Social Icons

Pages

Tuesday, September 30, 2008

பரமஹம்சர் கண்ட பராசக்தி!

காளிதேவியைப் பற்றி விவேகானந்தர் சொல்வதைக்கேளுங்கள்..

"சுடர்கள் அவிந்தன; கருமேகத்திரள்கள் கவிந்தன. இருள் எங்கும் அடர்ந்தது, சுழற்காற்று.
கோடிக்கணக்கான பைத்தியங்கள் சிறையிலிருந்து தப்பி ஓடுவதுப்பொல இரைச்சலிட்டது. வேரொடு மரங்களைதிருகி வழிநெடுக எறிந்தது, மை இருள் கக்கிய மின்னல் ஒளி.
கோரக்காட்சியையும் பயங்கர சாவையும் ஆயிரமாயிரமாகப் புலப்படுத்தி வருவாய்! இப்படி ஆடுவாய் காளி! காளித்தாயே! வருக! வருக!"

இந்தக்காளியை தரிசிக்க யாரால் இயலும்?

இன்னலை அன்புடன் ஏற்கத் துணிந்தவன், சாவின் உருவை தழுவத்துணிபவன் ,அழிவின் ஆட்டம்
ஆடிக்களிப்பவன் யாரோ அவ்வீரன் முன்னே அன்னை வருவாள் என்கிறார்.

விவேகானந்தரின் இந்த புரட்சிகரமான வாக்கும், ஸ்ரீராமக்ருஷ்ணர் ஏற்றிய காளிதேவியின் ஒரு
கோரதாண்டவத்தைக் குறிப்பதுதான்.


"பல்வேறு வழிகளில் நாம்கடவுளை உபாசித்து அவர் அருளை பெறலாம் ஆற்றங்கரையில் பலபடித்துறைகள் உள்ளன அல்லவா, ஆனந்த வெள்ளமாகிய பரம்பொருளுக்கும் பலபடித்துறைகள் உண்டு.
எந்த படித்துறையிலும் இறங்கி தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றுஇவ்விதமாக பலசமயங்களும்
பலவழிகளைக் காட்டுகின்றன "என்கிறார் பரமஹம்சர்.

சக்திசமயத்திலும் பலபடித்துறைகள் உண்டு.

தேவியை சுந்தரியாக தரிசிப்பதுப்போல பயங்கரியாகவும் வழிபடவேண்டும்.


பாரதியாரின் ஊழிக்கூத்து பாட்டை பலரும் கேட்டிருப்பார்கள்.பாடி ரசித்தும் இருப்பார்கள்.
ஆகாயம் கறுத்து வச்சிராயுதம்பாய்ந்து இடியும்மின்னலும் கக்கும் மேகத்தில் பராசக்தி இருக்கிறாள் .அந்தமேகம் மழையாகப்பெய்து அது நதியாக ஓடும்போது அதிலும்பராசக்தி இருக்கிறாள்!

மாயையிலிருந்துமீள்வதற்குவழிதான் என்ன என்று பரமஹம்சரிடம் ஒருவன் கேட்டான்.

மீளவேண்டும் என்று உண்மையான மனம் இருந்தால் தாயாகிய பராசக்தியே வழிகாட்டுவாள் என்றார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

விரும்புவது என்றால் வெறும் வாய்ப்பேச்சில்மட்டுமல்ல. விடுபடவேண்டும் என்ற ஆசைமேலிட்டு உள்ளம்கரையவேண்டும் என மேலும் சொல்கிறார்.

தேவி நல்லமங்களமான காட்சியைக் கண்டுமட்டும் உவக்கிறாள் என்பதுமட்டும் அல்ல

பேயைக்கொலையை
பிணக்குவையைக் கண்டு உவப்பாள்

என்கிறார் பாரதியார்.

அன்னை அன்னை ஆடுங்கூத்தை
நாடச்செய்தாய் என்னை...

சக்திப்பேய்தான் தலையொடுதலைஅக்ள்முட்டிச்- சட்டச்
சட சடசட்டென்றுடைபடு தாளங்கொட்டி அங்கே
நின் விழியனல்போய் எட்டித்-தானே
எரியுங்கோலம் கண்டே சாகும்காலம்

ஊழிக்கூத்தில் பாரதி இப்படியும் சொல்கிறார்.

பைரவி பகற்காலங்கலில் பரமஹம்சரின் இருப்பிடமாகிய தட்சணேஸ்வரத்திலிருந்து வெகுதூரம் போய் அவர் வேண்டும் பொருட்களக்கொண்டுதருவாள்.

காளிதேவியின் பூஜைகளைமுடிதபிறகு ஆழ்ந்ததியானத்தில் ஆழ்ந்துவிடுவார் பரமஹம்சர்.
அச்சம்யங்களில் நான் கண்டகாட்சிகளைபப்ற்றி என்னால் இப்போது எடுத்துரைக்க முடிகிறதில்லை என்றும் பரமஹம்சர் கூறுகிறார்.

தனது மார்க்கம் இறையைத் தாயாய் நினைத்துவழிபடுவது என்கிறார்.

அன்னைபராசக்தியை தாதியாகவோ வீரனாகவோ அல்லது குழந்தையாகவோ பாவித்துவணங்கலாம் என்னும்
பரமஹம்சர்" நான் என்னைக் என்னைகுழந்தையாகபாவித்துக்கொண்டேன் "என்கிறார்.

மனம் உள்முகமாகத் திரும்பினால் அதுவாசற்கதவை சாத்திக்கொண்டு உள் அறைக்கு நோக்கிப்
போவதற்கு சமம், அந்த நிலையில் மனமானது பரம்பொருளில் லயமாகிவிடும் என்பது அவர் வாக்கு.

நம்பிக்கையில்குழந்தையைப் போலானாலொழிய ஈஸ்வரனைக்காண்பது துர்லபம் எனபமதங்கள்கூறுவதை ராமக்ருஷ்ணரும் வற்புறுத்தினார்.

பரமஹம்சர் பராசக்தியை நேரில்கண்டவர்.

அவர் உபதேங்களைஇயன்றவரையில் பயன்படுத்திக்கொண்டு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு ஆன்மீக
நிலையில் உயரலாம்.

யாதுமாகிநின்றாய் காளி !எங்கும் நீ நிறைந்தாய்!
தீது நன்மை எல்லாம் -காளி!-தெய்வலீலை யன்றோ?
மேலும் படிக்க... "பரமஹம்சர் கண்ட பராசக்தி!"

Monday, September 29, 2008

வாஷிங்டனில் நவராத்திரி!


வாஷிங்டனில் திருமணம் என்று பலவருடங்கள் முன்பு விகடனில் சாவி என்னும் எழுத்தாளர்
நகைச்சுவைகதை எழுதிஇருந்தார்.

வாஷிங்டனில் நவராத்திரி கேள்விப்பட்டிருக்கீங்களா?

இருங்க அதைத்தான் இப்போ சொல்லப்போறேன்.
2வருடம் முன்பு நவராத்திரி நேரம் நான் என் சித்தப்பாவின் வீட்டில் வாஷிங்டனில் இருந்தபோது நவராத்திரிகொலு வைக்கும் ஆசைவந்தது.

நம்ம ஊர் மாதிரி அங்க வீடுகளில் எல்லா இடங்களிலும் தரையே தெரிவதில்லை(சிலவீடுகளில் சமையற்கட்டுமட்டும்) அங்கே பெரும்பாலும் கார்பெட் போர்த்தியதரைகளே. மாடிப்படிகள், சுவர்
எல்லாம் மரத்தில்தான் .. சகலமும் விருட்ச ராஜ்ஜியம்,அபார்ட்மெண்ட் வீடுகளில் நாலாவது மாடியில் குடி இருப்பவர்கள் ராத்திரியில் நடந்துபோனால் சரக்சரக் என சில நேரம் சத்தம் கீழ்வீட்டுக்காரங்களுக்குக் கேட்கிறது. போனபுதிதில் நான் கொஞ்சம் அரண்டுபோனது நிஜம்.


ஆனால் இந்தமரசுவர்களில் ஒரு பெரியவசதி என்னவென்றால் சுவரில் ஒரு காலண்டர் அடிக்கவேண்டுமானால் டக் என்று ஆணி அடித்த உடன் சமத்தாய் ஆணி இறங்கிப் போகிறது. ஆனால் வாடகைவிட்டில்
அபார்ட்மெண்ட்டில் எல்லாம் இப்படி டக்டக் என்றுஆணி அதிகம் அடிக்கக் கூடாதாம்
வாடகைவீடுகளில் மாவிலைதோரணம் வாசலில்கோலம் என்று பல நம்மூர் வழக்கங்கள் நாட் அலவ்ட்!

வாஷிங்டனில் அக்டோ பர் குளிர் நாளில் நான் போனபோதுதான் தசரா வந்தது.

இந்தியாவில் ஸ்ரீரங்கத்தில் இருந்தநாட்களில் கொலுபொம்மைகள் வைக்க ஒருவாரம்முன்பே
கோயில் வளாகத்தின் ரங்கவிலாசில் படை எடுத்து புதுப்புதுபொம்மைகளாய் சேர்த்துவிடுவோம். அப்போதெல்லாம் கள்ளி(அல்லது கல்லுவா அர்த்தமே சரியா இல்லயே:))பெட்டிகள் கண்டாமுண்டாசாமான்கள் கனம்நிறைந்த பழைய தீபாவளிமலர்கள் டால்டாடப்பாக்கள் என்று கொலுபடிக்கு ஆதார வேர்களாய்பல பொருட்கள் வீட்டில் சுலபமாய் கிடைக்கும்.. பார்க் ஜூ அருவி என்று கற்பனைக்கு வந்தபடி
கைவரிசையைக்காட்டுவோம்..அப்புறம் ஸ்லாட்டட் ஆங்கிள்வந்தது சாதாரணநாட்களில் அது எங்களுக்குபுத்தக அலமாரி கொலுநாட்களில் அதுவே படிக்கட்டுகளாய் அவதாரம் எடுக்கும்.(பெங்களூரில் நைசாய் ஷோகேசிலேயே பொம்மைகளை வைத்து ஒப்பேற்றிக்கொண்டுவருகிறோம் என்னும்
உண்மையை இங்கே சொல்லிவிடவேண்டும்:))

வாஷிங்டனில் விஸ்தாரமாய் கொலுவைக்க ஆசைப்பட்டு தயாராகத்தான் ஊரிலிருந்துவந்திருந்தேன்.

ஆறேழுமாதம் சுற்றிபார்க்கவந்த இடத்தில் சித்தப்பாவிடம் அதைவாங்குங்க இதைவாங்குங்க என்று ஆர்டர் போடமுடியுமா? ஆனாலும் கொலு என்றால் படிகள் அமைத்து அதில்பொம்மைவைத்தால் அதன் அழகே தனிதான்.

ஆனால் சித்தப்பாவும (அமெரிக்க) சித்திக்கும் என்கவலைபுரிந்தது போலும்

". டோ ண்ட் ஒர்ரி இங்க மரக்கடைகளுக்குபோனால் விதம்விதமாய் சைஸ் வாரியாய் மரப்பலகைகள்கிடைக்கும் வாங்கிவரலாம்" என்றனர்.

மரக்கடை என்றதும் நான் கூட திருச்சிபாலக்கரை பஸ் நிறுத்தம் அருகே இருக்கும் மரக்கடைகளைவிட சற்றுப்பெரிதாய் கற்பனை செய்துகொண்டேன். ஆனால் அங்கே போனதும்தான் தெரிந்தது அது ஒரு
கிரிக்கட் மைதானம் அளவில் இருக்கிறதென்று !அமெரிக்காவில் எல்லாமே பெருசு தான்!

விதம்விதமான அளவில் மரப்பலகைகள் வாங்கினதும் அதை அறுப்பதற்கு என்ன செய்வதென்று விழித்தோம்.

என் கணவர்," நீதான் இருக்கிறாயே ?"என்று தன் பங்குக்கு அறுத்தார்! மறுபடி,அறம் ரம்பம் இழைப்புளி இன்ன பிறஆயுதங்களை சித்தப்பா வாங்கினார்.


எல்லாம் கார்டில் தேய்த்து வாங்கிவிட்டதால் அப்போது விலை தெரியாத எனக்கு பிறகு டாலரில்
விலை கேட்டுதெரிந்து அதை என் இந்தியமூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து மொத்தம் பத்தாயிரம்
ரூபாய்க்குமேல அகிவிட்டது எனப்புரிந்ததும் திகைப்பானது.

"இட்ஸ் ஆல்ரைட்" என்றார் சித்தப்பா பெருந்தன்மையாக.


வீட்டிற்குவந்து மரப்பலகைகளை மெதுவாய் இறக்கி வீட்டிற்குள்கொண்டுவந்து சேர்த்தோம்
சித்தப்பாவும் என்கணவரும் இஞ்ச் டேப்பால் அளவு எடுத்து குறித்து அளந்து ஒருவழியாய் அறுத்து எடுத்த போது பலமணிநேரங்கள் ஓடிவிட்டன.

இந்தியாவிலிருந்த் புறப்படும்போதே ஒரு அட்டைப்பெட்டியில் தசாவதார(சினிமா அல்ல):) செட், சீதாராம பரத சத்ருகுண ஆஞ்சநேய செட் இன்னும் பலபொம்மைகளை தெர்மாகொலில் பதுக்கிக்கொண்டுவந்திருந்தேன்
தஞ்சாவூர் தலையாட்டி செட்டியார்பொம்மை எந்த ஏர்போர்ட் ஸ்டாண்டார்ட் பெட்டிகளிலும் அடங்காமல் உடைந்த பல் வெளியே தெரிய செட்டியார் மானத்தை வாங்கிவிட்டார்!

செட்டியாரை அமுக்கி கைப்பையில் பெரியதுண்டில் சுற்றிப்போட்டுகொண்டு திருட்டுமுழி முழித்தபோது லுஃப்தான்சா விமானப்பணிப்பெண் என்னை ஒரு சந்தேகப்பார்வை பார்த்துப்பின் பையைத்திறந்து பார்த்து சமாதானமானாள்.

எல்லாவற்றையும் இப்போது ஆர்வமாய் வெளியே எடுத்தேன்.

மீராபாயின் தம்புராவில் இரண்டு இழை விலகி இருக்க காந்தீஜீ நூற்றுக்கொண்டிருந்த தக்ளிகாணாமல்போயிருக்க ராமலட்சுமண செட்டில் அனுமாரின் கன்னத்தில் காயம்பட்டமாதிரி லேசாய் பொம்மை உடைந்துவிட்டிருந்தது.

தசாவதார செட்டில் வாமன அவதாரம் இந்தியாவிலேயே மறந்து விட்டுவந்திருப்பதை உணர்ந்தேன்.

"ஐயோ இப்ப என்ன செய்யறது? தசாவதாரம் நவாவதாராமாயிடுமே??" என்றேன் என்
வாழ்க்கைத்துணைவரிடம்.

என்கணவர்,"உன் ஒன்றுவிட்டதம்பி குட்டையாய் இருப்பானே அவனைக்கொண்டுவந்து கொலுப்படியில்வை" என்று ஜோக் அடித்தார், நான் முறைப்பதை ரசித்தபடி!

சித்தப்பா ஈமெயில் முலம் நவராத்திரிக்கு தமிழ்க்குடும்பங்களை அழைத்து அழைப்பு விடுத்திருந்தார்.

சித்தி அரைகுறைதமிழில் நவராத்திரி மகாத்மியத்தை என்னிடம் கேட்டுத்தெரிந்துகொண்டார். நான்
வாங்கிவந்திருந்த மைசூர் சில்க் சேலையைக்கட்டிக்கொண்டு சுண்டல் செய்ய உதவி புரிந்தார்.

ஏழெட்டுமாமிகள்முதல்நாளே பி எம் டபில்யூ காரில்வந்துஇறங்கினர்.

ஒருமாமி கொலுவைக்கண்டதும் தானாகவே
'சரஜிஜநாபசோதரி ' என்று உணர்ச்சிவசப்பட்டுப்பாடதொடங்கிவிட்டார்.

இன்னொரு மாமியிடம் நான் தான் சும்மா இல்லாமல் "ஸ்ரீசக்ரராஜ." :பாடச்சொல்லி வேண்டுகோள் விடுக்க அவங்க, 'பலவிதமாயுன்னைப்பாடவும் ஆடவும்' என்ற வரியைமட்டும் பலவிதமாய்ப்பாடி அபிநயித்து
நீணட்டிமுழக்கி பாடிக்கொண்டே இருந்தார்! அப்புறம் சுண்டல் விநியோகித்துப் படுக்கப்
போகும்போது நள்ளிரவாகிவிட்டது!நித்திரைபறிபோனதில் நொந்து போய் என்கணவர்"இனிமே மாமிகளை பாடச்சொல்லி வற்புறுத்தாதே ப்ளீஸ்" என்று என்னிடம் கைகுவித்தார்.

இன்னொருநாள் நாலைந்து சிறுமிகள்பட்டுப்பாவாடை காதில் ஜிமிக்கி கழுத்தில் காசுமாலை என்று அசல் கிராமத்துச்சிறுமிகள்போல டொயோட்டா காரில் வந்து இறங்கினர்.

ஆங்கிலமும்தமிழும்கலந்து பேசியபடி அவர்கள் தங்கள் அம்மாக்களோடும் தாத்தா பாட்டிகளோடும்வந்து அமர்ந்ததும்" யாராவதுபாடுங்களேன்" என்றேன்.

"வர்ஷா நன்னா திவ்யமா பாடுவா" என்றார் குழந்தையின் தாத்தா பெருமையாக.
அந்த ஏழுவயது வர்ஷாவைபாடச்சொன்னேன்.

அதுபலமாய்த் தலையாட்டியது.

"எனக்குதமிழ் சாங் தெரியுமே?" என்றது குஷியானகுரலில்.

"ஆஹா இந்த அமெரிக்கால இருந்துண்டு தமிழ் பேசறியே அதே பெருமையா இருக்கு..எங்க
ஒருபாட்டுபாடு,,கேக்கலாம்?"

"ஸ்ருதிப்பெட்டி கொண்டுவரலையே அச்சச்சோ" தவித்தது குழந்தை.

அமெரிக்க சித்தி,"நான் வச்ருக்கேன் கோண்ட்டு த்ரேன்.." என்று ஆர்வமாய் இந்தியாபோனபோது வாங்கிய எலெக்ட் ரானிக் ஸ்ருதிப்பெட்டியயை எடுத்துவந்து கொடுக்கவும் குழந்தையின் அம்மா அதனில் ஸ்ருதி சேர்த்து அதை, குழந்தை அங்கீகரிக்க அரைமணி ஆகியது.


வர்ஷா கைவளையல்களைபின்னுக்குத் தள்ளிக்கொண்டு சம்மணம்போட்டுகொண்டு அமர்ந்தாள்
"வலதுகைலதான் தாளம்போடணும் வர்ஷு" குழந்தையின் அம்மா எச்சரித்தாள்.

'ஒகேமாம்மீ"

தொண்டையைக்கனைத்துக்கொண்டதுகுழந்தை

சூடா பால் குடிக்கறியா வேணா?

வேணாம்...

பாத்து ஸ்ருதிபிசகாம பாடு என்ன?

இடக்கரத்தால் தலைப்பின்னலை எடுத்து முன்னேதள்ளிக்கொண்டபடி," ஆரம்பிக்கட்டுமா?" என்றுகேட்டது

அட! ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! --- தாத்தா பூரித்துப்போனார்.

"பாடு குழந்தே.. கேக்க காத்துக்கொண்டிருக்கோம்"

"சுட்டும்விழிச்சுடரே சுட்டும்விழிச்சுடரே என்னுலகம் உன்னைச்சுற்றுதே, சட்டப்பையில் உன்படம் பற்றிக்கொண்டு உரச ..." வர்ஷா உரத்தகுரலில் குதூகலமாய்ப்பாட

தாத்தா தலைஆட்டி ரசிக்க, கூட்டம் கைத்தட்டி உடன்பாட, நான் ஙே என்று விழிக்க......

இப்படி ஏக அமர்க்களத்துடன் வாஷிங்டனில் நவராத்திரி நடந்து முடிந்தது.
**********************************************************************
மேலும் படிக்க... "வாஷிங்டனில் நவராத்திரி!"

Sunday, August 10, 2008

பூக்கள்.


செடியின் தலையில்
கடிதம்
ஒற்றைப்பூ


புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும்
பல்கலைக்கழகங்கள்
பூக்கள்


முட்செடியின் உச்சியில்
முற்றுப்புள்ளிகள்
பூக்கள்


காலைப்பிடித்துக்கட்டினாலும்
வாசத்தை வானம்வரைபரப்பும்
பூக்கள்


சருகுகள் சப்திக்கும்;
அமைதியானவை
பூக்கள்


மணத்தோடே
மடிந்துவிடும்
பூக்கள்
மேலும் படிக்க... "பூக்கள்."

Thursday, July 24, 2008

அனி மை ஹனி!( அறிவியல்கதை போட்டிக்கு)


அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லேயே கம்ப்யூட்டர் இருக்கில்ல? ஓபன் செஞ்சி படிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்… அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள்…

'கல்லைமட்டும்கண்டால்' என்றது ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானல்.

“ஓ மை காட்! ஏன் இப்படி பழையபாட்டாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் பாட்டு ,,நீங்க கேட்டுட்டு இருங்க நான் க்ளப்புக்குப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”

‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'
"யெப்..கம் சூன் அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!
நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.
லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கண பதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எ ங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வச னமெல்லாம் சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே நான்போறேன் “
வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்
“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டிர்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்பொல இருந்தது..

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்
“நான் ,நா…ன்…”
“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா பழைய ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.
*****************************************************************
“ஏய் என்னாச்சு அனிதா? சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல்கதைப்போட்டிக்கு எழுதணும்னு சொல்லிட்டு இன்னமும் தூங்கிட்டு இருக்கே? காலேஜுக்கு நேரமாச்சு…ஏந்திரு அனிதா ஏந்திரு?”

ஜோதி வந்து தன்னைத்தட்டி எழுப்பவும் அனிதா ,”கனாக்கண்டேனடி தோழி” என்று பாடியபடியே பாத் ரூமுக்குப்போனாள் .

*************************************************************
மேலும் படிக்க... "அனி மை ஹனி!( அறிவியல்கதை போட்டிக்கு)"

Sunday, July 13, 2008

காவேரி ரகஸ்யம்!

ஆடி மாதம் பிறக்கபோகிறது! பண்டிகைகளை
தேடிக்கொண்டு சேர்க்கும் இந்த மாதத்தின் சிறப்பிற்காக இல்லை இந்தப்பதிவு


காவிரிக்காக என்று சொல்லலாம்!(அதன் அரசியல்சிக்கல்களைத் தவிர்த்து!)


"நடந்தாய் வாழி காவேரி''என்று இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்
புகழ்ந்திருக்கிறார்.


இந்க்காவேரிக்குத்தான் ஆடிவந்தால் எத்தனை ஆட்டம் பாருங்கள்!
திருவரங்கநகருக்கு ஓடிவரும்போது காவிரியின்
விஸ்வரூபம் சொல்லி மாளாது ! அகண்ட காவிரி என்பார்கள்
அம்மாமண்படப்படித்துறையில் பெருகி ஓடும் காவேரிக்கு!ஆடிப்பதினெட்டுக்கு
காவேரிக்கு விசேஷ பூஜைகள் !மரியாதைகள்..!ஆடிப் பதினெட்டு நோன்பு'' என்பார்கள்.
இத்தினதன்றுகாவிரிக்கரைக்கு. சித்திரான்னங்களை எடுத்துச் சென்று உறவு
முறைகளுடன் சேர்ந்து உண்ணும் கொண்டாட்டம் காணக் கிடைக்காத ஒன்று.


இந்தக்காவிரிக்கு பெரிய வரலாறு இருக்கிறது.


திருமூலர் நாள் தொட்டு கணக்கிலடங்காத சிவயோகிகள், திருப்பாணாழ்வார் நாள்தொட்டு


கணக்கிலடங்கா இசையோகிகள்!


இவர்களுக்கும் முன்னாலிருந்து காவேரி ஓடுகிறது.


அகத்தியரின் கதை இங்கு உள்ளது.


எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாதுதான்.உள்ளங்கை ரேகையையே வாழ்நாள் முழுவதும்
பார்க்கலாம் என்பார்கள்(சோதிடம் சொல்லத்தான்)


குடகிலிருந்து பிடித்து காவேரியின்கரையின் 400 ஊர்களையும் தென் கரையில்377
ஊர்களையும் குறிப்பிடுகிறது* காவேரி ரகஸ்யம்* எனும் ஒரு நூல்..கோபாலய்யர் என்ற
மாஜி கல்வித்துறை அதிகாரி இந்த நூலை இயற்றி இருக்கிறார்.


இதை நல்ல புத்தகங்கள்சேகரிக்கும்குடும்ப உறவினர்(இப்போது அவர் இல்லை)
வீட்டில் அண்மையில் பார்க்க நேரிட்டது ,அதுவும் எங்கே என்கிறீர்கள் பழைய
இரும்பு சாமான்கள் வேண்டாத பொருட்கள் அடைத்து வைக்கப்படிருந்த கார் ஷெட்டை
ஒட்டிய குறுகிய அறையில்.!


.அதிகம் படிக்கமுடியாமல் பக்கங்கள் பழுதடைந்துகிடந்தன. புத்தகங்களின் அருமை
தெரியாதவர்கள்அதனை சரியாகப்பேணவில்லை என்பதை நலிந்து போன அதன் பக்கங்கள்
தெரிவித்தன.


ஏதோ புது மாட ர்ன் ஆர்ட் படத்தை வீட்டின் சுவரில்மாட்டுவதற்கு அந்தவீட்டுப்பெண்
சுத்தியலைத்தேடி அங்கு செல்லவும் நானும் உடன் போனேன்...மரப்பெட்டி ஒன்றில்
உடம்புகளை நசுக்கிக்கொண்டு கோமா நிலையில்நிறைய்
புத்தகங்கள் காணப்பட்டன. அருகில் கோணிப்பையில் சில
புத்தகங்களைக்கட்டிப்போட்டும் வைத்திருந்தார்கள்.
மூச்சடைத்துகிடந்த கோணிப்பை புத்தகங்களை முதலில் வெளியே
எடுத்தேன்..காற்றில் அதன் பக்கங்கள் படபடத்தன.


"இதெல்லாம் வீட்ல குப்பையா இருக்குதுன்னு இங்க கொண்டு
வந்துவச்சிட்டோம்...எல்லாம் சமீபத்துல இறந்துபோன என் மாமனாரின் சொத்துக்கள்!"
சிரித்தாள் அந்தப்பெண்.


என்னால் சிரிக்க முடியவில்லை.


"நான் இதைப்பார்த்துவரேன் நீங்க போங்க' என்று சொல்லிவிட்டு வேதனையுடன்
அந்தபுத்தகங்களை மெல்ல ஒவ்வொன்றாய் பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல இரு
கைகளிலும் ஆதரவு கொடுத்து எடுத்தேன்.


அடைத்துவைக்கப்படிருந்த. அந்த புதையலில் கிடைத்த ஒருபொக்கிஷம்தான்
இந்தபுத்தகம்.


பெயர் காவேரி ரகஸ்யம். 'ஸ் 'தான் .'சி' அல்ல:)
எடுக்கும்போதே பக்கங்கள் உதிர்ந்தன.கற்றதோ இல்லையொ கசடற
புத்தகத்தை,அரித்திருந்தது கரையான்கள்!


எவ்வளவு முயன்றும் அதனை முழுமையாகப் படிக்கமுடியவில்லை.


திருப்பும்போதே ஓரிரு பக்கங்கள் தவிர மற்றவைஉயிரைவிட்டன. ரகசியமென்பதாலோ
என்னவோ எனக்குக்கடைசிவரை புத்தகத்தில் என்னஎழுதி இருந்தது என்று தெரியாமலே
போய்விட்டது..மிகவும் அருமையான புத்தகம் என்றும் காவேரியைப்பற்றி பலதகவல்கள்
அதில் உள்ளன என்று எப்போதோ யாரோ சொல்லி கேட்டிருந்ததால் பார்த்ததும் ஆவலானது.ஆனால் ஓரிரு பக்கங்கள் தவிர எதுவுமே
படிக்க முடியாமல் சருகு போல கையில் எடுக்கும் போதே உதிர்ந்துவிட்டன.


.


காவேரியின் விஸ்வரூபத்தை அது செல்லும் இடங்களை ஒரு பயணத்தில் நம்மால்
கண்டுவிடமுடியாது என்பது உண்மை .


நடந்தாய் வாழி காவேரி என்று புத்தகம் எழுத பிரபல எழுத்தாளர் திரு.திஜானகிராமன்
,தனது எழுத்துலக நண்பர்களுடன் சிலவருடங்கள்முன்பு பயணம் செய்ததாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.


காவிரியைத் தழுவிவந்த திருவிழாக்கள், கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று
எத்தனையோ விஷய்ங்கள் உள்ளன.


தண்ணீர், குழாயிலும்தான் வருகிறது ஆனால் ஆற்றில் ஓடும்போது பாட்டாகக்
கேட்கும் ! கவிதையாகச் சிரிக்கும்!


காவிரியின் ரகசியம் என்ன? அந்தப்புத்தகம் யாராவது படித்திருக்கிறீர்களா?


நதிமூலமே ரகசியம்தானே?
மேலும் படிக்க... "காவேரி ரகஸ்யம்!"

வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்


எப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன்.

நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட ஏதாவது மாற்றம் ஏற்படலாம்.

"அதெல்லாமில்லை யார் வந்தாலும் சரி நான் நினைத்ததைத்தான் நடத்திக்கொள்வேன்"

வசந்தாவின் ஒரே தம்பி சந்துரு யாருடனோ உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு சிறுவயதிலிருந்தே மென்மையாகப்பேச வராது. மூன்று பெண்குழந்தைகளுக்கு பின் பிறந்த பிள்ளைஎன்பதால் அவனுக்கு வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுத்து அப்போதே குட்டிச்சுவராக்கி விட்டிருந்தனர்.

அவன் வீட்டில் எங்கே தங்கி இருந்திருக்கிறான்? பதினான்கு வயதில் சிகரெட் பிடித்தவனை அவன் தந்தை ரங்கசுவாமி அதட்டிக்கேட்க கோபித்துக்கொண்டு விட்டைவிட்டு ஓடிப்போனான். பிறகு ஐந்தாறு வருஷத்திற்குப்பிறகு திரும்பிவந்தான். படிப்பும் வரவில்லை. அவன் பழக்க வழக்கங்களும் சரி இல்லை.

அவன் கதை கிடக்கட்டும் எனக்கு இப்போது விசாரமெல்லாம் வசந்தாவைப் பற்றித்தான்.
வசந்தா வருவாளா?

கடைசியாக அவள் எப்போது ஊருக்குவந்தாள்? பத்துவருஷம் இருக்குமா? இருக்கும் இருக்கும்.

அப்போது அவளுக்கு முப்பத்தி எட்டு வயது. தந்தையின் இறுதிக் காரியங்களில் பங்குகொள்ள வந்தவள், தாழ்வாரத்தூணைக் கட்டிக்கொண்டு கதறியதை இப்பொழுதும் என்னால் மறக்கமுடியவில்லை.

வசந்தா ரங்கசுவாமியின் முன்றாவது பெண். ஜாதகக்கோளாறு என கல்யாணம் தள்ளிக்கொண்டேபோய் முப்பதுவயதை நெருங்கும்போது தான் நடந்தது.

ஆனால் அந்த தாமதமும் நல்லதாயிற்று. மூத்த இரண்டு மாப்பிள்ளைகளைவிட வசந்தாவிற்கு வாய்த்தவர்தான் பணக்கார மாப்பிள்ளை.

நல்லபடிப்பு, நல்ல உத்தியோகம் .வெளிநாட்டில் சிலகாலம் வேலை நிமித்தம் போய் தங்க வேண்டி இருக்குமென்று தந்தையின் மறைவுக்கு வந்தபோது வசந்தா தன் சகோதரர்களிடம் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தாள். தன் ஒரே பிள்ளை திவாகரையும் அழைத்து வந்தவள்,
" பாருடா நான் முப்பது வருஷம் வாழ்ந்தவீடு இது! அந்த நாளில் என் தாத்தா பார்த்துப் பார்த்துக்கட்டிய வீடு "
என்று மகிழ்ச்சியுடன் கூவினாள் .அவள்குரலைப்போல அவள் பாதத்தின் கொலுசு சத்தமும் எனக்கு மிகவும் பரிச்சயம்.

ஏழு வயசிலிருந்தே வசந்தா பரதநாட்டியம் ஆடத்தொடங்கிவிட்டாள். கூடத்தில் இப்போதுகூட சலங்கை ஒலி சத்தம் கேட்பது போல பிரமை எனக்கு..

உள்ளூர் கோயிலில் பதினாலு வயதில் அவளின் நடன அரங்கேற்றம் நடந்தது.
'எத்தனை இடங்களுக்குப் போய் ஆடினாலும் நம் வீட்டுக்கூடத்தில் நடராஜர் படத்திற்கு எதிரே வெறும் கொலுசை மட்டும் மாட்டிக்கொண்டு நாட்டியமாடுகிற திருப்தி வேறெங்கும் கிடைக்காது 'என்பாள்.

'நடனம் முடிந்து கூடத்தில் அவள்மட்டும் தனியாக இருக்கும்போது தரையைக்குனிந்து பரிவுடன் வருடுவாள்.

'பாவம் வலிக்கிறதா உனக்கு ?' ரகசியமாய் தரைமீது இதழ் பதித்துக் கேட்பாள்.

எனக்கு உடம்பே சிலிர்த்துப்போகும்.

வசந்தா கல்யாணமாகிப்போகிறவரை வாசல்திண்ணையிலிருந்து கொல்லைக்கிணற்றடி எல்லையும் சுற்றுப்புற இடங்களும் சாணத்தில் மெழுகி மினுமினுக்கும்.இழைஇழையாய் அரிசிமாவுக்கோலங்கள். ஒரு இழையை முழுவதும் எறும்புகள் இழுத்துக்கொண்டுபோய்விடும்.

கூடத்தில் ஊஞ்சலில் இரும்பு வளையங்கள் கிரீச்கிரிச் என்று சதா ஓசைப்படுத்தியபடியே இருக்கும். அக்காக்கள் இருவரும் திருமணமாகிப்போய்விட, ஒரேதம்பி சந்துருவும் எப்போதாவதுதான் வீட்டுக்குவர ,அந்த நாட்களில் வசந்தாவின் பேச்சுத்துணை அவள் தந்தை ரஙகசுவாமிதான். ஏற்கனவே மனைவியை இழந்த நிலையில் தனது குழந்தைகளுக்குத் தாயுமானவராய் இருந்தவர் வசந்தாவிடம் மட்டும் உற்ற சிநேகிதனாகவும் இருந்தார்.

வாரம் ஒருமுறை இருவரும் சேர்ந்து கூடத்துச் சுவரில் மாட்டி இருக்கும் காளிங்க நர்த்தன க்ருஷ்ணர் படத்தையும் தங்க ரேக்குகளும் சிவப்பு பச்சைக்கற்களும் பதித்த நடராஜர்படத்தையும் மெல்லியதுணியால் சுத்தமாய் துடைப்பார்கள்.

ஹெச் எம் வி கிராமபோனை காமிரா உள்ளிலிருந்து சிரமப்பட்டு எடுத்துவந்து, என்சிவசந்தகோகத்தின் காபி ராக 'என்னதவம் செய்தனை?' என்ற பாட்டினைப் போட்டுக் கேட்டபடி ஒட்டடை அடிப்பார்கள்.

"ஏன்மா வசந்தா, புதுசா நீ வரைஞ்சிருக்கிற யசோதாகிருஷ்ணர் படத்தை ஃப்ரேம் செய்து சுவர்ல ஆணி அடிச்சிமாட்டலாமா ?"ரங்கசுவாமி ஆர்வமாய் கேட்பார்.
அவ்வளவுதான் ,வசந்தாவிற்கு முகம் சிவந்துவிடும்.

" ஆணியா? ஏற்கனவே சுவரில் கடிகாரம், படங்கள் மான்கொம்பு என ஏழெட்டு ஆணிகள் அடித்தாயிற்றுப்பா. பாவம் இந்த வீடு.. சிலுவையில் அறையப்பட்ட ஏசுபோல வாய்விட்டு அழமுடியாமல் தவிக்கிறது .மழை வெய்யிலிருந்து நம்மை ரட்சிக்கிற வீட்டில் வரவர அதிர்ந்து நடனமாடக்கூட மனசு வரமாட்டேன் என்கிறது."

வசந்தாவின் விரல்கள் மென்மையாய் சுவரை நீவிக்கொடுக்கும்போது எனக்கும் உற்சாகம் பொங்கும். இருபத்திமூன்று வயது வசந்தா அன்று தனியாக் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபோது ரகு வந்தான்.
ஊருக்குப் புதியமுகம்.

வந்தவன் வசந்தாவைபார்த்ததும் , அவளது அழகை ,அண்மையில் ஆடிய நடனத்தை வானளாவப்புகழ்ந்தான். பேச்சினூடேதான் தெரிந்தது, ரகு, ரங்கசாமியின் பால்யநண்பரின் மகன் என்று. டில்லியில் வேலை செய்கிறானாம்.கிராமங்களின் இயற்கை அழகைப்பார்க்க சிலகாலம் வந்திருக்கிறானாம் எல்லாம் அவர்கள் பேசும்போது என் செவிகள் திறந்திருக்கவும் கேட்க முடிந்தது.

பேசியபடியே ஊஞ்சலை நெருங்கியவன், சட்டென வசந்தாவின் சிவந்த கன்னத்தை விரலால் தட்டியபடி, ஏதோகிசுகிசுப்பாய்கூறவும

அவள் வெட்கப்பட்டாள். ஓஹோ விஷயம் இப்படிப்போகிறதா? நான் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்து ரசித்தேன். எனக்கு மட்டும் தெரிந்த விதத்தில் அவர்கள் இருவரும் எத்தனையோ முறை மொட்டைமாடிக்குப்போகும் வழியில் இருக்கும் பூட்டிய அறையின் துருப்பிடித்த பூட்டைத்திறந்து மரக்கதவை லேசாய் நெட்டீத்தள்ளியபடி உள்ளே செல்வார்கள் .

அந்த அறைக்குள் வசந்தாவின் கொள்ளுத்தாத்தா எப்போதோ ஜில்லாபோர்ட் ப்ரெசிடெண்ட்டாய் இருந்த காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேர்பு பத்திரங்கள் அலமாரியில் குமிந்திருக்கும்.தவிர அந்த அறையில் தேக்குத்தொட்டில், நடைவண்டி,மரத்தாலான வண்ணம்போன ஆடுகுதிரை,.பழைய குடை கைத்தடி கால் உடைந்துபோன நாற்காலி வெண்கலப்பிடிகொண்ட பழைய ஆர்மோனியப்பெட்டி என்று உபயோகப்படுத்தாத பல பொருட்கள் சிதறிக்கிடக்கும்.

வைமு கோதைநாயகி வடுவூர்துரைசாமி புதுமைப்பித்தன் கல்கி என நாவல்கள் இன்னொரு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். உடைந்தபோன பழைய நாளைய மூங்கில் சோபா சுவர்மூலையில் இன்னும் கொம்புகள் தேய்ந்தாலும் வீரம் தொலையாத காளைபோல
கம்பீரமாய் வீற்றிருக்கும். புதையல் போல தேடத்தேட இன்னும் பல சாமான்கள் கிடைக்கும்.

வசந்தா ரகுவுடன் அங்குபோய் உட்காருவாள். .மொட்டைமாடிக்கு ஓடிவந்ததில் மேல்மூச்சு வாங்கும் முன் நெற்றி வியர்க்கும். அதைவிரல் நுனியில் ஒற்றி எடுத்தபடி ரகு அவளருகில் அமர்வான். இருவரும் மணிக்கணக்காய் பேசிக்கொள்வார்கள்.அந்தக்கணங்களை வசந்தா மறந்தாலும் என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

"வசந்தா உன் புத்திசாலித்தனம் எனக்கு பிரமிப்பா இருக்கு..மில்டனையும் பேசறே கம்பனையும் கோடிட்டு காட்டறே..ரியலி அமேசிங்!!"
ரகுவின் ரகசிய வார்த்தைகள் எனக்குக்கேட்டுவிடும்.

அன்று சின்னதாய் ஒருமுத்தத்தின் சத்தம் கேட்கவும் விருட்டென வசந்தா எழுந்து நிற்பதை கவனித்தேன்.

"நோ ரகு கூடாது தப்பு மகா தப்பு"

" என்ன தப்பு வசந்தா? எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு..மணிக்கணக்கா இந்த ரூம்ல உக்காந்து சினிமா இலக்கியம் விளையாட்டு என்று பலகதை பேசி இருக்கோம். இந்த ஒரு மாசத்துல எனக்கு உன்னை ரொம்பபிடிச்சி அது காதலாகிவிட்டதால் அதற்கு பரிசா உன்னை முத்தமிட்டேன் அது தப்பா?"

" ரகு! என் அப்பா கொடுத்திருக்கும் சுதந்திரத்தில் நான் மனம் விட்டு உங்ககிட்ட பேசிப்பழகினேனே தவிர அதில் காதல் இல்லை. ஆணும் பெண்ணும் நட்பாகவே இருக்கமுடியாதா ரகு? காதலும் காமமும் இல்லாத ஆண்-பெண்நட்புச்சூழ்நிலை எந்த காலகட்டத்தில்தான் உருவாகும்? இது ரொம்ப பழைய கலாசாரப்பண்பாடுகளில் ஊறிய குடும்பம். இங்கே காதல் நுழையமுடியாது அதுவும் நீயும் நானும் ஜாதிகளில் வேறுபட்டு இருக்கும் நிலையில் இது சாத்தியமே இல்லை..உன் மனசில் நான் கிளர்ச்சியை உண்டுபண்ணி இருந்தால் மன்னிச்சிடு ரகு" என்று சொல்லி வேகமாய் திரும்பினாள்.

அந்த வேகத்தில் காலடியில் பழைய செட்டியார்பொம்மை ஒன்று உருண்டு ஓடியது, மர கிலுகிலுப்பையும் தொட்டில்கயிறும் காலடியில் இடறி நின்றன. நடை வண்டி ஒன்று தீனமாய் நகர்ந்தது.

"பார்த்தாயா ரகு இந்த வீட்டின் பழமை இன்னும் வாழ்வது உனக்குத் தெரிகிறதா? " என்று கேட்டுவிட்டு கீழே போனாள்.

அதற்குப்பிறகு வசந்தா மொட்டைமாடிபக்கமே போகவில்லை.

ரகு நல்ல அழகனாய்த்தான் தெரிந்தான். படிப்பு குணம் எல்லாம் இருந்தும் வசந்தா அவன் காதலை ஏற்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். 'காதலொருவனைக்கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து' என்றும் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் பாரதி சொன்னதாய் அன்று இதே வசந்தாதானே அதை நடனமாய் ஆடி மகிழ்ந்திருக்கிறாள்? பின்னர் ஏன் ஜாதியைக்காரணம் காட்டி ரகுவை மறுக்கிறாள்? எனக்கு விளங்கவில்லை.

ஆனால் ரகுவைவிட அழகனாய் குணமுள்ளவனாய் ஒரு சம்பந்தம் கிடைத்து வசந்தா கல்யாணம் முடித்து ஊரை விட்டுப்போனாள். போகும்போது என் தலையை வருடிவிட்டுத்தான் போனாள்.

"அடிக்கடி வந்து பாக்கறேன் என்ன? பல்கில்லுபோகாம, தோல் சுருங்காம களையா ஜோரா இப்படியே நீ இருக்கணும் சரியா?" என்றாள் செல்லமாய் அதட்டும் குரலில்.

நான் 'உம்' சொன்னது அவள் காதில் விழுந்ததோ இல்லையோ?

முன்பெல்லாம் வருடம் ஒருமுறை வருவாள். வந்ததும் நேராய் கொல்லைப் புறத்திற்கு வந்து கொட்டகைக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தைக்கட்டிக் கொள்வாள், அதுவும் இவளைக்ண்டதும் கன்றுக்குட்டியோடு சேர்ந்து துள்ளிக்குதிக்கும்.என்னைப்போல லட்சுமிக்கும் வசந்தாவின் கொலுசுச்சத்தம் பழக்கமாகி இருக்கவேண்டும்!

"எல்லாம்பழைய கதை சார் !பத்துவருஷம் முன்பு நானும் ஊரைவிட்டுபோயிட்டேன் .. துபாய்ல வேலை செய்து சம்பாதித்ததை இங்கே பிசினஸ் செய்ய வந்திருக்கிறேன்...வீட்டைதிறந்து எல்லாசாமான்களையும் ஒழுங்குபடுத்தவே ஒருவாரமாச்சு.கிராமுமில்லாத நகரமுமில்லாத இந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் ஒரு சிமெண்ட் ஃபாக்டரி கட்டவும் நல்ல மவுசு ஊருக்கே வந்தது தெரிந்தது. எனக்கும் வீட்டை விற்க நல்ல சான்ஸ் கிடச்சிது ...அக்காக்கள் முவருக்கும் தெரியப்படுத்திவிட்டேன் ..மூத்த அக்காக்கள் ரெண்டு பேரும் மறுப்பு எதுவும்
சொல்லவில்லை... அவர்கள் பங்காய் ஏதாவது கொடுத்துவிடுவேன்... ஆனா கடைசி அக்கா, அமெரிக்கால பலவருஷம் இருந்து இப்போதான் ஹைதராபாத் வந்திருக்கா. வசந்தான்னுபேரு... அவள் இந்தவீட்டில் அதிக நாட்கள் தங்கி இருந்தவள்...அவகிட்ட போனில் விஷயத்தை சொன்னதுமே ஹோ என்று அழத் தொடங்கிட்டா,... சந்துரு வாழ்ந்த வீடுடா விற்காதடா என்று அலறினாள்.. பைத்தியக்காரி வசந்தா! வீட்டைவிலைக்குவாங்கியவர் இன்னும் சற்றுநேரத்தில் இந்த விட்டையே இடித்து ஃப்ளாட்கட்டப்போவதை அறிந்தால் உயிரையே விட்டுவிடுவாள் ஹ்ஹ்ஹா.."

சந்துரு நாராசமாய் சிரித்தான்.
என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் அதிரத் தொடங்கிற்று.

நான் சாகபோகிறேனா?

என்முடிவு உறுதியாகிவிட்டதா?

பத்துவருடம் முன்புவரை லட்சுமியின் கோமியம் எனும் பன்னீர்துளிகளில்குளியல் செய்து பசுஞ்சாணம் பூசிமெழுகப்பட்ட என் உடம்பு இன்னும் சில நிமிடங்களில் தூள்தூளாகப் போகிறதா?

ஐயோ அதற்குமுன் வசந்தாவைப்பார்க்க முடியுமா?
அந்த கொலுசொலியைக்கேட்டால் கூட போதும். ஒலிகள் என்றும் நிரந்தரம். இறந்தபின்னும் ஒருவரின் நினைவைப் பிடித்துவைத்துக்கொண்டு இருப்பது அவர்களின் ஜீவனுள்ள ஒலிகள்தானே?

"ம்ம் இடிக்கத்தொடங்கலாம்.ஆகட்டும்" சந்துரு உத்தரவு கொடுத்தான்.

ட்ராக்டர் போன்ற பெரிய கருவி ஒன்று என் மீது இடித்தது.

டேய்பாவி....மகாபாவி சந்துரு இந்தத் திண்ணைல உன் அப்பா சித்திரத்தேர் விழாவுக்கு ஊருக்கே சாப்பாடு போடுவார்.எத்தனைபேர் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கதை பேசின இடம் உனக்குத் தெரியுமா? வசந்தா இந்த திண்ணைலதான் சின்ன வயசுல நடன ஒத்திகை செய்வாள். இதைப்போய் இடிக்கிறாயே?

ஆ அம்மா..

தீனமாய் நான் அலறுவது இங்கு யாருக்கும் கேட்காது,, கேட்கவும் வேண்டாம் .வசந்தாவிற்குமட்டும் கேட்டால்போதும்.

நான் முற்றிலுமாய் எனை இழப்பதற்குள் வசந்தாவை ஒரு தடவை பார்த்துவிட்டால்போதும்.

ஐயோ இரக்கமற்ற கல் நெஞ்சுக்காரர்கள் என்னை இடித்துக்கொண்டே வருகிறார்களே..சந்துரு! கொஞ்சம் நிறுத்தச்சொல்லேன்,

வசந்தா வந்துவிடட்டுமே?

"ம்ம் ஆகட்டும் க்விக் க்விக்"

சந்துரு அவசரப்படுத்தினான்

"டேய் சந்துரு! நான் வரும்வரைக்கும் உனக்குபொறுமை இல்லையா பாவி? போன்ல வரேன்னு சொன்னேனடா..? முழு வீட்டை கண்ணாலாவது பார்க்க ஓடிவந்தேன்.. அதுக்குள்ள ஆரம்பிச்சி தகர்த்திட்டியா? ஐயோ..வாழ்ந்த வீடு இன்னிக்கு இப்படி இடிக்கப்பட்டு வீழணுமா?இதைப்பார்க்கவா நான் ஹைதராபத்திலிருந்து ப்ளேன்ல பறந்து வந்தேன் ?"

கதறுவது யார் வசந்தாவா? இடிபாடுகளில் கண்ணில் அடிபட்டுவிட்டது சரியாய் பார்க்கமுடியவில்லை. எப்படியோ துழாவிப்பார்த்துவிட்டேன் ,

ஆமாம் வசந்தாவேதான்! அப்படியே தான் கொடிபோல இருக்கிறாள்.நடனம் இப்போதும் ஆடுகிறாளா என்ன? வயதான அடையாளமாய் உடல் பருமனே இல்லாமல் இப்போதும் சிக்கென காணப்படுகிறாள். பற்களைசற்றுமுன்தான் இழந்த என் பொக்கை வாயில் புன்னகை பிறக்கிறது.

வசந்தா கண் கலங்குகிறாள். கைகளைப் பிசைகிறாள்.

பதட்டமுடன் அங்கும் இங்கும் நடக்கிறாள் போலும்? ஜல் ஜல் என்ற அந்த கொலுசு சத்தம் ,இன்னும் சில நிமிடங்களில் முற்றிலும் சிதிலமாகி விழப் போகும் என் காதுகளில் தேனாய்வந்து பாய்கிறது! ஜல்ஜல்...

போதும்! இதுபோதும் எனக்கு!

இதை எதிர்பார்த்துத்தான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
மேலும் படிக்க... "வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்"

Saturday, July 05, 2008

திண்ணைத்தாத்தா!

பால்..பால்..

அரக்கீரே மொளக்கீரே அகத்திக்கீரே

கோலமாவு

உப்பு உப்பேய்

வெண்டக்க்கா தக்காளி கத்திரிக்கா

பளையபேப்பர் வாங்கறது



சார் போஸ்ட்

செருப்பு ரிப்பேர்



எவேர் சில்வர் பாத்திரேம்



கலாய்பூசறது

அயிஸ் அயிஸ்

கொட ரிப்பேர்

கிளி சோசியம்

மல்லியப்பூ கனகாம்பரம் ஜாதிப்பூவு

....................

திண்ணைத்தாத்தா

தினமும் சந்திக்கும்

வீதி மனிதர்கள்!
மேலும் படிக்க... "திண்ணைத்தாத்தா!"

Sunday, June 29, 2008

முகுந்தா!முகுந்தா!!

'முகுந்த் முகுந்த்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா ஒருவாரமாய் மௌனவிரதம் இருக்கிறாள்.

'அழுத்தக்காரி ....அவளோடு தசாவதாரம் சினிமா போகாமல் அறைநண்பன் ரிஷியோடு போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு? '

நினைத்தபடி முகுந்த் பெருமூச்சுவிட்டான்..



அன்று....



" லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் கப்பன் பார்க்குலயும் ·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.


பாதிசினிமால பாப்கார்ன் சாப்பிடும்போதுகூட பவித்ரா போன் செய்தாள்.

"என் அழகான ராட்சசியே சொல்லும்மா சொல்லு?:)"

"முகுந்த்..சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ஆமாம்மா...இதுக்குப் பழிக்குப்பழி ஆஃபீஸ் விட்டு நேரா என் ஹாஸ்டல் ரூம் போனதும் பயங்கர ஹாரர்மூவி சிடி பாக்க்கப்போறேன் ஆ..ம்..மா" என்றாள்.......மெய்யெழுத்துக்களை அழுத்தி உச்சரித்து தன் கோபத்தைக்காட்டியபடி.

" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!

'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள். கோபம்போலதெரியவில்லை அப்படி சில்லியாய் கண்டதுக்கும் முகம் சிணுங்கும் 19ஆம் நூற்றாண்டுப் பெண்ணும் இல்லை பவித்ரா.
சங்ககாலப் பெண் போல காதலனைக் காணாவிட்டால் 'பாலும் கசந்ததடி' எனப் பாடும் பாவை.

அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்என முகுந்திடம் உயிராய் பழகுபவள்.

அப்படிப்பட்டவளிடமிருந்து...ஒருவாரமா ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...

.'என்னாச்சு பவித்ராவுக்கு? நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி?'

'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'

முகுந்த் வீரமாய்க் கிளம்பினான். அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கே ஒருவாரமாய்
வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...

அப்போ உடம்புதான் சரி இல்லை...
எட்டுகிலோ எடையா....என்ன ஏழுகிராம் எடைகூட இல்லாத அந்த உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே?

அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.

"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப்பாடலாய்க் கூவி அழைத்தான்.

அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 90.5கிலோ எடை தி.மகால்!

முகுந்தைக்கண்டதும் கண்மலர" முகுந்த்! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்
.
ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..

அவளுக்கு பவித்ராவின் காதலன் முகுந்த் என நன்கு தெரியும் ஓரிருமுறை மூவரும் அடிகாஸில் 'செட் தோசை' சாப்பிட்டிருக்கிறார்கள்.

"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல பெங்களூர்வந்து ஒண்ணேகால் வருஷமே ஆகி இருக்கும். என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'

" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .
நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி நிங்க தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'

புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்! செய்யம்மா செய்.. என்று மனசு சொல்ல "மாடு தாயி மாடு"என்றது முகுந்தின் வாய்! (மாடு=செய் (கன்னடத்தில)

நிஜமாவே கோவிச்சிட்டாளா? இல்லைஉடம்புசரி இல்லையா?

அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.

கண்டதும் முன்பு காதல் வந்தது இப்போ கத்தல்தான் வந்தது முகுந்த்திற்கு.

"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு முகுந்த். ஒருவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் தசாவதாரம் சினிமா போனால் அதுக்கு நீ நரசிம்ம அவதாரம் எடுக்கணுமா இப்படி?

மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.

அடப்பாவி பவி! ஒருவாரமா பாக்கலயே! இப்போ கண்டதும் முகுந்தா முகுந்தான்னு கட்டிப்பேன்னு நினச்சா? அதுக்குதானே லால்பாக் ப்ளான் போட்டிருக்கா உன் தோழி - அந்த கன்னடத்துப் பைங்கிளி?"


அது அது....

என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..

அது அது...எனகு பேசவே வரல

ஏன் அதான் பேசறியே?

அது அது...முகுதா முகுதா


என்ன கண்றாவிமொழி பேசறே இப்போ?

நா தமிதான் பேசறது

என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.வாவ் நமீதா!!!(..........){புள்ளீயிட்ட இடங்களில் முகுந்த் மனசு நினச்சதது என்னன்னு யாருக்குத் தெரியும்?:)}

ஐயொ முகுதா முகுதா எனகு ஒருவாரமா பேசவரல முனபோல




வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு


இல இல

என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!

எபடி சொலவே முகுதா?

என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்ககாட்டு..

கைப்பையிலிருந்து தேடி ரிலையன்ஸ் பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.

அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,
" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா அந்த ஹார்ரர் மூவிபார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி? அதான் முகுதாமுகுதா என்கிறாயா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",


ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசுமுகுதா


வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா?

உனகு சிரிபா இருகா முகுதா இதுகுதான் நா எதுவு சொலல ஒரு வாரமா....

கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.

பைக்கை ஸ்டார்ட் செய்தான்முகுந்த். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது. லால்பாக் வாசல் வரை நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.

சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.

சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?

பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.


கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.." என்றார் கிண்டலாய்.

நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து முகுந்த் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்


"தாஙஸ் முகுதா? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.

பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..

எபடிமுகுதா சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?

கஷ்டம்தான் உனக்கு...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா


ஹே சிரிகாத...

டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு மூக்குக்கண்ணாடியை கழற்றியபடி,


" இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "


இதற்கு என்னசிகிச்சை டாக்டர் அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"

நோ நோ...இது ஒருமனபிராந்தி

அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?

யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்


எப்போ டாக்டர்? இன்னும் மூணுமாசத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!
\

"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க
க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.

"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.

பவித்ராவை அழைத்துக்கொண்டு முகுந்த் தன்அறைக்கு வந்தான்.

"என்ன பெரிய படம் அது? ச்சும்மா உஜல்பா!(உஜல்பா= ஒன்றுமே இல்லாத என அர்த்தம்! இது எந்த மொழியுமில்லை...சொந்தமொழி:)) படத்துக்கு நீ பயந்து இப்படி ஆகி இருக்கணுமா? அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?

நானா? நோ முகுதா நோ... பய பய எனகு

அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!

தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.
படம் ஆரம்பமானது..

பார்த்துக்கொண்டே வந்த பவித்ரா " வேடா வேடா " என்றாள்

யார் வேடன்?

இல...மூவி பாக வேடா

படம் பாக்க வேண்டாமா?

ஆமாஆமா

எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."

அடுத்த சில நிமிடங்களில் முகுந்தனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...
அய்யோ.....இதென்ன இப்படி என் மேல வந்து அட்டாக் பண்றதே
பிசாசு...யேய் யேய் விடு..உவ்....

" ஐய்யோ" என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.

திடுக்கிட்ட பவித்ரா"முகுந்த்த..என்னாச்சு முகுந்த்? இப்படிகூச்சல்போடறே, பயந்துட்டீயா நீயும்?"என்றாள்
அப்போதுதான்
சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.

"முகுந்ந்ந்ந்த் ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.

மயக்கம் தெளிந்த முகுந்த்,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என் வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.

"ஐய்யோ..முகுந்தா முகுந்தா என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா... முகுந்தா! முகுந்தா..."--
மேலும் படிக்க... "முகுந்தா!முகுந்தா!!"

Sunday, June 15, 2008

அப்பாவின் நினைவில்....

இலையைச்செய்யமுடியும்
அதன் ஈரத்தை செய்ய முடியுமா
விசிறியைச் செய்யமுடியும்
காற்றைக்கொண்டுவரமுடியுமா
என்ற ஏதோ ஒருகவிஞனின் கூற்றாய்

'அப்பா...! '
உங்களைப்பற்றி நினைக்கலாம்,
ஆனால் நேரில்நின்று
பேசுவது போலாகுமா?
உங்களைப்பற்றிய
ஒலிப்பதிவில் குரலும்
ஒளிப்பதிவில் உடலும்முகமும் உண்டு
ஆனாலும் அதில் உயிருண்டா?
உணர்வுப்பரிமாற்றங்கள்
அருகில் இருக்கும்போதுதானே?
பிறந்த வீட்டு நினைவுகளை
அவ்வப்போது
அசைபோடும்மாடுகள்தான்
புகுந்தவீடுவந்துவிட்ட
பெண்கள்!
மேலும் படிக்க... "அப்பாவின் நினைவில்...."

Saturday, June 14, 2008

பெண்ணின் ராஜாங்கம்!

தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
வாய் - சுவைமந்திரி
கண்-காட்சி மந்திரி
மூக்கு- நுகர்ச்சி மந்திரி
செவி- கேள்வி மந்திரி

அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ' சல்சல் ' என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.
இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?
கேளுங்கள் அதையும்.....

நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

அவள் வரும்போது 'வருகிறாள்மகாராணி' என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

அப்போது "கண்ணே" எனும் குரல்கேட்கிறது.

உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.
இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சிமந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

அப்படியே அவளைக்கட்டிக்கொள்கிறான், உதடுகளைப்பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !

சுவைமந்திரியான வாய் அவர்கள் 'அதன் சுவை அலாதி 'எனப்பதிவு செய்கிறார்.

அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப்பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.
நாணத்தை உடைக்கிறது படை.

பிறகு,,பிறகு...இனிய இரவுதான் விடியும்வரை..

இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

யார் அந்தப்புலவர்?

அவர்தான் புகழேந்தி!
யார் அந்த மகாராணி?

நளனின் மனைவி தமயந்தி!

'இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்..

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!'



மேலும் படிக்க... "பெண்ணின் ராஜாங்கம்!"

Monday, June 02, 2008

மானே மானே மானே உன்னைத்தானே!

எதற்கும் ஆசைப்படாத சீதா தேவி மானைக்கண்டு மட்டும் மயங்கியது மானுக்கே சிறப்பு! ராமாயணம் தோன்ற மையக்காரணமே மான் தான் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம்.


அந்த காலத்து அரசியர்களது நந்தவனத் தோட்டத்தில் மான்கள் தான் முக்கிய இடத்தைப்பெற்றிருக்கின்றன. இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் தலைவன் - தலைவி காதலுக்கு மான்கள் உவமையாகப் பயன்படுத்தப்படிருக்கின்றன. 'குறுந்தொகை'யில் இவற்றை நிறையவே காணலாம்.


விலங்குகளில் பெண்மையைக் கண்ணில் கொண்ட பிராணி மான்தான். புராணகாலத்திலிருந்தே மான்களுக்கு ஒரு மரியாதையான செல்வாக்கு இருந்திருக்கிறது




"மானல்லவோ கண்கள் தந்தது?" என்று இந்தகாலத்திய கவிஞர் பெண்களைப்பற்றி அவளது கண்களை மான்களோடு ஒப்பிட்டு இருக்கிறார்! 'அன்புள்ள மான்விழியே' --இப்படி ஏராளப்பாடல்கள்!


'இந்தமான் உங்கள் சொந்தமான்' என்ற பாடலில் ஒருபெண்ணே தன்னை மானாக பாவித்துப்பெருமைப்படுகிறாள். இன்னும் மான் பாட்டு நிறைய இருக்கலாம்.


இறைவனை நோக்கி வழிபடும் அடியார்கள்'எம்மான் பெருமான்' என்றே பக்திப்பரவசமாய் அழைக்கிறார்கள்.


ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்களெல்லாம் தவம் செய்யும்போதும் தங்கி அமர்ந்துகொள்ளவும் மான்தோலையே உபயோகப்படுத்தினார்கள்.


மானம் பற்றிக்குறிப்பிடும்போது கவரிமானைத்தான் அடிப்படையாக வைத்துப் பாக்கள்புனையப்படுகின்றன .உதாரணத்திற்கு அனைவரும் அறிந்த திருக்குறளேஇருக்கிறது.


இப்படி அனைவராலும் போற்றப்படும் மான் ஒருவகையில் பாவப்பட்ட பிராணி என்றும் சொல்லத் தோன்றுகிறது. ஆமாம்,


மானைப்படைத்த இறைவன் புலியையும் படைத்ததுபற்றி இரக்கமனங்கள் நிறையவே சிந்திப்பதுண்டு.


அனைவரையும் வசீகரிக்கும் அபூர்வமான தோல் அமைப்பு மான்களுக்கு அதிலும் புள்ளிமானுக்கு உண்டு. இது இயற்கை அவைகளுக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம்


புள்ளிமான் தவிர சாம்பல்நிறமான் ஒற்றைக்கொம்புமான் கலைமான் கவரிமான் எனப்பலவகைகள் இருக்கின்றன.

சாம்பல்நிற மான்கள் குட்டிக்காளைமாடுகள்போல இருக்கும் இதை அவ்வளவாய் யாரும் பார்த்து ரசிப்பதில்லை.

இந்தியாவின் எல்லா காடுகளிலும் இந்தவகை மான்கள் அதிகமிருக்கும்

இறைச்சிக்காக இவற்றைக்கொல்லுகிறார்களாம்

இந்தியக் காடுகளில் 5000புள்ளிமான்களுக்குஒன்று என இது இருப்பதாய் சொல்கிறார்கள்.(காட்டிலாகா அதிகாரி திருலதானந்த் இதை விளக்கினால் உதவியா இருக்கும்)

கவரிமான் இலக்கியங்களில் பெரிதும் சொல்லப்பட்டாலும் இதைபப்ற்றி மான் சரணாலய்ங்களில் விசாரித்த போது அப்படி ஏதும் இல்லை என்கிறார்களாம்.டைனோசர் போல முன்பு எப்போதோ இருந்திருக்கலாம்.

பொதுவாக மான்கள் இயல்பில் பயந்த சுபாவமுடையவை. மிகமிக சென்சிடிவ் என்கிறார்கள்.

எதிரிகளிடமிருது தன்னை காத்துக்கொள்ள மணிக்கு 150முதல்200மைல்வேகதில் ஓடினாலும் அதனிடம் மனதில் பயம் அதிகம் உண்டு. தைரியம் எதிர்த்துப் போராடுதல் என்பதெல்லாம் மான்களுக்கு இல்லை



அந்த பயம் காரணமாக்தான் தன் உடம்பில் வேற்றுப்பிராணிகள் கால் அல்லது பல் பட்டாலும் பதறிவிடும்.

கலைமான் என்பது இன்னொரு ஜாதி. இதற்கு அழகேஅதன் கொம்புகள்தான். நான்குவகை சிலசமயம் ஆறுவகையான்கொம்புகள் கூட இருக்கும். இந்தமான்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடக்கும் .கொம்புகளை முட்டி முட்டிஅவைகளை இழந்துவிடும்

டிஸ்கவரி ஆஃப் இண்டியா சானலில் இந்தகலைமான்கள் ஒன்றுகொன்று முட்டிக்கொண்டு மோதி காயப்பட்டு கொம்புகளை ஏன் இழக்கின்றன என்று சிலர்கேட்டபொழுது அவர்கள் சொன்னபதில்"எல்லாம் பெண்மானூக்காகத்தான் இப்படி ஆண்மான்கள் முட்டிக்கொள்கின்றன இப்படி மோதும்பொழுதில் அவற்றிர்க்கு அருகில் ஒருபெண்மான் இருக்கும் என்று ஆதாரபூர்வமாய் சொல்கிறார்கள்

இந்தப்போட்டியில் எந்த மான் ஜெயிக்கிறதோ அந்த மானோடுதான் பெண் மான் இணையுமாம்!(மானுக்குக்கூட ஆணிடம் வீரம்தான் பிடிச்சிரூக்கு:))

மான்கள்கூட்டம்கூட்டமாகதான் போகும்.
தனியாக எந்தமானாவது சென்றுவிட்டால் அந்தமானை வேறு எந்த மான்கூட்டமும் அவ்வளவு எளிதாக தங்கள்கூட்டத்தில் இணைத்துக்கொள்ளாது ,முட்டித்தள்ளும்

இந்த நிலை சிலநாட்களுக்குமட்டுமாம் பிறகு அந்த மான் கொஞ்சம்கொஞ்சமாய் வசியம்செய்து மற்றமான்களோடு சேர்ந்து கொண்டு விடுமாம்!

மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுகே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))

நான்குவகைக்கிளைகள் இரண்டுவகைகிளைகள் ஒற்றைக்கொம்புமான் என்று முன்றுவகையான மான்கள் உண்டு' இந்தக்கொம்புகள் பார்க்க கம்பீரமாய் அழகாய் இருப்பதோடு மான்கொம்புகள் மானிடர்க்கு மருத்துவ ரீதியாய் நல்லபலனும்
தருகிறது.

புற்று நோய்தடுக்க உடம்பில் அடிபட்ட புண்களை ஆற்றுவதற்கு ரத்தம் சுத்திசெய்ய இதயத் துடிப்பை சரிசெய்ய மான்கொம்பு துகள்கள் புராணகாலத்திலிருந்தே உதவிக்கொண்டிருப்பதைஅறிகிறோம்.

கஸ்தூரி எனும் மருந்து மானிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது.

இது எல்லா மான்களிடமிருந்தும் கிடைக்காது குறிப்பிட்ட வயதான் மானின் கழுத்துப் பகுதியில் ஒரூபக்கம் வெட்டி எடுக்கப் படுகிறது.
சிலமான்கள் இறந்த உடனேயும் எடுத்துவிடுவார்கள்

மானின் இறைச்சிக்காக அவைகள் சமீபமாய் அநியாயமாய் கொல்லப்ப்படுகின்றன.இவற்றால்புள்ளி மான் இனமே அழிய வாய்ப்பு உள்ளது

மற்றநாட்டின் காடுகளைவிட இந்தியக் காடுகளில் தான் புள்ளிமான்கள் அதிகமாம்

மானை யாரும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடாது அப்படி ஆசைப்பட்டால் அரசிடமிருந்து லைசன்ஸ்பெற்றிருக்க வேண்டுமாம்.

சென்னை கிண்டி மான்கள் பராமரிக்கும் வளாகத்தில் வளர்கின்ற மான்கள் நம்மைப்போல சாதம் உப்புபோட்டுதயாரிக்கும் பலகாரமெல்லாம் உண்பதாய் சிலர் சொல்கிறார்கள் ...பெங்களூர் லால்பாக்கில் மான்களுக்கென்று தனிபகுதி உண்டு. கடலைகளை தடுப்புக்கம்பிவழியே நம்கையில்வைத்துக்
கொடுத்தால் தயங்கிவந்து பின்
எடுத்துக்கொள்ளும்!

காட்டுவிலங்குகளில் மான் தான் சாதுவானது(அதனால்தான் பெண்ணோடு ஒப்பிடுகிறார்களோ)

மான்கள் இருக்கும் பகுதியில் நாம் பிளாஸ்டிக் பேப்பர்களை போடாமலிருந்தால் அவைகள் அவற்றை தின்னாமல் ஆரோக்கியமாய் இருக்கும்.

புராணகாலம்மூதல் இன்றுவரை இந்தியாவிற்கு பெருமைதேடித் தரும் மான்களை விரும்பாதவர்கள் இருக்கமுடியாது.

ஆமா, இந்த அதியமான் சக்திமான் வேங்கைமான்...என்றெல்லாம் எப்படி வந்தன?:)
நடிகர்சல்மான்கானுக்கு சிலநாட்கள்முன்பு மான்விஷயத்தில் பேர் கான்!(GONE!)

சரி..ஒரு ஜோக்கோட பதிவை முடிச்சிடலாமா?:)

ஒருகோயிலில் ஒருத்தர் துள்ளிதுள்ளி ஓடிட்டு இருந்தாராம் . ஏன் அப்படி ஓடறார்னு கேட்டதுக்கு 'அவர் பக்திமான் அதான்' னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்களாம்!!

************************************************************************
மேலும் படிக்க... "மானே மானே மானே உன்னைத்தானே!"

Monday, May 26, 2008

மயிலே! மயிலே!






நம்நாட்டின் தேசியப் பறவை மயில் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும்
எத்தனையோ பறவைகள் இருக்க தேசியப்பறவையாக மயிலை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்று
யோசித்தால் அதற்கு காரணம் தெரியவரும்.


மனித குலமே தெரிந்து கொள்ளவேண்டிய அளவுக்கு ஓர் ஆச்சர்யமான அபூர்வமான
ஒழுங்குமுறை மயில்களிடம் உள்ளன.!*

மனுவம்சத்தின் வழி வழியாக வந்தவர்கள் சூரிய குலமன்னர்கள். இவர்கள்
மயில்போன்றுமுறை தவறாதவர்களாம் அதென்ன மயில்முறை?

*ராமனுக்கு பட்டம் சூட்ட அரச சபை ஆயத்தமாகிவிட்டது

..அயோத்திநகரம்.கோலாகலமாய் இருக்கிறது. அப்போது கூனி வருகிறாள்.


கைகேயியைப்பார்த்து," ராமனுக்கு பதிலாய் உன்மகன் பரதனுக்கு பட்டாபிஷேகம்
செய்யச்சொல்லு" என்றதும் முதலில் கைகேயி இப்படித்தான் சீறினாளாம்.(பிறகு மனம்
மாறிய கதை யாவரும் அறிந்ததே)



*" மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபை*
*செயிர் உறபுலச் சிந்தையால் என் சொனாய் தீயோய்*..."



(செயிர் உறபுலச்சிந்தை எனில் குற்றம்காணும் எண்ணம் என நினைக்கிறேன்...தமிழ்
வல்லுனர்கள் விளக்கலாம் தயவு செய்து)


கம்பன் குறிப்பிடும் இந்த மயில்முறைதான் என்ன என்கிறீர்களா?

மேலை நாட்டில் மயில்பண்ணைவைத்து ஆராய்ச்சி செய்தார், ஒருவர்*

மயிலின் இயல்புகளை அவர் கூர்மையாககவனித்துவந்தாராம்.*


மயில்முட்டையிலிருந்து வந்த அதன் முதல் குஞ்சுக்கு அதன் காலில் பச்சைவண்ண
நூலைக்கட்டினார். அடுத்த குஞ்சுக்கு சிவப்பு நூல் அதற்கடுத்ததற்கு மஞ்சள் நூல்
என்று,

*அந்தவிபரங்களை தன் பதிவேட்டில்குறித்துக்கொண்டார்.

மயில்குஞ்சுகள் வளர்ச்சியடைந்து தோகை* *விரித்தாடிய* *சந்தர்ப்பத்தில் அந்த
பச்சைக்கயிறுகட்டிய குஞ்சுதான் முதலில் தோகை விரிக்கத் தொடங்கியதை
அவர்கவனித்தார்.

* அதுதான் முட்டையிலிருந்து வெளிப்பட்டமுதல்குஞ்சு.*

கம்பர் குறிப்பிட்ட மயில்முறைக்கு இப்போது விளக்கம் கிடைத்துவிட்டதா?*

வாரிசு உரிமை தலைமகனுக்குத்தான். இதை பலகாலம் முன்பே தமிழ்
இலக்கியம் சொல்லிவிட்டது.*

ஆமாம் அந்த மயில்பண்ணை நடத்தியமேலைநாட்டவருக்கு எத்தனையோ காலம் முன்னேயே
தணிகைப்புராணம் எனும் நூலும் சொல்கிறது*

'பலாவம் பொழிலின் ஒரு தாய்உயிர்த்த பல மயிற்கும்*
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது...'*

*செய்யுளில் அமையப்பெற்றதனால் இது யாவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல்
போய்விட்டது. இதையெல்லாம் அண்மையில் ஒரு தமிழ்பெரியவர் மூலம் நான் அறிந்து அதை
இங்கு இடுகிறேன்...


குயில்கூவும் ;மயில் அகவும் என்று சொல்லவேண்டுமாம்!!!மயில்கூவினால் கேட்க
சகிக்காது!!*

*திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நிறைய மயில்களைக்காணலாம்.விராலிமலையிலும் ரொம்பவே உண்டு. *



*பெண்களை மயிலோடு இலக்கியகாலம்முதல் ஒப்பிடுகிறார்கள்..ஆண்மயில்தான்
தோகைவிரித்தாடும்.

எனினும் 'மயில் போல பொண்ணு ஒண்ணு 'என்று பாடல் வேறு!!!

சிக்குபுக்குசிக்குபுக்கு ரயிலே சிக்குவாளா சிக்குவாளா மயிலே என்ற பாட்டு
வந்தபுதுசுல என்ன போடு போட்டது?:) அசைந்தாடும் மயில் ஒன்று என்ற பாடலை சுதாரகுநாதன் பாடிக்கேட்கவேண்டும்.*

வேறென்ன புகழ்பெற்ற மயில்பாடல்கள்?

முருகன் மயில்வாகனன். *

மயில் ராவணன் என்று ஒரு பெயர் அது எதனால் எப்படிவந்தது?*

*மயிலாப்பூருக்கும் மயிலுக்கும் சம்பந்தம் உண்டா?*
*மயிலாடுதுறை ஊருக்கு கதை இருக்கு..*
* *
*மயில்துத்தம் என்று ஒரு மருத்துவப்பொருள் உண்டோ?*
* *
*மயூர் என்றால் சம்ஸ்க்ருததில் மயில்.. மயூராசனம் கூட இருக்கிறது.*

*மயிலிறகில் விசிறி உண்டு..மயிலிறகுகளை புத்தக நடுவில் சின்னவயசில் சேர்த்து
ஒளித்துவைத்திருக்கிறோம் அல்லவா?


*க்ருஷ்ணர் தலையில் மயிற்பீலி இருக்கும்.*

*மயிலாட்டம் நாட்டிய நிகழ்ச்சியில் சிலர் இன்னமும் ஆடறாங்க..*

மயில் செய்திகள் இன்னும் நிறைய இருக்கும் மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே?

*(பதினாறுவயதினிலே படத்து மயிலு இதுல வரலாமா?:)) *
மேலும் படிக்க... "மயிலே! மயிலே!"

Friday, May 23, 2008

மீட்சி(சிறுகதை)

டிசம்பர் 2004ல் நடந்த சுனாமிக்குப்பிறகு இப்போதுதான் நாகப்பட்டிணத்துக்கு
வந்திருக்கிறான், பத்ரி.


சுனாமி நடந்த அந்ததினம்,....


'இன்று' என்னும்தொலைக்காட்சியின்
சிறப்பு ஒளிப்பதிவாளராய் தன் குழுவோடு வந்தான், பத்ரி.


நாகப்பட்டிணத்திற்குள் அவன் வந்த கார் நுழையும்போதே காற்றில்
பிணவாடை அடிக்க ஆரம்பிப்பதை உணர்ந்தான். வயிறுசில்லிட்டது.


வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வயிற்றில் அடித்துக்கொண்டு
ஜனத்திரள் கூட்டம்கூட்டமாய் அலறிக்கொண்டு நின்றனர்..ஓடினர்.


கதறி அழுதபடி புலம்பினர். அத்தனை துயரத்திலும் நின்றகாரிலிருந்து குழுவினருக்கு
முன்னே பரபரப்பாய் காமிராவுடன் இறங்கிய பத்ரியை ஒரு மூதாட்டி, அவன் கையிலிருந்த
நிழல்படக்கருவியைப் பார்த்தபடி எச்சரித்தாள்.


"டிவிபொட்டிக்காரத்தம்பியா? கார வுட்டு எறங்காதப்பா…அலை திரும்பவும்
அடிக்குமாம்…அதனால வந்தவழிபோயிடுப்பா.." என்றாள்.


"பத்ரி…கேட்டீங்களா நாங்க சொல்லசொல்லக் கேக்காம காரைநிறுத்தவச்சி கீழ
குதிச்சீங்க…எங்கபாத்தாலும் டெட் பாடீஸ் இருக்கற இடத்துல நமக்கு ஒண்ணும் வராம
நல்லபடியா சென்னைக்குத் திரும்பவேணாமா? கமான்..க்விக்,கார்ல ஏறுங்க
சீக்கிரம்..ஸ்பாட்டுக்குபோயி நம்ம வேலையை சட்டுபுட்டுனு ஆரம்பிக்கலாம்..வழியில
ஒண்ணும் வேணாம்.." என்று பொறுமைஇழந்தவளாய் கூச்சலிட்டாள் வினயா.


"அதில்லா வினயா..அந்தப்பள்ளிக்கூடத்தில பாருங்க.. போர்த்திய
துணிக்குக்கீழ ஏகப்பட்ட இறந்த உடல்கள்…அதையெல்லாம்..?"பத்ரிமுடிப்பதற்குள் வினயாவின் சாடிலைட் ஃபோன் குரல்கொடுதது.


"வினயா ஹியர்" என்றாள்


"நாந்தான் தினேஷ் டில்லி ஸ்டூடியோவிலிருந்து பேசறேன்.என்னாச்சு
எல்லாரும் ஸ்பாட்டுக்கு ரீச் ஆனீங்களா இல்லயா?" என்றது எதிர்முனை.


"இதோ இன்னும் பத்துநிமிஷத்துல போயிடுவோம் தினேஷ்" என்ற வினயா
பத்ரிக்குக்கண்ணால் சைகை காட்டி உள்ளே அமரச்சொன்னாள்.


கார் புறப்படும்போது,நாசியை விரல்களால் மூடியபடி,"ஸ்டிக்கிங்…ரொம்ப நாறுகிறது
இங்க. நிறைய பேர் செத்துருக்காங்க…ஊரே காலிபண்ணிட்டு திருவாரூர்பக்கம்
ஓட்றாங்க…பயங்கர பாதிப்பு."
எனறுசொல்லிவிட்டு ஆஃப்செய்தவள் பத்ரியிடம்" உடனே ஒரு எஃப்டிசி
அனுப்பணும்..ஹெட்லைன்ஸ் லைவ் பண்ண ஆரம்பிச்சிடாங்களாம்.. 'லைவ் சவுண்ட்
மைக்'சரியா இருக்கா பத்ரி? இறங்கினதும் ஸ்பாட்டுலபோயி காமிராவோட நீங்க
படம் எடுங்க .நான் லைவ் ல விவரமா சுனாமிதாக்குதலை சொல்றேன்..இன்னும் நிவாரணப்பணி தொடங்கியமாதிரி தெரியல..க்விக்.நம்ம ' *இன்று**'*சானல்தான் முந்திக்கணும் எல்லாத்திலயும்"என்றாள். அவள் சிந்தையெல்லாம் டிஆர்பி ரேட்டிங்கை
அதிகரிக்கவைப்பதில் குறியாய் இருந்தது.


பத்ரி தலையாட்டினான்.தலையோடு மனசும்கிடந்து ஆடித் தவித்தது.


விஷுவல்கம்யூனிகேஷன் படித்து பத்ரி விருப்பட்டு இந்தப்பணியில் சேர்ந்தான். இதுவரை
எத்தனை எத்தனையோ அனுபவங்கள். அனால்அவனுடைய இந்த இருபத்தி ஆறு வயதில் இப்படி ஒரு கோரக்காட்சியைக் கண்டதில்லை.எங்கெங்குகாணினும் அவலக்குரல்கள்.
பிணக்குவியல்கள்.அனாதைச்சடலங்கள்.


'நடந்தது பிரளயமா என்ன? அம்மா அடிக்கடி சொல்வாளே அதர்மம் அதிகமானால் இயற்கைக்கு சீற்றம்வரும்னு..


சினம் சேர்ந்தாரைக்கொல்லும் என்பது உண்மைதானோ?


ஆனல் அப்பாவிமக்கள் எத்தனைபேர் இதற்கு பலியாகிவிட்டர்கள்?.


அதற்கும் அம்மா விளக்கம் அளிப்பாள்'முன் ஜன்மத்து வினை'என்று..எனக்கென்னவோ இந்த வாழ்க்கைப்பாதையே விதிவழிதான் போகிறதென தோன்றுகிறது.அவரவர்க்கு
விதிக்கப்பட்டவிதி'


"பத்ரீ என்ன யோசனை? ஒர்க்ல மட்டும் இன்வால்வ் ஆகுங்க தோழரே! ஆனால் இப்படி
சீரியசா இருக்கறபோதும் யு லுக் ஹாண்ட்சம் யார்! .மாதவனா பழைய ஷாரூக்கா? என்ன
சொல்ல? பொண்ணுங்களை பரவசப்படுத்தும் முகம்! .தவறிப்போய் ஆறு வருஷம்
பின்னாடிபொறந்துட்டீங்க இல்லேன்னா நீங்கதான் என் கழுத்துல தாலி கட்டீ
இருப்பீங்க…!"வினயா சிரித்தபடி சொன்னாள்.எல்லாரும் காரிலிருந்து அவள் பேசியதை
ரசித்துசிரித்தபடிஇறங்கினர்.


பத்ரிக்கு சிரிக்கமுடியவில்லை..'அங்..அங்கே பாருங்க வினயா.. ஐயோ..தாறுமாறாய்
படகுகள் உடைஞ்சிகிடக்க அலைகள் வீசிப்போட்ட மரக்கிளைகளில் ஒரு கைமட்டும்
தொங்குது"என்று அலறினான்.


வேகவேகமாய் நடந்தவனை ராஜேஷ் ,
அதட்டினான்."பத்ரி.அங்கபோகாதீங்க,,புதைமணல்மாதிரி இருக்கு…காலை இழுத்துடும்…"


அலைகளின் ஆக்ரோஷம் இன்னும் அடங்கினமாதிரிதெரியவில்லை. போலீஸ் தலையீடு அதிகம் இருந்தது. அங்குமிங்கும் சிதறி அங்கங்கள் சிதைந்துகிடந்த
உடல்களைபுரட்டிஅடையாளம்கண்டு பலர் நெஞ்சிலடித்துக் கொண்ட காட்சி
பரிதாபமாயிருந்தது.


வினயா படகு ஓரமாய் உட்கார்ந்து விழித்துக்கொண்டிருந்த அனாதைச் சிறுமியை
பேட்டிகண்டு கொண்டிருந்தாள். அடுத்து கலெக்டரைப் பேட்டிகாணச்சொல்லி
டில்லியிலிருந்து ஃபோன்வரவும் எழுந்தாள்.


பத்ரி அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டான்.


"ப த்ரீ! என்னாச்சு?"


"தலைவலி வினயா…எனக்கு மயக்கமாய் வருது…"


"எழுந்து வாங்க காருக்கு..இங்க இருந்தா எல்லா வியாதியும் வரும்.கலெக்டரைபோய்
பேட்டி எடுக்கணும் ..சீக்கிரம்…என் டி டிவி ஏற்கனவே போயாச்சாம்"


"ஸாரி வினயா..காமிரா பிடிக்கக் கூட சக்தி இல்ல…"


"ஒ காட்…!சரி..உங்க வேலையை ராஜேஷ் செய்வாரு.. ஆனா இங்க இருக்காதீங்க… நீங்க
கார்ல போயி ரெஸ்ட் எடுங்க"


"இ ல்ல வினயா… இங்கயே இருக்கேன் நானே ரயிலோ பஸ்ஸோபிடிச்சி சென்னை
வ ந்துடறேன், என்ன?"


"ஹேய் என்ன பைத்தியமா உங்களுக்கு?"


"வினயா..அவரை கம்பெல் பண்ணாதீங்க லெட்ஸ்கோ நவ்" என்றான் ராஜேஷ் .
நிழல்படக்கருவியை அவன் கையிலிருந்து வாங்கிக்கொண்டு.


காரில் குழுபுறப்பட்டதும் பத்ரி சுற்றுமுற்றும் பார்த்தான், எதிரே கடல்மணல்
பரவி இருந்த ஈரநிலப்பகுதியில் பல உடல்கள் கிடங்கில் குவிக்கப்பட்ட
தானியமூட்டைகளாய் ஒன்றின் மேலொன்றாய் கையும் காலும்
விறைத்தும்,தொங்கிக்கொண்டும் வெட்டுபட்ட பல்வேறூ பகுதிகளோடும் குவிக்கப்பட்டு
இருந்தன.


குவியல் ஒன்றின் அருகே எட்டுவயது சிறுவன் ஒருவன் அழுதபடி
நின்றுகொண்டிருந்தான்.அவன் கண்பார்வை கடலைநோக்கியும் கரையை நோக்கியும்
சென்றுவந்தன.


பத்ரி அ வனருகில் சென்று," தம்பீ,யாரைத் தேடறே?' என்றுகேட்டான் ஆதரவான
குரலில்.


அவன் விசும்பியபடி," எங்கப்பா அம்மா தம்பி தங்கச்சி எல்லரையும். தங்கச்சிக்கு
பத்துமாசம்தான் ,,என் மடிலதான் சாப்டும் தூங்கும்… " என்றான் உடைந்தகுரலில்.


மெல்லப் பேச்சு கொடுத்ததில் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்த அவன் பெயர் கலியன்
என்பதும்,படிக்கவசதி இல்லாதநிலையில் சிறிய டீக்கடைஒன்றில் டீ க்ளாசுகளைக் கழுவி
வைக்கும் வேலைபார்க்கிறான் என்றும் தெரியவந்தது.


"கலியா..சுனாமிவந்தது உனக்கு தெரியாதா?"


பத்ரிகேட்டதும்"இல்லீங்க நான் கடைக்குபோயிருந்தேன்.வீட்ல என்னைத் தவிர
எல்லாரும் இருந்தாங்க..தங்கச்சிக்கு வர்ரப்போ பிஸ்கட்டுவாங்கியாரேன்னு
சொல்லிட்டி போனேன்…இப்போவந்துபாத்தா வீடுவாசலு அ ப்பா அம்மா தம்பீ தங்கச்சீ
யாருமே இல்ல…"என்று அழ ஆரம்பித்தான்.


அவனைக்கூட்டிக்கொண்டு பிணக் குவியல்கள் அருகே போனான் பத்ரி.
ஒரு குழியில்கிடந்த சடலம்பார்த்து 'அம்மா' என்றான்.மரக்கிளையில் அப்பாவின்
தொங்கியகையில் பச்சைகுத்தியதில் 'காத்தான்' என்ற பெயர் பார்த்து 'அப்பா' என்று
வீறிட்டான்.தம்பி புதைகுழிமணலில் வாயும்மூக்கும்கண்ணும் மண் அடைக்க
மரணமடைந்திருந்தான் காத்தான்.


"ராணி… என் தங்கச்சிராணீ?"


கதறி அழுதவனை கைபிடித்து அங்கும் இங்கும் சுற்றினான் பத்ரி.
எங்கும் குழந்தையின் சடலம் இல்லை...


கலியனுக்கு அவன் மறுக்கமறுக்க டிபனும் டீயும்வாங்கித்தந்து இரவெல்லாம் கூடவே
இருந்தான்.


மறுநாள் காலை பதினொருமணிக்கு தொலைக்காட்சியில் லைவ் ஆக ஒளிபரப்புவதை பார்க்க
ஆரம்பித்தார்கள்.அப்போது ஒரு அறிவிப்பு வந்தது..


" இன்றைய இந்த நிமிடத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு உயிர் இழந்தோர் 1100என
சொல்லப்டுகிறது. பிணங்களை எடுக்கவோ முறைப்படி புதைக்கவோ இங்கே நேரமுமில்லை
ஆட்களும் இல்லை ஆகவே யார் எவர் எனத் தெரியாத நிலையில் சவங்களை பெரிய பள்ளம்
தோண்டி அடக்கம் செய்கிறார்கள்" என்று சொல்லி பள்ளத்தையும் உள்ளேகிடந்த
சடலங்களையும் குவியலாய் காட்டினார்கள்.


மண்போட்டு மூடும்போது உற்றுப்பார்த்த கலியன்,"ராணீ! என் தங்கச்சி ராணிதான்..
அந்த சிவப்புகவுனுபோட்ட குழந்தை என் தங்கச்சீயேதான்..அய்யோ அதுவும்
செத்திடிச்சா?"என்று புரண்டு அழுதபோது பத்ரிக்கு கண்ணீரை அடக்க முடியவில்லை.


கலியனை முறைப்படி சுனாமி பேரிழப்புமீட்புநடவடிக்கை எடுப்பவர்களின் சம்மதமும்
அனுமதியும் பெற்று சென்னைக்கு அழைத்துவந்தான்.


பத்ரியின் அம்மாவும் கலியனை மகிழ்ச்சியாய் ஏற்று அவனை வளர்த்து, படிக்கவைக்கும்
மகனின் பொறுப்பில் தோள்கொடுக்கத் தயாரானாள்.


கலியன் முதல் சிலமாதங்கள் குடும்பநினைவில் வாடி வேதனையிலிருந்தான் .பிறகு
சகஜமாகிபோனான்.


திடீரென இரண்டுவருஷதிற்குமேலாகி இப்போது அவன் விரும்பியதால் அவனையும்
அழைதுக்கொண்டு நாகப்பட்டிணம் வந்திருக்கிறான்பத்ரி.


ஊர்வந்ததில் மறுபடியும் பழையநினைவுகளில் மனம்தடுமாற வேண்டி இருக்குமே என
நினைத்தான்.


ஆனால் கலியன் முகத்தில் எந்தவித உணர்ச்சியுமே இல்லை.


"பழகின நண்பர்களைப் பாக்கணூமா கலியா?'


"இல்லைங்க"


"வேலைபார்த்த டீக்கடைக்குப்போகணுமா?'


"வேணாங்க ஐயா"


"வேறெங்கப்பா போகணும்? "


"கடல்பக்கம்தான்..கடலைப்பாக்கணும்"


பத்ரி ஒன்றும் சொல்லவில்லை அவனுடைய கைபிடித்துகடற்கரை நோக்கி நடந்தான்.


சீராய் ஒரே கதியில் அடித்துக்கொண்டிருந்த அலைகளையே வெறித்துப்பார்த்தான்
கலியன்.


பத்ரிக்கு அவனது இறுகியமுகத்தைப்பார்க்கவே அச்சமாக இருந்தது.


எங்காவது திடீரென "என்னோட குடும்பம்போன இடத்துக்கே நானும்போறேன்"என்று கடலை
நோக்கி ஓடிவிடுவானோ?


இலேசான திகிலும், கவலையுமாய் அவனையேபார்த்தான்.


கலியன் மெல்லமெல்ல கடலை நோக்கிநடந்தான்.ஆனால் பத்ரியின் கரத்தை
விடாமல்பிடித்துக் கொண்டிருந்தான்.நடந்துவந்தவன் சட்டென நின்றான்.


பத்ரி திகைக்கும்போதேகுனிந்து கடலில் எரிச்சலாய் காறித்துப்பினான். காலால்
அலைகளை அடித்தான்."ச்சீ…எல்லாரையும் காவு வாங்கின நீ நல்லா இருப்பியா?உன்
உடம்பெல்லாம் உப்பு கரிச்சி இப்பிடி இருக்கறபோதே உனக்கு
எத்தினி ஆணவம்? நீ சமுத்திரமா இல்லாட்டி சாவுக்கிடங்கா?" என்றான் கோபமாய்.


"பிறகு பத்ரியிடம்"வாங்க போகலாம்" என்று சொல்லி கடலுக்கு முதுகைக்
காட்டியபடிதிரும்பி நடக்க ஆரம்பித்தான்.


*************************************************************************தி­திண்ணை.காமில்
இன்று 23-5-08
வந்திருக்கும் என் கதை இது.
மேலும் படிக்க... "மீட்சி(சிறுகதை)"

Wednesday, May 21, 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்!

தமிழின் மேன்மையை அதன் தனிப்பெருமையை( uniqueness ) எந்தவித பங்கமும் இல்லாமல் கையாள்வதில் நமக்கு நிகர் நாமேதான்!

தமிழ் இலக்கியங்களை,தமிழின் பழையபாடல்களை பண்டிகைகாலங்களில் சுபநேரங்களில் என்று மறக்காமல் நாம் உபயோகிப்பதால் தமிழ் நன்கு இன்னும் பல்லாண்டு வாழும்.

ஒருபுறம் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சித்தொகுப்பாளர்களும் மேடையில் பேசுவதாய் தமிழ்க்கொலை செய்பவர்களும் இருந்தாலும் தமிழ் இன்னமும் நம்மிடையே மதிப்பாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்மொழியின் தொன்மையைப்பற்றி விளங்கும் பாடலை அண்மையில் ஒரு தமிழ்ப்பாவலர் மூலமாய் தெரியவந்தது


வையம் ஈன்ற தொன்மக்கள் உளத்தினில்
கையினால் உரை காலம் இறந்திட
பைய நாவை அசைத்த பழந்தமிழ்....

சைகைமொழியிலிருந்து வாய்மொழிக்கு மனிதன் மாறியதும் பயன்படுத்திய முதல்மொழி தமிழ்தானாம்!

அகத்தியர் வளர்த்த தமிழுக்கு ராமர்பெருமானே வணங்கியதாய் கம்ப்ராமாயணத்தில் ஒரு பாடல் உண்டு.

அகத்தியரை ராமன் வணங்கியதும் அவர் இப்படிக்கூறுவதாய் அமைந்தபாடல் இது.


நின்றவனை வந்த நெடியோன் அடிபணிந்தான்
அன்றவனும் அன்போடு தழீஇ அழுத கண்ணான்
நன்றுவர வென்று பல நல்லுரை பகர்ந்தான்
என்றுமுள தென்தமிழ் இயம்பிசை கொண்டான்.


கண்ணனின் சிறுவயது சேட்டைகளை பெரியாழ்வார் கூறும்போது,

எண்ணைக்குடத்தை உருட்டி
இளம்பிள்ளை கிள்ளி எழும்பிக்
கண்ணைப் புரட்டி விழித்து
கழகண்டு செய்யும்பிரானே!


விஷமம் என்னும் சொல்லைத்தவிர்த்து மிகவும் கவனமாய் கழகண்டு எனும் அழகான(வழக்கொழிந்துபோன) சொல்லை
பெரியாழ்வார் பிரயோகித்திருக்கிறார்.

அமிழ்தினும் இனிய தமிழ் வாழ்க!
மேலும் படிக்க... "தமிழுக்கும் அமுதென்று பேர்!"

Tuesday, May 20, 2008

போ என்று சொல்லி...

வேண்டாம் என்றேன்
வேண்டும் எனப்புரிந்துகொண்டாய்
பிறகு என்றேன்
இப்பொழுதே என அருகில்வந்தாய்
போ என்றபோது மட்டும்
அதற்கு வா என்று பொருளை
அறியாமல் நீ
போய்விட்டாயே?
மேலும் படிக்க... "போ என்று சொல்லி..."

Sunday, May 18, 2008

இந்த தமிழ் படுத்தும் பாடு...!!

தமிழ் அழகுமொழி.அதே சமயம் சரியாகப் பயன்படுத்தப் படாவிட்டால் அர்த்தத்தையே மாற்றிவிடும்!

பாண்டியன் "கொண்டு அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா" கொன்று அச்சிலம்பு கொணர்க" என்று சொன்னானா என்பது சரியாகப் புரியாததனால் என்னவெல்லாம் விபரீதம் நிகழ்ந்தது?

இலக்கியத்தைவிடுங்கள்..

பள்ளியிலொரு மாணவன் 'கண்ணகி மாசற்றவள்'என எழுதுவதற்குபதிலாய்,'கண்ணகி மாசுற்றவ்ள்'என 'ச' விற்கு சின்னதடுப்பு சுவர் வைத்துவிட்டதில் அர்த்தம் அனர்த்தமாகிப் போய்விட்டது.

அவனாவது மாணவன் அறியாப்பிள்ளை. ஒருபிரபல தமிழ்பேச்சாளர் என்ன செய்தார் தெரியுமா?

ஒரு சமூக சேவகியைப் பாராட்டுகையில்'இவர் ஒரு சிறந்த பொதுமகள்'என்று சொல்லிவிட அந்தப்பெண்மணிக்கு சங்கடமாகிவிட்டது.


நீதி நெறிவிளக்கத்தில் ஒரு பாட்டு" பொன்மலர் நாற்றமுடைத்து' என்று முடிகிறது
பொன்மலர் நாறுமா?இப்படி தமிழ் அறிந்தவர்கள் கேட்கமாட்டர்கள் ,காரணம் நாற்றமெனில் வாசனைஎனப்பொருள இருப்பது அவர்களுக்குத் தெரியும் !வாசனைக்குநேர்பொருள் எதிர்பொருள் எல்லாமே அதுதான் தமிழில்!

உண்ணல் ,தின்னல் ...இவைகளுக்குள் என்ன வேறுபாடு பார்க்கலாமா?

பசியடங்க வயிற்றை நிரப்புதலுக்கு உண்ணல் என்றும் சிறிய அளவு உட்கொள்ளுதலை தின்னல் என்றும் சொல்லவேண்டுமாம்.

அதாவது சோறு உண்டான், விருந்து உண்டான்... முறுக்குதின்றான்அல்லது மைசூர்பாக் தின்றான்.புரிகிறதா இப்போது? என்ன பசி எடுத்துவிட்டதா?:)

உண்ணவா தின்னவா என்ன செய்யபோகிறீர்கள்?:)


சரி... ஈந்தான், யாசித்தான், தந்தான்.

இதற்கும் வேறுவேறு பொருளாம்!

ஈந்தான் ---யாசித்தவனுக்குத் தந்தான்.

தந்தான்--சமநிலையில் அளிப்பவனுக்கு அளித்தான்.

கொடுத்தான்.--தாழ்நிலையில் உள்ளவனுக்கு உயர்நிலையில் உள்ளவன் அளிப்பது


இந்த 'க்' 'ச் ' போன்ற சந்தி எழுத்துக்கள் தமிழில்பண்ணுகிற அட்டகாசம் சொல்லிமாளாது போங்கள்!

அலைகடல் ,அலைக்கடல் !

இரண்டும் ஒன்று என நாம் நினைப்போம்.

ஆனால் அலைகடல் என்றால் அலைகின்ற கடலாம் .

அலைக்கடல் என்றால் அலையை உடைய கடலாம்!

ஒரு க் வந்து நம்மை திக்குமுக்காட வைக்கிறது பாருங்க!

வார்த்தைப் பஞ்சமே இலலாத மொழி தமிழ்.

அரி என்ற சொல்லுக்கு மட்டும் 109 பொருளாம்!

சரி, பூவின் பருவங்கள் நமக்குத்தெரியும் .

அரும்பு என்போம் ;பின்னர் மலர் என்றுகூறிவிடுவோம்.

ஆனால் இடையில் எவ்வளவு விட்டுப்போயிருக்கிறது தெரியுமா?

அரும்பு--மொட்டு

போது---மலரும் நிலையிலுள்ளது(உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது..என்கின்றார் அபிராமி அந்தாதியில் அன்னையை...)

மல்ர்=விரிந்தபூ

அலர் நன்றாகமலர்ந்தது-(அலர்மேல் மங்கை -திருமகள்.)

வீ- நன்றாகமலர்ந்து விழுந்தது...

'வீல் 'எனக்கத்தலாம் போல இருக்கிறதா?:)

பாத்துக் கத்துங்க.. இன்ன சந்தர்ப்பத்தில் இப்படித்தான் கத்த வேண்டுமென வரையறையும் தமிழில் இருக்கிறது!!!
மேலும் படிக்க... "இந்த தமிழ் படுத்தும் பாடு...!!"

Tuesday, May 13, 2008

கோடைக்காலம்!

பெய்யும் மழைக்குக்
கோடையில்ஓய்வுக்காலம் -ஆயினும்
தெய்வங்கள் தெருவெங்கும் பவனிவரும்
திருவிழாக்காலம் கோடை!

முதுவேனில் கோடை என்று
முன்னோர்கள் சொன்னார்கள்-இன்றோ
இளவேனில் அனல்தகிக்கும்
இயற்கையின் கோபக்காலம்!

தாகம் தணிக்கவென்று
தர்பூசனிப்பழங்களோடு
வேகமாய் விற்பனையாகும்
விதவிதமான குளிர்பானங்கள்
வாடையால் வாடி
வரவுக்கு யாருமின்றி
வருந்திக் காத்திருந்த
கோடைமலைதலங்களெல்லாம்
கொண்டாடும் பொற்காலம்!

வாழையடிவாழையென
வசதிகள்கொண்டவர்க்கு
கோடையைவிரட்டிவீட்டில்-குளிர்
வாடையை வாங்க இயலும்,
ஆனால்..

ஏழைக்கு என்றைக்கும்
கோடைக்கு மோர்மட்டும்!
மேலும் படிக்க... "கோடைக்காலம்!"

Monday, May 12, 2008

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-

நிறைவுப்பகுதி!
*******************


கல்யாணமேடையில் அரைக்கை கதர் சட்டை அணிந்துகொண்டு சின்னகாமராஜரைப்போல
அமர்ந்திருந்தார் மாப்பிள்ளை சிங்கம்! ஆடம்பர வாசனையே இல்லாத எளிமை அங்கு கண்ணைக்கவர்ந்தது.


நாங்கள் மாடியில் அமர்ந்து கை அசைத்தோம்..


ஒலிபெருக்கியில்இருவரது குடும்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டது.

விழியனைப்பற்றி சிறப்பாகவும் பெருமையாகவும் சிலவார்த்தைகள் .
சொன்னார்கள்.


இருவரது குடும்பங்களையும் நன்கு அறிந்த சில தமிழ்பெருமக்கள் வாழ்த்தினர்.


பிறகு மணமகனும் மணமகளும் இல்லற வாழ்விற்கான உறுதி மொழியை ஒருவர்
ஒலிபெருக்கியில் சொல்லச் சொல்ல திரும்பி அதை சொன்னார்கள். செந்தமிழில் அந்த
மொழி கேட்கவே ஆனந்தமாய் இருந்தது.

அக்னி இல்லை அட்சதைகள் இல்லை ஆனாலும் அன்புமனங்கள் அங்கு அனைவரின் கைதட்டலில்
இணைந்தது. விழியன் வித்யாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

உப்பரிகை மக்கள் உற்சாகமாய் விசிலடித்தனர்!


ரமணன் அவர்கள் சிறப்புமணவாழ்த்துப்பாடலைப்பாடினார்.கூட்டம் அந்தநேரம் பார்த்து
மண்மக்களைவாழ்த்த பெருத்த சத்தமிட்டு மேடைக்கு
நகரவும் சிலர் ஒலிபெருக்கியில் அன்பாய் கடிந்துகொண்டார்கள்.


திருமண நிகழ்ச்சிகளை நமது குழுநண்பர்களும் வலைப்பதிவர்களும் புகைப்படம்
எடுத்துதள்ளிக்கொண்டிருந்தனர். அப்படியே எங்களையும்!


நாமெல்லாம் சேர்ந்து ஏதும் கவிதை எழுதி வாழ்த்தலாம் என்றேன் நான்.ரசிகவ் நிலா
இருவரும் பேனாவும் பேப்பருமாய் அமர்ந்தனர் .

..நானும் யோசிக்க ஆரம்பித்தேன்.


கவிதை எழுத சூழ்நிலை சரியாக இல்லை என்பதால் யாருக்குமே கவிதை சட்டென
வரவில்லை.கடைசியில் உரைநடைபாணியில் ஒருகவிதை எழுதி முதலில் ஜேகேயிடம்
காட்டினேன் அவர் முகம் போன போக்கே சரியாய் இல்லை:)
நிலா 'பரவால்லக்கா' என்றார் சோகமாய்.
ரசிகவ்,'இந்த நேரத்துக்கு பொருத்த்மாத்தான் இருக்கு போய் வாசிங்க மைக்குல"
என்றார்.


விபாகையும் சரியென்றதும் மாலாமஞ்சூர்ராசா வேறு,'போங்க ஷைலஜா' என்று அன்பாய்
சொல்லவும் நான் துணிந்து களம் இறங்கினேன்.
மணமக்களை வாழ்த்தி கவிதை வாசிக்கும்போது நம் மக்களை கைதட்டி விசிலடிக்க
முன்கூட்டியே ஏற்பாடு செய்துதான் போனதால் அப்படியே அவர்கள் செய்தார்கள்!


நான் கவிதைவாசித்ததும் மண்டபக்கூட்டம் மெல்லக்குறைந்தது.


அப்புறம் நாங்கள் எல்லாருமாய் கூடிக்குளிர்ந்து விழியனை நெருங்கி
கல்யாணப்பரிசினை அளித்து வாழ்த்தினோம்.

சுற்றி நின்று புகைப்படம் ஒளிப்படம் எடுத்துக்கொண்ட்டோ ம்.
மண்டபவாசலில் ஒரு வெள்ளைப்படுதா கட்டி இருந்தார்கள் அதில்
திருமணத்திற்குவந்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் வாழ்த்துகக்ளையும்
எழுதினோம்.

பிறகு
வாசலில்வந்து ஒரு பஸ்ஸில் 16பேரும் ஏறினோம். ஜல்கண்டேஸ்வரர் கோயில் சென்றோம்.

கோயிலில் தரிசனம் முடிந்ததும் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட கோயில்மண்டபத்தில்
அரைமணிக்குமேல் இளைபபறும்போது பாட்டு பேச்சு என்று நேரம் போனது.
மதியம் ஆகிவிடவே பெங்களூர்மக்கள் விடைபெற்றுக்கொள்ள மற்றவர்கள் அகழி நீரினில்
பரிசல் சவாரிக்கு சென்றார்கள்.


மொத்தத்தில் மறக்கஇயலாத அந்த நன்னாள் வித்யா-விழியனுக்கு மட்டுமல்ல
எங்களுக்கும்தான்!
***************************************************************************
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்!-3-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-

10ஆம்தேதி சனிகிழமை காலையிலே திருமண நிகழ்ச்சிகள் தொடங்கிவிட்டன.


நமதுகலாச்சாரம் என்னும் தலைப்பில் எழுத்தாளர்தமிழ்ச்செல்வன் மற்றும்பலர்
அருமையாய் பேசினதாக சொன்னார்கள்.


தொடர்ந்து மாலை குழந்தைகள் நடனமும் நடைபெற்றிருக்கிறது அவைகளை நாங்கள்
பார்க்கமுடியவில்லை. அடுத்து வரும் நிகழ்ச்சிகளையாவது கண்டுகளிக்க நினைத்து
பயணக்களைப்பைத் துறந்து அனைவரும் கிளம்பினோம்.
மண்டபம்வாசலில்கார் நிற்கும்போது ,"வாங்க வாங்க" என்று வரவேற்றார் விழியனின்
தந்தைசெந்தமிழ்செல்வன் அவர்கள்.பெயரிலும் பேச்சிலும் பெருமைமிகு நமது
கலாசாரத்திலும் அவரிடம் தமிழ் மேலொங்கி இருந்தது.
விழியனின் அன்புத்தங்கைதிவ்யா மலர்தூவி இனிப்புதந்து வரவேற்றதை ரசித்தபடி உள்ளே
நுழைந்தோம்.


வீடியோ பளிச்பளிச் என்று எதிர்கொண்டன. மண்டபத்தில் வந்தவர்கள் ஆயிரத்திற்கும்
மேல்! யெப்பா என்ன கூட்டம் என்ன கூட்டம்!


உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!

உளுந்துபோட்டால் உளுந்து விழாது! அவ்ளோ கூட்டம்!
(எள் போட்டா எள் விழாத கூட்டம்னு சொல்லகூடாது. கம்பரே மிதிலையில் சீதையின்
திருமணதிற்குவந்த கூட்டம்கண்டு உளுந்தைத்தான் உதாரணம் சொல்வார்.


*உழுந்திட இடமில்லை உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கெலாம் அருட்கொம்பாயினான்
எழுந்திலன் எழுந்திடைபடரும் சேனையின்
கொழுந்துபோய் கொடிமதில் மிதிலை கூடிற்றே!*

* *


அதே கம்பர் ராவணன் இறந்தபோது எள்ளை உதாரணம் சொல்வார்.
ராவணனின் மனைவி போர்க்களத்தில் இறந்து கிடக்கும் கணவனின் உடலைத்தடவி
கதறி,"*எள்ளிருக்கும்
இடமின்றி உயிர் இருக்கும் இடம் நாடி இழைத்தவாறோ*?
' என்பதாக எழுதி இருப்பார்.


. (கடுகு அதைவிட சிறிது அதை சொல்லக்கூடாதா என்றால் அது வெடிக்கும்.
சுபநிகழ்ச்சிகளுக்கு அவற்றை உதாரணங்கள் சொல்வது சரி இல்லை என்கிறார்கள்
சான்றோர்கள்)


சரி விஷயத்துக்குவருவோம்..


கூட்டத்துல தயங்கிதயங்கி மேடை ஏறினால்; அங்கே தமிழ்க்காவலர்கள் பலர்
வீற்றிருக்க இசைக்கவிரமணன் அருகில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தேன்
.'வணக்கம் 'சொல்லிவிட்டு ரமணனை ஏறிட்டால் அவர் தெய்வீகப்புன்னகையை
சிந்திவிட்டு ஒலிபெருக்கிஅருகே சென்றார்.


என்னையும் அழைத்து அவரருகே நிற்க சொன்னார்கள்


விழியனின் புகைப்படங்கள் போஸ்டர்களாய் கீழே சிறந்த வாசகங்கள்
எழுதப்பட்டு,அவைகள் விளக்கங்களுடன் திரு ரமணனினால் பேசப்பட்டு ,அவைகள் என்
கரத்தில் அளிக்கபட்டு, பிறகு மணமக்கள்
கரங்களில் ஒப்படைக்கப்பட்டது. (திருமணம் அல்லவா ஆகவே *பட்டு* அதிகம்
வந்துவிட்டது ஏதோ மனதில்பட்டதை சொல்லி இருக்கிறேன் என்ன?:))
நல்லவேளை என்னை மேடையில்எதுவும் பேசவற்புறுத்தவில்லை..எல்லார்க்கும்
தெரிந்திருக்கிறது மேடையில் நான்பேசினால் கூட்டம் சிதறி
விடும் என்று!


இசைக்கவிரமணன் கவிதை எழுதிகிறார்! மேடையில்பேசுகிறார் !பாடுகிறார்.!சந்தனமும்
மல்லிகையும் மணக்கும் என்பதுபோலத்தான் ரமணனின் இந்த சாதனைகளை நாம் பேசுவது.
ஆம் அவர்பேசினால் நம் சிரம் அசைகிறது பாடினால் மனம் துள்ளுகிறது! இது இறைவன்
இசைகவிக்கு தந்துள்ள பெரும் வரம்!


கூட்டத்தின் மகிழ்ச்சிகலந்த ஆரவாரங்களுக்கிடையே நிகழ்ச்சி நடக்க ஆரம்பித்தது.
மேடையினின்று நான் கிழே வந்ததும் மலர்ந்தமுகம் ஒன்று என்னை எதிர்கொண்டது !
ஆ!மாலா மஞ்சூர்ராசாவாம்! அறிமுகப்படுத்திக்கொண்டதுமே பலநாள்பழகியது போலஅரட்டை
ஆரம்பமானது! இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் நிலாரசிகன் வந்துவிட்டார்.
மேடையில் நான் அதிசயமாய் பவ்யமாய் நின்றதை கிண்டலடித்த
நிலா அருகில் நின்ற
நம்பிக்கைபாண்டியன் ஜேகே ப்ரேம்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார் .
பண்புடனில் கும்மி அடிக்கும் ப்ரேம் ரொம்பப்ப்பணிவாய் தனுஷ் உடம்பில்
சிக்கனசிரிப்பில் தெரிந்தார்.


ஜேகேக்கு எப்போதும் புன்னகையான முகம். என்ன இன்னும் கொஞ்சம் நல்ல சாப்ட்டு
உடம்பை தேத்திக்கணும்!


சிஃபிஆசிரியர் அண்ணா கண்ணன்(பார்க்க தம்பிகண்ணனாட்டம்தான் இருப்பார்):


சித்தார்த் வெங்கடேஷ்! அசப்பில் நடிகர்ப்ரபுஜூனியர்!


எல்லாரும் சாப்பிட அம்ர்ந்தோம்.. விருந்தோம்பலிலும் தான் தமிழன் என்பதை விழியன்
குடும்பம் நிரூபித்தது. சுவையான சாப்பாடு.அருகில்வந்து கவனித்துகவனித்துகேட்ட விழியனின் உடன்பிறப்பு. தம்பி உடையான் மட்டுமா தங்கை உடையானும் எதற்கும்
அஞ்சவேண்டாம்!
சாப்பிட்டதும் எல்லாரும் அரட்டை அடிக்க வேகமாய் ஹோட்டலுக்குப்பறந்தோம்.


ரமணனின் அறையில் அடைந்தோம். அப்போதுதான் அங்கு வந்த லக்ஸ், சிவிஆர்,ஆதி,பிவி
என சில வலைப்பதிவாளர்களை அறிமுகப்படுத்தினார்.


எல்லாரும் துறுதுறுப்பான இளைஞர்கள்!


நிலாரசிகன் தொலைக்காட்சியில் கிரிக்கட் ஆட்டம்பார்த்தபடியே எங்கள்பேச்சிலும்
கலந்துகொண்டார். ரமணன் அவர்களின் 'ஒருநாள் உன்கூந்தலிலே மலராக வேண்டும்
என்றபாடலும் இன்னொன்று என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே' என்ற பாடலும்
எல்லாரையுமே கட்டிப்போட்டது, மேலும் கண்ணதாசனின் பலபாடல்களை
அனுபவித்துப்பாடினார்.


பிறகு நாங்களும் எல்லாரும் ஏதோ கத்தினோம்.


திருமதிமாலா மஞ்சூர்ராசாவின் சமூகப்பணி யும் நாடக அனுபமும் இதில்
சிறப்புச்செய்திகள்.
.. ப்ரேம் அமைதியே வடிவாய் அமர்ந்திருந்தார். ஜேகே பாடாமல் எஸ்கேப்
அடிக்கபார்த்தார் விடவில்லை நாங்கள்:


12மணிக்கு தூங்கலாம் என கலைக்கபட்ட சபை மறுபடி நிலாவின் அறையில் இரண்டுமணிவரை தொடர்ந்துவிட்டது.


விபாகை குழுக்களில் ஆக்கபூர்வமான மடல்கள் வரவேண்டும் என்று கூறினார்.


நிலாரசிகன்தனது புது கவிதைதொகுப்பை அளித்தார். அவரது அலுவலகத்தில்பணிபுரியும்
விழியனின் ரசிகை ப்ரியா எனும் பெண்ணும் எங்களோடு தங்கி பேச்சில்கலந்துகொண்டாள்


.சித்தார்த்தின் குறுந்தொகை பதிவுபற்றியும் கொஞ்சமாய் கம்பனின் பாடல்களை
அலசினோம்.


தூக்கம் கண்களைதழுவிமிரட்டியது...
பெண்கள் நாங்கள் மூவரும் எங்கள் அறைக்குள் வந்து படுத்தோம்.


காலை எழுந்ததும் ரமணனிடம் காபி ராகம்பாடினேன்.
வரவழைத்துத்தந்தார்.


காலைஏழுமணிக்கு எல்லாரும் மண்டபம்விரைந்தோம்."முதல்ல சாப்பிடுங்க" விழியனின்
தங்கையின் அன்புக்கட்டளை.


நேராய் சாப்பாட்டுக் கூடம்தான். இட்லிவடை பொங்கல் சாம்பார்சட்னி ஏதோ
இனிப்பு(மைபா இல்லாமல் கல்யாணம்?:))


வயிறார உண்டு மண்டபம் வந்து உப்பரிகைக்குபோய்விட்டோ ம்!கீழே கூட்டம் என்பதாலும்

மேலே நாம் மட்டும் சென்றுதனியாக கூட்டம்போட்டுப் பேசலாம் என்றும்
இப்படிசெய்தோம்! சிவிஆர் லக்ஸ்(லட்சுமண ராஜா) மற்றும் அவரது நண்பர்களுக்கு
காமிராவே காதலிகள்! க்ளீக்கிக் கொண்டே இருந்தார்கள்!


அய்யனாரை அங்கே கண்டோ ம்.இன்னமும் புதுமாப்பிள்ளைகளை கலையாமல் சிரித்தமுகமாய்
தெரிந்தார்.


ரசிகவ் தூரத்தில் தனியாய் அமர்ந்திருக்க அலைபேசியில் அவரை வரவழைத்து அருகில்
உட்காரவைத்தோம்.லாவண்யா பஸ்ஸில் புறப்பட்டு
சென்னையிலிருந்துவந்த்குகொண்டிருப்பதாய் தகவல் வந்தது.


மேடையில் மண நிகழ்ச்சி ஆரம்பமானது. எந்தவித ஆடம்பரமுமின்றி எளிமையாக
தொடங்கியது.
மணமகன் கதராடையில் மணமகள் நூல்சேலையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு வலப்புறம்
திருமணத்திற்கு வாழ்த்துரை வழங்கவந்தவர்களை அமரவைத்து இடப்புறம்
இருவரின்பெற்றோகள் நெருங்கிய உறவினர்களை அமரவைத்திருந்தார்கள்.


வித்தியாசமான இந்த திருமணத்தில் தமிழ்மட்டுமே முழங்கியது மிகவும்
பெருமைக்குரியது!


விழிகள் மலர நாங்கள் மேடையைப்பார்த்திருந்தோம்.


தொடரும்
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -2-"

வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-

மறுநாள் விழியனுக்குக் கல்யாணம் என்றால் முதல்நாள் காலை வரை நானும் விபாகையும் திருமாலும் எப்படிப்பயணம் செய்யபோகிறோம்!என்பது ராஜேஷ்குமாரின்நாவலாக (சஸ்பென்ஸ்)ஆக இருந்தது.!

கார்? பஸ் ? ரயில் ?-என்று சீட்டுக்குலுக்கிப் போட்டு இறுதியில்வென்றது புகைவண்டி.

ப்ருந்தாவனத்துக்கண்ணனைப்பார்க்கக்கூட அப்படி விரைந்திருக்கமாட்டோ ம் அன்றைய மதிய ப்ருந்தாவன் எக்ஸ்ப்ரஸுக்கு நாங்கள் அன்றுபி.டி. உஷாக்களாய் ஒட்டிச்சென்று இடம்பிடித்தோம்!

திருமால் முதலில் சென்று துண்டு போட்டு இரண்டு இடங்கள்போட்டு விட்டார்.

முதலாழ்வார்கள் மூன்றுபேர் கதை சுருக்கமாய் இங்க சொல்லக்காரணம் இருக்கு.. அது என்னன்னா..

ஒரு மரபொந்திற்குள் ஒருவர் படுக்கலாம் இருவர் அமரலாம் மூவர் நிற்கலாம் போலிருந்த அந்த சின்ன இடத்தில் மூன்று ஆழ்வார்களும் இறைவனை தியானம் செய்து கொண்டிருக்கையில் முடிவில் இறைவனே வந்து இடங்கேட்டு அருள் செய்ததாகக் கதை உண்டு.

அதுபோல கிடைத்த இரண்டு இருக்கைகளில் மாறிமாறி நாங்கள் இருவர் அமர்ந்து ஒருவர் நின்றுகொண்டு வித்தியாசமான திருமணத்தின் முதல் கட்டமாய் எங்களது வித்தியாசப் பயணம் ஆரம்பமானது. கொஞ்சம் உருளைக்கிழங்கு பொறியலும் 4இட்லியும் அவசரத்துக்கு யார்பசிக்காவது ஆகட்டும் என கொண்டுவந்ததை சாப்பிடாமல் வந்த விபாகைக்கு ஓரளவு பசியாற்ற உதவியது. எங்க மைபா என்று மறக்காமல் கேட்டார் விபாகை! குளிர்பானங்கள் கொறிக்க சில என வாங்கியபடி பயணம் தொடங்கியது.
அதென்னவோ ரிசர்வ் செய்யப்பட வசதியான தனிமைபயணத்தைவிட இப்படி
நண்பர்களுடன் அதுவும் குழு நண்பர்களுடன் பேசிக்கொண்டு கூட்டத்தோடுகூட்டமாய் பலதரப்பட மனிதர்களின் பலவகைப்பட்ட ரசனைகளோடு இரைச்சல்களுக்கு இடையே செய்யும் பிரயாணங்கள் அலுப்பதில்லைதான்.

குழுவில் அதிகம் தலைகாட்டாமல் பணியில் மும்முமுரமாயிருக்கும் நண்பர் ராஜலிங்கம் எனும் விபாகை பயணத்தில் நிறைய பேசிக்கொண்டே வந்தார். நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறது இவருக்கு. திருமால் கல்லூரிமாணவர்போல இருப்பார் ஆனால் அமைதியான அமூல்பேபி முகம். தேடிச்சென்று நல்ல புத்தகங்களை வாங்கிப்படிக்கும் புத்தக ரசிகர். வேதாந்தரகசியம் போன்ற பழைய புத்தகங்களிலிருந்து அசோகமித்திரன் அகிலன் என ஆரம்பித்து இன்றைய எழுத்தாளர்களின் புத்தகங்கள்வரை பேசி அலசுகிறார்.

முன்னமே விழியன் திருமண அழைப்பிதழ்கொண்டுகவந்தபோதே,"வேலூரில் வெய்யில் கொளுத்துமே அதுவும் அக்கினிநட்சத்திரசமயம்?" என்றபோது" நீங்க வாங்க அக்கா.. அன்னிக்கு கண்டிப்பா மழைவரும்" என்றார் அன்புத்தம்பி.

ஆகா அந்த வாக்கே திருவாக்கானதோ ?

மாலை ஆறேகாலூக்கு ரயில்நிலையம்போய் இறங்கிறோம் பாருங்க ஊரே குளிர்சாதனப்பெட்டில வச்சமாதிரி அப்படி ஒரு ஜிலுஜிலுப்பு!
விழியனின் ஆத்ம நண்பன் கேபி ரயிலடிக்கு வரவேற்க வந்துவிட்டார். அவரை 'நீங்க கேப்பிங்களா ?' என்றார் விபாகை .

"ஆமாம்" என்றார் அவரும்.
" நான் சொன்னா கேப்பீங்களா?" என்று சதாய்க்க ஆரம்பித்துவிட்டார் விபாகை.

அங்கேயே சிரிப்பலை ஆரம்பிக்க கேபி எற்பாடு செய்திருந்த வாகனத்தில் ஏறி முதலில் ஹோட்டலுக்கு சென்றோம்.

அங்கே சென்றதும்," இப்போ ரொம்ப முக்கிய நிகழ்ச்சி .ஷைலஜாக்கா நீங்ககல்யாணமண்டபத்துல மேடைக்கு வரணுமாம் .".என்றார் கேப்பி.

நம்ம அரட்டை பேச்செல்லாம் மேடைக்கு கீழதான்னு யாருக்கும் தெரியாதா? இதென்ன மதுரைக்கு வந்த சோதனை என நான்
திகைக்கையிலே கேப்பி"பத்திநிமிஷத்துல மண்டபம்போக ரெடி ஆகுங்க" என அன்பு அதட்டல் போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்!

(தொடரும்)
மேலும் படிக்க... "வித்தியா(வ)சமான தமிழன் விழியன்! -1-"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.