Social Icons

Pages

Thursday, January 03, 2008

ஆஹா மெல்ல நட மெல்ல நட!

தலைவலி பல்வலி சைனஸ் தொல்லை டைபாயிடு மலேரியா காலரா எல்லாமே நல்ல நோய்கள்!

ஞானசம்பந்தர் தன் உள்ளத்தில் சிவபெருமான் புகுந்தபோது எல்லாக்கோள்களும் சனி ராகுகேது உட்பட 'நல்ல நல்ல' என்றுதான் பாடி இருக்கிறார்!

அப்படித்தான் போன வருடம் இந்தியா முழுவதும் பரவலாய் ஆக்கிரமித்திருந்தது, சிக்குன்குனியா chickungunya . என்ற நோய்.

அது உடலில் புகுந்தபோது அனைத்து நோய்களுமே
நல்லவை ஆகிவிட்டன!

ஹிட்லராய் பின்லேடனாய் அனைவரையும் பயமுறுத்திய நோய்தான் ..சிக்குன்குனியா..பலரை விழுங்கிக்கொண்டதும் கூட.

அன்று எனக்கு ஜுரம்..கை கால் வலி..முக்கியமாய் சிக்குன்குனியாவின் அறிகுறிகளான கால்வலி அதனால் எப்போதும் உப்பு சத்தியாக்ரக காந்திஜீயாய் வேக நடைபோடும் எனக்கு நடை தளர்ந்துபோனது. மெல்ல மெல்ல அடியெடுத்துவைத்துக்கொண்டிருந்தேன்.

." சிக்கன்குனியாவா அது உனக்கெப்படி வந்தது? நீதான் வெஜிடேரியன் ஆச்சே?" எதிர்வீட்டு மாமி அறியாமையால் கேட்டாலும் அதற்கு சிரிக்கக்கூட முடியாமல் சோர்வாக இருந்தது.

"தெரியல மாமி...சிக்குன்குனியாவின் அறிகுறிகள் எல்லாம் இருக்கு..முதல்ல ஜுரம் அப்றோம்.ரண்டுநாளா நடக்கவே முடில்ல.."

"நடைதளர்ந்தது நாணமல்லவா?" என்று பாடிக்கொண்டே வந்து கடுப்பேற்றினாள் என் தோழி.

மாமி ஆர்வமாய்,"நல்ல கஷாயம் சொல்றேன் செய்துகுடி... நிலவேம்புன்னு பலசரக்குக்கடைல கிடைக்கும் அதை வாங்கி கருப்பட்டி சேர்த்து கஷாயம் போட்டு மூணு வேளைகுடிச்சிப்பாரு.அப்புறம் எலும்பெல்லாம்
ஸ்ட்ராங்க் ஆகி கிடுகிடுன்னு நடக்க ஆரம்பிச்சிடுவே!" என்றார்.

அந்த நிலவேம்புவேரை கஷாயம் வைத்துக்குடித்ததில் வாய் கசந்துபோய்விட்டது..ஒருடன்பாகற்காய் சூப் குடித்த கசப்பு... அடுத்து அதிக சக்கரைபோட்டுக்குடித்த பாலை குடித்தபோது,"பாலும் கசந்ததடி சகியே" என்று பாடவேண்டியதாயிற்று!!

"ஹோமியோபதி ட்ரைசெய்ங்களேன்"

"ஆலோபதிதான் இதுக்கெல்லாம் பெட்டர்!"

ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல என் 'பதி' சற்றே கடுப்பாகி,"முதல்ல இது சிக்குன்குனியாதானான்னு டெஸ்ட் பண்ணனும்....அந்த சிம்ப்டம்ஸ் வச்சி நாமே அதுதான்னு நினச்சிடக்கூடாது" என்றார் ..

"ஆரஞ்சு ஜூஸ்தான் இதுக்கு மருந்து..."

"ஐய்யயோ ஆரஞ்சு பக்கமே போகக்கூடாது".

"நிறைய பேரிச்சம்பழம் சாப்பிடணும்"

"கால்ஷியம் மாத்திரை போட்டுக்கோ..இல்லேன்னா எலும்பு பலம் இழந்து நடைப்பிணம் ஆகிடுவே"

அரைகுறை வைத்தியர்கள் பலரின் அட்வைஸ் என்னை அதிரவைத்தன.

கதைகவிதை எழுதும்போது சண்டித்தனம் பண்ணும் கற்பனைக்குதிரை இந்தமாதிரி விஷயங்களின் போது பஞ்சகல்யாணியாய்ப் பறந்து , என்னை கையில் கோலோடு மலை உச்சியில் நடக்கவைத்தன. பி.டி. உஷாக்களாய் ஷைனிஅப்ரஹம்களாய் என்னோடுவந்தவர்கள் ஓடிக்கொண்டிருக்க நான் மட்டும் அன்னநடை--இல்லைஇல்லை--- சின்ன நடைகூட போடமுடியாமல்....அப்போ பார்த்து எஃப் எம்மில் இனிய பழைய பாடல்கள் நிகழ்ச்சியீல் ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும் பாட்டு ஒலிபரப்பாகி,"ஐயோ என்னைக்காப்பாத்த யாருமே இல்லையா? என்று கௌரவம் படத்தில் மேஜர் சுந்தர்ராஜன் வக்கில்களைப்பார்த்து கத்துவாரே அதுமாதிரி நான் கூச்சலிட.......

"முதல்ல டாகடரைப்போய்ப்பார்க்கலாம்" என்று பதி கட்டளையிட பக்தியோடு அவரைப்பின் தொடர்ந்தேன்..

"சிக்குன்குனியாவால் பலபேர் நடக்க சிரமப்பட்டாங்க..பழைய நடை திரும்ப ஆறுமாசம்கூட ஆகுமாம்....உங்களைப்பார்த்தா அவ்ளோ மோசமா தெரியல..." குடும்ப நண்பர் ஆறுதலாய் கூறினார் க்ளினிக் வாசலில். ஆர்வமாய் நானும்," அப்படியா?' என்றேன்.

"ஆமா கண்டிப்பா அஞ்சரை மாசத்துல நடக்க ஆரம்பிச்சிடுவீங்க!" என்றவரை நான் மட்டும் கௌதமமுனிவராயிருந்தால் சாபம் கொடுத்து கல் ஆக்கி இருப்பேன்!!!!

பலிபீடத்திற்குப்போவதுபோல அல்லது தூக்கு மேடைக்கு நடக்கும் கைதியைப்போல தயங்கித்தயங்கி டாக்டரின் அறைக்குள் நுழைந்தேன்...

கன்னட எழுத்தாளரும் பிரபல வைத்தியருமான திருமதி ஷோபாநாகராஜ் என்னை பரிசோதித்துவிட்டு,"சிக்குன் குனியா உங்களுக்கு இல்லையே..இது வேற வைரஸ் ஜுரம்..சரியாயீடும்" என்றார்.

"எல்லாரும் சிக்குன்குனியா மாதிரி இருக்குன்னு சொன்னாங்க டாக்டர்"

"ஒருவேளை உங்களுக்கு வந்திருக்கறது ச்சிக்கு(கன்னடத்தில் ச்சிக்கு என்றால் சின்ன) சிக்குன்குனியாவாக இருக்குமோ?"
என்று டாக்டர் ஜோக் அடித்தபோது வாய்விட்டு சிரித்ததிலோ என்னவோ அடுத்த இரண்டே நாட்களில் வாராதுவந்த அந்த நோய் விடைபெற்று போய்விட, என் நடை திரும்பிவிட்டது!!!!








"

10 comments:

  1. Anonymous12:56 PM

    நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ஷலு என்றால் நகைச்சுவை

    ReplyDelete
  2. சிக்கன்குனியால்லாம் ஊரைவிட்டே போய் வருசகணக்காகுதே !!

    சூப்பரா எழுதியிருக்கீங்க!!

    கலக்குங்க.

    ReplyDelete
  3. Anonymous8:39 PM

    சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.

    ReplyDelete
  4. அனுபவத்தை நன்றாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிங்க ;))

    ReplyDelete
  5. //கதைகவிதை எழுதும்போது சண்டித்தனம் பண்ணும் கற்பனைக்குதிரை
    இந்தமாதிரி விஷயங்களின் போது பஞ்சகல்யாணியாய்ப் பறந்து//

    தோ பாருங்க! புத்தாண்டு அதுவும் பொய்யா? :-))

    கற்பனைக் குதிரை - பஞ்ச கல்யாணியாய் பறக்குது-ன்னு எல்லாம் எழுதிக் கலக்குறீங்க!
    உங்களுக்கு கற்பனை சண்டித்தனம் பண்ணுதா?

    சரி சரி...
    சிக்கு குனியா எல்ல்லாம் போயிந்தே போயே போச்சு, ச்சோலே காச்சு!
    இனி தினம் ஒரு பதிவு! சரி தானே ஷைலஜா? :-))

    ReplyDelete
  6. Anonymous said...
    நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ஷலு என்றால் நகைச்சுவை//

    நன்றி பாரதிதமிழன்!

    ReplyDelete
  7. மங்களூர் சிவா said...
    சிக்கன்குனியால்லாம் ஊரைவிட்டே போய் வருசகணக்காகுதே !!

    சூப்பரா எழுதியிருக்கீங்க!!

    கலக்குங்க//

    ஆமா சிவா..நாளானாலும் மறக்கமுடியாத சுனாமி அது. பாராட்டுக்கு நன்றி ப்ரதர்.

    ReplyDelete
  8. Anonymous said...
    சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு//

    நீங்க யார்ன்னு தெரில்ல..சிங்க நடை இப்போ வந்தாச்சே...அப்போ கொஞ்சநாள்தான் அசிங்கநடை! நன்றிங்க அனானிமஸ் அவர்களே!

    ReplyDelete
  9. கோபிநாத் said...
    அனுபவத்தை நன்றாக நகைச்சுவையுடன் எழுதியிருக்கிங்க ;))//

    இப்போ நகைச்சுவைன்னாலும் அப்போ சிலநாள் பட்ட வேதனை ஏன் கேக்கறீங்க? நன்றி கோபிநாத்.

    ReplyDelete
  10. kannabiran, RAVI SHANKAR (KRS) said...


    சரி சரி...
    சிக்கு குனியா எல்ல்லாம் போயிந்தே போயே போச்சு, ச்சோலே காச்சு!
    இனி தினம் ஒரு பதிவு! சரி தானே ஷைலஜா? :-))

    >>>
    இதெல்லாம் ஓவர் ரவி...வாரம் ஒண்ணு முடிஞ்சா அதே இமாலய சாதனை!!! சபதம் எடுத்திட்டேன் வேற சும்மா இல்லாம:):)

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.