Social Icons

Pages

Thursday, December 18, 2014

நீங்காத செல்வம் ...

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்!

பேர் பாடி...

போதும்  வேறொன்றும் வேண்டாம்  இருந்த இடத்தில் இருந்தபடியே அவன் பெயரைச்சொன்னாலேபோதும்.அதற்கே  அதிகம் அருள்பவன் அவன் உத்தமன்,

அப்படி என்ன  பெருமை  இந்த உத்தமனுக்கு? அவதாரம் என்றால்  அது ஒன்றாகத்தன இருக்கும் ஆனால் வாமன அவதாரத்தில் மட்டும்  இரட்டை அவதாரம் எடுக்கிறார். ஆம் குள்ளனாய் வந்து  பிறகு வான் முட்ட  நிமிர்ந்து விஸ்வரூபம் எடுக்கிறார். வாமனன்+திருவிக்கிரமன் அவதாரம்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று  ஆரம்பிக்கிறாள்!.கேசவா நாராயணா  மாதவா கோவிந்தா என்றே சொல்பவள்  இந்த ஓங்கிஉலகளந்தவனை மட்டும்  உத்தமன் என்கிறாள்.

நெடுமாலான திருமால் தன்னைக்குறுக்கிக்கொண்டதால் உத்தமன்.


பிச்சை எடுக்கும்போது ஒருவனுடைய கல்வி, கேள்வி,புகழ்,சாதுரியம்,மற்றும் வெற்றி என்ற ஐந்து தேவதைகளும் அவனை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து மீண்டு வர இயலாத தூரத்துக்கு விலகுகிறார்கள் என்பது தெரியாதா ? அதையும் செய்தான் பெருமாள். அவன் உத்தமன்,

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்ததில்
என்ற குறள் அறியாதவர் யார் ?


 திரிவிக்கிரமனின் முதலடி யில் ஆண்டாள் மாலின் ஸ்பரிசம் உணர்ந்தாள். பூமிதேவியின் அம்சமான அவள் மீது தானாக திருவடியை பதித்தான் அவன் உத்தமன்.


அகலகில்லேன் இறையுமென்று  அவன் அடிக்கீழ் அமர்ந்து அவன் திருவடி காண நினைக்கும் நம்மாழ்வாரும் படியாய்க்கிடந்து உன்  பவளவாய்காண்பேனோ என்ற குலசேகராழ்வாரின் ஏக்கமும்   அப்படியே   இருக்க  எதிர்பாராமல் திருவடியை தன் தலைமீது வைத்தானாம்  அந்தப்பரவசத்தில் ஆண்டாள் சொல்வது உத்தமன் !

.

 . மஹாபலி மகன் நமுசி 'சின்னக்காலைக் காட்டிப் பிச்சை வாங்கிப் பெரிய காலால் அளந்து மோசம் செய்தாய் ' என்று தூற்றிப் பொருமினான். போற்றவில்லை பெருமானை, அதை சகித்துக்கொண்ட அண்ணல் உத்தமன்

சுக்ராச்சாரியார்[அசுரகுரு]பூச்சியாகக் கமண்டலத்தை அடைத்து தானத்தை நிறுத்த முயன்றதற்கு அவர் விழிக்குமட்டும் தண்டனைகொடுத்து உயிரைப்பிழைக்க வைத்த உத்தமன்.

மகாபலியை அழிக்காமல், அவன் அகந்தையை அழித்து, அவனைத் திருத்தி தடுத்தாட் கொண்ட) கருணை வடிவமான வாமன அவதாரமே உகந்ததாகப் பட்டது  
.வாமனன்  உத்தமன்.


அதனாலேயே அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி  என்று வாமனனை இன்னொரு பாசுரத்தில் முதலில் வைக்கிறாள் மனதுக்கு இனியனாகிலும் இராமன் இரண்டாவது வரியில் தான் வருகிறான்..இந்தப்பாடலில்   எல்லாமே   பெரிதாகத்தெரிகின்றன   நிறைவாக வருகின்றன.
ஆரம்பமே ஓங்கி   உலகளந்த....

ஆமாம்  ஆகாயமளவுக்கு  காலை நீட்டி  அளந்தானாம் அத்தனை உயரம்!  மூவுலகமும் அளந்தவன் !

ஓங்கு பெருசெந்நெல்லாம்...
ஆகாயமளவு  உயர்ந்த செந்நெல்பயிர்கள்  பயிர்களின் செழிப்பு வர்ணனை!
 கயல் எல்லாம்  துள்ளுகிறதாம் ! உற்சாகம்  இங்கே  கயல்  உகள என்கிறாள்.. அழகிய குவளைமலரில்பொரிவண்டு  கண்படுப்ப...மலரில் தேன்முழ்கி  இருந்திருந்தால்தான்   வண்டுவரும்.தேன்   குடித்து  மயங்கியபடியே படுப்பது இங்கும் நிறைவு!

தேங்காமல்  உள்ளே புகுந்து சீர்த்தமுலையாம் அதாவது  தேக்கமே கிடையாதாம்..அப்படி ஒரு நிறைவு. சீர்த்த முலைகள்..நிறைந்த பெரிய மடிகளைக்கொண்ட வள்ளல் பெரும்  பசுக்கள்! வள்ளல் தன்மையே  பெரிதாம் இதில்  பெரும்பசுக்களாம்  நல்ல பெரிய பசுமாடுகள்.வள்ளல்பசுக்கள்  அருகே குடம் கொண்டுபோய் பாலைவாங்கப்போனால் வற்றாமல் கொடுக்கிறது அதுவும் எப்படி குடம் நிறைக்க நிறைய.


தீங்கின்றி நாடெல்லாம்(ஒரு ஊர் மட்டுமில்லை  நாட்டுக்கே மழையாம்  இங்கும் ஆண்டாளின் மனவிரிவினைக்காணலாம்)

திங்கள்(மாதம்)மும்மாரி..ஒருமழை எல்லாம் போதாது மாதம் மும்மாரி பெயவேண்டும் அதுவும் தீங்கின்றி ..அதிகமாகவும் கூடாது  குறைவாகவும் பெய்துவிடக்கூடாது  ..தீமையற்ற நல்ல மழையாம்  ...உயர்ந்த மனச்சிந்தனை இது.

 நிங்காத செல்வம்..செல்வம் செல்வோம் என  சென்றுவிடக்கூடாதாம் நீங்காமல் இருக்கவேண்டுமாம்.  இவையெல்லாம் நிறைந்து  இருக்கவேண்டுமாம்!


ஆஹா  இந்தப்பாடல்தான் எத்தனை வளமாக  நிறைவாக இருக்கிறது!


ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலில்  அர்ச்சகர்கள் இந்தப்பாடலைப்பாடித்தான் நம்மிடம் அர்ச்சனைபிரசாதம் தருகிறார்கள்(வேறு சிலகோவில்களிலும் உண்டு)
அதனால்தான்  இந்தப்பாசுரம் இருமுறை  சொல்லப்படுகிறது.. 

ஆண்டாளின்  பரவசம்  உற்சாகம்  அனைத்து உயிர்களீடத்திலுமான  பரிவு அக்கறை தேசநலன் என அனைத்தும் இந்தப்பாசுரத்தில் காணப்படுகிறது!

**********************************************************************************************8
(உத்தமன் வருகிறார்  இன்றைக்கு  ஆம்  ஓங்கி உலகளந்த உத்தமன்!
இன்றைக்கு   நான் வாசலில் இட்ட கோலமுடன்  உத்தமனை வணங்கி வரவேற்போம்! )--
மேலும் படிக்க... "நீங்காத செல்வம் ..."

Tuesday, December 16, 2014

காவிரி பாயும் திருவரங்கம்!
பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"தொண்டரடிப்பொடி ஆழ்வார் இப்படி சொல்கிறார்


காவிரி பாய்ந்துவருகிறதாம்! 

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். (கதையல்ல நிஜம்தான்  பல்லாண்டுகள் முன்பு நடந்த நிகழ்ச்சி இது)வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம். 

...’உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!"
என முடித்து காவிரி கரையில் நின்று  பாடலை பாடினானாம். காவிரி  உடனே அடங்கிப்போய்விட்டாளாம்!
 ஊருக்குள் பாய்ந்துவேகமாகவந்தாலும் அரங்கனின் பாதத்தை  தொடும்போது வருடுவதுபோல மென்மையாக இருக்கிறதாம்!
  தென்னீர்பொன்னி திரைக்கையால் அடிவருட என்கிறார்  இன்னொரு ஆழ்வார் பெருமான்! காவிரியின்திரைக்கையால்  தனது திருவடியினை வருடிக்கொண்டிருக்க,  அனந்தன் எனும்  பாம்பின்மேல் பள்ளிக்கொள்ளும் பெருமான் அரங்கன்!
ஒருபுறம் ஆழ்வார்களின் பாசுர இசை!  மறுபுறம் காவிரியின் அலையோசை! 

மார்கழி  இன்றுபிறந்துவிட்டது!  திருவரங்கம்  புத்தாடை கட்டிக்கொண்ட சிறுமியைப்போல  மகிழ்ச்சியில்  திளைக்கிறது!  எங்கெங்கு காணினும் பக்தர் கூட்டம்! கோவிலைச்சுற்றிய நான்கு வாசல்களிலும்  வண்ணக்கோலங்களும் வாசல்திருமாடத்தில் விளக்கின் ஜோதிகளும்!

திருப்பாவை பாடிக்கொண்டு  செல்லும்  பாவைகள்! ஏழுதிருவீதிகளையும் சுற்றிக்கொண்டு அரங்கன் அடியார்கள்  பாடும் அண்ணல் நாமங்கள்!

வெள்ளைகோபுர உச்சியில்  வசந்த(குமாரி)க்குரல் ” எல்லே  இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?’ என்று  உரிமையாய் அதட்டுகிறது..

ரங்கா ரங்கா ரங்கா  என்று  எங்கும்  ஒலி பெருகிவருகிறது!
வடக்குச்சித்திரைவீதியில் வாழும்
லட்சுமிபாட்டிக்குக்கண்  சரிவரத்தெரியவில்லை.அதனுடன்  தினசரி  கோவிலுக்குப்போய்வரத்தவறுவதில்லை

“என்ன பாட்டி  கண் பார்வை  ரொம்பக்குறைஞ்சிபோயிருக்கு இந்த நிலைமைல  நீங்க கோவில்போய் ரங்கனைப்பார்க்கத்தான்
 முடியுமா ?” என்று ஒருநாள் கேட்டபோது,” ,என்னை ரங்கன் பார்க்கிறானே அது போதும்” என்றார்!

திருவரங்கநகருக்கு நான் அளிக்கும்ஒரு கவிதை!

மண்ணில் ஒளிரும் மகிழரங்கம்
மாந்தர்போற்றும் மாதவரங்கம்
கண்ணில் தெரியும் ஒரு சுவர்க்கம்-அது
காவிரி பாயும் திருவரங்கம்!

அண்ணல் ராமனின் கம்பன் காவியம்
அரங்கேற்றிய இடம் திருவரங்கம்
பண்ணிய புண்ணியத்தாலே-நாம்
எண்ணி மகிழும் அணியரங்கம்!

விண்ணளாவிய ராஜகோபுரம்
வெண்முகில்வருடும் பொன் கலசம்
பன்னிரண்டு ஆழ்வார்கள்-பாடி
அண்ணலைத்துதித்த நல்லரங்கம்!

அணியார் பொழில் சூழ் எழிலரங்கம்
 அண்டர்கோன் அமரும் பூவரங்கம்
தண் துழாய் மாலைசூடித்தந்த-கோதை
கண்டு கரம்பிடித்த களியரங்கம்!
மேலும் படிக்க... "காவிரி பாயும் திருவரங்கம்!"

Monday, December 15, 2014

தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!
திரு வெசா திரு ஹரிகி
தமிழின் மிகப்பெரிய ஆளுமைக்குரியவரும், விமர்சன வித்தகருமான

திரு வெங்கட் சாமிநாதன் அவர்களை வெசா  என்று தமிழ் அன்பர்கள்  அழைப்பார்கள். 

வடக்கே பல காலம் இருந்தவர் .இவரது  விமர்சனங்களில் பலர் வளர்ந்திருக்கிறார்கள். ‘எங்களுக்கு முன்னோடி  வெசா அவர்கள்தான்’ எனபல கலைஞர்கள் சொல்வார்கள்.

  நேர்மையான வெளிப்படையான  கருத்துக்கள் திரு வெசா அவர்களுடையது.

. கதை கவிதை  கட்டுரைதிரைப்படம் பரதம் ஓவியம் நாடகம் என பன்முக ஆளுமை கொண்டவர்.
 அவரது விமர்சனத்தில் தன் பெயர்  எங்காவதுவருமா  என ஏங்கும் கலைஞர்கள் பலர் உண்டு(நானும் தான்! என்றாவது  ஒரு நல்லபடைப்பினில்  அவர் பாராட்டினைப்பெற்றுவிடவேண்டும் என்பது லட்சியமும் கூட)


இந்த சுட்டியில்....
  வெ சா அவர்களுக்கு பெங்களூர் நகரம் பெருமைப்படுத்தியதை விவரமாககாணலாம்.. 

பெங்களூருக்கு வெசா வந்திருக்கிறார் என்று தெரிந்தநாளிலிருந்தே எங்களுக்கெல்லாம்  வெசா அவர்களை சந்திக்க  மிக ஆவலானது. 


(மகேஷ்  ,திருமூல நாதன்,பின்னே  திருமால், ராமலஷ்மி ஷைலஜா, ரஞ்சனி நாராயணன், ஹரிகிருஷ்ணன்.)

சென்றவருடம் அமர்க்களமாக   நடந்தவிழாவில் அவருக்குப்  பொன்னாடை போர்த்தி பரிசுப்பணம்கொடுத்து, மைசூர்தலைப்பாகை வைத்து(அந்த தலைப்பாகையை பத்திரமாக வைத்திருக்கிறீர்களா என கேட்க நினைத்தேன் கடைசியில்மறந்துவிட்டேன்:)திரைபிரபலங்கள் மற்றும் இதரமொழி இலக்கியப்பிரபலங்கள் புடைசூழ அன்று விழாநாயகர்களில் ஒருவராக அமர்ந்திருந்தார். எல்லாவற்றையும் இணையத்தில்தான் பார்த்தோம்! அன்றிலிருந்தே   மிகவும் ஆவலுடன்
 நம் மதிப்பிற்குரிய திருவெங்கட் சாமிநாதன் அவர்களை  சந்திக்கும்  வாய்ப்பிற்குக்காத்திருந்தோம்.

வடக்குவாசல் ஆசிரியராக இருந்த திருபென்னேஸ்வரன் பெங்களூர்வந்தபோது  ‘சந்திக்க அழைத்துப்பொவதாய் சொன்னார் ஆனால் கடைசிநிமிஷத்தில் அவருக்கு இயலவில்லை  தலைநகர் திரும்பிவிட்டார்.
 

அப்படி இப்படி2வருடங்களாய்  திட்டமிட்டுதிட்டமிட்டு  நாங்கள்  கண்ட கனவு நனவானது!
(ஜீவ்ஸ் ஐய்யப்பன்   ராமலஷ்மி   ரஞ்சனி   ஹரிகிஜி  திரு.
 வெசா)

ஆம் சென்ற சனிக்கிழமை  மதியம்  ஹெப்பால் பகுதியில் எஸ்டீம் மால் மூன்றாம் தளத்தில்  திரு வெசா அவர்களுடன்  இரண்டுமணி நேரம்  நடந்த இனிய சந்திப்பு மறக்கமுடியாதது! வேகமாக நடக்க இயலாத  நிலையில் எங்கள் அழைப்பினை ஏற்று அந்த இடத்திற்கு , வந்த  திருவெசா அவர்களுக்கு மிக்க நன்றி.சந்திப்பிற்கு வந்தவர்களில்  திருமூல நாதன் என்னும் இளைஞனைப்பற்றி நிறைய சொல்லவேண்டும் ஏனென்றால் தமிழ் உலகம் இந்த இளைஞரைப்பற்றி  அதிகம் அறிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.  4வயதிலேயே  1330 திருக்குறளையும் மனப்பாடம் செய்தவர் , . இன்னமும் இவர் பெருமையை மகிமையைக்கூற  ஓரு பெரிய
 பதிவே  எழுதவேண்டும்.


சிலரை சந்திப்பதற்கு முன்பு என்னவெல்லாம் பேசவேண்டும் என தீர்மானித்துவைத்திருப்போம் மனதிற்குள் ஒரு ஒத்திகையும் நடந்திருக்கும்! ஆனால் திரு வெசா அவர்களிடம் அப்படியெல்லாம்  ஏற்பாடுடன் செல்லவில்லை..இயல்பான  ஒரு சந்திப்பாகவும், இனிய நம் குடும்பப்பெரியவரை சந்தித்துப்பேசிமகிழ்ந்ததாகவும் அமைந்தது.


சந்திப்பிற்கு வந்திருந்த  மகேஷ் என்னும் இளைஞர்(கம்பராமாயண  முற்றோதல்வகுப்பின் தலையாய் மாணவர்களில் இவரும் ஒருவர்) திருவெசா அவர்களிடம்,விமர்சனக்கலையில் உங்களுக்குப்பிறகு முழுமையான  விமர்சகர்  யார் என நினைக்கிறீர்கள்?” என்கேட்டார்.

”யாரும் வரலாம்  அதை நீங்க தான் வளர்த்துக்கொள்ளவேண்டும்” என்றார் வெ சா.

“அகிலனுக்கு ஞானபீட விருதுகிடைத்தபோது நீங்கள் எழுதிய விமர்சனம் மறக்கமுடியாதது”

“ஆமாம்  இந்த எழுத்துக்கெல்லாம்  ஞானபீடம் விருதா  என மற்றவர்கள் வாசிக்கும்போது நினைக்கக்கூடாதபடி  படைப்பு இருக்கவேண்டும்” என்றேன்.

”போட்டோ  எடுப்பது   ஓவியம்போல  இல்லை  அது ஒரு கருவியின் வேலைஆயினும் அது ஒரு கலையா?” 
ஆம் அதுவும் கலைதான்  கலை என்பது  எதையும் ரசிக்கும் கண்ணோட்டத்தில் இருக்கிறது.எடுப்பவர் பார்வையில் அது பெருமையடைகிறது பிரபலமாகிறது    உதாரணத்திற்கு ராம லஷ்மி   எடுக்கும் படங்கள்நன்றாக உள்ளன பறவைகள் பற்றிய அவர் படங்கள் பிரமாதமாக இருந்தன .ரசனையில்  மேன்மை இருக்க வேண்டும்!”

உங்கள் விமர்சனங்கள் அனைத்தும்  சேர்த்து ஒரே புத்தகமாகப்போட்டால் என்ன?

இப்படி மகேஷ் கேட்டதும் வெசா  சிரித்தபடி,” யார் தயாராக  இருக்கிறார்கள்?

நீங்கள் தயார் என்றால் எல்லாவற்றையும் இப்போதே தருகிறேனே!”என்றார்
 உங்கள் காலத்தில் உங்கள் பார்வையில் கூர்மையான விமர்சனம்  இருந்தது
ஆனாலிப்போது  ஜெ யமோகம் சொல்வதுபோல் இணையத்தில் எழுத வாய்ப்புகள் பெருகிவிட்ட இந்தக்காலத்தில் குப்பைகள் பெருகிவிட்டன என்பதைப்பற்றி தங்கள் கருத்து?

ஆமாம்  குப்பையும் பெருகிவிட்டன  ஆனால் நல்ல எழுத்துக்களும் தென்படுகின்றன  .

இப்படி மேலும் சுவையாக  செவிக்குவிருந்தாக பேசிக்கொண்டு போக, ராமல்ஷ்மி ஜீவ்ஸ் ஐய்யப்பன்   ரஞ்சனி நாராயணன்  ஆகியோர்
தங்களின் புதிய சிறுகதை கவிதை நூல்களை வெ சா அவர்களிடம் அளித்து ஆசி பெற நானும் என் அப்பாவின் சமீபத்தியமறுபதிப்பு வெளியீடான நாவலை அவரிடம் அளிக்க,  அன்றைய சந்திப்பில்  சமோசா ஜாமூன் நான் கொண்டுபோன மைசூர்பாக்(இதைப்பற்றி அன்று சாப்பிட்டவர்கள்  முக்கியமாய் சந்திப்பின் நாயகர் தான்  கருத்து சொல்லவேண்டும்):) காபி என்று  இடையே வயிற்றுக்கும்  விருந்தாக அமைய  மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. எங்கள் அனைவரின் சார்பில் வெசா அவர்களுக்கு  பெங்கலூரின் குளிருக்குப்பாதுகாப்பாக  கம்பளி சால்வையை  திரு ஹரிகிருஷ்ணனும் ஐய்யபனும் போர்த்தினார்கள்.

 எங்கள் கனவு நனவானதில் அனைவரும் மகிழ்ந்து  பின் விடைபெற்று வீடு திரும்பினோம்.(ராமலஷ்மி  ஷைலஜா  ரஞ்சனி ஹரிகிருஷ்ணன்   நடுவில்  திரு வெசா)


(சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்..திரு ஹரிகிருஷ்ணன், மகேஷ், திருமூலநாதன், ஐய்யப்பன், திருமால் பார்வதி  ஷைலஜா ராமலஷ்மி ரஞ்சனி நாராயணன் ஆகியோர்)
மேலும் படிக்க... "தமிழின் மிகபெரிய ஆளுமையை சந்தித்தோம்!"

Thursday, December 11, 2014

விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல   ..என்று  பாரதி மகிழ்ந்துகொண்டாடினான்

கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்,
கம்பன் மீது  பாரதிக்கு இத்தனை காதலா! ஆம் இளமையிலேயே  எட்டயபுரம் அரண்மனையில்  புலவர் பலருடனும் பழகித்தமிழ்ப்புலமை  பெற்ற  பாரதி,அங்கிருந்த  கம்பராமாயணம் கற்றுத்தேர்ந்த இருவருடன் நெருங்கிப்பழகி கம்பன் காவியத்தை தெளிவாக  அறிந்துகொண்டான் மாகவிஞன்.

பாரதி அறுபத்தி ஆறு என்ற பகுதியில் ...

சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே
சொல் என்று ஹிரணியன்   தான் உறுமிக்கேட்க
நல்லதொருமகன் சொன்னான்.’தூணில் உள்ளான்
நாராயணன் துரும்பிலும் உள்ளான்’என்றான்
வல்ல பெருங்கடவுள் இலா அணுவொன்றிலையே


என்று பாரதி பாடியதற்குக்காரணம் கம்பனின் இரணியவதைப்படலப்பாட்டுப்பகுதியை  படித்ததின் பாதிப்புதான்.

சாணினும் உளன்; ஓர்தன்மை அணுவினைச் சதகூறிட்ட
கோணினும் உளன்; மாமேருக் குன்றினுமுளன்; இந்நின்ற
தூணினும் உளன்; நீசொன்ன சொல்லினும் உளன்;
இத்தன்மை காணுதி விரைவின்

என்கிறது கம்பன் பாடல்.


இதன்படி  இறைவன் எங்குமுளன் என்பதை அறிந்த  பாரதி
காக்கைச்சிறகினிலே நந்தலாலா  என்றபாட்டில் காணும் அனைத்திலும் கண்ணனைக்கண்டதாக கூறியும்  திருப்தி அடையவில்லை.

ஞானரதம் ஏறி உலகை வலம் வந்தும்  ஏதோ சொல்ல மனம் விழைவதை உணர்ந்தார்.
அப்போதுபார்த்து  ரதம் அருகே வந்த ஒருவன்,” சாமீ!  இந்த ரதம் ஏறி வானம் போனீங்களா?’ என்றுவியப்பாய் கேட்டான்.
’ஆம்  ..ஞானரதம்  அல்லவா  விண்ணுக்கும் செல்லும் மண்ணுக்கும் மீளும்’ என்றார் மகாகவிஞன்.
‘சாமி! வானம் போயி கடவுளைக்கண்டீங்களா?’

‘ஏன் வானத்தில் தான் கடவுள் இருக்கிறாரா?”

‘கடவுளேன்னு மேல ஆகாயம் பாத்துதானே கை குவிக்கறோம் கண்ணு மூடி வேண்டிக்கறோம்?”

‘அப்படி இல்லை  அப்பா..கடவுள் எங்கும் இருக்கிறான்”

“அதெப்படி சாமி? இப்ப  கோயில்ல இருக்கற சிலையை  செய்தது ஒரு மனுஷன்.விக்கிரகத்தை வடிச்சது மனுஷன். மனுஷன் செய்ததால் சிலை கடவுளானால்  மனுஷன்  என்ன ஆகீறான் கடவுளையே படைச்சவன் மனுஷன் ஆகிறானா? அப்ப மனுஷன் கடவுளா?”

“அப்பா! நீ யாரென்று தெரியவில்லையே.. என்னமாய் கேள்விகேட்கிறாயப்பா”

“நான் உங்க சீடன்னு வச்சிகுங்க சாமி..பதில் சொல்லுங்க..உண்மைல  கடவுள் எங்கதான்  இருக்காரு?”

இப்படி  ஆரம்பிக்கிறார்.

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்மேலும் கம்பனின் பாடல் அவருக்கு நினைவுக்குவருகிறது நீ சொல்லிய சொல்லிலும் உளன்  என்றால் இவனுக்குப்புரியுமா?

கேளப்பா சீடனே கழுதை ஒன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திரு கரமும் சிரமேற் கூப்பி
சங்கர சங்கர வென்று பணிதல் வேண்டும்.
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்


என்கிறார்.

கீழான  என்று ஏன் சொன்னேன் ? யோசிக்கிறார் கவிஞர்.

கழுதை  பாரமானஅழுக்குத்துணி சுமக்கிறது  அதனால்தியாகி கழுதை.
ஆனால்  பன்றி தேள்  கீழானவைகள்  ஒன்று மலம்தின்பதால் இன்னொன்று கொட்டி விடம் இடுவதால்.  அப்படிக் கீழானவர்களையும்  பார்த்துகரம் குவிக்கவேண்டுமாம்.கூளம் மலம் எல்லாம் கீழானது அதையும் வணங்கல் வேண்டும்.

தாழ்ந்தோரை உதறித்தாம் உயரமுடியுமோ மேலோரின் தாள்பணிந்தே நிற்பது இயல்பானால் கடவுளும் மேல் நோக்குவானே தவிர குனிந்து இந்தபூமியை நோக்குவானா ?நீங்காதபொருள் அனைத்தும் கொண்டது  பூமியன்றோ? மண்ணைப்புகழாமல்  விண்ணைமட்டும்  உயர்த்துவதா?  உயர்ந்தால் அட மண்ணில் தெரியுது வானம்!

ம்ம்  எழுதியது சரி தான்  என கவி உள்ளம் சமாதானம் அடைகிறது.

விண்நோக்கி  தியானிக்கும் உள்ளம்  மண் நோக்கிக்குனியவும் வேண்டும்.
இறைவனை ஒன்றேபோலக்காணவேண்டும்.
ஆகவே  கடைசியாக  இப்படி முடித்தார்.

விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃதே!
சீடனுக்குப்புரிந்ததோ இல்லையோ  கவிஞருக்குத்தன்கவிதை முழுமைபெற்றதில்  மகிழ்ச்சி கொண்டது மனம்!


மேலும் படிக்க... "விண் மட்டும் தெய்வம் அன்று மண்ணும் அஃதே !"

Sunday, November 16, 2014

உயிர்களிடத்து அன்பு வேண்டும் .

உயிர்களிடத்து அன்பு வேண்டும் .
ஷைலஜா 


வாஷிங்டனிலிருந்து வந்து இறங்கி முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை. ஸ்ரீதரனுக்காக காத்திருந்த முதல் அதிர்ச்சியான விஷயம், அவர் அனுமதி இல்லாமல் மகன் கிரீஷ் அவருடைய வீட்டை விற்றதுதான்.

பையன் பெயருக்குத் தானே உரிமைப் பத்திரம் தருகிறோம், தன்னை மீறியோ,கேட்காமலோ என்ன செய்யப் போகிறான் என்று நினைத்தது எத்தனை விபரீதமாக முடிந்துவிட்டது?    

-- சட்ட ரீதியாக அவன் செய்த காரியம் சரியாக இருக்கலாம். ஆனாலும் அவரை ஒரு வார்த்தை கேட்காமல் அவன் செய்தது பெரிய தவறு தான்.

விற்று வந்த பணம் அத்தனையையும் அவருடைய வங்கிக் கணக்கில் தான் செலுத்தியிருந்தான். மொத்தமாக மூன்று கோடி ரூபாய். வங்கிக் கணக்குப் புத்தகத்தில் பதிவாகி இருந்தது. வாழ் நாளில் ஒன்றுக்குப் பின் இத்தனை பூஜ்யங்களை அவர் இது வரை பார்த்ததேயில்லை. அதற்கு அவசியமும்    நேர்ந்ததில்லை.

யாருக்கு வேண்டும் லட்சமும், கோடியும்?

தியாகராய நகரின் உயிர் நாடியான உஸ்மான் ரோடில் அமைந்திருந்த வீடு அது. ஐம்பது வருடங்கள் முன்பு சென்னை வந்த புதிதில் வாங்கிய நிலம். அந்த காலத்தில் இருபத்தி ஐந்தாயிரம் கொடுத்து அந்த நிலத்தை வாங்க அவர் பட்ட பாடு அவருக்குத் தான் தெரியும். அப்போதே தி. நகர் என்றால் குதிரைக் கொம்பு தான்.

நண்பன் காண்ட்ராக்டர் கோபால் மூலமாக கட்டிய கனவு வீடு அது. இப்போது சொல்கிறார்களே வாஸ்து, ஃபெங்சூய் என்று, அப்படி எந்த வித ஆலோசனையும் இன்றி நேர்த்தியாக கட்டப்பட்ட வீடு தான்
அந்த வீட்டுக்குப் போன பிறகு தான் கிரீஷ் பிறந்தான். மகள் திவ்யா பிறந்தாள். அவர்களின் படிப்பு அபாரமாகமாக அமைந்தது. இப்போது கிரீஷ் ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பொது மேலாளர். கை நிறைய சம்பளம். திவ்யா படிப்பு முடிந்தவுடன் திருமணமாகி அமெரிக்காவில் குடியேறிவிட்டாள். சுங்கத் துறை அதிகாரியாக சேர்ந்த ஸ்ரீதரனுக்கு வேகமான முன்னேற்றமும், உத்தியோக உயர்வும் கிடைத்தது. அவர் ஓய்வு பெறும்போது கமிஷனர் பதவியில் இருந்தார். அது தான் அந்தத் துறையில் உயர்ந்த பதவி.

ஒருவனுடைய படிப்பும், பதவியும் அவனுடைய பூர்வ ஜன்ம பாவ புண்ணியத்திற்கேற்ப அமைகின்ற விஷயம். அதற்கும் வீட்டு அமைப்புக்கும் முடிச்சு போட்டுப் பார்க்கக் கூடாது. வாஸ்து மாற்றத்தால் முன்னேற்றம் என்பது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்தது என்பார்களே, அந்தக் கதை தான் ஸ்ரீதரனைப் பொறுத்த மட்டில். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல ஸ்ரீதரனுக்கு.

அவருக்கு நேர்ந்த பேரிழப்பு என்றால்  அது அந்த வீட்டின் பின்னே இருந்த தோட்டம் தான்.  ஒரு மாமரமும், கொய்யா மரமும் நன்கு உயர வளர்ந்திருந்தன. ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோப்பிலிருந்து கன்று வாங்கி வந்து நட்டது. இமாம் பசந்த் ஜாதி. தமிழில் முக்கனிகளில் மாவிற்கு முதலிடம். ஆஃப்கானிஸ்தானிலிருந்துதான் மாங்கன்று முதலில் நம் நாட்டுக்கு வந்ததாம். பலாவையும் வாழையையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தைப் பிடித்துக் கொண்டது மாம்பழம். வந்தாரை வாழ வைக்கும் தமிழ். வருஷத்தில் எட்டு மாதம் காயும், பழமும் காய்த்துக் குலுங்கும் மரம். அடர்ந்த மற்றும் வெளிறிய இளம்பச்சை இலைகளின் இடையே மஞ்சள், சிவப்பு, சற்று ஊதா நிறத்தில் தொங்கும் கணக்கில்லாத மாம்பழங்கள் பார்ப்பதற்கே கொள்ளை அழகு. அந்த மரத்திற்கு தினமும் விருந்தாளிகளின் வரவு கணக்கில் அடங்காது. குறைந்தது ஒரு    நூறு கிளிகளாவது  அங்கே அமர்ந்து அந்த இமாம் பசந்த் தை சிறிய செக்கச் சிவந்த அலகுகளினால் கொத்தித் தின்பதை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

தோட்டத்தின் தெற்கு மூலையில் அமைந்துள்ள சிறிய ஊஞ்சலில் ஆடிக் கொண்டு அதை அனுபவிப்பது அவருடைய காலை நேர அம்சங்களில் ஒன்று.

ஆரம்ப காலத்தில் மனைவி அடிக்கடி புலம்புவாள், இந்த பாழாப் போன கிளி ஒரு பழம் கூட நமக்கு விட மாட்டேன் என்கிறதே என்று.

ஸ்ரீதரன் அவளை ஒரு நாள் தோட்டதிற்கு அழைத்து ஊஞ்சலில் அமரச் சொல்லி கிளிகளின் அழகை வர்ணித்தார். அதற்கப்புறம் அந்த மாதிரியான புலம்பலை கேட்டதேயில்லை.

பாரதியின் குயில் பாட்டுத் தான் நினைவுக்கு வரும் அவருக்கு. பூர்வ ஜன்மத்தில் குயிலுக்கு மாடன், குரங்கன், வேந்தன் என்று மூன்று காதலர்களாம்!.

இப்போது பாரதி இருந்திருந்தால் கிளிப் பாட்டு பாடியிருப்பார். பாட்டினால் பரவசமடையச் செய்யும் அந்தக் கருங்குயிலுக்கே மூன்று காதலர்கள் என்றால்  அழகான பச்சைக் கிளிக்கு மயங்கும் காதலர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

அந்தக் கொய்யா மரத்திற்குப் பின்னும் ஒரு கதை உண்டு. அவர் அம்மாவுக்கு ரொம்ப பிடித்த பழம் கொய்யா. கடையில் ஆப்பிள், வாழை என்று எத்தனையோ பழங்கள் இருந்தாலும், அம்மாவுக்கு கொய்யா மட்டும் தான் கண்ணைப் பறிக்குமாம். கொய்யா என்றால் உயிர்

அம்மாவின் சொந்த ஊரான கரூருக்குப் பக்கத்தில் மேலப்பாளையத்திலிருந்து எடுத்து வந்த பதியன். மாமரம் குளிர் காலத்தில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளும் போது, கிளிகள்  இந்த மரத்தை தஞ்சமடையும். இதிலும் காய்ப்புக்குக் குறைவில்லை.

நினைவு தெரிந்த வரை அந்த மரங்களிலிருந்து பழங்களைப் பறித்ததில்லை.

ஒரு நடை போய் பழைய வீட்டைப் பார்த்து விட்டு வரலாமென்று கிளம்பினார்.

வீடு இருந்த சுவடே தெரியவில்லை. தரை மட்டமாகியிருந்தது. மரங்களையும், அதன் விருந்தினர்களையும் இனி வரலாற்றுக் குறிப்புகளில்தான் பார்க்க முடியும்.

அப்பா. இப்போ நான் போட்டிருக்கிற ஒப்பந்தம் இருக்கிறதிலயே பெஸ்ட். கையில் மூணு கோடி கொடுத்து ஒரு ஃப்ளாட்டும் தருகிறான். எட்டு மாதத்தில் வீடு ரெடி ஆயிடும். இனிமேல் தனி வீடு பராமரிக்கறது கஷ்டம் கிரீஷின்   நியாயப் படுத்த முயன்ற வார்த்தைகளும், சமாளிப்பும் இனி எந்த விதத்திலும் அவருக்கு பலன் அளிக்கப் போவதில்லை.

இடிந்த வீட்டின் சுவடுகளை வெளியே இருந்தே பார்த்துவிட்டு திரும்பினார்.

காலை வேளை பூஜைகளை முடித்துவிட்டு சோபாவில் அமர்வதற்கும், செல்வராஜ் வீட்டிற்குள் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஸ்ரீ பெரும்புதூரில் இருக்கும் செல்வராஜ் ஒரு நிலத் தரகர்.  நியாயஸ்தன். மாதா மாதம் தவறாமல் கடைசி செவ்வாய் அன்று திருப்பதி சுவாமியை தரிசிப்பது அவனுடைய முப்பது வருடப் பழக்கம். புதன் கிழமை காலையில் ஒரு லட்டு பிரசாதத்துடன் அவனைப் பார்க்கலாம். கடந்த பத்து வருடங்களாக அவன் வருகையினால் பிரசாதத்தை பெறும் பாக்கியம் அவருக்கு.

“ஐயா வணக்கம்! செல்வராஜ் எழுந்து நின்றான்.

வழக்கம் போல லட்டு பிரசாதத்தை கொடுக்க ஸ்ரீதரன் பெற்றுக் கொண்டார்.

“ஊரிலே எல்லாரும் செளக்கியம் தானே? உற்சாகமில்லாம இருக்கிறமாதிரி தோணுதுங்க! அகக் குறிப்பை முகக் குறிப்பிலிருந்து தெரிந்து கொண்டு பேசினான்.

“ அதெல்லாம் ஒண்ணுமில்லே செல்வராஜு.. பயணக் களைப்பு. பேத்தியைப் பிரிந்து வந்ததில் சோகம். வேறே எதுவும் இல்லை.

ஸ்ரீதரன் சமாளித்தார்.

வர ஞாயிற்றுக்கிழமை பொண்ணுக்கு நிச்சயம் செய்யறேன். நீங்க கண்டிப்பா வந்து ஆசீர்வாதம் பண்ணனும் அழைப்பிதழை வழங்கினான்.

முயற்சி செய்யறேன்

“உங்களுக்கு நேரம் இருந்தா சொல்லுங்க.  நம்ம ஊரு தண்டலம் தான்.  ஸ்ரீபெரும்புதூர் பக்கத்துல. அமைதியான ஊரு. நீங்க வரும்போது  அழைச்சிக்கிட்டுப் போறேன். உங்க உடம்புல இருக்கிற அலுப்பு, மனசுல இருக்கிற பாரம் எல்லாம் பறந்து போயிடும்

செல்வராஜ் தன் ஊரைப் பற்றி பெருமையாக பேசுவது கேட்பதற்கு இனிமையாகத்தான் இருந்தது.  

‘நாம் தான் நகரத்தில் நம்மையே தொலைத்துவிட்டு உட்கார்ந்திருக்கிறோமே!

ஞாயிறு காலையில் எழுந்ததும் செல்வராஜின் ஞாபகம் தான்.

அப்படி என்னதான்  இருக்கு அந்த ஊரிலே?. சென்றுதான் பார்ப்போமே!

அவனுடைய அழைப்பிழதை எடுத்துக்கொண்டு தயாராகிவிட்டார்.

கார் பூவிருந்தவல்லியிலிருந்து இருபது நிமிடங்கள் தான் பிரயாணித்திருக்கும். வலது பக்கம் தண்டலம் என்ற கிராமத்துக்குள் புகுந்து செல்வராஜின் வீட்டின் முன் நின்றது.

காரிலிருந்து இறங்கிய ஸ்ரீதரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சென்னைக்கு அருகில் இத்தனை அருமையான கிராமமா? எங்கு திரும்பினாலும் பசுமை. நிறைய மரங்கள். அழகான தோப்புகள். வாசலில் மாடுகள்.

இன்னமும் பரந்து விரிந்து இருந்த அந்த நிலப் பரப்பு தொழிற்சாலை, அடுக்கு மாடிகளுக்கு பலியாகாமல் பசுமையாக காட்சி அளித்தது.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் சென்னை திரும்ப தயாரானார்.

எதிரே ஒரு பெரிய தோப்பு அவருக்குத் தெரிந்தது. காலாற நடக்கலாம் என்று தோன்றியது. செல்வராஜுவும் கூட வந்தான்.
அருகில் சென்றதும் அவர் பிரமிப்பில் ஆழ்ந்தார். அத்தனையும் மா மரங்கள். சுமார் ஐம்பது மரங்களாவது இருக்கும்.

“உள்ளே ஒரு கயித்துக் கட்டிலிலே படுத்துக்கிட்டு அண்ணாந்து பார்த்தீங்கன்னா ரொம்ப நல்லாயிருக்கும். வித விதமான பறவைகள், அதுவும் பச்சைக் கிளிகள் வந்து உட்காரும் செல்வராஜ் யதேட்சையாக சொன்னான்.

கிளிகள்  கிளிகள் ...

ஸ்ரீதரனுக்கு தொலைந்து போன பிதுரார்ஜித சொத்து கிடைத்தது போன்ற கிளர்ச்சி.

“இதன் பரப்பளவு, விலை, யாரு இதுக்கு சொந்தக் காரன், முப்பது வருடத்துக்கு வில்லங்க சான்றிதழ், எல்லா விபரத்தோட நாளைக்கு என்னை வந்து பாரு. முன் பணம் ஒரு ஐயாயிரம் வச்சுக்கோ. முடிவை எட்டிய மாதிரி அப்படி ஒரு வேகம் அவரது செயலில்.  

ஸ்ரீதரனின் மன பாரம் மட்டும் இறங்கவில்லை. மனமே தண்டலத்தில் தஞ்சமடைந்து விட்டது. 


Ithanks  ILAKKIYAVEL  magazine) November issue

மேலும் படிக்க... "உயிர்களிடத்து அன்பு வேண்டும் . "

Thursday, November 13, 2014

நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்!

குழந்தைகள் தினக்கவிதை!


நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்

இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும்
இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்
தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்
தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்

சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும்
சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும்
கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும்
காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும்

வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும்
வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும்
மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும்
மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் வேண்டும்

இனிய சொல்லைமட்டும் நா இயம்பிடவேண்டும்
இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட வேண்டும்
கனிவுகொண்ட நெஞ்சம்கடைசிவரை இருந்திடவேண்டும்
கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல் வேண்டும்

தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்திடல் வேண்டும்
தாய்நாட்டின் சிறப்பதனை போற்றிட வேண்டும்
அறிவுதந்த ஆசானையே  வணங்கிடல் வேண்டும்
அன்பினாலே உலகம் தன்னை ஆளவும் வேண்டும்

நாடு நமது நாடு என்ற எண்ணம் வேண்டும்
நன்மையான செயல்கள் மட்டும் செய்திடல் வேண்டும்
ஒற்றுமைப்பயிரினையே வளர்த்திட வேண்டும்
ஒப்புயர்வற்றவர்களைச் சார்ந்திடவேண்டும்


நன்னெறிக்கு  ஒளிகொடுக்கும் வள்ளுவர்  வாக்கு- உயர்
ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
உணர்ந்து நடந்தால்  உண்டு பல நன்மை நமக்கு!-- 


 (மீள்பதிவு)

மேலும் படிக்க... "நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்!"

Monday, November 10, 2014

வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை
ஆலிமா முகிலை வாலி காலனை
இந்த ளூருறை எந்தைபெம் மானை
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை
உள்ளுவார் உள்ளத் துள்ளுறை சோதியை
ஊரகம் நின்றருள் நீரகத் தடிகளை
எவ்வுள் மாயனைத் தெய்வநா யகனை
ஏர்மலி சிகரத்து நீர்மலை ஆதியை
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை
ஒருகால் மொழியினும் ஒழிகுவை நெஞ்சே !
ஓதநீர் ஞாலத் துழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே

பிள்ளைப்பெருமாள் ஐய்யங்கார் எழுதியதிருவரங்கக் கலம்பகத்தின் ஒரு பாடல் உயிர் எழுத்துகளின் வரிசையில் அமைந்துள்ளது. இப்பாடல் பெருமானுடைய ஐந்து நிலைகளையும் விளக்குவதாகவும் திகழ்கிறது. எளிய மொழி அமைப்பும், பொருட்செறிவும் மனதைக் கவர்வதாக உள்ளது

பாடலில் ஐவாய் அரவில் அறிதுயில் என்கிறார்  திவ்யகவி. அறிதுயில்  திருவரங்கஅரங்கனுக்கே உரியது.  அறிதுயிலுக்கு  உண்மையான பொருள்  அறிய ஆவல்.

 பாற்கடலில் பையத்துயின்ற பரமன் என்கிறாள் ஆண்டாள்.
  பைய என்றால்   மெல்ல  மெதுவாக  என்று அர்த்தம்.
பாண்டியநாட்டுமக்கள்தான் இதுக்கு சரியாக பொருள் சொல்லவேண்டும்.

 ஆனால்மயிலாடுதுறையை அடுத்த ‘திரு இந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் ‘பரிமள அரங்கன்’  நீண்ட  நெடுந்துயில் கொண்டுள்ளான். 108 திருப்பதிகளில் 26 ஆவது திருப்பதி.

ஐந்து அரங்கத் தலங்களில் (பஞ்சரங்க) ஒன்று. (ஸ்ரீரங்கப்பட்டினம், ஸ்ரீரங்கம், கோயிலடி என்ற ஆதிரங்கம், கும்பகோணம், திரு இந்தளூர். )

இன்றைக்கு இந்தளூரில்  உற்சவத்திருநாள் அதனால் பரிமளரங்கனின் பக்கம் நாம் போகலாம்!

நல்ல ஆழ்ந்த உறக்கம்  பரிமள ரங்கனுக்கு.அதனால்தான் பாருங்கள்   108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவரான  திருமங்கை ஆழ்வார். இங்கும் பெருமாளைத் தரிசித்துப் பாட வரும்பொழுதில் அவரை   ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 

கோவிலுக்குள் அவர் நுழையும்போது வழிபாடுகள் நிறைவுற்றுக் கதவு அடைக்கப்படுகிறது! .
‘ஆழ்வாருக்கோ மிகுந்த மனவருத்தம்.சந்நிதி வாசலில் நின்றபடி  கெஞ்சிக்கொஞ்சிப்பார்க்கிறார் ரங்கனை. ரங்கன் செவி சாய்க்கவில்லை.கடைசியில் கோபத்துடன் பத்துபாடல்களைப்பாடுகிறார். அன்பும் பாசமும் கொண்டவர்களின்மீதே வரும்  தார்மீகக்கோபம்.

இந்த திவ்யதேசத்தில்  தேவரீருடைய திருமேனி என்ன நிறமுடையது எனக்கேட்கிறார்.

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையும் திருமேனி
இன்ன வண்ணம் என்று காட்டும் இந்தளூரிரே/


என்று  ஆர்வமாய் விசாரிக்கிறார்.

இதிகாசங்களில் கூறியபடி க்ருதயுகத்தில்பாலின் வண்ணமாகவும் த்ரேதயுகத்தில் பொன் நிறமாகவும் துவாபரயுகத்தில் நீலமணி நிறத்துடனும் என்றைக்கும் நிலையான மேகவர்ணனாக கலியுகத்திலும் சேவை சாதிப்பீர். இங்கு எவ்வண்ணம் எனக்காண ஏங்குகிறேன் என்றார்.

பரிமளரங்கன்   சரியென  தன் திருமேனியை ஆழ்வாருக்குக்காட்டவேண்டாமோ? பெரிய மனிதர்களுக்கே உரிய  பிகு. கொஞ்சம்  அடியாரை அழவைத்து  வேடிக்கைபார்ப்பது பின் அணைத்து அருளுவதே ஆண்டவனின் வழக்கம்தானே!

ஆழ்வார்பெருமானும் பொறுமை இழந்தார்.

உமது வடிவழகைக்காட்ட மறுத்த இந்தளூர்ப்பெருமானே!
உம் திருமேனியை நீரே கட்டிக்கொண்டு வாழ்ந்திடும்  என்று  மங்களாசாசனம் செய்தார்.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!
திரைவிலகியது. தம் சயனக்கோலத்தை ஆழ்வாருக்குக்காட்டினார்  பெருமான்.
. திருமங்கை ஆழ்வாரின் அழகுத்தமிழைப் பரிமளன் பருக விரும்பியதே  அறிதுயிலின் நோக்கம்!


(பாசுரவிளக்கம் மேலும்  ஒரு  அன்பர் கூறியது இப்படி)

காசு - பொற்காசுதான்.
காசின் ஒளியில்
இந்த இடத்தில் இன் என்பது காட்டிலும் அதைவிட என்னும் பொருளில் வருவது.
காசு + இன் ஒளியில், பொன்னின் நிறத்தினும் மிக்கு ஒளிரும் உன்னுடைய வண்ணத்தைக் காட்டீர் !
எந்நிலையிலும் மாறாத மங்காத கரவாத ஒளி படைத்தது பொன். அதைக் காட்டிலும் மன்னிய ஒளி படைத்தவன். படைப்பு மாறி படைப்பு வரினும் மாறாத ஒளி. அது நித்ய விபூதியில் திகழும் ஒளியாய் இருந்தாலும் அதை இங்குத்தை சம்சார பூமியில் உள்ளவர்களுக்கு வாசியாகிய வேறுபாடு கருதாது காட்ட வேண்டித்தானே இங்கு வந்து நிற்கிறீர்! பின்னர் வந்து காண வேண்டி ஆசையுடன் வந்தால், காட்ட மறுத்தால் என்ன அர்த்தம்? அந்தத் திகழ்ச்சியை நீரே வைத்துக்கொண்டு வாழும் போம்! - என்று இறாய்க்கிறார் கலியன்.
வாசி வல்லீர் -- நித்ய விபூதி சம்சாரம் ஆகிய வித்யாசத்தைக் கடந்து வந்து நிற்க வல்லீர் 

***
மேலும் படிக்க... "வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!"

Sunday, November 02, 2014

தேனமரும் பூ மேல் திரு.

மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து
நற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பேர் இவர்க்கு
நின்றது உலகத்தே நிகழ்ந்து

என்கிறார் மணவாள மாமுனிகள்.
முதலாழ்வார்கள் மூவரில் இன்று பேயாழ்வாரின் திருநட்சத்திரம்ஐப்பசி சதயம்.

.பேய்க்காற்று பேய்மழை என்போம் அல்லவா அதிகமாய் காற்றும் மழையும் வரும்போது? அப்படித்தான் இந்த ஆழ்வாரும்  மால்மீது பேய்க்காதல்கொண்டவர் பேய்பக்தி பூண்டவர் அதனால் பேயாழ்வார்.கல்விகேள்விகளில் வல்லவர். பேரறிவுப்பெட்டகமாகவும் விளங்கிய பெருமைக்கு உரியவர்.
அல்லும்பகலும் ஆண்டவனின் அருளமுதில் ஆழ்ந்து திளைத்திருந்தார்.


முதலாழ்வார்கள் மூவரும் மலர்க்கருவறைகளில் பூத்துவந்த தமிழ் மலர்கள்.
பொய்கைத்தாமரையில் ஒருவரும் திருக்கடல் மல்லையில் குருக்கத்திப்பூவில் இன்னொருவரும் திருமயிலை கிணற்றில் அல்லிமலரில் பேயாழ்வாரும் அவதரித்ததாக வரலாறு கூறுகிறது.

சேமமுடன் நெடுமாலைக் காணப்புக்குத்
‘திருக்கண்டேன்’ என உரைத்த தேவே! உன்றன்
பாமருவு தமிழ் மாலை நூறுபாட்டும்...’ என்று வேதாந்த தேசிகர் குறிப்பிடுகிறார்.

திருக்கண்டேன்  என ஆரம்பித்து..

சார்வு நமக்கென்றும் சக்கரத்தான் தண்டுலாய்த் 
தார்வாழ் வரைமார்பன் தான்முயங்கும் - காரார்ந்த 
வானமரு மின்னிமைக்கும் வண் தாமரை நெடுங்கண் 
தேனமரும் பூமேல் திரு

என முடித்த நூறு அந்தாதி  வெண்பாக்களையும்  அண்ணலுக்குக்காணிக்கையாக்குகிறார் ஆழ்வார் பெருமான்.
நாவாயில் உண்டே நமோ நாராயணா என்று
ஒவாதுரைக்கும் உரையுண்டே

எனப் பொய்கையாரும்
ஞானத்தால் நன்குணர்ந்து நாராணன்றன் நாமங்கள்
தானத்தால் மற்றவன் பேர் சாற்றினான்

எனப் பூதத்தாழ்வாரும்
நாமம் பல சொல்லி நாராயணா என்று
நாம் அங்கையால் தொழுதும் நன்னெஞ்சே

எனப்பேயாழ்வாரும் ஒரே கருத்தைப் பாடியுள்ளனர்

/திருக்கண்டேன் என நூறும் செப்பினான் வாழியே
சிறந்த ஐப்பசியில் சதயம் சனித்த வள்ளல் வாழியே
ருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்க்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருக்கிடவே இடைக்கழியில் நின்றசெல்வன் வாழியே

நேமிசங்கள் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணை இப்பெருந்தலத்தில் வாழியே!//

(ஆழ்வார்கள் வைபவம்  தொடரும்)

மேலும் படிக்க... "தேனமரும் பூ மேல் திரு."

Saturday, November 01, 2014

அன்பே தகளியாக..

பொய்கை ஆழ்வார்! பூதத்தாழ்வார்! பேயாழ்வார்!

(படம் நன்றி தினமலர்)

முதலாழ்வார்கள்: எனப்படும் 
இம்மூவரும் ஒரே ஆண்டில்அடுத்தடுத்த நாள்களில் பிறந்துள்ளனர்

ஐப்பசி அவிட்டமான  இன்று பூத்ததாழ்வார் திருநட்சத்திரம். 

 வேறு வேறு ஊர்களில் பிறந்த இவர்கள் எப்படி ஒத்த எண்ணமுடையவராய்இருந்தனர்மூவரும் ஒன்றாக பள்ளியில் படித்தனராஅதுதான் இல்லை இவர்கள்மூவரும் ஒருவரை ஒருவர் கண்டதுமில்லைகேட்டதுமில்லைஆனால் இவர்கள்மூவரின் நோக்கமும்சிந்தையும் எம்பெருமானைப் பற்றியே இருந்தன

அன்பே தளியா ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, – நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.அன்பைத் தகளியாகவும் ஆர்வத்தை நெய்யாவும் இன்புருகு சிந்தையைத் திரியாகவுங்கொண்டு எம்பெருமானுக்கு ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேனென்கிறார். செந்தமிழ்  பைந்தமிழ் தெரியும்  ஆழ்வார் பெருமானின் ஞானததமிழ் என்னவாக இருக்கும் புரிகிறதா!

இவர்களை ஒன்றாக இணைத்துஓரிடத்தில் இருத்திஅவர்களை இடித்து நெருக்கிஅவர்களின் பக்தி பாசுரத்தை ஒரே இடத்திலேயே கேட்டு மகிழ்ந்த நம் பெருமானின்அருளுள்ளத்தை என்னவென்று சொல்ல

மூவரும் ஒருவர் படுக்கலாம்  இருவர் அமரலாம்  மூவர் நிற்கலாம் என்றிருந்த அந்த குறுகிய இடத்தில்  நின்றபடி  இறைவனுக்குப்பாமாலை சாற்ற ஆரம்பிக்கின்றனர்.

'முதல் திருவந்தாதி'யில் பொய்கையார் -

       வையம் தகளியா வார்கடலே நெய்யாக
        வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
       சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
       இடராழி நீங்குகவே என்று 

என்கிறார்.


வையம் அகலாம், கடல் நெய்யாம் சுடரோன் விளக்காம். இது ஒரு சூரியோதயப்பாட்டு.

    'இரண்டாம் திருவந்தாதி'யில் பூத்தாழ்வார் -

       அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
       இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புகழ்சேர்
       ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
       ஞானத் தமிழ்புரிந்த நான். 


அன்பு அகல்  ஆர்வம் நெய் என்கிறார். இவர்கள் இருவரும் ஏற்றியவிளக்கில்..

    'மூன்றாம் திருவந்தாதி'யில் பேயாழ்வார் -

       திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
       அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
       பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்
       என்னாழி வண்ணன்பால் இன்று


என்று அருள்கிறார், ஆமாம் அன்பை அகலில் இட்டவுடன் ஆர்வத்தை நெய்யாக்கினதுமே இறைவன் உருகிவிட்டான். முதலாழ்வார்களுக்கு வந்து முன் நின்றுவிட்டான்!.

அன்பே மாதவம்!


மாதவன் என்கிற பெயரைசொல்லுஅதுவே போதும் என்கிறார் இன்றைய திருநட்சத்திரக்கார ஆழ்வார்!

ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
       எத்தும் திறமறிமின் ஏழைகாள் - ஓத்ததனை
       வல்லீரேல் நன்று அதனை மாட்டீரேல் மாதவன் பேர்
       சொல்லுவதே ஓத்தின் சுருக்கு

ஓத்து என்பது வேதத்துக்கான தமிழ்ச் சொல்.

    'ஏழைகளே, வேதத்தைப் படிக்க முடிந்தால் நல்லது. முடியாவிட்டாலும் பரவாயில்லை, மாதவனின் பேர் சொன்னால் போதும். அதுதான் வேதத்தின் சுருக்கம்!'மாதவன் என்ற பெயர் சொல்ல சாஸ்திர ஞானம்  எதுவும் வேண்டாம் ஆர்வம் ஒன்றிருந்தால்போதுமானது.

கடவுள் எங்கு இருக்கிறான் என்னும் கேள்விக்கு பேயாழ்வார் பதில் சொல்கிறார்.’நம் மனத்துள்ளான்” என்கிறார்...’யார் மனத்தில்?’ என்று நம்முள்  கேள்வி எழும் அல்லவா அதற்கு பதிலாக,
.
உளன் கண்டாய் நன்னெஞ்சே ! உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்

என்று அருள்கிறார்.

நிஜமாகவே  உள்ளத்தில் இருக்கிறானா அவனை எப்படிகண்டுகொள்வது என நாம் குழம்புவதைக்கண்டு  முயன்று தொழு நெஞ்சே’ என்று பாடுகிறார்!

முயற்சி திருவினையாக்கும் அல்லவா?

(ஆழ்வார் வைபவம்  தொடரும்)
மேலும் படிக்க... "அன்பே தகளியாக.."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.