Social Icons

Pages

Monday, March 30, 2009

காலணியைத்தேடி ஓடினேன்






அன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.

அண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவிய,அழைத்துபோகவேண்டுமென்றும்,உத்தரவிட்டார்.

அந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்டில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர். அதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது.ராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதிகாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கை எதிர்பார்ப்பவர்.அப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.


ராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.

அந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.

வசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் ! குரலில் நடையில் டிட்டோ. ஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.

என்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ? ஹ்ம்ம்? நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணி.


காரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர, முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள்.

வசுதாரிணி என்னிடம்," அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.பட்டிக்காடுதான்.. இப்போ எப்படி இருக்கோ?" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.

"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ..." உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்.."யார் இல்லைன்னாங்க இப்போ? இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்" என்று (அ)சிங்கம் சீறியது.


வழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, "நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா? கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்"முணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.உடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது.

தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.கடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்?' (ஜூனூன் பாதிப்பு!)

மணி பத்து.

மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.
காரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்பெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்! ரொட்டிஒலி!?

சிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.வசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது," செருப்பை கார்லேயே விடலாமா?" எனக்கேட்டவள் உடனேயே,"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்பவே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்" என்று தீர்மானமாய் சொன்னாள்.

ராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், "மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே? கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே?அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்?" என்று சொல்லவும் , "ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'"என்று ஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.

எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு தொடர்ந்து இங்கும் மைபா பரிசு உண்டு :)))செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.

'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.


கோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது? ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்!

உள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.உடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து.? கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா?" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.


'என்ன இப்போ உனக்கு? மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே?'நான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.


ஆ! இதென்ன மாயம்?பத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.நல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .காரணம் அங்கே.....காணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.


'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது? ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்?'வசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.

ஐயோ!

தேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன்.

எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.

அப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.

என்னாச்சும்மா



நேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.

"தொலைந்தது அம்மாவின் செருப்புமட்டும்"

'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல?' பார்வையிலேயே அதட்டினார்


"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா.."எனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.

அரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.

ஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.ஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் "செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்" என்றார்.

பேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு! சுத்தம்.!எல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.

அலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.கடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி! (அஞ்சடி ஆறங்குலமாக்கும்)

பழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும்! வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.கடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ?'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.

தமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்," வாங்கம்மா வாங்க.!" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.

ஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்மொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா?

"என்னங்க இவ்வளவுதானா செருப்புகள்? விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா?"சந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், "இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.

வேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே?

ட்ரைவர் பரிதாபமாய் '"மணி ஆச்சும்மா" என்றான்.

ஆமாம் மணி 11.50ஊப்ஸ்!12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.ஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.


"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே? " வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்..

நான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி?
ராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...

"ஓஹோ? என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்?" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.

"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...வசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள்.


பிறகு."கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ! தாங்க் காட்!"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்.


"தாங்க்காட்!"

நாங்களும் சொல்லிக்கொண்டோம்.


எதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன?


(மீள்பதிவு)
நன்றி...மஞ்சுளாரமேஷின் 2009 ஏப்ரல்மாதசிநேகிதி(மாத இதழ்)
மேலும் படிக்க... "காலணியைத்தேடி ஓடினேன்"

Thursday, March 26, 2009

பல் சுவைக்கவிதை!:)

அன்பர்களை வரவேற்கும்
புன்னகைக்குப்புதுமெருகாய்
சித்திரத்து எழில்முகத்தின்
முத்து மணிச்சரமாய்
உதட்டுக்கதவுக்குள்
உட்கார்ந்திருக்கின்றாய்!

செப்பும் மொழிக்கெல்லாம்
செம்மை அளிக்கின்றாய்
சோழிபோல் வடிவமதாய்
ஆழியெனும் எச்சிலிலே
அலையாமல் வீற்றிருக்கின்றாய்!

ரோஜாநிறத்தழகி
செந்நாப்பேரரசியை
ராஜாபோல் காக்கின்றாய்!

மண்ணுலகில் மக்களெல்லாம்
மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடவே
உன்னுடையநற்கருணை
எந்நாளும்வேண்டி நிற்பர்.
இடையிடையே தோன்றினாலும்
இறுதிவரை தங்காமல்
நடுவினிலேமறைகின்றாய்
நாட்டியமும் ஆடுகின்றாய்!

உலகத்து உணவையெல்லாம்
சுலபமாய் உடைக்கின்றாய்
அசைகின்ற எந்திரங்கள்
ஆயிரமே இருந்தாலும்
கிறக்கின்றவிதமாகத்
திகழ்வது யார் நீதானே!

பலவாகத்திறமை
கொண்டதனால்தானோ
பல் என்று பெயர் கொண்டாய்
பல்போனால்சொல்போகும்
உள்ளேநீஇருந்தால்தான்
கொள்ளைஅழகுண்டாகும்!

பல் ஒன்றுபழுதானால்
பலநோய்கள் உடலுக்கே
ஆதலினால் பல்லுக்கு
பாதகங்கள் வாராமல்
காதலுடன் காத்திடுவோம்!
பத்திரமாய் பாதுகாப்போம்!


பின் குறிப்பு...(இந்தக்கவிதைக்கும் நான் செய்யும் மைசூர்பாக்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை:)
மேலும் படிக்க... "பல் சுவைக்கவிதை!:)"

Wednesday, March 25, 2009

இலக்கியக்காதல்!

அடிக்கடி தேடுகிறேன்
உன் கண்களை
பாதுகாப்பாய்
சில வினாடிகள்
பதுங்கிக்கொள்ள


என்னும் கனிமொழியின் புதுக்கவிதையில் காதல்உணர்வு மயிலிறகாய் மனசை வருடிப்போகிறதென்றால் மரபுக்கவிதையில் வரும் பெரிய திருமொழியில் காதலனைப்பிரிந்த காதலியின் நிலையில் அந்த உணர்வு இன்னொருவிதமாக இருக்கிறது!(சீதை-ராமன்)


சென்றுவார்சிலை வளைத்திலங்கையை
வென்ற வில்லியார் வீரமே கொலோ
முன்றில்பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து
அன்றிலின் குரலடருமென்னையே..


வார்=நீண்ட
சிலை=வில்
வில்லியார்=வில்லை உடைய ராமன்
முன்றில்=இல்முன்(முற்றம்)
பெண்ணை=பனை
முளரி=தாமரை
கூட்டகத்து=கூட்டினுள்ளே உள்ள
அடரும்=துன்புறுத்தும்



குளிர்ந்த சந்திரனின் கதிரொளி வாட்டும் வாட்டமும் அலைக்கின்ற கடலின் நிலைகண்டு யானேபடும் கவலையும் கண்ட முற்றத்துப்பனையின் மேலுள்ள கூடு ஒன்றில்,என் செவியில் நெருப்பை வாரிக்கொட்டுவதுபோல கூப்பிட்டு காதல்நோயில் வாடும் என்னை வதைக்கிறது என்கிறாள் தலைவி இப்பாட்டில்.

என் வேதனைக்கு ஏது காரணம்! எதிரிகள் இருக்குமிடம் சென்று தனது நீண்ட வில்லை வளைத்து இலங்கையை வென்றவனான வில்லையுடைய ராமனின் வீரமே காரணமோ(அறியேன்) முற்றத்து முளைத்து நின்ற பனைமரத்தின் மேலே தாமரை மலர்களாலும் தண்டுகளாலும் கட்டப்பட்ட கூட்டினுள்ளே இருக்கும் அன்றிற் பறவையின் குரல் என்னைத்துன்புறுத்துகின்றது.

வென்ற வில்லியார்......வெற்றியைக் கொண்ட வில்லை உடையவன்

முன்றில்மேல்பெண்ணை....வீட்டுமுற்றமருகே உள்ள பனைமரம் ஆகையால் குரலைக்கேட்டுத்தான் ஆகவேண்டும்

முளரிக்கூட்டகத்தன்றின் குரல்...... தாமரப்பூவாலும் , தண்டு,தாதுக்களாலும் கட்டிய பாதுகாப்பான கூடு எனவே அதற்குள் கைவிட்டு கூவாமல் இருக்க பறவையின் வாயினை அடைக்கவும் இயலாத நிலமை.


அடரும் என்னையே... காதல்நோயானது என்னையே அடர்ந்து துன்புறுத்தும் மற்றவர்களை அல்ல.
*************************************************************************************




இலக்கியத்தில் ஓர் ஆடவனின் காதல் நோயினை வெள்ளிவீதியார் சொல்வதைப்பாருங்கள்!

செம்புலப்பெயர்நீர்போல அன்புடைய நெஞ்சம்தான் கலந்தனவை என்கிற புகழ்பெற்ற காதல்கற்கண்டுப்பாடல் இடம்பெற்றுள்ள குறுந்தொகையில் காதலின் வலியை வெள்ளிவீதியார் அழுத்தமாகவும் நுண்மையாகவும் கூறுகிறார்.ஆற்றல்மிக்க கவிஞர் இவர்.

பொதுவாகவே கவிஞர்கள் வண்ணங்கள் தொலைத்த வானவில்லை சுமக்கும் தங்கள் ஆகாயத்தின் துயரத்தை தங்களின் அன்புதோற்றுப்போய்விடுமோ என்னும் ஆற்றாமையின் பரிதவிப்பை கவிதைகள் வழி கிடைக்கும் இளைப்பாறல்களில் தணித்துக்கொள்ள தங்கள் படைப்புகளை அளிப்பார்கள் என்பார்கள்.



சங்ககாலத்திலும் அக இலக்கியங்கள் அதிகம் வந்துள்ளன. எப்போது வாசித்தாலும் நம்மைச்சுற்றி வளைத்துக்கொள்ளும் உயிர்ப்பினைக்கொண்டவைகள் அந்தப்பாடல்கள்

வார்த்தைத்துளைகளை வடிவாகக்கொண்ட தமிழ்ப்புல்லாங்குழல்கள் இவைகள்!குழலை ஊதிடவரும் இதழ்நோக்கி இசையை அளிக்க எந்நாளும் காத்திருக்கும் புல்லாங்குழல்கள்!

இப்போது பாடலைப்பாருங்கள்..




ஞாயிறு காயும் வெவ்அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந்நோய்; நோன்று கொளற்கரிதே.



என்னும் இந்த குறுந்தொகைப்பாடலில், சூரியன் சுட்டெரிக்கும் பாறையின் உச்சியில் வெண்ணை உருண்டை ஒன்றுவைக்கட்டு இருக்கிறதாம், அதைக் கை இல்லாத ஊமை பாதுகாக்கிறானாம். சூரியக்கதிர்களின் வெப்பம் ஏற ஏற வெண்ணை உணங்கல் (உலர்ந்து)உருகத்தொடங்குகிறதாம்.

அவனோ ஊமை இப்படி வெண்ணை உருக்குகிறதே வேறுஇடம்கொண்டு வையுங்கள் என்று சொல்ல இயலாது .
கையும் இல்லை, எடுத்து அவனாகவே மாற்றிவைக்கவும் முடியாது.

தவிக்கும் அந்த ஊமையைப்போல , பாறைவெண்ணை உருகிப்பரந்துவருவதுபோல எனக்குள்ளே பரவும் காதல்நோயினைத் தாங்குவதென்பது தவிப்பாக இருக்கிறது என்கிறானாம் காதல்வயப்பட்ட ஒருவன், தன் தோழனிடம்.

எப்படி இருக்கிறது இலக்கியக்காதல்பாடல்கள் பார்த்தீர்களா!
மேலும் படிக்க... "இலக்கியக்காதல்!"

Thursday, March 19, 2009

மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!













எல்லாரும் வாங்க வாங்க!

என்ன இன்னிக்கு ஸ்பெஷல்னு கேட்கறீங்களா?

வேறென்ன...நாலுகதைகவிதை கட்டுரை கிறுக்கினப்போ கிடைக்காத புகழெல்லாம் இன்னமும் பலரால் சுவைக்கபடாத ஆனால் கல்லடிகண்ணடிமட்டும் பட்டுட்டு இருக்கிற ஒரு இனிப்புவஸ்துவால் வலை கலை உலகில் நான்பெரிதும் அறியப்படுகிறேன் இல்லையா அந்த வஸ்து தான் இன்னிக்கு எல்லார்க்கும்!!

அதுவேஇன்றையஸ்பெஷல்மெனு!

அதைமுதல்ல தட்டுல வச்சிட்டேனே!

எல்லாரும் எடுத்திட்டீங்களா ! ஆயில்யன் இது நெய்யில்செய்யும் இனிப்பு பேரு மைபா என்னும் மைசூர்பாக்கு! 2கூடவே எடுத்துக்குங்க என்ன!

அம்பிக்கு கேசரி என்றால் இஷ்டம். என்ன இப்போ மைசூர்பாக்கையே கேசரியா செய்யறதும் ஈசிதான்.:)

ஆமாங்க மைசூர்பாக் மெத்தட் மட்டும் சரி இல்லேன்னு வச்சிக்குங்க அது கேசரியா குழையும் இல்லேன்னா பாயசமா நெகிழும் இல்லேன்னா கேக்கா ஷோக்கா வரும் கடசில அணுகுண்டாவும் மாறும்!


எல்லாம் பதத்துலதான் இருக்கு சூட்சமம், பட்சணத்துக்குமட்டுமல்ல மனித மனசுக்கும் பதம் அவசியம் என்பதை மைச்சூர்பாக் செய்யக் கற்றுக்கொண்ட ஆரம்பநாட்களில் தெரிஞ்சிட்டேன்! (ஷைலஜானந்தா ஆகிடப்போறேன்)

அதை விடுங்க...

எல்லார்வீட்லயும் பொண்ணுபாக்கவந்தா கேசரிதான பண்ணுவாங்க இல்லையா?
எங்க வீட்ல மைசூர்பாக்பண்ணினாங்க,ஏன்னா முதநாள் வந்த மாப்பிள்ளையின் அக்கா "என் தம்பிக்கு கேசரிய விட மைசூர்பாக் ரொம்பப் பிடிக்கும் நல்ல உருக்கின பசு நெய்ல செய்துதந்தா அவ்ளோதான் உலகையே மறந்துடுவான்!" என்றுசொல்லிவிட்டுப்போகவும் என் அம்மாவும், பையன் உலகைமறந்த நேரமாப்பாத்து தன்பொண்ணை நைசா'பிடிச்சிருக்கு'ன்னு சொல்லவச்சிடலாம்னுதிட்டம்போட்டமாதிரி மைசூர்பாக்கை செய்ய ஆரம்பிச்சாங்க.

அம்மாதனக்கு தெரிஞ்சமாமிகிட்ட கேட்டுதான் செய்தாங்க.. 1:3:3 என்று மாமி அளவு சொன்னாங்க அதாவது கடலைமாவு ; சக்கரை ;நெய்யாம்!

அம்மா ஒண்ணு மூணு மூணு ன்னு முணுமுணுத்துட்டே இருக்கறப்போ யாரோ மணி
2ன்னு சொன்னதுகாதுல விழவும் ரண்டுமூணு மூணுன்னு சொல்லிட்டே செய்ததில் அது
பதம்சரியாகவராமல்போனது.கேசரிமாதிரி காட்சிஅளித்தது. அப்பா ' கேசூர்பாக் 'என்றார்கிண்டலாக

பதட்டமா மறுபடி செய்தாங்கபாருங்க அப்போ அது
பாயசமாபோயிட்டது தண்ணீ அதிகமாச்சாம்!

மறுபடி குலதெய்வத்துக்கு வேண்டிட்டு அம்மா செய்யநினச்சப்போ அத்தை வீடுவந்தாங்க

"என்ன நீ! 1;3;3 எதுக்கு வண்டி நெய் விடாதே..நல்லா கூடுகட்டினமாதிரி பொரபொரன்னு மைசூர்பாக்கு வரணும்னா ஒரு நெய்போதும். ஒன்றரை சக்கரைபோதும்..இல்லேன்னா பாயசம்தான் போ " என்று சொன்னாங்களா அம்மா பயந்துபோயி நெய்யைக்கம்மிபண்ணிட்டாங்க.


பொண்ணு பாக்க எல்லாரும் பட்டாளமா வந்தாங்க.. ஸ்ரீரங்கம் சித்திரைவீதியே வாசல்ல வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சிது!

//ஒஸர்ரம்மா ஒல்லியா இருக்காரே அதான் பையனாம்!

எங்க வேலையாம்?

பெங்களூராம்

கேசரி பண்ணவேண்டாம்னு அக்காக்காரி ஆணையிட்டுட்டாளாமே ! பொண்னோட அம்மா மைசூர்பாக் வில்லை போட்டுருக்கா போல்ருக்கு அதிசியம்தான் போ!

காலம் மாறிடுத்து மாமி!///






என்னவோ பலவேலைகளுக்கு நடுவில பொண்ணு பாக்க வந்தவர் போல என்னைப்பாக்க வந்த மாப்பிள்ளை தன் கையில்கட்டி இருந்த வாட்சையே அடிக்கடிப் பாத்துட்டு இருந்தார்...


(என் உடன்பிறப்பிடம் "உங்க அக்காவும் கதை கவிதை எழுதுவாங்களா உங்க அப்பாமாதிரி?"ன்னு
சாக்லேட்கொடுத்து உளவு பார்த்தகதை பலநாள்கழிச்சி தெரியவந்தது):)


"என்தம்பி பெண்பாக்க வரப்போ, டில்லில்லேந்து அவனோட ரண்டு ஃப்ரண்ட்சும் வருவாங்க" அப்படீன்னு


முதநாள் வந்துபாத்த அக்கா சொல்லீ இருந்ததால் அந்த
டில்லிநண்பர்களைப் பார்க்க நாங்க (என் உடன்பிறப்புகள் மற்றும் உறவுக்காரக்கூட்டம்)ஆவலோடு காத்திருந்தோம்..(ஸ்ரீரங்கத்துக்காரங்களுக்கு அப்போல்லாம் டில்லின்னா அமெரிக்காமாதிரி!!)


வந்தாங்கப்பா டில்லிக்காரங்க!

வேஷ்டியும் லொட லொடன்னு சர்ட்டும் அணிந்து தலையை வழிச்சி வாரிட்டு நெற்றிநிறைய விபூதிப்பட்டைல அடக்க ஒடுக்கமா அம்பி பதிவின்(அம்மாஞ்சி) பெயர்ல ஒருத்தர் , இன்னொருத்தர் திருமண்தரிச்சி திருதிருன்னு முழிச்சிட்டு!


நொந்து நூலானோம் நாங்கள்ளாம்.. !

"இப்பத்தான் மண்ணச்சநல்லூர்லேந்து டில்லிக்குப்போனவங்களாம்.. " என்ற உபரிதகவலை சின்னதம்பி அவங்ககிட்ட பேசி தெரிஞ்சிவந்து சொன்னான்.

நல்ல வேளை பொண்ணு பாக்கவந்தவர் நேவிப்ளூ சூட்ல வந்தாரோ நான் ப்ருந்தாவன சாரங்கால ரங்கபுரவிஹாரா பாட சம்மதிச்சேனோ!!


"உனக்குபிடிக்கும்னு மைசூர்பாக்பண்ணி இருக்காடா"

அம்மையார்(மாப்பிளையின் அம்மா) பெருமையாய்முழங்கினார்.

நான் பணிவாய்(!) நீட்டிய தாம்பாளத்திலிருந்து படுவேகமா ஒருமைபா வில்லையை எடுத்துட்டாங்க அந்தம்மா." நன்னாருடிம்மா" என வாழ்த்தி வேகமா வாய்லபோட்டுட்டாங்க.

அடுத்த நிமிஷம் க்கட்டக் என ஒருசத்தம்.

"பின்னாடி தோட்டத்துல மாமரக்கிளை முறிஞ்சுட்டுதா பாருடா வெங்கட்"

என்று அப்பா தம்பியை ஏவினார்.


பையனின் அம்மா கடவாய்ப்பல் ஒன்று கழண்டுவிழ அதை கையில் வைத்துக்கொண்டு முழித்தார்.

அப்பா என் அம்மாவை சமையற்கட்டுக்குக்கடத்திட்டுப்போனார்.

"போச்சு ..எல்லாம் போச்சு! நீ செஞ்சமைசூர்பாக்குல பையனின் அம்மா பல்லே பெயர்ந்துபோச்சு! அவ்ளோதான் இந்த வரன் ஹோகயா. நல்ல பையன்.பெங்களூர்ல நல்லவேலை. எல்லாம் உன் பாழப்போற மைசூர்பாக்கால போச்சு... ஒழுங்கா செய்யவேண்டியதுதானே?"

"நான் எட்டூருக்கு ஜோரா செஞ்சிருப்பேனாக்கும்! உங்க ஒண்ணுவிட்ட அக்கா வந்து குழப்பிட்டா..."


அப்பா-அம்மா யுத்தம் அடுப்படியில் ஆரம்பமானது.


"சித்த இப்படி வாங்கோ"


பையனின் அம்மா அழைத்தார்.

அப்பா வந்தார் பயந்தபடியே.


கையில் ஒரு பல்லை வைத்துக்கொண்டு
இருக்கற மீதப்பற்களினூடே பளிச் புன்னகைபுரிந்த பையனின் அம்மா,

"பல் எடுக்க டாக்டர்கிட்ட போகபயந்துட்டே இருந்தேன்.. ஏன்னா என்னோட ஏழு(அம்மாடியோவ்)டெலிவரிக்குக்கூட நான் ஆஸ்பித்ரிக்கு போனதே இல்ல ..அவ்ளோபயம் எனக்கு இப்போ செலவில்லாம பயமில்லாம ஏகமா ஆடித்தொல்லை கொடுத்துட்டிருந்த பல்லை விழவச்சபெருமையும்,மகிமையும் உங்க மைசூர்பாக்குக்கே சேரும். இதுக்காகவே உங்க பொண்ணை என்பையனுக்கு..."

மேலே இனி சொல்லத்தேவை இல்லைன்னு நினைக்கிறேன்!

பெங்களூர்வந்து புதுவீடு குடிவந்ததும்

" என்னங்க இன்னிக்கு மைசூர்பாக் பண்ணட்டுமா?"ன்னு நான் கேட்ட்போது

ஜானகிதேவி ராமனைத்தேடி இருவிழிவாசல்..... பாட்டு ரேடியோல கேட்கவும் சரியாக இருந்தது.

அன்னிக்கு முழிச்ச என் மறுபாதி(Better half))நான் மைசூர்பாக் செய்தால் மட்டும் வாயை மூடிக்கறார்!!!!(அடிக்கடி நான் மைபா செய்ய இதுவே காரணம்:)

மைபா மகிமை இத்தோடு முடிகிறது!


சரி பொறந்த நாளும் அதுவுமா ஒரு தன்னம்பிக்கைப்பாட்டுபாடலாம்னு தோணிச்சி..

இந்தமாதிரி ரிஸ்க் எடுக்கறது எனக்கு எப்பவுமேபிடிச்ச விஷயம் !பலரோட வலைத்தளங்களில் போய் படுத்தியும் இருக்கேன் !இங்கயும் இருக்கு உங்களுக்கு ட்ரீட்டா இந்தப்பாட்டு!!( கல்கில்லு விழுந்தா ஆயில்யன் காட்ச் பிடிக்கறதா (அ)சத்தியம் செஞ்சிருக்கார்!!

(என்னவோ தெரில்ல பாட்டு இங்க அப்லோட் ஆகல..எல்லாரும் தப்பிச்சீங்க ! வழிகிடச்சா மறுபடி இணைச்சிடறேன்:)
மேலும் படிக்க... "மைசூர்பாக்கும், என் மறுபாதியும்!!"

Wednesday, March 11, 2009

பச்சைக்கலரு ச்சிங்குசாங்!








'அன்புள்ள கடக ராசி நேயர்களே! இன்று உங்களுக்கு உகந்த நிறம் பச்சை மற்றும் மஞ்சள்.."

காலைநேரப் பரபரப்பில் கையில் கத்தியுடனேயே(அட காய் கட்பண்ணிட்டு இருந்தேங்க:)) ஹாலிற்கு ஓடிவந்து ராசிபலன் கேட்பது வழக்கம். ஏனென்றால் ஒருநாளைக்காவது ஜோதிடம் பலிக்கிறதா என்று பார்க்கத்தான்! இன்று உங்களூக்கு நற்செய்தி என்பார்கள், தபாலில் கதை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்தி திரும்பி வரும்!! என்ன இன்னிக்கும் தக்காளிரசமா என்று
ரங்கமணி முணுமுணுப்பார்! அப்பாக்கு இருமல் நாலுமல் எட்டுமல்னு அதிகமாச்சுக்கான்னு தம்பி போன் செய்வான்.

இப்படித் தொலைக்காட்சியில் ஜோதிடப்பலன் கூறும்போது கடைசியாகச் சொல்லி முடிக்கிறார்கள், அன்றைய தினத்திற்கு, நமக்கு ஏற்ற நிறங்களைப் பற்றி.

உகந்த நிறமென்பது அவரவர் மனதை பொறுத்தது அல்லவா? குயிலுக்கு நிறமுண்டு, அதன் குரலுக்கு நிறமுண்டா எனக் கவிஞர்கள் கேட்பார்கள்.

'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்று எழுத்தாளர்கள் கேட்பார்கள்..

மனிதர்க்கு மட்டும் மனசுக்கும் நிறமுண்டாம். அந்த நிறத்திற்கும் குணம் உள்ளதாக எனது டாக்டர்தோழன் சொல்கிறான்..

தனக்கு வேண்டிய உணவு, உடை, வீடு எல்லாவற்றிலும் தான் விரும்பும் நிறங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ள மனிதரை, அவர் விரும்பும் வர்ணங்களை வைத்து அவர் குணத்தைக் கூறிவிடலாம் என்ற ஸ்நேகிதன் தொடர்ந்தான்.

பச்சை நிறம்:-இதை விரும்புபவர்கள் அறிவாளிகள்; பல விஷயங்கள் தெரிந்தவர்கள்; எதிலும் நிலையான கொள்கை உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த கருணையுள்ள இவர்கள், மாறுதலையும் எதிர்பாராத விஷயங்களையும் விரும்பமாட்டார்கள்.

வயலட்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள், தீர்க்கதரிசனம் மற்றும் உள்ளுணர்வு மிக்கவர். ஆன்மீகத்தில் ஆர்வமுடையவர். அமானுஷ்ய சக்தியும், மனோவசீகரமும் காணப்படும் எல்லா உயிரிடத்திலும் அன்பு கொண்டிருப்பவர்.

சிவப்பு:-சுறுசுறுப்பானவர்கள்; பரந்தமனப்பான்மை கொண்டவர்கள். நல்ல பண்புகள் கொண்டவர்கள். தனக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதை எப்படியும் அடைந்து வெற்றியுடன் வாழ்வார்கள்.

மஞ்சள்:-இந்த நிறம் விரும்புகிறவர்கள் எப்போதும் பிரகாசமாகவும், மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மையுடனும் விளங்குவார்கள். இவரிடமிருந்து மற்றவர்களுக்கு அன்பும் அரவணைப்பும் எப்போதும் கிடைக்கும். இவர் வாயாடியாக இருந்தாலும் இவருடைய பேச்சு எல்லோராலும் விரும்பி வரவேற்கப்படும். வாழ்க்கையின் எல்லா அம்சத்திலும் மிகுந்த ரசனை கொண்டிருப்பார்கள்.

நீலம்:-மிகுந்த கலைநுணுக்கம் மற்றும் ஓவியத்திறன் பெற்றிருப்பார். கற்பனை சக்தி நிறைந்து தனது எண்ணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்கும் மனது கொண்டவர். தான் காணும் கனவுகளுக்கு உயிர் கொடுத்து அதனை சாதிக்கும் திறன் பெற்றவர்.

பிரவுன்:-இந்த நிறம் விரும்புகிறவர், வாழ்க்கையில் நிலையான, பாதுகாப்பான சூழ்நிலையை தனக்காக உருவாக்குவதுடன், தனது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் மிகுந்த நன்றியும் விசுவாசமும் காட்டுவார். தன் மீது தனது துணைவி அல்லது துணைவன் காட்டும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் மிகவும் ஏங்குவார். நினைத்ததை நினத்தபடி பேசிவிடுவார்.

சாம்பல்:-இந்த நிறம் பிடித்தவர்கள் சுயமரியாதை சிந்தனை உள்ளவர்கள். தற்சார்பு மிக்கவர். தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்ளவும் தயங்க மாட்டார். எந்த ஒரு குழுவிலும் முழுமையாக இடம் பெறவோ ஈடுபடவோ மாட்டார்கள். மற்றவர்களூடன் உறவையோ நட்பையோ ஏற்படுத்திக் கொள்ள மிகவும் பயப்படுவார்கள்.

கறுப்பு:-இந்த நிறம் விரும்புகிறவ்ர்களிடம் பிடிவாதம் நிறைந்திருக்கும். ஆனால் மனதில் சூட்சமமும் எதிலும் ஒரு கவர்ச்சியும் இருக்கும். மனமுதிர்ச்சி, வாழ்வினை நன்கு புரிந்து கொள்ளும் தன்மை, அதே நேரத்தில் மற்றவர்களை ஊக்குவித்து அவர்களை சரியான பாதையில் செலுத்தி அவர்கள் ஆற்றலை வெளிப்பட உதவும் பண்பு கொண்டவர்கள்.

இப்படி விளக்கிய டாக்டர் மேலும் சொன்னது..

அன்றன்றுக்குரிய கிரகத்தின் வண்ணத்தில் ஆடை அணிவது அந்த கிரகத்தின் முழுப்பலனைப் பெற சாத்தியமாகுமாம்.


பொதுவாக ஞாயிறு சூரியனின் நாள். சூரியனுக்குரியது சிவப்பு ஆகவே அன்று சிவப்பு உடை அணிவது நல்லது, இதுபோல திங்கள் சந்திரனுக்காய் வெண்மை, செவ்வாய் ஆரஞ்சு, புதன் பச்சை, வியாழன்மஞ்சள் வெள்ளி சுக்கிரனது நாள் ஆகவே வெண்மை, சனிக்கிழமை நீலம் அல்லது கறுப்பு. நாளுக்கேற்ற உடை அணிவதால் மன சஞ்சலங்கள் குறைகிறது. (நிச்சயமாக இது மூடநம்பிக்கை இல்லை என்பது டாக்டரின் வாதம். எனக்கு நம்பிக்கை இல்லை என்பது வேறவிஷயம்:)))

நம்மைச் சுற்றி உள்ள ஒளியே ஏழு வண்ணங்களின் சேர்க்கைதான். அந்த ஒளி நம்மை ஊடுருவதுடன், நம் கண்களின் வழியே மூளைக்கும் சென்று செயலாற்றுகிறது. அந்தப் புறஒளியின் ஆதாரமே சூரியனும் சந்திரனும் என்பதால்தான் இவை இரண்டையுமே இறைவனின் கண்களாக உருவகப்படுத்துகின்றனர். இதுதவிர ஒவ்வொரு மனிதனையும் சுற்றி இயல்பாகவே ஒரு ஒளிவட்டம் உள்ளது.( தம்பிராகவ் குறும்பாசிரிக்கிறார், இதைப்படிச்சிட்டுன்னு நினைக்கிறேன்:)))

தெய்வீகத்தன்மை வாய்ந்த மனிதர்களைச் சுற்றி இயல்பாகவே இது இருக்கும்.

நம் ஒவ்வொருவரின் உடலின் வெளியே 'ப்ரபை' எனச் சொல்லப்படும் 'AURA' ஒளிவட்டம் இருந்தாலும், தெய்வீகமான மனிதர்களைப்போல அதற்கு அவ்வளவு சக்தி இல்லாததால் நாம் அதைக் காண முடிவதில்லை. அந்த ஒளிவட்டத்தை ரஷ்யாவைச் சேர்ந்த நிபுணர்கள், 'kryllionphotography' என்ற வித்தியாசமான ஒரு காமிரா மூலம் படம் பிடித்துள்ளனர். நமது 'பிரபை'யின் நிறம், நமது சக்தி, அதில் ஏற்படும் நோய் போன்றவற்றால் மாறிவிடும் தன்மை வாய்ந்தது. ஒருவருக்கு உடலில் நோய் வருமுன்பாக அவரது 'AURA' நிறம் மாறி நோய் வருவதை உணர்த்திவிடும்.

கலர் தெரபி என்னும் நிற வைத்தியத்தில் விதவிதமான நிறங்களில் உள்ள காய்கறிகள், கனிகள், இலைகள் ஆகியவற்றைப் பச்சையாகவோ சமைத்தோ உண்ணுவதால் கொடிய நோய்களூம் தடுக்கப்படுகின்றன.

ஞாயிறு தக்காளி ஜூஸ், திங்கள் ஆப்பிள் அல்லது முள்ளங்கி, செவ்வாய் ஆரஞ்சு அல்லது கேரட், புதன் மூலிகைச்சாறு, வியாழன் எலுமிச்சைப்பழச்சாறு, வெள்ளி கொய்யா அல்லது வாழைப்பழம், சனிக்கிழமை கறுப்பு திராட்சைசாறு என தினமும் இப்படி அந்தந்த நாளின் நிறத்தோடு ஒத்துப்போகும் பழச்சாறு அருந்துவது உடலிற்கு நல்லது. டாக்டரின் உரை இத்துடன் முடிகிறது!!

ஆக... நிறங்கள் ஏதோஒரு விதத்தில் நம்மை கிறங்க வைக்கின்றன.


வானவில் வர்ணங்கள் பார்க்கும் போதே பரவசம்தான்.. வர்ணங்கள் வாழ்க்கையின் முக்கியப் பகுதியாக இருக்கவேண்டும்

இளைஞர்கள் கூட அதனால்தான் அழகான பெண்களைப் பார்த்து, 'கலர்' என்கிறார்களோ?


(ஹோலிதினம் என்பதால் இந்தப்பதிவை இடத்தோன்றியது வேறஒண்ணுமில்ல:):)
மேலும் படிக்க... "பச்சைக்கலரு ச்சிங்குசாங்!"

Saturday, March 07, 2009

மகாசதி!















நத்தை ஊர்ந்தால்கூட சத்தம் கேட்கும், அத்தனை அமைதி.

அமுதனார் அகளங்கன்மண்டபத்தை அடைந்துவிட்டார். சுற்றும்முற்றும் பீதியுடன் பார்த்துவிட்டு முகத்தைதுடைத்துக்கொண்டார். மேலாடை நனைந்ததே தவிர முகம் உலரவில்லை. இடுப்பிலிருந்த சாவிக்கொத்தைத் துழாவிசரிபார்த்துக்கொண்டார்.

எதிரே திருமாமணி மண்டபம். ஆயிரங்கால்களும் வேத ரகசியம் பேச , நெய்ப்பந்தங்களின் குளிர் ஒளியில் இலக்கியவாதங்களும் தத்துவ விசாரணைகளும் நிகழும் இடமாகவா இருந்தது அது ?அந்த ஆயிரம் கால்களும் குறுகிப்புதைந்து நிற்கின்றன. அங்கே சுவர்க்கோழிகளுக்குக்கூட தொண்டை அடைத்துக்கொண்டுவிட்டது.

அமுதனார் பெருமூச்சுவிட்டார். அது மூச்சாக இல்லை. தீ வீச்சாக இருந்தது. நடந்துவிட்ட நிகழ்ச்சிகளை எண்ணிப்பார்க்க அமுதனாருக்கு விருப்பமில்லை. அவை துயரில் வெடித்தவை. பெரிய கோயிலுக்கு இந்த நிலை வரும் என்று யார் எண்ணினார்கள்! ஒன்றுமே அறியாதவர் போல் அறிதுயில் கொள்ளும் அரங்கப்பெருமானின் திரு உள்ளம்தான் என்ன? விதியின் சிரிப்பு அவர் செவியில் விழவில்லையா!


"சுவாமி!"

அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

"சுவாமி பயப்படவேண்டாம் நாந்தான் சிங்கன். நீங்கள் எப்போது ?சாவிக்கொத்துக்களைமறைத்துவிட்டீர்கள் அல்லவா?" என்று கேள்வியும்பதிலுமாய் வந்தன.

"சிங்கா! அதையெல்லாம் பிறகு பேசுவோம். நீ எப்போது வந்தாய் எப்படி வந்தாய் வெளியே நிலவரம் எப்படி அதைச்சொல் ?" என்றுபடபடத்தார் அமுதனார்

சிங்கன் விட்ட பெருமூச்சில் அந்த மண்டபமே அதிர்ந்தது.

"எதைச்சொல்வது சுவாமி? நம் கையே நம்கண்ணைக்குத்துகிறது. இதுதான் இப்போதைய செய்தி "என்றான் குரலுடைந்தவனாய்

"புதிர்போடாமல் விளங்கும்படி சொல் சிங்கா"

"எப்படிச்சொல்வேன்? சொல்ல நாக்கூசுகிறது. நம்கோவிலில் சேவகம் செய்கிறார்களே கனகம் வெள்ளை நாச்சியார் என்ற இரு கணிகை சகோதரிகள் ,அவர்களேதான் இப்போது நம் எதிரிகள் படையெடுத்துவந்திருக்கும் வ்டவர்கள் அல்ல."

"நீ என்ன சொல்கிறாய்?"

"கேளுங்கள் சுவாமி.இளையவள் வெள்ளைநாச்சியார் இருக்கிறாளே அவள் தளபதி அடில்கானின் மனையாட்டியாகப்போகிறாளாம் !ஊரே இந்தச்செய்தியில் வெந்துகொண்டிருக்கிறது."

"என்னால் நம்பமுடியவில்லை சிங்கா ! ஆனால் எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற நிலை கடந்துபோய்விட்டது ,நல்லது ,இதற்கு ஒரு வழிகாண வேண்டும் இதோபார் சிங்கா! உயிரைப்பெரிதென்றுகருதாமல் எப்படியாவது பெரியகோயிலின் பொக்கிஷத்தை நாம்காப்பாற்றியாகவேண்டும்."

"சுவாமி! எனக்கென்னவோ பயமாக இருக்கிறதே."

அமுதனார் மெல்லச்சிரித்தார்.

"பயப்படாதே ! இது நமக்கு ஒரு சோதனை. இதில் வெற்றி பெற நெஞ்சுறுதி வேண்டுமடா !பெருமான் உன்னை ஆசிர்வதிப்பார்!"

சிங்கன்பதுங்கிப்பதுங்கி ஓடினான்.

கீழக்கோபுரத்தருகே காலோசைகள் கேட்டன.

காவலாள்கள் தன்னைகக்ண்டுகொள்வார்களோ என்ற பயத்தில் தூணோடுதூணாகச்சாய்ந்தார் அமுதனார்.

ஒருகைவிளக்கு எட்டிப்பார்த்துவிட்டு மறைந்தது. சிறிதுநேரம் காத்திருந்துவிட்டு அமுதனார் மெல்ல மெல்ல திருமாமணி மண்டபம் நோக்கி நடக்கலானார்.



மண்டபத்தின் கோடியை அடைந்ததும் சுற்றுமுற்றும்பார்த்தார் நல்லவேளை இதுவரைதப்பி வந்தாயிற்று . இனி என்ன நேருமோ?

அவசரம் அவசரமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் குழி பறித்தார். சாவிக்கொத்தை அதில் இட்டுமண்ணைமூடினார். ஓடிப்போய் நாலைந்து செடிகளைப்பறித்துவந்து அவைகளின்மீது மண் தெரியாமல் மூடினார்.

அதிலும் திருப்தியின்றி ஒருகுத்துக்கல்லைக்கொண்டுவைத்தார்.

அந்த இடத்துக்கு அடையாளமாக் மதிலில் ஒரு திருநாமக்குறி இட்டார்.

ஆயிற்று! இனிபயமில்லை.

இச்சமயம் மண்டபத்துக்குள் யாரோ நடந்துவரும் ஓசைகேட்டது.

அமுதனாருக்கு ரத்தமேஉறைந்துவிட்டது

"யார் அங்கே?"

குரல் கணீரென்றுவந்தது.

அமுதனார், மரத்தோடுமரமாகநின்றார்.

"அமுதனார் சுவாமிகளா?"


குரலைஇப்போது அவர் அடையாளம் கண்டுகொண்டார் .

வெள்ளைநாச்சியாரின்குரல்தான் அது.

"ஆமாம்" என்றவர் "நீ எங்கே வந்தாய் இந்தவேளையில்?" எனக்கேட்டார்.

"நல்லகேள்விகேட்டீர்கள்!" என்றுகூறி சிரித்தாள் வெள்ளையம்மா.

அந்தச்சிரிப்பை அமுதனாரால் ரசிக்கமுடியவில்லை. எரிச்சலுடன் "சிரிக்காதே வெள்ளையம்மா ! நன்றாக இல்லை " என்றார் பட்டென்று.

"சிரிக்கக்கூடவா ஆட்சேபணை?"

"வெள்ளையம்மா ! பெண் இனத்துக்கு உரித்தான பேதமைஉன்னைமறைத்திருக்கிறது. உன்னைச்சொல்லிப்பயனில்லை ,உன் விருப்பம் போல சிரி .இப்போதைய நிலையில்விதியோடு சேர்த்து நீயும் சிரிப்பதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை . சிரியம்மா சிரி."

"நான் ஏன் சிரித்தேன் என்பதற்குக்காரணம்கேட்டால் நீங்கள் கோபிக்கமாட்டீர்களே?"

"இல்லை . ஏன் உன் மேல் எதற்கு கோபம் வரவேண்டும்?"

"நல்லது. சொல்கிறேன் சாவிக்கொத்தைமறைத்துவிட்டால்மட்டும் எல்லாவற்றையும் காப்பாற்றி விட்டதாகி விடுமென்று நீஙகள் எண்ணுகிறீர்களே, அதை நினத்துத்தான்......"என்று சொல்லிமீண்டும் சிரிக்க ஆரம்பித்தாள்.

அமுத்னார் பதைபதைத்தார் .

"அப்படியானால்...அப்படியானால் எல்லாவற்றையும் நீ பார்த்துக்கொண்டுதான்இருந்தாயா?"

"ஆமாம்."

"அம்மா தாயே! உனக்குப்புண்ணியமுண்டு. வெளியில்சொல்லிவிடாதே. அரங்கப்பெருமான் மீது ஆணை, வெளியே சொல்லீ விடாதே."


"ஏன் இப்படிபயப்படுகிறீர்கள்?"

"வெள்ளையம்மா! என்ன கேள்விகேட்கிறாய்.?.. உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருக்கும்போது உன் கேள்வி சற்றும் சரியாக இல்லை .ஆனால் இதையும் தெரிந்துகொள். உயிரைப்பணயம் வைத்துதான் இந்தத் திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறேன்"

"உங்கள்பக்தியின்பெருமை எனக்குதெரியாதா? நல்லது .நகைகளை எங்கே பதுக்கி வைத்திருக்கிறீர்கள்?"

சாவதானமாக் ஆனால் அழுத்தமாக இப்படிவெள்ளைநாச்சியார் கேட்கவும் அந்தக்கேள்வியின் உட்கருத்து அமுதனாருக்கு விளங்கிவிட்டது. மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் பேசினார்.

" வெள்ளையம்மா! யார்கண்ணிலும் படாமல் இதுவரை என் பொறுப்பை நிறைவேற்றுவதாய் எண்ணி இருந்தேன் ,ஆனால்,பெருமாள் உன்னை இங்கே அனுப்பியிருக்கிறார். அவருடைய திரு உள்ளம் அதுவாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் மறைக்கவேண்டும்! நகைகள் நிலவறையில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த ரகசியத்தைத் தெரிந்துகொண்டு உன் சாகசத்தால் நீ எங்களைக் கவிழ்க்க நினைத்தால் உயிரைக்கொடுத்தாவது அவற்றைக் காப்பாற்றியே தீருவேன்"
என்றார் படபடப்புடன்.

அவ்ள் சிரித்தாள்.

"சுவாமி ,மலைமீது மோதிக்கொளதில் அர்த்தமில்லை .பகைவர்கள் படைபலம் எங்கே உங்களது மனபலம் எங்கே ! என் வார்த்தையைக்கேளுங்கள். நிலமைகட்டுக்குமீறிவிட்டதால் நீங்கள் எப்படியாவது தப்பித்து ஒடிவிடுங்கள்"


இப்போது அமுதனார் சிரித்தார்



"வெள்ளையம்மா! இப்போது உன் நிலமைக்கு வருந்துகிறேன் . உயிரை வெல்லமென்றுகருதி நீ உன்னையே இழந்து நிற்கின்ற கோலத்தைக்கண்டு வருந்துகிறேன் .ஆனால் உன்னிடம் நான் நிறைய எதிர்பார்த்தேன். உன் அழகும் அறிவும் இப்படிப்பாழாக வேண்டாம்!" என்றார்

"சுவாமி!" அலறினாள் வெள்ளையம்மா.

அமுதனாரை ஏறிட்டவள் தொடர்ந்தாள்.

"நான்பெண்தான் .ஆனால் உங்களைப்போல எனக்கும் எண்ணற்ற தாபங்கள் இருக்கின்றன அவற்றை எண்ணாமலேயே பேசுகிறீர்களே?"

"உன் தாபம் புரிகிறதம்மா ..அர்த்த்மற்ற பாவம் அது. தயவு செய்து என்னை உன்னோடு உவமானப்படுத்திப்பார்க்காதே... நான் வேறு,நீ வேறு" என்றார் எரிச்சலுடன்

பின்னர் திரும்பினார். மதிலின் அருகில் வளைந்திருந்த தென்னைமரத்தைப்பற்றித் தப்பிச்சென்றுவிட திட்டம் வகுத்திருந்தார். அதன்படி நடக்கமுனையும்போது...


"நில்லுங்கள் !என்னோடுவாருங்கள்!" என்றாள் வெள்ளையம்மா.

"உனக்கென்ன பைத்தியமா ?கோபுர வாசல்பக்கம் பகைவர்கள் நிற்கிறார்கள். என்னை விடுவார்களா அவர்கள்,என்னைப்போய் உன்னோடுவரச்சொல்கிறாயே ?"

என்றுகூறிமரத்தின்மீதுவேகமாக ஏறத்தொடங்கினார் அமுதனார்.

அவசரத்தில்படபடத்த அவரதுகுரல் கீழ்க்கோபுரவாயிலில் இருந்த காவலர்களின் செவிகளில் விழுந்துவிட்டது. அடுத்தநிமிடம் திமுதிமுவென ஒருகூட்டம் மண்டபத்துக்குள் புகுந்துவிட்டது.

அமுதனார் பருத்த சரீரமுடையவர் மன உறுதிக்கு ஏற்ற உடலுறுதி இல்லை அவரிடம் . தன் வாழ்நாளில் தென்னைமரத்தில் ஏறியும் அறியாதவர் எனவேபாதிமரத்திலிருந்து உருண்டுகிழே விழுந்தது விட்டார்.

உடம்பெல்லாம் ஆடியது அமுதனாருக்கு.

"என்னகூச்சல் இங்கே! வெள்ளையம்மா நீ இங்கேயா இருக்கிறாய் ?"
என்றுகேட்டபடி தளபதி வந்தான்.

அமுதனார் தமது இறுதிக்காலம் வந்துவிட்டது என்பதைஉணர்ந்தார் .


'இந்த வெள்ளையம்மா மட்டும், வந்திருக்காவிட்டால் எப்போதோதப்பித்துப் ோயிருக்கலாம்..ஹ்ம்ம்...'

அவளைமானசீகமாக சபித்தார்.

"நீங்கள் காவல்காக்கிறலட்சணம் இதுதானா! இந்தமனிதன் எப்படி உள்ளே நுழைந்தார்? நான் வராவிட்டால் என்ன ஆகி இருக்கும்,ம்?" என்று வெள்ளையம்மா தளபதிக்குமேல் தன்குரலைஉயர்த்தினாள்.

வீரர்கள் நடுங்கிக் குறுகினார்கள்.

தளபதி ஆத்திரம்தீர அவர்களை கடுமையாய்பேசிவிட்டு தனது நீண்ட சவுக்கினை எடுத்துக்கொண்டு அமுதனாரின் அருகில் சென்றான்.

அமுதனார் கண்ணைமூடிக்கொண்டர்.

உயிர்பெரிதில்லை ஆனால்சித்திரவதையை அவரால்தாங்கமுடியாது இன்னும் என்னென்ன நடக்குமோ அரங்கா!


"யார் இவர் ?"என்று சீறினான் தளபதி . சவுக்கினை ஒருமுறைகீழே காற்றில் சுழற்றி எடுத்தான்.

சிலிர்த்தது உடம்பு அமுதனாருக்கு.



இதற்கு தளபதியோடு வந்திருந்த கோபால்நம்பிகுரல்கொடுத்தபோது அப்போதுதான் அவனைநிமிர்ந்துபார்த்தார் அமுதனார், உடனேமுகத்தைவேறுபுறம் திருப்பிக்கொண்டார் .

அரங்கநகருக்காரனாய் இருந்துகொண்டு அந்நியனுக்குப்பல் இளிக்கும் பாதகன். பணத்தாசை காரணமாய் அரங்கச்செல்வத்தைத்துறந்து அந்நியன் ஒருவனிடம் அடிமையாகிப்போனவன்.

அந்தப்புல்லுருவியைமீண்டும் நான் பார்க்கக்கூடாது.


"தளபதியாரே! இவர்தான் பெரியகோயிலின்முக்கியஸ்தர்! பெயர் அமுதனார் ! கொத்துச்சாவிகளும் நகைகளும் அவர்பொறுப்பில்தான் உள்ளன "என்றான் கோபால்நம்பி

"அப்படியா?" தளபதி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான்.

சவுக்கை சுருட்டிக்கொண்டபடி விழிகளைமலர்த்தினான்.



"ஆஹா! பழம் நழுவிப்பாலில் விழுந்த கதைதான்!!!நமதுகாவலர்கள் அபாரபுத்திசாலிகள் !இந்த ஆளை இங்கே நுழையவிட்டு, பின்னர் பிடித்திருக்கிறார்கள்!

ஏய், யாரங்கே இவரைக் காவலில் கொண்டுவையுங்கள்" என்றான் .


அமுதனாருக்குக் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

'நகைகளின் இருப்பிடதைச்சொல்லாதவரை இவர்கள் என்னைவிடமாட்டார்களே! இதுதான் விதியா ?இல்லை இல்லை வெள்ளயம்மா ரூபத்தில் வந்த சதி .ஏன் இப்படிச்செய்தால் என்ன ?வெள்ளையம்மாவை நம்பித்தானே ரகசியத்தை அவளிடம்சொன்னேன் !இப்போது அவளையே மாட்டிவிட்டுவிட்டால் என்ன?'

அமுதனார் ஒருமுடிவோடு நிமிர்ந்தவர்,


"தளபதியாரே! இந்தவெள்ளையம்மாவிடம் நகைகள் இருக்குமிடத்தைக் கூறிவிட்டேன். அவளிடமேகேட்டுக்கொள்ளுங்கள் " என்றார் உறுதியானகுரலில்.

வெள்ளையம்மா திடுக்கிட்டு அவரைப் பார்த்தாள் . இதைஅவள் எதிர்பார்க்கவில்லை .ஆனலும் சிரித்தபடியே ," ஆமாம் எனக்கும்தெரியும் அவரைவிட்டு விடுங்கள்" என்றாள்.

தளபதிக்கு இன்னும் ஆனந்தம்!

"ஏதேது எல்லாம் மிக எளிதாகமுடிந்து விடும்போல இருக்கிறதே! சபாஷ்!
வெள்ளையம்மா! நீ மிகவும் புத்திசாலி !இந்தக்கிழவரின் உடலைப்பதம்பார்த்து, பிறகுஅந்தரகசியத்தை வாங்கும் சிரமத்தைக்கூட நீ எனக்கு வைக்கவில்லை ! வா நாம்போகலாம்!நீயே அந்த இடத்தை எனக்குக்காண்பித்துவிடு! ஆடிப்பாடி அதனைக்கொண்டாடிக் களிக்கலாம்! அந்த நகைகள் உன் காலடியில் விழும்! நீ, மறுக்காமல்ஏற்றுக்கொள்ளவேண்டும் ! கோபாலநம்பி! பயப்படாதே !உனக்கும் ஏதும் பதக்கம் நிச்சயம் உண்டு! "என்றுபெருமையாகவும் கிண்டலாகவும் சொன்னான் தளபதி.

அமுதனாரை வெளியே கொண்டுவந்து கழுத்தைபிடித்துவிரட்டினார்கள் காவலர்கள்.

அமுதனார் வேதனையுடன் நின்ற்வர் யோசித்தார்.

'எப்படியாவது ந்கைகளைக்காப்பாற்றியாகவேண்டும் ,சாவிக்கொத்தையும் நகைகளையும்வேறிடத்தில் அப்புறப்படுத்திவிட்டால் அது வெள்ளையம்மாளைப் பழி வாங்கியதுபோலாகும்.'

மதிலின்மீது ஏறி யாரும் கண்டுகொள்ளாமல் கீழைக்கோபுரத்திற்கு எதிரேவந்தடைந்தார் .
அங்கிருந்தபடியே காவலளர்களை நன்குகண்காணிக்கலாம் அவர்கள் சிறிது உறங்கினாலும் தப்பித்து உள்ளே ஓடிப்போய்விடலாம்.


கோபுரத்தின் உச்சியிலிருந்து பாட்டும் சிரிப்புமாய்கேட்டது. வெள்ளைநாச்சியாருக்கு இனிமையான குரல்தான் .ஆனால் அமுதனாரின் காதில் அது இப்போது நாராசமாக விழுந்தது

ஆழ்வாராதிகளும் சுவாமிதேசிகரும் மிதித்தமண்ணுக்குவந்த கேடுதான் என்ன இன்று? இதன் மகாபெருமையைப் பாழாக்கமுனைந்தாளே ஒருபெண்!

அமுதனார் கோபுரத்தின் உச்சியைப்பார்த்தார்.

அங்கே தளபதியும் வெள்ளைநாச்சியாரும் சிரித்தபடி நின்றிருந்தார்கள் .

இந்த இரவில் எந்த சாம்ராஜ்யத்தைப் பிடிக்க கோபுர உச்சிக்குச்சென்றார்களோ!

கேளிக்கையும்பாட்டுமே சாசுவதம் என்று எண்ணிவிட்டார்களா?

வடக்கே காவிரிஅன்னைநடக்கிறாள் ! தெற்கே கொள்ளிடமங்கை நடக்கிறாள்!

இடையே அதர்மம் நடக்கிறது! நடக்கிறதென்ன உச்சிமீது ஏறி சிரிக்கிறது!

ஆனந்தத்தில் தலைகால் தெரியவில்லையா வெள்ளையம்மாவிற்கு? துரோகி!

பார்த்துக்கொண்டே இருந்த அமுதனார் திடுக்கிட்டுப்போனார்.

'ஆ' என்று அலற இருந்த வாயினை இருகைவிரல்களாலும் அழுந்த மூடிக்கொண்டார்.

கண்வ்ழிகுத்திட அப்படியேநின்றார்.ஆம், ஒருக்கணத்தில் அது நடந்துவிட்டது.

தளபதி சற்று உல்லாசமாகக் கீழே குனிந்த நேரத்தில் அவனை அப்படியே கிழே தள்ளி உருட்டிவிட்டுவிட்டாள் வெள்ளையம்மா.


உருண்டுதலைசிதறி
கீழே
கீழே
கீழே
அப்படியே தலைகுப்புற ன்தாந்ழுவி தளபதி.

ஐயோ!

அலறல்புறப்பட குழப்பம் பெருகியது. கோபுரத்தின்கீழே குருதிவெள்ளமும் பெருக்கெடுத்தது.

வெள்ளையம்மா சிரிக்கிறாள். கோபுரத்தின் மீதிருந்து சிரிக்கிறாள். விதியை வென்ற சிரிப்பு! கேவலம் பெண்ணா அவள்!

அந்தப்பெண்மையையே அரணாக்கிக்கொண்டு போரிட்ட வீராங்கனை அல்லவா!


மதிலிலிருந்துகீழே குதிக்கப்பயந்து அமுதனார் மெல்ல இறங்கினார் . அதே சமயம் வெள்ளையம்மாவைப்பிடிக்க காவலர்கள்கோபுரம்மீது ஏறினர்.

ஆனால் அவர்கள் வரும் வரை அவள் காத்திருக்கவில்லை.

வெண்புறாவைப்போல அவளும் கீழே பாய்ந்தாள். கோபுரத்திலிருந்து கிழே குதித்துவிட்டாள்.
அமுதனாருக்கு முச்சே நின்றுவிடும்போலிருந்தது.

அவளுடைய சாகசமும் இறுதியில் அலட்சியமாய் உயிரைவிட்ட கோலமும் அவரை சிலையாக்கிவிட்டன.

அமளிதுமளியானது ஊர்.


சிங்கன் ஓடிவந்தான்.அமுதனாரிடம்

"வாருங்கள் இனி நாமிங்கே இருக்கவேண்டாம் . இங்கிருந்தால் ஆபத்து .நாம்பிழைத்துவிட்டோம் சுவாமி !வெள்ளையம்மா நம்மைக் காப்பாற்றி விட்டாள் "என்றான்.

அமுதனார் கலங்கிய தன்கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"சிங்கா! நாம் பிழைக்க வில்லையடா ,பிழைத்தும் செத்து விட்டோம். வெள்ளையம்மா செத்தும் வாழ்கிறாள்! தர்மம் பிழைத்தது. இந்த அரங்கத்தின் மாணிக்கம் அவள்! உனக்கும் எனக்கும் உயிர்மேல் கண் .ஆனால் அவளுக்கோ உயிர் ஒருபொருட்டே இல்லை. உயிர் ஒருபொருட்டே இல்லை! தன் ரத்தம் சிந்தி அரங்கபொக்கிஷத்தைக்காப்பாற்றி இருக்கிறாள் அந்த வெள்ளை உள்ளம் கொண்ட மகாமகள்!"

அமுதனாருக்குத்தொண்டை அடைத்துக்கொண்டது.

கண்கலங்க இருவரும் கோபுரத்தை ஏறிட்டபடியே புறப்பட்டனர்.


தெருவில்புழுதிபடர்ந்தது. இரவு பகலானது. போர் ஆரவாரங்கள்கிளர்ந்தன. முரசுகொட்டியது .பகைவர்கள் சிதறி ஓடவும், கீழைகோபுரத்தில் வெற்றிச்சின்னம் பறந்தது!

ஆம் கம்பீரமாக நிற்கிறது வெள்ளையமாள் உயிர்துறந்த அந்தகீழைக்கோபுரம் !
இன்றும் வெள்ளைகோபுரம் என்றபெயரோடு,
அவள் நினைவாக உடல்முழுவதும் வெள்ளைநிறம்பூசிக்கொண்டு அரங்கநகரின் அத்தனைவண்ணகோபுரங்களிலிருந்து தனித்து நிற்கிறது.


( வரலாற்றில் நடந்த உண்மைக்கதை இது!தன்உயிரைக்கொடுத்து அரங்கநகரின் செல்வத்தைக்காப்பாற்றிய வீரமங்கை வெள்ளையம்மாள் பற்றி பெண்கள் தினமான இன்று எழுத நினைத்ததை என் அரங்கன் செயலாக்கிவிட்டான். )
மேலும் படிக்க... "மகாசதி!"

வட்டத்துக்குள் பெண்.











விரைந்து வெளியே வா பெண்ணே!
விதிமீது பழிபோட்டு
வீட்டுக்குள் அடைந்துகிடந்ததுபோதும்
வெளியேவா பெண்ணே
உலகம் உனக்காகக் காத்திருக்கிறது!

அடிமையாய் வாழ்ந்ததுபோதும் பெண்ணே!
அணு உலைகளை ஆராய்ச்சி செய்து கொடு
அரிசிச்சோற்றை ஆக்கமட்டுமா உன் கரங்கள்
ஆகாயம்வரை உனது கரம் நீளட்டும்!
குழந்த சுமக்கமட்டுமா நமக்கு கருவறை
குவலயம் படைக்கும் திருமறையும் நாம் தானடி!

சடங்குகளுடன் சரிந்துபோகாமல்
சரித்திரம் படைக்கவும் சாதனைகள் புரியவும்
சட்டென்று எழுந்து வாராயடி!

நம் கண்களின் ஒளியில்தான்
சூரியக் கதிர்களுக்குக் கனல்
கிடைக்கவேண்டும்
நம் கால்களின் பாதையில்தான்
கானக முட்களுக்கு
கண் தெரியவேண்டும்
நம் கைகளின் எழுத்துக்களில்தான்
உலகமே உன்னதப்பட வேண்டும்

அதற்கு..
பதுங்கியும் ஒதுங்கியும்போகாமல்
புதுமைப்பெண்ணாய்
நிமிர்ந்து வா பெண்ணே!

பின்குறிப்பு!

(நேற்று இந்தக்கோலத்தை வாசலில்போடும்போது பெண்ணுருவத்தைமட்டும் முதலில் போட்டுவண்ணப்பொடிகளில் அலங்கரித்தேன்,பிறகு யாரும் காலில் மிதித்துவிடுவார்களோ என பெண்ணைச்சுற்றிலும் வட்டம் இட்டேன் ! என்றைக்கும் பெண்ணிற்கு ஒரு கோடு !லட்சுமண ரேகாபோல! இந்தக்கோடு அதாவது பெண்வட்டம்பற்றி கவிதை எழுத மூன்று ஆண்களை அழைக்கிறேன்.)

அவர்கள்..

ஒண்ணுமில்லசும்மா என்று சொல்லி வலைப்பூவினை அதிரவைக்கும் அப்துல்லா

தமிழினை அழகுறத்திகழவைக்கும் திகழ்மிளிர்

ஆன்மீகக்கட்டுரைகளில் அசத்தும் கண்ணபிரான் ரவிசங்கர் எனும் கேஆர் எஸ்!


மூவரும் இந்தப்பொறுப்பினை வேறுமூவருக்குக்கொடுத்துப்பார்க்கலாம்.பெண்பற்றிய சிந்தனையை உங்களிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

ஒரே நிபந்தனை இந்தக்கவிதைச்சங்கிலி ஆண்களுக்குமட்டுமே ! ஆமாம் இந்தப்பெண்கள்தினத்தில் நாங்கள் உங்களை மதிக்கிறோம் அதற்காகவே இந்த சலுகை உங்களுக்கு!
மேலும் படிக்க... "வட்டத்துக்குள் பெண்."

Thursday, March 05, 2009

காத்திருக்கிறேன். வா!












காத்திருக்கிறேன் வா!இந்த தலைப்பில் நான் எழுதிய மார்ச்மாதக் குடும்பநாவல்(ராணிமுத்துபோல இதுவும் ஒரு பத்திரிகை)
கடைகளில்கிடைக்கும்,அனைவரும் படித்துக்கருத்து சொல்லும்படி கேட்டுக்கறேன்!
நன்றி
ஷைலஜா
மேலும் படிக்க... "காத்திருக்கிறேன். வா!"

Tuesday, March 03, 2009

சின்னச்சின்ன கவிதைகள்!

முதியோர் இல்லத்தில்
மரணமடைந்த அம்மாவின்
முழு உருவப்படம்இன்று
நடுக் கூடத்தில்.
******

பூட்டியே கிடக்கிறது
இருபத்து நாலுமணிநேர
இலவசசேவை மையம்

******************

அகப்பட்ட போதிலெல்லாம்
ஆக்கிரமிக்கின்றாய் உடலை.
எப்போது அணைக்கப்போகிறாய்,
மனதை!

********

கொத்தித்தின்னும் கோழி அறியுமா
தீவனமாகப்போகிறோம் தானும்
ஒருநாள் என்று!
மேலும் படிக்க... "சின்னச்சின்ன கவிதைகள்!"

Saturday, February 28, 2009

இனி வரும் நாட்கள்....









முதல்வணக்கம்
****************************

உதிரத்தில் உருவமாக்கியதுமட்டுமின்றி
உலகத்திலும் உயரமாக்கிய
என் தாய் தந்தைக்கும்

காற்றில் மிதக்கும் அணுக்களை
அருகில் அழைத்து வந்து
அண்டத்தை அளவெடுத்துதரும்
என் எழுதுகோலுக்கும்

கவிதைக்கனவுகளில்
காலடிமண்ணைப்பதித்துப்போகும்
என் குருபாரதிக்கும்

கொண்டாடும் மழையென
நின்றாடும் அழகினிலே
வந்தாடுகின்ற தமிழுக்கும்.....

முதற் வணக்கம்.
********************************


சபைக்கு வணக்கமும், காப்பும்
******************************************
படிப்பும் துடிப்பும் கொண்ட
பண்பட்ட இளைஞர்களுடனே
நாவிற்கலைமகள் நர்த்தனம் செய்ய
நகைச்சுவைமிளிர் சொற்கள்கொண்ட
நற்கவிஞர் ஆசாத் போன்றோர்
நிறைந்த பண்புடனானஅவைதன்னில்

என்னைக்கவிபாட அழைத்ததுமே
ஏற்றுமகிழ்ந்து வந்துவிட்டேன் - நான்
கற்ற வித்தை கைகொடுக்குமென்று
மற்றவைகளைமறந்தும்விட்டேன்!

உடன்பாடோ எதிர்மறையோ அவையோரே
கடன் உங்கட்கு என்கவிதை!
கொட்டிடுவீர் கரவொலிகள்!
அரங்க நகர் வள்ளல் அருள்தரும்
திருவரங்க நாயகனே காப்பு!





கவிதைக்கு ஒருமுன்குறிப்பு.

(தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்த சோழனுக்கு மகளாக திருமகளின் அவதாரமாக கமலவல்லி
எனும் அழகுதேவதை அவதரித்தாள். திருச்சி அருகே ஜீயபுரம் எனும் இடத்திற்கு திருவரங்கப்பெருமான் எழுந்தருளும்போது , தான் அரங்கனை விரும்பியதாகவும் அவள் மனம் அறிந்து,அவளை நந்தவனத்தில் வந்து சந்தித்துப்பின் திருமணம் செய்து கொண்டதாயும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இன்றும் திருச்சி உறையூரில் கமலவல்லிஅன்னை, தன் திருக்கோயிலில் அரங்கனுடன் மணக்கோலத்தில் காட்சிதருகிறார். இதையொட்டிய கவிதை இது. அரங்கனைக்கண்ட அரசியின் மனநிலை,தோழியர்கள் வாயிலாக கவிதையாக இங்கு வருகிறது)


இனி வரும் நாட்கள்
**********************************


அன்னாயிங் கிதுகேளாய் அன்றொருநாள் பிற்பகலில்

பொன்னனைய இளவரசி பூப்பறிக்க எமையழைத்தாள்

நீங்குகிலா தென்றுமவள் நிழல்போல விளங்குகிற

பாங்கியரேம் தாமுமவள் பக்கத்தில் சென்றிட்டோம்

மண்ணினிலே வந்திறங்கி நடைபயிலும் மதியம் போல்

பெண்ணரசி முன் செல்லப் பின்னேயாம் தொடர்ந்திட்டோம்

காவிரியின் வெள்ளத்தில் களிப்புடனே விளையாடிப்

பூவிரியும் சோலைக்குள் போயெங்கள் உடை மாற்றி

ஆடுவதும் ஓடுவதும் பாடுவது மாய்வனத்தில்

நீடியதாம் போதிருந்து நிறைந்தெங்கும் காண்கின்ற

மல்லிகையே முதலான மலர்களெலாம் பறித்தெடுத்து

நல்ல பல ஆரங்கள் நாராலே தொடுத்ததன் பின்

மாளிகைக்கு மீளவும்யாம் வரவெண்ணும் நேரத்தில்

காளைபோல் பெருமிதத்தன் கண்கவரும் தோளழகன்

விண்ணொத்த கருநீலம் மிளிர்கின்ற மேனியினான்

வெண்ணிறத்துப் பரியேறி விரைவாயெம் முன்வந்து

வேட்டைக்கு வந்தேன் நான் மெல்லியரே வேங்கையிக்

காட்டுக்குள் உள்ளதேல் காட்டுங்கள் என்றிடவும்

ஆங்குளது காணுமென அரசகுலத்திருமங்கை

ஓங்கியதாய்க் கிளைவிரித்தே உள்ளதொரு மரங்காட்ட

கொல் என்று யாம்சிரித்தோம் கொல்வான்போல் அவன் நோக்கி

வெல்லுஞ்சொல் சொல்லுவதே மெல்லியலுக் கழகென்றான்

பாரோர்கள் புகழுகிற பார்த்திபனின் மகளறியீர்

ஆரோநீர் என வினவின், அரங்கத்தான் என்றிட்டான்

தங்களுயர் இளவரசி முன்னுற்றுத் தாழ்கின்றேன்

இங்கிதுபோல் மணமாலை யானறியேன் என்பவனாய்

நங்கைதன் செங்கரத்து நறுமணமார் தொடையலினை

அங்கையால் பறித்தெடுத்தே அழகுறத்தன் தோள் சேர்த்துத்

தன்னெழிலார் ஆரத்தைச் சட்டென்று தானெடுத்து

அன்னவள்தன் கழுத்தினிலே அரைநொடிக்குள் சூட்டினனாய்

மின்னலெனப் பரியேறி விரைவாக மறைந்திட்டான்

என்னசெயல் என்றெண்ணி யாம்திகைத்து நோக்குகையில்

அன்னவனுக்காய் இனிவரும் நாட்களெனும் நினைவோடே

கன்னிகையின் நீர்மலிந்த கண்.


________வெண்கலிப்பா___________



{பண்புடன் குழுமத்தில் பொங்கல்கவியரங்கத்தில் இனிவரும் நாட்கள் என்னும் தலைப்பில் கவிதை பாட அழைத்தனர் அப்போது எழுதிய கவிதை இது)
மேலும் படிக்க... "இனி வரும் நாட்கள்...."

Wednesday, February 25, 2009

கருவில் உருவாய் வருவாயடி!







கனவில் மட்டும் வருகின்றாய்,
கைகொட்டித்தான் சிரிக்கின்றாய்!
நனவில் நானும் நானும்தான்,
நாளைவரும் எனும் நம்பிக்கைதான்,
கனவில் வந்த கண்மணியே,
நனவில் வரவும் தயங்குவதேன்?

நீ ...
தொலைந்து போயிருந்தால்
தேடி இருப்பேன்,
இறந்து போயிருந்தால்
வாடிப்போயிருப்பேன்,
இன்னமும் பிறக்காத
என் மகளே!

உன்னை உறங்கவைக்கத்தான்
தாலாட்டெல்லாம் பயின்றுவிட்டேன்
உன் முகம் பார்த்துப் பசியாற
பட்டினியாக இருக்கின்றேன்
எந்தன்கவலை புரியாமல்
எதற்கு இந்தகண்ணாமூச்சி!

கள்ளிப் பாலுக்கஞ்சித் தான்
காத தூரம் போனாயோ?
காலம் மாறிவிட்டதடி.
கண் கலங்க வேண்டாமடி,
கருவில் உருவாய் வருவாயடி
காத்திருக்கிறது
இந்தத் தாய் மடி!!
மேலும் படிக்க... "கருவில் உருவாய் வருவாயடி!"

Tuesday, February 24, 2009

Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)


.








மில்ஸ் அண்ட் பூன் படிக்காமல் டீன் ஏஜைத்தாண்டினவங்க யாராவது இருக்கமுடியுமா!
அதனால புக்பத்தி இப்போ ஒண்ணும் சொல்லப்போறதில்ல!

விஷயம் என்னன்னா 1908ம் ஆண்டு தொடங்கின மில்ஸ் அண்ட் பூன் பதிப்பகம் இப்போ இந்தியால சென்னைல தனது கிளையைத்தொடங்கி இருக்காம்!

இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதுகிற திறமைசாலியான எழுத்தாளர்களுக்கு வலை வீசிட்டு இருக்காம்!

முதல்ல இவங்க நாவல்களை பதிப்பிக்க முடிவு செய்தப்போ எழுத்தாளர்கள்கிட்ட செக்சியா நாவல்களை அனுப்பும்படி கேட்டுட்டதும் ஆயிரக்கணக்கான நாவல்கள் வந்து குவிஞ்சுதாம்!

ஆனா விஷய கனத்துடன்(அதெல்லாம் எனன்னு கேக்கக்கூடாது:)) ஆறுநாவல்களே தேறிச்சாம்!

இதுல என்ன ப்யூட்டீன்னா 75% பெண்கள் அந்தமாதிரி விஷயங்களை எழுதி இருந்தாங்களாம் அந்த நாளிலேயே!!!

சோபியா கோலி என்கிற இங்கிலாந்து அம்மணி இருளிலிருந்து அம்புகள்(Arrows From the Dark) அப்படீன்னு எழுதின நாவல் முதல் தகுதி பெற்றது.

ஆபாசமே இல்ல நாவல்ல ஆனா காமரசம் மட்டுமேநிறைய! அப்டீன்னு வாசகர்கள் அந்தக் கதையைபடிச்சி வரவேற்று சொன்னாங்களாம்!

இன்னிக்கு இளைய தலைமுறையினர் எல்லார் கையிலும் செல்போன் மாதிரி அப்போ இங்கிலாந்துல அவங்க கைல மில்ஸ் அண்ட் பூன் புத்தகம் இருக்குமாம்

இவங்கதான் படிக்றாங்கன்னுபார்த்தா நடுத்தர வயதானவங்க எல்லாருமே விரும்பிப்படிக்கிறதை பதிப்பாளர் கண்டுட்டார்.

அதனால் தேவை அதிகமாகிப்போக, அதை பூர்த்திசெய்யறது சிரமமாகிவிட ....ஆனால் வருமானம்மட்டும் உயர்ந்திட்டே போனதால சிரமம் ஒண்ணும் பெருசா தெரியலையாம்!

இந்தமாதிரி எழுதப்பலரைக்கேட்டுக்கொள்ள, சுவாரஸ்யமா பலரும் எழுதித்தந்தனராம்!

லிலியன் வாரன் என்னும் எழுத்தாளர் 3 வெவ்வேறு பெயர்ல எழுதித்தள்ளி இருந்திருக்காரு!
நம்மூர்ல எழுத்தாளர்கள் சிலர் பத்து புனைபெயர்ல கூட எழுதறாங்க அதனால நமக்கு இது
அதிசியம் இல்லதான்!


உலகத்தின் முக்கியமான நாடுகளில் எல்லாம் பதிப்பகத்தைதொடங்கின மில்ண் அண்ட் பூன் இந்தியாக்கு வந்து சிலவருஷங்கள் ஆகுது.

ஆனாலும் தமிழ்நாட்டுதலைநகருக்கு சமீபமாத்தான் நுழைஞ்சிருக்கு

தமிழ் மண்ணில் நடமாடும் கதாபாத்திரங்களைவைத்து ஆபாசம் இல்லாமல் ஆனால் சுவாரஸ்யமாக கிளுகிளுப்பாக வாசகர்களைகிறங்கடிக்கிறமாதிரி -தமிழ்ல இல்ல , கவனிங்க ஆங்கிலத்துல - எழுதும் ஆற்றலுடையவர்கள் தமிழ்நாட்லகிடைப்பாங்கன்னு கடைவிரிச்சிக்காத்திருக்கு.

மில்ஸ் அண்ட் பூன் பதிபப்கத்தாரைகவர்கிறமாதிரி யாரும் எழுதித் தந்தீஙகன்னா மிகபெரியவாசகர்வட்டம் மட்டுமல்ல உங்களுக்கு,மிக அதிக இலக்கங்களுடன் எழுதப்பட்ட செல்லுபடியாகக்கூடிய காசோலையும் காத்திருக்கு!



யாருங்க ரெடி? !
மேலும் படிக்க... "Mills And Boon , 100!(நூறாவது ஆண்டில் மில்ஸ் அண்ட் பூன்!)"

Monday, February 23, 2009

அன்பே சிவம்!







அன்பும் சிவமும் வேறென்பார் அறிவிலார்
அன்பேசிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே


என்பார் திருமூலர்.

அவற்றை நான் அனுபவிக்கும் முன்பாக எல்லாவற்றுக்கும் மூலகாரணமாக இருக்கிற இறைவனின் கருணையைக்காண்போம்

ஆதிகாலத்தில் ஜனகாதி முனிவர்கள் சிவபிரானை சந்தித்து ஒரு முக்கிய சந்தேகத்துக்கு விடை கேட்டனர்.

அதாவது ஆன்மாக்கள் இறைவனின் திருவடியை அடைய சரியான வழி எது என்பதில் எங்களுக்குள் சர்ச்சை இருக்கிறது தாங்கள்தான் அதனை விளக்க வேண்டும்
என்றனர்

அப்போது சிவபிரான் ஒரு மரத்தடியில் அமர்ந்து யோக நிலையில் மௌனமாக வலக்கை விரல்களால் அடையாளம் காட்டினார்.

இந்த சிவ ஸ்வரூபத்தில்தான் அவர் தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

அவர் காட்டிய அடையாளம் என்னதெரியுமா
அதுவே சின்முத்திரை!

சிவாலயங்களில் சின்முத்திரையுடன் கூடிய தட்சிணாமுர்த்தியை நாம் காணலாம். அவர் காட்டும் சின்முத்திரை என்பது
கட்டைவிரலில் ஆள்காட்டிவிரல் வளைத்து ஒரு வளையம் போல இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்கள் மேல் நோக்கி நிமிர்ந்திருக்கும்.

எல்லாம் நம்கைக்குள்ளே என்று பெரியவர்கள் சொல்வது இதைத்தான்!


கட்டைவிரல் என்பது கடவுள் அது எந்தக்கடவுளாக இருந்தாலும் சரி
ஆள்காட்டிவிரல் என்பது ஆன்மா
அதாவது ஆன்மாவைத் தாங்கி இருக்கிற மனிதன் ஏதாவது ஒருபிறவியில் இறைவனது திருவடியை அடைய வேண்டும். அதனால்தான் ஆன்மாவுக்கு அடையாளமான ஆட்காட்டிவிரல்
வளைந்து கட்டைவிரலோடு இணைந்திருக்கிற சின்முத்திரைக்காட்சி.

ஆனால் நமது விரல் அமைப்பில் கட்டைவிரல் தனித்து நிற்கிறது ஆள்காட்டிவிரல் மற்ற மூன்றுவிரலக்ளோடு இணைந்திருக்கிறது. அதாவது இறைவனோடு(கட்டைவிரல்) இணையாமல் இருக்கிறது.

மனிதனுக்கு உலக வாழ்க்கை என்ற ஆசையைக்காட்டி கடவுளைப்பற்றி சிந்திக்க விடாமல் தடுத்துக்கொண்டிருப்பதுமூன்றுவிரல்கள்தான்.

அதாவது ஆணவம் தலைக்கனம் ஈகோ என்பவைகள்( எல்லாம் ஒரே அம்சம்தான்!)

ஓர் அறிஞர் சொன்னார்..

திறந்தே கிடக்கும் கோயிலுக்குள் ஆட்களே இருப்பதில்லை, மூடியே இருக்கும் சிறைச்சாலைக்குள் எப்போதும் ஆட்கள் இருக்கிறார்கள்.


தீப்பெட்டியும் தீக்குச்சியும் ஒருநாள்பேசிக்கொண்டதாம்..

நாம் இருவரும் உரசிக்கொள்கிறோம் ஆனால் நான்மட்டுமே தீப்பிடிக்கக்காரணம் என்ன என்றுகேட்டதாம் தீக்குச்சி

அதற்கு தீப்பெட்டி சொல்லியதாம்..

உன் தலைக்கனம்தான் காரணம் உன்னை இத்தனை நாள் பத்திரமாய் வைத்திருந்த என்னை நீ வெளியே வந்ததும் உரசுகிறாயே பாதுகாததவர்களைப் பதம் பார்த்தால் அழிவுதான் வரும்!


ஆகவே நம்மிடம் அகங்காரம் ஒழிய வேண்டும்
கிறிஸ்துவ மதத்தில் சிலுவைஅதைத்தான் சொல்கிறதாம் ஆங்கில \ஐ\ Iஅதாவது நான் இந்த அகந்தைபோகவேண்டுமானால் க்ராஸ்(+) செய்யவேண்டும் ஆணவம் அழிதலே சிலுவையின் அடையாளம்

இஸ்லாம்மததிலும் நான் செய்கிறேன் என்று ஆணவத்தோடு பேசக்கூடாது இன்ஷா அல்லா என்றுதான் சொல்லவேண்டும்!

நாம் அனைவரும் அன்பினால் ஒருமைப்படுவோம்!
மேலும் படிக்க... "அன்பே சிவம்!"

ஈசன் திருநாமம்!





பல்லவி

இமயம் செல்ல வேண்டும்-அதற்கு
சமயம் வந்திடுமா


அனுபல்லவி

உமையவள் நாதனை உண்மைப் பரம்பொருளை
இமைப்பொழுதேனும் கண்டு இன்னல் தொலைத்திடவே-(இமயம்)

சரணம்

ஆசைகளை அறுத்திட்டு அமைதியாய் வாழ்ந்தாலும்
ஓசைப்படாமல் ஒன்றன்பின் ஒன்றாய்தொடர்கிறதே
ஈசன் திருநாமம் இசைந்தே சொல்லிடவே
நேசம் மிகுந்த நெஞ்சம் ஏங்கித்துடித்திடுமே -எனவே(இமயம்)




http://www.gabcast.com/casts/6004/episodes/1235281571.mp3

(இந்தச்சுட்டியில் நான் எழுதிய இந்தப்பாடல்,என் குரலிலேயே(பாம்பேஜெய்ஸ்ரீ அல்லது மகாநதி ஷோபனா பாடினால் கண்டிப்பா இது நன்றாகவே இருந்திருக்கும்) வருகிறது!! பெஹாக் ராகத்தில்தான் ஆரம்பித்தேன் சரணத்தில் சற்றே அது ஜகா வாங்கிவிட்டது (ஜஹாக்:))மன்னிக்கவும்!)
மேலும் படிக்க... "ஈசன் திருநாமம்!"

Sunday, February 22, 2009

ஈசனே சிவனே போற்றி!










நீரினை சிரசில் கொண்டு

நெருப்பினை கையில் கொண்டு

பாரினில் பக்தர்தம்மை

பாசமுடனே காக்கும்


ஈசனே சிவனே போற்றி!

இறைவா உன் திருத்தாள்போற்றி!


வாசமாய் வாழ்க்கை மாறிட

வணங்குவோம் சிவனின் பாதம்




சிவம் என்று சொல்லும்போதே

சிந்தையது தெளிவு பெறும்

அவன் கருணைகங்கை

ஆறாகப் பாய்ந்துவரும்

நினைவெலாம் சிவமயம்

நித்தியமென்றாகிவிட்டால்

கனவிலும் எமபயமில்லை

கருத்தினில் இதனைக்கொள்வோம்!


அன்பிற்குமறுபெயராய்

அகிலத்தை ஆளுபவன்

என்புக்கு உள்கடந்துமனத்தில்

ஏகாந்தமாய் இருக்கின்றவன்

உருவமாய் உள்ளவனே

உள்ளத்தில் உறைவதை

உணர்ந்தபின் தாழ்வில்லை

உமாமகேசுவரனின்

கருணைக்கு ஏது எல்லை!
மேலும் படிக்க... "ஈசனே சிவனே போற்றி!"

Sunday, February 15, 2009

சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!

பின்லாந்து நாட்ல ஒரு கார் திருடு போயிடிச்சாம்
அது ஊரின் ஒதுக்குப்புறத்துல கண்டெடுக்கப்பட்டதாம்


யார் திருடி இங்க விட்ருப்பாங்கன்னு ஆராய்ச்சிபண்ணாங்களாம் அப்ப
காருக்குள்ள ஒரு கொசு சுத்திட்டு இருந்ததாம்.


லபக்னு அதப்பிடிச்சி அது கடித்த அல்லது குடித்த ரத்தம் எந்த நபருதுன்னு
டி என் ஏ ஆய்வு நடத்தினாங்களாம்.


ஒருபழைய கார்திருடனின் ரத்தத்தோட அது ஒத்துப்போகவும் அவனைப்பிடிச்சி
உள்ளபோட்டாங்களாம்..
\
ஆனா அவனோ காரைதான் திருடவேஇல்ல லிஃப்ட் கேட்டுத்தான் வந்தேன்னு ரீல்
விட்டுட்டே இருந்தானாம்!


இதுலிருந்து என்ன தெரியுது நமக்கு, சிறுகொசுவும் துப்புதுலக்க உதவும்!
ரைட்டா!
மேலும் படிக்க... "சிறுகொசுவும் துப்பு துலக்க உதவும்!"

இளமை!புதுமை!

ஸ்ரீனிவாஸ்மூர்த்தி மஞ்சுநாத் அஷாக்!


இவர்கள் மூவரும் கன்னட தூர்தர்ஷன்- நம்ம பொதிகைமாதிரி -, சந்தனா எனும்
சானலில் செய்தி வாசிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.


சரி இதுல என்னபுதுமை, ரிஷான்ஷெரீஃப் மாதிரி வித்தியாசமா செய்தி தரவேண்டாமான்னு
கேக்கறீங்களா!


புதுமை மட்டுமில்ல மிகவும் வியப்பான செய்திகூட இது!


ஆமாம் இவர்கள்மூவருமே பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் பிரெய்ல்முறையில்
பட்டம்படித்து வரும் இருபது வயது இளைஞர்கள்.


இதில் மேலும் புதுமை என்னவென்றால்....
பிரெய்ல்முறையை அறிமுகப்படுத்திய லூயிபிரெய்லின் பிறந்த நாளான ஜனவரி நான்காம்
தேதி தான் இவர்கள் சந்தனா சேனலில் பணியில் சேர்ந்தனர்!
மேலும் படிக்க... "இளமை!புதுமை!"

Saturday, February 14, 2009

நீயும், நானும்!

நீ முதலில் பேசுவாய் என நானும்
நான் முதலில்பேசுவேன் எனநீயும்
காத்திருந்த போதில்
அலைகள் பேசிப்போயின.
மவுனத்திரையுடன்
ஓரங்கநாடகம்
மணல்வெளிஅறியும்
மர்ம சூட்சுமம்!
மேலும் படிக்க... "நீயும், நானும்!"

காதல்வந்ததும், காதல்வந்ததும்...!





காதல்!

இந்த மூன்றெழுத்து சொல்லுக்குத்தான் எத்தனை வலிமை !

காதல் என்பது என்ன?

பருவத்தில் வருவதா இல்லைஇல்லை.. காதலுக்கு ஜாதி இல்லை மதமும் இல்லை என்பதுபோல வயதும் இல்லைதான் போலும். எந்த வயதிலும் வருகின்ற ஒரு உன்னதமான உணர்வு காதல் எனலாமா?

சென்ற வருடம் வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் THE NATURE OF THINGS என்னும் நிகழ்ச்சியை காட்டும்போது காதல் ஒரு மனோவியாதி என்பதை விஞ்ஞான ரீதியாக விளக்கினார்கள்.

ஒருவர் காதல் எனும் வலையில் விழுந்துவிட்டால் அவர் உலகத்தைப் பார்க்கும் கோணமே மாறிவிடுவதாக அந்த ஆராய்ச்சி கூறியது.

காதல் மலர்ந்தால் அதன் தாக்கம் ஆட்கொண்டவர்களை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறதென்பதை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்.

காதலுக்காக தியாகங்கள் நடந்தகதை பல உண்டு.

காதலை இழக்க மனமின்றி தற்கொலைக்கு முயன்றவர்களின் சரித்திரம் அதிகம்.
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போலவே பாவை தெரியுதடி என்று பாரதியின் கண்ணம்மா என் காதலி பாடலில் வருவதுபோல,
காணுமிடமெங்கும் காதலனின் அல்லது காதலியின் தோற்றமே காதல் வசப்படவருக்கு ஏற்படுகிறது.

கண்டதும் காதல் ,காணாமலேயே இணையம்மூலம் காதல், நட்பாய் ஆரம்பித்து நேசத்தின் நெருக்கம் அதிகமாகி விட்ட நிலையில் மாறிய காதல், பரவசமன ஒரு தருணத்தில் நெஞ்சில் சட்டென மலர்ந்த காதல் ,அறிவின் மயக்கத்தில் புற அழகினைமறந்து அக அழகில் நாட்டம் கொள்ளூம் அதிசியக் காதல், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நெஞ்சை நெகிழவைக்கும் நிகழ்ச்சியில் மனதைப் பறிகொடுக்க அதில் மலர்ந்த
காதல், சிறுவயதுமுதலே உடன் பழகிய உறவுக்காதல்.......இப்படி காதலில் பலரகம் உண்டு.

காதல்வந்ததும் காளையர்க்கும் கன்னியர்க்கும் பிரிவில் கணம் யுகமாவதும், பார்த்ததும் பரவசமாவதும் இயல்பு.

நவீன யுகத்தில் காதல் தூது விட எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன.

காதலினால் மானிடர்க்கு இன்பமுண்டாம் என்கிறார்கள் கவிஞர்களும். ஆதலினால் காதல் செய்வீர்!

காதல், ஒரு வண்ணத்துப்பூச்சி .எப்போது எந்தமலரின்மீது வந்து அமரும் என்று யாருக்குத்தெரியும்?

ஆனாலும் காதலுக்கும், காதலிக்கும் நெஞ்சத்திற்குமாய் காத்திருப்பது சுகம்தானே?
மேலும் படிக்க... "காதல்வந்ததும், காதல்வந்ததும்...!"

Friday, February 13, 2009

பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!




என்ன தம்பிராகவ்! ரொம்ப டல்லா இருக்கீங்களா ஆபீஸ்ல ஆணி அதிகமோ! சூடா காஃபி ஒண்ணு வெள்ளி டம்ளர்ல நுரைததும்ப ஸ்ட்ராங்கா \மய்யா\ ஹோட்டல் போய் அடிக்கவேணாம் !இப்பவே கேளுங்க பைரவி ராகம்! உடனடி சுறுசுறுப்புக்கு பைரவி ராகம் பெஸ்ட்!

என்னாச்சு மித்ரா உனக்கு ரத்தம்கொதிக்குதா அதுவும் இந்த டீன் ஏஜ்லயே தப்பாச்சே !அடடா ரத்தக்கொதிப்பை அடக்க அசாவேரி ராகம் உதவும்மா!


யாருக்காவது வீரதீரரசம் வேணுமா கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க ஹிந்தோளராகத்தை! இது மூளையின் ஞாபகசக்தியையும் கத்திமுனைமாதிரி கூராக்கிடுமாம்!

அஞ்சுகம்பாட்டிக்கு வாதநோயாமே பாவம் தீரதர்பாரி ராகம் கேக்க சொல்லணும் அவங்கள

கேஆர் எஸ் ! தலைவலியா உங்களுக்கு(எல்லாம் என் பதிவுகள் ஏதாவது படிச்சதால்தான் இருக்கும்! ஒரே ஸாரிடோன் தலைவலி நீக்கிடுமேன்னு டிவி விளம்பரம்பார்த்தாலும் போகலையா அப்ப என்ன பண்ணுங்க சாரங்கா ராகம்ல ஏதாவது பாட்லைக்கேளுங்க...

பொதுவா காலைல பூபாளம் பகலில் மத்யமாவதி மாலையில் வசந்தான்னு நம் முன்னோர்கள் இன்னன்ன நேரத்துக்கு இன்னன்ன மனநிலைக்கு இன்னன்ன ராகம்னு
பெரியபட்டியலே வச்சிருக்காங்க

பல்லாயிரக்கணக்கான திரைப்படங்களில்கூட அழகான ராகங்கள் பொதிஞ்சி இருப்பதால் நமக்கு வேண்டிய மனநிலைகளைத்தருது இல்லையா!

இசைப்பயணம் வழியா தியான நிலைக்குபோயி நம் நோய்களைப்போக்கிக்கலாமாம்!

இந்த உலகவாழ்க்கைல இன்பமும் துன்பமும் மாறிமாறிவந்துட்டே தான் இருக்கு இதுக்கு இசை ஒரு மருந்துன்னு விஞ்ஞான உலகமும் அடிச்சி சொல்லுது !விஞ்ஞானிகள் இப்போது பெயர் சூட்டி உள்ள(Binaural beats) இசைக்குள் ஏராளமாய் இருக்காம்!

எப்படீன்னா நம்ம மூளை இருக்கில்லையா அதனோட அலைகளின் அதிர்வெண்கள் நம்ம மனசு நிலைக்கு ஏத்த மாதிரி மாறிட்டே இருக்குமாம்.ஆராய்ச்சிகள்மூலமா சிலவிதமான ராக தாளங்களைக்கேக்கறப்போ மூளை மிகவும் ஓய்வான நிலையை அடையுது என்கிறதை விஞ்ஞானிகள் இப்போ,உறுதியா சொல்றாங்க...பத்து ஹெர்ட்ஸ்(hertz) அதிர்வெண் இருந்தாபோதும் மூளை அமைதியா இருக்கும் இசைதரும் இந்த அதிர்வெண் ஒருமாமருந்துன்னா இந்த வேகயுகத்துல அதுமிகையே இல்லைங்க

இந்த இசையையே தொடர்ந்துகேட்டா அதுஅடுத்த உயர்ந்த நிகையான ஆல்ஃபா நிலைக்கு உயர்த்திடுதாம்

1897- 1967 காலகட்டத்துல வாழ்ந்த பிரபல ஹிந்துஸ்தானி பாடகர் ஓம்கார்நாத் தாகூர் ஒருமுறை சர்வாதிகாரி முசோலினி கேட்டுட்டபடி அவருடைய தூக்கம்வராதவியாதி இன்சோம்னியாக்கு , பூரியா(இது ஹிந்துஸ்தானி பெயர்.இதுக்கு கர்னாடிக்ல என்னன்னு யாராவது சொன்னா உதவியா இருக்கும்)
ராகத்தை அவர் இசைக்க அரைமணில ஆழ்ந்த உறக்கத்துக்குப்போன முசோலினி இவர்கிட்ட(தூங்கி எழுந்துதான்!) இசைநுணுக்கங்களை கேட்டு அறிஞ்சாராம்!

ராமசரிதமானசை இருபத்தி ஐந்து வருடங்கள்தினமும் ஓதிய இசைவாணரான இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்ததோடு இவர்மறைவுக்குபிறகு தபால்தலையும் வெளியிட்டது நம்ம இந்திய அரசு.

சிகாகோல ஒருடாக்டர் , பேரு, டி ப்ரைன்சங்(பேரே வயலின்ல டங் குனு இழுக்குறமாதிரி இருக்கில்ல)
தன் பிரமாதமான த்வனிகளை வச்சி பலநோயாளிகளை குணப்படுத்தி இருக்காராம்!

ஈதல்(மற்றவர்களுக்குக்கொடுப்பது) இசைபடவாழ்தல்(புகழோடுவாழ்தல்) என்பார்கள்.

இசையோடு வாழ்தலும் நம் மனசையும் உடலையும் ஃப்ரெஷா வைக்கிறது என்கிறது உண்மைதான்.

பதிவப்படிச்சி,பிறகு எனக்கு இசைவாதானே பின்னூட்டத்துல சொல்லப்போறீங்க! (இதெல்லாம் ஓவரா ...ஒகே ஸ்டாப் பண்ணிட்றேன்!!

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்கமாட்டாயா!

இந்தப்பாட்டு நினவுக்குவருதா

ஆனா யாழ் என்கிறகருவிதான் இப்பவும் இருக்கா,தெரியவில்லை, குறளில் தான் எப்பவும் இருக்கு!(குழலினிது யாழினிது....)
மேலும் படிக்க... "பகலில் பத்மாவதியில்ல மத்யமாவதி!மாலையில் வசந்தா!"

Wednesday, February 11, 2009

இரவுவானம்!(கவிதை)






மேகத்திரள்கள்
எழுகின்ற அலைகள்!


நட்சத்திரங்களோ
ஆழ்கடல்முத்துக்கள்!

பிறைநிலாதான்
கவிழும் படகு!

சாயம் இழக்கா
சமுத்திர வர்ணம்!

தலைகீழ்கடல்தான்
இரவுவானம்!
மேலும் படிக்க... "இரவுவானம்!(கவிதை)"

Sunday, February 08, 2009

இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!

திருமுருக கிருபானந்தவாரிசுவாமிகள் அவர்தான ஒருசமயம் நாகையில் சைவசமயத்தையும் நாயன்மார்கள் மகிமையைப்பற்றியும் பேசிய சொற்பொழிவினிடையே

திரு நீறு நெற்றியில் இட்டார் தாழ்ந்தார்
திருநீறு நெற்றியில் இடாதார் வாழ்ந்தார்
என்று சொல்லிமுடித்தார்.

கூட்டம் அப்படியே ஸ்தம்பித்துவிட்டதாம்.

என்ன இவர் இப்படிமுன்னுக்குப்பின்னாகப்பேசுகிறாரே இவ்வளவு நேரம் சிவபெருமான் பெருமையை திருநீறு மகிமையைக்கூறியவரின் வாயால் இப்படி எதற்கு அபத்தமாய் வருகிறது?

முணுமுணுத்தனர் பலர்

திருவாரியாரும் சிறிதுநேரம் கூட்டத்தினரை நோக்கி அமைதியாகவே வீற்றிருந்தார்
பிறகு,

திருநீறு நெற்றியில் இட்டு, யார் தாழ்ந்தார்?
திருநீறு நெற்றியில் இடாது, யார் வாழ்ந்தார்
?

பதில் இல்லை என்பதுதான்!’

என்று முடித்த

வாரியாரின் சிரிப்பு ஒலியோடு கூட்டத்தினரின் கைத்தட்டல் ஒலியும் சேர்ந்துகொள்ள அரங்கம் அதிர்ந்தது!
மேலும் படிக்க... "இட்டார் தாழ்ந்தார், இடாதார் வாழ்ந்தார்!"

Sunday, February 01, 2009

பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!

பட்டம் கொடுத்திருக்கும் இந்தப்பட்டாம்பூச்சிபற்றி நிறைய சொல்லலாம்!

அதற்க்கென்றே எழுத இருக்கும் தனிபதிவில் அவைகளை விளக்கறேன் .

இப்போ முதல்ல கனடா நண்பர் அனுப்பிய புகழ்பெற்ற வண்ணத்துப்பூச்சி வளாகத்திலிருந்து(WINGS OF PARADISE) எடுத்த சில புகைப்படங்கள் இங்கே உங்கள்பார்வைக்கு..









என்ன பார்த்தீங்களா அழகா இருக்கு இல்லையா?

கண்கொட்டாமல் நாம் பலமணிநேரம் பார்த்துமயங்குவது பட்டாம்பூச்சியின் பட்டு உடலைத்தானே?


சரி இங்க இருக்ற பட்டாம்பூச்சி.....


இது எனக்கு இப்போ கிடச்சிருக்கும் பட்டம்!! பட்டாம்பூச்சிப்பதிவர்விருது!





o Butterfly! o Butterfly! ஏன் விரித்தாய் சிறகை...

இனிமையான இந்தப்பாடலும் ஒரு பழையபாட்டு பூப்பூவா பறந்துபோகும் பட்டுப்பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது அது யார் கொடுத்த சொக்கா வும் தான் இப்போ நினைவுக்கு வருகிறது!


அன்புச்சகோதரர் ஜீவா வெங்கட்ராமன் எனக்கு இப்போது பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்கிறார்!முதலில் நன்றி அவருக்கு. விருது கொடுக்கவும் மனம் வேண்டுமே!

பட்டாம்பூச்சிக்கு வண்ணத்துப்பூச்சின்னும் சொல்வாங்க இல்லையா?

பட்டாம்பூச்சின்னாலே பல நினைவுகள் நம்முள் சிறகடிக்கிறது!

பூச்சிகளில் அழகானது இது! இறைவனின் படைப்பில் பட்டாம்பூச்சிக்குமட்டுமே தனிகவனம் எனத்தோன்றுகிறது! மெல்லியஅதன் சிறகுகளில் வண்ணங்களை சேர்த்து அனுப்பிய இறைவனின் கைவண்ணம் கண்டுகளிக்கவேண்டிய ஒன்று.

சி்ன்ன வயசில் தோட்டத்துச்செடிகளில் இலைகளில் மலர்களில் வந்து அமரும்பட்டாம்பூச்சியை ஓசைப்படாமல் நெருங்கி அதன் சிறகுகளை விரல்களில் சிறைபிடிக்காத சிறுவர்சிறுமியர்கள் யார்!

கைக்குஅகப்படாமல் காற்றில்பறக்கும் பட்டாம்பூச்சி மலரில் அம்ர்ந்தால் ஓர் அழகு! காற்றில் பறந்தால் ஓர் அழகு! மென்மையான பூக்களுக்காகவே இந்த ஜந்துவையும் மென்மையாகப்படைத்தானோ இறைவன்? பின்னே பூக்களின் மீது தைரியமாய் அமரும் பெருமை வண்னத்துப்பூச்சிக்குமட்டுமேதான் உண்டு! இதன் அமர்வில் பூக்களுக்கும் காயமில்லை!

வண்ணத்துப்பூச்சியின் வரவுக்குக்காத்திருக்கும் மலர்களே அதிகம், சிலமலர்களுக்குத்தெரியவே தெரியாது, கறுப்புக்காலர்வைத்தபழுப்புசட்டைபோட்டுக்கொண்டு நேற்றுவந்த தன்னிடம் அளவளாவி தேன்குடித்துச்சென்ற வண்ணத்துப்பூச்சி இன்றைக்கு வேறு ஒருமலரை நாடிப்போய்விட்டது என்று தெரியாமல் காத்திருக்கும், பாவம்!

குழந்தைகளின் கண் இமைகள் பலநேரங்களில் பட்டாம்பூச்சியாய் காட்சி அளிக்கும் பார்த்திருக்கிறீகளா?காதலைச் சொல்லவரும்போது இதயம் பட்டாம்பூச்சியாய் அடித்துக்கொள்ளும் இல்லையா?!



்வீணைமேதை சிட்டிபாபுவின் கதனகுதூகலராகத்தில் ஒருபாடலுண்டு அதுக்கு பட்டர்ஃப்ளை டான்ஸ் என்று சாட்டீன் துணில சிறகுகள் கட்டிக்கொண்டு எட்டு சிறுமியராய் சேர்ந்து எட்டுவண்னத்துப்பூச்சிகளாய் பள்ளி நாட்களில் நடனம் ஆடியது நினவு வருகிறது!

கோலம் போடுவதில் இந்த பட்டாம்பூச்சிகோலம் மிக எளிதா போட்டுடலாம்! நாலுபுள்ளி நாலுவரிசைல அழகான பட்டாம்பூச்சி கோலம் ரெடி!

சரி..இப்போ......

இந்தப்பட்டாம்பூச்சிப் பதிவர் விருதினை நான் மூணுபேருக்குத்தரணுமாம்!

நிறையபேரு ஏற்கனவே வாங்கிட்டதா தெரிகிறது!ஆனாலும் நான் இவங்கமூணுபேருக்குக்கொடுக்கத்தான் போறேன் ஏற்கனவே கிடைச்சிருந்தாலும் கிடைக்கலேன்னாலும் நான் கொடுக்கறத இவங்க ஏத்துப்பாங்கன்னு தைரியத்துல!

என்னை பெற்ற தாயார்( http://srivaradharajan.blogspot.com/) என்ற வலைத்தளம் வைத்திருக்கும் என் அன்புத்தம்பியும், சற்றே குறும்பான இளைஞனும்,வரத்ராஜபக்தனுமான யமுனேஸ்வரத்துறைவனான ராகவ் அவர்களுக்கு இந்தப்பட்டாம் பூச்சிப்பட்டத்தையும்

அடுத்து
திரு அண்ணாகண்ணன் (http://annakannan.blogspot.com/) எனும் எண்ண இயலாத பெருமைகொண்ட தமிழ்ப்பாவலர் புலவர்
சிஃபிதள ஆசிரியர் இளமையிலேயே முதிர்ந்த ஞானம் கொண்ட நல்நண்பர் அவர்களுக்கும் பட்டம் தரப்போறேன்!

கடைசியா என் அன்புத்தோழி சுவாதி- மைத்துளியாய்(http://my-thulikal.blogspot.com/) தன் வலைதளத்தில் தமிழ்க்கடலை வைத்திருக்கிறார்கள். பிரச்சினைகளையும் புன்முறுவலால் வெல்லும் திறன்கொண்டவர்! நான் செய்து இன்னும் சாப்பிட்டுப்பார்க்காத இணையப்புகழ்மைபா எனும் மைசூர்பாக்கின் மீதுமட்டும்
தீராக்காதல்(பகை?:) கொண்டவர் ....அவருக்கும் பட்டாம்பூச்சிவிருதை அளிக்கிறேன்!

இவங்க மூவரும் என்ன செய்யணும்னா....

இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)



ரொம்ப நன்றி பட்டம்கொடுத்த ஜீவா வெங்கட்ராமனுக்கு!
வாழ்த்துகள் இதை என்னிடமிருந்து பெறப்போகும் மற்றமூவருக்கும்!



விடைபெற்று பறக்கும்

’பட்டர்ஃப்ளை’ஜா!
மேலும் படிக்க... "பூப்பூவா பறந்துபோகும் பட்டாம்பூச்சி அக்கா!"

Friday, January 23, 2009

நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!



1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 ஆம் தேதி பிறந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.. 2009ஜனவரி 23ஆம் தேதியுடன் அவர் வயது 113 ஆகிறது.

பாரத தேசத்தின் மறக்க முடியாத தேசீயவிடுதலைப் போராட்ட வீரரும் தலைவரும் ஆவார், நேதாஜி.

அவரைப்பற்றி சுருக்கமாய் சில செய்திகள்.



இளவயதிலேயே தேசப்பற்றும் மிகுந்த அறிவாற்றலும் கொண்டு இருந்தார் நேதாஜி. சிறு வயதிலேயே சுவாமி விவேகானந்தரின் உரைகளால் ஈர்க்கப்பட்டார்.

மெட்ரிகுலேஷன் தேர்வில் வங்க மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேறினார்.
கல்கட்டாவில் உள்ள ஸ்காட்டிஷ் சர்சஸ் கல்லூரியில் தத்துவவியல் படிப்பில் முதல் வகுப்பில் வந்து, பெற்றோரின் ஆசைக்கினங்க Indian Civil Services (ICS) தேர்வில் பங்கு கொள்ள 1919 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு சென்றார். தேர்வில் நான்காவதாக தேர்ச்சி பெற்றார்

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலை அவரை வெகுவாக பாதித்தது. அதனால் தனது அலுவல் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு 1921 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார்.


இந்தியா திரும்பிய நேதாஜி, மகாத்மாவின் தலைமையில் தனது சுதந்திர போராட்டத்தை துவக்கினார். அதன் முதல் படியாக இந்திய தேசிய காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார்.


காந்திஜியின் அஹிம்சை தத்துவங்களை ஏற்காமல் சிறிது காலத்திலேயே கல்கட்டா சென்று அங்கே சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் தலைமையின் கீழ் தனது போராட்டத்தினை மேற்கொண்டார். பின்னர் அவரையே தனது ஆசானாகவும் வழி காட்டியாகவும் ஏற்றுக் கொண்டார்.

1921 ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வரவேற்பு ஏற்பாடுகளை கண்டித்து போராடி சிறை சென்றார். சிறையில் தனது ஆசான் சித்திரஞ்சன் தாஸ் அவர்களுக்கு பணிவிடை செய்வதை வழக்கமாக்கிக் கொண்டார்.


1924 ஆம் ஆண்டு கல்கட்டா கார்ப்பரேஷனின் CEO வாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மாத சம்பளம் 3000 ரூபாய். ஆனால் அவர் 1500 ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டார். அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் மீண்டும் தீவிரவாதத்தை பரப்பிய குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1925 ஆம் ஆண்டு நடந்த சித்திரஞ்சன் தாஸ் அவர்களின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது.


1930 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டார். அதனால் மீண்டும் சிறை சென்றார். . பகத் சிங்கின் முடிவால் நாடே கொதித்துக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சிறையில் இறந்தால் கலவரம் ஏற்படும் என்று பயந்தது ஆங்கிலேய அரசு. அதன் தொடர்ச்சியாக 1932 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நாடு கடத்தப் பட்டார்.


. 1932 முதல் 1936 வரை அவர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயனம் செய்து பல தலைவர்களை சந்தித்தார். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், முஸோலினி (இத்தாலி), ஃபெல்டர் (ஜெர்மணி), வலேரா (ஐர்லாந்து) மற்றும் ரோமா ரோலான்ட் (ஃபிரான்ஸ்). அவர் ஹிட்லரையும் சந்தித்ததாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.



இதற்கிடையில், 1936 ஆம் ஆண்டு அவர் தனது இந்திய வருகையை அறிவித்து விட்டு, பம்பாய் வந்தார். அதற்காக அவர் மீண்டும் கைது செய்யப் பட்டார்.



1937 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப் பட்டார். அதை தொடர்ந்து 1938 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரானார். அந்நிலையில், அவர் முஸ்ஸோலினி போன்ற தலைவர்களை ஐரோப்பாவில் சந்தித்ததை அறிந்த காந்திஜி, அவர் காங்கிரஸின் தலைவராக இருப்பதை விரும்பவில்லை. அதற்காக 1939 ஆம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் நேதாஜியை எதிர்த்து போட்டி இட நேரு மற்றும் ராஜேந்திர பிரஸாத் இருவரின் விருப்பத்தையும் கேட்டார். அவர்கள் இருவரும் அதற்கு இனங்காததால், நேதாஜியை எதிர்த்து போட்டி இட திரு. பட்டாபி சித்தராமையாவை நிறுத்தினார். ஆனால் நேதாஜி 1580 - 1371 என்ற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திஜி "நேதாஜியின் வெற்றி எனது தோல்வி" என்று அறிவித்தார்.


.


இந்நிலையில் 1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது. இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணங்களின் தலைமைகளை கலந்து ஆலோசிக்காமல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை போரில் ஈடுபடுத்தினர். இதற்கு நேதாஜி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.


இதைத் தொடர்ந்து அவர் இந்திய மக்களுக்கு போருக்கு ஆயத்தமாக வேண்டுமென ஒரு கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கைக்கு பல லட்சம் மக்கள் திரண்டெழுந்தனர். அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தால் தப்பிக்க முடியாது என்று உணர்ந்த நேதாஜி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது உடல்நிலை பாதிப்படைந்தது. உலக யுத்தம் நடக்கும் நேரத்தில், நேதாஜி இறந்து இந்தியாவில் உள் நாட்டு கலவரம் நடப்பதை விரும்பாத ஆங்கிலேயர்கள், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். 1941 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் தேதி அவரும் அவரது உறவினர் திரு. குமார் போஸும் காவலில் இருந்து தப்பினர். அவர் காவலில் இருந்து தப்பித்த செய்தியே அரசுக்கு, ஜனவரி 26 ஆம் தேதி தான் தெரிந்தது.


(

காவலிலிருந்து தப்பிய நேதாஜி, அஃப்கானிஸ்தான் பழங்குடியினரை போல் வேடம் திரித்து காபுல் வழியாக அஃப்கானிஸ்தானை கடந்து ரஷ்யா சென்றார். மாஸ்கோ சென்ற அவர் ரஷ்ய தலைவர்களை சந்தித்து பேசினார். ஆனால் அவர் எதிர் பார்த்த உதவியை ரஷ்ய தலைவர்கள் அளிக்கவில்லை. .

இந்நிலையில், நேதாஜி இறந்து விட்டார் என்ற வதந்தியை BBC இந்தியா முழுதும் பரப்பியது. அதை இந்திய மக்களும் நம்பினர்.

அப்பொழுது நேதாஜி அவர்களே ஜெர்மனியிலிருந்து அதாவது1941 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் ஜெர்மனியில் இருந்து உருவாக்கிய சுதந்திர இந்திய வானொலியில் உரையாற்றினார். "நான் இன்றும் உயிருடன் இருக்கும் சுபாஷ் சந்திர போஸ் பேசுகிறேன்." என்று தொடங்கும் அந்த உரையில் அவர், ஜெர்மணியில் இருந்தே சுதந்திர இந்தியாவை பிரகடனம் செய்தார். டாகூரின் "ஜன கன மன" கீதத்தை தேசிய பாடலாகவும், ஹிந்தியை தேசிய மொழியாகவும், காந்திஜியை தேச தந்தையாகவும் அறிவித்தார். "ஜெய் ஹிந்த்" என்ற பதத்தை முதன் முதலில் பயன் படுத்தியதும் அவர் தான்.

இந்நிலையில் நேதாஜி உயிரோடு இருப்பதை அவரது உரை மூலம் அறிந்து கொண்ட ஆங்கிலேயர்கள் அவரை கொலை செய்யுமாறு உளவுத்துரைக்கு ஆணை பிறப்பித்தனர்.

1943 ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தினைத் தொடர்ந்து 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அதனால் மனம் வருந்திய நேதாஜி வங்காள மக்களுக்கு பர்மிய அரிசியை தர முன் வந்தார். ஆனால் ஆங்கிலேய அரசு அதை ஏற்க மறுத்தது. மேலும் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து வந்த உணவுப் பொருட்களை இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் நேதாஜியின் கோபம் பல மடங்கானது.


1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பர்மாவை கைப்பற்றியது ஜப்பானிய இராணுவம். அதே ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை இரங்கூனுக்கு மாற்றினார் நேதாஜி. அதைத் தொடர்ந்து கோஹிமாவிலும், இம்பாலிலும் நடந்த போரில் ஜப்பானியர்களுக்கு பெரும் தோல்வி ஏற்பட்டது. அதனால் அவர்கள் இந்திய தேசிய இராணுவ வீரர்களுக்கு அளித்த உதவியையும் ஊதியத்தையும் நிறுத்திக் கொண்டனர்.

ஜப்பானும் இந்திய தேசிய இராணுவத்திற்கு தணம், யுத்த தளவாடம் போன்றவற்றை தருவதுடன், யுத்தத்தில் கைப்பற்றப்படும் இந்திய நாட்டு பகுதிகளை நேதாஜியிடம் ஒப்படைக்க உருதி தந்தனர். 85000 வீரர்கள் இருந்த அந்த இராணுவத்தில், கேப்டன் லட்சுமியின் தலைமையில் தனி பெண்கள் பிரிவு படையும் இருந்தது.




அதே சமயத்தில் (ஆங்கிலேய) இந்திய இராணுவத்திலிருந்து பலர் இந்திய தேசிய இராணுவத்திற்கு வருவார்கள் என்ற நேதாஜியின் நம்பிக்கைக்கு மாற்றாக இந்திய தேசிய இராணுவத்திலிருந்து பலர் வெளியேறினர். இதனால் அவர் வீரர்களை ஊக்குவிக்க பல உரைகளை ஆற்ற வேண்டி இருந்தது.


அவரது உரைகளில் மிகவும் 1944 ஆம் ஆண்டு பர்மாவில் இந்திய தேசிய இராணுவத்தினருக்கு அவர் ஆற்றிய "உதிரம்(ரத்தம்) அளியுங்கள் சுதந்திரம் அளிக்கிறேன்" என்ற உரை. நெகிழ்வானது.

"நமக்கு ஒரே ஒரு கனவு மட்டுமே இருக்க வேண்டும். அது மரணத்தைத் தழுவும் கனவு; ..ஆம் இந்தியா வாழ நாம் இறப்பது அவசியம். " என்றார் உணர்ச்சிவசப்பட...


.



அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் நேதாஜிக்கு சாதகமாக இல்லை. ஜெர்மனி ஜப்பான் மற்றும் இத்தாலியின் தொடர் தோல்விகள் நேதாஜியை மிகவும் சிந்திக்க வைத்தன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 14 ஆம் தேதி ஜப்பான் சரணடைந்தது. உலகம் முழுவதும் 6 கோடி மக்களின் உயிரைக் குடித்த பிறகு இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.


ஜப்பான் சரணடைந்தாலும் தான் சரணடைய மறுத்து, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு 16 ஆம் தேதி பாங்காக் சென்றார். 17 ஆம் தேதி அங்கிருந்து சாய்கோன் சென்றார். அவருடன் அபிபூர் ரெஹ்மான், ப்ரீதம் சிங், அபித் ஹாஸன், S.A. ஐயர், தேப்நாத் தாஸ் ஆகியோர் உடனிருந்தனர். அங்கிருந்து தாய்பேய் செல்ல இருந்த விமானத்தில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே இருப்பதாகவும், அவர் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மட்டும் தாய்பேய் சென்றார். அங்கிருந்து டாய்ரன் செல்ல திட்டமிட்ட அவர் 17 ஆம் தேதி காலை 5 மணிக்கு இரு பெரிய பெட்டிகளில் தங்கத்துடன் மேலும் 10 ஜப்பானியர்களுடன் விமானத்தில் ஏறினார். விமானம் கிளம்பி உயரே பறந்து 30 அடி உயரம் சென்றதும் வெடித்து சிதறியது. அவரது மரணத்தை பற்றி பலர் பலவித கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.



சொல்லுதல் யார்க்கும்எளிதாம் அரிது சொல்லியவண்ணம் செயல்

என்பார்கள். நேதாஜி சொல்லியதை செய்தார்.



இவ்வளவு தியாகங்களையும் செயற்கறிய செயல்களையும் செய்தவரை, அன்னாரது பிறந்த நாளிலாவது நினைத்து அவரது ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம்.

ஜெய்ஹிந்த்!
மேலும் படிக்க... "நினைவில் நிற்கும் சுதந்திரப்போராட்டவீரருக்கு இன்றுபிறந்த நாள்!"

திருக்குறளில் தமிழ் இல்லை!

தமிழில் எழுதப்பட்ட திருவள்ளுவரின் குறளில் தமிழ் என்கிற வார்த்தை எங்கேயும் இல்லை .

உயிர் எழுத்துக்களில் ஔ என்கிற உயிரெழுத்தை ஒருகுறளிலும் வள்ளுவர் பயன்படுத்தவே இல்லை

1 என்கிற எண்ணை 11 இடத்திலயும்


2 என்கிற எண்ணை 10இடத்திலேயும்

4 --------11 இடத்திலேயும்

5 ------ --- 14 இடத்திலேயும்

6 ------ ---- ஒரே ஒருஇடத்திலேயும்

7 --------------- ஏழுதடவையும் வருகிறது.

8 ,10 , 100 ,1000 ஆகியஎண்கள் தலா ஒருதடவைமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோடியை வள்ளுவர் 7 இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்.


(இதை ஒருமுறை என் தோழி என்கிட்ட சொல்லி உடனே இங்க இட்டுவிட்டேன்.:))
மேலும் படிக்க... "திருக்குறளில் தமிழ் இல்லை!"

Thursday, January 22, 2009

பளிங்கினால் ஒரு மாளிகை!


உலகின் அதிசியம்! காதலர்களின் கனவு மாளிகை ! பாரதத்தின் பெருமைச்சின்னம்!

இப்படி தாஜ்மஹால் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இத்தனை வருடங்களாகியும் தாஜ்மகால் வெண்ணிறப்பதுமையாகவே இருப்பது எப்படி என்று ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா!

நம்வீட்டிலும் சலவைக்கற்கள் உபயோகித்துக்கட்டுகிறோமே சிலவருடங்களில் அவை வெண்மைப்பொலிவு இழந்து விடுகிறதே, ஆனால் தாஜ்மஹால் மட்டும் அப்படியே இருக்கிறதே எனறுதோன்றுகிறதா...!

காரணம் இருக்கிறது அதற்கு!

தாஜ்மஹாலு்க்கு ஷாஜகான் பயன்படுத்திய சலவைக்கற்களே வேறு. அது மேக்ரான் என்ற உயர்ந்தபிரிவைச்சேர்ந்தவை எந்த ஒரு அமிலமும் இதனைக் கறுப்பாக்கமுடியாது,சேதப்படுத்தமுடியாது. இந்தவகைக்கற்களின்மேல்படியும் அழுக்குகள்பிசுபசுப்பாகி ஒட்டிக்கொள்ளாது.

இன்னொரு முக்கியமான விஷயம், நாம்பயன்படுத்தும் கற்கள் சந்திரனின் வெளிச்சத்தில்மிளிர்கிறது.
ஆனால் தாஜ்மகாலில்பயன்படுத்திய மேக்ரான் கற்களுக்கு நிலா வெளிச்சத்தின்மீது அபாரக்காதல! அதனால் பௌர்ணமிநாட்களில் தாஜ்மஹாலைப் பார்த்தால்,
பாலில் அபிஷேகம் செய்ததுபோலக் காட்சி அளிக்கிறது! அத்ற்கு இந்தக்ககற்களின் காதலே காரணம்!

ஆக்ராவில் இன்னும் எத்தனை ரசாயன தொழிற்சாலைவந்தாலும் சரி, தாஜ்மகால் கறுக்காது.

என்றும் மாறாத வெண்மையின் சின்னம் அது!


( இதுவரை நீங்க வாசித்தது, கேட்ட ஒரு தகவல்தான்)

சரி ஒரு சந்தேகம் இப்போ அந்த மேக்ரான் கற்கள் புழக்கத்தில்இல்லையா அதன் விலை அதிகமா அந்தகற்களைவைத்துக்கட்டப்பட்ட வேற கட்டிடங்களே கிடையாதா உலகில்!

விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க ப்ளீஸ்!
மேலும் படிக்க... "பளிங்கினால் ஒரு மாளிகை!"

நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!



வானம் என்ன நிறம்னு கேட்டா நீல நிறம்னு உடனே சொல்றோம்
ஆனா உண்மைல வானத்துக்கு எந்த நிறமும் இல்லையாம்!

வானம் ஒரு வெற்றுவெளிதான். பின்ன எப்படி அங்க நீல நிறம்வந்ததுன்னு

கேட்டதுக்கு, ஒரு
எழுத்தாள நண்பர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்க தெரிவிக்கறேன்!

சூரியனிடமிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்களில் எல்லா நிறங்களும் இருக்கும் அதுல இந்த நீலமும் ஐக்கியம்.

இதுல ஆச்சர்யம் என்னன்னா சூரியனின் ஒளிக்கதிர்களில் உள்ள எல்லா நிறங்களுக்குமே அதன் ஒளியலைகளின் நீளம் அதிகம். நீலநிறத்தின் ஒளி அலைகள் மட்டும் நீளம் குறைவானவை.

பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமா இருந்தா அவை நம்பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும்.

நீல நிறத்தின் ஒளி அலைகள் குறைவாக இருப்பதால் அது நம் கண்களுக்குள் மாட்டிக்கொள்கிறது.

வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.

காலைமாலை சூரிய உதயம் அஸ்தமனம்போதுமட்டும் அந்தப்பகுதி சிவப்பாக தெரியக்காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகளின் நீளம் அப்போ மட்டும் குறைவதுதானாம்!
மேலும் படிக்க... "நீலநிறம்! வானுக்கும்கடலுக்கும் நீலநிறம் காரணம் ஏன்...!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.