Social Icons

Pages

Wednesday, April 28, 2010

த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!

மே மாசம் 2ஆம்தேதி ஞாயிறு மாலை த்ரிசக்திகுழுமம் பெரிய விழா நடத்த இருக்கிறார்கள்!
அதுல அவங்க மூணு புத்தகங்கள் அதாவது பத்திரிகைகள் வெளியிடப்போறாங்க. ரசனை என்கிற இலக்கிய மாத இதழ், கொலுசு என்கிற நாவல்மாதாமாதம், அப்புறம் த்ரிசக்தி ஜோதிடம் என்று.

a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjYo1c9MatxwhRJwx4qmFXMLm4U116DOxaF85_Hz3Tt6Wuuq7kAx5q7KB7MxiolN1aTH-9ZEd04ngqdYHvJM5kAT4q1DOLOFyrThazTo2MmT4wfU_xb4iM8L2ZayxN1Mg_31cDH5g/s1600/Invitation++for+2nd+May+++function.jpg">



அதுக்கு வைரமுத்து வராரு எழுத்தாளர் ரமணிசந்திரன் வராங்க மேலும் சீர்காழி சிவசிதம்பரம் மற்றும் சில பிரபலங்களும்!
தில்லானா மோகனாம்பாள் மறுபதிப்பு வெளியிடறாங்க புத்தகமாக.. புத்தகம் எழுதியவரும் இல்லை,அந்தப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பான்மையினர் இப்போ இல்லை நடிகைமனோரமாவை விழாக்கு வரும்படி கேட்டுட்டாங்க அவங்களால வர இயலவில்லை. அதனால நாவலை எழுதிய கொத்தமங்கலம் சுப்புகுடும்பத்தினருக்கு அமரர்இயக்குநர் ஏபிநாகராஜனின் மகன் பரமசிவன் அவர்கள் அளிக்க இருக்கிறார்.
நிகழ்ச்சில மதுரைஎம்பிஎன் பொன்னுசாமி(சேதுராமன்) குழுவினரின் தில்லானா மோகனாம்பாள் நாதஸ்வர இன்னிசை நடைபெறும்.
தி நகர்ல வாணி மஹால்ல நடக்குது எல்லாரும் வரலாம்! தேமதுரத்தமிழோசையை செவி குளிரக்கேட்கலாம். நிறைய புத்தகங்களை அங்கே நீங்க வாங்கலாம்!

இந்த நிகழ்ச்சிக்கு 2நாட்கள் முன்பாக அதாவது ஏப்ரல் 30 தேவநேயப்பாவாணர் அரங்கில் த்ரிசக்தி குழுமத்தினரின் வெளியீடாக 12 நூல்கள் வருகின்றன. முன்னர் நிலாரசிகன் விழியன் அவர்களுது வந்தமாதிரி இப்போ அவனும் இவனும் என்கிற 16சிறுகதைகள் அடங்கியதும் ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் கலைமகள் ஆசிரியரின் அணிந்துரை பெற்ற எனது சிறுகதை நூல் அன்னிக்கு வரப்போகுது.இதற்கு பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் வராங்க. இதற்கும் வர முடியுமானால் அனைவரும் வரவும் நன்றி.










மேலும் படிக்க... "த்ரிசக்திகுழுமம் நடத்தும் இனிய இரு விழாக்கள்!"

Friday, February 26, 2010

ஆத்தா ஒன் சீலதான்....




ஆத்தா ஒன் சீலைதான்
காத்தாக அணைச்சிருக்கு
தறியிலே நெஞ்சது என்
உசுருலே பிணைஞ்சிருக்கு.

உதிரத்துல பாலூட்டி
உத்திரத்துல சீலைதூளிகட்டி
உள்ள என்னை படுக்கவச்சே.
பத்துமாசம் வரையிலும்
பாவிமவ நான் படுத்துறங்கி
பகலிரவு நேரமெல்லாம்
ஈரப் படுத்தினதை
பன்னீரா தொடச்சதும்
ஆத்தா உன் சீலையிலே,

மாரியாத்தா திருவிளாவுல
ஆரியமாலா வேஷங் கட்ட
அன்னிக்குப் பொருத்தமாச்சி
ஆத்தா உன் சீலை தான்.

உலக்கைக்கு உள்ளாற
உட்கார்ந்த ’அந்த’ நாளில்
திரையாகக் கிடந்தததுவும்
ஆத்தா உன் சீலைதான்

அப்போதைய வறுமையில
தாவணியா மாறினதும்
ஆவணிச்சந்தையில வாங்கின
ஆத்தா உன் சீலைதான்

சொத்துபத்து எல்லாம் வித்து
சொற்பதொகை சேகரிச்சி
பாத்துப்பாத்து சீரு செஞ்சி
புகுந்தவீட்டுக்கு அனுப்பிவச்சே.
பொறப்பட்டு வருகையில
பொட்டியிலே முக்கியமா
பொக்கிஷமா வந்ததுவும்
ஆத்தா உன் சீலைதான்.

நாகரீகம் தெரிஞ்சவரு
நல்லாத்தான் மகளோடு
குடும்பம் நடத்தறாருன்னு
ஆத்தா நீ நம்பி இருக்கே.
நகரமில்லஆத்தா ,நரகத்துல
நான் வந்திருக்கிற சேதி சொன்னா
அய்யோ உன் இதயம்தான்
அப்போதே நின்னுப்பிடும்

வாய்தொறக்க வழி இல்ல
அடிதடி இம்சையினு
நாலுமாச தாம்பத்தியத்துல
நாய்ப்பொழைப்பா நாறுகிறேன்
நாலெழுத்துப்படிச்சிருந்தா
நானும் தல நிமிந்து பேசிடுவேன்.
பயத்துல செத்துக்கிட்டு
பிடி சோறுக்கும் வழி இல்லாம்
பட்டினியில் கிடக்கும் என்னை
இடிபோல தாக்கிச்சி நேத்திக்கு
என்புருஷன் சொன்ன பேச்சு

பாலோட பண்பாட்டயும் ஊட்டி
வளத்த பாசக்காரி ஒன் கிட்ட
பாதகன் சொன்ன சொல்லை
பாவிநான் சொல்லிப்புட்டா
ஆத்தா நீ தாங்கமாட்டே.
மானங்கெட்ட மக்களுக்கு
முந்தானைவிரிச்சிப்போடணுமாம்
முட்டாள்புருஷன்கட்டளை.

தாள முடியலம்மா
சாவது தான் முடிவுன்னு
ஆத்தா ஒன் சீலையினை
அழுதபடி எடுக்கறேன்,
ஆசைதீரத்தொட்டு
தொட்டு த்டவறேன்.
கழுத்துக்கு சுருக்காக
கடைசிப்பயணமாக
ஆத்தா உன் சீலதான்
ஆயுசுக்கும் என்கூட.

முடிவோட சீலையினை
மூச்சுமுட்ட அணைக்கையிலே
முந்தானைமுடிச்சு
நெஞ்சுல நெருடிடவும்
திடுக்கிட்டுப் பாக்கறேன்.

திகைப்போட முடிச்சினை
வேகமா அவிழ்க்குறேன்,
கசங்கித்தான் கிடக்குது ஒத்த
நூறுரூவா நோட்டு!
மலர்ந்தேதான் மனசும்
மானசீகமாக் கூவிக்கொள்ளுது,
”பொறந்த ஊரு போய்ச்சேர
கிடச்சாச்சு,
ரயிலு டிக்கட்டுக்கு துட்டு!”














--
மேலும் படிக்க... "ஆத்தா ஒன் சீலதான்...."

Monday, February 22, 2010

தமிழ்க்கடல்!








ஆழி சூழ் உலகம்!


********************************************




மொழிகள் பலவற்றில் ஒருபொருட்பலசொற்கள் அமைந்துள்ளன.தமிழ்மொழியில் ஒருபொருட்பல்சொற்கள்(பெயர்கள்)மிகுந்தே இருக்கின்றன.

அவையாவும் பொதுப்பெயரில் ஒத்து இருந்தாலும் சிறப்புப்பொருளில் தனிதனிக் கருத்தை உணர்த்துகின்றன.

கடல் எனும் சொல்லினை எடுத்துக்கொள்வோம்..


கடற்படை கடற்செலவு கடல் வணிகம் முத்துக்குளித்தல் கடலில் மீன் பிடித்தல் கடல்விளையாட்டு ஆகியவைகளில் தமிழ் மக்கள் தலை சிறந்திருந்தனர்.

கடலைக் குறிக்க தமிழில் பலசொற்கள் இருக்கின்றன.ஒவ்வொரு சொல்லும் கடலின் தனித்தனிப் பண்பை தெளிவாக விளக்குவதுடன் கடலைப்பற்றி நம்முன்னோர் பெற்றிருந்த ஆழ்ந்த அறிவையும் நன்கு புலப்படுத்துகிறது.

கடப்பதற்கு மிகவும் அரிதாக இருப்பதால் கடல்(கட+அல்=கடக்க அல்லாதது) என்று பெயர்பெற்றது.மிகவும் ஆழமாக இருப்பதால் ஆழி ,ஆழம், பௌவம் என்னும் பெயர்கள் ஏற்பட்டன. .பௌவம் என்னும் சொல் ஆழத்தைக் குறிக்கும்.

கடலில் எப்போதும் நீர் பெருகி இருப்பதால் பெருநீர் என்றும் கடலைக் குறிப்பிடுவதுண்டு.
கடலில் எப்போதும் வெள்ளம் மிகுந்திருப்பதால் வெள்ளம் என்றும் அதற்குப்பெயர்.

கடலிலிருந்து உப்பு கிடைப்பதால் உப்பின் உவர்ப்புச்சுவையை ஒட்டி கடலுக்கு உவர் என்றும் பெயர் இருக்கிறது.

கடல் மிகப்பெரியதாக பரவலாக உலகைசுற்றி இருப்பதால் பரவை என்கின்றனர்.







கடலில் அலை அடித்துக்கொண்டெ இருப்பதால் அலை என்றும், ஆறுகள் யாவும் கடலுடன் புணர்வதால் புணரி என்றும் பெயர்கள் வருகின்றன

மேகம் நீரை மொண்டு கொள்ளும் இடமாகக் கடல் இருப்பதால் கார்கோள் என்று பெயர்பெற்றது.

(கார்=கரியமேகம், கோள்=எடுத்துக்கொள்ளுதல்)

கடலி ல் எப்போதும் இரைச்சல் இருப்பதால் அது ஆர்கலி., நரலை ஓதவனம் (ஓதம்=ஈரம்) என்றும் சக்கரம் வட்டமாக இருப்பது போல கடலும் ஏறக்குறைய நிலத்தைச் சுற்றி வட்டமாக இருப்பதால் சக்கரம், நேமி ஆகியபெயர்கள் எற்பட்டன.

மீன்களுக்கு உறைவிடம் கடல் ஆகவே மகராலயம்(மகரம்=மீன் ஆலயம்=இருப்பிடம்) என்றானது.

கடலில் தண்ணீர் பெரியநிதியைப்போல இருப்பதால் அதற்கு சலநிதி(சலம்=தண்ணீர் நிதி=பெருக்கு)என்று ஒருபெயர்.

முத்து பவழம் போன்ற பொருட்களை வாரிவாரித்தருவதால் வாரி, வாரிதி.
கடல் நீரின் உறைவிடம், ஆகவே அதற்குப்பெயர் சலதி.

கடலின் நிறம் கருநீலம்,சுவையோ உவர்ப்பு. இரண்டையும் கருதி கடலுக்கு கார்மலி உவரி என்றும் சொல்கின்றனர்.

இவ்வாறு கடலைக் குறிக்கும் பல சொற்கள் தமிழ் மொழியில் பொருட் செறிவுடன் விளங்குகின்றன.

கடலைக்குறிப்பிட பல சொற்கள் இருப்பதுபோலவே கடலில் செல்லும் பல்வேறு ஊர்திகளை உணர்த்த பல சொற்கள் அமைந்திருத்தல் இயல்பே.

மரக்கலம் என்னும் பொதுச்சொல் நீரில் செல்லும் எல்லா ஊர்திகளையும் குறிக்கும்.
நிரில்மிதக்கும் கட்டை புணை எனப்படும், இதனை மிதவை என்றும் சொல்வர்.

பலமிதப்புக்கட்டைகளின் இணைப்புக்கு தெப்பம் எனப்பெயர்.

இருபக்கங்களிலும் வளைந்த மரக்கட்டு கட்டுமரம் எனப்படும்.

கட்டுமரம் என்ற தூய தமிழ்ச்சொல்லை ஆங்கிலேயர்கள் கடன் வாங்கி கட்டமாரான் (catamaran)என்கிறார்கள்!

மரத்தைக் குடைந்து தோண்டி செய்யபடுப்வது தோணி.

ஓடுவதுபோல விரைந்து செல்வது ஓடம் .மீன்பிடிக்க பயன்படும்மரக்கலம் திமில்.
பன்றிபோல வடிவமுள்ள மரக்கலத்திற்கு பஃறி.

விலங்கு அல்லது பறவைமுகம் போன்ற கலம் அம்பி எனப்படும்.

'பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும்..'

என்னும் அடிகளை சிலப்பதிகாரத்தில் காணலாம்.

பரிசல் என்பது பிரம்பால ஆகிய வட்டமான கலம்,
காற்றின் இயக்கத்தால் செல்லும் பாய்கட்டிய கலம் படகு.

தண்ணீரைப் பிளந்து செல்லும் போர்க்கலம் நாவாய்.

கப்பல் வங்கம் ஆகிய சொற்கள் பெருங்கலத்தைக்குறிக்கும்.

நீரில் மூழ்கிச்செல்லும் கலம் நீர்மூழ்கிக்கப்பல்.

submarine சொல் பிற்காலத்தில் தோன்றியது.

தமிழ் மொழியே கடலாக இருக்க , அதனுள் புதைந்திருக்கும் சொல் எனும் முத்துக்கள் தான் எத்தனை எத்தனை!
மேலும் படிக்க... "தமிழ்க்கடல்!"

Sunday, February 14, 2010

”தேவதை”யைக் கண்டேன்!

மனம்கவரும் ஒரு மகளிர் இதழாக தேவதை , தமிழ்ப்பத்திரிகை உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது! வண்ணப்படங்களுடன் கண்ணையும் கருத்தையும் கவரும் தகவல்களுடன் இணையதள படைப்பாளிகளைப்பற்றி வெளி உலகுக்கு அடையாளம்காட்டி அறிமுகப்படுத்தும் தேவதையின் பணி சிறப்பானது. ஏனென்றால் இணையம் பக்கம் அனைவராலும் வர இயல்வதில்லை. பத்திரிகையை மட்டும் வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் இணையத்தின் தமிழ் ஆர்வலர்களைப்பற்றிய செய்தியை
கொண்டு சேர்க்கிறது தேவதை என்றால் அது மிகை இல்லை.















இன்றைய தேவதை(15.02.’10) இதழில் என்னைப்பற்றியும் வலைப்பூவினைப்பற்றியும் சிறப்பாகக்கூறி இருக்கும் தேவதைக்கு முதலில் என் நன்றி.

இனி உங்களிடன் தேவதை வருகிறாள் , நீங்களும் காணவேண்டுமென்று இங்கே அளித்திருக்கிறேன்!

















மேலும் படிக்க... "”தேவதை”யைக் கண்டேன்!"

Saturday, February 13, 2010

அழகாய் அவனே இருக்கின்றான்!

ஓர் அறிவிப்பு!

பாடல் குரல்பதிவிலும் வருகிறது!





காதலர்தின சிறப்புக்கவிதை!
***************************

அழகாய் அவனே இருக்கின்றான்
ஆதலால் மனதை அடைக்கின்றான்
ஆற்றுமணலில் அவன் நடந்துவந்தால்
ஊற்றுப்புனலாய் உள்ளம் பொங்கிடுமே!

அருவிவீழ்ச்சியில் தலைகொடுத்தே
அந்த அழகன் நிற்கும் கோலம்தான்
மருவித் துளைத்தென் மனத்துள்ளே
மயக்க அருவிதான் பொழிகின்றதே!

அங்காடித்தெரு வாசலிலே
அடிகள்மிதித்து அவன் நடக்கையிலே
இணைந்த என் இரு பாதஅடி
இழைந்தே போகவும் விழைகின்றதே!

தென்றல் சுகமாய் வீசுகையில்
தெள்ளிய நிலவு வானில்தெரிகையில்
நெஞ்சம் மட்டும் அலைபாயும்
நினைத்துநினைத்துத் தடுமாறும்!

என்னே இந்த ஏக்கமோ
என்னபெயர்தான் இதற்கோ?
முன்னே பின்னேகண்டதில்லை
இன்னமும் பெருக இதற்கேது எல்லை?

காதலென்றுதான் சொல்வீரோ
காமன் கணைதான் இதுவோ?
ஏதும அறிய இயலாமல்
மாது நான் மயங்கிக்கிடக்கின்றேன்!



(இந்தப்பாடலைப்பாடியவர் யார் எனக்கண்டுபிடிக்கறவங்களுக்கு அரைகிலோ மைசூர்பாக் இலவசம்:)
மேலும் படிக்க... "அழகாய் அவனே இருக்கின்றான்!"

Friday, February 05, 2010

அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!

இணையஎழுத்தாளர்களைப்பற்றிய கட்டுரை இம்மாதக்கலைமகள் பத்திரிகையில் பிரசுரமாகி உள்ளது. தொடர்ந்து இதில் பலரும் வர இருக்கிறார்கள்.
இப்போது உங்கள் பார்வைக்கு இங்கே அந்தக்கட்டுரை!








a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJqqFpVORjNfv-VZXEw6YhijJTx_zlKN7oFfQNiuZQX_Iksp1gd9B6VkgalQQGMPyhMgmYinA7_P7ZXRt66dD44QXSnn1KdQG2YV5GtajKPmThBtGEMBgN2FuMP5q6u4wwAHMaXA/s1600-h/page2.jpg">


a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiK59DeUdlOdI36rj9pG2ztO98qIsA6g3BFa8wKFLLE9pqahwXGcKN0FBNYYXKxNWjMS0-pxkC2yFUesgnN8V2dAGp5tmCoPYLaf-Ezqufmv6NZBfqWgpRsPfBPpmDgpS87KpxYnA/s1600-h/page3.jpg">







மேலும் படிக்க... "அம்பி, ரிஷான் ,துளசிடீச்சர் ,சுப்பையா சார், இந்தமாதம் கலைமகள் பத்திரிகையில்!"

Thursday, February 04, 2010

தமிழர் இசை!

/////கொஞ்சநாள்முன்னாடி மணற்கேணி அமைப்பும், சிங்கைபதிவர்கள் மற்றும் இணையதளமும் நடத்தின கருத்தாய்வுபோட்டிக்காக கஷ்டப்பட்டு இதை ஆராய்ந்து எழுதி அனுப்பினேன்.பரிசு கிடைச்சா சிங்கப்பூருக்கு அனுப்பறதா அறிவிப்பு கொடுத்திருந்தாங்க. உடனே .கனவுல முஸ்தபா போய் ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சேன்! பெரிய சிங்கப்பூர் விசிறி வாங்கி ஹால் சுவரில் மாட்டி அழகுபார்த்தேன்! சிங்கை நண்பர்களைசந்தித்து மைசூர்பாக்கெல்லாம் கொடுத்தேன். கனவு நனவாகவே இல்லை! ஆமாம்,
போட்டியே நடக்கலன்னு அப்புறமா தெரிஞ்சது); ’இனிபொறுப்பதில்லை பெண்ணே’ என்று மனசு குரல்கொடுக்கவும் இப்போ இதை இங்கே இட்டுவிட்டேன்!/////

**********************************************************************





இசை என்றாலே இனிமை எனலாமோ? செவிவழிபுகுந்து மனதிற்கு மகிழ்ச்சியைத்தரும் ஓர் ஒலிதான் இசை என்பது!

இசை என்ற சொல்லுக்கு இசையவைப்பது என்று பொருள் இருக்கிறது.

ஒழுங்கான கட்டுபடுத்தப்பட்ட இனிய ஒலியை இசை என்கிறோம்.இனிய இசைஒலியை நாதம் என்று சொல்கிறோம்.

பிறப்புமுதல் இறப்புவரை இசை நம்மோடேயே பயணிக்கிறது.


தாலாட்டாக ஆரம்பித்து இறப்பில் ஒப்பாரியாக இசை விரியும் பரிமாணங்கள் அடர்த்தியானது. தமிழரின் வாழ்நாட்களில் மகிழ்ச்சியைக்கொண்டாட இசை நிகழ்ச்சிகள் நடத்துவதும் அதனைப்பலர் கேட்பதும் இன்றும் தொடர்கிறது.

அகம்புறம் இரண்டினையும் ஐக்கியப்படுத்தி ஒருமித்த தன்மையில் இவற்றில் ஊடுருவி உள்ளம், உடல் இரண்டினுக்கும் விவரிக்க இயலாத சுகமான அனுபவத்தை வழங்கக்கூடியது இசை என்றால் அதை மறுப்பதற்கில்லை.

தமிழ்மொழியை இயல், இசை, நாடகம் என்று பாகுபடுத்திக்கூறுவது தமிழ்மொழியில் தவிர வேறெந்த மொழியிலும் இல்லாத புதுமையாகும்.

பரதமுனிவர்,தமது நாட்டிய சாத்திரம் என்னும் நூலில் தென்னாட்டுமக்கள் பாட்டிலும் பல இசைக்கருவிகள் வாசிப்பதிலும், கூத்திலும் மிக்கதிறம் வாய்ந்தவர்கள் என்றுகுறிப்பிட்டுள்ளார்.

அவர்குறிப்பிட்டிருப்பது பண்டைய தமிழ் இசையே என்பதும் பண்டையதமிழிசையே இன்றைய கர்னாடக சங்கீதத்திற்கு தாயாகத் திகழ்ந்தது எனபதும் அனைத்து ஆய்வாளர்களின் ஒருமித்தக் கருத்தாகும்.

தொல்காப்பியத்தில் மக்கள்தம் தொழிலைச்செய்ய உதவும் கருவி இசை ஒன்றைப், ‘பறை’ என்றும் ,பொழுதுபோக்கிற்கான கருவி இசையை’ யாழ் ’என்றும் குறிப்பிடுகிறார்.
.
எட்டுத்தொகை சேர்ந்த பரிபாடல் பண்ணுடன்கூடிய,70இசைப்பாடல்களைக்
கொண்ட ஒருதொகுப்பாகும் ஆனால் நமக்கு 20பாடல்களே கிடைத்திருக்கின்றன.

எட்டுத்தொகையைச்சேர்ந்த அகநானுற்றில் பெண் ஒருத்தி,யாழெடுத்துக்,குறிஞ்சிப்பண் இசைத்து தினை உண்ன வந்த யானையைத் தூங்கும்படி செய்துவிட்டாள் என்ற செய்தி கிடைக்கிறது.

அக்கால மன்னர்கள் இசையைஆதரித்ததை இப்பாடல்களில் அறியமுடிகிறது. மூவேந்தர்களின் அவையில் தமிழ் இசை பெரிதும் போற்றப்பட்டிருக்கிறது!

சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் யாழ் ஆசிரியன் மற்றும்குழல ஆசிரியன் ஆகியோரின் இலக்கணங்களை சிறப்பாக எடுதுரைக்கிறார். புலவரே இசை மற்றும்நாட்டியகக்லை நுட்பங்களில் தேறியவர் என்பதால் தமிழர் இசை பற்றிய அறிவு நிரம்பப்பெற்றவராய் இருந்தார்.

.ஆய்ச்சியர் குரவையில் ஏழுமகளிர் ஏழு இசையின் பெயர்தாங்கி இசைஇலக்கணத்தை விளக்கும் வகையில் நின்று ஆடும்முறை அருமையாக விளக்கப்பட்டுள்ளது.

இன்னும் திவாகரம் பிங்கலம் ஆகிய நிகண்டுகளிலிருந்தும் பண்டைத்தமிழைபற்றிய பலசெய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது
.
103பண்களின் பெயர்கள் தமிழர் இசையில் விளங்கியதை சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளன

,கிபி3ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி6ஆம்நூறாண்டுவரை தமிழக வரலாற்றுக்கும் தமிழ் இசைக்கும் இருண்டகாலம் என்றுகூறப்படுகிறது.

கிபிஆறாம் நூற்றாண்டு சமணர்காலத்தில்,சமணர் இசையை வெறுத்ததால் பல இசைநூலக்ள் அழிந்து போய்விட்டன.

கிபிஏழு, எட்டு, ஒன்பதாம்நூற்றாண்டுகளில் ,தேவார திவ்யபிரபந்தங்கள் தமிழில் தோன்றின.


ஆழ்வார்களும், நாய்ன்மார்களும்பண்ணோடு பாடிய சிறந்த தமிழ்ப்பாடல்கள், தமிழுக்குக்கிடைத்த அரும் புதையல்கள்!


பாடல் தாய் மொழியில் இருக்கும்போது அதை நாம் ஆழ்மனத்தோடு உணர்ந்து அனுபவிக்கிறோம். நாவுக்கரசரின் ‘தூக்கிய திருவடி எடுத்த பொற்பாதம்’ எனும் பாடலுக்கு சைவ சித்தாந்தத்தில் பலவித அர்த்தங்கள் உண்டு. மொழியிலிருந்து இசையைப்பிரிக்கமுடியாததால்தான் புல்லாங்குழலில் ‘’தீராதவிளையாட்டுப்பிள்ளை’; என்று வாசித்தால் நமது மனம் கண்ணனின் குழந்தை விளையாட்டை கண்முன் காண ஆரம்பித்துவிடுகிறது,



மணிமேகலை சீவகசிந்தாம்ணி பெரியபுராணம திருவிளையாடற் புராணம் ஆகிய நூல்களில் பல இசைக்கருத்துக்கள் காணப்படுகின்றன.

தமிழர்இசை எனும்போது தமிழ்மொழிமட்டுமல்ல தமிழ்ப்பண்பாட்டினையும் சேர்த்துதான் நாம் காணவேண்டி உள்ளது.

மொழிலியிலிருந்து,இசையைப்பிரிக்கமுடியாது ,அதனால்தான் இசைத்தமிழ் என்கிறோம்.


நான்குவகை நிலங்களாக இயற்கையைப் பிரித்தவர் தமிழர். நான்கிற்கும் கருப்பொருள், உரியபொருள் வகுத்தது நம் மரபு.

நால்வகை நிலங்களுக்குமான நான்குபெரும்பண்கள் உருவானது. பண்களே,காலப்போக்கில் ராகங்களாக வளர்ச்சியடைந்தன பண்ணென்பது பாடலின் இசைவடிவம் அதை’மெட்டு’என்றும்கூறலாம்

நான்குநிலத்திற்கும் உரிய பெரும்பண்ணை ’பாலை’ என்கிறோம்
ஒரு பழையபண்தான் இன்று முக்கிய ராகமாகத் திகழ்கிறது

.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர்குரவை பாடலில் ’முல்லைத்தீம்பாணி ’என்று குறிப்பிடப்பட்டுள்ளது

ச ரி க ப த இதன் சுரம்(ஸ்வரம்)

இதுதான், இன்றையமோகன ராகம்.திரைப்படப்பாடல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் ராகம்..ஆம், இதுவேமோகனம்! சுகமான ராகம் இது!


தமிழர் இசையானது, அடிப்படையில் இன்னிசை( மெலொடி) யானது!அதுதான் நமக்கு அடிபடையானசுவை !


15ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் திருப்புகழ்பாடல்களில், பல,தாள எண்ணிக்கைகளைப் பயன்படுத்திஅமைத்தார்.

18ஆம் நூற்றாண்டில் அருணாசலக்கவிராயர்.’இராம நாடகம்’ என்னும இசைநாடகத்தைதமிழில் இயற்றினார்.

திரிகூடராசப்பகவிராயர்,’குற்றாலக்குறவஞ்சி ’என்னும் அருமையான இசைநாடகத்தை இயற்றினார்.



19ஆம் நூற்றாண்டில் கவிகுஞ்ச்ரபாதி,அண்ணாமலைரெட்டியார்,((காவடிச்சிந்தின் தந்தை)
ராமலிங்க அடிகளார்,பாரதியார் பாரதிதாசன் போன்றவர்களின்பாடல்கள்,தமிழரின் இசைஎனும் பாரம்பரியத்திற்கு வலிமையும் பெருமையும் சேர்த்த பாடல்கள் என்பதில் ஐயமில்லை.

ஆப்ரஹாம்பண்டிதர் சேக்கிழாருக்குப்பின் தமிழர் இசைக்கு ஆக்கம் தந்தவர்’

இவரது அரியமுயற்சியால் ’கருணாமிர்தசாகரம்’ என்னும் இசைத்தமிழ்நூல்நமக்குக்கிடைககப்பெற்றது.


முதன்முதலாகத்தமிழில் கீதங்களையும் வர்ணங்களையும் இயற்றியதுமட்டுமில்லாமல் எல்லாவற்றையும்
மாணவமாணவிகளுக்கும் கற்பிக்க வேண்டுமென்றார்.


விபுலானந்த அடிகள் பல ஆண்டுகாலம் இடைவிடாது ஆராய்ந்து ’யாழ்நூல்’என்ற அரிய நூலை இயற்றினார்.
பண்டைத்தமிழர் கண்டுணர்ந்த யாழினை மீண்டும் தமிழ்கத்துக்கு வழங்கிய பெருமை அடிகளாரையே சேரும் . எஸ்.ராமனாதனின் ;சிலப்பதிகார ’இசை நுணுக்க விளக்கம்’ சாம்பமூர்த்தி அய்யர் அவர்களின் ’தென்னிந்திய இசை’

,’ தமிழிசை வளம், தமிழிசை இயல், தமிழ் இசைக்களஞ்சியம்’ என்று வி.ப.க. சுந்தரம் அவர்கள் எழுதிய மூன்று நூல்கள் டாக்டர் சேலம் ஜெயலட்சுமி எழுதி உள்ள’சிலப்பதிகாரத்தில் இசைச்செய்திகள்’ இப்படிப்பல நூல்கள் தமிழர் இசை பற்றிய பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.

லட்சுமணப்பிள்ளை பொன்னையா பிள்ளை போன்றோர் தமிழர் இசைக்கு பெரும் சேவைபுரிநது மறைந்தனர்.

முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்கள் தமிழரின் இசையில் பெரும் பங்குவகித்தது. இன்னும் பலரது பங்களிப்பு உள்ளது ..இங்கு இட்ட பட்டியல் குறைவே.

தமிழர் இசையானது, தமிழ்போலவே சிறப்பாக இன்றும் திகழ்கிறது.!


!
மேலும் படிக்க... "தமிழர் இசை!"

Saturday, January 30, 2010

தாமரைக்கன்னங்கள்!




பூக்களிலே பெண்கள் தலையில் சூட முடியாத மலர் தாமரை. அதன் வடிவம் மகா அழகு.
சின்ன வயதிலிருந்தே நம்மில் பலருக்கு தாமரைப்பூவினை வரைவது பிடிக்கும். இதழ் விரிந்து மலர்ந்த தாமரைக்கோலங்கள் கண்ணைக் கவர்ந்து விடும்.



தேவ மலர் என்று தாமரையை சொல்கிறார்கள். அதன் இளம் சிவப்பு நிறம் மென்மையான ஆனால் இதயத்தை ஊடுருவும் நறுமணம் அடுக்கடுக்கான அதன் இதழ்கள்
நீர்நிலையில்மட்டுமே காணும் அதன் தன்மை நீரில்வாழ்ந்தாலும் தனது இலைகளின் மீது அதனை பரவ அனுமதிக்காத ஆளுமை ...இதெல்லாம் தாமரையின் சிறப்புகள்.

வள்ளுவர் கூறுவாரே "வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்க்கு உள்ளத்தனையது உயர்வு" என்று. தாமரைமலரை மனதில் நினைத்தே அவர் இப்படிக்கூறி இருக்க வேண்டும். உள்ளத்தைப்பொறுத்தே உயர்வு என்பதை விளக்க உள்ளத்துக்கே உவமையான தாமரையைக் கையில் எடுத்தார் போலும்! தாமரையின் உயரத்தை தண்ணீரே நிர்ணயிக்கிறது. எனவே தண்ணீரின் உயரம் தாமரையின் உயரம், அதுபோல நம் எண்ணத்தின் உயரமே நம் உயரம் என்கிறார் குறளில்.

பெண்கள் மலர் போன்றவர்கள் என்பதால் தாமரை மலரை உவமைக்கு சொல்வார்கள். தாமரை என்ற பெயர் பெண்ணுக்கு உண்டு.அதன் சம்ஸ்க்ருத வடிவச் சொல் பத்மா நளினி சரோஜா பங்கஜம் எனப் பல,...தாமரைமலர்மீது திருமகள் அமர்ந்திருப்பதால் தாமரை தெய்வமலராகிறது. தாமரைக்கு மருத்துவ குணமும் உண்டு.


கம்பராமாயணத்தில் பெண்கள் ராமனை ,’தாமரைக் கண்ணினால் நோக்கினார்கள் ’என்ற இடம் வருவதை ஒருவர் சொற்பொழிவில் சொல்லும்போது ரசிகர் ஒருவர் குறுக்கிட்டாராம்.

"அந்நிய ஆடவனை பெண் விழி திறந்து பார்க்கமுடியுமா என்ன? நாணம் தடுக்காதோ? பாதி திறந்தும் பாதி மூடியும்தானே பார்க்க இயலும்?" என்று கேட்டாராம்.

சொற்பொழிவாளரும் சட்டென தயங்காமல்,"அதைத்தான்
நானும் சொல்ல வந்தேன்...அதற்குள் நீங்கள் அவசரப்பட்டுவிட்டீர்களே! பெண்கள் தாம்+அரைக்கண்ணால்நோக்கினார்கள்" என்று சமாளித்தாராம்!! தாமரை பாதி மலர்ந்தாலும் அதுவும் வசீகரமானது தானே?

தாமரைக்கன்னங்கள் என்று ஆரம்பிக்கும் பழைய சினிமா பாடல் உண்டு. (தாமரை இடம் பெறும் வேறு திரைப்பாடல்கள் ஏராளமாய் இருக்கும் இல்லையா?)அதன் இளம் சிவப்பு நிறம் பெண்களின் கன்னத்தில் இருந்தால் அது ஒரு தனி கவர்ச்சிதான்!!
மேலும் படிக்க... "தாமரைக்கன்னங்கள்!"

Thursday, January 14, 2010

மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)

வீமனப்போல் மிகுந்த பலம் பெற்றாலும்

காமனைப்போலக் கவினுடலம் உற்றாலும்

வில்விசயன் போலவே வெற்றியினைக்கொண்டாலும்

கல்விச்சிறப்பினில் கம்பனைப்போலானாலும்

குற்றமிலாச்செல்வம் குபேரன்போல் சேர்த்தாலும்

எற்றைக்கும் இந்திரன்போல் ஏற்றமுற வாழ்ந்தாலும்

நெஞ்சில் சிறிதும் செருக்கடைந்து நில்லாமல்

அஞ்சிக்கடல்போல் அடக்கமாய் வாழ்ந்திடுக.

கற்றுயர்ந்த சான்றோரைக்கண்டு வணங்கிடுக

ம்ற்றன்னார் சொல்லை மதித்து நட்ந்திடுக

அன்புற்றடியவரை ஆண்டவனாய் எண்ணிடுக

பின்புற்றவர்க்குப் பெருந்தொண்டு செய்திடுக

எல்லோரும் இன்புறவே என்றென்றும் எண்ணிடுக

நல்லோரை எந்நாளும் நண்பராய்க் கொண்டிடுக

பாரோருக் கெல்லாம் பலனும் அளிக்கின்ற

சீரார் திருவரங்கத் தெய்வத்தை சிந்தித்து

நாவார நாளெல்லாம் போற்றிடுக நல்லமணப்

பூவாலே என்றென்றும் பூசிக்க பூவுலகீர்

இங்கிந் நெறியில் இன்புறு வீர்க்குச்

செங்கண் திருமால் அருளால்

மங்கல வாழ்க்கை மணத்துடன் மலருமே!

********************************************

(மரபுக்கவிதை---மருட்பா வியனிலை வகையைச்சேர்ந்தது)
மேலும் படிக்க... "மணத்துடன் மலருமே!(உரையாடல் கவிதைப்போட்டி)"

Thursday, January 07, 2010

நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!

ஒருவாரமாய் ஆனந்தவிகடன் கல்கி குமுதம் இன்னபிற பத்திரிகைகள் என்று எதுவுமே படிக்காமல், இணையக்குழுக்களில் கவிதை எழுதி துன்புறுத்தாமல், சாட்டில் யாருடனும் அதிகம் அரட்டை அடிக்காமல் ஆழ்வார்களைத்தேடினேன் ...அரங்கநகர்ப்பெருமை மிகும் கதைளைப்படித்து பரணிலிருந்த பழையஆன்மீகபுத்தகங்களை ஹச் என்றுதும்மிக்கொண்டே தூசிதட்டிப்பிரிச்சிக் குறிப்பெடுத்து ஊர் உலகத்துகெல்லாம் போன் ,மெயில் என்று தகவல் சொல்லி ஆர்வமாய் காத்திருந்தேன்.

”என்னது! சங்கரா டிவில் ஸ்ரீரங்கத்திலிருந்து வரும் ராப்பத்து உற்சவ நேரிடை ஒளிபரப்புக்கு நீ மூணுமணிநேரம் வர்ணணை செய்யப்போறியா? பாவம் அரங்கன்!” என்று கிண்டல் செய்தாள் ஆத்ம சிநேகிதி!

”வாவ் க்ரேட்! பட் பாத்துகவனமா பேசு , செல்போனை ஆஃப் பண்ணி வச்சிட்டு மைக்கிலிருந்து கொஞ்சம் எட்டவே இரு ..சில டைம் லைவ் ல பேசறவங்க மூச்சுக் காத்தெல்லாம் காதுல விழும் அதை தவிர்க்கணும் அப்றோம்குறிப்பு நோட்டை தவறவிட்டுடாதே, ” என்றார் முன் ஜாக்கிரதை முத்தண்ணா(என் பதி).


”சங்கரா டிவியா அதெல்லாம் இங்க எங்களுக்கு வராதே அப்பாடி தப்பிச்சேன்!”...உடன்பிறப்பு!



கோடிவீட்டு தாத்தா என் நாவல்களைப்படித்துபலமுறை கண்கலங்கி(எதுக்கோ?:) வாழ்த்துவார் அவரிடம் விஷயம் சொல்லி ஆசிர்வாதம் வாங்கப்போனேன்.

பிடி அட்சதையைக் கையிலெடுத்துதலையில் போட்டவர் அப்படியே குனிந்த என் சிரசை நிமிர்ந்தவிடாமல் கையைஅழுத்தி வைத்து தன் கண்களை மூடிக்கொண்டு ஏதோ வாழ்த்து சுலோகம் சொல்ல ஆரம்பித்தார் ...இதோமுடிச்சிடுவார் அதோமுடிச்சிடுவார்னு க‌ஷ்டப்பட்டு குனிஞ்சிட்டே இருந்தேன் அப்படிஇப்படி 6நிமிஷம் கழிச்சி 'தீஈஈர்ர்க்கசுமங்கலிபவ' ன்னு முடிச்சி கண்ணைத்திறந்தார் அப்பாடி இந்த் ஒருவார்தையோட சொல்லி முதல் அரை வினாடில என்னை அனுப்பி இருக்கலாமேன்னு நினச்சாலும்” சுலோகம் திவ்யமா இருக்கு”ன்னு சொல்லி வந்தேன்.



ராப்பத்துவிழாவின் கடைசி நாளில் பேசவேண்டியதில் பிரதானமாய் சொல்லவேண்டியது நம்மாழ்வாரின் கீர்த்திகள் அவரது மோட்சப்பெருமை வரலாறு முதலியன.


நம்மாழ்வார் மோட்சம் என்பது ஸ்ரீரங்கத்தில் நடுஇரவுக்குபிறகு ஆரம்பமாகும் நிகழ்ச்சி .அதனால் ஒலிப்பதிவு. இப்படி நடு நிசியில் செய்யவேண்டியதாகிப்போனது.

மாலை 6மணிவரை ஒழுங்காக இருந்த என் திருவாய்க்கு என்ன ஆச்சொ சட்டென நாக்கெல்லாம் குடிகுட்டிக்கொப்பளங்கள். சின்ன சிவப்பு மாதுளைமுத்துக்களாய் வந்து ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் ஆகும்போல ஆகிவிட்டது. வீடல் எல்லார்கிட்டயும் ஜாடைலபேச ஆரம்பிச்சேன்.(அப்பாடா என்று என் கணவர் உள்ளூற மகிழ்ந்திருக்கலாம் யார் கண்டா?!)

. ஐய்யோ எப்படிஅங்கே போய் சொற்பொழிவாற்றுவது? இதுக்குத்தான் அதிகமா ஆசைப்படக்கூடாதுஙக்றது ஒழுங்கா அப்பப்போ ஏதோ அஞ்சுபத்துநிமிஷம் கால்மணி என்று விளம்பரப்படத்தோடு இருந்திருக்கலாம் குறும்படமும் அதிகபட்சம் நாப்பது நிமிஷம்தான் இப்படி ரெண்டரைமணிநேர நிகழ்ச்சிக்கு வந்து சொல்றீங்களான்னு கேட்டதும் பறந்திட்டு மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிவிட்டு இந்த அரங்கப்ரியாக்கு வந்த சோதனையைப்பாருங்க!

ரங்கா உனக்கு சொல் அலங்காரம் செய்யகூட நான் லாயக்கில்லைன்னு என்னை இப்படிசெய்துட்டியா என்று மனம் வருந்தினேன்

ஆனாலும்இடையில் மின் தமிழ் நம்பிக்கைகுழும உறுப்பினரும் குடும்ப நண்பருமானமோகனரங்கனிடமும் பிரபல ஆன்மீகப்பதிவர் கேஆரெஸிடமும் அன்புத்தம்பிராகவ்விடமும் நம்மாழ்வார்பற்றிய அதிகப்படி தகவல்களை வாய் சரி இல்லைன்னா என்ன காது நன்றாக இருக்கென்று போனில் பேசி அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டேன்.

வாய்ப்புண் வலி அதிகரித்தது.

ஆன்லைனில் சாட்டில் வந்த முத்தமிழ் உறுப்பினரும் குடும்ப நண்பருமானடாக்டர் சங்கர்குமாரிடம், இந்தப்பெண்லைன்(ச்சும்மா ஒருபேச்சுக்கு பெண்சிங்கம்!) ”டாக்டர் டாக்டர்!வெளிலபோக அவகாசமில்லைசீக்கிரம இதுக்கு ஒருவழி சொல்லுங்கனேன் ” என்று கேட்டேன்.

அவர் வென்னீரில் உப்புபோட்டு வாயைக்கொப்பளிக்கச்சொன்னார் பிறகு டிஸ்ப்ரின் மாத்திரை வைத்தியம் சொன்னார். அது என் ஏராள வாய்ப்புண்ணின் நிலைமையை 5% காப்பாற்றியது.

அக்கம்பக்கம் மாமிகள் சொன்னார்கள் இப்படி...

“நல்லெண்னை விட்டுக்கோ தேங்காண்ணை விட்டுக்கோ வாய்ல”

அதையும் செய்தேன் எண்ணைதான் வேஸ்ட் ஆனது

:”நெய் அல்லது தேன் தடவிக்கோ”

தடவினதை ருசித்து சாப்பிட்டுவிட்டேன்!

”தேங்காயை மசிய அரைச்சி பாலெடுத்து வாய்ல விட்டு சுழட்டினாப்ல வச்சிக்கோ”

அது சரி .....தேங்கா உடச்சி அரைச்சி பாலெடுத்து..எங்க நேரம்னு அட்வைஸ் பண்ணினவஙக்ளுக்கு மொழி படத்து ஜோதிகாவா மாறி ஜாடைல நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிட்டேன்!

“ ழையோ ழெப்படி பேயபோயேனோ?’என்று வாய்குளறினதை நானே சகிக்கமுடியாமல்கேட்டேன்.

மணி 8 45

வாசலில் சங்கரா டிவி என்றுமூணுபக்கமும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு ஜென் கார் ஜம் என்று வந்துவிட்டது அக்கம்பக்கம் எல்லாரும் வேடிக்கைப்பார்க்க ஏறினேன்.


ரெகார்டிங் ரூமில் பாதிபேர் கன்னடக்காரர்கள்.” ராப்பத்து ஏனு பகல்பத்து ஏனு?” என்று ஏற்கனவே பேசத்தவித்த என் வாயைக்கிண்டினார்கள். “அப்றோமா சொல்றேன்” என்று மட்டும் சொல்லவும் அவர்கள்”ஆமா இப்பவே நீஙக் ரொம்ப பேசினா அப்றோம் வாய்ஸ் கட் ஆகிடும் .நோ ப்ராப்ளம்” என்றார்கள் பாவம் அவர்களுக்கு நான் வாய்ஸ்லெஸ் உமன் என்று தெரிய வாய்ப்பில்லைதான்!

மணி 12வரை ஸ்ரீரங்கமிருந்து நேரடி ஒளிபரப்பு கனெக்‌ஷன் சங்கராடிவிக்காரர்களுக்குவரவே இல்லைஏதோ சிக்கல் என்றார்கள்.


. ஒருமணிக்குஎனக்கு தூக்கம் கண்களை இறுக மூடவைக்க, அப்படியே நர்ற்காலியில்சாய்ந்து விட்டேன் !திடீரென ”மேடம் வந்தாச்சு வந்தாச்சு லைவ் டெலிகாஸ்ட்! சக்ஸஸ் சக்ஸஸ்!”என்றது ஒரு குரல்!

அப்பாடி மணி என்ன என்றுபார்த்தால் இரண்டே கால்..சரிதான் இன்னிக்குத்தான வைகுண்ட ஏகாதசிபோல் இருக்குனு சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் எனது வர்ணணையை. என்ன அதிசியம்! தூங்கி எழுந்ததும் கொஞ்சம் வாய்ப்புண் சரியாகி நாக்கு புரண்டு கொடுக்க ஆரம்பித்தது!

எல்லாம் ரெடிபண்ணி குறிப்பு எடுத்து வைச்சதையும் கொஞ்சம் சொந்த சரக்கும் சேர்த்து அந்த சிற்றஞ்சிறுகாலைல நான் அந்த லைவ் ரிலேயில் சொன்னதை யாரும் பார்த்திருக்கலேன்னாலும் கேட்லைனாலும்அரங்கன் கண்டிருப்பார்! கேட்டிருப்பார்!

இரண்டரைமணிநேரம் முடித்ததும் அந்த ஒலிப்பதிவு அறையில் எல்லாரும்” அருமை! ”எனப் புன்னகைத்தார்கள் ,நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன்! ஆனால் அது ’புண்’னகை’ என யார் அறிவார்கள்?!
மேலும் படிக்க... "நானும் , சங்கரா தொலைக்காட்சியும்!"

Tuesday, November 10, 2009

கலங்குகிறேன்.

பாலில்நீரைக்கலப்படம் செய்த
காபியை காலையில் அருந்திவிட்டு
கலப்படம் பற்றிக் கவிதைஎழுத
கணிணியைத்திறந்தால்
கணிணிக்குள்ளே
வைரஸின் கலப்படம்


’அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருப்பது கலப்படம்’
என்று சொல்ல வரும்போது
கண்கள் கலங்குகின்றன

காரணம்..
காற்றில்வரும் தூசியிலும்
கரியமலவாயுக்கலப்படம்

சுவாசிக்கும் மூச்சிலும்
சுற்றுபுறசூழலின்
நச்சுப்புகைக்காற்றின் கலப்பு



உயிரையே பலிவாங்கும்
கலப்பட மருந்துகள்
நோயைவிட மனித உடம்பை
மேலும் பாதிக்கும்

சிமெண்டில் கலப்படமாம்
சரிந்துவிழுகிறது கட்டியசுவர்கள்
மிளகுக்கு நடுவே பப்பாளிவிதையாம்
மிளகாய்த்தூளில் செங்கல்தூளாம்
உணவுப்பொருளில் கலப்படம்
எப்படிச் செய்வதென்பது தேர்ந்த
வியாபாரிகளுக்கு மனப்பாடம்

இன்னும் இன்னும் இருக்கிறது
கேட்கக்கேட்க மனம் பதறுகிறது
எல்லா உரிமையும் ஜனநாயகநாட்டில்
இருக்கின்றது என்பதினால்
கலப்பட உரிமையை பட்டாபோட்டு
களிக்கின்றது ஒருகூட்டம்.

ஆயகலைகள் இப்போது 65
கலப்படம் கடைசியாய் புகுந்த
கைவந்தகலையாய் ஆகியது.
இந்த அக்கிரமங்களை
தமிழில் எழுதவந்தால்
அங்கும் கலப்படம ஆடுகிறது
சென்னைத்தமிழாம் நெல்லைத்தமிழாம்
தஞ்சைத்தமிழாம் அதெல்லாம் அமிழ்தாம்!

தொலைக்காட்சிகென்று
வெள்ளைக்காரன்மொழியொடுகலந்த
ஒரு தொல்லைத்தமிழைக்
கேட்கவும் கொடுமை.

இந்திரலோகத்து அமுதமாயினும்
கலப்படமின்றி
ஏதும் நம்கைக்குவராத நிலமை
எனும்போது தமிழ் என்ன செய்யும் பாவம்!



பாலில் நீரினை
பகுத்தறிந்த
அன்னப்பறவையையும்
அடியோடு காணோம்
நளன் தமயந்திக்கு
தூதுசென்றதில்
சோர்ந்து ஓய்வு
எடுக்கின்றதோ?

சாராயத்தில் கலப்படமாம்
சாவுஎண்ணிக்கை சொல்கிறது

கலப்படம் என்பதை
ஜாதிகள்மலிந்த நம்தேசத்தில்காணும்
கலப்புத்திருமணத்தில் வரவேற்போம்

பொன்னுடன் செம்பைசேர்த்தால்தான்
மின்னும நகைகள் உருவாகும்

புதுப்புதுவர்ணங்களின்கலவை
ஓவியக்கலைதரும் பிரமிப்பு

ஆணும்பெண்ணும் கலப்பதில்
அதிசியத்தக்கமனிதப்படைப்பு

ஆயின்
நோய்தீர்க்கும் மருந்தில்
குழந்தைஉணவில்
கலப்படம் செய்யும்கயவர்களை
விரல்நகம்போல்
வெட்டி எறியவேண்டும்
இல்லாவிடில் நம்
விரல்களே பறிபோய்விடும்.










--
மேலும் படிக்க... "கலங்குகிறேன்."

Tuesday, November 03, 2009

உள்ளம் கவர் இல்லம்!



”அழகினைத்தேடி உலகம் முழுவதும் திரிந்தேன் என் வீட்டுவாசலில் இருந்த புல்லின் பனித்துளியில் பிரபஞ்சத்தை தரிசிக்கத்தவறிவிட்டேன் ” என்கிறார் தாகூர்.

ஒவ்வொருமனிதனுக்கும் மகிழ்ச்சி அவனுடைய வீட்டின் மையத்திலிருந்தே ஆரம்பமாகிறது. எங்கு சென்றாலும் வீடு திரும்பும்பொழுது ஏற்படும் உற்சாகம் அளவில்லாதது

வீட்டை ஒவ்வொருக்கணமும் நேசிக்கும் மனிதர்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் நேசிக்கும் ரசனைகொண்ட மாந்தர்களாக இருக்கின்றனர்.

ஒருவன் உலகளாவ ஓங்கி உயர்ந்து நின்றுதன் புகழ்க்கிளைகளை பரப்பினாலும் அவன் கால்கள் வேரூன்றி நிற்பது அவன வீட்டில்தான்.


உறவுப்பிரியங்களை அடையாளம் காட்டும் வீடு

இளமை முதல்முதுமைவரை நமது அந்தரங்கம் அனைத்தையும் கண்டுகொண்டிருப்பதுவீடு. நமக்கான எல்லாவற்றையும் சுமக்கும்வீடு வெறும் சுவர்களால் கட்டப்படது அல்ல , அங்கு அன்பிற்குரியவர்களின் சுவாசம் நிறைந்திருக்கிறது ! அது இளைப்பாற அமரும் மர நிழல்! விருப்பம் போல சிற்குவிரித்துப்பறக்க அகாயம் ! இயலாமையின் தோல்வி சறுக்கல்களில் கீழேவிழும்போதெல்லாம் நம்மை ஏந்திக்கொள்ளும் அன்புக்கரங்களைக் கொண்டது வீடென்பது.

வெளி உலகில் எத்தனையோ சாதனைகள் புரிந்தாலும் வெற்றிவாகைகளை சூடிக்கொண்டாலும் உலாசென்ற தேர் நிலைக்கு வருவது போல முடிவில் மனிதன் விட்டிற்கே திரும்புகின்றான்.

மகிழ்ச்சியுடனோ கோபத்துடனோ விருப்பமுடனோ வெறுப்புடனோ எப்படியாயினும் திரும்பும் நம்மை ஏற்றுக்கொள்ளும் வீடு கடவுளின் கருணைபோன்றது.

’என்வீடுமிகச் சிறியவீடு ஆனாலும்
வீடுதிரும்ப விரும்புகிறேன்
ஒவ்வொருவீடும்
நிரந்தரச்சூரியனை
ஜன்னல்வழியே அழைக்கிறது
படியில் ஏறியதும்
பயங்கள் மறையும்
பின்கதவைத்
திறந்துபார்க்கிறேன்
வீட்டிற்கு அப்பால்
வேறு எதுவும் இல்லை’

என்கிறார்

தேவதச்சன் தன்கவிதை ஒன்றில்.



இல்லறம்துறந்து கானகம் செல்லும் துறவிகளுக்கும் ஆகாயமே கூரையாய் சுவர்களில்லா வீடாக இருந்திருக்கவேண்டும்.

வாழ்க்கை எந்த ஒருஇடத்திலும் நின்றுவிடப்போவதில்லை அது ஒரு பிரும்மாணட் ஊர்வலம் ஊர்வலத்தின் உயிர்நாடியாய் வீடுகளும் மனிதர்களும்.

வீடுகளில் நாம் தங்குகிறோமோ இலையோ சிலவீடுகள் நம் மனதில் தங்கிவிடுகின்றன


.


ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பதன் பொருள் பல்பரிமாணமுடையது. புலம்பெயர்ந்த புகலிடங்களில் தங்களைப் பொருத்திக்கொண்டவர்களுக்கு சிக்கல்கள் இல்லை. . ‘எனது வீடு எங்கோ தொலைவில் திரும்பவியலாத தேசத்தில் இருக்கிறது’என்று வருந்தும் அகதிகளாய் இருப்பவர்களின் வீடு தரையில் இல்லை. அது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஈழத்திற்குள்ளேயே புலம்பெயர்க்கப்பட்டு அலைக்கழிபவர்களின், முகாம்களில் இருப்பவர்களின் வீடுகளோ கல்லறைகளாகவோ மாற்றப்பட்டுவிட்டன. கூரை, சுவர்கள், வாசல், முற்றம் தோட்டம், பூச்செடி, கிணறு, பூனைக்குட்டி முதலியன கனவாய்ப்பழங்கதையாய் போய் தவிக்கும் அவர்களின் வாழ்வு மீள்வது என்று என்ற கேள்வி நமக்கு வதைத்துக்கொண்டே இருக்கிறது


உணர்ந்திருக்கிறீர்களா நீண்டநாள் கழித்து உங்கள் வீட்டுக்குச்செல்லும் போது வீதிமுனையிலேயே கால்களோடுமனமும் வேகமாய் நகர்வதை? பலநேரங்களில் வெளிதேசங்களிலிருந்து வீடுவந்து திரும்பும் போது வராமலேயே இருந்திருக்கலாம் என்று சிலருக்குத்தோன்றிவிடுவதுண்டு. வந்து மகிழ்ந்து களித்த சில நாட்களின் நினைவுநெடியின் தாக்கம் கொடுமையானது.





கால வெளிகளில் திரிந்தலைந்தபின் வீடு திரும்ப
என்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் வீடு
தன் அறைகளோடும் வாசத்தோடும்

என் அலைதல் ஒவ்வொன்றும்
வீட்டை மையப்படுத்தியே இருந்திருக்கிறது
ஒரு நாளைக்கு 56 தடவைகள் வீட்டைப் பற்றி நினைக்கிறேன்
பதினோரு முறை வெளியிலிருந்து வீட்டிற்குள் பிரவேசிக்கிறேன்
சதாசர்வ காலமும்
மூடிக்கிடக்கும் கதவைத் திறக்கும்போது கேட்கும் ஒலிகள்
என் காதில் ஒலித்துகொண்டே இருக்கின்றன
வீட்டுக்குள் தொங்கும் சட்டைகளோடு என் நினைவுகளும் தொங்க
வெளியே வெற்றுடலாய் அலைகிறேன்

வீட்டின் கூரைகளும் சுவர்களும் நெகிழ்ந்திருக்கின்றன
தன் எஜமானனுக்கான வரவை நோக்கி

இன்று கதவு திறக்கும் பொழுதில்
என் சப்தங்கள் உள்நுழைய
ஒடுங்குகிறது வழிதவறிய நத்தை
சுவர் மூலையில்.
நான் உரக்கச் சொன்னேன்,
அது தன் வழி கண்டடைந்த நத்தை’

எனும் ஹரன் ப்ரசன்னாவின் கவிதையும்






,
மரங்களும் சாலைகளும்
முடிந்து போன ஒரு
புள்ளியில்
இருந்ததாக ஞாபகம்
எனக்கொரு வீடு!

எனது செளந்தர்யத்தையும்
இளமையும் எடுத்துக் கொண்டு
தன் தனிமையும் துயரையும்
திருப்பித் தந்தது அது!

ஆவேசமற்ற ஆற்றாமையுடன்
அதனிடம் முறையிட்டப் போது
இறுக்க சாத்திக் கொண்டது
தன் கதவுகளையும் ஜன்னல்களையும்!

வளையல்கள் உடைய ரத்தம் கசிய
தட்டியும் ஒரு போதும்
திறக்கவில்லை அவ்வாழ்வின் கதவுகள்.

அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
மீண்டும் மீண்டும் வீடு திரும்புகிறேன்,
சாத்திய கதவுகளுக்கு அப்பால்
சாத்தியப்படும் வாழ்வினைத் தேடி!’

****************************************

எனும் உமாஷக்தியின் கவிதையும் இல்லங்களைப்போலவே நம் நெஞ்சில் பதிந்துவிடுகின்றன.
மேலும் படிக்க... "உள்ளம் கவர் இல்லம்!"

Monday, November 02, 2009

திக்குத் தெரியாத காட்டில்...

மகிழ்ச்சியான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.
அதேநேரம் அடக்கமாக எளிமையாக இருக்கும் சாதனையாளர்களையும் பார்க்கிறபோது
இதையெல்லாம் விளம்பரப்படுத்தவும் வேண்டுமா என்றும் தோன்றிவிடுகிறது. ஆனாலும் அன்பு நட்பு உள்ளங்கள் பல கேட்டுக்கொண்டதால் இந்தத்தகவலை இங்கே அளித்துவிட்டு நாவலினை விரைவில் தட்டச்சு செய்து அளிக்கிறேன். கையில் எழுதி (100பக்கங்கள்) அனுப்பிவிட்டதால் கணிணியில் சேர்த்துவைக்கவில்லை.

நன்றி!












<\
மேலும் படிக்க... "திக்குத் தெரியாத காட்டில்..."

Thursday, October 22, 2009

நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)

(மு.கு.

முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்!)





1989 ஜனவரி, 7.

“கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான்? அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப் புள்ளைகிட்ட இருந்து அதும்பட கையத் திருகி அதுன்ர பொம்மையைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டானுங்கோ.”

”ஏன்ரா சின்னசாமி! அவனும் கொளந்தப் பையந்தான? போச்சாது போனு சொல்லிப்போட்டுப் போவயா? அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட? செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ!”







1997 ஜூன்,18

”கவுண்டரய்யா பள்ளிக்கோடத்துல ராசு என்ன பண்ணிப்போட்டாந் தெரியுமா? பக்கத்துப் பையனப் பாத்து காப்பி அடிச்சிப் போட்டானுங்க. பத்து வயசுங்கூடி ஆகல. அதுக்குள்ள இத்தச்சோட்டு அக்குறும்பு ஆகாதுங்கோ.”

”ஆமாய்யா! நீங்கல்லாம் ஒரு வாத்தியாய்யா? பொறளி பேச வந்து போட்டீங்க. ஒளுக்கமாப் படிப்புச் சொல்லிக் குடுத்தா அவன் ஏனுங்க காப்பி அடிக்கப் போறான்? ஒங்க லச்சனம் அப்பிடியிருக்குமாட்ட இருக்குது. போவீங்களா அக்கட்டால!









2006 செப்டம்பர், 7

”கவுண்டரய்யா! காலேசுல ராசு வளுசப் புள்ளைகளப் பண்ற இமிசு நெம்ப சாஸ்தியாயிட்டே போகுதுங்கோ. நெம்ப நிதான பசங்களைச் சேத்துகிட்டுச் சீக்கி அடிக்கறதும், அளும்பாப் பாட்டுப் படிக்கறதும் ஒரு ரூப்பிலாம போய்க்கிட்டே இருக்குதுங்கோ!”

”எல்லாம் வயசுக் கோளாறு! அந்த வயசுல நாம கூடத்தான் புள்ளைகள கிட்டக் குறும்பு செஞ்சோம். காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு”





2008 ஜுலை9

”கவுண்டரய்யா! நிச்சயம் பண்ணுன என்ர புள்ள கையைப் புடிச்சு ராசு இளுத்துப்போட்டான். இந்த அக்குறும்புக்கு நீங்க நாயம் சொல்லிப் போடுங்க.”

”அடப் போய்யா! ஊரு முச்சூடும் இந்தக் கெரகத்தைச் சொல்லீட்டுத் திரியாத. லச்ச ரூவா பணம் இருக்குது. எடுத்திட்டு புள்ளையையுங் கூட்டிகிட்டு எங்காச்சும் ஓடிப் போயிரு.”








2009 ஆகஸ்ட், 16

”கவுண்டரய்யா! ஐயோ என்ன காரியம் பண்ணிப் போட்டீங்க?“

”நான் செஞ்சதுல என்ரா தப்பு? நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா? சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா? ஏண்டா இப்புடி அக்குறும்பு பண்றேனு கேட்டதுக்கு வாயில வந்தபடி என்னைய வாத்தா வக்கானு பேசிப்போட்டான். அதாச்சும் பரவாயில. கொடியப் பத்தியும் சொதந்திரம் வாங்கிக் குடுத்தவிங்க பத்தியும் அட்டூளியமாப் பேசிப்போட்டான். அதான் பெத்தமவன்னும் பாக்காம நொங்கு சீவறாப்புலா ஒரே சீவா அவனச் சீவிப் போட்டேன்”

கதர்ச் சட்டையில் படிந்த ரத்தக் கறையுடன் கவுண்டர் காவல் நிலையம் நோக்கி நடந்தார்.


மேலும் படிக்க... "நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)"

Tuesday, October 20, 2009

உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)

”புது பைக்கு ! புது ட்ரஸ்ஸு !புது ஆபீசு! கலக்கற நந்து!”

பாலீஷில் பளபளத்த ஷூவிற்குள் தன் பாதங்களை நுழைத்துக்கொண்டிருந்த

நந்தகுமார் ,தங்கையின் கிண்டலான பேச்சை ரசித்தபடி,”தாங்க்ஸ் நித்யா “ என்றான்.

முதல் நாள் அலுவலகம் போகிற டென்ஷனில் அவனுடைய
முகம் அந்த ஃபான்காற்றிலும் லேசாக வியர்க்க ஆரம்பித்தது.


வாசலுக்குசென்று பைக்கினைஆரோகணித்து அமரும்போது உள்ளிருந்து அவன் அம்மா ஓடிவந்தாள்.

வரும்போதே கையில் இருந்த சின்னகாகிதப்பொட்டலத்தைபிரித்தபடி அவள்வரவும் அதைப்பார்த்த நந்தகுமார் சட்டென முகம் மாறினான் .


பிறகு எரிச்சலாக,” அம்மா உஙகளுக்குத்தான் தெரியும் இல்ல, எனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு? என்றான் .

“இல்லடா நந்து. முத நாள் ஆபீசுக்குப்போறே! அங்க நல்லபேரு வாங்கி நீடிச்சி இருக்கணுமே அதுக்கு தெய்வம் துணை இருக்கணுமே அதுக்குத்தான் நெத்தில அண்ணாமலையான் விபூதியை வைக்கலாமேன்னு ...” தயக்கமாய் இழுத்தபடியே அவள்பேசுவதை கேட்கவும் பிடிக்காமல் நந்தகுமார் பைக்கைஉசுப்பி சாலைக்கு
விரைந்தான்.



’’நல்லபையன் தான், ஒருகெட்டபழக்கம் கிடையாது,எல்லார்க்கும் உதவற நல்ல உள்ளம்.
ஆனா கடவுள் நம்பிக்கைமட்டும் இல்லாம இப்படியே வளர்ந்துட்டுவரானே .... எனக்குக்கவலையா இருக்கே..’ புலம்பியபடியே வீட்டிற்குள் திரும்பிவந்தாள் நந்தகுமாரின் அம்மா.

நந்தகுமார் பைக்கை அந்த நெரிசலான சாலையில் செலுத்திக்கொண்டு வந்தபோது சாலைநடுவே பதட்டமுடன் தட்டுத்தடுமாறி நடந்துவந்துகொண்டிருந்த அந்த வயதான கிழவியைக்கண்டான்.

பார்வையை இழந்த நிலையில் ஒருகையில் அலுமினியதட்டை ஏந்திக்கொண்டு
இன்னொரு கைவிரல்களால்காற்றைத் தடவியபடி சாலையைக் கடக்கமுயன்றுகொண்டிருந்தாள். சுற்றி நடக்கும் மக்கள் யாரும் கிழவியைக்கண்டுகொண்டதாகத்தெரியவில்லை.

எந்தநேரமும் ஏதாவது ஒரு வாகனம் அவள்மீது ஏறிவிடும் அபாயசூழ்நிலையை நந்தகுமார் தூரத்திலிருந்தே பார்த்து உணர்ந்தான்.



சட்டென பைக்கை சாலை ஓரமாய் நிறுத்திவிட்டு அவளருகில் சென்றான் .

அவள்கையைபிடித்து ,”பாட்டியம்மா! ரோடைக்ராஸ் செய்ய நான் உதவறேன் என் கையைப்பிடிச்சிட்டு வாங்க!” என்றுதன் கரத்தை அவள் கரத்தோடு இணைத்துக்கொண்டான்.


கிழவியின் சுருக்கம் விழுந்த முகம் விரிந்துமலர்ந்தது !பார்வையில்லாத விழிகளில் நம்பிக்கை ஒளிபிரகாசமாய் தெரிய அவன்கைவிரல்களை இறுகப்பிடித்துக்கொண்டாள்.

சாலையின் எதிர்ப்புறத்திற்கு இருவரும் வந்தனர்.

“இங்க அவ்வளோ நெரிசல் இல்லை ..கவனமா நடங்க பாட்டிம்மா...நான் வரேன் ” என்று சொல்லியபடியே கையைவிடுவித்துக்கொண்டு நகர இருந்தவனிடம் அந்தக்கிழவி நெகிழ்ந்த குரலில் சொன்னாள்.

”தம்பீ! நீ நல்லா இருக்கணும்! சமயத்துல கடவுள் மாதிரிவந்து என்னைக் காப்பாத்தினியேப்பா !”
மேலும் படிக்க... "உதவி.(சர்வேசன்500 ’நச்’ னுஒருகதை2009போட்டிக்கு)"

Monday, October 19, 2009

பிரியமழை!

கொட்டு மழைமிகுதியில்
கரையுடைத்துக்கொள்ளும்
காட்டாற்றினாய் மாறாமல்
ஆழ்ந்து சூழ்ந்து
தனக்குள்ளே
பெருகிப்படர்ந்து
விளிம்புவரை
ததும்பிநிற்கும்
கேணி நீராய்
என்னுள்பொங்குகிறது
உன்மீதான
என் பிரியங்கள்
உன்னைத்திணறவைக்கும்
உத்தேசமின்றி
அவைகள்
என்னுள்
பத்திரப்படுத்தப்பட்டுள்ளது

அன்பென்பது
ஆதிக்கம் செலுத்த அல்ல
என்பதை
புரிந்துகொண்டிருப்பதால்
மதிக்கின்றேன்,
ஆரவாரமில்லாத
உன் பிரியமழையையும்
அமைதியை அடக்கிய
உன் புன்னகையையும்.
மேலும் படிக்க... "பிரியமழை!"

Saturday, October 17, 2009

தீபாவளிக்குதூகலங்கள்!

அன்று.....
-- ஒருவாரம் முன்பே
அம்மாதயாரித்துவிடும்
மிக்சரும் மைசூர்ப்பாகும்
பாதுஷாவும் பாதாம் அல்வாவும்
இன்னும் சில
பலகாரங்களையும்
எங்கள்பார்வையில்
படக்கூடாது என்று
தூக்கிலிட்டுமறைத்துவிடுவாள்
சந்தோஷப்பூரணத்தை
உள்ளேவைத்திருக்கும்
சோமாசிப்பலகாரம்
முரசடித்து தன் இடத்தை
அறிவிக்க
தம்பிகளுடன் சேர்ந்து
தூக்கு வைத்த இடத்தை
மோப்பம் பிடித்து
பாதிதூக்கைக்
காலிசெய்துவிடுவோம்
’இறைவனுக்குப்படைக்குமுன்பே
எதற்கு எடுத்தீர்கள்?’
என்று அம்மாகேட்கும்போது
’குழந்தையும் தெய்வமும் ஒன்றுதானே அம்மா?’
என்ற எங்கள்பதிலில்
அம்மாவின்கோபமெல்லாம்
பறந்தேபோய்விடும்!


தூக்கக்கலக்கத்தில்
தலையணைக்கடியில் வைத்த
விரல்களைப்பிடித்திழுத்து
மருதாணி வைக்கும்போது
சில்லிட்டுப்போவது
உள்ளங்கைமட்டுமல்ல
அம்மாவின் பாசத்தில்
உறையும் இதயமும்தான்

முதல்நாளேபட்டாசுகளை
முறத்திலிட்டு
மொட்டைமாடியில்
காயவைத்து
அவரவர் பங்கிற்கு
எது எது என்று
முன்கூட்டியே திட்டமிடுவோம்
பெரும்பாலும்
பெண்குழந்தைகளுக்கு
கம்பிமத்தாப்புகளும்
தரைச்சக்கரமும்
விஷ்ணுசக்கரமும்
பூவானமும்தான்
வழங்கப்படும்

வாழ்த்து அட்டைகள்தவிர
அஞ்சலட்டையிலும் அழகாய்
ஒருமயிலோ அல்லது அன்னமோ
வரைந்து அன்பான தீபாவளி
‘வாழ்த்துகளை அனுப்பிவைப்போம்


பணிக்களைப்பில்
கரகரத்துப்போனகுரலில்
அம்மாவின் நலங்குப்பாட்டோடு
தலையில் எண்ணை அரங்கேறும்
நீமுந்திநான்முந்தி என
குளியலறக்குப்போட்டிபோட்டு
குளித்துவந்ததும்
அம்மாவின் கையினால்
சாம்பிராணிப்புகைவாசம்
கூந்தலில் படரும்

’பார்த்துப்பார்த்து’
என்று அப்பா
பலதடவைஎச்சரித்தும்
பட்டாசுக்காயம்
கட்டைவிரல் நுனியிலோ
கால்விரல் இடுக்கிலோ
பட்டுக்கொள்ளாமல்
பெரிய தம்பி
தெருவைவிட்டு வந்ததில்லை.

தொடங்கிய கொஞ்சநேரத்திலேயே
வெடிக்கும்பட்டாசின்
கந்தக்கத்துகள்
கண்ணில்பட்டுவிட
பாதியிலே
அடங்கிப்போகும் என்
பட்டாசு ஆர்வம்

வெளிக்காய வலி அறியா
உளமனசின் உற்சாகங்கள்,
மகிழ்ச்சி ,கலகலப்பு,
உறவினர்களின் வருகை,
பேச்சு ,சிரிப்பு என்று
மதியம் மாலைவரைநீண்டு
இரவில் மத்தாப்பாய்
ஒளிர்விடும்!

இன்று..

பண்டிகைநாள் என்றாலே
கண்டிப்பாய் பலநிகழ்ச்சிஎன்று
உறவுகளுக்கிடையே
இடைவெளியை உருவாக்கி
இல்லத்திற்குள்வந்து
உட்கார்ந்து ஆளுமைசெய்யும்
தொலைக்காட்சிப் பெட்டியால்
தொலைந்தேதான் போனது
தீபாவளிக் குதூகலங்கள்!
மேலும் படிக்க... "தீபாவளிக்குதூகலங்கள்!"

Tuesday, September 15, 2009

அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக.







இன்று வாழ் சமுதாய்ச் சிறப்பெலாம்
எழில் படங்களாய் வார்த்திட்ட வித்தகர்
ஒன்றினோடொன்று மாறுபற்றிடும்
உலகமக்களின் உள்ளங்கள் ஆய்ந்தவர்
வென்றிபெற்றிடும் மானிடன் மாட்சியும்
வீழ்ச்சியுற்றிடும் தாழ்ச்சியும் கண்டவர்
என்றும் வாழும் தமிழிலக்கியம் தந்தவர்
இதயங்களில் இன்றும் இருப்பவர்!

மனிதர் மேல் அபிமானம் மிகுந்தவர்
மாநிலமுதலமைச்சர் பதவிவகித்தவர்
கனவு கொண்டிடும் நற்றமிழ் வாழ்வுறக்
கதை கவிதைகள் பலவும் படைத்தவர்
புனிதமாம் சமுதாயம்பிறந்திடப்
புதினம் பற்பல நன்கு அளித்தவர்
இனிமையே உருவாகவேவிளங்கியவர்
இதயங்களிலே இன்று இசைந்தே இருப்பவர்!

காவிரி வெள்ளமென களீமணம் கொண்டவர்
கலைகள் யாவினும் ரசனை மிகுந்தவர்
பூவினைப்போன்றுள மென்மனம் வாய்த்தவர்
பொருந்து நண்பரைத்தோளொடு அணைப்பவர்
நாவினாலுரைத் தேனினை வார்த்தவர்
நாடு முற்றும் புகழ்பெறத் திகழ்ந்தவர்
யாவும் செய்யும் பேனாவினை ஆணடவர்
யாவரும் போற்றும் தலைவராய் இருப்பவர்!
மேலும் படிக்க... "அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளுக்காக."

Monday, August 24, 2009

2050 லவ்ஸ்டோரி!







அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே நெட் கனெக்‌ஷன் இருக்கே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜாபாட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…
அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…

ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்விக்ரம், கடும்கோடைகால உடையிலிருந்த ஷ்ரேயாவோடு டுயட் பாடிக்கோண்டிருந்தார்,

சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.

“ஓ மை காட்! கந்தசாமியா? 2009ல் வந்தபடமா?ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப் அல்லதுக்ளப்புக்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”







‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'

”யெப் உடனே இங்க வா அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “

பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்

“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.
பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா நெய்ல்டாப்பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் தெரிந்தாள்.

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்

“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.


“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா என் கண்ணுக்குபழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.



*****பிகு:)************************************************************
ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .
மேலும் படிக்க... "2050 லவ்ஸ்டோரி!"

Wednesday, August 19, 2009

GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!






கோயம்பேடு மார்க்கெட்டுல கூறுகட்டி காய்கறிவிக்கறமாதிரி முத்து பவழம் கிறிஸ்டல் ஜேட் ப்ளூசஃபையர் இன்னபிற கற்களை அமெரிக்கத்தலைநகரில் (வாஷிங்டன்)விற்றுக்கொண்டிருந்த இடத்துக்கு ஒரு நன்னாளில் போனதை விவரிக்கவே இந்தப்பதிவு!


நவரத்தினங்களில் இந்த மாணிக்கம் என்கிற கல்லுக்கு ரொம்பவே மதிப்பு! Ruby இதுக்கு ஆங்கிலத்துலபேரு.

மாணிக்கத்திலும் பல தினுசுகள்.


Adelaide ruby" is a common name for almandine garnet,
"Cape ruby" is a common name for pyrope garnet found in South Africa; "Arizona ruby" and "Colorado ruby" are common names for pyrope garnet.

"American ruby" and "Mont Blanc ruby" are really garnet or rose quartz.

"Bales Ruby" is really pale red spinel.

"Bohemian ruby", "Montana ruby" and "Mountain ruby" are really red garnet.

"Brazilian ruby" is really pink or "fired" topaz, or pink tourmaline.





இப்படி ஒவ்வொரு கல்லுக்கும் பலதினுசான வடிவங்கள் தோற்றங்கள் அவைகளை பல்லாயிரம் அல்லது லட்சக்கணக்கில் வியாபாரத்திற்க்கொண்டுவந்து வைக்கும் இடம்தான ஜெம் ஷோ!







அதைக்கொட்டியும் மாலையாய் கட்டியும் வச்சிருக்காங்க ! வைரம் பிளாட்டினம் எல்லாம் கண்ணாடி ஷோகேசிலிருந்து கண்ணடித்தது.

.


எதைப்பார்க்க எதைவிட? ஜம்னு தான் இருக்கு ஜெம்ஷோ!


அமெரிக்கால இருக்கறவங்களுக்கும் அவங்கவீடுகளுக்கு என்னைமாதிரி வந்துபோறவங்களுக்கும் இதுதெரிஞ்சிருக்கும்

அதனால அப்படிப்பட்டவங்க அடுத்த சிலவரிகளை ஸ்கிப் பண்ணிடுங்க!

அமெரில்லால 30முக்கிய ந்கரங்களில் இந்த ஜெம் ஷோ சில(1967முதலாம்) வருஷங்களா நடத்தறாங்க...நம்ம ஊர் கல்யாணமண்டபம் மாதிரி நாலுமடங்கு பெருசா இருககற கட்டிடத்துல நூத்துக்கண்க்கான ஸ்டால்கள்.

உலகத்தின் அத்தனை விதமான கற்களும்(கூழாங்கல்போன்ற ஏதோகல்லில் கூட மோதிரம் கைக்குப்ரேஸ்லெட் என்றுசெய்து வைத்திருந்தனர். ”wow! amazing! awesome!" என்று அதனை அந்நியமக்கள் சிலர் சிலாகித்துக்கொண்டிருந்தனர்).

ஜெம்ஷோ நடக்கும் இடத்துக்குள்

உள்ள நுழைய ஆறுடாலர் நுழைவுக்கட்டணம் முன்னே இருந்ததாம் இந்தவாட்டி இலவசக்கூப்பன் கொடுத்திருந்தாங்க. அதைக்காண்பிச்சி நுழைஞ்சா வாயிலில் ஒரு காவல்காரர் கூப்பனைவாங்கிட்டு இடதுகைமணிக்கட்டுல OK அப்படீன்னு entryஸ்டாம்ப்பினால் ஒத்தி எடுத்தார்...(.மறுநாள்குளிக்கிறவ்ரை இது தேர்தல்ஓட்டுமசி மாதிரி ஒட்டிட்டு இருக்கு!)

பேருக்கு ஐஞ்சாறு ரோஸ்நிற உடம்பு போலீஸ்காரர்கள் நுழைவு வாயிலில ஒருஓரமா பயமுறுத்தாமல் கருணைக்கண்களோடு நிக்கிறாங்க.

இவங்களை நம்ம ஊர்க்காரங்க மாமா என்கிறாங்க பெண்போலீசை மாமிங்கறாங்க அங்கேஒரேஒரு அழகானமாமிகண்ல தென்பட்டாங்க,

உள்ள நுழைஞ்சதும் ஏதோ தேவலோகம்மாதிரி காட்சி அளித்தது. பலஸ்டால்களில் மணிகளின் விறபனைக்கு அழகழகான பெண்(மணிகள் பள) பலர்!...

.கல்யாணத்துக்கு வைரமோதிரத்தை செலெக்ட் செய்துகொண்டிருந்தது வைர ஸ்டாலில் ஒரு அமெரிக்கஜோடி .

pretty! wow ! என்று இருவரும் சில மோதிரங்களை அணிந்துபார்த்தபடி புகழ்ந்துகொண்டார்கள்..




முத்தானமுத்தல்லவோன்னு பாடலாம்போல முத்துச்சரக்கள் ஆயிரக்கணக்கில் சரம் சரமா
கோல்கேட்வெண்மையில், தந்தக்கலரில் லேசா மஞ்சள்பூச்சோடு என காணப்பட்டது கோலிக்குண்டு சைசிலிருந்து கடுகு அளவுவரை எல்லா மணிவகைகளும் இருந்தன. ஒரிஜினலைபோல டூப்ளிகேட் கற்களும் சொன்னாலேதவிர தெரியாத வகையில் ஏமாற்றின:).


எத்தனை வண்ணங்கள் அப்பப்பா!

சிவப்புன்னா அதுல அடர்த்தியான சிவப்பிலிருந்து மிகமென்மையான சிவப்புவரை ஏழுவிதங்கள் அதுபோல எல்லா வர்ணங்களிலும்.

இயற்கையில் இத்தனை நிறங்களான்னு கவிதை எழுதலாம்போல கைதுறுதுறுத்ததுன்னா பாத்துக்குங்களேன்!

எதைபாகக்றது எதைவிடறதுன்னே தெரியல!

மாணிக்கச்சரங்கள் (தங்கத்தில் கட்டிய சரமாகவோ நெக்லசாகவோ இல்லை அப்படியே இயற்கையாக ஒரு நூலில்மட்டும் கோக்கப்பட்டு) அந்த விளக்குவெளிச்சத்தில்கண்ணைப்
பறித்தன.

இந்த ஸ்டாலில் நல்லகூட்டம் நானும்
எட்டிப்பார்த்தேன்.

இக்கட ச்சூடு அக்கடச்சூடு என்று ஒரே சுந்தரத்தெலுங்கு நிறையவேகேட்டது.
கடைக்காரர் ஜப்பான்காரர்போலத்தெரிந்தார்

அவர் ஸ்டாலில் ரூப் தேரா மஸ்தானான்னு பாடலாம் போல ரூபி சிவந்திருந்தாள்.

ஆஹா!

மாணிக்கம்!
எத்தனை உசத்தியான கல் இது! அபிராமிபட்டர் அன்னையைப்பாடும்போது முதல்பாடலிலேயே உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் என்கிறாரே!

மாணிக்கங்கட்டி வயிரமிடைகட்டி. ஆணிப்பொன்னாற்செய்த என்று பெரியாழ்வார் இந்தக்கலைத்தான் முதலில் கொண்டுவந்து கண்ணனுக்கு வண்ணத்தொட்டில் கட்டுகிறாரே!


சிலம்பில்மாணிக்கப்பரல்! (சிலப்பதிகாரமும் கண்ணகியும் நினைவுக்கு வரணுமே இங்க?) எனக்கு பூம்புகார்படம் புகையாய் ரீவைண்ட் ஆகியது. லேசா விஜயகுமாரியின் நீண்ட(ஒட்டு? கூந்தலும் உருட்டுமுழியும் கூடவே நினைவில்வந்தன!

மனிதருள்மாணிக்கம் என்கிறார்கள்



கல்லெல்லாம் மாணிக்கக்கல் ஆகுமா?


ஆகாதுதான் கண்ணதாசரேன்னு கவிஞருக்கு பதில் சொல்லியபடி


மாணிக்கத்தைப்பார்ததும் மலர்ந்த நான் என் கணவரைத்திரும்பிப்பார்த்தேன் ..காணவில்லை அங்கு.

தெரியுமே,.

இதுமாதிரி இடங்கள் துணி,நகைக்கடைகள் எல்லாம் உடன்வந்தால் எனக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாததுபோல வேறுபுறம் வேடிக்கைபார்த்து நிற்பார். துப்பறிந்து அவரை இழுத்துவந்து .”மாணிக்கம் பாருங்க”

என்றேன் கிசுகிசுப்பானகுரலில்.

”ஆ மாணிக்கமா? என்கூட பெங்களூர்ல ஒர்க் பண்ணிட்டுவேறகம்பெனிமாறிபோன அந்த டூல்ரூம் டிபார்ட்மெண்ட்மாணிக்கமா ? வாவ் ! அதுவும் இங்கயா? நல்லவேளை..பொழுதுபோகாம இந்தமணிக்கூட்டதுல மாட்டிட்டு தவிச்சிட்டு இருக்கோமேன்னு நினச்சேன் பேச்சுத்துணைக்கு நல்ல ஆள் கிடைச்சாரு..எங்கே மாணிக்கம் எங்கேமாணிக்கம்(maani come)! ” என்று பரபரத்தார்.

இடுக்கண்வருங்கால்மட்டுமல்ல இப்படியொரு இக்கட்டான நிலமையிலும் சிரிச்சிப்பழக்கம் எனக்கு ஆகவே சிரித்துதொலைத்துவிட்டு விவரம்கூறினேன்

‘ ரூபி அதாவது மாணிக்கம் இதான்பாருங்க அழகா இருக்கு என்ன ஒரு ஒளிபாருங்க? ஜோரா இல்ல? ”!


ஏதோ துர்வஸ்துவைப்பார்க்கிறவர்
போலபார்த்துவிட்டு.” ஓ இதானா? மஞ்சளா இருந்தா தங்கம் அதுதான் உன்னைக்கல்யாணம் செய்தபின்னாடி தெரிஞ்சிட்டேன் மத்தபடி நான், இந்த நவரத்தின கல் பத்தின அறிவு இல்லாத ’கல்’ லாதவன்” என்று சொல்லி நகர்ந்தார் என் தங்கமான புருஷன்!

மாணிக்கத்தின விலையைக்கேட்டதும் அதை எனது இந்திய மூளை ரூபாயில் பெருக்கிப்பார்த்து அம்மாடியோவ் என வாய் முணுமுணுத்து மனசு இப்ப வேணாம் என்று முடிவெடுத்தது.


ஏதேதோ கொழுக்மொழுக்கென்றமணிகள் மாலைகளை எல்லாம் அசராமல் வெளிநாட்டுப்பெண்கள் வாங்கிப்போகிறார்கள்.கழுத்திலிட்டு அழகுபார்க்கிறார்கள். தரம் குணம் பார்த்துப்பலர் நிதானமாய் பொறுமையாய் வாங்கிறார்கள்

வழக்கம்போல இந்தியஸ்டாலில் நம்ம மக்கள்கூட்டம் அலைமோதியது.

பவழங்களை ரோஜாப்பூபோல செய்து செயி்னில்பதித்து பரப்பி இருந்தார்கள்.

பவழமா பழவமா எதுசரி?

‘நற்பவழம் இங்ககிடைக்குமாடீ புவனா ?”என்று ஒருமாமி அடுத்தவாரம் பிரசவிக்க இருக்கிற தன்மகளிடம் ஆர்வமாய்க் கேட்டுகொண்டிருந்தார்

காதில்தேன் பாய்ந்தமாதிரீ இருக்கவும் அந்த செந்தமிழுக்குச்சொந்தக்காரர்களைப்பார்த்து புன்னகைத்தேன்.அவங்க வேற ஏதோநகைபார்ப்பதில்பிசியா இருந்ததால் என்புன்னகையை கண்டுக்கல!

சர்தார்ஜீஒருத்தர் ஜீ என்றார் என்னைப்பார்த்து அவர்ஸ்டாலுக்குபோனதும்...தெரிஞ்ச
ஹிந்திலகொஞ்சம் அவர்கிட்டபேசினேன். வடக்கத்திக்கார நகைகள் ராஜஸ்தானி நகைகள் 18கேரட் தங்க நகைகள் என ஏதேதோ இருந்தன. ஆனால் மாணிக்கத்தைக்கண்ட என்கண்கள் மற்றொன்றினைப்பரவசமாய்க்காணவிரும்பவில்லை

இருந்தாலும் வந்ததுக்கு ஏதும் வாங்கணுமே! இந்தியா போனா காலனி சிநேகிதிங்க கேப்பாங்க இல்ல ?:)

அடுத்து இனனொரு ஸ்டால்ல கருப்பில் ஒருக்றிஸ்டல் சரம், முத்துசரம், சிவப்பு மணிமாலை அஞ்சுடால்ர்னாங்க அதுல நாலுசரம் வாங்கினேன்.

இன்னும் கைப்பைகள் கிஃப்ட்பொருட்கள்
இவைகளுக்கு தனி ஸ்டால்கள்!

எழுபதுவயது கொரியப்பெண்மணி சுறுசுறுப்பாய் கல்லாப்பெட்டில உட்கார்ந்தபடி ஐபோனில் பேசிக்கொண்டிருந்தார்.

அழகான டப்பாவில் மடித்தபொட்டலத்தில் கற்கள் மணிகள்! மணி (money) மட்டும் நம்மகிட்டகொள்ளையா இருந்தா போட்டுத் தாக்கலாம்..அப்படி ஒரு வெரைட்டி!

ஒருஇடத்தில் சட்டென மெல்லிய துணியில் ஸ்டால்களின் பாதை நடுவே திரைபோட்டிருந்தார்கள்.

திரைக்குப்பின்னால் என்ன நடக்கிறதென.
தெரிஞ்சிக்கலேன்னா டைலினால் மாத்திரையைமுழுங்கினாலும் தலை வெடிச்சிடும்போல இருக்கவே திரைக்குமுன் சின்னமேஜைஅருகே நாற்காலியில்அமர்ந்திருந்த அந்த அயல்நாட்டுமனிதரைக்கேட்டேன்

ஹோல்சேல் பிசினஸ் அதாவது மொத்தவியாபாரமாம் ஜுவல்லரிக்கடைக்கார்கள் வியாபரிகள்மட்டும் தங்கள் அடையாள அட்டையைக்காட்டிட்டு உள்ளபோகலாமாம்.

நன்றிகூறிவிட்டு வேற பெரிய நகைக்கடைக்கெல்லாம் சொந்தமில்லை என்பதால் ட்ரேட்மார்க் புன்னகையைமட்டும் சிந்திவிட்டு அங்கேருந்து நகர்ந்தேன்.






2டாலர்கள்( அமெரிக்கப்பணமில்லைஇது செயின் டாலர்) 2 வெள்ளிமாதிரியான உலோகமோதிரங்கள் ஏழெட்டு மணிமாலைகள் ஒரு கார்னெட்பேஸ்லெட் மட்டும் அந்த் ஐந்துமணிநேரத்தில் இருபதுடாலர்களைகொடுத்துவாங்கி மகிழ்ச்சியாய் வீடுவந்தேன்.

அன்று வீட்டுக்குவந்த விருந்தினர்கூட்டதில் ஒருபெண்.தானும் மதியம் ஜெம்ஷோபோய் மாணிக்கச்சரம் வாங்கி வந்ததை கழுத்தில்போட்டுக்காட்டினாள்

’நல்லாருக்கு’ என்றேன் நான் கண்களைவிரித்தபடி

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஷைலஜா?!

அந்தப்பெண் தொடர்ந்தாள்

’என்னவோபோங்க வாங்கிட்டேனே தவிர அசல்மாணிக்கமான்னு டவ்ட்டாவே இருக்கு, அவ்ளோவிலைகொடுத்தது தரமானதுதான்னு வித்தவங்க சொல்றாங்க. இருந்தாலும் நம்மூர் நாதெள்ளசம்பத்துசெட்டிக்கடைலயோ இல்ல ஜாயலுக்காஸ்லயோ தங்கமாளிகைலயோ வாங்கீனா ஒருத்ருப்திதான்.மேலும்...ராசிக்கேத்த கல்போடணும்னு ஒருதமிழ் வெப்சைட்ல படிச்சது வீடுவந்ததும் நினைவுக்கு வந்தது. மாணிக்கம்னாலும் இந்தக்..கல்லுபோட்டதிலிருந்து ஒரே குழப்பமா இருக்கு... என்னஎன்னவோ சிந்தனைகள்”
என்றாள்கவலையோடு.

அடப்பாவமே மனசு தெளிவில்லேன்னா எந்தக்கல்லுல நகைபோட்டுட்டாலும் குழப்பம்தான்னு புரிஞ்சிக்கவேண்டாமோ?

மனசுக்குள் சொல்லியபடியே


அந்தப்பெண்ணை நான் வியப்பாய் நிமிர்ந்து பார்த்தபோது அவள் கழுத்திலிருந்த மாணிக்கங்கள் எதுக்கும் கவலைப்படாமல்இயல்பாக மின்னிக்கொண்டே இருந்தன.!









!



!:)



--
மேலும் படிக்க... "GEMSHOW (அல்லது) கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா?!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.