Social Icons

Pages

Tuesday, January 31, 2012

பதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி!

 கதிரவனுக்கும் காற்றுக்கும் விளம்பரம் தேவை இல்லை. செறிவான வார்த்தைகளில் சிந்தை கவரும் விதத்தில் பல இடுகைகளை இட்டுவரும் திரு அப்பாதுரை அவர்கள் தனது வலைப்பூக்களில் தனி முத்திரை பதித்து வருவதை நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.

 திரு அப்பாதுரை அவர்கள்    தனது வலைப்பூவில்    புத்தாண்டில் பத்து என்ற தலைப்பில் தான் ரசித்த பத்து வலைப்பூக்களை பாராட்டி  எழுதி இருப்பதில் என் வலைப்பூவினையும் சேர்த்துள்ளார்.அதற்கு அவருக்கு மனம் கனிந்த நன்றி. அங்கேயும் முன்பே அவருக்கு நன்றி கூறிவிட்டேன்.

 ஆயினும்  ஒருவர்  மற்றவரை அதுவும் பத்துபேர்களை புத்தாண்டின் சிறப்புப்பதிவில்  வாழ்த்தி அவர்களை பெருமைப்படுத்துவது என்பது சாதாரண செயல் அல்ல.வார்த்தைகளை  வருடும் சிறகுகளாய் மாற்ற எல்லோராலும் முடியாது.

வார்த்தைகள் என்பது மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏற்றும் ஒளியாக இருக்கவேண்டும் மனத்தை அறுக்கும்  வாளாக  இருக்ககூடாது,

மனிதனுக்கு வாழ்வே வார்த்தைகளால் ஆனது. வார்த்தைகள் நமது வாகனங்கள். அவைகளைக்கொண்டுதான் நமது வாழ்க்கைப்பயணம் கடக்கப்படுகிறது. வானுயரத்திற்கு நம்மை எழுந்து நிற்கவைக்கவும் தரையில் போட்டு தள்ளிவிடவும் வார்த்தைகளால் முடியும். அடுத்தவர் மீதான பிரியம் மட்டுமல்ல  அவர்கள் மீதான குரோதம் கசப்பு பொறாமை என்பதெல்லாம் கூட வார்த்தைகளில் வெளிப்பட்டுவிடும்.

நாம் உதிர்க்கும் வார்த்தைகளினால் எத்தனைபேரைக்காயப்படுத்தி இருக்கிறோம் எத்தனை நட்பை இழந்திருக்கிறோம் எவ்வளவு இதயங்களை தொலைவில் தள்ளிவிட்டிருக்கிறோம் என்பதை அசைபோடும்போதே பதறிப்போகும் மனம்.

நாம் கவசம் போட்டுக்கொள்ளாமல் பழகினால் உலகமும் நம்மிடம் உண்மையாகப்பழகும் என்பார்கள்.

.ஆனால் மாறிவரும் காலநிலையைக்கண்டு,”நம் எல்லோருக்கும் கவசம் வேண்டும் நம்மைச்சூழ்ந்துள்ள எந்தப்புள்ளியிலிருந்தும் கல் எறியப்படலாம் தாய் தந்தை மனைவி நண்பன் என திசைபேதமின்றி எவரும் வீசலாம் எதிர்பாராமல் எறியப்படும் கல்கூட நம்மை  வந்தடைவதற்குள் கூரம்பாய் மாறும்  ஆம் நம் எல்லோருக்கும்
கவசம் வேண்டும் ”என்கிறார் கவிஞர் ஸ்ரீரங்கம் சௌரிராஜன்.

,
வார்த்தைகளைவிடவா மரணம் வலிக்கும் என்கிறார் கவிஞர் சே ப்ருந்தா.

கலீல் ஜிப்ரான் சொல்கிறார்...” அழகிய உண்மைகளை சின்னஞ்சிறிய சொற்களில் சொல்லுங்கள் ஆனால் அசிங்கமான உண்மைகளை எந்தச்சொற்களாலும் சொல்லாதீர்கள் கதிர் ஒளிபட்டு கூந்தல் மின்ன நிற்கும் பெண்ணிடம் நீ காலைப்பொழுதின் மகள் என்று சொல்லுங்கள் ஆனால் கண்பார்வைதெரியாதவனிடம் நீ இரவாக இருக்கிறாய் என்று சொல்லாதீர்கள்.”

எத்தனை எதார்த்தமாய் சொல்கிறார் பாருங்கள்!

பேச்சு நாகரீகம் என்பது இதுதானே? நம்முடைய எண்ணங்களை சிந்தனைகளை உலகியல்பார்வைகளை திறந்தமனத்தோடு பகிர்வதும் குத்தல் வார்த்தைகள் இன்றி நமது கருத்து நிலைப்பாட்டை சொல்வதும் நல்ல உரையாடலுக்கு அழகு.

மரங்கள் கூட சாதகமற்ற சூழ்நிலையில் இலைகளைக்கிளைகளை தள்ளிவிடுகின்றன வேர்களை அல்ல என்கிறார் கவிஞர் மு சிபிக்குமரன்.

இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்காய்கவர்ந்தற்று என்கிறாரே வள்ளுவர்பெருமான்?

மனிதன் பிறரைக்காயப்படுத்தாத இகழாத இன்சொற்களால் அறியப்படுவான் என்பதுதான் எத்தனை உண்மை!

வார்த்தைச்சிறகுகள் மனதை வருடுவதைவிட வேறென்ன சுகம் உலகிலே?யாவர்க்கும் ஆம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை

யாவர்க்கும் ஆம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்கும் ஆம் பிறருக்கு இன்னுரை தானே!

 என்பது திருமூலர்  வாக்கு.(வாயுறை..வாயருகு(புல்)


மேலும் படிக்க... "பதிவர் திரு அப்பாதுரை அவர்களுக்குப் பணிவான நன்றி!"

Monday, January 23, 2012

தேசத்தை நேசித்த நேதாஜி!

பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்..


அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.மெட்ரிகுலேஷன் தேர்வில் வங்க மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் வந்து, பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார்1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.

1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.


1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். . பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கலவரம் ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.


 1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயனம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார்.


1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார்.

.
இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாக வேண்டுமென ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.


காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. .

இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.அப்பொழுது நேதாஜி அவர்களே ஜெர்மனியிலிருந்து அதாவது1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மனியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர்.1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.

1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது.


அவரது உரைகளில் மிகவும் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "உதிரம்(ரத்தம்) அளியுங்கள் சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. நெகிழ்வானது."நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது மரணத்தைத் தழுவும் கனவு; ..ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம். " என்றார் உணர்ச்சிவசப்பட.... அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மனி ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை மிகவும் சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.


ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்
என்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார்.


தேசியவாதிகள் தேசத்தில் குறைந்து
அரசியல்வாதிகள் அதிகமாகி விட
தேசத்தை மீட்க தியாகம் செய்த
நேசத்தலைவர்களை மறந்தே விட்டோம்

தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவரை, அன்னாரது பிறந்த நாளிலாவது நினைத்து  நேதாஜியின் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.ஜெய்ஹிந்த்!--
மேலும் படிக்க... "தேசத்தை நேசித்த நேதாஜி!"

Friday, January 20, 2012

வெள்ளை கோபுரம்!


நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.


அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.

எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.

அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!"சுவாமி!"

அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.

"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்

சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது.

"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்

"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"

"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."

"நீ என்ன சொல்கிறாய்?"

"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."


"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."

"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."

அமுதனார் மெல்லச்சிரித்தார்.

"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"

சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.


கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.

காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.

ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.


மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரை தப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?

அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.


ஆயிற்று! இனிபயமில்லை.

இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது

"யார் அங்கே?"

குரல் கணீரென்றுவந்தது.

அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.

"அமுதனார் சுவாமிகளா?"

குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .

வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.

"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.

"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.

அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.


"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"

"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."

"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"

"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"

"நல்லது.சொல்கிறேன்சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அமுதனார் பதைபதைத்தார் .


"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"


"ஆமாம்."

"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே.""ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"

"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"

"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"

சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.


" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"என்றார் படபடப்புடன்.


அவள் சிரித்தாள்.

"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"இப்போது அமுதனார் சிரித்தார்


"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்

"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.

அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.

"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"

"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்தமற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்

பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...


"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.

"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.

அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.

அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.
உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.


"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"என்றுகேட்டபடி தளபதி வந்தான்.அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .


'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப்  போயிருக்கலாம்..ஹ்ம்ம்...'

அவளைமானசீகமாக சபித்தார்.

"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.

வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.

தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.

அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.

உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!

"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான்.

சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.


இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் . அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.

அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.

"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி

"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்.
"ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்! ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .


அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'

அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,


"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.

வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.

தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!

"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!

வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீமறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.

அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்ம்

அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.'எப்படியாவதுநகைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'

மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .
அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.

கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது

ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!


அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!

கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?

வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!
ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!

பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.விழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.

தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.

உருண்டுதலைசிதறி

கீழே

கீழே

கீழே

அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.ஐயோ!

அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.

வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!


மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.

ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.

வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.
அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.

அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன.

அமளிதுமளியானது ஊர்.
சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம்

"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.

அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"

அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.

கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.


தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!

ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !

இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு,

அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.


******************************************************************

சில பின் குறிப்புகள்!
( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி சிலர் அறிந்திருக்கவில்லை என்றதால் மீள் பதிவாக இட்டிருக்கிறேன்.

வெள்ளையம்மாளின் அரங்க தியாகத்துக்கும் பக்திக்கும் மெச்சி கோபுரம் "வெள்ளை" கோபுரம் ஆனது மட்டுமில்லை! கணிகையர் யாரேனும் தவறி விட்டால், அவர்களுக்கு வாய்க்கரிசியும், நெருப்பும் அரங்கன் மடைப்பள்ளியில் இருந்து தான் போகும்! இதுவும் வெள்ளையம்மாவின் தன்னலமில்லாப் பக்திக்குத் தந்த பரிசே  ஆகும்)

வெள்ளை கோபுர வரலாற்றினை எனக்கு  சொல்லிய  என் அன்புத் தந்தைக்கு நன்றி.

அநேகமாக  பலரும் ராஜகோபுரத்தை  அண்ணாந்துபார்த்து பிரமித்து படங்கள் எடுப்பார்கள்  நான் ஸ்ரீரங்கம்போனால் வெள்ளைகோபுரத்தை மனதில் மானசீகப்படம் எடுப்பது வழக்கம்! நேற்று அரங்கன் கோயில் சென்றபோது வெள்ளையம்மாள் மீண்டும் என் மனதை ஆக்கிரமிக்கவும்  இன்று இதை மீள்பதிவாக இட்டுவிட்டேன்!மேலும் படிக்க... "வெள்ளை கோபுரம்!"

Monday, January 16, 2012

அன்புச்சகோதரர்களுக்கு.....

 ஒரே சொல்தான் இந்த மாதத்திற்கு ஆனால்  ஆயிரம் காலப்பயிருக்கு வித்திடுவது இந்த மாதம்தான்.  அதனால்தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கிறார்கள்! தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்கிற  பழையபாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

திங்களையும், மழையையும், ஞாயிற்றையும் போற்றி வாழ்த்திச் சிலப்பதிகாரக் காப்பியம் தொடங்குகிறது.

ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு

மேரு வலந்திரித லான்.


என்கிறார் இளங்கோ அடிகள்.

முதலில் இயற்கையைப்போற்றுவோம் இயற்கைதான் தெய்வம்! ஆதவ வழிபாடு பொதுவானது!நீர் இன்றி அமையாது உலகு. அந்த நீரையும் கிரகித்து மழையாக்கித்தருவது சூரியன் தான். மண்ணின் ஈர வளத்தை சூரியன் இயற்கை உரமாக்கித் தருகிறது சூரிய ஒளி உடலுக்கு வைட்டமின் சக்தியைக்கொடுக்கிறது. பற்பல விதங்களில் சூரியன் மனிதர்களுக்கு தாவரங்களுக்கு செய்யும் உதவிகள் அனைவரும் அறிந்ததே. ரிக் யஜுர் சாம வேதங்களில் சூரியன் திகழ்கிறான் என்பார்கள்  சான்றோர்கள்.

 சிவனின் வலது கண்  சூரியன் என்றும் சிவபுராணம் கூறும்.
வேத காலத்திற்கு முன்னே சூரிய வழிபாடு இருந்ததாக ஞான நூல்கள் கூறுகின்றன.

உதயத்தில் செய்யும் சூரிய நமஸ்காரம் கண்களைப்பாதுகாக்கும். கண் கெட்டபின் செய்து பயனில்லை!
காயத்ரி மந்திரம் உபாசனைபெற்றவர்கள் காலை மதியம் மாலை என மூன்று வேளைகளிலும் கதிரவனுக்கு வந்தனம் செய்கிறார்கள். அவர்கள் முகத்திலேயே சூரிய தேஜஸ் அதனால் வந்துவிடுவதை நாம் தெரிந்துகொண்டுவிடலாம்.

 முருகனின் அழகைக்கூறும்போது அருணகிரியார்,கனகரத சதகோடி சூரியனும் எனவும்,  தினகரன் என வரு பெரு வாழ்வே என்றும் பாடி உள்ளார்.

கதிர் மதியம் போல் முகத்தான் என்பாள் ஆண்டாள். இறைவனின் கண்களில் ஒன்று சூரியன் இன்னொன்று சந்திரன். தீயவர்களை அழிக்க வலக்கண்னைத்திறப்பார் அருளாளர்களுக்கு அவரது இடதுவிழி இமைதிறந்தாலே இன்பமழை பொழியும்!

 இந்திரனுக்கு போகி என்று பெயர் உண்டு. போக தேவேந்திரன் என்பார்கள். மழையைப்பொழியவைக்கும் தெய்வம் இந்திரன் என்பதால் அதற்கு நன்றியாக புதுப்பயிரைப்பறித்து அவனுக்குப்படைப்பார்கள் முன் காலத்தில். கிருஷ்ணர் அவதாரம் எடுத்தபோது அந்தப்படையலை சூரியனுக்கு வைக்க கட்டளையிட அதனால் கோபம் கொண்ட இந்திரன் மாமழையாய் பொழிய வைத்தான்.

 அசுரமழைகண்டு அஞ்சினர் மக்கள். நிலைகுலைந்தனர் மாடுகன்றுகள்  தவித்தன. கதறின அபயம் என கிருஷ்ணரிடம் அண்டின.

மக்களையும் மாடுகன்றுகளையும் காப்பாற்றவேண்டி கருணாமூர்த்தி கோவர்த்தன மலையைக்குடையாகப்பிடித்தார்.  இந்திரன் தனது நிலைக்கு வெட்கம் அடைந்து கண்ணனிடம் மன்னிப்புகேட்டான். அந்த நிலையிலும் அவனை மன்னித்த பகவான் ‘போகியான உன்பெயரில் சூரியனை வழிபடும் பொங்கல் நாளுக்கு முதல் நாளை மக்கள் வழிபடட்டும்.உன் மனதிலிருந்த தீய எண்ணங்கள் அசுரசெயல்கள் அழிந்ததுபோல பழையன தீயாய்க்கழியட்டும் போகி என அந்த நாளை மக்கள் கொண்டாடட்டும் என்றார்.

காளிங்கன் என்ற கொடிய நாகத்தை அடக்க கண்ணபிரான் காளிங்க மடுவில் பாய்ந்தார். காளிங்கவிஷம் கண்ணனுக்கு ஏறாதபடி ஆயர்பாடி சிறுவர்கள் தீமூட்டினார்கள். பறைகொட்டியபடி இரவு முழுவதும் கண்ணனுக்காக விழித்திருந்தனர் இதனால்தான் போகியன்று பறைகொட்டும் பழக்கம் ஏற்பட்டது என்றும் கூறுகிறார்கள்.

இதை பெரியாழ்வார்

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்


நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து

மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்

தோள்வலி வீரமே பாடிப் பற,

தூமணி வண்ணனைப் பாடிப் பற
 
என்கிறார்.
 
 
பொங்கலன்று பால்பொங்கியாச்சா என்றுகேட்கிறோம்  சுபதினங்களில் பால்காய்ச்சுதல் என்பதும் அது பொங்குவதும் முக்கியம்  புதுவீடு கட்டி குடியேறும்போது பால்காய்ச்சுவது இதற்குத்தான். பொங்குதல் என்பது மீறுதல்  நலமும் வளமும்  மீறிப்பொங்கினாற்போல பெருக வித்திடுவது தை மாதம்!

கரும்பு மங்களகரமானது. கரும்பைத்தாங்கி நிற்பவள் பராசக்தி! கரும்பு பிழியப் பிழிய இனிப்பைத்தான் தரும். எவ்வளவு கடித்தாலும் அது தன் வலிமறந்து நமக்குத்தருவது இனிப்பைத்தான்.அதுபோல நற்குடி பிறந்தவர்கள்  எப்போதும் இனிமையாகத்தான் பேசுவார்கள். நாலடியாரில்கூட ஒரு பாடல் வரும்(தற்போது மறந்துவிட்டது!! மன்னிக்க)

மஞ்சளும் மங்கலச்சின்னம்.கிருமிநாசினியும் கூட நோயின்றி மங்கலமாய் வாழ மஞ்சளை பொங்கலில் படைக்கிறோம்.

ராம ராவண யுத்ததின்போது ராமன் தளர்ச்சி அடைந்துவிட அப்போது அகஸ்திய மாமுனி உபதேசித்த மந்திரம் தான் ஆதிதய் ஹ்ருதய ஸ்தோத்திரம். இதைப்படிக்க ஆதித்யனின் பார்வைபட்டு நாம் எதிலும் வெற்றி அடைவோம்!
 


காணும் பொங்கல் எனப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும்பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டுவார்கள் இல்லையா அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.(இப்பவும் இன்னிக்கு ஒருநாள் கண்டிப்பா மஞ்சள் பூசிக்கறோம் உண்மை!!:):)கணுப்பிடி இந்தநாளின் சிறப்பு.அதென்ன கணுப்பிடி?ஆமாம் அது ஒருவகை நோன்பு.உடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.

உடன்பிறந்த சகோதரர்கள் நலமும் வளமுமாய் வாழ சகோதரிகள் பிரார்த்திப்பது.கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காணும்பொங்கல்தினம் காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.இரண்டுமஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.

தீபம் ஏற்றிவிட்டு ஆரத்தி கரைத்து ஆற்றில் விடவேண்டும்.. வீட்டிலென்றால் வாசலில் கொட்டவேண்டும்.உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால் இது காணும் பொங்கல் ஆகி இருக்கலாம்!என் உடன் பிறந்த மூன்றுபேரோடு உடன்பிறக்காத அன்புசகோதர்கள் பலருக்கும் இன்று வேண்டிக்கொண்டுவிட்டேன், நலம் வாழ!

"எவ்வழி ஆடவர் நல்லவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே" என்று  இலக்கிய பாடல்வரிகள் உண்டு.
 ஒரு நாட்டில் மன்னவர்- அதாவது-ஆடவர் நல்லவராக இருந்தால் அந்த நாடு நலம் பெறும்.

அனைவரும் நல்வழி சென்று நன்மை அடைவோம்!


மேலும் படிக்க... "அன்புச்சகோதரர்களுக்கு....."

Friday, January 13, 2012

பனி மூடும் மார்கழியின் பின்னே....

பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்

பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!

இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு

ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!பச்சைவயல் முழுதும் காண் செந்நெல்மணிகள்- அங்கு

பகலவனை சேவிக்கும் பலதலைகள்!

இச்சகத்தில் உழவர்கள் உழைப்பதுவேயின்றி நம்

உணவுக்கு வழியுண்டோ சொல்வாய் பெண்ணே!வருடத்தில் ஒருநாளாய் வருமிந்தத் திருநாள்!

தரும் வாழ்வில் என்றுமே இன்பம் பலநாள்!

திருவெனவே திகழும் மாதருடன் பலரும்

பெருமையுடன் வரவேற்கும் பொன்னாள் இந்நாள்!மங்கலத்தமிழர்கள் மனம் மகிழ்ந்திடவே

எங்கும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திடவே

பொங்கலோபொங்கல் என்றே கூவிடுவோம்!

தங்கிடும் பொலிவுடன் நாம் வாழ்ந்திடுவோம்!

மேலும் படிக்க... "பனி மூடும் மார்கழியின் பின்னே...."

Sunday, January 08, 2012

தேனே அமுதே கரும்பின் தெளிவே!


’அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்

அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே’

என்பார் திருமூலர்.

அன்பான அண்ணல் இனியனும் கூட.எப்படி என்றால் நமக்கு பிறப்பை வாய்ப்பாகத்தருகிறான், முக்தியை வெகுமதியாகத்தருகிறான் இடைப்படும் தடைகளை களைந்தருளுகிறான். சிவம் என்றாலே சுபம். சிவம் என்றாலே மங்கலம். சிவம் என்றாலே பரிவு.’பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்பரிந்து..என்கிறார் சிவனடியார்.. அந்த  மகா பரிவினில் தான் உரிமையாய் யானுனை சிக்கெனப்பிடித்தேன் எங்கெழுந்தருள்வது இனியே என்று முடிக்கிறார், இறைவனிடம் நெருக்கம் வேண்டும். அப்போதுதான் உரிமையாய் இழையமுடியும்.

 வாழ்வு என்பதுநிலையற்றதுஎன்பதைப்புரிந்துகொண்டுவிட்டால் நம் மனக்கதவு மெல்லத்திறந்துவிடுகிறது. அங்கே  இறைவன் நம்மை அழைப்பதும் கேட்கிறது. வாழ்வைத்தேடி நெடிய பயணம் போய்விட்டு ஏமாந்து மீண்டு உணர்ந்துகொள்ளும்போதுதான் சித்ததில் சிவன் இருப்பது தெரிகிறது.அவன் எப்போதோ நம்மை அடைந்துவிட்டான் நாம்தான் அவனைத்தேடி எங்கெங்கோ அலைந்து விட்டு இறுதியில் உணர்கிறோம்.

அவனைப்பெறுவது ஒன்றும் கடினமில்லை கடுந்தவம் தேவை இல்லை விரதமில்லை வேண்டுதல்கள் இல்லை.

யானே பொய் என் நெஞ்சும் பொய்
 என் அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால்
உன்னைப்பெறலாமே

 மணிவாசகப்பெருமான் சொல்வது இதுதான். அற்பமாகிய நான் பொய் என் மனம் பொய் அன்பும் பொய் ஆனால் இறைவா   என் வினையும் பொய் இல்லையொ மெய்யோ உன்னை மறைப்பதால்தானே? உன்னை மறைப்பதை பொய் என்று என்னால் ஏற்க இயலவில்லை அதனால் அழுகின்றேன்.

‘தேனே அமுதே கரும்பின்
தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன்
 உன்னை வந்து உறுமாறே

(உறுமாறே=பெறும் வழி)

  என்று முடிக்கிறார்.


வேறேதும் தெரியவில்லை உன்னைப்பெறுவதற்காக அழுகிறேன் ஆனால் பாருமய்யா அந்த அழுகை இனித்துவிட்டது உன் பொருட்டு அழுவதால் அது இனிக்கிறது அதனால் நீ தேனாக அமுதாக கரும்புச்சாற்றின் தெளிவாக தெரிகின்றாய் என்னுள் இருக்கும் நான் எனும் பொய்  இந்தக்கண்ணீரில் கரைந்து  மெய்யோடு  உன்னைவந்து சேர அருளவேண்டும் என்கிறார்.கரும்புச்சாறு அடில  கொஞ்சமேகொஞ்சம் சக்கை இருக்கும்  அதனால் தெளிவே என்கிறார் பாருங்கள் அன்புத்தெய்வத்தை!

ஆன்ம உருக்கம் இந்தப்பாடலில் நிரம்பி வழிகிறது. மனம் வெளுத்தபின் அது பிழிந்த நீர் கண்ணீராய் வெளியே
 வருகிறது.  கண்ணீரைவிட இறைக்கு நாம் செலுத்தும் காணிக்கைதான் என்ன!

உருக்கமான இந்தப்பாடலைப்போல திருவாசகத்தில் எத்தனை எத்தனை பாடல்கள்!

 சித்தவானில் சிவனொளி கண்டு தில்லையில்  அவனோடு கலந்தவர் மாணிக்கவாசகப்பிரான். பெயரையே பாருங்கள் மாணிக்க வாசகர்! நவரத்தினங்களில் உயர்ந்தது மாணிக்கம் .அது மாமணி! மாணிக்கம் உதிர்க்கும் வாசகங்கள் ஒளி நிறைந்திருப்பதில் ஐயமென்ன!

  ஆதிரை நன்னாளில்  இறைவனின் அடியாரை நினைக்கும் நம்மைச் சிவம் காக்கும். சிவமே உயிர் எனும் சிந்தை   இருக்கும்போது அந்த ஜீவனே சிவமாக தீரூம் என்பார்கள் !
 
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் பணிந்து..
 
என்ற  மனத்தை உருக்கும் சிவனடியாரின் வரிகளின் படி அவன் தாள் வணங்கிப்போற்றுவோம்!
 
ஓம் நமசிவாய!
மேலும் படிக்க... "தேனே அமுதே கரும்பின் தெளிவே!"

Thursday, January 05, 2012

நல்லதோர் தாமரைப்பொய்கை.


 உலகில் பெண்ணைப்பெற்ற ஒவ்வொருவரும் பெரியாழ்வார் அல்லர்.

பிறந்து  பின் புகுந்த வீடு  போகும் ஒவ்வொரு பெண்ணும் ஆண்டாளும் அல்லள்.

உலகியல் விடுத்து  இறை அடியே  தேவை  என்று  புகுந்தவீடு போனவள் ஆண்டாள்.

அப்படியொரு பரம சந்தோஷமும், பரிதவிக்கும் துக்கமும் கலந்து பறிகொடுத்தவர் பெரியாழ்வார்.செங்கண்மால்தான் கொண்டுபோனான் என்று மனதை சமாதானம் செய்துகொண்டாலும் பிரிவாற்றாமை அவரையும் சூழ்கிறது.


பெரியாழ்வார்!வேதியர்க்கே பெருமைதந்த மாணிக்கம்!

அரியவைரம் ஆண்டாளை அவனிமண்ணில் கண்டெடுத்தவர்.

ஆண்டாள் மீது பெரியாழ்வார் கொண்ட பாசத்தினைப்போல வேறெந்த தந்தை-மகளுக்கிடையே இப்படி ஒரு பாசப்பிணைப்பு இருக்குமா என்றால் அது சந்தேகமே!
ஆண்டாளைப்பற்றிப்பாடும்போது ’பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே!’ என்கிறார்கள். இத்தனைக்கும் அவர் துளசிக்குவியலில்தான் ஆண்டாளைக்கண்டுபிடித்திருக்கிறார். பெற்ற பெருமை இல்லாதவருக்குக்கிடைத்த பேற்றினைப்பாருங்கள்!’பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத்தமிழ் மாலைமுப்பதும் தப்பாமே’ என்கிறாள் ஆண்டாளே தான் வடித்த திருப்பாவைப்பாடலில். அப்பாவும் பெண்ணும் மாறிமாறி அன்பைப்பரிமாறிக்கொள்கிறார்கள்.தான் சூடிய மாலையை இறைவனுக்குச்சூட்டிட அதனை தந்தையிடம்கொடுத்த துணிச்சல்காரியான பெண் ஆண்டாள்.அந்த நாளிலேயே பெண் சுதந்திரம் இருந்திருக்கிறதென்பதற்கு ஆண்டாளின் நாச்சியார் திருமொழி வாசகங்களே போதும். அப்படி ஒரு சுதந்திரத்தை அவளுக்கு அளித்தவர் பெரியாழ்வார் என்றால்மிகை இல்லை.மகளின் ஆசையைபூர்த்தி செய்து அவளை திருமாலுடன் சேர்த்துவைத்து வீடுவந்தவர் மகளின் பிரிவில் மனம் தவிக்கிறார். செங்கண்மால்தான் கொண்டுபோனான் என மனதைத்தேற்றிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார்.ஆனாலும் பாசம் மனசை வழுக்கிவழுக்கி நினைவுகளை பின்னோக்கி இழுத்துச்செல்கிறது.மகளோடு கூடிக்கழித்த நாட்களை அசை போடுகிறது.’நல்லதோர் தாமரைப்பொய்கை

நாண்மலர் மேல்பனி சோர

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு

அழகழிந்தாலொத்ததாலோ

இல்லம் வெறியோடிற்றாலோ

என்மகளை எங்கும் காணேன்

மல்லரையட்டவன் பின்போய்

மதுரைப்புறம் புக்காள்கொலோ’
கண்ணில் நீர்மல்கப்பாடுகிறார் பெரியாழ்வார்.

கண்பனித்தது என்பார்கள்.

ஆமாம் பெரியாழ்வாருக்கு மகள் மணமாகிசென்றதும் கண்பனித்துத்தான் போனது.

அவரது விழிகளாகிய தாமரைக்கு மகள் எனும் சூரிய ஒளி இல்லாமல்போய்விட்டதாம்.

பனிவந்து தாமரையைச் சூழ்கிறதாம். பனிகண்டமலர் விரியுமோ?பெண்ணிருந்தவரை இல்லம் தாமரைப்பூத்த பொய்கையாய் அழகாக இருந்ததாம்.இப்போது பனிபெய்வதால் இதழ்கள் உருகிக்கருகிவிட்டதாம்,கொடி மொட்டையாய் நிற்கிறது இதுபோல வீடு அழகழிந்து வெறியோடிவிடுகிறது.நம் மனதிற்குப்பிரியமானவர்கள் பிரிந்துவிட்டால் இல்லமென்ன நம் உள்ளமே ’வெறிச்’ என்றுபோய்விட்டதாய் சொல்கிறோம் அல்லவா? அதைத்தான் ஆழ்வார் இந்தப்பாடலில் சொல்லி இருக்கிறார்.பொய்கையின் படம் பெரியாழ்வாரின் சொற்சித்திரத்தில் மனதில் பதிந்துவிடுகிறது.கவிதைக்கென்று தனி வார்த்தைகள் இல்லையென்று காட்டிவிட்டார் பெரியாழ்வார், ஆமாம் உலகத்தில் வழங்கிவரும் சொற்களை வைக்கிற இடத்தில் வைத்தால் அவைகளுக்கு அபூர்வ சக்தி ஏற்பட்டுவிடுகிறது என்பது உண்மைதானே!

(வைகுண்ட ஏகாதசி சிறப்புப்பதிவுகள் இத்துடன் நிறைவுபெறுகின்றன)மேலும் படிக்க... "நல்லதோர் தாமரைப்பொய்கை."

புண் நகை என்ன விலை?:)


ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை கதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில்  முக நூல் அக நூல் எஸ் எம் எஸ் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).

”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!


கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம்  முத முதல்ல டிவிக்கு நேரடி ஒளிபரப்புக்கு காம்பியரிங் செய்யப்போற விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்லஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி  ஒருவார்த்தைல வாழ்த்தி முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இதை முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.


ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.

நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சோ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருக்க வேண்டும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)


. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்


ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும்  நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.வாய்ப்புண் வலி அதிகரித்தது.ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”ரெண்டும் பயங்கர  ருசியாய்  இருக்கவே தடவினதை  சாப்பிட்டுவிட்டேன்!”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..ஓ மை காட் அதுக்கு ஏது  நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.மணி 8 45வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க  வாய்ல புண் என்றாலும் மனசில் பெருமை பொங்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே  ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


 ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே அந்த குஷன் நாற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான் வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!

(இரண்டுவருஷம் முன்பு நடந்த அனுபவம்  வைகுண்ட ஏகாதசிக்கு  மீள் பதிவு...இதுபோல  பழைய காப்பி அல்லது புது ரிலீஸ் இன்று முழுக்க இன்றைய வைகுண்ட ஏகாதசி  ஸ்பெஷலாக வந்துகொண்டிருக்கும்...:))

மேலும் படிக்க... "புண் நகை என்ன விலை?:)"

Wednesday, January 04, 2012

அந்த-ரங்கம்!

அந்த ரங்கம் ஆனந்த ரங்கம் அதுவே ஸ்ரீரங்கம்!

வைகுண்ட ஏகாதசியும் சொர்க்கவாசலும் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத்தோன்றும். ஆம் அதற்குவிடையாக அரங்கனே நமக்கு நடித்துக்காட்டுகிறான்.

நமக்காக அவன் சொர்க்கவாசலைத்திறந்து வைத்து தான் முன் சென்று நமக்கு அதை வழிகாட்டித்தருகிறான்.
பரமபத வாசல்இந்த வைகுண்ட ஏகாதசிதினத்தின் மகிமையை அறியும் முன்பாக நாதமுனிகள் என்னும் வைணவம்தந்த வைரமணியைப்பற்றி சில வரிகள் கூறவேண்டும்.காலத்தின் மாற்றத்தால் ஆழ்வாரின் பாசுரங்களும் திருவாய்மொழியும் நாதமுனிகள் காலத்தில் காணாமல்போயிருக்க கவலைகொண்டவர் நம்மாழ்வாரின் சந்நிதிமுன்பு நின்றார்.
சேஷராய மண்டபத்து சிற்பங்கள்.(ஆயிரம் கால் மண்டபம் எதிரில்- வெள்ளைகோபுரம் அருகில்_யோகத்தில் ஆழ்ந்தவர், ஆழ்வார்கள் ஆண்டாள் முதலியோரின் பாடல்களை நம்மாழ்வாரிடமிருந்து க்ரஹித்துக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தவர் அவைகளை இசை என்றும் இயல் என்றும் பிரித்து தாள் சகிதம் பண்ணுடைய இசைப்பாக்களை சேவிக்க மார்கழி சுகல்பட்ச ஏகாதசிக்கு முந்தின பத்துநாட்கள் திருவாய்மொழி தவிர மற்ற ஆழ்வார்களுடைய இசைப்பாக்களையும் ஏகாதசிமுதல் அடுத்த பத்துநாட்களில் இராப்பத்து பொழுதில் திருவாய்மொழியையும் இராபத்து முடிந்த மறுநாள் இயற்பா முழுவதையும் சேவிக்க வேண்டுமென்றும் சிலமுக்கியபாடல்களை அபிநயித்துக் காட்டவேண்டும் என்றும் ஹிரண்யவதம் ராவணவதம் வாமன க்ருஷ்ணாவதாரங்கள் போன்ற சிலமுக்கிய அம்சங்களைப் பாமரர்கள் எளிதில்புரிந்துகொள்ளும்பொருட்டு நாடகரூபமாய் அபிநயித்துக்காட்ட வேண்டுமென்றும் ஏற்பாடு செய்தார்.
அப்படிச்செய்ததும் நம்மாழ்வாரின் திரு உள்ளத்தை அனுசரித்தே செய்யப்பட்டதாய் தெரிகிறது எப்படியென்றால் நம்மாழ்வார் பாடின ’தடங்கடல் பள்ளிப்பெருமான் தன்னுடைய பூதங்களேயாய் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பாடிநடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே ’ என்னும் பாசுரத்தை அனுசரித்து இருப்பதால் என்கிறார்கள் பெரியோர்.வைகுண்டம் என்பது ஸ்ரீரங்கமே என்று சொல்லுகிறபடி வைகுண்டத்தில் உள்ள எல்லாம் ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது என்பதைக் காட்டிக்கொடுக்கவே இந்தத்திருநாள் நடக்கிறது

வைகுண்டஏகாதசி ஏன் வருஷாவருஷம் வருகிறது? அந்த தினம் எதற்கு சொர்க்கவாசலைத்திறக்கிறார்கள் ஏன் முதலில் நம்பெருமான் செல்கிறார் பின்னர் நம்மையும் அதே வழியில் அழைத்துச்செல்கிறார்? இதற்கான தத்துவம் தான் என்ன என்பதை கொஞ்சம் பார்க்கலாம்!எந்தை தளிர் புரையும் திருவடி என் தலை மேலவே என்று சொல்லி திருமங்கையாழ்வார் பகவானுடைய தரிசனம் பெற்றதைப்பேசும் திருநெடுந்தாண்டகம் என்னும் பிரபந்தம் பெருமாள்முன்பாக முதலில் சேவிக்கப்படுகிறது ஒரு நூலுக்கு முன்னுரை இருப்பதுபோல ஏகாதசி உதசவத்திற்கு இந்த திருநெடுந்தாண்டகம் உள்ளதுஇந்த உற்சவத்தில் முக்கியமான அரையர்சேவை பகல் நாட்களில் நடக்கும்போது பகல்பத்து என்கிறார்கள் இந்த பகல்பத்துஉற்சவத்தில் அரங்கன் காலையில் சந்நிதியைவிட்டுப்புறப்பட்டு கிழக்கில் உள்ள அர்ஜுனன் மண்டபத்திற்கு எழுந்தருளி ராத்திரி எட்டுமணீக்கு திரும்ப மூலஸ்தானம் வருகிறார்


மோகினி அலங்காரம்  வைகுண்ட ஏகாதசிக்கு முதல்நாள்/இராப்பத்து உத்சவதில் ஆயிரங்கால் மண்டபத்தின் மையத்தில் திருமாமணி மண்டபத்தில் பரம்பதத்தில் பெருமாள் எழுந்தருளி இருக்கும் வைகுண்டத்து திருமாமணிமண்டதின்படி கட்டப்பட்டுள்ளதால் அதே பெயர் இதற்கும்! இந்தப்பத்துநாட்கள் அரையர் சேவை ராத்திரியில் நடக்கப்படுவதால் இது இராப்பத்து என்றாகிறது.

தவிர வைகுண்டம் செல்லும் மார்க்கத்தைப்பற்றியே பேசும் திருவாய்மொழியில் ஒருபாசுரமாகிய;சூழ்விசும்பணிமுகில் ;எனும் பத்துபாசுரங்களின் தாத்பர்யங்கள் இந்த நாட்களில் நாடகம் போலக் காட்டப்படுகின்றன. பரமபதத்திற்கு செல்லும்  நபராக  ரங்கநாதனே நடிக்கிறார்.வைகுண்ட ஏகாதசித் திருநாளில் கர்ப்பக்ரஹத்திலிருந்து புறப்படுமுன்பாக ஆர்யபடாள்வாசல் நாழிகை கேட்டான் வாசல் முதலானதுமூடப்படும்.அறிவெனும் தான் கொளுவி ஐம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறையென்னும் நன் கோதி நன்குணர்வார் காண்பரே நாள்தோறும் பைங்கோத வண்ணன்படி என்ற பாசுரப்படி இந்தக்கதவுகள் மூடப்படுகின்றன. பகவானை சிந்தித்து அவனருளைப் பெற இச்சிக்கும்  மனிதம்  தன் இந்திரியங்களால் இழுக்கப்பட்டு கண்காதுமூக்கு துவாரங்கள் வழியாக வெளிச்செல்வதை தடுக்க முதலில் அவைகளைமூடவேண்டும் என்பதை குறிக்கிறது.பெருமாள் புறப்படும்முன்பாக கர்ப்பக்ருஹத்தில் வேதபாராயணமும் திருவாய் மொழியும் தொடங்கப்படுகின்றன அதனபின் ரத்ன அங்கி சார்த்திக்கொண்டு பெருமாள் புறப்படுவார் அப்போது சந்நிதிவாசல்திறக்கப்படும் சிம்மகதி(ஆண்டாளின் மாரிமலை முழஞ்சில் பாட்டில் வருமே அதேதான்) பிறகு ஒய்யார நடையிட்டு பரம்பதவாசல் செல்லும்வழியில் சில நெறிமுறைகளை நடத்தியபடி செல்வார் இதையெல்லாம் நம்மாழ்வார்பாடல்களில் காணலாம்.பரமபதவாசலுக்கு வந்ததும் வடக்குமுகமாய் நின்று வாசல்கதவுகளைதிறக்கும்படி நியமித்தவுடன் அவைதிறக்கப்படும் சொர்க்கவாசல் என்பது இதுதான். சொர்க்கப்படி மிதித்து வெளியே வந்ததும் இந்தவாசலுக்குப் பக்கதில் விரஜா நதியின் ஸ்தானத்தில் சந்திரபுஷ்க்ரணி இருக்கிறது. நதிக்கரை மணல் கொண்டதுதானே? ஸ்ரீரங்கத்திலும் சந்திரபுஷ்கரணியைக்கடந்தால் நீங்கள் மணல்வெளியில் தான் கால் பதிக்கவேண்டும்!

 சொர்க்கப்படி தாண்டியதும் உடனே வரும் நாலுகால் மண்டபத்தில் வேதவிண்ணப்ப்பமாகி பெருமாள் இந்தவாசலுக்குப்போனவுடன் அதுவரை சார்த்தி இருந்தபோர்வை களையப்பட்டு புதுமாலைகள் சம்ர்ப்பிக்கப்படுகிறது.

(இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்கவேண்டும்.கண்டிப்பாகக் கண்பனிக்கும் மனம் நெகிழும் காட்சிகள் இவை. இவைகளை நமக்காக  இறைவனே நடத்திக்காட்டுவது அவனுக்கு நம் மேல் உள்ள அக்கறையைக்காட்டுகிறது.)

பரமபதத்திற்குப் பக்கத்திலுள்ள விரஜா நதியை அடைந்து அதில் ஸ்னானம் செய்து முக்தனுக்கு பழைய சரீரம் போய் புதுசரீரம் ஏற்படும் தத்துவத்தை இது உணர்த்துகிறது.ஏகாதசி தினம் ரத்ன அங்கியோடு பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வதால் ,விரஜா நதியில் மூழ்கி எழுந்த ஒருவன் பரிசுத்தமான ஒளி கொண்ட முகத்தோடுவருகிறான் ,’ ஒளிக்கொண்ட சோதியமாய் உடன் கூடுவது என்றுகொலோ’ என்று ஆழ்வார் அருளியபடி விரஜைக்கு அப்புறமுள்ள முகதர்களோடு கூடுவதுகாட்டப்படுகிறது ஆதிகாலத்தில் பரமபதவாசலுக்குவெளியே ஆழ்வார்கள் நின்றுகொண்டிருந்ததாய் சொல்லப்படுகிறது .ஆயிரங்கால் மண்டபத்தின் திருமாமணிமண்டபத்தில் அண்ணல் அமர்ந்ததும் அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது மாமணிமண்டபத்து அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்தமை என்கிறபடி முக்தன்(முக்திஅடைந்தவன்) பரமபதத்தில் உள்ள திருமாமணி மண்டபதை அடைந்து அங்குள்ள நித்ய முக்தர் மத்தியில் ஆனந்தமாய் இருப்பதைக்காட்டுகிறதுஆக ,அரங்கன் ’வைகுண்டம்’ என்றதலைப்பில் நடத்தும் நாடகம் தான் இந்தவைகுண்ட ஏகாதசி. ! இறைவன் நமக்கு உய்ய வழிக்காட்ட முன்னின்று செல்கிறான் நாமும் ’உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்து உருவியந்த இந்நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும் இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ’என்ற திருவாய் மொழிக்கு ஏற்ப அவனை அறிந்து உணர்வோம், உன்னதம் அடைவோம்!அரங்கன் திருவடிகளே சரணம்!--
மேலும் படிக்க... "அந்த-ரங்கம்!"

Monday, January 02, 2012

தென்றல் தந்த பரிசுக்கதை.


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ்
தென்றல் நடத்திய சிறுகதைப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதையை இங்கே பதிவிடுகிறேன்.

தென்றல் பத்திரிகைக்கு  நன்றி. இந்தச்சுட்டியில்  கதையைப்படிக்கலாம்..குரல்பதிவில் கூட  இட்டிருக்கிறார்கள்.
http://www.tamilonline.com/thendral/morecontentnew.aspx?id=134&cid=13&aid=7635

சென்றமாதம் இப்படி விவரம்  இட்டிருந்தார்கள்.இடமின்மை காரணமாய் என் கதையை இந்த ஜனவரி இதழில் பிரசுரித்திருக்கிறார்கள்.

தென்றல் சிறுகதைப் போட்டி 2011க்கு அமெரிக்கா, இந்தியா, மலேசியா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து என்று உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் ஏராளனமானவர்கள் வாழ்வின் எல்லா வண்ணக் கலவைகளையும் பிரதிபலிக்கும் சிறுகதைகளை உற்சாகத்தோடு அனுப்பியிருந்தார்கள். வந்தவை மொத்தம் 79. அறிவிப்பில் கூறியிருந்தபடி தமிழ்நாட்டிலிருந்து வந்தவற்றை மிகுந்த வருத்தத்தோடு விலக்க வேண்டியதாயிற்று. ஆயினும் இந்தியாவில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களிலிருந்து சிறுகதைகள் வந்தன. சிலர் சளைக்காமல் நான்கைந்து கதைகள் கூட எழுதி அனுப்பினர்.
நிதானித்து கருத்துப்புலம், நடை நேர்த்தி, மொழிச் சிறப்பு என்ற அளவுகோல்களை வைத்து, விருப்பு வெறுப்பின்றி ஆசிரியர் குழு பரிசீலித்து பரிசுக்கான கதைகளைத் தேர்ந்தெடுத்தது.
முதல் பரிசு: உயர்ந்த மனிதன் - இரத்தினம் சூரியகுமாரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா.
இரண்டாம் பரிசு: செலவுக்கடை - அம்புஜவல்லி தேசிகாச்சாரி, சான் ஹோசே, கலிஃபோர்னியா.
மூன்றாம் பரிசுகள் (2): மடி நெருப்பு - ஆனந்த் ராகவ், பெங்களூரு, இந்தியா.,
மாடு இளைத்தாலும் - ஷைலஜா, பெங்களூரு, இந்தியா.

              ****,,.............................................****


மாடு இளைத்தாலும்..
***************************
முப்பாட்டன் காலத்தில் புதுப்பிச்சிக் கட்டின வீடாம் - சொல்வார்கள். கொஞ்சம் காலை வீசி நடந்தால் முழு வீட்டையும் பார்த்து முடிக்க அரைமணி ஆகும் .நிதானமாக நடந்தால் கேட்க வேண்டியதில்லை, .ஒருமணி நேரம்கூடஆகலாம், அம்மாம் பெருசு! நெல் உலர்த்த,சோளம்- கம்பு-உலர்த்த என்று நாலு முற்றம். கால்பந்து விளையாடற க்ரவுண்ட் மாதிரி ,காக்கைகுருவி எல்லாம்கொத்தணும்னு தெறந்த வெளி முற்றம்! முப்பாட்டனுக்கு கட்டிடக் கலையிலே ஆர்வம் அதிகமாஇருந்திருக்கணும். அவருக்கு எல்லாமே பெருசா இருக்கணும் (மூணு பொண்சாதிகளாம் அவருக்கு) ஒரு விசேசம் வீட்டுல சாப்பாடுன்னா , எட்டு ஊரு கூடிரும். அத்தோடவா. சாப்பிட்ட அம்புட்டு பேருக்கும் கையிலே ஒரு அணா தட்சணை வேற! அந்த காலத்து ஓரணா.இன்னித்து மதிப்புக்கு அது எத்தினி ரூவான்னு நீங்களே கணக்கு போட்டுக்குங்க..
ஆனா அதெல்லாம் அந்தக்காலத்தோட போச்சு. இப்போ இந்தக்கட்டிடத்தை மராமத்துப்பாக்கவே வக்கில்லை அதான் நெலமை.பெருமூச்சுவிட்டபடி'அப்பனே...தண்டபாணி' எனக்கூவினார் நாச்சிமுத்துக்கவுண்டர். பட்டாசாலைக்கு வந்து நின்றார்.வலது பக்கம் பிரும்மாண்டமாய் , மூன்றடுக்காய் நீண்டிருக்கும் வீச்சுக்கு மன்றம்னு பேரு. அங்கேதான் கவுண்டரின் மூதாதையர்கள்- பரம்பரைப்பட்டையக்காரர்கள்- சிம்மாசன நாற்காலியில் உட்கார்ந்து நீதிபரிபாலனம் செய்வாங்களாம்! அது ஒரு காலம்!’அப்பனே தண்டபாணீ!’சுவரில் குலதெய்வம் தண்டபாணி காட்சி தருகிறார்!


சித்திரத்தைப்பார்த்தால் நம்மைப்பார்த்து சிரிப்பதைப்போல, நம்மோடு பேசுவது போல அப்படி ஒரு தத்ரூபம் . பல இடங்களில் வண்ணங்கள் பெயர்ந்துபோன அந்தக்காலத்து சித்திரம்.கவுண்டர் ஓய்வு எடுத்துக் கொள்வதற்காக இந்த மன்றத்தில் உள்ள சாய்வு நாற்காலிக்குத்தான் வருவது வழக்கம். அந்த நாற்காலிக்கு வெள்ளியில் கால்கள்.சாய்மானங்களில் வெள்ளிப்பூண்கள். இப்போ நசுங்கி, தேய்ந்து,பல்லை இளிக்கிற வெள்ளி.நாற்காலியில் சாய்ந்தவர் சற்றுத்தான் கண் அயர்ந்திருப்பார். ஏதோ அரவம் கேட்கவே விழிப்பு கொடுத்துவிட்டது.


அம்மணி வந்து நின்றாள். நின்ற தோரணை, நின்ற இடம் இரண்டையும் பார்த்தபோது ஏதோ பிராது கொடுக்க வந்த மாதிரி இருந்தது. அங்ஙன நின்றுதான் பட்டையக்காரர் கிட்ட அந்தக்காலத்திலே பிராது, விண்ணப்பம் எல்லாம் கொடுப்பாங்களாம்.


"என்னா?" கவுண்டரின் குரல் சொடுக்கிற்று சாட்டை போல.


உதடுகள் அசைந்தபோது மேல் உதடுகளில் ஆரோகணித்திருந்த கொடுவாள்மீசை பக்கவாத்தியம் போல உடன் அசைந்தது.

"நம்ம மாரிமுத்து விஷயமாத்தான்.." அம்மணியின் குரல் மெல்ல தொண்டைகுழிக்குள்ளிருந்து வெளிவர முயற்சித்தது.

" ஏன் அவனுக்கு என்னா?"

"தெரியாத மாதிரி என்னயக் கேட்டா....? " இப்போது அம்மணியின் குரல் தீர்க்கமாகவே வந்து வெளியே விழுந்தது.

இச்சமயம் சொல்லிவைத்தாற்போல மாரிமுத்து அங்கே வந்து கவுண்டச்சியின் பக்கம் நின்று கொண்டுஅப்பனைப்பார்த்தான்.


அம்மாளும் பையனும் நிக்கிற விதத்திலேயே கவுண்டருக்கு புரிந்துபோயிற்று. ஒத்திகை பாத்துட்டுத்தான் ஆயியும் மகனும் வந்திருக்காங்கன்னு..


"மாரிமுத்து பி.ஏ. பாஸ்பண்ணி வருசம் மூணாயிட்டுது... ஊரு முச்சூடும் கம்பூட்டர் படிச்சவங்களுக்குத்தான் ஜோலின்னு போயிட்டாங்க நம்ம பையன் தான் பாவம் சொம்மாவே கெடக்குறாரு..”
கவுண்டர் தலையை அசைத்து ஆமோதித்தார், அனுசரணையுடன்.


"இன்னமும் ஒருவேலையும் கெடச்சபாடில்ல...நீங்க ஒருவார்த்த சொல்லப்போடப்புடாதா?'


"யார்ரா இவ? நான் சொன்னா எவண்டி வேலை கொடுக்கக் காத்திருக்கான்? "


"நீங்களே நேராச் சொல்லணுமா? உள்ளூருலயே பேங்கிலே வேலைக்கு ஆளு எடுக்கிறாங்களாம். அந்த பாங்குக்கு நம்ம சோலமுத்துதான் சேர்மேன் ..நீங்க அதுகிட்ட ஒரு வார்த்த சொன்னா போதும்.."

அட...விவரமாத்தான் ஒத்திக பாத்திருக்காங்க..எதனை எதனாலே எப்படி முடிக்கலாம்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரில்ல, அந்தக்கதையா....


சோலமுத்து அவரால் ஆளானவன் தான். அனாதையாக்கிடந்தவனை அவர் தான் படிக்க வச்சி, துணிமணி வாங்கிக் கொடுத்து, செலவுக்கு காசு கொடுத்து சொந்தக் காலை ஊனி, முன்னேறுவதுக்கு பண உதவி, எல்லாம் செய்து உதவினார். இப்போ நல்ல நெலமைக்கு வந்துட்டான்.


அந்த பாங்கும் பேர் சொல்லும்படியா பத்துவருஷத்திலே நூறுகிளைவிட்டு பெரிய ஆலமரமா வளர்ந்திருச்சி.. சோலைதான் அந்த பாங்க் வளர்ச்சிக்கும் காரணம் என்பது அவருக்குத் தெரியும்.


"என்ன யோசிக்கிறீங்க?' அம்மணி உசுப்பினாள்.

"அப்பா, நீங்க ஒருவார்த்தை சொன்னா போதும்ப்பா..எனக்கும் வயசு ஏறிக்கிட்டே போவுதுப்பா" என்றான்.மாரிமுத்து. அருமை மகன்!மூணு பெண்குழந்தைகளுக்குப் பின்னே காரமடை ரங்கநாதருக்கு வேண்டிக்கொண்டு பின்பு பிறந்தவன். தாத்தா பெயரை வைத்துக்கொண்டிருந்தாலும் அரங்கராசன் என்ற இன்னொரு பெயரும் அவனுக்கு உண்டு. பெண்களைக் கரையேற்றியதில் மகனுக்கு இந்தபழையநாள்வீட்டைத்தவிர கொடுப்பதற்கு வேறு எந்த சொத்தும் இல்லாத தன் மீது கவுண்டருக்கு சற்றே ஆயாசமாய் வந்தது.


கவுண்டர் இருவரையும் பார்த்தார். அவர்கள் சொல்வது நியாயம். சோலமுத்துவால் இது ஆகக்கூடிய்துதான். ஆனா இதுவரை அவருடைய ஆயுசில் , யாரிடமும் ஒரு சிபாரிசுக்குப் போய் நின்றதில்லையே!அவரை நாடித்தான் எல்லோரும் சிபாரிசுக்கு வருவார்கள்.

இப்போ ஓடம் வண்டியிலே ஏறுது.


"யோசிக்காதீங்கப்பா.."

"சரிப்பா.." கவுண்டர்பெருமூச்சு விட்டார். "நாளைக்கே சோலமுத்துவப் பாத்துடுவோம்": என்றார்.


ஆயிக்கும் மகனுக்கும் வேலையே கிடைத்துவிட்ட சந்தோஷம். அங்கிருந்து அகன்றார்கள்.****************************************************சோலைமுத்துவைப்பார்க்க கவுண்டர் சென்ற பொழுது சோலைமுத்துவே மனைவி பர்வதம் சகிதம் தனது பங்களாவின் முன் பரப்பில் தெரிந்த புல்வெளியில் நின்று கொண்டிருந்தான் .

அவரைக்கண்டதும் அவனுக்கு வியப்பு தாளவில்லை.

"ஐயா! வாங்கய்யா! ஒரு வார்த்தை சொல்லி அனுப்பி இருந்தீங்கன்னா நானே வந்திருப்பேனே என் கண்களையே என்னால நம்ப முடியல்லியே.. நீங்கதானா வந்திருக்கிறது?... பர்வதம் வா.. அய்யாவை நமஸ்காரம் செஞ்சி ஆசிர்வாதம் வாங்கிக்கலாம்.."

வாசல் என்றும் பாராமல் கணவனும் மனைவியும் கவுண்டரின் காலில் விழுந்துவிட்டார்கள்.


அதிலும், பர்வதம் பெயருக்கு ஏற்ப பெருத்த சரீரத்துடன் தரையில் உருள்கிறமாதிரியே சாய்ந்துவிட்டாள்.

கவுண்டருக்கு கணம் உடம்பு ஆடிவிட்டது. எத்தனை மரியாதை, எத்தனை பக்தி இவனுக்கு!

"வாங்கய்யா! என்ன இருந்தாலும் நம்ம வீட்டு பட்டாசாலைக்கும் மன்றத்துக்கும், இந்தவீடெல்லாம் ஈடாகாது " என்றான்,சோலைமுத்து பவ்யமாக.

அவர் கையெடுத்து அவனை அமர்த்தியவாறு ஹாலை ஒரு நோட்டம் விட்டார், பின் அமர்ந்தார். சோலைமுத்து நின்றுகொண்டுதான் இருந்தான் . அவருக்கு எதிராக எந்தக்காலத்தில் அவன் உட்கார்ந்திருக்கிறான்?


மாரிமுத்து நிற்பதை கவனித்த சோலைமுத்து, "அடேடே! சின்னப்பட்டயக்காரர் நிக்கலாங்களா? உக்காருங்க தம்பி!" என்று உபசரித்தான்.

பர்வதம் தட்டு நிறைய இனிப்பு வகைகளையும் காரவகைகளையும் பழவகைகளையும் கொண்டுவந்து பரப்பினாள்.


சோலைமுத்து நின்ற தோரணை, அவனைப்பார்த்தால், ஏதோ விண்ணப்பம் கொடுக்க வந்தவனைப்போல கவுண்டருக்குத்தோன்றிற்று.


பரம்பரைப்பட்டயாக்காரர் ரத்தமாச்சே, விண்ணப்பம் வாங்கின வம்சமாச்சே,,,தவிர யாரிடமும் விண்ணப்பம் கொடுத்த வர்க்கம் அல்லவே!

"ஐயா! "

"என்ன சோலமுத்து?"

சோலைமுத்து தலையைச் சொறிந்தான்"நீங்க ஒரு வார்த்தை சொல்லிப்போடணும் அப்புறமா எல்லாம் நடந்துடும்யா.."

"என்னப்பா சொல்ற சோலே?"

"இந்த தபா எம் எல் ஏ எலெக்க்ஷன்ல போட்டி இடலாம்னு இருக்கேன் ஆதரவும் நிறைய இருக்குது...நம்ம பூங்காவனம் செட்டியார்தான் தேர்வுக் கமிட்டில முக்கியமானவரா இருக்காரு..."

"அட நம்ம ஊத்துக்குளி பூங்காவனமா?"

" ஆமாய்யா..உங்க சிஷ்யப் பிள்ளேன்னு தன்னை அவரே அடிக்கடி சொல்லிக்குவாரே , அவரேதான்"

இதைக்கேட்டதும் கவுண்டருக்கு சிரிக்க வேண்டும் போல் இருந்தது.


ஆனால் மாரிமுத்துவுக்கோ தன் கனவுகள் எல்லாம் பொசுங்கிப்போனாற்போல் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டுவிட்டது."இதென்னடா வம்பா போச்சு? நாம சிபாரிசுக்கு இவரு கிட்ட வந்தா இவரு நம்ம அப்பாகிட்ட சிபாரிசுக்கு கையை ஏந்தறாரே? நல்ல நாளிலேயே நாளிப்பாலு.,இப்போ கேக்கணுமா? அட அப்படியே நம்ம சிபாரிசை எடுத்து வச்சாலும் ஒரு சிபாரிசுக்கு இன்னொரு சிபாரிசை வெலை பேசற மாதிரி அல்லவா ஆயிப்போயிரும்?" மனசுக்குள் முணுமுணுத்தபடி கைகளைப் பிசைந்தான்.


கவுண்டர் எழுந்து நின்று சோலமுத்துவின் தோள்களைத்தட்டிக்கொடுத்தார்.

"கவலைப்படாதே..உன்னை சிபாரிசு செய்யறது எனக்குப் பெருமைதான் .பூங்காவனத்துக்கும் தராதரம் எல்லாம் தெரியும் உண்மையாவும் கட்சிக்கு விஸ்வாசமாயும் மக்களுக்கு உழைக்க உன்னைவிட்டா வேற யாரப்பா இருக்காங்க..? பார்க்கபோனா இது சிபாரிசே இல்லப்பா. சரி நான் கெளம்புறேன்" என்றார் கவுண்டர் இருக்கையை விட்டு எழுந்தபடியே..

சோலைமுத்துவும் பர்வதமும் வாசலில் சேவித்தது போதாது என்று ஹாலிலும் ஒருமுறை வணங்கி எழுந்தார்கள்.

***** ***********************************************

ஆனால் இவ்வளவு ஆனபிறகு எதிர்பாராதது நடந்தது.

ஆம்! மாரிமுத்துக்கு வங்கியிலிருந்து வேலைக்கு உத்தரவு வந்தே விட்டது.

'அப்பனே தண்டபாணி!'

கவுண்டர் பெருமூச்சுவிட்டார்.

'"கடைசிவரைலே நான் யார்கிட்டவும் சிபாரிசுக்கு போககூடாதுங்கறது அப்பன் தண்டபாணியின் சித்தம்போலிருக்கு! எப்படியோ வேலைகிடைச்சிடிச்சி இல்ல! நல்லபடியா ஒளுங்கா வேலையக் கத்துக்கிட்டு நல்லபேர் வாங்கோணும் " என்றார் மகனிடம்.***********************************************

“நல்லவேள பருவதம்.. கவுண்டரய்யாக்குத் தெரியாமலேயே நான் என் நன்றிக்கடனை அடைச்சிட்டேன்.. அவரு அன்னிக்கு வூடு வர்ரப்போ வாசல்ல மகன் மாரிமுத்துகூட பேசிட்டு வந்ததை நான் கேட்டுக்கிட்டது அவருக்குத் தெரியவாய்ப்பு இல்ல. அதனாலத்தான் அவரு அன்னிக்கு வாயத்துறக்கிறதுக்கு முன்னாடி நான் சிபாரிசுக்கு என் வாயைத்துறந்து கேட்டுகிட்டேன்.” என்றான் நெகிழ்ந்தகுரலில் சோலமுத்து.


“இல்லீங்களா பின்ன, மாடு எளைச்சாலும் கொம்பு தேயுலாமுங்களா? நாமதான் தேய விட்டுடுவோமாங்க? நீங்க செஞ்சிப்போட்டது சர்தாங்க மாமா ” என்றாள் பர்வதம் . *********************** *********************** *******

--

மேலும் படிக்க... "தென்றல் தந்த பரிசுக்கதை."
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.