Social Icons

Pages

Saturday, December 21, 2013

புள்ளும் சிலம்பின காண்!

                                                                
கோதை  எங்கேயம்மா  கிளம்பிவிட்டாய்?

குளித்துமுடித்து  வாசலில்கோலமிட்டு சாண உருண்டைமீது பரங்கிப்பூவை வைத்துவிட்டு வெளியே கிளம்பிய மகளை ஏறிட்டார் பெரியாழ்வார்.

 
 
பின்ன என்ன அப்பா விடிந்தும் இன்னும் பாவையர் சிலர் எழுந்திருக்கவில்லை அவர்களை  எழுப்பப்போகிறேன்  இனி வரப்போகிற 10 பாசுரங்கள்  உறங்கும் என் தோழியர்களுக்காகத்தான்..
கேளுங்கள் அப்பா இன்றைய பாசுரத்தை..
 
 
புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


அருமையாக  எழுதி இருக்கிறாய் கோதை! பட்சிராஜனை  முன் வைத்து ஆரம்பித்த  விதம் அழகு.பெருமானின் திருவடியைத்தாங்கும் பேறுபெற்ற பறவை அரசன் கருடன். திருவரங்கம் கோவிலில் கருடன் சந்நிதியை அடைத்துக்கொண்டு பிரும்மாண்டமாய் காட்சிதருவார் அண்ணல் எப்போது அழைத்தாலும் பறக்கத்தயாராக அவன் சந்நிதி நோக்கி கைகுவித்தபடி இருக்கும் பட்சிராஜனின் பணிவும் பக்தியும்  பெருமைக்குரியது..

சரீரம் என்கிற மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. உடலும் உயிருமாக சேர்ந்து இருக்கின்றன.இரண்டும் ஒன்றுக்கொன்று இணைபிரியாமல் இருக்கின்றன..ஒரு பட்சி  சிற்றின்பதுக்கங்களை அனுபவிக்கிறது, மற்றொன்று கர்மத்தொடர்பு இல்லாததால் ஒளியோடு  இருக்கிறது. ஒருபட்சி ஜீவாத்மா. கர்மசம்பந்தமான  பட்சி பரமாத்மா,  இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்புள் தான்  அந்தப்பட்சி தான் சிலம்புகிறது நம்மை எழுப்புகிறது.. மகாபாவிகளான நம்மை ஏதாவது ஒரு நேரத்தில்  கரைசேர்க்க எழுப்புகிறது..

 அருமையான  விளக்கம் அப்பா... மேலும் பாசுர  அர்த்தம் கேளுங்கள்..
புள்ளும்சிலம்பின காண் = புள் என்றால் பறவை! பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன!  சிலம்பு!கொலுசு என்றால் நடந்தால் தொடர்ந்து ஒலிக்கும் நடக்கையில் ஆனால்
சிலம்பில் பரல்கள் குறைவு அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனால் விட்டுவிட்டுத்தான் வரும்.. அதே போலத் தான், பறவைகளும் விட்டு விட்டுக் கூவுகின்றன அதாவது சிலம்புகின்றன..குக் கூ..குக்கூ....

புள் அரையன் கோயிலில் = பட்சி+ராஜன் = புள்+அரையன்! பெரிய திருவடி,பறவைகளில் ஆழ்வார் கருடாழ்வார்.
புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்! ‘இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான்..’ ஆழ்வார் வாசகம்
வெள்ளை விளிசங்கின். பேரரவம்...வெண்மையான சங்கின்   பெரும்நாதத்தை(ஒலியை)
கேட்டிலையோ?...கேட்கவில்லையா
பிள்ளாய் எழுந்திராய்.....பெண்ணே  எழுந்திரு
பேய்முலை நஞ்சுண்டு,,, பேய்மகளாம் பூதனையின் முலைப்பாலை உண்டு அவளை அழித்து பொய்கைஆழ்வாரும்  பூதனையைப்பேய் என்பார்’ சூர் உருவின் பேய் அளவு கண்ட பெருமான்’ என்பதாக..
கள்ளச் சகடம் கலக்கு அழிய = வண்டிச் சக்கரமாய் வந்தான் சகடாசுரன்!  அவன் கலங்கும்படி அழித்து
கால் ஓச்சி = காலால் ஓங்கி உதைத்து

வெள்ளத்து அரவில் = பாற்கடல் வெள்ளத்தில், அரவமான பாம்பின் மீது ‘மனத்து உள்ளான் மாகடல் நீர் உள்ளான்..” என்பது பேயாழ்வார் வாக்கு..
துயில் அமர்ந்த வித்தினை =  உறங்கியபடி அமரும் வித்து

பரமபதத்தில் அமர்ந்த கோலம்! பாற்கடலில் கிடந்த கோலம்! ஒருசேர சொல்கிறேன் அப்பா
வெள்ளத்து அரவில் =  பாற்கடலில்துயில்! 
 வித்தாக..பரமபதத்தில் அமர்ந்தகோலம்
 
சரிதானே அப்பா?
 
 
மிகச்சரி கோதை..  கடைசிவரியை நான் விளக்குகிறேனே...
உள்ளத்தில் கொண்டு...மனதினில்  ஏற்றுக்கொண்டு அவனை அமரவைத்து
முனிவர்களும் யோகிகளும்...தியானம் செய்யும் ரிஷிகளும் யோகாப்பியாசம் செய்யும் கைங்கர்ய சீலர்களும்...
 
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்....நிதானமாக எழுந்து(உறங்கி எழுகையில் நிதானம் தேவை அது இதயத்திற்குநல்லது) ஹரி ஹரி என்று சொல்லும் பேரொலியானது(ஹரி நாமம்  உரக்க சொல்லவேண்டும்)
 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்....மனதில் புகுந்து குளிர்கிறது  இனியாகிலும் எழுந்து வாருங்கள் பெண்களே!.....  

முடித்துவிட்டேன் கோதை இனி நீ நோன்புக்குப்புறப்படு அம்மா!
 
 
 நல்லது அப்பா..பாவை நோன்பிற்கு  தோழியர் தயாராகி எழுந்துவிட்டார்கள்..நானும் புறப்படுகிறேன்...
 

13 comments:

 1. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_21.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டிடி நீங்கள் சொன்னதும் வலைச்சரம் பார்த்தேன் அங்கும் பதிலிடவேண்டும்

   Delete
 2. அருமையான விளக்கத்துடன் சிறப்பன பகிர்வு...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆண்டாள் கை கிளியாக மனம் கவரும் அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...

  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

  ReplyDelete
 4. புள் அரையன் பாசுரத்திற்கு அருமையான புள் அரையன் படம். விளக்கங்களும் ஆழம் அருமை.

  ReplyDelete
 5. அருமை... விளக்கமும் பகிர்வும் சூப்பர்.

  ReplyDelete
 6. இந்த பாசுரத்திற்கு பல அர்த்தங்கள் சொல்லப்படுகிறது..அதில் நான் ஒன்றை வலைதளத்தில் படித்ததில் இப்படி சொல்லப்பட்டு இருக்கிறது.
  .
  முதலில் துயிலெழுப்பும் சப்தம் கருட பகவானிடமிருந்து (பட்சி)இது ஆசார்யனிடமிருந்து பகவானை அடைகிற உபதேசம் என கொள்ளலாமாம்.வெள்ளை விளி சங்கு அடியார்களின் சத்வ குணத்தையும்,பேய் முலைஅகங்காரத்தையும் உலக பற்றினையும், ,அந்த விரும்பத்தகாத குணங்களினால் ஏற்படக்கூடிய பாவங்களை நஞ்சாகவும் எடுத்து கொள்ளலாம்.

  அந்த பாவச்செயல்களினால் தூண்டப்பட்ட உணர்வுகளை கள்ளத்தனமாக வந்த சகடாசுரனுக்கு ஒப்பிட்டு இந்த நஞ்சையும் உணர்வுகளையும் அடியார்கள் ஆசார்யன் துணையுடனும் அவர் தந்த உபதேசத்தின் மூலமாகவும் இடை விடாது எப்பொழுதும் 'அரி' நாமத்தை ஓதுவதால் அகற்றி இந்த சம்சார பந்தத்திலிருந்து விடுபடலாமாம்.
  .
  ஒரு சின்ன பாசுரத்தில் ஆண்டாள் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி மிக அழகாக எழுதி இருப்பது ஒரு பிரமிப்பையே உண்டாக்குகிறது.
  நன்றி ஷைலஜா. .

  ReplyDelete
 7. அழகான பதிவு. பாராட்டுக்கள் இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. முப்பதும் தப்பாமல் விளக்கம் சொல்லவும்
  காத்திருக்கிறோம் .

  ReplyDelete
 9. இன்றைக்கு இந்த பாசுரத்திற்கு விளக்கம் ஒன்றை உபன்யாசத்தில் கேட்டு மகிழ்ந்தேன்......

  இங்கேயும் படித்து மகிழ்ந்தேன்.

  ReplyDelete
 10. பரங்கிப்பூவா? சாத்தியம் குறைவுங்க.

  ReplyDelete
  Replies
  1. பல இடங்களில் கிடைக்கிறதே அன்னிக்கு சென்னை பெசண்ட் நகர்ல ஒரு வீட்டு வாசல் காம்பவுண்ட் கம்பில காலைல வாக் போரப்போ பார்த்தேன் ஏகமா பரங்கிப்பூ காட்சி அளித்தது

   Delete
 11. பின்னூட்டமிட்ட அனைவர்க்கும் மிக்க நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.