Social Icons

Pages

Friday, September 14, 2007

மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோலம் செய்
துங்கக்கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத்தமிழ் மூன்றும் தா.

Photo Sharing and Video Hosting at Photobucket


ஔவையார் நல்வழியில் இப்படி ஒரு அருமையான பாடலை வினாயகருக்கு அருளி இருக்கிறார்.

பிள்ளையார், எளிமையின் தத்துவத்தை உணர்த்தவே அரசமரத்தடியிலிருந்து பஸ்ஸ்டாண்ட், கோர்ட் ,பள்ளி விளையாட்டுத்திடல்கள் என எல்லா இடங்களிலும் கோயில் கொண்டிருக்கிறார்.

18அம் நூற்றாண்டில் பேஷ்வாக்கள் ஆட்சிகாலத்தில் வினாயக சதுர்த்தியை ஒரு சமூகப்பண்டிகையாகக் கொண்டுவந்தார்கள் .ஆங்கிலேயர் ஆட்சிக்குப்பின் இது நின்றுவிட்டது. சமூக,மதப்பண்டிகையாக இதை
பால்கங்காதர திலகர் மறுபடி ஆரம்பித்துவைத்தார்.

அது தொடர்கிறது. மஹராஷ்ட்ராவில் இதனை மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.

கர்நாடகாவில் முதல்நாள் கௌரிபண்டிகை என கொண்டாடிவிட்டு மறுநாள் கணேசரை வரவேற்கிறார்கள்.

10ருபாய்மண்பிள்ளையாரிலிருந்து 12000ரூபாய்க்கு கிரீடம்தரித்து அலங்காரங்களுடன் ராஜகணபதி வரை என்று பிள்ளையார்கள் விற்பனைக்கு ஒருமாதம்முன்பே தயாராகிறார்கள்.

ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் நீரில்தான் கரைக்கிறார்கள் ப்ளாஸ்டர் ஆஃப் பாரிசில் செய்யபப்டும் விலைஉயர்ந்த பிள்ளையார் உருவங்கள் நீரில் கரைய அதிக நேரமாகிறது ;நீரில் அவைகள் பெரும்ரசாயன மாற்றத்தைஉண்டுபண்ணுகின்றன என பலர் கூறுகிறார்கள்.

ஆனாலும் மக்களுக்கு களிமண் உருவ மோகம் குறைந்துவிட்டது. களிமண் உருவங்கள் எளிதில்
நீரில்கரையும் அது நமது பழைய பண்பாட்டுவழக்கமும்கூட.
இதனைத்தடுக்க..

கல் அல்லது பித்தளை உலோகபிள்ளையாருக்கு வருடாவருடம் பூஜைசெய்து அதை நீரில்
சாஸ்திரப்படி முக்கிவிட்டு திரும்ப எடுத்துவைக்கலாம். அல்லது களிமண் உருவங்களையே விரும்பி வாங்கி பூஜையில் வைத்துப்பின் நீரில் கரைக்கலாம். இப்படியெல்லாம் சிலர் ஆலோசனை கூறுகிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து பெங்களூர்ருக்கு மூன்றுமாதம்முன்பே உருவங்கள் செய்யவந்திருக்கும் பீபஷ் பால் என்பவர் சொல்கிறார்..'நாங்கள் உலர்ந்தபுல்லில் கங்காஜலம் சேர்த்து களிமண்ணோடு பிசைந்து உருவங்கள் செய்வோம் இது கனம் குறைவாக இருக்கும்..புனிதமானதும்கூட..
பழமை கலாசாரம் மெல்லத் தேய்கிறது.. காகிதக்கூழில் செய்த உருவங்களுக்கு மதிப்புகுறைந்துவிட்டது. கணேசரை விதவிதமான் போஸில் பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்.

இந்தவருஷம் எனது பெரிய ஆர்டர் சிவாஜி தி பாஸ் ஸ்டைலில் ஒரு பிள்ளையார் செய்துதரவேண்டும் என்பது" என்கிறார் பிபாஷ் பால்.

சரி நாம் இப்போ தோப்புக்கரணத்துக்குவருவோம்..




ஆற்றங்கரையிலொ கோயிலிலோ பிள்ளையாரைக்கண்டதும் தலையின்முன்பக்கம் நெற்றியை ஒட்டிக் குட்டிக்கொள்கிறோமே ஏன்?

அறிவின் உருவாகத்தான் ஆனைமுகத்தனை நமது புராணங்கள்காட்டுகின்றன. பாரதத்தை வியாசர்
சொல்லச்சொல்ல தமது கொம்பையே எழுத்தாணியாக்கி ஒரேமூச்சில் எழுதி முடித்தவர் அல்லவா ?

வினாயகபெருமான் முன்புதலையில்குட்டிக்கொள்வது நமது அறிவாற்றலை வகைப்படுத்தும். நரம்புகளைத் தூண்டிவிடும் தோப்புக்கரணத்தை "இருபக்க மூளையையும் செயல்படசெய்யும் சூப்பர் ப்ரெயின்
யோகா "என்றுபுகழ்ந்திருக்கிரார் ப்ரானிக் ஹீலிங் சூப்பர் மாஸ்டரான சோவாகாக் ஸுயி.

இரண்டுகைகளாலும் காதைபிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும் எளிய வழிபாடு தோப்புக்கரணம்.
இது சிறந்த யோகாசனப்பயிற்சியும்கூட.

வளரும் குழந்தைக்கு படிப்பில் ஈடுபாடும் ஞாபகசக்தியும் அளிக்க இது பெரிதும் உதவுகிறதாம்
முளையின் வலது மற்றும் இடப்பகுதி இரண்டும் ஆற்றலும் அடைகிறதாம் .இதனால்தான் கடவுளுக்கு செய்யும் வழிபாடாக பண்டைகாலத்தில் நம்முனோர்கள் நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

பள்ளிகளில் பாடங்களை சரிவர புரிந்துகொள்ளமுடியாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இதனை தண்டனையாக தருவதும் இதற்குத்தான்.(நம்மில் எத்தனைபேர் தோ.க. போட்டிருக்கோம்?:))

நம் அறிவும் கூர்மையா ,பளிச்சுனும் இருக்கணுமா அதுக்கு தோப்புக்கரணம் போடலாமா?

சரியான முறைல போடணுமாம் அதை நான் கேட்டு தெரிஞ்சிட்டதை இங்க சொல்றேன்..

காலைல எழுந்து குளிச்சி கிழக்குநோக்கி நின்று மனசில வினாயகரை தியானிக்கணும்.

முதல்ல நாக்கை அடக்கணுமாம் !அதாவது நாக்கை மடக்கி மேலண்ணத்துல ஒட்டினாப்ல வச்சிக்கணும்.

வலதுகாதின் மடலை இடதுகை கட்டைவிரல்மற்றும் ஆள்காட்டிவிரல்ல பிடிக்கணும்.. இடது காதின்மடலை வலதுகையின் கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலினால்பிடிக்கணும்(கம்மல் போடும் பெண்கள் கவனம் கழட்டிவச்சிடுங்க)
மெதுவா மடல்களை அழுத்திக்கணும், பிடிமானம் இல்லாம நழுவிடக்கூடாது இல்ல அதுக்குத்தான்!

இடதுகை உள்புறமா வலதுகை மேல்புறமா இருக்கறது அவசியம். இப்போ
மெதுவா முச்சை உள்ளுக்கு இழுத்தபடி குந்தி( அர்ஜுனன் அம்மா இல்லீங்க) உக்காரணும் .பிறகு எழுந்திருக்கும்போது மூச்சை வெளியே இழுக்கணும் மீண்டும் மீண்டும் இதுபோல 7தடவை செய்ய ஆரம்பிச்சி 14வரை ஒருநாளைக்கு செஞ்சா நல்லது.
இரண்டுவேளையும்முடிஞ்சா செஞ்சா ரொம்பவே நல்லது..

உடல் உறுதியடையும்; மனம் அமைதிபெறும் இதெல்லாம் விஞ்ஞான ரீதில நிரூபிக்கப்பட்டு இருக்கு.

அறிவு, செல்வம், உடல்நலம் ,கலைகள் எல்லாம் சிறக்க, வேழமுகத்தானை வேண்டி தோப்புக்கரணம் போடலாமா?
மேலும் படிக்க... "மீண்டும் தோப்புக்கரணம் போடலாம்!"

Monday, July 16, 2007

எண்ணிரண்டு பதினாறுவயது!

எட்டுபற்றி எழுதசொல்லி டாக்டர் எப்போதோ எனக்கு அழைப்பு விட்டிருந்தார்.இப்போது அண்ணா கண்ணன் வேறு எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்துவிட்டார்! இனியும் சும்மா இருப்பது சரி இல்லை!

வலைப்பக்கம் வராமல் அடிக்கடி ஓரங்கட்டும் என்னை அவ்வபோது ஊக்கமளித்து எழுத வைப்பவர்கள் டாக்டர் விஎஸ்கேயும் கண்ணபிரான் ரவியும் ஆசிஃப் மீரானும் தான் ! நன்றி அந்த அருமை நண்பர்களுக்கு!


1.எட்டுவயசுல நடந்த ஒருநிகழ்ச்சி. ஸ்ரீரங்கம்கிழக்கு ரங்கா பள்ளிகூடத்துல படிச்சிட்டு இருந்தப்போ கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே
அதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.

அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை
வி஢லங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?

வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!

அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..

அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு
தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!

அய்யோ!

தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"

"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)

"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."

""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு
மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )

கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!

'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"

எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!

2
பத்துவயசுல ஒருநாள் கைதுறுதுறுத்தது.அப்பாவிடம்போய் 'விகடனுக்கு நான் ஒருஜோக் எழுதப்போறேன்' ன்னதும் இதையே பெரிய
ஜோக்காய் நினைத்து வீடே சிரித்தது. உடனே சீரியஸா யோசிச்சி ஜோக் எழுதி அது விகடனில் பிரசுரமும் ஆகிவிட்டது!என்ன ஜோக்குனு கேக்கறீங்களா?.ஒரு ஆளு சாமியார்கிட்ட போயி குருவே நான் உங்க சிஷ்யனா இருக்கட்டுமா என்று கேட்கிறான்.
குரு அதுக்கு "நீ இங்க ஆஸ்ரம்த்துல சேர்ந்து சீக்கிரமா எழுந்து கடினமா வேலைசெய்து பயிற்சி செய்யணும்,"அதுஇதுன்னு சொல்லிட்டே போனாரு
இவன் யோசிச்சான், "சிஷ்யனாகும்னா இவ்ளோ கஷ்டமா? அப்போ நான் குருவா இருக்கேனே!"என்றான்.

என்ன சிரிப்பு வரலயா? :) என்னவோ போங்க பத்திரிகை உலகில் நான் கால் பதிக்க இதுதான் காரணம்!

3
அப்போ 16வயசு...எண்ணிரண்டு பதினாறுவயதுன்னு பதிவுக்கு தலைப்பு வைக்கக்காரணம் இதைப்படிச்சா புரிஞ்சிடும்!!

ப்ளஸ்டூபடிக்கறப்போ ஆண்டுவிழா தினம் வருவதால் வழக்கம்போல வகுப்பை கட் அடிச்சிட்டு நாடக ரிகர்சலில் மூழ்கிட்டேன்.

நாடகத்துல எனக்கு18வயசு ரிக்ஷாக்காரபையன் வேஷம்.. எங்க அப்பாவின் நண்பர் நட் ராஜன் எனும் நட்டுமாமாஅப்போ பிரபலமேக்கப்கலைஞர் ..அவருகிட்ட ஆண் வேஷம் போட்டுகிட்டேன்..கட்டம்போட்ட லுங்கிகட்டி, லூஸா கருநீலக்கலர்ல ஷர்ட்டு முழங்கைவரை அதை மடிச்சிவிட்டுட்டேன்.நட்டுமாமா என் தலைமுடியை வளைச்சிஎன்னவோ இங்க அங்க பின் குத்தினாசர்ர்ர்ர்னு ஒருபாட்டிலேந்து ஏதோ திரவத்தை தலையில் பீச்சினார்.கமகமன்னு வாசனை!தலைமுடியை ஜோரா கிராப்பா மாத்தி கைல துண்டுபீடி(பத்தவைக்காததுங்க) கொடுத்து,
அவரோட கருப்புகலர் ஸ்டாண்டர்ட் கார்ல நிறைய சத்தத்தோட பள்ளிக்கூட வாசலில் என்னை கொண்டுவிட்டாரு. நேரா
எங்க சிநேகிதிங்க தங்கீ இருந்த மேக்கப்ரூமுக்குப்போனேன்.. அங்கே ஒருத்தியும் காணோம்..

கண்ணாடி முன்னாடிநின்னு லுங்கியமடிச்சிகட்டிட்டு வாய்ல வெறும்பீடிவ ச்சிட்டு நாடக டயலாக்கை சொல்லிப்பாத்தேன் "இப்போ இன்னாங்கற கீசிடுவேன் கீசி அக்காங்!.".

வாவ்!
நல்லா வர்தே:)

அவசரமா பாத்ரூம்போகவேண்டி இருக்கவும் அங்க இருந்த அட்டாச்டுபாத்ரூம்ல நுழைஞ்சேன். அஞ்சுநிமிஷத்துல
திரும்பவந்தா கதவைத்திறக்கமுடியல. பட்பட்னு கதவதட்டினேன் .யாரோ வெளில தாழ்ப்பாள் போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சி,
".அய்யோதிறங்க யாராச்சும்?" கத்தினேன்

சடால்னு கதவுதிறக்க,.என்னைபாத்து ஒருத்தி "அய்யோ பொண்ணுமாதிரி குரல் கொடுத்து ஏமாத்றான்.. பிடி இவனை.. லேடீஸ் ரூமுக்குவந்து கலாட்டாவா பண்றே?"

"யேயேய்! நிறுத்துடி நாந்தான்.."ன்னு மீசையை எடுத்து தலையை கலைச்சேன்.

"அடப்பாவி நீயா என்னடி இது பையன் மாதிரியே தத்ரூபமா மேக்கப்?"
எல்லாரும் சிரிச்ச்சாங்க, நாந்தன் சோகமாயிட்டேன். பின்ன திரும்ப எனக்கு யார் நட்டுமாமா மாதிரி மீசை ஒட்டி தலைல கிராப் அழகா செய்வாங்கன்னு..

அப்றோம் ஏதோ நானே சரி செஞ்சிஅன்னிக்கு நாடகத்துல நடிச்சி முடிச்சேன்.

4.நாடகம்னதும் சிலவருஷங்கள் முன்னே என் கணவரின் அலுவலக நண்பர்கள் எங்கள் வீட்டு மொட்டைமாடில வந்து நாடக ரிகர்சல் செய்தது நினைவுக்குவர்து. கர்னாடகாவின் அனைத்துதமிழ்நாடகமன்றங்களுக்கான நாடகப்போட்டி. என்கணவரின் நண்பர் சென்னையில் பெரிய நாடக ஆசிரியர்கிட்டேருந்து நாடகம் ஒண்ணூ கேட்டுவாங்கி இருந்தார். அன்னிக்குப் பாத்து ஹீரோயின் ரோல்ல நடிக்க இருந்தவர் ரிகர்சலுக்கு வரல.. என்னைச் சும்மா படிக்கவச்சி அவங்க உடன் நடிச்சி ரிகர்சல் நடத்தினாங்க ..நமக்கு பள்ளிகல்லூரிநாட்களில் க்ளாஸ் கட் அடித்து ட் ராமா நடத்திபழக்கமா அதனால உணர்ச்சிபூர்வமா படிக்கவும் பூரிச்சிபோயிட்டார் டைரக்டர்!

"நீங்களே அவங்களவிட நல்லா நடிக்கறீங்க நீங்கதான் ஹீரோயின்"னு என்னைஐஸ் வச்சி கட்டாயப்படுத்தி நடிக்கவும் வச்சிட்டாங்க.

நானும் கொடுத்த பொறுப்பை ஒழுங்கா செய்தேன் .

அன்னிக்கு நாடகவிழா பரிசு அறிவிப்புதினம். மொத்தம் 14நாடகங்கள்.நடித்த 30 பெண்களில் சிறந்த நடிகைக்கான பரிசினைஅப்போ அறிவிச்சி மேடைல கொடுக்கபோறாங்கன்னு கேள்விப்பட்டேன். எல்லாரும் தொழில்நடிகைகள்,நமக்கு எங்ககிடைக்கும்ன்னு நான் போகல.ஆனா என்ன ஆச்சர்யம் எனக்குத்தான் அந்தப்பரிசு .சிறந்த நடிகைக்கான பரிசு!!அதை இயக்குநர்என் சார்புல வாங்கிட்டுவந்து கொட்டறமழைல
வீட்டுக்குக் கொண்டுவந்து கொடுத்தாரு! ஒரெஒருமுறை வாங்கின அந்தப்பரிசோட நடிப்புக்கு நமஸ்காரம் சொல்லிட்டேன் ..அடுத்தமுறை பரிசோ,கல்லடியோனு ஒருபயம்தான்!!

5.ராஜீவ் காந்தி இறந்ததினம் வடக்கே ரயிலில்பயணம்,, ஒருகைல ராணிமுத்து..இன்னொருகைல கைமுறுக்கு.ஜாலியா இருந்த என்னை
திடிர்னு ரயில் ஒரு ஸ்டேஷனில் நிற்கிற போது கேட்ட கலவரக்குரல் துக்கிவாரிப் போட்டது.'ராஜீவ் காந்தி சுட்டுக்கொலையாம்"
ஜன்னல்களை மூடசொன்னார்கள்
.எல்லார்முகத்திலிம் பீதி. ரயில் மட்டும் மெதுவா ஊர்ந்துபோக ஆரம்பிச்சிது..என் பெட்டில எல்லார்முகத்திலும் பிரேதகக்ளை அங்க இங்க நடக்கற கலவரங்களைபற்றி அடுதடுத்த ஸ்டேஷனில் ஏறினவங்க சொல்றாங்க.. இப்போமாதிரி அப்போ செல்போன் வந்திருக்கவில்லை..விவரம் முழுமையாதெரியல்.என்னை அனுப்பிட்டு ஊர்ல கணவருக்கு என்ன ஆச்சோனு கலக்கம்.... போகபோற ஊர்ல அவங்களுக்கு நான் எப்படி வரபோறேனோன்னு பயம்(இதெல்லாம் பின்னாடி தெரியவந்தது).

ஆனா என்னாச்சுனா எங்க ரயில்மெதுவா போனதே தவிர கலவரம் ஏதுமில்லை என்ன சாப்பாடுதான் பிரச்சினைஆனது இருந்த இட்லி சப்பாத்தி சப்ஜிகளை ஆளுக்குக்கொஞ்சமாய் பிச்சி சாப்ட்டு பசியை அடக்கி என்ன ஆனாலும் எல்லாரும் ஒத்துமையா இருந்து பாதுகாப்பாய் போவோம்னு உறுதி எடுத்துட்டோம். அதிகம்தெரியாத நிலைமல ரயில்சிநேகிதங்கள் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாய் பேசி கடைசிவரை துணையாய் இருந்தது மறக்கவே முடியாது. அப்போ எனக்கு கலவரத்துல என் உயிர் போயிடுமோன்னு லேசா மரணபயம் வந்தது..ஆனா பாருங்க இப்படி தமிழ் மணத்துல நான் எழுதணும்னு இருக்கே? விதி வலியது!(உங்களுக்கு):)

6. 1996ல் விகடனில் பவழவிழாபோட்டிவச்சாங்க..படக்கதை தொடர்போட்டிக்கு நான் அனுப்பிவச்சது தேர்ந்தெடுக்கப்படு கலைவாணர் அரங்குல விகடன் ஆசிரியர், வாலி,வைரமுத்து சுஜாதா, இன்னும் பலபெரிய தலைகள் முன்பு அந்தப்பரிசினை வாங்கினது மறக்கவே
முடியாது...அன்றிலிருந்து பிறகு சில பத்திரிகைகளில் ஜெயித்த போட்டி சேர்த்து இன்றுஇணையத்தில் வ வாச போட்டி மற்றும் அன்புடன் கவிதைப்போட்டிவரை பரிசுகள் வாங்குதில் ஒரு தனி
மகிழ்ச்சி எனக்கும் உடனே ட் ரீ ட் கேட்டு உடுப்பிகார்டன் ஹோட்டலில் ச்சனா படூரா பட்டர்ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் சாப்பிடும் என் நட்பு வட்டத்துக்கும்!!

7 பெங்களூரின் ஒரு கன்னட அமைப்புடன் சிலவருஷங்களாக நாங்கள் பக்கத்து கிராமங்கள் சென்று சமூகசேவை செய்துவரோம். என் பங்கு இதில்கொஞ்சம்தான் இங்கே அதை சொல்லிக்கொள்வதும் பெருமைக்கு இல்ல,.அங்கேபோனப்போ நடந்த நிகழ்ச்சியை பகிர்ந்துகொள்ள.
ஒரு தெருலபோயி பெண்கல்வி,பெண்சிசுகொலை டாகுமென்ட்ரி படம் போட்டுக்காமிச்சி கன்னடத்துல அவங்ககிட்ட நிறைய அறிவுரை சொன்னோம்.சுமார் ஆறுமணிநேரம் வெய்யில்வேற நாக்கு உலர்ந்துபோச்சு.பக்கத்துல டீகுடிக்க கடை ஒண்ணும் காணோம்.புறப்பட இருந்த போதுஒரு பெண்மணி.'வந்துட்டு சும்மா போறீங்களே இவ்ளோதூரம் பேசிட்டு?" என்றாள்.நான் அவ்சர அவசரமா,"சிரமம் எதுக்கு உங்களுக்கு டீ காபி ஏதும் வேணாம் மோர் போதும்'ன்னேன் அதுக்கு அவள்,'ஆங்...மோரா? இத்தனை நேரம் பேசி எங்கள உக்காரவச்சி எங்கநேரம் விரயம் ஆக்கினதுக்கு நீங்க எங்க எல்லார்க்கும் பணம் கொடுக்கணும்னு சொல்லவந்தேன்'னாளேபாக்கணும்..அசந்துபோயிட்டேன் நான்!

8 முடிவா என்னைப்பத்தி சொல்லணும்னா அன்பானவள் கொஞ்சம் அறுவையானவள்(நட்புவட்டதுக்குதெரியும் என் அறுவைமகாத்மியம்)
சமையல்பாட்டுபடிப்பது எழுதுவது அரட்டைஅடிப்பது என எல்லாம் சேர்ந்த கலவையில் ஷைலஜா.சுயப்ரதாபம் அலர்ஜி! வேற வழி இல்ல இங்க அதத் தான் எழுதணுமாமே?:)

எல்லாரும் அருமையா அழகா எழுதி இருக்காங்க நானும் ஏதோ எழுதிட்டேன் காவிரிபிரவாகம் மாதிரி.. கொஞ்சம் எல்லாரும்
எட்டிப்பாத்துட்டுப்போங்க ப்ளீஸ்!


இதுவரை எழுதாத அந்த 8பேரை இங்கு அழைக்கிறேன்!

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும் (Players start with 8 random facts about themselves.), அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டு பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டு பேரை அழைக்க வேண்டும்.
மேலும் படிக்க... "எண்ணிரண்டு பதினாறுவயது!"

Monday, June 04, 2007

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....

'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி' எனும் பாட்டைக் கேட்கும்போது வருங்காலத்தூண்களான இளைய தலைமுறை பற்றிய நம்பிக்கை நமக்கு அதிகம் வருகிறது.. ஆனால் பிள்ளைகளைப் பெற்ற பெருமை
கொண்ட பெற்றோர்கள் அவர்களை 'நாம் நல்ல பிள்ளைகளாய் வளர்க்கிறோமா?' என யோசிக்க வேண்டியதருணம் இது..

ஊடகங்களில் மிக வலிமையானது திரைப்படம் எனும் சினிமா.அடுத்தது தொலைக்காட்சி எனும் டிவி .


அபூர்வமாய் அவ்வபோது வரும் சில நல்ல திரைப்படங்கள் அரங்குகளைவிட்டு விரைவில் சென்றுவிடுகின்றன.தரமற்ற படங்களை அறிந்தும் அறியாத பருவத்தினர் பார்ப்பதால் பலசமயங்களில் இதன் தாக்கம் எந்த அளவிற்கு மனித உறவின் மேம்பாட்டினை சிதைக்கிறது என்பது பற்றி சிந்திக்கும்போது கவலைதான் மேலோங்குகிறது.

நிறையமுதலீடு போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பொழுதுபோக்கு அம்சத்தினை சேர்த்துத்தான் கொடுக்கவேண்டி இருந்தாலும் அளவுக்கு மீறினால் அவை நஞ்சாகிவிடும் நிலமை உண்டு. பயங்கரவாதம் வன்முறைகாட்சிகள் கொண்ட படம் வெற்றி பெற்றால் அதே
பாணியில் தொடர்ந்து படங்கள் வருகின்றன.



கிராமீயமணம் வீசும் படம் ஒன்று அண்மையில் வந்தது.நல்ல படம்தான் ஆனால் க்ளைமாக்ஸில் எதார்த்தம் என்ற பெயரில் கொடுமையான தேவை இல்லாத வக்கிரத்தைப் புகுத்திவிட்டனர்.

இன்னொருபடத்தில் ஒரு சிறுவனை சித்திரவதைசெய்யும் காட்சி, கண்களைக்கூச வைக்கிறது.

செல்போன் மற்றும்பணத் தேவைக்காக உடன் பழகிய மாணவனிடமிருந்து அவைகளைப்பறித்து அவனைக்கொலையும் செய்துவிட்ட நான்குமாணவர்கள்
சொல்கிறார்கள்'நாங்க சினிமா பாத்துதான் கத்துகிட்டோ ம் மோப்ப நாயை எப்படி ஏமாத்தறதுன்னு'என்கிறார்கள்.

இன்னொருபடமும் சமீபத்தியத்ததுதான் அதில் அத்தனை பெண்களும் முட்டாள்களாய் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.பார்க்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாய் காட்சிகள்.

பெரும்பாலும் படங்களில் கதாநாயகன் முரட்டுத்தனமாய், போக்கிரித்தனமாய் இருப்பான்,கதாநாயகியைப் பார்த்து,'நல்லா பேசுவீங்கடி கடைசில ஓடுவீங்கடி..'என்று சொல்வான்.தமிழ்க்கலாசாரம் பற்றிய அறிவுரையை காதலிக்கு சொல்ல,, அரைகுறை ஆடையுடன் நின்று கேட்கும் அவள் உடனே சேலைக்கு மாறிவந்து தேவையின்றி வெட்கப்படுவாள். அல்லது கண்ணீர் விடுவாள். ஏன் பெண் இயல்பாகவே இருக்கமாட்டாளா?

இதெல்லாம் ஒரு பானை சோற்றின் ஒருசில பருக்கைகள் தான்.

குடும்பம் அன்பு பாசம் நாட்டுப்பற்று தியாகம் இவற்றைவைத்து எடுக்கப்படும் படங்கள் ஓடாதா ? அல்லது முன்பு அவை வெற்றியை அடையாமல்தான் போயினவா?

உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் பெரும்பான்மையான படங்கள் ஆண்-பெண் உறவுகளை சிறப்பாகச் சித்தரிப்பவைகள்தாம்.தந்தை- மகள் அண்ணன் -தங்கை காதலன்- காதலி கணவன் -மனைவி தோழன்- தோழி என்று அழகிய உறவுகளில் நிகழும் அன்பை , சிக்கலை ,துயரங்களை அந்தப்படங்கள் இயல்பாக வெளிப்படுத்தும்.

உலக சினிமாவில் ரோமன்ஹாலிடே,(Roman Holiday) வென்ஹாரி மெட் சாலி (When Harry met Sally),கிராமர்வெர்ஸஸ் கிராமர் (Kramer vs Kramer)
போன்ற படங்கள் அற்புதமான காவியங்கள்.தமிழிலும் முள்ளூம் மலரும் ரோஜா நெஞ்சில் ஓர் ஆலயம் அவர்கள் இந்திரா போன்று சில படங்களில் பெண்பாத்திரத்தை செதுக்கி இருப்பார்கள்.

தமிழ்ப்படங்களின் போக்கும் வடிவமும் இன்றைய நிலையில் மாறிவருவது இளையதலைமுறையினரை எங்கு கொண்டுசெல்லும்?



தொலைக்காட்சியை எடுத்துக்கொள்வோம் இது அரசாட்சி செய்யாத இல்லங்களே இல்லை எனலாம். பலநேரங்களில் திரைப்படம் எனும் சிங்கத்தையே இந்த யானை பிளிறி அடக்கிவிட்டிருக்கிறது.

முன்பு நொய்டாவில் எலும்புக்கூடுகளைக்கண்டுபிடித்ததின் தொடர்ச்சியாக 'இங்கே தோண்டுகிறார்கள் அங்கே தோண்டுகிறார்கள்'என பல செய்திகள் வெளிவந்தன. இவையெல்லாம் வளர்ந்த மனித மிருகங்களின் வக்கிர புத்தியன்றி வேறென்ன? இவையெல்லாம் அடுத்துவரும் ஐஸ்வர்யாராய் அபிஷேக்பச்சன் திருமணச்செய்தி போன்றவற்றில் அடிபட்டுப்போய்விடுகின்றன. கிரிக்கெட், புதுசினிமாவரவு, சிறப்புதினங்களுக்காக உலகவரலாற்றில்முதன்முறையாய் புத்தம்புதியதிரைப்படம் அளிக்கும் தொலைக்காட்சிபெட்டியின் அறிவிப்பில் சகலமும்
காணாமல்போய்விடுகின்றன.

தொலைக்காட்சி சீரியல்கள் எல்லாம் எப்படி இருக்கின்றன எனப்பார்த்தால் அங்கும் எப்போதாவது அத்திபூத்தாற்போல நல்ல நாடகங்கள்;நிகழ்ச்சிகள்! பலநேரங்களில்,மருமகள்மேல் கோபம் மாமியார்மீதுகோபம் குடும்பத்தில் கலகம் சண்டை பிரச்சினை பழிவாங்குதல் முறையற்ற காதல்.இப்படித்தான் தொடர்கள் செல்கின்றன.. இவற்றை பெரியவர்களும் நடுத்தரவயதினரும் பார்க்க்கும் பொழுது உணர்ச்சி வசப்படுகிறார்கள் எனில் இளையவர்கள்மற்றும் குழந்தைகளின் கதி என்ன?

கதையோ சீரியலோ சினிமாவோ அதை எழுதுபவர்களுக்கும் நடிப்பவர்களுக்கும் அதனைச் சார்ந்த அத்தனை பேருக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கிறது.

"அதெல்லம்பார்த்தா நாங்க துட்டு சம்பாதிக்கமுடியுமா,டிஆர்பி ரேட்டிங்ல முதல்லவரணுமே? "என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள்.

'டிஆர்பி ரேட்டிங் எகிறணும் விளம்பரம் குவியணும்' சீரியல் தயாரிப்பாளர்கள் இப்படியே சிந்திக்கின்றனர்.




சீரியல்களில் முழ்கி இருக்கும் தந்தை மற்றும்தாய்க்குலங்களாஇவற்றைப் பார்க்கிறார்கள்? விடலைப் பருவத்தினர்தான் பெரும்பாலும்
காண்கிறார்கள் இவர்களை நம்பியே தயாரிப்பாளர்களும் தாங்கள் எடுக்கும் படங்களில் எப்படியெல்லாம் காதலிக்கலாம் கழுத்தறுக்கலாம் என்று சொல்லிக்கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மீடியாக்களும் அதைச் சார்ந்தவர்களும் சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடக்கவேண்டும். சமூகப்பொறுப்பு எல்லாருக்கும் இருக்க வேண்டும்.வன்முறை ஆபாசம் பெண்களை அவமதித்தல்போன்றவைகளை எதிர்க்க தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான மகளிர் அமைப்புகள் முன்வரவேண்டும். நல்லவனற்றிர்க்கு ஆதரவு தந்து தீயனவற்றிர்க்கு ஒவ்வொருவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.நல்ல நியதியை இளையதலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டும். "'என் மகன் டாக்டரானால் போதும்;இஞ்சினீயர் ஆனால் போதும்" என்னும் பெற்றோர்கள் அவர்களை நல்லமனிதர்களாய் வளர்க்க முதலில் நினைக்க வேண்டும்.

இதை நிலைநிறுத்த, நாம் நிலத்திலும் விதையிலும் பாசனத்திலும் கவனம் செலுத்தவேண்டும். அவ்வபோது களை எடுக்க வேண்டும்.

அப்போதுதான் விஷச்செடிகளை அறுவடை செய்யும் நிலைவராது.
*************************************************************************************சற்றுமுன் போட்டிக்கு-சமூகம் எனும் தலைப்பிற்காக....
மேலும் படிக்க... "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...."

Thursday, May 24, 2007

உன்னை நினைக்கையிலே....

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - ஒலிக்கவிதைப் பிரிவு
நடுவர்கள்: கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்
=========================================================


இரண்டாம் பரிசுக்குரிய கவிதை
(ஒலிவடிவம் கீழே இணைப்பாக உள்ளது)




உன்னை நினைக்கையிலே
உல்லாசத் துள்ளலில்
முன்நிற்கும் நெஞ்சத்தை
எந்த முகப்படாமிட்டு
மறைப்பதென்று தவிக்கையிலே
மலையாக உன் நினைவே
முன்னின்று எதிர்கொள்ளும்.


முட்டிமுட்டிக் குடிக்கும்
கன்றினைப்போல்
உன்னைச் சுற்றிச்சுற்றியே
நினைவு.


வழிப்பாதை இடைஇடையே
பொதி சுமக்கும் கழுதையின்
முரண்டாய் பிடிவாத நினவுகள்,
ஆக்கிரமிக்கும் தன் ஆளுமையை.

ஒப்பனைக்குப் பின்னும்,
என் கண்ணில்
உன் முகமே தெரிவதாக
தோழி சொல்கிறாள்.


உன்னில் நானா
என்னில் நீயா
யாரோடு யார் கலந்தோம்?

ஒன்றும் ஒன்றும் இரண்டுதான்
பள்ளிப்பாடக் கணக்கில்
ஒன்றும் ஒன்றும் ஒன்றேயானது
நம் பள்ளியறைக் கணக்கில்.


நீயும் நானுமில்லாத
உலகைக் கண்டேன்
அங்கு காற்றே இல்லை
நீயும் நானுமில்லாத
நிலவைப் பார்த்தேன்
அதில் ஒளியே இல்லை
நீயும் நானுமில்லாத
கவிதை புனைந்தேன்
அதில் ஜீவனே இல்லை.


- ______________________
அன்புடன்..சுட்டி இங்கே உள்ளது.

http://groups.google.com/group/anbudan



unnai_ninaikkaiyilE
unnai_ninaikkaiyil...
Hosted by eSnips
மேலும் படிக்க... "உன்னை நினைக்கையிலே...."

Thursday, May 17, 2007

வீதிச் சித்திரங்கள்!(கவிதை)

மேனிக்கு நீலம்.
மயிற்பீலிக்குப் பச்சை.
கழுத்துமணி மாலைக்குச் சிவப்பு.
ஊது குழலுக்குப் பழுப்பு.
கேசத்திற்கு முழுதும் கறுப்பு.
புன்னகைப் பற்களுக்கு வெள்ளை.
நவரத்தின மாலைக்கு
நவ வர்ணக் கலவை.
பட்டாடைக்கு இளம் ஊதா.
மேலங்கிக்கு மெலிதான மஞ்சள்.

வர்ணச் சாக்கட்டிகள் கொண்டு
வடிவான சித்திரம் தீட்டிவிட்டு
விரித்த சாக்குத் துணி மீது
விழப்போகும் சில்லரைக்காய்
வறுமையின் வர்ணத்தை
விழிகளில் தேக்கியபடி
தன்னை வரைந்து முடித்த
வீதிச் சித்திரக்காரனுடன்
வெய்யிலில் ஸ்ரீகிருஷ்ணரும்!
மேலும் படிக்க... "வீதிச் சித்திரங்கள்!(கவிதை)"

Sunday, May 13, 2007

யாமறிந்த பெண்களிலே......

அன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா?

'அவசரசமையல் வேலையினிடையே
அள்ளிஎடுத்து
அம்மாகொடுத்த
முத்தத்தில்
இப்போதும் மணக்கிறது
அக்மார்க்நல்லெண்ணையும்
அம்மாவின் வாசனையும்.'
*************************************************************************************
அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம்
சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும்
கிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம்
என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.
நல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே?

யாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் அன்பானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.

தாரம் கூட தாய்க்குப் பின் தானாம்!

வளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம் என்றும் குழந்தைகளே!

புதுமுகமாய் பேந்தப்பெந்தவிழித்துக்கொண்டு பூமிக்கு வரும்போதே அழுகைஆலாபனையோடு சுவாசிக்க ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு
ஜீவனை வாரி அணைக்கும் அன்புக்கரம் தாயினுடையது.அந்த அன்பும் அரவணைப்பிலுமான அந்த முதல் ஸ்பரிசம் குழந்தைக்கு லேசான மனஅமைதியைத் தருகிறது.

மூன்றுவயது வரை தாயோடு தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து
பழக்கவழக்கங்களைபோதிப்பது வரை முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.

பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.

அம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா! மகிழ்ச்சி அதிகமானால் அம்மா!

அமெரிக்கா வந்த இடத்தில் நேற்று பார்க்கில் 5வயது கொரியன் சிறுவன் தனியே விளையாடிக்கொண்டிருந்தவனிடம் எதேச்சையாய் 'உங்கள்கொரியமொழியில் அம்மாவை எப்படி அழைப்பீர்கள்?' எனக்கேட்டேன் அவன் 'அம்மா' என்றான் அப்பாவிற்கு அப்பாவாம்.
ஆச்சர்யமாய் இருக்கிறது. அம்மா எனும் வார்த்தை மட்டுமே உலகின் பல பகுதிகளில் ஒரேமாதிரியாகவும்,சற்றே வித்தியாசமாய் ஒலிக்கிறது!

சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
*********************************************************************************************************

'ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்க, அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன?'ன்னுகேட்டார்

'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'

என்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்?ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.

சாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு? அப்பா போனதும் அவர் நினைவாய் இங்கேயே சில வருஷமாய் இருக்கும் உனக்கு வயசாச்சும்மா ...தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்கநம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம்
கட்டிவச்சிட்டேன்..இங்கே உனக்கு குளத்துல குளிச்சிப்பழக்கமே,அதான் உனக்காக ஸ்விம்மிங்பூல் இருக்கற ஃப்ளாட் வாங்கிட்டேன்.
நீ குளிக்கலாம் அங்க போயி...உபந்ந்யாசம், கச்சேரிக்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா
வச்சிப்போம்மா' அப்படீன்னு சொன்னேன்

'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா..உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'

'பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ஢ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'

'சரிப்பா'

நானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம் ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும்! ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ?'

ரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து, சின்னதலையணைவச்சி
போர்வைகொடுத்தேன்.

'அம்மா!எல்லாம் வசதியா இருக்கா? ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல
போயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி டாக்ஸி வச்சீட்டு ஊருக்குபோகலாம் என்ன?'

தலை அசைத்து அம்மா படுத்தாள்.

நான் போயிமேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்!

திடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3 .இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.

கீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,
'என்னம்மா எழுந்திட்டியா சீக்ரமா?'

'இல்லடா நான் தூங்கவெ இல்ல'

'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயா?காத்து வரலயா? பசிச்சிதா? போர்வை கனமா இல்லையா?'

'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்துதூங்க்றபோ ராத்திரிகீழே அடிக்கடி விழுந்திடுவே.. தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'

அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'
************************************************************************************************

வாழ்க்கையில் சில உண்மைநிகழ்வுகள் கற்பனைக்கதையைவிடவும் மனதை பாதிக்கக்கூடியவை.. எனக்கு இது அப்படித்தான் இருக்கிறது, உங்களுக்கு?
மேலும் படிக்க... "யாமறிந்த பெண்களிலே......"

Friday, April 20, 2007

கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)


கவலைப்படாத காரிகையர் சங்கத்தின் முதலாம் ஆண்டுவிழா!

சவிதா வர்ஷா பவித்ரா வினயா சுமேகா என ஐவர் குழு (பஞ்சவர்ணக்கிளி சின்னம் )கொண்ட கலகலப்பான சங்கத்தின் ஆண்டுவிழாவிற்கு சிறுவசிறுமியரைக்கொண்டு நிகழ்ச்சிநடத்த திட்டமிட்டார்கள்.

அதுபற்றி ஐவரும் ஒன்றுகூடி பேச ஆரம்பித்தார்கள்

'நல்ல ஐடியாதான்..பசங்கள இப்போவே ரெடிசெய்யணும்..விழாக்கு இன்னும் பத்தேநாள்தான் இருக்குது ,,.'

"அதெல்லாம் நம்ம பசங்க கற்பூரபுத்தி டக்குனு சொன்னதப் பிடிச்சிப்பாங்க"

'தமிழ்லயே நடத்தணும்..நோ இங்கிலீஷ் ப்ளீஸ்!'

'sure'

'yup!'

'ஆமா விழாவுக்குத் தலைமைதாங்க யாரை அழைக்கலாம்?'

'நம்மகாலனியின் ஆஸ்தானஜோதிடர்வாசுதேவனை?'

'ஐயோ! அவர் விழாநடத்தற மேடை,வாஸ்துப்படி சரி இல்லை..அது இதுன்னு ஏதாவது சொல்லுவார்..'

'வாசுதேவனா வாஸ்துதேவனா?'

'புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஆதிகேசவன் எப்படி? நம்மகாலனில கிராமத்து பாணில ஒருவீட்டைக்கட்டி வச்சிருக்காரே பார்த்தியா சவிதா?"

'பாக்கபோனேனே? அப்போதான் அவரு வாம்மா இதான் என் கனவுஇல்லம்..பாத்துப்பாத்து கட்டி இருக்கேன்..புதுமைப்பெண்ணான நீ இங்கவந்ததுல ரொம்ப மகிழ்ச்சி.வா வா வீட்டுக்கு உன்னை அழைச்சிப்போறேன்..நுழைஞ்சதும் முத்தம்...'அப்படீன்னாரே பாக்ணும்?'

'அய்யோ 2muchya!அநியாயம்..'

'நானுமமுதல்ல பயந்துதான் போனேன் அப்புறமாத்தான் வீட்ல நுழஞ்சதும் வரும் முற்றத்தை அவர் அப்படிச்சொன்னார்னு அதைக்காட்டினதும் புரிஞ்சிபோனது'

'பழைய பெருமை பேசியே அவர் போரடிச்சிடுவார் ஆதிகேசவன் வேண்டாம்டி'

'காலனிமக்கள்வேணாமே புதுசா வெளியே இருந்து அழைக்கலாமே?'

'எனக்கு ஒரு ஐடியாடி..'

'என்ன என்ன?'

'வருத்தப்படாத வாலிபர்சங்கம்னு ஒண்ணு இருக்காம் ..'.

'wow! young guys,right?'வர்ஷா ஜொல்லுவிட்டா.

'hope so....அவங்களுக்கும் ஆண்டுவிழாவாம் அவங்களைஅழைக்கலாமா?'

'எல்லாரும்வருவாங்களா, busy pple!விழாபோட்டின்னு மும்முரமா இருக்காங்கபோல?'

'வருவாங்க..மலேசியாடூர் போகறதுக்குமுன்னடி அவங்களை அமுக்கணும் ..சிங்கம் அவங்கசின்னம்..அதனால அவங்க வரப்போ சிங்கநடைபோட்டு சிகரத்திலேறு பாட்டு வரவேற்புல போட்டு அலற வைக்கணும்..'

' நம்ம புத்திர பக்கியங்கள் சிங்கங்கள் முன்னாடி அசிங்கமா நடந்துக்காம இருக்கணும்..வாலுங்க...ம்ம்..முதல்ல அவங்க வருவாங்களா விசாரி. வர்ஷா தான் கல்யாணம் ஆகாத பொண்ணு வேலைக்கும் போறா..மத்தபடி நாம வெட்டியா இருக்கொம் அவங்க அப்படியா?'

'அங்கயும் ஒருவெட்டி(பயல்)இருக்காரு கேட்டுப்பாக்றேன்..'

'அட ராமா! பேரே வெட்டியா?'

'ஆ!ராமான்னதும் நினைவுக்கு வர்து..இராம்னு ஒருத்தர் வவாசங்கம்ல இருக்கார்..ஒருவாட்டி லால்பாக்குல பாத்திருக்கேன்.. சங்கம் சார்புல அவரை தலைம தாங்க வரச்சொல்லிக் கேட்டுப்பாக்றேனே?'


'ஹேய்ராம்? எப்படி இருப்பாரு?looks smart?'


'வர்ஷா..பார்வையிலே இராம், பாலகன்; எழுத்திலே பிதாமகன்.'

'விக்ரம்படமா?'

'ச்சீ இல்லடி.பிதாமகன் பீஷ்மர் மாதிரி ஞானம் அறிவு!'

ஓ?

சவிதா போனில் இராமைப்பிடிச்சிட்டா!.

அடக்கத்துடன் மறுத்துப்பின் சவிதாவின் அன்புத்தொல்லைதாங்காம வவாச வின் இளம் சிங்கம் ரரயலு இராம் அழகியதமிழே நிகழ்ச்சிக்குத் தலமை தாங்க ஒப்புக்கிட்டாரு
*******************************************************************************

சுரேஷ் கொஞ்சம் இந்த சேரைஅப்டிபோடுங்க.டேபிள்மேல சுருக்கம் இல்லாம விரிப்பு போடுங்க..'ஐபாட்'ல பாரதி இல்லேன்னா பாரதிதாசன் பாட்டா போடுங்க...விழாவுக்கு வரவங்க அசந்துபோகணும்..'

'சவிதா!இது ஓவராத் தெரில்ல உனக்கு? கா.க .ச ல எண்ணி 5பேரு.. பஞ்சவர்ண'கிலி'கள்.உங்க குடும்பநிகழ்ச்சியை விழாஅது இதுன்னு சொல்லி நோட்டீஸ் அடிச்சி காலனிமுழுக்க வினியோகம் செஞ்சி, இதுக்கு உப்புமா கேசரி காபினு என்னவோ பொண்ணுபாக்கவரமாதிரி....ஒண்ணூம் நல்லா இல்ல..'

'உங்க திருவாய்ல எதுதான் நல்லாருக்குனு வந்திருக்கு ? '

'ஒரு கார்ஷெட்டை விழா ஹாலாமாத்தும் துணிச்சல் நெஜம்மா உங்க கவலைபடாத காரிகையர்சங்கத்துக்குதான் வரும்..'

'சங்கம் கொஞ்சம்பிரபலமானா டொனேஷன் கேக்கலாம். நாலுகாசுவரும் அப்றோம் கம்யுனிடிஹால் காமராஜர் ஹால்லுனு போவோம் இப்போ நீங்க மானத்தைவாங்காம கொஞ்சம் கோஆபரேட் செய்யுங்களேன் ..'


வழக்கமாய் ஜீன்ஸிலும் சூடிதாரிலும்,சல்வாரிலும் இருக்கும் க கா ச. உறுபினர்கள்எல்லாரும் சேலைகட்டும் பெண்களாய் மாறிய அரியகாட்சியை ஆச்சரியமாய் பார்த்த சவிதாவின் மாமியார்," இதுக்காகவே தினம் ஆண்டுவிழா நடத்தலாம்டியம்மா" ன்னு சொன்னாங்க

'தலைவர் வந்திட்டார் !வந்திட்டார்!'

பவித்ரா கூவவும்,

இராம் வெட்கமும்தயக்கமுமாய் கைகுவித்தபடியே மேடை ஏறிவந்தாரு.சேர்ல உக்காந்தாரு.

ஐபாட் அப்போ பார்த்து,' மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா?'ன்னு பாடவும் சவிதா சுரேஷை முறைச்சா.

தமிழ்ப்பாடல்கள் (ஆங்கில மொழிமாற்றம் செஞ்சிதான்)எல்லாம் ஜெராக்ஸ்ப்ரதி எடுத்து மேடையில் ஒருக்கமா உக்காந்திருந்த சிறுவசிறுமியர்கைகளில் கொடுத்தாங்க.

வினயாவின் ஆறுவயதுபையன் வருண் அதில கப்பல் செய்ய ஆரம்பிச்சான் பாருங்க வந்திருந்த பத்து குழந்தைகளும் அதைபார்த்து தங்கள் கையிலிருந்த பேப்பரை மடிக்க ஆரம்பிக்க சவிதா ஒருசத்தம் போடவும் கப்சிப் ஆனாங்க.


"சவிதா...இது உன் கல்யாணப்புடவையா?ஏலக்கா பச்சைல அரக்கு பார்டர்.சரவணா ஸ்டோர் விளம்பரத்துல ஸ்நேகா இதையேதான் கட்டிக்கிறா! நீயும் அன்னிக்கு மணமேடைல கட்டிட்டுப் பாத்தது.. ஹ்ம்ம்.எட்டு வருஷத்துக்கப்றோம் இப்பதான் திரும்ப எடுத்துக்கட்டிக்கறேன்னு நினைக்கறேன் சரியா?"


மாமியாரின் கேள்வியில் தொனித்த கிண்டலை அலட்சியம் செய்த சவிதாமேடையில் அங்கும் இங்குமாய் ஓடிட்ருந்த குழந்தைகளை அடக்க என்ன வழின்னு
யோசிச்சா. அதற்குள் வர்ஷா, ஸ்ருதிபெட்டி எடுத்து வந்து உட்கார்ந்து அதில் ஸ்ருதி சேர்க்க ஆரம்பிக்கவும் குழந்தைகள் கவனம் மாறிப்போகுது.

"வர்ஷா..பாட்டு கத்துண்டியா என்ன? யார்ட்ட, பாம்பேஜய்ஸ்ரீ கிட்டயா? உண்னிக்ருஷ்ணன் கிட்டயா? மருகேலரா ஓ ராகவா ..மானச சஞ்ஜரரே..ஸ்ருதியோட பாடுவியா இல்லேன்னா அலைபாயுதே..?"

'சவிதாவின் மாமியார் ஆரம்பிச்சிட்டாங்க ஆரம்பிச்சிட்டாங்க இனி அலைகள் ஓய்வதில்லை'

பவித்ரா வர்ஷாவின் காதில் முணுமுணுத்தா.

'
"என்ன ஜாக்கெட் இதுடிம்மா வினயா? முதுகெல்லாம் காத்தாட இருக்கே ஜாக்பாட்ல குஷ்பூபோட்டுக்றாப்ல?"



"அந்த நாள்ள பண்டிகை,பகிர்தம்னா இப்படித்தான் கிராமத்துல வீடுகளில் சேர்வோம் நாங்களும்..ஹ்ம்ம்..அது ஒருகனாக்காலம்..'

'மாமி கொஞ்சம் புலம்பாம இருகீங்களா?'


"let us start ya" பவித்ரா கிசுகிசுத்தா பொறுக்கமுடியாம.

இருபதுபேர் அடங்கிய அந்தமாபெரும் கூட்டதைக்கண்டு அஞ்சியோ என்னவோ ராயலு இராம் அமைதியாகவே இருந்தார்.

'முதலில் தமிழ்ப்பாடல் கடவுள் வாழ்த்துசிறுமி பபிதா பாடுவாள் எல்லாரும் இருந்து கண்டுகளிக்கணும் சரியா?' பெப்சிஉமா போல சிரித்தபடி சவிதா சொன்னா.

மைக்கைபிடித்து,பபிதா அசைந்துநெளிந்துவந்து பாடஅரம்பித்தது.

' துன்றத்திலே துமரனுக்கு தொண்டாட்டம்..'

இராம் திகைப்புடன் சங்கடமாய் பார்க்க, சவிதா அவர் காதருகில் 'ஹிஹி குழந்தைக்கு 'க' வரலை.. மழலை போகலை.. குன்றத்திலே குமரனுக்குக்கொண்டாட்டம் பாட்டு பாட்றது.. புரியுதோ தலைவருக்கு?'எனகேட்க

இராம் பாடு திண்டாட்டமாயிடிச்சி!

அடுத்து திருக்குறள் சிறுவன்சதீஷ்

'சொல்லுசொல்லு'

சதீஷ் அப்படியேமுழித்தபடி நின்றுகொண்டிருக்க சுமேகாஅருகில்போய் அகரமுதல எழுத்தெல்லாம்' என ஆரம்பித்துக்கொடுத்தாள்.அபப்டியும் சதீஷ் அழுத்தமாய் இருக்கவும் முதற்றேஉலகு என்பதுவரை அவளே சொல்லிமுடித்து,'குழந்தைக்கு உடம்பு சரி இல்லை.இல்லேன்னா பத்துகுறள் மனப்பாடம்"என அடித்துவைத்தாள.

பொதுஅறிவு கேள்விகள்..

'தொல்காப்பியம் எழுதியவர்யார்?'

தொல்காப்பியர்

கம்பராமாயணம் எழுதியவர்?

கம்பர்.

பொங்கலன்று என்ன செய்வார்கள்?

பொங்கல்

'பாத்தீங்களா பசங்க திறமையை?' இராமிடம் கேட்ட

சவிதாவின் திறமையை அவள் கணவர் சுரேஷ் நமுட்டுசிரிப்பு சிரிச்சிட்டே ரசிச்சாரு..

கடைசியாக் தமிழில் பக்திப்பாடல்கள்!

சவிதா ஹாலில் உட்கார்ந்திருந்த குழந்தைகளிடம்,"எல்லாரும் முதல்ல கண்ணை மூடிட்டு அமைதியா கைகூப்புங்க..'என்றதும் அவர்கள் கண்ணைமூடிய அந்த அரைக்கணத்திற்கு சவிதாவின் மாமியார் அநியாயப்பெருமைபட ஆரம்பிச்சாங்க


"அதான் குழந்தைகள் என்கிறது..பவ்யமா உக்காந்துண்டு சமத்தா இருக்குகள் பாரேன்...அதிலும் என் பேரன் அபிஜித்து இப்படி அடங்கி ஒரு இடத்துல உக்காந்து நான்பார்த்ததே இல்ல.இந்தக்காணக் கிடைக்காத காட்சியைப்பார்க்கக் கொடுத்துவைக்காம அவன் தாத்தா நாலு வருஷம் முன்னே போய்ச்சேர்ந்துட்டாஆஆஆஆஆரேஏஏ" சர்ரென புடவைத்தலைப்பில் மூக்கச்சிந்தினாப்ங்க

"அடடா...கொஞ்சம் சும்மா இருங்களேன் ப்ளீஸ்?"

சவிதா பொறுமை இழந்தா..

"கூல் சவிதா...பெருசுங்கன்னா அப்படித்தான்.நாமதான் கண்டுக்காம போகணும்"

"ஆமாடி இந்தப் பெருசுங்களுக்கும் சிறுசுங்களுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிட்டே நம்ம வாழ்க்கை போய்டும்போல்ருக்கு..நம்ம பதிகளும் இப்போபாத்து ஒதுங்கிடுவாங்க நைசா.. அங்கபாரு ஓரமா கூடிநின்னுட்டு ரொம்பஅவசியமான டாபிக்கு இப்போ நமீதாவை சினிமால காணமாம்
அலசறாங்க அதை..'

'நீராடும் கடலுடுத்த நிலமடந்தைக்கெழிலொழுகும்.சொல்லுங்க'

'கண்ணும் கண்ணும் நோக்கியா..' என்றாள் மூன்றுவயது ப்ரிதி.

'அதுவேண்டாம்..இதுபாடு.. பத்துநாளா ப்ராக்டீஸ் செய்துவச்சோம் இல்ல? கண்ணூம் கண்ணும் என்ன நோக்கியா ?'

"பட் ஐ லைக் இட் "-- ப்ரீதிகுட்டி

"கண்ணும் கண்ணும் நோக்கியா..'

ப்ரீதியோடு மற்றவால்களும் கத்த,



திடீர்னு பபிதா'எனக்கு ஒன்பாத்ரூம் போகணும்' சொல்லவும். இதரவால்களும் "எனக்கு எனக்கும் எனக்கும்" பின் பாட்டுபாடிட்டே எல்லாம் பாத்ரூமுக்குப்படையெடுத்திடிச்சி.

"இந்தக் கூச்சலில் எனக்கு ஸ்ருதி சேரவே இல்லை.சே..எல்லாம் மைக்கை முழுங்கினமாதிரின்னா கத்தற்து?" வினயாஸ்ருதிப் பெட்டியை மூடினா.

'நான் நீராடும் கடலுடுத்த சமத்தா அழகா பாடுவேனே?' விஜய் இப்படிசொல்லவும்

"சமத்து சக்கரைகட்டி.."

சவிதாவின் மாமியார் கொஞ்சவும் அது வீறிட்டது

பாட்டி என் கன்னத்துல கிள்ளிட்டாங்க'

"கிள்ளலை... ஆசையாக் கொஞ்சினேன்.."

பாட்டி என்னக் கிள்ளீட்டாங்காஆஆஆ'

"சரிசரி....பாடு விஜய் நீராடும்..'

"மாட்டேன்..எனக்கு இப்போ மூட் இல்ல..பாட்டி கிள்ளீட்டா.. எனக்கு வலிக்கறது... உவ்வா வந்துடுத்து கன்னத்துலமருந்துபோட்டுக்கபோறேன்..."

விஜய் எழுந்து வீட்டிற்குள், ஒருரூமுக்குப்போகவும் இன்னும் சில வாண்டுகள் அவனைப்பின்தொடர்ந்திடிச்சி.

'அம்மா...போரடிக்கற்து .. ..."

என்ற தன்மகனை கெஞ்சலாய்ப்பார்த்த சவிதா,'தமிழ்ப்பாடல்டா கண்ணா..அமெரிக்கால உன் வய்சுப்பசங்கள் ஆர்வமா கத்துக்கறாங்க.....நீதானே எல்லார்க்கும் பெரியவன் 7வயசாறது நீயே இப்படி பண்ணினா மத்தகுழந்தைகள் என்னடா செய்யும்? போய்சமத்தா உக்காந்து பாடுமா கண்ணா?"ன்னுதாஜா பண்ணீப்பாத்தா.

அதற்குள் விஜய் ரூமில் எதையோ தள்ளிவிட்ட சத்தம் கேட்க ஓடினா.

மருந்து டப்பாவை கீழேதள்ளி ஏதோ ஒரு ஆயின்மெண்ட் ட்யூபின் மீது யாரோ கால்வைத்து அத்தனையையும் 'கொயக்' என்று பிதுக்கித், தரையில் காலால் தேச்சி...

அதுங்கள சமாதானப்படுத்தி மறுபடி கார் ஷெட்டுக்கு தள்ளீட்டுவர பஞ்சவர்ணக்கிளிகள் படாதபாடுபட்டத இராமும் பாத்துட்டிருந்தாரு.வருத்தபடாத வாலிபராச்சே அதனால ஒண்ணும் ரியாக்ஷனை அப்போ காட்டல..


" அம்மா, நான் போயி கேம்பாய் வீடியோகேம் விளையாட்றேன்.." அபிஜித் விர்ரென கோபமாய் நகர்ந்தான்

"கோபத்துல அப்படியே அப்பனுக்குப் பிள்ளைத் தப்பாம பொறந்திருக்காண்டியம்மா..இந்தகாலக்குழந்தைகளுக்கு யார்ட்டயும் லவலேசம் பயமே இல்ல.."

மாமியாரின் புலம்பலில் சவிதா எரிச்சலுடன் கத்தினா.

"டேய் அப்பீஜ்ஜ்ஜ்ஜித்த்?"

அவன் விளையாடப்போகவும் கூடவே அர்ஜுன், தன்வின் இருவரும் கழண்டுகிட்டாங்க

"என்னடி வினயா இது நம்ம பசங்க இப்படிபடுத்தறாங்க?"

"சவிதா...நேரமாற்தேடிம்மா... கேசரி உப்புமா கொண்டுவரட்டும்மா?'

'இருங்க மாமி..பக்திப்பாடல் நாலு பாடி நிகழ்ச்சியை முடிக்கலாம் அப்றோம் சாப்பிடலாம்"

'குழந்தைகளா..இப்போ பக்திப்பாட்டு...சொல்லுங்க ஏழுமலைதேவனே..'

ப்ரீதிக்கு திடீர்னு சந்திரமுகி திரைப்பாடல் நினைவில் வர,'தேவுடா தேவுடா'ன்னு சந்தோஷமுகியானது.

'ஷ்...அதெல்லாம் பஜனைல சேர்த்தி இல்ல...சரி , வேறபாட்டு அம்பா சக்தி ஆதரிதாயே பாட்லாமா?"

"வேண்டாம் ஆண்ட்டீ...தேவுடா தேவுடா ஏழுமல தேவுடா அர அர அர..'

'ஹர ஹரன்னு குழந்த தேமேன்னு நன்னாதானே பாட்றது சவிதா ஏந்தான் கோச்சிக்கறாளோ?'

" மாமி ப்ளீஸ்..குழந்தைங்களா..சலங்கைகட்டி ஓடி ஓடிவாகண்ணா சொல்லலாமா? வீரமாருதி கம்பீரமாருதி சொல்லி முடிச்சிடலாமா அட்லீஸ்ட்?"

"அதெல்லாம் இல்ல. அந்நியன் படத்துலேந்து ரண்டக்க ரண்டக்க அண்டங்காக்கா கொண்டைக்காரி ரண்டக்கரண்டக்கா இல்லேனா சுட்டும்விழிசுடரே பாட்டு கஜனிலேந்து பாட்லாம்..'

அய்..சுட்டும்விழிசுடரே..!

சுட்டும்விழிசுடரே!

கோரசாய் எல்லாம் இந்தசினிமாபாட்டுபாட...

சவிதா தலையில் கைவைச்சி உக்கார..மற்ற கிளிகள் ஊமைக்கிளிகளா தவிக்க..

விழாத்தலைவர் ராயல் இராம் மைக்குபிடிச்சாரு" வணக்கம். குழந்தைங்க இயற்கையா இருக்கறதும் ஒரு அழகுதான்..அருவிமாதிரி ஓடி உருண்டு புரண்டு கொட்டிஉற்சாகமா இருக்கற வயசு..திறமையும் ஆர்வமும் இருந்தா எதுவும் எப்பவும் நம், வசம்..எனக்கு இந்தக் குழந்தைகள பாக்குறப்போ மதுரைல சின்ன வயசு நினைவு வந்திடிச்சி.."இன்னமும் எங்க போனாலும் குழந்தைகளை கண்டா குஷி வந்துரும், அவங்க கூட போயி அவங்ளோட கிள்ளைமொழி கேட்கிறது அப்பிடியொரு அழகாக உணர்வேன்." அப்படீன்னு என் பதிவுல கூட எழுதி இருக்கேன். அதனால சவிதா மேடம்! கவலையவுடுங்க,..வழக்கம்போல கவலைப்படாத காரிகையராகவே நீங்கள்ளாம் இருங்க..நன்றி ,என்னய வருத்தப்படாதவாலிபர்சங்க பிரதிநிதியா அழைச்சதுக்கு .."

எல்லாரும் கைதட்ட க.கா.ச விழா இனிமையா முடிஞ்சிது!
*************************************************************************************
கண்டுகளித்து இங்கு அளித்த ஷைலஜா, இதைசமர்ப்பணம் செய்வது வவாச ஆண்டுவிழா போட்டிக்கு!

Links to the Post:

V V Sangham
மேலும் படிக்க... "கவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா!(forவிவாசபோ)"

Wednesday, April 18, 2007

தமிழுக்கு அழகென்று பேர்!(2)

தமிழுக்கு அழகென்று பேர் என்று தலைப்பு வைத்துவிட்டு இனியதமிழினைப்பற்றி எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டேன் முன்பதிவில்.

(இந்த ஜீ தம்பிவேற அழகுபற்றி இப்படிக் கொஞ்சமா எழுதிட்டீங்க செல்லாதுன்னு சொல்றான்!இப்படித்தான் என் சொந்தத்தம்பி ஒருமுறை போன்ல,'எப்படி இருக்கு உன் இலக்கியப்பணி?' ன்னு கேட்டான் நான் சோகமா,' எங்கடா உப்புமா கிண்டவும் சாம்பார்வைக்கவுமே சரியா இருக்கு ,,நேரமே இல்ல..எழுதவே முடில்லடா'ன்னேன் அதுக்கு அவன் 'இதைவிட பெரிய இலக்கியப்பணி வேறென்ன நீ செய்யமுடியும்?'னான்..வீட்லயே எதிரிங்க:)

விதிவலியது !நான் பாட்டுக்கு இருந்தேன் என்னை எழுதவச்சி மாட்டிக்கிறீங்க!)

சரி..சீரியசா எழுதபோறேன் இனிமே..

யாமறிந்த மொழிகளிலே தமிழினைப்போல இனிதாவதெங்கும் காணேன் என பாரதி சொன்னதுதான் எத்துணை உண்மை!
அவனுடைய பாடல்கள் அனைத்தும் சிறப்பானதுதான் ஆனாலும் தமிழ் கொஞ்சும் இந்தப்பாடல் அனைவருக்கும் பிடித்திருக்கும்.

..தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்..

...சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!


..உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஓளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும்ம் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழி பெற்றீப் பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக்கண்டார்..


யாமறிந்த புலவரிலே கம்பனைபோல் என் கவிச்சக்கரவர்த்திக்கு பாரதி முதலிடம் தந்த்தமைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அவனுடைய சொல்லாட்சி சுவையானது.உதாரணத்திற்கு இங்கு எனக்குப்பிடித்த பாடலை அளிக்கிறேன்..

சூர்ப்பனகை ராமரைப்பார்க்க அழகிய இளம்பெண்போல தன்னை மாற்றிக் கொண்டு வருகிறாளாம் அதை கம்பர் வர்ணிப்பதைப்பருங்கள்..நடையிலேயே நாட்டியமாடும் தமிழ்!

பஞ்சி ஒளிர், விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்க,
செஞ்செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி
அம்சொல் இளமஞ்சை என ,அன்னம் என மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்சமகள் வந்தாள்

கஞ்சம்-தங்கம்
மஞ்சை-மயில்


வள்ளுவனின் குறளில் குரல் கொடுக்க நிறைய உண்டு.ஆனாலும் தமிழோடு இணைந்துவாழ்ந்த இரட்டைப்புலவர்கள் கதையை இங்கு அளிக்க விரும்புகிறேன்...




இன்றைக்கு ஏறத்தாழ ஐநூறு அல்லது அறுநூறு வருடங்கள் முன்பாக, சோழநாட்டில் ஆமிலந்துறை என்னும் ஊரில், செங்குந்தர் மரபில் இரண்டு புலவர்கள் தோன்றினர். ஒருவர் பெயர் மதுசூரியர், இன்னொருவர் இளஞ்சூரியர். உறவு முறையிலும் ஒருவர் மாமன் மகன், மற்றவர் அத்தைமகன். இருவரும் சேர்ந்தே செய்யுள் பாடிவந்ததால் அவர்களை இரட்டையர் என்றே ஊரில் மக்கள் அழைத்தனர்.

இரட்டையர்கள் தங்கள் சமயமாகிய சைவத்தில் பெரும் பற்று கொண்டவர்கள். வாழ்நாள் முழுவதும் சிவத்தலங்களுக்குச் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள இறைவனைப் பாடி மகிழ்ந்தனர். இருவரில் ஒருவர் முடவர் இன்னொருவர் குருடர். குருடரின் தோளில் ஏறிக் கொண்டு, முடவர் நடக்கும் பாதைவழி கூற, முன்னவர் அதன்படிச் செல்வார். இருவருக்குமே கலைமகள் அருள் பரிபூரணமாக இருந்தது. இனிய செந்தமிழ்ப் பாடல்களைப் பெரு முயற்சியும் உழைப்புமின்றி எளிதில் பாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

ஒருபாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாடுவார். அதை ஒட்டி மற்றவர் அடுத்த பகுதியைப் பாடி முடிப்பார். வயிறு ஒன்று இருக்கிறதல்லவா, அதை நிரப்பியாக வேண்டுமே. அதற்காக அவ்வப்போது சில செல்வந்தர்களையும் அணுகி அவர்கள் மீது பாடிப் பரிசு பெற்று வாழ்ந்துவந்தனர். திருத்தலங்களுக்குச் சென்று முதலில் இறைவன் மீது பாடிவிட்டுப் பிறகுஅவ்வூரில் உள்ள செல்வந்தர்களைப்பாடிப் பரிசுடன் திரும்புவர்.

ஒருமுறை இரட்டைப்புலவர்கள் சிதம்பரம் பெருமானைத் துதிக்க கோயிலுக்குச் சென்றனர். திரும்பும் வழியில், பெருஞ்செல்வம் படைத்த செல்வந்தன் ஒருவன் விலை உயர்ந்த ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டு போவதைப்பார்த்து அவனைப்பற்றிப் புகழ்ந்து முடவர் முதலில் பாட, குருடர் வழக்கம் போல முடித்துக் கொடுத்தார். அறுசுவை மட்டுமேயன்றித் தமிழ்ச் சுவையறியாத அந்த செல்வந்தர் பாடல் கேட்டு நெடுமரம்போலவே நிற்கவும், முடவர்,

'மூடர் முன்னே பாடல் மொழிந்தால் அறிவரோ
ஆடெடுத்த தென்புலியூர் அம்பலவா'

எனப்பாடி நிறுத்தினார்.

அக்குறிப்பினை அறிந்த குருடர்,

'-ஆடகப்பொற்
செந்திருவைபோல் அணங்கைச் சிங்காரித்துஎன்னபயன்
அந்தகனே நாயகனானால்?'

எனப்பாடி முடித்தார்.

அதற்குள் அங்கே மக்கள் கூடிவிட்டனர். அவர்கள் இப்பாடலின் உட்கருத்தையும் சொல்நயத்தையும் சிலேடைப் பொருளையும் கண்டு வியந்து இன்னொரு பாட்டு பாடும்படி அவர்களை வேண்டினர்.உடனே முடவர்,

'பாடல் பெறானே பலர்மெச்ச வாழானே
நாடறிய நன்மணங்கள் நாடானே'

என்றுபாடிநிறுத்த, குருடர்,

'-சேடன்
இவன் வாழும் வாழ்க்கையிருங்கடல்சூழ் பாரில்
கவிந்தென் மலர்ந்தென்னக்காண்.'

என்று அந்தப் பாடலைப் பாடி முடித்தார்.

அங்கே குழுமி இருந்தவர்கள் இப்பாடலைக்கேட்டு ரசித்து அச்செல்வருக்கு இவர்களின் அருமை பெருமையைக் கூறவும் அவனும் அதை உணர்ந்து இரட்டையர்களை உபசரித்து வேண்டிய பரிசினைக் கொடுத்து அனுப்பினான்.

ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,

'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'

என்றுபாடவும் குருடர்,

'-போங்காணூம்
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசையல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்.'

என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.

அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.

இன்னொருமுறை இரட்டைபுலவர்கள் சங்கத்தமிழ் வளர்த்த மதுரைக்குவந்து சொக்கநாதரையும், அங்கையற்கண்ணியையும் வழிபட நினைத்தனர். முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பொற்றாமரைக்குளம் வந்தனர். நீராடிவிட்டு ஆலயப்பிரவேசம் செய்ய நினைத்து முதலில் குருடர் குளத்திலிறங்கினார். படித்துறையில் அமர்ந்து உடையைத் துவைக்கத் தொடங்கினார், நீர்ப்பரப்பில் அதை விரிக்கத் துணி கைநழுவிப் போய்விட்டது. உடை நழுவியதுதெரியாமல் குருடர் கைகளை நீரில் தடவித் தடவிப் பார்க்கவும் கரையில் அமர்ந்த முடவர்,

'அப்பிலே தோய்த்தடுத்தடுத்துநாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றுபாடினார்.

'-அப்படியே
ஆனாலுங்கந்தை,அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

என்றார் குருடர். அது கேட்ட முடவர் விடாமல்,

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார்குளிரையுடன் தாங்காதோ?'

என்று கொக்கி போட்டார்.

'-எண்ணாதீர்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டேதுணை!'

என விடை அளித்தார் குருடர். அந்த ஆடை சிறிது நேரத்தில் தானாகவே காற்றில் திரும்பவும் அவர் கைக்கு வந்தது.

பின்னர் அண்ணாமலையானைத்தொழ ஒருமுறை இவர்கள் திருவண்ணாமலை வந்தனர். அங்கே சக்தியை பூசிப்பவனும், செந்தமிழ்ப்புலவனும், செருக்கு மிக்கவனும், புலவர்களைக் கண்டால் இழிவாகப் பேசுபவனுமான சம்பந்தாண்டான் என்பவனைக் கண்டனர். அப்போது அவன் நாவிதனிடம் தலைசவரம் செய்து கொண்டிருந்தான். வந்தவர்கள் புலவர்கள் என அறிந்துகொண்டவன், இடக்காக, "மன் என ஆரம்பித்து மலுக் என முடிவதுபோல வெண்பா பாடமுடியுமா உங்களால் எனக்கேட்டான். அவனது அறியாமையை எண்ணிப்புலவர்கள் தமக்குள் சிரித்தனர். முடவர்,

'மன்னு திருவண்ணாமலைச்சம்பந்தாண்டாற்குப்
பன்னுந்தலைச்சவரம் பண்ணுவதேன்'

எனப்பாடலை ஆரம்பிக்க, பின்னவர்,

'-மின்னின்
இளைத்த இடைமாதர் இவன் குடுமி பற்றி
வளைத்திழுத்துக் குட்டாமலுக்கு.'

என்று அவன் தலைக்கே தொடர்புப்படுத்தி, அவனுடைய மனைவியர் இருவரிடமும் அவன் படும்பாட்டை விவரித்து அவன் செருக்கொழியுமாறு வெண்பா பாடிமுடித்தனர் அன்றுமுதல் அவன் செருக்கும் அழிந்தது.

புலவர்களைப்போற்றும் கூவத்துநாராயணன் மீது இரட்டையர்க்கு மிகுந்த அபிமானம் உண்டு. அவரது மறைவில் மனம் வெறுத்துக் காலனையே சாடினர்.

'இடுவார் சிறிதிங்கு இறப்போர் பெரிது
கெடுவாய் நமனே கெடுவாய்-படுபாவி
கூவத்து நாரணனைக்கொன்றாயே,கற்பகப்பூங்
காவெட்டலாமொ கறிக்கு?'

என்று ஓர் யாப்பு பாடினர்.

ஒருமுறை இரட்டையர்கள் ஆசுகவி பாடுவதில் வல்லவரான காளமேகப் புலவரை சந்தித்தனர். அவருடன் திருவாரூரை அடைந்து, தியாகராயப் பெருமானை வணங்கினர். பெருமாளைப் பாட நினைத்த குருடர்,

'நானென்றால் நஞ்சிருக்கும் நற்சாபங் கற்சாபம் பாணந்தான்.....' என்று தொடங்கினார்,ஆனால் அதன்மேல் பாடல் தொடர இயலாமல் நிறுத்தினார். முடவருக்கும் அதனை முடிக்க சொல் வரவில்லை. அருகே இருந்த காளமேகப்புலவர், உடனே'மண்தின்ற பாணமே" என்றார். இச்சீரான வார்த்தைகிடைத்ததும் முடவர்,

'-தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீ எப்படியோ
நேராரூர் செற்ற நிலை?'

என்று வெண்பா பாடிமுடித்தார்.

பின்பு இரட்டைப்புலவர்கள் காளமேகப்புலவரின் அற்புத சக்தியை வியந்து,

'விண் தின்ற கீர்த்தி விளை காளமேகமே
மண்தின்றபாணமென்று வாயினிக்கக்-கண்டொன்று
பாகொடு தேன் சீனியிடும் பாக்கியம் பெற்றோமிலையே
ஆகெடுவோ முக்கியங்கென்னாம்?'

எனப்பாடிப் புகழ்ந்தனர். அவரிடம் பிரியாவிடை பெற்றுப்பிரிந்தனர்.

காலசக்கரம் சுழன்றது. சில ஆண்டுகள் கழிந்தன. இரட்டையர் திருவானைக்காவல் வந்து இறைவனை வழிபட்டு தங்களது பழைய நண்பரும் பெரும்புலவருமான காளமேகப்புலவரை சந்திக்க விரைந்தனர். அப்போது அவர் இல்லத்தில், "சற்று முன்னர்தான் அவருடைய உயிர்பிரிந்து உடல் தகனத்திற்குப் போய்விட்டது" எனக்கூறினர். இரட்டையர் அதிர்ச்சியுடன் சுடுகாட்டிற்கு வந்தனர் காளமேகப்புலவரின் உடலை நெருப்பு, தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'

என முடவர் கதற, குருடர் உடனே,

'-பூசுரா
விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'

எனப்பாடி அழுதார்.

இளமையிலே புலமைபெற்ற இந்த இரட்டையர் கலம்பகம் உலா முதலிய அரிய பெரிய ப்ரபந்தங்களைப் பாடியவர்கள். தமிழ் உள்ளவரைக்கும் இவர்கள் பாடல்களும் வாழும் என்பதில் ஐயமில்லை.
மேலும் படிக்க... "தமிழுக்கு அழகென்று பேர்!(2)"

Tuesday, April 17, 2007

பெயர் படும் பாடு!(வ.வா.ச. போட்டிக்கு)

--------------------------------------------------------------------------------
பெயர் ஒரு அடையாளம்.பெயரை நினைத்ததும்முழு உருவமும்கண்முன் வந்து நிற்கிற அளவுக்கு
ஒருவரின் பெயர் பெருமை அடைகிறது.அவர் வாங்கிய பட்டங்கள் எல்லாம் பிறகுதான். தங்கள்
பெயர்கள் படும்பாடு வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான அல்லது எரிச்சலான அனுபவமாயிருக்கலாம்!

எங்கள் வீட்டில் பாட்டி தன் கணவர் பெயரை சொல்லவே மாட்டார். அயுசு குறைந்துவிடுமாம்!

அன்று ஒரு குழந்தையின் நாமகரணத்திற்குப் போகவேண்டி வந்தது குழந்தைக்கு நிஷ்ருத்தி என்று பெயர்வைத்திருந்தார்கள் பலர் நிவர்த்தி,நீ விருத்தி. நீத்ருப்தி,நீருப்தி என்றே சொல்ல ஒரு சிறுமி "நவராத்திரி" என்று மழலையில் கூறவும் எல்லாரும் சிரித்துவிட்டனர்.

"இதுக்குதான் அந்த நாளில் க்ருஷ்ணா ராமா சிவா முருகா'ன்னு பெயர் வைப்பாங்க சாமி பெயரை வாய் நிறைய அழைச்சா நல்லது இல்லயோ?" என்று
ஒரு வயதான அம்மாள் சொல்லவும் ஒரு சிறுவன்"ராமனாதா?' என்றான் அவன் அப்பாவைப்பார்த்து.

"சாமியையே பேர் சொல்லி கூப்பிடலாம்னா அப்பா ஆசாமிதானே பேர் சொன்னா என்ன?" என்று கேட்டுவிட்டான்.

பெயரில் என்ன இருக்கிறது என்று சிலசமயம் தோன்றினாலும் சிலர் தங்கள் பெயரை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்

மதுரையில் தெரிந்த குடும்பநண்பருடன் அவரது அண்டைவீட்டுக் குழந்தை பெயரிடும் வைபவத்துக்குப்போனோம் குழந்தை சிவப்பாய் அழகாயிருந்தான் பெயர்கேட்டேன்," பெரிய கருப்பு" என்றாள் குழந்தையின் பாட்டி பூரிப்பாக.

"சிவப்பா இருக்கான் குழந்தை, கருப்புனு பேர் வச்சிருக்கிங்களே?'

அவ்வளவுதான் , பெருசு கடும் கோபத்துடன் என்னப்பார்த்து," இங்கிட்டு இருக்கற குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கிட்டு பொறந்த புள்ளைம்மா இது..அதோட பேரை
கிண்டல் செஞ்சா உன்னை விடாது (அந்த) கறுப்பு" என்று எச்சரித்தாள்!

ஒருகல்யாணத்தில் அந்த 70வயது முதியவர் வாசலிலேயே பரிதவிப்பாக நின்றுகொண்டிருந்தார்,
அசாத்திய கவலைக்கோடுகள் நெற்றியில் 70MM திரையாய்!


நான் அருகில் சென்று அக்கறையாய் விசாரித்தேன்

"என்னங்க ,என்னாச்சு, மண்டபம் உள்ளே போகாமல் இங்கயே நிக்கறீங்களே? என்கூட வரீங்களா நான் அழைச்சிட்டுப் போகட்டுமா உங்களை?"

"இல்லைமா ஆட்டொவுல என்கூட வந்த பேபியக் காணம்மா.. " தொண்டை அடைக்க அவர் கூறினார்.அழுதுவிடுவார்போல இருந்தது.

"ஐய்யெயோ..?" மனசுக்குள் ஆட்டோக்காரர் குழந்தையை கடத்திக் கொண்டு போய்விட்டது போலவும் அது கைகாலை உதைத்து அழுவது போலவும், 'நாலு லட்சம், ஆனேக்கல் ரோடுல அடர்த்தியான காட்டுல, புளியமரத்து அடில் கொண்டுவந்துவை,அப்போதான் உன் குழந்தையை தருவேன் இல்லேன்னா சதக் சதக்.." என்று கன்னாபின்னாவென்று தேவையான பொழுதில் வராத கற்பனை அப்போது காட்சிகளாய் ஓட...


'ஒருவார்த்தை பேச ஒருவருஷம் காத்திருந்தேன்..' என்று என் செல்போன் சிணுங்கியது.

"ஹலோ?"

4 நிமிஷம் பேசிமுடித்துவிட்டு திரும்பினால் அந்த முதியவர் முகம் பிரகாசமாயிருந்தது.

நான் அவரிடம்."சாரி சார்..போன் வந்திடிச்சி..பேபி விவரம் சொல்லுங்க நான் தேடிப்பாக்கறேன்..இல்லேன்னா பக்கத்ல தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்கு.." என்றேன் அவசர அவசரமாய்

"பேபி வந்தாச்சுமா..ஆட்டோக்கு சில்லரைகொடுக்க அம்பது ரூபாயை மாத்த பக்கத்துகடைக்குதான் போய்ருக்கு பேபி..நாந்தான் பயந்துட்டேன்.. கமான் பேபி..கல்யாணமண்டபம் உள்ளே போகலாம் நாம.." என்று என்னிடம் கூறியபடியே அவர் குலாவிக் கை பிடித்த அந்த பேபியைப் பார்த்தேன்

"ஓஹோ உந்தன் பேபி இதுதானா உந்தன் பேபி?" என்று அந்த 65வயது அம்மாளைப் பார்த்து என் வாய் முணுமுணுத்தது.


தவமாய் தவமிருந்து (சேரன்படம் இல்லீங்க நிஜமாவே) பத்துவருஷம் கழித்து ஒரு அழகான பெண்குழந்தை பெற்றாள் என் கன்னட தோழி ஒருத்தி. குழந்தையின் முதலாவது பிறந்தநாளை தனது புது வீட்டில் கொண்டாடப் போவதாகவும் அவசியம் வரவேண்டுமென்றும் சொல்லி இருந்தாள்.

புறப்படும்போது அடுத்ததெருவிலிருந்து வித்யா போன் செய்து," என் தம்பி திவாகர் ப்ளஸ் டூ முடிச்சி லீவுக்கு வந்துருக்கான் அவனுடன் என் புத்திரபாக்கியங்களை அனுப்பிட்டு பத்து நிமிஷத்துல நான் உன் வீடு வரேன் நானும் நீயும் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டாள்

"உன் தம்பிக்கு நம்ம ·ப்ரண்ட் வீடு தெரியுமா?"

"சொல்லீருக்கேன் நாலாவது தெருல மூணாவது புதுவீடு, வாசல்ல ஜெய்கலா னு க்ரானைட்ல பள பள னு பேர் இருக்கும்னு..'

"உன் தம்பி படா ஸ்மார்ட் ஆச்சே..நைஜீரியால இருந்தாகூட கண்டுபிடிச்சி போயிடுவான்...உன் வால்களை அவன்கூட அனுப்பிட்டு நீ நிதானமா வா, நானும் நீயும் சேர்ந்து போகலாம்.."

இருவரும் பட்டுபுடவை சரசரக்க அந்தப் புது வீட்டிற்குள் நுழைந்தோம்

மண்டபமேடையில் எங்கள் கன்னடத்தோழியின் குழந்தையை திவாகர் தூக்கி வைத்துக் கொண்டு ஏதோ கொஞ்சிக் கொண்டிருப்பது கூட்ட நெரிசலில்
தெரிந்தது. தோழி எங்களுக்குப் பின்னே வாசலில் வந்த யாரையோ வரவேற்கப் போயிருந்தாள்

திவாகர் அருகில் தோழியின் கணவர் நஞ்சுண்டையா அவனையே முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.சங்கட சிரிப்பு வேறு அவர்முகத்தில் விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது.

நாங்கள் இருவரும் பரிசுப்பொருளுடன் மேடை நோக்கி நடந்து போனபோது, திவாகர் குழந்தையிடம்," ஹேய் ஜெய்குட்டி ஜெய்கலாகுட்டி..அழகுசெல்லம்.. என்
தேவதையே..ஜெய்கலாகுட்டி...யே கலா, கலா! கண்ணடிச்சிக் கலக்கறா.."என்று வாய் நிறையக் கொஞ்சிக் கொண்டிருந்தது கேட்டு நானும் வித்யாவும் அதிர்ந்துபோனோம்

அடப்பாவி திவாகர்! ஜெய்கலா,குட்டியா?

குழந்தையின் அப்பா இப்படி முழிக்கக் காரணம் இதுதானா?

வேகவேகமாய் வித்யா தன் தம்பியை ஒரு ஓரத்திற்குக் கடத்திச் சென்று,:"டேய் மடையா.. என்னடா ஜெய்கலான்னு குழந்தையக் கொஞ்சறே?" என்று சீறினாள்

"ஏன் அதுதானே குழந்தையோட பேரு? புதுவீட்டுக்கும் அதைத்தானே பேரா வச்சிருக்காங்க?"

"ஐய்யோ..அது குழந்தையோட அம்மா பேருடா..குழந்தை பேரு நிமிஷாம்பா.. அழைப்பிதழ்ல பாக்லயா நீ?"

" ஜெய்கலா மாடர்னா இருக்கே அதுதான் குழந்தை பேருன்னு நினைச்சேன், கொஞ்சினேன்..இதென்ன நிமிஷாம்பா மணியாம்பான்னு ஓல்ட் நேம் குழந்தைக்கு வைப்பாங்கன்னு எனக்குத்தெரியுமா?'

" நிமிஷாம்பா என்கிற சக்திதெய்வத்துக்கு வேண்டிப் பிறந்த குழந்தை அதான் அந்தப்பெயரை வச்சிருக்காங்க..நல்லவேளை..என் ·ப்ரண்ட் ஜெய்கலா ஹஸ்பண்ட்டுக்கு தமிழ் தெரியாதோ நீ பிழைச்சியோ? ஆனாலும் தன் ஒய்·ப் பேரையே பயல் திரும்பத்த்ரும்ப சொல்றானேன்னு உன்னையே அவர் முறைச்சிருக்கார்!"

"அப்படியா சாருக்கு தமிழ் தெரியாதா அப்படின்னா இன்னும் அதிகமாக்கொஞ்சி இருப்பேனே? அநியாயமா நீங்க ரண்டுபேரும் வந்து கெடுத்துட்டீங்களே?" என்ற
தனது உடன் பிறப்பை உதைக்கத் தயாரானாள் வித்யா!!
*************************************************************************************
மேலும் படிக்க... "பெயர் படும் பாடு!(வ.வா.ச. போட்டிக்கு)"

காக்க காக்க காலணி காக்க!(நகைச்சுவை வ.வா.ச.போட்டிக்கு)

அரசபதவியில் அரியணை ஏறி பாதுகை அமர்ந்தது அந்தக்காலத்தில்.

பாதுகையைப் பாதுகாக்கத் தவறியதால் பதவியே பறிபோக இருந்தது இந்தக்காலத்தில்!

சிலவருடங்கள்முன்பு என் தோழி ராதிகாவிற்கு அவள் பணி புரிந்த இடத்தில் பாதுகையினால் பதவியே பறிபோய்விடுமோ என்னும் அச்சம் ஏற்பட ஒரு நிகழ்ச்சி நடந்தது.


அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவியை அழைத்துபோகவேண்டுமென்றும்,அந்தப் பொறுப்பை ராதிகாதான் ஏற்கவேண்டுமென்றும் ராதிகாவிற்கு உத்தரவு வந்தது.(தவிர்க்கமுடியாத காரணத்தால் நீ.......ண்ட வாக்கியம் கொண்ட இதுபோன்ற பாரா இனி வாரா!)

ஆமாம் உத்தரவுதான். ஆர்டர்!

அந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்

டில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர்.

அதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது

ராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதிகாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் பெர்·பெக்ஷன் எதிர்பார்ப்பவர்.

அப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.

ராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.

அந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.

வசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் ! குரலில் நடையில் டிட்டோ.

ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.

என்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ? ஹ்ம்ம்? நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணிஅம்மணி

'உப்பு பெறாத' என்றதும் உப்பிலியப்பன் கோயில் நினைவு வருகிறது அங்கே தரும் பிரசாதங்களில் உப்பே இருக்காதாம் தெரியுமா? ஆனாலும் சுவையாய் இருக்குமாம்" என்றேன் நானும் குறும்பாய் சிரித்தபடி, வசுதாரிணி ரசித்தமாதிரி தெரியவில்லை

ராதிகாவிற்கு ஏற்கனவே பால்பாயிண்ட்பேனாவின் ரீஃபில் உடம்பு. அது இன்னமும் குறுகிப்போக,"வேண்டாம்டி உன் நகைச்சுவையை இவங்ககிட்ட வச்சிக்காதடி 'என்று கிலியுடன் கிசுகிசுத்தாள்

காரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள் வசுதாரிணி என்னிடம்," அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.. இப்போ எப்படி இருக்கோ?" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.

"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ..." உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்..

"யார் இல்லைன்னாங்க இப்போ? இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்" என்று (அ)சிங்கம் சீறியது.

வழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, "நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்"

முணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.

உடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது. தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.

கடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!)

மணி பத்து. மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.

காரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்
பெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்! ரொட்டிஒலி!

சிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.

வசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது," செருப்பை கார்லேயே விடலாமா?" எனக்கேட்டவள் உடனேயே,"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்பவே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்" என்று தீர்மானமாய் சொன்னாள்

ராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், "மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே? கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே?அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்?" என்று சொல்லவும் , "ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'"என்று
ஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.

எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு வ.வா.சங்கம் தனிப் பரிசு தருவார்களென நினைக்கிறேன்!:)) செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.

'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.

கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது? ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்!

உள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.
உடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து.? கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா?" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.

'என்ன இப்போ உனக்கு? மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே?'

நான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.

ஆ! இதென்ன மாயம்?

பத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.

நல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .

காரணம் அங்கே.....

காணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.

'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது? ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்?'

வசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.

ஐயோ!

தேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன். எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.

அப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.

நேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.

"தொலைந்தது அம்மாவின் செருப்புமட்டும்"

'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல?' பார்வையிலேயே அதட்டினார்

"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா.."

எனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.

அரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.

ஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் "செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்" என்றார்.


பேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு! சுத்தம்.!

எல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.

அலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.

கடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி! (அஞ்சடி ஆறங்குலமாக்கும்)

பழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும்! வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.

கடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ?:))

'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.

தமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்," வாங்கம்மா வாங்க.!" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.

ஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்

மொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா?

"என்னங்க இவ்வளவுதானா செருப்புகள்? விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா?"

சந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், "இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.

வேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே?

ட்ரைவர் பரிதாபமாய் '"மணி ஆச்சும்மா" என்றான்.

ஆமாம் மணி 11.50

ஊப்ஸ்!

12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.

ஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.

"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே? " வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்.பக்கத்தில் வசுதா பயத்தில் பல் டைப் அடிக்க நின்றிருந்தாள்.

நான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி?

ராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...

"ஓஹோ? என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்?" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.

"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...

வசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள். பிறகு."கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ! தாங்க் காட்!"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்

"தாங்க்காட்!"

நாங்களும் சொல்லிக்கொண்டோம்

எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?
மேலும் படிக்க... "காக்க காக்க காலணி காக்க!(நகைச்சுவை வ.வா.ச.போட்டிக்கு)"

Sunday, April 15, 2007

தமிழுக்கு அழகென்று பேர்!


நான்பாட்டுக்கு வாடகைவீட்டுக்கு விசிட் அடிச்சி அப்பப்போ விழிக்கு விருந்து கொடுத்திட்டு ஢பின்னூட்டம் மட்டும் இட்டு டபாய்ச்சிட்டு இருந்தேன் டாக்டர் விஎஸ்கே, லபக்குனு பிடிச்சிட்டார்! மரியாதையா எழுதுங்கன்னு அன்பு அதட்டல், மறுக்க முடில்ல.
பூட்டி இருந்த சொந்தவீட்டுக்குமறுபடி சித்திரைல திரும்ப வந்திருக்கேன்.. ஒரே தூசியாகிடக்கு..ஒழிச்சி சுத்தம் செஞ்சிட்டு கொஞ்சம் பூக்களை அடுக்கிவச்சிட்டு புத்தாண்டுக்கு நல்வரவு கட்டியம் கூறிட்டு அழகு பத்தி பேசத்தயாராகபோறேன்.

பூக்கள்தான் அழகு லிஸ்ட்ல முதல்ல இருக்கு.

சமீபத்துல தான் வாஷிடன் தலைநகரம்போய் செர்ரிபூக்களைக் கண்குளிர பார்த்துவந்தேன்...மரமெல்லாம் பூப்போர்வைதான். ஆனா அதுக்கப்றம் அடிச்சகுளிர்ல எல்லாபூக்களும் அழுது உதிர்ந்துபோயிட்டுது.

அப்புறம் குழந்தைங்க கன்னம்குழிவிழ சிரிச்சா எப்போதும் அழகு.

நீ நடந்தால் நடை அழகு அப்படீன்னு நக்மா பாடுவாங்களே ரஜனியப்பாத்து ஒருபடத்துல !ஆமா,

காதல் வசப்பட்டால் காதலியிடம்-காதலனிடமும் காணும் எல்லா அம்சமும் அழகுதான்!

சரியான பதத்துல ரவாகேசரி செய்து நிறம்மணம் குணத்தோடு அதை பாத்திரத்தில் பார்க்கிறபோதே அழகு!

ஆடிமாசம் அம்மாமண்டபத்தில் காவிரி கையைவீசி வரும் பாருங்க அது அழகு,,அங்கேபத்துறைல நின்றபடியே தூரத்து உச்சிப்பிள்ளையார் கோயில் மலைமுகடுதெரியுமே அதுஅழகு..அரங்கன். கோயில், மதில்கள், வீதிகள்,அத்தனையும் அழகு! திருவரங்கமில்லை அழகரங்கம் அது!

தமிழுக்கு அழகென்று பேர் !

இதயம் தொட(ர்)கட்டுரை எழுதும் விஎஸ்கே எழுதுவது அழகு

மாதவிப்பந்தலில் மாதவன் பற்றி கண்ணபிரான் ரவி எழுதுவது அழகு.

நுனிப்புல் எனச் சொல்லி முழுத்திறமைகாட்டும் உஷாவின் பதிவு அழகு

அடக்கமே உருவான துளசியின் அன்பு அழகு

குமரனின் குமரன்(முருகன்) அழகு

ராகவனின் கள்ளியிலும்பால் அழகு.

ஆசிஃபின் கிண்டல் அழகு

சர்வேசனின் சர்வே அழகு

தம்பிகதிரின் வறட்டி அழகு

புதுப் பாடலாசிரியர்'ஜியின் சீனப்பாடலின் தமிழாக்கம் அழகு

மதுமிதாவின் காதல் கவிதைகள் அழகு

பாட்நியூஸ்ஆஃப் இண்டியாவின் ர ற பிழையும் அழகு!



இன்னும் தமிழ்மணத்தில் நான் ரசித்துப்படிக்கும் பலரது பதிவுகள் மிக அழகு!எதைச் சொல்ல எதை விட?

எப்டியோ ரொம்ப நாளைக்கப்றம் நான் எழுதி இருக்கிறது எப்படி? கொஞ்சமாவது அழகாஇருக்கா?:)
மேலும் படிக்க... "தமிழுக்கு அழகென்று பேர்!"

Thursday, January 04, 2007

நினைவுகள்.

பூகம்ப நிலவெளியீல்
புதைந்துவிட்டாற் போல்
என்னுடையதான உன்
நினைவுகள்

குழப்பமான
வண்ணக்கலவையாய்
ஓவியத்தில் நீயும்
வார்த்த அச்சினைப்போன்ற
கையெழுத்தாய் நானும்

பூவினைப் பறிக்காதவரை
கவிதையின் வரிகளில்
செடிக்கும் இடம் உண்டு

பனித்துளி மறையாதவரை
புற்கள் கவனிக்கப்படும்

நிலவு உள்ளவரை
நீள் வானம்
நோக்கப்படும்

நிலைக்கண்ணாடிமுன்
நின்றால் ஓர் உருவம்
உடைந்த் கண்ணாடியின்
ஒவ்வொரு சில்லிலும்
ஒன்றின்பலமுகம்

மறந்தாயோ
மறைந்தாயோ
உடைந்த கண்ணாடியாய்
சிதறிக்கிடக்கிறது
உன் நினைவு.
மேலும் படிக்க... "நினைவுகள்."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.