Social Icons

Pages

Monday, March 30, 2009

காலணியைத்தேடி ஓடினேன்


அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவிய,அழைத்துபோகவேண்டுமென்றும்,உத்தரவிட்டார்.

அந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்டில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர். அதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது.ராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதிகாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்.அப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.


ராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.

அந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.

வசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் ! குரலில் நடையில் டிட்டோ. ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.

என்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ? ஹ்ம்ம்? நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணி.


காரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர, முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள்.

வசுதாரிணி என்னிடம்," அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.பட்டிக்காடுதான்.. இப்போ எப்படி இருக்கோ?" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.

"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ..." உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்.."யார் இல்லைன்னாங்க இப்போ? இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்" என்று (அ)சிங்கம் சீறியது.


வழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, "நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்"முணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.உடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது.

தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.கடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!)

மணி பத்து.

மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.
காரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்பெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்! ரொட்டிஒலி!?

சிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.வசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது," செருப்பை கார்லேயே விடலாமா?" எனக்கேட்டவள் உடனேயே,"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்பவே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்" என்று தீர்மானமாய் சொன்னாள்.

ராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், "மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே? கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே?அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்?" என்று சொல்லவும் , "ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'"என்று ஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.

எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு தொடர்ந்து இங்கும் மைபா பரிசு உண்டு :)))செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.

'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.


கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது? ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்!

உள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.உடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து.? கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா?" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.


'என்ன இப்போ உனக்கு? மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே?'நான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.


ஆ! இதென்ன மாயம்?பத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.நல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .காரணம் அங்கே.....காணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.


'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது? ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்?'வசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.

ஐயோ!

தேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன்.

எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.

அப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.

என்னாச்சும்மாநேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.

"தொலைந்தது அம்மாவின் செருப்புமட்டும்"

'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல?' பார்வையிலேயே அதட்டினார்


"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா.."எனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.

அரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.ஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் "செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்" என்றார்.

பேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு! சுத்தம்.!எல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.

அலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.கடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி! (அஞ்சடி ஆறங்குலமாக்கும்)

பழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும்! வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.கடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ?'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.

தமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்," வாங்கம்மா வாங்க.!" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.

ஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்மொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா?

"என்னங்க இவ்வளவுதானா செருப்புகள்? விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா?"சந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், "இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.

வேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே?

ட்ரைவர் பரிதாபமாய் '"மணி ஆச்சும்மா" என்றான்.

ஆமாம் மணி 11.50ஊப்ஸ்!12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.ஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.


"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே? " வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்..

நான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி?
ராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...

"ஓஹோ? என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்?" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.

"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...வசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள்.


பிறகு."கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ! தாங்க் காட்!"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்.


"தாங்க்காட்!"

நாங்களும் சொல்லிக்கொண்டோம்.


எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?


(மீள்பதிவு)
நன்றி...மஞ்சுளாரமேஷின் 2009 ஏப்ரல்மாதசிநேகிதி(மாத இதழ்)
மேலும் படிக்க... "காலணியைத்தேடி ஓடினேன்"

Thursday, March 26, 2009

பல் சுவைக்கவிதை!:)

அன்பர்களை வரவேற்கும்
புன்னகைக்குப்புதுமெருகாய்
சித்திரத்து எழில்முகத்தின்
முத்து மணிச்சரமாய்
உதட்டுக்கதவுக்குள்
உட்கார்ந்திருக்கின்றாய்!

செப்பும் மொழிக்கெல்லாம்
செம்மை அளிக்கின்றாய்
சோழிபோல் வடிவமதாய்
ஆழியெனும் எச்சிலிலே
அலையாமல் வீற்றிருக்கின்றாய்!

ரோஜாநிறத்தழகி
செந்நாப்பேரரசியை
ராஜாபோல் காக்கின்றாய்!

மண்ணுலகில் மக்களெல்லாம்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
உன்னுடையநற்கருணை
எந்நாளும்வேண்டி நிற்பர்.
இடையிடையே தோன்றினாலும்
இறுதிவரை தங்காமல்
நடுவினிலேமறைகின்றாய்
நாட்டியமும் ஆடுகின்றாய்!

உலகத்து உணவையெல்லாம்
சுலபமாய் உடைக்கின்றாய்
அசைகின்ற எந்திரங்கள்
ஆயிரமே இருந்தாலும்
கிறக்கின்றவிதமாகத்
திகழ்வது யார் நீதானே!

பலவாகத்திறமை
கொண்டதனால்தானோ
பல் என்று பெயர் கொண்டாய்
பல்போனால்சொல்போகும்
உள்ளேநீஇருந்தால்தான்
கொள்ளைஅழகுண்டாகும்!

பல் ஒன்றுபழுதானால்
பலநோய்கள் உடலுக்கே
ஆதலினால் பல்லுக்கு
பாதகங்கள் வாராமல்
காதலுடன் காத்திடுவோம்!
பத்திரமாய் பாதுகாப்போம்!


பின் குறிப்பு...(இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை:)
மேலும் படிக்க... "பல் சுவைக்கவிதை!:)"

Wednesday, March 25, 2009

இலக்கியக்காதல்!

அடிக்கடி தேடுகிறேன்
உன் கண்களை
பாதுகாப்பாய்
சில வினாடிகள்
பதுங்கிக்கொள்ள


என்னும் கனிமொழியின் புதுக்கவிதையில் காதல்உணர்வு மயிலிறகாய் மனசை வருடிப்போகிறதென்றால் மரபுக்கவிதையில் வரும் பெரிய திருமொழியில் காதலனைப்பிரிந்த காதலியின் நிலையில் அந்த உணர்வு இன்னொருவிதமாக இருக்கிறது!(சீதை-ராமன்)


சென்றுவார்சிலை வளைத்திலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில்பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரலடருமென்னையே..


வார்=நீண்ட
சிலை=வில்
வில்லியார்=வில்லை உடைய ராமன்
முன்றில்=இல்முன்(முற்றம்)
பெண்ணை=பனை
முளரி=தாமரை
கூட்டகத்து=கூட்டினுள்ளே உள்ள
அடரும்=துன்புறுத்தும்குளிர்ந்த சந்திரனின் கதிரொளி வாட்டும் வாட்டமும் அலைக்கின்ற கடலின் நிலைகண்டு யானேபடும் கவலையும் கண்ட முற்றத்துப்பனையின் மேலுள்ள கூடு ஒன்றில்,என் செவியில் நெருப்பை வாரிக்கொட்டுவதுபோல கூப்பிட்டு காதல்நோயில் வாடும் என்னை வதைக்கிறது என்கிறாள் தலைவி இப்பாட்டில்.

என் வேதனைக்கு ஏது காரணம்! எதிரிகள் இருக்குமிடம் சென்று தனது நீண்ட வில்லை வளைத்து இலங்கையை வென்றவனான வில்லையுடைய ராமனின் வீரமே காரணமோ(அறியேன்) முற்றத்து முளைத்து நின்ற பனைமரத்தின் மேலே தாமரை மலர்களாலும் தண்டுகளாலும் கட்டப்பட்ட கூட்டினுள்ளே இருக்கும் அன்றிற் பறவையின் குரல் என்னைத்துன்புறுத்துகின்றது.

வென்ற வில்லியார்......வெற்றியைக் கொண்ட வில்லை உடையவன்

முன்றில்மேல்பெண்ணை....வீட்டுமுற்றமருகே உள்ள பனைமரம் ஆகையால் குரலைக்கேட்டுத்தான் ஆகவேண்டும்

முளரிக்கூட்டகத்தன்றின் குரல்...... தாமரப்பூவாலும் , தண்டு,தாதுக்களாலும் கட்டிய பாதுகாப்பான கூடு எனவே அதற்குள் கைவிட்டு கூவாமல் இருக்க பறவையின் வாயினை அடைக்கவும் இயலாத நிலமை.


அடரும் என்னையே... காதல்நோயானது என்னையே அடர்ந்து துன்புறுத்தும் மற்றவர்களை அல்ல.
*************************************************************************************
இலக்கியத்தில் ஓர் ஆடவனின் காதல் நோயினை வெள்ளிவீதியார் சொல்வதைப்பாருங்கள்!

செம்புலப்பெயர்நீர்போல அன்புடைய நெஞ்சம்தான் கலந்தனவை என்கிற புகழ்பெற்ற காதல்கற்கண்டுப்பாடல் இடம்பெற்றுள்ள குறுந்தொகையில் காதலின் வலியை வெள்ளிவீதியார் அழுத்தமாகவும் நுண்மையாகவும் கூறுகிறார்.ஆற்றல்மிக்க கவிஞர் இவர்.

பொதுவாகவே கவிஞர்கள் வண்ணங்கள் தொலைத்த வானவில்லை சுமக்கும் தங்கள் ஆகாயத்தின் துயரத்தை தங்களின் அன்புதோற்றுப்போய்விடுமோ என்னும் ஆற்றாமையின் பரிதவிப்பை கவிதைகள் வழி கிடைக்கும் இளைப்பாறல்களில் தணித்துக்கொள்ள தங்கள் படைப்புகளை அளிப்பார்கள் என்பார்கள்.சங்ககாலத்திலும் அக இலக்கியங்கள் அதிகம் வந்துள்ளன. எப்போது வாசித்தாலும் நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ளும் உயிர்ப்பினைக்கொண்டவைகள் அந்தப்பாடல்கள்

வார்த்தைத்துளைகளை வடிவாகக்கொண்ட தமிழ்ப்புல்லாங்குழல்கள் இவைகள்!குழலை ஊதிடவரும் இதழ்நோக்கி இசையை அளிக்க எந்நாளும் காத்திருக்கும் புல்லாங்குழல்கள்!

இப்போது பாடலைப்பாருங்கள்..
ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோன்று கொளற்கரிதே.என்னும் இந்த குறுந்தொகைப்பாடலில், சூரியன் சுட்டெரிக்கும் பாறையின் உச்சியில் வெண்ணை உருண்டை ஒன்றுவைக்கட்டு இருக்கிறதாம், அதைக் கை இல்லாத ஊமை பாதுகாக்கிறானாம். சூரியக்கதிர்களின் வெப்பம் ஏற ஏற வெண்ணை உணங்கல் (உலர்ந்து)உருகத்தொடங்குகிறதாம்.

அவனோ ஊமை இப்படி வெண்ணை உருக்குகிறதே வேறுஇடம்கொண்டு வையுங்கள் என்று சொல்ல இயலாது .
கையும் இல்லை, எடுத்து அவனாகவே மாற்றிவைக்கவும் முடியாது.

தவிக்கும் அந்த ஊமையைப்போல , பாறைவெண்ணை உருகிப்பரந்துவருவதுபோல எனக்குள்ளே பரவும் காதல்நோயினைத் தாங்குவதென்பது தவிப்பாக இருக்கிறது என்கிறானாம் காதல்வயப்பட்ட ஒருவன், தன் தோழனிடம்.

எப்படி இருக்கிறது இலக்கியக்காதல்பாடல்கள் பார்த்தீர்களா!
மேலும் படிக்க... "இலக்கியக்காதல்!"

Thursday, March 19, 2009

மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!

எல்லாரும் வாங்க வாங்க!

என்ன இன்னிக்கு ஸ்பெஷல்னு கேட்கறீங்களா?

வேறென்ன...நாலுகதைகவிதை கட்டுரை கிறுக்கினப்போ கிடைக்காத புகழெல்லாம் இன்னமும் பலரால் சுவைக்கபடாத ஆனால் கல்லடிகண்ணடிமட்டும் பட்டுட்டு இருக்கிற ஒரு இனிப்புவஸ்துவால் வலை கலை உலகில் நான்பெரிதும் அறியப்படுகிறேன் இல்லையா அந்த வஸ்து தான் இன்னிக்கு எல்லார்க்கும்!!

அதுவேஇன்றையஸ்பெஷல்மெனு!

அதைமுதல்ல தட்டுல வச்சிட்டேனே!

எல்லாரும் எடுத்திட்டீங்களா ! ஆயில்யன் இது நெய்யில்செய்யும் இனிப்பு பேரு மைபா என்னும் மைசூர்பாக்கு! 2கூடவே எடுத்துக்குங்க என்ன!

அம்பிக்கு கேசரி என்றால் இஷ்டம். என்ன இப்போ மைசூர்பாக்கையே கேசரியா செய்யறதும் ஈசிதான்.:)

ஆமாங்க மைசூர்பாக் மெத்தட் மட்டும் சரி இல்லேன்னு வச்சிக்குங்க அது கேசரியா குழையும் இல்லேன்னா பாயசமா நெகிழும் இல்லேன்னா கேக்கா ஷோக்கா வரும் கடசில அணுகுண்டாவும் மாறும்!


எல்லாம் பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டுமல்ல மனித மனசுக்கும் பதம் அவசியம் என்பதை மைச்சூர்பாக் செய்யக் கற்றுக்கொண்ட ஆரம்பநாட்களில் தெரிஞ்சிட்டேன்! (ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்)

அதை விடுங்க...

எல்லார்வீட்லயும் பொண்ணுபாக்கவந்தா கேசரிதான பண்ணுவாங்க இல்லையா?
எங்க வீட்ல மைசூர்பாக்பண்ணினாங்க,ஏன்னா முதநாள் வந்த மாப்பிள்ளையின் அக்கா "என் தம்பிக்கு கேசரிய விட மைசூர்பாக் ரொம்பப் பிடிக்கும் நல்ல உருக்கின பசு நெய்ல செய்துதந்தா அவ்ளோதான் உலகையே மறந்துடுவான்!" என்றுசொல்லிவிட்டுப்போகவும் என் அம்மாவும், பையன் உலகைமறந்த நேரமாப்பாத்து தன்பொண்ணை நைசா'பிடிச்சிருக்கு'ன்னு சொல்லவச்சிடலாம்னுதிட்டம்போட்டமாதிரி மைசூர்பாக்கை செய்ய ஆரம்பிச்சாங்க.

அம்மாதனக்கு தெரிஞ்சமாமிகிட்ட கேட்டுதான் செய்தாங்க.. 1:3:3 என்று மாமி அளவு சொன்னாங்க அதாவது கடலைமாவு ; சக்கரை ;நெய்யாம்!

அம்மா ஒண்ணு மூணு மூணு ன்னு முணுமுணுத்துட்டே இருக்கறப்போ யாரோ மணி
2ன்னு சொன்னதுகாதுல விழவும் ரண்டுமூணு மூணுன்னு சொல்லிட்டே செய்ததில் அது
பதம்சரியாகவராமல்போனது.கேசரிமாதிரி காட்சிஅளித்தது. அப்பா ' கேசூர்பாக் 'என்றார்கிண்டலாக

பதட்டமா மறுபடி செய்தாங்கபாருங்க அப்போ அது
பாயசமாபோயிட்டது தண்ணீ அதிகமாச்சாம்!

மறுபடி குலதெய்வத்துக்கு வேண்டிட்டு அம்மா செய்யநினச்சப்போ அத்தை வீடுவந்தாங்க

"என்ன நீ! 1;3;3 எதுக்கு வண்டி நெய் விடாதே..நல்லா கூடுகட்டினமாதிரி பொரபொரன்னு மைசூர்பாக்கு வரணும்னா ஒரு நெய்போதும். ஒன்றரை சக்கரைபோதும்..இல்லேன்னா பாயசம்தான் போ " என்று சொன்னாங்களா அம்மா பயந்துபோயி நெய்யைக்கம்மிபண்ணிட்டாங்க.


பொண்ணு பாக்க எல்லாரும் பட்டாளமா வந்தாங்க.. ஸ்ரீரங்கம் சித்திரைவீதியே வாசல்ல வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிது!

//ஒஸர்ரம்மா ஒல்லியா இருக்காரே அதான் பையனாம்!

எங்க வேலையாம்?

பெங்களூராம்

கேசரி பண்ணவேண்டாம்னு அக்காக்காரி ஆணையிட்டுட்டாளாமே ! பொண்னோட அம்மா மைசூர்பாக் வில்லை போட்டுருக்கா போல்ருக்கு அதிசியம்தான் போ!

காலம் மாறிடுத்து மாமி!///


என்னவோ பலவேலைகளுக்கு நடுவில பொண்ணு பாக்க வந்தவர் போல என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இருந்த வாட்சையே அடிக்கடிப் பாத்துட்டு இருந்தார்...


(என் உடன்பிறப்பிடம் "உங்க அக்காவும் கதை கவிதை எழுதுவாங்களா உங்க அப்பாமாதிரி?"ன்னு
சாக்லேட்கொடுத்து உளவு பார்த்தகதை பலநாள்கழிச்சி தெரியவந்தது):)


"என்தம்பி பெண்பாக்க வரப்போ, டில்லில்லேந்து அவனோட ரண்டு ஃப்ரண்ட்சும் வருவாங்க" அப்படீன்னு


முதநாள் வந்துபாத்த அக்கா சொல்லீ இருந்ததால் அந்த
டில்லிநண்பர்களைப் பார்க்க நாங்க (என் உடன்பிறப்புகள் மற்றும் உறவுக்காரக்கூட்டம்)ஆவலோடு காத்திருந்தோம்..(ஸ்ரீரங்கத்துக்காரங்களுக்கு அப்போல்லாம் டில்லின்னா அமெரிக்காமாதிரி!!)


வந்தாங்கப்பா டில்லிக்காரங்க!

வேஷ்டியும் லொட லொடன்னு சர்ட்டும் அணிந்து தலையை வழிச்சி வாரிட்டு நெற்றிநிறைய விபூதிப்பட்டைல அடக்க ஒடுக்கமா அம்பி பதிவின்(அம்மாஞ்சி) பெயர்ல ஒருத்தர் , இன்னொருத்தர் திருமண்தரிச்சி திருதிருன்னு முழிச்சிட்டு!


நொந்து நூலானோம் நாங்கள்ளாம்.. !

"இப்பத்தான் மண்ணச்சநல்லூர்லேந்து டில்லிக்குப்போனவங்களாம்.. " என்ற உபரிதகவலை சின்னதம்பி அவங்ககிட்ட பேசி தெரிஞ்சிவந்து சொன்னான்.

நல்ல வேளை பொண்ணு பாக்கவந்தவர் நேவிப்ளூ சூட்ல வந்தாரோ நான் ப்ருந்தாவன சாரங்கால ரங்கபுரவிஹாரா பாட சம்மதிச்சேனோ!!


"உனக்குபிடிக்கும்னு மைசூர்பாக்பண்ணி இருக்காடா"

அம்மையார்(மாப்பிளையின் அம்மா) பெருமையாய்முழங்கினார்.

நான் பணிவாய்(!) நீட்டிய தாம்பாளத்திலிருந்து படுவேகமா ஒருமைபா வில்லையை எடுத்துட்டாங்க அந்தம்மா." நன்னாருடிம்மா" என வாழ்த்தி வேகமா வாய்லபோட்டுட்டாங்க.

அடுத்த நிமிஷம் க்கட்டக் என ஒருசத்தம்.

"பின்னாடி தோட்டத்துல மாமரக்கிளை முறிஞ்சுட்டுதா பாருடா வெங்கட்"

என்று அப்பா தம்பியை ஏவினார்.


பையனின் அம்மா கடவாய்ப்பல் ஒன்று கழண்டுவிழ அதை கையில் வைத்துக்கொண்டு முழித்தார்.

அப்பா என் அம்மாவை சமையற்கட்டுக்குக்கடத்திட்டுப்போனார்.

"போச்சு ..எல்லாம் போச்சு! நீ செஞ்சமைசூர்பாக்குல பையனின் அம்மா பல்லே பெயர்ந்துபோச்சு! அவ்ளோதான் இந்த வரன் ஹோகயா. நல்ல பையன்.பெங்களூர்ல நல்லவேலை. எல்லாம் உன் பாழப்போற மைசூர்பாக்கால போச்சு... ஒழுங்கா செய்யவேண்டியதுதானே?"

"நான் எட்டூருக்கு ஜோரா செஞ்சிருப்பேனாக்கும்! உங்க ஒண்ணுவிட்ட அக்கா வந்து குழப்பிட்டா..."


அப்பா-அம்மா யுத்தம் அடுப்படியில் ஆரம்பமானது.


"சித்த இப்படி வாங்கோ"


பையனின் அம்மா அழைத்தார்.

அப்பா வந்தார் பயந்தபடியே.


கையில் ஒரு பல்லை வைத்துக்கொண்டு
இருக்கற மீதப்பற்களினூடே பளிச் புன்னகைபுரிந்த பையனின் அம்மா,

"பல் எடுக்க டாக்டர்கிட்ட போகபயந்துட்டே இருந்தேன்.. ஏன்னா என்னோட ஏழு(அம்மாடியோவ்)டெலிவரிக்குக்கூட நான் ஆஸ்பித்ரிக்கு போனதே இல்ல ..அவ்ளோபயம் எனக்கு இப்போ செலவில்லாம பயமில்லாம ஏகமா ஆடித்தொல்லை கொடுத்துட்டிருந்த பல்லை விழவச்சபெருமையும்,மகிமையும் உங்க மைசூர்பாக்குக்கே சேரும். இதுக்காகவே உங்க பொண்ணை என்பையனுக்கு..."

மேலே இனி சொல்லத்தேவை இல்லைன்னு நினைக்கிறேன்!

பெங்களூர்வந்து புதுவீடு குடிவந்ததும்

" என்னங்க இன்னிக்கு மைசூர்பாக் பண்ணட்டுமா?"ன்னு நான் கேட்ட்போது

ஜானகிதேவி ராமனைத்தேடி இருவிழிவாசல்..... பாட்டு ரேடியோல கேட்கவும் சரியாக இருந்தது.

அன்னிக்கு முழிச்ச என் மறுபாதி(Better half))நான் மைசூர்பாக் செய்தால் மட்டும் வாயை மூடிக்கறார்!!!!(அடிக்கடி நான் மைபா செய்ய இதுவே காரணம்:)

மைபா மகிமை இத்தோடு முடிகிறது!


சரி பொறந்த நாளும் அதுவுமா ஒரு தன்னம்பிக்கைப்பாட்டுபாடலாம்னு தோணிச்சி..

இந்தமாதிரி ரிஸ்க் எடுக்கறது எனக்கு எப்பவுமேபிடிச்ச விஷயம் !பலரோட வலைத்தளங்களில் போய் படுத்தியும் இருக்கேன் !இங்கயும் இருக்கு உங்களுக்கு ட்ரீட்டா இந்தப்பாட்டு!!( கல்கில்லு விழுந்தா ஆயில்யன் காட்ச் பிடிக்கறதா (அ)சத்தியம் செஞ்சிருக்கார்!!

(என்னவோ தெரில்ல பாட்டு இங்க அப்லோட் ஆகல..எல்லாரும் தப்பிச்சீங்க ! வழிகிடச்சா மறுபடி இணைச்சிடறேன்:)
மேலும் படிக்க... "மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!"

Wednesday, March 11, 2009

பச்சைக்கலரு ச்சிங்குசாங்!
'அன்புள்ள கடக ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு உகந்த நிறம் பச்சை மற்றும் மஞ்சள்.."

காலைநேரப் பரபரப்பில் கையில் கத்தியுடனேயே(அட காய் கட்பண்ணிட்டு இருந்தேங்க:)) ஹாலிற்கு ஓடிவந்து ராசிபலன் கேட்பது வழக்கம். ஏனென்றால் ஒருநாளைக்காவது ஜோதிடம் பலிக்கிறதா என்று பார்க்கத்தான்! இன்று உங்களூக்கு நற்செய்தி என்பார்கள், தபாலில் கதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்தி திரும்பி வரும்!! என்ன இன்னிக்கும் தக்காளிரசமா என்று
ரங்கமணி முணுமுணுப்பார்! அப்பாக்கு இருமல் நாலுமல் எட்டுமல்னு அதிகமாச்சுக்கான்னு தம்பி போன் செய்வான்.

இப்படித் தொலைக்காட்சியில் ஜோதிடப்பலன் கூறும்போது கடைசியாகச் சொல்லி முடிக்கிறார்கள், அன்றைய தினத்திற்கு, நமக்கு ஏற்ற நிறங்களைப் பற்றி.

உகந்த நிறமென்பது அவரவர் மனதை பொறுத்தது அல்லவா? குயிலுக்கு நிறமுண்டு, அதன் குரலுக்கு நிறமுண்டா எனக் கவிஞர்கள் கேட்பார்கள்.

'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்று எழுத்தாளர்கள் கேட்பார்கள்..

மனிதர்க்கு மட்டும் மனசுக்கும் நிறமுண்டாம். அந்த நிறத்திற்கும் குணம் உள்ளதாக எனது டாக்டர்தோழன் சொல்கிறான்..

தனக்கு வேண்டிய உணவு, உடை, வீடு எல்லாவற்றிலும் தான் விரும்பும் நிறங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள மனிதரை, அவர் விரும்பும் வர்ணங்களை வைத்து அவர் குணத்தைக் கூறிவிடலாம் என்ற ஸ்நேகிதன் தொடர்ந்தான்.

பச்சை நிறம்:-இதை விரும்புபவர்கள் அறிவாளிகள்; பல விஷயங்கள் தெரிந்தவர்கள்; எதிலும் நிலையான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த கருணையுள்ள இவர்கள், மாறுதலையும் எதிர்பாராத விஷயங்களையும் விரும்பமாட்டார்கள்.

வயலட்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள், தீர்க்கதரிசனம் மற்றும் உள்ளுணர்வு மிக்கவர். ஆன்மீகத்தில் ஆர்வமுடையவர். அமானுஷ்ய சக்தியும், மனோவசீகரமும் காணப்படும் எல்லா உயிரிடத்திலும் அன்பு கொண்டிருப்பவர்.

சிவப்பு:-சுறுசுறுப்பானவர்கள்; பரந்தமனப்பான்மை கொண்டவர்கள். நல்ல பண்புகள் கொண்டவர்கள். தனக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை எப்படியும் அடைந்து வெற்றியுடன் வாழ்வார்கள்.

மஞ்சள்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள் எப்போதும் பிரகாசமாகவும், மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மையுடனும் விளங்குவார்கள். இவரிடமிருந்து மற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கும். இவர் வாயாடியாக இருந்தாலும் இவருடைய பேச்சு எல்லோராலும் விரும்பி வரவேற்கப்படும். வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் மிகுந்த ரசனை கொண்டிருப்பார்கள்.

நீலம்:-மிகுந்த கலைநுணுக்கம் மற்றும் ஓவியத்திறன் பெற்றிருப்பார். கற்பனை சக்தி நிறைந்து தனது எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் மனது கொண்டவர். தான் காணும் கனவுகளுக்கு உயிர் கொடுத்து அதனை சாதிக்கும் திறன் பெற்றவர்.

பிரவுன்:-இந்த நிறம் விரும்புகிறவர், வாழ்க்கையில் நிலையான, பாதுகாப்பான சூழ்நிலையை தனக்காக உருவாக்குவதுடன், தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த நன்றியும் விசுவாசமும் காட்டுவார். தன் மீது தனது துணைவி அல்லது துணைவன் காட்டும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மிகவும் ஏங்குவார். நினைத்ததை நினத்தபடி பேசிவிடுவார்.

சாம்பல்:-இந்த நிறம் பிடித்தவர்கள் சுயமரியாதை சிந்தனை உள்ளவர்கள். தற்சார்பு மிக்கவர். தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்ளவும் தயங்க மாட்டார். எந்த ஒரு குழுவிலும் முழுமையாக இடம் பெறவோ ஈடுபடவோ மாட்டார்கள். மற்றவர்களூடன் உறவையோ நட்பையோ ஏற்படுத்திக் கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.

கறுப்பு:-இந்த நிறம் விரும்புகிறவ்ர்களிடம் பிடிவாதம் நிறைந்திருக்கும். ஆனால் மனதில் சூட்சமமும் எதிலும் ஒரு கவர்ச்சியும் இருக்கும். மனமுதிர்ச்சி, வாழ்வினை நன்கு புரிந்து கொள்ளும் தன்மை, அதே நேரத்தில் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை சரியான பாதையில் செலுத்தி அவர்கள் ஆற்றலை வெளிப்பட உதவும் பண்பு கொண்டவர்கள்.

இப்படி விளக்கிய டாக்டர் மேலும் சொன்னது..

அன்றன்றுக்குரிய கிரகத்தின் வண்ணத்தில் ஆடை அணிவது அந்த கிரகத்தின் முழுப்பலனைப் பெற சாத்தியமாகுமாம்.


பொதுவாக ஞாயிறு சூரியனின் நாள். சூரியனுக்குரியது சிவப்பு ஆகவே அன்று சிவப்பு உடை அணிவது நல்லது, இதுபோல திங்கள் சந்திரனுக்காய் வெண்மை, செவ்வாய் ஆரஞ்சு, புதன் பச்சை, வியாழன்மஞ்சள் வெள்ளி சுக்கிரனது நாள் ஆகவே வெண்மை, சனிக்கிழமை நீலம் அல்லது கறுப்பு. நாளுக்கேற்ற உடை அணிவதால் மன சஞ்சலங்கள் குறைகிறது. (நிச்சயமாக இது மூடநம்பிக்கை இல்லை என்பது டாக்டரின் வாதம். எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வேறவிஷயம்:)))

நம்மைச் சுற்றி உள்ள ஒளியே ஏழு வண்ணங்களின் சேர்க்கைதான். அந்த ஒளி நம்மை ஊடுருவதுடன், நம் கண்களின் வழியே மூளைக்கும் சென்று செயலாற்றுகிறது. அந்தப் புறஒளியின் ஆதாரமே சூரியனும் சந்திரனும் என்பதால்தான் இவை இரண்டையுமே இறைவனின் கண்களாக உருவகப்படுத்துகின்றனர். இதுதவிர ஒவ்வொரு மனிதனையும் சுற்றி இயல்பாகவே ஒரு ஒளிவட்டம் உள்ளது.( தம்பிராகவ் குறும்பாசிரிக்கிறார், இதைப்படிச்சிட்டுன்னு நினைக்கிறேன்:)))

தெய்வீகத்தன்மை வாய்ந்த மனிதர்களைச் சுற்றி இயல்பாகவே இது இருக்கும்.

நம் ஒவ்வொருவரின் உடலின் வெளியே 'ப்ரபை' எனச் சொல்லப்படும் 'AURA' ஒளிவட்டம் இருந்தாலும், தெய்வீகமான மனிதர்களைப்போல அதற்கு அவ்வளவு சக்தி இல்லாததால் நாம் அதைக் காண முடிவதில்லை. அந்த ஒளிவட்டத்தை ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், 'kryllionphotography' என்ற வித்தியாசமான ஒரு காமிரா மூலம் படம் பிடித்துள்ளனர். நமது 'பிரபை'யின் நிறம், நமது சக்தி, அதில் ஏற்படும் நோய் போன்றவற்றால் மாறிவிடும் தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு உடலில் நோய் வருமுன்பாக அவரது 'AURA' நிறம் மாறி நோய் வருவதை உணர்த்திவிடும்.

கலர் தெரபி என்னும் நிற வைத்தியத்தில் விதவிதமான நிறங்களில் உள்ள காய்கறிகள், கனிகள், இலைகள் ஆகியவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ உண்ணுவதால் கொடிய நோய்களூம் தடுக்கப்படுகின்றன.

ஞாயிறு தக்காளி ஜூஸ், திங்கள் ஆப்பிள் அல்லது முள்ளங்கி, செவ்வாய் ஆரஞ்சு அல்லது கேரட், புதன் மூலிகைச்சாறு, வியாழன் எலுமிச்சைப்பழச்சாறு, வெள்ளி கொய்யா அல்லது வாழைப்பழம், சனிக்கிழமை கறுப்பு திராட்சைசாறு என தினமும் இப்படி அந்தந்த நாளின் நிறத்தோடு ஒத்துப்போகும் பழச்சாறு அருந்துவது உடலிற்கு நல்லது. டாக்டரின் உரை இத்துடன் முடிகிறது!!

ஆக... நிறங்கள் ஏதோஒரு விதத்தில் நம்மை கிறங்க வைக்கின்றன.


வானவில் வர்ணங்கள் பார்க்கும் போதே பரவசம்தான்.. வர்ணங்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக இருக்கவேண்டும்

இளைஞர்கள் கூட அதனால்தான் அழகான பெண்களைப் பார்த்து, 'கலர்' என்கிறார்களோ?


(ஹோலிதினம் என்பதால் இந்தப்பதிவை இடத்தோன்றியது வேறஒண்ணுமில்ல:):)
மேலும் படிக்க... "பச்சைக்கலரு ச்சிங்குசாங்!"

Saturday, March 07, 2009

மகாசதி!நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.

அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.

எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.

அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!


"சுவாமி!"

அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.

"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்

சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது.

"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்

"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"

"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."

"நீ என்ன சொல்கிறாய்?"

"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."

"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."

"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."

அமுதனார் மெல்லச்சிரித்தார்.

"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"

சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.

கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.

காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.

ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரைதப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?

அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.

அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.

அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.

ஆயிற்று! இனிபயமில்லை.

இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.

அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது

"யார் அங்கே?"

குரல் கணீரென்றுவந்தது.

அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.

"அமுதனார் சுவாமிகளா?"


குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .

வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.

"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.

"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.

அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.

"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"

"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."

"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"

"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"

"நல்லது. சொல்கிறேன் சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அமுத்னார் பதைபதைத்தார் .

"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"

"ஆமாம்."

"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே. அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே."


"ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"

"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"

"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"

சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.

" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"
என்றார் படபடப்புடன்.

அவ்ள் சிரித்தாள்.

"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"


இப்போது அமுதனார் சிரித்தார்"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்

"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.

அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.

"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"

"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்த்மற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்

பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...


"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.

"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"

என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.

அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.

அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.

உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.

"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"
என்றுகேட்டபடி தளபதி வந்தான்.

அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .


'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப் ோயிருக்கலாம்..ஹ்ம்ம்...'

அவளைமானசீகமாக சபித்தார்.

"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.

வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.

தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.

அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.

உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!


"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான்.

சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் .

அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.

அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.


"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி

"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்."ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்!

ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .


அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'

அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,


"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.

வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.

தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!

"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!
வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீ, மறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.

அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்.

அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.

'எப்படியாவது ந்கைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'

மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .
அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.


கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது

ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!

அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.

அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .

இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!

கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?

வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!

இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!

ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!

பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.

கண்வ்ழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.

தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.


உருண்டுதலைசிதறி
கீழே
கீழே
கீழே
அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.

ஐயோ!

அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.

வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!

அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!


மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.

ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.

வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.
அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.

அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன.

அமளிதுமளியானது ஊர்.


சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம்

"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.

அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"

அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.

கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.


தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!

ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !
இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு,
அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.


( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி பெண்கள் தினமான இன்று எழுத நினைத்ததை என் அரங்கன் செயலாக்கிவிட்டான். )
மேலும் படிக்க... "மகாசதி!"

வட்டத்துக்குள் பெண்.விரைந்து வெளியே வா பெண்ணே!
விதிமீது பழிபோட்டு
வீட்டுக்குள் அடைந்துகிடந்ததுபோதும்
வெளியேவா பெண்ணே
உலகம் உனக்காகக் காத்திருக்கிறது!

அடிமையாய் வாழ்ந்ததுபோதும் பெண்ணே!
அணு உலைகளை ஆராய்ச்சி செய்து கொடு
அரிசிச்சோற்றை ஆக்கமட்டுமா உன் கரங்கள்
ஆகாயம்வரை உனது கரம் நீளட்டும்!
குழந்த சுமக்கமட்டுமா நமக்கு கருவறை
குவலயம் படைக்கும் திருமறையும் நாம் தானடி!

சடங்குகளுடன் சரிந்துபோகாமல்
சரித்திரம் படைக்கவும் சாதனைகள் புரியவும்
சட்டென்று எழுந்து வாராயடி!

நம் கண்களின் ஒளியில்தான்
சூரியக் கதிர்களுக்குக் கனல்
கிடைக்கவேண்டும்
நம் கால்களின் பாதையில்தான்
கானக முட்களுக்கு
கண் தெரியவேண்டும்
நம் கைகளின் எழுத்துக்களில்தான்
உலகமே உன்னதப்பட வேண்டும்

அதற்கு..
பதுங்கியும் ஒதுங்கியும்போகாமல்
புதுமைப்பெண்ணாய்
நிமிர்ந்து வா பெண்ணே!

பின்குறிப்பு!

(நேற்று இந்தக்கோலத்தை வாசலில்போடும்போது பெண்ணுருவத்தைமட்டும் முதலில் போட்டுவண்ணப்பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்துவிடுவார்களோ என பெண்ணைச்சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகாபோல! இந்தக்கோடு அதாவது பெண்வட்டம்பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்.)

அவர்கள்..

ஒண்ணுமில்லசும்மா என்று சொல்லி வலைப்பூவினை அதிரவைக்கும் அப்துல்லா

தமிழினை அழகுறத்திகழவைக்கும் திகழ்மிளிர்

ஆன்மீகக்கட்டுரைகளில் அசத்தும் கண்ணபிரான் ரவிசங்கர் எனும் கேஆர் எஸ்!


மூவரும் இந்தப்பொறுப்பினை வேறுமூவருக்குக்கொடுத்துப்பார்க்கலாம்.பெண்பற்றிய சிந்தனையை உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

ஒரே நிபந்தனை இந்தக்கவிதைச்சங்கிலி ஆண்களுக்குமட்டுமே ! ஆமாம் இந்தப்பெண்கள்தினத்தில் நாங்கள் உங்களை மதிக்கிறோம் அதற்காகவே இந்த சலுகை உங்களுக்கு!
மேலும் படிக்க... "வட்டத்துக்குள் பெண்."

Thursday, March 05, 2009

காத்திருக்கிறேன். வா!
காத்திருக்கிறேன் வா!இந்த தலைப்பில் நான் எழுதிய மார்ச்மாதக் குடும்பநாவல்(ராணிமுத்துபோல இதுவும் ஒரு பத்திரிகை)
கடைகளில்கிடைக்கும்,அனைவரும் படித்துக்கருத்து சொல்லும்படி கேட்டுக்கறேன்!
நன்றி
ஷைலஜா
மேலும் படிக்க... "காத்திருக்கிறேன். வா!"

Tuesday, March 03, 2009

சின்னச்சின்ன கவிதைகள்!

முதியோர் இல்லத்தில்
மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.
******

பூட்டியே கிடக்கிறது
இருபத்து நாலுமணிநேர
இலவசசேவை மையம்

******************

அகப்பட்ட போதிலெல்லாம்
ஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!

********

கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
மேலும் படிக்க... "சின்னச்சின்ன கவிதைகள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.