ஜனகமகாராஜனின் அரசவை.
ராம,லஷமணர்களோடு விஸ்வாமித்திரர் அரசவையில் வீற்றிருக்கிறார்.
அப்போது அந்த வில் வண்டி வருகிறது, ஆம் சிவதனுசு எனும் அசாத்தியப்பெருமைகொண்ட வில் அது!
எட்டு சக்கரம் கொண்ட வண்டியில் அதனை வைத்து,
'உறுவலி யானையை ஒத்த மேனியர்
செறிமயிர்க்கலெனத்திரண்ட தோளினர்'
எனக்கம்பன் வர்ணிக்கும் பலசாலியானவர்கள் இழுத்துக்கொண்டுவருகின்றனர்.
சபைமுழுவதும் ஆர்வமாய் காத்திருக்கிறது. வேடிக்கைபார்க்க மக்கள் எல்லாம் அங்கும் இங்குமாய் கூடி அமர்ந்திருக்கிறார்கள்.
"என்ன வில் இது !ஆகாசத்தைத் தொடுவதுபோல இப்படி கம்பீரமாய் இருக்கிறதே!"
என்று பேசிவியக்கிறார்கள்.
திண்நெடு மேருவைத்திரட்டிற்றோ.....மேருமலைத்திரட்டி இந்தவில்லைப்பண்ணினார்களா?
வண்ண வான்கடல் பண்டுகடைந்த மத்தென்பர்......கடலில் மந்தரமலையைக்கடைந்த அந்தமலையே திரும்பவும் வந்துவிட்டதா?
அண்ணல் வாள் அரவினுக்கு அரசனோ?.........பாம்புக்கெல்லாம் அரசனாக இருக்குமோ?
விண் இரு நெடிய வில் வீழ்ந்ததோ?..... வானவில் என்று சொல்வார்களே அதுதான் கீழே வீழ்ந்து இவ்வளவு பெரிதாக வளர்ந்திருக்கிறதா?
ஏன்?'இது கொண்ர்க' என இயம்பினான் என்பார்
மன்னவர் உளர்கொலோமதிகெட்டார்? என்பார்.....
கம்பர் அழகாக வர்ணனை செய்திருப்பதைக்கவனியுங்கள்
"என்ன இது எதுக்கு இதைக்கொண்டுவந்திருக்காங்க எப்படி இதைப்போய் வளைக்கமுடியும் அரசனுக்கு புத்தி கெட்டுப்போய்விட்டதா?"என ஒருவரைஒருவர் பார்த்துப்பேசிக்கொள்கிறார்களாம்.
இப்படி அனைவரும் பார்த்து பிரமிக்கும் வில்லை வளைப்பவனுக்குத்தான் மகளைத்திருமணம் செய்துகொடுப்பதாய் ஜனகன் முடிவெடுத்ததற்குக் காரணம் இருக்கிறது..
சீதை ஒருநாள் அம்மானை ஆடினாளாம்.முணுகாயைவைத்துக்கொண்டு அதுகீழே விழாமல் ஆடுவது அம்மானை எனும் ஓர் பெண்கள் விளையாட்டு.. ஆடும்போது ஒருகாய் கீழே விழவும் அது , சிவதனுசு வைக்கப்படிருந்த பெட்டிக்குக்கீழே உருண்டு ஓடிப்போனதாம்.
இதை ஜனகர் பார்த்துக்கொண்டே இருந்தாராம்.சீதை அடுத்தகணமே தன் இடதுகையால் அந்தப்பெட்டியை சற்றும் சிரமமின்றி அனாயாசமாய் நகர்த்திவிட்டு அமமானையைக் குனிந்து பொறுக்கிக்கொண்டாளாம். மலையைத்தூக்கிவைக்கும் வலிமைகொண்ட தன் மகளுக்கு அப்போதே எப்படிப்பட்ட மாப்பிளையைப்பார்க்கவேண்டுமென ஜனகர் தீர்மானித்துவிடுகிறார்.அதனால்தான் சிவதனுசை யார் எடுத்து வளைக்கிறார்களோ அவருக்கே என்மகளை மாலையிடச்செய்வேன் என்று நினைத்துக்கொள்கிறார்.
இப்போது வில் சபை நடுவில் வீற்றிருக்கிறது.
ராமன் உட்கார்ந்திருக்கும் விதத்தைப்பார்த்தால் அவன் எடுத்து முறித்துவிடுவான்போல இருக்கிறதாம்..
ஜனகர் விஸ்வாமித்ரரிடம் ,"இதுதான் சிவதனுசு !" என்கிறார்
வில்லைப்பார்த்தவிஸ்வாமிதரர் "குழந்தாய்: என்று அழைக்கிறார்,உடனே லஷ்மணன்
ஆர்வமாய் எழுந்திருக்கவும், "உன்னை இல்லை லஷ்மணா ! ராமனைஅழைத்தேன்" என்கிறார்.
ராமர் எழுந்துநிற்கிறார்.
விஸ்வாமிதரர் கோபக்கார ரிஷி என்ன சொல்லப்போகிறாரோ எனதயங்கி நிற்கிறார்.
அப்போது ராமரின்பார்வை சட்டென மாடத்தின்மீது பாய்கிறது.
அங்கே நின்றிருந்த சீதையும் ராமனையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
'வில்லைப்பார் என்கிறார் விஸ்வாமித்ரர். தநு:பஸ்ய என்பது வால்மீகி வாக்கு.
ராமன் வில்லைப்பார்க்காமல் வேறு ஒன்றைப்பார்ப்பதை ரிஷி கண்டுகொண்டார். இங்கே தான் வால்மீகி இத்துடன் நிறுத்திக்கொள்கிறார் என்றால் கம்பர் சீதையைப்பார்க்கும்படலமாய் அழகாய்விவரிக்கிறார்.
சீதையும் ,' எத்த்னயோபேர்வந்தார்கள் சென்றார்கள்!இவரையும்பார்ப்போமே!'என்றுதான் வருகின்றாள்.
ஆயிரம்கோடிமின்னல்களூக்கெல்லாம் அரசியாக வந்து நிற்கிறாளாம். அந்தப்ரகாசத்தில் மெய்மறக்கிறது ராமனுக்கு.
ராமனைக்கண்ட சீதைக்கும் இனம்புரியாத பரவசம் ஏற்படுகிறது.
...கண்ணொடு கண் இணை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.(கம்பர்)
கண்ணால் கவ்வுகிறார்களாம்! இருவரின் நிலையும் ஒன்றேபோல இருக்கிறது.ஒருவர்பார்த்து மற்றவர்பார்க்காமல்போனால் அது உபயோகமில்லையே!
கண்வழி இதயம் இடம் மாறுகிறதாம் .விழியில்விழுந்து மனதில் நுழைந்து....
வரிசிலை அண்ணலும் வாட்கண் நங்கையும் இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்
அப்புறம் என்ன ஆனதாம்?
கம்பர் இந்தவரிகளைஎழுதும்போது அவருடைய சிஷ்யன் அருகிலிருந்தவன் கேட்டானாம் "அப்புறம் என்ன ஆயிற்று குருவே?"
"அதை நான் எழுதத்தயாராக இல்லை எழுதுகோலைக்கிழே வைத்துவிட்டேன் "என்றாராம் கமபர்.
பிறகு சொல்கிறார்.
"'பிரிந்தவர் கூடினால் பேசல்வேண்டுமோ? ரொம்பநாள்கழித்து அவங்க சந்திக்கிறாங்க இங்க... நான் என்னப்பா பேசறது ?"
'ஒருங்கிய இரண்டு உடற்கு உயிர் ஒன்று ஆயினார்
கருங்கடல்பள்ளியில் கலவி நீங்கப்போய்ப்
பிரிந்தவர்கூடினால் பேசல் வேண்டுமோ'
என்று எழுதிவைக்கிறார்.
அண்ணலும் அன்னையும் பிரிந்து பன்னிரண்டு வருடமாகி இருக்கிறதாம்.
'நீ அயோத்திக்கு சென்று ராமாவதாரம் எடு .நான் மிதிலையில் மைதிலியாக வருகிறேன்' என்று சீதா சொல்லியதை நினைக்கிறாள்.வந்திருப்பது யாரெனப்புரிகிறது.
'கருங்கடல்பள்ளியில் கலவிநீங்கப்போய்...'
அந்தக்கருங்கடலிலிருந்து பிரிந்துபோனவர்கள்மீண்டும் ஒன்றுசேர்கிறார்கள்.
அதென்ன பாற்கடலில்லையா கருங்கடல் என்கிறர் கம்பர்? திருப்பாற்கடலில்பள்ளிகொள்பவன் அல்லவா பரந்தாமன்?
கருங்கடல் என்னும்பதத்தை ஆழ்வாரிடமிருந்து கம்பர் எடுத்திருக்கிறார்.
'மாலும் கருங்கடலே என் நோற்றாய் வையகமுண்டு
ஆலினைத்துயின்ற ஆழியான் -கோலக்
கருமேனி செங்கண்மால்கண்படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப்பெற்று.(முதல்திருவந்தாதி)'
நவரத்தினங்களில் பச்சைக்கல்லினை அசல் தானா என்று சோதிக்க அதனைஎடுத்துப்பாலில்போட்டால் அந்தப்பால்முழுவதும்பச்சையானால் அது அசல் மரகதப்பச்சை என்பார்கள்.
அதுப்போல கார்மேகவண்னனின் அண்மையினால் அவன் தேஜசினால் பாற்கடல் கருங்கடலானதாம்!
'ஒருங்கிய இரண்டுஉடற்கு உயிர் ஒன்று ஆயினர்'
"சரீரம் இரண்டு, ஆத்மா ஒன்றாகிவிட்டதப்பா ஆகையினால் என்னாலினி பேசமுடியாது"
வில்லைப்பார் என்று விஸ்வாமிதரர் சொல்ல நடந்தார்ராமர்.
நின்றார் . எடுத்தார் .முறித்தார்.
கையால் எடுத்ததுகண்டார், இற்றதுகேட்டார்.
தடுத்துஇமையாமல் இருந்தவர்..கண்கொடாமல்பார்த்தார்களாம் ..
ஒன்றுமே தெரியவில்லையாம்.
எடுத்தது கண்டனர் ;வளைத்துஒடித்த சத்தம்கேட்ட்னராம் !
சபை ஆரவாரமாய் கைதட்டியது
'பூமழை சொரிந்தோர் விண்ணோர் பொன்மழை பொழிந்தமேகம்!'
எனமுடிக்கிறார் கம்பர்.
**********************************************************************