Social Icons

Pages

Sunday, May 13, 2007

யாமறிந்த பெண்களிலே......

அன்னையர்தினத்திற்கு என்று எழுதிய கவிதை ஒன்றை என் அன்னைக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு மேலே செல்லலாமா?

'அவசரசமையல் வேலையினிடையே
அள்ளிஎடுத்து
அம்மாகொடுத்த
முத்தத்தில்
இப்போதும் மணக்கிறது
அக்மார்க்நல்லெண்ணையும்
அம்மாவின் வாசனையும்.'
*************************************************************************************
அன்னையர்தினம் மேலை நாட்டில் உண்டானது, நமக்கு அவசியமானதா அன்றைக்கு மட்டும்தான் அன்னையை நினைப்பதா என்றெல்லாம்
சிலர் கேட்கிறார்கள். கடவுள் எங்கும் இருக்கிறார் ஆனாலும் கோயிலுக்குபோய் வரும்போது தனி அமைதியும் நிம்மதியும்
கிடைக்கிறதல்லவா அதுபோல அன்னையோடுதான் வாழ்கிறோம் அடிக்கடிசந்திக்கிறோம் பேசி மகிழ்கிறோம் ஆனாலும் சிறப்புதினம்
என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.
நல்லவைகளை எங்கும் யாரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்தானே?

யாமறிந்த பெண்களிலே அன்னையைப்போல் அன்பானவர் யாரும் இல்லை என நாம் ஒவ்வொருவருமே சொல்லிக் கொள்ளமுடியும்.

தாரம் கூட தாய்க்குப் பின் தானாம்!

வளர்ந்து பெரியவர்களாகி நாமும் தாய் தந்தை என ஆகிவிட்டாலும் நம் தாய்க்கு நாம் என்றும் குழந்தைகளே!

புதுமுகமாய் பேந்தப்பெந்தவிழித்துக்கொண்டு பூமிக்கு வரும்போதே அழுகைஆலாபனையோடு சுவாசிக்க ஆரம்பிக்கும் சின்னஞ்சிறு
ஜீவனை வாரி அணைக்கும் அன்புக்கரம் தாயினுடையது.அந்த அன்பும் அரவணைப்பிலுமான அந்த முதல் ஸ்பரிசம் குழந்தைக்கு லேசான மனஅமைதியைத் தருகிறது.

மூன்றுவயது வரை தாயோடு தான் எல்லாக்குழந்தைகளுக்கும் சிநேகம்.மொழியிலிருந்து
பழக்கவழக்கங்களைபோதிப்பது வரை முதல் குரு தாயாகிறாள். அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.

ஒருத்திமகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்திமகனாய் வளர்ந்து..என்கிறது திருப்பாவை. பெறவில்லையாயினும் வளர்த்த பேறுகொண்டவள் யசோதை அதனாலே அவள் வேறொருத்தி என்ற சொல்லில் கட்டுப்படவில்லை. தாய் என்பவள் ஒருத்தி. அவ்வளவுதான்.

பெற்றதாயினும் ஆயின செய்யும் என்கிறார் இறைவனின் கருணையை ஆழ்வாரொருவர். தாயினும் சாலப்பரிந்து என்கிறார் சைவ அடியார்.

அம்மா என்ற சொல்லே மந்திரமாய் நம்மை இன்பத்திற்கும் துன்பத்திற்கும் சுற்றிக்கொண்டிருக்கும். அடிபட்டால் அம்மா! மகிழ்ச்சி அதிகமானால் அம்மா!

அமெரிக்கா வந்த இடத்தில் நேற்று பார்க்கில் 5வயது கொரியன் சிறுவன் தனியே விளையாடிக்கொண்டிருந்தவனிடம் எதேச்சையாய் 'உங்கள்கொரியமொழியில் அம்மாவை எப்படி அழைப்பீர்கள்?' எனக்கேட்டேன் அவன் 'அம்மா' என்றான் அப்பாவிற்கு அப்பாவாம்.
ஆச்சர்யமாய் இருக்கிறது. அம்மா எனும் வார்த்தை மட்டுமே உலகின் பல பகுதிகளில் ஒரேமாதிரியாகவும்,சற்றே வித்தியாசமாய் ஒலிக்கிறது!

சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
*********************************************************************************************************

'ஒருவழியா அம்மா கிராமத்தைவிட்டு என்கூட நகரத்துக்கு வந்து தங்க சம்மதிச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்க, அம்மாவை அழைச்சிட்டுவர உடனே கிளம்பிட்டேன். ஊர்ல நுழையறப்போவே கோயில் தர்மகர்த்தா என்கிட்ட"அம்மாவை அழைச்சிட்டுப்போக வந்துருக்கியாமே, இங்கயே வருஷக்கணக்காய் வாழ்ந்தவளுக்கு அங்கே பொருந்துமா என்ன?'ன்னுகேட்டார்

'அம்மாவுக்கு ஒருகுறையும் இல்லாம நானும் என்குடும்பமும் கவனிச்சிப்போம் ஐயா..நீங்க கவலைப்படாதீங்க..'

என்னைக்கண்டதும் அம்மாவுக்குக்கண் சிரிச்சது,'வாடா வா..உனக்குப்பிடிச்ச வத்தக்குழம்பும் வாழப்பூ உசுலியும் பண்ணிவச்சிருக்கேன்?ன்னு ஆசைஆசையா பரிமாறினாள் அம்மா.

சாப்பிடறப்போ'அம்மா உனக்கு பூரண சம்மதமா இந்தவீட்டைவிட்டுவரதுக்கு? அப்பா போனதும் அவர் நினைவாய் இங்கேயே சில வருஷமாய் இருக்கும் உனக்கு வயசாச்சும்மா ...தள்ளாமைவேற.. தனியே நீ இங்க இனிமேயும் இருக்கவேண்டாம்னுதான் அழைச்சிட்டுபோறேன் ... உனக்கு அங்கநம்ம வீட்லயே கோயில்மாதிரி பெரியபூஜை ரூம்
கட்டிவச்சிட்டேன்..இங்கே உனக்கு குளத்துல குளிச்சிப்பழக்கமே,அதான் உனக்காக ஸ்விம்மிங்பூல் இருக்கற ஃப்ளாட் வாங்கிட்டேன்.
நீ குளிக்கலாம் அங்க போயி...உபந்ந்யாசம், கச்சேரிக்கெல்லாம் அழைச்சிட்டுபோறோம்.. உன்னை கவலையேஇல்லாம சந்தோஷமா
வச்சிப்போம்மா' அப்படீன்னு சொன்னேன்

'அதுல எனக்கு சந்தேகமே இல்லடா..உடம்பும் இனிமே இங்கதனியே இருக்க இடம் கொடுக்கலயே சந்தோஷமா வரேன் உன்கூட'

'பகல்ல உக்காந்து போவது கஷ்டம்னு ராத்திர ஢ரயில்ல பர்த் ரிசர்வ் பண்ணி இருக்கேன்.. பத்துமணிக்கு வண்டி ஏறினா கார்த்தால 4மணிக்கு ஊருபோயிடும்மா..ராத்திரி நீ தூங்கிடுவியா ஒண்ணூம் சிரமம் இருக்காது..'

'சரிப்பா'

நானும் அம்மாவும் ரயிலில் ஏறினோம் ஸ்டேஷன்மாஸ்டர்கிட்ட பெருமையா சொல்லிட்டேன்..' எங்கம்மா இனி என்கூடதானாக்கும்! ஒரு அம்மாவை பெத்தமகன் பாதுக்கறமாதிரிஆகுமா சொல்லுங்க ?'

ரயில்ல ஏறினதும் அம்மாவுக்கு கீழ் பர்த்துல நல்லா மெத்துனு மூணு விரிப்பு போட்டுபடுக்கை தயாரித்து, சின்னதலையணைவச்சி
போர்வைகொடுத்தேன்.

'அம்மா!எல்லாம் வசதியா இருக்கா? ரிசர்வ்ட் கபார்ட்மெண்ட்..யாரும் வரமாட்டாங்க..ஜம்முனு படுத்துத் தூங்கு.. நான் மேல்பெர்த்ல
போயிபடுக்கறேன் ..கார்த்தால நானே உன்னை எழுப்பறேன்.இறங்கி டாக்ஸி வச்சீட்டு ஊருக்குபோகலாம் என்ன?'

தலை அசைத்து அம்மா படுத்தாள்.

நான் போயிமேலேபோய்படுத்தவன் தான் அடுத்த நிமிஷமே நல்லதூக்கம்!

திடீர்னுமுழிப்பு வரவும்எழுந்து கைகடிகாரத்தை பார்த்தேன். மணி 3 .இன்னும் ஒருமணி நேரத்துல ஊர்வந்துடும்..டாய்லெட் போய்வரலாமென கிழே இறங்கினேன்.

கீழ்பர்த்தில் அம்மா கொட்டகொட்ட முழித்தபடி உட்காந்திருக்கவும் கலவரமாய்,
'என்னம்மா எழுந்திட்டியா சீக்ரமா?'

'இல்லடா நான் தூங்கவெ இல்ல'

'அய்யய்யோ என்னாச்சு படுக்கை சரீ இல்லயா?காத்து வரலயா? பசிச்சிதா? போர்வை கனமா இல்லையா?'

'எல்லாம் சரியாத்தான் இருக்குப்பா..நீ போயி மேலே படுத்துட்டதும் எனக்கு பயமாபோச்சுப்பா..சின்ன வய்சுல திண்ணைல படுத்துதூங்க்றபோ ராத்திரிகீழே அடிக்கடி விழுந்திடுவே.. தூக்கி நான் மேலே விடுவேன்.. அதுமாதிரி இவ்வளோ உயரத்திலேந்து நீ எப்போ விழுந்திடுவியோன்னு கவலையா மேலேயே பாத்துட்டே உக்காந்திருந்தேன்..'

அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'
************************************************************************************************

வாழ்க்கையில் சில உண்மைநிகழ்வுகள் கற்பனைக்கதையைவிடவும் மனதை பாதிக்கக்கூடியவை.. எனக்கு இது அப்படித்தான் இருக்கிறது, உங்களுக்கு?

36 comments:

  1. என்னமோ சொல்ல வந்து
    "என்னவளை" நினைவுபடுத்தி
    என்னையும் அழவைத்து
    என்னவெல்லாம் சொல்லிவிட்டீர்கள்!

    வாழ்க அன்னையெனும் மஹாதெய்வம்!

    ReplyDelete
  2. //அம்மா இப்படிச்சொன்னதும் என்னவோ அவளை நான் தான் இனிமே கவனிச்சி காலமெல்லாம் பேணப்போவதா நினச்ச என் கர்வம் அப்படியே தலைகுப்புற விழுந்தது.'//

    கண்ணீரே வந்துடுச்சுங்க. அருமையான நிகழ்வு. நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.

    ம்...

    அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லைன்னு சொல்றது சரியேதான்.

    அன்னையர்தின நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வணக்கம்

    முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள் ;-))

    கவிதையும், பதிவும் அருமையாக இருக்கு...மனசு முழுக்க அம்மா தான்

    \\அதற்குப்பிறகுவாழ்வில் எத்தனையோ பெண்களுடன் அறிமுகம ஆனாலும் மனம்,தாயைவிட உயர்ந்த இடத்தில் அவர்களை வைக்கமுடிவதில்லை. தாயைப்போல் என்கிறோமே தவிர தாயின் இடத்தை அவர்களுக்குக் கொடுப்பதில்லை.\\

    உண்மை...உண்மை.. ;-))

    ReplyDelete
  4. கவிதையும், கருத்தும், கட்டுரையும் அருமை ஆனால் //ஆனாலும் சிறப்புதினம்
    என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.
    // இதை மட்டும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறப்புதினத்தில்தான் அதிக நேசம் பசமெல்லாம் காட்ட முடியுமா என்ன? நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே? யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும்? எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டு செலுத்தும் அன்பையும் தரும் பரிசையும் விரும்புவாள் தாய், அன்னையர் தினத்தில் ஒப்புக்கு தருவதைவிட.

    ReplyDelete
  5. மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். அன்னையர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்!

    ReplyDelete
  6. பதிவும், பகிர்தலும் மனதைக் கவருகிறது என்றாலும் நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவளை நாம் மறக்கவே முடியாது என்கிறபோது சிறப்பு தினத்தில் அதிகமாய் நினைப்போம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் எழுத்து நடையும் சரி, தமிழும் சரி மிக மிக அருமை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இதுவே என் அம்மா இருந்தால் தப்புன்னு சொல்லுவாளா, சரின்னு சொல்லுவாளான்னு தான் என் வரையில் முதலில் தோணும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும்.

    ReplyDelete
  7. ஷைலஜா சொன்னதில் தவறேதும் இருப்பதாக நான் கருதவில்லை.

    தலைவி மாதிரி ஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

    அவ்வப்போது நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

    நினைக்க நினைத்தாலும், நேரம் காரணமாக மறப்பவர்கள் இருக்கிறார்கள்.

    ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நாள் இது, வெளிக்காட்ட வைக்கும் நாள் இது என்றே சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

    ReplyDelete
  8. நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள். ம்ம்ம்ம்...அம்மா!

    ReplyDelete
  9. மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.

    அன்னையர்தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. அருமையான பதிவு. கால அவசரத்தில் நாம் ப்ல சமயம் நம் உணர்ச்சிகளை வெளியிடுவதில்லை. இதனாலேயே பல சமாயம் குறிப்பாக பெண்கள் தாம் taken for granted உணர்வுடன் நடத்தப்படுகீறோமோ என்று நினைப்பதை நடைமுறையில் காணலாம். இப்படி ஒருதினம் இருந்தால் அன்று எப்படியாயேனும் தங்கள் அன்னையரை சந்தித்து சில நேரமாவது செல்வழிக்க பலர் முயலுகிறார்கள். ஒரே வீட்டிலேயே தன் தாய்க்கே காது கேளாது என்பதற்காக பேசாமலே காலம் கழித்த பிள்ளைகளும் உண்டு. நாமெப்போதும் இப்படி ஒரு தினம் அவசியமா என்று கேட்டு கொண்டிருக்கிறோமே தவிர வருடம் முழுதும் முதுமையில் தனிமையில் உழலும் குடும்பங்களும் உண்டு என்பதை நினைப்பது இல்லை.இது இந்தியாவிலும் சாதாரணம்.அன்பும் பாசமௌடன் தினம் நினைத்துக்கொள்பவருக்காக இல்லை, மற்றவர்களுக்காக.

    ReplyDelete
  11. Anonymous10:38 PM

    Nice article..Women is Love...!Mother Women is more confined in love and affection..
    Raja..

    ReplyDelete
  12. //VSK said...
    என்னமோ சொல்ல வந்து
    "என்னவளை" நினைவுபடுத்தி
    என்னையும் அழவைத்து
    என்னவெல்லாம் சொல்லிவிட்டீர்கள்//

    என்னவோ எழுத ஆரம்பித்தேன் ஆனால் அது எங்கெங்கோ கொண்டுதான் போய்விட்டது, உண்மைதான் கருத்துக்கு நன்றி டாக்டர்விஎஸ்கே!

    ReplyDelete
  13. /சிறில் அலெக்ஸ் said...
    கண்ணீரே வந்துடுச்சுங்க. அருமையான நிகழ்வு. நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.

    ம்...//

    வாங்க அலெக்ஸ் வந்தாச்சா சிகாகோவுக்கு? நிகழ்வு நிஜம் அதான் கண்ணீரை வரவழைச்சிருக்கும்னு நினைக்கிறேன்...என் அப்பா இதை சொல்லும் பொதெல்லாம் கண் பனிக்கிறார் இப்போதும்( அவர் தாய்-என்பாட்டி -மறைந்துவிட்டார் இப்போது இல்லை)

    ReplyDelete
  14. //கோபிநாத் said...
    வணக்கம்

    முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள் ;-))

    கவிதையும், பதிவும் அருமையாக இருக்கு...மனசு முழுக்க அம்மா தான் //
    வாங்க கோபி நன்றிவாழ்த்துக்கும் கருத்துக்கும்.

    ReplyDelete
  15. ஜெஸிலா said...
    கவிதையும், கருத்தும், கட்டுரையும் அருமை ஆனால் //ஆனாலும் சிறப்புதினம்
    என்கிறபோது அன்னையை அதிகமாய் நினைக்கிறோம்,நேசத்தை ,பாசத்தை அன்றைக்கு சற்று அதிகப்படியாகத் தெரிவிக்கிறோம்.
    // இதை மட்டும் ஒத்துக்கொள்ள மனம் மறுக்கிறது. சிறப்புதினத்தில்தான் அதிக நேசம் பசமெல்லாம் காட்ட முடியுமா என்ன? நாளை என்பதை நமக்கே தெரியாத வேளையில் தாயை நினைக்கும் போதெல்லாம் தேடும்போதெல்லாம் அன்பை தெரிவித்து அன்னையர் தினமாக்கிவிடலாமே? யாரோ நிர்ணயித்த அந்த நாளில் ஏன் தனியாக சிறப்பிக்க வேண்டும்? எதிர்பாராத நேரத்தில் எதிர்கொண்டு செலுத்தும் அன்பையும் தரும் பரிசையும் விரும்புவாள் தாய், அன்னையர் தினத்தில் ஒப்புக்கு தருவதைவிட//

    வாங்க ஜெஸிலா உங்க வருகைக்கு முதலில் நன்றி.
    அன்னை என்பவள் எப்போது நாம் எது கொடுத்தாலும் அதை விரும்பி ஏற்பாள்தான் நான் மறுக்கவில்லை.அதேநேரம் ஒப்புக்கு அன்னையர்தினமென்று மட்டும் அவளுக்கு அன்பளிப்புதருவதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. இயந்திர உலகில் பலருக்கு குடும்ப உறவுகளின் அருமை புரிவதில்லை.அதை நினைவுபடுத்தும் அம்சமாக மேல்நாட்டில் இந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.மேலை நாகரீகத்தில் மூழ்கிவரும் நமது தாய்மண்ணிலும் இந்த தினம் சமீபமாகத்தான் வழக்கத்தில் வந்திருக்கிறது.யாரோ நிர்ணயித்ததுதான் ஆனாலும் அன்னையருக்கு எனும்போது
    காதலர்தினத்தைவிட அன்னையர்தினம் சிறப்பிக்க வேண்டியது என்பது என் தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  16. கீதா சாம்பசிவம் said...
    பதிவும், பகிர்தலும் மனதைக் கவருகிறது என்றாலும் நமக்கு உடலும், உயிரும் கொடுத்தவளை நாம் மறக்கவே முடியாது என்கிறபோது சிறப்பு தினத்தில் அதிகமாய் நினைப்போம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உங்கள் எழுத்து நடையும் சரி, தமிழும் சரி மிக மிக அருமை. நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் இதுவே என் அம்மா இருந்தால் தப்புன்னு சொல்லுவாளா, சரின்னு சொல்லுவாளான்னு தான் என் வரையில் முதலில் தோணும். உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தி இருந்தேன் என்றால் மன்னித்துக் கொள்ளவும். //

    வாங்க கீதா!
    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் வந்துவிடுகிறது காலத்தின் ஓட்டத்தில்.
    சிறுகுழந்தையாய் இருக்கும்போது நாம் பெரிதும் அன்னையைச் சார்ந்து இருக்கிறோம்.கல்யாணமாகி நமக்கென்று குடும்பம் வரும்போது அம்மாவின் வீட்டிற்கு நாமே விருந்தாளியாகிறோம்!ஆணுக்கும் மனைவி குழந்தைகள் என்ற உறவின் வருகையில் தாயோடு நிறைய பொழுதுகள் கழிக்க இயலாது. சிறப்புதினம் என்கிறபோது நினைவுகளின் தாக்கம் இன்னும் அதிகமாகிறது என்பதை எனக்குத் தெரிந்த வகையில் சொன்னேன். என் உணர்வுகள் புண்படும்படியாக நீங்கள் எதுவும் எழுதவில்லையே? அவரவர்க்கென்று பிரத்தியேகக் கருத்துகள் இருக்குமல்லவா அதையும் நான் மதிக்கவேண்டும்.

    ReplyDelete
  17. அருமை.

    அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

    எனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-:

    ReplyDelete
  18. VSK said...
    ஒவ்வொரு செயலிலும் அன்னையை நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

    அவ்வப்போது நினைப்பவர்கள் இருக்கிறார்கள்.

    நினைக்க நினைத்தாலும், நேரம் காரணமாக மறப்பவர்கள் இருக்கிறார்கள்.

    ஒட்டுமொத்தமாக இவர்கள் அனைவரையும் நினைக்க வைக்கும் நாள் இது, வெளிக்காட்ட வைக்கும் நாள் இது என்றே சொல்ல முனைந்திருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். //

    மிகச் சரியாக சொன்னீர்கள் விஎஸ்கே..
    நன்றி.

    ReplyDelete
  19. dear Shailaja,
    thanku for a touching post.
    it isa100% truth whenwe think we have come to takemothers forgranted.
    It goes without saying that one day specially shd be set aside for her.
    why not.
    HAPPY MOTHERS DAY TOYOU TOO.

    ReplyDelete
  20. எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் " அம்மா நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும். Mother is always 24x7 mindful about us... but not here kids...

    மனவலியில்.. குற்ற உணர்வில்
    உண்மையுடன்
    என் சுரேஷ்

    ReplyDelete
  21. G.Ragavan said...
    நீங்க சொன்ன நிழக்ச்சிதான் நிதர்சனம். அம்மா என்று அன்பு. தாயிற் சிறந்த கோயிலுமில்லை. அம்மா நினைவுகளைக் கிளறி விட்டுவிட்டீர்கள்...//


    மஞ்சூர் ராசா said...
    மறக்க முடியாத நிகழ்வுகளை எழுதி மனதை நெகிழவைத்துவிட்டீர்கள்.

    அன்னையர்தின வாழ்த்துக்கள்//

    நன்றி ஜிரா,மஞ்சூர் ராசா!

    ReplyDelete
  22. பத்மா அர்விந்த் said...
    அருமையான பதிவு. கால அவசரத்தில் நாம் ப்ல சமயம் நம் உணர்ச்சிகளை வெளியிடுவதில்லை. இதனாலேயே பல சமாயம் குறிப்பாக பெண்கள் தாம் taken for granted உணர்வுடன் நடத்தப்படுகீறோமோ என்று நினைப்பதை நடைமுறையில் காணலாம். இப்படி ஒருதினம் இருந்தால் அன்று எப்படியாயேனும் தங்கள் அன்னையரை சந்தித்து சில நேரமாவது செல்வழிக்க பலர் முயலுகிறார்கள். ஒரே வீட்டிலேயே தன் தாய்க்கே காது கேளாது என்பதற்காக பேசாமலே காலம் கழித்த பிள்ளைகளும் உண்டு. நாமெப்போதும் இப்படி ஒரு தினம் அவசியமா என்று கேட்டு கொண்டிருக்கிறோமே தவிர வருடம் முழுதும் முதுமையில் தனிமையில் உழலும் குடும்பங்களும் உண்டு என்பதை நினைப்பது இல்லை.இது இந்தியாவிலும் சாதாரணம்.அன்பும் பாசமௌடன் தினம் நினைத்துக்கொள்பவருக்காக இல்லை, மற்றவர்களுக்காக.//

    வாங்க பத்மா! வருகைக்கு நன்றி. உங்கள் கருத்து ஆணித்தரமாய் உள்ளது.மிக்க மகிழ்ச்சி பத்மா!

    ReplyDelete
  23. துளசி கோபால் said...
    அருமை.

    அன்னையர் தின வாழ்த்து(க்)கள்.

    எனக்குத்தான் அனுபவிக்கக் கொடுத்து வைக்கலை(-: //

    துளசிமேடம்! என்ன இப்படி சொல்லிட்டீங்க ?நல்ல தோழிகள் தாய்க்கு சமம் நாங்கள்ளாம் இருக்கோம் வருத்தப்படாதீங்க..உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  24. Anonymous6:37 PM

    A superb post,really touching ;-)

    ReplyDelete
  25. /சிலவருஷங்கள் முன்பு என் அப்பா கிராமத்திற்குச் சென்று தனது தாயை(எனதுபாட்டி)எங்கள் ஊருக்கு அழைத்துவரச் சென்ற நிகழ்ச்சியை அவர் வாயிலிருந்து கூறியதை அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
    /
    நெகிழ்வான நிகழ்ச்சி! வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்!!

    கண் கலங்கினது உண்மைதான்!
    பகிர்ந்தமைக்கு நன்றி,ஷைலஜா!

    ReplyDelete
  26. Anonymous7:14 PM

    உண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு!

    பதிவு படித்து விட்டு கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.

    அனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.

    அப்பா கொடுத்து வைத்தவர்! நீங்களும் தான்!

    ReplyDelete
  27. நா.கண்ணன் said...
    மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள். அன்னையர் அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள்!

    நன்றி நா.கண்ணன்!

    ReplyDelete
  28. //தென்றல் said...
    நெகிழ்வான நிகழ்ச்சி! வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் தருணங்கள்!!

    கண் கலங்கினது உண்மைதான்!
    பகிர்ந்தமைக்கு நன்றி,ஷைலஜா! //

    வாங்க தென்றல்! எல்லார் கண்ணையும் கலங்கவச்சிட்டேன் போல இருக்கு...கருத்துக்கும் வருகைக்கும் நன்றி தென்றல்.

    ReplyDelete
  29. முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    உங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது!

    ReplyDelete
  30. //வல்லிசிம்ஹன் said...
    dear Shailaja,
    thanku for a touching post.
    it isa100% truth whenwe think we have come to takemothers forgranted.
    It goes without saying that one day specially shd be set aside for her.
    why not.//

    Thankyou vallima! where are you now?

    ReplyDelete
  31. //C.M.HANIFF said...
    A superb post,really touching ;-)//
    Thankyou so much Haniff.

    ReplyDelete
  32. என் சுரேஷ் said...
    //எனது பெண்சிநேகிதகளிடம் பேசிக்கொண்டிருக்கையில் சிலரிடம் ஒரு கேள்வி கேட்பேன். அது... என்றாவது அம்மாவிடம் " அம்மா நீங்க சாப்பிட்டீங்களா?" என்று மட்டும் கேட்க தொலைபேசியில் அழைத்ததுண்டா... பலரின் பதில்கள் சில் சொட்டு கண்ணிரில் மௌனமாகும்.மனவலியில்.. குற்ற உணர்வில்
    உண்மையுடன்
    என் சுரேஷ் //

    உண்மையை உணர்ந்து விட்டால் வலி மறையும் சுரேஷ்...என்ன செய்வது தவிர்க்கமுடியாத காரணங்கள் பலநல்ல சந்தர்ப்பங்களை இழக்கவைக்கிறது.கருத்துக்கு நன்றி
    ஷைலஜா

    ReplyDelete
  33. //வெயிலான் said...
    உண்மையிலேயே இது தான் அன்னையர் தினத்துக்கு பொருத்தமான பதிவு!

    பதிவு படித்து விட்டு கலங்கிய கண்களோடு பின்னூட்டம் போடலாமென வந்தால் அனைவரும் கலங்கியிருக்கிறார்கள்.

    அனைவருக்கும் இது ஒரு முன் மாதிரிப் பதிவு.

    அப்பா கொடுத்து வைத்தவர்! நீங்களும் தான்!//

    கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன் வெய்யிலான் உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களிடமிருந்து இம்மாதிரி மடல் பெறவும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. //காட்டாறு said...
    முதலில் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

    உங்கள் நடை பிடிச்சிருக்குங்க. அதில் உணர்வுகளை ஆளும் திறம் நன்றாக இருக்கிறது! //

    பிடிச்சுதா காட்டாறு? நன்றிம்மா ரொம்ப...

    ReplyDelete
  35. கண் கலங்க வெச்சுட்டீங்க ஷைலஜா.

    அருமையா இருந்தது.

    ReplyDelete
  36. முதல் நாலு வரியைப் பாத்துட்டு கவுஜன்னு காணாம போயிட்டேன். இப்போதான் முழுசாப் படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.