்  கண்ணன் இருப்ப்பிடம் வந்தாள்.  வழக்கம்போல தோழியரும் உடன்வந்தனர்.

"பெண்களே நீங்கள் வேண்டிய குற்றேவல்களை நான் கொள்கிறேன்..உங்களுக்கு இது பேறுதான் என நினைக்கிறீர்கள் ஆனால் நீங்கள் பெற்ற பலனை பின்னே வருவோர் இழக்க வேண்டியது தானா?””

கிருஷ்ணன் இப்படிக்கேட்கவும்  ஆண்டாள்”வங்கக்கடல் கடைந்த மாதவனைக்கேசவனை..’ என்று  பாட ஆரம்பித்தாள். தோழியரும் சேர்ந்துகொண்டனர். மாதவன்  ..அன்னையைச்சரணட்டைந்து தன்னைச்சரணம் அடைவோர்க்கு அருள் தருபவன்  அவன் மாதவன்.. ஹிரண்ய கேசஹ என்னும்  வேதம் புகழும்படியான கேசம் உடையவன். கடல்கடையும்போது அலைந்திருந்த மயிர்க்கற்றைகளின் அழகு. கேசி எனும் அரக்கன் தன்னிடத்தில் அன்புடையார் அடையவிடாமல்  தடுத்தபோது அவனை அழித்தவன்.

“அழகான முகங்கள்  உங்களுக்கெல்லாம்””

“திங்கள் திருமுகத்து..”  உன்னால்  உன் அருளால்  கதிர்மதியம்போன்ற உன் முக ஒளியால் மதிமுகம் எங்களூக்கும் அமைந்தது. அதுவும் திரு முகம்...
சேயிழையார் சென்றிறைஞ்சி..... ஆபரணங்களை அணிந்ததால் அழகு கூடப்பெற்ற அயர்குலப்பெண்கள்  உன்னை அடைந்து  பணிந்து வணங்கி

அங்கப்பறை கொண்ட ஆற்றை...   திருஆயர்பாடியில் தங்கள் பலனை பெற்றுக்க்கொண்ட வரலாற்றினை

அணி புதுவை.... அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர், மாடமாளீகைகளும்  கோபுரங்களும் திருக்கோயில்களும் கொண்ட ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த

பைங்கமலத்தண் தெரியல்.... பசுமை பொருந்திய  தாமரை மலர்கொண்ட குளிர்ந்த மாலை சூடிய..

பட்டர்பிரான் கோதை...பரமனுக்கே  பல்லாண்டு பாடிய பட்டர்பிரான்
‘திருவில் பொலி மறைவாணன்’ என்பார்கள் பெரியாழ்வாரின்திருக்குமாரியான கோதை -ஆண்டாள்

சொன்ன சங்கத்தமிழ்மாலை.முப்பதும்... அருளிச்செய்த திரள் திரளாக  அனுபவிக்க வேண்டிய தமிழ்மாலையான இம்முப்பது பாசுரங்களையும்
...’சங்கமிருப்பார் போல் வந்து..’என்றோம் முன்னே கூடி இருந்து குளிர்வோம் என்றோம்.. அனைவரும்  சேர்ந்த சமூகம்  உலகுக்கு நல்லது.இது சங்கத்தமிழ்மாலை..மாலுக்கு  உகந்த மாலை.

தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார்...
இவைகளை தப்பாமல்  ஓதுபவர்கள் பாடுபவர்கள்

ஈரிரண்டு மால் வரைத்தோள்...  நாலுபெரிய மலைகள் போன்ற தோள்களை உடைய...மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா  என்றார் பெரியாழ்வார்.

செங்கண் திருமுகத்துச்செல்வத்திருமாலால்... சிவந்த கண்களையும் அழகிய முக மண்டலத்தையும் உடைய  திருமாலால்...திருமகளுடனான  மால்
எங்கும் திருவருள் பெற்று.....

எல்லா இடத்திலும் அன்னையுடனான  அண்ணலின் அருள் பெற்று...
இன்புறுவர் எம்பாவாய்///மகிழ்வார்கள்  மக்களே!

“ஆஹா  ஆண்டாள்! தமிழால்  என்னை ஆண்டாள்! உன் பொதுநலப்பாங்கு என்னைக்கவர்ந்தது..  எல்லா இடத்திலும் எல்லாக்காலத்திலும் இந்தப்பாசுரம்  சொல்பவர்களை நானும் அன்னையும் அருள் அளித்து உயர்த்துவோம் இது உறுதி”

  பெருமானின் புன்னகையில்   மனம் குளிர்ந்து கரம் குவித்து மறுபடி வணங்கினார்கள்  பாவையர்களும்!

************************************************************
திருப்பாவை! இந்தப்பாசுரம் பிறந்த  கதையை  முப்பது நாட்களும் அனுபவித்தோம்! விளையாட்டும் வேடிக்கையுமாக எவ்வளவு மகத்தான உண்மைகளை  -உயர்ந்த பொருளை- ஆண்டாள் வெளியிடுகிறாள்!

இந்தப்பிரபந்தம் பிறந்த கதையே   வசீகரமானதுதன.
மகான் இராமானுஜர்(1017- 1137)  வளர்த்துவிட்ட பாவையை ஸ்ரீ வேதாந்த தேசிகர்(கிபி 1268-1369) முதலான ஆச்சாரியர்களும் வளர்த்துவிட்டிருக்கிறார்கள்.
வடமொழிப்பேராசிரியர்களும் தமிழ் அறிஞர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு திருப்பாவையின்  அருமை பெருமைகளை போற்றி அவ்ந்திருக்கிறார்கள்.பிரசித்தி பெற்ற விஜயநகரச்சக்கரவர்த்தியான ஸ்ரீ கிருஷ்ண தேவராயர்’ஆமுக்த மால்யதா’ என்னும் தெலுங்கு நூலிலும் திருப்பாவைச்செல்வியான  சூடிக்கொடுத்த  சுடர்க்கொடியைக் குறிப்பிடுவது வழக்கம்.

**************************************
திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே1
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே!
மருவாறும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே!



ஆண்டாள் திருவடிகளே சரணம்.!






மேலும் படிக்க... "சங்கத் தமிழ்மாலை முப்பதும் ....."

உனக்கே நாம் ஆட்செய்வோம்...







சிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

****************************************************************





“கோதை வழக்கத்தைவிடவும் இன்று சீக்கிரமாகக்கிளம்புகிறாய்..பனிகொட்டிக்கொண்டிருக்கிறது.

அப்பா  மார்கழி இன்றோடு முடிகிறதப்பா... கண்ணனிடம் எங்களது’பறை’யைப்பெற விரைகிறோம்..

அதென்ன  கோதை பறை பறை எனப்பலமுறை சொல்லிவிட்டாய் உண்மையில் என்ன அது என்று சொல்லேன்

அப்பா..இறைவா நீ  தாராய் பறை   என்று அவனிடம்  கேட்டிருக்கேன் அவன் அறிவான் அது என்னவென்று கிடைத்ததும் வந்து சொல்கிறேனே...

நம்மாழ்வார் சொல்வார்,’எம்மாவீட்டு’என ஆரம்பிக்கும் பாசுரத்தில்..’தனக்கேயாக எனைக்கொள்ளும் ‘ என்று..அப்படி ஒரு உன்னத பாகவத கைங்கர்யம் அவர்  வார்த்தைகளில்  மின்னும். அதிருக்கட்டும்  கோதை  ...

மார்கழித்திங்கள் என்றாய். மதிநிறைந்த (பக்ஷம்)என்றாய்  நன்னாள் என நாளைக்குறிப்பிட்டாய்
இப்போது இந்தக்காலையில் மாலைக் காணச்செல்லும் நீ  சிற்றஞ்சிறுகாலை என  வேளையைக்குறிப்பிடப்போகிறாயோ? அப்படி ஒரு பதம் உண்டு தமிழில் ..ஆம் அம்மா..வெட்ட வெளிச்சம் என்பதில்லையா அதுபோலத்தான்..”

புரிகிறது அப்பா..பூவண்ணனைக்கண்டுவந்து  உங்களிடம் விவரம் சொல்கிறேன்.

கோதை தோழியர் படை சூழ  கண்ணன் திருமாளிகைக்குவந்தாள்.

“பிரும்ம முகூர்த்தவேளையில்  யார் அது வாசலில்?” கண்ணன்  வினவினான்

“”சிற்றஞ்சிறுகாலை வந்துன்னை சேவித்து...”

காலை சிறுகாலை  சிற்றஞ்சிறுகாலை.. இருளைப்போக்கி ஒளியூட்டும் கதிரவன் நீயே என்பதால்  உனைத்தேடி இந்தக்காலையில் வந்தோம்...வந்து உன்னை சேவித்து நிற்கிறோம்”

“ஏன் நிற்கிறீர்கள்?  தயக்கமென்ன?அருகில் வந்து உங்கள் தேவைகளை சொல்லலாமே?”--கண்ணன்.

“அதில்லை... முன் அவதாரத்தில்  விபீஷணன்  அண்ணல்  அருகே வரையலாமல் சங்கையால் நம் அடியார்களால் தடை  ஏற்பட அப்படியே  ஆகாயத்தில் நின்றான்..  அதுபோல  உன்னோடு  உரையாட விடாமல்  ஏதும் தடைகல் வருமோ என்ற் அச்சத்தில்..”

“ விபீஷணன் அரக்கர் கூட்டத்தைசேர்ந்தவன்  அதனால் அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது ஆனால் நீங்கள் அப்படி இல்லையே? சொல்லுங்கள்..”

கோதையுடன்  பெண்கள்  அவன் திருவடிக்குக்கீழ்  உரிமையுடன் அமர்ந்துகொண்டார்கள்.

:கிருஷ்ணா!உன்  திருமுக தரிசனமே மனத்தை நிறைத்துவிட்டது..  உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!பொன்போன்ற உயர்ந்த அழகிய  தாமரைபோல் மிருதுவான சுகந்தமான  உன் திருவடியினை..

புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே  என்னும் நம்மாழ்வாரைப்போல...

“இப்போது தான் என்னை அடைந்துவிட்டீர்களே அருகே நின்று அனுபவிக்கிறீர்கள்  பிறகென்ன மறுபடி  சரணம் என திருவடியைக்குறிப்பிடுகிறீர்கள்?”

“கண்ணா! இது அழிந்துவிடக்கூடாதே என்கிற கவலையில்தான்.. எங்களுக்கு கட்டாயம் மரணம் உண்டு உனக்கும் அவதார மறைவு உண்டு.. அதனால் இந்த அனுபவம்  சிலகாலம்தானே இருக்கும்?   போற்றும் பொருள் கேளாய்!  நீ கேட்டாய்! நாங்கள் பதில் சொல்கிறோம்.வேடிக்கைபார்க்காமல்  நாங்கள்  சொல்வதைக்கேளேன்..

போற்றும் பொருள் கேளாய்..

“சொல்லுங்கள்”

“பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து ..மாடுகளை மேய்த்து அதில் வரும் வரும்படியில் உண்ணும் இடைக்குலத்தில் பிறந்து..
 நீ  இங்கு வந்து பிறந்தது யாருக்காக என அறிவாயா?

“அதையும் நீங்களே சொல்லுங்களேன்...”

நீ குற்றேவல்( கைங்கர்யம்) எங்களைக்கொள்ளாமல்போகாது..

உனக்கு சேவகம் செய்யாமல் எங்களால் இருக்கவும் முடியாது அதைப்பெறாமலிருக்க உன்னாலும் முடியாது. நீ மனமிரங்கி எங்களின் கைங்கர்யத்தைப்பெற்றுக்கொள்வதே எங்கள் பிறவிப்பயனாகும்

“கோதையின் அப்பா அன்றே சொல்லிவிட்டாரே”வளைத்து வைத்தேன் உன்னைப் போகலொட்டேன்’ என்று... சரி..நான்  உங்களின் கைங்கர்யங்களை ஏற்கிறேன்.. உங்களுக்கு வேண்டிய பறைகளைத்தருகிறேன் பெற்று செல்லுங்கள்..”

“இந்தப்பறைக்காக  வந்தவர்களோ நாங்கள்? “
இற்றைப்பறைகொள்வாய் ...அன்றுகாண் கோவிந்தா..

அமிர்தம் இருக்க  நீரைவிரும்புவோமோ?

”அடேயப்பா கோபமாய் வருகிறதோ பெண்களே?’

“இல்லையோ பின்னே? நாங்கள் என்ன பூமியை எடுத்து நோக்கிய வராஹனை நினைக்கிறோமா அன்றி ஓங்கி உலகளந்த  வாமனனை நினைக்கிறோமா இன்னும் நீ எடுத்த அவவதாரப்பெயர்களை குறிக்கிறோமா  கோவிந்தா  என்கிறோம் ஐயா! பசுக்களைத்தேடிவந்தவன் நீ.   ஆயர்பாடிப்பெண்கள் நாங்கள்..குற்றேவல் எங்களைக்கொள்ளாமல் போகாது  “

“சரி சரி  நீங்கள் விரும்பும் குற்றேவல் தான்என்ன?”

“எற்றைக்கும் ஏழேழ்பிறவிக்கும்... ஆமாம் இன்றையப்பொழுதோடு போகாது....போகக்கூடாது.. உனக்கு தொண்டு செய்யவேண்டும்.. ‘சன்மம் பலப்பல செய்து’என்பார் ஆழ்வார் பெருமான்.

உந்தன்னோடு..நீ பரமபதம் போனால் அங்கேயும் வருவோம்.. நீ அவதாரம் எடுக்குமிடமெல்லாம் உன் உறவாய்  தொடர்வோம்
உற்றோமேயாவோம்...  இளையபெருமானைப்போலே உன் கூடவே இருக்கவேண்டும்.  ஏழேழ்பிறவிக்கும்..ம்ம்.. நினைவிருக்கட்டும்.

உனக்கே நாம் ஆட்செய்வோம்... ‘தனக்கேயாக எனக்கொள்ளுமீதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ என்ற நம்மாழ்வாரைப்போலே  உனக்கு சேவகம் செய்வதில்  களிப்பு கொள்வோம்.

“ஆமாம்  கோதை உன் தந்தையும் சொல்வார்,,”உறுவதாவது-நீள் குடத்தானுக்கு ஆட்செய்வதே’ என்று அவர்மகளாயிற்றே அப்படியே வார்த்தைகளைப்போடுகிறாய் அதுவும்  கூட்டம் சேர்ந்து”

“ கூடுவதே கோவிந்தா என்பதற்குதானே அதிருக்கட்டும்...
உனக்கே நாம்  ஆட்செய்ய இருப்பதால் மற்றை நம் காமங்கள் மாற்று கண்ணா. உன்னை உனக்கான  தொண்டினைமட்டும் செய்துகொண்டு   நாங்கள் இருக்கும்படியாக நீ எங்களை மாற்று.  அறியாச்சிறுமிகள் எங்கள்  ஆசைகளை  நாங்களாக மாற்றிக்கொள்ள  அறிவுமில்லை போதிய வலிமையும் இல்லை.. அவற்றை நீயேதான் மாற்றி அருளவேண்டும்..”

************************


, பறை’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள், அந்தப் பறை வியாஜம்தான் என்பதைத் தெளிவாக முடிவுகட்டிப் பேசுகிறார்கள் அவன்  அன்பினால மலரும் பணிதான் தங்களுடைய வேண்டுகோளின் உயிர்நிலை என்கிறார்கள்.
திருப்பாவையின் தனிப்பெரு நோக்கம் இந்த உயிர்நிலைப் பாட்டில் வெளியிடப் படுகிறது

...



++


மேலும் படிக்க... "உனக்கே நாம் ஆட்செய்வோம்..."

Sunday, January 12, 2014

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!




கறவைகள் பின் சென்று, கானம் சேர்ந்து, உண்போம்!
அறிவு "ஒன்றும்" இல்லாத ஆய்க் குலத்து, உன் தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்!
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு,

உறவேல் நமக்கு, இங்கு ஒழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனமும், சீறி அருளாதே!
இறைவா நீ தாராய் பறை! ஏல்-ஓர் எம் பாவாய்



****************************************************************


”அப்பா! கூடி இருந்து குளிரவேண்டும் என்றோம் கண்ணனிடம் உடனே இசைந்தான் அந்த இனியவன்..”


கோதையின் குரல்குதூகலம்  பெரியாழ்வாரை  பெருமைப்படவைத்தது. மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம்  என்று கூறி தூயோமாய்ச்சென்று தூமலர் தூவி வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்த  மகளின் மலர்ந்தமனத்தை  மாலவன் கண்டு கொண்டதில் வியப்பென்ன  என்று எண்ணினார்.


எல்லாவற்றையும் தியாகம் செய்தால் கடவுள் தரிசனம் கிடைக்கும் என்பது நிதர்சனம்
அற்றது பற்றெனில் உற்றது வீடு என்பது நம்மாழ்வார் வாக்கு..


“நல்லது கோதை! அவனுக்கும்  நமக்குமான  உறவுக்கு நாம் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.அதற்கு அவனுக்கு நீ என்றென்றும் கடமைப்பட்டிருக்கவேண்டும்.”


நிச்சயம் அப்பா.... இன்று கண்ணனிடம் அதை உறுதிசெய்துவிட்டுவருகிறேன்..


கோதை  தோழிகளூடன்  திருமாளிகைக்குவந்தாள்.


கண்ணன் அவர்களை வரவேற்றுவிட்டு,” நேற்றே நான் உங்கள் பிரார்த்தனையைக்கேட்டு அளிக்க சித்தமாக இருப்பதை தெரிவித்தேன்..ஆமாம்..நான் அவ்வாறு இசைவதற்கு நீங்கள் செய்த உபாயம் தான் என்ன?”   என்று கேட்டான்.


“எங்களிடம் உபாயம்  எதுவும்இல்லை.. நாங்கள்  மாடுகள்பின்னே சென்று காட்டில் சேர்ந்து உண்டு திரிவோம்..  அறிவு இல்லாத ஆய்ரகுலத்தில் பிறந்துள்ள உன்னை பிறவி பெறும் புண்ணியம் உடையோம்... ‘


நோயற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்’ என்கிறார் நம்மாழ்வாரும்..
’நலந்தான் ஒன்றுமிலேன் நல்லதோர் அறம்  செய்துமெலேன்’ என்கிறார் கலியனும்.


ஆயர்குலத்தில்  பிறந்த எங்களுக்கு கர்மயோகம் ஞானயோகம் பண்ணியபிறகு பக்தியோகம்  பண்ணி மோட்சமடைய என்ன தகுதி இருக்கிறது? ஆனாலும் கறவைகள் ( ஆசாரியர்கள்(குருக்கள்) அவைகள் பின் சென்று கானம்(ஞானக்காடு) அடைந்து  சேர்ந்து உண்போம்..  மாடுகள் கொடுப்பதை (அவர்கள்  உபதேசிப்பதை மனதில் உணவாக்கிக்கொள்வோம்..)..இந்தக்குலத்தில்  உன்னைப்பிறவியிலேயே தலைவனாகப்பெற்ற புண்ணீயத்தை அடைந்துள்ளோம்.. எங்களிடம் அறிவு இல்லாததை தெரிந்தே   நீ உபாயம் என்னவென்று கேட்கலாமா?”


“அப்படியானால்  இந்தக்குலத்தில் பிறந்த நான் குறை உள்ளவன் என்கிறீர்களோ?’ கிருஷ்ணன் விளையாடத்தொடங்கினான்  வழக்கம்போல!


இதைக்கேட்டதும் கோதை துடித்தாள் பிறகு சொன்னாள்.


“கிருஷ்ணா   என்ன  வார்த்தை சொல்லிவிட்டாய்!   வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய் தோன்றியது ராமாவதாரத்தில் ஆயர்குலத்திற்கு நீ அணிவிளக்கு! ஞான ஒளிச்சுடரே  வேதஒளீயே  உன்னைக்குறை உள்ளவன் என்போமா  குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!  அகலகில்லேன் இறையும் என்று உன் திருமார்பில் அன்னைத்திருமகள் வீற்றிருக்க  ஏது குறை எமக்கும்? குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தா!


உன்னோடு உள்ள எங்களின் உறவினை உன்னாலும் விடமுடியாதது எங்களாலும் விடமுடியாதது.
நானுனையன்றி  இலேன் கண்டாய் நாரணனே! நீ  என்னையன்றி இலை” ”


:அது உன் தகப்பனாரின் வார்த்தையன்றோ?”


ஆனால் நீ எங்களுக்குத்தந்த மூலமந்திரத்தின் முதல் எழுத்தை பார்த்துக்கொள்..ஒம் என்பது அது... அ+உ+ம=ஓம்
அகரம்=அவன்;  அதாவது நீ
மகரம்=நாம்;  நாங்கள்
உகரம்=(அவன்-நாம்)உறவு
.. கோவிந்தா  இது உன்னோடான  உன்னத உறவு,நீ இங்கு எங்களுக்காக  தோன்றி நாங்கள் உணர்ந்த  உறவு  நாராயணத்வமாகிய பழைய உறவு  கிடக்கட்டும்.. பசுக்களைக்காக்கும் கோவிந்தா என்னும் பெயர் தான் பெரும்பெயர்   உனக்கு உகந்த நாமம்  கோவிந்தன்.. கூவி  கோவிந்தா என அழைத்தால் நீ ஓடிவருகின்றாய்! இன்னமும்  பிந்தைய காலத்திற்கும் இந்த கோவிந்த நாமம்  மக்களின் வாய்வழிப்பெருகிப்பரவப்போகிறது. இதற்கு முன்பாக உனது மற்ற  பெயர்கள் சிறுபெயர்கள்தான்.


ஆனால் முந்தைய பாசுரங்களில்  நாராயணா கேசவா பத்மநாபா  தேவாதிதேவா என்றெல்லாம் சிறுபேரிட்டு அழைத்தமைக்கு  கோபம் கொள்ளாதே..  சீறி அருளாதே..




“இப்போதுதான்  கோவிந்தா  என அழைக்க ஆரம்பித்திருக்கிரீர்கள்  முதல்பாட்டில் நாராயணா என்றீர்கள் அப்போதே இப்படி அழைக்கத்தோன்றவில்லையோ?’


“என்ன செய்வது கிருஷ்ணா நாங்கள் அறியாதவர்கள். அறியாமையில் செய்யும் பிழையைப்பொறுப்பது உன் கடன் அன்றோ?
 நீயோ, ‘துளையார் கருமென்குழல் ஆய்ச்சியர் தம் துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும் முற்றா,இளையார்


விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைவித்த அம்மான்’என்னும் பெரியதிருமொழிப்படி நீ விளைவித்த அன்பு எங்களை இந்தப்பாடு படுத்துகிறது. இதற்கு நீ கோபிக்கலாமா?
நாங்கள் உடல் நீ எங்கள் உயிர்!
 உன்மேல் அன்புகொண்டவர்கள்.எங்களுக்கு கிருஷ்ணபக்திதான்  அறிவு அந்த அறிவே சொத்து.






இறைவா  நீ தாராய்! 


தலைவனே  எங்கள் நோன்பிற்குவேண்டிய பறையைத்தருவாயாக! நப்பின்னை தான் செய்யவேண்டியதை எங்களுக்கு்செய்துவிட்டாள். இனி நீதான்  மனம் வைக்கவேண்டும்.. நீ தந்தாலே ஒழிய வேறு கதி இல்லை கண்ணா!


****************************************************


கிருஷ்ணபக்தி! அது ஒன்றுதான்  ஆஸ்தி என்று
சரணடைந்தவர்களை  ஏற்றுப்பறை தருவாய்  என்றவர்களை கண்ணன்   ரட்சிக்கிறான்..
அறிதோறும் அறியாமை பெருகிக் காண்பதுபோல அறியாமை அதிகரிக்க அந்த அறியாமையைக்கடவுள் போக்கிவிட்டு தன்னிடத்தில் சேர்ந்திருக்குமாறு ஆட்கொள்கிறானாம். படித்துதர்க்கம் செய்பவர்களுக்கு கடவுள் தரிசனம்  கிடைக்காது பக்தி ஒன்றையே ஆபரணமாகப்பூணும் ஒருவர் கடவுள் காட்சி பெறுவர் என்பதை இந்தப் பாசுரம் விளக்குகிறது.





மேலும் படிக்க... "குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!"

Saturday, January 11, 2014

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னை  பாடி பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்னாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனய பல் கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வார
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
***************************************************************
சங்கு  பறை விளக்கு
 கொடி விதானம்  ஆகியவற்றுடன் பல்லாண்டிசைப்பாரையும் அருளவேண்டும் என்று  முதல் நாள் வேண்டிக்கொண்டு சென்ற சிறுமியர் இன்று  தன் மாளிகை வாசலில் வந்து நிற்கவும்,’ ’ஆற்றாது  வந்து உன் அடி பணியுமாப்போலேபோற்றியாம் வந்தோம்’  என்று அன்று
 சொல்லி என்னை உங்களுக்குப்பணியவைத்துவிட்டீர்கள்!  நாந்தான் அனைத்தயும்  தருகிறேன்
என்றேனே..இன்னமும் எதுவும் இருக்கிறதா நான் செய்யவேண்டியதென்று?’ என அன்பும் பரிவுமாய்க்கேட்டான்.

“ஆம்  கண்ணா..நோன்பு நோற்றபின் உன்னிடம் நாங்கள் பெற வேண்டிய சன்மானங்கள்  உண்டு“என்றார்
கள் அவனைப்போலவே   அன்பும் பரிவுமாக,கூடவே வழக்கம்போல உரிமையையும் எடுத்துக்கொண்டவர்களாய்!

கோதையுடன் சேர்ந்து கரம்குவித்தப்பாடத்தொடங்கினர்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

 கூடுவோர் யார்?


அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன் திரு முற்றத்து அடியார்கள்"
  • "தென்னரங்கனை வாழ்த்தி மால் கொள் சிந்தையராய் ஆட்ட மேவி அலர்ந்தழைத்து  அயர்வெய்தும் மெய்யடியார்கள்",
  • "பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேன் என்றிருக்கும் அவர்கள்",

  • கூடிமகிழத்தக்கவர்கள்  இவர்கள்.
    கூடத்தக்கவர்களோடு  கூடவும் பெற்றால் குளிர்ச்சியைப்பற்றி கூறவும் வேண்டுமோ? 

    கூடார்  யார்?

    பகைவர்கள்  அதிலும்  உன் அடியாரை வதைக்கும் பகைவர்கள். உன் அருமை தெரியாமல் உன்னையே எதிர்க்கும் விரோதிகள்.
    அவர்களை  வெல்லும்   கோவிந்தன் நீ!
    கூடாதவரையே   வெல்லும் கூடினாரிடம் தோற்றிருக்கும் பண்பானவன்!



    திவத்திலும் பசுநிறை மேய்ப்புவத்தி செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே!”
    தன்னோடு ஒத்தவர்களுக்கு உதவும் இடமான பரமபதத்தைக்காட்டிலும் பசுக்கூட்டத்தை மேய்க்கும் போது உகப்பு விஞ்சி இருக்குமாம்!  அப்படிப்பட்ட  சீர்(கல்யாணகுணம் கொண்ட) கோவிந்தா!

    உன்றன்னைப்பாடி...

    வாயினால் பாடி,  கேசவனைப்பாட, முகில் வண்ணன் பேர் பாட மைத்துனன்  பேர்பாட என்றோம்   இப்போதும் உந்தன்னைப்பாடி என்கிறோம்.. உன்னைப்பாடி என சொல்லவில்லை.. உன்னைப்பாடுவதையே பயனாகப்புகழ்ந்து பாடிவந்துள்ளோம்.நாமசங்கீர்த்தனம்  எளிமையானது.அதற்கு  மனமும்  வாயும் இருந்தால் போதும்..கோவிந்தா  என்றால் நீ  ஓடிவருவாய் தெரியும் எங்களுக்கு அதனால்தான்  முதல் வரியை அப்படி அமைத்தோம்..  அபயம் அளிப்பாய் அதுவும் அறிவோம்

    ஓஹோ எல்லாம் அறிந்தே என்னை  அறியாக்கண்ணனாய் திகைக்கவைக்கத்திட்டமோ?----கண்ணனும்  விடாமல் கேட்டுவைத்தான்.
    இல்லை கண்ணா.. உன்னைப்பாடி பறை கொண்டு

    யாம் பெறும் சன்மானம்  என்னெவென்று கேள்.அதெல்லாம்  நீமனதுவைத்தாலேயன்றி நாங்கள் பெறுவது எப்படியாம்?

    சரி சொல்லுங்கள்...


    முந்தைய  பாசுரத்தில் சொன்னபடி  பறையைப்பெற்றுக்கொண்டபின்பு  நாங்கள்  விரும்பும்  சன்மானம்  வெகுமதி என்னவெனில்..


    நாடு புகழும் பரிசினால்.... ஒருவர் கொடுக்கிறார் என்றால் அதைப்பெறத்தகுதி வேண்டும். அப்படி அதை நாட்டார் கொண்டாடும்படியாக...
    வாழ்வர்  வாழ்வெய்தி ஞாலம் புகழவே என்று..

    நன்றாக,,, அழகாக  நன்கு பொருத்தமாக அதை நீயும் நப்பினையும் சேர்ந்து எங்களுக்கு அளிக்கும்படியாக-அப்போதுதான்  அது நன்றாக இருக்கும்.


    “என்ன சொல்கிறீர்கள்? நாங்கள்  கொடுப்பதா?”


    “ஆமாம் கண்ணா// நீயும் பிராட்டியும் சேர்ந்து இந்திரனால் கொடுக்கப்பட்ட  ஹாரத்தை(மாலையை) திருவடிக்குப்பூட்டினாற்போல நப்பின்னையும் நீயும் சேர்ந்து எங்களுக்கு அணிவிக்க நாங்கள் அணிவோம். அதுவே  நன்கு அமையும்.

    சூடகமே தோள் வளையே
    தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்..




    ‘பலப்பலவே ஆபரணம்’என்றார் ஆழ்வாரும்.  அபரிமித திவ்யபூஷண


    மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்றோம்.ஆனால் இன்று  உன்னோடு கூடி இருப்பதால்  யாம் அணிவோம்..
    அவையாவன   கைக்கு  ஆபரணமான  சூடகம், காதுக்கு ஆபரணமான தோடு, செவிப்பூ கர்ண புஷ்பம், பாடகம்..காலின் ஆபரனமான பாதக்கடகம், என்று பல ஆபரணங்களை நீங்கள் அணிவிக்க நாங்கள்  அணிவோம்


    ஆடை உடுப்போம்...  அதாவது  உன்னால் அணிவிக்கப்பட்ட  புத்தாடைகளை அணிவோம்..  வெகு தொலைவிலிருந்து ‘கோவிந்தா’ என்று த்ரௌபதி கூவியதும் ஆடையை சுரந்தாயே அதுப்போல ஆடையளிப்பாய்! 


    அதன் பின்னே பால் சோறு 
    மூட நெய் பெய்து முழங்கை வழி வார
    கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்


    ஆயர்பாடியில் பாலுக்கும்நெய்யுக்கும் என்ன குறைச்சல் அதுவும் உன் அருள்  இருக்கையில் அவை  மிதமிஞ்சிப்பெருகுகின்றனவே!  பசுக்க்ளோ வள்ளல்கள்!


    நெய்யிடையிலே சோறுண்டோ எனத்தடவிப்பார்ப்பதுப்போல   அப்படி நெய்  பெருகும் பால் சோறு


    முழங்கைவழியாக  நெய் வழிந்து செல்ல அப்படிப்பட்ட  பாற்சோற்றினை(அக்காரவடிசில்)  நீயும் நாங்களுமாகக்கூடி இருந்து குளிர்ந்து..


    “அதற்கென்ன நானும் நப்பின்னையும் இப்போதே உங்களுடன் பாற் சோறு உண்ண வருகிறோம்..”


    கண்ணன்  வந்தான்.   உண்ண அமர்ந்தான் அருகில் நப்பின்னை   அழகுப்புன்னகையுடன்!


    “ஆஹா  நீயும் நப்பின்னையும் உண்ண உடன் நாங்களும் உண்ண  இதென்ன   காட்சி! பின்னைக்காலத்தில்
    இப்படி  நடக்கும் சமபந்தி போஜனம்  என்பதை கோதை-பெரியாழ்வார்  காலத்திலேயே இருந்தது என உலகம் பேசுமோ!”




    *******************************************************




    இப்பாசுரத்தின் வேதாந்தவிளக்கம் என் பெரியோர் உரைப்பது.






    சூடகம்.. காப்பு(நம்மை  ரட்சித்திடும் கடவுளைக்குறிக்கிறது)


    தோள்வளை..முன்கைச்சரி..திருவிலச்சினை(பாஹுவலயம்)


    தோடு..திருமந்திரம்


    செவிப்பூ..கர்ணப்பூ (த்வயம்)
    பாடகம்..காலுக்கணிவது.. (சரம்ஸ்லோகம்)
    ஆக  திருமந்திரம்   த்வயம்  சரம்ஸ்லோகம்  ஆகிய மூன்றும் மோக்ஷம் அடைய விரும்பும் அடியார்க்குத்தேவையானவை.
    திருமந்திரமாவது/ நாராயணாய நம;
    த்வயம்.. ஸ்ரீமதே நாராயணாய நம;
    சரமஸ்லோகம்.. ஸர்வதர்மான் பரித்யஜ்ய  மாமேகம் சரணம் வ்ரஜ. அஹம் த்வா சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச;




    கூடாரை வெல்லும் எனும் சொல் கூடாரவல்லி ஆகி அந்த நாளில் பால்சோறு  செய்வதை ்வழக்கமாகக் கொண்டுள்ளனர்!










    ஷைலஜா
    மேலும் படிக்க... "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!"

    Friday, January 10, 2014

    மாலே! மணிவண்ணா!

     மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
    ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
    போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
    ******************************************************





    உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா!
    ஊழிதோ றூழிபல ஆலிலை யதன்மேல்*
    பைய உயோகுதுயில் கொண்ட பரம்பரனே!

    பங்கயநீள் நயனத்து அஞ்சன மேனியனே*

    செய்யவள் நின்னகலம் சேம மெனக்கருதிச்

    செலவுபொலி மகரக் காது திகழ்ந்திலக*
    ஐய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

    ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே.













    "அப்பா!  உங்கள் பாசுரங்களில்  பல என்னை மிகவும் யோசிக்கவைக்கும் அந்தவகையில் இந்தப்பாடலில்பிரளய  காலத்தில் சின்னஞ்சிறு  ஆலின் இலைமீது உன் சொரூபத்தை ஒடுக்கிக்கொண்டு படுத்து யோக நித்திரை செய்யும் கண்ணா  என்று நீங்கள்  அழைத்தவிதம் அருமை!  இலை என்றால் வடமொழியில் பத்ரம். நம் ஸ்ரீவில்லிபுத்தூர் இறைவன் வடபத்ர சாயி .. பிறந்த ஊர்ப்பெருமானை இன்று நான் போற்றியாகவேண்டும் அப்பா”




    “பாலகன் என்று பரிபவஞ் செய்யேல் பண்டொருநாள்
    ஆலின் இலைவளர்ந்த சிறுக்கன் அவன் இவன்’ என்று சொல்லி இருக்கிறேன் கோதை”




    “அன்புடையவன்  என் கண்ணன்  ..நேற்று நடந்ததை சொன்னேன் அல்லவா  அப்பா?  ‘உன்னை அருத்தித்து வந்தோம்’ என்றதும் அவன் முகம் மகிழ்ந்துபோய்விட்டது! இன்று அவனிடம்  நோன்பிற்கான  பறையைக்கேட்டுவிடவேண்டும் வருகிறேன் அப்பா”




    கோதை  தோழிகளுடன் கண்ணன் திருமாளிகைக்குவந்தாள்


    “வாருங்கள் பெண்களே! ‘பறைதருதியாகில்’ என்றீர்களே  நேற்று, என்னை விரும்புவோர் வேறொன்றும் விரும்புவரோ?’ எனக்கேட்டான் சிரிப்பு மறையாமல்.




    “ஆனாலும் கண்ணா  உன்னைக்கண்ணாரக்கண்டு உன் திருநாமங்களை வாயாரச்சொல்வதற்கு  ஏதுவாக இருக்கும் நோன்பை ஆயர்குல முதியவர்  பிரஸ்தாபிக்க நாங்கள் இதில் இறங்கினோம்.. உபகரணங்களையும் தந்தருளவேண்டும்! விவரம் கேளேன் பொறுமையாக”




    கோதை ஆரம்பித்தாள், கூடவே பெண்களும் இணைந்துகொண்டனர்.




    மாலே !




    அடியாரிடம் மிகவும் அன்புடையவனே!




    இதற்கு முன் நாராயணன் கேசவன் உத்தமன்  பரமன் தேவாதிதேவன்  என்றெல்லாம் அழைத்தவள்,, இந்தப்பாட்டில் மாலே என்கிறாள். அடியாரிடம்  மிகவும்  அன்பு கொண்டவன். மாலே! அடியாரிடம் மிகுந்த ஆசை கொண்டவன்!  ‘காதல் கடலின் மிகப்பெரிதால்’ என்கிறார் நம்மாழ்வார்.




    ‘மாலாய்ப்பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை..’






    மணிவண்ணா..!




    நீல ரத்தினம்  போன்ர நிறத்தை உடையவனே.. ‘தூமணிவண்ணனைப்பாடிப்பற’என்பார் ஆழ்வார் பெருமான்.




    கண்ணன் புன்னகயுடன்,” என்னை என் தாய் யசோதா சொல்வாள்” என்றுமெனக்கு இனியானை என் மணி வண்ணனி’என்று..நீங்கள் சொல்வது வியப்பாக  உள்ளதே.. உங்களின் வடிவழகுக்குமுன் என் அழகு நிற்கமுடியுமோ? வந்த காரியத்தை சொல்லுங்கள்” என்றான்.




    மார்கழி நீராடுவான்..




    ”முதல்பாடலிலேயே மார்கழித்திங்கள் நீராடப்போதுவீர் என்றாள் கோதை.அதன் படி மார்கழியில் நீராடுவதற்கு...“




    “என்ன தேவை? வேதங்களில் இதற்கு ஏதும்  விளக்கம் விவரம் இருக்கிறதா பெண்களே?”






    மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்







    “ அதெல்லாம் எங்களுக்குத்தெரியாது எமது மேலையார் அதாவது  பெரியோர்களால் காலங்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருவது அதை நாங்கள் பின்பற்றுகிறோம்..நோன்புக்கு செய்யவேண்டிய கிரியைகள் வேண்டும்.. அவைகள் என்ன வென்று கேட்டாயானால்.....”






    “ மது ராமது லாபா(இனியவள் இன் சொற்களைப் பேசுமவள்) என்று புகழ்பெற்ற உங்களுடைய  இனிய மொழிகளை நான் கேட்கத்தயார்  சொல்லுங்கள்..”




    ஞாலத்தை எல்லாம்
    நடுங்க முரல்வன 

    பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள்








    இங்கே ஞாலம் என்றது இறை அன்பர்களின் விரோதிகள் கொண்ட இடம் என்பதாகும்  அவர்கள் பயப்படும்படியான  பூமியில் ஒலியைக்கொடுக்கூடிய வெண் நிற சங்கம் உன்னிடம் இருப்பதேபோன்ற சங்கங்களையும்..


    போய்ப் பாடுடையனவே
    சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
    கோல விளக்கே கொடியே விதானமே
    ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்



    .  மிகவும் இடம் உடையனவாய்....  சாலப்பெரு...மிகவும் பெரியதான  பறை.. (இசைக்கருவி)
    திருப்பல்லாண்டு பாடுபவர்கள்,  மங்களமான விளக்கும், (தீபங்கள்) கொடியையும்(த்வஜங்கள்)  விதானம்   ,பனி எங்கள் மேல் விழாமல் தடுக்க  மேற்கட்டியையும்,  அளித்தருள வேண்டும்.
    இவ்வளவும் நீயே மனமுவந்து அருளாவிடில் எங்களால் என்ன செய்யமுடியும்? ஆகவே நீயேஅருளவேண்டும்!


    அருளா தொழியுமே ஆலிலைமேலன்று
    தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான்
    என்னும் உன் அருள் பிரபலம் அல்லவோ!



    ”பெண்களே  இவையெல்லாம் கொடுத்தாகவேண்டுமா ?என்னால் ஆகுமா என்ன?”



    “உனக்கு அரியதும் உண்டோ? ஆதாரமற்ற ஆலந்தளிரிலே சிறு குழந்தையாய் பள்ளிகொண்டு, உலகம் அனைத்தையும் உண்டவன் அன்றோ நீ! உன்னால் ஆகாததா என்ன!“


    “தந்தேன்  அனைத்தையும்!”


     {இறைவன் அன்பே உருவானவன் என்பது மாலே மணி வண்ணா என்னும் வரி காட்டுகிறது.
    சங்கின் தொனி ஓங்காரமாகிய பிரணவம்.. உட் பொருள் (சேஷத்வ)ஞானம்.. பலலாண்டிசைப்பார்  என்பது நல்லார் இணக்கம்.. கொடி..கைங்கர்யக் கொடி!)







    மேலும் படிக்க... "மாலே! மணிவண்ணா! "

    Thursday, January 09, 2014

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து.......

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து* ஓர் இரவில்-

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்*

    தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,* உன்னை-

    அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்*

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*

    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

    ****************************************************************************






    வடிக்கொள் அஞ்சன மெழுதுசெம்  மலர்க்கண் மருவி மேலினி தொன்றினை நோக்கி
    முடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்  பொலியு நீர்முகில் குழவியே போல*
    அடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும் அங்கை யோடணைந் தானையிற் கிடந்த
    கிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ!  கேசவா! கெடுவேன்  கெடுவேனே.                   
     

    "என்ன பாடல் அப்பா  இது?”  என்றாள்  கோதை  தன் தந்தை பெரியாழ்வார்  பாடி முடித்ததும்.. 
    .
     
    ”இதை  குலசேகரஆழ்வார் ’  தேவகிபுலம்பல் ’என்று    பாடி இருக்கிறார் கோதை...
    குழலினிது யாழினிது  என்பார்கள்  .  குழந்தையை எடுத்துக்கொஞ்சாமல் அதன் மழலையை அனுபவிக்காமல்  எந்தத்தாயினால்  இருக்கமுடியும்? குழந்தையை  தூக்கும்போது இடைவலித்தாலும் இறக்கியதும் மனம் வலிப்பதை  அனுபவிக்கும்   அன்னையரே அதிகம்!”




    “தேவகிக்கு அந்த பாக்கியம் இல்லாமல்போக  யசோதை அதைப்பெற்றதற்கு அவள் என்ன தவம் செய்தாளோ எங்கும் நிறைபரபிரும்மம்’அம்மா’ என்றழைக்க?”




    “ஆமாம்  கோதை..
     
    ’மருவு நின்திரு நெற்றியில் சுட்டி அசைத ரமணி வாயிடை முத்தம்*
    தருத லும்,உன்றன் தாதையைப் போலும் வடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர*
    விரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து  வெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்*
    திருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற் றாளே ’
     


    என்று யசோதைக்கு கிடைத்த  பேற்றினை  நினைக்கிறாள் தேவகி..இருவருமே உயர்ந்த  பெண்கள்தான். ஆயிரத்தில் ஒருத்தி தேவகி !ஆயிரத்தில் ஒருத்தி யசோதை! ”


    “ஆஹா! அந்த தேவகியை இன்று நினைத்துப்பாடவேண்டும் அப்பா”


    “கண்டிப்பாக அவளைப்போற்று கோதை கிருஷ்ணன் மகிழ்வான். தேவகிபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்! தேவகி புத்ராய கிருஷ்ணாய  என்கிறது வேதமும்..  நீயும்  உன் தோழிகளும் அவன் திருவடி சேவைகண்ட மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் அவனிடம் இனி வேண்டியதைப்பெற  விண்ணப்பம் செய்யுங்கள்”


    தந்தைக்கு தலையசைத்துவிட்டு   கிருஷ்ணனின் இருப்பிடம் வந்தாள்.


    கிருஷ்ணன்  கேட்டான்..”  என்ன பெண்களே  நடையழகைப்பார்த்தீர்கள் ஆனால் என்னை நாடி வந்த காரணம்  என்ன என்று சொல்லவே இல்லையே?


    “ கோதை  அதை சொல்வாள் கண்ணா..”


    கோதை பாட இருப்பதை கிருஷ்ணனுடன் அனைவரும்  ஆவலுடன் கேட்கத்தயாரானார்கள்..


    ஒருத்திமகனாய்ப்பிறந்து...



    தேவகி என்னும்  ஆயிரத்தில் (லட்சத்தில் கோடியில் ) ஒருத்திக்கு மகனாகப்பிறந்து...(தோன்றி என்று சொல்லவில்லை இங்கு...கர்ப்பவாசத்தில் பிறந்தவன் ஆகவே பிறந்து)  ஆயர்குலத்தில் தோன்றிய அணிவிளக்கை, தோற்றமாய் நின்ற   என்று சொன்னதில் திருப்தி இல்லை கோதைக்கு ஆகவே
    பிறந்து  என்கிறாள்.


    ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர......


    பிறந்த அந்த இரவிலேயே  ஆயிரத்தில்(லட்சத்தில்கோடியில்)  ஒருத்திக்கு மகனாய் வளர்ந்து...

    கிருஷ்ணன் பகலில்பிறப்பதற்கென்ன? இரவில்தானே  திருடமுடியும்?ஒளித்துவைக்க உன்னதப்பொழுது இருட்டு அல்லவா?நந்தகோகுலத்தில் யசோதை வயிற்றில்  பிறந்த பெண்குழந்தையை மதுராவில்  உள்ள தேவகியின்  இடத்தில் கொண்டுவிடுவது  திருட்டு அல்லவா? மேலும் அங்கிருந்து கண்ணனை இங்கே கொண்டுவந்து விட்டதும் அதே தானே? இதெல்லாம் பகலில் முடியுமா  ஊர் மக்களுக்கு தெரிந்து  அது கம்சன் காதுக்கும் எட்டிவிடாதா? ஆகவே இரவில் பிறந்தான் கண்ணன்/  இரவிலேயே  யசோதையிடம் போய்ச்சேர்ந்தான்.வளர்ந்தான்.




    தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த*

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்*

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே.,







    அப்படி ஒளிந்து வளர்வதையும் பொறுக்கமாட்டாமல்  கண்ணனைக்கொல்லவேண்டும் என்ற தீய எண்ணம் கொண்ட கம்சன்
    கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்!




    நெருப்பு போல கம்சன் வயிற்றில் கண்ணன்  நிற்பதாக பொருள்  இங்கில்லை  கம்சன் வயிற்றில் கண்ணன் காலடி படும் அளவு அவன் புண்ணியம் செய்தவனா என்ன?  கம்சனின் வயிற்றில் பயம் என்னும் அக்கினியை  கொளுத்தினான் . நெருப்பு என்னும்படி நின்ற நெடுமால்( சர்வாதிகனே! அன்பர்களிடம் பேரன்பு கொண்டவன் )


    “நல்லது...இன்னமும் நீங்கள் வேண்டுவதென்ன  என சொல்லவில்லையே?”


    கோதை தொடர்ந்தாள்..






      உன்னை அருத்தித்துவந்தோம்...


    எங்களுக்கு வேண்டியவைகளை யாசித்துக்கொண்டு வந்தோம்...


    “கேட்டதும் கொடுப்பவன் கண்ணன் என்கிறீர்கள் அல்லவா?”


    “ஆம்  .. நீ  பெரிய பெரிய அரண்மனை கேட்டால் கொடுப்பாய்  ஐஸ்வர்யம் அளிப்பாய் ஆடை ஆபரணம் கொடுப்பாய்/.. இன்னும் எல்லாம் கொடுப்பாய்..நல்லன  எல்லாம் தரும்  என்ற ஆழ்வார் மற்றும் தந்திடும்  என்றாரே!  ஆனால் இச்சுவைதவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவைபெறினும் வேண்டேன் என்றது போல எங்களுக்கு அவையெல்லாம் வேண்டாம்..”


    “வேறென்ன தான் வேண்டும்  ?”


    கோதை  இப்போது தன் தோழியரையும் குரல்கொடுக்க  சைகை காட்டினாள்
    அனைவருமாக,
    ’கிருஷ்ணா  கேட்கலாமா?”  என்றார்கள்


     பயப்படாதீர்கள்  எதைவேண்டுமனலும் கேளுங்கள்




    உன்னை அருத்தித்துவந்தோம் பறை தருதியாகில்*

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*

    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்



      உன்னிடத்தில் யாசிப்பதே பிசகு  நீயாக  கொடுக்கவேண்டும் சிறுமியர் நாங்கள்  உன்னைத்தான் நாங்கள்பலனாக  தரகேட்கிறோம்






    கிருஷ்ணன்  அவர்களின்சாமர்த்தியமான் பேச்சில்  மனம் மகிழ்ந்தான்
     உன்னையே எங்களுக்குக்கொடுக்கவேண்டுமென்கிறார்கள்!
     “ஸ்த்ரீணாம் த்விகுண ஆஹார: ததாபுத்திஸ் ததாபலம் என்பதுபோல  பெண்களுக்கு ஆண்களை விட  உணவும் இரண்டு பங்கு புத்தியும் இரண்டு பங்கு !


    ம்ம் பெண்களே  இவ்வளவுபேர் கூடிவந்துஎன்னயே கேட்கிறீர்களே..
     பறைகொள்வான் இன்றுயாம்வந்தோம் என்கிறீர்கள் இவற்றில் எது உங்கள் உள்ளங்களில் ஓடுகிறது?


     எங்களுக்குப்  பறை ஒன்று உண்டு ’தருதியாகில்’ அதாவ்து   உன் திரு உள்ளமாகில்-  பிராட்டியும் விரும்பும் செல்வத்தையும்  உனக்கு சேவகமும் செய்து  உன்னைப்பிரிந்துவாடும் வருத்தமும் நீங்கி  மகிழ்ச்சிஅடைந்துவாழ்வோம்!


    நீ ஸ்ரீ;ஸ்ரீ; திருவுக்கும் திருவாகிய செல்வா !


    திருத்தக்க செல்வமும்சேவகமும்யாம்ம்பாடி ...  கண்ணனிடமிருந்து ஒன்றைப் பெறுவதைக்காட்டிலும் கண்ணனையே அடைந்துவிட அவனையே யாசகமாய்க்கேட்போம். இதுவே எங்கள் நோக்கம்


    இப்படி  கோதையும் பெண்களும் வேண்டிக்கொள்ளவும் கண்ணன் கண்களைத்திறந்து இசைவு அளிக்கிறான்.















    மேலும் படிக்க... "ஒருத்தி மகனாய்ப் பிறந்து......."

    Wednesday, January 08, 2014

    அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!

     
    அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி,
    சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல்போற்றி,
    பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,
    கன்று குணிலா எறிந்தாய்! கழல்போற்றி,
    குன்று குடையா எடுத்தாய்! குணம்போற்றி,
    வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி,
    என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்.//
    ******************************************************







    னதுநடையழகைக்காண  வேண்டும் என்று  ஆயர்குலப்பெண்கள்  விரும்பியதும்   கிருஷ்ணன் உடனே  சிம்மாசனம் நோக்கி நடக்க ஆயத்தனானான். சற்றுதாமதித்தாலும்  அவர்கள்  கோபித்துக்கொள்ளலாம் திருமங்கைஆழ்வார்  மாதிரி..  ‘என்னப்பா க்ருஷ்ணா  உன்னைத் தேடி நான்  வந்திருக்கிறேன் எனக்கு சேவை சாதிக்கமாட்டாமல் என்ன உட்கார்ந்திருக்கிறாய்?’ என்று கேட்டவர்.


    எம்மைகடிதாக் கருமம்   அருளி ஆஆ என்றிரங்கி  நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோம் ஏ’  என்றாரே! உன் திருமேனியை ஒருநாள் காண்பித்து வாசலில் நடந்துபோனால் நாங்கள்  மகிழ்வோமே கதவை சாத்திக்கொண்டு உள்ளேயே உட்கார்ந்திருப்பதோ பக்தனுக்கு காட்சிதரவேண்டாமா? என்றெல்லாம் அன்பின் உரிமையில் கடிந்துகொண்டவர் மேலும் ‘காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர் எம்பெருமான்  வாசிவல்லீர் இந்தளூரீர்  வாழ்ந்தேபோம் நீரே’ என்று உன் வடிவை வைத்துக்கொண்டு நீரே வாழ்ந்து போம் என கோபித்துக்கொண்டவர். இப்படியெல்லாம் ஆயர்குலச்சிறுமிகள்  கூறுமுன் நடப்போம். ராமாவதாரத்தில் நாம் நாலு நடையும் நடப்போம்..  சிங்கம்  ரிஷபம் புலி புரவி என...   ஆனால்இன்று  இவர்கள்  விரும்பியதுபோல  ராமனின் சிம்ம நடையைக்காட்டுவோம்  என  கிருஷ்ணன்  எழுந்து சிம்ம நடைபோட்டான்.


    ஆஹா! கம்பீரத்துடன்  அவன்நடந்துவந்த  அழகில்  வெளியே நின்ற பெண்கள் மெய்மறந்தனர் வந்த  காரியமே மறந்துபோக, அவன் திருவடியை நோக்கிக்கைகுவித்தனர்.கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகின!சேவடி செவ்வித்திருக்க்காப்பு என்று அதற்குக்காப்பிட்டவர் பெரியாழ்வார். அவர்மகளும் தந்தை வழியில் பல்லாண்டுபாடும்விதமாக   திருவடியை  முதலில் வைத்து பாசுரம் அருளத்தொடங்கினாள்.


    அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!


     ஓங்கி உலகளந்த உத்தமனின் பேர் பாடினாள் முதலில்  இன்றோ அளந்த திருவடியை நேரில்கண்ட பெருமையில்  போற்றிப்பாடுகிறாள்! எப்பேர்ப்பட்ட திருவடி அது! திரு உலகு அளந்தபோது இரண்டடியன்றோ இட்டது இன்று எங்களுக்காகப்பத்தெட்டு இடுகிறதே! எங்கள் மேல் என்னே கருணை கண்ணா உனக்கு!


    ” ஒருமதியன்பர் உளம் கவர்ந்தன
    உலகம் அடங்க வளர்ந்து அளந்தன
    ஒருசடை ஒன்றிய கங்கை தந்தன
    உரக படங்கள் அரங்கு கொண்டன..’ என்பது சுவாமி தேசிகன் வாக்கு.


    மேல் உலகம் வந்து நீண்ட இடது திருவடியில் உள்ள சங்கரேகை, சக்ர ரேகை, கல்பக ரேகை, த்வஜ ரேகை, அங்குச ரேகை, பத்மரேகை  ஆகியவற்றைகண்டுகொண்ட பிரும்மன் இது பரமனின் திருவடி என நினைத்து அபிஷேகம் செய்தானாம்!  அப்படிப்பட்ட  திருவடிகள்! ‘இன்னமுதத்திருமகள் என்று இவரை(மற்ற ஆசாரிய பெருமக்கள்) முன்னிட்டு எம்பெருமான் திருவடிகளை அடைகின்றேனே’ என்ற அடியார்  உரையின்படி திருமகளாம் நப்பின்னையை முன் வைத்து அடைந்த திருவடிகள்! அதை  வணங்குகிறோம்!


    சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!


    ராமாவதாரக்காலத்தில் அழகான இலங்கை நகருக்கு கடலில் அணைகட்டி அதன்மீது நடந்து சென்றாய். ‘சதுரமாமதில் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உதிர ஓட்டி’என்றார் பாணரும்..   உண்ணாது உறங்காது ஒலிகடலை ஊடறுத்துபண்ணிய இச்செயல்கள் எல்லாம் எம்மைப்போன்ற ஒரு பெண்ணிற்காகத்தானே?  பிராட்டிக்காக இப்பாடுபட்ட உன் பலத்திற்கு  தீங்குவராமல் இருக்கவேண்டுமே  ஆகவே உன் திறல் போற்றி!


    பொன்றச்சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!


    சகடாசுரனை உதைத்து அழித்த  உன் புகழைப்போற்றி வணங்குகிறோம்!
    சகடம் என்றால் சக்கரம். இந்த  சகடம் ஜீவாத்மாக்களை  அசுரன் போல அழித்துக்கொண்டிருக்கிறது. அதைப்பார்த்த பரமன் தன் திருவடிகளால் உதைத்து  தவிடுபொடியாக்குகிறான். ஜீவாத்மா கர்மவ்சத்தால் நல்ல செயல்களை செய்ய இயலாமல்போனாலும்  அவனுக்கு ஆசார்ய சம்பந்தம்(குருவின் க்ருபை) வரச்செய்து அவர் மூலமாக பகவானை சரணாகதி செய்யும்படி செய்கிறானாம்.. 


    கன்றுகுணிலாய் எறிந்தாய் கழல்போற்றி!
    ‘கன்றெறிந்த தோளான் கனை கழலே காண்பதற்கு’ என்றார் பொய்கைப்பெருமான்.





    பசுக்கள்போல வேஷம்போட்டுக்கொண்டு கொல்லவந்த இரண்டு அசுரர்களையும்  ஒரே நேரத்தில் மாள வைத்து  எறிதடியாய் கொண்டு விளாங்கனி வடிவாய் நின்ற கபித்தாசுரன்  மீது  எறிந்தாய் அந்தக்கழல்-திருவடி போற்றி! எறிந்தது கரம் எனினும் தூக்கிக்காட்டியது கழல் அன்றோ?


    குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!


    வெற்பொன்றெடுத்து ஒற்கமின்றியே
    நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே..’ என்று பக்தர்கள் பாடும்படியான குணம் அல்லவோ கோவிந்தனுடையது? பசுக்களும் அதை மேய்ப்பவர்களும் மழையில் நனையாமல் இருக்க அந்த மாமலையை   குடைபோல   தூக்கிப்பிடித்தாயே  அப்போது மலைக்கற்கள் ஏதும்  கீழே நிற்பவர்கள் மேல் விழாமல்  காத்தகுணம்  உன் கருணை குணம் அல்லவா அதை வணங்குகிறோம்!
    !


    வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!




    உன்னையேபுகழ்ந்தால் கண்ணேறுபடுமே  உன் கைவேலைப்புகழ்கிறோம்  கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபனின் குமாரன் நீயும் பசுக்களைக்காக்க கையில் வேல் வைத்திருக்கிறாய் பகைவர்களை வெல்லப்பயன்படும் அந்த வேலுக்கு வணக்கம்.. சுடராழியும்பல்லாண்டு என உன் கை ஆயுதத்தை பெரியாழ்வார் பாடினாரே!


    என்றென்று உன்சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
    இன்றுயாம் வந்தோம், இரங்கேலோ ரெம்பாவாய்



    இதுவரை ஆறுவிதமாய் போற்றிவிட்டோம்..நாவிற்கு இடும் ஷட்ரஸம்  இதுவே! அறுசுவை உணவு இது! இனி என்றும் உனக்குக்கைங்கர்யம் செய்வதே எம்  நோக்கம்.. அதற்கே  இன்று நாங்கள் வந்துள்ளோம். ஏத்திப்பறைகொள்வான்... ஏத்துகை எங்களுக்குப்பலன்  பறைகொள்வது ஊரார்க்குப்பலன் இவ்விரண்டு பலன்களைப்பெறவே இன்று யாம்  வந்தோம்.
    நீ இரங்கு  கண்ணா!


    “சிம்மாசனம் ஏறு என்றீர்கள் மறுபடி இறங்கச்சொல்கிறீர்களே நியாயமா பெண்களே?’


    “போதும் கண்ணா  ..உன் பொல்லாத்தனமும் குறும்பும் நாங்கள் அறிவோம்..  நாங்கள் இடையனான உனக்கு  வல்லினத்தை உபயோகம் செய்வோமா? ்  இரக்கம் காட்டு என்பதாக  இரங்கு என்கிறோம்..அதாவது  நாங்கள்   ஆற்றாமையால் இப்படி உன் இருப்பிடம் வந்து விட்டோம்..அப்படிவந்த குற்றம் பொறுத்து இரங்கவேண்டும்”




    கண்ணன் சிரித்தான்.


    ******************************************************


    இந்தப்பாசுரத்தில் அறுவகை வாழ்த்தும் கன்னியர் நாவிலே அறுசுவையாக தித்தித்தது. இப்பாசுரத்தை படிக்கப்படிக்க  இதன் வெண் சொல்லும் புதைபொருளும் இசை இன்பமும் நமது நாவிலும் செவியிலும் மனத்திலும்  தெவிட்டாது இனிக்கின்றன.



    மேலும் படிக்க... "அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி!"

    Tuesday, January 07, 2014

    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,,,...

     




    மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

    சீரிய சிங்கம் அறிவு உற்றுத் தீ விழித்து

    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி

    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

    போதரு மா போலே நீ பூவைப் பூ வண்ணா உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்து அருளி கோப்புடைய
    சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

    *****************************************************************************







    ”கோதை!  உன் முகம் என்னம்மா  இத்தனை ஒளிவீசி  ஜொலிக்கிறது?”

    “கதிர்மதியம்போல்  முகத்தவனின் கருணையால் அப்பா.. நேத்ர தரிசனம்  கிடைத்துவிட்டது நேற்று! அந்த விழிவழி வந்த  ஒளி  எங்கள் யாவரையும்  பிரகாசிக்கவைத்துவிட்டது! எங்கள் சாபமெல்லாம்(துயரமெல்லாம்) நீங்கிவிட்டது!”

    “ஆஹா   இதைவிடப்பே(வே)றென்ன  வேண்டும் அம்மா?”

    “ஆம் அப்பா...இன்று  அவனை அணுகி ஒன்று  வேண்டப்போகிறோம் என்ன என்று  கண்டுவந்தபின் சொல்கிறேனே!”





    கோதை உற்சாகமாய்  கண்ணன் திருமாளிகைக்கு தன் தோழிகளுடன் ஓடிவந்து நின்றாள்.
    உள்ளே அமர்ந்திருந்த கிருஷ்ணனும்  வெளியே நப்பின்னையோடு ஆயர்குலப்பெண்களும் கோதையும் காத்திருப்பதை  அறிந்தவனாய்  அடுத்து அவர்களின் கோரிக்கை என்னவாக இருக்குமென்ற எண்ணத்தில் ஆழ்ந்தான்.



    “கண்ணா!  ஒரு விண்ணப்பம்” என்றார்கள் வெளியே நின்ற பெண்கள்.

    “ம்ம் சொல்லுங்கள் நீங்கள் சொல்வதையெல்லாம்  கேட்டு அதன்படிதானே நடக்கிறேன்?”

    “ ஆம் கண்ணா  ..ஆனாலும் அந்த  ‘நடை’யை நாங்கள் காணவேண்டும்’

    “ என்ன  விளக்குங்கள்?”

    “ மழைக்காலத்தில்  மலைக்குகை ஒன்றில் தன் பேடையோடு பொருந்திக்கிடந்து உறங்கும் சீர்மையுடைய சிங்கமானது, உணர்ந்தெழுந்து கண்களை கனல்பொறி பறக்கும்படி விழித்து, பரிமளம் நிரம்பிய பிடரி மயிர்கள் எழும்படி,  எல்லா பக்கங்களிலும் அசைந்து தேகத்தை உதறி உடல் ஒன்றாகும்படி நிமிர்ந்து கர்ஜனை செய்து வெளிப்புறப்பட்டு வருவதுபோல.......”



    “நான் சிங்கமா? நான் நடந்தால் இப்படித்தான் சிங்கநடை இருக்குமெனத்தெரிந்துகொள்வீர்கள்   போலப்பேசுகிறீர்களே?”



    “நீதான் சிங்கம் சந்தேகமென்ன? எங்கள் கோதையின் தந்தை பெரியாழ்வார்  உனக்குத்தொட்டிலிட்டு,”தேவகி சிங்கமே தாலேலோ” என்று அருளி இருக்கிறார். தேவகி சிங்கத்தைப்பாடி பற என்றும் பாடல் உண்டு.. நீதான் அசல் சிங்கம்  உன் நடையை நாங்கள் பார்க்கவிரும்புகிறோம்.... பெருமான் அரிபொங்கிக்காட்டும் அழகு   என்பது ஆழ்வார்  வாக்கு.
    ஆகையால்  பூவைப்பூ வண்ணா! அதஸீ புஷ்பஸங்காசம்..காயாம்பூ மலர்ப்பிறங்கல் அன்னமால் என்று ஞானிகளும்  ஈடுபடும்படியான  உன் வண்ணம்  !, பெரியாழ்வார் ஆசைப்பட்டதுபோல தளர் நடை நடவானோ என்றெல்லாம்  நாங்கள் கேட்கமாட்டோம்.. வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே  என்று மேலும் அவர் அருளியதுபோலவும் அந்த வேட்டை நடையும் வேண்டாம்..அது கோப நடை அது தேவை இல்லை.”



    அப்படியானால் நான் எப்படித்தான் நடக்க வேண்டும் சொல்லுங்களேன்...’



    “அப்படிக்கேள் கண்ணா...உன் கோயில் நின்று -அதாவது உன் இருப்பிடத்திலிருந்து- நாங்கள் வந்துள்ள இந்த இடத்துக்கு  நடந்து வந்து அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சிம்மாசனத்தில் வீற்றிருந்து நாங்கள் வந்த காரியத்தை ஆராய்ந்து அருள் செய்யவேண்டும் தேவாதிதேவனை சென்றுநாம் சேவித்தால் ஆ   ஆ என்று ஆராய்ந்து அருள்வான் என முன்னமே  தெரிவித்தோம்  நீ தேவாதிராஜன் உன்  பள்ளிக்கட்டிலிலிருந்து  இறங்கி நடந்துவந்து   சிம்மாசனம்  அமர்ந்து எங்களுக்கு என்ன  தேவை என்பதை ஆராய்ந்து  விசாரித்து அருளவேண்டும்   ஆம்..கண் அழகைக்கண்ட நாங்கள்  உன் நடையழகையும் கண்டு கொள்ளவேண்டும் !”



    “அன்புக்கட்டளையை  நிறைவேற்றாமல்போவேனா  எப்படி நடந்துவரவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் இப்போது..”



    “கைமாவின் நடையன்ன மென் நடை என்றார் குலசேகர ஆழ்வார்.. வெகுநாள் ஆகிவிட்டதால் உனக்கு மறந்துவிட்டதா?  அன்றி நீ  விஸ்வாமித்திர மகரிஷியுடன் மிதிலைக்குச்சென்றதை நினைத்துப்பார்!   கார் உலாவும் சீர் குலாவும்  மிதிலையில் கன்னிமாடம் தன்னில்  சந்திரபிம்ப முகத்தாளான சீதையைப்பார்த்ததும்  ஒரு நடை நடந்தாயே அந்த நடையழகை எங்களுக்காட்டவேண்டும்... அன்று  உன் மாமனார் ஜனகமகாராஜன் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு,” யானைபோலவும், சிங்கம்போலவும், புலி போலவும்  காளைபோலவும் கம்பீரமாக நடந்து வரும் இந்தக்குமாரர்கள்  எந்த அரசனின்  மைந்தர்கள் ? இவர்கள் நடையழகே என் மனத்தை இழுத்துவிட்டன்” என்றாராம் அந்த நடையழகை  எங்களுக்குக்காட்டி இந்த சிம்மாசனத்தில்  சேவை சாதிக்கவேண்டும் பிறகு நாங்கள் வந்த  காரியம் என்ன என்று விசாரிக்கலாம்!”



    கிருஷ்ணன்  எழுந்துவிட்டான்.. தான் இருந்த இடத்திலிருந்து  அவர்கள்  விரும்பியதுபோல  அவர்களை  நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

    கரம் குவித்த  கோதையும் இதரப்பெண்களும்  அவனைப்போற்றிப்பாட சித்தமானார்கள்!



     
    ******************************************************************************************************** "வந்த கார்யம்"  .  "- கண்ணபிரான் பள்ளி கொள்ளும்போது  "ஏரார் கோலம்  திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே" என்றும், "அம்மாமலர்க்கண் வளர்கின்ற எண்ணன் செய்கேனே" என்றும் ஈடுபட்டு, "அரவணையாய் ஆயரேரே துயிலெழாயே" என்று திருப்பள்ளி உணர்த்தவேண்டுமென்பது ஒரு காரியம்.  இக்காரியம் நிறைவேறியாயிற்று. 

    அடுத்த காரியங்கள் -
    உள்ளிருந்து புறப்பட்டருளும் அழகு  சீரிய சிங்காசனத்து வீற்றிருக்கும் அழகு காணவேண்டும், பல்லாண்டு பாடவேண்டும் என்பன.    புறப்பட்டு அருளும் அழகு காணுகையும், வீற்றிருக்கும் அழகு காணுகையுமாகிற காரியங்கள் ஆனவை விண்ணப்பம் இப்பாட்டிலேயே சித்தித்துவிட்டன. பல்லாண்டு பாடுகையாகிற காரியம் அடுத்த பாட்டில் நிறைவேறுகிறது.
      ராமாயணத்தில் பெருமாளுடைய புறப்பாட்டின் அழகை "பர்வதாதிவ நிஷ்க்ரம்ய சிம்ஹோ கிரி குஹாசயஹா" என்று வால்மீகி வர்ணித்தார்.  அதையே ஆண்டாள் இப்பாட்டில் நான்கு அடிகளாலே விவரித்து உரைத்தாள்-


    நல்லதொரு காட்சிச்சித்திரபாசுரம் இது! 
     






     
    மேலும் படிக்க... "மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு,,,..."

    Monday, January 06, 2014

    செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?




    அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
    பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
    கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
    செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
    திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
    அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல்
    நோக்குதியேல்
    எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
    *************************************************


    ஏழையர்  ஆவி உண்ணும் இணைக்
      கூற்றம் கொலோ? அறியேன்
     ஆழி அம் கண்ணபிரான் திருக்
      கண்கள் கொலோ? அறியேன்...

    பாசுரம் ஒன்றை  பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார்   நோன்புக்குக்கிளம்பிக்கொண்டிருந்த  மகளின்  குதூகல முகம் கண்டு யூகித்தபடி,”  என்னம்மா  கோதை? கண்ணன்  கண்டுகொண்டுவிட்டானோ?’ என்று கேட்டார்.

    “திருவாய் மலர்ந்துவிட்டான் அப்பா...  சிக்கலாய்  நேற்று கேள்விகேட்டான் விடுவோமா நாங்களும் பதில் சொல்லிவிட்டோம்” சிரித்தபடி கோதை சொன்னாள்.

    “செவி வாய் மலர்ந்தவனின் திருக்கண்கள்  தான் இனித்திறக்கவேண்டும் அல்லாவா கோதை?”

    “ஆம் அப்பா!  “

    “பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே என்பார்  திருப்பாணாழ்வார்!  அப்படிப்பட்ட கண்ணழகு  கொண்டவன்...அதை நீ தக்க முறையில் அனுபவிக்க விண்ணப்பம் செய்வாயாக”

    //
    {உறையூர் சோழராஜாவிடம் மெய்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே?
    ஒரு நாள் நண்பகல் . காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப்பணி கொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்... இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக்காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்... கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.
    சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத்துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.//}
     
     
    “அப்படியே ஆகட்டும் அப்பா....நான் சென்றுவருகிறேன்”
     
    “சென்றுவா  கோதை  கடவுளைதரிசிக்கும்போது அன்பும் உரிமையும் மனத்தில் குழந்தைமையும் இருப்பதுபோல  பணிவும் பக்தியும் அவன் அருளின்றி ஏதும் ஆகாதென்ற எண்ணமும் அவசியம் இருக்கவேண்டும்”
     
    “சரி அப்பா மனதில் அதைக்கொண்டே எப்போதும் வணங்குகிறேன்”
     
    கோதை தோழிகளுடன் கண்ணனின் திருமாளிகை செல்ல அங்கே இன்றும் நப்பின்னை அவர்களுடன் வெளியே வந்து நின்று அவர்களின் வேண்டுதலைக்கேட்கும் ஆர்வத்தில்  கலந்துகொண்டாள்.
     
    கிருஷ்ணனும் “மாற்றார் உனக்கு  வலி தொலைந்து..’ என்று போக்கற்றவர்கள் போல சொன்னார்களே இன்னமும் இவர்களை அறியக்கடவோம்’ என்பதுபோல பள்ளியில் கிடந்தான் வேண்டுமென்றே!
     
    “அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய்  வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
    சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
     
     
    அழகியதான  பெரிய இடங்களை உடைய அரசர்கள், தங்களின் அஹங்காரம்(கர்வம்) குலைந்து உன் சிங்காசனத்தின் கீழே கூடி இருப்பார்கள் போலே வந்து அணுகினோம்.’ என்றாள்  கோதையும்  தோழிகளும்.
     
    “பெண்களே உங்கள் குரல்களில்  முழுவதும் கர்வம் ஒடுங்கினமாதிரி தெரியவில்லையே?” கண்ணன் குறும்புடன் கேட்டான்.
     
    “கிருஷ்ணா! நாங்கள் கர்வமாய் இருந்தது நிஜம்தான் ..இந்தப்பூமியில் எங்களைப்போல   புண்ணீயம் செய்தவர்கள்  யார் என்ற  மமதை.ஆம் அது உன்னைப்புகழ்ந்து பாடி அதற்கு நீ  மலர்வாய் திறந்ததால்தான்.. அந்தப்பெருமையில்தான்..அதையும் இப்போது அழித்துவிட்டோம் அந்த அரசர்களைப்போல..”
     
    “ஓஹோ பரஞ்சுடரே கோமானே உத்தமனே என்றெல்லாம் என்னை ஏமாற்றி யமுனைக்கு அழைத்துப்போகத்திட்டமா  கோபமாய் வருகிறது எனக்கு” சிரிப்பு தவழ  உள்ளிருந்து கிருஷ்ணன் கேட்டான்.

    “நீ இப்படி எங்களைப்பார்த்துப்பேசுவதற்காகத்தான் அப்படிச்சொன்னோம்.. உன் சகாவான  அர்ஜுனனை பீஷ்மர், உன்னை  லட்சியம் செய்யாமல்  அர்ஜுனனைக்காப்பாற்றும்  தெய்வம்  நீ  என நினைக்காமல் அவனை ஆயிரம் பாணங்களால் அடித்தபின்னரே ‘நான் சாமான்யமனிதனில்லை பரதேவதை;’ என நீயும்  சக்கரத்தைக்கையில் ஏந்தி சேவை கொடுத்தாய்? அதைப்போல நாங்களும் உனக்குக்கோபம் உண்டாக அப்படிபேசி இருக்கலாம் மன்னித்துவிடு கண்ணா..”
     
    “சரி....அப்படியானால் மேலே சொல்லுங்கள்..”
     
    “கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியே அவையே..செந்தாமரைத்தடங்கண் ..’ என்று உன்னடியார் அனுபவிப்பதுபோல அந்ததாமரைக்கண்களை எமக்குக்காட்டு.. கிங்கிணிவாய்செய்த தாமரையாக- அரைவட்டமான  நிலையில்..தாமரை மலருக்கு உன் கண்ணுக்குள்ள சிவப்பு சிறிதிருந்தாலும் உன் கண்ணிலே வெள்ளமிடும் கருணையை அதில் காண முடியாதன்றோ? ‘கட்டுரைக்கில்  தாமரை நின் கண்பாகம் கையொவ்வா’ என்றாரே ஆழ்வார் பெருமானாரும்.. குளப்படியில் கடலை அடக்க முடியுமா? உன் கண்ணழகு வெள்ளத்தை முழுதும் எங்களால் தாங்க முடியுமா? ஆகையால் சிறுச்சிறிதே -சிறுக சிறுக-  கோடையோடிய பயிரில் ஒரு பாட்டம் மழைபெய்வதுபோல..எங்களை நோக்குவாயாக..”
     
    “என் கண்கள் உங்கள் மேல் விழித்தால் உங்களுக்கு என்னபலன்?”
     
    ‘என்ன இப்படிகேட்டுவிட்டாய் கண்ணா? கதிர்மதியம்போல் முகத்தான் என்று முதல்பாட்டிலேயே உன்னைத் துதிதோமே! திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்-அழகிய கண்கொண்டு - எங்கள் மேல்  நோக்கு கண்ணா! உன் அடியார்க்குக்கு  குளுமைதரவல்லதும் பகைவர்க்கு வெப்பம் தரக்குடியதுமான  கண்கள் அவை.
    சந்த்ர சூர்யௌ ச நேத்ரே  என ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. ஆதி்த்தியனின் பிரதாபமும்   திங்களின் குளிர்ச்சியும்   குடிகொண்டிருக்கும் அக் கண்கள் என்றே  சொல்வோம். உன் அருளுக்கு சந்திரனும் ஒப்பல்ல உன் கோபத்திற்கு சூரியனும் ஒப்பல்ல..
     
    அந்தத்திருக்கண்களின்  அருள் வேண்டும்”
     
    “ சரி  அப்படியே  கண்ணைத்திறந்துவிடுகிறேன் கண்டுகொள்ளுங்கள்  ஆமாம்..அதனால் உஙக்ளுக்கு வைகுண்டம் செல்லும் அருள்கிடைக்கும் என்கிறீர்களா என்ன  வேடிக்கைதான்..”  அரைக்கண்  திறந்துவிட்டு கேட்டான்.
     
    “ஆமாம் உன் கண்கள் எங்களுக்கு அபயம் கொடுத்துவிட்டன”
     
    “எனக்குத்தெரியாமலா?”
     
    “ஆமாம் கண்ணா! உன் வண்ணங்களை நீ அறிவாயோ? கைவண்ணம் அங்கே கண்டேன் என்றார் விஸ்வாமித்ரரும்.
    .வானவாசிகளான ஆதித்யனும் சந்திரனும் எங்களுக்கு அபயம் அளித்துவிட்டனர் கண்ணா அவர்கள் மூலம் வைகுண்டம் சென்றுவிடுவோம்..
    இதுபோது வாயினால் ஏதும்  நீ பேசவேண்டாம் கையாலும் அபயம் செய்யவேண்டாம்..திருவிழிப்பார்வை ஒன்றே போதுமே! இதுபோதும்.. இதுவே எங்களின் சாபத்தை- பிரிவுத்துன்பத்தை-போக்கிவிடும்
    ஈக்ஷ்யாம்ருதவர்ஷிண்யா ஸ்வநாதாந் ஸமஜீவயத்’என்கிறபடி அம்ருதம் வர்ஷிக்கும் கண்கள் உன்னுடையவை! அப்படிப்பட்டகண்களாலே எங்களைக்கடாக்ஷிக்கவேண்டும்’
     
    கோதையும் பெண்களும் இப்படிக்கூறவும்  கண்ணன் படுக்கையில் எழுந்து அமர்ந்துகொண்டான்.
     
    அம்பிற்குத்தோற்ற மன்னர்கள் வந்து சரணாகதி ஆகிறார்கள் ஆனால் அன்பிற்கு அடிமையான ஆயர்குலப்பெண்கள் கண்ணனை அடைந்துதொண்டு செய்ய விழைகிறார்கள் கைங்கர்யப்ராப்தி என்பார்கள் இதனை.  அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்தல் எத்துணை மேலானது உயர்வானது என்பதை இப்பாசுரம் காட்டுகிறது!
    மேலும் படிக்க... "செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?"
     

    Sample text

    Sample Text

    Smile is source to win a heart
    .Smile is a name of lovely mood.
    Smile creates greatness in personality.
    So always have a Smile on your face.