Social Icons

Pages

Saturday, July 27, 2013

இங்கே போயிருக்கிறீர்களா?!

 
 
 
 
’மறந்துபோன  பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற  அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு  இன்று எங்கள்  காலனி மக்கள்  படையெடுத்தோம்.
 
 
 
 
 
ஹோசூரிலிருந்து பெங்களூருக்கு  நுழையும்போது சில்க்போர்டுக்கு அருகே  HSR layout   ல்   இந்தஹோட்டல்  திறந்து இன்னும் ஒருவருடம் ஆகவில்லை..அதற்குள்  பிரபலமாகிவிட்டதற்குக்காரணம் வார இறுதி நாட்களில் தலைவாழை இலைபோட்டு அம்ர்க்களமாக  அவர்கள் உணவு பரிமாறுவதும் அதுஅபார ருசியுடன் இருப்பதும்தான்  இதர நாட்களில்  டிபன் சாப்பாடும் உண்டு.
 
 
ஆனால் இன்று  மிக வித்தியாசமாக  உணவு வகைகளை   அதுவும்  நிஜமாகவே மறந்துபோய்விட்ட  பதார்த்தங்களை  செய்து வைத்திருந்தனர். 
 
 சொல்லமறந்துவிட்டேனே ஹோட்டல்  அறுசுவை நடராஜன் அவர்களின் பேரனின் மேற்பார்வையில்  நடக்கிறது  இளைஞராக இருக்கும்  இவர் வந்தவர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார்  பணியாளர்களும்  மிகவும் சுறுசுறுப்பாகவும்  சாப்பிடும்போது கேட்டு விஜாரித்து அக்கறையுடன் பரிமாறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
 
இன்றும் நாளையும் சிறப்பு தினங்களாக  இப்படி மறந்துபோன பழைய உணவு வகைகளை அளிக்கும் தினமாக  இருப்பதைக்கொண்டாட  அறுசுவை நடராஜன் அவர்கள்   ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
 
அன்போடு வரவேற்றார் எங்கள் யாவரையும்
 
.தான்கடந்து வந்த பாதையை எங்களோடு பகிர்ந்து கொண்டார்
 
 
 
 
.
சரி இனி  சாப்பிட செல்வோம்.
 
  முதலில்  பானகம் சுக்குகாபி திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் ஆக  வழங்கப்பட்டது.கூடவே  பானையிலும் மண்சட்டிகளிலும்  வாழைப்பூகோலா வடை தவலைவடை  திருவாதிரைக்களி
பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக்கொழுக்கட்டை(இனிப்பு மற்றும் உப்புவகைகளில்)..இவையெல்லாம்  பஃபே  என்பதால்  சாப்பிட சாப்பிட இதிலேயே  பசி அடங்கிவிட்டது..தலைவாழை இலைக்குப்போக சிறிதுநேரம் தயக்கமாகவே இருந்தது.
 
 
 
(தாத்தாவும் பேரனும் ”எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள்!
 
 
 
அப்புறம்  இலையில்போய் உட்கார்ந்தோம்  குழம்பில் மட்டும் நாலுவகை  வற்றல்குழம்பு மோர்க்குழம்பு  சாம்பார்  ஓமக்குழம்பு என..நான்கில் ஓமக்குழம்பு முதல் பரிசைத்தட்டிக்கொண்டது.
 
ரசத்தில் மூன்றுவகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.
 
 
நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி  பீர்க்கங்காய் துவையல்  பூசணிக்காய் ரசவாங்கி சேனை ரோஸ்ட் மோர்க்களி வெண்டை டாங்கர் பச்சடி 
 மோர்க்களி  பருப்புசிலி    அங்காயப்பொடி சாதம்  கத்திரிககய் துவையல்  அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி  கோங்குரா துகையல்   கல்கண்டுபொங்கல்
 
இத்தனையையும் ஒரே நேரத்தில் பார்த்தாலே பிரமிப்பாக இருக்குமே!  எப்படி  அத்தனையையும் சாப்பிடுவது என திகைத்தபடி  எல்லாவற்றிலும்  கொஞ்சமாய்  போட்டுக்கொண்டு  ருசிபார்த்தோம்.. அத்தனையும் அருமை தான்!  ஓரிரு  பதார்த்தஙக்ள் மட்டும் சர்று  சுமார்  என்று சொல்கிறபடி  இருந்தனவே தவிர மற்ற அனைத்தும் அமர்க்களம்!
 
இறுதியில் பீடாவும் வாழைப்பழமும்!
 
சாதாரணமாய்  வார இறுதி நாட்களில்  190ரூ ஓர் இலைக்கு  இன்றும் நாளையும்   சிறப்புதினங்கள் என்பதால் கூடுதல் விலையானாலும் அறுசுவைக்காக    மறந்தேபோன நம் வீட்டு உணவுவகைகளை நாம் நினைவுகூர்ந்து  சுவையோடு உணபதால் விலை  ஒரு பொருட்டாக இல்லைதான்!!
 
என்ன பெங்களூர் வாசிகள்  நாளைக்கு  அறுசுவை  மதுரம் ஹோட்டலுக்குப்போகிறீர்கள்  தானே!!
 
 
 பிகு(காமிராவில் தேதி  மாற்றத்தவறிவிட்ட கணவரை  நான் மன்னித்தமாதிரி நீங்களும் மன்னித்துவிடுங்கள்:)
 

மேலும் படிக்க... "இங்கே போயிருக்கிறீர்களா?!"

Thursday, July 25, 2013

காப்பாத்துங்க..(சிறுகதை)

 
 
 
 
 


'செல்வராணீ எங்க காணோம் ? '


என் பேரை சொல்லிக்கிட்டே கண்ணு அலைபாய வூட்டுக்குள்ள நுளையுது குமாரு.

மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு


 குமாரு எப்போபாத்தாலும் வாயில எதியாச்சும் மென்னுட்ருக்கும்.! நல்லா

அசைபோட்டுகிட்டே என்னைப் பாத்து கண் அடிப்பான்

கிட்டே வந்து பாட்டுபாடுவான் . 'சொன்னபடி கேளு நீ என்னுடைய ஆளு '


யே! ஆசைதான் ...!


எனக்கு சிரிப்பாவரும். எங்க சிரிக்கறது ,குமாரு அப்பா கேட்டா வெட்டிப்

போட்டுடுவாரில்ல என்னைய ? ஏற்கனவே என்னைக்கண்டாலே

திட்டிக்கிட்டு இருக்காரு இப்போல்லாம்...

ஆனா குமாரு அப்டி இல்ல..குறும்புஅதிகம்தான் ஆனாலும் என் மேல பிரியம்
அவனுக்கு. என்னையக் கண்டா,

 'என்னசெல்வராணீ..எப்படி இருக்கே ? 'ன்னு கேக்காம போகமாட்டான்.

எதிர்பாராத நேரத்துல பின்னால பக்கம் செல்லமா கிள்ளீ அடிச்சிடுவான்

குமாரு.  வய்சுப்பையன் கை பட்டதுல ,வெக்கத்துல எனக்கு உடம்பு கூசிப்

போகும்.


நான் குமாரத் தொடந்து திண்ணை மேட்டுவரைக்கும் வந்து நிக்கறேன்.


'எங்கடா, டவுன் போயிட்டு இத்தினி நேரம் கழிச்சிதான் வர்தா ?

ஊரெல்லாம் மளை வெள்ளம்ன்னு பேசிக்கிறாங்க நெசமாவா ?


பெரிய எசமான் தன் மகனைப்பாத்து இப்படிக் கேக்கவும் குமாரு

, 'ஆமாப்பா...திருச்சி சத்திரம் பஸ்நிலயமெல்லாம் தண்ணிவர

ஆரம்பிச்சிடிச்சி...நாம கிராமத்தைவிட்டுக் கிளம்பியாவணும் 'ன்னு

பரபரத்தான்


'ஆங் ? '


பெரிய எஜமானுக்குக் காது சரியாக் கேக்காது.


மறுமுறை மகனைப்பாத்துக் கேக்கறாரு


'என்ன சொல்றே ? '


'அதுசரி..வெள்ளம் வந்து உங்கள வாசலுக்கு இழுத்துட்டுபோவறவரைக்கும்
இப்டியே இருங்க...நீங்களும் உங்க கேக்காத காதும் ? '


எரிச்சலா பேசிப்புட்டு குமாரு ரூமுல புகுந்துக்கறான்.


'அப்பாஆஆ... 'கூவிக்கிட்டே சுமதி வருது. குமாருக்கு ஒருவயசு மூத்தது.

பள்ளிக்கூடம் படிச்சி முடிச்சி வூட்லதான் கிடக்குது.கிராமத்துல பல
பசங்களுக்கு சுமதிமேல ஒருகண்ணு.தளதளன்னு பறிச்ச புல்லுமாதிரி இருப்பா
சுமதி


மேலத்தெருவுக்கு முன்னே ஒரு நா, நான் மட்டும் தனியா போவையிலே

மாணிக்கக் கோனாருமகன் பூவரசனும்

காத்தான்கோனாருமகன் வினாயகமும் சுமதியப் பத்தி என் காதுபடவே

பேசினாங்க.. 'அந்த சுமதிதான்,இந்தக் கல்லுப்பேட்டை பக்கத்துல
கம்பரசம்பேட்டை ஜீயபுரம் வரைக்கும்அழகுராணிடா...அவங்கப்பன்

.பொண்டாட்டி செத்துப் போன பிறவு நாலுவருஷமா இன்னும்லூஸ் ஆயிடிச்சி. வயலுவிவசாயம் மாடு பாலுன்னு ஊரைக் கட்டிட்டு உக்காந்திருக்குது...சுமதியோடஅளகு சினிமாவுக்குப்

போவணும்டா..இல்லேன்னா என்னைச் சேரணும்டா..ஹிஹி '


அடப்பாவிகளா ? பீடி குடிச்சித் திரியற உங்களுக்கு இப்படி ஒரு விபரீத

ஆசையா நாசமாத்தான் போவீங்கடா


நான் மனசுக்குள்ள திட்டிபுட்டேன் அவங்களை. வேற என்ன செய்யறது  என்னோட
பேருல தான்

செல்வமும் , ராணியும் இருக்குது.. நெசத்துல ஏளை. ஏளைச் சொல் அம்பலம்
ஏறுமா ?


'சுமதி..கொமாரு என்னம்மா சொல்றான் ? '


எசமான் நிதானமா தாழ்வாரத்து ஊஞ்சலில் உக்காந்து கேக்கறாரு.வாயில

புவையிலை அசைபோடுறாரு.


'அய்யோ அப்பா !இடி இடிக்குதே காதுல விழலையா... ?ஊரே நகந்துட்டு

போகுதுப்பா...காவிரி பெருக்கெடிச்சி ..மேட்டுர் அணைக்கட்டு உடைஞ்சி

போயிடிச்சாம்..நாமளும் கிளம்பணும் ஊரைவிட்டு..அதான் ஒலிபெருக்கி

போட்டு வேற சொல்லிட்டெ போறாங்களே..ஆபத்துப்பா இனியும் இங்கைட்டு

இருந்தா ஆபத்து நமக்கு.. உயிருக்கே ஆபத்து.. '


சுமதி வீறிட்டு சொல்லுது.


'எங்கிட்டுப் போவறது தாயி ?சொந்தமண்ணு, நெலம் ,மாடு,கன்னுகுட்டி... '

அவரு முடிக்கறதுக்குள்ள சுமதி குறுக்கிட்டு சத்தம் போடுது


'அய்யோ அப்பா! கரண்ட்போயிடிச்சி..கட்டிடம்
 
 அதிருது...கம்மாங்கரையெல்லாம்

உடைஞ்சி ஊரே மிதக்குது,, '



'ஆமா இதப்போல மளே இருவது வருஷம் முந்தி நீ பொறந்தபத்து நாள்ல

வந்ததும்மா...சும்மா பயமுறுத்திட்டு ஓடியே போயிடிச்சி ஆறுகுளம்

கண்மாயி எல்லாம் ரொம்பிச்சி அவ்ளோதான் வெள்ளமெல்லாம் வீதிக்கு

வரல..புரளி கிளப்பறாங்கம்மா வேணுமின்னே சிலரு '


'இல்லப்பா இப்போ அப்படால்ல ..ஊரே ஓடிட்டு இருக்கு.. நம்மஊருல

 பள்ளிக்கூடம்மேட்டுப் பகுதில இருக்குறதுனால அல்லாரும் அங்கிட்டு

ஒதுங்கறாங்க நானும் தம்பியும் வேண்டிய சாமான் சட்டு எடுத்துட்டோம்

நீங்களும் பொறப்பட்டு வாங்க, சொல்லிட்டேன் ஆமா.. '


சுமதி கண்டிப்பான கொரல்ல சொல்லிப்புட்டு நாலுமூட்டை முடிச்சி

பொட்டியோட வாசலுக்கு வந்திச்சி


'சுமதி நான் ரெடி '


குமாரும் பொட்டியோட பொறப்பட்டான்


மளை பெருசா கொட்ட ஆரம்பிச்சிடிச்சி


'சரி...பின்னாலயே வாரேன் நானும்... 'எசமான் எரிச்சல்பட்டுகிட்டே

என்னைபாத்தார்


' 'செல்வராணி..நீயும் அவங்ககூட போயித்தொலைக்கவேண்டியதுதானே ? '

கத்தினார்


'அய்யா உங்களத்தனியாவிட்டு நான் எப்படிப்போவறதுங்க ? '


அவருக்கு என் குரல் கேட்கல, ' சரி நாங்க கிளம்பறோம் சீக்ரமா வாங்க

நீங்களும் 'அப்பா'  ன்னு சுமதி சொன்னதும் காதுல விளுந்த

மாதிரித் தெரியல.


மழைத்தண்ணி தாழ்வாரத்துல வரலாமான்னு எட்டிப்பாக்குது


'எலே....கோனாரு..பொறப்படும் சீக்ரமா....வெள்ளம் நுழையுது ஊர்ல.. '

தெருவில் யாரோ கத்தறாங்க


அய்யோ காவேரி நதி பொத்துகிச்சா ?  இந்த வருஷம்  நல்ல மளை வர்ரப்போவே நெனச்சேன்  ஆடிப்பதினெட்டுக்கு  காவிரி  கொள்ளாதுன்னு  ஆருடம்  சொல்லிக்கிட்டேன் மனசுக்குள்ள அதுக்குள்ளாற  வெள்ளம்!  வடக்கே  இப்படித்தான் சமீபத்துல வந்திச்சாமே  பேசிக்கிட்டாங்களே  அதுப்போல  இங்கிட்டும் வரப்போகுதா அடி ஆத்தீ!

சாமீ!

நான் கண்ணை இறுக்கி மூடிக்கறேன்.


எசமான் திண்ணைதடுப்புஒட்டி இரும்புக்கம்பில
 
கயிறுபோட்டுகட்டிவச்சிருந்த

மூணு பசுமாடுகளை கன்னுகுட்டியோட சேர்த்து அவுத்துவுடுறாரு


எல்லா மாடுகளும் திருதிருன்னு முழிக்குது


'எல்லாம் போங்க வெளியே ? ' பிடிச்சி தள்ளிவிடறாரு


என்னைபாத்தவரு, ' வந்து தொலை ' ன்னு கத்தறாரு


எத்தினி வருஷம் வாழ்ந்தவீடு ?


எனக்குப்பிரிய கஷ்டமா இருக்குது


வெள்ளம் வடிஞ்சி திரும்ப வூடு வந்துடுவோமில்ல ?


நான் அமைதியா அவரைப்பின் தொடந்துகிட்டு நடக்கறேன்


தெரு எல்லைதாண்டறப்போ தடார்னு தண்ணீ பெருக்கெடுத்து

ஓடிவருது.வயிறுவரைஇருந்த தண்ணீ கழுத்தைத் தொடுது இப்போ.


கடல் அலைபோல ஆவேசமா வெள்ளம்


ஜனங்க பதட்டமா ஓட்றாங்க


ஓடுங்க சீக்ரம்..மேட்டுப்பகுதில ஒதுங்குங்க அல்லாரும்


கூவறாரு ஒரு புண்ணீயவான்

'

லாரி வண்டிங்க நிறைய 'சர்ர்சர் 'ருனு வர்து


அம்மாடி!

மூச்சுத் திணறுது எனக்கு


கழுத்துவரை தண்ணீ



முன்னாடி பசுமாடுகன்னுகுட்டிங்களோட நடந்தவரு சட்டுனு நின்ன ஒரு
லாரிலஏறீட்டாரு

லாரிக்கராங்க தயவுல மாடுகன்னுகுட்டிகளையும் மனுஷங்களோடயே ஏத்தறாரு...


லாரி பொறப்படப்போவுது நான் தண்ணில விளுந்து புரண்டு லாரிபக்கத்துல

போயி நிக்கறேன்


அய்யோ எசமான்! என்னைய மறந்திட்டாங்க. நானும் வந்துடறேன் எசமான் !!மனசுவைங்க அய்யா சாமீ.


நான் கெஞ்சறேன்


கண்ணுமுழிவரை வெள்ளம் வந்து என் உயிரை எடுக்குது


லாரி ட் ரைவரு. என்னைக்கைகாட்டி, ' இழுத்துபோடவா ? 'ன்னு கேக்கறான்


நான் பலமா தலை ஆட்டறேன்.



என்னைத் திரும்பிப்பாத்த எசமான், ' செல்வராணியையா ? வேணாம்... அது

கறவை நின்னுபோயிகிடக்கு சனியன். ஒருவருஷமா அடிமாட்டுக்கு விக்க

தரகருக்கு சொல்லீருந்தேன் ...படுபாவி இன்னிவரை வரல ...அது இருக்கறதும்

ஒண்ணுதான் இல்லாததும் ஒண்ணூதான்,, செத்துப்போவட்டும் அது
 
தண்ணியோட..நீ வண்டியக்கிளப்பு. ' ன்னு ஈவுஇரக்கமே இல்லாம சொல்றாரு


லாரி கர்புர்னு கத்திக்கிட்டு போயிடிச்சி.


நாம் மட்டும் வெள்ளத்துல உயிருக்கு போராட்டிட்டு இருக்கேன்.


யாராச்சும் வந்து என்னைக் காப்பாத்துங்களேன்


காப்பாத்துங்க


காப்பாத்


காப்

கா
*********************************************************








--
 
 
 



 
 
 





--
 
 
மேலும் படிக்க... "காப்பாத்துங்க..(சிறுகதை)"

Monday, July 22, 2013

ஆடிவெள்ளி தேடி உன்னை...!








தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே  தனித்தனிச்சிறப்பு வாய்ந்தது எனினும்  ஆடிமாதம் சற்று கூடுதல் சிறப்பு பெற்றது.  ஆண்டின் பண்டிகைகளை ஆரம்பித்து வைக்கிற மாதம் இது! பாயசமும் சக்கரைப்பொங்கலும்  ஆடிமாதம் மட்டுமே அதிகம் செய்யவேண்டி இருக்கும்!

ஆடி மாதப்பிறப்புக்கு தேங்காய்ப்பால்  செய்யவேண்டும் புதுமாப்பிள்ளைக்கு புதுவெள்ளி டம்ளரில் மாமியார் வீட்டில்  தேங்காய்ப்பால் ஊற்றிக்கொடுப்பார்கள்!(இதுமாதிரி மருமகள்களுக்கு புகுந்தவீட்டில்  ஏதாவது உண்டா?::0 எல்லாம்  மாப்பிள்ளைகளுக்குத்தான்:)

இதே  மாப்பிள்ளையை ஆடிமாதம்   தனிமையிலே  இனிமை காணமுடியுமா பாடவைத்துவிடுவார்கள்:) காரணம்  அனைவரும் அறிந்ததே:):)

மனிதர்களுக்கான  ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாளாம். அதில் ஆடிமுதல் தேதி தொடங்கி ஆறுமாதகாலம் தட்சிணாயணம் என்றும் தை மாதம் முதல் தேதி தொடங்கி உத்திராயணம் என்றும்  சொல்லப்படுகிறது.

ஆடிமாதம் தெய்வீகமாதமாகக்கருதப்படுகிறது அம்மன் கோவில்களில் இந்த மாதம்  ஆடிக்கூழ்  ஆடித்திருவிழா  ஆடிவெள்ளிகளில்  சிறப்பு பூஜை என அமர்க்களப்படுகிறது.

அரங்கமாநகருளானை  இந்த ஆடிமாதம் பூரநட்சத்திரத்தில்பிறந்த  ஆண்டாள் காதலித்த கதையும்  திருவரங்கத்தில் அவனோடு ஜோதியாய் கலந்த கதையும் நாம் அறிவோம்.


ஆடிமாதம்  தென்னீர்பொன்னி  சற்றே கூடுதல் வேகத்தில்  தன் பாதையில் நடக்க ஆரம்பிப்பாள்.ஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று காவிரி அன்னைக்கு
படையலிட்டு  ஆரத்தி எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள  காவிரி பெண்ணை பொருனை ஆகிய மூன்று ஆறுகளிலும் ஆடிப்பதினெட்டைக்கொண்டாடுவதால் மூவாறு  பதினெட்டு  என்றும் சிலேடையாக சொல்லலாம்:)

ஆடிப்பெருக்கு என்று  திரைப்படம்  வந்திருக்கிறது.ஆடிப்பட்டம்  தேடி விதைக்கவேண்டுமாம் அப்போதானே தையில் அறுவடை செய்யலாம்?  ஆடி அம்மாவாசை  சிறப்பானதாம் ..மற்ற நேரங்களில் செவ்வாயோ வருவாயோ என அலுத்துக்கொள்கிறவர்கள்ஆடிச்செவ்வாய்  என்றால்  வாய்பிளந்து புகழ்வார்கள்! .

காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப் படுகிறாள். இந்நாளில்,சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும்.  சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது

. சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும். சித்ரான்னங்கள்  செய்துகொண்டுபோய்  படித்துறை ஓரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.

 ஸ்ரீரங்கம் -திருச்சி டவுனுக்கான  இடைப்பட்ட ரயில்   பாதை  காவிரி ஆற்றின் மீது  செல்லும் ஆடிமாதம்  காவிரி   திரைக்கைவீசி  நடந்துவரும்போது  ரயில் ரோமியோக்கள்   தடால் தடால் என  கீழே குதித்து மகிழ்வார்கள்  ஓரக்கண்ணால்  பெண்கள் கோச்சில்  இருக்கும் கல்லூரி மாணவிகள் தங்கள் வீரதீர செயலைப்பார்ப்பதை ரசித்தபடி:) 


  செல்வங்களைவாரித்தரும் வர லஷ்மி விரதம்  ஆடியில்தான் வருகிறது. ஆடித்தபசு  பற்றி அதிகம் தெரியவில்லை.  சங்கரன் கோயிலில் இது  விமரிசையாக நடக்கும் அல்லவா?

ஆடித்தள்ளுபடிக்கு  கூட்டத்தில் முட்டிமோதி   ஜவுளி எடுக்கும்  சுகம் கொஞ்சம் ‘ஸில்லி;யாக  இருந்தாலும் அலாதியானது! 

ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்.. கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்... என்ற அந்தாதி வகையிலான  அருமையானப்பாடலை   ஆடிமாத சிறப்பிப்பதிவில் இட்டு  பதிவை முடிக்கலாமா?

http://www.youtube.com/watch?v=d597F2FCF04


 
மேலும் படிக்க... " ஆடிவெள்ளி தேடி உன்னை...!"

Friday, July 19, 2013

கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!

கவிஞர்  வாலி   என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமாயிருந்து சென்ற் ஆண்டு இதே கறுப்பு ஜூலையில்  அமரரான   திரு ஏ எஸ் ராகவனின்  நண்பருமாவார். சிலவருடங்கள் முன்பு ஒரு  விழாவில் வாலியைக்கண்டு நானும் அப்பாவும்  பார்த்தபோது  ஸ்ரீரங்கத்தையும் சித்திரைவீதியையும்  பற்றி    நண்பர்கள்  இருவரும்மனம் விட்டுப்பேசிக்கொண்டனர்.


(நான்  கவிஞர் வாலி  அப்பா  எழுத்தாளர் மகரம்)

பழைய நட்பை மறக்காத பண்பாளர் வாலி அவர்கள் அப்பாவிம் மரணச்செய்தியை  சென்ற ஆண்டு அவருக்கு போனில் கூறியபோது,’வாலிக்கு முன்னே  ராகவன்  போய்விட்டாரா?” என்று இருபொருள்படக்கேட்டு  வருந்தினார். 


மல்லிகைக்கு விளம்பரம் தேவை இல்லை வாசனையே காட்டிக்கொடுத்துவிடும் கவிஞர் வாலியைப்பற்றி  அனைவரும் அறிந்ததுதான்.ஆனாலும் அவரது நூல்களில்  எனக்கு மிகவும் பிடித்த  நூலான  ‘பெண்ணின் பெருந்தக்க  யாவுள?’ என்னும் தலைப்பிலான  புத்தகம்  என்னை மிகவும் பாதித்தது. பாரதியைப்போல   பெண்கள் மீது ஆழ்ந்த அக்கறையான சிந்தனை கொண்ட கவிதைப்புத்தகம் இது. தவிர தமிழை  பெண் இனத்தின் அத்தனை வடிவங்களும் காண்கிறார் கவிஞர்..பெண்  தெய்வங்கள் பலவற்றிர்க்கு  வந்தனம் கூறி முடிக்கிறார்.

அதிலிருந்து சில  பக்கங்களை  இங்கே  அளித்து  அரங்கநகர்பெற்ற அருங்கவிஞனுக்கு அஞ்சலி செய்கிறேன்.


   பெண்ணில் பெண்மையைக்கண்டு பெண்மையில் பொதிந்த உண்மையைப்  போற்றுபவர்தான் கவிஞர்.  வாலி தனது இந்த நூலில் அதைதான் செய்திருக்கிறார்.

பெண்ணுக்குக்கல்வி அவசியம் என்பதை

நுண்ணறிவை  பெண்ணுக்கு
நூல் கொடுக்கும்  அவள்

காலமெல்லாம் நிற்பதற்குக்
கால் கொடுக்கும்.‘


ஆரேனும்  -நீ
அமரவேண்டிய இடம்
அடுப்படி என்றால்..
கடுப்படி
வாழ்க்கைப்படகை -நீ
வகையாய் செலுத்தக்
கல்விதான்  -நீ
கையேந்த வேண்டிய   துடுப்படி


என்கிறார்.

புதுக்கவிதைகளின் மத்தியிலே வெண்கலிப்பாக் கண்ணிகளிலே  ‘ஒருகவனிப்பு’ அதனில்...

‘என்னைக் கவனிக்க
எனக்கேது  பொழுது  -நான்
உன்னைக் கவனித்தே
உருகும் நெய் விழுது

என்ற அபாரமான பல்லவியுடன்  உள்ளது.

உருகுதலுக்கு மெழுகைச்சொல்லவில்லை பாருங்கள்  மெழுகாக  உருகிவிட்டால் காதலியை நெருங்குகையில்  ஒன்றும் மிச்சம்  இருக்காதே  நெய் விழுதானால்  அவளின் நெருங்குகையில் மனம் குளிர்ந்து  உறையும் காணாமல் போகாதாம்!

இந்தப்பாட்டில் தமிழின் ழகர அழகை  மேலும் கவனியுங்கள்

கோழிக்கு முன்னெழுந்து
கோலம் நீ போடுதற்கு
ரேழிக்கு வருகையிலென்
ராத்தூக்கம் பாழாக
மேழிக்கு ஆட்பட்ட
மேதினியாய் என் மனது
நாழிக்கு நாழியிங்கு
நைந்தபடி கூழாக...


தமிழை தாயாய் தாரமாய்  தங்கையாய்  இன்னும் பலவாய் கடைசியில் தெய்வமாய்  கூறும் பாடலில் இந்த  வரிகள் அருமையாக இருக்கின்றன

கல் வடிவில் நிற்கும்
தெய்வத்தைவிடவும்
சொல் வடிவில் நிற்கும்
செந்தமிழ்த்தெய்வம்
நாய்க்கும் கீழாய்
நலிந்து கிடந்தவனைப்  பெற்ற
தாய்க்கும் மேலாய்த்
தயவு காட்டி மேனை செய்தது
தரையில் அமர்ந்தவனைப் பொன்
தவிசில் அமர்த்தி  ஒரு
வரையில் அருள் மழையை மிக
வாஞ்சையோடு  இவன் மேல் பெய்தது

  கவிஞர், ஆனைக்கா  அன்னையைப்போற்றுவதை  கூறி  முடிக்கிறேன்

நாவமரும் நற்றமிழும்
நற்றமிழில் நானெழுதும்
பாவமரும் பருப்பொருளும்
பெருமாளாய்த் திருவரங்கத்
தீவமரும் திருமாலின்
திருத்தங்கை திருவானைக்
காவமரும் ஈஸ்வரியின்
கடைக்கண்கள் ஈந்தவையே!













 
மேலும் படிக்க... "கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!"

Sunday, July 14, 2013

வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!

கம்பராமாயண வகுப்பு இப்போதுதான் ஆரம்பித்தமாதிரி இருக்கிறது அதற்குள்   14வாரங்கள் ஓடிவிட்டன!

பாரதநாட்டின்  மிகச்சிறந்த  காவியமாக  இராமாயணம்  போற்றப்படுகிறது. காலங்கள் பல கடந்தும் அது இன்னமும்  வாழ்கிறது .

ராமாயணத்திற்கு  என்ன ஒரு சிறப்பென்றால் ராமானுஜர் , திருமலை நம்பிகளிடம் 18தடவை  ராமாயணம் கேட்டாராம்! அத்தனை  தடவைகேட்க அத்தனை விஷயம் அதில்  இருக்கிறதென்றாராம்  எதிராஜர் என்னும் பெரும்புதூர் மாமுனியான  ராமானுஜர்.

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்த வால்மீகி என்பான்
தீங்கவி செவிகளாரத்  தேவரும் பருகச்செய்தான்


என்கிறான் கம்பன்.

ஒரு ஸ்லோகத்திற்கு நான்கு பாதங்கள்-அதாவது அடிகள்.

24000  ஸ்லோகங்கள்!  அவர் வகுத்திருந்த பாதங்களில் எதனையும் வாங்க-அதாவது-  எடுக்க  இயலாதபடி  தேவர்களும்  செவி மகிழக் கேட்கும்படியாக இருக்கிறதாம்!

கம்பன் அமுதத்தில்  பல துளிகளை  ரசிக்கும் பேறு பெற்றுள்ள நிலையில்
நேற்றைய வகுப்பில்  கம்பனின் ஒரு பாடல்  கண்ணையும் மனத்தையும் விட்டு  இன்னமும் நீங்காமல்  இருப்பதை  கொஞ்சம் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேனே!




அதாவது  இராமன்   (இன்னும் திருமணம்  நடக்கவில்லை)  சீதையைப்பார்த்த நினைவில் தவிக்கிறானாம்.


கம்பன் , ராமன் நினைப்பதை   இப்படி  எழுதுகிறான் பாருங்கள்.


கொள்ளை கொள்ளக்  கொதித்தெழு பாற்கடல்
பள்ள வெள்ள மெனப்பட ருந்நிலா
உள்ள வுள்ள வுயிரைத்துருவிட
வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.


கொள்ளை கொள்ள  அதாவது  உலகமுழுவதையும் கவர்ந்து இழுத்து தன் வசமாக்குவதற்கு
கொதித்தெழு பாற்கடல்.. பொங்கி எழுகின்ற பால்கடல்

பள்ள  வெள்ளமென  ஆழமாகிய நீர் வெள்ளம் போல்படரும்
படரும்...உலகெங்கும் பரவி உள்ள
நிலா..சந்திரகாந்தமானது
உள்ள உள்ள..நான் அந்த மங்கையை.நினைப்பதே பயனாகப்பிழைத்துள்ள
உயிரைத்துருவிட.... உயிரைத்துளைப்பதனால்
வெள்ளை வண்ண விடமுமுண்டு கொலோ..வெள்ளைநிறத்தில் விஷமும் இருக்கிறதோ(என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது)

விஷம் என்பதுகரிய நிறம். ஆனால் நிலாஎன்கிற வெள்ளை நிறம் விஷமாகக்கானப்படுகிறதாம். காதலியில்லாமல் தனிமையில் இருக்கும் தனக்கு மரண வேதனை தருகிற நிலவினைப்பழித்துக்கூறுகிறானாம் ராமன்!

பாடல் அருமையாக இருக்கிறதுதானே! கம்பராமாயணப்பாற்கடலில் இது ஒரு துளிதான்!








 
மேலும் படிக்க... "வெள்ளை வண்ண விடமுமுண்டாங் கொலோ.!"

Thursday, July 11, 2013

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !





 .....................................................
உலகம் இருப்பதும் பணத்தாலே இங்கே
கலகம் வருவதும் அதனாலே-மனக்
கலக்கம் பிறப்பதும் பணத்தாலே-இதன்
விளக்கம் தருபவர் யார் இங்கே?

பேதங்கள் வளர்வதும் பணத்தாலே-நல்ல
வேதங்கள் கெடுவதும் அதனாலே- வீண்
வாதங்கள் பிறப்பதும் பணத்தாலே- அதன்
பாதங்கள் வெறுப்பவர் யார் இங்கே?

மனமுங் குலைவது பணத்தாலே-நல்ல
குணமும் கெடுவது அதனாலே- அதை
தினமும் வணங்கும் மனிதனுக்கு-எந்தக்
கணமும் இல்லை ஒரு தவிப்பு!

பத்தும் செய்யலாம் பணமிருந்தால் -எந்தப்
பித்தும் பிடிக்கும் அது இருந்தால்!-சிலர்
செத்தும் பிழைப்பார் பணத்தாலே-நற்
முத்துக்குணத்தையும் தான் இழப்பார்!

நிறத்தால் பிரியும் மனிதனையே -தன்
திறத்தால் பிரித்தே வைத்திடுமே-இதை
வெறுத்தோர் என்று யாருமில்லை-பணத்தை
வெறுத்தோர் இங்கே வாழ்வதில்லை!






('தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூன் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் சகோதரிஷைலஜா முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார் கவியருவி சான்றிதழ் பெறும்முதலாவது கவிதை இது '   என்று  அறிவித்துள்ளார் தடாக நிறுவனர் நன்றி அவர்தமக்கு)
https://www.facebook.com/thadagamkalaiilakkiyavattam?hc_location=timeline
 


 
மேலும் படிக்க... "பத்தும் செய்யலாம் பணமிருந்தால் !"

Sunday, July 07, 2013

தாயே யசோதா!(சிறுகதை)





மாலதியும் பத்ரியும்  ஏகமனதோடு அந்த முடிவிற்கு வந்தார்கள். அதற்குத்  தங்களைத்  தயார்ப்படுத்திக்கொள்ள  ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன..
 
 
ஆமாம்,  மீராவை அவர்கள்  தத்தெடுத்து இன்றோடு  பதிமூன்று  வருஷங்கள் ஆகிவிட்டன.   அவளுக்கு ஆறுவயதாகும் வரை  குழந்தையாகத்தான் இருந்தாள் அப்புறம்தான்  ஒருநாள் கேட்டுவிட்டாள்” என்னம்மா  நான்  உன்னை மாதிரியும் இல்லை அப்பா மாதிரியும் இல்லை  அப்படியானால் நான் யார்ஜாடை? என்று கேட்டபோது  இருவருக்குமே தூக்கிவாரிப்போட்டது.
 
  பத்ரி  ஊரிலிருந்து  அப்போது வந்திருந்த தன்  தாயை  சுட்டெரிப்பதுபோல பார்த்தான்
 
.’உங்க வேலையா இது?’  கண்கள் அதட்டின
 
 
”இல்லையப்பா சத்தியமாய் நான் இல்லை”
 
அவன் தாய் மிரண்டாள் கண்களாலேயே.
 
” அப்பா! உங்க  அக்கா  ஒருத்தங்க  இருந்தாங்கன்னு சொல்விங்களே அவங்க கூட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கன்னும் சொல்லி இருக்கீங்க . நான் அத்தை ஜாடையா இருக்கலாமோ?”  அவளே தொடர்ந்து கேட்கவும்.”ஆமாம் ஆமாம் “ என்று  உரத்தகுரலில்  மாலதியும் பத்ரியும்  பெருமூச்சு விட்டபடி அமோதித்தனர்.
 
அப்போதிலிருந்தே  என்றைக்காவது மீராவிடம் உண்மையைசொல்லிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டார்கள் . இப்போதுதான் அதற்கு வேளை  வந்திருக்கிறது.
 
  கல்யாணமாகி ஏழுவருடமாகியும் குழந்தை இல்லாமற்போகவும்  குறை  மாலதியிடம் என்று முடிவானதும்  பத்ரி சற்றும்  மனம் தளரவில்லை..”தத்தெடுக்கலாம் மாலு.. தப்பில்லை...நமக்காய்ப்பிறந்ததுமேல் நாம் அன்பு செலுத்தினால் அது இயற்கை ,ஆனா  அனாதைகளை  தத்தெடுத்து நம்குழந்தையாய் வளர்க்கிறதுதான் மானுடம்” என்றான்.
 
 
சின்னஞ்சிசுவை தத்தெடுத்த கையோடு வேலைமாற்றிகொண்டு  சென்னையிலிருந்து பெங்களூருக்கு  வந்துவிட்டான்.
குழந்தைக்கு  மீரா என்று பெயர் வைத்தனர்.
 
 
மீராவைக்கண்போல வளர்த்தனர்.
 
 
மீராவிற்கு தினமும் தூங்கப்போகுமுன்பு கதைகள் சொல்லும் வேலை  மாலதிக்கு !அதைப்பெருமையாய் செய்துவிடுவாள் மாலதியும்..பாடம் சொல்லிக்கொடுப்பது பத்ரியின் கடமை.  ஆக அவர்களின்  வற்றாத அன்பில் மீரா  இன்று பதிமூன்றுவயதுப்பெண்ணாய் வளர்ந்து நிற்கிறாள்.. அறிவும் விவேகமும் கொண்ட பெண் என்று வகுப்பு ஆசிரியை அவளைபுகழ்கிறார்.
 
“கொடுத்து வச்சவ மாலு நீ! உன் பொண்ணு ரொம்ப சமத்து  ...படிப்பில் சுட்டி. குணத்திலும் பிடிவாதம்்மில்லை.. என் பொண்ணுக்கு படிப்பும் வரலை. மகாபிடிவாதம் அப்படியே  என் மாமியாரைக்கொண்டிருக்கு சனியன்’என்று  குடி இருப்புதோழி  வசந்தா  சொல்வாள்..
 
வசந்தாவைப்போல பலரிடமும் மீராவிற்கு நல்லபெயர்தான்!
 
“ஆச்சுடிம்மா  இனிமே எப்ப வேணாலும் மீரா   வயசுக்கு வந்திடலாம்...  பளபளன்னு வளர்ந்திருக்கா ...எல்லாம்  பருவம்! கூடிய சீக்கிரம்  வயசுக்கு  வரதுக்கு முன்னாடி  உண்மையை   நீங்களா சொல்லிடறது உத்தமம். ....நாளைக் கடத்தக்கடதத  விபரீதமாய் போய்விட வாய்ப்பு இருக்கு...ஈர மண்ணில் தடயம் பதியும் சொல்கிற வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனசு இது..அப்புறம் எதிர்த்துக்கேள்விகேட்கும் பருவம்  வரும். சண்டைபோட்டு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் ஆமாம் அதான் எச்சரிக்கிறேன்”  என்று போனமுறை  வந்துபோன பத்ரியின் அம்மா சொல்லிவிட்டுப்போய்விட்டாள். அவளுக்கு தன் மகனின் உதிரம் மீராவிடம் இல்லாவிட்டாலும்  ‘பாட்டி பாட்டி’என அவளை சுற்றியபடி்   பல்லாங்குழி விளையாடுவது   தாயம் ஆடுவது   என்று  வயதான  தன்னைஒதுக்காத பண்பு மனதை  நிறைத்தது.
 
ஆகவே மீராவிடம்  ‘நீ நாங்கள்பெற்றமகள் இல்லையம்மா  தத்தெடுத்த குழந்தை’என சொல்லிவிடவேண்டியதுதான்’
 
 
பத்ரி  மனதுக்குள்  ஒரு  ஒத்திகைபார்த்துக்கொண்டான்.
 
பள்ளிவிட்டு வீடுவந்த மீரா வழக்கம்போல கைகால் கழுவிக்கொண்டாள்.பூஜை அறை சென்று கண்மூடி தியானித்தாள்.
 
பிறகு  மாலதியை நோக்கி,” அம்மா இன்னிக்கு ஸ்கூல்ல என்னாச்சு   தெரியுமா?” என்றாள்.
 
 
மாலதி வியப்பும் குழப்பமுமாய் பார்த்தாள்.
 
“கதை சொல்லல்  நிகழ்ச்சி நடந்தது அதை  தனியார் டிவி ஒண்ணு வந்து  படம்பிடிச்சாங்கம்மா.. நான் சொன்ன  யசோதை கிருஷ்ணர்   கதையை ரொம்ப ரசிச்சாங்கம்மா..அடுத்தவாரம்   ஒளிபரப்பாகப்போகுதாம்”
 
“அப்படியா மீரா?”
 
“ஆமாம்மா..ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டு மை மாம்”  என்று நான் பெருமையாய் சொல்லிட்டேன்..
 
 
“என் செல்லக்கண்ணூ ஆச்சே நீ?”   மாலதி  கண்  சிமிட்டிப்பாராட்டினாள்.
 
இல்லையாபின்ன?  ஒருவயசிலிருந்து உன்கிட்ட கதை கேட்டு கேட்டு எல்லா டய்லாக்கும்  ஆழ்வார்  பாசுரங்களும்  நெட்ரு”ம்மா!!!”
 
 
“வாலுக்குட்டி சரிசரி சாப்பிட வா.உ.னக்குபிடிச்ச  பூரி மசால் செய்திருக்கேன்”
 
“பாட்டிக்கும் பிடிக்கும்மா...அவங்க   இங்க இருந்தப்போ   செய்திருக்கலாமே?நேத்து பாட்டி ஊருக்குப் போனதும் இன்னி்க்குப்பண்ற? மாமியார்மேல என்ன கோபம்?!”
 
 
“ஹேய் நாட்டி கேர்ல்”
 
செல்லமாய் அவள்தலையில் மாலதி குட்ட  மீரா  பயப்படுவதுபோல ஓட  ஆபீஸ்விட்டு  அப்போதுதன வீடு வந்த பத்ரி இதைரசி்த்தமாதிரி  தெரியவில்லை.
 
 வழக்கமாய் அவனும் இதில்கலந்துகொண்டு மீராவை சிரிக்கவைப்பான் இன்று அமைதியாக தன் அறைக்குப்போகவும் மீரா,”அப்பாக்கு ஆபீஸ்ல ஏதும் பிரச்சினைபோலருக்கும்மா போய் கவனிச்சி  சாப்பிடக்கொடுங்க” என்று சொல்லி விட்டு தனது அறைக்குள் படிக்கபோய்விட்டாள்.
 
டிபனை சாப்பிடக்கூடப்பிடிக்காத பத்ரி,” மாலதி..அம்மா சொன்னமாதிரி  நாம் இனியும்  தாமதிக்கக்கூடாது   இன்னிக்கு சொல்லிடணும் சொல்லியே ஆகணும்  அதன்விளைவு என்னவாக இருந்தாலும் எதிர் நோக்கித்தான் ஆகணும்” என்றான்.
 
மாலதி மௌனமாய் தலையசைத்தாள்.
 
இருவரும் தயங்கிதயங்கி   அந்த அறைக்குள் நுழைந்தனர்
 
செல்பொனில்   யாரிடமோ உரக்க   பேசிக்கொண்டிருந்தாள் மீரா.
 
இதபாரு வர்ஷா..பரிட்சைக்குபத்துநாள்தான் இருக்கு இப்போபோயி சினிமாபோகலாமாங்கறே அதுவும் வீட்டுக்கு சொல்லாம?  பெத்துவளர்த்த அப்பாவுக்கு துரோகம் செய்யலாமா அது மகாதப்பில்லையா? பரிட்சைமுடியட்டும் அவங்க  கிட்ட  சொல்லிட்டு நிம்மதியாபோகலாம் என்ன வச்சிடவா ?’ என்று செல்போனை கீழேவைத்தவள் அறையில்நிழலாடவும் நிமிர்ந்தாள்.
 
 
கண்களை விரித்து,”அட அப்பா அம்மா ரெண்டுபேரும்  சேர்ந்து இன்னிக்கு  வந்துட்டிங்களே , என்னவிஷயம்?”  என்று  குறும்பாய் கேட்டாள்.
.
அவளது அறைச்சுவரிலிருந்த வள்ளுவர் படமும் பாரதி படமும்  உலோகத்திலான அனுமன் வார்ப்பும்  யசோதைக்குப்பயப்படுவதுப்போல பாசாங்கு காட்டும் கிருஷ்ணரின் காலண்டரும் அறைக்கு அழகு சேர்த்தன என்றால் ஒழுங்காய்  \கச்சிதமாய்  அலமாரியில் அடுக்கி  வைத்திருந்த பாடப்புத்தகங்களின் வரிசைகளும்   வெளியே எங்கும்  தொங்காத  ஆடைவகைகளும் அறையின்  தூய்மையைப் பறை சாற்றின.   .
 
ஆனாலும் பத்ரிக்கு மாலதியைவிட சற்றுதிடமனதோ என்னவோ  சட்டென ஆரம்பித்துவிட்டான்.
 
”மீரா! உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்”
 
” இப்பவா  ? நான் பரிட்சைக்குப் படிக்கணும்ப்பா”
 
“இதுவும் வாழ்க்கைப்பரிட்சைதான்  மீரா!”..
 
”என்னப்பா  சினிமா அப்பா மாதிரி பேசறீங்க?” என்றுகேட்டு சிரித்துவிட்டாள்மீரா.
 
மாலதி சின்னதாய்விசும்பவும்திடுக்கிட்டு” அ  ..அம்மா?” என்று அவள்தோளைத் தொட்டாள்.
 
பத்ரி தொடர்ந்தான்.
 
“ஆமாம்  மீரா  ...இனியும் நீ குழந்தை இல்லை.. யு ஆர்   எ மெச்சூர்டு சைல்ட் நௌ..”
 
“ஆஃப்கோர்ஸ் நான் குழந்தை இல்லைதான் அப்பா..பதிமூணுவயசுப்பெண்தான்  அதற்கு என்ன அப்பா?”
 
 
”மீரா..நாங்க சொல்றதை நீ  மன திடமாய்  கேட்கணும்மா...  ஆமாம் மீரா  திடமாய்  கேட்டுக்கோ....அது வந்து.. ...நீ  நீ..நாங்க பெத்த குழந்தை இல்ல.தத்தெடுத்தப் பெண் குழந்தை.   ஆனா.. ஆனா பெத்தபெணணைவிட நாங்க உன்னை கவனிச்சோம் இனியும்கவனிப்போம் கண்ணம்மா”
 
சொல்லிமுடிப்பதற்குள் பத்ரி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான் மாலதி ஹோவெனக்கதறிவிட்டாள்.
 
 
அழுகைதான் அங்கே சிலகணங்களுக்குப் பேசிக்கொண்டிருக்க  சட்டென  கலகலவென சிரித்தாள்மீரா.
 
 
மாலதியும்பத்ரியும் திகைப்புடன் அவளைப்பார்த்தனர்.
 
“இதுக்கா இவ்வளவு  வார்த்தைகள்? அப்பா !அம்மா ! இந்த விஷயம் எனக்கு எப்போதோ தெரியுமே!”  என்றதும்  தூக்கிவாரிப்போட  இருவரும் நிமிர்ந்தனர்  .
 
எப்படி எப்படி? தத்தெடுத்த மையம் மற்றும் மாலதியின்  இறந்துபோன  அன்னை க்கும்தனது அன்னைக்கும் மட்டுமே தெரிந்த  ரகசியம் எப்போது  அம்பலமாகிப்போனது?
 
பத்ரி குழப்பமும் வேதனையுமாய் நிற்கையில் மீரா,
 
“யார் சொன்னாங்கன்னு யோசிக்க வேண்டாமே அம்மாமூலமாகத்தான் எனக்கு தெரிஞ்சுது”என்றதும் மாலதி அதிர்ந்தாள்..பத்ரி நிலைகுலைந்தான்
 
“நா..நானா?”  மாலதி வீறிட்டாள்.
ஆமாம்மா..நீநேரிடையாய் சொல்லலை.ஆனா  எப்போதும் கிருஷ்ணர் கதையை எனக்கு சொல்வாய்  அந்தக் கதையில் ஒரு  தடவைகூட   கிருஷ்ணரை சுமந்துபெற்ற தேவகியைக்கொண்டுவரமாட்டாய் அம்மா  யசோதையைத்தான் அவளுக்கு மகன்  மேலிருக்கும் அன்பை,  பாசத்தை  சொல்வாய்! அப்படியே எப்போதாவது   சொன்னாலும் தேவகியின் வேதனையை  ஆழ்வார் பாடியதை  சந்தோஷமாய் சொல்லிக்கொள்வாய்! 
 
மருவும் நின் திருநெற்றியிற் சுட்டி
      அசைதர மணிவாயிடை முத்தம்
தருதலும் உன்தன் தாதையைப் போலும்
      வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து
      வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும்
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம்
      தெய்வ நங்கை யசோதை பெற்றாளே
 


பாடி முடிக்கும் போது கண்பனிப்பாய் !  அம்மா...எழெட்டுவயதிலேயே இதை கவனித்திருக்கிறேன் ஓரளவுபுரிந்துபோனது. ஒருநாள்அத்தையின்  சின்னவயதுப்புகைப்படம் தற்செயலாய் அன்று கொலுபொம்மைபெட்டிக்குள்  கிடைத்ததையும் பார்த்தேன் ஊஹூம் என்ககு அத்தையின் சாயலே இல்லை. என் மாநிற உடம்பும் கொஞ்சம் கூட  உங்க சாயலே இல்லாத முகமும் எனக்குள்ளிருந்த சந்தேகத்தை  நிரூபித்தது.ஆனால் என்னஅம்மா  தேவகி யை அதிகம்  யாரும் நினைப்பதில்லை .கிருஷ்ண வைபவம் என்றால் அது ஆயர்பாடிலிருந்துதானே  ஆரம்பிக்கிறது அவன் மகிழ்ச்சியும்  கொண்டாட்டமும் அங்கேதானே அம்மா? நான்  என்னை க்ருஷ்ணனா நினைச்சிக்கிறேன்  சந்தோஷமா  இருக்கேன்  உங்களைவிட உசந்த பெற்றோர் எனக்கு எங்கே  கிடைப்பார்கள்? “ சிரித்தபடி  மீரா சொல்லி முடித்ததும்
பத்ரியும் மாலதியும் அவளை இறுக அணைத்துக்கொண்டார்கள்.
 
 கண்ணீரைத்துடைத்துக்கொண்டு மெல்ல சிரிக்க ஆரம்பித்தார்கள்.
 
அணைத்த தோள்களின்   மறுபுறமிருந்த  மீராவின் கண்களில்தான்  இப்போது நீர் பெருக ஆரம்பித்தது.
 .
 
(julyகலைமகள்  இதழில் பிரசுரமாகி உள்ள சிறுகதை)
 
 
 

மேலும் படிக்க... "தாயே யசோதா!(சிறுகதை)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.