Social Icons

Pages

Monday, January 06, 2014

செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும் கொண்டு  எங்கள்மேல்
நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
*************************************************


ஏழையர்  ஆவி உண்ணும் இணைக்
  கூற்றம் கொலோ? அறியேன்
 ஆழி அம் கண்ணபிரான் திருக்
  கண்கள் கொலோ? அறியேன்...

பாசுரம் ஒன்றை  பாடிக்கொண்டிருந்த பெரியாழ்வார்   நோன்புக்குக்கிளம்பிக்கொண்டிருந்த  மகளின்  குதூகல முகம் கண்டு யூகித்தபடி,”  என்னம்மா  கோதை? கண்ணன்  கண்டுகொண்டுவிட்டானோ?’ என்று கேட்டார்.

“திருவாய் மலர்ந்துவிட்டான் அப்பா...  சிக்கலாய்  நேற்று கேள்விகேட்டான் விடுவோமா நாங்களும் பதில் சொல்லிவிட்டோம்” சிரித்தபடி கோதை சொன்னாள்.

“செவி வாய் மலர்ந்தவனின் திருக்கண்கள்  தான் இனித்திறக்கவேண்டும் அல்லாவா கோதை?”

“ஆம் அப்பா!  “

“பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே என்பார்  திருப்பாணாழ்வார்!  அப்படிப்பட்ட கண்ணழகு  கொண்டவன்...அதை நீ தக்க முறையில் அனுபவிக்க விண்ணப்பம் செய்வாயாக”

//
{உறையூர் சோழராஜாவிடம் மெய்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே?
ஒரு நாள் நண்பகல் . காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப்பணி கொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்... இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக்காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்... கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.
சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத்துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.//}
 
 
“அப்படியே ஆகட்டும் அப்பா....நான் சென்றுவருகிறேன்”
 
“சென்றுவா  கோதை  கடவுளைதரிசிக்கும்போது அன்பும் உரிமையும் மனத்தில் குழந்தைமையும் இருப்பதுபோல  பணிவும் பக்தியும் அவன் அருளின்றி ஏதும் ஆகாதென்ற எண்ணமும் அவசியம் இருக்கவேண்டும்”
 
“சரி அப்பா மனதில் அதைக்கொண்டே எப்போதும் வணங்குகிறேன்”
 
கோதை தோழிகளுடன் கண்ணனின் திருமாளிகை செல்ல அங்கே இன்றும் நப்பின்னை அவர்களுடன் வெளியே வந்து நின்று அவர்களின் வேண்டுதலைக்கேட்கும் ஆர்வத்தில்  கலந்துகொண்டாள்.
 
கிருஷ்ணனும் “மாற்றார் உனக்கு  வலி தொலைந்து..’ என்று போக்கற்றவர்கள் போல சொன்னார்களே இன்னமும் இவர்களை அறியக்கடவோம்’ என்பதுபோல பள்ளியில் கிடந்தான் வேண்டுமென்றே!
 
“அங்கண் மாஞாலத்து அரசர் அபிமான பங்கமாய்  வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப் பெய்தோம்
 
 
அழகியதான  பெரிய இடங்களை உடைய அரசர்கள், தங்களின் அஹங்காரம்(கர்வம்) குலைந்து உன் சிங்காசனத்தின் கீழே கூடி இருப்பார்கள் போலே வந்து அணுகினோம்.’ என்றாள்  கோதையும்  தோழிகளும்.
 
“பெண்களே உங்கள் குரல்களில்  முழுவதும் கர்வம் ஒடுங்கினமாதிரி தெரியவில்லையே?” கண்ணன் குறும்புடன் கேட்டான்.
 
“கிருஷ்ணா! நாங்கள் கர்வமாய் இருந்தது நிஜம்தான் ..இந்தப்பூமியில் எங்களைப்போல   புண்ணீயம் செய்தவர்கள்  யார் என்ற  மமதை.ஆம் அது உன்னைப்புகழ்ந்து பாடி அதற்கு நீ  மலர்வாய் திறந்ததால்தான்.. அந்தப்பெருமையில்தான்..அதையும் இப்போது அழித்துவிட்டோம் அந்த அரசர்களைப்போல..”
 
“ஓஹோ பரஞ்சுடரே கோமானே உத்தமனே என்றெல்லாம் என்னை ஏமாற்றி யமுனைக்கு அழைத்துப்போகத்திட்டமா  கோபமாய் வருகிறது எனக்கு” சிரிப்பு தவழ  உள்ளிருந்து கிருஷ்ணன் கேட்டான்.

“நீ இப்படி எங்களைப்பார்த்துப்பேசுவதற்காகத்தான் அப்படிச்சொன்னோம்.. உன் சகாவான  அர்ஜுனனை பீஷ்மர், உன்னை  லட்சியம் செய்யாமல்  அர்ஜுனனைக்காப்பாற்றும்  தெய்வம்  நீ  என நினைக்காமல் அவனை ஆயிரம் பாணங்களால் அடித்தபின்னரே ‘நான் சாமான்யமனிதனில்லை பரதேவதை;’ என நீயும்  சக்கரத்தைக்கையில் ஏந்தி சேவை கொடுத்தாய்? அதைப்போல நாங்களும் உனக்குக்கோபம் உண்டாக அப்படிபேசி இருக்கலாம் மன்னித்துவிடு கண்ணா..”
 
“சரி....அப்படியானால் மேலே சொல்லுங்கள்..”
 
“கண்ணும் செந்தாமரை கையும் அவை அடியே அவையே..செந்தாமரைத்தடங்கண் ..’ என்று உன்னடியார் அனுபவிப்பதுபோல அந்ததாமரைக்கண்களை எமக்குக்காட்டு.. கிங்கிணிவாய்செய்த தாமரையாக- அரைவட்டமான  நிலையில்..தாமரை மலருக்கு உன் கண்ணுக்குள்ள சிவப்பு சிறிதிருந்தாலும் உன் கண்ணிலே வெள்ளமிடும் கருணையை அதில் காண முடியாதன்றோ? ‘கட்டுரைக்கில்  தாமரை நின் கண்பாகம் கையொவ்வா’ என்றாரே ஆழ்வார் பெருமானாரும்.. குளப்படியில் கடலை அடக்க முடியுமா? உன் கண்ணழகு வெள்ளத்தை முழுதும் எங்களால் தாங்க முடியுமா? ஆகையால் சிறுச்சிறிதே -சிறுக சிறுக-  கோடையோடிய பயிரில் ஒரு பாட்டம் மழைபெய்வதுபோல..எங்களை நோக்குவாயாக..”
 
“என் கண்கள் உங்கள் மேல் விழித்தால் உங்களுக்கு என்னபலன்?”
 
‘என்ன இப்படிகேட்டுவிட்டாய் கண்ணா? கதிர்மதியம்போல் முகத்தான் என்று முதல்பாட்டிலேயே உன்னைத் துதிதோமே! திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல் அங்கண்-அழகிய கண்கொண்டு - எங்கள் மேல்  நோக்கு கண்ணா! உன் அடியார்க்குக்கு  குளுமைதரவல்லதும் பகைவர்க்கு வெப்பம் தரக்குடியதுமான  கண்கள் அவை.
சந்த்ர சூர்யௌ ச நேத்ரே  என ராமாயணத்தில் சொல்லப்படுகிறது. ஆதி்த்தியனின் பிரதாபமும்   திங்களின் குளிர்ச்சியும்   குடிகொண்டிருக்கும் அக் கண்கள் என்றே  சொல்வோம். உன் அருளுக்கு சந்திரனும் ஒப்பல்ல உன் கோபத்திற்கு சூரியனும் ஒப்பல்ல..
 
அந்தத்திருக்கண்களின்  அருள் வேண்டும்”
 
“ சரி  அப்படியே  கண்ணைத்திறந்துவிடுகிறேன் கண்டுகொள்ளுங்கள்  ஆமாம்..அதனால் உஙக்ளுக்கு வைகுண்டம் செல்லும் அருள்கிடைக்கும் என்கிறீர்களா என்ன  வேடிக்கைதான்..”  அரைக்கண்  திறந்துவிட்டு கேட்டான்.
 
“ஆமாம் உன் கண்கள் எங்களுக்கு அபயம் கொடுத்துவிட்டன”
 
“எனக்குத்தெரியாமலா?”
 
“ஆமாம் கண்ணா! உன் வண்ணங்களை நீ அறிவாயோ? கைவண்ணம் அங்கே கண்டேன் என்றார் விஸ்வாமித்ரரும்.
.வானவாசிகளான ஆதித்யனும் சந்திரனும் எங்களுக்கு அபயம் அளித்துவிட்டனர் கண்ணா அவர்கள் மூலம் வைகுண்டம் சென்றுவிடுவோம்..
இதுபோது வாயினால் ஏதும்  நீ பேசவேண்டாம் கையாலும் அபயம் செய்யவேண்டாம்..திருவிழிப்பார்வை ஒன்றே போதுமே! இதுபோதும்.. இதுவே எங்களின் சாபத்தை- பிரிவுத்துன்பத்தை-போக்கிவிடும்
ஈக்ஷ்யாம்ருதவர்ஷிண்யா ஸ்வநாதாந் ஸமஜீவயத்’என்கிறபடி அம்ருதம் வர்ஷிக்கும் கண்கள் உன்னுடையவை! அப்படிப்பட்டகண்களாலே எங்களைக்கடாக்ஷிக்கவேண்டும்’
 
கோதையும் பெண்களும் இப்படிக்கூறவும்  கண்ணன் படுக்கையில் எழுந்து அமர்ந்துகொண்டான்.
 
அம்பிற்குத்தோற்ற மன்னர்கள் வந்து சரணாகதி ஆகிறார்கள் ஆனால் அன்பிற்கு அடிமையான ஆயர்குலப்பெண்கள் கண்ணனை அடைந்துதொண்டு செய்ய விழைகிறார்கள் கைங்கர்யப்ராப்தி என்பார்கள் இதனை.  அன்பினால் ஆட்கொள்ளப்பட்டு வாழ்தல் எத்துணை மேலானது உயர்வானது என்பதை இப்பாசுரம் காட்டுகிறது!

3 comments:

 1. மிகவும் சிறப்பான பாசுரம்... விளக்கமும் பிரமாதம்... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அந்த அரசர்களை போல நான்,என்னுடையது என்கிற எண்ணங்களை விலக்கி அபிமான பங்கமாகி முற்றிலும் அவன் காலில் சரணாகதி அடைந்தால்,அவன் கடைக்கண் பார்வை நம்மீது பட்டு கரை ஏறுவோம் என்பது திண்ணம்.

  ReplyDelete
 3. நல்ல விரிவான ஒரு விளக்கம் அருமை

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.