Social Icons

Pages

Wednesday, April 30, 2014

துளசிகோபாலின் செல்லங்களைப்பற்றி.....
வானத்திடம் போய் சூரியனின் பெருமையை   பேசுவதுபோலத்தான் இருக்கும், இணைய மக்களிடம் வலை உலக ராணியான துளசிகோபாலைப்பற்றி   நான்.சொல்வது. ஆமாம் பின்னே, ஆயிரத்தி ஐநூறுக்கு  மேல் பதிவுகளை எழுதிக்குவித்துவிட்டு ஆரவாரமே செய்யாமல் இருக்கும் துளசி அவர்கள் எழுதியபுத்தகத்துக்கு நான் விமர்சனம் எழுதுவது அபடித்தான் இருக்கப்போகிறது! துளசி டீச்சர் (ரீச்சர்) என நூற்றுக்கணக்கான  இணைய மக்கள் அன்போடு அழைக்கும் அழகான அமைதியான உள்ளம் கொண்டவர் துலசி கோபால்.

. ஆனாலும்,  டாஃபடல்ஸ், ட்யூலிப்ஸ் செர்ரிப்ளாஸம்   போன்றுஅதிகம்  பூக்கள் மலரும் சியாட்டல் நகரில் துளசிமணம்  கண்டால் அதை உடன் அனுபவித்து எழுதுவதும் மனதுக்கு நிறைவுதானே!

அண்மையில்  சியாட்டல் நூலகம் ஒன்றில்   அந்த ஏராளப்பகுதியின் அழகான அலமாரிகளில்  தேடினால்  ஓரமாய் சின்னதாய்  தமிழுக்கு என்று ஏழெட்டுப்புத்தகங்கள்  இருந்தன

.கண்டேன் தமிழை  என்று கண்கள் துடித்தன!  அதிலும் துளசிகோபால் என்கிற பெயரைப் பார்த்ததும்  முதலில் அதைத்தான் எடுத்தேன்.. 2009லேயே  வந்தபுத்தகம்   ! Better late than never   என்பதுபோல  எழுதாமலே இருப்பதைவிட இப்போதாவது விமர்சனம் எழுத முடிகிறதே என  சின்ன மகிழ்ச்சி.

செல்லங்கள் என்றாலே எதை,யாரைப்பற்றி ஆசிரியர் சொல்லப்போகிறார் என ஓரளவுவிளங்கும்  ’என்செல்ல செல்வங்கள்’ என்றால்  அவைகள்மேல் ஆசிரியர்க்கு உள்ள மகாப்பிரியத்தை நன்குபுரிந்துகொள்ளமுடிகிறது.

“Until one has loved an animal, a part of one's soul remains unawakened.”   


.மதுமிதாவின் அருமையான முன்னுரை  புத்தகத்துக்குள் நுழைய நல்வரவு சொல்கிறது.

. வளர்ப்புப்பிராணிகளின்மீதுள்ள  அளவற்ற பாசத்தை  தனது எளிமையான  வார்த்தைகளால் துளசி அவர்கள் எழுதியவிதம் மிக நேர்த்தி..


வாழ்க்கைப்பற்றி அடிப்படையான உணர்வுகளை அன்பு, பரிவு, பாசம், அழகின் லயம் போன்ற தன்மைகளை குழந்தைகளுக்கு எந்தப்பள்ளிக்கூடமும் ஆழமாக கற்பித்துவிடமுடியாது. சுற்றி உள்ள வளர்ப்புபிராணிகள், பறவைகள், பூக்கள் கொடிகள் தான்  குழந்தைக்கு
\மௌனமாக ஆழமாக வாழ்க்கைபற்றிய நேசத்தைப்பிணைப்பை போதிக்கின்றன.

துளசியும் தன்புத்தகத்தில் மிக எதார்த்தமாக  தன் வாழ்வில்  இணைந்துகொண்ட  வளர்ப்புப்பிராணிகளைப்பற்றி  சொல்கிறார். அவைகளைப்பிரியும்போது  ஏற்படும் மனவலியை அவரது எழுத்துக்களில் உணரமுடிகிறது.

 நாய்கள் பூனைகளைப்பற்றி அவற்றோடு தான் இணைந்த வாழ்க்கையை நடந்த நிகழ்வுகள் மிக இயல்பாக சொல்லிக்கொண்டுபோகிறார். ஊரூராய் சுற்றியபோதிலும்   அவர் குடிபோன எல்லா இடத்துக்கும் நம்மையும் அழைத்துப்போகிறார் நம் மனசும் அவர் வளர்த்த செல்லம் போல  உடன் போகிறது என்றால்  அவருடைய எளிமையான எழுத்துநடைதான். என் தந்தை அடிக்கடி சொல்வார், ‘எழுதுவது என்பது வாசிப்பவரின்  கண்களோடு  போய்விடக்கூடாது மனதில் புகுந்து  சிம்மாசனமிட்டு அமரவேண்டும்.. அதற்கு வார்த்தைகளைத்தேடி வானத்திற்குப்போகவேண்டாம் .மனசில் அமர மனசால் எழுதவேண்டும்’ என்பார். துளசியின் எழுத்து மனத்திலிருந்து வருவதை  ஒவ்வொரு வரிகளிலும் காணலாம்.

அதிலும் ஏழுமாசம் கஷ்டபட்டு வளர்த்த அந்த  வாயில்லா ஜீவனுக்கு சுகவீனம்  வந்ததால்  ஊசிபோட்டுஅதன்  வலியை நிரந்தரமாய் நிறுத்திய காட்சியை    வாசிக்கிறபோதே மனம் பதைக்கிறது.

(திருகோபால் சாரின் மணிவிழாவில்  இடமிருந்து  மதுமிதா, அருணா சீனிவாசன், நான், நிர்மலா,  லஷ்மி தன்குழந்தையுடன்,  வல்லிமா--)

  நியூசிலாந்தில் வளர்த்தபூனைகள் விவரம்  படிக்க சுவாரஸ்யம்..

பூனைகளைப்பத்தினரகசியம் என் சொல்கிறார்..: வீட்டுக்கு யாரும் புதுஆட்கள் வந்தால் அவர்கள் நம்பிக்கை உகந்தவரா என பூனைகளுக்குத்தெரியுமாம் அப்படியாரும் வந்தால் நம்மோடு பூனையும் வந்து அறையில்  உரையாடல் நிகழ்வின்போது  உட்கார்ந்துஇருக்குமாம் எதிர்மறை எண்ணங்களோடு ஒருவர் வந்தால் ஒரு விதமான அதிர்வை அவை  உணருமாம் உடனே இடத்தைவிட்டு விலகிப்போய்விடுமாம் .

 எதிர்பாராபிரிவின் வேதனை... எத்தனை எத்தனை  செல்லங்களை வளர்த்து அவற்றுக்காக  பாடுபட்டிருக்கிறார் அவைகளின் நினைவுகளை மனசில் தேக்கிக்கொண்டு  எல்லாவற்றையும்  எழுதி இருக்கிறார் என்பதை வாசிக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

 கற்பகம் என்கிற கப்பு வும் கோபால கிருஷ்ணனையும்  என்னாலயே மறக்கமுடியாத அளவுக்கு  அவர்களை(அவைகளை)ப்பற்றி எழுதி இருப்பதை நீங்களும்தான்  வாசித்துப்பாருங்களேன்..


என்செல்ல செல்வங்கள்
 ஆசிரியர் துளசிகோபால்
சந்தியா பதிப்பகம்
 அசோக்நகர்
 சென்னை 83

-- 
மேலும் படிக்க... "துளசிகோபாலின் செல்லங்களைப்பற்றி....."

Monday, April 28, 2014

சியாட்டல்நகரின் சின்ன நயாகரா!

அமெரிக்காவில்  சியாட்டல் நகரம் இயற்கை அழகில் எழிலாகத்தான் இருக்கிறது காடு மலை ஆறு எரி என இயற்கைச்செல்வம்  பொங்கி வழிகிறது  காணுமிடமெங்கும் பச்சை கண்ணை அள்ளுகிறது.

மழைக்காதல் நகரமாக பல நேரங்களில் இருந்தாலும்  கிழக்குப்பகுதியைப்போல  கடும் குளிர் இல்லை. 
நல்லவெய்யில் அடித்த நேற்றைய பொழுதில்  சியாட்டல்நகரின் பிரபலமான    Snoqualmie Falls  என்னும் நீர்வீழ்ச்சிக்குப்போனோம்..
அடேயப்பா போகிறவழியிலேயே  எங்கும் பச்சை  எதிலும் பச்சையின் ஆட்சியைக்கண்டோம்(அரசியல் கண்டிப்பாக இல்லை)\
சிறு சிறு வளைவுகளில்   ஆங்காங்கே   பசுமையான காட்டுப்பகுதிபோல  இருக்குமிடத்தின் நடுவில்  தனித்தனியாக பங்களாக்கள் தென்படும்  மில்லியண்டாலர் பணக்காரர்களாம்! நாமெல்லாம்  தெருவுல ஒரு வீட்டில் இருப்போம் இவங்க ஒரு  வீட்டிற்கு    ஒருதெரு ஓடுகிறது.!

வளைந்துவளைந்து செல்லும் பாதை என்று செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாட்டில் வருமே அப்படிப்பட்ட பாதைகளில் சுகமான  பயணம். அரைமணியில் அருவியின் பக்கம்அடைந்துவிட்டோம்.. அதிகம் நடக்க சிரமமில்லாமல் அருகிலேயே  அந்த அருவி ஹோஓஓ என்று இரைச்சலுடன்  காட்சி அளிக்கிறது 

 .’ நலமா? அமெரிக்கா  வந்திருக்கும் ஷைலஜாக்கு நல்வரவு’என்று மழைச்சாரலாய்  அருவி என்முகத்தில்  தெளித்து  விஜாரித்தது..ஊருக்குக்கிளம்ப இருக்கறப்போ இயற்கையாவது நமக்கு   பன்னீர் தெளிக்கிறதே என சின்ன மகிழ்ச்சி:)
ஜூனியர் நயாகராதான்! அதே  வேகம் வீழ்ச்சி.(கனடாவும் போய்  மெயின் நயாகரா பார்த்து வந்துட்டேன்  என்பதை  எப்படி மறைமுகமா சொல்றேன் பாருங்க:) அமெரிக்கா வந்தும் அமரிக்கையா  இருக்கக்கூடாதா  என யாரோ முணுமுணுக்கிறாங்க:)

 டன் டன்னாக  மலைமேலிருந்து பால் அண்டாவைக்கவிழ்ந்ததமாதிரி அப்படி  ஒரு  வெண்நிறம்!  400அடிக்கு நீரை தொபுகடீர் என தள்ளிவிடுகிறது. சுத்தி  200அடிஉயரத்துக்கு மரமெல்லாம் கூட்டம்கூட்டமாய் தினம் இந்தக்காட்சியை வேடிக்கைப்பார்க்கிறது. 

(ஷைலஜா ரெஸ்டரண்ட்  அருவிக்குப்பின்னாடி பாருங்க:)

க்ராஆஆங் என கத்திக்கொண்டு அருவிக்குப்பின்னால் காட்டுப் பாதையில் ரயில் ஒன்று  ஓடிக்கொண்டிருந்தது. நல்ல சினிமாப்பாட்டுக்கு படப்பிடிப்பு நடத்தக்கூடிய  லோகேஷன்!  நீர்வீழ்ச்சியை  வேடிக்கைப்பார்க்க   கூட்டம்  வருவதும் போவதுமாய் இருந்தது. 

 ரொம்பப்பெரிய பிக்னிக் ஸ்பாட் இல்லையெனினும்  ஓரிருசின்னப்பூங்காக்கள் இருக்கிறது .  சாப்பிட மரமேஜை பெஞ்சுகள். கிஃப்ட்ஷாப் ஒன்று.. 

அப்புறம் மறந்துவிட்டேனே நீர்வீழ்ச்சியின் அருகேயே   ஷைலஜா லாட்ஜ் என்று  போர்டு பார்த்ததும் திகைப்பானது.. என்னடாது  கடல்கடந்தும் நமக்கு  ரசிகர்களா என் பெயரில் ஹோட்டலா என புல்லரித்தது:)  மறுபடி சரியாப்பார்த்தேன்..  Salish Lodge and Spa (with restaurant) iஎன்றிருந்தது! 


அருவிக்குப்போற வழில நான்..

__________________________________________________________________________________
படங்களைப்பாருங்க  சின்ன நயாகாரா என நான் பேர் வச்சது சரியா சொல்லுங்க:)

 ஒருபடத்துல நீர்வீழ்ச்சிக்குப்பின்னாடி   என்பேர்மாதிரி ஏமாத்தின  ரெஸ்டாரண்ட்  இருக்கிறது.


-

மேலும் படிக்க... "சியாட்டல்நகரின் சின்ன நயாகரா!"

Wednesday, April 23, 2014

மழைநகரில் இசை மழை!

சியாட்டில் தமிழ்சங்கமும் சியாட்டல் நகரத்தின் பிரபல கீதாஞ்சலி இசைக்குழுவும்  இணைந்து நடத்திய11வது ஆண்டு  மெல்லிசைநிகழ்ச்சி ஏப்ரல் 19ம்தேதி மாலை
யூனிவர்சிடி ஆஃப் வாஷிங்டனில்   ஏறக்குறையஆயிரம்பேர் அமரக்கூடிய  "Kane hall" அரங்கினில் அமர்க்களமாக நடந்தது .
 
பல நூறு தமிழ் முகங்கள்! அத்தனைபேரையும் அயல்நாட்டில் ஒரேசேர ஒரே இடத்தில்பார்க்கையில்  தமிழ்நாட்டில் இருப்பதுபோலவே இருந்தது!
.
சூபர் சிங்கர்  ப்ரகதியும்,  ரவியும் நிகழ்ச்சியின் சிறப்பு பங்கேற்பாளர்கள்.

.ப்ரகதி யின் குரலில் இன்னமும்  இனிமைகூடி உள்ளது. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன  பாடலுடன்  உள்ளே நுழைந்தார்.பிறகென்ன  இசைமழைதான்!

பார்க்கவும் SPB மாதிரி இருந்தசுரேஷ் தன்   குரலில்  என்காதலி  என்ன செய்யபோகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ..என உருக்கமாகப்பாடவும் அனைவரும்  நெகிழ்ந்தனர்.
 
.மேடைமுழுவதும் இசைக்கருவிகள்  இசைக்கலைஞர்கள்.(அமெரிக்கர்கள் சிலரும் இதில் அடக்கம்) சாக்ஸோபோன் வாசித்தவரும் ஃப்ளூட்வாசித்தவரும்  பாடலுக்கு மேலும்  சிறப்புச் சேர்த்தனர் எனினும் அனைவரின் பங்கும் அவர்களை  மேடையில் அறிமுகப்படுத்தியவிதமும்  சிறப்பானது


.

தனியார்தொலைக்காட்சிகளுக்கு   ஈடாக  இங்கும்  மைக்ரோ சாஃப்டில் பணிபுரிகிற இளைஞர்கள் யுவதிகள்  காம்பியரிங்கில்  கலக்குகிறார்கள். அந்நியமண்ணில் இருக்கும் உணர்வேதெரியாத  அழகுத்தமிழ் கொஞ்சுகிறது.
 
நடுநடுவே   ஆடியன்சை உற்சாகப்படுத்த  சிலபாடல்வரிகளை பாடகர்கள் தங்களுடன் பாடவும் வைப்பது புதுமை. 
நீதானே என் பொன் வசந்தம் பாடலை  ப்ரகதி பாடுகையில்  இருக்கையில் இருந்தபடியே  ஓரிருவரிகள் இணைந்துபாட  மைக்கைக்கொண்டுவந்து கொடுத்தார்  நிகழ்ச்சித்தொகுப்பாளர் (அழகிய) லதா !  (விஜய்டிவி டிடி போல  குறும்பும் இனிமையுமாக  நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு சென்றார்)

 மேடைக்குக்கீழே ஆடவும் அழைக்க  பலர் குறிப்பாக  சிறுமிகள் ஆடிய ஆட்டம் அரங்கிற்கு களை சேர்த்தது. சிங்காரி சரக்கு பாடலுக்கு மேடை மீதே பலர் ஏறி ஆட ஆரம்பித்துவிட்டனர்!உற்சாக நயாகாராவை அரங்கம் கண்டது உண்மைதான். 

 அங்கே..மேடைகலைஞர்களை  ஊக்குவிக்க  கைத்தட்டலுடன் விசில் வேறு!  ஆஹா  எங்கே போனாலும் நம் தமிழர்களின்  அளவுகடந்த உற்சாகமும்  மகிழ்ச்சியும்  பார்க்கவே பரவசம்.. ப்ரகதி வேறு அடிக்கடி இந்தமாதிரி  சியாட்டல் நகரமக்கள்மாதிரி  இப்படி  உற்சாகமாய்  எங்களைஊக்கப்படுத்தியவர்களைப்பார்த்ததே இல்லை என பாராட்டிக்கொண்டே இருந்தார். அறிமுகப்பாடகர்கள் பாடகிகள் அனுபவசாலிகள்  சிறுவயதினர் என பலரகங்களில் பலர் பாடினார்கள். அனைவரையும்  குழுவில் ஏற்று பயிற்சி கொடுக்கும்  திரு எல்மோ  பாராட்டுக்குரியவர். அமெரிக்கர்கள் சிலர் ராஜாவின் பாடல்களுக்கு  அனுபவித்து  வயலின் வாசித்தனர். 


மழைநகரமான  சியாட்டலில் வெளியேயும் மழை, அரங்கின் உள்ளேயும்  இசைமழை!  

இந்த நிகழ்ச்சி  கல்விக்கான அறப்பணி  இதுபற்றிவிவரம் இதோ..
Asha is a non-profit organization that is dedicated to bringing about socio-economic change in India primarily through education. We pride ourselves on being an action group that disburses 100% of donations to our partner groups in India.
The Seattle chapter of Asha, formed in December 1994, actively supports development initiatives in health care and livelihood, care for people with special needs, and gender issues in addition to education related projects
Support A Child (SAC) program makes it possible for an individual to sponsor the cost of education or total living expenses for one underprivileged child in India.

இடைவேளையின்போது  ஆதரவற்ற குழந்தைகளுக்கான  கல்விப்பணிக்குஉதவப்பலர்முன்வந்தனர்.ஒருகுழந்தைக்கு ஆண்டுக்கான செலவான 250டாலர்(இந்தியமதிப்பில் 15000ரூபாய்க்குமேல்) என்றகணக்கில்  அதனை அன்று 100க்கும் மேற்பட்டவர்கள்  மேடையில் நன்கொடையாக அளித்து அயல்நாடு வந்திடினும் அயராத  ஈகை குணம் கொண்டதமிழர்களின் மதிப்பை உயர்த்தினர்.மேலும் விவரங்களுக்கு..


--
மேலும் படிக்க... "மழைநகரில் இசை மழை!"

Wednesday, April 16, 2014

அந்நியமண்ணின் அழகுப்பூக்கள்!


பூலோகமே இதுதானா!
(மேலே வானம்  கீழே மலர்கள்!)

அமெரிக்காவில் சியாட்டல் நகரத்தில் ஸ்கஜிட்  என்கிற  இடத்தில்   வருடாவருடம் ஏப்ரலில் ட்யூலிப் மலர்க்கண்காட்சி நடக்கிறது. ..பார்த்தால்குக்கிராமம்  போல  இருக்கிறது அந்தப்பகுதி!


(குக்கிராமத்து வீடு இது:))


இதுவும்  கிராமத்துவீடுதான்!!!  ஆனால் அங்கே  இருக்கும் தனித்தனி வீடுகள்  அரண்மனைபோல இருக்கின்றன .எல்லார் வீட்டு வாசலில்  பெரிய புல்வெளி  ஓரமாய்  ட்யூலிப்ஸ் அணிவகுப்பு. எல்லாம்  ஒரே உயரத்தில்  இருப்பது தனிச்சிறப்பு!


இது  daffodils  பூக்கள்.

Skagit Valley tulip festival.  என்கிறார்கள். மலர்கள் மலர்வதைப்பண்டிகை என்கிறார்கள்  பாருங்கள்!

ஊரில்  நுழையும்போதே  எல்லா இடங்களிலும் ட்யூலிப் மலர்கள்  வரைந்த  பானர்கள் . ஓரிடத்தில்  பாலத்தின் கீழ் இருந்த கல் சுவர் நெடுக நம் ஊரில்  சிலைகளைப்பதிப்பதுபோல  கற்பூக்களாய் ட்யூலிப்ஸ்!

(நான் மலர்களோடு  தனியாக ஏன் இங்கு நின்றேன்?(அப்பவாவது  கொஞ்சம்  அழகுமலரக்குப்பக்கத்தில் வருவோமா என்றுதான்:):)

மனிதர்களும் கார்களும் ஒரே எண்ணிக்கையில்  இருக்கும் இடம் அமெரிக்காவாகத்தான் இருக்கும்:) அத்தனை கார்களுக்கும் பார்க்கிங் வசதி செய்திருந்தாலும்  அதையும் மீறி  கார்கள் படையெடுப்பு! ஸ்ப்ரிங் ப்ரேக்  என விடுமுறை வேறு பள்ளிகளுக்கு.ஆகவே குடும்பமாய்  வந்துவிடுகிறார்கள். எல்லா வாகனங்களையும்  நிறுத்தியாக வேண்டுமே ஆகவே..

அந்த சிறு ஊரின் சின்ன  சாலையின் இருபுறமும் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே மண்சாலையில்  நிறுத்த அனுமதிகொடுத்தார்கள்.  ஒரு செமீ  காரின் டயர்பாகம் வெள்ளைக்கோட்டை மீறி ப்போனால் அதற்கு போலீஸ்(நம் மக்கள் செல்லமாய்’மாமா;என்கிறார்கள்.பெண்போலீசுக்கு’மாமி’) கார்மீது  சர்ரென  ஒரு தாளைக்கிழித்து ஒட்டுகிறார்கள்.’டிக்கட்’டாம்! அதாவது அபராதம்! 

.
திறந்தவெளியில்  களிமண் பூமியில் சரளைக்கற்களைத்தார்காலிகமாகக்கொட்டி  இருந்தார்கள். மொபைல் டாய்லெட்டுகள( வாசலில்  நீளமான  க்யூ)
.’அக்கட லேது’என்ற சுந்தரத்தெலுங்குக்குரலுடன்,’அல்லி நோட்ரீ’என்ற  கன்னடம் கேட்டதும்  காதில்  ஹனி பாய்ந்தது!5டாலர் நுழைவுவாயிலில்   கட்டணம் வசூல்செய்ததும்  வலதுகை மணிக்கட்டுப்பக்கம்  கை முத்திரை வைக்கிறார்கள் அதுவும் ட்யூலிப்ஸ் மலர் சின்னம்தான்!  

திறந்தவெளியில் நம் கண்முன் ஹோவென  மலர்ந்து சிரிக்கின்றன ட்யூலிப்  பூக்கள்..எத்தனை  மலர்கள்! எத்தனை நிறங்கள்! சிவப்பு வெள்ளை  மஞ்சள் வயலட் மெஜந்தா மஸ்டட்  மெரூன்  பர்ப்பிள் ஆரஞ்சு  ரஸ்ட் இன்னும் பல நிறங்களில்! எல்லாம்  சின்ன தாமரைப்பூ  சைசில் பெரும்பாலும் இருக்கின்றன.  வண்ணபல்புகள் எனலாம்! 

 மலர்ந்தும்மலராத பாதிமலர்கள்  கூட  பார்வைக்கு விருந்தாக இருந்தன..  பாத்திபாத்தியாய் கட்டி ட்யூலிப்ஸ் வயல்களை  அமைத்திருக்கிறார்கள். சிலமலர்கள் இரட்டை வண்ணங்களில்  சட்டென அதில் அணில்  முதுகின்மீது ராமர்போட்ட கோடுகள்போல  இருக்கும்  ட்யூலிப்சின்   ஆளுமை கண்ணைக்கொள்ளை அடிக்கிறது! பாத்திகளுக்கிடையே நின்றும் அமர்ந்தும் படங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் பார்க்கவருகிறவர்கள்.. பரந்த நிலப்பரப்பு அல்லவா அதனால்  பல்லாயிரம் ஜனங்கள் அங்கே  நடந்துபோகையில் எந்தவித  இடிபாடோ  கூட்ட கசகசப்போ கிடையாது.  பர்கர்  பாப்கார்ன்  முதல்  கோக்  போன்ற பானங்கள் வரை கொஞ்சம் அதிகப்படிவிலையில்   அந்த பூத்தோப்பில்  உணவுக்கடை  ஒன்றில்  கிடைக்கிறது.

இதுவும் டாபிடல்ஸ் பூக்கள்.

ட்யூலிப்ஸ் செடிகள்  விற்பனைக்கும்கிடைக்கிறது.. நாலு பல்பு(மொட்டு உள்ள அரையடி அளவிலான நான்கு செடிகள் ஒருபாக்கெட்டில்) வாங்கினால்  ஒண்ணூ ஃப்ரீயாம்! ஆனா ஒண்ணு 20டாலர்!’அம்மாடி  இந்தவிலையில் மல்லி முல்லை துளசி வாங்கிவச்சா பூஜைக்காவது ஆகும்’ என க்ரீன்கார்டு பெண்மணி முணுமுணுத்தார்!

அழகிய   அயல்நாட்டுப்பெண்கள் பலர்  மலர்கள் அருகே செல்லும்போது  ஓர் தமிழ் இளைஞர்,’மலர்கள்  நோக்கும் மலர்கள்” எனக்கவிதையாக ஆரம்பித்தவர்  ஏனோ தொடரக்காணோம் அருகில் நின்ற   மனைவியின் விழிமலர்க்கணைகள் வந்ததோ என்னவோ:):)

கிஃப்ட் ஷாப்பில்  டி ஷர்ட் கைப்பை டீ கப்   போட்டோஃப்ரேம் என எல்லாவற்றிலும் டுலிப்ஸ்மலர்கள்  முத்திரை பதிக்கின்றன. ட்யூலிப்ஸ் தவிர  டாபிடல்ஸ் மலர்களும் மஞ்சள் நிறத்தில்அழகாக  இருக்கின்றன ... ட்யூலிப்ஸ்  செடிகளுக்கு  கொஞ்சம்  தான் பேரழகென்று தலைக்கனம் இருக்கிறதுபோலும் மலர்கள்  எல்லாம் பெரும்பாலும் நிமிர்ந்தே  இருக்கின்றன் ஆனால்  டாஃபிடல்ஸ்  ரொம்ப  பணிவு. மலர்ந்ததும்  லேசாய்க்குனிந்துவிடுவதும் ஓர் அழகுதான்! 

பார்த்ததும்  வில்லியம் வோர்ட்ஸ்வர்த்தின்’  த டா·பிடல்ஸ்'  நினைவுக்கு வந்தது.

      I wandered lonely as a cloud
    That floats on high o'er vales and hills,
   When all at once I saw a crowd,
   A host, of golden daffodils;
   Beside the lake, beneath the trees..


தங்கள் அழகும் வாழ்வும் சிலகாலங்களுக்கு மட்டுமே என்றாலும்  சிரிக்கத்தவறுவதில்லை பூக்கள்!


மேலும் படிக்க... "அந்நியமண்ணின் அழகுப்பூக்கள்!"

Saturday, April 12, 2014

The Portrait of a Lady!

ஒரு பெண்மணியின் பிரதிபிம்பம்!
குஷ்வந்த் சிங்
The Portrait of a Lady!

தமிழாக்கம்..ஷைலஜா


-- குஷ்வந்த் சிங்கைத் தெரியாதவர் அனேகமாக யாரும் இருக்க முடியாது. நகைச்சுவைக்குப் பெயர் போனவர். சிறந்த பத்திரிகையாளர். இந்தச் சிறுகதையைப் படிக்கும் முன் அவரை  ஒரு நகைச்சுவையாளராகவே நோக்கினேன். இந்தக் கதை என்  நெஞ்சைத் தொட்டது. இதைப் பகிர்வதன் மூலம்  தமிழ் இலக்கிய உலகம் மறைந்த முது பெரும் இலக்கியவாதிக்குச்  செலுத்தும் அஞ்சலியாகக் கருதுகிறேன்.
****

என்னுடைய பாட்டி எல்லோரையும் போல ஒரு வயதான பெண் தான். அவருடைய மூப்பும் முகச் சுருக்கங்களும் எனக்கு இருபது வருடங்களாகப் பரிச்சயம். சிறு வயதில் அவர் மிகவும் அழகாக இருந்ததாகவும் அவருக்கு ஒரு கம்பீரமான கணவர் உண்டு என்றும் பலர் கூறக்  கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இருக்கமுடியுமா?  என்ற கேள்வி எனக்குள் எழும் போதெல்லாம் சிரிப்புத்தான் வரும். நம்ப முடியவில்லை.

அதோ, தாத்தாவின் ஒரு புகைப்படம் புத்தக அலமாரிக்கு மேலே தொங்குகிறது. பெரிதாக தலைப்பாகையும் தளர்ந்த சொக்காயும், மார்பை மறைக்கும் வெண்மையான நீண்ட  தாடியுமாக அவரைப் பார்க்கும் போது அவருக்கு நிச்சயம் நூறு வருடம் இருக்கும் என்று அடித்துச் சொல்லலாம்! அத்தனை மூப்பு!

அவருக்கு ஒரு மனைவியும் குழந்தைகளும் இருந்திருப்பார்களா?

பாட்டி இளமையாகவும் வசீகரமாகவும் இருந்ததாகச் சொல்வது உண்மைக்குப் புறம்பாகச் சொல்வது போலப் புலப்படுகிறது.  சிறு வயதில் பாண்டியும் பல்லாங்குழியும் விளையாடியதாகச் சொல்வது சிந்துபாத் கதை படிப்பது போல் வேடிக்கையாக இருக்கும்.

குட்டையான சற்றே கூன்விழுந்த வளைந்த உருவம். முகத்தின் எல்லா பக்கத்திலும் வளைந்து நெளிந்து ஓடும்  சுருக்கங்கள். இப்படியே இருபது வருடங்களாகப் பார்த்துப் பழகிய கண்களுக்கு அவருடைய இளமை உருவத்தை, ஊஹூம்... கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஒரு கையை இடுப்பில் தாங்கலாக வைத்துக் கொண்டு, மற்றொரு கையில் ஜப மாலையும், உதட்டில் முணுமுணுப்புடன் அவர் வீட்டை வலம் வருவது வழக்கம். எப்போதுமே அமைதியையும் தன்னிறைவையும் கொண்ட அவருடைய வெண்மையான முகத்தை பனி படர்ந்த குளிர் கால மலைக்கு ஒப்பிடலாம்.

நானும் பாட்டியும் நெருங்கிய நண்பர்களைப் போலப் பழகினோம். நகர வாழ்க்கைக்கு அடிமையான என்னுடைய அப்பாவும் அம்மாவும் என்னைப் பாட்டியிடம் கிராமத்தில் ஒப்படைத்து விட்டனர். அப்போது முதல் பாட்டி தான் எனக்கு எல்லாம். காலையில் வெகு சீக்கிரம் எழுப்பி விடுவது முதல் என்னை பள்ளிக்கு அனுப்பத் தயார் செய்வது வரை எல்லாவற்றையும் அவர் தான் செய்வார். என்னைக் குளிக்க வைத்து, ஆடை அணிவித்து, அலங்காரம் செய்யும் போதெல்லாம் அவர் உதடுகள் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டே இருக்கும். எனக்கும் ஆசை தான், அந்தப் பாடல்கள் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்ய வேண்டுமென்று.  அந்த இனிய குரலில் மயங்கிய பின் மற்ற எல்லாமே மறந்து போய்விடும். சிலேட்டு, பல்பம், சிவப்பு நிற பேனா, மை இத்தனையும் ஒன்றாக சேர்த்துக் கட்டி  மறக்காமல் பையில்  போட்டு விடுவார்.  காலையில் வெண்ணை சேர்த்த சப்பாத்தியை சர்க்கரையோடு ஊட்டி விடுவார்.   பள்ளிக்குச் செல்லும் வழியில் தெரு நாய்களுக்கு மறக்காமல் நேற்றைய இரவு மீதி சப்பாத்தியைப் போடுவார்..

எனது பள்ளியும், கோவிலும் அடுத்தடுத்து இருந்ததால் பாட்டி தினமும் என்னுடன் பள்ளிக்கு வருவார். நாங்கள் வராந்தாவில் பாடங்களைப் படிக்கும் போது பாட்டி ஆதிக்கிரந்தங்களை வாசித்துக் கொண்டிருப்பார்.   நாங்கள் இருவரும் வேலைகளை முடித்துவிட்டு வாசலுக்கு வரும் போது, எங்களுக்காகத் தெரு நாய்கள் காத்துக் கொண்டிருக்கும். சற்று முன் சாப்பிட்ட சப்பாத்திக்காக வாலை ஆட்டிக் கொண்டும் குரைத்துக் கொண்டும் வீடு வரை தொடர்ந்து வரும்.

ஆயிற்று. அப்பா சொந்தமாக டெல்லியில் ஒரு வீடு வாங்கி விட்டாராம். எங்கள் இருவருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது உடனே கிளம்பி வரச் சொல்லி.

அதை என் வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று தான் சொல்ல வேண்டும். நானும் பாட்டியும் ஒரே அறையில் தான் தங்கினோம். பாட்டி வழக்கமாக என்னுடன் பள்ளிக்கு வரவில்லை. என்னை ஒரு ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பிவிட்டனர். அருகில் கோவில் கிடையாது. பள்ளி விட்டு வெளியே வரும் போது தெரு நாய்களும் கிடையாது என்னுடன் துணைக்கு வர. இப்பொதெல்லாம் பாட்டி  வெளி முற்றத்தில் காத்திருக்கும் சிட்டுக்குருவிகளுக்கு அரிசியையும் கோதுமையையும் அள்ளி வீசுவார்.  அது மட்டுமேஅவருடைய தினசரி வழக்கமாகிவிட்டது அந்தப் புது வீட்டில்.

வருடங்கள் ஓடிவிட்டன. இப்போதெல்லாம் பாட்டியைப் பார்ப்பதும் பேசுவதும் அரிதாகி விட்டது. டெல்லிக்கு வந்த சில நாட்களுக்கு அவர் தான் என்னை எழுப்பி பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த உடன் பாட்டியிடம் அன்றைய தினம் பள்ளியில் சொல்லிக் கொடுத்த ஆங்கில வார்த்தைகளையும்,  புவி ஈர்ப்பு சக்தியையும் ஆர்கெமெடிஸ் தத்துவத்தைப் பற்றியும் பிரதாபிப்பேன். அதைக் கேட்டவுடன் அவர் முகத்தை சோகம் கவ்வும்.

இது என்ன படிப்பு வேண்டிக் கிடக்கிறது. அங்கே கடவுளைப் பற்றியும் கிரந்தங்களயும் போதிக்க மாட்டார்களா? என்று முணுமுணுப்பார்.

“பாட்டி, இன்றைக்கு பள்ளியில் ‘மியுஸிக்’ கற்றுத் தந்தார்கள்” என்றேன்.

அதை கேட்ட பின் பாட்டி ரொம்பவுமே பாதிக்கப்பட்டதாகத் தெரிந்தது. அவரைப் பொறுத்த மட்டில் மியுஸிக் ஒரு விரசமான சமாசாரம். ‘ அது எதுக்கு உனக்கு. . பிச்சைக் காரனுக்கும், போக்கத்தவனுக்கும் தான் அது ஒத்து வரும்.’  என்பது அவருடைய ஆழமான கருத்து. நம்பிக்கையும் கூட. அதற்குப் பிறகு என்னிடம் அவர் அதிகம் பேசவேயில்லை.

ஆயிற்று. பள்ளிப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்குச் செல்லத் தயாராகிவிட்டேன். எனக்கென்று தனியாக ஒரு அறை ஒதுக்கப் பட்டது. அங்கே தான் எங்கள் நட்பில் சிறிது தேக்கம் ஏற்பட்டது.  பாட்டி அந்தப் பிரிவை வேதனையுடன் ஏற்றுக் கொண்டார்.

இப்போதெல்லாம் பாட்டி சதா சர்வ காலமும் ராட்டினத்தில் நூல் சுற்றுவதிலும் பிரார்த்தனையிலும் காலத்தைக் கழித்தார். அதை விட்டு நகருவதில்லை. மதிய நேரத்தில் முற்றத்தில் உட்கர்ந்து கொண்டு சிட்டுக் குருவிகளுக்கு கோதுமை மணிகளை வீசுவதில் சிறிது நேரத்தைக் கழித்தார். அந்த நேரத்தில் நூற்றுக் கணக்கான குருவிகள் பறந்து வந்து வராந்தாவை முற்றுகையிடும்.   சில பறவைகள் பாட்டியின் காலைக் கீறும். சில உரிமையுடன் அவர் தோளில் அமரும். தலையையும் விடுவதில்லை. அந்த நேரத்தில் பாட்டியின் முகத்தில் புன்னகை அரும்பும். ஒரு போதும் அவைகளை அவர் விரட்டியதில்லை.

அந்த முப்பது நிமிடத் துளிகள் தான்  அவருடைய அன்றைய சந்தோஷமான தருணங்கள்.

கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு இப்போது வெளி நாடு செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. மேல் படிப்பு படிக்க வேண்டிய கட்டாயம். ஐந்து வருடங்கள் பாட்டியையும் பெற்றோரையும் பிரிந்து இருக்க வேண்டும் நிச்சயம் பாட்டிக்கு நான் வெளி நாடு செல்வது பிடிக்காது என்பது எனக்குத் தெரியும். என்னை வழி அனுப்ப ரயில் நிலையம் வரை வந்தார். புறப்படும் முன்  நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்தது ஆழமான அதிர்வைத் தந்தது.

இது தான் அவருடன் ஏற்படும் கடைசி ஸ்பரிசமோ என்று நினைக்கத் தோன்றியது. சே என்ன இது அசட்டுத்தனமான சிந்தனை!

நல்ல வேளை !அது ஒரு அசட்டுத்தனமான சிந்தனையாகவே முடிந்து விட்டது.

ஆம்.. ஐந்து வருடங்கள் கழித்துத் திரும்பி வந்த போது ரயில்  நிலையத்தில் வரவேற்கக் காத்திருந்தார்.  என்னைக் கைகளினால் தழுவினார்.

காலங்கள் மாறினாலும் அவருடைய பழக்கங்கள் மாறவில்லை. மதிய நேரத்தை வழக்கம் போல் அவர் சிட்டுக்குருவிகளுடன் கொண்டாடிக் கொண்டிருந்தார்.  அவருடைய கைகளில் அமர்ந்து கோதுமையைக் கொத்துவதும், பாட்டியின் மேல் முழுவதுமாகப் படையெடுப்பதும்..அப்பப்பா..!

அதென்னவோ தெரியவில்லை. புதிய மாற்றம் தெரிந்தது அவரிடம் அன்று மாலையில். அவருடைய உதடுகள் பிரார்த்தனை செய்யவில்லை.  மாறாக, அக்கம் பக்கத்து பெண்மணிகளைச் சேர்த்துக் கொண்டு தாள வாத்தியத்துடன் பாட ஆரம்பித்துவிட்டார்.  அந்த கோஷம் நீண்ட நேரம் நீடித்தது. அவர் விடுவதாக இல்லை. எல்லோருமாக சேர்ந்து அவரை வேண்டிக் கொண்ட பின் அவர் கோஷத்தை நிறுத்தினார்.  அந்தப்  பிரார்த்தனை.. ஊஹூம்.. உதடுகள் அசையக் காணோம்.

அடுத்த நாள் காலையில் பாட்டி எழுந்திருக்கவில்லை. இலேசான ஜுரம். டாக்டர் வந்து பார்த்து விட்டுப் போனார். ‘பயப்படவேண்டாம். சீக்கிரம் குணமாகிவிடும்’ என்று கூறி விட்டுப் போனார். ஆனால் பாட்டி அப்படி நினைக்கவில்லை.

“என்னை முடிவு நெருங்கி விட்டது. என்னை பிரார்த்தனை செய்ய விடுங்கள். யாருடனும் பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்றார்.

நாங்கள் அனைவரும் ஒன்றாக எங்களது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.  அப்படி எதுவும் உங்களுக்கு நிகழாது என்றோம் ஆணித்தரமாக.

எங்களது எதிர்ப்பை பாட்டி அலட்சியம் செய்து விட்டு ஜப மாலையுடன் பிரார்த்தனையில் ஆழ்ந்து விட்டார். அவருக்கு என்ன ஆயிற்று என்று  நாங்கள் சந்தேகிக்கும் முன்பே அவருடைய உதடு அசைவது நின்றது. ஜப மாலை விரல்களிலிருந்து நழுவி தரையில் உருண்டது. அவருடைய மரணத்தை எங்களால் உணர முடிந்தது
.
முறைப்படி அவரை தரையில் கிடத்தி, சில மணி நேரங்கள் மெளன அஞ்சலி செலுத்தினோம். பின் அவருடைய இறுதி சடங்குகளுக்குத் தயாரானோம்.


சிறிது நேரம் வெளி முற்றத்தில் அவருடைய பிரேதத்தை கிடத்தினோம். 

திடீரென்று நூற்றுக் கணக்கான சிட்டுக் குருவிகள் பாட்டியின் பிரேதத்தின் முன் வந்து அமர்ந்தன. எந்த விதமான சப்தமோ, கோஷமோ இல்லை.

அந்தப் பறவைகளைக் கண்ட உடன் அம்மா  கோதுமையும், அரிசியும் கொண்டு வர ஓடினாள் சமையலறைக்கு. பாட்டி எப்படி அரிசியையும் கோதுமையையும் இறைப்பாரோ, அதே மாதிரி பறவைகளின் முன் இறைத்தாள். அவை அவற்றை லட்சியம் செய்யவில்லை.

பாட்டியின் பிரேதத்தை ஈமச் சடங்குக்கு எடுத்தவுடன் ‘விர்’ரென்று அனைத்தும் பறந்தன
.
மறு நாள் காலை, வீட்டைத் துப்புரவு செய்பவள் இறைந்து கிடந்த தானியங்களைத் திரட்டி குப்பையில் கொட்டினாள்.
 >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ஏப்ரல்  ‘இலக்கியவேல்’ இதழில்  பிரசுரமாகி  உள்ள  கட்டுரை இது.போர்ட்ரெயிட் என்பதை  தமிழில்  சித்திரப்பிரதிமை அல்லது ஓவியம் என்றால் சரியாக இருக்குமோ?  பிரதிபிம்பம்  என்று  தலைப்புவைத்து அனுப்பியபின்  அது சரியா தவறா  என்ற குழப்பம் இன்னமும்! 

-- 

--
 
மேலும் படிக்க... "The Portrait of a Lady!"

Tuesday, April 01, 2014

கின்னஸ் புத்தகத்தில் என்பெயர்!

நாதஸ்வரம்’ மெகாத்தொடர் இயக்குனர் திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது!…


***********************************************(மெகாத்தொடர்களை  விடாமல்பார்க்கிறோமே  எங்களுக்கு  என்ன விருது என  மெகாலஷ்மி  அய்யனாவரத்திலிருந்து கேட்கிறார்)
*******************************************************
அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து 87 மணி நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்து சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். சாதனை செய்வதற்கு மன உறுதியும்,  விடாத முயற்சியும் மட்டுமே அவசியம். அந்த வகையில்,  கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக அமெரிக்காவில் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் போட்டி ஒன்று நடை பெற்றது. இதில்,  தொடர்ந்து 87 மணி நேரம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் வெற்றி பெற்று,  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்
****************************************************
(என்னைவிட்டால் தொடர்ந்து 100மணி நேரம் பார்ப்பேன் ஆனால் அரைமணிக்குமேல்   க்யூரியஸ் ஜார்ஜ் பார்க்க அம்மா அனுமதிப்பதில்லை இல்லாவிட்டால்  கின்னஸ் சாதனையை நான் என்  மூன்றுவயதிலேயெ முறியடித்திருப்பேன் என்கிறான் நான்குவயது சிறுவன் சதீஷ்)
*************************************
பெங்களூரை சேர்ந்தவர் சதீஷ் - ஹேமா தம்பதியின் மகன் ககன்(5). இவன் பசவேஸ்வரா நகரிலுள்ள ஒரு தனியார் பாடசாலையில் எல்.கே.ஜி. படித்து வருகிறான்.
இந்த சிறுவன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகக்குறைந்த நேரத்தில் அதிக தூரம் பயணித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.
பெங்களூரில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் ககன் பங்கேற்றான். இதற்காக, 39 கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
அதாவது சுமார் 69.2 மீட்டர் தூரத்துக்கு கார்கள் நின்றன. காரின் அடிப்பகுதிக்கும், தரைக்கும் இடையிலான உயரம் வெறும் 8 அங்குலம் தான் இருந்தது.
அவ்வளவு குறுகிய இடைவெளிக்குள் ககன் ஸ்கேட்டிங் உபகரணத்தை அணிந்து கொண்டு உடலை வில்லாக வளைத்து பயணித்து லாவகமாக வெளியே வந்தான். சுமார் 69.2 மீட்டர் தொலைவையும் வெறும் 28 நொடியில் கடந்து சாதனை படைத்தான்.
இதற்கு முன்பாக பெல்காமை சேர்ந்த ரோகன் என்ற 9 வயது சிறுவன் 24 கார்கள் அணிவகுத்து நிற்க அதற்கு அடியில் பயணித்து 47 நொடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. ககன் இந்த சாதனை மூலம் ரோகனை பின்னுக்குத் தள்ளிவிட்டு புதிய உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளான்.
சிறுவனின் திறமையை பார்த்து பார்வையாளர்கள் வியப்பு அடைந்ததுடன் அவனை வெகுவாக பாராட்டினார்கள்.
- **************
(போன ஜன்மத்துல கந்துவட்டிக்காரனா  இந்தப்பையன் இருந்திருக்கனும் இல்லேன்னா  இந்த சாதனை சாத்தியமே இல்லை என்கிறார் ( வட்டிக்குப்பணம்வாங்கி அதைத்திருப்பமுடியாத பெயரில்மட்டும்)  கோடீஸ்வரன்)

இப்படிப்பலர்ன் சாதனைகளைக்கேள்விப்பட்ட  எனக்கும்  ஏதும் சாதனை செய்ய ஆவல் எழுந்தது. 

அதனை  அமைதியாக நிறைவேற்றினேன்அமெரிக்காவும் வந்துசேர்ந்தேன்..உடன்பிறப்புகள்  தன்னடக்கச்செல்வமே  என்னை  வாயாற வாழ்த்துவது காதில்  விழுகிறது :)

ஆனால் கின்னஸ் புத்தகத்தில் என்பெயர் இடம்பெற்றதை நான் சொல்லாமல் போவது சரி இல்லை என மனசாட்சி உறுத்துகிறது.ஆகவே  சொல்லிவிட்டேன். சாட் சி இணைப்பில்   உள்ளபடங்கள்  தான்:)

முதல் படத்தில்  என்னை  அமெரிக்காவில் கின்னஸ் வழங்கும்  .பெரிய ஹாலில் அமரவைத்தார்கள்.  நானும் நம் இந்தியப்பண்பைக்கட்டிக்
காப்பாற்ற  சேலை அணிந்தே சென்றேன். அதைப்புகழ்ந்தவர்கள்  அடுத்து   2014ம்  ஆண்டில் வந்துள்ளகின்னஸ் புத்தகத்தை என்னிடம்  கொடுத்தார்கள்.

நானும் நன்றியை மட்டும் ஆங்கிலத்தில் சொன்னேன்  (அவங்க ஆக்சண்ட்  இன்னும் பிடிபடல  என்ன  சொன்னார்களோ என்று  புரிஞ்சாதானே?:)

கின்னஸில் எந்தப்பக்கத்தில் என்பெயர் இடம் பெற்றுள்ளது என அக்கறையும் ஆர்வமுமாய் விழுந்தடித்துக்கேட்பவர்களுக்காக  இந்தத்  தகவல்... அதாவது முதல்பக்கத்திலேயெ இருக்கிறது என் பெயர்  ஆமாம் புக் வாங்கினதும் அவங்க அவங்க பெயரை முதல் பக்கம்தானே எழுதிக்கொள்வோம்?:)

(இன்னி பொழுதுக்கு நம்மால முடிஞ்சது:)
மேலும் படிக்க... "கின்னஸ் புத்தகத்தில் என்பெயர்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.