Social Icons

Pages

Monday, November 19, 2012

நெஞ்சில் உரமுமின்றி....





”ஒரு வழியா நம்ம ரங்கப்ரசாத்துக்கும் பொண்ணு கிடச்சி கல்யாணம் நிச்சயம் ஆகிடிச்சிப்பா...    இவன் இப்படியே நாலைஞ்சிவருஷம் இருந்து அப்புறம் கல்யாண்ம் செஞ்சிட்டுக் குழந்தையைப் பெத்துக்கிட்டா அந்தக்குழந்தை, இவனை ’அப்பா‘ன்னு சொல்லாமல் ’தாத்தா’ன்னு தான் சொல்லிடும்”
ராம்குமார், ரங்கப்ரசாத்தை பார்த்தபடி இப்படி உரக்க சொன்னதும் கூடி இருந்த அவன் நண்பர்கள் எல்லாரும் கையிலிருந்த கண்ணாடி டம்ளரை டீபாய்மீதுவைத்துவிட்டு ஏதோ ஜோக்கைக்கேட்டதுபோல கை தட்டி சிரித்தார்கள்.
”டேய்,டேய் என்னங்கடா உங்களுக்கெல்லாம் என் வீட்டுமொட்டைமாடி ல பேச்சிலர் பார்ட்டி கொடுக்கிற இந்த பொன்னான நாளில், என்னைப்போயி இப்படி கிண்டல் அடிக்கறிங்களே! நான் என்னடா செய்யறது, உங்களுக்கெல்லாம் பொறுப்பா உங்க அப்பா அம்மா பொண்ணு பாத்து கல்யாணம் செய்துவச்சிட்டாங்க..எனக்கு அப்பாவும் இல்ல அம்மாவும் இல்ல லவ் செய்ய எந்தப்பொண்ணும் கிடைக்கல...வரவர பொண்ணு கிடைக்கறதே பெரும்பாடா இருக்கு ...தூரத்து உறவுக்காரங்க . அப்படி இப்படி முப்பத்தி ஆறு வயசுல எனக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துட்டாங்க...”
ரங்க்ரசாத் வெட்கமும் தயக்கமுமாய் பேசிக்கொண்டிருக்கும்போது மோகனின் செல்போன் குரல்கொடுத்தது.முதல் நாள் மழையில் தவறுதலாய் செல்போனை நனைத்துவிட்டதால் ரிப்பேருக்குக்கொடுத்தது அன்று மாலைதான் கைக்கு வந்திருந்தது.
..
“ யாருடா இந்த அர்த்தராத்திரில? உன் ஒய்ஃப் ஜனனிதான் கீழே ஹால்ல மத்த லேடீஸ்கூட டிவி பார்த்துட்டு இருக்காங்க... ..அடிக்கடி போன் செய்ற நாங்க
நாலு பேரும் இங்க இருக்கோம், வேற யாருடா உனக்கு இந்தமும்பைல இந்த நேரத்துல போன் செய்யறது?” கண்ணடித்தான் விட்டல்.
செல்போனை எடுத்து திரையில் ’வாசுதேவன்’ என்ற பெயரைப் பார்த்ததும் முகம் சுளித்த மோகன்,” அட சட்’ என்று சலித்துக்கொண்டான்..
”யாருடா?”
” ஒரு ரம்பகேஸ் .... திருச்சில என் சில அப்பாவோட ஜிக்ரி தோஸ்த்து. பேரு வாசுதேவன் ...அப்பப்போ போனைப்போட்டு அறுக்கும் ...இந்தாளுக்கெல்லாம்
எங்கப்பா என் போன் நம்பரைக் கொடுத்திருக்கார்.. “ பல்லைக் கடித்தான் மோகன்.
அடித்து ஓய்ந்ததும் பாண்ட்பாக்கெட்டில் செல்போனை திருப்பிப் போடுவதற்குள் மறுபடி அழைப்பு வரவும் எடுத்தான். அவரேதான்.
“ அதே ஆளாடா மோகன்? பேசாம போனை சைலண்ட்மோட்ல போடு”
”அதான் பண்ணனும்” என்று மோகன் கடுகடுத்தபோது மாடிப்படி ஏறி அங்கு வந்த அவன் மகன் ஆதர்ஷ்,’அப்பா” என்று கூவினான்.
”என்னடா மணி பதினொண்ணாகுது, இன்னும் நீ தூங்கலையா?”மோகன் தனது ஐந்துவயது மகனை தூ்க்கி எடுத்துக்கொண்டபடி கேட்டான்.
“ எனக்கு தூக்கம் வரல.. மம்மியும் ஆண்டீஸ் எல்லாரும் தூங்கிட்டாங்க.. நிகிலும் வர்ஷாவும் ஆளுக்கொரு செல்போன்ல கேம் விளையாடறாங்க...அம்மாகிட்ட
கேட்டா திட்டுவாங்க அதான் உங்ககிட்ட கேக்கவந்தேன்..அப்பா நானும் விளையாடணும்ப்பா ப்ளிஸ்பா”
”நல்லதாப்போச்சி, நானே இப்போ போனை எங்கடா வைக்கலாம்னு நினச்சிட்டு இருந்தேன்,,, இந்தா ஐபோன் உனக்குத்தான் போன் கால் எதுவும் வந்தால்
அட்டென்ட் பண்ணாத...நான் அப்புறம் மிஸ்டு கால்ல பாத்துக்கறேன் என்ன?
“சரிப்பா”
செல்போனை வாங்கிக் கொண்டு ஆதர்ஷ் திரும்பிப்போனதும் மொட்டைமாடியில் பார்ட்டி களைகட்ட ஆரம்பித்தது.
மூன்றுமணிக்கு எல்லோரும் லேசான தள்ளாட்டத்துடன் கீழே இறங்கிவந்தனர்.
ரங்கப்ரசாத் கேட்டுக்கொண்டபடி எல்லாரும் அவன் வீட்டிலேயே ஹாலில் உருள ஆரம்பித்தார்கள்.
ஜனனி தூக்கக் கலக்கத்தில் மகனிடமிருந்து மோகனின் செல்போனை வாங்கி தலைகாணிக்கு அடியில் வைத்தாள்.
நிதானமாக காலை எழுந்துகொண்டு ஒருவருக்கொருவர்‘ குட்மார்னிங் ! ஹாவ் எ குட் டே!’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பல்லைத்தேய்த்து
காபியைக்குடித்தபடி அரட்டைஅடித்துமுடித்து்க்கிளம்பும்போது மணி ஒன்பதாகிவிட்டது.
செல்போனை உயிர்ப்பித்து வந்த குறுஞ்செய்திகளைப்பார்த்த மோகன் வீறிட்டான்.
”ஐய்யெயொ அப்பா நேத்து மதியமே செத்துப்போயிட்டாராம்”
ஜனனி திடுக்கிட்டு நின்றாள்.
ஆதர்ஷ், ‘தாத்தாவா? திருச்சி தாத்தாவா செத்துப்போயிட்டார்?இனிமே எனக்கு யாருப்பா தெனாலிராமன் கதை சொல்வாங்க ஊஉஊ” என்று அழ
ஆரம்பித்தான்.
“என்ன நேத்து பகலே இறந்துட்டாரா ? மோகன் போனைப்போட்டுக்கேளு சீக்கிரம்” நண்பர்கள் கவலையுடன் பரபரத்தார்கள்.
வாசுதேவனுக்கு போன் செய்தான் மோகன்.
” ஹலோ?என்னாச்சு மாமா ஏன் எனக்கு உடனே சொல்லல்ல?” துக்கமும் கோபமுமாய் கேட்டான்.
“நேத்து மதியத்திலேருந்து பலதடவை முயற்சி செய்தேன்ப்பா..போன் ஸ்விச்டு ஆஃப்னு வந்தது...”
“ஐயோ போன் ரிப்பேர் அதான், சரி , சாயந்திரம் ஏழுமணிபோல சரியாத்தானே இருந்தது அப்போ செய்யக்கூடாதா?”
”ஏழுமணிக்கு உன் வீட்டுல உறவுக்காரங்க எல்லாரையும் ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்டுன்னு கொண்டுவிடப்போகவேண்டி இருந்ததுப்பா.....அப்புறம்
பத்துமணிக்கு மேலன்னு நினைக்கிறேன் மூணுவாட்டி செய்தேனே கட் ஆகிட்டதுப்பா....கடைசில எஸ் எம் எஸ் கொடுத்தேன்பா...”
” ஓ ஆமாம்....இப்போ நினைவுக்கு வருது அப்போ நான் ஆபீஸ் மீட்டிங்க்ல இருந்தேன் அதான் எடுக்க முடியல...சரி டெட்பாடி இருக்கில்ல நான் பொறப்பட்டு
வரேன் இப்போவே, ஆனா ஜனனி ஆதர்ஷ் வரது டவுட்டு..ஆதர்ஷுக்கு எக்சாம் டைம் இப்போ”:
” மோகன், ஒரு நிமிஷம் உன் அம்மா பேசணுமாம்” என்றார் எதிர்முனையில் வாசுதேவன்.
அம்மா என்றதும் மோகனுக்கு வியர்த்தது. அப்பா திருமலை சாது, அதிகம் பேசமாட்டார்.
எத்தனையோ தொழில் இருந்தும் தான் ஆசிரியப்பணியைமேற்கொண்டதை மட்டும் அடிக்கடி பெருமையாக சொல்லிக் கொள்வார்
’கல்வி என்பது ஆழ்வார் பேசுவதுபோல ஞான ஒளி இன்றுவரை அறிவியல் விளக்கமுடியாத ஒரு அதிசியம் தீபம் எப்படி தன்னில்குறையாமல் எப்படி மற்றொரு விளக்கிற்கு ’ஒளியைப்பரப்புகிறது என்று அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாய் இன்புறுகிச்செயும் கல்வி தான்தீபம் .அது தனக்கும் ஒளிகாட்டும் மற்றவர்க்கும் ஒளிகாட்டும் என்பார். அ்ம்மா தைரியசாலி. வீட்டில் முழுப்பொறுப்பும் அம்மாவுடையது. தவறுகளைச்சுட்டிக்காட்டத்தயங்கமாட்டாள். வைராக்கியமும் தன்னம்பிக்கையும் அம்மாவிற்கு அதிகம் என்பதை மோகன் அறிவான்.
”ஹலோ அம்,,, அம்மா” என்றபோது நா தழு தழுத்தது. சதைஆடியது.
”அட , அம்மா அப்பாவையும் நினைவில் இருக்காப்பா? இருந்தால் ஆறுமாசம் மு!ன்னாடி உங்கப்பா திடீர்னு ஸ்ட்ரோக்ல படுக்கைல விழுந்ததும்
வந்துபார்த்திருக்கலாமே? பாவம் கண்காணாத தூரம் ! விசாகிடைக்கணும் அதான் வரலை!. ஒருத்தர். உயிரோடு இருக்கிறபோது அவங்களைவிட்டு ஒதுங்கிப்போகிற உறவுகளை அவர் இறக்கிறபோது தொலைவில் தள்ளிடும் முகமுழிகூட கிடைக்கவிடாது தெரியுமா?”
மோகனின் அம்மா வசந்தா எதார்த்தமாகத்தான் கேட்டாள் மோகனுக்கு சுர்ரென கோபம் தலைக்கேறி விட்டது.
”அம்மா, இந்த நேரத்துல இது தேவையா? பம்பாய் வந்தது முதல் ஆபீஸ்ல கொள்ளையாய் வேலை.அதான் மாசாமாசம் சுளையா மூணாயிரம் ரூபா
அனுப்பறேனே ஒரு நாள் மறந்தாலும் வாசு மாமா போன் பண்ணிடுவாரே ? சரி சரி... நான் கிளம்பி வரேன் எப்படியாவது”
” ஆஹா!வந்து உன் பங்குக்கு சாம்பலைக்கரைச்சிடு...நம்ம ஊர் காவேரிலபோதும்பா.. கங்கைக்கெல்லாம் போயி சிரமப்டாதே என்ன?”
”என்னது சா..சாம்பலா ? அப்போ அப்பாவை தகனம் பண்ணியாச்சா?”
”ஆச்சு...உனக்கு தகவல் சொல்லத்தான் முடியவே இல்லையேப்பா? வாசு மாமாவுக்கு உனக்கு போன் பண்ணிப்பண்ணி விரலே தேஞ்சி போயிருக்கும்”
”அய்யோ அம்மா போன் தண்ணி பட்டு கெட்டுப்போயிருந்ததும்மா....நானே ஜனனி செல்லுலதான் மேனேஜ் பண்ணினேன் தெரியுமா?”
”அந்த செல் நம்பரை எங்களுக்கு நீயோ அவளோ கொடுக்கலையே! வேற எப்படி யாரைக்கொண்டு உனக்கு தகவல் சொல்றது?..மனம் போல மாங்கல்யம்!”
“என்னம்மா இப்ப போய் இடக்கா?”
”இயற்கைதானே இதுல இடக்கு எங்கப்பா வந்தது?”
”சரி நான் வரேன்”
திருச்சி ஏர்ப்போர்ட்டிலிரு்ந்து வாடகைக்காரில் உறையூருக்கு வந்தான். வீட்டிற்குள் நுழைந்ததும் கூச்சலிட்டான்.
”மூத்தபிள்ளை நான் வந்து கொள்ளிபோடணும்னு உங்களுக்குத்   தோண வேண்டாமா? ஐஸ் பெட்டில வச்சிருக்கவேண்டியதுதானே??”
“உனக்காக அந்தி சாயறவரைக்கும் காத்திருந்து தகவலும் கொடுக்க வழிதெரியாமல் தவிச்சி வேற வழி இல்லாம சின்னவனை விட்டு காரியத்தை முடிக்க வச்சேன்..பகலில் இறந்தவர்களை மூன்றரை மணி நேரம் வைத்திருக்கலாம் அதற்குமேல் வச்சிருந்தா இறந்தவர் இருந்தபோது செய்த
புண்ணியங்களுக்குப் பலன் இருக்காது. இறந்தவர்களின் இறுதிப்பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.என்கிறது தர்ம சாஸ்திரம்” அழுத்தமாய்  சொன்னாள் வசந்தா.
அம்மாவின் தீர்க்கமான குரல் மோகனை எரிச்சலூட்டியது”‘ஏம்மா உனக்கு அப்பா போன சோகமே கிடையாதா? என்னைக்கண்டதும் கட்டிண்டு அழுவாய்னு பார்த்தா தர்மம் சாஸ்த்திரம்னு பேசறே?”
“அதெல்லாம் சினிமா அம்மாக்கள் செய்யலாம்.எதார்த்தத்துல தங்களை தவிக்கவிட்டுட்டுப்போன பி்ள்ளைகளை நினைச்சி ஒவ்வொரு பெத்தவயிறும்
புழுவாய்த்துடிக்கும்,. உனக்கு நிஜமாவே பிரியம் இருந்தால் ரிடையர் ஆகி வீட்டோடு கிடக்கும் அப்பாவுக்கு ஒரு சிநேகிதனாய் துணைக்கு
இருந்திருக்கமாட்டியா? திடீர்னு பம்பாய் ஒருகோடி வேலை மாத்திண்டு போகத்தோணுமா? மூளை நோயால் பாதிக்கப்பட்டுதன்னாலே எதையுமே
 செய்துகொள்ள முடியாமல் கிடக்கும் உன் இருபத்திஆறுவயது தம்பியை இப்படி விட்டுப்போகத்தான் முடியுமா?அப்பாவை தன்னிடம் அழைத்துக்கொண்டது கடவுளின் விருப்பம். இன்னும் படுக்கையில் கிடந்து அவஸ்தைப்படவேண்டாம்னு அந்தக் கடவுள் தன் நிழலுக்குக்கூட்டிக்கொண்டதுக்கு நான் ஏன் அழணும்? ’அமரபதவி’ன்னா சும்மாவா? என்னடாது அம்மா இப்படிக்கேக்கறேனேன்னு நினைக்கிறியா? அடிப்படையில் அன்பும் ஆதரவும் கொண்டவள்தான்.
 ஆனால் .வாழ்வின் அமைப்பும் சிக்கல்களும் என்னை ரொம்பவே மாத்திட்டது.. இப்ப என்னைச் சுற்றி ஒரு கடினத்தோல். நத்தைக்கும் ஆமைக்கும் ஏன் கடுமையான/கெட்டியான மேல் கூடு? முள்ளம்பன்றி சிலிர்த்தால் ஏன் அதன் முட்கள் வெளிப்படுகின்றன அப்படித்தான்னு வைத்துக்கொள்”
”அம்மா.! உன்னைப்போல எனக்குப்பேசத்தெரியாது ஆனாலும். உனக்கு என்னிக்கும் தம்பி மேலதான் பாசம் அதான் அவனைவிட்டு கொள்ளிபோட
 வைச்சிருக்கே?”
“நான் பாசத்துக்கு முன்னுரிமை கொடுப்பதே இல்லை. அதில் வழுக்கிவிழுவது அபத்தம். அறிவுபூர்வமா சிந்திச்சதுல கடமை என்பதைத்தான் நான் மதிக்கறேன்.உன் அ்ப்பாவிற்கான என் கடமையை சரியா முடிச்சேன் ..உன்னைப்படிக்கவைச்சி கல்யாணம் செய்கிறவரைக்குமான என் கடனையும்  முடிச்சேன்.கடைசியாய் இப்படி மூளைவளர்ச்சி இல்லாத பையனை காப்பது என் கடமை.. ஸ்பாஸ்டிக் என்றால் ஒரு குணப்படுத்த முடியாத நோய்,அவர்களுக்கு ஆதரவான தேவைகள் இருக்கும் பட்சத்தில் நீண்ட நாட்கள் வாழ முடியும்..இந்த நோய் உனக்கு வந்தாலும் என்கடமையை செய்வேன்”
”சரி ....நீ புலம்பிக்கொண்டே இருக்கிறாய், நான் சாம்பலைக்கொண்டு காவேரில கரைச்சிட்டு பத்தாம் நாள் வரேன் ,என்ன?”
கொள்ளிபோட்டவன் கைலயே அதையும் செய்யவைப்பேன்... உனக்கு ஒழிஞ்சா திரும்பிவா”
”என்னம்மா கிண்டலா? எனக்கும் கடமை இருக்காதா?”
”ஆமாம்பா கல்யாணமான இந்த பத்து வருஷத்துல உன் கடமையைதான் நான் பார்த்திட்டுவரேனே உன் அப்பா ஒரு அப்பாவி வாயில்லாப்பூச்சி ,,பக்கவாதம்வந்து படுக்கையோட கிடந்தவரைபார்க்க வராமல் போன உன் கடமையைத்தான் கண்ணால் பார்த்தேனே... மாசாமாசம் அதுவும் வாசுமாமா போன்பண்ணி நினைவுபடுத்தினால் பாங்குக்கு பணம் அனுப்புவாய் கடனேன்னுதான்! கடமையின் நிறம் கருப்பு போல இருக்கு.
 கருப்பு ஒண்ணுதான் நிறம். மத்த எல்லா வண்ணமும் சாயம்தான்.. எதுவுமே அக்னில போட்டா கருத்துப் போயிட்றது இல்லயா.. ஆனா சாயம்
 கருத்துப்போறதுன்னு சொல்றதில்லையே.. வெளுத்துப் போறதுனு சொல்றா!.”
”அம்மா! ஓவரா பேசாதே. இனி உன்னையும் தம்பியையும் நான் தானே பார்த்துக்கணும்? ”
”எப்படிப் பார்த்துக்கொள்வாயப்பா? உன் பம்பாய் ஃப்ளாட் ரொம்ப நாகரீகமானவங்க வாழும் இடமாமே? அங்கே இந்த மூளை வளர்ச்சி இல்லாத தம்பியைக்கூட்டிட்டுப் போகமுடியாதுன்னு உன் பொண்டாட்டி சொல்லிட்டாளே அன்னிக்கே.?.அவளுக்கு எல்லாமே அழகாய் இருக்கணும்னு அடிக்கடி சொல்வா..அம்மாகூட இப்போ பழைய அழகில்லை, இனிபூவும்பொட்டும் போய் அசிங்கமாயிடுவேன். ஆனா நெஞ்சுல உரம் இருக்குப்பா... கணவனை இழந்த பெண்களுக்கு இது கொஞ்சம கூடுதலாகவே வந்துடும். அதனாலதான் புருஷன் போனாலும் தனி ஒருத்தியா குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிவிடுகிறாள் ஒரு பெண். அந்த நெஞ்சுரம் தான் பல எதிர்ப்புகளை தாங்கிக்கொள்ள உதவியா இருக்கு.. அப்பாவை நீ உயிரோட இருந்தப்போ வந்து பார்க்காததையும் நான் இப்போ குத்தமாசொல்லலை...உன் பாட்டியோடு இருந்த சமயத்தில், (அவருக்கு அப்போது 106 வயதுக்கு மேல்) சிவப்பெறும்பு அவரைக் கடித்துவிட்டது. மெல்ல கடிபட்ட
 இடத்தைத் தடவி, எறும்புக்கு மென்னி கின்னி முறிந்துவிடாமல் எடுத்துப் போட்டார். பிறகு சொன்னார். ‘வெய்ய காலம். சின்ன ஜீவன். அதென்ன பண்ணும் பாவம். எத்தயாவது பிடிச்சுண்டா தேவலாம்போல இருக்கோ என்னவோ...‘. அப்படித்தான் பிள்ளைகளின் அலட்சியத்தையும் பெத்தவங்க
 நினைக்கிறாங்கப்பா...“
வசந்தா நிதானம் இழக்காமல் இப்படிச்சொல்லி முடிக்கும் போது வக்கீல் உடையில் ஒரு இளைஞன் வீட்டிற்குள் நுழைந்தான்.
வாசுதேவன் தனது அறுபது வயதைக்கடந்த நிலையிலும் ஓட்டமாய் ஓடி அவனை வரவேற்றார்.
“வாப்பா மாதவா உன்னைத்தான் எதிர்பார்த்திட்டே இருக்கோம்.... ” என்றார் உற்சாகமாக..
“எங்க வாத்தியார் விஷயமாச்சே டிலே பண்ணுவேனா அங்கிள்? அவரால படிச்சி முன்னுக்குவந்த மாணவன்..இன்னிக்கு திருச்சில பிரபல வக்கீலா நான்
 இருக்கேன்னா அது திருமலைசார் அன்னிக்குப்போட்ட கல்விப்பிச்சை.“ என்று நெகிழ்ந்தான்.
வசந்தா அவனைப்பார்த்து புன்னகை செய்தபடி,” இப்படித்தாம்பா அன்னிக்கு அமெரிக்காலேருந்து சதீஷ்னு ஒரு பையன் வந்தான்...அவன் வந்தவேளை எங்கவாழ்க்கைலயும் வெளிச்சம் வந்துவிழுந்தது. அப்போ உங்க வாத்தியாருக்கு கைகால் சுவாதீனமாகத்தான் இருந்தது ..சதீஷ் ஆர்வமாய் தன் வாத்தியார் செய்யும் பூஜையையும் அன்னிக்குப்பார்த்தவன் சட்டுனு கண்மலர்ந்தான் அன்னிக்கு பூஜை த்தட்டில் இருந்த அந்த சாளகிராமங்கள் சில அவன் கண்ணில் பட்டதும், அவைகளைப்பற்றி அவன் பூரித்துச்சொன்னதும் அப்புறம் அந்தக்கல்லை கின்னஸுக்கு தெரியப்படுத்தியதும் எதிர்பாராமல் நடந்தவைகள்.. “ என்றாள் பெருமூச்சுவிட்டபடி.
.
”சதீஷால் திருமலைசாருக்குக்கிடைச்சது ஒரு கோடி ரூபாய்!
 
 World largest Ruby and Saphire weighing 2805 carats in original form, the worth was equal to U.S Defence budget.
 The Guenness Book of world records lists these gems as the largest gems in the world!
 
  ஆமாம் உலகிலேயே பெரிய அளவிலான மாணிக்கக்கல்லும் பச்சைமரகதக்கல்லும் என் ஆசானின் வீட்டில் பூஜை அறையில் வழிப்பாட்டுக்கற்களா இருந்து பூஜிக்கப்பட்டு வந்திருக்கு! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது எத்தனை நிதர்சனமான உண்மை! சதீஷ் விவரம் சொன்னதும் திருமலை சார் அதைக்கொடுக்க முன் வந்ததே எதிர்பாராததுதான்! ஆனா உயிலைப்படிச்சா
 காரணம் விளங்கிடும்!உடனே திருச்சி தில்லை நகர்ல அப்போ விலைக்கு வந்த வீட்டை வாங்கிப்போட்டுட்டார் .திருமலை சார். பிறகு ஒருநாள் என்னை
 வைத்துக்கொண்டு இரண்டு சாட்சிகளுடன் உயில் எழுதி வச்சிருக்கார்.. அதை வாசிக்கத்தான் வந்திருக்கிறேன்!” மாதவனபெருமையுடன் இப்படிச்சொன்னதும்  மோகன் பொறுக்கமுடியாமல் கேட்டுவிட்டான்,
”இவ்வளவு நடந்திருக்கு இந்தவீட்டின் மூத்தபையன்னு எனக்கு எதுவுமே சொல்லலையே! போகட்டும் உயிலையாவது என் முன்னாடி
 வாசிக்கறீங்களே அது போதும்..அப்பாவுக்குப்பெருந்தன்மை அதிகம்.. அவர் பாரபட்சமாக எல்லாம் நடந்திருக்கமாட்டார் தன் உயிலில்.” என்றான் உறுதியான குரலில்.
ஆனால் உயிலை மாதவன் வாசித்து முடித்ததும் முகம் வெளிறிப்போனவனாய்,” எ என்ன ? அந்த வீட்டை ஸ்பாஸ்டிக் சொசைட்டிக்கு எழுதி வச்சிட்டாரா?  மனசுல என்ன பெரிய பாரி வள்ளல்னு நினைப்பா? மும்பய்ல நான் ஒரு ஃப்ளாட் வாங்க நினச்சிருக்கேன் அதுக்காவது உதவி இருக்கக்கூடாதா? பிள்ளைகளை படிக்க வச்சா மட்டும்போதுமா சொத்து சுகம்னு சேர்த்து வைக்கணும்னு பெத்தவங்களுக்குத்தோணாதா? “என்று ஆவேசமாய் கூச்சல் போட்டுக்கொண்டே இருக்க, வீட்டைக்காலிபண்ணிக்கொண்டு சின்னப்பையனுடன் அந்த மாற்றுத்திறனாளிகளின் மையத்தில் நிரந்தரமாய் தங்கி சேவை செய்ய, வசந்தா ஆயத்தமானாள்.
*************************************************************************************************************************************************************************************************
 
 
மேலும் படிக்க... "நெஞ்சில் உரமுமின்றி...."

Wednesday, November 14, 2012

குழந்தைகள் தினக்கவிதை!






நல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும்
நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும்
உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும்
உத்தமராய் உலகினிலே திகழ்ந்திடவேண்டும்

இளமையிலே கல்விதனை  கற்றிடல் வேண்டும்
இன்முகத்துடனே பழக அறிந்திடல் வேண்டும்
தெளிவுடனே ஏடுகளைப்படித்திடல் வேண்டும்
தேர்ந்த கல்வி கொண்டபின்னும் அடங்கிடல் வேண்டும்

சொல்லும் செயலும் தூய்மையுடன் விளங்கிடல்வேண்டும்
சோர்வு அயர்வு சோம்பலுமே நீக்கிடல் வேண்டும்
கடமையதை தவறாமல் செய்திடல் வேண்டும்
காரியத்திலென்றும் நல்ல உறுதியும் வேண்டும்





வைகறையில்துயிலெழுந்து கொள்ளவேண்டும்
வாழும்வகைத்திட்டங்களை வகுத்திடல் வேண்டும்
மெய்வளர விளையாடித்தீர்த்திடவேண்டும்
மேன்மைமிகு கலைகளையும் கற்றிடல் வேண்டும்

இனிய சொல்லைமட்டும் நா இயம்பிடவேண்டும்
இயன்றவரை அடுத்தவர்க்கு உதவிட வேண்டும்
கனிவுகொண்ட நெஞ்சம்கடைசிவரை இருந்திடவேண்டும்
கருணை ஒளி கண்களிலே திகழ்ந்திடல் வேண்டும்

தாய் தந்தையேநம் தெய்வம் என உணர்ந்திடல் வேண்டும்
தாய்நாட்டின் சிறப்பதனை போற்றிட வேண்டும்
அறிவுதந்த ஆசானையே  வணங்கிடல் வேண்டும்
அன்பினாலே உலகம் தன்னை ஆளவும் வேண்டும்

நாடு நமது நாடு என்ற எண்ணம் வேண்டும்
நன்மையான செயல்கள் மட்டும் செய்திடல் வேண்டும்
ஒற்றுமைப்பயிரினையே வளர்த்திட வேண்டும்
ஒப்புயர்வற்றவர்களைச் சார்ந்திடவேண்டும்

நன்னெறிக்கு  ஒளிகொடுக்கும் வள்ளுவர்  வாக்கு- உயர்
ஞான ஒளி காட்டும் புத்தர் அன்புப்பெருக்கு
உள்ளம் கருணை நிலவும் காந்தி உண்மை விளக்கு
உணர்ந்து நடந்தால்  உண்டு பல நன்மை நமக்கு!
 
மேலும் படிக்க... "குழந்தைகள் தினக்கவிதை!"

Thursday, November 08, 2012

ஆணி முத்தே!



ஆனி(ணி) முத்தே*! என் அருமை அப்பாவே!
வானிலே யார் காண விரைந்தாய் நீ?

தேனினும் இன் தமிழில்
திகட்டாக்கவிதைதந்த
திருலோக சீதாராம் எனும் உன்
குருநாதரைக்காணவா அல்லது
வாழ்ந்திட்ட நாளெல்லாம்
தாழ்வில்லா தமிழுக்கு
சாரதியாய் திகழ்ந்திட்ட
பாரதியைப்பார்க்கப்போனாயா?

உலகத்துச்செய்திகளை எல்லாம்
ஊன்றிப்படித்து உடன்
உணர்வோடு பகிர்ந்து கொள்வாய்
ஒரு நாள் நீயே
செய்தியாவாய் என்று
நினைத்தே பார்க்கவில்லை அப்பா.

இளம் வயதில் உன் தோளில்
ஏறியது குடும்பச்சுமை
இயல்பாக ஏற்றுக்கொண்ட
உன் அதரத்தில்
இறக்கும் வரை
இருந்ததென்னவோ
மாறாத புன்னகை.

வாடிய மனிதருக்கெல்லாம்
வாய் வார்த்தையாலே
ஆறுதல் அளிப்பாய்
வாழ்க்கை அலுத்துவிட்டதாய்
ஒரு நாளும் நீ
வாய்விட்டு சொன்னதில்லை
பாழாய்ப்போன காலன்
பறித்துக்கொண்டானே உன்னை.

உன் ஆறடி உயரத்தில்
அழகிய வதனத்தில்
முத்துப்புன்னகையில்
கனிவான பேச்சினில்
காலனும் மயங்கினனோ
கவர்ந்துதான் போயினனோ?

யாரையும் தாழ்மைப்படுத்திப்
பேசாத நற்குணம் உனக்கு
எவரிடமும் குற்றம் காணா
குழந்தை உள்ளம் உனக்கு
பத்துவயதில்
நான் எழுதிய
சொத்தை ஜோக்கினை
மெத்தப்புகழ்ந்தாய்
நீ தந்த
ஊக்கத்தில்தான்
என் விரல்களுக்கும்
எழுதத்துணிவு வந்தது.

எழுத்துலகில் பிரவேசிக்கையில்
ஏஎஸ் ஆர் மகள் என்ற
அடையாளம் ஏற்றம் தந்தது

”செய் வனத்திருந்தச்செய்
செய்யும் தொழிலே தெய்வம்
அன்பினால் உலகை ஆள்”
இம்மூன்றும் உன் தாரக மந்திரம்
இவற்றை இனிக்கடைப்பிடிப்பதான
உறுதிமொழி தான் அப்பா
உன் மறைவிற்கு
நான் செய்யும்
உண்மையான அஞ்சலி.

********************

* ஆனிமுத்தே என்று ஆரம்பித்தமைக்குக்காரணம்முத்தான என்  அப்பா ஆனிமாதம் பிறந்து ஆனிமாதம் மறைந்தார் என்பதால் ஆ்ணி முத்து சிறப்பானது என்பதும் இன்னொரு காரணம்.

இன்றோடு என் தந்தை மறைந்து நான்கு மாதங்கள் ஆகின்றன.
மேலும் படிக்க... "ஆணி முத்தே!"

Monday, November 05, 2012

மனிதன் என்னும் புதினம்.

”ஒருவன் தனது மனசாட்சியை ஏமாற்றி வாழமுற்பட்டாலும் அவனது வாழ்வு முழுமைஅடைவதில்லை அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான் என்பதுதான் நிதர்சனமஇந்தக்கதையில் மைதிலி பூமா புவனா ஆகியோர் லஷ்மி சரஸ்வதி மற்றும் சக்தி ரூபமாக வலம் வருகின்றனர். நூலாசிரியர் 15நாவல்கள் 250சிறுகதைகள் நுற்றுக்கும்மேற்பட்ட வானொலிநாட்கங்கள் படைத்துள்ளார் அரவிந்தரிடமும் பாரதியிடமும் மட்டற்ற ஈடுபாடுகொண்டவர் ஆன்மிகத்தில் தோய்ந்தவர் இந்த மனிதன் வாசிப்பவர்களை பண்பட்ட மனி்தர்களாக ஆக்க பெரிதும் உதவி செய்யும் என்பது உறுதி.”


 
                                                                                                

இப்படி ஒரு அணிந்துரையுடன் அப்பாவின் நாவல் ’ மனிதன்’ அண்மையில்
திருமகள்பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது.. பல வருடங்கள் முன்பு விகடன் போட்டியில் பரிசு பெற்ற நாவல் .பலரின் இதயங்களை கொள்ளை கொண்ட புதினம்.!. விகடனுக்கு தந்தை சார்பில் நன்றியை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

 அப்பாஉயிரோடு இருக்கும்போதே இந்த ஆண்டு அவரது (ஜூன்19) பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ்கிஃப்டாக கொடுக்கவேண்டும் என என் சகோதரர்களும் கசின் பிரபல எழுத்தாளர்இந்திரா சௌந்தர்ராஜனும் ரகசியமாக இந்த முயற்சியில் ஈடுபட்டதை அப்பா ஒருநாள் கண்டுபிடித்துவிட்டார்! அவருக்கும் இனிய அதிர்ச்சி. மனிதன் நாவல்தான் அந்தநாளில் அவரை வெளி உலகிற்கு அதிகம் அடையாளம் காட்டிய நாவல். அது மறுபடியும்
புத்தகமாக வருவதில் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கோவை மெர்க்குரி பதிப்பகத்தார் முதலில் இதை அழகாக வெளியிட்டிருந்தனர்
பேராசிரியர் அ சீனிவாசராகவன் அவர்களின் ஆத்மார்த்தமான முன்னுரையுடன் நூல்வெளிவந்திருந்தது.

 1977ல் ஸ்ரீரங்கத்தில் காவிரியில் வந்தது பெருவெள்ளம்.
பொன்னிக்கு அன்று என்ன தோன்றியதோ ஊருக்குள் உற்சாகமாய் வளைய வந்தாள்.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது

என்பது ஔவை வாக்கு. ஆனால் அப்பாவின் மனிதன் நாவல் மற்றும் பல எழுத்துக்கள் கவிதைகள் அனைத்தையும் காவிரி அடித்துக்கொண்டுபோய்விட்டது. வீட்டிற்குள்புகுந்து அப்பாவின் அலமாரியைக்குடைந்து திரைக்கையால் அள்ளிக்கொண்டு அன்று அவள்
போனதில் அந்த மனிதன் நாவலும் அடக்கம். அதனாலே இந்த நூலை மறு பதிப்பாகவெளிக்கொணர என் சகோதரர்கள் முன்வந்தார்கள்.

புத்தகத்தின் முகப்பு அட்டைக்காகந்தமிழ்ப்பத்திரிகை உலகின்பிரபல ஓவியரைஅணுகிக்கேட்டபோது அவர் ஒப்புதல் தந்தார் ஆனால் சொன்ன நாளில் தரவில்லை.

அதற்குள் அப்பா ஒரு நாள் கீழே விழுந்து இடுப்பில் எலும்பு
முறிந்து ஆஸ்பித்திரியில் சேர்ந்தார்.ஆபரேஷன் நன்கு முடிந்ததும் அங்கே
படுத்தபடியே மனிதன் நாவலின் மறுபதிப்பைப்பற்றி மகிழ்வுடன்
பேசிக்கொண்டிருந்தார்.

அப்பா உடல்நலன் சரியாகி அவர்மீண்டும் நடப்பதற்குள் புத்தகம் வந்தால்
நல்லதென ஓவியரை மறுபடி அணுகி நிலைமையைக்கூறினோம். அவர் முடியாதென்றுசொல்லாமலேயே நாட்களைக்கடத்தினார். வேறுவழியின்றி அந்த யோசனையைக்கைவிட்டோம்.

எழுத்தாளரும் எனது ஒன்றுவிட்ட சகோதரருமான இந்திரா சௌந்தர்ர்ராஜன் அவர்களின்பெருமுயற்சியால் திருமகள் பதிப்பகம் மனிதன் எனும் புதினத்தை அண்மையில்வெளியிட்டுவிட்டது..


மனிதனைக் கையில்பெற மாமனிதரான என் தந்தைதான் இன்று உயிரோடு
இல்லை. ஜூலை8ம்தேதி அமரராகிப்போன அவரது ஆசையை அவரது புத்திரசெல்வங்களான நாங்கள் நிறைவேற்ற விரும்புகிறோம்.. ஆம் அவரது உன்னதக்காவியமான மனிதனைஉலகிற்கு கொண்டு செல்லப்போகிறோம்.

தமிழ்ஆர்வலர்களே! வாசிப்பில் நேசம் கொண்ட வாசகர்களே! நீங்கள் யாவரும் எனதுதந்தை திரு ஏஎஸ்ராகவன் அவர்களின் இந்த மனிதன் நாவலை வாசிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்

நூல் பற்றிய விவரங்கள்...

*மனிதன்.*
**
**
நாவலை எழுதியவர்... ஏஎஸ் ராகவன்
விலை 190ரூ(360 பக்கங்கள்)
திருமகள் நிலையம்..
,
சுகான்ஸ் அபார்ட்மெண்ட்ஸ்,

13 சிவப்ரகாசம் சாலை
தி நகர்
சென்னை 17

தொலைபேசி 24342899

பிகு..நாவலை  சற்று  சலுகை விலையில் பெற
எழுத்தாளரும் என் உடன்பிறப்புமான  வெங்கடேஷ்(ராஜரிஷி  எழுத்தாளர்)
என்பவரை  இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்  நன்றி
அலைபேசி எண்... 9176846599


--
 
மேலும் படிக்க... "மனிதன் என்னும் புதினம்."

Wednesday, October 24, 2012

அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!


 
 
 
 
 
 
 
 
 
வானச்சீலை!
 
நட்சத்திர மாலை!
 
சூரிய மோதிரம்!
 
பிறைச்சந்திரப்பொட்டு!
 
மின்னல் தண்டை!
 
அன்னை பராசக்திக்கு
 
அவனியே மண மேடை!
 
ஆழ்கடல் அலைகள்
 
இசை ஒலி எழுப்பும்,
 
மலைமேளந்தன்னை
 
காற்று வருடிப்போகும்!
 
காட்டுத்தீ சற்றே,
 
வேள்விக்குத்துணையாகும்!
 
நங்கையவள் கரந்தன்னை
 
நற்சகோதரன் நாரணன்
 
அண்ணல் சிவபெருமான்
 
பொன்கரந்தனில்இணைக்க
 
பூமாரிதனை தேவர்கள் தான் தூவ
 
கல்யாணம்தான் எங்கள்சக்திக்கு
 
காண்போர்க்கு மகிழ்ச்சிப்பெருக்கு!


(தினம் ஒரு தேவி துதியாக மகாளய அமாவாசை தினம்  ஆரம்பித்ததை அம்பிகை அருளால்  இன்று  முடிக்க இயன்றது. ..)

--


மேலும் படிக்க... "அன்னை பராசக்திக்கு அவனியே மணமேடை!"

Tuesday, October 23, 2012

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!





சங்கீதத்தின் உயிர்நாடியாக விளங்குவது வீணை. வீணையை உற்பத்தி செய்வதும் சரி, பயில்வதும் சரி கடினமானது. வீணை, ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் அதிபதியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் தவழும் உன்னத வாத்தியமாகும். தமிழ் இலக்கியங்களிலும், பண்டைய சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும், அதி முக்கிய வாத்தியமாக அன்றும், இன்றும் விளங்குவது வீணை தான்.
வீணை மிகவும் தொன்மை வாய்ந்தது. ஆன்மீகம் சார்ந்தது, வரலாற்றுப் பெருமைமிக்கது. இலங்கை மன்னன் இராவணன் வீணை வாசிப்பதில் உயர்ந்தவனாகவும்  அவனது வீணை இசையில் எல்லாம் வல்ல சிவபிரானே லயித்ததாகவும் புராணக்கதை கூறும்.
 
வீணா  வேணு வினோத  மண்டித கரா   என ராஜராஜேஸ்வரியைப்போற்றுகிறோம்.
வீணா வேணு மிருதங்க வாத்ய ரசிகாம் என்கிறார் மீனாக்ஷி பஞ்சரத்னத்தில் ஆதிசங்கரர்.
 
 
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள் என்று சரஸ்வதியை துதிக்கிறார் மகாகவி பாரதி.
 
 

இன்றும் திருவரங்கம் அரங்கன் கோயிலில் இரவு திருவரங்கனுக்கு ஏகாந்த வீணை இசை வாசிக்கப்படுகிறது.(வேறு கோவில்களிலும் இருக்கலாம்)
 
 
இன்று தமிழ் கலையுலகில் அரங்கத்தை அலங்கரிக்கும் அதி சிறப்பு வாத்தியங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ள வாத்தியமாக விளங்குவது வீணை…
 
 பலா மரமே இவ்விசைக் கருவியினை வடிவமைக்க பெரிதும் பயன்படுத்தப்படும் என்றாலும் ஒவ்வொரு வகையான வீணையைப் பொறுத்து வீணை  செய்யப்பயன்படுத்தப்படும் மரமும் மாறுபடுகிறது.. கலைவாணி சரஸ்வதிதேவியின் திருக்கரங்களில் காணப்படும் வீணையானது சரஸ்வதிவீணை           அல்லது இரகுநாத வீணை அல்லது தஞ்சாவூர் வீணையென்று அழைக்கப்படும். தஞ்சையை ஆண்ட மன்னனான இரகுநாத மன்னனின் காலத்தில் சிறப்புற வடிவமைக்கப்பட்ட வீணையே மேற் குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய வீணை இசைக் கருவியாகும். இது தவிர நடைமுறையில் பல வகைப்பட்ட வீணை இசைவாத்தியங்கள் இன்று வழக்கத்தில் இடம்பெற்ற போதும் பொதுப்படையில் மேலே குறிப்பிட்ட பெயர்களைத் தாங்கிய தஞ்சாவூர் வீணையே புழக்கத்திலும் தமிழரின் பாரம்பரிய நாரிசை வாத்தியமாகவும் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.
மேற்குறிப்பிடப்படும் வீணை ஆனது உற்பத்தி செய்யப்படும் இடத்தின் தன்மைக்கு ஏற்ற வகையிலும் அதன் ஒட்டு மொத்த அழகியல் அலங்கரிப்பு உருவஅமைப்பிலும் தஞ்சாவூர் வீணை சிறந்த அலங்கரிப்புடன் எடை கூடியதாகவும் விளங்குகின்றது. அதே சமயம் மைசூர் வீணையானது அலங்கரிப்பிலும்,வடிவமைப்பிலும் குறைந்ததாகவும், முன்குடமானது அளவில் பெரியதாகவும் விளங்குகின்றது. அவ்வாறே தஞ்சாவூர் வீணையின் (சரஸ்வதி வீணை)
மற்றுமொரு உற்பத்தி பூமியாக திருவனந்தபுரம் விளங்குகின்றது. திருவனந்தபுர வீணை எடையில் குறைவானதாகவும் நீளத்தில் கூடியதாகவும் விளங்குகின்றது. தஞ்சாவூர் வீணை (சரஸ்வதி வீணை), மைசூர், மற்றும் திருவனந்தபுரம், ஆகிய இடங்களை உற்பத்தி மையமாகக் கொண்டு விளங்குவதுடன் அடிப்படையில்அதன் அலங்கரிப்பு, உருவ வடிவமைப்பு என்பன மாற்றம் பெற்ற போதும் அதன் பாவனை, நுட்பவியல், நுணுக்க வடிவமைப்பு என்பனவற்றில் எவ்வித மாற்றமும் இடம்பெறவில்லை.
 
கர்நாடக இசை உலகில் அதி உன்னத இடத்தைப்பெற்ற வீணை தஞ்சாவூர் வீணை அல்லது சரஸ்வதி வீணை அல்லது இரகுநாத வீணை எனப் பல வகைப் பெயர்களால் குறிப்பிட்டு அழைக்கப்படினும் யாவும் ஓரே வகையான வீணையே ஆகும். பொதுவாக சாதாரண மக்களால் வீணை வாசித்தல் என சொல்லப்பட்டாலும் வீணை மீட்டலே சரியான வார்த்தை ஆகும் .

வீணைகளையும் தம்புராக்களையும் உற்பத்தி செய்யும் தொழிலில் திருச்சியும் நாத பரம்பரையை வளர்ப்பதில் தன்னாலான தொண்டு புரிந்து வருகிறது. பல வெளிநாடுகளுக்கு இந்த வாத்தியங்களை ஏற்றுமதி செய்துவரும் ராம்ஜீ கம்பெனியை திருச்சி ஆண்டார் தெருவில் மிக எளிமையான தோற்றத்துடன் ஆனால் உள்ளே கலையின் சாங்கோபாங்கமான விளக்கமுடன் இருப்பதை சிறுமியாய் இருக்கும்போது அப்பாவுடன் சென்று காண நேர்ந்தது. அப்போது அதன் உரிமையாளராக இருந்தவர் அப்பாவிடம்,” இதை தொழில்னு சொல்லமுடியாதுங்க சார் உயிர்த்துடிப்புள்ள கலைன்னு தான் சொல்வேன் வீணை தம்புராக்கள் செய்யறது மட்டுமில்ல அவைகளை ரிப்பேருக்கு யாரும் கொண்டுவந்தா என் சொந்த செலவுலயே செய்து் தந்துடுவேன்” என்றார் மகிழ்ச்சியாக.

ஒலிநயத்தைப்பற்றியும் சங்கீததைப்பற்றியும் நூற்றுக்கணக்கான நூல்கள் அந்ததொழிலகத்தின் சிறிய நூல்நிலையத்தில் இருந்தன உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் அந்த நூல்களைப் பார்த்துதான் சரி செய்துகொள்கிறார்களாம். அந்த வாத்திய தொழிலகத்தின் பின்பக்கம் உள்ள கூடத்தில் முதல் உற்பத்திக்கூடங்கள் இருந்தன ஒருவர் தண்டியை சரி செய்துகொண்டிருந்தார் இன்னொருவர் யாளிமுகப்புக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தார். வேறொருவர் சுருதிக் கம்பிகளை இணைத்துக்கொண்டிருந்தார் . உற்பத்திக்கட்டங்கள் பலவாறாகக் காணப்பட்டன.
சாதகத்தால் பலம் பெறுகிறது சங்கீத ஞானம் அதேபோல ஆற அமர சிந்திச்சி செதுக்கி நகாசுகள் செய்து நாதப்பரிசோதனை செய்து பெருமை பெறுவதுவீணையாகும்” என்றார் அங்கிருந்த ஒருவர். மேலைநாட்டு சங்கீதவிற்பன்னர்கள் திருச்சியின் இந்த இசைக்கருவி தொழிற்கூடத்திற்குவந்து நாதப்பரிவர்த்தனை செய்து சென்றிருக்கிறார்களாம். பிரமாண சுருதி என்றும் சுருதி ஆனந்தம் என்றும் பெரியோர் கூறுவார்கள் நாதத்தின் உயிர் நாடியே சுருதி தானே!

உற்பத்தியாளராக வியாபாரியாக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு கலைஞராயும் அமைத்து தாம் உற்பத்திசெய்யும் தம்புரா வீணைகளை சுருதி மீட்டி சரி பார்த்தார் அன்று நான் சென்றபொது இருந்த அந்த உரிமையாளர்(பெயர் மறந்துவிட்டது)ஆண்டார் தெருவில் தயாராகும் வீணையைப்பற்றி அப்போது திருச்சி தொழிலதிபர் இப்படிக்கூறினார் என அப்பா விவரித்தார்,” வீணை இங்கே உற்பத்திச் செய்து விற்கப்படுகி்றது ஆனால் மறக்கப்படுவது கிடையாது! (A Veena is sold here, but is not forgotton)
 
 
இசைக்கருவிகளில் வீணை சிறந்தது ஏன் என்றால் அதை எளிதிலே உண்டாக்கிவிட முடியாதாம் நல்ல மரத்தைதேர்ந்தெடுத்து வெவ்வேறு பகுதிகளையும் அமைத்து அவற்றை இணைத்து தந்தி பூட்டி உருவாக்கவேண்டும். அழகிய பருவ மங்கைபோல் விளங்கும் வீணை கமகத்தில் சிறந்தது. எந்தக்கருவிக்கும் இல்லாத சிறப்பு வீணைக்கு உண்டு , ஆம், மற்ற கருவி்களை இயக்கும்போது ஒலிக்கும் விரல்களையோ வாயையோ எடுத்தால் ஒலி நின்றுவிடும் ஆனால் வீணையை மீட்டியவிரலை எடுத்த பிறகும்  அதன் கார்வை இனிதாக ஒலித்துக்கொண்டே இருக்கும் , பெண் மனம் போல!
 
மேலும் படிக்க... "வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்!"

Monday, October 22, 2012

வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!

 
 
 
 
 
வெளைத்தாமரைப்பூவினிலே
வீற்றிருக்கும் அவள் முழுவதனம்!
வேதநாயகன் தேவிதனை பக்தர்
வேண்டுதலில் வரும் அருள் சீதனம்!
 
வீணை ஏந்தும் திருக்கரத்தில்
விளைந்தே வரும் ஏழுஸ்வரம்!
கலைமகளை நாம் துதிக்கையில்
கனிந்தே தருவாள் கல்வி வரம்
மேலும் படிக்க... "வெள்ளைத்தாமரைப்பூவினிலே....!"

Sunday, October 21, 2012

அன்னை அலைமகளே!





விண்ணவ ரெல்லாம் விரும்பிடும் அமுதே
மண்ணவர் நாடும் ஆருயிர் மணியே!
அன்னை அலைமகளே!
நண்ணி நினைந்துன்னை நாடிப்பணிவோம்
புண்ணியம் தந்து புகல்தருவாயே!
மேலும் படிக்க... "அன்னை அலைமகளே!"

Saturday, October 20, 2012

அரங்கத்து அன்னையே!



                                          






ஏழ் திரு மதில் நடுவே
எழிலாக வீற்றிருப்பாள்
எதிராசர் தேசிகனொடு
ஆழ்வார்கள் சூழ்ந்திருக்கும்
அரங்கமதில் குடி இருப்பாள்
படி தாண்டா பத்தினிக்கு
பார் எங்கும் பக்தர்கள்
பரிவான அவள் பார்வை
பட்டாலே தீரும் வினைகள்
அரங்கனுக்கு நாயகி
அருள் தருவதில் தயாபரி
அன்னை திருமகளை சரண் புகுவோம்
ஆனந்த வாழ்வினை அடைவோம்!
மேலும் படிக்க... "அரங்கத்து அன்னையே!"

Friday, October 19, 2012

மாதவன் சக்தி .





மாதவன் சக்தி மகாலஷ்மி
மலர்த் தாமரையில் வீற்றிருப்பாள்
மனம்  மகிழவே நல் வரம் அருள்வாள்
மாமலையெனப்பொருள் அளிப்பாள்
மங்கயவள் தாளதனை சரண் புகுவோமே!
மேலும் படிக்க... "மாதவன் சக்தி ."

Wednesday, October 17, 2012

அழகு என்பாள், கவிதை தந்தாள்!

 

சொல்லும் பொருளும் கொடுத்த சுந்தரியே உன்
வெல்லும் திருக்கடைக்கண் வீச்சுக்கிலக்காயின்
கல்லும் கதிர்மணியாம் காஞ்சிரமும் சந்தனமாம்
அல்லும் பகலும் தொழுவேன் அன்னை அபிராமித்தாயே!
பாடாமல் உன் சீர் பகராமல் உன்னடிகள்
நாடாமல், கூடாமல்,நலிந்து கிடந்தேனை
காடாகப்புதராக கல்மனம் கொண்டேனை
தேடாமல் ஆட்கொண்ட தெய்வத் திரு நிறையே!
வாக்கில் இதம் இல்லை வாழவழியும் தெரியவில்லை
காக்க நீ இருக்க கவலையில்லை கடையூர்க்கரசி!
நோக்கில் இனி உன் போலொரு தெய்வமும்தான் உண்டோ
போக்கினியேது தாயே, பொன்மகள்துதிக்கும் மாயே!
நாவில் நயந்துப்போற்றி நற்கவிகள் சாற்றாமல்
பாவியாய் அலைந்தேனை பரிவோடே காத்திட்டு
ஆவியே அழகே என்பாள் ஆறத் தழுவிக்கொள்வாள்
சாவிலும் மறக்கவொண்ணா தமிழ்க்கவிதைதந்தாளே!
 
(Navarathri 3rd day)
மேலும் படிக்க... "அழகு என்பாள், கவிதை தந்தாள்!"

Tuesday, October 16, 2012

அகிலாண்ட நாயகி!


காவிரி நீர் பாயும் திருவானைக்கா நகரினிலே
பூவிரியும் சோலை சூழ் பொற்கோவிலிலே வீற்றிருப்பாள்
தீ விரியும் நம் வினைகள் தீர அருள் புரிவாள்
நாவிரியும் கீர்த்தியினால் நாம் பாடி நோற்போமே!
 
 
 
(நவராத்திரி இரண்டாம் நாளுக்கு)
மேலும் படிக்க... "அகிலாண்ட நாயகி!"

அம்பிகை நேரில் வந்தாள்!

அங்கையற்கண்ணியை தரிசிக்க
மங்கையிவள் சென்றேன்
பூமாலை வாங்கிக்கொள்ள
அவகாசமில்லாமல் மனத்தில்
பாமாலை துதித்தபடி
வெறுங்கையாய் சென்றதற்கு
வேதனையில் தவிக்கையிலே
ரோஜாப்பூமாலையொன்று
எதிர்பாராமல் கரத்தில் விழ
ஏறீட்டேன் வியப்போடு
அர்ச்சகர் புன்சிரிப்பில்
அன்னை முகம் தெரிந்தது
அவள் அணிந்த பூமாலை
என் கையில் கிடக்கையிலே
கண்ணிலோ நீர் மாலை!
 

 
நீர்த்திவலையினூடே
எங்கே எ்ன் அன்னையென்று
எட்டுத்திக்கும் கண்கள் பார்க்க
சிலையாக நின்றிருந்த
சிங்காரியினைக்கண்டவிழி
கிறக்கத்தால் தான் மூட
‘காணவில்லை காணவில்லை’
என்று யாரோ
என் பெயர் சொல்லி
இருமுறை அழைக்க
சுதாரித்து சில நொடியில்
கண்திறந்துபார்த்து நான்
‘தேடுவது யார் நான்
இருக்கின்றேன் இங்கே தான்’’
எனக்கூறி நிமிர
குரல் கொடுத்த நபரில்லை
கூட வந்தவரும் சொன்னார்
’கூப்பிட்டபடி வந்தாள்
கும்பிடும் உன்னைக்கண்டாள்
இங்கேதான் இருக்கின்றாள்
என்ற என் சொலலையும் கேட்காமல்
எட்டி நடை நடந்துவிட்டாள்.!”
வந்தவள் தான் யாரென்று
குழப்பமுடன் நிற்கையிலே
‘்
வெளியே சென்றேதான்
அறிந்திடுவீர் அவளை’
என்றார்கள் அங்கிருந்தவர்கள்.
 
உள் நின்று நான் அழுதேன்
உன்னதத்தை தரிசிக்கத்தவறிய
உன்மத்தப்பெண்ணாக.
(சிலவருடங்கள் முன்பு மதுரையில் எனக்குக்கிடைத்த உண்மை அனுபவம்)திரு ஜிஎம்பி அவர்கள் வரைந்த அன்னைப்படம் இணைத்துள்ளேன்)

--
மேலும் படிக்க... "அம்பிகை நேரில் வந்தாள்!"

Monday, October 15, 2012

சக்தியின் ராஜ்ஜியத்தில்....!







சக்தியின் ராஜ்ஜியத்தில்
சங்கடங்கள் ஏதுமில்லை
பக்தியுடன் நாம் பணிந்தால்
பலவரங்கள்   தந்திடுவாள்
முக்திக்கு வழி கூறும்
முழு நிலவு முகமுடையாள்
சக்தியின் தாள் ஒன்றே
சரணமென்று  உரைப்போமே!
மேலும் படிக்க... "சக்தியின் ராஜ்ஜியத்தில்....!"

Sunday, October 14, 2012

சமயபுரத்து ராணி!


 
 
 
 
அரங்கனுக்குத்தங்கை
அழகுநிறை மங்கை
ஆண்டுக்கு ஓரு முறை
அண்ணன் சீர் பெறும் உமை
பயிருக்கு மாரி
பக்தருக்கு மகமாயி
கலங்கும் நெஞ்சிற்குக்காளி
கள்ளம்புரிவோரவள்முன் காலி
சமயபுரத்து ராணி
சட்டென் எம்மைக்காக்க வா நீ!
 
(நவராத்திரி முடியும் வரை   தினமும் தேவியர் மீதான  கவிதைகளை  எழுத  அன்னை அருளவேண்டும்)

அம்மன் படம் பதிவர் மதிப்பிற்குரிய திரு ஜி எம் பாலசுப்ரமண்யம் அவர்கள்  வரைந்தது.எத்தனை அழகு பார்த்தீர்களா?
மேலும் படிக்க... "சமயபுரத்து ராணி!"

Saturday, October 06, 2012

கலங்கும் காவிரி.







காலை  வழக்கம்போல அருகில் உள்ள பார்க்கிற்கு வாக்கிங் போகக்கிளம்பும்போது செல் கூவியது.

 என்னோடு தினமும் காலையில் நடக்கும் இன்னொரு வாக்காளர்  வந்தனாராவ்  போனில்,” வாக் போகமுடியுமா   இன்னிக்கு?ஒண்ணும் கலாட்டா இருக்காதே ஷைலஜா?’ என்று கவலையுடன் கேட்டாள். கர்னாடகமண்ணின் மகள் எனது இருபதுவருடத்தோழி.

“இந்தக்காலை நேரம் ஆறுமணிக்கு  என்ன கலாட்டா இருக்கப்போகுது வந்தனா?    நாம்  நடக்கலாம்  வா”
என்றேன். உள்ளுற  உதறல் திலகம் என்றாலும் வெளியே வீரமங்கைபோல காட்டிக்கொள்வது வழக்கம்.

கார்டன் சிடியான பெங்களூரில்  பார்க்குகளுக்குப்  பஞ்சமில்லை எங்கள் காலனியிலும் நாங்கள்  வாக்  செல்ல  அழகான் பார்க் இருக்கிறது பெரிய பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகள்   பார்க்குகளை தத்தெடுத்து வளர்க்கிறார்கள் ஆகவே செடி கொடிகள் எல்லாம்  காம்ப்ளான் குடித்தமாதிரி கன்னாபின்னாவென வளர்ந்திருக்கும்

காலைநேர சில்லென்றகாற்றில் வாக்கிங் போவதைப்போவதைப்போல சுகம் எதுவுமில்லை. பொதுவாய் வாக்பொகும்போது நான் மௌனம் காப்பது வழக்கம் அதனால் காது திறக்கிறது  அரசியல் பேசும்ஆண்களின் பேச்சுக்களையும் அடுப்படிமற்றும் குடும்பவிஷயம் பேசும் பெண்களின் பேச்சுக்களையும் ரசிக்கமுடிகிறது வாக்கிங்கில் இது எல்லாஇடத்திலும் பொது என்றாலும் பெங்களூரில் இதையே  வெவ்வேறுமொழிகளில் கேட்டு ரசிக்கலாம்.


அப்படித்தான்  இன்று காலை நாங்கள்  வாக் போகிறபோது   காவேரி பிரச்சினையை  கன்னடக்காரர்கள் சிலர் அலசிக்கொண்டு  போனார்கள்.கொஞ்சம் காட்டமாக கொஞ்சம் வருத்தமாக பேசிக்கொண்டுபோன காலனி மக்களில் கன்னட  எழுத்தாளர்  திம்மண்னா என்பவர் நடந்துகொண்டிருந்த என்னைப்பார்த்து”நமஸ்காரா” என்றார்.

“நமஸ்காரா” என்றேன்  புன்னகையுடன். எனது  தமிழ்க்கதை  ஒன்றை கன்னடத்தில்  மொழிபெயர்த்தவர் திம்மண்ணா அவர்கள்.  நட்சத்திர எழுத்தாளர் இல்லை என்னபோலத்தான் அவரும்.  எழுத்தை தவமாய் நினைத்து பலவருஷமாய்  கன்னடத்தில் புதினங்கள் எழுதுபவர்.

நடக்கும் போது மனம் யோசித்தபடி கால்களோடு பயணித்தது.

காவேரி பிரச்சினை  என்னவென்று புரிந்திருக்கிறது. கடைகள்  எல்லாம் இன்று மூடிவிட்டார்கள் நடைபாதைக்கடைக்காரர்களிலிருந்து  நகைக்கடைக்கடை மால்  என்று அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டார்கள்..பஸ்கள்  தமிழ்நாடு எல்லையில் நிறுத்தப்பட்டுவிட்டன. பள்ளி கல்லூரி அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை. அங்கங்கே கல்வீச்சு  நடக்கிறது. சாலை மறியல் நடக்கிறது. கர்னாடகக்கொடியை எந்தியபடி மக்கள்  உத்வேகமான வசனங்களுடன் சாலையில் நடக்கிறார்கள். நடைபாதைக்கடைக்க்காரர்களை  நியாயமாய் அதட்டுகிறார்கள்.

தமிழ்ப்படங்கள்  நிறுத்தப்பட்டுவிட்டன.தொலைகாட்சியில்  பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட சானல்கள்  நிறுத்தப்பட்டுவிட்டன  தமிழ்சானல்கள் அனைத்திற்கும் தடை. நியூஸ்9 சானல்  லைவாக  நகர நிலைமையைக்காட்டுகிறது/ டயர்களை எரிக்கிறார்கள் கோஷங்கள் கூச்சல்கள்!


இங்கே நீர் கொடுப்பதற்கு இல்லை என்கிறார்கள் கொடுக்காவிட்டால் பயிர்கள் வாழ வழி இல்லை என்கிறார்கள் அங்கே. 

காவிரி பிறந்தவீட்டிலேயே  இருக்கப்போகிறாளா புகுந்தவீட்டிற்கு வரப்போகிறாளா?
.

அனைவரின்  துயரத்தையும்  மழை  பெய்து காக்கவேண்டும். மாமழையில் மக்கள் யாவரின் துயரும் மறைந்துபோகுமே.

பிரார்த்தனைதவிர வேறொன்றும்  தெரியாத நிலையில் வீட்டில் பாத்திரங்களை விளக்கிவைத்த வேலைக்காரி ரங்கம்மாவிற்கு  காலை டிபனை  கொடுத்தேன்.

அடுத்து காபியைக்கலக்கும்போது ரங்கம்மா  கூவினாள்.”அம்மா  நீர் கொட்ரீ”
(நீர் கொட்ரீ=தண்ணீர் கொடுங்க)

‘ஓ தண்ணீர்  எடுத்து வைக்க மறந்துட்டேன்னா ரங்கம்மா  இதோ தரேன்”

என்று கன்னடத்தில் சொல்லியபடி  குழாயைத்திறந்தேன்.

கையில் தெறித்த காவிரி கூட  கொஞ்சம் கலங்கித்தான்  தெரிந்தது.

.



 
மேலும் படிக்க... "கலங்கும் காவிரி."

Thursday, October 04, 2012

ரங்கதாசி(சிறுகதை)


 
 
திருவரங்கம் கோயிலை ஒட்டிய முதல்வீதியான கீழஉத்திரவீதியின்

வெள்ளைகோபுரவாசலில் அந்த கார் வந்து வந்து நின்றது.
எதிராஜ் பின் இருக்கையினின்றும் நகர்ந்து கதவைத் திறந்து வெளியே

இறங்கினார். மாலைநேரக் காற்று இதமாக வீச ஆரம்பித்தது.
“ஐயா! இந்த கிழக்குவாசல்வழியே உள்ளேபோனால் அதிக நெரிசல்

இல்லாமல் போகலாம்னு கேள்விப்பட்டுருக்கேன் அதான் இந்த வழில

கொண்டுவிடறேன்” என்ற அந்த வாடகைக்காரின் ட்ரைவர், கேட்டதற்கு

அதிகமாகவே எதிராஜ் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக்கையில் கொடுக்கவும்

அதை கண்ணில் ஒற்றிக்கொண்டான்.
எதிராஜ் தலையாட்டினார்.
அவருக்கு இது ஒரு எதிர்பாராத பயணம். அறுபதுவருஷ வாழ்க்கையில்

எதுதான் அவர் எதிர்பார்த்தபடி நடந்திருக்கிறது?
எதிராஜிற்கு ஸ்ரீரங்கம் என்ற ஊருக்குள் நுழைந்ததும் நினைவுகள்

 பின்னோக்கிப்போக காரணம் இருக்கிறது.
பள்ளிநாட்களில் எதிராஜிற்கு ஓவியத்தின்மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது.


 கண்காண்பதை விரல் அப்படியே சித்திரமாய் தீட்டும் ஓவியக்கலை அவரிடம்

 ஏழுவயதிலேயே ஒட்டிக்கொண்டது. ரியலிஸ்டிக் ஓவிய முறையில்

அப்போதே நிறைய வரையத்தொடங்கினான் சிறுவன் எதிராஜ். வீட்டிற்கு

யாராவது வந்தால் அவர்களை பத்துநிமிஷத்திற்குள் படமாய்

வரைந்துவிடுவான். பள்ளிக்கூடத்தில் டீச்சர் வீணாபடேல் சொல்லுவாள்.

”எதிராஜ் நீ பள்ளிப்படிப்பு முடித்ததும் ஓவியக்கல்லூரில சேர்ந்து படிக்கணும்

   உனக்கு இந்தக்கலை கைவசமாய் இருக்கிறது!”
ஆனால் அவன் அப்பா இதை ஆரம்பத்தில் எதிர்த்தார்..
“நாமெல்லாம் மிடில்கிளாஸ் நமக்கெல்லாம் படிப்புதாண்டா நல்லது. வேலை,

 உத்யோகம், சம்பாத்தியம்னு கொடுக்கும் ,இதெல்லாம் பைசா காசுக்கு

பிரயோசனம் கிடையாது. ..’என்று முளையிலே அவர் கிள்ளி எறிய

முற்பட்டாலும் வெட்ட வெட்ட துளிர்க்கும் மரக்கிளையாய் ஓவிய ஆர்வம்

  எதிராஜை டில்லியில் பாங்க்பணிக்கு சென்ற அந்த இருபத்தி இரண்டுவயதில்

 மாலைநேரத்தில் ஓவியக்கல்லூரிக்கு செல்ல வைத்தது. அதற்கு அவன்

அம்மா சுசீலாவின் பெருமுயற்சி உதவியது. சுசீலா அந்த நாளிலேயே தமிழ்

இலக்கியம் படித்தவள்.பாரதியையும் கம்பனையும் கரைத்துக்குடித்தவள்.

கலைகளில் மிகுந்த ஈடுபாடுகொண்டவள்.
“அவந்தான் வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டானே இன்னமும் அவனை

 சின்னப்பையன் மாதிரி நினச்சி விரட்டறீங்க, உங்க சொல்லுக்கே

கட்டுப்படணும் என்கிறீங்க... ஒவ்வொருத்தன் மாதிரி சிகரெட் சினிமான்னு


அலையறானா எதிராஜ்? அவன் ஆசைக்கு இனியும் தடை சொல்லாதீங்க”

என்று சற்று இயல்பைமீறி கணவரிடம் கூச்சலிட்டாள்.
ஓவியக்கல்லூரியில் சேர்ந்தவனுக்கு சிறுவயதிலிருந்து மனித

உருவங்களையே வரைந்திருந்ததாலும் கல்லூரில் சேர்ந்தபிறகுதான்

அனாடமி பற்றி முழுமையாக அறியமுடிந்தது. கண்களையே ஸ்கேல் ஆக

வைத்துக்கொண்டு மனித உடலை வரையக் கற்றுக்கொண்டான்.

 அனாயாசமாக போர்ட்ரைட்டுகளை வரைந்துதள்ளினான்.
பிறந்தது வளர்ந்தது எல்லாம் வடக்கே டில்லியில்தான் என்றாலும் எதிராஜின்

 அப்பாவிற்கு பூர்வீகம் சேலம் அருகே ஒரு கிராமம்தான்.அம்மா

சுசீலாவிற்கும் கிருஷ்ணகிரி என்பதால் இரண்டுதாத்தாபாட்டிகளும் உயிரோடு

 இருந்தவரை அடிக்கடி தென்னக விஜயம் செய்திருந்தான் எதிராஜ்.. வீட்டில்

சரளமான தமிழ் பேசியும் தமிழ் புத்தகங்கள் வாங்கி வைத்திருந்ததாலும்

எதிராஜுக்கு தமிழ்மீது ஈடுபாடு இருந்தது. அம்மாவிடம் நிறைய

பாசுரங்களைக் கற்றுக்கொண்டிருந்தான். தென்னகத்துக் கோயில்களைப்பற்றி

 அவைகளின் சிற்ப ஓவியப்பெருமைகளைப்பற்றி அவன் அம்மா சுசீலா


விவரமாய் சொல்லி இருந்தாள்.அதனால் தென்னகத்துக்கோயில்களைப் பார்த்துவர ஆவலானது

.”போய்வா எதிராஜ்..பாங்கில் லீவ் கொடுக்கும்போது யோசிக்காம உடனே

புறப்பட்டுடணும்..எனக்குத்தான் உன்கூட வரமுடியவில்லை..உன் அப்பா

உடம்பு அலைய அனுமதிக்காதபோது அவரை நான் கூட இருந்து

பார்த்துக்கணும்.அதனால நீ மட்டும் போய்ப்பார்த்துவா...” என்று சுசீலா மகனை

 அனுப்பிக்கொடுத்தாள்.
முதலில்மதுரையை முடித்துவிட்டு அங்கே கண்ட அந்தபிரமிப்பு அகலாமல்

திருச்சி வந்தவனை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சித்திமகன் திவாகர்

பிடித்துக்கொண்டான்.
”ஹேய் எதிராஜா நீ எங்க இந்தப்பக்கம்? தாத்தா பாட்டிகள் இறந்து போனதும்

 நாலுவருஷமா நீ சேலம் கிருஷ்ணகிரி பக்கம்கூடவரலையே?”
”ஆமா திவாகர்....என்னவோ முடியாமல்போய்ட்டது. பிகாம் முடிச்சதும்

டில்லிலயே வேலை கிடச்சிருத்து எனக்கு. இப்போ பாங்க்ல வேலை”
”ஓ வெரிகுட் !பாங்க் வேலைன்னா நிரந்தரமான சம்பளம்டா! எனக்கும்

ஆசைதான் ஆனா எனக்கு அரியர்ஸ் பாக்கி இருக்கு உன்னை மாதிரி நான்

 அழகனும் இல்லை;அறிவாளியும்இல்லையே அதோட நீ

 அதிர்ஷ்டக்காரனும்கூட! சரிசரி திருச்சில என்ன வேலை விஷயமா

வந்திருக்கே?”
”வேலை விஷயமாக ஏதுமில்லை.... சும்மா கோயில்

பார்க்கதான்..மலைக்கோட்டைபோய் தாயுமானவர் தரிசனம்,

உச்சிப்பிள்ளையாருக்கு கும்பிடு போட்டு அப்புறம் ஸ்ரீரங்கம் போய்ட்டு மறுபடி

 மெட்ராஸ் வழியா க்ராண்ட் ட்ரக் எக்பிரஸ் ரயிலைப் பிடிச்சி

 டில்லிக்குப்போகணும்”
 
”அப்போசரி உனக்கு மலைக்கோட்டை ஸ்ரீரங்கம்லாம் நான்

சுத்திக்காட்றேன்..திருச்சில தங்கை வரன் விஷயமா ரயில்வேஸில் ஒர்க்

பண்ற ஒருத்தரை பார்க்க வந்தேன் அவர் ஊர்ல இல்லையாம். அதனால

 உன்கூட கொஞ்சநேரத்துக்கு சுத்தறேன்..எனக்கு ராத்திரிதான்

 கிருஷ்ணகிரிக்குப் போகணும்”
”திவா, உனக்கு எதுக்குடா சிரமம்?”
”அதெல்லாம் ஒண்ணுமில்ல....சௌத் பக்கம் வந்தவன், இப்படி கிருஷ்ணகிரி

 வராமயே போறே நீ.........அம்மாக்கு தெரிஞ்சா கண்டிப்பா தன் அக்காவை


அதாவது உன் அம்மாவை திட்டுவாங்க?”
”இன்னொரு சமயம் கண்டிப்பா வரேன்னு சொல்லு திவா ”
திருச்சியில் மலைக்கோட்டைமேல் நின்று இயற்கைகாட்சிகளை ரசித்த

 எதிராஜ் கையோடு கொண்டுபோன ட்ராயிங் உபகரணங்களை அங்கே

 பரப்பிவைத்தான் மடமடவென வரைய

ஆரம்பித்தான் ..கோயிலுக்குவந்தவர்கள் எல்லாம் வியந்து

பாராtடிப்போனார்கள். சிலர் அவனை போட்டோ

எடுத்துக்கொண்டுபோனார்கள்.
”அடேயப்பா! அச்சு அசலாய் அப்படியே பார்த்ததை தத்ரூபமாய்

வரைந்திருக்கியே எதிராஜ்! கலைகளிலே ஓவியம்தான் சிறந்ததுன்னு

சொல்வாங்க ...ஓவியத்திறமை உன்கிட்ட அபாரமாய் இருக்குடா... சரி ,

அடுத்தது ஸ்ரீரங்கம் கோயில் போகலாம் வா..” திவாகர் உற்சாகமாய் அவனை


உடன் அழைத்துக்கொண்டு போனான்.

 
ஸ்ரீரங்கம்!.

 
கோயிலுக்குள் நுழையும்போதே திவாகர் உரத்தகுரலில் விவரிக்க

ஆரம்பித்துவிட்டான்.” நான் அடிக்கடி வரும் ஊருடா...இதுபூலோக

வைகுண்டமடா எதிராஜ்!   கோவிலில்  சேஷராயர் மண்டபத்துல  நீ ரசிக்க

அபாரமானசிற்பங்கள் இருக்கும்,பார்க்கலாம் வா”  என்று அங்கே

அழைத்துக்கொண்டுபோனான்.
 

அங்கிருந்த சிற்பங்களைப் பார்த்து அப்படியே நெக்குருகி நின்றான் எதிராஜ்.

 சிலமணிநேரங்கள் அங்கே அந்தக்கல்மண்டபத்திலும் எதிரே

மணல்வெளியிலும் அமர்ந்து படங்களை வரைய ஆரம்பித்தான். அருகில்

 அமைதியாய் நின்று கொண்டிருந்த வெள்ளைகோபுரத்தின் வரலாற்றினையும்

 கேட்டபடி கோபுரத்தை அட்டகாசமாய் வரைந்துமுடித்தான்.
“அடுத்து உள் ஆண்டாள் சந்நிதில உள்ள வெளி மண்டபத்துலெல்லாம்

அட்டகாசமான சிற்பங்கள் இருக்கும் அதை நீ பார்த்தபடியே அங்கேயே

  வாசலில் உக்காந்து வரையலாம் !”
எதிராஜ் ஆசைதீர எல்லா இடங்களையும் பார்த்து பலவற்றை வரைந்து



சிலவற்றை மனதில் படம்பிடித்துக்கொண்டான்.
”திவா! ஸ்ரீரங்கம்கோயில்ல ஏதோ ஆகர்ஷணம் இருக்கு என்னை இது மறுபடி


 இழுக்கப்போகிறது” என்றான் உணர்ச்சி நிறைந்த குரலில்.
“சரிடா நீ நிதானமா இன்னும் சிற்பங்களையும் ராமானுஜர் சந்நிதில இருக்கிற

ஓவியங்களையும் பார்த்துவா...எனக்கு நேரமாறது,.நான் கிளம்பறேன் என்ன?”
திவாகர் விடைபெற்றுக்கொண்டான்.
எதிராஜ் உள் ஆண்டாள் சந்நிதியின் வாசலுக்கு வந்தபோது

கையில்பூத்தட்டுடனும் துளசி மாலையுடனும் ஒரு சிறுமி


எதிர்ப்பட்டாள்.பன்னிரண்டுவயதிருக்கும்.சீட்டித்துணியில் பாவாடையும்


 அதேதுணியில் பெரிதான சட்டையும் அணிந்திருந்தாள்.உடம்பு

ஊசிபோலிருந்தது பார்வையில் ஏதோ வசீகரம் தெரிந்தது.’’அண்ணே

அண்ணே துளசிவாங்கிப்போங்கண்ணே மொழம் ரெண்டணாதான்” என்றாள்

 கெஞ்சுதலான குரலில்..
கேட்டபடியே எதிராஜின் கையிலிருந்த பென்சில்ஸ்கெட்ச்

ஓவியங்களைப்பார்த்துவிட்டாள்.விழிமலர,”நீங்களா வரைஞ்சீங்க? ரொம்ப

ஜோரா இருக்கே...அதிலயும் அந்த குதிரைவீரன் அப்டியே கோவில் உள்ளாற

இருக்குற சிலைபோலவே இருக்குதே...அண்ணே நானும் படம்

வரைவேன்...வீட்ல வச்சிருக்கேன்...”என்றாள் மகிழ்ச்சியான குரலில்.
“அப்படியா? ‘
“ஆமா..ஆனா வீட்ல நான் வரையத்தொடங்கினாலே நாலு

 சாத்துசாத்துவாங்க ...’அனாதைதுக்கிரிக்கு ஓவியம் கேக்குதோ, போடி போயி

வெராட்டிதட்டி பூவு பறிச்சி தொடுத்து வியாபாரம் செஞ்சி துட்டு

சம்பாரிச்சிவாடி’ன்னு திட்டுவாங்க...நான் யாருக்கும் தெரியாம கோவில்

உள்ள எங்காச்சும் ஓரமா உக்காந்து வரைஞ்சிடுவேன்....”
“பாவம்..ஆமா ஏன் உன்னை வீட்லதிட்றாங்க?”குழப்பமாய் கேட்டான் எதிராஜ்.
 
அதான் சொன்னேனே நான் அனாதையாம் குப்பைத்தொட்டில

கெடச்சவளாம்..”
“அய்யோ பாவம்...படிக்கலயா பள்ளிக்கூடம் போகலையா?
“ம்ம் போனேன் அஞ்சாவதுவரை படிச்சேன்.ஐஸ்கூலெல்லாம்

அனுப்பலண்ணே....வெரட்டி தட்டவும் பூக்கட்டவும்தானே நேரம் சரியா


இருக்குது?”
எதிராஜிற்கு அந்தப்பெண்ணைப்பார்க்கவே பரிதாபமாகிவிட்டது... “படிக்க

உனக்கு ஆசை இருக்கா?” என்று கேட்டான்.
“ம் இருக்குண்ணே...”
“உன் பேர் என்னம்மா?”
“பூங்கோதை”
“ஒருநிமிஷம் இரு... இங்க வெளில கடைல போன் இருக்கா ஊருக்கு


எங்கம்மாகிட்ட பேசணும் உன்னைப்பத்தி..”
“இருக்குண்ணே...தெற்குவாசல்ல கடைல போன் இருக்கு..வாங்க

கூட்டிப்போறேன்..”
ஒடிசலான உடம்பு துறுதுறுவென்ற கண்கள் சுருட்டையான கேசம் என்றிருந்த

 பூங்கோதை விறுவிறுவென முன்னே நடக்க எதிராஜ் தொடர்ந்தான்.
போனில் சுசீலா,”நல்ல காரியம்டா எதிராஜா...அன்ன சத்திரம் ஆயிரம்

 வைக்கிறதைவிட ஒரு ஏழைக்கு கல்விக்கு உதவறதை பாரதி சிலாகிச்சி பாடி

 இருக்காரே! சென்னைல என் சிநேகிதி ஒருத்தி சமூக சேவகி. நகரில் பிரபல

புள்ளி அவள் கண்டிப்பா நமக்கு உதவுவா..நான் இப்போவே அவகிட்ட விவரம்

சொல்லிடறேன்...பூங்கோதையை அவளை வளர்த்தவங்ககிட்ட நல்லபடி

சொல்லி சென்னைக்கு கூட்டிப்போயி சேர்த்துடு. தேவையான பணம் அந்த

ஏழைக்குடும்பத்துக்குக் கொடுத்துட்டு வா...எல்லாம் நல்லபடியா முடியட்டும்

 அந்த ரங்கன் க்ருபைல..” என்றாள் நிறைவான குரலில்.
விட்டது சனி என்பதுபோல பணத்தை வாங்கிக்கொண்டு பூங்கோதையை


வளர்த்தவர்கள் அவனோடு அனுப்பிவைத்தார்கள்.
சென்னையில் அந்த அனாதைகளுக்கான பள்ளியில் பூங்கோதை

ஆறாம்வகுப்பில் சேர்ந்தாள். நாலைந்துவருடங்கள்வரை டில்லிக்கு

எதிராஜனுக்கு தவறாமல் கடிதம்போடுவாள். நன்றி தெரிவித்துக்கொண்டே

 இருப்பாள் ஒவ்வொரு கடிதத்திலும். அவளது ஓவியத்திறமையை பள்ளியில்

ஊக்கப்படுத்தி பலபோட்டிகளுக்கு அவளை அனுப்பியதில் பரிசுகள்

வாங்கியதை எல்லாம் எழுதுவாள். திடீரென மாரடைப்பில் எதிராஜின் அப்பா

இறந்துபோனதற்குக்கூட மிகவும் வருத்தப்பட்டு ஒரு கடிதம் எழுதி இருந்தாள்.
பத்தாம்வகுப்புபடிக்கிறபோது திடீரென அவள் பள்ளியிலிருந்து ஒருநாள்

தந்திவந்தது. பள்ளிக்கூட உல்லாசப்பயணமாய் இரவு ரயிலில்

திருச்சிக்குப்போகிறபோது வேடிக்கைபார்க்க கதவருகில் நின்ற பூங்கோதை

காவிரிப்பாலத்தில் கால்தடுக்கி விழுந்து ஆடிமாத வெள்ளத்தில்


அடித்துக்கொண்டு போய்விட்டாள் என்று.
எதிராஜிற்கு அப்போதுதான் கல்யாண நிச்சயம் ஆகி இருந்தது.பூங்கோதையை

தன் தங்கையாய் கல்யாணத்தில் தாலிமுடிக்கு அழைத்துக்கொள்ளலாம் என


 நினைத்திருந்தான் சுசீலா அவளுக்கு பட்டுப்புடவையெல்லாம்


வாங்கிவைத்திருந்தாள்.இந்த நேரத்தில் இப்படி ஒரு செய்திவந்ததும் தாயும்

 மகனும் அலறிப்புடைத்துக்கொண்டு ஓடினார்கள். ஒருவாரம் தேடியும்

 பூங்கோதை உடல் அகப்படவே இல்லையாம்..புதைமணலில் சிக்கி உள்ளே

 போயிருக்கும் என்று முடிவுகட்டினார்கள்.
அவ்வளவுதான் பூங்கோதை என்பவளின் சரித்திரமே முடிந்துவிட்டது என

நினைத்து பெருமூச்சுவிட்டார்கள் சுசீலாவும் எதிராஜும்.
அடுத்த ஒருமாதத்தில் எதிராஜுக்கு திருமணம் நடந்துவிட அவன் மனைவி

மீராவிற்கு எந்தக்கலைகளிலும் நாட்டமுமில்லை சராசரிப்பெண்ணாக

குடும்பம் நடத்தவும் முடியவில்லை. எதிராஜ் பல நேரங்களில் ஓவியம்


மற்ரும் தூரிகையுடன் இருப்பது கண்டு கோபம்வர அது ஹிஸ்டீரியாவில்


கொண்டுவிட வீட்டில் எப்போதும் சண்டைதான், சச்சரவுதான். எதிராஜ்

 வெறுப்பில் வரைவதையே நிறுத்திவிட்டான்.
சுசீலாவுடன் அவன் மனைவி மீரா ஒத்துப்போகவில்லை. ‘நீயாவது அவளோட

  சந்தோஷமாய் இருப்பா நான் காசி ராமேஸ்வரம்னு சுத்தப்போறேன்’ என்று

சுசீலா புடவைமற்றும் புத்தகப்பையுடன் கிளம்பிவிட்டாள். காசிபோகும்

வழியில் பஸ் விபத்தில் இறந்தும் போனதாய் தகவல் வந்தபோது எதிராஜ்

 நிலைகுலைந்துபோனான்.
ஆயிற்று பல வருஷம் கழித்து அரவிந்தன் பிறந்தான் .அம்மாவைப்போல

 இல்லாமல் அவன்பாட்டியைப்போல வளர்ந்தான்.அப்பாவின் மனதை அவன்

புரிந்துகொண்டிருந்தான்.அதனால்தான் அன்று .”அப்பா உங்களோட

சஷ்டியப்தபூர்த்தியக் கொண்டாடவேண்டாம்னு சொல்லிட்டீங்கப்பா... அம்மா

 மட்டும் உயிரோட இருந்தா ஜாம் ஜாம்னு கொண்டாடி இருப்பேன். . ஆனா


அம்மா கான்சர்ல தன்னோட முப்பதிஅஞ்சுவயசுலெயே போவாங்கன்னு

  எதிர்பார்க்கவே இல்லயே. அப்பா! நேத்து உங்க பழைய ஓவியங்களை

எல்லாம் பார்த்தேன் அதுல அரங்கன் கோயில் சிற்பங்களை நீங்க அனுபவிச்சி

வரைந்த விதமே சொல்லுகிறது உங்க மனம் அங்கயே இருக்கிறதென்று.

இதை நான் எப்போதோ செய்திருக்கணும் இப்போ உங்களின் அறுபதாவது

பிறந்தநாளை முன்னிட்டு நீங்க தெற்கே சிலகோயில்கள் போய்ட்டுவர

ஏற்பாடு செய்துட்டேன்....டில்லியைவிட்டு நாம் சென்னைக்கு வந்த இந்த

ஒருவருஷமா நீங்க வீட்லயே முடங்கி இருக்கீங்க..உங்கள் தாயாரின்

படத்தைப்பார்த்துப்பார்த்து கண்கலங்கறீங்க....உங்க மனசு வயசானகாலத்தில்

உற்சாகமாக இல்லை.. அதுக்கு ஓவியக்கலையை நீங்கமறுபடி

ஆரம்பிக்கணும்ப்பா... அதுக்கு அரங்கன்கோயில் போய்வந்தா அது ஒரு

உந்துதலா இருக்கும் உங்களுக்கும் புத்துணர்ச்சி கொடுக்கும். ஆபீஸ்

வேலைகாரணமா நானும் உடன் வரமுடியாத சூழ்நிலை..நீங்கள் அவசியம்

போய்வாங்கப்பா மனமாறுதலாகவும் இருக்கும் இந்தப்பயணம்!” என்று

ரயிலுக்கு டிக்கட் வாங்கி கையில்கொடுத்தான்.
எதிராஜனுக்கும் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வாகவே

இருந்தது. யாருடனான போட்டிக்காக நினைவுகளை அசைபோடாமல்

 தனிமையில் உழன்று எதிலும் பற்றில்லாத நிலையில் இருக்கிறோம்?

ஜீவிதம் என்பது போட்டியல்ல. சேர்ந்தும் சார்ந்தும் வாழ்வதே ஜீவிதம். என்று

 தோன்றியது. நல்ல நினைவுகள் என்பது வியர்க்கிறபோது வீசுகிற காற்று

மாதிரிவிரும்புகின்ற மணம் மாதிரி.வீணையை யாராவது போகிற போக்கில்

மீட்டிவிட்டுப்போனால் வீசும் இளந்தென்றலில் மெல்லியதாய் அதன் அதிர்வு

கேட்டுக்கொண்டே இருப்பதுபோல மகனின் பேச்சு எதிராஜனை யோசிக்க

வைத்தது.
எதிராஜ் புறப்பட்டுவிட்டார்.
வெள்ளை கோபுர வாசலில் நுழைந்ததுமே பின்னோக்கிப்போன நினைவுகளை

  மணல்வெளியில் அடித்த காற்றின் ஸ்பரிசம் மீட்டுக்கொண்டுவந்தது.
வலப்புறம் எதிரே சேஷராயர்மண்டபம் கண்ணில்படவும், அந்த இடத்தில்

  முன்பு திவாகருடன் நின்று ரசித்த சிற்பங்களையும் உடனே ஓவியம்வரைய

 மணல்வெளியில் உட்கார்ந்ததையும் நினைத்துக்கொண்டார் அப்படியே

உடையவர் சந்நிதியில் உட்பிராகாரத்து ஓவியங்களில்

மனதைசெலுத்தினார் .பாதி ஓவியங்கள் சிதிலமாகி இருந்தன.
அரங்கனை தரிசிக்க கருடமண்டபம் வழியே உள்ளேபுகுந்தார் . தர்ம தரிசன

க்யூவில் அரங்கனின் அன்பர்களோடு அன்பராய் கால்கடுக்க நின்று பின் க்யூ

நகர்ந்து சென்றதில் கடைசியாய் கண்குளிர அரங்கனை தரிசித்துக்கொண்டார்.

 தங்கவிமானத்தைப்பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டார். கிளிமண்டபம்

 வழியே வெளியே வந்தார்.
தாயாரை சேவித்து ரங்கவிலாசக்கடைகளை நோட்டமிட்டபடி உள் ஆண்டாள்

சந்நிதியை நெடுங்கினார்.
சந்நிதி உள் அடங்கி இருந்தது. ஆண்டாள் அரங்கனுடன் ஐக்கியமாகும்வரை


பிரவாகமாய்பொங்கினாள். மேகத்தை,மழையை,மயிலைக்குயிலை என்று

அனைத்தையும் அரங்கனின் காதலுக்கு தூதுவிட்டாள். அவன் கோயில்

 வந்தபிறகு அவனுக்கு உடையவளானதும் சந்நிதியின் உள்பக்கமாய் அடங்கி

அமைதியாய் இருக்கிறாள். ஆழ்வார்களில் ஆண்டாள் சந்நிதிக்கு மட்டுமே

  இத்தனை பெரிய வெளிவாசல்!
எதிராஜ் சென்றது வார நாள் ஆனதால் வெளி வாசலில் அதிகம்கூட்டமில்லை

. அதனாலேயே அமைதியாய் அனைத்தையும் ரசித்து ஆழ்ந்து

அனுபவித்துப்பார்த்தபடி வந்தவருக்கு, ஆண்டாள் சந்நிதி நுழைவு வாசலில்

  மெல்லியகுரலில் பாசுரம் கேட்கவும் நின்றார்..

 
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்..’
குரல் வந்த திசையைப்பார்த்தார். அங்கே சிறு மரஸ்டூலில்மூங்கில்கூடையை

 வைத்து அதில் பரவி இருந்த உதிரிப்பூக்களை வாழைநாரினால் குனிந்ததலை


நிமிராமல் தொடுத்துக்கொண்டிருந்த அந்தப்பெண்மணியை நெருங்கினார்.
“பூக்காரம்மா நல்லா பாசுரம் சொல்றீங்களேம்மா...காதுக்கும் இனிமை

 ஆழ்வார்பாசுர வரிகள் மனசுக்கும் இனிமை” என்றார் .
‘கோரமாதவம் செய்தனன் கொல்...’என்று பாடிக்கொண்டேவந்த

 அந்தப்பெண்மணி சட்டென பாட்டை நிறுத்திவிட்டு நிமிர்ந்தாள்


. ஐம்பதுவயதிருக்கலாம் மெலிந்த உடல்வாகாய் தெரிந்தது. அரக்கிலும்

மஞ்சளிலுமாய் கட்டம் போட்ட நூல் புடவையை தோளோடு

இழுத்துப்போர்த்தி இருந்தாள். நரைத்த அடர்த்தியான

சுருட்டைத்தலைமயிரை அழுந்தவாரிக்கொண்டை

.நெற்றியில் சிவப்பு நிறத்தில் நீளத்திலகம். மருவும் கனகாம்பரமும்

மல்லிகையும் சேர்ந்து கட்டிய பூச்சரத்தை கையிலெடுத்தவள்.”பூ வேணுமா

சாமீ?” என்று கேட்டாள்.
வயதானாலும் துறுதுறுவென்றிருந்த அந்த விழிகளைப் பார்த்த எதிராஜ்

சட்டென அதிர்ந்தார். அதற்குள் அவளும் அவரைக்கூர்ந்து பார்த்துவிட்டு,”அ,

  அண்ணே எதிராஜ் அண்ணனா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்
பூ பூங்கோதை நீ நீ,,,,,,?” என்று சந்தேகமும் வியப்புமாய் கேட்கும்போதே ‘

குப்’பென வியர்த்தது, எதிராஜனுக்கு. அதே குரல்! அதே முகம்!எத்தனை


வருடங்கள் ஆனால் என்ன நெஞ்சில்பதிந்த சில முகங்களின் நினைவு

வற்றுவதே இல்லைதான்.
”பூங்கோதை.... நீ,,,, நீ.... இ்றந்துட்டதா...?” குழப்பமும் திகைப்புமாய் எதிராஜன்


கேட்டார்.
பூங்கோதை பூச்சரத்தை கூடையில் போட்டுவிட்டு எழுந்து நின்று


கைகுவித்தாள். கண்கள் கலங்க ஆரம்பித்தன. கை நடுக்கத்தை மறைத்தபடி

 பேச ஆரம்பித்தாள்.
” அண்...அண்ணே...எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஆமாண்ணே.

நன்றி மறந்தவளா நான் உயிரைவிட்டுவேனோன்னு

நினச்சேன்...நல்லவேளை என் அரங்கன் என்னை அந்த பாதகத்திலிருந்து

காப்பாத்திட்டான். நான் இறந்துட்டதா ஊர் உலகம் நம்பினதை நீங்களும் நம்பி

 இருப்பீங்க...ஆனா அன்னிக்கு உல்லாசப்பயணம் போன ரயிலில் பாதிராத்திரி

 அந்தபள்ளி ட்ராயிங் மாஸ்ர் என்கிட்ட தவறா

நடக்கவந்தாரு...அதுக்குமுன்னாடி பலதடவை அவர் பள்ளிக்கூட

ஹாஸ்டல்ல தனியா என்னைப்பார்க்கவரப்போ நான் அவரை


எச்சரிச்சிருக்கேன் ஆனா அவருக்கு நான் அனாதை கேட்க யாருமில்லை

என்கிற தைரியம். அரசியலில் செல்வாக்குள்ள மனுஷன் ஒருத்தர்கிட்ட நான்

 தாசியாப்போகணும்னு மிரட்டினாரு. திட்டம்போட்டு தனக்கு சாதகமான

 சூழ்நிலையை ரயிலில் ஏற்படுத்திட்டு என்னை நெருங்க வந்தாரு.

... அப்போதான் நான் ஒரு முடிவெடுத்தேன்.அரங்கன் காலடிலபோய்

சேர்ந்துடலாம்னு அந்த அயோக்கியனிடமிருந்து

என்னைக்காப்பாத்திக்கொள்ள வேற வழிதெரியாம காவிரில

பாய்ஞ்சிட்டேன்..ஆனா காவிரி என்னைக்கொண்டுபோயி ஒருநல்லவர்

கைலஒப்படைச்சிட்டா... ஆமாம்...அந்த நடுஇரவுல காவிரியின் மறுகரைல

 அதன் அழகை ரசிச்சி கவிதை பாடிக்கொண்டிருந்த ஒரு காஷ்மீரத்து மனிதர்

நான் மிதந்துவருவதைப்பார்த்து நீர்ல பாய்ந்து என்னை உடனே

காப்பாத்தினார் .பக்கத்துல ஒரு நர்சிங்ஹோம்ல சேர்த்து சாகக்கிடந்த உயிரை

 மீட்டார்.அவர்கிட்ட நான் நதியில் குதித்த காரணத்தை சொன்னேன்..என்னால

திரும்ப சென்னைக்குப்போக முடியாத நிலைமையை விவரிச்சேன். என்னை

அவர் ஓசைப்படாமல் காஷ்மீருக்குக்கூட்டிப்போனார். அன்பான குடும்பம்

அவருடையது அங்கே நான் அவருக்கு இன்னொரு மகளா வளர்ந்தேன்.‘.பூ’

 என்ற புனைபெயரில் சித்திரங்களை வரைந்தேன். வெளிநாட்டில் எல்லாம் என்

 சித்திரங்கள் விலைபோனது. நிறைய சம்பாதித்தேன்..அந்த காஷ்மீரத்து

மனிதர் எட்டுவருஷம் முன்பு இறந்ததும் அந்தக்குடும்பத்திடம்விடைபெற்று

மறுபடி இங்க வந்தேன் ...அண்ணா...உங்க டில்லிவீட்டுமுகவரி எல்லாம்

 நினைவில் இல்லாமல்போய்விட்டது. மேலும் நான் இறந்துவிட்டதா

எல்லாரும் நினச்சிட்டு இருக்கிறதை உயிர்ப்பித்து குழப்பம்

உண்டாக்கவேண்டாம்னு நினச்சேன்..ஆனால் உங்களுக்கு நான் ஏதோ

துரோகம் செய்துவிட்டதாகவே உறுத்தல் இருந்தது. உயிர்போவதற்குள்

என்றாவது உங்களை சந்திக்க அரங்கன் வாய்ப்பளிப்பான் என்று நம்பித்தான்

இங்கே உங்களை நான் முதலில் சந்திச்ச இதே இடத்தில்

 உட்கார்ந்திருக்கிறேன்.....”
நிதானமாய்ப்பேசினாலும் உணர்ச்சிவசப்பட நீண்ட நேரம் பேசியதில்

 பூங்கோதைக்கு மூச்சிறைத்தது.
எதிராஜிற்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் எதுவும் பேச இயலாதவராய்

அமைதியாய் அப்படியெ நின்றார்.
”கோபமா அண்ணா என் பேர்ல?”
“இல்லையம்மா...என்ன பேசறதுன்னே தெரியல.....” என்றவர் அவள்

கழுத்தில்தெரிந்த மஞ்சள் சரடினைப்பார்க்கவும் பூங்கோதை மெலிதாய்

சிரித்தாள்.
“அண்ணா! இது அந்தரங்கத்தாலி! ஆமாம் அந்தட்ராயிங் மாஸ்டர் அன்னிக்கு


யார்யாருக்கோ தாசியா இருக்கச்சொல்லி மிரட்டினான். நான் என்னிக்கும்


அரங்கனுக்குதான் தாசி. அரங்கனையே மானசீகப்புருஷனாய் நினைச்சி நானே

 எனக்கு ஒரு பாதுகாப்பாய் தாலியைக்கட்டிக்கொண்டேன். ”
பூங்கோதை இப்படிச்சொல்லி முடிக்கவும் யாரோ இரண்டு இளைஞர்கள்

 அங்கே வந்தார்கள்.


குனிந்து ஏதோ ஃபைலைத்திறந்து காட்டி அவளிடம் கையெழுத்து வாங்கிக்

 கொண்டார்கள்..
 
 
 
அவர்களிடம் பூங்கோதை எதிராஜை தான்முதலில் சந்தித்தது முதல்

எல்லாவற்றையும் சொல்லி அவரை அறிமுகப்படுத்தினாள்.

உடனே அவர்கள் எதிராஜைப்பார்த்து பணிவுடன்,”ஐயா! டவுனில் இருக்கிற

நம்முடைய எதிராஜ் அனாதை இல்லம், சுசீலாம்மா ஓவியப்பள்ளி இவை

இரண்டையும் நீங்க அவசியம் வந்து பார்த்துப்போகணும்” என்று

கேட்டுக்கொண்டார்கள்.
எதிராஜ் சட்டென பூங்கோதையை ஏறிட்டுப்பார்க்க அவள் புன்னகையை

பதிலாக்கி அமைதியாய் நின்றாள்.
“ஒவியப்பள்ளியை பார்ப்பது மட்டுமல்ல பூங்கோதை, இனிமே என் பணி

அங்கே தான்” என்ற எதிராஜின் முகத்தில் நீண்ட நாளைக்குப்பிறகு சிரிப்பு

மலர்ந்தது.
 
****************
இந்தக்கதை ஆக்ஸ்ட் தென்றல் இதழில் வெளிவந்தது  .பரிசுக்கதை தவிர பிரசுரத்திற்கு ஏற்ற கதையாக  சிறப்பு பெற்றது  .தென்றலுக்கு நன்றி.
கதைக்கான  சுட்டி இங்கு  ..ஒலிவடிவிலும் கேட்கலாம்.கதையை வாசித்தவருக்கு நன்றி.
 
மேலும் படிக்க... " ரங்கதாசி(சிறுகதை)"

Monday, October 01, 2012

மானுடம் வெல்லும்.(சிறுகதை)


“பெரியப்பா... நாளைக்குக் காசிக்குப் புறப்படுகிறோம். மூட்டை, முடிச்சைக் கட்டிண்டு தயாரா இருங்க...’’

கணேசன் இப்படிச் சொன்னதும் ராமநாதனுக்கு திகைப்பானது. சென்னைக்கு அருகிலிருக்கும் ஸ்ரீபெரும்புதூருக்கு ஒருமுறை போவதற்கு தான் ஆசைப்பட்டதைக் கூறியபோது கணேசனும், அவன் மனைவி வசந்தாவும் கூறியது நினைவிற்கு வந்தது.

எழுபது வயசுக்கு வீட்டோடு கிடக்காமல் அதென்ன ஊரைச் சுத்தற ஆசை, உங்களுக்கு? குழந்தை குட்டி இல்லாத உங்களை, ஏதோ அந்த நாளில் என்னை வளர்த்துப் படிக்க வைத்த தோஷத்துக்காக சோறு போட்டு வச்சி காப்பாத்தத்தான் முடியும்; ஊரைச் சுத்திக் காட்டவா முடியும்? எனக்கும் வயசு நாப்பதாச்சு; பொண்டாட்டி, ரெண்டு பசங்க இருக்கு. புரிஞ்சிண்டு நடங்க பெரியப்பா...’’ என்று கணேசன் சீறினான்.

“பள்ளிக்கூட வாத்தியாராயிருந்து ரிடையராகி பிசாத்து பென்ஷனை எங்க கையில் கொடுத்துக்கிட்டு இருக்கிற உங்களுக்கு இந்த மாம்பலத்துல இருக்கிற கேயில்கள் போதாதாக்கும். ஸ்ரீஈஈஈஈஈஈ பெரும்புதூர் போய்ச் சேவிக்கணுமாக்கும்?’’ வசந்தா எரிச்சலும் கிண்டலுமாய்ச் சொன்னாள்.

ராமநாதன் அதற்குப் பிறகு ஏன் வாயைத் திறக்கிறார்?
ஒரு மனிதனுக்கு அந்திமக்காலத்தில் மனைவி உடன் இருப்பது சாலச்சிறந்தது; பெற்ற மகனிருப்பது சிறந்தது; உறவுக் கூட்டம் உறுதுணையாயிருந்தால் ஓரளவு நல்லது; இவையாவும் இல்லாவிடினும் நிறைந்த செல்வமிருப்பின் அது தெய்வ பலத்திற்குச் சமம். ராமநாதனுக்குத் தன்னிடம் அப்படி எதுவுமே இல்லாததில் தன் மீதே வெறுப்பாக வந்தது. அதனாலேயே பல நேரங்களில் மௌனமாக இருந்து விடுவார். கணேசன் சொல்வது போல அவனை வளர்த்த தோஷத்திற்கு அவன் இவ்வளவு செய்வதே பெரிதுதான். பாங்க் கிளார்க்காக இருந்தவன் சமீபத்தில் ஆபீசர் உத்தியோகத்திற்கான பரீட்சை எழுதித் தேறி விட்டதாய் அவன் பையன்கள் மூலம் கேள்விப்பட்டார். அதைக் கூட கணேசன் அவரிடம் சொல்லாததில் இலேசான வருத்தமென்றாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.


இப்போது திடீரென காசிக்கு அழைத்துப் போவதாய் கணேசன் சொன்னதும் அந்த வருத்தமெல்லாம் போன இடம் தெரியவில்லை. அவன் சொன்னது போல மூட்டை, முடிச்சுகளைக் கட்ட ஆரம்பித்தார்.




“தாத்தா! காசிக்குப் போனால் எதையாவது விடணுமாமே, அப்பாவும் அம்மாவும் சொன்னா...? நான் உருளைக்கிழங்கு விடப் போறேன்... பத்ரி, நுடுல்ஸ் விடப் போறானாம்!’’ பத்து வயது பேரன் நந்து, தன்னிடம் இப்படிக் கூறியதும் ராமநாதன் சிரித்தார்.


“நந்து! உனக்கு உருளைக் கிழங்கு பிடிக்காது. பத்ரிக்கு நுடுல்ஸ் பிடிக்காது. அதை விடறது சரியில்லை. வாஸ்தவத்துல பிடிச்சதைத்தான் விடணும். உதாரணத்துக்கு எனக்குக் கத்திரிக்கா பிடிக்கும். நாகப்பழம் பிடிக்கும். ரெண்டையும் நான் காசி போனதும் சாப்பிடறதை விடணும்...’’



“அப்படியா தாத்தா? நமக்குப் பிடிச்சதைத்தான் விடணுமா? எனக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும். பத்ரிக்கு பாப்கார்ன் பிடிக்கும். நாங்க எப்படி அதைவிட முடியும்? முடியாது, தாத்தா...’


’ “குழந்தைகளுக்கு எதையும் விட வேண்டிய அவசியமில்லை நந்து! பெரியவர்களுக்குத்தான் அந்த ஏற்பாடு... நீயும், பத்ரியும் சின்னக் குழந்தைகள்!’’



அப்பாவும், அம்மாவும் பெரியவங்க தானே, அவங்க எதை விடப் போறாங்களாம்?’’



தெரியலையேப்பா? அவர்களுக்குப் பிடிச்சதைத்தான் விடுவார்களாயிருக்கும்? எனக்குக் கத்திரிக்கா, நாகப்பழம் மாதிரி அவங்களுக்கும் ஏதாவதிருக்காதா, என்ன?’’



இருக்கும்... இருக்கும்...’’ நந்து பெரிய மனுஷன் போல தலையை ஆட்டினான்.

காசியில் விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி கோயில் என்று சகல ஆலயங்களின் தரிசனம் முடித்து, கங்கையில் முழுகி, சாஸ்திரங்களைக் கொண்டு இறந்தவர்களுக்கு திதிக் காரியங்கள் முடித்து, தனக்குப் பிடித்த கத்திரிக்காயையும், நாகப்பழத்தையும் துறப்பதாக பிரமாணம் செய்து நிமிர்ந்தார் ராமனாதன். கங்கையில் குளித்ததோ என்னவோ மனசையே அலம்பி விட்ட மாதிரி இருந்தது.


கண் மூடித் தியானித்தபடி அப்படியே அமர்ந்தவர் மறுபடி எழுந்த போது அருகில் கணேசனையோ, அவன் மனைவியையோ, பேரன்களையோ காணாது திகைத்தார். மொழி தெரியாத புது இடத்தில், குழப்பமாய்த் தேட ஆரம்பித்தார். போலீ°ஸ்உதவியை நாடினார். காசி வந்ததும் தங்கிய ஒரு மடத்தின் விலாசம் நினைவிற்கு வர சட்டென்று அதைக் கூறினார். போலீஸ் அவரை அங்கு கொண்டு விட்டுச் சென்றது.


மடத்தின் அதிபதி சந்துரு ஒரு தமிழர்தான். ராமநாதனைக் கண்டதும், அதிர்ச்சியுடன் புருவம் தூக்கினார்.


“என்ன மாமா, நீங்க போகலையா உங்க பிள்ளை, மருமகள் குடும்பத்தோடு ஊருக்கு?’’ என்று கேட்டார்.



“ஊ... ஊ... ரு.... க்.... கா?’’ ராமநாதன் விழித்தார்.



ஆமா... மூணு மணி சாவகாசமாச்சே. அவங்க இங்க வந்து பெட்டி படுக்கையத் தூக்கிண்டு போயீ?’’
அ... ப்... ப... டி... யா?’’
“ஆமாம். உங்களை மறந்து விட்டுட்டுப் போயிட்டாளா, என்ன?’’
“இருக்கலாம்... ஓரிரு நாள் நான் இங்க தங்கட்டுமா. கணேசன் திரும்ப வந்து அழைச்சிட்டுப் போற வரைக்கும்?’’ குழந்தை போலக் கேட்ட ராமனாதனை வேதனையுடன் பார்த்தார் அந்த நடுத்தர வயது மனிதர். ஓரிரு நாள் என்ன, ஒரு வாரமானது. கணேசன் வரவுமில்லை; அவனிடமிருந்து ஒரு தகவலுமில்லை.
“மாமா! இது தர்ம மடம்தான். உங்களை மாதிரி வயசானவங்களுக்குச் சாப்பாடு போடறது எங்களுக்கும் பாக்கியம்தான். ஆனாலும் உங்களை நிரந்தரமா இங்க வச்சிக்கணும் என்றால் உங்களை வைத்துக் காப்பாற்றும் நபர்களின் அனுமதி வேணும். அதைக் கேட்க நான் தீர்மானிச்சுட்டேன். கணேசன் போன் நம்பர் ஞாபகம் இருக்கா, உங்களுக்கு?’’
“சந்துரு... கணேசனுக்கு வீட்டில் போன் கிடையாது. ’பிபி’ நம்பர் தெரியும். எதிர் வீடுதான்...’’ என்று போன் நம்பரைச் சொன்னார்.
சந்துரு போன் செய்து கேட்டபோது, “கணேசன் தனக்கு ஆபீஸர் ப்ரமோஷன் கிடைத்ததும், வடக்கே எங்கோ உத்திரப் பிரதேசத்தில் வேலை மாற்றலாகி அங்கு போய் விட்டார். காசி போவதற்கு முன்பே இங்கு எல்லாரிடமும் அவர் சொல்லிவிட்டு, ஒரு வழியாய் வீட்டையும் காலி செய்து விட்டு, காசி வழியே உத்திரப்பிரதேசம் போகப் போவதாகவும் சொன்னார். வேறு விவரம் எதுவும் தெரியாது...’’ என்றார் எதிர் வீட்டு மனிதர்.
சந்துரு இதைத் தயங்கித் தயங்கி ராமநாதனிடம் கூறவும், அவர் முகம் ஏமாற்றத்தில் தொங்கிப் போனது. காசியில் கடைசியில் தன்னை விட்டுவிடத்தான் கணேசனும், வசந்தாவும் இங்கு அழைத்து வந்தார்கள் என்று தெரிந்த போது மனம் உடைந்துதான் போனது.

“மாமா... மாமா... கவலைப்படாதீங்க. உங்களை
 மாதிரி கடைசிக் காலத்தில் பிள்ளைகளால் உறவினர்களால் கைவிடப் பட்டவங்களைக் காப்பாத்தி ரட்சிக்கத்தான் எங்க தாத்தா இங்க தர்மமடம் ஏற்பாடு பண்ணி இருக்கார். நீங்க கவலைப்படாதீங்க மாமா... நான் உங்களைக் கைவிட மாட்டேன்...’’ சந்துரு தழுதழுத்த குரலில் கூறவும், ராமனாதன் நெகிழ்ந்து போனார்.

கணேசனைப் போன்ற நபர்கள் பிறக்கும் பூமியில்தான் சந்துருவைப் போன்றவர்களும் பிறக்கிறார்கள்.
ராமநாதனுக்கு, சந்துருவின் மீது மிகுந்த மதிப்பும், அளவு கடந்த அன்பும் பெருகியது. காசி வாழ்க்கைக்கு அவர் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்ட ஒரு சில நாட்களில்... அன்று திடீரென கணேசனிடமிருந்து போன் வந்தது.
சந்துரு மகிழ்ச்சியுடன் ராமநாதனை அழைத்து, “மாமா! உங்கள் தம்பி மகன் கணேசன், மனம் திருந்திட்டார்னு நினைக்கிறன். உங்களை உடனே பேசச் சொல்றார், வாங்க’’ என்று அவர் அறையினின்றும் கைபிடித்து மெல்ல நடத்தி, மடத்து ஹாலிற்குக் கொண்டு போனார்.
ரிஸீவரை அவர் கையில் தந்த சந்துரு, “பேசுங்க மாமா!’’ என்றார்.
“ஹ... ஹலோ... நா... நான் பெரியப்பா பேசறேன்’’ என்றார் ராமநாதன்.
“பெரியப்பா, சவுக்கியமா? ரொம்ப ஸாரி. அன்னிக்குக் காசியில உங்களை வழி தவறி விட்டுட்டோம். ஊர் மாறி ஜாகை வரும் அவசரம் வேறு. எப்படியோ அந்த மடத்தில்தான் இருக்கணும் நீங்க என்று வசந்தா சொன்னாள். நல்ல வேலை அங்கேயே இருக்கீங்க! பெரியப்பா... முக்கியமான விஷயம். அதுக்குத்தான் ஃபோன் பண்ணேன். அன்னிக்கு மெட்ராஸ்ல காசிக்கு ரயில் ஏறும் போது, சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் ஒரு லாட்டரிச்சீட்டு வாங்கினேன். அதை உங்களுக்கு வாங்கின சீனியர் சிடிஸன் ரயில் டிக்கெட்டோடு தவறுதலா சேர்த்து வச்சிட்டேன். மறுபடி அந்த லாட்டரிச் சீட்டை வாங்கிக்க மறந்துட்டேன். இப்பத்தான் லாட்டரி ரிசல்ட் வந்தது. பதினைந்து லட்ச ரூபா பரிசு விழுந்திருக்கு.!ஆகையினால அந்த சீட்டை எடுத்து வைங்க, நான் ப்ளேனில் வரப் போறேன். சீட்டு நம்பர் உடனேயே நான் அன்னிக்கு டைரில எழுதி வச்சிக்கிட்டேன். அதனால நிச்சயமா அதே சீட்டுக்குத்தான் பரிசு என்பது உறுதி.ஆமா, சீட்டை பத்திரமா வைச்சிருக்கீங்கதானே?’’ கணேசன் இப்படிக் கேட்டு முடித்ததும் ஒருகணம் யோசித்த ராமனாதன் அடுத்த கணம், “ அடடாகணேசா! கங்கையில முழுகறப்ப அதையும் சேர்த்து முழுகிட்டேன், டிக்கெட், என் உடமைகள் எல்லாமே போய்டிச்சுப்பா. அனாவசியமா இங்கே அலையாதே’’ என்றார்சகஜமான குரலில்.

“ஐயோ பெரியப்பா. அறிவு இருக்கா உங்களுக்கு, பதினைஞ்சு லட்சம்! கங்கயில அதையும் மூழ்கடிச்சிட்டீங்களா? ஐயோ ஐயோ...முட்டாள்தனமா, அறிவுகெட்டத்தனமா,மடத்தனமாய் இப்படி...’’ அவன் கத்திக் கொண்டே இருக்க, ராமநாதன் ரிஸீவரைக் கீழே வைத்தார்.

சந்துரு திகைப்பும், குழப்பமுமாய், அவரையே பார்த்தார்.

“என்ன ஆச்சு, மாமா?’’ தயக்கமாய்க் கேட்டார்.

“சந்துரு! உன் தர்மஸ்தாபனத்திற்கு நான் ஏதாவது செய்ய நினைச்சிருந்தேன். இப்போ கடவுள் அதற்கு ஒரு வழி பண்ணிட்டார்!’’ என்று கூறிச் சிரித்தார்.

(மங்கையர் மலரில்  சில வருடங்கள் முன்பு பிரசுரமான கதை..இன்று முதியோர் தினம் என்பதால்  இப்போது  இங்கே  அளிக்கிறேன்)






--

மேலும் படிக்க... "மானுடம் வெல்லும்.(சிறுகதை)"

Friday, September 21, 2012

அறுபது ஐம்பது நாற்பது முப்பது இருபது!!

பதினைந்து நாள் முன்னாடியே சென்னைக்கு ரயிலில் டிக்கட்டை ரிசர்வ்

செய்து, பட்டுப்புடவை அதற்கு மேட்சாக (கண்ணாடி) வளை முதல் பொட்டு

 வரை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டாயிற்று. சொந்தக்காரங்க

 கல்யாணத்துக்குப்போவதுபோல ஒரே த்ரில்.பின்ன

 மரத்தடிப்பெண்பட்டாளமே வரப்போகுதே என்பதை ஓர்மிச்சாலே மதுரிக்காதா

 என்ன?!
இரவு ரயிலில் ஏறிப்படுத்த அரைமணியில் எங்கள் கம்பார்ட்மெண்டில்

 ஆட்டோ ஒன்று ஓடுவதை உணர்ந்து திடுக்கிட்டு முழித்தேன். அப்பர் பெர்த்

ஆசாமியின் ஆரவாரமான குறட்டை என்று புரிந்துபோனதும் காதுக்குள்

கர்சீப்பை சுருட்டிவைத்துக்கொண்டு தூங்க ஆரம்பிக்கும்போது, எதிர் பெர்த்

 இளம் பெண்,’நோயா...கீப் கொய்ட்.. டெல் மி நௌ அதர்வைஸ்...?” என்று

 ஆங்கிலத்தில் எதிர்முனையுடன் செல்ல ஊடலில்

 இருந்தாள்/கிசுகிசுவெனதான் பேசினாள் கர்சீப் அடைத்த செவிகளிலும் அவள்

 செல்லில்பேசியது கேட்டுவிட்டது:)(சத்தியம் வேணுமென்றே கேட்பேனா

என்ன?:)
அடுத்த கம்பார்ட்மெண்டில் ஒரு குழந்தை ஓயாமல் அழுதது. ஆக

சென்னைவரும்போது தூக்கமின்மையில் கண் எரிய ரயிலடியில் காலை

 வைத்தால் சுள் என யாரோ பின் கழுத்தில் சூடு போட்டமாதிரி இருந்தது!

ஆதவனின் நீண்ட கரங்களில் ஒன்றுதான் அது! எங்க பெங்களூர் சன்

  கூலானவர்!
அப்போ ஆரம்பிச்ச வெய்யில் பெருமூச்சு துளசி-கோபால் அறுபதின்


வைபவத்திற்குக்காலை புறப்பட்டு ஓசியில் கிடைத்த ஏசி காரில் சென்று

இறங்கியும் தொடர்ந்தது. சின்ன மணடபமானாலும் சிறப்பானமேடை அங்கே

  மணக்கோலத்தில் துள்சியும் அவர் கணவரும் !
”ஷைலூஊஊஉ”
என்னடா மண்டபத்துல குயில்கூவுதேன்னு பார்த்தா நம்ம மதுமிதா!
பக்கத்துல ரோஜாப்பூக்கு சே லை உடுத்தினமாதிரி வல்லிமா! சிரித்த முகமாய்

 அருணா சினிவாசன்! தொடர்ந்து மரத்தடி தோழி கவிஞர் நிர்மலா! லஷ்மி


என்னும் திருமதி பாலபாரதி! சுப்புத்தாதா(சுப்புரத்தினம்)சுபாஷிணி என்கிற

வலை உலக ரசிகை. பிரபல சிங்கபூர் எழுத்தாளர் சித்ரா ரமெஷின் பெற்றோர்!

 மின்னல் வரிகள் வலைப்பூக்காரர் கணேஷ்!
ஆஹா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா என்று மனசுக்குள்

மத்தாப்பு விரிய பேச ஆரம்பித்தோம்.
யுவக்ருஷ்ணா உண்மைத்தமிழன் பாரதி மணி போன்றோரை மது

அறிமுகப்படுத்தினார். யுவக்ருஷ்ணாவிடம்,”மணமக்களை வாழ்த்திக்கவிதை

கொண்டுவந்திருக்கேன்” என்றதும் அந்த இளைஞரின் முகத்தில்

 புயலடிச்சமாதிரி ஒரு திகில்..அப்புறம் தெரிஞ்சுது அவருக்குக்கவிதை

அவ்வளவா பிடிக்காதாம்!

-- ஹோமம் வளர்த்து பாசுரம் சொல்லி வேதம் ஓதி அறுபதாம்

கல்யாணச்சடங்கு நடந்து தாலி கட்டலும் முடிஞ்சதும் நாங்கள் நாலைந்துபேர்

 கூட்டம் கலையுமுன்பாக அவசர அவசரமாக ஒரு பாட்டு பாடினோம்

 அந்தப்பாட்டு வழக்கமா கல்யாணங்களில் நான் பாடும்பாட்டுதான் ஒரு சில

வரிகளை மாறறினால் போதும் அதே மெட்டுதான் ஆனா புதுசா கேக்க்றவங்க

ஏமாந்துடுவாங்க ரொம்ப பிரமாதமபோல பிரமையை உண்டு பண்ணும்...:)

 என்னபாட்டுன்னு கேக்கறீங்களா காதலிக்க நேரமில்லை படத்துல வருமே

  நாளாம் நாளாம் திருநாளாம் அதான்:)
கைத்தட்டலைக்கேட்டு வாங்கிவிட்டு சாப்பிடப்போனோம்.
அப்போதே சபதம் எடுத்தேன் மனசுக்குள்ள இனிமே இந்த சென்னல

 ஃபங்கஷனுக்கு சேலையே கட்டக்கூடாது காட்டன் சூடிதார்தான் என்று.

 
அதன்படி மாலை உட்லண்ட்ஸுக்கு சென்றேன் கைப்பையில் கவிதை

பத்திரமாக இருந்தது
அந்த மினிஹாலில் மெனிமெனி முகங்கள் ! பாராமுகங்களை பார்த்து

அறிமுகம் செய்துகொண்டோம்.. மரத்தடி உஷா (பழைய பப்பாளிகலர்

போய்விட்டது இப்பொ உஷாக்கு என்பதில் உள்ளூற சந்தோஷம்தான் பின்ன

 எப்பவும் ஃப்ரிட்ஜ்ல எடுத்த தக்காளிமாதிரி்யே இரு்ப்பாங்களாம் இவங்க நாங்க

மட்டும்..?”)
“சென்னை வந்து சுத்தல் ஜாஸ்தி ஷைலஜா வெளிநாட்ல அதிகம் வெளிய

 போகமாட்டேன் அப்டியெபோனாலும் ஏசிகார்லதான் அதான்் இந்தியா வந்து

கொஞ்சம் நிறம்மங்கிட்டென் ”என்றாங்க உஷா.
கேபிள் சங்கர் லதானந்த அண்ணாகண்ணன் அப்துல்லா மோகன்குமாமார்

(வீடுதிரும்பல்)
ஸாதிகா, உண்மைத்தமிழன், , , பலாபட்டறை சங்கர், புதுகை அப்துல்லா,

 ஜோதிஜி, கேஆர்பி செந்தில், வலைச்சரம் சீனா ஐயா, வெங்கட் நாகராஜ்,

யுவகிருஷ்ணா, அதிஷா சிமுலெஷன் சாதிகா ஜாப்பர் சார் பால கணேஷ்

  பட்டர்ஃப்ளை சூர்யா சீனாசார், இன்னும் பலர்பலர் வரலாறுகாணாத

கூட்டதுல நம்ம கல்பட்டு நடராஜன் சார் மாமிகூட சாகி சார்,(மைபா எங்கன்னு

  அங்கயும் யாரோ கேட்டுட்டாங்க)
யாரோ கேட்டாங்க ஹரிகிருஷ்ணன் வந்திருக்காரா என்று? இல்லையே என

சந்தேகமாய் நானும் தேடிப்பார்த்தேன் மரத்தடிப்புகழ் ஷக்திப்ரபா வை பலர்

விஜாரித்தார்கள்.ஜீவ்சை பாலபாரதி நினைத்துக்கொண்டார்.
நான் தான் மோர் என மோருக்கு எதிர் நிறத்தில் வந்தார் அருமை்த்தம்பி மோர்

சுப்ரா!( கண்ணுக்கு மை அழகு காளையர்க்கு கருப்பழகு..அதனால மோர்

 கோச்சிக்கமாட்டாரு:) அருகே வினோத் கூடவே அச்சு! ஆஹா

 இங்கிவரையான் பெறவே எனப்பாடலாம்போல ஒர்ரெ குஷி.
.உதயன் வெறும்கையுடன் வந்தார் நான் வர்ர இந்தமாதிரி நிகழ்ச்சிக்கெல்லாம்

 கைல காமிரா இல்லாம வந்த உதயனுக்கு தக்க தண்டனை தர

 யோசிக்கறேன்.

 
பின்ன என்னங்க  தட்டான்பூச்சி சிட்டுக்குருவி ஈ எறும்ம்பெல்லாம் தேடித்தேடி

  பின்னாடி ஓடிப்போயிபோட்டோ எடுப்பாராம் ஒருத்தி புகழ்பெற்ற

 புகைப்படக்காரரின் காமிரால தான் விழ நினைப்பதை பலமுறை சொல்லியும்

 கண்டுக்கமாட்டாராம்! போயா போ உதயா உனக்குக்கல்யாணம் இந்த

ஐபபசில இல்லை கார்த்திகைல தான்:)
அப்புறம் துள்சிகோபால் மேடைல கேக்வெட்டினாங்க நிறைய போட்டோ

எடுத்தாங்க யாராவது போடலாம் இருங்க எல்லாரும் உதயன் இல்லையே:)
அடுதத அரைமணில அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி

நடந்தது ஆமாம் நான் மதுமிதா மற்றும் துள்சிகிட்ட ரகசியமா கெஞ்சிக்கேட்டு

  கவிதைக்கொஞ்ச்ம வாசிக்கவிடுங்க இல்லேன்னா் 11மணிக்குபெங்கலூர்

ரயில்ல ஏறினால் தூக்கமவராதுன்னேன் ”:)
ச்செசேஎன்ன ஷைலு உங்க கவிதை கேட்க ஓடோடி வந்த என்னை

ஏமாத்தாதீங்க என்பதுபோல துளசிமேடம் சொன்னாரா அசரீரியா தெரியலை:)
“உஷ் என் கூட்டத்தை அதட்டிவிட்டு ”அமைதி அமைதி ஷைலஜா

பெங்கலூஊஉர்லேருந்து (எதோ சந்திர்மண்டலம்போலபில்டப்): கவிதை

வாசிக்கன்னே வந்துருக்காங்க” என்றார்.
எழுதிவச்சதை மேடை ஏறி வாசிக்க ஆரம்பிக்கும்போதே யாரோ

கைதட்டினாங்க(பின்னாடி முடியாதுன்னு தெரிஞ்சிருக்கும்:) ஒருவழியா

  வாசிச்சேன் ஏகப்பட்ட காமிராக்கள் கிளிக்கின அடட்டா இப்படியெல்லாம்

காமிராக்கள் க்ளிக்கும்னா இன்னும் நல்ல சல்வார் போட்டிருக்கலாமோ ?
“ என்ன போட்டா என்ன அக்கா இருக்றதுதான் வரும் ?”என்ற

 ஸ்னாபக்வினோத்தின் பின்னாடி ஸ்விம்மிங்பூல் இருந்தது.கண்ணால்

 அதைக்காட்டினேன் தம்பி உடனேகப் சிப் பாவம்:)
அப்புறம் அமர்க்களமாய் பஃஃபே அருமை எல்லாமே! சாப்பிடும்போதே

அரட்டை அரட்டை அரட்டை அதன்றி வேறெதுமில்லை!  எல்லா

வயதுக்காரர்களும் அங்க  இருந்தோம் அதான்  தலைப்பு  இப்படி:)
 
நிறைந்த  மனத்துடன்   ஊருக்குத்திரும்ப  ரயிலேறினேன்.
 
***************************************************************************
 
பிகு...ரொம்ப நாளா என் பச்சைக்கிளி வலைவானில் பறக்கவில்லை...காரணம்  பலருக்குத்தெரிஞ்சிருக்கும்  அருமை அப்பாவை  நான் இழந்து  எழுபது நாட்கள் ஆகின்றன.. மனதைத்தேற்றிக்கொள்ள இத்தனைகாலம் தேவையாக இருந்தது.
 
இதனால்  பொதிகை  நிகழ்ச்சி ஒன்றில் நான் வந்ததையும் இங்கே  தெரிவிக்கமுடியாமல்போனது (யாரது  அதெல்லாம்  அவசியமில்லை என்பது?:)    அதனால் நிகழ்ச்சி யு ட்யூப்  லிங்க் இங்கே!!  மதுமிதா   இரூக்காங்க என் கூட அதனால கண்டிப்பா  பாருங்க என்ன?:)

http://www.youtube.com/watch?v=QVMBDauapG8&feature=youtu.be
மேலும் படிக்க... "அறுபது ஐம்பது நாற்பது முப்பது இருபது!!"

Tuesday, June 19, 2012

அன்புள்ள அப்பா!


போன புதன்கிழமை  சிற்றஞ்சிறுகாலையிலேயே  ஸ்ரீரங்கத்துக்குள் நுழைந்துவிட்டேன்  ஆமாம்  பெங்களூரில்  அந்திமாலையில் ரயில்புறப்பட்டால்  அப்படித்தான்  3 30க்கு கோட்டை ஸ்டேஷனுக்கு    கொண்டுவந்துவிடுகிறது. அங்கிருந்து நிமிஷத்துக்கு ஒரு பஸ்  அந்தக்காலையில்குளித்து சந்தனம் தரித்து பளபளவென்று வந்து நிற்கிறது!  ஏறிக்கொண்டு தூரத்து உறவினர் வீட்டு திருமணத்துக்காக   கல்யாண மண்டபம் போனதையும் அக்காரவடிசலையும்  அமிர்தம்போல புளியோதரையும் சுவைத்ததையும் சொல்லவரவில்லை..

 அரங்கனைக்கண்குளிர  சேவித்ததை சித்திரைவீதி உலா வந்து ஏன்ஷியண்ட் எல்டர்ஸ்களை  வாசல் திண்ணையில்கண்ணாரக்கண்டு அளவளாவி அவர்கள் அளித்த  என்னரங்கப்பெருமாள் காலண்டர்களை சேகரித்துக்கொண்டு  தெற்குவாசலில்  பன்னீர்சோடாவை ஒன்றுக்கு மூன்றாக உள்ள தள்ளி(பெங்களூரில் பன்னீர் சோடாவையே  காணாததால் அப்படி ஒரு பர(ற)ப்பு:)) ராஜகோபுரம்  அருகே பழைய பாலுஸ்யூடியோ(அந்த நாளில் ஸ்டூடியோவில போட்டொ எடுத்துக்கொள்ள போனபோது   அவர்  காமிராமீது போர்த்திய  கறுப்புத்துணீயை  எடுத்தபடியே என்னைப்பார்த்து  ஏழெட்டுதடவைகண் அடித்ததும் வெறுப்பில்  நான் கூட வந்த என் சின்ன அத்தையிடம்  முணுமுணுக்க”அவர் கண்ணே அப்படித்தாம்மா  சில பேருக்குஅதுஒருவியாதி என்று  சமாதானம் செய்ததும் நினைவுக்கு வந்தது:):) வா சலில்   வற்றக்குழம்பு வைக்ககல்சட்டி வாங்கினதையும்  சிரிக்கின்ற காந்திசிலையையும் விவரித்துக்கட்டுரை  எழுதலாமென்றிருந்தேன் ஆனால்அன்று மாலை கல்யாண மேள சத்ததையும் மீறி  தம்பி சென்னையிலிருந்து  வீறிட்டான் போனில்//அப்பா  கீழே விழுந்து அடிபட்டு  எலும்பு முறிவாகி இருக்கு நீ உடனெ புறப்பட்டுவா எனறான் பதட்டமாய்.. அவ்வளவுதான்  பட்டுப்புடவையைக்கூட மாற்றாமல்சென்னைக்குப்போகிற கல்யாணப்பார்ட்டியுடன் காரில்பயணமாகிவிட்டேன்.

வியாழன் இரவு சென்னை சென்றதும் அப்பாவை   நர்சிங்ஹோம் சென்று பார்த்தேன்  உறவுக்கூட்டமேபடை திரண்டிருந்தது தவிர அப்பாவின்  வாக்கிங்  நண்பர்கள் அனைவருமே  80+! என்னைப்.   பார்த்ததும் சிரித்தார்.“கொஞ்ச நா்ளைக்கு நான் வி ஐபி!” என்றார்.
இடுப்புபக்கமாய் எலும்பு முறிவு. நாளை ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார் டாக்டர்.

அப்பா  கேட்டார். அந்த நேரம் தியானம் செய்ய அனுமதி உண்டா ஏனென்றால் எனக்கு  ஆபரேஷன் என்றால் கொஞ்சம்  பயம்  மேலும் தியானம் பல வலிகளுக்குத்தீர்வு!

டாக்டர் சிரித்தபடி போய்விட்டார்.



மறுநாள் ஆப்ரேஷன் தியேட்டர் போகுமுன்பு என் தம்பிகளின் உதவியுடன் முகத்தை ஷேவ் செய்து ஆஃப்டர் ஷேவ் லோஷன் அப்பிக்கொண்டார்.  நன்றாய் தலையை வாரி பவுடர்போட்டுக்கொண்டார்..நெற்றியில் வழக்கம்போல பாபா விபூதியும் அகிலாண்டேஸ்வரி குங்குமமும் தரித்துக்கொண்டார்.  கண்ணாடிகொண்டுவரச்சொல்லி தன்னை பார்த்துக்கொண்டார்  என் தம்பியின் எட்டுவயதுப் பையன் ’என்ன தாத்தா நீ  ஆபரெஷன்  தியேட்டர்போகப்போறியா இல்ல சினிமாதியேட்டர்போகப்போறியா?’ என்று கேட்டான்.

அதில்லப்பா  வியாதியஸ்தர்னா  கசங்கின தலை அயர்ன் செய்யாதசட்டை   தாடி பாழ் நெற்றி சோக புன்னகை ன்னு முத்திரை குத்திடறாங்க....  அப்படி இருக்க நான் விரும்பல  பாரதி என்ன சொல்லி இருக்கார்?

உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி எனக்கே  நீ
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம்  பேரழகு
வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து


பேரழகாஇல்லைன்னாலும் கொஞ்சம் அழகா  இருக்கவேண்டாமா?”    எனக்கேட்டுபுன்னகைத்தார்.
 கூடவே   தம்பியின்  மொபைலில்  இப்படி என்னுடன்  போட்டோவும் எடுத்துக்கொண்டார்!



வயது 84 ஆகிறதே  சக்கரை  பிபி  இல்லாவிடினும் ஆபரேஷன் நல்லபடியா ஆகணுமே என  நாங்கள் கவலைப்பட்டதை அப்பாவின்  பேச்சு  சற்று நீக்கியது ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது..

அட  இத்தனை சீக்கிரம் ஆபரேஷன் ஆகிட்டதா  நான் என்னவோன்னு பயந்தேனே இனிமே  அடி்க்கடி அடிபட்டுக்கலாம் போல இருக்கே..எல்லாரும்கொஞ்சம் ஸ்பெஷலாகவே நம்மை கவனிக்கி்றாங்க என்று ஜோக்கடித்தார்.

அப்பாவுடன்  மருத்துவ மனை அறையில் பலமணி நேரங்கள் இந்த  நான்குநாட்களில்  பேசியதில்பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

“ நிறையப்  படித்தபிறகுதான்  தெரிகிறது நாம் ஒண்ணூமே படிக்கவில்லை என்று” என்றார்.


 கம்பனை  பாரதியை ஆழ்வார்பெருமக்களை  தாம்  வியந்து  போற்றீய  கிவாஜ,  திருலோக சீதாராம் சுகிசுப்ரமண்யம் ந பிச்சமூர்த்தி  போன்ற உன்னதமனிதர்களை  நினைவுகூர்ந்தார்...

 ஆனாலும் அப்பாவுக்கு என்றைக்கும் செல்லப்பிள்ளை கவிஞர்ஸ்ரீரங்கம்  மோகனரங்கந்தான்,...”என்னமா எழுதறான்மா தலைமாட்டில் அவனோட ஹிந்துமதம் அறிமுகம் புக் தான் வச்சிருக்கேன் பாரதிபக்கத்துல... அவன் போயி இந்த இந்தியன்பாங்குல ஏன் உக்காந்திருககான்? அவன் எங்கயோ இருக்கவேண்டியவன் எங்கயோ இருக்கவேண்டியவ்ன்!” என  கண்பனித்தார்...   மோகனரங்கன் ஆபரேஷன்முடிந்து அவரைப்பார்க்க வந்தபோது  சாதாரணமாய் வீட்டில்  சமீபகாலமாய்  காது சரியாகக்கேட்பதில்லை என்பதால் அதிகமாகப்பேசாத அப்பா  அரங்கனாரிடம் நிறையவே பேசிவிட்டு ,”என்ன  நான்  பிரவசனம்  (உபந்நியாசம்) செய்கிறமாதிரி இருக்கா?” எனக்கேட்க அதற்கு அரங்கனார்,”பிறவசனம்(வெட்டிப்பேச்சு) விடவும் பிரவசனமதேவலை” எனச்சொல்ல அதில்  பூரித்துப்போனார்! சிலபேர் ராசி    பாருங்க நாம  ஏதேதோ சொல்வோம் ஆனா நம்மை கண்டுக்கமாட்டாங்க:!

  ‘நிங்க அரசியல்வாதியா  இல்ல  பிரபலபுள்ளீயா  இவ்வளோபேர்வந்துபாக்கறாங்க?  “ ஆஸ்பித்திரி சிப்பந்தி கேட்டார் அப்பாவிடம்

அப்பா சொன்னார்  ...எல்லாருக்கும் நான் நிறையக்கொடுத்திருக்கேன்ப்பா

அப்படியா  அவளோபணக்காரரா நீங்க?

ஆமாம்ப்பா மனசுல பெரிய பணக்காரந்தான் அன்பைவாரிக்கொடுத்துருக்கேன்ப்பா அதான்  திருப்பிக்கொடுக்க  இப்போ வந்துருக்காங்க...

ஆஸ்பித்திரி சிப்பந்திக்கு புரியவில்லை. ஆனாலும், ஒரு விஷயம் போகிறபோக்கில் சொல்லிப்போனார்.” பக்கத்துரூம்ல  ஒரு இளம்வயசுப்பையன் மண்டைல அடிபட்டுக்கிடக்கான்..  அவன் பொண்டாட்டிவீட்டுல  தன் பொண்ணு வேற மதத்து்காரப்பையனைக்கட்டிக்கிட்டான்னு  பொண்ணுவீட்டுக்காரங்க பையன் தனியா போவிறப்போ  சாத்திடடுபொண்ணை கடத்திட்டுப்போயிட்டாங்க  ப்ரண்ட் ஒருத்தன் கொண்டுவந்துச் சேர்ந்திருக்கான்  பாவம்..  யாரும் பாக்கவரல அனாதையாகிடக்கான்  பரிதாபமா இருக்குது் ஜாதி  மதச்சண்டை  நம்ம நாட்டுல எப்பதான் ஓயுமோ?’


கடைசி வாக்கியம் காதில் சுழன்றுகொண்டே  இருக்க,

  இன்றுகாலை ப்ருந்தாவன் ரயிலில் ஏறினேன்//எதிர் சீட்டில் முதியவர் ஒருவர்  கையில் உத்தராட்சமாலையை உருட்டி ஜபித்தபடி    அமர்ந்திருந்தார்.

அவர்  அருகே  இஸ்லாமிய முதியவர்  மணிமாலை ஒன்றைக்கையில் வைத்து ஜபித்தபடி  இருந்தார்.. இருவரும்  தனித்தனியே  பயணம் செய்ய வந்த ரயில் பயணிகள்தான்!.


.  பிறகு  சில நிமிஷங்களில்  ஜன்னல்வழி அடித்த காற்றில்   இஸ்லாமியப்பெரியவர்  அருகிலிருந்த  சைவப்பெரியவரின்  தோளில்  தனது வெண் தாடி  சாமரம்  வீச  உறங்கிக்கொண்டிருந்தார்.

*************************************************************************************************************************************************************************************************
 பிகு  இன்று என்  அப்பாவின் பிறந்த நாள் என்பதால் நீண்ட நாளைக்குப்பிறகு  பதிவாக எழுதிவிட்டேன்!  யாரும் வாசித்து திரட்டிகளில்  சேர்த்தால்  நன்றி முன்கூட்டியே!
மேலும் படிக்க... "அன்புள்ள அப்பா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.