பள்ளிக்கூடம் என்கிற வார்த்தையே எத்தனை அழகானது!
எழிலான ஒரு தமிழ்ச் சொல் பள்ளி என்று சொல்லலாம். கல்விக்கூடம் என்று சொல்லாமல் பள்ளிக்கூடம் என்று ஏன் சொல்கிறோம்? பள்ளி என்றால் நேரடிப்பொருள் இடம் என்பதாகும். பள்ளத்தில் இருப்பது பள்ளி.முன்காலத்தில் குருகுலவாசம் என்று மரத்தடியில் கல்விகற்க மாணவர்கள் கூடுவார்கள். ஆசிரியர் மேட்டில் அமர்ந்திருக்க கீழே பள்ளமான பகுதியில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.
பள்ளிக் கூடம் = ஆறு போல் பல படிப்புகள் வந்து ஒன்றாகத் தேங்கும் பள்ளம் , பள்ளி! .பாடசாலை என்கிறார்கள் இலங்கையில். அழகான பொருள் கொண்ட சொல்தான் இதுவும்.
திருப்பள்ளி எழுச்சி இறைவனுக்கு சொல்கிறோம். இறைவன் இருக்குமிடம் சிறந்தது அல்லவா அதனால் திருப்பள்ளி. ’அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமானபங்கமாய் வந்துநின் பள்ளிக் கட்டிற்கீழே* என்கிறாள் ஆண்டாள் திருப்பாவையில் அதென்ன பள்ளிக்கட்டில்?
!
* பள்ளி = பள்ளிவாசல் என்பது சமய வழிபாட்டு இடம்!
* பள்ளி = படுக்கை என்றும் பொருள்.சங்ககாலப்பாடல்களில் இதற்கு உதாரணம் உள்ளது. பள்ளியறை என்பது படுக்கை அறை!
* பள்ளி = மடைப்பள்ளி என்பது சமையல் அறை! இன்னமும் வைணவர் வீடுகளில் சமையல் அறையை திருமடப்பள்ளி என்பார்கள் அது திரிந்துஇன்று திருமாப்படி ஆகிவிட்டது !
வேளாண்மை நிலங்கள், வரப்பில் இருந்து பள்ளமாய்த் தான் இருக்கும்! அங்கே உழுபவன் = பள்ளன்/ பள்ளத்தி! அங்கே பாடும் பாட்டு = பள்ளுப் பாட்டு!மனதின் ஆழத்திலிருந்து வரும் பாட்டு பள்ளுப்பாட்டு! (முக்கூடற் பள்ளு) அதான் பாரதி ஆடுவோமே பாட்டு பாடுவோமே என்று சொல்லவில்லை.ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றான் போலும்!
பள்ளிவாசல் என்பது இறைவனின் கருணை வந்து தேங்கும் பள்ளம்! பிரார்த்தனைத் தலம்!
பள்ளி அறை = உறங்கும் அறை, மற்ற பகுதிகளை விடச் சற்று தாழ்வாத் தான் இருக்கும்! மேட்டில் உறங்காமல், சற்றே பள்ளமான இடத்திலேயே உறங்குவார்கள்! மேட்டில் உருண்டு விழுந்தால் அடி பலம்:) பள்ளமே கள்ளத்துக்குச் சரி என்று பதிவர் கேஆர் எஸ் தன் வலைப்பூவில் கூறியதை அப்படியே இங்கே காப்பியடிக்கிறேன்:)
மடைப் பள்ளி என்னும் சமைக்கும் இடமும் அப்படியே! பல பேருக்குச் சமைக்கும் இடம், சற்றே பள்ளமாக இருக்கும்! பெரும் பாத்திரங்களை இறக்கிச் சமைப்பார்கள்!
அரசனின் அரியணை உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அது ஆடாமல் என்றுமே நிலையா நிக்கணும்! அதன் பொருட்டு, அதன் கால்கள் அங்கேயே சற்றே பள்ளத்தில் ஆழ்ந்திருக்கும்!
அப்படித் தான் இறக்கிக் கட்டுவார்கள்! அப்படியான அரியணைக் கட்டில் = பள்ளிக் கட்டில்!
இறைவன் கொலுவிருக்கும் இடமான பள்ளிக் கட்டில் = அரியணை! அந்த அரியணையைத்தான் ஆண்டாள் பள்ளிக்கட்டில் என்கிறாள் தன் பாசுரத்தில்.
பள்ளிக்கட்டு (டில்) சபரிமலைக்கு, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை-ன்னு பாட்டும் நினைவுக்கு வரணுமே!
எதற்கு இப்படி பள்ளிக்கு இன்று இவ்வளவு முக்கியத்துவம் என்றால் பதிவர்
கணேஷ் அவர்கள் என்னை தொடர்பதிவாக எழுத அழைத்துள்ளார். மீண்டும் பள்ளிக்கூடம் போக சொல்கிறார்! ரொம்ப பின்னாடி நான் போகணும் இதுக்கு! தம்பி உடையாள் படைக்க அஞ்சலாமா?:) அதனால் நினைவுக்கு வருவதை இங்கே படைக்கிறேன்!!கொஞ்சம் பெரிய படையல் பொறுமையா படிங்க ..உங்களை மாட்டிவிட்ட புண்ணியம் கணேஷுக்கே!!!
*************************************************
சர்ச்பார்க் கான்வெண்டிற்கு வாயில் சாக்லேட்டை சுவைத்தபடியே ஆங்கிலத்தில் அம்மாவிடம் ‘பை மம்மி’ என்றும், ‘இட்ஸ் கெட்டிங் லேட்,, கோ ஃபாஸ்ட்’ என்று கார் ட்ரைவரிடம் சொல்லியபடிகறுப்பு நிற காரில் போனதாகவும் ரீல் விட ஆசைதான் ஆனால் பொய் சொன்னா போஜனம் கிடைக்காதாமே.. சாப்பிடாம எப்படி உயிர்வாழறது இன்னும் எழுதி எல்லாரையும் எப்படிப்படுத்தறதாம் அதனால நிஜத்தையே சொல்லிடறேன்:)
அப்போல்லாம் இந்த எலிகேஜி பூனை கேஜில்லாம் கிடையாது நேரா ஒண்ணாம்கிளாஸ்தான் நான் பள்ளிக்குப்போக மூணுவயசிலிருந்து ஒற்றைக்காலில் நின்னதால் அம்மா என் அப்பாக்குத்தெரியாம 2வயசு ஜாஸ்திபோட்டு ஒண்ணாங்கிளாசில் சேர்த்துட்டாங்க ஆள்வேற அப்படித்தான் பம்ளிமாஸ் மாதிரி இருப்பேனா யாருக்கும் சந்தேகமே வரலையாம்.ஆனா இந்த வயசுக்கூடுதலாய் போட்டதுக்கு அம்மா இன்னிவரைக்கும் அப்பாகிட்ட அர்ச்சனைவாங்கிட்டு இருக்காங்க:)( என்னவோ நான் பெரிய கலெக்டர் வேலை பாக்கறமாதிரி கரண்டி உத்தியோகம்தான் கல்யாணம் ஆன நாள் முதலாய்!!!)
வீட்ல அப்பாவின் பெற்றோர்கள் கல்யாணமாகாத தங்கைகள் அதாவது என் அத்தைகள் என்று கூட்டுக்குடும்பம் குடும்பத்தின் முதல் பேத்தி நான் தான் ஆகவே அளவுக்கு மீறீய செல்லம் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். தினமும் பள்ளிக்கூடம் போய்விட்டுவரும்போது சிலேட்டை வழியில் தொலைத்துவிடுவேன் கேட்டால் காற்றில் பறந்துவிட்டது என்பேனாம்! இரண்டாம் வகுப்புவரை இரண்டு டஜன் சிலேட்டுகளை தொலைத்துவிட்டேனாம்!! சிலேட்டையாவது தொலைத்தால் சரி ஒருநாள் இரண்டாம் வகுப்பு பரிட்சை எழுதிவிட்டுவருகிறபோதே நானே தொலைந்துவிட்டேனாம். அன்று.வீட்டில் ஒரே கலவரமாகிவிட்டது ஏகப்பட்ட தெய்வங்களுக்கு மஞ்சள்துணிமுடிப்புகள் பிரார்த்தனைகள் அழுகை கண்ணீர் கதறல்.
கடைசியில் என்னை சாத்தாரவீதி முனையில் ஒரு மனிதன் கையில் கண்டுபிடித்தார்களாம் அவன் சொன்னது,”இந்தப்பொண்ணு காலாற இப்படியே நட்ந்துவந்திச்சி.... கைல பள்ளிக்கூட பை ஒண்ணூமில்ல ஆனா பள்ளிக்கூடத்திலிருந்துவரேன்னு சொல்லிச்சி...எங்கேவீடுன்னா சொல்லத்தெரியல,’தாகமாயிருக்கு கூல்ட்ரிங் வாங்கிகொடுன்னிச்சி அப்றோம் கடலைமிட்டாய் லேகா உருண்டை கொடுக்காப்புளின்னு செலவு ஏழுரூபாய்க்குமேல(இன்னிக்கு 700ரூ) வச்சிடிச்சி...பணத்தைகொடுத்திட்டு புள்ளையைக்கூட்டிப்போங்க’ என்றானாம் . அவன் கடத்திப்போக வந்தவனோ அல்லது வழிதெரியாமல் போனவளை காப்பாற்ற வந்தவனோ பதட்டத்தில் அவன் கேட்ட பணத்தைகொடுத்துவிட்டு மீட்டுவந்தாராம்.
அதற்குப்பிறகு நாலாம்வகுப்புவரை அத்தைகளில் ஒருவர் அரைகிலோமீட்டர் அருகிலிருந்த பள்ளிவரைகொண்டுவிடுவது திரும்ப அழைத்துவருவது என்று பொறுப்பேற்றனர்.
சின்ன அத்தை பாதிதூரம் மூச்சிறைக்க தூக்கிக்கொண்டே வந்துவிடுவார்! அவ்வளவு பிரியமும் பாசமும்!
பள்ளிக்கூட ஆண்டுவிழாவிற்காக எனக்கு நடனம் கற்றுக்கொடுத்தார்கள். அப்போ பிடித்தது நடன ஆசை.யாராவது வீட்டிற்குவந்தால் அவர்கள் ஆ என்பதற்குமுன்பாக ஆட ஆரம்பித்துவிடுவேன். நிறுத்தவே மாட்டேன். பாதிபேர் இதற்குபயந்துகொண்டே அதிகம் வீட்டிற்குவராமல்போய்விட்டார்கள்.:)
அப்பா எழுத்தாளராயிருந்ததால்(இருப்பதால்) வீட்டில் மாடி ரூமில்வெள்ளைதாள்கள் நிறைய இருக்கும். ஒருநாள் அதில் ஒன்றை எடுத்து ஒரு ஜோக் எழுதும்போது அம்மா வந்துவிட்டாள்” மொட்டை மாடில் உக்காந்து வடாத்தைப்பார்த்துண்டு பாடம்படின்னா என்ன எழுதறே பேப்பர்ல?” என்றாள்/
ஜோக்கும்மா
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்... படிச்சிக்கிழி போதும். ஏற்கனவே ஸ்கூல்போனா ட்ராமா டான்ஸுன்னு பொழுதைதள்ளிட்டுவரே இதுல ஜோக்கு கதைன்னு ஆரம்பிச்சிடாதே உருப்படியா படிக்கணும் என்ன?
ஆனால் அப்பா பார்த்து புகழ்ந்துதள்ளிவிட்டு அதை விகடனுக்கு எப்படி அனுப்புவதென சொல்லி அதை அனுப்பி ஜோக்கும் வெளிவந்து விட்டது.ஆஹா அன்று பள்ளிக்கு எல்லாருக்கும் பாரிஸ் சாக்லேட் தந்தேன். என்னவோ ஞானபீட பரிசு வாங்கினகினமாதிரி பள்ளியே என்னை அன்று கொண்டாடியது.
கூடப்படிச்சபொண்ணு(பேர்மீனா)கணக்கு நோட்டை வாங்கி காப்பி அடிச்சி ஹோம் ஒர்க் பண்ணிட்டுத் தர்ரதா வீட்டுக்குக் கொண்டுவந்தேன்.வரவழியிலயே வழக்கம்போலஅதை எங்கயோ தொலச்சிட்டேன் ..அவகிட்ட நடந்ததை சொன்னேன். 'தொலைசிட்டியா நீ ?இருஇரு எங்க பெரியப்பாகிட்ட உன்னைமாட்டிக்கொடுக்கறேன்'னு பயமுறுத்தினா மீனா.
அவள்பெரியப்பா போலீஸ்காரர்.மல்லிகைப்பூ அக்ரஹாரத்தை ஒட்டிய போலீஸ் குவார்ட்டஸ் வாசலில் , காக்கி உடை அவரைவிட விறைப்பாய் தெரிய கொடுவாள்மீசையோடு பாத்தாலெ நடுங்கறமாதிரி இருப்பார். ஐயோ போலீஸ் பெரியப்பா என்னை விலங்குமாட்டி ஜெயில்ல போட்டுடுவாரா?
வீட்டிற்கும் தொலைத்த கதை சொல்லவில்லை.'உனக்கு ஒண்ணூம் இழுங்கா வச்சிக்கத் துப்பு இல்லை' என் அர்ச்சனை விழுமெனும் பயம்!
அம்மாமண்டபம்போகும்வழியில் ஒருசின்ன பிள்ளையார்கோயில்வரும்..
அங்கேபோனேன்.."பிள்ளையாரப்பா!மீனாவோட கணக்குநோட்டு
தொலைஞ்சிபோச்சு ..அதுக்கு அவ போலீஸ்பெரியப்பாகிட்ட சொல்லி என்னை ஜெயில்லபோடபோறா போல இருக்கே?.அந்த பெரியப்பா உயிரோட இருந்தா தானே என்னை ஜெயில்ல போடுவாரு அவரைஉயிர் போகச் செய்துடு..அவரை சாகடிச்சிடு' னு கண்ண மூடி வேண்டிட்டு நிமிர்ந்தா......... எதிரே மீனா ! பக்கத்துல போலீஸ்காரபெரியப்பா!
அய்யோ!
தலைதெறிக்கஓட இருந்தவளை பெரியப்பா லபக் ன்னு பிடிச்சார் ."எங்கஓடறே?"
"வ வந்து..." (இப்போதும் அன்னிக்கு என் கண்முழி நெட்டுப்போனதையும் கைகால் நடுங்கியதையும் மறக்கமுடியவில்லை)
"கணக்கு நோட்டைதொலைச்சிடியாமே நீ ?சொல்லிச்சு எங்கவீட்டு பாப்பா..."
""ஆஅ ஆமாஅ. தெ தெ தெரியாஆஆம...".(பிள்ளையாரேஇப்பொகூட லேட் இல்ல ..இங்க இவருதலைக்கு
மேல தொங்கிட்டு இருக்கறபெரிய வெங்கலமணீயை டமால்னு தள்ளிவிட்டு அவர் மண்டைய உடச்சிடு.. )
கண்ணமூடினவளின் காதுல தேனா ஒருகுரல்!
'கவனமா இருக்கணும்ம்மா.இனிமே தொலைக்காதே என்ன? போனாப்போவுது நீயும் சின்னபுள்ளதானே?மீனாகூட பழைபடி பேசுபழகு..அவளும் பேசுவா"
எனக்குபோன உயிர் திரும்பி வந்தது!
ஐந்தாவது வகுப்பிலிருந்து எங்கள் கிழக்குரங்காபள்ளிக்கூடத்தைவிட்டு ஸ்ரீரங்கம் ஹைஸ்கூலில் 6த்ஸ்டாண்டர்ட் சேர்ந்தபோது அருகில் இருந்த பாய்ஸ் ஹைஸ்கூலைக்கடந்துதான் செல்லவேண்டும். அந்தப்பக்கமே பாக்காமல் நேராபோகணம் தெரிஞ்சுதா என்று வீட்டில் அதட்டி அனுப்பிவைப்பார்கள். கொஞ்சமாய் ஓரக்கண்ணால் பாய்ஸ் கேர்ல்ஸை பாக்கறாங்களான்னு பார்த்துக்கொண்டே போயிடுவோம் நாங்க நாலைஞ்சிபேர்!
குடுகுடுராமசந்திர ஐயர் என்று ஒரு வாத்தியார் இருந்தார் அவர் குடுகுடுவென வேகமாக நடப்பார் என்பதால் பாய்ஸ் ஹைஸ்கூலில் அந்தப்பட்டபெயர் அவருக்கு .அவர் இரண்டுபள்ளிகளுக்கும் காம்ப்வுன்ட் குறுக்கே இருக்கும் சின்ன தடுப்புகதவுவழியே வந்து பாடம் எடுப்பார். என்னவோ அவரைப்பார்த்தாலே எனக்கு சிரிப்பு வந்துவிடும் ஒழுங்காய் பாடம் கவனிக்கும் மற்ற மாணவிகளையும் சிரிக்கவைத்துவிடுவேன்.
ஏழு எட்டாம் வகுப்புகளில்
பள்ளியில் NCCயில் சேர்ந்துவிட்டேன் ஞாயிறுகளில் சிற்றஞ்சிறுகாலை காக்கி உடுப்போடு பள்ளிக்குப்போய்விடுவேன் பின்ன ரங்கபவன்லேந்து சூடா இட்லி வடை சாம்பார் கிடைக்குமே!
அம்மா,’என்சிசில சேர்ந்தா நாளைக்குகல்யாணம் ஆகுமா இவளுக்கு? எதுக்கு ஆண்பிள்ளையாட்டம் பாண்ட் சர்ட் போட்டுண்டு போறா வேண்டாம்னு சொல்லுங்கோ” என அப்பாவிடம் சொல்லிச்சொல்லி இரண்டேவருஷத்தில் அதிலிருந்து நான்விலகும்படி ஆகிவிட்டது அதற்குள் ஜே1 சர்டிஃபிகேட் வாங்கிவிட்டேன்! எல்லையில் நின்று ராணுவச்சேவை செய்ய நினைத்தவளை வீட்டில் அரிசிசேவை செய்ய வைத்த பாவம்(புண்ணீயம்?:) என் தாயையே சேரும்!!
எழுத்தாளர் ஜெயகாந்தன் சிறுமியாய் இருக்கறப்போ வீடுவந்தார் அவரையும் விடவில்லை" மாமா தெற்குவாசல்போய் கூல்ட்ரிங்க் வாங்கித்தாங்க" என்றேன் . கருப்பாயிருந்தாலும் ஹாண்ட்சம்மாய் இருப்பார். எப்போ பார்த்தாலும் சிகரெட் கையில் இருக்கும். ‘ஏன்மாமா சிகரெட் பிடிக்கறீங்க?”
‘பிடிச்சதை பிடிக்கறேன்மா’ என்பார் சிரித்தபடி எனக்கு ஒன்றும் புரியாது.
‘ஏம்மா உனக்கு கூந்தல் சுருட்டையா அழகா இருக்கே தவிர நீளம் போதலையே அதுக்கு ஒரு தைலம் வாங்கித்தரேன்” என்று தெற்குவாசல் கடையில் ஒரு கூந்தல் வளர் தைலம் வாங்கிக்கொடுத்தார்.
அடுத்த ஏழெட்டுமாதத்தில் திருச்சி தேவர் ஹாலில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் மறுபடி ஸ்ரீரங்கம் வீடுவந்தார் அப்போ கேட்டார்’ என்னம்மா வளர்ந்திச்சா?’ நானும், “ ம்ம் வளந்திச்சி மாமா அந்த கூந்தல் தைலக்கம்பெனி வியாபாரம் நாந்தான் நிறைய வாங்கறேன் ஆனா என் தலைமுடி அப்படியே இருக்கு” என்றேன் சிரித்துவிட்டு .
அப்பாவிடம்,’இதுமகாவால்’என்றார்.
அப்பாவோடு பல எழுத்தாளர்கூட்டங்களுக்குப்போயிருக்கிறேன் கவனமெல்லாம் கேசரி வெண்பொங்கல் பஜ்ஜி வாசனையில்தான் இருக்கும் மேடை சொற்பொழிவை கவனிக்காமல் விட்டதற்கு இப்போது வருந்துகிறேன்! குயிலன் என்றொரு மகாகவிஞர் வருவார் வீட்டுக்கு அவரிடம் ‘ஏன்மாமா இவ்ளோ கருப்பா இருக்கீங்க” என்று கேட்டுவிட்டேன் அவரும் .”அதான்மா நான் குயிலன்” என்றார். அவர் போனதும் அப்பா அம்மாவிடம் எனக்கு கிடைத்தது லட்சார்ச்சனை! பின்னாளில் அவர் கவிதைகளை வாசித்தபோது கண்பனித்தது அவரிடம் பழைய நிகழ்வை சொல்லி மன்னிப்பு கேட்டேன் “ என்னம்மா நீ? குழந்தை மனசாய் இருப்பதுதான் இயல்பு அதுக்கு எதையும் மறைக்கத்தெரியாது வயசானாலும் நீ குழந்தைமையை இழக்காதே’ என்றார் பெருந்தன்மையாக.
ப்ளஸ்டூ வரை பள்ளியில் படிப்பைவிட மற்ற கலை நிகழ்ச்சிகளில் நான் பிரசித்தம். மதிய இடைவேளையில் சாப்பிட்டதும் சகமாணவிகள் என்னிடம் ஏதும் கதை கேட்பார்கள் இட்டுக்கட்டி அளந்துவிடுவேன் அதை ரசித்து மகிழ்வார்கள்.அப்பாவின் தொடர்கதை அப்போது ராணி யில்வந்துகொண்டிருந்தது.சில ஆசிரியைகள் தொடரின் அடுத்தபாகம் என்ன விறுவிறுப்பா இருக்கு என்று கேட்பார்கள்.’தெரியாது டீச்சர்’ என்றாலும் உள்ளூறப் பெருமை தாங்காது.
துணி நீயப்பா என்று பழம் நீயப்பா பாடல்பாணியில் பாட்டு எழுதி மாம்பழம் முருகன் வினாயகர் சம்பவத்தை அப்படியே நவீனமாய் மாற்றி பள்ளி பிரிவு உபசார நாளுக்கு ஸ்கிரிப்ட் தயாரித்தேன். அதை பிறகு திருச்சிவிவித்பாரதியில் விரும்பிக்கேட்டு ஒலிபரப்புமளவுக்கு பிரபலமானது.
ஆக எனக்கு இப்போ ஏதாவதுகொஞ்சம் சுமாரா எழுதவருகிறதென்றால் அதற்கு வித்திட்டது என் பள்ளிக்கூட நாட்கள்தான். பசுமை நிறைந்த நினைவுகள் மட்டும் மிச்சமிருக்கஅன்று என்னை ஆதரித்த ஆசிரியர்களும் தோழிகளும் பழகிய அனைவரும் இன்று எங்கங்கோ சிதறி இருக்கிறார்கள்..... என்றாவது மீண்டும் கண்டால் அவர்களுக்கு சொல்ல என்றே நல்லகதை ஒன்றையும் வைத்திருக்கிறேன்!
இது தொடர்பதிவு ஆகவே நான் இதைத்தொடர நாலுபேரை அழைக்கிறேன் அவர்களும் பள்ளி நினைவுகளை அசைபோடும்படி அன்போட கேட்டுக்கறேன்.
1மாதவன்
2ஷக்திப்ரபா
3மகேந்திரன்
4புதுமாப்பிள்ளை தக்குடு!