Social Icons

Pages

Thursday, October 22, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)

(மு.கு.

முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்!)





1989 ஜனவரி, 7.

“கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான்? அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப் புள்ளைகிட்ட இருந்து அதும்பட கையத் திருகி அதுன்ர பொம்மையைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டானுங்கோ.”

”ஏன்ரா சின்னசாமி! அவனும் கொளந்தப் பையந்தான? போச்சாது போனு சொல்லிப்போட்டுப் போவயா? அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட? செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ!”







1997 ஜூன்,18

”கவுண்டரய்யா பள்ளிக்கோடத்துல ராசு என்ன பண்ணிப்போட்டாந் தெரியுமா? பக்கத்துப் பையனப் பாத்து காப்பி அடிச்சிப் போட்டானுங்க. பத்து வயசுங்கூடி ஆகல. அதுக்குள்ள இத்தச்சோட்டு அக்குறும்பு ஆகாதுங்கோ.”

”ஆமாய்யா! நீங்கல்லாம் ஒரு வாத்தியாய்யா? பொறளி பேச வந்து போட்டீங்க. ஒளுக்கமாப் படிப்புச் சொல்லிக் குடுத்தா அவன் ஏனுங்க காப்பி அடிக்கப் போறான்? ஒங்க லச்சனம் அப்பிடியிருக்குமாட்ட இருக்குது. போவீங்களா அக்கட்டால!









2006 செப்டம்பர், 7

”கவுண்டரய்யா! காலேசுல ராசு வளுசப் புள்ளைகளப் பண்ற இமிசு நெம்ப சாஸ்தியாயிட்டே போகுதுங்கோ. நெம்ப நிதான பசங்களைச் சேத்துகிட்டுச் சீக்கி அடிக்கறதும், அளும்பாப் பாட்டுப் படிக்கறதும் ஒரு ரூப்பிலாம போய்க்கிட்டே இருக்குதுங்கோ!”

”எல்லாம் வயசுக் கோளாறு! அந்த வயசுல நாம கூடத்தான் புள்ளைகள கிட்டக் குறும்பு செஞ்சோம். காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு”





2008 ஜுலை9

”கவுண்டரய்யா! நிச்சயம் பண்ணுன என்ர புள்ள கையைப் புடிச்சு ராசு இளுத்துப்போட்டான். இந்த அக்குறும்புக்கு நீங்க நாயம் சொல்லிப் போடுங்க.”

”அடப் போய்யா! ஊரு முச்சூடும் இந்தக் கெரகத்தைச் சொல்லீட்டுத் திரியாத. லச்ச ரூவா பணம் இருக்குது. எடுத்திட்டு புள்ளையையுங் கூட்டிகிட்டு எங்காச்சும் ஓடிப் போயிரு.”








2009 ஆகஸ்ட், 16

”கவுண்டரய்யா! ஐயோ என்ன காரியம் பண்ணிப் போட்டீங்க?“

”நான் செஞ்சதுல என்ரா தப்பு? நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா? சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா? ஏண்டா இப்புடி அக்குறும்பு பண்றேனு கேட்டதுக்கு வாயில வந்தபடி என்னைய வாத்தா வக்கானு பேசிப்போட்டான். அதாச்சும் பரவாயில. கொடியப் பத்தியும் சொதந்திரம் வாங்கிக் குடுத்தவிங்க பத்தியும் அட்டூளியமாப் பேசிப்போட்டான். அதான் பெத்தமவன்னும் பாக்காம நொங்கு சீவறாப்புலா ஒரே சீவா அவனச் சீவிப் போட்டேன்”

கதர்ச் சட்டையில் படிந்த ரத்தக் கறையுடன் கவுண்டர் காவல் நிலையம் நோக்கி நடந்தார்.


மேலும் படிக்க... "நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)"

Tuesday, October 20, 2009

உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)

”புது பைக்கு ! புது ட்ரஸ்ஸு !புது ஆபீசு! கலக்கற நந்து!”

பாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த

நந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.

முதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடைய
முகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.


வாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள்.

வரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி அவள்வரவும் அதைப்பார்த்த நந்தகுமார் சட்டென முகம் மாறினான் .


பிறகு எரிச்சலாக,” அம்மா உஙகளுக்குத்தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு? என்றான் .

“இல்லடா நந்து. முத நாள் ஆபீசுக்குப்போறே! அங்க நல்லபேரு வாங்கி நீடிச்சி இருக்கணுமே அதுக்கு தெய்வம் துணை இருக்கணுமே அதுக்குத்தான் நெத்தில அண்ணாமலையான் விபூதியை வைக்கலாமேன்னு ...” தயக்கமாய் இழுத்தபடியே அவள்பேசுவதை கேட்கவும் பிடிக்காமல் நந்தகுமார் பைக்கைஉசுப்பி சாலைக்கு
விரைந்தான்.



’’நல்லபையன் தான், ஒருகெட்டபழக்கம் கிடையாது,எல்லார்க்கும் உதவற நல்ல உள்ளம்.
ஆனா கடவுள் நம்பிக்கைமட்டும் இல்லாம இப்படியே வளர்ந்துட்டுவரானே .... எனக்குக்கவலையா இருக்கே..’ புலம்பியபடியே வீட்டிற்குள் திரும்பிவந்தாள் நந்தகுமாரின் அம்மா.

நந்தகுமார் பைக்கை அந்த நெரிசலான சாலையில் செலுத்திக்கொண்டு வந்தபோது சாலைநடுவே பதட்டமுடன் தட்டுத்தடுமாறி நடந்துவந்துகொண்டிருந்த அந்த வயதான கிழவியைக்கண்டான்.

பார்வையை இழந்த நிலையில் ஒருகையில் அலுமினியதட்டை ஏந்திக்கொண்டு
இன்னொரு கைவிரல்களால்காற்றைத் தடவியபடி சாலையைக் கடக்கமுயன்றுகொண்டிருந்தாள். சுற்றி நடக்கும் மக்கள் யாரும் கிழவியைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.

எந்தநேரமும் ஏதாவது ஒரு வாகனம் அவள்மீது ஏறிவிடும் அபாயசூழ்நிலையை நந்தகுமார் தூரத்திலிருந்தே பார்த்து உணர்ந்தான்.



சட்டென பைக்கை சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளருகில் சென்றான் .

அவள்கையைபிடித்து ,”பாட்டியம்மா! ரோடைக்ராஸ் செய்ய நான் உதவறேன் என் கையைப்பிடிச்சிட்டு வாங்க!” என்றுதன் கரத்தை அவள் கரத்தோடு இணைத்துக்கொண்டான்.


கிழவியின் சுருக்கம் விழுந்த முகம் விரிந்துமலர்ந்தது !பார்வையில்லாத விழிகளில் நம்பிக்கை ஒளிபிரகாசமாய் தெரிய அவன்கைவிரல்களை இறுகப்பிடித்துக்கொண்டாள்.

சாலையின் எதிர்ப்புறத்திற்கு இருவரும் வந்தனர்.

“இங்க அவ்வளோ நெரிசல் இல்லை ..கவனமா நடங்க பாட்டிம்மா...நான் வரேன் ” என்று சொல்லியபடியே கையைவிடுவித்துக்கொண்டு நகர இருந்தவனிடம் அந்தக்கிழவி நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.

”தம்பீ! நீ நல்லா இருக்கணும்! சமயத்துல கடவுள் மாதிரிவந்து என்னைக் காப்பாத்தினியேப்பா !”
மேலும் படிக்க... "உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)"

Monday, October 19, 2009

பிரியமழை!

கொட்டு மழைமிகுதியில்
கரையுடைத்துக்கொள்ளும்
காட்டாற்றினாய் மாறாமல்
ஆழ்ந்து சூழ்ந்து
தனக்குள்ளே
பெருகிப்படர்ந்து
விளிம்புவரை
ததும்பிநிற்கும்
கேணி நீராய்
என்னுள்பொங்குகிறது
உன்மீதான
என் பிரியங்கள்
உன்னைத்திணறவைக்கும்
உத்தேசமின்றி
அவைகள்
என்னுள்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளது

அன்பென்பது
ஆதிக்கம் செலுத்த அல்ல
என்பதை
புரிந்துகொண்டிருப்பதால்
மதிக்கின்றேன்,
ஆரவாரமில்லாத
உன் பிரியமழையையும்
அமைதியை அடக்கிய
உன் புன்னகையையும்.
மேலும் படிக்க... "பிரியமழை!"

Saturday, October 17, 2009

தீபாவளிக்குதூகலங்கள்!

அன்று.....
-- ஒருவாரம் முன்பே
அம்மாதயாரித்துவிடும்
மிக்சரும் மைசூர்ப்பாகும்
பாதுஷாவும் பாதாம் அல்வாவும்
இன்னும் சில
பலகாரங்களையும்
எங்கள்பார்வையில்
படக்கூடாது என்று
தூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்
சந்தோஷப்பூரணத்தை
உள்ளேவைத்திருக்கும்
சோமாசிப்பலகாரம்
முரசடித்து தன் இடத்தை
அறிவிக்க
தம்பிகளுடன் சேர்ந்து
தூக்கு வைத்த இடத்தை
மோப்பம் பிடித்து
பாதிதூக்கைக்
காலிசெய்துவிடுவோம்
’இறைவனுக்குப்படைக்குமுன்பே
எதற்கு எடுத்தீர்கள்?’
என்று அம்மாகேட்கும்போது
’குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே அம்மா?’
என்ற எங்கள்பதிலில்
அம்மாவின்கோபமெல்லாம்
பறந்தேபோய்விடும்!


தூக்கக்கலக்கத்தில்
தலையணைக்கடியில் வைத்த
விரல்களைப்பிடித்திழுத்து
மருதாணி வைக்கும்போது
சில்லிட்டுப்போவது
உள்ளங்கைமட்டுமல்ல
அம்மாவின் பாசத்தில்
உறையும் இதயமும்தான்

முதல்நாளேபட்டாசுகளை
முறத்திலிட்டு
மொட்டைமாடியில்
காயவைத்து
அவரவர் பங்கிற்கு
எது எது என்று
முன்கூட்டியே திட்டமிடுவோம்
பெரும்பாலும்
பெண்குழந்தைகளுக்கு
கம்பிமத்தாப்புகளும்
தரைச்சக்கரமும்
விஷ்ணுசக்கரமும்
பூவானமும்தான்
வழங்கப்படும்

வாழ்த்து அட்டைகள்தவிர
அஞ்சலட்டையிலும் அழகாய்
ஒருமயிலோ அல்லது அன்னமோ
வரைந்து அன்பான தீபாவளி
‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்


பணிக்களைப்பில்
கரகரத்துப்போனகுரலில்
அம்மாவின் நலங்குப்பாட்டோடு
தலையில் எண்ணை அரங்கேறும்
நீமுந்திநான்முந்தி என
குளியலறக்குப்போட்டிபோட்டு
குளித்துவந்ததும்
அம்மாவின் கையினால்
சாம்பிராணிப்புகைவாசம்
கூந்தலில் படரும்

’பார்த்துப்பார்த்து’
என்று அப்பா
பலதடவைஎச்சரித்தும்
பட்டாசுக்காயம்
கட்டைவிரல் நுனியிலோ
கால்விரல் இடுக்கிலோ
பட்டுக்கொள்ளாமல்
பெரிய தம்பி
தெருவைவிட்டு வந்ததில்லை.

தொடங்கிய கொஞ்சநேரத்திலேயே
வெடிக்கும்பட்டாசின்
கந்தக்கத்துகள்
கண்ணில்பட்டுவிட
பாதியிலே
அடங்கிப்போகும் என்
பட்டாசு ஆர்வம்

வெளிக்காய வலி அறியா
உளமனசின் உற்சாகங்கள்,
மகிழ்ச்சி ,கலகலப்பு,
உறவினர்களின் வருகை,
பேச்சு ,சிரிப்பு என்று
மதியம் மாலைவரைநீண்டு
இரவில் மத்தாப்பாய்
ஒளிர்விடும்!

இன்று..

பண்டிகைநாள் என்றாலே
கண்டிப்பாய் பலநிகழ்ச்சிஎன்று
உறவுகளுக்கிடையே
இடைவெளியை உருவாக்கி
இல்லத்திற்குள்வந்து
உட்கார்ந்து ஆளுமைசெய்யும்
தொலைக்காட்சிப் பெட்டியால்
தொலைந்தேதான் போனது
தீபாவளிக் குதூகலங்கள்!
மேலும் படிக்க... "தீபாவளிக்குதூகலங்கள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.