Social Icons

Pages

Monday, November 04, 2013

சேஷ வாகனம்.(சிறுகதை)

 
 
விஜயபாரதம் தீபாவளி மலரில் வந்துள்ள  சிறுகதை  உங்கள் பார்வைக்கு!
 
சேஷ வாகனம்.

.

"ராஜு !இன்னிக்கு  சேஷவாகனமாம் கிளம்புடா போயிட்டுவரலாம்” என்று அழைத்தபடியே  வந்தார் திருமலை.
 
அறுபது வயதிருக்கும்  திருமலை மாமாவிற்கு. சின்னஸ்ரீரங்கத்தில்  திருமலை என்றால் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. ஊரின் மேல் உள்ள பற்றி்ல் பதவி உயர்வுக்கான தேர்வு எழுத விருப்பமின்றி அருகில் வங்கியில்  கடைசிவரை கிளர்க்காகவே இருந்து  அண்மையில்  பணி ஓய்வு பெற்றவர். சின்ன ஸ்ரீரங்கம் அழகியரங்கன் கோவிலின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருப்பவர்.நெடுநெடுவென ஆறடி உயரத்தில் ரோஜாப்பூ நிறத்தில் பளிச்சென்ற திருமண் முகத்தில் தெரியும் தேஜசில்  மாமாவே எனக்கு  பெருமாளாகக்காட்சி அளிப்பதுபோலிருந்தது.

கிராமம் என்றில்லாத பெரிய நகரம் என்றுமில்லாத  சற்றே பெரிய சிற்றூர்தான்  சின்ன ஸ்ரீரங்கம்.  ஊருக்கே பெருமை கோவிலால்தான். கோவிலில்  வருடா வருடம் நடக்கும் புரட்டாசிமாத உற்சவம்  ஆரம்பித்துவிட்டது.
 
“இதோ வந்துட்டேன்  ....மாமா,நாதஸ்வரம் யார் வாசிக்கப்போறா?” என்று கேட்டேன் நான்.
 
திருமலைக்கு நாதஸ்வரக்கச்சேரி என்றால் உயிர்  .பொதுவாகவே இசையில் நல்ல ரசனை அவருக்கு.அப்பா   இருந்தவரை அவரும் திருமலைமாமாவும் ராகங்களைப்பற்றி விமர்சனம் செய்து பேசிக்கொண்டிருப்பார்கள். அ்ப்பா    மாரடைப்பில் திடீரென போனதும் நானும் அம்மாவும்  என் வேலை காரணமாய்  இரண்டுவருஷம் முன்புஊரைவிட்டே  போய்விட்டோம் இதுபோல உற்சவ சமயங்களில் மட்டும்  ஊர் வந்து பூட்டிக்கிடக்கிற வீட்டைத்திறந்து  10நாட்களும் தங்கிச்செல்வோம்.  இந்ததடவை அம்மா  வடக்கே தீர்த்தயாத்திரைக்குப்போய்விட்டாள் . தனியே இருக்கும் உணர்வே ஊரில் ஏற்பட சாத்தியமில்லை.

கோயிலில் தினமும் யாராவது ஊர்க்காரர்களின் மண்டகப்படி இருக்கும் ததியாராதனம் நடக்கும் சாப்பாட்டுக்குக்கவலை இல்லை .திருமலை மாமாவின் குடும்பம் இருக்கிறவரை எனக்கு எதற்கும்  கவலை இல்லை. எனது இன்னொரு அப்பா திருமலை மாமா.
 
“யாரோ  தங்கமணின்னு ஒருத்தராம்.. இதல்லாம் என்ன கச்சேரி அந்த நாளில் அனந்தபத்மநாபன் வாசிக்கணும் அதைக்கேக்கணும்” என்றார் சுவாரஸ்யமில்லாமல்.
 
அந்த சமயம் கோவில் வாசலிலிருந்து  பெருமாள் புறப்பாட்டின் வேட்டுச்சத்தம் கேட்டது இல்லாவிட்டால் திருமலை ஒரு புராணமே பாடி இருப்பார்.கோவிலை நோக்கி அவர் முன்னே நடக்க நான் பின் தொடர்ந்தேன்.
முத்தும் ரத்தினமும் மின்ன  வைரங்கள்  ஒளியினை வாரிக்கொட்ட எம்பெருமான் நாகவாகனத்தில்  கண்கொள்ளா காட்சி அளித்தார். படமெடுக்கும்ஐந்துதலை நாகவாகனம் முழுவதும் பொன் பூச்சில்  தகதகத்தது.
‘இருளறியச்சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த அரவரசப்பெருஞ்ஜோதி’என்று ஆழ்வார் பாடியதுபோல  நாகத்தலைகள் கண்ணையும் மனதையும் நிறைப்பதை உணர்ந்தேன்.
 
வாகனத்தை  தோளில் சுமந்தபடி ஸ்ரீபாதம் தாங்கிகள் முன்னே  சென்றனர்.   நாங்களும்  கூடவே நடக்க ஆரம்பித்தோம்.





 ராகமாலிகையை நாதஸ்வரத்தில்  இழைத்துக்கொண்டிருந்தார் தங்கமணி.சிவரஞ்சனி  கரகரப்ரியாவைத் தொடர்ந்து  கீரவாணிராகத்தை நாதமாய்க்குழைத்தபோது காதுகளைத்திறந்துகொண்ட நான் கண்களை அப்படியே  அனுபவிக்கும் நோக்கத்தில் மூடிக்கொண்டேன்.

இசைக்குத்தான் எத்தனை கவர்ச்சி.செவிவழிபுகுந்து இதயத்தை வருட இசையால்மட்டுமே முடியும்.ராகமாலிகையில் அடுத்து புன்னாகவராளிராகத்தை வாசித்தபோது மெய் சிலிர்க்க ஆரம்பித்தது. நெஞ்சக்காட்டில் பாம்பு ஒன்று புகுந்து ஆடுகி்றமாதiிரி இருந்தது.
 
தiிடுக்கிட்டுக்கண்விழித்தேன்.
 
எதிரே நாகவாகனத்தில் எம்பெருமான்! ‘என்ன ராஜூ  ஊரைவிட்டுப்போனாலும் என்னை மறக்கவில்லைதானே? ‘என்று குறும்பாய் கேட்பதுபோல இருந்தது. அதெப்படி இருபத்தி ஐந்து வருடம் புரண்ட மண்ணை மறக்கமுடியுமா என்ன? அப்பா சொல்லிக்கொடுத்த ஆழ்வார்பாசுரங்களும்  கீதை உரைகளும் என்னை மேலும் உரம்போட்டு ஊர் நினைவை உற்சாகப்படுத்துமே தவிர மறக்க வைத்துவிடுமா?
நானும்  மகிழ்ச்சிகலந்த பார்வையை அரவணையில் வீற்றிருந்த  எம்பெருமானிடம்  செலுத்தியபோது  ஐந்துதலை நாகம் மெல்ல அசைந்ததுபோல இருந்தது. என்ன! வாகனத்தில் நாகத்தலைகள் எங்காவது  தானாய்அசையுமா?
ஒரு நொடிதான் அசைவு நின்று மறுபடி நாகத்தலைகள் நிமிர்ந்தே நிற்க ஆரம்பித்தது . என்ன இது பிரமையா? மறுபடி நிமிர்ந்தேன் லோகமூர்த்தி சிரித்துக்கொண்டிருந்தார். அப்பாடி எல்லாம் பிரமை வெறும் பிரமைதான்!
 
 .
 
”ராஜூ,போகலாமா? ”திருமலை என் தோளைத்தட்டினார். என்ன ஆயிற்று மாமா முன்பெல்லாம்  கோவிலின் உற்சவம் என்றால்  சந்நிதி வாசலிலேயே  நின்றுகொண்டிருப்பார், அர்ச்சனை , அலங்காரம் பிரசாதம் அம்சை ஆகி விநியோகம்  வரைஎல்லாம் சரிவர நடக்கிறதா என்று  பார்ப்பார். கோயில் ட்ரஸ்டி என்ற முறையில் கணக்குவழக்குகள் எல்லாம் கவனிப்பார் வீதி உலா சமயங்களில் வேதகோஷ்டியோடு தானும் சேர்ந்து நடப்பார். போனவருஷமே மாமா அவ்வளவு உற்சாகமாய் இல்லைதான்  இந்தவருஷம் இன்னமும்  வாடிப்போனவராய் தெரிகிறாரே!
 
‘ஏன் மாமா கச்சேரி அற்புதமா யிருக்கே மனசே இல்லையே கிளம்பறதுக்கு”
 
“கிளம்பு சொல்றேன்.. எனக்கும்மனசே சரியில்லை”நகர ஆரம்பித்தார்.
 
திருமலையின் குரல் சுரத்தில்லாமலிருக்கவும் ‘சரி;என சொல்லி அவரைப்பின் தொடர்ந்தேன்.
 
வழியெல்லாம்  அவர் பேசவே இல்லை திடீரென,”ராஜூ!   உனக்கு சாரநாதபட்டரைத்தெரியுமோல்லியோ என்று கேட்டார்.
 
“தெரியுமே  மாமா .இப்போ  ரண்டுவருஷமா  கோவிலில்  பெருமாளுக்குக்கைங்கர்யம் பண்ணுகிற பட்டப்பா பட்டரின் அண்ணாதானே? நீங்க அடிக்கடி   புகழ்ந்து சொல்லும்  ரெங்கபட்டரின் மருமான் தானே அவர்?”
 
“ஆமா அவரைத்தான் இப்ப  பாக்கப்போறோம்”
 
கீழ் வீதியின் கோடியிலிருந்த  ஒரு வீட்டை அடைந்தோம்.
 
வாசல்திண்ணையில்  விசிறியை  வீசிக்கொண்டு உட்கார்ந்திருந்த சாரநாதபட்டர் எங்களைக்கண்டதும் முகம் மலர்ந்தார்.

“வாடா ராஜூ! சென்னைல  ஜோலியாக்கும்?  கல்யாணம்  எப்ப?  ஏதும்  பட்டணத்துல வேற ஜாதிக்காரப்பொண்ணைப் பாத்து வச்சிட்டியா?” என்றார்  கிண்டலும்  உரிமையும் கலந்த குரலில்.

“அதெல்லாம்  பண்ணமாட்டான் ராஜகோபாலன்.. வேதசிரோன்மணியோட பேரன்... அவனும்  வேதம் படிச்சிருக்கான். வேலை நிமித்தம் வெளியூர்போயிட்டானே தவிர அவன் ஊரையும் கோயிலையும் பெருமாளையும் மறக்கிறவன் இல்லை.பெரியவா ஆசிர்வாதம் அவனுக்கு நிறைய இருக்கு. பெருமாளை ஆத்மார்த்தமா  நேசிக்கிறவா தப்பு பண்ணமாட்டா” என்றார் திருமலைமாமா  நறுக் என்ற  குரலில்.

மாமாவின் வார்த்தைகளில் எனக்குப்பெருமையாக இருந்தாலும் அவர் ஏதோ கோபத்தில் இருப்பதை முகம் காட்டியது.




“வாங்கோ  திருமலை என்ன அதிசியம்  தேவரீர் என் குடிசைக்கு  வந்திருக்கிறீர்கள்!  நானும் சேஷ வாகனம் சேவிக்கப்போகாமல்  கால்வலின்னு  திண்ணைலயே  உக்காந்துட்டேன்,.  இப்படி உக்காருங்கோ ரண்டுபேரும்” என்று  அமர்ந்தபடியே வரவேற்றார் 
 
மாமா உட்காராமலேயே,” சாரநாதா! உங்க மாமா முன்னே எழுதிவைச்சிருந்தாரே அந்த சுவடிகளைக்கொடு” என்றார் சற்று  அதட்டலான குரலில்.
 
“என்ன திருமலை  இப்போ திடிர்னு கேக்கறீர்?போனவருஷம் எடுத்துக்கொண்டுபோங்கள்  இங்கே யாருக்கு சுவடியெல்லாம்  படிக்கப்பொறுமை இருக்குன்னு மன்றாடினேன் நீங்க அப்போ  எடுத்துக்கவேஇல்லை”
 
“அது பழையசமாசாரம் ஆனா இப்ப அதைப்பார்த்தாகணும்னு தோன்றது கொண்டுவாயேன்..”
 
்  உள்ளேபோனவர் திரும்பி வருகிற கால்மணி நேரமும் அப்படியே நின்றுகொண்டிருந்தோம்.

சுவடிகளைப்பெற்றுக்கொண்டு”வரேன்” என்றவர் விருட்டென நடக்க ஆரம்பித்தார்.
 
எனக்கு மாமாவின் செய்கை  புதுமையாய் இருக்கவே”சுவடில என்ன இருக்கு?’ என்று கேட்டேன்.
 
“மாமா பெருமுச்சுவிட்டபடி “நாளைக்கு   வாயேன்,பேசலாம் ” என்றார்

. மாமாவுக்கு என்ன ஆயிற்றுதிடீரென்று?
 
என்னவோ ஆகி இருக்கி்றது இவ்வளவு பதட்டம் அவரை ஆட்கொண்டு நான் பார்த்ததில்லை. பெருமாள் புறப்பாடு என்றால்  வீதி உலா  முடிகிறவரை  பெருமாள்கூடவே இருப்பவர்  இப்படி  சட்டென  தன் வீட்டை நோக்கி நடப்பது வியப்பாகப்பட்டது.


மறுநாள் போனேன்.

“வா  ராஜு.. உட்கார்.. நேத்திக்கு உன்னை ரொம்ப குழப்பிவிட்டுட்டேனோ? எனக்கே  ஏன் அப்படி நடந்துகொண்டேன்னு புரியலைப்பா..”  என்று சொல்லி சிரிக்க முயன்றார். அவர்முன்  மேஜையில் பழைய ஓலைச்சுவடிகள் கிடந்தன.
அவரே தொடர்ந்தார்.”கோயில் முன்னமாதிரி இல்லை ராஜூ.. ரங்கபட்டர் இருந்தவரை  அவரது தொண்ணூறுவயசுவரை கோயிலுக்காக  உழைச்சார் உண்மையான சேவகம் பண்ணினார். அவர் இருந்தவரை கோவில் நிர்வாகத்தில் எந்தக் குளறுபடியும் வரலை.அவர்போனதும் அவருக்கு வாரிசு இல்லாததால் மருமான்கள் இருவரும் போட்டியிட  கால்வலி தொல்லையால் சாரநாதனும் கோவிலுக்கு கைங்கர்யம் பண்ண போகாமல் அடிக்கடி வீட்டோட தங்கிவிட  பட்டப்பா பட்டர் தான் முழுப்பொறுப்பு ஏற்கிறான். அவனுடைய அரசியல்வாதிகளின் சகவாசத்தில் கோயிலில் அக்கிரமம் நடக்கிறது அதைஎனக்குத்தெரியாமல் பட்டப்பா மறைக்கப்பார்க்கிறான்.
இன்னிக்கு நாகவாகனத்தில் இருக்கிறது பழைய பொன் நாகமே இல்லை அதேபோல  வெள்ளீல பண்ணி தங்கமுலாம் பூசி  வச்சிட்டான் பட்டப்பா..  இதெல்லாம் அரசல்புரசலா எனக்குத்தெரிந்துதான் இருக்கிறது ஆனா எதையும் கேட்கமுடியாமல்  அவனோட சமீபத்திய அரசியல் பலம்  என்னைக்கட்டிப்போடறது. ..ஆனா  தெய்வம் எல்லாத்தையும் பாத்துண்டுதான் இருக்கு”

பெருமூச்சுவிட்டு நிறுத்தினார்.

ஓஹோ மாமாவின்  கவலை இதுதானா?

திருமலை  மேலும் பேசத்தொடங்கினார்.”ராஜூ..அதிருக்கட்டும்..இங்கே பாரேன் இது ரங்கபட்டர் எழுதின ஓலைச்சுவடிகள் எனக்கு சுவடி வாசிக்கிற கலை தெரியும் அதான்  நேத்து கேட்டு வாங்கிண்டுவந்தேன் இதுல அவர் தான்  பகவானை நேரில் பார்த்ததை அனுபவிச்சி எழுதி இருக்கார்,..”

“அப்படியா?”

‘ஆமாம் ராஜூ அதுவும் வெறும் சங்குசக்கரத்தோட  இல்லை தலைக்குமேலே குடைபிடிச்சமாதிரி ஐந்துதலை நாகத்தோட    சேஷவாகன உற்சவத்திருநாளில் தரிசித்து இருக்கார்..அண்ணலின் சிரம் மீது நிஜ நாகம் படமெடுத்து ஆடுவதை  அப்படியே வர்ணித்து எழுதி இருக்கிறார் ராஜூ! இதுல ஒரு விசேஷம் என்னன்னா  அந்த சொரூபம் பார்த்ததுமே அவருக்கு  திகைப்பில் வாய் அடைச்சிபோய்டுத்தாம்.   ஊமையாகிப்போனேன்  என் அனுபவத்தை ஒருஓலைச் சுவடியில் எழுதுகிறேன்”ன்னு   அன்னிக்கே என்னிடம் ஜாடையில் சொன்னார் அப்போது நான் இதை  பெரிதாக எண்ணவே இல்லை..”

“இது ரொம்பவே ஆச்சரியம் மாமா?”

“ஆச்சரியம் ஒன்றுமே இல்லை ராஜூ..எங்கோ வெடித்த அணுகுண்டின் கதிர்கள் எங்கோ இருக்கிறவனைத் தாக்கிடறதுன்னு  படிக்கலையா? அதை நம்புகிறாய் இதை நம்பமாட்டாயா?”

என்பிரமை நீங்குமுன்பே அவர் தொடர்ந்தார்.

”ரங்கபட்டர் சிறுவயதுமுதலே கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர். அவர் அர்ச்சனை செய்தாலோ  சஹஸ்ரநாமம் சொன்னாலோ கணீரென கேட்கும் ஆத்மார்த்தமாய் செய்வார். அரைகுறையாய் எதையும் செய்யமாட்டார். சேஷவாகனம்  மட்டும் அவர்பொறுப்புதான்  யாரையும் நெருங்கவிடமாட்டார்.
பழையநாளில் விஜயநகர ராஜா  ஒருத்தர்அன்பளிப்பாய்கொடுத்ததாம்  இந்த ஐந்துதலைநாக வாகனம்  முழுக்கச்சொக்கத்தங்கமாம். ரங்கபட்டருக்கு மனசும் கையும் சுத்தம். இந்த ஓலையில் அவர்  எல்லா விவரமும் எழுதி இருக்கிறார்.  வாசிக்கிறேன் கேளேன்..“

திருமலை ஆர்வமாய் வாசிக்க ஆரம்பித்தார்.

‘ இன்னிக்கு சேஷ வாகனம்.வாகனத்தில் பெருமாளை எழுந்தருளப்பண்ணிவிட்டு ஒருமுறை பெருமாளைப்பார்க்கிறேன்..ஸ்வர்ணாபரணங்களும் முத்து ரத்தினமாலைகளும் பெருமாளின் திருமேனியில்  பெருமையுடன்  வீற்றிருக்கின்றன. விருட்சியும் தவனமும் சேர்த்துக்கட்டிய பூமாலையும் மணக்கக்காட்சி அளிக்கிறது..ஐந்துதலையுடன்  படமெடுக்கும் தங்க நாகம்  மின்னுகிறதுஆனாலும் ஏதோ குறை தெரிகிறதே...பூக்களாலேயே  பெருமாளின் முதுக்குப்புறத்தை உயர்த்திக்காட்டவேண்டாமோ? சட்டென கோவில் நந்தவனத்துக்கு ஓடினேன்.புதராய் மண்டிக்கிடந்தது  தாழம்பூ.அப்படியே பறித்துக்கொண்டுவந்து  பெருமாளின்  பின்பக்கமாக சற்று உயரக்காணும்படியாக விசிறிபோல  தாழம்பூவை வைத்து அலங்கரித்தேன் ஆஹா! மனசு குளிர்ந்தது இப்போதுதான்.  என்ன அழகு என்ன அழகு எம்பெருமான்  என்னமுதினைக்கண்ட கண்கள் மற்றொன்றினைக்காணாவே என்று ஆழ்வார்பெருமான் அருளியதும் எத்துணைப்பொருத்தம்!பார்த்துக்கொண்டே இருக்கையில் பெருமானின் தலைக்குமேலே ஐந்து தலைநாகம் அழகாக ஆடியபடி குடைபிடிக்கிறது.  பிரமையோ?  ஊஹும் இல்லை இல்லை நாகம் அப்படியே இருக்கிறது..நிஜ நாகம்!உடம்பே சிலிர்க்கிறது அப்படியே சாஷ்டாங்கமாய் கீழே விழுந்து சேவித்தேன்.”எம்பெருமானே  என்னே உன் கருணை! அலங்கார வாகனத்தை அசல்வாகனமாய் மாற்றிக்காட்டிவிட்டாயே!” கண் நிறைக்க  தரிசித்தேன் ..கண்ணில் நீர் பெருகிப்பார்வையை மறைத்தது துடைத்துக்கொண்டு திரும்பிப்பார்க்கையில் பெருமாள் இருக்கிறார் குடைபிடித்த நாகம் மறைந்திருந்தது.
அதன்பின்பு எனக்கு உடல் தளர்ந்துவிட்டது. படுக்கையில் விழுந்துவிட்டேன்திருநாடேகும் நாளுக்குக்காத்திருக்கிறேன் எம்பெருமான் திருவடியை அடைய சித்தமாகிவிட்டேன் அதற்குமுன்பாக  என் அனுபவத்தை இதில் எழுதி வைக்கிறேன். ‘

திருமலை கண்பனிக்கப்  படித்துமுடித்ததும் எனக்கு நேற்றுஇதேபோல்  படமெடுத்து  தலை நிமிர்த்தி நின்ற   காட்சி நினைவுக்குவந்தது. நான் கண்டதும்  இதைத்தானே!  ்  சேச்சே  ரங்கபட்டர் என்னும் உயர்ந்த ஆத்மா எங்கே நான் எங்கே! பிரமைதான் இதையெல்லாம் மாமாவிடம் சொல்லிப்பெருமையடித்துக்கொள்ளக்  கூடாது.

ஒருவாரம் ஓடிவிட்டது ஆயிற்று நானும் ஊர்போகிற நாள் வந்துவிட்டது.

கோவில் பக்கம்  போனவன் அங்கே நந்தவனத்தின் அருகே பெரிய கூட்டத்தைக்காணவும் திகைப்புடன் அருகில் போனேன்.

“பட்டப்பா  பட்டரை பாம்பு கடிச்சிடுத்து... நந்தவனத்துல தாழம்பூப்புதர்ல தாழம்  பூப்பறிக்க  போனவரை பாம்பு தீண்டியதும் கூப்பாடு போட்ருக்கார்  எல்லாரும் ஓடி வந்தாளாம்.  டவுன் அஸ்பித்ரிக்கு கார்ல  கூட்டிண்டு போய்ருக்கா..ஒருத்தர் பாம்பு நெளிஞ்சி ஓடறதைபபர்த்து  ஆ’ன்னு  வீறிட்டாராம்  .அஞ்சுதலைப்பாம்பாம். அஞ்சுதலைப்பாம்பைப்பார்த்தேன் அதுதான் பட்டரைக்கடிச்சிடுத்துன்னு சொன்னார் ..பெரிய  பாம்பாம் அடிக்க பின்னாடியே  போய்ருக்கா.. அது  தப்பிச்சிப்போய்டுத்துபோல்ருக்கு  பாம்பை அடிக்கப்போனவாளை இன்னும் காணல..பட்டப்பா வேற  உயிருக்கு ஆபத்தான நிலைல இருக்கார்..”

நான் யோசிக்கலானேன்.  தாழம்பூப்புதர்ப்பாம்பென்றால் முன்னர் இரண்டுவருஷம் முன்பு ரங்கபட்டருக்குக்காட்சி அளித்த அதே ஐந்துதலைப்பாம்புதானோ? இங்கிருந்துதானே படமெடுத்து வந்து அவருக்கு அரிய காட்சியைக்கொடுத்தது? உண்மையான பக்தராகிய அவரைத்தீண்டாத நாகம் கோவிலுக்கு துரோகம் செய்யும் பட்டப்பா பட்டரைக்கண்டதும் வெகுண்டு தீண்டி விட்டதோ?

அப்படியானால் நேற்று எனக்கு ரங்கபட்டர் கண்ட அதே காட்சியை பெருமாள் காணவைத்தாரே! கூடவே சி்ன்ன சிரிப்பும் சிரித்துவைத்தாரே!  கலியுகத்தில்  வேறு எவ்விதம் பக்தருக்குக்கடவுள்   பிரசன்னமாகப்போகிறார்? சீறவேண்டிய பாம்பு அடங்கிக்குடை பிடித்ததே அதுவல்லவோ விசேஷம்?
நான் கண்களைத்  துடைத்துக்கொண்டேன்.





****************************************************************







--

 
 
. .
Reply
Forward
 
    
மேலும் படிக்க... "சேஷ வாகனம்.(சிறுகதை)"

Tuesday, October 29, 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி.

     




ஒளி காட்டும் வழி!
************************

இருளும் ஒளியும்
 
இணைந்தது வாழ்க்கை!
 
ஒளிமயமான எதிர்காலம்
 
ஒருநாள் வருமென்பதே நம்பிக்கை!
 
ஓலம் கேவல் பெருமூச்சென்றே
 
காலம்  ஓடிக்கொண்டிருக்க
 
கண்முன் கருமை படர்கிறது,
 
எண்ணற்றக்கவலை பிறக்கிறது.
 
விறகாய் எரியும் பண்புகள்,
 
வெறியாய் மீறும் புனிதங்கள்.
 
சிறகைவிரிக்கும்  கழுகுக்கூட்டம்,
 
உறவெனச்சொல்லிப்போடும் ஆட்டம்.
 
கண்கள் முன்னே கறுப்புச்சாயம்
 
காலம் இதனால் மாறிய மாயம்!
 
’பாரதநாடு பழம்பெரும் நாடு
 
நீரதன் புதல்வர் ’என்றான் பாரதி!
 
நேரெதிர்மோதிடும் தீமை இருளை
 
நெஞ்சம் சேர்ந்து விரட்டிடுவோம்
 
நேர்மைப்பாதையில் நடந்திடுவோம்!
 
பாரதநாட்டினில் பிறந்த நமக்கு
 
பந்தம் சொந்தம் மறந்திடுமோ?

வருடம் ஒருநாள்வரும் தீபாவளி
 
வாழ்நாளுக்கான ஆயத்த ஒளி!  
 
ஒன்றிய கைகள் ஏற்றிடும் ஒளியில்
 
ஓடிவிடாதோ  இருள்தடுமாறி?
 
ஒற்றுமைதான் உயர்வென்றானால்
 
ஓங்கிய ஒளிதான் வழிகாட்டாதோ!



 
மேலும் படிக்க... "ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை போட்டி."

Thursday, October 24, 2013

திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!

 
 
 
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்ப்படுத்த
விமலன் விண்ணவர்கோன்  விரையார் பொழிலவேங்கடவன்*
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான்* திருக்கமலபாதம் வந்தென் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
 
முதல் வரியைப்பாருங்கள் அமலனாம் ஆதிபிரானாம்
 
அவன்அடியார்க்கு ஆட்படுத்த..வேண்டுமாம்
 
//பூதாதி: நிதி: அவய்ய:
 
பூதாநாம் ஆதிகாரணத்வாத் பூதாதி:’ என்பது ஸ்ரீ பகவத் பாதரின் உரை. 
 
 வெறுமனே ஆதி அன்று. பூதங்கள் எல்லாம் சென்று சேரத் துடிக்கும் லட்சியமான ஆதி. அனைத்துப் பொருட்களுக்கும் அனைத்து விருப்பங்களையும் அளிக்கும் ஆதி. எது இருந்தால் உலக இன்பங்கள் கூட இனிக்குமோ, எது இல்லையென்றால் வேறு எது இருந்தும் இலலமையே மிஞ்சுமோ அப்படிப்பட்ட ஆதி, உண்டான பொருட்களுக்கு இந்த பூதாதி: என்கிறார் ஸ்ரீபராசர பட்டர்.// என்று  விஷ்ணு சஹஸ்ரநாம விளக்கத்தை  அருமையாக  எழுதிவரும் அன்பரின் மடலில் இதை வாசிக்கவும்  ஆதிபிரானைப்பற்றி  இன்று  எழுத ஆரம்பிக்கவும் சரியாக இருக்கிறது!
 
 
ஆண்டவனைப்பாடுமுன் அவன் அடியார்களைப்பாடுகிறார்  வணங்குகிறார் ஆழ்வார் பெருமான்.. அதைதானே அண்ணல் விரும்புவான்?
 
அமலன்  விமலன்  நிமலன் நின்மலன்  என்று  அண்ணலை நான்குமுறை  திருப்பாணாழ்வார் ஏன் அழைக்கிறார்?
 அமலன்..பரிசுத்தமானவன்; குறைகள் அற்றவன்; மேலும் பிறர் குறைகளையும் களைபவன்.

விமலன் - அண்டியவர்களிடம் குற்றம் காண்பது என்ற குறை இல்லாதவன்.

நிமலன் - அடியார்கள் வேண்டினால் தான் உபகாரம் செய்வேன் என்ற குறை இல்லாதவன். எதையும் எதிர்பாராதவன்.

நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
 
”என்னையா என்னையா  அரங்கன் அழைத்துவரச்சொன்னான்?” என்று நம்பமுடியாமல் கேட்டு  தலையைத்தூக்கிய ஆழ்வார்பெருமானுக்கு  மலையப்பன்  கண்முன் வந்துவிட்டான்.உயரேஇருப்பவன் அவந்தானே ?

அவனைத்துதித்து  முடிக்கவும்அரங்கனின்  பாதம் விழிகளின் வசம்  அங்கு வாசம்!
ஆதிபிரானை வேங்கடவனை முன்வைத்து அரங்கனை  பாதம்  தொழுகிறார் திருப்பாணாழ்வார்.

அரங்கனின் சந்நிதிக்குள்  நுழையுமுன்பாக வலப்புறம்  வேங்கடவனின்    சித்திரம்  காட்சி அளிக்கும்
 
(என் குருவின் அன்பு ஆணைப்படி   இன்றுமுதல் இந்தத்தலைப்பில்  ஆழ்வார்களை  அன்போடு   மேலும் மேலும் ஆராதிக்க அரங்கன்  அருளவேண்டும்)



--
 
 
மேலும் படிக்க... "திகட்டாததே திவ்யப்பிரபந்தமே!"

Monday, October 14, 2013

சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!

 
 
 
 
சக்திவருகிறாள் சக்திவருகிறாள்
முக்தியதை நமக்களித்திடவே பரா
சக்தி  வருகிறாள் சக்தி வருகிறாள்
 
கூறுவோம் அவள்பேரை  காலைமாலை இடை
யூறெல்லாம் தேடிப்போகுமிடம் பாலை
 
யாதுமாகித்தான்  நிற்பவள் அறிவாள்  நம்துன்பம்
ஏதும் இல்லாமல் அதை அழித்துச் செறிவாள்
 
 ஆலம்குடித்தவன் ஆயுள் வளர்த்தவள் மகாசக்தி அவள்
சீலம் மிக தந்து சிந்தையைவளர்க்கும்  ஆதிபராசக்தி!
 
எங்கும் எதிலும்  வெற்றியே பெற்றிட  வேண்டிவணங்கிடுவோம்
மங்களம்பாடியே  அன்னை திருப்பாதம் பணிந்திடுவோம்!
மேலும் படிக்க... "சக்திவருகிறாள் சக்திவருகிறாள்!"

Sunday, October 13, 2013

ஆதலினால் வேண்டுகின்றேனே!

கமலமே  உந்தன் வெண்ணிறமே
அமரவே  என்  உள்ளமே
உயருமே  உவகை கொள்ளுமே!

வீணையே உன் வடிவு விந்தையே
ஆணையாய்  உன் ஒலியிலே
இருப்பவள் தன்னையே
அருள்தரச்சொல்லுவையே!

கவிதை  வடிக்கும் பாவலரே
தவிக்குமெனக்கு அவள்தங்கும்
உள்ளமதை தாருமே!

நான்மறையே நல் வேதமே
உன் உள்செல்ல வழிதாயே(ன்)
ஒளிர்நின்றிருக்கும் ஒரு மகளை
தெளிவுற யான்நோக்கவே!

கருணை வாசகமே
அ்ருந்தவம் செயும் முனிவாழுமிடம்
எனைக்கடத்தே(ன்) கலைமகள்
தனைக்காண தயை செய்யே(ன்)!

 தீம்குரல் இசைக்கும் மாதே
இம்மாதுக்கும்  உன் பாட்டை அருளே(ன்)
மழலை மக்களே உங்கள் பேச்சினில்
வாழும் அவளை க்காணவையுங்களே(ன்)!

கீதம் பாடும் குயிலின் குரலே
கிளியின் நாவே! தேடிதன்
இருப்பிடம்  எனவந்த இனியவளைக்
கருத்துடனே தான்காட்டுங்களேன்

குலவு சித்திரமே கோபுரமே கோயிலே
புலவன் பாரதி சொன்னானே
ஈதனைத்திலும் எழிலிடை உற்றாளேயென்று
ஆதலினால் வேண்டுகிறேனே!

 
மேலும் படிக்க... "ஆதலினால் வேண்டுகின்றேனே!"

Saturday, October 12, 2013

கலைவாணி அருளாலே.....

 
 
 
 
 
கற்ற கல்வி கூட வரும்
கலைவாணி அருளாலே
சிலைபோலஞானம் உறுதி பெறும்
 
அடியெடுத்துப்பாடுங்கால்
முடித்துவைக்க துணைபுரிவாள்
 
எதுகையொடு மோனையும்
அதுவதுவாய் பொருந்திவரும்
பாக்கள் எனும் பூக்கள் விரிய
ஆக்கசக்தி தந்து  ஊக்குவிப்பாள்
வெண்பூவில் வீற்றிருக்கும் தெய்வப்
பெண்பூவின் அருளிருந்தால்
புலமையது புகுந்துகொள்ளும்
அளவற்ற புகழ் தேடிவரும்
மேலும் படிக்க... "கலைவாணி அருளாலே....."

Friday, October 11, 2013

வாணி வரம் தருவாய் நீ!


 
 
 
வாணி வரம்  தருவாய் நீ
காணி நிலம் கேட்ட கவிஞனின்
நாவில் நர்த்தனம் செய்த தேவி நீ
 
கல்விக்கு அதிபதி கருணைக்கடலும் நீ
செல்வமாய் உன் அருளிருப்பின்
கொள்ளூமோ பழவினைதான்?
 
பாமரனாயிருந்தவனுக்குப்
பாட்டுக்கனிகுலுங்கும்
பா  மரமாக்கிவைத்த பாரதி!
 
 
அறிவைப்பெருக்கும் அருவி நீ
செறிந்த ஞானம்தரும் செல்வி நீ
உரிய நேரத்திலே உயரக்கொண்டுசென்று
அரிய புகழ் அளிக்கும் சரஸ்வதி !
 
மேலும் படிக்க... "வாணி வரம் தருவாய் நீ!"

Thursday, October 10, 2013

கனா கண்டாளின் கழல் போற்றி!



நிலமங்கைக்கு
 நீண்டநாள் ஆசை
பொறுமையின் சிகரத்திற்கு
 பூமியில் செய்யவேண்டுமாம்
பூவண்ணனுக்குப்பூசை
அண்ணலின்  ஒரு தாரம்
நிலமகள் அவதாரம்
ஜனகனுக்கு சீதை
அண்ணல்புகழ்பாடும்
 ஆழ்வாருக்கு கோதை
நிலமகள் என்னும் தையல்
துளசிதளத்துப்புதையல்
சூடிக்கொடுத்தாள் பூமாலை
பாடிக்கொடுத்தாள் பாமாலை
 
 
கோதையெனப்பெயர்பெற்றாள்
திருப்பாவையெனும்
வேத சாரமதைத்தந்தாள்
மானிடர்க்கென வாழ்கிலேன்
என விரதம் பூண்டாள்
மாலவனையே கரம் பற்றக்
கனா கண்டாள் ஆண்டாள்
அரங்கனை மட்டுமா
அன்பர்மனத்தையும்  ஆண்டாள்!
மேலும் படிக்க... "கனா கண்டாளின் கழல் போற்றி!"

Wednesday, October 09, 2013

பொன் மகள் வந்தாள்!

 
 
 
எனதுனதென்பதெலாம் கனகமகள்
தனது திருவடியினில்சரணமென
மனமதுவும் நினைத்துமிக நெகிழ்ந்துவிட
கணப்பொழுதில் கரைந்துவிடும்
தினமுமருள் சேர்ந்துவரும்
மாதவனின்சக்தியவ்ள்
பாதமதைப்பணியுங்கால்
பாதகங்கள் பறந்துவிடும்
சேதமதுவாழ்க்கையிலே
 சேராது  தடுத்துவிடும்
கற்பகமே கனியமுதே
கண்டோர்கள் கையெடுக்கும்
 சிற்ப வடிவழகே
பொற்புடைய பொன்மகளைப்
போற்றிப்பரவிநின்றால்
நிற்காது துன்பத்தீ தூய
நீராகும் அவளாலே!
மேலும் படிக்க... "பொன் மகள் வந்தாள்!"

Tuesday, October 08, 2013

படிதாண்டா பத்தினி!

to தமிழ், vallamai, மின்தமிழ், தமிழ்
 
 
சீரார் மதில்கள் சூழ் திருவரங்க மாநகரில்
காரார்ந்த மேனியனின் கன்னல் கண்மணியை
வேரதைவாழ்த்தும் விருட்சமாய் வாழ்த்துவேன்
சீரதாய் தமிழை என் சிந்தையிலே வைத்தவளை வாழ்த்துவேன்!
 
. .தேரெழுந்தூர் பெற்ற தமிழ்ச்செல்வமது
பாரெல்லாம் புகழ்கின்ற  ராமகாதைதன்னை
அரங்கேற்றம் செய்திடவே அலைந்திட்டபோது
அரங்கநகர் அன்னை தன் எதிரிலேயே அமரவைத்து
கரங்கொண்டு ஆசிசெய்தாள் கம்பனுக்கு நரசிம்மமும்
சிரக்கம்பம்செய்து  சிரித்து ஆமோதித்தார்
படிதாண்டாபத்தினி !அவள் பாதம் பற்று நீ!
 
மேலும் படிக்க... "படிதாண்டா பத்தினி!"

Monday, October 07, 2013

உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!





உமையவளோ உண்மைப்பரம்பொருளோ
எமைக்காக்கும் சமயபுரத்தவளோ
உக்கிரம் கொண்டவளோ  உலகில் நிறைந்திருக்கும்
வக்கிரமனத்தோரின் வலிமையை அழிப்பவளோ
சக்கரசங்கக்கரத்தானின் சகோதரியோ   சகலகலாவல்லியோ
எக்கரம் ஏந்தி நிற்பினும்  அருள்பிச்சையை  ஈந்திடும் எம் தாயோ?
 
 
மாவிளக்கேற்றிவைப்போர் வாழ்வில் மனையிலே வளம் வைப்பவளோ
பாவிளக்கேற்றிவைத்தால்  பாழும் இருள் அகற்றி ஞானத்
தூவிளக்கேற்றிவைத்து துயரெனும் இருட்டைத்துரத்து்பவளோ
காலம் முழுதும் நம்மைக்காப்பவளோ காவலாய் இருப்பவளோ
ஞாலம் அனைத்திற்கும் மூலமோ
 ஞானமின்றி நான் இன்னும் புலம்புவதோ?!
மேலும் படிக்க... "உமையவளோ உண்மைப்பரம்பொருளோ!"

Sunday, October 06, 2013

நம் அன்னை மீனாட்சி!

 
 

 
 
 
வாராத  கல்விவரும் வளர்பிறைபோல் பொருளும் வரும்
கூராகும் புத்தியும் நல்லோர் கூட்டமும் சேர்ந்துவரும்
யாராலும் பயமில்லை நம் அன்னை மீனாட்சிதன்
பாதார விந்தங்களை ப்பற்றிப்பணிவோர்க்கு என்றும்!
மேலும் படிக்க... "நம் அன்னை மீனாட்சி!"

Saturday, October 05, 2013

வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!

எங்கெங்குகாணினும் சக்தியடா!
என்றவன் எங்கள்பாரதியடா!
அங்கங்கே அவன்கண்ட ஓவியமே
தங்கக்கவிதையாய் தரணியில் நின்றதுவே!
 
சக்திதனை துணையாக்கிக்கொள்வான்
பக்திப்பாமாலை பலபடைப்பான்
 
திக்கெட்டும் வெற்றிக்கொடிகட்டென்பான்
தக்கத்திமியென்றே குதிப்பான்!
 
சக்திக்கென்றால் அவன் எழுதுகோலும்
திக்குமுக்காடித்தான்போகும்!
 
வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி
கானமயிலும் சக்தி மோனத்தவமும் சக்தி
யானை சக்தி சிறுபூனை சக்தி
பார்க்கும் பொருளெல்லாம் சக்தி
களிப்பில் கூத்தாடி நிற்கும்
கவிஞனுக்கே அவள்மீது பக்தி
மேலும் படிக்க... "வானம் சக்தி ஆழ்கடலும் சக்தி!"

Friday, October 04, 2013

சக்தி ரதம்.

சென்ற ஆண்டி ல்இதே  மஹாளய அமாவாசை தினம் ஆரம்பித்து  நவராத்திரியின் ஒன்பது நாட்களில்  அன்னைமீது பாடல்கள் எழுத அவள்  அருள அது இனிதாய் நடந்தது இ்ந்த ஆண்டும்  அவள் தாள் வணங்கி சக்தி ரதம்  என தலைப்பிட்டு தினம் ஒரு கவிதையாக  வழங்க எண்ணம்   எண்ணிய முடிதல் வேண்டும்!

காப்பு
 
ஆனைமுகங்கொண்ட ஞான முதலோனே
பானை வயிற்றுக்குள்ளே பாரைக்காப்போனே
ஞானமேதுமின்றிலும் பாடமுனைகின்றேன்
தேனாய்ப் பெருகிடவே  தேவே அருள்வீரே!



-
_____________________________________________

 நெல்லுக்குள் மணியாக இருக்கின்றாள் -சக்தி
நீருக்குள் சுவையாக  இனிக்கின்றாள்-அவள்
பண்ணுக்குள்பாட்டாக இசைக்கின்றாள்-இசைப்
பாட்டுக்கு யாழாக ஒலிக்கின்றாள்
 
சொல்லுக்குப்பொருளாக திகழ்கின்றாள்-சக்தி
சோர்வுக்குத் தெம்பைத் தருகின்றாள்-அவள்
கற்பகத்தருவெனக் கொடுக்கின்றாள்-கரு
காப்பதைப் பணியாகக் கொள்கின்றாள்.
 
பேரொளியின் ஜோதியாய் நிற்கின்றாள் -சக்தி
பேர்தனிலே வலிமை சேர்க்கின்றாள் அவள்
கார்வண்ணக்காளியாய் சிரிக்கின்றாள் -எல்லைக்
காவல்தெய்வமாயும் காக்கின்றாள்!
___________________
நவராத்திரி குறிப்பு...
 
உடுப்பிகிருஷ்ணன்  கோவிலில் நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் கிருஷ்ணருக்கு புடவை அணிவித்து அலங்கரிப்பார்கள் இவைகள் மைசூர் மகராஜா வழங்கினார் என்று சொல்லப்படுகிறது.
. .
மேலும் படிக்க... "சக்தி ரதம்."

Monday, September 16, 2013

ஓண நினைவுகள்!

 
 
 
காலனியில் எங்கள்   குடும்ப நண்பர்களின் வீட்டில் நவராத்திரி நாட்களுக்கு  குடும்பத்தலைவர்கள்   எங்களோடு  என்னவோ  தூக்கு மேடைக்குச்செல்லும்  கைதிகள்போல சோகமாய் வருவார்கள். நவராத்திரி என்றால் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டில்  மாலை எங்கள்குடும்பங்கள் கூடி பக்திப்பாடல்கள் பாடிவிட்டு  2ஜி 3ஜி  என பல ஜீக்கள்,கருணாநிதி ஜெயலலிதா  எடியூரப்பா பங்காரப்பா ராஜ்குமார் வரை  என்று ஆண்கள் அரசியல் பேச நாங்க பிசிபேளாபாத் ஆலு பரோட்டாவிலிருந்து ஆனந்தவிகடனில் வந்த கதைகள்,சினிமாவிமர்சனம் வரை எல்லாம்  அலசி   சுண்டல்+ டின்னரை முடித்துக்கொண்டுஇரவு வீடு திரும்புவோம்.
 
சிலவருடங்கள் முன்புஓமனா என்று ஒரு மலையாளப்பெண்  காலனியில் குடிபுகுந்து எங்களுக்கு தோழியானாள். அவள்கணவரும்  எங்கள் கணவர்களுக்கு நண்பரானார். 
 
ஓணத்திருநாள் வருவதால் அன்றைக்கு விருந்துக்கு நாங்கள் எல்லாரும் வரவேண்டுமென ஓமனா கேட்டுக்கொண்டாள்.. ’ கூடிய சீக்கிரமே கணவருக்கு துபாயில் வேறு்  நல்ல வேலைகிடைத்துப்போய்விட இருப்பதால் இந்த ஓணம்  க்ராண்டா செய்றோம் வழக்கத்தைவிட குடும்பமே கூடுகிறது நீங்களும் வாங்க; என்று அழைத்துவிட்டாள்.
 
எங்காவது  எங்களோடு வெளியே ஷாப்பிங்கிற்கு மால் என்று வந்துவிட்டால்  எங்களுக்கு ஏதோ தூரத்து உறவு போல   அதுவும் புடவைக்கடைப்பக்கம்  வந்தா்ல்  போதும்,விரோதிபோல  முகத்தை வைத்துக்கொ்ண்டு ஒரு மூலையில் நிற்கும் எங்கள்  பதிகள்
 
 ஓணம் பண்டிகைக்கு தோழி ஓமனா வீட்டுக்கு  விடிகிறபோதே எழுந்துகொண்டுவி்ட்டார்கள்.பளிச்சென  பட்டுவேட்டி (ஜரிகைபோட்டது)   பட்டு சட்டை கட்டிக்கொண்டு(மச்சினர்கள் கல்யாணத்தின் போதெல்லாம் இதைக்கட்டிக்கொள்ள தோன்றாது என்னவோ பிறந்துவளர்ந்ததே  இங்கிலாந்தில்போல  பேண்ட்டும் இன் செய்த ஷர்ட்டுமாய் போட்டுக்கொண்டு எப்போதோ பம்பாயில் வேலைபார்த்த தோரனையில்  ஹிந்தியில்  பல வார்த்தைகளுடன் சொற்ப தமிழில்  பேசி அலட்டல்மன்னராய் இருக்கும் என் சு பதி(சுபுத்ரமாதிரி சு பதி:)ஓணத்தன்று  மல்லுவாக  மாறி நின்றார். மற்ற    தோழிகளின் கணவர்களும் மலையாளஆ்ண்களாய் அங்கே காணவும் தெரி் ந்துபோனது முதல்நாள் இவர்கள் எல்லாரும்  சலூனுக்கு      திட்டமிட்டு  போன காரணம்  எதற்கு என்று:)
ஓமனாவின் வீட்டில் ஓணத்தன்று அவள் குடும்பமே  கூடி விட்டது..பெண்வாசனை அதிகம் தெரிந்தது!
 
 ‘நாட்டிலிருந்தால் இப்படித்தான்  அத்தரைபேரும்  கூடிக்கொண்டாடுவோம் இப்போள்  இவ்விட பெங்கலூரில் ஆளுக்கொரு திசைல இருக்கோம்  ஓணம் சமயம் எங்க குடும்பமே  கூடிக்களிப்போம் டான்சும் உண்டாக்கும்” என்று ஓமனா  புத்தாண்டுதினம் நடந்த சந்திப்பில் சொல்லிவிட்டாள்..
 
குடும்பப்பொறுப்புகளில் ஆண்களின் பங்கு என்பதைப்பற்றிக்  காட்டுக்கத்திப்  பட்டிமன்றம்  : நடத்தும் போதெல்லாம் கேட்காத எங் கள் பதிகளின் செவிகள்  ஓமனா முணுமுணுத்ததை கேட்டுவிட்டதுபோலும்!  உடனேயே,’உங்க குடும்பமா எதுக்குப்பிரிக்கறீங்க மேடம் எங்க குடும்பமும் அதுதானே.?”   என.எது என்னுதோ அது உன்னுது எது உன்னுதோ அது என்னுது  என்கி்ற விளம்பரப்பாடல்  போல  சுதாவின் கணவர் ஜோக்கடித்தார்.
 
 
மனுஷனுக்கு வீட்டைவிட்டுவெளியே வந்தா    ஜோக்கா  கொட்டுமே-----  சுதா பல்லைக்கடித்தாள்.
 
ஆண்கள் உலகில் இதெல்லாம் சகஜம்டி என்று  ஜனனி அவளை சமாதனப்படுத்தினாள்.
 
மலையாள மக்களைகுஷி்ப்படுத்தவோ என்னவோ”உங்க கேரளா  தமிழுக்கு எவ்வளவு  கொடுத்திருக்கு!!  ஆஹா  அன்று பத்மினி ராகினி  இன்றுஅசின், கோபிகா, நயன்தாரா, பாவனா, மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர்னு தமிழுக்கு அவங்க தமிழ் உலகுக்குஆற்றியுள்ள சேவைகள் கொஞ்சமா நஞ்சமா?’ என்று  சுரேஷ் ஆரம்பித்தார்.
 
ஆஹா  ஒரு ஆம்பிளை  பெயர் நினைவிருக்கா பாரேன் இவங்களுக்கு?  கிசுகிசுத்தாள் விஜி.
 
ஓம்னா வீட்டு வாசல்  நிறைய  பூக்கோலம் பார்த்ததும்  ” ஆஹா  பூலோகமே இங்கு  வந்ததோ?” என்று கவிதை பாடாதகுறையாக  வியக்கவும்  விஜி”போதுமே  கிருஷ்ண ஜெயந்திக்கு மாஞ்சிமாஞ்சி  குட்டிக்குட்டிக்கால் எல்ல்லாம் போட்டு  வீட்டில்  ஒருத்தியாய்  அத்தனையும் செய்வேன் அப்போ  கண்டுக்கிட்டதே இல்லையே நீங்க இப்ப என்ன  பூக்கோலம் பார்த்து பூ  லோகம்னு  ரொம்பத்தான்  வழியல்?”  என்றாள்.
 
.
 
 
சுரேஷை  மிஞ்சினார்  ஆதித்யா  ///ஓமனாவின் ஒன்றுவிட்ட சகோதரிஎன ஒரு இளம்பெண்  கூந்தலை  விரித்து நுனிமுடிச்சிட்டு அதில்  மல்லிகைப்பூ சுற்றிக்கொண்டு மலையாள  பாணி உடையில் குனிந்து கோலம்போடவும், 
 
 கோலம்போடக்குனிகின்றாய்
 கோலம் அழகா
உன்கோலம் அழகா
 
என்று கவிதைஎ ழுத கைதுறுதுறுப்பதாய் ரகசியமாய் நண்பர்களிடம் சொல்ல  கேட்ட  என் தோழி அவர் மனைவி சசிகலா, ’வீட்டில் புது்சாவாங்கி இருக்கற பூந்துடைப்பமும் அழகு ’ என்றாள்  சிரித்தபடி.
 
ஆக  நாங்கள் எல்லாம் தமிழ்ப்பெண்களாய்  பட்டுசேலை பின்னிய தலை என்று அவர்கள் வீட்டில் நுழைய எங்கள் பதிகள்  வேஷ்டி பட்டுஷர்ட்டுடன் நெற்றியில் சின்ன சந்தனப்பொட்டையும் தீற்றிக்கொண்டு  தொடந்தனர்.
 
உள்ளே யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்  ஏஷியா நெட்டில்
 
 யேசுதாஸ் பாட்டுக்கு சில மோகினிகளே மோகினி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
 
 ”அடடா! கண் கொள்ளா காட்சி! என்ன நெளிவு சுளிவு! என்ன லாவகம்!!”
வழக்கம் போல ஆண்களில்  ஒரு குரல்  பாட்டை  ரசித்தமாதிரி தெரியவில்லை.
 
 
ஏஷியா நெட்  சானல்தான்  பெஸ்ட் என்ப்துபோல  பேசிவிட்டு  ஓமனாவின் குடும்பத்தார் சிலரோடு  எங்கள்  பதிகள்  அரைகுறை்மலையாளத்தில்பேச ஆரம்பித்தனர்.
 
என்ன ஆச்சு இவங்களுக்கு என நாங்கள்: கிண்டலாய்  கேட்டு சிரித்தபடி  ஹாலில் அமர்ந்தோம்.
 
ஓ ?
ஒ!
 
என் கணவர் சம்மந்தமே  இல்லாமல் மைக்கேல் மதனகாமராஜன் பார்த்த பாதிப்பில்  குரல்கொடுத்தார்,.
 
‘இவள் என் கசின்  பேரு வனஜை  பாலக்கோட்டில்  இருக்கா  தமிழ்  பேசும் உங்களாட்டம்” என்றாள் ஓமனா.
 
பார்க்க   வனஜா சற்று துறுதுறுப்பாக இருந்தாள்..  அவள் நகர்ந்தும் ஹாலில்  ஜொள் பெருகியதால் நாங்கள்”   நினைவில் வச்சிக்குங்க ரெண்டு வளர்ந்த  குழந்தைங்க” என்றோம்
 
“அட  ரெண்டு வளர்ந்த குழந்தைக்கு வனஜை அம்மையோ   ஓ நம்ப முடியவில்லை வில்லை வில்லை” என்றார் ஆதித்யா.
 
“ அட  ரெண்டு வளர்ந்த குழந்தைன்னு சொன்னது  உங்களுக்கெல்லாம்...” என்றேன் நான்.
 
 
கைகொட்டுக்களி  நடனத்தைப்பார்க்கும் போது ,” ஆஹா எத்தனை எளிமையான உடை  மலையாள மங்கயைர்க்கு!
பண்டிகைனாலும் நம்மவீட்டு மாதர்குல திலகங்கள் போல பத்தாயிரத்துக்கு பட்டுபுடவை வாங்காம, சிம்பிளா சந்தன கலரில் பொன் பார்டர் போட்டு அவங்க பாரம்பரிய புடவையில கலக்குறாங்களே””என்று  தங்களுக்குள் பேசிக்கொள்வதாய் நினைத்துக்கொண்டு
 காமிராவுடனிருந்த  எங்கள் கணவர்கள் அனைவருமே  பிசி ஸ்ரீராம் சந்தோஷ் சிவன் பாலும்மகேந்திரா, கேவி ஆன்ந்த ஆனார்கள்.. பத்திரிகைக்குக்கொடுக்க என்னை நல்லபோஸ்ல நல்லதாபோட்டோ எடுங்கன்னு நான் கரடியா கத்தினதை நினைத்துக்கொண்டேன்::)
 
 கை கொட்டுக்களிமுடிந்ததும்,’ எத்தரை சுந்தரமாயிட்டு?” என்று  தைரியமாய் ,மலையாளத்தில் பேச ஆரம்பித்தார்  ஆதித்யா.
 
”சூர்யா டிவில  நயனதாரா  க்ளோபல்வாமிங் பத்தி  ரொம்ப சிந்திச்சிப்பேசாறாங்க  அதைவைங்க ”என்று  விரட்டினார் சுரேஷ்
 
பேசறதைக்கேட்கவா அல்லது பார்க்கவா என்று ஜனனி சீண்டினாள்..
 
 
”க்ளோபால் வாமிங்! இட்ஸ்  சீரியஸ் யு  நோ?ஏந்தான் இப்படி அவேர்னெ்ஸ்சே இல்லாம் இருக்கீங்களோ நம்ம லேடீஸ்லாம்    சரி சரி  கமான் யார் லெட்ஸ் வாட்ச்  சூர்யா சானல்”
 
’ஓ’  என்றேன் நான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி
 
 எசியா நெட்ல   மோகன்லால்  மமுட்டி ப்ருத்விராஜ் இன்னும் சில  ஹாண்ட்சம் ஆண்கள் வராங்களாம்,நாங்க கேக்கணுமே என்ற  எங்கள்  குரல்களை ’  கடலினக்கர போனோரே காணாப்போயினபோனோரே  என்ற  பழைய பாடலை  தாளம்போட்டு ரொம்ப அனுபவித்துத்தப்பும் தவறுமாய் பாடிய அவர்களின் குரல்கள்  அமுக்கிவிட்டுவிட்டன:)
 
ஓமனாவின்  சமையல்  அட்டகாசமாய் இருந்தது  அதிலும்ஓணப்பண்டிகையின் முக்கிய அம்சமே ஓண சத்ய என்று அழைக்கப்படும் தடபுடல் ஓண விருந்தாகும் என்று அதைப்பற்றி அவள்  விவரித்தாள்.
 
. உண்டறியணும் ஓணம் என்று கேரளாவில் கூறுவர். தலைவாழை இலைபோட்டு 15க்கும் மேற்பட்ட கூட்டுக்கறிகளுடன் விருந்து படைக்கப்படும். ஓண விருந்து பரிமாறுவதிலும், சாப்பிடுவதிலும் வழிமுறைகள் வகுத்துள்ளனர். தலைவாழை இலையில்தான் ஓண விருந்து பரிமாறப்படும். காரம், புளி, உப்பு, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு அடங்கிய அறுசுவைகளும் ஓண விருந்தில் இடம்பெறும். அவியல், சாம்பார், பருப்பு, எரிசேரி ஆகியவையும், 4 வகையான உப்பு இடப்பட்ட கறிகளும் உண்டு. தரையில் பாய் விரித்து அமர்ந்துதான் உண்ண வேண்டும். இலையில் இடது ஓரத்தில் முதலில் அப்பளம், அதற்கு மேல் பழம், அப்பளத்தின் வலது புறம் சிறிது உப்பு வைக்க வேண்டும்.
இலையின் இடது புறத்தின் மேல்பகுதியில் நேந்திரங்காய் உப்பேரியும், அதற்கு கீழே சர்க்கரை வரட்டியும், இடது புறத்தின் மேல் உப்பில் இட்ட கறிகளான எலுமிச்சை, மாங்காய், இஞ்சிக்கறி பின்னர் ஓலன் எரிசேரி, அவியல் கிச்சடி, பச்சடி, துவரன் ஆகியவை பரிமாறிய பின்னர் கடைசியில் சாதம் பரிமாறப்படும். இதற்கு பிறகுதான் பருப்பு, சாம்பார், காளன், பாயாசம் அடுத்தடுத்து பரிமாறப்படும். முதலில் சாதத்துடன் பருப்பும், நெய்யும் அப்பளமும் சேர்த்து சாப்பிட்ட பின்னர், சாம்பார் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாயாசமும், அடை பிரதமன், கடலை பிரதமன், பருப்பு பாயாசம், அரிசி பாயாசம், பாலடை என்று பல வகைகள் உண்டு. பாயாசத்திற்கு பின்னர் ரசத்துடன் சிறிது சாதம். இந்த ரசம் சேர்த்து சாப்பிடும் வழக்கம் தென் கேரள பகுதியில் மட்டுமே காணப்படும். இதன் பிறகு கடைசியாக சிறிது மோருடன் சாதம் சாப்பிடுவதுடன் நிறைவு பெறுகிறது. வட கேரள பகுதிகளில் ஓண சத்யவுக்கு முன்பே இலையில் பழம், அப்பளம், நெய், சீனி ஆகியவற்றை கலந்து பிசைந்து சாப்பிடுவர். அதன் பின்னர் ஓண சத்ய உண்பர். கொல்லத்தில் பைன் ஆப்பிள் கொண்டு தயார் செய்யப்பட்ட சாராயம் கண்டிப்பாக இருக்கும்(எங்களுக்கு இல்லை சத்தியம்:)). மரச்சீனி கிழங்கும் வைப்பது
 
 ஒமனாவின் ஒன்றுவிட்ட தங்கை அசப்பில் மீ  ரா ஜாஸ்மின்போலதுறுதுறுவென்றிருந்தாள்.. அவள்  சுரேஷுடன் வந்த தம்பியைப்பார்த்து ,’நீங்க அப்படியே ப்ரித்விராஜ்போல இருக்கீங" எனப்புகழ்ந்துவிட்டாள்.
 
ஆஹா...   இந்த மொழி  சத்தம்போ்டாதே படத்தில நடிச்ச ப்ருத்விராஜையா சொல்றீங்க
நம்பமுடியாமல் கேட்டார்  சுரேஷ்.
 
அதே அதே என்று அந்தப்பெண் அநியாயத்துக்கு வெட்கப்பட்டாள்
 
மொழி ஜாதி  மாறினால் என்ன  நாமெல்லாம் இப்போ ஒரே குடும்பம் இந்த மீரா  ஜாஸ்மினை நம்மப்ருத்விராஜுக்கு  முடிச்சால் என்ன?
 
 
சுரேஷ் ஏதோ கணக்குபோட ஆரம்பித்தார்.
 
சாப்பாடு ஆனதும்மறுபடி அந்தமீராஜாஸ்மின் சுரேஷின் தம்பியை’ எத்தரை ஸ்மார்ட்டாயிட்டு?” என்றோஎன்னவோ மலையாளத்தில் புகழ்ந்தாள்.
 
ஆஹா  காதல் வந்திருச்சா?
 
சுரேஷ் என் கணவரிடம்,”பௌர்ணமிபோல  என்ன ஒரு பளிச்  லுக்!அந்தப்பெண் நம்மகுடும்பத்துக்கு வந்தா எவ்வளவு  நல்லாயிருக்கும் சொல்லுங்க ?  ஆனாலும்பாருங்க  நமக்கும் வாய்ச்சீருக்கே..?”  என்று முனகினார்  அவர் மனைவி,”்ஹலோ மாசத்துல ஒரு்நாள்தான் பௌர்ணமி     பளிச் லுக்காம் பளிச் லுக்!  அமாவாசைக்குபோனாலும்வானத்தைகைவிடாம மறுபடி வளர்ந்திட்டே வர்ர நிலாத்துண்டங்கள்  நாங்க!!   பௌர்ணமி ஒரு நா வந்து தலையகாமிச்சிட்டுப் போய்டும்  இளமையும் நில்லா யாக்கையும் நில்லா...  அடிகளார் பாட்டு்  தெர்யுமில்ல?”!
 
ஆனாலும் சுரேஷின் தம்பியைவிடவும் சுரேஷ்  இப்படி ஒரு வாய்ப்பைதவறவிடக்கூடதென நினைத்தார்போலும்
 
 நல்ல நாள் இன்னிக்கு ஓணம் அதிலும் திருவோணம் ஆஹா  என்றார்  புதிதாய் கண்டுபிடித்த மாதிரி!
 
மதியம் மணி 3 ஆனதும்விடைபெற்றுக்கொண்டோம் .
 
 அப்போது மீரா ஜாஸ்மின் சுரேஷிடம்,” உங்கப்ரதர் ரொம்ப ஸ்வீட்  ...  ஐ லைக் ஹிம் சோ மச்”. என்றாள்
 
இதான் சமயம் நழுவவிடாதே சுரேஷ்  உன் தம்பியும்  மௌனமா இருக்கான் மௌனம் சம்மதம்  .. மனசிலாயி? என்று
 
ஆதித்யன்  உசுப்பினார்
 
 
சுரேஷ்  ஓமனாவிடம் சென்று,” உங்க கசின்  அதான் மீரா  ஜாஸ்மின் மாதிரி  இருக்காங்களே  - அவங்க---?” என இழுத்தார்.
 
“ ஆமாம்.. அவ  வாயாடி ஏதும் பேசிட்டாளா எசகுபிசகா?  ஏய்  இவ்விட  வா”
என்று அவளை அழைத்துவிட்டாள்.அதற்குள் அவள் ஓ்டி வந்தபடி,” சேச்சி...  சுரேஷ் அங்கிள்  தம்பிய  நீங்க பார்த்தீங்களா?  அப்படியே  ப்ருத்விராஜ் போல  இருக்கார் இல்லையா?” என்றாள்
 
“ஓ ஆமா  அப்படியே  அவர்தான்  அதான் சேட்டன் நினைவு வந்துதா உனக்கு?  அது ஒண்ணுமில்ல சுரேஷ்  இவள் காலேஜுக்கு  திருச்சூர்க்கு  விழாக்கு ஒருவாட்டி ப்ருத்விராஜ் வந்தாராம்  இவளைப்பார்த்து  ஏதோ சொன்னாராம்  அன்னிலிருந்து  இவள் அவரை சேட்டன் என்பாள்.. இப்போ அவர் மாதிரி இருக்குற உங்க தம்பியை  தனக்கு சேட்டன்னு சொல்றா”
 
சேட்டன்?
 
என்ன அர்த்தம்?
 
திரும்ப வீடு் வரும்போது சுரேஷ் கேட்டார்.
 
சேட்டன்னா அழகன்னு  அர்த்தம். என்றோம் நாங்கள்  வேண்டுமென்றே.
 
 
ஓ?
 
என்ற சுரேஷைப்பார்த்து  எல்லோரும் சிரித்துவிட்டோம்!!! 
 
 இப்படியாக எங்களின் ஓணத்திருநாள் அமைந்தது.
 
 
 
 
 
 




--
 
 
மேலும் படிக்க... "ஓண நினைவுகள்!"

Monday, September 09, 2013

தோள் கண்டார் தோளே கண்டார்!




அறத்தை  நிலைநிறுத்தத்தோன்றிய இரு காப்பியங்கள்  ராமாயணமும் மகாபாரதமும். காலம் பல கடந்தும் அவைகள்  இன்றும் நம்மிடையே  பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
 
விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகமே ஒரு சிறு கருவிக்குள் கைக்கு அடக்கமாக வந்துவிட்டது.இளமையில் செல் (cell)என்றாகிவிட்ட இந்த நவீன யுகத்தில் தர்மங்களும் நியாயங்களும் கூட  மெல்ல மெல்ல சென்றுகொண்டுதான் இருக்கின்றன.ஆனாலும்  கற்றறிந்த சான்றோர்கள் அவற்றை  இழுத்துப்பிடித்து வைத்திருக்கின்றனர். அறம் நெறி  நீதி நியாயம் என்பதை வலியுறுத்தும் பெருமைகளை  கூறிவருகின்றனர்.
 
ராமாயணத்தைக்கம்பன் தேர்ந்தெடுத்தமைக்குக்காரணம் தன் திறமையை
முற்றிலும் வெளிப்படுத்துவதற்காகத்தான் என்று  சொல்லுவார்கள்.
இந்தக்கதை காலத்தினால் மட்டும் பெரிதல்ல இராமன் பிறப்பதற்கு முன்னால் தொடங்கும் கதை. இராமன் முடி சூட்டி தன்னுடன் இருந்தவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பும்வரைஎன்று வடக்கே இருக்கும் கோசலநாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள இலங்கைவரை நீடிக்கிறது.
 
இராமாயணம் போன்ற  ஒரு காப்பியத்தை கம்பன் பாடப்புகும்போது
பல பாத்திரங்களைப்பற்றி யும் பல தேசங்களைப்பற்றியும்,பல்வேறுபட்ட மனிதர்களைப்பற்றியும் அரக்கர்களைப்பற்றியும்மட்டுமல்ல பலவிலங்குகள் பறவைகள்  பற்றியு்ம்  விவரிக்க வேண்டி உள்ளது.
 
அத்தனையையும்  கம்பன்  விளக்குகிறான்.
 
அவன் காட்டும் திறமைக்கூறுகளையும் அவை மிளிரும் கதைப்பகுதிகளையும்  கூறவேண்டுமானால் அதற்கே பல நூல்கள் எழுதவேண்டும் என்பார்முன்னாள்  நீதிபதி திரு இஸ்மாயில் அவர்கள்.
 
பொழுதுபோக்கிற்காக சொல்லப்படும் கதைகள் அல்ல  இரு காப்பியங்களும்நிரந்தரமாக என்றும் அழியாத  ஓர் உண்மையை  ஒரு தர்மத்தை வலியுறுத்துவதற்காகவே இந்தக்கதைகள் 
தோன்றியிருக்கின்றன.
 
தனது முதல்பாடலில் கம்பர் ‘

உலகம் யாவையும் தாமுளவாக்கலும்,
நிலை பெறுத்தலும், நீக்கலும், நீங்கலா,


அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர்!
அன்னவர்க்கே சரண் நாங்களே"
என்று ஆரம்பிக்கிறார்! 
 
 ஆண்டவன் சுவாமிகளை ஒருமுறை தரிசி்க்க சென்றபோது  ஒருவர்  கம்பன் ஏன் இப்படி  தாம் உள ஆக்கலும் என்றார் எனக்கேட்க அதற்கு வடமொழியிலும் தமிழிலும் மிகப்புலமை நிறைந்த  அந்தஆச்சாரியசுவாமிகள் சொன்னார்.
 
**” இருப்பதை ஆக்கினால் எப்படி ஜகத் காரணத்வம் வரும்? ஸூக்ஷ்ம சிதசித்விசிஷ்டனானவன்   ஸ்தூல சித சித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்றார்.(இதன் அர்த்தம் கடைசியில்)
 
வாழ்வியலை அவன் கூறுவது இருக்கட்டு்ம் தேசம் பற்றி கூறுவது இருக்கட்டும்
 
பெண்ணின் மனநிலையை  அப்பட்டமாக கூறுகிறானே அதைத்தான்  ஒரு பெண்ணாக என்னால்வியக்காமல் இருக்கமுடியவில்லை!
 
 
மிதிலைவீதியில் தேரில்-கவனியுங்கள்-தேரில்தான் இராமன் வருகிறானாம். அவனைப்பார்க்க பேதைமுதல் கடைப்பேரிளம் பெண் வரை  வீதியில் வநதனர் என்று மட்டும் எதிர்கொள் படலத்தின் கடைசிபாடலில்  சொன்னவன்  பிறகு அடுத்து  வரும்உலாவியற்படலத்தில்  மகளிர் அனைவரும்  ராமனைக்காண  மொய்க்கும் விதத்தை   பெண்பாத்திரமாகவே மாறி சொல்கிறான் அல்லது செல்கிறான்!!
 
பார் என்றது பருவம்    என்று ஒரு திரைப்பாடல்கூட உண்டே!
 
.இராமனைக்காண வந்த மகளிரின் தன்மைகளை  ‘தமை வலித்தவன்பாற் செல்லும்உள்ளத்தைப்பிடித்து நாமென்றோருகின் றாரு மொத்தார்’என்கிறார். ராமனைக்காண அவர்களுக்கு முன் அவர்களின் உள்ளம்  ஓடுகிறதாம்  அதைப்பிடிக்க ஓடுகiிறார்களாம்!
 
 
17பாடல்களில்  கம்பனின் கைவண்ணத்தில் அந்தமகளிரின்  உடல்கோலமும்  உள்ளக்கோலமும் மிளிர்கின்றன!
 
 
கடைசியiில் இப்படி சொல்லி முடிக்கிறார்!
 
 
""தோள் கண்டார் தோளே கண்டார் தொடு கழற் கமலமன்ன
தாள் கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாருமஃதே
வாள் கொண்ட கண்ணார் யாரோ வடிவினை முடியக் கண்டார்
ஊழ் கொண்ட சமயத்தன் னானுருவு கண்டாரை யொத்தார்''

__________________________________________________________________________________

**சிதசித்விசிஷ்டம் = சித் + அசித் + விசிஷ்டம்
ஸ்ரீ ராமாநுஜ ஸித்தாந்தம் சித், அசித், ஈச்வரன்
எனும் மூன்று தத்வங்களை ஒப்புக்கொள்கிறது -

சித் - ஜீவன், ஜீவகோடிகள்
அசித் - உயிரற்ற பிரபஞ்சம்
ஈச்வரன் - ஸ்ரீமந்நாராயணன்
இம்மூன்றும் அழிவற்றவை.

பிரளய காலத்தில் அனைத்தும் உருவத்தை
இழந்து நுண்ணிய நிலைபெற்று ஈச்வரனான
நாராயணனிடம் ஒடுங்கும். [அழிவதில்லை]
படைப்பின் போது உருவம் பெற்று தூல
வடிவுடன் கண்ணுக்குப் புலப்படும்.

அதைத்தான் ”ஸூக்ஷ்ம சித் அசித் விசிஷ்டனானவன்
ஸ்தூல சித் அசித் விசிஷ்டனாக மாறுகிறான்” என்று
ஸாதிச்சிருக்கிறார் ஆண்டவன் சுவாமிகள். பர தத்வம் என்றால் மூன்றும் எப்போதும்
பிரிக்க முடியாத வண்ணம் சேர்ந்தே இருக்கும் நிலை.

உலகம் யாவையும்  தாம் உள ஆக்கல் - படைத்தல்
நிலை பெறுத்தல் - காத்தல்
நீக்கல் - அழித்தல்
ஆக முத்தொழில்
 
இப்படி எண்ணற்ற உலகங்களை ஆக்கி, அழிப்பது
அலகிலா விளையாட்டு!
 
(கம்ப  மகா சக்கரை சமுத்திரத்திலிருந்து ஒரு துளி .இன்றைக்கு!)
 
 
மேலும் படிக்க... "தோள் கண்டார் தோளே கண்டார்!"

Sunday, August 11, 2013

பட்சி ராஜன்!

 
 
ஆடிமாதம்   வளர்பிறையில் சுவாதி நட்சத்திரம் பட்சிராஜனின் அவதாரதினம்!
 

 கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்
 
ஆண்டாள் அவதரித்த  பெருமை கொண்ட ஆடிமாதம் கருடனை அவதரித்த  பெருமையும் கொண்டது.
 
 
வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையில் புள்ளரையன் கோயில்  என்று அருள்கிறாள் கோதை..
 
வைனதேயன் என்றும் வி்னதைச்சிறுவன் என்றும்
  போற்றப்படுகிறார் கருடன்.
 
கருடாழ்வார் என்றழைப்பதும் இவருக்கான சிறப்புப்பெயர்.
 
அன்று இவ்வுலகம் அளந்தாய்  அடி போற்றி என்று நாம்  வணங்கும் அண்ணலின் திருவடிகளை தம் கையில் ஏந்தும்  பேறு பெற்றவர் கருடன்.
 
 
கருடாழ்வார் எம்பெருமானுக்கு  தாசனாகவும்  வீற்றிருக்க ஆசனமாகவும் கொடியாகவும் விதானமாக- மேல்கட்டாகவும்  திருவாலவட்டமாகவும் இருப்பதோடு  வேத ஸ்வரூபியாக இருந்து கொண்டு வேதப்பரம்பொருளான  பெருமானைக்காட்டிக்கொடுக்கிறான் என்பதாக அருள்கிறார்.
 
 
எம்பெருமானுக்கு விதானமாக  மேல்கட்டாக  திருவடி இருந்து வருவதை ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில்,” மேலால் பரந்த வெயில் காப்பான் வினதைச்சிறுவன் சிறகென்னும் மேலாப்பின் கீழ் வருவானை விருந்தாவனத்தே கண்டோமே’ என்கிறாள்.
 
திருமாலையில் தொண்டரடிப்பொடி ஆழ்வாரும்,”கெருடவாகனனும் நிற்க, சேட்டைதன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே ‘ என்று அருளிச்செய்துள்ளார்.
கருடவாகனத்தில் வந்துதான்  கஜேந்திர மோட்சம் செய்தான் காக்கும் கடவுளாம்  ஆதிமூலப்பெருமான்!
 
சக்கரவர்த்தித்திருமகனும்  இளைய பெருமானும்  இந்தஜித்  பிரயோகம் செய்த  நாகபாசத்தால் கட்டுண்டு கிடந்தபோது அந்த ரணபூமியில் கருட பகவான் வந்து அவர்கள் முகங்களைத்தடவினார்,அவர்கள்  தெளிவுபெற்ரார்கள்.
அப்போது திருவடியைப்பார்த்து இராமன்,”தேவரீர் யார்?’ என்று கேட்க”நான் உமக்கு பிரிய தோழன் உமது பிராணனே  வடிவம் எடுத்து வெளியில் சஞ்சரிப்பதுபோல இருப்பவன் உமக்கு உதவி செய்யவே வந்தேன்’ என்று (ராமாயணம் யுத்தகாண்டம் 5ம் சர்க்கம்)  சொல்வதிலிருந்து கருடன்  பெருமானின் உற்ற தோழன் என்பதும் தெரிகிறது.
 
 
எம்பெருமான் கருடத்வஜன் கருடனைக்கொடியாகக்கொண்டவன். அவன் கொடியில்  கருடன் இடம்பெற்றிருக்கிறான்.இன்றும் வைணவத்திருக்கோயில்களில் பிரம்மோற்சவ ஆரம்பத்தில்  கருடன் உருவத்தைசிலையில் எழுதி அதைக்கொடியாக ஏற்றுகிறார்கள்.
 
திருவடி என்னும் கருடனை எம்பெருமானின் நிலைக்கண்ணாடி என்பார்கள் பெரியோர்கள். என்பெருமான்  திருமுன்பே எப்போதும் தான் இருந்துகொண்டே இருப்பார்  கூப்பிய கையுடன்  கருடனை நாம் இன்றும்  கோவில் சந்நிதிகளில்  எம்பெருமான் சந்நிதிக்கு முன்பாகக்காணலாம்.
 
;புள்ளையும்  புள் அரையனான எம் ்பெருமானையும்  தொடர்புபடுத்தி திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில் ஒரு பாசுரத்தில் அழகாக அருளிச்செய்துள்ளார் பாருங்கள்.
 
புள்ளதாகி வேதம் நான்கும் ஓதினாய் அதன்றியும்
புள்ளின் வாய்பிளந்து  புள்கொடிப் பிடித்த  பின்னரும்

புள்ளை ஊர்தி  ஆதலால்  அதென்கொல் ? மின்கொள் நேமியாய் !
புள்ளின் மெய்ப்பகைக்கடல்  கிடத்தல் காதலித்ததே .






(மின்னும்  சுதர்சனத்தை கையில் பிடித்திருப்பவனே !
அன்னப் பறவையாய் உருமாறி  சதுர் வேதங்களை உபதேசித்தவனே!

 கொக்காக வந்த பகாசுரனின் வாயைப் பிளந்தாய்.
கருடனை வாகனமாக கொண்டதல்லாமல்  கொடியிலும் பாராட்டி வைத்திருக்கிறாய் ,அத்தகைய விநதை புத்திரனுக்குப்  பகையானஆதிசேஷன் பாம்பின் மீது
மட்டும் விருப்பமாய் பள்ளி கொண்டிருப்பதின் காரணம் என்ன ?)




கருட சேவை  மிகவிசேஷமானது... வியாழக்கிழமை பட்சிராஜனுக்கு உகந்த நாள்.
 
கருடபஞ்சமி  ஆந்திராவிலும்கர்னாடகத்தி்லும்விமர்சையாகக்
கொண்டாடுவார்கள்..பெண்ணுக்கு  உடன்பிறந்த சகோதரர்கள்  அன்பளிப்பு தர இல்லம் வருவார்கள்...சகோதரிகளும் விருந்து வைத்து  உடன்பிறந்தானின்  வரவுக்குக்காத்திருப்பார்கள்.
 
(பஞ்சமி ஹப்பா அண்ணா பரலில்லா  யாக்கோ கொத்தா(பஞ்சமி பண்டிகை  அண்ணன் இன்னும்  ஏனோ வரவிலை தெரியுமா?)
 என்கிற  கன்னடப்பாட்டு  ஒரு சகோதரியின் ஏக்கத்தை அப்படியே பிரதிபலிக்கும் எப்போதோ  லைட்ம்யூசிக் நிகழ்ச்சியில் கேட்டு உருகிப்போனேன்..  )
 
(கட்டுரை இவ்வார ராணியில் வெளிவந்துள்ளது)
 
 
 
 
மேலும் படிக்க... "பட்சி ராஜன்!"

Thursday, August 01, 2013

மனித குலத்தில் பேதமுண்டா?(கவிதை)

ராணிமுத்து ஆகஸ்ட்1  இதழில்  கடைசிபக்கக்கவிதை!
மேலும் படிக்க... "மனித குலத்தில் பேதமுண்டா?(கவிதை)"

Saturday, July 27, 2013

இங்கே போயிருக்கிறீர்களா?!

 
 
 
 
’மறந்துபோன  பழைய உணவு வகைகள் மேளா’(forgotton food festival) என்ற  அறிவிப்புடன் காணப்பட்ட அறுசுவை மதுரம் ஹோட்டலுக்கு  இன்று எங்கள்  காலனி மக்கள்  படையெடுத்தோம்.
 
 
 
 
 
ஹோசூரிலிருந்து பெங்களூருக்கு  நுழையும்போது சில்க்போர்டுக்கு அருகே  HSR layout   ல்   இந்தஹோட்டல்  திறந்து இன்னும் ஒருவருடம் ஆகவில்லை..அதற்குள்  பிரபலமாகிவிட்டதற்குக்காரணம் வார இறுதி நாட்களில் தலைவாழை இலைபோட்டு அம்ர்க்களமாக  அவர்கள் உணவு பரிமாறுவதும் அதுஅபார ருசியுடன் இருப்பதும்தான்  இதர நாட்களில்  டிபன் சாப்பாடும் உண்டு.
 
 
ஆனால் இன்று  மிக வித்தியாசமாக  உணவு வகைகளை   அதுவும்  நிஜமாகவே மறந்துபோய்விட்ட  பதார்த்தங்களை  செய்து வைத்திருந்தனர். 
 
 சொல்லமறந்துவிட்டேனே ஹோட்டல்  அறுசுவை நடராஜன் அவர்களின் பேரனின் மேற்பார்வையில்  நடக்கிறது  இளைஞராக இருக்கும்  இவர் வந்தவர்களை அன்புடன் வரவேற்று உபசரிக்கிறார்  பணியாளர்களும்  மிகவும் சுறுசுறுப்பாகவும்  சாப்பிடும்போது கேட்டு விஜாரித்து அக்கறையுடன் பரிமாறுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
 
இன்றும் நாளையும் சிறப்பு தினங்களாக  இப்படி மறந்துபோன பழைய உணவு வகைகளை அளிக்கும் தினமாக  இருப்பதைக்கொண்டாட  அறுசுவை நடராஜன் அவர்கள்   ஹோட்டலுக்கு வந்திருந்தார்.
 
அன்போடு வரவேற்றார் எங்கள் யாவரையும்
 
.தான்கடந்து வந்த பாதையை எங்களோடு பகிர்ந்து கொண்டார்
 
 
 
 
.
சரி இனி  சாப்பிட செல்வோம்.
 
  முதலில்  பானகம் சுக்குகாபி திப்பிலிரசம் ஸ்டார்ட்டர் ஆக  வழங்கப்பட்டது.கூடவே  பானையிலும் மண்சட்டிகளிலும்  வாழைப்பூகோலா வடை தவலைவடை  திருவாதிரைக்களி
பால்கொழுக்கட்டை காரடையான் நோன்புக்கொழுக்கட்டை(இனிப்பு மற்றும் உப்புவகைகளில்)..இவையெல்லாம்  பஃபே  என்பதால்  சாப்பிட சாப்பிட இதிலேயே  பசி அடங்கிவிட்டது..தலைவாழை இலைக்குப்போக சிறிதுநேரம் தயக்கமாகவே இருந்தது.
 
 
 
(தாத்தாவும் பேரனும் ”எல்லாம் எப்படி இருக்கு?’ என்று கேட்கிறார்கள்!
 
 
 
அப்புறம்  இலையில்போய் உட்கார்ந்தோம்  குழம்பில் மட்டும் நாலுவகை  வற்றல்குழம்பு மோர்க்குழம்பு  சாம்பார்  ஓமக்குழம்பு என..நான்கில் ஓமக்குழம்பு முதல் பரிசைத்தட்டிக்கொண்டது.
 
ரசத்தில் மூன்றுவகை தக்காளிரசம் முருங்கைக்கீரை ரசம் வேப்பம் பூரசம்.
 
 
நார்த்தங்காய் பச்சடி இஞ்சி பச்சடி  பீர்க்கங்காய் துவையல்  பூசணிக்காய் ரசவாங்கி சேனை ரோஸ்ட் மோர்க்களி வெண்டை டாங்கர் பச்சடி 
 மோர்க்களி  பருப்புசிலி    அங்காயப்பொடி சாதம்  கத்திரிககய் துவையல்  அப்பளம் ஜவ்வரிசி வடாம் நார்த்தை இலைப்பொடி  கோங்குரா துகையல்   கல்கண்டுபொங்கல்
 
இத்தனையையும் ஒரே நேரத்தில் பார்த்தாலே பிரமிப்பாக இருக்குமே!  எப்படி  அத்தனையையும் சாப்பிடுவது என திகைத்தபடி  எல்லாவற்றிலும்  கொஞ்சமாய்  போட்டுக்கொண்டு  ருசிபார்த்தோம்.. அத்தனையும் அருமை தான்!  ஓரிரு  பதார்த்தஙக்ள் மட்டும் சர்று  சுமார்  என்று சொல்கிறபடி  இருந்தனவே தவிர மற்ற அனைத்தும் அமர்க்களம்!
 
இறுதியில் பீடாவும் வாழைப்பழமும்!
 
சாதாரணமாய்  வார இறுதி நாட்களில்  190ரூ ஓர் இலைக்கு  இன்றும் நாளையும்   சிறப்புதினங்கள் என்பதால் கூடுதல் விலையானாலும் அறுசுவைக்காக    மறந்தேபோன நம் வீட்டு உணவுவகைகளை நாம் நினைவுகூர்ந்து  சுவையோடு உணபதால் விலை  ஒரு பொருட்டாக இல்லைதான்!!
 
என்ன பெங்களூர் வாசிகள்  நாளைக்கு  அறுசுவை  மதுரம் ஹோட்டலுக்குப்போகிறீர்கள்  தானே!!
 
 
 பிகு(காமிராவில் தேதி  மாற்றத்தவறிவிட்ட கணவரை  நான் மன்னித்தமாதிரி நீங்களும் மன்னித்துவிடுங்கள்:)
 

மேலும் படிக்க... "இங்கே போயிருக்கிறீர்களா?!"

Thursday, July 25, 2013

காப்பாத்துங்க..(சிறுகதை)

 
 
 
 
 


'செல்வராணீ எங்க காணோம் ? '


என் பேரை சொல்லிக்கிட்டே கண்ணு அலைபாய வூட்டுக்குள்ள நுளையுது குமாரு.

மளைய வேடிக்கைப் பாத்துகிட்டு மல்லிக்கொடி பந்தலு கீள நான் நிக்கறது தெரியல போலருக்கு


 குமாரு எப்போபாத்தாலும் வாயில எதியாச்சும் மென்னுட்ருக்கும்.! நல்லா

அசைபோட்டுகிட்டே என்னைப் பாத்து கண் அடிப்பான்

கிட்டே வந்து பாட்டுபாடுவான் . 'சொன்னபடி கேளு நீ என்னுடைய ஆளு '


யே! ஆசைதான் ...!


எனக்கு சிரிப்பாவரும். எங்க சிரிக்கறது ,குமாரு அப்பா கேட்டா வெட்டிப்

போட்டுடுவாரில்ல என்னைய ? ஏற்கனவே என்னைக்கண்டாலே

திட்டிக்கிட்டு இருக்காரு இப்போல்லாம்...

ஆனா குமாரு அப்டி இல்ல..குறும்புஅதிகம்தான் ஆனாலும் என் மேல பிரியம்
அவனுக்கு. என்னையக் கண்டா,

 'என்னசெல்வராணீ..எப்படி இருக்கே ? 'ன்னு கேக்காம போகமாட்டான்.

எதிர்பாராத நேரத்துல பின்னால பக்கம் செல்லமா கிள்ளீ அடிச்சிடுவான்

குமாரு.  வய்சுப்பையன் கை பட்டதுல ,வெக்கத்துல எனக்கு உடம்பு கூசிப்

போகும்.


நான் குமாரத் தொடந்து திண்ணை மேட்டுவரைக்கும் வந்து நிக்கறேன்.


'எங்கடா, டவுன் போயிட்டு இத்தினி நேரம் கழிச்சிதான் வர்தா ?

ஊரெல்லாம் மளை வெள்ளம்ன்னு பேசிக்கிறாங்க நெசமாவா ?


பெரிய எசமான் தன் மகனைப்பாத்து இப்படிக் கேக்கவும் குமாரு

, 'ஆமாப்பா...திருச்சி சத்திரம் பஸ்நிலயமெல்லாம் தண்ணிவர

ஆரம்பிச்சிடிச்சி...நாம கிராமத்தைவிட்டுக் கிளம்பியாவணும் 'ன்னு

பரபரத்தான்


'ஆங் ? '


பெரிய எஜமானுக்குக் காது சரியாக் கேக்காது.


மறுமுறை மகனைப்பாத்துக் கேக்கறாரு


'என்ன சொல்றே ? '


'அதுசரி..வெள்ளம் வந்து உங்கள வாசலுக்கு இழுத்துட்டுபோவறவரைக்கும்
இப்டியே இருங்க...நீங்களும் உங்க கேக்காத காதும் ? '


எரிச்சலா பேசிப்புட்டு குமாரு ரூமுல புகுந்துக்கறான்.


'அப்பாஆஆ... 'கூவிக்கிட்டே சுமதி வருது. குமாருக்கு ஒருவயசு மூத்தது.

பள்ளிக்கூடம் படிச்சி முடிச்சி வூட்லதான் கிடக்குது.கிராமத்துல பல
பசங்களுக்கு சுமதிமேல ஒருகண்ணு.தளதளன்னு பறிச்ச புல்லுமாதிரி இருப்பா
சுமதி


மேலத்தெருவுக்கு முன்னே ஒரு நா, நான் மட்டும் தனியா போவையிலே

மாணிக்கக் கோனாருமகன் பூவரசனும்

காத்தான்கோனாருமகன் வினாயகமும் சுமதியப் பத்தி என் காதுபடவே

பேசினாங்க.. 'அந்த சுமதிதான்,இந்தக் கல்லுப்பேட்டை பக்கத்துல
கம்பரசம்பேட்டை ஜீயபுரம் வரைக்கும்அழகுராணிடா...அவங்கப்பன்

.பொண்டாட்டி செத்துப் போன பிறவு நாலுவருஷமா இன்னும்லூஸ் ஆயிடிச்சி. வயலுவிவசாயம் மாடு பாலுன்னு ஊரைக் கட்டிட்டு உக்காந்திருக்குது...சுமதியோடஅளகு சினிமாவுக்குப்

போவணும்டா..இல்லேன்னா என்னைச் சேரணும்டா..ஹிஹி '


அடப்பாவிகளா ? பீடி குடிச்சித் திரியற உங்களுக்கு இப்படி ஒரு விபரீத

ஆசையா நாசமாத்தான் போவீங்கடா


நான் மனசுக்குள்ள திட்டிபுட்டேன் அவங்களை. வேற என்ன செய்யறது  என்னோட
பேருல தான்

செல்வமும் , ராணியும் இருக்குது.. நெசத்துல ஏளை. ஏளைச் சொல் அம்பலம்
ஏறுமா ?


'சுமதி..கொமாரு என்னம்மா சொல்றான் ? '


எசமான் நிதானமா தாழ்வாரத்து ஊஞ்சலில் உக்காந்து கேக்கறாரு.வாயில

புவையிலை அசைபோடுறாரு.


'அய்யோ அப்பா !இடி இடிக்குதே காதுல விழலையா... ?ஊரே நகந்துட்டு

போகுதுப்பா...காவிரி பெருக்கெடிச்சி ..மேட்டுர் அணைக்கட்டு உடைஞ்சி

போயிடிச்சாம்..நாமளும் கிளம்பணும் ஊரைவிட்டு..அதான் ஒலிபெருக்கி

போட்டு வேற சொல்லிட்டெ போறாங்களே..ஆபத்துப்பா இனியும் இங்கைட்டு

இருந்தா ஆபத்து நமக்கு.. உயிருக்கே ஆபத்து.. '


சுமதி வீறிட்டு சொல்லுது.


'எங்கிட்டுப் போவறது தாயி ?சொந்தமண்ணு, நெலம் ,மாடு,கன்னுகுட்டி... '

அவரு முடிக்கறதுக்குள்ள சுமதி குறுக்கிட்டு சத்தம் போடுது


'அய்யோ அப்பா! கரண்ட்போயிடிச்சி..கட்டிடம்
 
 அதிருது...கம்மாங்கரையெல்லாம்

உடைஞ்சி ஊரே மிதக்குது,, '



'ஆமா இதப்போல மளே இருவது வருஷம் முந்தி நீ பொறந்தபத்து நாள்ல

வந்ததும்மா...சும்மா பயமுறுத்திட்டு ஓடியே போயிடிச்சி ஆறுகுளம்

கண்மாயி எல்லாம் ரொம்பிச்சி அவ்ளோதான் வெள்ளமெல்லாம் வீதிக்கு

வரல..புரளி கிளப்பறாங்கம்மா வேணுமின்னே சிலரு '


'இல்லப்பா இப்போ அப்படால்ல ..ஊரே ஓடிட்டு இருக்கு.. நம்மஊருல

 பள்ளிக்கூடம்மேட்டுப் பகுதில இருக்குறதுனால அல்லாரும் அங்கிட்டு

ஒதுங்கறாங்க நானும் தம்பியும் வேண்டிய சாமான் சட்டு எடுத்துட்டோம்

நீங்களும் பொறப்பட்டு வாங்க, சொல்லிட்டேன் ஆமா.. '


சுமதி கண்டிப்பான கொரல்ல சொல்லிப்புட்டு நாலுமூட்டை முடிச்சி

பொட்டியோட வாசலுக்கு வந்திச்சி


'சுமதி நான் ரெடி '


குமாரும் பொட்டியோட பொறப்பட்டான்


மளை பெருசா கொட்ட ஆரம்பிச்சிடிச்சி


'சரி...பின்னாலயே வாரேன் நானும்... 'எசமான் எரிச்சல்பட்டுகிட்டே

என்னைபாத்தார்


' 'செல்வராணி..நீயும் அவங்ககூட போயித்தொலைக்கவேண்டியதுதானே ? '

கத்தினார்


'அய்யா உங்களத்தனியாவிட்டு நான் எப்படிப்போவறதுங்க ? '


அவருக்கு என் குரல் கேட்கல, ' சரி நாங்க கிளம்பறோம் சீக்ரமா வாங்க

நீங்களும் 'அப்பா'  ன்னு சுமதி சொன்னதும் காதுல விளுந்த

மாதிரித் தெரியல.


மழைத்தண்ணி தாழ்வாரத்துல வரலாமான்னு எட்டிப்பாக்குது


'எலே....கோனாரு..பொறப்படும் சீக்ரமா....வெள்ளம் நுழையுது ஊர்ல.. '

தெருவில் யாரோ கத்தறாங்க


அய்யோ காவேரி நதி பொத்துகிச்சா ?  இந்த வருஷம்  நல்ல மளை வர்ரப்போவே நெனச்சேன்  ஆடிப்பதினெட்டுக்கு  காவிரி  கொள்ளாதுன்னு  ஆருடம்  சொல்லிக்கிட்டேன் மனசுக்குள்ள அதுக்குள்ளாற  வெள்ளம்!  வடக்கே  இப்படித்தான் சமீபத்துல வந்திச்சாமே  பேசிக்கிட்டாங்களே  அதுப்போல  இங்கிட்டும் வரப்போகுதா அடி ஆத்தீ!

சாமீ!

நான் கண்ணை இறுக்கி மூடிக்கறேன்.


எசமான் திண்ணைதடுப்புஒட்டி இரும்புக்கம்பில
 
கயிறுபோட்டுகட்டிவச்சிருந்த

மூணு பசுமாடுகளை கன்னுகுட்டியோட சேர்த்து அவுத்துவுடுறாரு


எல்லா மாடுகளும் திருதிருன்னு முழிக்குது


'எல்லாம் போங்க வெளியே ? ' பிடிச்சி தள்ளிவிடறாரு


என்னைபாத்தவரு, ' வந்து தொலை ' ன்னு கத்தறாரு


எத்தினி வருஷம் வாழ்ந்தவீடு ?


எனக்குப்பிரிய கஷ்டமா இருக்குது


வெள்ளம் வடிஞ்சி திரும்ப வூடு வந்துடுவோமில்ல ?


நான் அமைதியா அவரைப்பின் தொடந்துகிட்டு நடக்கறேன்


தெரு எல்லைதாண்டறப்போ தடார்னு தண்ணீ பெருக்கெடுத்து

ஓடிவருது.வயிறுவரைஇருந்த தண்ணீ கழுத்தைத் தொடுது இப்போ.


கடல் அலைபோல ஆவேசமா வெள்ளம்


ஜனங்க பதட்டமா ஓட்றாங்க


ஓடுங்க சீக்ரம்..மேட்டுப்பகுதில ஒதுங்குங்க அல்லாரும்


கூவறாரு ஒரு புண்ணீயவான்

'

லாரி வண்டிங்க நிறைய 'சர்ர்சர் 'ருனு வர்து


அம்மாடி!

மூச்சுத் திணறுது எனக்கு


கழுத்துவரை தண்ணீ



முன்னாடி பசுமாடுகன்னுகுட்டிங்களோட நடந்தவரு சட்டுனு நின்ன ஒரு
லாரிலஏறீட்டாரு

லாரிக்கராங்க தயவுல மாடுகன்னுகுட்டிகளையும் மனுஷங்களோடயே ஏத்தறாரு...


லாரி பொறப்படப்போவுது நான் தண்ணில விளுந்து புரண்டு லாரிபக்கத்துல

போயி நிக்கறேன்


அய்யோ எசமான்! என்னைய மறந்திட்டாங்க. நானும் வந்துடறேன் எசமான் !!மனசுவைங்க அய்யா சாமீ.


நான் கெஞ்சறேன்


கண்ணுமுழிவரை வெள்ளம் வந்து என் உயிரை எடுக்குது


லாரி ட் ரைவரு. என்னைக்கைகாட்டி, ' இழுத்துபோடவா ? 'ன்னு கேக்கறான்


நான் பலமா தலை ஆட்டறேன்.



என்னைத் திரும்பிப்பாத்த எசமான், ' செல்வராணியையா ? வேணாம்... அது

கறவை நின்னுபோயிகிடக்கு சனியன். ஒருவருஷமா அடிமாட்டுக்கு விக்க

தரகருக்கு சொல்லீருந்தேன் ...படுபாவி இன்னிவரை வரல ...அது இருக்கறதும்

ஒண்ணுதான் இல்லாததும் ஒண்ணூதான்,, செத்துப்போவட்டும் அது
 
தண்ணியோட..நீ வண்டியக்கிளப்பு. ' ன்னு ஈவுஇரக்கமே இல்லாம சொல்றாரு


லாரி கர்புர்னு கத்திக்கிட்டு போயிடிச்சி.


நாம் மட்டும் வெள்ளத்துல உயிருக்கு போராட்டிட்டு இருக்கேன்.


யாராச்சும் வந்து என்னைக் காப்பாத்துங்களேன்


காப்பாத்துங்க


காப்பாத்


காப்

கா
*********************************************************








--
 
 
 



 
 
 





--
 
 
மேலும் படிக்க... "காப்பாத்துங்க..(சிறுகதை)"

Monday, July 22, 2013

ஆடிவெள்ளி தேடி உன்னை...!








தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுமே  தனித்தனிச்சிறப்பு வாய்ந்தது எனினும்  ஆடிமாதம் சற்று கூடுதல் சிறப்பு பெற்றது.  ஆண்டின் பண்டிகைகளை ஆரம்பித்து வைக்கிற மாதம் இது! பாயசமும் சக்கரைப்பொங்கலும்  ஆடிமாதம் மட்டுமே அதிகம் செய்யவேண்டி இருக்கும்!

ஆடி மாதப்பிறப்புக்கு தேங்காய்ப்பால்  செய்யவேண்டும் புதுமாப்பிள்ளைக்கு புதுவெள்ளி டம்ளரில் மாமியார் வீட்டில்  தேங்காய்ப்பால் ஊற்றிக்கொடுப்பார்கள்!(இதுமாதிரி மருமகள்களுக்கு புகுந்தவீட்டில்  ஏதாவது உண்டா?::0 எல்லாம்  மாப்பிள்ளைகளுக்குத்தான்:)

இதே  மாப்பிள்ளையை ஆடிமாதம்   தனிமையிலே  இனிமை காணமுடியுமா பாடவைத்துவிடுவார்கள்:) காரணம்  அனைவரும் அறிந்ததே:):)

மனிதர்களுக்கான  ஓராண்டு தேவர்களுக்கு ஒருநாளாம். அதில் ஆடிமுதல் தேதி தொடங்கி ஆறுமாதகாலம் தட்சிணாயணம் என்றும் தை மாதம் முதல் தேதி தொடங்கி உத்திராயணம் என்றும்  சொல்லப்படுகிறது.

ஆடிமாதம் தெய்வீகமாதமாகக்கருதப்படுகிறது அம்மன் கோவில்களில் இந்த மாதம்  ஆடிக்கூழ்  ஆடித்திருவிழா  ஆடிவெள்ளிகளில்  சிறப்பு பூஜை என அமர்க்களப்படுகிறது.

அரங்கமாநகருளானை  இந்த ஆடிமாதம் பூரநட்சத்திரத்தில்பிறந்த  ஆண்டாள் காதலித்த கதையும்  திருவரங்கத்தில் அவனோடு ஜோதியாய் கலந்த கதையும் நாம் அறிவோம்.


ஆடிமாதம்  தென்னீர்பொன்னி  சற்றே கூடுதல் வேகத்தில்  தன் பாதையில் நடக்க ஆரம்பிப்பாள்.ஆடிப்பதினெட்டாம் பெருக்கன்று காவிரி அன்னைக்கு
படையலிட்டு  ஆரத்தி எடுப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள  காவிரி பெண்ணை பொருனை ஆகிய மூன்று ஆறுகளிலும் ஆடிப்பதினெட்டைக்கொண்டாடுவதால் மூவாறு  பதினெட்டு  என்றும் சிலேடையாக சொல்லலாம்:)

ஆடிப்பெருக்கு என்று  திரைப்படம்  வந்திருக்கிறது.ஆடிப்பட்டம்  தேடி விதைக்கவேண்டுமாம் அப்போதானே தையில் அறுவடை செய்யலாம்?  ஆடி அம்மாவாசை  சிறப்பானதாம் ..மற்ற நேரங்களில் செவ்வாயோ வருவாயோ என அலுத்துக்கொள்கிறவர்கள்ஆடிச்செவ்வாய்  என்றால்  வாய்பிளந்து புகழ்வார்கள்! .

காவிரியன்னை ரங்கநாதரின் தங்கையாகக் கருதப் படுகிறாள். இந்நாளில்,சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும்.  சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது

. சாதாரணமக்களே, இவ்வாறு சீர்கொடுக்கும் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப்பாரா! தன் தங்கை காவிரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக மஞ்சள் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும். சித்ரான்னங்கள்  செய்துகொண்டுபோய்  படித்துறை ஓரம் உட்கார்ந்து சாப்பிடுவார்கள்.

 ஸ்ரீரங்கம் -திருச்சி டவுனுக்கான  இடைப்பட்ட ரயில்   பாதை  காவிரி ஆற்றின் மீது  செல்லும் ஆடிமாதம்  காவிரி   திரைக்கைவீசி  நடந்துவரும்போது  ரயில் ரோமியோக்கள்   தடால் தடால் என  கீழே குதித்து மகிழ்வார்கள்  ஓரக்கண்ணால்  பெண்கள் கோச்சில்  இருக்கும் கல்லூரி மாணவிகள் தங்கள் வீரதீர செயலைப்பார்ப்பதை ரசித்தபடி:) 


  செல்வங்களைவாரித்தரும் வர லஷ்மி விரதம்  ஆடியில்தான் வருகிறது. ஆடித்தபசு  பற்றி அதிகம் தெரியவில்லை.  சங்கரன் கோயிலில் இது  விமரிசையாக நடக்கும் அல்லவா?

ஆடித்தள்ளுபடிக்கு  கூட்டத்தில் முட்டிமோதி   ஜவுளி எடுக்கும்  சுகம் கொஞ்சம் ‘ஸில்லி;யாக  இருந்தாலும் அலாதியானது! 

ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்.. கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்... என்ற அந்தாதி வகையிலான  அருமையானப்பாடலை   ஆடிமாத சிறப்பிப்பதிவில் இட்டு  பதிவை முடிக்கலாமா?

http://www.youtube.com/watch?v=d597F2FCF04


 
மேலும் படிக்க... " ஆடிவெள்ளி தேடி உன்னை...!"

Friday, July 19, 2013

கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!

கவிஞர்  வாலி   என் அன்புத்தந்தையும் எழுத்தாளருமாயிருந்து சென்ற் ஆண்டு இதே கறுப்பு ஜூலையில்  அமரரான   திரு ஏ எஸ் ராகவனின்  நண்பருமாவார். சிலவருடங்கள் முன்பு ஒரு  விழாவில் வாலியைக்கண்டு நானும் அப்பாவும்  பார்த்தபோது  ஸ்ரீரங்கத்தையும் சித்திரைவீதியையும்  பற்றி    நண்பர்கள்  இருவரும்மனம் விட்டுப்பேசிக்கொண்டனர்.


(நான்  கவிஞர் வாலி  அப்பா  எழுத்தாளர் மகரம்)

பழைய நட்பை மறக்காத பண்பாளர் வாலி அவர்கள் அப்பாவிம் மரணச்செய்தியை  சென்ற ஆண்டு அவருக்கு போனில் கூறியபோது,’வாலிக்கு முன்னே  ராகவன்  போய்விட்டாரா?” என்று இருபொருள்படக்கேட்டு  வருந்தினார். 


மல்லிகைக்கு விளம்பரம் தேவை இல்லை வாசனையே காட்டிக்கொடுத்துவிடும் கவிஞர் வாலியைப்பற்றி  அனைவரும் அறிந்ததுதான்.ஆனாலும் அவரது நூல்களில்  எனக்கு மிகவும் பிடித்த  நூலான  ‘பெண்ணின் பெருந்தக்க  யாவுள?’ என்னும் தலைப்பிலான  புத்தகம்  என்னை மிகவும் பாதித்தது. பாரதியைப்போல   பெண்கள் மீது ஆழ்ந்த அக்கறையான சிந்தனை கொண்ட கவிதைப்புத்தகம் இது. தவிர தமிழை  பெண் இனத்தின் அத்தனை வடிவங்களும் காண்கிறார் கவிஞர்..பெண்  தெய்வங்கள் பலவற்றிர்க்கு  வந்தனம் கூறி முடிக்கிறார்.

அதிலிருந்து சில  பக்கங்களை  இங்கே  அளித்து  அரங்கநகர்பெற்ற அருங்கவிஞனுக்கு அஞ்சலி செய்கிறேன்.


   பெண்ணில் பெண்மையைக்கண்டு பெண்மையில் பொதிந்த உண்மையைப்  போற்றுபவர்தான் கவிஞர்.  வாலி தனது இந்த நூலில் அதைதான் செய்திருக்கிறார்.

பெண்ணுக்குக்கல்வி அவசியம் என்பதை

நுண்ணறிவை  பெண்ணுக்கு
நூல் கொடுக்கும்  அவள்

காலமெல்லாம் நிற்பதற்குக்
கால் கொடுக்கும்.‘


ஆரேனும்  -நீ
அமரவேண்டிய இடம்
அடுப்படி என்றால்..
கடுப்படி
வாழ்க்கைப்படகை -நீ
வகையாய் செலுத்தக்
கல்விதான்  -நீ
கையேந்த வேண்டிய   துடுப்படி


என்கிறார்.

புதுக்கவிதைகளின் மத்தியிலே வெண்கலிப்பாக் கண்ணிகளிலே  ‘ஒருகவனிப்பு’ அதனில்...

‘என்னைக் கவனிக்க
எனக்கேது  பொழுது  -நான்
உன்னைக் கவனித்தே
உருகும் நெய் விழுது

என்ற அபாரமான பல்லவியுடன்  உள்ளது.

உருகுதலுக்கு மெழுகைச்சொல்லவில்லை பாருங்கள்  மெழுகாக  உருகிவிட்டால் காதலியை நெருங்குகையில்  ஒன்றும் மிச்சம்  இருக்காதே  நெய் விழுதானால்  அவளின் நெருங்குகையில் மனம் குளிர்ந்து  உறையும் காணாமல் போகாதாம்!

இந்தப்பாட்டில் தமிழின் ழகர அழகை  மேலும் கவனியுங்கள்

கோழிக்கு முன்னெழுந்து
கோலம் நீ போடுதற்கு
ரேழிக்கு வருகையிலென்
ராத்தூக்கம் பாழாக
மேழிக்கு ஆட்பட்ட
மேதினியாய் என் மனது
நாழிக்கு நாழியிங்கு
நைந்தபடி கூழாக...


தமிழை தாயாய் தாரமாய்  தங்கையாய்  இன்னும் பலவாய் கடைசியில் தெய்வமாய்  கூறும் பாடலில் இந்த  வரிகள் அருமையாக இருக்கின்றன

கல் வடிவில் நிற்கும்
தெய்வத்தைவிடவும்
சொல் வடிவில் நிற்கும்
செந்தமிழ்த்தெய்வம்
நாய்க்கும் கீழாய்
நலிந்து கிடந்தவனைப்  பெற்ற
தாய்க்கும் மேலாய்த்
தயவு காட்டி மேனை செய்தது
தரையில் அமர்ந்தவனைப் பொன்
தவிசில் அமர்த்தி  ஒரு
வரையில் அருள் மழையை மிக
வாஞ்சையோடு  இவன் மேல் பெய்தது

  கவிஞர், ஆனைக்கா  அன்னையைப்போற்றுவதை  கூறி  முடிக்கிறேன்

நாவமரும் நற்றமிழும்
நற்றமிழில் நானெழுதும்
பாவமரும் பருப்பொருளும்
பெருமாளாய்த் திருவரங்கத்
தீவமரும் திருமாலின்
திருத்தங்கை திருவானைக்
காவமரும் ஈஸ்வரியின்
கடைக்கண்கள் ஈந்தவையே!













 
மேலும் படிக்க... "கவிதைகளில் வாழ்கின்றார் கவிஞர் வாலி!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.