Social Icons

Pages

Friday, March 29, 2013

பணயம்.
பெரம்பலூர்- திருச்சி நெடுஞ்சாலையில் அந்த புளியமரத்தடியின் கீழ் வந்து நின்றாள் ராஜேஸ்வரி. கைபிடித்து நடந்து வரவேண்டிய ஏழுவயது மகளை ஒருகிலோமீட்டருக்குமேல் தூக்கிவந்ததில் நிழலில் நின்றதும் மூச்சுவாங்கியது. அப்போதும் இடுப்பிலிருந்து தோளில் போட்டுக்கொண்டாளே தவிர மகளை கீழே இறக்கவில்லை. முதல்நாள் மதியத்திலிருந்து நடு இரவு வரை ஊரில் பெரியமனிதர்கள் சிலரிடம் நியாயம் கேட்டுப்போராடியதிலும் , பிறகுஅருகிலிருந்த அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குப்போய் புகார் கொடுத்தும் பயனில்லாமல்போனதிலும் மனது வெறுத்துப்போயிருந்தது.

    ஏழைச்சொல் என்றைக்கு அம்பலமேறி இருக்கிறது? பணம் என்கிற மூன்றெழுத்துதான் எத்தனை பேர் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறது! பயம் என்கிற மூன்றெழுத்தும் அப்பாவிகளின் வாயைக்கட்டிப்போட்டு இருக்கிறது. தலை நகரிலேயே இன்று அநீதி நடக்கிறது என்கிறபோது குக்கிராமத்தில் அது தலைவிரித்து ஆடாதா என்ன?

    அந்த நிலையிலும் ராஜேஸ்வரிக்கு விரக்தியில் சிரிப்பு வந்தது. ஆனாலும் நடந்தகொடுமைக்கு உடன் தீர்வு கிடைக்காமல்போனதில் நடுச்சாலையில் ஏதாவது நாலுசக்கரவாகனத்தின் கீழ் விழுந்து செத்துப்போய்விடலாமா என்றும் தோன்றிவிட்டது.

    ‘துயரங்களுக்கும் அவமானங்களுக்கும் சாவுதான் தீர்வென்றால் உலகின் ஜனத்தொகை பாதியாகத்தான் இருக்கும். பைத்தியக்காரி! பத்து கிளாஸ் படிச்சிருக்கே பாரதியை கரைச்சிக் குடிச்சிருக்கே, அப்படியுமா சிந்திக்க மறந்துபோகும்? நடந்த அக்கிரமத்தை நாடறியச்செய்யவேணாமா அதுக்குத்தானே காலை எழுந்ததும் மகளோடு பஸ் ஸ்டாண்டுக்கு வந்திருக்கிறே? போராடு ராஜேஸ்வரி போராடு. ’என்று மனம் அரற்றியது.

    ’பாஆஆம்’ என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு பஸ் பெரம்பலூரிலுந்து வந்துகொண்டிருந்தது கூட்டம் காரணமாய் நிற்காமலேயே போனது.

    “அய்யெயோ போயிட்டானா நிக்காமயே?’ என்று ஓலமிட்டபடி மூச்சிறைககொட்டி வந்தாள் ஒரு நடுததரவயதுப்பெண்மணி.

    ராஜேஸ்வரியைப்பார்த்து,” வடியலூர் கிராமமிருந்து ஓடிஓடி வாரேன்..ஊருக்குள்ள வழக்கமா வர்ர மினி பஸ்ஸும் இன்னிக்கு வரல ரண்டுமைலு நடந்துவந்தேன்மா படுபாவி பஸ்ஸை நிப்பாட்டாமயே எடுத்துப்போறான்.. சாவு வீட்டுக்கு பாடாலூர்க்குப் போயாவணும் நான் ...ஆமா நீ எங்கிட்டுப்போவணும் ?” என்று கேட்டாள்.

    ’திருச்சிக்கு”  குரலில் சுரத்தின்றி சொன்னாள் ராஜேஸ்வரி. மனம் என்கிற  கண்ணுக்குத்தெரியாத  ஒன்றுசிதைந்துபோ ய்விட்டால் உடலே இற்றுத்தான் போய்விடுகிறது!

    ”எல்லா பஸ்ஸும் பாடாலூர் வளிதானே திருச்சிபோகும்? ஆமா நீ வடியலூர்க்காரி மாதிரி இல்லையே கெழக்கால வேற ஊருந்துவரியா?”  அவளும் விடாமல் கேள்விகேட்டாள்.

    ”ஆமா, இங்க நாமப்பட்டிலேருந்து”

    ”ஐயே! அந்த மாஜி எம் எல் ஏ குமரவேலு குட்டிச்சுவர் ஆக்கின கிராமம் தானேஅது? நாசமாப்போறவன் பெரம்பலூர்ல அப்பாவிஜனங்க பலபேரோட நெலத்தை அபகரிச்சவன் ..’ என்று வெறுப்பாய் வார்த்தைகளை உமிழ்ந்தாள்.

    ’கிராமத்தை மட்டுமா குட்டிச்சுவர் செய்தான் அப்பாவிஜனங்க நெலத்தைமட்டுமா சூறையாடினான்? என் என்..?. ’மனசு கதறுவதை  ராஜேஸ்வரி  உணர்ந்தாள்.

    அந்தப்பெண்மணி காலியாய் வந்த ஆட்டோவினைக் கைதட்டினாள். அதில் ஏறும்போது,”சாவு வீடும்மா நேரத்துக்கூப்போகலேனா உறவு சனம் தப்பா நெனக்கும் பணம் போனாலும் போவட்டும்னு நான் கெளம்பறேன் ..” என்று சொல்லியபடி ஏறிப்போனாள்.

     ராஜேஸ்வரி கண்பனிக்க மகளை தோளோடு இறுக அணைத்துக்கொண்டாள். சுருட்டிப்போட்ட  துணிபோல  அவள் தோளில் கிடந்தாள் சுமதி.     “ராஜ்ஜீஈஈ...” என்று தூரத்தில் கூவலாய் குரல் கேட்கவும் திரும்பினாள்.  மீனாட்சி , அவளின் ஆத்ம சிநேகிதி. ஓட்டமாய் ஓடிவந்தவள்,” ராஜி..காலைல தாண்டி கள்ளக்குறிச்சிக்குப் போனவ திரும்பி ஊருக்கு வந்தேன் வந்ததும் வீட்டுக்காரர் விவரம் சொன்னாரு பதறிப்போய் உன்னை வீட்ல தேடினேன் பூட்டிக்கிடந்திச்சி நீ பஸ் ஏறத்தான் போயிருக்கணம்னு இங்க ஓடியாந்தேன் என்னடி இது அக்கிரமம்? இதை ஊர்ல ஒருத்தரும் தட்டிகேக்கலயாமே என்புருஷனும் பயந்தாராம் ’ஏதும் வாயதுறந்தா ஊர் பள்ளிக்கூடத்துல பாக்குற உன் வாத்தியார் வேலைக்கு உலை வச்சிடுவோம்’னு அந்த படுபாவி அதட்டினானாம். ராஜீ! குழந்தையோட தனியா எங்கடி பொறப்பட்டுப்போற? கைல காசு இருக்குதா? நான் ஒரு நானூறு ரூபா கொண்டுவந்துருக்கேன் வச்சிக்கடி..திருச்சில நீ தினம் சமையல் வேலை செய்திட்டுவர்ர வக்கிலம்மா வீட்டுக்குத்தான் போகப்போறியா?” என்று அக்கறையாயும் ஆற்றாமையாகவும் கேட்டாள்.

    “மீனாட்சி.! வக்கீலம்மா நேத்து மதியமே சென்னைக்கு கிளம்பிட்டாங்க. மகளுக்கு பிரசவம்னு ஆறுமாசம் மகளோட அமெரிக்கால இருக்கப் போயிருக்காங்க அவங்க மட்டும் ஊர்ல இருந்தா நேத்து இந்த அக்கிரமம் நடந்ததும் போன் போட்டு சொல்லி நாமப்பட்டிக்கு வரவழைச்சி அந்த அரக்கனுங்களை அழிச்சிருப்பேன் எனக்கும் அதிர்ஷ்டத்துக்கும் தான் பொறந்ததிலெருந்தே சம்பந்தம் இல்லையே .. பொறந்ததும் பெத்தவங்க விபத்துல செத்துப்போனாங்க வளர்த்தவங்கவேண்டா வெறுப்பா ஒரு சமையக்காரனுக்கு என்னைக் கட்டிவச்சாங்க ..அவனும் வேலைய விட்டு இப்போ வீட்டோட குடி சீட்டுன்னு கெடந்தாலும் குழந்தைக்கு அப்பனா வீட்டுல துணையா இருக்கான்னுதான் அந்தாளுகிட்ட சுமதியை விட்டுட்டு தினம் வேலைக்குப் போயாந்தேன்.. நேத்து திடீர்னு நான் மதியம் வீடு வந்தப்ப வேலியே பயிரை மேய்கிறதுக்கு மாடுகளை அனுப்பி இருக்குதுன்னு தெரிஞ்சிட்டேன் ,,,அப்பதான் நான் அருவெறுப்பின் உச்சிக்கேப் போயிட்டேன்,, பாரதி சொல்வானே,’திக்கு குலுங்கிடவே எழுந்தாடுமாம் தீயவர் கூட்டமெல்லாம்,தக்குத்தக்கென்றே அவர்-குதித்தாடுவார் தம்மிரு தோள் கொட்டுவார்;’னு அதுபோல வஞ்சக ஆண்கள் சிலர் நி்றைஞ்சிருக்கிறஉலகம் விரிக்கிற சூதை அறிஞ்சிக்க முடியாம நிராதரவாக சிக்கிக் கொள்கிற பாஞ்சாலிகளா இன்னமும் என்னைமாதிரி பெண் இனங்கள் இருக்காங்க..’வையகம் காத்திடுவாய் கண்ணா’ன்னு கைதுக்கி கூவினால் கண்ணன் காப்பாத்த வரமாட்டான் ஏன்னா இது கலிகாலம்டி கலிகாலம்“

    “ஆமா ராஜி..நடந்திருக்கிறது மகா கொடுமை. இதுல உன் புருஷன் சம்பந்தப்பட்டிருக்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அந்த படுபாவி குமரவேலுக்கு பயந்து பழியை வேற உன் மேல போடறானாமே என்ன அநியாயம் இது?”

    “தர்மத்தின் வாயதனை சூது கவ்வும்னு தெரியாமயா சொன்னாங்க மீனாட்சி? புருஷன் குடிகாரனா இருக்கலாம் நாலு காசு சம்பாதிக்கத் துப்பில்லாதவனா வீட்டுல கிடக்கலாம் ஆனா பெத்த குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைக்கிற கையாலாகாதவனா இருந்தா அவனோட வாழவாமுடியுமா அதான் நான் கிளம்பிட்டேன் திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை. சரி மீனாட்சி மணி எட்டிருக்குமா இப்ப? பஸ் வரமாதிரி இருக்குது.. நான் திருச்சில வக்கீலம்மா மூலமா பழக்கமான சில பெரியமனுசங்களைப் போய்ப்பாக்கப் போறேன், நடந்ததை சொல்லி அந்த அரக்கனுங்களுக்கு தண்டனை வாங்கித்தரப்போறேன்.. நீ கெளம்பிப்போடி மீனாட்சி.என்னால உனக்கு ஏதும் ஆபத்து வரப்போகுது பாவம்”

    “தனியா .. எப்.. எப்படி ராஜி.?” தேம்பினாள் மீனாட்சி.

    “பருவப்பொண்ணு இல்லையேடி முப்பத்திமூணு வயசாகுது... போராடணும்னு மனசுல ஒரு வெறி வந்திட்டது அதனால நீ கவலைப்படாம ஊருக்குப்போ..வக்கீலம்மா எனக்கு முன்கூட்டியே இப்படி நடக்கும்னு தெரிஞ்சோ என்னவோ ஆறுமாச சம்பளம் கொடுத்திட்டுப்போயிட்டாங்க..ஆட்டோவுல  தனியாப்போக  பயமா இருக்குதுடி  யாரை நம்பறதுன் னு தெரியல அதான்  பஸ்ஸுக்குக்காத்துருக்கேன்”

    ராஜேஸ்வரி சொல்லும்போதே பெரம்பலூர்-திருச்சி என்ற போர்டு போட்ட பஸ் ஒன்று புளியமரத்தடியில் வந்து நின்றது.கூட்டம் பிதுங்கித் தெரிய ஃபுட்போர்டில் நிறைய இளைஞர்கள் கையில் புத்தகம் மற்றும் மொபைலுடன் நின்றுகொண்டிருந்தார்கள்,

    மகளுடன் பஸ்ஸில் ராஜேஸ்வரி ஏறி உள்ளே சென்று நின்றுகொண்டாள்.

    மீனாட்சி கண்ணைத் துடைத்துக்கொண்டு கை அசைத்தாள்.

    பஸ்ஸிற்குள்ளும் பெரும்பாலும் கல்லூரிமாணவர்களும் மாணவிகளுமாக நிற்பதை ராஜேஸ்வரி பார்த்தாள். வழக்கமாய் அவள் திருச்சிக்கு சமையல்வேலை செய்யும் வீட்டிற்கு ஒன்பதுமணி பஸ்ஸில்தான் போவது வழக்கம் அதில் இவ்வளவு கூட்டம் இருக்காது.இன்று எட்டுமணி பஸ்ஸில் இத்தனைக்கூட்டத்தை அவள் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் கல்லூரிமாணவர்களின் உல்லாசக் கூக்குரல்கள் அதை ரசித்து ஊக்கப்படுத்திய ட்ரைவரின் உற்சாகம் எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தது.

    ”ரேய்ட்:” என்று கண்டக்டர் கூவியதும் ட்ரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் செய்தபோது, ஒரு இளைஞன்,”ட்ரைவர் மச்சான்!  பாட்டு போடலியே இன்னிக்கு? செவ்வாக்கிழமை அல்வா நடிகை அமீதா நடிச்சபடத்துப்பாடலா போடணும்னு சொல்லி இருக்கேனே?” என்றான்.

    “டேப்பு ரிப்பேர் மாப்பு/ நாளை சரியாகிடும்” அசடுவழிய ட்ரைவர் சொல்ல”அப்போ நாங்களே பாடிடறோம் மச்சான்” என்று வாயால் விசில் அடித்தான்.

    நின்றுகொண்டிருந்த ராஜேஸ்வரியிடம் நடுத்தர வயது மதிக்கலாம் போலிருந்த கண்டக்டர்”எங்கம்மா போவணும்”என்றதும் “திருச்சி ரண்டு டிக்கட்” என்றாள் கையிலிருந்த பர்சிலிருந்து ஐம்பதுரூபாய் நோட்டினை எடுத்தபடி.

    “பாப்பாக்கு என்ன வயசு?

    ஏழுங்க”

    ” ஏஏஏழுவயசுப்புள்ளையை இடுப்புல தூக்கிவச்சிட்டு நிக்கணுமா? ” கிண்டலாய் கண்டக்டர் கேட்டார்.

    ”உடம்பு சரி இல்லைங்க அதான்” அழுகையை அடக்கியபடி பதில் சொன்னாள்.

    ”சரி சரி அப்படி செண்ட்டர் கம்பியைப் பிடிச்சிட்டு நில்லும்மா , விழுந்துகிழுந்துவைக்கப்போறே?”

    பஸ் பாட்டும் கூத்துமாய் அமர்க்களப்பட்டது. ஒரு பெரியவர் முகம் சுளித்தபடி,””ஏன்ப்பா பிள்ளைகளா படிக்கிற வயசுல இவ்வளவு உல்லாசம் பொது இடத்துல தேவையாப்பா?” என்று சிடு சிடுக்காமல் ஆதங்கமுடன் தான் கேட்டார் .

    அதற்கே ஒரு இளைஞன் சுர்ரென கோபம் தலைக்கேற அவர் அருகே வந்து ’”யோவ் பெருசு இந்தவயசுல உல்லாசமா இல்லாம உன்னை மாதிரி போற வயசுல இருந்தா அது தேவலியா? பொத்திக்கிட்டு சும்மா கெட ஆம்மா” என்று அதட்டினான்.

    பெரியவர் வெறுப்புடன் பாரவையை சுற்றிலும் சுழற்றியவர் இடுப்பில் மகளுடன் நின்று கொண்டிருந்த ராஜேஸ்வரியிடம்,

    ” அம்மாடீ நீ இங்கிட்டு வந்து உக்காந்துக்கம்மா... நான் பாடாலூர்ல இறங்கிடுவேன் அதுவரை நான் நின்னுக்கிட்டுவரேன்” என்று சொல்லியபடி இருக்கையைவிட்டு எழுந்தார்.

    “பரவால்லீங்க பெரியவரே” என்று ராஜேஸ்வரி தயங்கினாள்.

    அதற்குள் அவர் எழுந்துவிடவும் ராஜேஸ்வரி கண்களால் அவருக்கு நன்றி தெரிவித்தபடி அங்கே போய் அமர்ந்தாள்.ஜன்னல் ஓர இருக்கையாக இருக்கவும் காற்று பலமாய் வீசியதால் மடியில் போட்டுக்கொண்ட மகளின் உடம்பில் சேலை முந்தானையை பரப்பி போர்த்திவிட்டாள்.

    “ம்மா மாம் மா” மகளின் அனத்தல் கேட்டு அவள் காதோரம் குனிந்து,”வலிக்குதா சுமதிக்கன்ணு?” என்று கேட்டாள்.

    “ஆமாம்மா ரொம்ப வலிக்குது. “

    “பொறுத்துக்கடா தங்கம் திருச்சில ஆஸ்பித்ரிக்குப்போயி காட்டறேன் அம்மா காலைல மருந்துபோட்டேன் இல்ல அதுலயே குணமாயிடும் கொஞ்சம் பொறுத்துக்கோ ராஜாத்தி”

    “ம்ம் சரிம்மா”

  பஸ்ஸில் இளைஞர்களின் கேளிக்கை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.மாணவிகளை நோக்கி அவர்கள் வீசிய ஆபாச வார்த்தைகள் உடம்பை கூசவைத்தன அந்தப்பெண்கள் ஒன்றும் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காமல் ரசிப்பதுபோல வெட்கப் புன்னகையை பதிலுக்கு வீசினர்.

    பாடாலூர் வரவும் பஸ் நின்றது அந்தப்பெரியவர் இறங்கிக்கொண்டார்.

    வேறு சில பயணிகளும் இறங்கிக்கொள்ள குப்பென ஏழெட்டு இளைஞர்கள் பட்டாளமாய் ஏறினர்.

    .”வாங்கதலைவரே” என்று ட்ரைவர் வாயெல்லாம் பல்லாய் ஒருவரைப்பார்த்து வரவேற்க மற்றவர்கள் வாயில் விரல் வைத்து சீழ்க்கை அடித்து தங்கள் மகிழ்ச்சியைத்தெரிவித்தனர்.

    தலைவா என்று அழைக்கப்பட்ட இளைஞனுக்கு இருபது வயதிருக்கலாம். தலைமயிரை உச்சிவரை சிலுப்பினதுபோல வாரிக்கொண்டிருந்தான்.வாயில் சூயிங்கம்போல ஏதோ வஸ்துவை மென்றுகொண்டிருந்தான். முட்டிக்கால் அருகே வேண்டுமென்றே கிழித்துவிடப்பட்டிருந்த ஜீன்ஸிலும் கட்டம்போட்ட அரைக்கை சட்டையிலும் மற்ற இளைஞர்களிடமிருந்து தனித்தே வித்தியாசமாய் தெரிந்தான்.

    “வாட்ஸ் அப் யார்?” என்று ஸ்டைலாக கேட்டபடி பஸ்ஸிற்குள் பார்வையை சுழற்றியவன் ராஜேஸ்வரியையும் அவளுக்குப்பின்னே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயதுப்பெண்மணியையும் பார்த்துவிட்டு,” என்னப்பா இது வழக்கமா இளவட்டம் ஏறும் பஸ்ஸுல ஒரு முதியவட்டமும். முப்பதுக்குப்பக்கம்போலிருக்கிற நாட்டுக்கட்டையும் ஏறி இருக்குது?” என்றான் கிண்டலாக.

    ராஜேஸ்வரிக்கு எரிச்சலாக வந்தது.

    முகத்தை ஜன்னல்பக்கமாய் திருப்பிக்கொண்டாள்.

    “ஒகே கமான் கேர்ல்ஸ்! லெட்ஸ் சிங் அ சாங் நௌ” என்றான் தலைவன்.

    “என்ன பாட்டு மாப்பிள?”

    “என்னடா கேள்வி இது இன்னமும். உலகத்தையே கலக்கிட்டு இருக்கிற ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி டீதான்  அதுக்குப்பிறவு  என்ன  பாட்டும்  சொல்லிக்கறமாதிரி இல்லயே? கங்ணம் ஸ்டைலு பாட்டுஒகே ஆனா  பலபேருக்கு  அதுக்கு டான்ஸ் ஸ்டெப்பு போடத்தெரியல அதான்  கொலைவெறி்யே  பாடிடலாம்”

    ”வாவ் சூப்பர் தலீவா! ” என்று ட்ரைவர் பெரியகுரலில் சொல்ல இளைஞர்கள் அனைவரும் அந்தப்பாடலை பாட ஆரம்பித்தனர் வெட்கப்பட்டும் தயங்கியும் அம்ர்ந்திருந்த இளம் பெண்களிடம்” ஹலோ கேர்ல்ஸ் பாட்டே உங்களுக்காகத்தான் இதை நீங்களும் சேர்ந்து பாடலேன்னா எப்புடீ? என்று கேட்க அவர்களும் வேறுவழியின்றி பாட ஆரம்பித்தனர்.

    கூச்சல் காதைப்பிளக்கவும் உற்சாக நயாகாரா பெருக்கெடுக்க தலைவன் என்று அழைக்கப்படட் இளைஞன் .”சும்மா பாடினாபோதுமா ஆடவும் செய்யணும்?”என்று அனைவரையும் உசுப்பினான். மாணவிகளையும் ஆடச்சொல்லி வம்பு செய்ய ஆபாச அங்க அசைவுகளுடன் பஸ்ஸின் குலுக்களுக்கு ஏற்றபடி நடனம் ஆரம்பமானது.

    ராஜேஸ்வரிக்குப் பின்னால் அமர்ந்திருந்த நடுத்தரவயதுப்பெண்மணி,” காலம் கலிகாலமாகிப்போச்சி... பெத்தவங்க இவங்கள கஷ்டப்பட்டு காலேஜுக்கு படிக்க அனுப்பினா இவங்க இப்படி பாட்டு கூத்துன்னு கொண்டாடிட்டு இருக்காங்க. ஏதும் தட்டிக்கேட்டா’ வாயமூடு பெருசு’ ம்பாங்க இதுக்குத்தான் நான் இந்த காலேஜ் பசங்கபோகிற பஸ்ஸுல ஏற்றதே இல்ல என்னவோ இன்னிக்கு பெரம்பலூர்ல பஸ் கிளம்பறப்போ காலியா கெடந்திச்சீன்னு ஏறிட்டேன் பாடாலூர்ல ஏறின பையன் அரசியல் செல்வாக்கு உள்ள மனுஷனோட பையன் அதான் இந்த துள்ளல் துள்ளுறான்...’ என்று பின்பக்கமிருந்து முன்புற இருக்கையில்அமர்ந்திருந்த ராஜேஸ்வரியின் காதில் கிசுகிசுத்தாள்.. அதை எப்படியோ மோப்பம்பிடித்துக் கேட்டுவிட்ட ஒரு இளைஞன் “ ஏய் கிளவி என்னா வாய் நீளுது எங்க தலைவனைப்பத்தி புகாரா பேசுற ஆங்?” என்றான் ஆக்ரோஷமாய்.

    “யாரு யாரு அது? ஏய் ட்ரைவர் வண்டிய நிப்பாட்டு”

    தலைவன் என்று அழைக்கப்பட்ட இளைஞன் கட்டளையிட பஸ் சாலை ஓரமாக ப்ரேக் போட்டு நின்றது.

    தலைவன் அந்தப்பெண்மணியை நோக்கி விழி சிவக்க வரும்போது ராஜேஸ்வரி பொறுமை இழந்த குரலில்,” தம்பி, நிதானமாப் பேசுங்க” என்றாள்.

    அவ்வளவுதான் அவன் கோபமெல்லாம் ராஜேஸ்வரியின் மீது திரும்பிவிட,” அப்படீங்களா? மொதல்ல எந்திருங்க ?” என்றான் கிண்டலாக,

    “எ எதுக்கு நான் எந்திரிக்கணும்?”

    ராஜேஸ்வரியும் சற்று கடுப்பாகவே கேட்டாள்.

    “அடச்சீ தலைவர் நிக்குறாரு நீ குந்திக்கிட்டே பேசுவியா? மரியாதை தெரியுமில்ல அதுக்குதான்...” என்று சீறினான் இன்னொரு இளைஞன்.


    ராஜேஸ்வரிக்கு ஏற்கனவே முதல்நாளின் மன உளைச்சலும் உடல் அசதியும் சேர்ந்து அவளை நிற்கவும் திராணியற்றுப்போக செய்திருந்தது. அதனால்,” என்னால நிக்கமுடியாது” என்றாள் உறுதியான குரலில்.

    .    ”எ என் என்னது முடியாதா?” என்று கேட்டவன் “நீ எந்திருச்சி நிக்கிறவரைக்கும் பஸ் கெளம்பாது” என்றான் எகத்தாளமாக .


    அவன் நண்பர்கள் ஆமோதிப்பது போல கைதட்டி பெரிதாக சிரித்தனர் “அப்படிப்போடு அருவாள தலைவா” என்று கெக்கலித்தனர்.

     ‘‘தம்பி. வேணாம் ..என் நிலமை தெரியாம் பேசாதீங்க.. நான் அவசரமா திருச்சிக்குப்போகணும்”

    ”நாங்ககூடத்தான் காலேஜுக்கு நேரத்தோட போவணும் இல்லைன்னா சோடாபுட்டி ப்ரின்சி திட்டும் . நாங்களும் மணிக்கணக்கா நின்னுக்கிட்டே வரோம் தெரியுமில்ல?”

    ”அது உங்க உல்லாசத்துக்கு நிக்கறீங்க எனக்கு அதைப்பத்தி கவலை இல்ல பஸ்சை எடுக்க சொல்லுங்க தம்பி”

    ”அப்போ மன்னிப்பு கேட்கணும் நீயும் அந்தக்கிளவியும்”

    ”எதுக்கு மன்னிப்பு கேக்கணும் அதெல்லாம் முடியாது”

    ராஜேஸ்வரி பிடிவாதமாய் இப்படி சொல்லியபோது மடி்யில்படுத்திருந்த சுமதி,”அ அம்மா... ரொம்ப வலிக்குதும்மா” என்று முனகியகுரலில் சொன்னாள்.

    ஏதோ குரல் மட்டும் தெளிவின்றி காதில்விழுந்ததும், “தலைவன் “ ஏய் பேசற பிள்ளையை மடிலபோட்டுக்கிட்டு கைக்குழந்தை வச்சிருக்கிறது போல ட்ராமா பண்ணிட்டு இருக்கியா? நானும் ஏதோ கைகுழந்தைக்காரின்னு இரக்கப்பட்டு இத்தினிநேரம் உக்கார அனுமதிச்சேன் எருமைக்கடாவை மடிலபோட்டுக்கிட்டு நீ குந்தி இருக்க நாங்கல்லாம் நிக்குறோம் இப்போ அதையும் நிக்க வச்சிட்டு நீயும் எந்திரிக்கணும்”என்று மிரட்டினான்.

    “நானாவது எழுந்திருப்பேன் என் குழந்தையால அதுமுடியாது அவளுக்காகதான் நானும் உக்காந்திட்டுதான் இருப்பேன்”

    ”ஏய் பொம்பளே எங்க தலையை எதுத்தா பேசறே?” என்று இன்னொரு மாணவன் அவள் அருகே வந்து ஒருகையால் அவளின் முன்தலைமயிரைக் கொத்தாய்ப் பிடித்தபடி இன்னொருகையால் சுமதியை அவள் மடிலிருந்து அலட்சியமாய் நகர்த்தவந்தபோது....

    ,”ட்ட் டேய் .....எவ்வனாவது என் குழந்தைமேல கையை வச்சீங்க வ்வெட்டிடுவேன் விரலை.. ஆம்மா...கொலைகாரியாத்தான் மாறுவேன்.. என் குழந்தையால் எழுந்து நிக்கமுடியாதுன்னா புரிஞ்சிக்கமாட்டீங்க இல்ல? காரணம் சொன்னாத்தான் புரிஞ்சிப்பீங்கன்னா சொல்லிடறேன்..வேலி ஒண்ணு காவல் காக்காமல்சொந்த பயிரையே மேய்க்க மாடுகளை அனுப்பின கதையை விவரமா சொல்லறேன். கேட்டுட்டு உங்க இளைய தலைமுறை என்ன முடிவு எடுக்கணுமோ அதை செய்யுங்க.எங்கியாவது பெத்த அப்பனே குடிபோதையில் சீட்டு விளையாடி தோத்துப் போனதுக்கு பணயமா பெத்தமகளை அதுவும் ஏழுவயசு குழந்தையை காமுகங்க கிட்ட பணயம் வைச்ச சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கீங்களா? என்வீட்ல என் குழந்தைக்கு அது நடந்தது. நேத்து மதியம் திருச்சில நான் சமையல் வேலை செய்யறவீட்டிலேருந்து திடீர்னு நாமப்பட்டிக்கு என்வீட்டுக்கு வந்தேன். ஏற்கனவே ஜுரத்துல இருந்த மகளை கவனமா பாத்துக்க சொல்லிட்டுதான் வெளில போயிருந்தேன், ஆனா பாதுகாக்க,வேண்டியவன் பாதகசெயலுக்குக்,காவலாயிட்டான். விட்டுத்திண்ணைல புருஷன் குத்துக்கல்லா உக்காந்திருக்க உள்ளேருந்து ரெண்டு ஆம்பிளங்க வரவும் திகைச்சிப்போயி நான் உள்ளபோய்ப்பார்த்தா என் மகளை பச்சிளம் சிறுமியை துணீயை உருவிப்போட்டு அந்தக்காமுகங்க பாலியல் வன்முறை செய்திட்டுப்போயிருக்காங்க. வாயைக் கட்டிப்போட்டதுல குழந்தையால் கதறக்கூட முடியல உடம்பெல்லாம்கீறலும் காயமும், துடையெல்லாம் ரத்தம். இந்தக்கொடுமையை பெத்த தாய் நான் பார்த்து பதறிப்போயி புருஷனைப் பிடிச்சி உலுக்கினேன்.

    .”:என்னடி செய்யறது நானோ சம்பாதிக்கல உன் சம்பளமோ குடும்ப செலவுக்கே போதல சீட்டாடுனதுல ஒருவாரமா கடன் தொகை ஏறிடிச்சி அதான் குமரவேலும் அவன் ஆளும் கேட்டுக்கிட்டதால அப்படி செஞ்சேன்’ன்னு சொன்னதும் அவன் முகத்துல காரிஉமிஞ்சிட்டு ஊர் பஞ்சாயத்துல போய் முறையிட்டேன். அஞ்சுபுரம் போலீஸ் ஸ்டேஷன் போயி கதறினேன் அதுக்குள்ள புருஷனும் குமரவேலு என்கிற அந்த அரசியல் செல்வாக்கு கொண்ட மனுஷனும் கதையை மாத்திட்டாங்க நாந்தான் மகளை திருச்சில வேலை செய்றவீடடில் கூட்டிட்டுப்போயி பாலியல் வன்முறை நடக்க காரணமாயிருந்தேனாம். இதுக்கு புருஷனும் வக்காளத்துவாங்கினான் எனக்கு ஆதரவா வந்த சிலபேரை மிரட்டி அடக்கிட்டான் அந்த அயோக்கியன் குமரவேல்.கடைசில வெறுத்துப்போயிட்டேன்..ராவெல்லாம் தூங்கல .காலை எழுந்ததும் மகளை அள்ளிப்போட்டுக்கிட்டு இந்த பஸ்ஸுல ஏறிட்டேன் .திருச்சில நான் வேலை செய்த வக்கீலம்மாவுக்கு தெரிஞ்ச சில மகளிர் அமைப்பு மனித உரிமைக் கழகமெல்லாம் இருக்குது, அங்க குமரவேலின் அரசியல் செல்வாக்கு எடுபடாது அங்க போயி ஒரு குருத்துக்கு நடந்த கொடுமையை சொல்லி தீர்ப்பு கேட்கத்தான் போயிட்டிருக்கேன் தாமதமாகிற ஒவ்வொரு நிமிஷமும் என் மகளின் வாழ்க்கைமட்டுமில்ல  உடம்பும் வீணாகிடும்.அதான் பஸ்சை எடுக்கச் சொல்லி வேதனையாய் கேட்டுக்கறேன். உடல் உபத்திரவம் காரணமாத்தான் மகளால் எழுந்து நிக்க இயலாதுன்னு சொன்னேன். இனியும் நீங்க என் பேச்சை நம்பலேன்னா இதோ பார்த்துக்கொள்ளுங்க..” என்று உணர்ச்சி வசப்பட பேசி முடித்தவள் சட்டென எழுந்து நின்று சுமதியின கவுனை உருவி அவளை நிர்வாணமாக்கி கீறல்களும் காயங்களும் ரத்தக்கறைகளும் நிறைந்த அந்த மெல்லிய  உடம்பை தலைக்கு மேல் தூக்கிக்காட்டினாள்.

    ’ஐயோ’ என்ற அவலக்கூக்குரல் அனைவரிடமிருந்தும் எழுந்தது. சிலர் கண்கள் சிவக்கத்தொடங்கின.

    அடுத்தகணம் அமைதியாய் புறப்பட்ட அந்த பஸ், திருச்சிக்கு விரைந்து வந்துசேர்ந்தபோது முதலில் ராஜேஸ்வரியை கீழே இறங்க வழிவிட்ட இளைஞர்படை   பிறகுஅவளோடு இணைந்து நடந்து செல்ல ஆரம்பித்தது.

    **************************************************************************************************************************************

-(பெங்களூர் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை..தேர்வு செய்த திரு.அமுதவன் அவர்களுக்கு நன்றி)
-ஷைலஜா
மேலும் படிக்க... "பணயம்."

Tuesday, March 19, 2013

அப்பா இல்லாத.....

தொலைதூரமிருந்தாலும்
தொலைபேசியில் செவியருகே
வாழ்த்தும் குரல் இன்றில்லை
தந்தையா நண்பனா நல்லாசிரியரனா
யார் அப்பா நீ?
பள்ளிப்பருவத்தில் நீ
புகட்டியது கவி பாரதி
அதனால்நான் அடைந்ததோ
கூர் மழுங்காத புத்திமதி
எழுத்தென்னும் சிறுபொறி
என்னுள் கனன்றிருப்பதை
கண்டுகொண்டு ஊக்குவித்த
என் இலக்கிய சாரதி!
சித்திரத்தேர்  வீதியில் வரும்போது
சிறுமியாய் இருந்த என்னை
சிந்தனைத் தேர் உருட்டவைத்து
கவியரங்கமேடை ஏற்றினாய்!
அன்பென்ற ஆயுதத்தை எப்போதும்
வைத்திருக்கச்சொன்னாய்
களிமண்ணாய்கிடந்த என்னை
கவிதை மகளாக்கினாய்
ஆண்வர்க்கம்
அனைத்திலும்
இல்லை தர்க்கம்
என்பதைப்புரிந்து கொள்ள
அப்பா நீ சாட்சி!
ஆண் பெண் என்பதை
பால்கொண்டு அளப்பதைவிட
கற்ற நூல் கொண்டு
அளக்கச் சொல்வாய்!
செல்லமாள்புருஷனைப்பற்றி
செவி இனிக்க நீ உரைத்து
கண்பனிக்க நான் கேட்டு
களிப்படைந்த காலம்
கனவுதான் இன்று.
வாழ்வோடு கரைந்து கலந்துவிடுபவன்
வாழ்க்கை யாகிவிடுகிறான் என்பாய்
வாழ்பவர்களின் விஸ்வரூபத்தில்
வாழ்க்கையும் விஸ்வரூபம் எடுக்கும்
பிரும்மாண்டம் காண
 
பீதி எதற்கு என்பாய்!
அணுவுக்குள் உறங்கியதே
அண்டமாய் விரிவதை
அறிவார்ந்த உன் வார்த்தை
அறிவித்துவிடும் அப்பா.
எதை இடைவிடாது நினைக்கிறோமோ
அதனை அடைவோம்
என்பது உண்மை இல்லைபோலும்!
மரணத்தை தந்தை ஒருநாளும்
மனதிலும் நினைத்ததில்லை
 
மரணம் என்பது ஒரு நிலை அன்று
அது ஒரு எண்ணம் என்பாய்
இந்த எண்ணத்தை ஜெயித்தலே
அமரவித்தை என்பாய்!
மரணம் ஒரு வித்தைதான்
’வாழ்க்கையை உள்ளமாக்கி
 
அதனையே பிறகு உணர்வாக்கி
 
கலையாக்கி கலையை உணர்வாக்கி
 
வருகின்ற தலைமுறைக்கு
 
சொத்தாக வைக்கவேண்டும் 'என்றாய்!
மரணம் என்பது கல்வியில் ஒரு கூறு
Death is Learning.
கற்றுக்கொள்ளத்தான்
அமரலோகம் போய்விட்டாயா  அப்பா?
 
(19.3  . அப்பா இல்லாத என் பிறந்த நாள் இன்று)
மேலும் படிக்க... "அப்பா இல்லாத....."

Monday, March 18, 2013

சங்கமம்!


முந்தாநாள் அந்திநேரத்துக்குக்கொஞ்சம் முன்னால அதாவதுமதியம் 3மணிக்கு பெங்களூர் இணையப்பெருமக்கள் சந்திப்பிற்கு ஆயத்தமானோம்.

 
ராமலஷ்மி நான் ஷக்திப்ரபா ஸ்வர்னா ஜீவ்ஸ் ஹரிகிருஷ்ணன் திருமால், வில்லன் என்னும் ஓம் ஸ்ரீ வலைப்பதிவர் ஜி எம் பாலசுப்ரமண்யம் என்று அனைவரும் தமிழ்ச்சங்க கட்டிட வாசலில் கூடினோம்.அல்சூர் லேக் பக்கம் போய் அமரலாமா அல்லது ஒடுக்கத்தூர்மட் எனப்படும் சிறு கோயில் வளாக மண்டபத்தில் அமரலாமா எனப்பட்டிமன்றம் போடப்பட்டது.


முடிவில் தமிழ் எங்களுக்கு சிம்மாசனம் அளித்தது. சங்கக்கட்டிடத்தின் மேல் மாடி அறையில் நூலகம் அருகே இடம் கிடைத்துப்போனது.
 
 
 
ஹரிகீஜி அவர்கள் வீடியோ காமிரா+ட்ரைபாட் கொண்டுவந்து நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்யப்போவதாக சொல்லி இருந்தபடியால் நான் பெண்கள் குழுவுக்கு ரகசியமடலில் ஏதும் கம்பன் பாரதி அல்லது ரசித்த எழுதிய கவிதைகளைப்பற்றி பேசுவோம் ’ என்று முன்கூட்டிதகவல் அனுப்பி இருந்தேன்..அதன்படி நானும் ஷக்தியும் முதல்நாள் இரவே பேப்பரில் எழுதிக்கொண்டு தயாராக வந்தோம்..(ஆனால் அதுவும் ரகசியமாகவே போய்விட்டது:)

 
ஸ்வர்ணலஷ்மியை ஆட்டோவிலிருந்து இறங்குமுன்பாகவே ஓடிப்போய் ஸ்வர்ணா என நான் கூவ அவர் ஷைலஜா என அழைக்க அல்சூர் ஏரியின் அலைகள் எங்களைக்கண்ட மகிழ்ச்சியில் சின்னதாய் ஆரவாரம் செய்தன! 
பதிவர் வயதில் சற்றே பெரியவரான ஜி எம் பி தன் பேரனுடன் வந்துவிட்டார். அடுத்து திருமால் ஜீவ்ஸ் ஹரிக்ருஷ்ணன் ராமலஷ்மி தமிழ்ச்சங்க உறுப்பினர் முகம்மது அலி ஆகியோர் குழுமிவிட சங்கக்கட்டிடம் எங்களின் சிரிப்பில் குலுங்காமல் ஸ்ட்ராங்காக இருந்தது.


 
மாடிக்குபோனதும் ஒளிப்பதிவு ஆரம்பமானது முதலில் அறிமுகம் செய்துகொள்வோம் என்றபடியால் அவரவர் அறிமுகம் +தங்களைப்பற்றிய சிறுகுறிப்பு என்று சென்று அதுவே ஒருமணிநேரத்தைக்கடந்துவிட்டது அலி அவர்கள் நேரமாகிவிட்டதென விடை பெற்றார்.


 
நூலகம் 5மணிக்கு திறக்கவும் அங்கு மக்கள் சிலர் வர ஆரம்பித்தனர் எங்களை ஏதோ தமிழ்ப்பாவலர்கள் என நினைத்தோ என்னவோ மரியாதையாக(திருதிரு) நோக்கியபடி நகர்ந்தனர்!


 
செவிக்குணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயவேண்டும் அல்லவா ஆகவே அவரவர் கொண்டுவந்த அறுசுவை உணவுகளைப்பிரித்தோம் எமது பிரபல மைபா பற்றி நானே சொல்லிக்கொள்வதா?:) யாராவது சொல்லட்டும்.


 
 
 புளியோதரையும் மோர்க்குழம்பும் மைபாவோடு கொண்டுபோயிருந்தேன் கேசரியை முறுக்கு இவைகளைராமலஷ்மியும் அசோகா ஹல்வாவை திருமாலும் மத்தூர்வடையை ஷக்திப்ரபாவும் குகீஸ் டோக்ளாவை ஸ்வர்னாவும் கடலைமிட்டாயை ஜிஎம்பி சாரும் மஷ்ரூம் +வெஜிடபிள் பஃப்சை ஜீவ்சும் கொண்டுவந்து கலக்கிவிட்டார்கள்.

 
மறுபடியும் பொதுவாகப்பேசத்தொடங்கினோம்..முக்கியமாக தலைநகரில் அண்மையில்நடந்த சம்பவம் பெண்களுக்குப்பாதுகாப்பு இல்லாமலிருப்பது ஆண்குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு பள்ளியில் குழந்தைகளுக்குப்பெண்களை மதிக்க கற்பித்தல் என்பது போன்ற தலைப்புகளில் பார்வையும் பேச்சும் விரிந்தது.

 
தமிழ்ச்சங்க நூலகத்தை என்னைத்தவிர மற்றவர்கள் முதன்முதலாகப்பார்க்கும்போது மிகவும் பரவசம் அடைந்தார்கள் ஏனென்றால் பெரிய அந்த நூலகத்தில் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அதன் விவரங்கள் கனகச்சிதமாக இருக்கும். தமிழ்ச்சான்றோர்களின் பெரிய அளவிலான படங்கள் கண்ணைக்கவரும்.அயல் மாநிலத்தில் நம் தமிழின் மேன்மையை இதர மொழிக்காரர்களும் கண்டு வியப்புறும் வண்ணம் காட்சி அளிக்கும்.

 
 
நூலகத்தின் ஜன்னல் கதவைத்திறந்தால் எதிரே ஏரியினின்றும் சில்லென்ற காற்று இலவசமாய் கிடைக்கும்! நூலகத்தில் பிறமொழி நூல்களும் ஒரு வரிசையில் இருக்கும்.கன்னடத்திற்கு கூடுதல் இடம்தான் .. நூலகமுகப்பில் முன்னாள்முதல்வரின் பெயரில் அந்த நூலகக்கூடம் இருப்பதாக எழுதி இருந்தாலும் நூலகத்திற்குபெயரென்னவோ சர்வக்ஞர் நூலகம் என்றுதான் ஆங்கிலத்தில் எழு்திஇருக்கிறது.

 
சர்வக்ஞர் ஒரு தத்துவ ஞானி, கரைகாணமுடியாத கடல்போன்றது இவர்தம் தத்துவங்கள்.

 
சர்வக்ஞரைப்பற்றிக்கன்னட அறிஞர்கள், ஆடு சாப்பிடாத தழை இல்லை சர்வக்ஞர் சொல்லாத விஷயமில்லை என்பார்கள். திருவள்ளுவர் இரண்டடியில் கூறியவற்றை மூன்றடிகளில் முடித்து ஒவ்வொரு ஈற்றடிகளிலும் ‘சர்வக்ஞ’ என்று முடிக்கிறார். சர்வக்ஞன் இவர் இயற்பெயராக இருக்க முடியாது வள்ளுவர் சொற்படி இது வாலறிவன் என்று பொருள்படும். இவருக்கு முன்போ பின்போ இவர் பெயர்கொண்ட கவிஞர்கள் இருந்ததாக கன்னட இலக்கியத்தில் இல்லை. சென்னையில் இவருக்கு சிலை உண்டு.

 
12ம் நூற்றாண்டில் கர்னாடகமாநிலத்தில் புகழ்பெற்றவர் பஸவண்ணர் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அவர் வழி வந்தவர் சர்வக்ஞர்.பிறகு புகழ் பெற்றவர் அக்கமகாதேவி.

 
மனத்தூய்மை இல்லாத பக்தி பலனில்லை என்கிறார் பஸவண்ணர். பஸவண்ணரின் பாடல்களை பஸவண்னர் பாட்டமுதம் என்ற தலைப்பில் அனைத்தையும் எண் சீர் விருத்தங்களாக ஆக்கித் தமிழாக்கம்
செய்துள்ளார் பாவலர் பொன்னரசு அவர்கள் 394பக்கமுள்ள இ்ந்த நூலை பெங்களூரு பசவ சமிதி வெளியிட்டது.

 
பசவண்ணரின் ஒரு பாடல் இது..

 
உயர்ந்தார் பொதுவர் கீழோர் என்றே
உள்ள மெய் அன்பரைப் பிரித்துப்பார்த்தே
அயர்ந்தேன் இந்த வேற்றுமை நெருப்பே
அடியனைச் சுட்டிட வெந்தேன்! நொந்தேன்!
நண்ணும் சரணரில் நலிந்தோர் உயர்ந்தோர்
நடுத்தரம் என்ற பாகுபாடெதற்கோ?
உண்மையில் அடியார் அனைவரும் ஒருநிலை
உணர்ந்தேன் கூடல சங்கமத்தேவா!

 
/////பிகு..படங்கள்  விரைவில்...//////
--
ஷைலஜா
மேலும் படிக்க... "சங்கமம்!"

Monday, March 11, 2013

நடையா இது நடையா?!


பெங்களூர்  பூங்காக்களில்  காலை  நேரம்  வாக்  போகிறபோது  சில்லென்ற  காற்றுக்குப்பஞ்சமே  இருக்காது. நல்ல கடும் கோடையிலும்  சிற்றஞ்சிறுகாலை மட்டும்  கார்டன்சிடியில்  குளிர் உள்ளம்குளிரவைக்கும்..அதையும்தாங்க இயலாத பலர்  ஸ்வெட்டர்  மப்ளர் என்று வந்துவிடுவார்கள். சிலர்  ஐபாடில்  விஷ்ணு சஹஸ்ரநாமம்  அல்லது  குருராகவேந்திரசுப்ரபாதம் கேட்டபடி வருவார்கள். யான் பெற்ற  இன்பம் பெறுகவையகம் என்பதுபோல அலறவைப்பார்கள் . நல்லதுதான்  ஆனால்  பார்க்கில்  பலமனிதர்கள் நடப்பார்கள்  எல்லாருக்கும் நமக்குப்பிடித்தது பிடிக்குமா என நினைத்துப்பார்க்கமாட்டார்கள்.. நான் நடக்கும் பார்க்கில் ஒரு கன்னடப்பெண்மணி  கையில்  ஏதோ நோட்டுப்புத்தகமுடன் கண்ணாடியை ஒரு கையால் சரி செய்தபடி  காலில் ஹவாய் சப்பலுடன் ‘படவரு ,நானேனு  மாடோது நினகே நன்ன  ஷிவனே?”(ஏழை நான்  உனக்கு நான் என்ன செய்வதோ சிவனே?”)

என்ற  கன்னடப்பாடல்களையும் பாடியபடிவருவார்.  எங்கே சப்பல் தடுக்கி  கீழே  விழுவாரோ என எனக்கு பயமாக இருக்கும்.’நீனு  சும்னே  வாக் மாத்ர மாடு’ (நீ  சும்மா  வாக் மாத்திரம் செய்)என என்னிக்காவது  சிவன் சொல்லவேண்டும் இவருக்கு என நான் நினைத்துக்கொள்வேன். ஒருத்தர்  வேகவேகமாய்  பந்தயத்துக்கு  ஓடுவதுபோல நடப்பார்.

.மூச்சிறைக்கும்  இதில் எதிர்ப்படுபவர்களிடம்,”நமஸ்காரா ஏனு சமாச்சாரா?  “  என்று பேச்சு கொடுப்பார். பார்க் மையத்து திறந்த வெளி அரங்கில் யோகா பயிற்சியும் தொடர்ந்து  சிரிக்கப்பயிற்சியும் நடக்கும்.சிரிக்க  பயிற்சியாம்! வீட்ல  சிரிக்க முடியாதவங்க இங்க சிரிப்பாங்க போல:).ஆண்கள் பெரும்பாலும் அரசியல் அல்லது  கார்ப்பரேஷனின் கவனக்குறைவு பற்றிப்பேசிக்கொண்டுபோவார்கள்..பெண்கள் (கன்னடம் தமிழ்  ஹிந்தி தெலுங்கு மலயாளம்)  பெரும்பாலும்  ஊட்டா (சாப்பாடு) தான்: அல்லது  டீன் ஏஜ் குழந்தைகளின்  பிடிவாதம் பற்றி.. உடல் உபாதைகளைப்பற்றி.. கொஞ்சம்  முதியபெண்மணிகள்  வரன் விவரங்களைப்பகிர்ந்தபடி....யாராவது  புத்தகம் வாசித்த கதை பத்திபேசுவாங்கன்னு நானும் காத்திட்டு இருக்கேன்  இதுல காலனி பார்க்குகளில் சிலருக்கு நான் எழுத்தாளர் என ் தெரியும்  அதனால் ஆர்வமாய் ,’சமீபத்துல எதுல கதைவந்துது?; என்று கேட்பார்கள் ஆஅஹா என்முகத்தில் ஒரு ஆயிரம் வாட்ஸ்புன்னகை மிளிரும்.. காத்திருந்தமாதிரி பதில் சொல்வேன்’அப்படியா நான் அந்தப்பத்திரிகை வாங்கறதே இல்ல...’என்பார்கள்.சிலர் இன்னும் ஒருபடி மேலபோயி’ இப்பல்லாம் எங்க புக் வாசிக்க டைம் இருக்கு?  கதைகள் ஒண்ணும் சகிக்கல அதனால்  நான் எல்லாத்தியும்  நிறுத்திட்டேன்  பத்திரிகை எல்லாம் காசும் வேற கொள்ளை..’என்பார்கள். உண்மை  கடைசி வரியில்  வெளிவந்துவிட்டது பார்த்தீர்களா?:).இண்டர்நெட்ல எழுதறியாமே என்று ஒருமாமி அப்போதுதான்  அமெரிக்கா போய் வந்ததால் ஏதோ விஷயம் தெரிந்து கேட்டமாதிரி  தெரிந்தது.

 நான் பதில் சொல்வதற்குள்,தொடர்ந்து ”என்னவோபோ  ..சீரியல்  பாக்க  ஆரம்பிச்சா  பொழுது ரெக்கை கட்டிட்டுப்பறக்குதே!  ஆனாலும் கம்ப்யூட்ட்ர்ல வாசிச்சா  எதையுமே வாசிச்ச த்ருப்தி இல்ல..நான்  கைலபுக்வச்சிட்டுதான்  வாசிப்பேன் அதுவும் தூக்கம் வரல்லைன்னாதான்..ஆமா   உ ன் நாவல் ஒண்ணு கொடேன் வாசிச்சிட்டுதரேன்.”“எதுக்கு தூக்கம் வரதுக்கா..சர்தான் போங்கமாமி..”என்று சொல்லாத குறையாய்  நகர்ந்துவிட்டேன்.. சீரியல் சிகாமணிகளிடம்  என்னபேசுவது?ஆக வாக்கிங்கில் டாக்கிங் அதிகமிருக்கும் பார்க்குகளை  நைசாய்  ஒதுக்கிவிடுவது வழக்கம்  எங்க ஊர்லதான் தடுக்கிவிழுந்தா  பார்க் இருக்கும் அதை அழகாய் கவனித்து  மேக் அப்  செய்து  ஜjiிலுஜிலுவெனக்காட்ட  பலபெரிய  கம்பெனிகள்போட்டி போடும்..எல்லாவற்றையும்  விட  செலவில்லா்த உடற்பயிற்சி என்பதால்  வாக்கிங்  இப்போது பரவலாய் ்  எல்லா  ஊர்களிலும் மிகுந்துவிட்டது .அந்த விழிப்புணர்வை பல  இயக்கங்கள்  மேரத்தான்  ஓட்டம்  என அடிக்கடி பல ஊர்களில் நடத்துகிறார்கள்.எதற்கு இப்போ திடீரென நடைப்பயிற்சிபற்றி ஆரம்பிக்கிறேன் என்றால் அதற்குக்காரணம் இருக்கிறது:)  மார்ச்10ம்தேதி நேற்று்    ஐஐடி வளாகத்தில் சென்னையில் நடைபெற்ற மஙகையர் (மட்டும் கலந்துகொள்ளும்)மாரத்தானுக்கு குடும்ப மங்கையரை வழியனுப்ப என்று சொல்லிக்கொண்டு பல ஆண்கள் குழுமிவிட்டனர்.

கையில் காமிராவுடன்:0  அழகான  சில இள நங்கையர்கள் வந்தபோதுமட்டும்  இளைஞர்கள் கண்ணில்கருப்புக்கண்ணாடி ஏறிக்கொண்டது!

சரியா  ஏழுமணிக்கு  தொடங்கியது..

டிசம்பர்ல  ஜோரா  இருந்த  ஐஐடி வளாக  மரம் செடிகள்  மார்ச்சில்  ஆயாசமாய் காணப்பட்டன..  ஏழரைக்கே அதன்ன  சுள் கோபமோ சூரியனுக்கு?அங்கங்கே  ஐஐடி  மரத்தடியில்  வானரங்கள்  எங்களை வேடிக்கைபார்த்தன. மான்கள் எங்களுக்குப்போட்டியாக  துள்ளி  ஓடின:)   சிவராத்திரி என்பதால் ஐஐடி வளாகக்கோயிலின் வாசலில் நல்ல  கூட்டம்...அங்கும் ஒரு குட்டி மான்  ஓடிமறைந்தது.பக்திமானாக இருக்குமோ?:)Run for Women 2013 ( Exclusively for Women )

 மங்கயர் மேரத்தானில் 5கிமீ தொலைவினை 45 நிமிடத்தில்  கடந்து மெடலும் பாராட்டுமடலும் வாங்கினதை   இங்கேசொல்லிக்கொள்ள என்பது தவிர  நேற்றைக்கு  ஒரு போலீஸ் பெண்பிரமுகர்  அங்கே  மேடையில்  ‘நாட்டிலெயே சென்னைதான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் ” என்று  பெருமையாக சொல்லியதை  பகிர்ந்துகொள்ளவும்தான்!
ஆமா  சிலர்கிட்ட’எப்படி இருக்கு லைஃப்?’ எனக்  கேட்டால் ’ஏதோ   வாழ்க்கை ஓடுது’ என்கிறார்களே ..வாழ்க்கை உண்மையில் ஓடுகிறதா நடக்கிறதா  ?:)சரி உருப்படியா  கொஞ்சம்  எழுதி முடிக்கறேன்:)நடப்பதின்  பயன்களில் சில...

• மற்ற வகையான உடற்பயிற்சிகளுடன் ஒப்பிடும்போது நடைபயிற்சி மிகவும் எளிமையானதாக இருக்கிறது. இந்தப் பயிற்சியை எந்த இடத்திலும் மிகவும் எளிமையாக மேற்கொள்ள முடியும்.• எளிமையான உடற்பயிற்சியாக இருந்தாலும் இதனால் கிடைக்கும் நன்மைகள் மிகவும் அதிகம். அன்றாடம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் எடையைக் குறைக்க துணை புரிவதோடு தெளிவாகச் சிந்திக்கவும் உதவுகிறது. மேலும் இதயத் தசைகளை வலுவாக்கவும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.• நடைப்பயிற்சியில் ஏற்படும் முழுப்பயனைப் பெற வேண்டும் என்றால், தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அன்றாடம் நடக்கும் தூரத்தைப் படிப்படியாக உடலின் ஆற்றலுக்கு ஏற்றவாறு அதிகரிக்க வேண்டும். நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது நடக்கும் இதயத் துடிப்பின் அளவானது நிமிடத்துக்கு 100 க்கு மேல் இருக்க வேண்டும்.• ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அன்றாடம் 10,000 காலடிகள் நடக்க வேண்டும் என இதய மருத்துவர்கள் சொல்கின்றனர். ஆனால் நாம் அதிகபட்சம் 3,000 காலடிகளுக்கு மேல் நடப்பதில்லை. பத்தடிகூட நடக்காமல் இருப்பதைவிட 3,000 காலடிகள் நடப்பது நல்லதுதானே. ?


மேலும் படிக்க... "நடையா இது நடையா?!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.