Social Icons

Pages

Thursday, January 08, 2009

அரங்கனைக்காண வாருங்கள்!

சீராரும் மார்கழித் திங்கள் வளர்பிறையின்
ஏரார் விழாவிற்கே ஏகிடுவாய்-பாரேத்தும்
காவிரியில் நீராடிக் களித்துக் கடவுளைத்தான்
பூவினால் போற்றியே பூசித்து-மேவினால்
மங்கலமாய் உள்ள மதுரப்பிரசாதம்
எங்கும் கிடைக்கும் இனிதுண்பாய்-அங்கதன்பின்
எத்திசையின் கண்ணும் இருக்கும் புலவரெல்லாம்
சித்தங்களித்தங்கே சேர்ந்திருப்பர்-புத்தமுதை
உண்ணவரும் தேவர் ஒருங்குற்றாற் போலங்கே
நண்ணூவரே இப்பெரிய நானிலத்தோர்-கண்ணிறைந்த
காட்சி அதனை நாம் காணலாம் அல்லாமல்
மாட்சியை யாரே வகுத்துரைப்பர்-ஆட்சிபுரி
மன்னன் திருமுன் வணங்கி அரையர்கள்
பொன்னிலுறும் தாளத்தைப் போட்டபடி-இன்னிசையால்
சீரார் திருமொழியின் இன்பம் செவிக்களிப்பார்
ஊரார் வியக்க உரைபகர்வார்-பேரருளால்
அண்ணல் சுவைக்க அபிநயமும் தாம் செய்வார்
கண்ணும் செவியும் களிப்படையும்-நண்ணுவிழா
பத்துப் பகல் நடக்கும் பாற்கடலின் மோகினிபோல்
உத்தமன் அங்கே உலா வருவான் -பத்தர்கள்
எங்கும் நிறைந்திருக்க ஏகாதசியன்று
பொங்கும் பரிவால் புறப்பட்டு-மங்கலமாய்
அந்தணர்கள் போற்ற அருமறைகள்தாமேத்த
சிந்தித்து மக்களெலாஞ் சேவிக்க-முந்துற்று
மின்னுமெழில் வைகுந்த வாயில் வழியாக
அன்னநடையோடழகாகப்-பொன்னரங்கன்
ஏராரும் ஆயிரங்கால் மண்டபத்தை எய்தியங்கு
சீரார் அமளியிலே சென்றமர்வான்-பாரோர்கள்
வந்தங்கே கூடிவலம் வந்து நாளெல்லாம்
சிந்தை களித்திடவே சேவிப்பார்-செந்தமிழில்
செஞ்சொல் அரையர்கள் செய்யும் விரிவுரையால்
நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்வுறுவர்-கொஞ்சும்
தமிழுக் கவர்செய் யபிநயத்தைப் பார்த்தே
அமிழ்தம் குடித்தவராய் ஆவர்-குமிழ் சிரிப்பால்
சிந்தை கவரும் சிறப்பார் கலியன் தான்
வந்து புரியும் வழிப்பறியும்-முந்துற்று
நாடும் பராங்குச நாயகியைக் கண்டிறைவன்
ஈடில்லா இன்பமிக எய்துவதும்-நீடுவளர்
மாட்சியுறுகின்ற மகிழ்மாலை நம்மாழ்வார்
மோட்சமுறு நாடகமும் முற்றும் நீ-காட்சியிலே
கண்டு மகிழ்ந்து களைதீர்வாய் அன்னதன் பின்
அண்டர்கோன் ஆழ்வார்ககருள்புரிவான் -மண்டுகிற
ஆர்வத்தால் தாள்போற்று மாசாரியர்க்கெல்லாம்
சீர்வரிசை செய்தபின் செல்லுங்கால்-நேர்வந்தே
ஐயன் அடியில் அடங்கிப் பணிந்தெழுந்து
செய்ய தமிழ்ப்பாடல் செப்பினையேல்-மெய்யன் தான்
அன்பால் உனக்கே அருள்புரிவான் அதன்பின்னே
உன் போல் உறுவாரார் உண்டு.


(மரத்தடி.காமில்முன்பு எழுதியகவிதை இங்கு மீள்பதிவு)

1 comment:

  1. Anonymous2:41 PM

    நல்ல ஆன்மீக பதிவு

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.