Social Icons

Pages

Thursday, July 24, 2008

அனி மை ஹனி!( அறிவியல்கதை போட்டிக்கு)


அனி வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.

“டாட்! இன்னமும் இந்த கையில் வச்சி புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லேயே கம்ப்யூட்டர் இருக்கில்ல? ஓபன் செஞ்சி படிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து மின்னஞ்சலைப்பார்த்தபடி.

“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.

‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷைலஜாகிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2050ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”


மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.
தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்… அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.

லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தாள்…

'கல்லைமட்டும்கண்டால்' என்றது ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானல்.

“ஓ மை காட்! ஏன் இப்படி பழையபாட்டாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் பாட்டு ,,நீங்க கேட்டுட்டு இருங்க நான் க்ளப்புக்குப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸா சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”

“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”

‘வாட் ?மணி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆ ணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன் க்ளப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’

அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.

.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.

கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை பாவனா மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”

திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.

அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்
5 ஜிசெல்போனில்(பிரசவம் தவிர அதில் எல்லா காரியங்களையும் வெற்றிகரமாய் செய்யலாம் என அதைக்கண்டுபிடித்த யென்சிங்மங் சொல்கிறார்) ஜோ(தி) வந்தாள்.

“வாட்ஸ் அப் டீ?”

“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, அவனேதான்..'


"ரியலி?'
"யெப்..கம் சூன் அனி"

*********************************

மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் பர்கர் கையோடேயே வந்து வழிமறித்தான் வா(சன்).

சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர் ஷாரூக்கான்,சிரிப்பில் பழைய மாதவன்.துடிப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2050ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.

“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.

“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”

“அனி மை ஹனி! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றும் தனி அழகுதான்.உன் நினைவில் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!
நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.
லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”

“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”

“அதனால் என்ன அனி~ இ து 2050… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”

“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”

வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை மொபைலில் தேடினாள். அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.

“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்

“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”

ஜோ வந்ததும்
“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அ துக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.

“மொபைலில் கோயிலைத்தேடினியா?”

“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”

ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,

அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் த ருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பிள்ளளயாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.

“ஹாய் தர்ம்?”

யார் இந்த கண பதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.

அனிஅவன் அருகில் சென்றாள்..ஜோ தான் போவதாயும் தர்மை சரிக்கட்டும்படியும் ஜாடைகாட்டிவிட்டு நகர்நதாள்.

“தர்ம் நான் ரெடியா… டேட்டிங்லாம் எனக்கும் பிடிக்கல வச்சிகிட்டாலும் அது உன்கூடத்தான்.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?”

“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எ ங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”

“தர்ம் ஐ லவ் யூ.நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”

“இந்த வச னமெல்லாம் சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே நான்போறேன் “
வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.

அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.

கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்
“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’

பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.
அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?

அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.
“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”

“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.

“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.

“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”

தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.

ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.
***************************************************

டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க
அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.

மெல்ல காம்பவுண்டிர்குள் குதித்தாள்.

நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை

மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்

மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.

ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.

அனி அவன் அருகில்வந்து நின்றாள்.

“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா இந்த மிஸ்அனி,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”
குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது

“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.

அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .

வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்பொல இருந்தது..

“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்
“நான் ,நா…ன்…”
“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்
சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”

அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்
“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.

“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருகக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.



அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம் நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலிதூங்கிக்கொண்டிருந்தது.

“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.

“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது முப்பது வருஷம் முன்னாடி எனக்கு கல்யாணமாகி அந்த உறவில் பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம் உ டைஞ்சிபோனேன்.
அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம் அ ஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….

அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே க்ளோனிங் கைஸ்! லுக்கிங் நைஸ்! அவங்களில் ஒருத்தனுக்கு கண்டிப்பா பழைய ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”

குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.
*****************************************************************
“ஏய் என்னாச்சு அனிதா? சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல்கதைப்போட்டிக்கு எழுதணும்னு சொல்லிட்டு இன்னமும் தூங்கிட்டு இருக்கே? காலேஜுக்கு நேரமாச்சு…ஏந்திரு அனிதா ஏந்திரு?”

ஜோதி வந்து தன்னைத்தட்டி எழுப்பவும் அனிதா ,”கனாக்கண்டேனடி தோழி” என்று பாடியபடியே பாத் ரூமுக்குப்போனாள் .

*************************************************************
மேலும் படிக்க... "அனி மை ஹனி!( அறிவியல்கதை போட்டிக்கு)"

Sunday, July 13, 2008

காவேரி ரகஸ்யம்!

ஆடி மாதம் பிறக்கபோகிறது! பண்டிகைகளை
தேடிக்கொண்டு சேர்க்கும் இந்த மாதத்தின் சிறப்பிற்காக இல்லை இந்தப்பதிவு


காவிரிக்காக என்று சொல்லலாம்!(அதன் அரசியல்சிக்கல்களைத் தவிர்த்து!)


"நடந்தாய் வாழி காவேரி''என்று இளங்கோவடிகளார் சிலப்பதிகாரத்தில்
புகழ்ந்திருக்கிறார்.


இந்க்காவேரிக்குத்தான் ஆடிவந்தால் எத்தனை ஆட்டம் பாருங்கள்!
திருவரங்கநகருக்கு ஓடிவரும்போது காவிரியின்
விஸ்வரூபம் சொல்லி மாளாது ! அகண்ட காவிரி என்பார்கள்
அம்மாமண்படப்படித்துறையில் பெருகி ஓடும் காவேரிக்கு!ஆடிப்பதினெட்டுக்கு
காவேரிக்கு விசேஷ பூஜைகள் !மரியாதைகள்..!ஆடிப் பதினெட்டு நோன்பு'' என்பார்கள்.
இத்தினதன்றுகாவிரிக்கரைக்கு. சித்திரான்னங்களை எடுத்துச் சென்று உறவு
முறைகளுடன் சேர்ந்து உண்ணும் கொண்டாட்டம் காணக் கிடைக்காத ஒன்று.


இந்தக்காவிரிக்கு பெரிய வரலாறு இருக்கிறது.


திருமூலர் நாள் தொட்டு கணக்கிலடங்காத சிவயோகிகள், திருப்பாணாழ்வார் நாள்தொட்டு


கணக்கிலடங்கா இசையோகிகள்!


இவர்களுக்கும் முன்னாலிருந்து காவேரி ஓடுகிறது.


அகத்தியரின் கதை இங்கு உள்ளது.


எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவோ தெரிந்து கொள்ளவோ முடியாதுதான்.உள்ளங்கை ரேகையையே வாழ்நாள் முழுவதும்
பார்க்கலாம் என்பார்கள்(சோதிடம் சொல்லத்தான்)


குடகிலிருந்து பிடித்து காவேரியின்கரையின் 400 ஊர்களையும் தென் கரையில்377
ஊர்களையும் குறிப்பிடுகிறது* காவேரி ரகஸ்யம்* எனும் ஒரு நூல்..கோபாலய்யர் என்ற
மாஜி கல்வித்துறை அதிகாரி இந்த நூலை இயற்றி இருக்கிறார்.


இதை நல்ல புத்தகங்கள்சேகரிக்கும்குடும்ப உறவினர்(இப்போது அவர் இல்லை)
வீட்டில் அண்மையில் பார்க்க நேரிட்டது ,அதுவும் எங்கே என்கிறீர்கள் பழைய
இரும்பு சாமான்கள் வேண்டாத பொருட்கள் அடைத்து வைக்கப்படிருந்த கார் ஷெட்டை
ஒட்டிய குறுகிய அறையில்.!


.அதிகம் படிக்கமுடியாமல் பக்கங்கள் பழுதடைந்துகிடந்தன. புத்தகங்களின் அருமை
தெரியாதவர்கள்அதனை சரியாகப்பேணவில்லை என்பதை நலிந்து போன அதன் பக்கங்கள்
தெரிவித்தன.


ஏதோ புது மாட ர்ன் ஆர்ட் படத்தை வீட்டின் சுவரில்மாட்டுவதற்கு அந்தவீட்டுப்பெண்
சுத்தியலைத்தேடி அங்கு செல்லவும் நானும் உடன் போனேன்...மரப்பெட்டி ஒன்றில்
உடம்புகளை நசுக்கிக்கொண்டு கோமா நிலையில்நிறைய்
புத்தகங்கள் காணப்பட்டன. அருகில் கோணிப்பையில் சில
புத்தகங்களைக்கட்டிப்போட்டும் வைத்திருந்தார்கள்.
மூச்சடைத்துகிடந்த கோணிப்பை புத்தகங்களை முதலில் வெளியே
எடுத்தேன்..காற்றில் அதன் பக்கங்கள் படபடத்தன.


"இதெல்லாம் வீட்ல குப்பையா இருக்குதுன்னு இங்க கொண்டு
வந்துவச்சிட்டோம்...எல்லாம் சமீபத்துல இறந்துபோன என் மாமனாரின் சொத்துக்கள்!"
சிரித்தாள் அந்தப்பெண்.


என்னால் சிரிக்க முடியவில்லை.


"நான் இதைப்பார்த்துவரேன் நீங்க போங்க' என்று சொல்லிவிட்டு வேதனையுடன்
அந்தபுத்தகங்களை மெல்ல ஒவ்வொன்றாய் பிறந்த குழந்தையைத் தூக்குவதுபோல இரு
கைகளிலும் ஆதரவு கொடுத்து எடுத்தேன்.


அடைத்துவைக்கப்படிருந்த. அந்த புதையலில் கிடைத்த ஒருபொக்கிஷம்தான்
இந்தபுத்தகம்.


பெயர் காவேரி ரகஸ்யம். 'ஸ் 'தான் .'சி' அல்ல:)
எடுக்கும்போதே பக்கங்கள் உதிர்ந்தன.கற்றதோ இல்லையொ கசடற
புத்தகத்தை,அரித்திருந்தது கரையான்கள்!


எவ்வளவு முயன்றும் அதனை முழுமையாகப் படிக்கமுடியவில்லை.


திருப்பும்போதே ஓரிரு பக்கங்கள் தவிர மற்றவைஉயிரைவிட்டன. ரகசியமென்பதாலோ
என்னவோ எனக்குக்கடைசிவரை புத்தகத்தில் என்னஎழுதி இருந்தது என்று தெரியாமலே
போய்விட்டது..மிகவும் அருமையான புத்தகம் என்றும் காவேரியைப்பற்றி பலதகவல்கள்
அதில் உள்ளன என்று எப்போதோ யாரோ சொல்லி கேட்டிருந்ததால் பார்த்ததும் ஆவலானது.ஆனால் ஓரிரு பக்கங்கள் தவிர எதுவுமே
படிக்க முடியாமல் சருகு போல கையில் எடுக்கும் போதே உதிர்ந்துவிட்டன.


.


காவேரியின் விஸ்வரூபத்தை அது செல்லும் இடங்களை ஒரு பயணத்தில் நம்மால்
கண்டுவிடமுடியாது என்பது உண்மை .


நடந்தாய் வாழி காவேரி என்று புத்தகம் எழுத பிரபல எழுத்தாளர் திரு.திஜானகிராமன்
,தனது எழுத்துலக நண்பர்களுடன் சிலவருடங்கள்முன்பு பயணம் செய்ததாக
கேள்விப்பட்டிருக்கிறேன்.


காவிரியைத் தழுவிவந்த திருவிழாக்கள், கதைகள், நாட்டுப்புறப் பாடல்கள் என்று
எத்தனையோ விஷய்ங்கள் உள்ளன.


தண்ணீர், குழாயிலும்தான் வருகிறது ஆனால் ஆற்றில் ஓடும்போது பாட்டாகக்
கேட்கும் ! கவிதையாகச் சிரிக்கும்!


காவிரியின் ரகசியம் என்ன? அந்தப்புத்தகம் யாராவது படித்திருக்கிறீர்களா?


நதிமூலமே ரகசியம்தானே?
மேலும் படிக்க... "காவேரி ரகஸ்யம்!"

வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்


எப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன்.

நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட ஏதாவது மாற்றம் ஏற்படலாம்.

"அதெல்லாமில்லை யார் வந்தாலும் சரி நான் நினைத்ததைத்தான் நடத்திக்கொள்வேன்"

வசந்தாவின் ஒரே தம்பி சந்துரு யாருடனோ உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு சிறுவயதிலிருந்தே மென்மையாகப்பேச வராது. மூன்று பெண்குழந்தைகளுக்கு பின் பிறந்த பிள்ளைஎன்பதால் அவனுக்கு வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுத்து அப்போதே குட்டிச்சுவராக்கி விட்டிருந்தனர்.

அவன் வீட்டில் எங்கே தங்கி இருந்திருக்கிறான்? பதினான்கு வயதில் சிகரெட் பிடித்தவனை அவன் தந்தை ரங்கசுவாமி அதட்டிக்கேட்க கோபித்துக்கொண்டு விட்டைவிட்டு ஓடிப்போனான். பிறகு ஐந்தாறு வருஷத்திற்குப்பிறகு திரும்பிவந்தான். படிப்பும் வரவில்லை. அவன் பழக்க வழக்கங்களும் சரி இல்லை.

அவன் கதை கிடக்கட்டும் எனக்கு இப்போது விசாரமெல்லாம் வசந்தாவைப் பற்றித்தான்.
வசந்தா வருவாளா?

கடைசியாக அவள் எப்போது ஊருக்குவந்தாள்? பத்துவருஷம் இருக்குமா? இருக்கும் இருக்கும்.

அப்போது அவளுக்கு முப்பத்தி எட்டு வயது. தந்தையின் இறுதிக் காரியங்களில் பங்குகொள்ள வந்தவள், தாழ்வாரத்தூணைக் கட்டிக்கொண்டு கதறியதை இப்பொழுதும் என்னால் மறக்கமுடியவில்லை.

வசந்தா ரங்கசுவாமியின் முன்றாவது பெண். ஜாதகக்கோளாறு என கல்யாணம் தள்ளிக்கொண்டேபோய் முப்பதுவயதை நெருங்கும்போது தான் நடந்தது.

ஆனால் அந்த தாமதமும் நல்லதாயிற்று. மூத்த இரண்டு மாப்பிள்ளைகளைவிட வசந்தாவிற்கு வாய்த்தவர்தான் பணக்கார மாப்பிள்ளை.

நல்லபடிப்பு, நல்ல உத்தியோகம் .வெளிநாட்டில் சிலகாலம் வேலை நிமித்தம் போய் தங்க வேண்டி இருக்குமென்று தந்தையின் மறைவுக்கு வந்தபோது வசந்தா தன் சகோதரர்களிடம் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தாள். தன் ஒரே பிள்ளை திவாகரையும் அழைத்து வந்தவள்,
" பாருடா நான் முப்பது வருஷம் வாழ்ந்தவீடு இது! அந்த நாளில் என் தாத்தா பார்த்துப் பார்த்துக்கட்டிய வீடு "
என்று மகிழ்ச்சியுடன் கூவினாள் .அவள்குரலைப்போல அவள் பாதத்தின் கொலுசு சத்தமும் எனக்கு மிகவும் பரிச்சயம்.

ஏழு வயசிலிருந்தே வசந்தா பரதநாட்டியம் ஆடத்தொடங்கிவிட்டாள். கூடத்தில் இப்போதுகூட சலங்கை ஒலி சத்தம் கேட்பது போல பிரமை எனக்கு..

உள்ளூர் கோயிலில் பதினாலு வயதில் அவளின் நடன அரங்கேற்றம் நடந்தது.
'எத்தனை இடங்களுக்குப் போய் ஆடினாலும் நம் வீட்டுக்கூடத்தில் நடராஜர் படத்திற்கு எதிரே வெறும் கொலுசை மட்டும் மாட்டிக்கொண்டு நாட்டியமாடுகிற திருப்தி வேறெங்கும் கிடைக்காது 'என்பாள்.

'நடனம் முடிந்து கூடத்தில் அவள்மட்டும் தனியாக இருக்கும்போது தரையைக்குனிந்து பரிவுடன் வருடுவாள்.

'பாவம் வலிக்கிறதா உனக்கு ?' ரகசியமாய் தரைமீது இதழ் பதித்துக் கேட்பாள்.

எனக்கு உடம்பே சிலிர்த்துப்போகும்.

வசந்தா கல்யாணமாகிப்போகிறவரை வாசல்திண்ணையிலிருந்து கொல்லைக்கிணற்றடி எல்லையும் சுற்றுப்புற இடங்களும் சாணத்தில் மெழுகி மினுமினுக்கும்.இழைஇழையாய் அரிசிமாவுக்கோலங்கள். ஒரு இழையை முழுவதும் எறும்புகள் இழுத்துக்கொண்டுபோய்விடும்.

கூடத்தில் ஊஞ்சலில் இரும்பு வளையங்கள் கிரீச்கிரிச் என்று சதா ஓசைப்படுத்தியபடியே இருக்கும். அக்காக்கள் இருவரும் திருமணமாகிப்போய்விட, ஒரேதம்பி சந்துருவும் எப்போதாவதுதான் வீட்டுக்குவர ,அந்த நாட்களில் வசந்தாவின் பேச்சுத்துணை அவள் தந்தை ரஙகசுவாமிதான். ஏற்கனவே மனைவியை இழந்த நிலையில் தனது குழந்தைகளுக்குத் தாயுமானவராய் இருந்தவர் வசந்தாவிடம் மட்டும் உற்ற சிநேகிதனாகவும் இருந்தார்.

வாரம் ஒருமுறை இருவரும் சேர்ந்து கூடத்துச் சுவரில் மாட்டி இருக்கும் காளிங்க நர்த்தன க்ருஷ்ணர் படத்தையும் தங்க ரேக்குகளும் சிவப்பு பச்சைக்கற்களும் பதித்த நடராஜர்படத்தையும் மெல்லியதுணியால் சுத்தமாய் துடைப்பார்கள்.

ஹெச் எம் வி கிராமபோனை காமிரா உள்ளிலிருந்து சிரமப்பட்டு எடுத்துவந்து, என்சிவசந்தகோகத்தின் காபி ராக 'என்னதவம் செய்தனை?' என்ற பாட்டினைப் போட்டுக் கேட்டபடி ஒட்டடை அடிப்பார்கள்.

"ஏன்மா வசந்தா, புதுசா நீ வரைஞ்சிருக்கிற யசோதாகிருஷ்ணர் படத்தை ஃப்ரேம் செய்து சுவர்ல ஆணி அடிச்சிமாட்டலாமா ?"ரங்கசுவாமி ஆர்வமாய் கேட்பார்.
அவ்வளவுதான் ,வசந்தாவிற்கு முகம் சிவந்துவிடும்.

" ஆணியா? ஏற்கனவே சுவரில் கடிகாரம், படங்கள் மான்கொம்பு என ஏழெட்டு ஆணிகள் அடித்தாயிற்றுப்பா. பாவம் இந்த வீடு.. சிலுவையில் அறையப்பட்ட ஏசுபோல வாய்விட்டு அழமுடியாமல் தவிக்கிறது .மழை வெய்யிலிருந்து நம்மை ரட்சிக்கிற வீட்டில் வரவர அதிர்ந்து நடனமாடக்கூட மனசு வரமாட்டேன் என்கிறது."

வசந்தாவின் விரல்கள் மென்மையாய் சுவரை நீவிக்கொடுக்கும்போது எனக்கும் உற்சாகம் பொங்கும். இருபத்திமூன்று வயது வசந்தா அன்று தனியாக் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபோது ரகு வந்தான்.
ஊருக்குப் புதியமுகம்.

வந்தவன் வசந்தாவைபார்த்ததும் , அவளது அழகை ,அண்மையில் ஆடிய நடனத்தை வானளாவப்புகழ்ந்தான். பேச்சினூடேதான் தெரிந்தது, ரகு, ரங்கசாமியின் பால்யநண்பரின் மகன் என்று. டில்லியில் வேலை செய்கிறானாம்.கிராமங்களின் இயற்கை அழகைப்பார்க்க சிலகாலம் வந்திருக்கிறானாம் எல்லாம் அவர்கள் பேசும்போது என் செவிகள் திறந்திருக்கவும் கேட்க முடிந்தது.

பேசியபடியே ஊஞ்சலை நெருங்கியவன், சட்டென வசந்தாவின் சிவந்த கன்னத்தை விரலால் தட்டியபடி, ஏதோகிசுகிசுப்பாய்கூறவும

அவள் வெட்கப்பட்டாள். ஓஹோ விஷயம் இப்படிப்போகிறதா? நான் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்து ரசித்தேன். எனக்கு மட்டும் தெரிந்த விதத்தில் அவர்கள் இருவரும் எத்தனையோ முறை மொட்டைமாடிக்குப்போகும் வழியில் இருக்கும் பூட்டிய அறையின் துருப்பிடித்த பூட்டைத்திறந்து மரக்கதவை லேசாய் நெட்டீத்தள்ளியபடி உள்ளே செல்வார்கள் .

அந்த அறைக்குள் வசந்தாவின் கொள்ளுத்தாத்தா எப்போதோ ஜில்லாபோர்ட் ப்ரெசிடெண்ட்டாய் இருந்த காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேர்பு பத்திரங்கள் அலமாரியில் குமிந்திருக்கும்.தவிர அந்த அறையில் தேக்குத்தொட்டில், நடைவண்டி,மரத்தாலான வண்ணம்போன ஆடுகுதிரை,.பழைய குடை கைத்தடி கால் உடைந்துபோன நாற்காலி வெண்கலப்பிடிகொண்ட பழைய ஆர்மோனியப்பெட்டி என்று உபயோகப்படுத்தாத பல பொருட்கள் சிதறிக்கிடக்கும்.

வைமு கோதைநாயகி வடுவூர்துரைசாமி புதுமைப்பித்தன் கல்கி என நாவல்கள் இன்னொரு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். உடைந்தபோன பழைய நாளைய மூங்கில் சோபா சுவர்மூலையில் இன்னும் கொம்புகள் தேய்ந்தாலும் வீரம் தொலையாத காளைபோல
கம்பீரமாய் வீற்றிருக்கும். புதையல் போல தேடத்தேட இன்னும் பல சாமான்கள் கிடைக்கும்.

வசந்தா ரகுவுடன் அங்குபோய் உட்காருவாள். .மொட்டைமாடிக்கு ஓடிவந்ததில் மேல்மூச்சு வாங்கும் முன் நெற்றி வியர்க்கும். அதைவிரல் நுனியில் ஒற்றி எடுத்தபடி ரகு அவளருகில் அமர்வான். இருவரும் மணிக்கணக்காய் பேசிக்கொள்வார்கள்.அந்தக்கணங்களை வசந்தா மறந்தாலும் என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

"வசந்தா உன் புத்திசாலித்தனம் எனக்கு பிரமிப்பா இருக்கு..மில்டனையும் பேசறே கம்பனையும் கோடிட்டு காட்டறே..ரியலி அமேசிங்!!"
ரகுவின் ரகசிய வார்த்தைகள் எனக்குக்கேட்டுவிடும்.

அன்று சின்னதாய் ஒருமுத்தத்தின் சத்தம் கேட்கவும் விருட்டென வசந்தா எழுந்து நிற்பதை கவனித்தேன்.

"நோ ரகு கூடாது தப்பு மகா தப்பு"

" என்ன தப்பு வசந்தா? எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு..மணிக்கணக்கா இந்த ரூம்ல உக்காந்து சினிமா இலக்கியம் விளையாட்டு என்று பலகதை பேசி இருக்கோம். இந்த ஒரு மாசத்துல எனக்கு உன்னை ரொம்பபிடிச்சி அது காதலாகிவிட்டதால் அதற்கு பரிசா உன்னை முத்தமிட்டேன் அது தப்பா?"

" ரகு! என் அப்பா கொடுத்திருக்கும் சுதந்திரத்தில் நான் மனம் விட்டு உங்ககிட்ட பேசிப்பழகினேனே தவிர அதில் காதல் இல்லை. ஆணும் பெண்ணும் நட்பாகவே இருக்கமுடியாதா ரகு? காதலும் காமமும் இல்லாத ஆண்-பெண்நட்புச்சூழ்நிலை எந்த காலகட்டத்தில்தான் உருவாகும்? இது ரொம்ப பழைய கலாசாரப்பண்பாடுகளில் ஊறிய குடும்பம். இங்கே காதல் நுழையமுடியாது அதுவும் நீயும் நானும் ஜாதிகளில் வேறுபட்டு இருக்கும் நிலையில் இது சாத்தியமே இல்லை..உன் மனசில் நான் கிளர்ச்சியை உண்டுபண்ணி இருந்தால் மன்னிச்சிடு ரகு" என்று சொல்லி வேகமாய் திரும்பினாள்.

அந்த வேகத்தில் காலடியில் பழைய செட்டியார்பொம்மை ஒன்று உருண்டு ஓடியது, மர கிலுகிலுப்பையும் தொட்டில்கயிறும் காலடியில் இடறி நின்றன. நடை வண்டி ஒன்று தீனமாய் நகர்ந்தது.

"பார்த்தாயா ரகு இந்த வீட்டின் பழமை இன்னும் வாழ்வது உனக்குத் தெரிகிறதா? " என்று கேட்டுவிட்டு கீழே போனாள்.

அதற்குப்பிறகு வசந்தா மொட்டைமாடிபக்கமே போகவில்லை.

ரகு நல்ல அழகனாய்த்தான் தெரிந்தான். படிப்பு குணம் எல்லாம் இருந்தும் வசந்தா அவன் காதலை ஏற்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். 'காதலொருவனைக்கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து' என்றும் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் பாரதி சொன்னதாய் அன்று இதே வசந்தாதானே அதை நடனமாய் ஆடி மகிழ்ந்திருக்கிறாள்? பின்னர் ஏன் ஜாதியைக்காரணம் காட்டி ரகுவை மறுக்கிறாள்? எனக்கு விளங்கவில்லை.

ஆனால் ரகுவைவிட அழகனாய் குணமுள்ளவனாய் ஒரு சம்பந்தம் கிடைத்து வசந்தா கல்யாணம் முடித்து ஊரை விட்டுப்போனாள். போகும்போது என் தலையை வருடிவிட்டுத்தான் போனாள்.

"அடிக்கடி வந்து பாக்கறேன் என்ன? பல்கில்லுபோகாம, தோல் சுருங்காம களையா ஜோரா இப்படியே நீ இருக்கணும் சரியா?" என்றாள் செல்லமாய் அதட்டும் குரலில்.

நான் 'உம்' சொன்னது அவள் காதில் விழுந்ததோ இல்லையோ?

முன்பெல்லாம் வருடம் ஒருமுறை வருவாள். வந்ததும் நேராய் கொல்லைப் புறத்திற்கு வந்து கொட்டகைக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தைக்கட்டிக் கொள்வாள், அதுவும் இவளைக்ண்டதும் கன்றுக்குட்டியோடு சேர்ந்து துள்ளிக்குதிக்கும்.என்னைப்போல லட்சுமிக்கும் வசந்தாவின் கொலுசுச்சத்தம் பழக்கமாகி இருக்கவேண்டும்!

"எல்லாம்பழைய கதை சார் !பத்துவருஷம் முன்பு நானும் ஊரைவிட்டுபோயிட்டேன் .. துபாய்ல வேலை செய்து சம்பாதித்ததை இங்கே பிசினஸ் செய்ய வந்திருக்கிறேன்...வீட்டைதிறந்து எல்லாசாமான்களையும் ஒழுங்குபடுத்தவே ஒருவாரமாச்சு.கிராமுமில்லாத நகரமுமில்லாத இந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் ஒரு சிமெண்ட் ஃபாக்டரி கட்டவும் நல்ல மவுசு ஊருக்கே வந்தது தெரிந்தது. எனக்கும் வீட்டை விற்க நல்ல சான்ஸ் கிடச்சிது ...அக்காக்கள் முவருக்கும் தெரியப்படுத்திவிட்டேன் ..மூத்த அக்காக்கள் ரெண்டு பேரும் மறுப்பு எதுவும்
சொல்லவில்லை... அவர்கள் பங்காய் ஏதாவது கொடுத்துவிடுவேன்... ஆனா கடைசி அக்கா, அமெரிக்கால பலவருஷம் இருந்து இப்போதான் ஹைதராபாத் வந்திருக்கா. வசந்தான்னுபேரு... அவள் இந்தவீட்டில் அதிக நாட்கள் தங்கி இருந்தவள்...அவகிட்ட போனில் விஷயத்தை சொன்னதுமே ஹோ என்று அழத் தொடங்கிட்டா,... சந்துரு வாழ்ந்த வீடுடா விற்காதடா என்று அலறினாள்.. பைத்தியக்காரி வசந்தா! வீட்டைவிலைக்குவாங்கியவர் இன்னும் சற்றுநேரத்தில் இந்த விட்டையே இடித்து ஃப்ளாட்கட்டப்போவதை அறிந்தால் உயிரையே விட்டுவிடுவாள் ஹ்ஹ்ஹா.."

சந்துரு நாராசமாய் சிரித்தான்.
என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் அதிரத் தொடங்கிற்று.

நான் சாகபோகிறேனா?

என்முடிவு உறுதியாகிவிட்டதா?

பத்துவருடம் முன்புவரை லட்சுமியின் கோமியம் எனும் பன்னீர்துளிகளில்குளியல் செய்து பசுஞ்சாணம் பூசிமெழுகப்பட்ட என் உடம்பு இன்னும் சில நிமிடங்களில் தூள்தூளாகப் போகிறதா?

ஐயோ அதற்குமுன் வசந்தாவைப்பார்க்க முடியுமா?
அந்த கொலுசொலியைக்கேட்டால் கூட போதும். ஒலிகள் என்றும் நிரந்தரம். இறந்தபின்னும் ஒருவரின் நினைவைப் பிடித்துவைத்துக்கொண்டு இருப்பது அவர்களின் ஜீவனுள்ள ஒலிகள்தானே?

"ம்ம் இடிக்கத்தொடங்கலாம்.ஆகட்டும்" சந்துரு உத்தரவு கொடுத்தான்.

ட்ராக்டர் போன்ற பெரிய கருவி ஒன்று என் மீது இடித்தது.

டேய்பாவி....மகாபாவி சந்துரு இந்தத் திண்ணைல உன் அப்பா சித்திரத்தேர் விழாவுக்கு ஊருக்கே சாப்பாடு போடுவார்.எத்தனைபேர் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கதை பேசின இடம் உனக்குத் தெரியுமா? வசந்தா இந்த திண்ணைலதான் சின்ன வயசுல நடன ஒத்திகை செய்வாள். இதைப்போய் இடிக்கிறாயே?

ஆ அம்மா..

தீனமாய் நான் அலறுவது இங்கு யாருக்கும் கேட்காது,, கேட்கவும் வேண்டாம் .வசந்தாவிற்குமட்டும் கேட்டால்போதும்.

நான் முற்றிலுமாய் எனை இழப்பதற்குள் வசந்தாவை ஒரு தடவை பார்த்துவிட்டால்போதும்.

ஐயோ இரக்கமற்ற கல் நெஞ்சுக்காரர்கள் என்னை இடித்துக்கொண்டே வருகிறார்களே..சந்துரு! கொஞ்சம் நிறுத்தச்சொல்லேன்,

வசந்தா வந்துவிடட்டுமே?

"ம்ம் ஆகட்டும் க்விக் க்விக்"

சந்துரு அவசரப்படுத்தினான்

"டேய் சந்துரு! நான் வரும்வரைக்கும் உனக்குபொறுமை இல்லையா பாவி? போன்ல வரேன்னு சொன்னேனடா..? முழு வீட்டை கண்ணாலாவது பார்க்க ஓடிவந்தேன்.. அதுக்குள்ள ஆரம்பிச்சி தகர்த்திட்டியா? ஐயோ..வாழ்ந்த வீடு இன்னிக்கு இப்படி இடிக்கப்பட்டு வீழணுமா?இதைப்பார்க்கவா நான் ஹைதராபத்திலிருந்து ப்ளேன்ல பறந்து வந்தேன் ?"

கதறுவது யார் வசந்தாவா? இடிபாடுகளில் கண்ணில் அடிபட்டுவிட்டது சரியாய் பார்க்கமுடியவில்லை. எப்படியோ துழாவிப்பார்த்துவிட்டேன் ,

ஆமாம் வசந்தாவேதான்! அப்படியே தான் கொடிபோல இருக்கிறாள்.நடனம் இப்போதும் ஆடுகிறாளா என்ன? வயதான அடையாளமாய் உடல் பருமனே இல்லாமல் இப்போதும் சிக்கென காணப்படுகிறாள். பற்களைசற்றுமுன்தான் இழந்த என் பொக்கை வாயில் புன்னகை பிறக்கிறது.

வசந்தா கண் கலங்குகிறாள். கைகளைப் பிசைகிறாள்.

பதட்டமுடன் அங்கும் இங்கும் நடக்கிறாள் போலும்? ஜல் ஜல் என்ற அந்த கொலுசு சத்தம் ,இன்னும் சில நிமிடங்களில் முற்றிலும் சிதிலமாகி விழப் போகும் என் காதுகளில் தேனாய்வந்து பாய்கிறது! ஜல்ஜல்...

போதும்! இதுபோதும் எனக்கு!

இதை எதிர்பார்த்துத்தான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்.
மேலும் படிக்க... "வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்"

Saturday, July 05, 2008

திண்ணைத்தாத்தா!

பால்..பால்..

அரக்கீரே மொளக்கீரே அகத்திக்கீரே

கோலமாவு

உப்பு உப்பேய்

வெண்டக்க்கா தக்காளி கத்திரிக்கா

பளையபேப்பர் வாங்கறது



சார் போஸ்ட்

செருப்பு ரிப்பேர்



எவேர் சில்வர் பாத்திரேம்



கலாய்பூசறது

அயிஸ் அயிஸ்

கொட ரிப்பேர்

கிளி சோசியம்

மல்லியப்பூ கனகாம்பரம் ஜாதிப்பூவு

....................

திண்ணைத்தாத்தா

தினமும் சந்திக்கும்

வீதி மனிதர்கள்!
மேலும் படிக்க... "திண்ணைத்தாத்தா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.