அக்காவின் குழந்தைக்கு ‘மயில்’என்று தான் பெயர் வைக்கவேண்டும் என்று ஆஸ்பித்தி்ரிலேயே சொல்லிவிட்டான் செந்தில்.
"தங்கமயில்னு வைக்கலாம்டா. வெறும் மயிலுன்னா கூப்பிட சரியா இருக்காது. நம்மவீட்டுக்கு இதான் முதப்பேரகுழந்தை..ஆணோ பெண்ணோ தங்கமயில் என்கிற பேருதான் பொதுவா பொருத்தமா இருக்கும்” என்றாள் அவன் அம்மா கோமதி.
" அதெல்லாம் இல்ல...மயில்தான் சரி. “ செந்தில் பிடிவாதம் பிடிக்கவும் கற்பகம் ,”மயில்தான் உன் மருமக பேரு போதுமா? உங்க மாமாவும் சரின்னுட்டாரு..” என்றாள்.
நொடிக்கு நூறு மயில் சொல்லி மருமகளை அழைப்பான் செந்தில்.
ஆயிற்று மயிலுக்கு ஆறுமாதமாகிவிட்டது மனைவியை அழைத்துப்போக துரை வந்துவிட்டான்.
அக்கா அக்கா! திரும்ப மயிலுகூட ஊருக்கு போறப்போ என்னையும் உங்க ஊருக்குக் கூட்டிப் போறியாக்கா?"
தன் சேலை முந்தானையைத் தொட்டுக் கெஞ்சும் தம்பியை கற்பகம் அதிசயமாய்ப் பார்த்தாள்.
பத்து வயது தன்னைவிட இளையவனான தம்பி செந்தில் அவளுக்குக் குழந்தை மாதிரி. செந்திலின் வயதும் பத்துதான்.
இன்னமும் குழந்தைத்தனம் விலகாத முகம். பேச்சில் கூட சில நேரங்களில் மழலை வந்துவிடும்.
கடைக்குட்டி என்பதால் சில செல்லச் சலுகைகள்.அந்த உரிமையில்தான் கல்யாணமாகி புகுந்தவீடு போன போது கூடவே செந்திலும் போய்விட்டான்.ஒருமாதம் அந்த கிராமத்தில் உல்லாசமாய் தங்கி வந்தான்.
"லே செந்திலு...அதான் கண்ணாலம் ஆன கையோட கற்பகம் பின்னாலயே குடித்தனம் வைக்கப் பெரிய மனுஷனாட்டம் நீயும் அம்மா அப்பா கூட போயிட்டு வந்தியேடா? மறுபடி எதுக்குப் போவணுமாம்?" கற்பகத்தின் முதல் தம்பி அருணாசலம் கிண்டலும் கடுப்புமாய்க் கேட்டான்.
"ஏய் அவனை ஒண்ணும் சொல்லாதடா..பச்சைபுள்ள" கற்பகம் மடியில் தன்குழந்தையை போட்டுக்கொண்டு சின்னத் தம்பியையும் வாரி அணைத்துக் கொண்டாள். கை விரல்களால் தலைமுடியைக் கோதிவிட்டாள் .
" அவன் பச்சப்புள்ளதான் இன்னமும்.. காலைல எழுந்ததும் புஸ்தகத்தை பிரிச்சி மயில் இறகை எடுத்துகிட்டு கன்னத்துல தேச்சிக்கிறான். அதென்னாவோ மயில் படம் ஏதாச்சிம் புஸ்தகத்துல பாத்தா பரவசமாயிடுறான். நேத்து டீவில ஒரு மயில் டான்ஸ் காட்டினாங்க 'ஆ'ன்னு வாயப் பொளந்துகிட்டு வேடிக்க பாக்கிறான். அதுவும் உன் ஊருக்கு போயிட்டு வந்த பொழுதிலிருந்து, பயலுக்கு மயிலுதான் ஞாபகம்..”
“அதெல்லாம் இல்ல....அக்காவோட மாமனாரு மாமியாரு வீட்டுக்காரரு எல்லாரும் நான் அங்க போனா சந்தோஷப்படுவாங்க”
“ஆமா..அத்தினி செல்வாக்கு உனக்கு அங்க..என்ன சொக்குப்பொடி போட்டியோ அங்கிட்டு?” அருணாசலம் முணுமுணுத்தான்.
”செந்திலுக்கு எப்பவும் உங்க ஊர் மலைல நிறைய மயிலு பாத்தகதையே தான் பேச்சு..”
அம்மா இப்படிச் சொல்லவும் கற்பகம்,"அவனும் குழந்தையோட நான் எங்கவீட்டுக்குப்போறப்போ வரட்டுமேம்மா.. என்ன பெரிய பட்டணமா எங்க ஊரு? சாதாரண கிராமத்துக்கு ஆசையா வரேன்னு ஒரு பையன் சொல்றதே அபூர்வம்.. மேலும் அப்போ லீவுதானே பள்ளிகூடத்துக்கு? செந்திலுக்கண்ணா நீ எங்கூட வாடி செல்லம்.. நான் கூட்டிப்போறேன். என் மாமனார் மாமியாருக்கெல்லாம் செந்திலுன்னா உசுரும்மா.. 'என்னா துடிப்புடி உன் தம்பிக்கு? முருகன் பேரை வச்சிக்கிட்டு அவன மாதிரியே அழகாவும் இருக்கான், நாளைக்கு இவன் வளந்து பெரியவனான பிறவு ஆயர்பாடி கண்ணனை சுத்தினமாதிரி பொண்ணுங்க இவனை சுத்தவாங்க'ன்னு சொல்றாங்க...செந்திலு நான் பார்த்து பொறந்த பையன் கடைக்குட்டி அதான் அக்காக்கிட்டயே ஒட்டிக்குவான் அவ்வளோ பாசம்! என்றாள் குரலில் பெருமை வழிய.
"அவன் உனக்காக ஒண்ணும் உன் ஊருக்கு வரல.. உங்க ஊரு அஞ்சுமலைப் பாறைமேல உக்காந்துட்டிருக்கிற மயில் கூட்டம் பாக்கத்தான் வரான்."
"வரட்டுமே, என்ன இப்போ? ஆசைப்படுறான் பாவம். செந்தில் எங்க ஊருக்கு வரட்டும். என் தங்கச்சிக்கு அடுத்த வாரம் நிச்சய தாம்பூலம் வச்சிருக்குதில்ல அதுக்கு நீங்க வரப்போ அவனைக் கூட்டி வந்துக்கலாம். அதுவரைக்கும் அவனும் ஆசையா வளத்த அக்காகூடத்தான் இருக்கட்டுமே?"'மருமகப் பிள்ளை துரையும் இப்படிச் சொல்லவும் கற்பகத்தின் அம்மா வெட்கமும் சிரிப்புமாய் செந்திலைப் பார்த்தபடி சொன்னாள், "சரிப்பா போயிட்டு வா...அக்கா வீட்டு மனுஷங்ளுக்குத் தொல்ல தராம நல்லதனமா நடந்துக்க...புரிஞ்சிச்சா?"
செந்தில் பலமாய்த் தலையை ஆட்டினான். அவன் நினைத்தே பார்க்கவில்லை தன்னை அம்மா அக்காவுடன் அவளுடைய ஊருக்கு அனுப்புவாள் என்று.
அஞ்சுமலை!
அந்த ஊரின் பெயருக்கு ஏற்ற மாதிரி ஐந்து சின்ன மலைகளை அருகருகே அடக்கிய சிறு ஊர் அது. மலை என்பதைவிட பெரிய கற்பாறை எனலாம். நெருக்கமாக பெருசும் சின்னதுமான உருண்டை வடிவப் பாறைகள். மூன்று பாறைகள் நெருக்கமாகவும் அதன் இடுக்குகளில் இரண்டு பாறையுமாய் இன்னும் ஒரு பாறை உச்சியில் இருந்தால் முக்கோண வடிவில் தெரியும்படியான அமைப்பிலுமான மலை அது.
மரமும் செடியுமாய் அதனைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும். மழையிலும் வெய்யிலிலும் கிடந்ததினால் பாறைகளில் ஒருவிதக் கறுப்பு நிறம் பரவி இருக்கும் இடுக்குகளில் ஏதேதோ செடிகொடிகள் பின்னித் தலை காட்டும்.
கற்பகத்தின் மைத்துனர் மகன் குமாருடன் செந்தில் அங்கே போனான். குமார் இவனைவிட நாலைந்து வயது மூத்தவன். அவன்தான் சொன்னான் அஞ்சுமலைப் பாறைமேல் நிறைய மயில்கள் கூட்டம் கூட்டமாய் வந்து உட்காருவதாக.
மயில் இறகிற்கே உயிரை விடும் செந்திலுக்கு அத்தனை மயில்களையும் குமாருடன் நேரில் போய்ப் பார்த்தபோது மூச்சே நின்றுபோனது. "ஏ அப்பா! எத்தினி மயிலுங்கப்பா! " என்று வாய்விட்டுக் கூவிவிட்டான்.
குமார், "முதல்ல நாலஞ்சி மயிலுதான் இருந்திச்சி இப்போ மூணு மாசமா மத்துக் கணக்குல பெருகித் தொலைச்சிடிச்சி.." என்றான் வெறுப்புடன்.
குமாருக்கு மயில்கள் பிடிக்காதோ என்னவோ? செந்தில் கேட்க நினைத்தான் கேட்கவில்லை அவன் பிடிக்காதென்று சொல்லிவிட்டால் தனக்கு தாங்கிக் கொள்ள முடியாதென்று தோன்றியது. மயில்களைப் பிடிக்காதவர்கள் இருக்கமுடியுமா? அதன் தோகை அழகில் மயங்காதவர்களும் உண்டோ?
செந்தில் மலையிலிருந்து அங்கும் இங்குமாய் ஓடித்தேடி நாலைந்து மயிலிறகுகளை சேகரித்தான்.
நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
வண்ணங்கள் அமைந்த அந்த இறகுகள் அவனை பிரமிக்க வைத்தன.
மயில் இறகைப் பெண்கள் தலையில் பூப்போலச் சூட்டிக்கொண்டால் என்ன என நினைத்தான். வீட்டில் ஒரு கிருஷ்ணர் படத்தில் மட்டும் அவரது தலையில் மயிலிறகைச் சூட்டி வைத்ததைப் பார்த்திருக்கிறான். மலைவாழ் மக்கள் ஒருவேளை தலையில் பறவைச் சிறகுகளை செருகிக் கொள்வதுபோல இதையும் செருகிக் கொள்வார்களோ என்னவோ? மயில்தோகையின் அழகை அவ்வளவாக யாருமே விபரமாகக் கூறவில்லையோ அல்லது தான்தான் அதிகம் படிக்கவில்லையோ எனத் தோன்றியது செந்திலுக்கு.
குமாருக்கு அந்த மலையும் மயில்களும் பிரமிப்பை ஏற்படுத்தவில்லை என்பது அவனது பேச்சிலிருந்து செந்தில் உணர்ந்து கொண்டான்.
செந்திலுக்கு, முதல் முறை போனபோது அந்த ஊரில் தன்னைப் போன்ற பையன்கள் பள்ளி விடுமுறை நாளில் விவசாய வேலையை கவனிப்பதும் விறகு சேகரிப்பதும் சாணம் பொறுக்கி உரம் சேர்ப்பதும் பால் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிப்போவதும் கண்மாயில் அவைகளைக் குளிப்பாட்டுவதும் என்று பொறுப்பாக இருந்தது வியப்பாக இருந்தது.
குமார்தான் சொன்னான், "ஆமாடா, எல்லாரும் இங்க ஏழை எளிய ஜனங்க..அதான் எல்லாருமே உழைச்சிட்டு இருப்போம்" இருந்த இரண்டு நாட்களிலும் அவனோடு செந்தில் ஊரைச் சுற்றிக் கொண்டேதான் இருந்தான். "மயில் முட்டை பாத்திருக்கியா நீ?" அன்று குமார் இப்படிக் கேட்டதும் உதட்டைப் பிதுக்கினான் செந்தில்.
"மூணு கோழிமுட்டை சைசுல இருக்கும். நீரு காணாத காஞ்ச இடத்துலயோ கொழைதழை நடுவிலியோதான் மயிலுங்க முட்டையிட்டுவைக்கும்.. அதை எடுத்தாந்து இங்க சில ஜனங்க பொறிச்சி திம்பாங்க.. சோத்துக்கு வெஞ்சனமாவும் வச்சிக்குவாங்க..'
" அய்யே..மயிலு தேசியப் பறவை ஆச்சேடா குமாரு? மேலும் அது முருகனின் வாகனம் இல்லியா அதைப்போயி திங்கலாமா?"
"அதுசரி சேவல் கூடத்தான் சாமி கொடில இருக்குது?.." கெக்கெக் என குமார் சிரித்தான்.
செந்திலுக்கு சிரிப்பு வரவில்லை.
"மயிலு குஞ்சுக பொறக்க விடமாட்டாங்க இங்க. ஆமா... செந்திலு மயிலு குரலு கேட்டதுண்டா நீ? கர்ணகொடூரம்டா எனக்கு மயிலு பிடிக்காத காரணத்துல அதுவும் ஒண்ணு"
"தோகை அழகு தெரியலியாம், குரலைப் பத்தி விமர்சனம் செய்யவந்துட்டான்.. போடா டேய்." மனசுக்குள் செந்தில் அவனைத் திட்டிப் பார்த்தான்.
"சரி..நான் ஊரு பெரியய்யா வீட்டு புஞ்சையில போயி மயிலுகளை விரட்டிட்டு வரேன்.. ஒரு நாளைக்குக் கூலி அம்பது ரூபா தராங்க இதுக்கு எனக்கு.."
"மயில விரட்றதா.. ஆயிர ரூவா கொடுத்தாலும் நான் செய்யமாட்டேன்"
"அதுசரி வயல்ல ஊனி வச்ச வெதைங்களை அதுங்க கொத்தித் தின்னிட்டு போயிட்டா வெள்ளாமையே நடக்காது தெரியுமில்ல?" குமார் கிண்டலாய்க் கேட்டபடி போனதும் அமுதா வந்தாள்.
அமுதா குமாரின் அத்தை பெண்; பதினாலு வயதிருக்கும்; இரட்டைச் சடையை விரல்ல மாட்டி ஆட்டிக்கிட்டே செந்தில் பக்கத்துல வந்தாள்.
"என் தாய்மாமனுக்கு நீ சின்ன கொழுந்தனாப்பா?" என்று பாசமாய் கேட்டாள்.
அக்கா பேசுற மாதிரியே இருக்கவும் செந்தில் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டினான். "ஆமா" என்றான்.
"என் பேரு அமுதா, என் தாய்மாமனுக்கும் உங்க அக்காக்கும் நடந்த கல்யாணத்துக்கு உங்க ஊருக்கு நான் வரமுடில்ல.. அப்போ என்னைய பாம்பு கடிக்க..." முடிப்பதற்குள் செந்தில்,"பாம்பா?" என அலறிவிட்டான்.
அமுதா சட்டென்று, "கடிக்க வந்திச்சி செந்திலு.....வயல்ல நடந்துண்டிருந்தவ காலுமேல சரசரன்னு ஏறிடிச்சி..அய்யோன்னு அலறினேன் பாரு, அப்போ பாத்து மயிலு ஒண்ணு வந்திச்சி..பாம்பைக் கொத்திப் பிடிங்கி சாகடிச்சிடிச்சி..நான் பிழைச்சேன், ஆனா பயத்துல ஜுரம் வந்திடிச்சி..அதான் கல்யாணத்துக்கு வரல"
"அப்படீன்னா மயிலுதான் உன்னைக் காப்பாத்திச்சா அமுதாக்கா?"
"ஆமாப்பா... சினிமால வர மாதிரி எங்கிருந்தோ வந்து என்னைய காப்பாத்திடிச்சி"
அமுதா விழி உயர்த்தி சொல்லவும் செந்திலுக்கு வியப்பானது. மயில் மீதிருந்த அவனது மதிப்பு கூடியது. "அமுதாக்கா நீ என் கூட வரியா? மயிலு பாக்க மலை ஏறிப் போலாமா?"
இருவரும் மலைநோக்கி நடக்க ஆரம்பித்தனர். ‘மனமே முருகனின் மயில்வாகனம்' என அமுதா பாடிக் கொண்டே வந்தாள். செந்திலுக்கு உற்சாகம் பீறிட்டது.
“வேறென்ன மயில்பாட்டு தெரியும் ?பாடேன் அதையும்..”
“மயில்போல பொண்ணு ஒண்ணு
கிளி போல பேச்சு ஒண்ணு
குயில் போல பாட்டு ஒண்ணு.கேட்டு நின்னு
மனசு போன இடம் தெரியல.
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல!” அமுதா சுமாராய் பாடிவைத்தாள்.
“அழகா பாடறே அமுதாக்கா...”
அமுதாவுக்கு மயிலைப்பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன.
“செந்தில்!. வாரிசு உரிமை மூத்தவருக்குத்தான் சொல்வோம் இல்ல இந்தப்பாடத்தை நாம மயில்கள்கிட்ட காணலாம்..கம்பன் சொல்லுவாரு..’ மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை, செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்’ அப்படீன்னு கூனி கைகேயிகிட்ட பரதனுக்கு பட்டம் ஏற்பாடு செய்ய சொல்கிறபோது கைகேயி சீற்றமாய் கேட்பாளாம்.’என்னது மனு முதலாய் காத்துவருகிற மயில்முறைகுலத்தின் உரிமையை உன் கெட்டபுத்தில இப்படி சொல்றியே தீயவளே’ன்னு.ஆனா அப்புறம் கதையே மாறிட்டது.
அது என்ன மயில் முறைக்குலத்துரிமை? சொல்றேன் கேளு..மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருத்தரு...” என்று விவரம் கூற ஆரம்பித்தாள்.
’மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்என்று,அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.
மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.
அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.
கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?
வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது.
'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...” அப்படீன்னு. நான் ஆர்வமா.தமிழ் இலக்கியம் படிக்கிறதால உனக்கு இப்போ மயில்பத்தி பகிர்ந்துக்க முடிஞ்சது செந்தில்!”
“அழகா இருக்கு விளக்கம்..சிலபேருகிட்ட பேசினா மனசு, துடைச்சிவிட்ட மாதிரி ஆகுது.அது அமுதாக்காகிட்ட எனக்குக்கிடைக்குது!”
செந்திலுக்கு அமுதாவோடு பேசியதெல்லாம் நினைவிற்குவந்தன.இப்போது மறுபடியும் அஞ்சுமலைக்குப் போக வாய்ப்பு வந்ததில் செந்திலுக்கு மனசு குதியாட்டம் போட்டது.
இம்முறை அமுதா ஊரிலிருப்பாளோ மாட்டாளோ? அவளுடைய பெரியப்பா வீட்டிற்கு மதுரைக்கு விடுமுறையில் போவதாய் முன்னேயே சொல்லி இருந்தாள் ஆனாலும் இனி அவனுக்குக் குமாரின் துணையே தேவை இல்லை. தனியாகவே மலைக்குப் போய்விடுவான். போனமுறை போனபோதே அந்தப் பகுதியெல்லாம் மனதில் அத்துப்படியாகிவிட்டது.
அந்த ஐந்து மலைப் பகுதியைச் சுற்றிலும் கரிசல் காடுதான். பெரும்பாலும் மலை சார்ந்த பகுதி என்பதால் பயன்படுத்த முடியாத நிலவெளி. ஒரு புறம் இறவைத் தோட்டங்கள்; இன்னொரு புறம் கண்மாய்க் கரைமரங்கள் என்று ஊர் அமைந்திருந்ததை செந்தில் கவனித்து வைத்துக் கொண்டான்.
இம்முறை கற்பகத்துடன் ஊர் வந்ததும்,கொஞ்சநேரம் அக்காமகள் மயிலைக்கொஞ்சினான்.அவன் சொன்னதுபோலவே தங்கமயில் என்று அழைக்காமல் கற்பகத்தின் புகுந்தவீட்டிலும் எல்லாரும் குழந்தையை மயிலுக்குட்டி என்று கூப்பிட்டனர்.
“அக்கா..நான் வீட்டு மயிலைஆசைதீர கொஞ்சிட்டேன் கொஞ்சம் போயி வெளில மயிலுங்களை கண்ணால பார்த்திட்டுவரேன்.. என்று சொல்லிவிட்டு தனியே புறப்பட்டுவிட்டான்.
இறவைத் தோட்டங்கள் உள்ள பகுதியில் காலாற நடந்தான். அவ்வழியேதான் மலையேறியாக வேண்டும். பெரிய பெரிய தோட்டங்களில் மிளகாய்ச் செடிகள் கொத்து கொத்தாகக் காய்த்துத் தொங்குவதையும், இன்னொரு தோட்டத்தில் கம்பங் கதிர்கள் பால் கோத்துக் கொண்டு செழிப்பாயிருப்பதையும் பார்க்கத் தோன்றாதவனாய் மலை ஏறி மயில் கூட்டத்தைக் கண்ணாரப் பார்க்கத் தவித்தான்.
மயில் ஆடுமாமே தோகையை விரிச்சிகிட்டு அதைப் பார்க்கமுடியுமா, இந்த வாட்டியாவது? அமுதாவுடன் போனபோதும் மயில் ஆட்டம் பார்க்க முடியவில்லை.. மயிலிறகு எட்டு பத்தாவது பொறுக்கிடணும். ஊருக்குப் போனா முத்து, ரமேஷ¤, வனஜா எல்லாருமில்ல என்கிட்ட கேக்கறாங்க?
'அழகுமயில் ஆட அபிநயங்கள் பாட..' பாட்டை முணு முணுத்தபடி கால்களை எட்டப் போட்டு நடக்க ஆரம்பித்தான்.
அப்போதுதான் சிலர் 'நாசமாப்போக' என்று ஓங்கிய குரலில் திட்டியபடி கற்களை எடுத்துக் கொண்டு ஓடினர்.
எங்கே போகிறார்கள் எல்லாரும் என்று செந்தில் திரும்பிப் பார்த்தான்.
அங்கே ஒரு தோட்டத்தில் பால் கோர்த்திருந்த கம்பங் கதிர்களையெல்லாம் மயில்கள் கூட்டமாய் வந்து மேய்ந்து கொண்டிருந்தன.
"அய்யோ அய்யோ பயிரு எல்லாம் திங்குதே இந்தப் பாழும் மயிலுங்க....இதை சுட்டுப் போடுங்களேன் யாராச்சும்? எங்க ரத்தத்தைத் தண்ணீராப் பாய்ச்சி கதிர வளத்தோமே..இப்படி எல்லாத்தியும் தின்னுப் போயிடிச்சே. வருஷத்துக்கும் சேத்து வச்சிக்க வேண்டிய சொத்து. எங்க உசுரு சீவன் எல்லாமே இதுதானே? அத்தினியும் கூட்டமா வந்து அளிச்சித்தின்னுடிச்சே...." எங்க வயித்துக் கஞ்சில மண்ணை வாரிப் போட்டுடிச்சே...பாவி மயிலுங்களோட தோகையில் நெருப்பு வச்சிக் கொளுத்துங்க.. அளகாயிருந்து என்ன அறிவு கெட்ட ஜன்மங்க.. எல்லாத்தியும்..ஒழிச்சிக் கட்டுங்க" அனைவரும் கைவிரல்களைச் சொடக்கி ஆத்திரமாய் சபித்தார்கள்.
மயில்கள் கதிர்கள் எல்லாவற்றையும் தின்று முடித்து கற்களுக்குள் தப்பித்து ஓடி ஓடி மலை மீது பறந்து போய் உட்கார்ந்துவிட்டன.
"இந்த மயிலுங்களால தோட்டத்திலயும் காட்லயும் எத்தினி அழிவு.. அய்யோ சொல்ல ஆகலியே..." நெஞ்சில் அடித்துக் கொண்டு பலர் கதறினார்கள்.
சற்றுமுன்பு தான் பார்த்த கம்பங் கதிரெல்லாம் மொட்டை அடித்தாற்போல் இப்போது நிற்கவும் செந்திலுக்கும் சங்கடமாயிருந்தது.
மயில்கள் மக்காச் சோள முளைகளைக் கொத்திக் குதறி, சின்னாபின்னப் படுத்தியிருந்தன. சர்வமும் நாசமாகி அழிந்து பிரளயத்துக்குப் பின் கிடந்த பூமியாய் அந்தத் தோட்டம் கலவரமாயிருந்தது.. கல்லடிக்குத் தப்பிக்கும் பிரயத்தனத்தில் கதிர்களில் தோகை பட்டு ஊதாவும் பச்சையுமான வண்ணத்து மயில் இறகுகள் பயிர்பச்சை நடுவே விழுந்து கிடந்தன.. செந்தில் அவைகளையே பார்த்தான்.சாதாரண நேரங்களில் மயிலிறகுகளைப்பார்க்கிற போதே பரவசப்பட்டு நிற்பான். இப்போது இறந்த பயிர்களுக்கு மலர்வளையமாய் அவைகள் அவனை அச்சுறுத்தின. 'ச்சீ ' என வெறுப்பாக வந்தது.
மலைப்பக்கம் போகாமல் திரும்பி நடந்தான். என்னவோ நெஞ்சு கனத்ததுபோல உணர்வு.
'அய்யோ அய்யோ எல்லாம் போயிடிச்சே... ஏற்கனவே நாலுநாளா பசிபட்டினில துடிக்கற பச்சப் புள்ளைகளுக்கு இப்ப கம்பங் கஞ்சிக்குக் கூட வளி இல்லாம செஞ்சிடிச்சே இந்த நாசமாப் போவுற மயிலுக் கூட்டம்!". தீனமான குரல் அவன் நெஞ்சைப் பிசைந்தது.
சட்டைப் பையிலிருக்கும் மயிலிறகுகளை மெதுவாய் எடுத்தவன் அவைகளை அப்படியே கீழே போட்டான்..
திரும்ப வீடு வந்தபோது,”மயிலு. மயிலுகுட்டி! எங்களை வாழவைக்க வந்த செல்வ மயிலு!
அழகு மயிலு! அறிவு மயிலு...”என்று கற்பகத்தின் மாமியார் குழந்தையைப்பார்த்து குதூகலமாய் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
செந்திலுக்கு நாராசமாய் இருந்தது.