Social Icons

Pages

Tuesday, July 19, 2011

நாய் ஜாக்கிரதை!


”நான் சொன்ன வாசகத்தை எழுதிமுடிச்சிங்களா இல்லையா? இடியட்ஸ்... இன்னுமா அந்தப்பலகை ரெடியாகல?” என்று வள் என்று சீறி விழுந்தபடியே கடைக்குள் நுழைந்தாள் அந்தப்பெண்மணி.

'நல்வரவு 'என்று கொட்டையாய் பெயர்ப்பலகையில் எழுதிமுடித்த சிகாமணி அந்தப்பெண்மணியைக்கண்டதும் பெயிண்டையும் ப்ரஷையும் அப்படியே கீழே வைத்துவிட்டு சின்னதடுப்பிடையே புகுந்து கடையின் உள்பக்கம் பதட்டத்துடன் ஓடினான்.

“முதலாளீ” என்றான் மூச்சிறைக்க
.
“என்னடா சிகா?”

மரப்பலகை ஒன்றினைத்தரம் பார்த்துக்கொண்டிருந்த குமரவேல் இப்படிக்கேட்டதும் சிகாமணி,”முதலாளி! அந்தம்மா கடைசில நம்ம கடைக்கே வந்திட்டாங்க இப்ப” என்றான்.

முதலாளி இல்லாத நேரங்களில் எல்லாம் கடையின் டெலிபோன் ரிசிவரை சிகாமணிதான் எடுப்பது வழக்கம், அப்படி இரண்டுமூன்றுதடவைகளில் எடுக்க நேர்ந்தபோது இந்தப்பெண்மணி போனில்” இன்னுமா நான் சொன்ன போர்டை எழுதி முடிக்கல வாட் நான்சென்ஸ் ஈஸ் திஸ்?” என்றும்,” ரோஸ்வுட்பலகையின் நாலுமூலையிலும் பித்தளைல விளிம்புகட்டி நடுல அழகா எடுப்பா எழுதச்சொல்லி ஒருவாரமாச்சு இன்னும் போர்டை ரெடி பண்ணாம இருக்கீங்கஒரு வேலைகொடுத்தா பொறுப்பா செய்யறதில்லையா? இதே அமெரிக்காவா இருந்தா இதுக்கெல்லாம் நாங்க கோர்ட்ல கேஸ்போடலாம் தெரியுமா? இந்தியா உருப்படாம போகக் காரணமே உங்களமாதிரி சிலபேராலதான்”என்றும் கூச்சல்போட்டிருக்கிறாள்.அவள் மென்மையாகப்பேசி சிகா கேட்டதே இல்லை.

அதனால் அவளை நேரில்கண்டதும் சிகாமணி திகைத்துப்போனான். ஐம்பதுவயதிருக்கும் வசதியான வீட்டுப்பெண்மணி என்பதை தோற்றமே காட்டியது. பாப்கட் செய்த தலை. பாண்ட் ஷர்ட் அணிந்து வந்தவள் கூலிங்க்ளாசைக் கழட்டிவிட்டு உஷ்ணப்பார்வையில் கடையை அளந்தாள்.

“வாங்கம்மா வாங்க” முதலாளி பொறுமையாய் வரவேற்றார்.

“என்னதத வாங்குறது?பத்துநாளாச்சு நான் ஒரு போர்டு எழுதச்சொல்லி, இன்னும் முடிக்கல நீங்க? கடைக்குபோன்செய்தா எப்போவும் நீங்க மரப்பலகை வாங்க வெளில்போயிருக்கிறதாகவே இந்தப்பையன் சொல்றான்...ஏய் நீதானேப்பா அது?பொடிப்பயலே... நேர்ல நறுக்குனு நாலுவார்த்தை கேக்கத்தான் அதிரடியா வந்தேன்..இதபாருங்க போர்டு நாளைக்கே ரெடியாகி வீட்டுக்குக்கொண்டுவரணும் சொல்லிட்டேன் ஆமா..”

“சரிங்கமா அந்த குறிப்பிட்டமரப்பலகை கிடைக்க தாமமாகிடிச்சி.. நாலுமூலையிலும் பளபளன்னு பித்தளைவிளிம்பு பொருத்திட்டோம் கடைசி இழைப்புநடக்குது முடிச்சிட்டா தம்பி வாசகத்தை அரைமணில எழுதிடுவான் சாய்ந்திரமே அவன் கைல வீட்டுக்கு கொடுத்தனுப்பறேன்,மா..”

”என்னத்த கொடுத்தனுப்பப்போறீங்களோ உங்களையெல்லாம் நம்பிப் பிரயோசனமே இல்லை ....என்ன கடை வச்சி நடத்தறீங்களோ ஹ்ம்..” காலடியில் இடறிய சைலன்ஸ்ப்ளீஸ் என்ற வாசகம் எழுதிய பலகையை மிதித்துக்கொண்டே போனாள்.

மாலை சொன்னபடிபலகையை இழைத்து முடித்துவிட்டார்குமரவேல்.
சிகாமணியிடம் பலகையில் எழுத வேண்டிய வாசகங்களை ஒருதாளில் எழுதிக்கொடுத்தார் ”சரியா எழுது சிகா அதுக்குவேற அந்தம்மா சீறிட்டுவருவாங்க”என்று சொல்லி சிரித்தார்.

சிரத்தையாய் வெள்ளை பெயிண்டில் ப்ரஷைதோய்த்துமணிமணியாய் எழுதிமுடித்தவன் காய்ந்ததும் கையோடு முதலாளி கொடுத்த விலாசத்திற்கு எடுத்துக்கொண்டுபோனான்.

வாசலில் அல்சேஷன் நாய் ஒன்று கன்றுகுட்டி சைசில் இவனைப்பார்த்து வாலைஆட்டிக்கொண்டுவந்தது.சிகா சற்றுமிரண்டு நிற்கையில் ஒருசுற்றிசுற்றி வந்து மோப்பமிட்டுவிட்டு ஒதுங்கிப்போய்விட்டது. சின்ன லொள் கூட இல்லை!

உள்ளே போனில் மும்முரமாய் பேசிக்கொண்ட்ருந்த அந்தபெண்மணி சிகாவைகக்ண்டதும்,

” வந்து தொலைஞ்சியா?ரெடியாச்சா ஒருவழியா? இந்த சின்ன வேலைக்கு ஒருவாரத்துக்கு மேல கேட்குதாக்கும்?யூஸ்லெஸ்பீபிள்! சரிசரி அதை காம்பவுண்ட்கேட்ல கம்பிபோட்டு இறுக்கமாய்க் கட்டி்ட்டுப்போய்ச்சேரு... என்ன தயங்கி நிக்கற?ம்? கம்பி கதவுலயே இருக்குதுபொ,,போ..” என்று சீறி விழுந்தாள்.

சிகா அந்தப்பலகையை கவனமாய் நுழைவுவாசலில் இருந்த க்ரில் கேட்டில் இரும்புக்கம்பியை வளைத்து முறுக்கி இறுக்கக் கட்டினான்.

கதவை மூடிவிட்டு ’தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று பெருமூச்சுவிட்டபடிவெளியே போனவன் சட்டென திரும்பிப்பார்த்தான்.

”நாய் ஜாக்கிரதை” என்ற வாசகம் எழுதிய பலகை வீட்டின் உட்புறம் திரும்பி இருந்தது.
***********************************************************************************************(நவினவிருட்சத்தில் அண்மையில்வெளியான சிறுகதை)
மேலும் படிக்க... "நாய் ஜாக்கிரதை!"

ரசிகன்(சிறுகதை)


நீண்ட நாள் கழித்து இந்தஅறைக்குள் நுழைகிறேன். மொட்டைமாடியில் காற்றோட்டமான ஜன்னல்கள் கொண்ட மேற்கூரை மேய்ந்த சின்ன அறைதான்.ஆனாலும் என்னுடைய சாம்ராஜ்யம் இங்கேதான் நடந்திருக்கிறது. சுற்றிலும் புத்தக அலமாரிகள் நடுவில் ஒரு மரமேஜை அருகில் நாற்காலி . சின்னதாய் டேபிள்ஃபான் ஒன்று . நண்பர்கள் வந்தால் அவர்களை உட்கார வைக்க நீளமாய் ஒரு மரபெஞ்ச். குடிநீருக்காய் ஒரு பானை அவ்வளவுதான் சாம்ராஜ்ய சொத்துக்கள்!

பதினைந்து வருஷம் முன்பு இந்த அறையைக்கட்டி முடிக்கவே பத்தாயிரம் ரூபாய்க்குமேல் செலவானது. சுமதிகூட,”என்னங்க இவ்ளோ பணம் ஒரு சின்ன ரூமுக்கா செலவழிக்கணும் அதுல ரம்யாக்கு தங்கத்துல நகையாவது வாங்கலாம் அவளுக்கும் வயசு ஏழு ஆகபோகுதில்ல?” என்றாள் கவலையுடன்.

“கீழ்வீட்ல எனக்குன்னு தனி ருமே இல்லை ஒரே சத்தம் வேற. இங்கே தனியா ஏகாந்தமா உக்காந்திட்டு கற்பனை செய்து கதைகதையா எழுதி லட்சலட்சமா சம்பாதிச்சிடுவேன் கவலைப்படாதே”என்று சமாதானம் சொன்னேன்.

கலைஞனுக்கு லட்சங்களில் லட்சியம வந்துவிட்டால் கலைமகளுக்குப்பிடிக்காதுபோலும்.... பணத்திற்காகவே எழுத ஆரம்பித்தேன். நாலைந்துவருஷங்களிலேயே என் புகழ் மங்க ஆரம்பித்து எழுதியபடைப்புகளை தொடர்ந்து பத்திரிகைகள் நிராகரித்தன. அந்தவிரக்தியில் நான் பேனா பிடிப்பதையே நிறுத்தியும் ஏழெட்டுவருஷங்கள் ஆகிவிட்டன.

இன்று மனைவியும் மகளும் சொந்தக்காரர் வீட்டுத்திருமணத்திற்குப்போய்
விட்டார்கள்..ஆபிசிலிருந்து சீக்கிரமாகவே வீடுவந்தவன் அப்படியே கூடத்து சோபாவில் எதையோ பறிகொடுத்தவன் போலப்படுத்திருக்கிறேன். பஸ்ஸில் வரும்போது பத்திரிகை ஒன்றில் படித்த கதையை அசைபோடுகிறேன். எழுதியவர் பெயர் ஒன்றும் பிரபலமாய்த்தெரியவில்லை ஆனால் எழுதிய கருத்தும் கதையின் ஓட்டமும் மனசை அள்ளிச்சென்றன.

இப்படித்தான் நானும் பல கதைகள் எழுதி இருக்கிறேன். ஒரு நிகழ்ச்சி ஓர் அனுபவம் ஓர் உணர்ச்சி படித்த ஓர் செய்தி என்று எதுவேண்டுமானாலும் ஒரு சிறுகதையை உருவாக்கிவிடும்.. அப்படிப்பட்ட கதைகள் எழுதி பரிசுகள் வாங்கி பிரபல எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் என்று நான் பேரும் புகழுமாய் வாழ்ந்த காலம் கனவுபோல இருக்கிறது. இந்த ஏழெட்டுவருஷங்களில் நான் எழுதுவதையும் எழுத்தாளர்களை சந்திப்பதையும் அடியோடு நிறுத்தியேவிட்டேன். காரணம் விரக்திதான்.

அப்படியே பழைய நினைவுகளை அசைபோட்டு சிந்தித்து உட்கார்ந்திருந்தவனை டீபாய் மீதிருந்த டெலிபோனின் ட்ரிங் ட்ரிங் என்ற சத்தம் சுதாரிக்கவைத்தது.

ரிசீவரை எடுக்கிறேன்.


"ஹலோ எழுத்தாளர் எழிலூர்எதிராஜன் இருக்காரா?"

எதிர்முனை என்னை இப்படிக்கேட்கவும் வியப்பில் கண் விரிக்கிறேன் ...எல்லோரும்மறந்துவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் நேரத்தில் இப்படி ஒரு குரல் உற்சாகமாய் கேட்கவும்.”ஆமாம்நீங்கயாரு?’ என்கிறேன்

”சார் நான் ரசிகன்.......”

”ஓ என் ரசிகரா? வேடிக்கைதான் நான் கதை எழுதுவதையே நிறுத்தியே பல வருஷமாச்சே?””

”அதைத்தான் கேட்க வருகிறேன் .....எதனால் எழுதுவதே இல்லை? அற்புதமான வளமான எழுத்து உங்களுடையது”

”அப்படியா?”

”ஆமாம் ......உங்களுடைய சிறுகதைகளில் ஆன்மாவைக்கண்டவன் நான்.”

”மகிழ்ச்சி ரசிகன்”

“ஆமாம் ! நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி சார்....உங்களைமாதிரி படைப்பாளிகளால்தான் மனதில்பட்டதை அழகான காட்சியை
உயர்ந்த அல்லது இழிந்த பண்புகளை விருப்பு வெறுப்பு இல்லாமல் உள்ளது உள்ளபடி திறந்த மனத்தோடு எத்ற்காகவும் கவலைப்படாமல் உன்னத படைப்பினை உருவாக்கமுடியும்.உள்ளத்தின் உள்ளொளி எழுத்தில் பிரகாசித்துவிடும். படைப்பாளி பயனை எதிர்பார்ப்பதில்லை ஆனால் அவன் படைப்பு சமுதாயத்திற்கு எவ்வளவோ பயன்படுகிறது. சமுதாயத்தின் பண்பாட்டை வளர்ப்பதுதான் கலை. அதன் இலக்கு மனிதனை உயர்த்துவது. அவன் சிந்தனையை விரிவடையச்செய்வது அவன் வாக்கில் ஒளிதுலங்கச்செய்வது அவன் செயலை மேம்படசெய்வது.இந்த அற்புதமான பணியை உங்கள் எழுத்து ஒருகாலத்தில் செய்துகொண்டிருந்தது. அதை முடக்கிவிட்டீர்களா சார், என்னைப்போன்ற ரசிகர்களுக்காக தாங்கள் மீண்டும் எழுதவேண்டும்.இது என் கோரிக்கை அல்ல , கட்டளை!” என்று சொல்லிவிட்டு எதி்ர்முனை ரிசீவரை வைத்துவிட்டது.

சட்டென மனதில் யாரோ விளக்கு ஏற்றியமதிரி அகமும் புறமும் பிரகாசமாகிறது.

இருண்டகிடந்த என் மனத்தின் அறையை யாரோ திறந்துவிட்டமாதிரி இருக்கிறது அதனால்தான் இந்த மாடி அறைக்கதவைத்திறந்து உள்ளே நுழைகிறேன். ஜன்னல்களைத்திறந்துவைக்கிறேன். மாலைநேரத்துக்காற்று ரம்மியமாய் வீசுகிறது.

புத்தக வாசனையை இழக்காத அந்த அறைச்சுவர்களில் படங்களாய் வீற்றிருந்த அரவிந்தரும் அன்னையும் என்னைப்பார்த்துப்புன்னகைக்கிறார்கள். இந்தப்புன்னகையைக்காணவாவது நான் இந்த அறைக்குள் வந்திருக்கலாமோ? எழுதுவதும் ஒரு தவம் தானே ? தவம் செய்ய மறந்தேனோ?’புத்தகத்தில் இல்லாதவற்றைக் கற்றுக்கொடுப்பவர் நல்ல வாத்தியார்; ஆசிரியர் சொல்லிக்கொடுக்காதவற்றையும் கற்றுத்தெரிந்துகொள்ளுபவன் நல்ல மாணவன்’ என்று ஆங்கிலத்தில் ஒரு வசனம் இருக்கிறது. அதுபோல அன்றாட வாழ்விலே ஈடுபட்டுத் தத்தளித்து நீந்திக்கரையேற முயற்சி செய்து கொண்டிருக்கும் நாம், நம் அவசரத்தில் காணாது விட்டுவிட்ட அல்லது கண்டும் இனம் தெரியாது விட்டுவிட்ட அனுபவங்களை நம் கண்ணுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி அவற்றுள் புதைந்துகிடக்கும் உண்மைகளை வெளிக்கொண்ர்ந்து நம் கவனத்தைல் நிலைநாட்டுவதுதானே எழுத்துக்கலைஞனின் பணி என்று தோன்றுகிறது. என் பணியை செய்யத்தவறிவிட்ட உணர்வில் உள்ளம் குறுகுறுக்கிறது.மேல்நாட்டு அறிஞர் ஒருவர் கூறியதுபோல”நிலையில்லாது கரைந்து மறைந்துகொண்டிருக்கும் கணங்களில் அமரத்துவத்தைக்காட்டுவது தான் கலை” என்ற விமர்சனம் சிறுகதைக்கு மிகவும் பொருந்துவதாகப்படுகிறது.

மேஜையின் அருகே சென்று நாற்காலியில் அமர்ந்து பேனாவை எடுத்து எழுத ஆரம்பிக்கிறேன் .கற்பனை விண்ணாய் விரிகிறது. சொற்கள் இடித்துக்கொண்டு வாக்கியங்கள் மின்னலாய் தெறிக்க காவிய மழை ஒன்று பெய்துவிடுகிறது.

சமைக்கும்போதே வரும் வாசனைகளால் பதார்த்தங்களின் சுவையை அறியமுடிவதுபோல எழுதும்போதே வந்து விழுந்த வார்த்தைக்கலவைகளில் ஆத்மத்ருப்தியான படைப்பு உருவாகி விட்டதை உணர்கிறேன். விரக்தியும் வெறுப்புமாய்சிலவருடங்கள் ஒளிந்திருந்த எதிராஜன் மறைந்து புத்துணர்ச்சியுடன் மீண்டுவந்தவனாய் உற்சாகமாய் கீழே வருகிறேன் .

கல்யாணத்திற்குப்போயிருந்த மனைவியும் மகளும் வருகிறார்கள்.என்னைக் கண்டதும் மனைவி,”எப்போ வந்தீங்க?” என்கிறாள் வியப்புடன்.

“மதியம் சாப்பிட்டதும் வீடு வந்திட்டேன் அப்போ என்னவோ மனசு உற்சாகமாய் இல்லை ரொம்ப டல்லாயிருந்தது ஆனா இப்போ ஒகே”

உஸ்ஸ்ஸ் என்று பெருமூச்சுவீட்டபடியே,” அப்படியா? ஆமா.... காலைல எழுந்ததுமே கவனிச்சேன் நம்ம வீட்டு லாண்ட்லைன் போன் ’டெட்’டா இருந்திச்சி... கம்ப்ளெயிண்டும் போற வழில கொடுத்தேனே யாரும் வந்து ரிப்பேர் செய்தாங்களா?” என்று கேட்டபடியே ரிசீவரை காதில் வைத்தவள்,” ஹ்ம்ம் இன்னமும்டயல்டோன் கேக்கலயே, டெட் ஆகத்தான் இருக்குது” என்கிறாள் சலிப்பான குரலில்

”என்ன! போன் ’டெட்’டா இருக்கிறதா?’்” என்று நான் திகைத்து நிற்கிறேன். மனசுக்குள் ரசிகன் நகைக்கிறான்.


(கதை அண்மையில் நவீனவிருட்சத்தில் வெளிவந்துள்ளது)
மேலும் படிக்க... "ரசிகன்(சிறுகதை)"

Sunday, July 17, 2011

பூமியை வாழவிடு.

//கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. ‘வைரத்தின் நிழல்கள்’ என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் ‘பூமியை வாழவிடு’ என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: ‘வைரத்தின் நிழல்கள்’, சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28
வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது//இப்படி ஒரு அறிவிப்பினை தினகரனை ஆன்லைனில் படித்ததும் எழுதி அனுப்பிவைத்தேன் தற்சமயம் வெளிநாட்டில் இருப்பதால் கவிதையை வாசித்தார்களா இல்லையா பரிசு கிடைத்ததா ஒன்றும் தெரியவில்லை.ஆனாலும் எனது அன்புநட்புவட்டம் வாசித்துக்கூறும் கருத்துக்களைவிட பெரிய பரிசென்ன வேண்டும்என்று வலைப்பூவில் அளித்திருக்கிறேன்!


பூமியைவாழவிடு!
புன்னகையை முற்றிலும்

இழக்குமுன்னமே

எனக்குப் புதை குழி

தோண்டப் போகிறீர்களா மனிதர்களே?

புகையிலைப் படுக்கையை

தயார் செய்து

ஆலைப் புகையிட்டு

பிளாஸ்டிக் மாலை அணிவிக்க

ஆயத்தமாகி விட்டீர்கள்!என் கொடையாய் ஆறுகளைத்தந்தேன்

அழகுமிகு சோலைகளை உருவாக்கினேன்

பூலோக சுவர்க்கமாய் மாற்றினேன்

கனிகளை காய்களை பயிர்களை வளர்த்தேன்

வனங்களை அமைத்தேன் விலங்கு

இனங்களுக்கு அடைக்கலம் தந்தேன்


முன்னொருகாலத்தில்

இங்குஎன் குழந்தைகளான

ஆறுகளின்ஆராவரசத்தம் இருந்தன

பறவைகள் ஓயாத ஓசையுடன்

இலைகள் அடர்ந்த மரங்களில் வசித்தன.

வனங்களும் பச்சைவயல்களும்

வயல் வரப்பின் மீது அமர்ந்து

வாய்க்கு ருசியாய் அயிரமீன்குழம்புடன்

வெங்காயம் சேர்த்த நீர்ச்சோறு உண்ட

வெள்ளந்திமக்களும் வாழ்ந்தனர்நாட்டுப்பற்றுகொண்ட

தியாகிகளையும் தலைவர்களையும்

புலவர்களையும் புரவலர்களையும்

என்று நல்லோர்கள் பலரைக்

கண்ட புண்ணியத்தாய் நான்!இன்று..தர்மம் தலைகுனிகிறது

ஊழல் உற்சாக ஊற்றாய்

ததும்பி வழிகிறது.அஹிம்சை அழிந்து

அன்பும் மனிதநேயமும்

அற்பமாகிவிட்டது.தீவிரவாதிகளுக்குப்

புகலிடமாய் இந்த

பூமித்தாய் ஆகலாமா?.என்னைக் கண்டபடி

கூறு போட்டு

அடுக்குமாடிக் கட்டிடங்களை

அண்ணாந்து பார்க்குமளவுக்குக்

கட்டிவிட்டீர்கள்

என்கோபத்தை

சின்னக் குலுக்கலில்

சிறுபுருவ நெரிப்பில்

நியாயமாய் தெரிவித்தேன்

புரிந்து கொள்ளவில்லை நீங்கள்

.அல்லது

புரிந்தும் புரியாதது போல்

அலட்சியமாய் இருக்கின்றீரோ?

இரண்டுமே மெய்தான்.
.
என் மூச்சு எங்கே எனத்

தேடுகிறீர்களா என்ன?

அதைத்தான் கார்பன் மோனாக்சைடில்

பத்திரப்படுத்தி விட்டீர்களே!
தாயென்கிறீர்கள் என்னை

பேணிக்காக்கத்தான்

மறந்துவிட்டீர் மைந்தர்களே!
ஆறுகளை நீரற்ற சகதி

சேறுகளாக்கிவிட்டீர்,

விலங்கினங்களைத்துரத்தி

வனத்தினில்புகுந்து

வான் உயரக்கட்டிடங்கள் எழுப்ப

மானிடர்கள் வந்துவிட்டீர்கள்.
விட்டுவிடுதலையாகிப்பறந்த

சிட்டுக்குருவிகள் எல்லாம்

விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவுகளில்

கண்கட்டுவித்தைபோல

காணாமல்போய்விட்டனவே!ஓசோன் ஓட்டை ஆனதனால்

உலகின் வெப்பமும் கூடியதே!

பருவத்தில்பெய்தமழையை

வருமோஇனி மழை

என ஏங்கி நின்று

வான்பார்த்து

வருத்தத்தில்

வாடி நிற்கிறீர்கள்!மேனியெங்கும் பாளம்பாளமாய்

வெடிப்புவந்து வேதனையுற்று

மூச்சுவிடவும் முடியாமல்

முனகும் இந்த பூமித்தாயினை

தவிக்கவிடும் மானிடரே!

எந்தையும்தாயும்

மகிழ்ந்துகுலாவி

இருந்த நாடென்று இதனை

உமது சந்ததியினருக்குக்

கைகாட்டிடவும்

பொய்யாய்க்கனவாய்

பழங்கதையாய்

பூமித்தாயின் வரலாறு

போகாதிருக்கவும்

புரிந்துகொண்டு வாழுங்கள்.வெறும் வேஷமிட்டுவாழும்

வாழ்க்கையினின்றும்

வெளியே வாருங்கள்!

வேருக்குத்தான் நீர் தேவை எனும்

விவேகச்சிந்தனைஉங்களுக்கு

விரைவில்தானே வந்துவிட்டால்

பூமித்தாயாம் நானும்தான்

’பூமியைவாழவிடு’ என்று

பூகம்பமுழக்கமிடமாட்டேன்

பூப்போலே பூமண்டலத்தை

புரிந்து என்றும் காத்திடுவேன்!
மேலும் படிக்க... "பூமியை வாழவிடு."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.