Social Icons

Pages

Tuesday, February 04, 2014

ஒப்பனைகள் கலைவதற்கே!


அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா  வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர்  இளைஞராகத்தான் இருக்கவேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப்பக்கங்கள் கட்டியம் கூறிவிடும்! ஆம்  ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான்  அவர் எழுத்துக்களில்  புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின்  பொறுப்பும்  அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக  கணினியுகப்பெண்களைப்பற்றிய  அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது.




‘புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக் கொடுப்பவர் நல்ல ஆசிரியர், ஆசிரியர் சொல்லிக் கொடுக்காதவற்றைக் கற்றுத் தெரிந்து  கொள்பவன் நல்ல மாணாக்கன்’என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. அதுபோல அன்றாட வாழ்விலே நீந்தித்தத்தளித்து கரைசேரமுயற்சி செய்துகொண்டிருக்கும் நாம் ,நம் அவசரத்தில் காணாதுவிட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாதுவிட்டுவிட்ட சிலகுறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தி அவற்றில் புதைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணர்வது எழுத்தாளர்களின் பணியாக இருக்கிறது,
புதினங்களை வாசிப்பதே சிறப்பான அனுபவம்  ஒருநல்ல  சிறுகதை என்பது நீண்டுபரந்து ஓடும் வாழ்க்கைஆற்றிலிருந்து ஆசையுடன் கையளவு  நீரைஎடுத்துப்பருகுவது என்றால் நாவல் என்பது ஆற்றில் முங்கிக்குளிப்பதுபோலாகும் எனலாம்.

ஆற்றுநீரில் உள்ளங்கை ரேகைகளும் வானத்து நீலமும் அங்கங்கே விண்வெளிச்சங்களும் மிளிர்ந்தாலே தவிர  உள்ளே இறங்கமனம் வராது.


இன்று புத்தகவாசிப்பும் வாழ்க்கையை ரசிக்கத்தேவையன அக-புற மன அவகாசங்களும் இல்லாமல் போய்விட்ட நிலையில்  அவ்வளவு எளிதாக ஒருமனிதனின் படைப்பு உணர்வை அழித்துவிட  முடியாது என்பதை தரமான  படைப்புகள் பறைசாற்றுகின்றன .அந்தவகையில்  தரத்திற்கும் பெருமைக்கும் உரிய சிறப்பானதொரு நாவல்தான் ராம்ப்ரசாத்தின் ஒப்பனைகள் கலைவதற்கே!

சிறப்பான  புதினம் என்பது  எதை உள்ளடக்கி இருக்குமெனில் எந்த அம்சங்களைத் தாங்கிவருமெனில் ஒரு செய்தியை , உபதேசத்தை , விவரங்களைக்கொண்டதாக இல்லாமல் வாழ்க்கை , வாழ்தலின் புரிதல்கள் இவற்றைப்பற்றிய  காட்சிகளாக இருக்கும்.  வாசிக்கும்போதிலேயே மனதில் வசிக்க  ஆரம்பித்துவிடும்.


A good story transforms thereader transports him to a separate world of its own and transplants into him deep .
மண்ணுலகத்து நல் ஓசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்
பண்ணிலிசைத்து அவ்வொலிகள்  அனைத்தையும்
பாடிமகிழ்ந்திடுவோம்!
என்றான் பாரதி.

காற்றாகிய வானவன் மண்ணகத்து  ஓசைகளைக்கொண்டுவருகிறான் அந்த ஓசைகளை மண்ணில் இசைக்கிறபோது எழுகிற ஒலிகளே பாடலாகிறது சரக்கு என்னவோ மண்ணுலகத்து நல் ஓசைகள்தாம்  அதைக்  கொண்டுவருபவனோ காற்றாகிய  வானவன் மண், ஸ்தூலம் .விண் சூக்குமம்
ஆகearthy   என்பதான உலகாயதத்தை  divirity என்பதான தெய்வ சக்தி நமக்குக்  கவரி வீசிக்காட்டிக்கொடுக்கிறது எனவேதான் ஒரு நல்ல இலக்கியப்படைப்பிலே மண்ணின் தன்மையும் விண்ணின்  தன்மையும் பின்னிப்பிணைந்துகிடக்கின்றன.




இனி நாவலுக்கு வருவோம்.

ஒப்பனைகள் கலைவதற்கே என்ற தலைப்பில்  இருநாவல்கள் உள்ளன ஒன்று இது,
இன்னொன்று முடிச்சு




முதலில் ஒப்பனைகள் கலைவதற்கே  என்னும் தலைப்பிலான நாவலைப் பார்க்கலாம்.




தலைப்பிலேயே ஆணித்தரமான உறுதி..மனிதர்களில் ஒப்பனைகள் இல்லாதவர்கள் யார்?ஒப்பனை(மேக் அப்)  முகத்திற்குமட்டுமானதில்லை  தினசரி மனத்திற்கு ஒப்பனைபோடாமலிருக்கமுடிகிறதா? ஒப்பனை  இன்னொரு முகமூடி.
இயல்புகளை மீறிய ஒப்பனைகள்  இயற்கைக்கு முரணானதா? ஆம் என்கிறது  கதை.வாசிக்கும்போதே நமது ஒப்பனைகளும் மெல்லக்கலைய ஆரம்பிக்கின்றன.




கதாநாயகி மஞ்சு ஒரு கார்ப்பரேட் பெண்!


கதையின் நாயகி மஞ்சுவா ஜானகியா என்றால் இருவருமே ஒரேகோட்டில் நிற்கிறார்கள்..மஞ்சு இந்தகாலத்துப்பெண்..பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியும்  மாட்ர்ன்கேர்ள்! நடைஉடை எல்லாவற்றிலும்  நாகரீகம்  கொண்டவள்,,,காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன் ரவியை மிகவும் நேசிப்பவள்.அவன் கொடுத்த  அதிகப்படிசுதந்திரத்தை  மிஸ்யூஸ் செய்யாமல் உடன்பணிபுரியும் மகேஷை  ஒரு சந்தர்ப்பத்தில் அவன் அவளிடம் தவறாக நடக்கவந்தபோது அதட்டி அனுப்பியவள்..ரவியின் அன்புக்கு ஏங்குபவள். அதனால்தான் ரவியின் திடீர் மனமாற்றம் அவளுக்கு  திகைப்பை ஏற்படுத்திவிட்டது. ஆர்ப்பாட்டம் செய்து வார்த்தைகளை சிதறவிடாமல் கணவனிடமே அமைதியாய்  விசாரிக்க  முடிந்த இயல்பான  பெண் மஞ்சு.

 ரவிக்கு  தனக்கான அலைவரிசையில் நின்ற  ஜானகியை சந்தித்ததும்  மனம்  தடுமாறுகிறது.  காதலிக்கும்போது மஞ்சுவிடம் காணாத அல்லது கண்டுகொள்ளாத ஒன்றை ஜானகியிடம் கண்டதும் மனம்  தடுமாறுகிறது.. ஜானகியின் அறிவுபூர்வமான பேச்சில்தான் ஈர்க்கப்படுவதை உணர்கிறான்.அதனை  கதை ஆசிரியர்  கண்ணாடிக்கல்மீது கருங்கல் ஒன்றை  வைப்பதுபோன்ற  கவனமான  சொற்களில்  தருகிறார்.


‘அறிவுப்பூர்வமான ஆண், தன்னையொத்த அறிவுப்பூர்வமான பெண்ணிடம் மட்டுமே ஈர்க்கப்படுகிறான். ஈர்ப்பு என்பது உண்மையில் என்ன என்பதை அவளிடமே உணர்கிறான். அதுவரையில், அவனுக்கு பரிச்சயமாகும் ஈர்ப்பு போலியானது என்பதை அவன் உணர இந்த  சமூகம் அளிக்கும் ஒரே வாய்ப்பு இன்னொரு அறிவுப்பூர்வமான பெண்ணுடனான பரிச்சயம் மட்டுமே. அதுவரையில் காட்சிப்பிழைகளிலேயே வாழ்க்கையின் முக்கிய தருணங்களை கழித்துவிடும் வாய்ப்புக்கள் கூட சர்வ சாதாரணமாகிவிட்டது இந்த அவசர யுகத்தில். எதிலும் ஓர்  ஓட்டம். எதற்கெடுத்தாலும் ஓர் ஓட்டம். வேண்டியதை பெற்ற காலம் போய், தன்னுடையதை தன்னுடையதாகவே  வைத்துக்கொள்ளக்  கூட பிரயத்தனப்பட வேண்டிய கட்டாயங்களுடன் ஓட்டத்திலேயே வாழ்க்கையை கழிக்க நேர்கிற துயர தருணங்கள் நிறைந்ததே வாழ்க்கை என்பதாகிவிட்டது. அவ்வாறான ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு நின்று  நிதானிப்பவர்கள், அர்த்தப்படுவதில்லை. நின்று  நிதானிப்பவர்களுக்கு, ஓடுபவர்கள் அர்த்தப்படுவதில்லை.'

என்கிற வரிகளின் நிதர்சனம்  அனைவரையும்  யோசிக்கவைக்கும்
மகேஷ் என்னும் இளைஞனை  மஞ்சு நம்பியவிதமும் அவனுடன் பழகியதை சமூகம் பார்த்தபார்வையும்  ஜானகி  ரவியின் வீட்டிற்குவருவதை அலசப்படும்பொழுதில்  காலங்காலமாக  பெண்களுக்கெதிரான  சமூக அவலம் இன்னமும் மாறவில்லை என்பது புரிகிறது.
பெண் மிகவும்மாறிவிட்டாள். அவளது கல்வி அவளை  தீர்மானங்களை எடுக்க  உதவுகிறது.  ஆயினும்  சிலநேரங்களில் குழப்பம்  வரத்தான் செய்கிறது.


"பெண்மை, குழம்பித் தவிப்பது, அன்பும், அது சார்ந்து உருவாகும் பிரச்சனைகளுக்கு மட்டுமே. பிற எதிலும் அவளுக்கு குழப்பமில்லை. பிற எதுவும் அவளுக்கு பிரச்சனையாக முடியாது. பெண்மை அன்பால் கட்டுண்டது. அன்பையே விதம் விதமாய் அனுபவிக்க விரும்பும். எல்லாவற்றையும் அன்பின்  கண்கொண்டே பார்க்க விழையும். எல்லாவற்றிலும் அன்பை, பாசத்தை, பிரியத்தை எதிர் நோக்கும். குறையைக் கூட அன்பாய் சொல்ல விழையும். தவற்றைக்கூட அன்பால் திருத்த முயலும். பெண்மையின் நிறை, குறை இரண்டுமே  அதுதான். அன்பில்,  திருடனை,  நல்லவன் என்று நம்பி  நெருங்கிச் செல்வது, நல்லவனை அறிய வாய்ப்பின்றி கடந்து போய்விடுவது. காலங்காலமாக பெண்மை இப்படித்தான்  பேதலிக்கிறது. மிகச்சிறப்பான திறமைகள், குணங்கள், தனித்தன்மைகள் இருந்தும்  தடுமாறுகிறது"
என்கிற வரிகளில் பெண்மையின்  மறுபக்கம்  கண்ணாடியாய் காட்டப்படுகிறது.


ஜானகி-ரவி-மஞ்சு  என்கிற கதாபாத்திரங்களைத் தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது மஞ்சுவின் தந்தைக்கான  பாத்திரம். மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான உரையாடல் மிகநேர்த்தியாக  சற்றே  சோஃபிஸ்டிகேட்டட் ஆக கையாளப்படுவது  வியப்பில் புருவத்தை உயர்த்துகிறது.. இந்த நூற்றாண்டுப்பெண்ணின் அப்பா என்பதால் அவர் அப்படிப்பேசுகிறாரோ என்றும் தோன்றுகிறது.
வாழ்க்கையில் நாம்  நினைக்கிற எல்லாம் வாழ்க்கத்துணைகிட்ட அமையும்னு சொல்லமுடியாதே ரவி அங்க இங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுதானே போகணும்? என்று மாப்பிள்ளையிடம் கேட்டவர் திரும்ப வீடுவரும்போது நினைத்துக்கொள்கிறார். இத்தனைவயதில் தனக்கும் தன் மனைவிக்குமே ஏகப்பட்டகருத்துவேறுபாடுகள்  இருக்கின்றன பிரியவேண்டும் என்ற நினைப்புதான் இல்லை என்பதாக. ரவியின் பேச்சை முற்றிலும் மறுக்க  இயலாத நிலையில் அவர் பாத்திரப்படைப்பு  மனதை  ஆக்கிரமிக்கிறது.


தனது  ஒன்றுவிட்ட தங்கை சந்திராவை  நண்பன் மகேஷ் கைபபவையாய் ஆக்கியவிதத்தில்  மஞ்சு உடைந்துபோவதும்  அவள் மனநிலையைக் காட்டுகின்றன. சந்திராவை  சராசரிப்பெண்ணாக  காட்சியில்  கொண்டுவருவது    சகஜமாக  இருக்கிறது.


ஜானகியின் புத்தகம்படிக்கும் ஆர்வமும்,  பேச்சில் தெறிக்கும்  அறிவுபூர்வமான  வார்த்தைகளும்  ஏன் வெறும் கேசரியும் கூட  ரவியை பெரிதும் ஈர்க்கிறது என்றால் அதையும்மீறிய  ஒன்றான மனதின் புரிதல் என்பதுதான் இங்கு  உயர்ந்து நிற்கிறது..  காதலிக்கும்போது புரியாத ஒன்றை  பிறகு ஜானகியிடம் உணரும் ரவியின் காதலும்  இளம் விதவையான ஜானகிக்கான பிடிமானம் ரவியிடமும்  ஏற்பட  இடையில்மஞ்சுவின் நிலை என்ன?


இதை  ஆற்றொழுக்கான நடையில் சொல்லி முடிகிறார் கதாசிரியர்.

காதல் வெறும் உணர்ச்சிமட்டுமில்லை அதன் வேர் புரிதல்களில் இருக்கிறதென்பதை கதாபாத்திரங்களின் மூலம்  சிற்பசெதுக்கலான  கவனமான கண்ணோட்டத்தில்  தற்கால நடைமுறைக்கேற்ப  எழுதி உள்ளார் எழுத்தாளர் ராம்ப்ரசாத்..


பெண்களைப் பெண்களே பலநேரங்களில்  புரிந்து கொள்ளாத காலகட்டம்  முற்றிலுமாய் மாறாத நிலையில்  படித்த  புதுமைப் பெண்களுக்கும்  காதல் என்பதின்  முழுமையான அர்த்தம் புரிவதில்லை.  புரிதலில்  விளையும் காதல் அதில் ஒப்பனைகளோ ஒப்பந்தங்களோ  இல்லாத தெளிவில் நிறைவு பெறுகிறது.கடைசியில்  கதாநாயகன் ரவியையே எழுத்தாளனாக்கி  தனது அனுபவங்களை’ஒப்பனைகள் கலைவதற்கே’என்ற தலைப்பில்  நாவலாக  வடிக்கும்படி ஜானகி கூறுவது பொருத்தமான  முடிவு!
ஆக  நீண்ட நாளைக்குப்பிறகு நல்லதொருநாவலை வாசித்த  த்ருப்தியை  ராம்ப்ரசாத் நமக்கு அளிக்கிறார் அவருக்கு பாராட்டுக்கள்!



அடுத்து முடிச்சு என்னும் சிறு நாவலும்  தொடர்கிறது.. முடிச்சு என்கிறபோதே அதனுள் ஏதோ முடிந்துவைக்கப்பட்டிருப்பதை  தலைப்பு உணர்த்தினாலும்  எழுதியவர் இந்தத் தலைமுறைக்காரர் என்பதால்  அதன் சுவாரஸ்யம் கூடுகிறது முடிச்சை அவிழ்க்க ஆவலாகிறது.
இளைஞர்களைச்சுற்றிய  கதைதான் இதுவும்  ,,மதன் ரகுதிலீப் வினீத் என்று  இளமைக்கூட்டம்.இளவஞ்சி மது என்று இளம்ரோஜாக்கள்.. உலகமே விரல் நுனியில் வந்துவிட்ட  நாகரீக யுகத்தில்   இளைய தலைமுறையினரின் சிந்தனையிலும்  மாற்றங்கள் வருகின்றன..
கதையில் ஆசிரியர் எழுதி உள்ளதுபோல,


” ஒரு சமூகத்துள் என்ன விதைக்கப் படுகிறதோ, அதையே அந்தச் சமூகம் திரும்பத் தருகிறது. நுண்ணியமாக நோக்கின்  நன்மை - தீமை, சரி - தவறு , ஈட்டுதல் - இழத்தல் என்பன போன்ற முரண் இருமைகளை ஒரு சமூகம் எவ்வாறு கையாள்கிறதோ, அவ்விதமே, அல்லது அந்தத் தரத்திலேயே அந்த சமூகமும் அமைந்து விடுகிறது’ என்றுதான்  நினைக்கவைக்கிறது.
 பெண்மை வாழ்தலை மையப்படுத்தியேதான் எக்காலத்திலும் பார்க்கிறது.. கதையில் வரும் மது ரகு வினீத்தைப்போல  எத்தனை பேரை நாம்  நம்மைச்சுற்றிப்பார்க்கிறோம்!  முடிச்சு  கடைசியில் அவிழ்கிறது  எதிர்பாராதவிதமாக.

எப்படி என்கிறீர்களா வாசித்துதான் பாருங்களேன், பல ஆண்டுகளுக்குப்பிறகு   நிறைவான ஒரு நாவல் ஒன்று  உங்கள் மனத்தில் வசிக்கக்காத்திருக்கிறது ! வாழ்தல் என்பதே பிறர் மனத்தில் வாழ்தல்தான்//வாசித்தல் என்பதே அந்தப்புத்தகம் நம் மனத்தில் வசிக்கத்தான்!

ராம்ப்ரசாத்தின் இந்த  ஒப்பனைகள் கலைவதற்கே கண்டிப்பாய் உங்களை வசீகரிக்கும் மனத்தில் சிம்மாசனமிட்டு அமரும்.என்றும்  அங்கே வசித்திருக்கும்!

இந்த இரண்டு நாவல்களிம் இந்த முகவரியில் உங்களுக்கு கிடைக்கின்றன..
KAAVYA
Publishers & Book Sellers
No.16, 2nd Cross Street, Trustpuram, Kodambakkam, Chennai - 600 024.
Phone: 044 - 23726882, Cell: 98404 80232, e-mail: kaavyabooks@gmail.com





மேலும் படிக்க... "ஒப்பனைகள் கலைவதற்கே!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.