Social Icons

Pages

Wednesday, June 24, 2009

J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)

J.ஜனனி
D/O
K.ஜகதீசன்

(சிறுகதை .உரையாடல் போட்டிக்கு)
***************************” ரிசப்ஷனுக்கு மணப்பொண்ணும் மாப்பிள்ளையும் தயாராகி நாற்காலில உக்காந்திட்டாங்க நாம நிகழ்ச்சியை ஆரம்பிக்கலாமா , நீதான் முதல்ல கடவுள் வாழ்த்துப்பாடல் பாடணும்,ரெடியா, ஜனனி?"

' மாலைத்தென்றல் ’ மெல்லிசைக்குழுவின் இசைஅமைப்பாளர் ரங்கப்ரசாத இப்படிக்கேட்கவும்,’ ஒருநிமிஷம்!’ என மைக்கின் முன்பாக விரல்களைமூடியபடி சன்னமான குரலில் சொன்ன ஜனனி,மேடை ஓரமாய் நகர்ந்தாள்.

அங்கிருந்த தன் கைப்பையிலிருந்து தண்ணீர்பாட்டிலை எடுத்தாள். மூடியைத்திறந்து கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டு திரும்பினாள்.”ம்ம் ,ரெடி ஸார்!” என்றாள்.

கீபோர்டில் விரல்களைப்பதித்துக்கொண்டிருந்த ஆகாஷ்
” உன்பேரை ’ஜனனி ’என்பதற்குபதிலா 'ஜலம்நீ' அப்படீன்னு வச்சிருக்கலாம். எப்போபார்த்தாலும் வாட்டர்பாட்டிலும் கையுமாவே இருக்கிறே” என்றான்.

ஆகாஷ், ஜனனியைப்போல சென்னையில் முன்னுக்குவந்துகொண்டிருக்கும் ’மாலைதென்றல்’ என்னும் மெல்லிசைக்குழுவின் ஒரு பாடகன், இருபத்தி நாலுவயது இளைஞன்.

உரிமையாளரும் இசைஅமைப்பாளருமான ரங்கப்ரசாத், தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கும், சிலமெகாதொடர்களுக்கும் இசை அமைப்பவர். அவரது குழுவிலிருந்து பல இசைக்குயில்கள் திரைப்படத்திற்குபறந்துவிட்டன..இன்னும் சில நாட்களில் ஜனனிக்கும் அந்தவாய்ப்புவரப்போகிறதென்பதை ரங்கப்ரசாத் யூகித்துவிட்டார். ஆனால் ஜனனிதான் ’முதல்லபடிப்புமுடியட்டும் ஸார்” என்பாள்.

பிஎஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் கடைசிவருஷம் படிக்கும் ஜனனிக்கு நல்லகுரல்வளம். பாட்டுக்கற்றுக்கொள்ளவசதி இல்லாத சூழ்நிலையில் சின்னவயதிலிருந்தே காதால்கேட்டே இசைஞானத்தை வளர்த்துக்கொண்டு தன்னைத்தானே மெருகேற்றிக்கொண்டவள்.

ஜனனிக்குஅப்பா ஜகதீசன் தான் எல்லாம்.

அப்பாவும்பெண்ணுமாக சென்னைபுறநகர்ப்பகுதியொன்றில் சிறியவாடகைவீட்டில் வசிக்கிறார்கள் ஜகதீசனுக்குவாட்ச்மேன் உத்தியோகம்.

ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண்கள் வாங்கிய மகளை இஞ்சினீயரிங்படிக்கவைக்கமுடியாத தன் நிலைக்கு அடிக்கடி புழுங்கிப்போவார் ஜகதீசன். எத்தனை பேரிடம் கையேந்தி யாசகம் கேட்டிருப்பார்? ’வாட்ச்மேன்மகளுக்கு மேற்படிப்பா ?’என்கிறமாதிரியான கிண்டல்பார்வைகள் ஏச்சுப்பேச்சுக்கள்தான் கிடைத்தன!

ஜனனிதான் அவரிடம்,” அப்பா! ஷேக்ஸ்பியரின் வரிகள் தான் நினைவுக்கு வருது இப்போ.
‘வாட்டர் வாட்டர் எவ்ரி வேர்! பட் நாட் எ ட்ராப் டு ட்ரிங்க்’(water water everywhere but not a drop to drink) என்பார் . கடலில் செல்லும் அந்தக்கவிஞர், ’சுற்றி எங்கிலும் எட்ட்டுதிக்கிலும் நீர்இருந்து என்னபயன் ஒருதுளியாவது குடிநீராக இருக்கிறதா அருந்துவதற்கு?” என்று கேட்கிறார் .அதுமாதிரி நம்மைச்சுற்றி இத்தனை மனிதர்கள் இருந்தும் என்ன, உதவி செய்ய யாருக்கும் மனம் என்கிற மார்க்கம் இல்லாதபோது? அதனால் ஒன்றும்பாதகமில்லையப்பா. இந்தப்படிப்புக்கு ஏற்றமாதிரி கிடைக்கிற வேலையில் நான் சம்பாதிச்சி உங்களை உக்காரவச்சி சோறுபோடுவேன்.” என்பாள்

’இப்பவே பலசெலவுகளுக்கு நீ பாடி சம்பாதிச்சி தர்ரியே ஜனனீ? கூர்க்கா வேலைல எனக்கென்ன பெருசா காசுகிடைக்குது? ஹ்ம்ம்” மனசுக்குள் அழுவார் ஜகதீசன்

”ஆஹா ’ஜலம்நீ’! அஷோக்நல்லபேருதான் வச்சிருக்கான் உனக்கு!”

ரங்கப்ரசாத் சிரித்தபடி ஜனனியை ஏறிட்டார்.பிறகு அவரே,

” நானும்சும்மா சொன்னேன் ஜனனி ! உன்னை கிண்டல் செய்யறதுன்னா என்மகளை கிண்டல் செய்றாப்பலதானே! வாஸ்தவத்துல இந்தக்காலத்துல உன்னை மாதிரிப்பெண்கள் ரொம்ப அபூர்வம்.நாகரீகமோகத்துல கண்டபடி அலங்காரம் செஞ்சிக்காம சேலை பூ பொட்டுனு வலம் வரும் இளம் பெண் நீதான்மா. படிப்புபாட்டு குடும்பம்ன்னு அடக்கமா அழகா அதேசமயம் அனாவசிய அச்சமும் இல்லாமல் உன்னைமாதிரி இருக்கிற பெண்களைப்பாக்றதே நிறைவா இருக்கு.நிஜம்மா பாரதி சொன்ன புதுமைப்பெண் நீதான்!” என்று நெகிழ்ச்சியான குரலில் சொன்னார்

”என்னைப்புகழறதுல நீங்க வள்ளல்தான்! சரி ஸார்!நாம ஆரம்பிச்சிடலாம். கல்யாணத்துல கச்சேரின்னா எல்லாரும் பேசிட்டு இருப்பாங்களே தவிர நம்மையே கவனிப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாதுதான் அதுக்காக நாம டைமுக்கு ஆரம்பிக்காம இருக்கக்கூடாதது. ஆங்..அப்றோம் ஸார்...சரியா ஒன்பதுமணிக்கு நம்ம நிகழ்ச்சிமுடிஞ்சிடும் இலலையா ?”

”முடிஞ்சாலும்முடியலென்னாலும் உன்னை டையத்துக்கு வீட்டுக்குஅனுப்பிடுவேன் ஜனனி ... உனக்கு உன் அப்பா பத்திகவலையாயிடும்னு எனக்குதெரியாதா?”

” நிஜம்தான் ..ஆனா இன்னிக்கு அப்பாவீட்ல இருக்கமாட்டார். செங்கல்பட்டுல அவர் ஃப்ரண்டு பொண்ணுக்குகல்யாணம்னு போய்ட்டு நாளைக்கு தான் வரேன்னு சொல்லிட்டார். ”

கல்யாண மண்டபத்தில் அனைவரும் மாலைத்தென்றல்குழுவின் நிகழ்ச்சியைக்காணவும் கேட்கவும் தயாராகவும், மைக் அருகில் வந்து நின்ற ஜனனி,” ஜனனீ ஜனனீ ஜகம் நீ அகம் நீ” என்றுபாட ஆரம்பித்தாள்

ஜனனி பாடிக்கொண்டிருக்கட்டும், நாம் இப்போது அவள் அப்பா ஜகதீசனைத் தொடர்வோம்

”ஐயா! இதான் மீராம்பிகா அபாட்மென்ட்ஸ் ! இங்கதான் உங்களுக்கு இன்னிக்கு நைட் ட்யூட்டி.”செக்யூரிடி ஆபீசர் அந்த மூன்றுமாடிகள்கொண்ட கட்டிடத்தினுள்ளே ஜகதீசனோடு நுழையும்போதே சொல்லிக்கொண்டுவந்தார்.

அறுபதைவயதை நெருங்கும் தன்னிடம் மரியாதையாகப்பேசிய அந்த இளைஞனைப்பார்த்து கண்பனித்தார் ஜகதீசன்.

பொதுவாக”வாட்ச்மேன்! ஏய் கூர்க்கா!” இப்படித்தான் யூனிஃபார்மிலிருக்கும்போது தன்னைப்பலர் அழைக்கக்கேட்டிருக்கிறார் ஜகதீசன்.


“ இங்க நைட் வாட்ச்மேனா ஒருவாரமா குமரவேல்னு ஒருத்தர்தான் பாத்திட்டு இருந்தாரு.குமரவேலின் அம்மா சடனா இறந்துட்டாங்கன்னு ஊருக்குப்போயிட்டதினால் வேறயாரும் தற்சமயம் இல்லாததால உங்களை இன்னிக்கு ஒருநாளைக்குமட்டும் நைட்வாட்ச்மேன் பணிக்கு நியமிச்சிருக்கேன்.பொதுவா நீங்க அதிகம் நைட்ல வேலை செய்யறதில்லனு தெரியும் பட் இப்போ உங்களைவிட்டா யாரும் சரியா இல்லை,அதான்.
ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு சொல்லி இருந்தாலும் நீங்களும் சரின்னு ’அக்சப்ட்’ பண்ணிக்கிட்டதுக்கு தாங்க்ஸ் ஐயா! வாங்க, அபார்ட்மெண்ட்ல நாலுபேர்கிட்ட உங்களை அறிமுகப்படுத்திட்டு நான் கிளம்பறேன்”

”ம்” என்று தலையாட்டியபடி ஜகதீசன் கால்கள் நடந்தாலும் மனசு அதட்டலாய்கேட்டது.

’ நீ இப்படி காசு அதிகம் கிடைக்கும்னு நைட் வாட்ச்மேன் வேலைக்கு வந்திருப்பது உன் மகள் ஜனனிக்குத் தெரிஞ்சா துடிச்சிபோயிடுவாளே. அவகிட்ட செங்கல்பட்டுல கல்யாணம்னு திட்டம்போட்டு மதியமே பொய் சொல்லி இருக்கே! இத்தனை நாளாய் நீ கடைப்பிடிச்சிட்டு இருந்த உன் சத்தியம் தர்மம் நேர்மை எல்லாம் இப்போ காத்துலபறந்திடிச்சா ஜகதீசா?”செக்யூரிடி ஆபீசர் அந்த பன்னிரண்டு குடி இருப்புகள் இருந்த மீராம்பிகா ஃப்ளாட்டில் ஏழெட்டுவீடுகளின் கதவைத்தட்டி அவர்களிடம்ஜகதீசனை அறிமுகப்படுத்திவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.

ஜகதீசன் காம்பவுண்ட்கேட்டை அடைத்துவிட்டு அங்கே கூடைவடிவிலிருந்தபிரம்பு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.

கைகடிகாரத்தில் மணிபார்த்தார். ஒன்பதரைஆகியிருந்தது.

’இந்நேரம் கச்சேரிமுடிஞ்சி ஜனனி கார்ல கிளம்பி இருப்பா... ரங்கப்ரசாத், நல்லமனுஷர். ஜனனியை பெத்த மகளா கவனிச்சி அவ வளர்ச்சில அக்கறைகாட்டுறார். எனக்குத் தான் கோழை மனசு. பொண்டாட்டி போனபிறகு வாழ்க்கையே இருட்டா இருக்கறமாதிரி அடிக்கடி நினச்சிக்குவேன். இருட்டைப்பாத்து பயப்படும்போதெல்லாம் ’இருளாயிருக்கறதனாலதான் நட்சத்திரங்களை ரசிக்கமுடிகிறது அப்பா’ன்னு ஏழுவயசிலேயே எனக்கு வாழ்க்கைப்பாடம் நடத்தினவள் என் மகள். மெலிந்த தேகம் ஆனா கம்பீரமான சாரீரம்! ’துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா ?’என்கிற பாட்டை ஜனனி பாடினா கண் குளமாயிடும். பாடிப்பாடி தொண்டைதான் ஜனனிக்கு வறண்டுபோயிடும். கண்ட தண்ணீ ஒத்துக்காது,வீட்ல நல்லா துளசி சுக்கு சீரகம்எல்லாம் போட்டு காய்ச்சி வடிகட்டினதண்ணியத்தான் எப்பவும்கைப்பைல எடுத்திட்டுப்போவா. ..’


’பாம்பாம்’

கார் ஹார்ன் அலறவும் ஓடிப்போய் கேட்டை அகலத்திறந்தார் ஜகதீசன். காரை நோக்கி விறைப்பாய் சல்யூட் அடித்தார்.

காரின் பின்கதவைத்திறந்து இறங்கிய ஒரு வயதான மனிதர்,”யாருப்பா புது வாட்ச்மேனா? குமரவேல் போயாச்சா என்ன?”எனக்கேட்டார்.

“ஆமாங்க இன்னிக்கு மட்டும் நான் இருப்பேன்.”

‘அப்படியா? தூங்கிடாம கார் வண்டிங்களையும் பாத்துக்கப்பா..வரவர இந்த ஏரியால ரொம்ப திருட்டுபயமா இருக்கு”

“சரிங்கய்யா பாத்துக்கறேன்”
அபார்மெண்டின் கார்கள் பல வந்துகொண்டிருந்தன. பத்தரைமணிக்கு வந்தகாரிலிருந்துஇறங்கிய ஒருநடுத்தரவயது பெண்மணி ஜகதீசனைபார்த்து,” என்கிட்ட போன்ல செக்யூரிடி ஆபீசர் சொன்ன புது வாட்ச்மேன் நீங்கதானா?” எனக்கேட்டாள்.

ஜக்தீசன் பணிவாய் தலை அசைத்தார்.

அவள் தொடர்ந்து,
“ நான் இந்த ஃப்ளாட்ஸ்ல செகண்ட் ஃப்ளோர்ல இருக்கேன். மூணு ஃப்ளோர்லமொத்தம் பன்னிரண்டுவீடுகள்னாலும் மேல்மாடில இப்போ யாருமே இல்ல. காரணம் அங்கே ஒரு ஃப்ளாட்டை செல்வராஜ்னு ஒரு அரசியல் செல்வாக்கு உள்ள ஆளு சொந்தமாக்கிட்டு அக்கிரமம் பண்ணிட்டு இருக்கான். தட்டிக்கேட்க ஆள் இல்ல.போலீஸ் மந்திரிங்க எல்லாரையும் கைல போட்டு வச்சிருக்கான் அவன் அட்டூழியம் தாங்கமுடியாம மூணாவது ஃப்ளோருக்கு யாருமே குடிவர்ரதில்ல வந்தாலும் நிலச்சி நிக்கறதில்ல.எதுக்கு சொல்றேன்னா அந்த ராஸ்கல் நடு நிசில இங்க என்னிக்கு வேணாலும் வருவான் முழு போதைல பலநேரம் அருகாமைல பொண்ணுங்க யாருடனாவதும் வந்திடுவான், நீங்க புதுசு அவன்கிட்ட பாத்து நடந்துகுங்க அதான் எச்சரிக்கலாம்னு சொன்னேன்” என்று அலுப்பும்
வெறுப்புமாக சொல்லிவிட்டு காரை பார்க்கிங் ஸ்லாட்டில் நிறுத்திவிட்டு நகர்ந்தாள்.

”நன்றிம்மா..சரிங்கம்மா”

அவளுக்கு சல்யூட் அடித்துவிட்டு

காம்பவுண்ட்கேட்டை மறுபடிசாத்திவிட்டு தன் இருப்பிடத்தில்வந்து அமர்ந்துகொண்டார் ஜகதீசன்,

.

ஜகதீசனுக்கு தூக்கம்வரும்போலிருந்தது. ஜனனி தூங்கி இருப்பாள். செல்போன் ஒன்று தன்கையில் இருந்தால் இந்நேரம் மகளோடு பேசி இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டார். ’ஜனனிக்கே செல்போன் இல்லையாம் நாலுஇடம்போய்வருகிற பொண்ணு !நமக்கென்ன அது வேண்டிக்கெடக்கு?” என முணுமணுத்துக்கொண்டார்.


மணி பதினொன்று

அபார்ட்மெண்டின் எல்லாவீடுகளிலும் ஒவ்வொருவிளக்குகளாய் நிறுத்தப்பட்டன. செக்யூரிடி சொன்ன இடத்தில் கார்பார்க்கிங்பகுதியிலே ஒரு ஓரமாய் அங்கிருந்த பாயைவிரித்துப்படுக்க ஆயத்தமானார் ஜகதீசன்.

சட்டென மின்சாரம் பறிபோனது.

கும்மிருட்டில் அப்படியே உட்கார்ந்தவர் பிறகு தூக்கம்கண்களை அழுத்தவும் பாயில் தலையை சாய்த்தார்.

அப்போது வாசலில் கார் ஹார்ன் நாராசமாய் கேட்டது.

ஜக்தீசன் தூக்கிவாரிப்போட்டவராய் இருட்டில்தட்டுத் தடுமாறி நடந்து பின்ஓடிப்போய் கதவைத்திறந்தார்

பாம்பாம்!பாம்பாம்!

கார் ஜன்னல்கண்ணாடியைதிறந்துகொண்டு தலையை நீட்டிய உருவம்,” ஏய் அறிவிருக்கா உனக்கு? ஒருவாட்டி ஹார்ன் அடிச்சா ஓடிவரவேணாம்?” என்று அதட்டியது.

’தட்’டென ஓசைப்படுத்தியபடி உள்ளேகாரைக்கொண்டுவந்து ஒருபக்கமாய் நிறுத்தியவன், ஜகதீசனிடம்” எப்போ கரெண்ட் போச்சி? ந்நான் சென்ஸ்! இந்த ஃப்ளாட்ல ஒருத்தருக்கும் பொறுப்பில்ல பவர் இல்லேன்னா போன் செய்யறதில்லையா எலெக்ட்ரிசிடிபோர்டுக்கு ஹ்ம்ம்?:” என்று சீறினான்.

பிறகுபின்கதவைத்திறந்து, கைகளை கூப்பிய நிலையில்,”நீ இறங்கு ஏஞ்சல்!” என்று
கெ(கொ)ஞ்சினான்.

ஜகதீசனுக்கு காரினின்றும் யாரோ ஒரு பெண் இறங்குவது அரைகுறை இருட்டில் லேசாய்
தெரிந்தது. ஆனால் முதலில் இறங்கி அதட்டிய ஆண் உருவம், அந்தப்பெண்மணி எச்சரித்தசெல்வராஜ்தான் என்று புரிந்துபோனது.

மீண்டும் மின்சாரம்மீளவும் ,லிஃப்ட் நோக்கி நடந்த அவர்களை கவனித்த ஜகதீசன் திடுக்கிட்டார். அவர்பார்வை அந்தப்பெண்ணின் பின்புறமாய் தொங்கிய அந்தக்கைப்பையிலும் அதில் தலை நீட்டிக்கொண்டு தெரிந்த அந்த பாட்டிலின் மீதும் பதிந்து குத்திட்டது. அரைக்கணத்தில் அவர்கள் லிஃப்டில் ஏறிவிட ஜகதீசனின் வாய் அரற்றியது.


”ஜ..ஜ ஜனனீ?”
ஐயோ ஜனனீ நீயா?

ஜனனி ஜனனி இவன்கிட்ட எப்படிம்மா நீ ஏமாந்தே? ஐயோ தெய்வமே!
இப்ப நான் என்ன செய்வேன்?
ஜகதீசன் செய்வதறியாது திகைப்பிலும் வேதனையிலும் ஒரு நிமிடம் அப்படியே நின்றார். பிறகு,

லிஃப்டில் ஏறி மூன்றாவது மாடியில் இறங்கி செல்வராஜின் ஃப்ளாட் வாசலுக்கு வந்து காலிங்பெல்லை அழுத்தினார்.திறந்த செல்வராஜ் விழிகள் சிவக்க சீறினான
”ஏய் ஓல்ட்பிட்ச்! எதுக்கு பெல் அடிச்சே ? டிஸ்டர்ப் பண்ணாமா ஒழுங்கா போயிடு இந்த ஃப்ளாட்லயே என்னையாரும்கண்டுக்கமாட்டாங்க பழையவாட்ச்மேனுங்கள்லாம் காசைவீசினா, பல்லைஇளிச்சிட்டுப்போய்டுவானுங்க உனக்கு இப்பஎத்தினி வேணூம்?”

”அ..அ.. அந்தப்பொண்ணூ?”

”ஆமா இன்னிக்கு ராத்திரிக்கு என்கூடதங்கிப்போக வந்திருக்கா....பட்சி கிடைக்கவே பலமாசம் ஆகி இப்பத்தான் என் வலைல விழுந்திருக்குது இந்த நேரம் பாத்து நீ தொல்லை செய்யாதே போய்த்தொலை” பட்டென கதவை ஓங்கி சாத்தினான்.

ஐயோ ஐயோ!

முகத்திலடித்துக் கொண்டு கீழேவந்தார் ஜகதீசன்.

யாருகிட்ட சொல்றது? எங்கே போறது? போலீசில் சொல்லலாம்ன்னா அவன் எல்லாரையும் கையில் போட்டுட்டு இருக்கறதாஅந்தபெண்மணி சொன்னாங்களே? அதைமீறி நான் ஏதும் செய்ய என்மகளை அவன் பழிவாங்கிட்டா..? ஐயோ தெய்வமே!

ஜனனீ உன்னை புத்திசாலிப்பொண்ணுனு நினச்சேனேம்மா நீயும் சராசரிப்பொண்ணா இப்போ சீரழிஞ்சிவரப்போறியாம்மா? ஜனனீ ..ஜனனீ.. ஜனனீ...

பிதற்றியபடியே நெஞ்சைப்பிடித்துக்கொண்டு அப்படியே கீழே சாய்ந்துவிட்டார் ஜகதீசன்.

அரைமணி ஆகி இருக்குமா?

உடம்பை யாரோ உலுக்கிதட்டுவதுபோலிருக்கவும் மெல்லக்கண்விழித்தார்.

எதிரே ஜனனீ நின்றுகொண்டிருந்தாள்.

”அப்பா! அப்பா! எப்படிப்பா இருக்கீங்க? அதிர்ச்சில உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே?”

கலங்கியகுரலில் மென்மையாய் கேட்டவளை வேதனையுடன் பார்த்த ஜகதீசன், ”ஜனனீ ! ஜனனீ நீயா..?” என்றார் அதற்குமேல்பேசமுடியாதவராய் அப்படியே அதிர்ந்துபோயிருந்தார்.

‘சொல்றேன்பா....ஆறுமாசமா இந்த செல்வராஜ் என்னை காலேஜ்போறபோதும் ம்யூசிக்ப்ரொக்ராம் நடக்கிற இடங்களுக்கும் பின்தொடர்ந்துவந்திட்டு இருந்தான்.... அரசியல்செல்வாக்கு நிறைய இருக்கற ஒரு பிரபலத்தின் மகன் இவன்னு தெரிஞ்சுது. பலபெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தவன்னும் தெரிஞ்சிட்டேன்.இவனை நான்காதலிக்கலைன்னா இவன்கூட நான் ஒரு ராத்திரியாவதுகூட இருக்கலேன்னா
ஹைதராபாத்ல சிலமாசம் முன்னாடி ஒரு காலேஜ்பொண்ணு மேல, ஒரு பையன் தன்னிடம் அவள் ஐலவ் யூ சொல்லாததினால ஆசிட்கொட்டி பழிதீர்த்துக்கிட்ட மாதிரி என்னையும் அழிச்சிடப்போறதா அன்னிக்கு ஒருநாள் பஸ்ஸ்டாண்டுல நிக்கறப்போ என்காதுபடவே தெலுங்குல அவன் ஃப்ரண்டுக்குபோன்ல சொல்லிட்டுஇருந்தான் .அப்ப்பவே நான் ஒரு முடிவெடுத்துட்டேன் .

இன்னிக்கு ப்ரோக்ராம்முடிச்சி ரங்கப்ரசாத்சாரின் கார்ல வீடுவந்து வாசல்பூட்டை திறக்கிறபொழுதுல சட்டுனு எதிர்ல வந்திட்டான்.

”சரிவரேன் உன்கூட.. ஒரு நிமிஷம் சேலைமாத்திட்டுவரேன்”ன்னு நான் சொல்லிட்டு உள்ளே போயிட்டு திரும்ப வந்து அவனோட கார்ல ஏறினேன். இங்கே காம்பவுண்ட் கேட்டை நீங்க திறக்கிறதைபோதே இருட்டுல காருக்குள் உக்காந்திருந்த எனக்கு காரோட ஹெட்லைட் , அது நீங்கதான்னு வெளிச்சம் போட்டுக்காட்டினது.

கொஞ்சம் அதிர்ச்சியாயும் திகைப்பாயும் இருந்தாலும் அடக்கிட்டு,பவர் கட் காரணமாய் நீங்க என்னைப்பார்த்திருக்க வாய்பில்லைன்னு நினச்சேன். ஆனா மேல போனதும், நடுவில ஃப்ளாட் கதவைதட்டியது நீங்கதான்னு உள்ள இருந்த என்னால உணர முடிஞ்சிது.
பதட்டத்தை வெளில காண்பிக்காமல் அவனை சாகசமாய் ஏமாத்த நினச்சேன்.

நல்லகுடிபோதையை அவனே ஏத்திக்கிட்டான் .அப்பத்தான்அவன்,”உன்பாட்டைக்கேக்கணும் முதல்ல..என் மெய்மறக்க உன் தேன்குரல்ல பாடு” அப்டீன்னான்.

”கண்டிப்பா மெய்மறக்கபாடுவேன்..அந்த நேரம் நீயும் கையையும் மெய்யையும் கட்டிட்டு கண்மூடி கானத்தைக் கேக்ணும்” என்றேன்.

அவன் இருந்த நிலைமை என் சொல்லுக்கு தலையாட்டவச்சது. கர்சீப் ரண்டு எடுத்து அவன் கைகால்களை நல்லா இறுக்கக் கட்டிட்டு பாட ஆரம்பிச்சேன்.

’ஆஹா ஓஹோ’னு போதைல உளறினான் .

சட்டுனு பாட்டை நிறுத்தினேன்.

”ஏஞ்சலே! ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?உன்தேனினுமினிய குரலைக் கேட்கவே உன்னை இந்த இடத்துக்கு அழைச்சிட்டுவந்தேன்... இந்த இடம் சௌண்ட்ப்ரூஃபான இடம். ஆமா ஏஞ்சல், என்ன சத்தம்போட்டாலும் வெளில யாருக்கும் கேட்காது.. அதனால நீ பாடு நல்லா பாடு”ன்னான் உற்சாகமா.

”ஒருநிமிஷம் ... எனக்கு அடிக்கடி தொண்டை வறண்டு போயிடும் . தண்ணீ - அதுவும் நான் எப்போதும் குடிக்கிற சீரகத்தண்ணீ- குடிச்சாதான் குரல் சீரா இருக்கும் குடிச்சிட்டுவந்து பாட்டைதொடர்ந்திடறேன்” ன்னுசொல்லியபடியே என்கைப்பையிலிருந்த பாட்டிலை எடுத்தேன்.

அவன் போதைல கண்ணைமூடிட்டு ஏதேதோ உளறிட்டு இருக்க, அப்போ நான் கையிலிருந்தபாட்டிலைமூடியத்திறந்து சட்டுனு அவன்மேல வேகமா சாய்ச்சேன்.

”ஐயொ ஐயோ”ன்னு அலறினான்.

கட்டப்பட்ட கைகால்களை வேகமா உதைச்சிட்டு கூச்சல்போட்டான்.

தலை முகம் நெஞ்சு கால்னு எல்லா இடங்களும் அமிலம் பட்டு பொசுங்கி,கருக ஆரம்பிச்சது .

நான் கவனமாய் தடயங்களை அழிச்சிட்டு கதவை சாத்திட்டு இங்கஉங்களப்பாக்க ஓடிவந்தேன்.”

ஜனனி நிதானமாய் சொல்லிமுடித்தபோது ஜகதீசன் கண்கள் பனிக்க,”ஜ ஜனனீ?” என்றார் நெகிழ்ந்தகுரலில்.

”ஆமாம்ப்பா அவன் மனுஷனா இருந்தா திருத்தி இருக்கலாம் ஆனா செல்வராஜ், அசுரனா இருந்தான் .அதான் வதம் செஞ்சிட்டேன்.வீட்ல முன்னயே நான் வாங்கிவச்சிருந்த ஆசிடை என் தண்ணீ பாட்டில்ல ஊத்திட்டுத்தான் அவன்கூட வர்ரப்போ எடுத்திட்டு வந்திருந்தேன் ...திட்டம் சரிவர நடக்குமான்னு மனசுக்குள்ள பயம் இருந்தது இங்கே உங்களைபார்த்ததும் அது அதிகமாகவும் ஆனது. ஆனா தர்மத்தின் வாயதனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும்னு வாழ்க்கை நெறி இருக்கே!நான் செய்தது தப்பாப்பா? சொல்லுங்க?”

’இ.. இல்லம்மா நாந்தான் ஒருநிமிஷம் உன்னைதப்பா நினச்சிட்டேன் ...பாவி நான்மகாபாவி’

ஜகதீசனின் மனது ஓலமிட்டது.

”நான் உங்கபொண்ணுப்பா .. ஏழையா இருந்தாலும் நாமெல்லாம் தர்மம் சத்தியம் நேர்மைன்னு வாழறோம். கண்முன்னாடி ஒரு அயோக்கியனை, அதர்மசெயல்கள் செய்கிறவனை நான் எப்படிப்பா மன்னிக்கிறது ?”

ஜனனி,சொல்லிமுடித்தபோது வானில்கருப்புமேகங்களின் பிடியிலிருந்து விடுபட்ட முழுநிலா, தன் வெளிச்ச முகத்தைக் காட்ட ஆரம்பித்தது.

*************** ******************************
மேலும் படிக்க... "J.ஜனனி D/O K. ஜகதீசன்(உரையாடல் சமூகக்கலைஅமைப்பு-சிறுகதைப்போட்டி)"

Thursday, June 18, 2009

வார்த்தை!(கவிதை)

வாளாகும்,
வருடும் மயிலிறகாகும்.
யாழையும்குழலையும்
ஓரங்கட்டிவிடும்
மழலையின்
சொல்லாகும்.

இதன் வழிகள் மூன்று.
கனியும்; காதலாகிக்கசியும்;
கடிந்தும்மிரட்டும்
என சிறுவாசல்கொண்ட
விழிவழிமுதல்வழி.

தொலைவிலிருந்தாலும்
குரல் அடையாளம்காட்டும்
உணர்வுக்கு ஏற்றபடி
ஒலிவடிவத்தை
மாற்றித்தரும்
சாமரமும் வீசும்
சாட்டையாய் அடிக்கவும் செய்யும்
நாவின் துணையோடுவரும்
இதழ்வழி,
இதன் இரண்டாம் வழி

முதலிரண்டையும்
முட்டாளாக்கிவிடும்
முழுமையான உணர்வுகளை
முக்கியமாய் தெரிவிக்கும்
தொடுகைவழி அதுவே
மூன்றாம் வழி.

அரிசி சிந்தினால்
அள்ளிவிடலாமாம்
இது சிதறினால்
அள்ள இயலாதென்று
வாழ்க்கைப்பாடத்தில்
முதல்பக்கத்தில் இது
இருப்பது இதன்
தனிச்சிறப்பு
அதை மனதில்கொள்வது
மனிதருக்கு மதிப்பு.

தேகத்தைக்
குதறவும் செய்யும்
குதூகலமாக்கி
உற்சாகத்தைக்
கொடுக்கவும் செய்யும்.

அகத்தில்
பெருமௌனவெளியில்
உலாவரும்
புறத்தில் ஒலிவடிவங்களுக்கு
உயிரைத்தரும்.

கவிஞர்களுக்கு
களிமண்ணாய்க்
குழைந்துவரும்.

வார்த்தைஇல்லா உலகில்
வாழ்வதும்
சாத்தியமா என்ன?
மேலும் படிக்க... "வார்த்தை!(கவிதை)"

Monday, June 08, 2009

கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)மரங்களிலே விலை உயர்ந்த மரம் எதுன்னா சந்தனமரம்தான் (என்பதை மறைந்த சந்தனக்கடத்தல் வீரப்பன் புராணமே நமக்குச்சொல்லிடும்!)

இந்தியா-குறிப்பா காவிரி உற்பத்தியாகும் கர்னாடகாதான் இதுக்கு- தாய்வீடு.அடுத்து தமிழ்நாடு. உலக்த்திலேயே இந்தியா இலங்கை பிலிஃபைன்ஸ் என மூணு நாடுகளில்தான் சந்தனமரங்கள் வளர்கின்றன.

உயிரோட இருக்கிறவரை பார்க்கவும் ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி அழகில்லாத ஒரு ம்ரம் எதுன்னா அதுதாங்க சந்தன மரம்! அதுமட்டுமில்ல சந்தனமரம்லாம் உயிர் இருக்கிறவரைக்கும் ஒரு வாசனையையும் கொடுக்காதாம். நல்லா சிவப்புகலர்ல பூக்களோட இருந்தாலும் அந்தப்பூக்களில் மணமே இருக்காதாம்.

12முதல் 40மீட்டர் வரை வரை வளரும் இந்த மரங்களுக்கு டீன் ஏஜ் முடிஞ்சதும் அதாவது 20வயசுல வேரோட வெட்டி வெய்யில்ல காயவைக்கிறாங்க. மரம் நல்லாக் காய்ந்தான் மணம் ஜோரா வர ஆரம்பிக்கும்.


கொஞ்சம் உசத்தியானதெல்லாமே சொகுசாகவும் இருக்கும் இல்லையா இந்த சந்தனமரமும் அப்படித்தான். மத்த எந்தச்செடியாவது இது பக்கத்துல இருந்துதுன்னா நைசா அந்தச் செடிகளின் வேர்களை உறிஞ்சிடும். அவைகளை வளரவிடாம செஞ்சிடும். செடிகளில் தாதா இது!

ஒரு டன் சந்தனமரத்தின் விலை நான்கு லட்சம் ரூபாயாம்!

மரத்தின்பருமனுக்கு ஏற்ப விலை கூடும். (காட்டிலா அதிகாரியும் பிரபல எழுத்தாளர் இணையதள வலைப்பதிவருமான திரு லதானந்த இதுபற்றி இன்னும் விவரம் சொல்லுவார் என எதிர்பார்க்கலாம்)

வெளிஉபயோகம் மட்டுமில்லாமல் உள் மருந்தாகவும் சந்தனம் பயன்படுகிறது.

சந்தன எண்ணை மரத்தின் மையப்பகுதியில் கிடைக்கிறது, வேர்ப்பகுதியிலும் கிடைக்கிறது.

நேபாளம் வழியா சீனாக்கு சந்தனம் கடத்தறாங்களாம்...சந்தனக்கடத்தலில் ஒரு வீரப்பன் பிடிப்பட்டாலும் இன்னும் பல வீரப்பன்கள் இருக்கறாங்கன்னு தினசரி கடத்தலில் மாட்டிக்கிறவங்களப்பற்றி செய்தி படிக்கறப்போ தெரியுது.

சந்தனம் தமிழர்வாழ்வில் முன்காலத்திலிருந்தே பயன்படுத்தப்படுகிறது ..தாம்பூலம் போல சந்தனமும் மங்கலப்பொருள். இறைவனுக்கு உகந்தது. குருராகவேந்திரர் சந்தனக்கட்டையை கல்லில் இழைத்த கதை அற்புதமானது. குருவாயூர் போல சிலகோயில்களில் சந்தனமே முதன்மைப்ப்ரசாதமாக பக்தர்களுக்குத்தராங்க.

மொட்டை அடிச்சா தலைல சந்தனம் தடவறாங்க..கோடைக்கட்டி வந்தா குளிர்ச்சிக்கு சந்தனம் பூசறாங்க....

எங்க வீட்டுக்கல்யாணங்களில் நலங்கு என்ற சடங்கின்போது மணப்பெண் மணமகனின் கழுத்து கைகளீல் சந்தனம் பூசவேண்டும். பக்கத்துல இருக்கறவங்க செய்ற கேலிகிண்டல்ல்ல நாணத்தைதான் மணப்பெண் பூசிக்கணும்!

சந்தனக்காற்றே, சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து, சாந்துபொட்டு சந்தனப்பொட்டு...இப்படி
சந்தனம் மணக்கும் திரைப்பாடல்கள் பல இருக்கு!

சந்தனசிந்தூர குங்கும பூஷணீ என்று ராகமாலிகைல கர்னாடிக் மியூசிக்ல ஒருபாட்டு தெரியும்.சரிசரி முறைக்காதீங்க, பாடிபதிவு செய்து படுத்தலைங்க!


இங்க பெங்களூர்ல 10வருஷம் முன்னாடி வனத்துறை இலாக்கிவினர் ஒருநாள் டெம்போல நிறைய சந்தனச்செடிகள் கொண்டுவந்து ஒவ்வொருத்தர் வீட்லயும் அவங்களே நட்டாங்க..

”என்னது இது சந்தனச்செடியா?” ஆச்சர்யமாய் கேட்டேன்.

”ஆமாங்க..இதை பாதுகாப்பா வளர்க்கணூம் நீங்க. ஆனா இது அரசுக்கு சொந்தமானது என்கிறதையும் நினைவுல வச்சிக்கணும்”

”ஓ அதனால என்ன நாளைக்கு சந்தனமரமாகி வெட்டி கட் செய்யறப்போ கால்டன்னாவது வளர்த்த நன்றிக்கு தரமாட்டீங்களா என்ன ?” என்று மனசுக்குள்ள சொல்லிக்கொண்டேன்.

ஊருக்கு விஷயத்தை போனில் சொன்னதும் அம்மா” ஒரு சந்தனக்கட்டை எனக்கு எடுத்து வச்சிடு. ஆத்துல இருக்கறது தேஞ்சி நோஞ்சானா இருக்கு.” என்றாள்

“ஹேய் ஷைலஜா ! எனக்கு சாண்டல்னாஉயிர்டி. சந்தன எண்ணை எனக்கு அட்லீஸ்ட் 100கிராமவது நீ தரணும் என்ன?” திருச்சி தோழியின் கோரிக்கை.

“ நல்ல தச்சனை விட்டு சந்தன மாலை செஞ்சி வாசல்ல நுழைஞ்சதும் நிலைப்படில மாட்டிவை உள்ள நுழையறப்போ எட்டூருக்கு மணக்கும்!” மாமியாரின் உத்தரவு.

எனக்கு கனவில் சந்தனக்காடாய் வரும்.சந்தனக்காற்றை சுவாசித்தபடி சந்தனப்பேனாவால் சந்தனக்கவிதை ஒன்று ’தந்தன தந்தனம் சந்தம் வரும் அதில் மந்திரதந்திர ஜாலம் வரும் ’என்று இஷ்டத்துக்கு எழுதுவேன்! எல்லாம் கனவில் எழுதிமடித்த கவிதைகள்!!

“அம்மா! சந்தனச்செடிக்கு நாந்தான் தண்ணீ ஊத்துவேன்... “ என் சின்னப்பெண் பிடிவாதமாய் செடிமூழ்க மூழ்க நீரை ஊற்றிவிடுவாள்.இலவச இணைப்பாய் மழைவேற
அடிக்கடிவந்துவிடும். .

எக்ஸ்பையரி தேதியைத் தாண்டின பழைய டானிக்பாட்டில்களை மகள்கள் அக்கறையாய் செடிக்குழிக்குள் ஊற்றி உரமிட்டனர்.

அக்கம் பக்கம் பலர்வீடுகளீல் சந்தனசெடி எவ்வளோ சென் ட்டிமீட்டர் உயர்ந்துள்ளது என்பதை சின்னமகள் பார்த்துவருவாள்.

ஒருவாரத்தில் ஒரு சின்ன துளிர் தலைகாட்டவும் ஆர்வம் தாங்காமல் அதை மெல்லத்தேய்த்து நாங்க முகர்ந்து பார்த்தோம் முன்னே ஒருமுறை கருவேப்பிலைச்செடில நாலு இலை வந்தபோது ஒரே கிள்ளுதான் இலை கைமுழுக்க மணத்துபோனதினால் அதே நினைப்பில் இந்த இலையைக்கிள்ளினோம்.

அப்போல்லாம் தெரியாது சந்தனச்செடி என்பது மரமாகி 20வயசுலதான் மணக்கும் அதுவும் வெட்டிக்காய்ந்ததும்னு!

“என்னாச்சு சந்தன இல்லைல வாச்னையே இல்லயேம்மா”

“ ஐயோ ப்ரியா....கொஞ்சம் வெயிட் பண்ணு அது மரமாகும் நாலஞ்சிவருஷத்துல அப்றோம் சந்தனம்தான் நம்மவீட்ல! சந்தனக்குழம்புகூட செய்யலாம்”

“சந்தன ரசம் சந்தனப்பொறியல் சந்தனப்பச்சடி செய்வியா?” கணவர் தன்பங்குக்கு கடித்தார்.(சாதாரணமா மனுஷனுக்கு சிரிக்கவே சில்லறைதரணும் ....கம்பன்வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பதுபோல கடிமன்னியான எனக்குக்கணவரானதால் அப்பப்போ இப்படிக்கடிஜோக்குகளை வீசுவார் வீட்டுக்காரர்!)

சந்தனச்செடியின் மகத்தான முப்பதாவது நாள்!

அன்றுகாலை எழுந்ததும் நாங்கள் வாசல் தோட்டத்தில் நட்டிருந்த சந்தனச்செடியின் அரை அங்குல வளர்ச்சியைக்காண ஆவலோடு போனோம்!

ஆனா அங்க செடி பொசுக்கென்று தலைகுனிந்து வாடி இருந்தது.

“ஐய்யெயோ செடிக்கு என்னாச்சு?”

இப்படி அக்கம்பக்கம் எல்லாருமே கூவினர்.

ஆமாம் காலனில 150பேர் வீட்ல ஒருத்தர்வீட்லயும் செடி வளரலை. பொசுக்கென வாடி வதங்கி உயிரைவிட்டிருந்தது.

“வன இலாக்கா ஆளுங்களுக்கு என்னபதில் சொல்றது?”

“ ஆமாம் இந்த செடி சொகுசா இருக்கு. இதுக்கு ரொம்ப வெப்பமும்கூடாதாம் ரொம்ப குளிரும் கூடாதாம் ரொம்ப மழையும்கூடாதாம் தரை ஈரமாகவே இருக்கவும்கூடாதாம் சுமாரா மழைபெய்து உடனே உலரமாதிரி இருக்கணுமாம். ராஜகுமாரியைக்கொண்டுவந்து குடிசைக்குள்ள உக்காரவச்சிமாதிரி இருக்கு..பெங்களூர்ல வெயில் அடிக்கறதேன்னு நினச்சா மழைபெய்யும்.,மழைல நனயறோமேன்னு குடைய விரிக்கறதுக்குள்ள வெய்யில் விஜாரிக்கும் நமக்கெல்லாம் இதுசரிப்படாதும்மா.. இது எந்தகாலத்துல வளர்ந்து நாம எந்தகாலத்துல சந்தனக்கட்டையை கண்லபாக்கறது? இது அக்கம் பக்கம் எல்லா செடியோட வேர்களையும் உறிஞ்சி அதையும் வள்ரவிடாம தடுக்குது..போனா போவட்டும் விடுங்க...அவங்க வந்தா உண்மையைசொல்லிடலாம், எங்களுக்கு இது சரி இல்லப்பான்னு”

காலனி மக்கள்,தமிழில் ஹிந்தியில் கன்னடத்தில் தெலுங்கில் மலையாளத்தில் ஏகமனதாக முடிவெடுத்தோம்.

வனத்துறை இலாக்காவினர் வீடுவந்து ஏதும் அதட்டுவாங்களோ என்றும் பயமாக இருந்தது.
ஆனால் அவர்களும் இதை ஒரு முயற்சியாய் சோதனையாய்த்தான் செய்ததாய் சொல்லிபோனதும் நிம்மதியானது .

ஆனாலும் சந்தனக்கனவுகள் கண்ட அந்த சில நாட்களை மறக்கமுடியவில்லை.

இப்போதும் சந்தனபொம்மைகள் சந்தன சீப்பு டூத்ப்ரஷ் சந்தன மாலைகள் என்று சகலமும் சந்தனத்தில் செய்து யானைவிலையில்(சந்தன யானை விலையைக்கேட்டா நிஜயானை வாங்கிடலாம்:))) காவேரி கைத்தொழிலகம்(கர்னாடகா)
கண்ணாடி ஷோகேசில் வைத்திருப்பதைப் பார்க்கும்போது அன்று செடியை இன்னும் பார்த்துகவனமாய் வளர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது!

தன்னை
வெட்டிவீழ்த்தும்
கோடாரியையும்
மணக்கச்செய்கிறது
சந்தனமரம்!

எப்படி கமகமன்னு இருக்கா இந்தப்பதிவு?!
.
மேலும் படிக்க... "கமகமன்னு ஒருபதிவு!(சமையல்குறிப்பு இல்லை:)"

Monday, June 01, 2009

உலகின் முதல் வசந்தம்!


''உலகின் மீது கடவுள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் வற்றவில்லை என்பதன் அடையாளம்
தான் பூக்களும் குழந்தைகளும் ' ' என்கிறார் தாகூர்.நீ அசைந்தாய்
நானும்
புதிதாகப்பிறந்தேன்
அப்பாவாக!

என்கிற கவிஞர்தமிழ்முருகனின் பரவசம் எல்லா பெற்றோர்களுக்கும் உரியது.செடிகளைப்போல அன்றாடம் பூத்துவிடுகிற மலர்ச்சியுடன் அலைகிற வித்தை குழந்தைகளுக்கே சாத்தியம்.

ஒருகுழந்தை , பேருருகொண்ட இறைவனின் சிறுவடிவம்போன்றே தோற்றம் தருகிறது. ஒரு சின்னஞ்சிறு
மழலையின் வரவு இல்லத்தை பூக்கள் நிரம்பிய தோட்டம்
ஆக்குகிறது.

அன்பின் தூதுவர்கள் குழந்தைகள்!


குழந்தைகள்மீது பெற்றோர் கொள்ளும் பாசம் அடர்த்தியானது.(இன்று என்னகுழந்தைகள் தினம் கூட இல்லையே எதற்கு

இப்படி ஒரு பதிவு என்கிறீர்களா? ஒரு குழுவில்' வா வா
வசந்தமே ' என்ற தலைப்பிற்கான போட்டிக்கு அனுப்பிய என் கவிதை பரிசுக்குத் தேர்வானதும் குழந்தைபோல மனம் குதூகலித்தது!அதனால் அந்தக் கவிதையை அளிக்குமுன்பாக ஒருமுன்னுரை!)


இனி அந்தக் கவிதை!


அழகிற்சிறந்த மழலைகள்
அகத்தைக்காட்டும் கண்கள்
பொழியும் அருவித்தேன்கள்
புதையலோ குழந்தைகள்!


கொடிபோல் இழையும்கைகள்
கொழுகொழுவெனும்கன்னங்கள்
பிடித்திட ஓடிடும் வேளையில்
நடித்துச்சிரிக்கும் கள்வர்கள்!

கருவிழிகளில் என்றும் களிப்பு
கட்டியணைத்திடல் என்ன மறுப்பு?
புருவவளைவிலும் துறுதுறுப்பு
புன்னகையோ ஆண்டவன் படைப்பு!

பெண்மைக்குப்பெருமை சேர்க்கும்
கண்ணசைவினில் கதைநூறு சொல்லும்
உண்மையில் மழலைகள் மட்டுமே
உலகின் முதல் வசந்தம்!
மேலும் படிக்க... "உலகின் முதல் வசந்தம்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.