Social Icons

Pages

Sunday, February 22, 2015

ஆனந்தச்சிரிப்பு!!!


 • (இப்படி  ஒரு படம் வல்லமை தளத்திலிட்டு கவிதை கேட்டார்கள் அதற்கு நானெழுதிய கவிதை இது:)

 • பொதிகைமலைத்தென்றலென சிரித்தபடி
 • பூ நெஞ்சை வருடும் இந்தப்பூவையர்கள்
  பதிமதுரை தமிழ்ச்சங்க புலவர் கண்ணில்
  பட்டிருந்தால் பாடலொன்று பரவி வந்திருக்கும்!
  நதிவளரும் வெள்ளமெனக் கவிஞர் நாவில்
  நாளும் எழும் நற்றமிழின்  அமுத தாரை
  அதிமதுர அழகு நிறை மங்கையரின் இந்த
  ஆனந்தச்சிரிப்பிற்காய் அளிப்பார்  பாரை!
  -

மேலும் படிக்க... "ஆனந்தச்சிரிப்பு!!!"

Saturday, February 21, 2015

அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்!


அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்
இன் முகம் திருவருள் விலகிடும் பேரிருள்
உண்மையின் உறைவிடம் உன்னத இருப்பிடம்
கண்களில் தாய்மை கனிவது இனிமை!

அரவிந்த வழியில் பணி ஆற்றிய பேரொளி
கரமது குவிகையில் தெரியும்  நல் ஒளி
பொய்மையை அறுக்கும் பொன் மகள் பாதம்
புன்மையை விரட்டும்  அன்னையின்  அருள் பதம்!


https://www.youtube.com/watch?v=Cw0lDr16iZA   ...சுப்புத்தாத்தா எனும் சுரிசிவா அவர்களின்  குரலில் இந்தப்பாட்டை இங்கேகேளுங்கள்!

மேலும் படிக்க... "அன்பின் பிறப்பிடம் ஆறுதல் பெறுமிடம்!"

Tuesday, February 17, 2015

நமசிவாய!

அஞ்செழுத்து என்பது ‘நமசிவாய’ என்னும் சொல்லைக்குறிப்பதாகும்.. திருஞான சம்பந்தர் , எல்லா மந்திரங்களும் தோன்றுவதற்கு ஏதுவாகிய மூலமந்திரம் சிவபெருமானது திருவைந்தெழுத்தே என்கிறார்.

பதினோரு பாடல்கள்  கொண்ட பஞ்சாக்கரத்திருபதிகத்தைப்பாடி அருளியவர் சம்பந்தப்பெருமான்.
இந்தப்பதிகத்தின் முதல் பாடலாகிய’துஞ்சலும் துஞ்சலிலாத போழ்திலும்’ என்னும் பாடலில்  கூறப்பட்டுள்ள  கருத்து அழகானது அர்த்தம் மிக்கது.

எடுத்த எடுப்பிலேயே  ‘உறங்கும் போதும்’ என ஆரம்பிக்கிறார். அதாவது  தூங்கும்போதும் விழித்திருக்கும்போதும் அஞ்செழுத்தை ஓத வேண்டுமாம்.

மார்க்கண்டேயரின் உயிரப்பறிக்க  வருகிறான் யமன். அவனை உதைத்து வீழ்த்தியது நமசிவாய என்னும் அஞ்செழுத்து மந்திரம் என்கிறார். திருவைந்தெழுத்தை சொல்வோருக்கு யமபயம் இல்லை என்பதான  அந்தப்பாடல் இதுதான்.

துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.


நமசிவாயபதிகத்தில்  நாவுக்கரசர் பெருமான் தனக்கு சமணர்கள் இழைத்த கொடுமையின்போதும் நற்றுணையாவது நமசிவாயமே  என இருந்த நிலையினை விளக்குகிறார், இந்தத்திருப்பதிகப்பாடல்கள் பத்தும்  அஞ்செழுத்து மகிமையை சிறப்பாகப்போற்றுகிறது. சிவம் வருமுன்னே பக்தர்களை விரைந்துவந்து காப்பாற்றுவது  நமசிவாய என்னும் அஞ்செழுத்தாம்!திருநாவுக்கரசர் பாடல்கள் எல்லாமே  தேன் தான்  அதிலிருந்து ஒரு துளியாக  இப்பாடல்மட்டும்

இடுக்கண்பட்டு இருக்கினும், இரந்து யாரையும்,
விடுக்கிற்பிரால்! என்று வினவுவோம்அல்லோம்;
அடுக்கல்கீழ்க் கிடக்கினும், அருளின், நாம் உற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவேநமசிவாய என்னும்  மந்திரத்தை   ஓதுவோர் ஓயாமல் அதனை உருவேற்றினால் நாளடைவில் அவர்கள் நாவில் அவர்களை அறியாமலேயே அஞ்செழுத்து ஒலித்துக்கொண்டிருக்கும். ஆகவே அவர்கள் இறைவனை மறந்தாலும் அவர்கள் நாக்கு இந்த மந்திரத்தை ஒலிக்க மறக்காதாம். அவர்கள் நாவினில் நமசிவாய நாமம் நடமாடிக்கொண்டிருக்குமாம் உள்ளத்தை உருக்கும்  பாடலை இயற்றியவர் சுந்தரர்.

சுந்தரர் இப்படி அருளும் இந்தப்பாடலின் அழகினை ஆழ்ந்த பொருளை அனுபவிப்போம்!

மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்
கற்றவர் தொழுதேத்துஞ் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே.
(சிவராத்திரி தினமான  இன்று சிவனை  வேண்டி நமசிவாய  என நாவினிக்க உரைத்து அருள்பெறுவோம்)
மேலும் படிக்க... "நமசிவாய!"

Friday, February 13, 2015

நின்னையே ரதியென்று....


காதல் புதிதா  , பழசா?

நமது  கலை இலக்கியங்களில்  ரதியும் மன்மதனும் காதலுக்கான கடவுளர்களாக  உள்ளனர். நமது  கோவில்களில் பலவற்றில் ரதி-மன்மதன் சிலைகளை  பார்க்கலாம்.

ரோமானியர்களுக்கும் காதல் புதிதல்ல.அங்கு ஆண் காதல்கடவுளுக்குப்பெயர் குபிட் (cupid)பெண் காதல் கடவுள் வீனஸ்! பொன் நிற சிறகுகளுடன் குபிட்டும்  மன்மதனைப்போலவே கைகளில் மலர் அம்புடன் காட்சி தருகிறான்! 

அழகின் இலக்கணத்திற்கு ரதி-மன்மதன்  என உவமை  சொல்கிறோம்
ரதி மன்மதனுக்கு  கோவில் இருக்கிறதா? மதுரை-திருப்பரம்குன்றத்தில் உள்ள ரதி -மன்மதன் சிலையில் ரதியின்  நீண்ட கேசத்தின் அழகு  கண் கொள்ளாக்காட்சிதான்.  ஐந்துவாரத்திற்கு இந்த சிலைகளுக்கு மஞ்சளைப்பூசி.வந்தால் திருமண பந்தம் கிடைக்குமாம்!
சிலப்பதிகாரகாலத்திலேயே  மன்மதனுக்குத்தனிக்கோயில் இருந்திருக்கவேண்டும்.

கோவலன் தனியாக சென்றபின் பிரிந்துவாடும் கண்ணகிக்கு அவள் தோழி இப்படி சொல்கிறாள்.
“காம வேள் கோட்டத்தில் உறையும்  காமக்கடவுளைத்தொழு. அவரை வழிபட்ட மகளிர் ஒருபோதும் தம் கணவ்ரைப்பிரிவதில்லை.
ஆக மன்மதன் அன்றே காமற்கடவுளாய் கருதப்பட்டான்.
கர்னாடகத்தில் பலகோவில்களில் ரதி-மன்மதன் சிறபங்கள் உள்ளன.

ஜெய்ப்பூர் அருகேஅப்ஹனேரி என்று ஒரு சிற்றூரில்  ஹர்சத் மாதா கோயில் இருக்கிறது. இங்கு மன்மதன் ரதியை தரிசிக்கலாம்,இந்தகோவிலின் குளம் அமைக்கப்பட்டுள்ள விதம் ஆச்சர்யமானது.மிக ஆழமான  இந்தக்குளத்தில் படிக்கட்டுகளில் இறங்கி  தண்ணீரைத்தொட அமைக்கப்பட்டுள்ள முறை நம்மை வியக்கவைக்கிறது!

ஸ்ரீவில்லிபுத்தூர் திருமோகூர் மதுரை மீனாட்சிகோயில் திருமெய்யம் உத்திரமேரூர் என்று  பல இடங்களில் ரதி-மன்மதன் சிலைகளை நாம் தூண்களில்  காணலாம்!(ஸ்ரீரங்கத்தில் பார்த்த நினைவு இல்லை. ஒரு தூணில் ரதிபோல அழகான் பெண் கண்ணாடியைக்கயில் வைத்துப்பார்க்கும் சிற்பம் கொள்ளை அழகாய் இருக்கும்)

ரதி மன்மதனுக்கென்றே தனி கோயில் இருக்கிறதா?
எப்படியோ காதல்  தமிழருக்குப்புதிதல்ல  என்று தெரிகிறது!

அறிவுக்கு ஆயிரம் கண்கள் இதயத்திற்கோ ஒரே கண் அது காதல் கண்! இதை நான் சொல்லவில்லை இங்கர்சால் சொல்கிறார்!


நதிபோல காதல்  தன்னைத்தீண்டுவாரிடமெல்லாம் தன்னைப்புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. நதி பழசு  நீர் புதிதல்லவா?......(காதல் மொழி தானாக வருகிறது:)

எல்லா இடங்களிலும்  காதல் உணர்வில் கண்களின் மொழி  ஒன்றுதான்!
மேலும் படிக்க... "நின்னையே ரதியென்று...."

Thursday, February 12, 2015

காற்றாகக் கடக்கின்றாய்!

உன் நட்பு வேண்டித்தான்
என் இருகரங்களை நீட்டுகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு
எப்படி சாத்தியம்?;

வசப்படுத்த நினக்கும்போதெல்லாம்
வாராது நழுவுகிறாய்
கையணைப்பில் அடங்க மறுக்கும்
காற்றாகக் கடக்கின்றாய்!

மணல் பிரதேசங்களை மூழ்கடித்து
நுரை சுழித்தோடும் வெள்ளமென
பிரவாகமெடுக்கிறது என் ஆவல்

பனி படர்ந்த சோலைகளுக்குள்
படர்ந்து விரிகிறது
பூக்களுக்கான என் கனவு

சில்லென்ற காற்றில்
சிறகடிக்கும் மழைத்தும்பிகள்
சேர்க்க வேண்டும் உன்னிடம்
என் மகரந்தங்களை. 

நில வெ(வொ)ளியில் திரிகிறது
என் காதல் நினைவுகள்
அறுசுவை என்பது உணவிற்கு
அழிவில்லா காதலுக்கு 
அத்தனையும் சுவைதானே!
’இச்’சுவைதவிர இன்னும்
இனிதான சுவையும் உண்டோ!
அச்சுவை பெறினும் வேண்டேன்
அன்பினும் காதல் இனிதே!

மேலும் படிக்க... "காற்றாகக் கடக்கின்றாய்!"

Friday, February 06, 2015

கனவுகள்!
நனவில் வாரா நிகழ்வுகள் எல்லாம்
கனவில் வந்தே கரையும் மறையும்
கனவுகள் காணா மனிதன் இல்லை
கனவு கண்டே காலம் கடத்தலாம்-- 
கற்பனைச்சிறகுகள் கனவில் பறக்கும்
காத தூரம் அழைத்துச்செல்லும்
கந்தர்வலோகம் காதல் கன்னியர்
அந்தரங்கப்பெட்டகமாகும் கனவு
கனவுகள் மாயக்கண்ணாடிகள்
நிஜத்தைக்காட்டா போலிகள்
கண்டபடித்திரியும்
இருட்டுக்குதிரைகள்
உறங்கும் மனிதனிடம் அண்டி ஒளியும்
உன்மத்தப்பிசாசுகள்
கனவில் எழுதி மடித்த கவிதைகள் எல்லாம்
காலைஎழுந்ததும் காணாமல் போகும்
கனவில் கட்டிய மாளிகை எல்லாம்
நனவில் சரிந்து விழுந்திருக்கும்
கனவுகளுக்கும் பலன்கள் உண்டாம்
மெய்ப்படும் என்றாவது என்றே
கனவு காணும் மனிதனின் மனது!

மேலும் படிக்க... "கனவுகள்!"

Tuesday, February 03, 2015

தைப்பூசத்திருநாளிலே...!


பூச நாளின் பிரதான தேவதை குரு பகவான். கோள்களில் ஞானம் தருபவர். அது போல் நட்சத்திரங்களில் பூச நட்சத்திரம் 
சிறப்பு வாய்ந்தது. 

 
ஆதலால் தைப்பூசத்தன்று புனித தீர்த்தத்தில் நீராடி, குரு பகவானா கிய பிரகஸ்பதியையும், குருவின் குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் வழிபடுவதால் கல்வி ஞானத்தில் சிறந்து விளங்கலாம்.

தைப்பூசம்........
தைப்பூசமென்பது தை மாதத்துப் பூசத்திருநாள் எனப்படும். தை என்பதற்குப் பல பொருள்கள்  இருக்கின்றன. 
 
 தைக்கத் தக்கவை. தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று(நடனத்தில் தா   தை  என்று வருமே அந்த தை)
 
திருச்செந்தூர்  இன்று அமர்க்களப்படும்...இன்னும் பல  சிறப்புத்தகவல்கள்  இருக்கும் எனக்குத் தெரிந்த  தை  பகிர்ந்துகொள்கிறேன்.
 
சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக்கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன்.
தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொண்டு கொடுப்பார்.மயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள், திருவரங்கள் அந்நியப் படையெடுப்பால் ஆக்கிரமிக்கப் பட்ட பொழுது திருவரங்கன் சாந்நித்யத்தை ஒரு கும்பத்தில் ஆவாஹனம் செய்து சமய புரத்தில் (அன்றைய பெயர் சமர புரம் = சமர் சண்டை) புதைத்து விட்டுச் சென்றனராம், அதனால் தான் சமய புரம் திருவரங்கன் கோயிலுடன் இணைக்கப் பட்டது.

 "கொடுங்கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர் கொண்ட படி காட்சி தந்தேன் உனக்கு" என்று சமய புரத்தைப் பற்றி எழுதிஇருக்கிறார்  கண்ணதாசன்.


 ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது..கொள்ளீடக்கரையில்  அப்போது கூட்டம்  அதிகமிருக்கும்..கடைகன்னி(கண்ணி?:) என்று  அமர்க்களப்படும் ..பாவாடைதாவணிகாலங்களில்  அந்தப்பௌர்ணமி நிலவில் நதிக்கரையில்  அடித்த கொட்டங்கள் மலரும் நினைவுகள்!

பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.
 
 
மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

பாடல் இதுதான்.
 
 

கும்பகோணத் திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத் தலம். இங்கு காவேரி யானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக் கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய தன் ஐந்து பத்தினிகளுடன் தேரில் பவனி வருவார். 
 
 
 
கடவுள் ஜோதி வடிவில் இருக்கிறார் என்று கூறி ஜோதி வழிபாட்டை வள்ளலார் தொடங்கி வைத்தார். வடலூரில் அவர் தொடங்கி வைத்த தைப்பூசம் ஜோதி தரிசனம் 144 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்துள்ளது.இன்று நடப்பது 144 -வது ஆண்டு தைப்பூசம் ஜோதி தரிசனம் ஆகும். சத்தியஞான சபையில் அமைக்கப்பட்டுள்ள சதுர பீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் இன்றும் அணையாமல் இருக்கிறது.


அந்த தீபம் பக்தர்கள் பார்வைக்கு காட்டப்படுவது தான் ஜோதி தரிசனம் ஆகும். வள்ளலர் தீபத்துக்கு முன்பு 6.9 அடி உயரம் 4.2அடி அகலத்தில் கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக ஜோதியை தரிசிக்க வேண்டும். கண்ணாடிக்கு முன்பு 7 திரைகள் பொருத்தப்பட்டு இருக்கும். அந்த திரைகள் ஒவ்வொன்றாக ஆகற்றப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் பூசம் நட்சத்திர தினத்தன்று ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது 6 திரைகள் மட்டும் அகற்றி ஜோதி காண்பிக்கப்படும். தைப்பூசம் தினத்தன்று மட்டும்தான் 7 திரைகள் அகற்றப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். 7 திரைகள் அகற்றபடும் போது ஜோதியை பார்ப்பது விசேஷ சக்தி கொண்டது.

"நடனம் ஆடினார்  என்ற பாடலில்  சரணத்தில் அஷ்டதிசையும் கிடு கிடுங்க
சேடந்தலை நடுங்க

என்று ஆரம்பித்து முடிவில்  கோபாலகிருஷணபாரதி   "தைப்பூசத்தில் பகல் நேரத்தில்  "
நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே கனக சபையில்   " என்று வசந்தா  ராகத்தில் அமைந்த
பாடலும் இதன்  பெருமையை உணர்த்துகிறது
 
 தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார். உலக நாடுகளில், தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. மலேசியாவில் மட்டுமே.
மேலும் படிக்க... "தைப்பூசத்திருநாளிலே...!"

Sunday, February 01, 2015

கவிதையும் கற்பனையும்!

கவிதைப்பொருளாம் தாமரையை
கண்டு களிக்கும் கதிரவனே!
உவகைப்பொருளாய் தாமரையும்
உன்னைப்பார்க்கத் துடிக்கின்றாள்!

நாளும் பொழுது மலர்கையிலே
நாதன் உன்னை வரவேற்க
வாளின் விழியாள் முகம் மலர்ந்து
வானம் நோக்கிச்சிரிக்கின்றாள்!

சிரித்த வனப்பில் மனம் மயங்கிச்
சிவந்த கதிரைப்பலகூட்டி
கரத்தை நீட்டி நீ அணைக்கக்
கமலப்பெண்ணும் களிக்கின்றாள்!

எனினும் அந்தத்தாமரையின்
இதயம் புகுந்த வண்டினங்கள்
தினமும் தேனைப்பருகிவரும்
சேதி நீயும் அறியாயோ?

எட்டி  இருந்தே  அவள் அழகை
ஏத்தும் மக்களைச்சுடுகின்றாய்!
தொட்டுத்திரியும் வண்டுகளைத்
தட்டிகேட்க வருவாயா?

(நன்றி   கவிதையை பிரசுரித்த  துபாய்  தமிழ் இதழ்  தமிழ்த்தேர்!)
மேலும் படிக்க... "கவிதையும் கற்பனையும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.