Social Icons

Pages

Featured Posts

Monday, September 05, 2016

கண நாதனைப்பணி மனமே!
பல்லவி..

கண நாதனைப்பணி மனமே- அனு
தினமும் ஒருக்கணமேனும். (கணநாதனை)

அனுபல்லவி
மனம் தூய்மையாகும் மகிழ்ச்சி மிகப்பெருகும்
வனவேழ முகந்தன்னை வணங்கிட வினை அகலும்(கண நாதனை)

சரணம்

ஆற்றங்கரை இருப்பான் அழகுச்சோலையிலுமிருப்பான்
போற்றித்துதிப்போர்க்கு ‘போதும்’எனும்வரை அளிப்பான்
ஔவைக்கு அருள் செய்த ஆனை முகத்தானை
எவ்வண்ணம்  தொழுதாலும் ஏற்றுக்கொள்ளுவான்(கண நாதனை)

_______________________________________________________

வினாயகர் சதுர்த்திக்கு  இன்று எழுதிய பாடல்  சுப்புத்தாத்தாவின்  இசையமைப்பில்  கேட்கவேண்டுமே!

மேலும் படிக்க... "கண நாதனைப்பணி மனமே!"

Thursday, August 25, 2016

ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!
பாலைக் கறந்து அடுப்பேற வைத்து
  
பல்வளையாள் என் மகளிருப்ப
மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று
  
இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்
சாளக்கிராமமுடைய நம்பி
  
சாய்த்துப் பருகிட்டுப் போந்துநின்றான்
ஆலைக் கரும்பின் மொழியனைய 
   
அசோதைநங்காய் உன்மகனைக் கூவாய்!

யசோதையிடம்  பொல்லாதக்கண்ண்ணனைபற்றி புகார் சொல்லவருகிறாள் ஒருத்தி. எடுத்த எடுப்பிலேயே  பாலைக்கறந்து அடுப்புல வச்சேனா என ஆரம்பிக்க  யசோதை எங்கோ பார்த்தபடி அதைக்கேட்கிறாள்.அவளுக்குத்தெரியும்  வந்தவள்  தன் மகனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று. துறுதுறுவென  ஒரு குழந்தையைக்கண்டால்  பொறுக்காதே சிலருக்கு. அதிலும் கண்ணன், கண்டகி நதியில் கிடக்கும்  சாளகிராம்கற்களைப்போல  கருப்பாய் அழகாய் இருக்கிறானா  அவனை ஏதாவது சொல்லாவிட்டால் இந்த ஆயர்பாடிப்பெண்களுக்குத்தூக்கம்வராதே..

யசோதையின்முகமாற்றம் வந்தவளுக்குத்தயக்கத்தை ஏற்படுத்த  விஷயத்தை சுற்றிவளைத்து  சொல்லத்தொடங்குகிறாள்

நிறையவளையல்போட்டிருக்கிற என் மகளை அடுப்புகிட்ட காவலுக்கு நிக்கவச்சேன்...


அதுக்கென்ன இப்போ என்பதுபோல யசோதை  கண்கேட்கிறது. 


மேற்குபக்கம் இருக்கிற பக்கத்துவீட்டுக்குபோய் அடுப்பு பற்றவைக்க  நெருப்பு (குச்சி?)வாங்கப்போனேன்


இரவல்வாங்குவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை…யசோதயின்  வாய் முணுமுணுப்பதுபோல  பட்டது.

அப்புறம்..கணப்பொழுது பேசிநின்றேன்


கைல நெருப்பாம் வாயில் பேச்சாம்  வேறென்ன  பத்தவைக்கும் வேலைதான் இவளுக்கு!

யசோதை  உதட்டை சுழிக்கிறாள்.

அதற்குள் உன் மகன்  கிருஷ்ணன்(சாளக்கிராமமுடைய நம்பி—)பாலை சாய்த்து  குடிச்சிட்டுபோய்ட்டான். என்று சொல்லி யசோதையைப்பார்க்கிறாள்.

தன்குழந்தையை குற்றம் சொன்னால் எந்தத்தாய் தாங்கிக்கொள்வாள் கண்ணில்  நெருப்பு உமிழப்பார்க்கிறாள் வந்தவள் வெலவெலத்துப்போய்விடுகிறாள்

ஆகவே அடுத்தவரியில்  ஆலைக்கரும்பு போல இனியமொழிஉடையவளே யசோதை நங்கையே  உன் மகனைஅழைத்து சொல்லிவையேன் என்றுகெஞ்சுகிறாளாம்.

யசோதைக்கு ஐஸ்  ஆலைக்கரும்பு மொழி அனையவளாம்.

 பெரியாழ்வாரும் ஆண்டாளும் உரிமையாய் கடிந்துகொள்வதிலும் பின்னாடி குழைவதிலும் வல்லவர்கள்.. 

பேய்ப்பெண்ணே என்று திட்டிவிட்டு தேசமுடையாள் அதாவது தேஜஸ் ஒளி கொண்டவளே கோதுகலமுடையபாவாய் என்றெல்லாம்  ஆண்டாள் புகழ்வதுபோல  பெரியாழ்வார் இந்தப்பாடலில்  யசோதையை  வெறும் கரும்பின்  மொழியாள் என்சொல்லவில்லைபாருங்கள் ஆலைக்கரும்பாம்  அதாவது  நன்கு பக்குவமான  ரசம் அதிகம் கொண்ட கரும்பினைத்தான் ஆலைக்கு அனுப்புவார்கள். காய்ந்து நலிந்துபோனதெல்லாம்  தள்ளிவிடுவார்கள் ஆலைக்கரும்பு சுவையானது  

அப்படி இனிய  வார்த்தைகொண்ட  யசோதை நங்காய் என்கிறாள் நங்கை எனில்பெண்ணில் சிறந்தவள் என்னும் பொருளும் உண்டுஇப்படிப்  பாடி  உன் பையனைக்கூப்பிடம்மா  என்கிறாளாம்.

 பெரியாழ்வார் பாசுரங்கள்  ஒவ்வொன்றுமே ஆலைக்கரும்புதான்!!

பிகு..
(சாளக்கிராமமுடைய நம்பி...முக்திநாத் பெருமானைக்குறிக்கிறது)
மேலும் படிக்க... "ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதைநங்காய்!"

Monday, August 15, 2016

இந்தியத்தாயே பார்த்தாயா!
எழுபது வயது  அன்னை  இன்று
ஏக்கமாய் நிற்கும் பலியாடு.
அரசியல் சூதாட்ட அரங்கினிலே
அக்கிரமக்காரர்களின் விளையாட்டு.
 
 
 
ஒருமைப்பாடு என்பது எல்லாம்
ஒடுங்கிப் போனதில் வந்தது குறைபாடு.
ஓசைபடாமல் சத்திய தர்மம்
 ஓடிச் சென்றதென்னவோ சுடுகாடு!
 
கொள்ளை கொலை ஜாதிச்சண்டைகள்
 குடியைக்கெடுக்கும் மதுக்கடைகள்
அடிக்கடி நடக்கும் அராஜகங்கள்
அடியோடு புதையும்  முழு நிஜங்கள்.
 
 

தர்மம் என்பதை  கைகேயியைபோல்
துரத்தி் அனுப்புவர் வனவாசம்.
இந்தியத்தாயே பார்த்தாயா!
இதுவா அம்மா உன் தேசம்?
 
ஊழல்செய்யும் பேர்களுக்கு
உற்சாகமாய்   தருவர் பரிவட்டம்!
உண்மைபேசும்  அப்பாவிகளோ
அழிந்தே போவார் தரைமட்டம்.
 
 
 
 
ஒடுங்கி அடங்கிக்கைகுவித்தே
ஒருநாள் கேட்பான் தன் ஓட்டு
பதவி கிடைத்த உடனேயே 
பறப்பதில் அவனும் தான் சிட்டு!
 

நாக்கே வாயை விழுங்கிவிடும்
 நகமே விரலைச்சுரண்டிவிடும்
போக்கே சரியா தலைமையினால்
புரண்டு அழுகிறாள் பாரத அன்னை!

 
ஏய்ப்பவர் அமரும் கோபுரத்தை
இடித்துதள்ள வேண்டும் ஓர் புறத்தில்.
மேய்ப்பவன் புலியாய் இருந்துவிட்டால்
மேயும் ஆடுகள் பலியாகும்
 
சிறுமைகளுக்கும் சில்லறைகளுக்கும்
சிறப்பு சேர்க்க விடுவோமா
பெருமைக்குணங்கள்: கொண்ட பழம்
பெரும்தலைவர்வழியில் வாழ்வோமா!
 
தியாகிகள் உரைத்தது வந்தே மாதரம்!
அரசியல் திருடர்கள் உரைப்பது
வந்து ஏமாத்தறோம்!
ஏத்திப்பிழைக்கும்  ஈனர்களை
சாத்தித்துரத்த இளைஞர் அணி
சடுதியில்வந்தால் நாட்டிற்கு
சட்டெனக்கிடைக்கும் பெருமை இனி!
 
மேலும் படிக்க... "இந்தியத்தாயே பார்த்தாயா!"

Saturday, August 13, 2016

அரங்கத்திருவே!

பல்லவி.

அரங்கத்திருவே!  கற்பகத்தருவே!
வரங்கள் அளிக்கும் வரமஹாலஷ்மியே!(அரங்க)

அனுபல்லவி
பரமன் அரங்கனின் பட்டமகிஷி தேவி
கரங்கள் கூப்பி அவளை தினம் சேவி!(அரங்க)

சரணம்.

சகல  உயிர்களையும் காத்திடுகின்றாள்.
அகலகில்லேன் அம்மா உன் திருவடிதனைப்பிரிந்து.
நிகழும் அனைத்தும் நின் செயல் அன்றோ?
புகழ்வது உன் நாமமெனில் புல்லரிக்கின்றதன்றோ!
(அரங்க)

...திருவரங்கப்ரியா(ஷைலஜா)  எழுதியது.

மேலும் படிக்க... " அரங்கத்திருவே! "

Monday, August 01, 2016

நட்பென்பது......


"ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு மருந்து,'' என்றார், கணேசனின் குடும்ப டாக்டர்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் விஷயம் தெரு முழுவதும் பரவி, கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது.

'வாத்தியார் ராமநாதன் போயிட்டாராமே... தங்கமான மனுஷன்...'
'நேத்து கூட என்னை பாத்து, பிசினசில் நஷ்டமானதுக்கு ஆறுதலா பேசினாரே...' என்று ஆளாளுக்கு ராமநாதனை புகழ்ந்தபடியே, துக்கத்தை கொட்டினர்.

அப்பா இறந்து விட்டதாக நினைக்க, கணேசனுக்கு சிரமமாக இருந்தது. இன்னமும் அவர் தூங்குவது போலவே இருந்தார். இரவு தூங்கப் போகும் முன், முகம் கழுவி, தலைவாரி, சின்னதாய், நெற்றியில் விபூதி பூசி கொள்வார்; தூய வெள்ளை வேட்டி, வெள்ளை நிற அரைக் கை கதர் சட்டை அணிவார்.
'உடம்பும், மனசும் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணும். பேரழகா இல்லன்னாலும், பாக்கற மாதிரியாவது இருக்கணுமில்ல...' என்று, ஒருநாள் அப்பா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்த்தான்.

'ஜனனத்தை வரவேற்கிற மாதிரி, மரணத்தையும் வரவேற்கணும் கணேசா... மரணங்கிறது கல்வியில் ஒரு கூறு...' என்று அப்பா கூறியது நினைவுக்கு வர, ''கற்றுக் கொள்ளத்தான் அமரலோகம் போயிட்டீங்களாப்பா...'' தந்தையின் பாதங்களை, இரு கைகளிலும் பிடித்தபடி, உடல் குலுங்க அழுதான், கணேசன்.

அப்பாவிற்கு அழுவது பிடிக்காது. 'எதையும் இயல்பாய் எடுத்துக்கணும்...' என்பார்.

ஆனாலும், அவர் சற்று அதிகம் கலங்கியதை, இரண்டு முறை பார்த்துள்ளான். பத்து ஆண்டுகளுக்கு முன், கேன்சரில் அம்மா இறந்த போது, மிகவும் கலங்கி போனவர், 'கணேசா... உங்கம்மாவுக்கு நான் எதுவுமே செய்யலயப்பா... அவளாய் எதுவும் கேட்டதும் கிடையாது. அவள் ஆசைகளை நானாவது கேட்டு செஞ்சிருக்கணும். எதையுமே இழந்த பின் தான், அதோட மதிப்பு இரட்டிப்பாகிறதுங்கிறது உண்மையாப் போச்சே... உன் அம்மாவோட நினைவு, இப்போ எனக்கு அப்படித்தான் இருக்கு...' என்று நெகிழ்ந்த குரலில் சொல்லிய போது, அவர் முகம் கலங்கியிருந்ததை கவனித்தான், கணேசன்.

அதற்கு முன்பும் ஒரு முறை அவர் கண் கலங்கியதை பார்த்துள்ளான். அச்சம்பவம் அவன் நினைவிற்கு வந்தது...

அப்போது கணேசனுக்கு, 15 வயது; அவன் தம்பிக்கு, 10 வயது. அன்று, கணேசனின் தம்பியும், அவனோட நண்பன் நரேந்திரனும் ஆடிப்பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் குளிக்கப் போன போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். படித்துறையில் சிலர் அமர்ந்திருந்தாலும் நீச்சல் தெரியாததால், கையை பிசைந்தபடி, வெறுமனே பதறினர்.

அச்சமயம் அந்த பக்கம் வந்த ராமநாதன் விஷயம் கேள்விப்பட்டு, ஓடி வந்து ஆற்றில் குதித்தவர், முதலில் மீட்டது, நரேந்திரனை தான்.
அடுத்து, தன் மகனை காப்பாற்ற முனைந்த போது, அவன் பிணமாகத் தான் கிடைத்தான்.

'என் பிள்ளைய காப்பாத்திட்டு, உன் பிள்ளைய பறி கொடுத்திட்டியேடா...' என்று தலையில் அடித்தபடி அழுதார், ராமநாதனின் நண்பர் பரமசிவம்.
பள்ளியிலிருந்து சுற்றுலா சென்றிருந்த கணேசன், விஷயம் கோள்விப்பட்டு, பாதியிலேயே திரும்பி வந்தவன், 'பெத்த மகனை முதல்ல காப்பாத்தணும்ன்னு தோணலயா... என் தம்பி இப்ப இறந்துட்டானே...' என்று கோபத்துடன் கேட்டு, அழுதான்.

மகனை, நிதானமாய் ஏறிட்ட ராமநாதன், 'கணேசா... உன் கோபம் நியாயமானது தான்; ஆனா, எனக்கு அந்த நேரம் பரமசிவத்தை தான் நினைக்க தோணுச்சு. நானும், பரமசிவமும் ஸ்கூல் பிரண்ட்ஸ்; சிறுவயதிலிருந்து இணை பிரியாத நாங்க இப்பவும், உள்ளூர் பள்ளிகளில் ஆசிரியர்களாய் இருந்து, ஒரே ஊரில் குடியிருக்கோம். எனக்கு, உன் தம்பி இல்லாட்டாலும் நீ இருக்கே... ஆனா, என் நண்பனுக்கு நரேந்திரன் ஒரே பிள்ளை...' என்று சொல்லி முடிக்கையில், அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவர் கைகளை ஆறுதலாக பற்றி, 'மன்னிச்சிடுங்கப்பா... உங்க நல்ல மனசை, நான் தான் தப்பா புரிஞ்சுகிட்டேன்...' என்றான், கணேசன்.

அன்றிலிருந்து, கணேசனுக்கு, தன் அப்பா மீதுள்ள மதிப்பும், மரியாதையும், பன்மடங்கு பெருகியது. பரமசிவம் - ராமநாதனின் நட்பும், மேலும் இறுகிப் போனது.

'உறவில் தான் விரிசல், குடைச்சல் எல்லாம். நட்பில் அதெல்லாம் வருவதில்லை. நட்புக்கு அடிப்படை ஒத்த தொழிலோ, அந்தஸ்தோ, வயதோ அல்ல. வாழ்க்கை நிலையில், பல்வேறு அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இடையிலும் பிரிக்க முடியாத நட்பும், பாசமும் ஏற்படுவதை பார்க்கிறோம். கொடுப்பதும், பெறுவதும் ஒன்றேயாகிற காமம் போன்று, ஆன்மாவின் அந்தரங்க ஆழத்தில், ஈருயிர்கள் சங்கமிப்பதே உயர்ந்த நட்பின் அடிப்படைன்னு நினைக்கிறேன்...' என்று அடிக்கடி சொல்லி மகிழ்வார், பரமசிவம்.

நரேந்திரன் மேல் படிப்பிற்கு வெளியூர் சென்ற போதும், பணி கிடைத்த போதும், நன்றி மறவாமல், ராமநாதனை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றான். பரமசிவம் மற்றும் ராமநாதன் இருவரும் இணைந்தே பெண் பார்த்து, நரேந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.


அலுவலக புராஜக்ட் என, மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தில், அமெரிக்காவிற்கு சென்றுள்ள நரேந்திரன், தன் அப்பாவையும் தன்னுடன் அழைத்து போவதாக கூறிய போது, முதன் முறையாக தன் நண்பரை பிரியும் வருத்தம் இருந்தாலும், 'மகன் குடும்பத்துடன் மகிழ்ச்சியோட இருந்துட்டு வா...' என்று வழியனுப்பி வைத்தார், ராமநாதன்.

பழைய நினைவில் மூழ்கியவனுக்கு, 'பரமசிவம் மாமாவிற்கு சொல்ல வேண்டுமே...' என்ற பரபரப்பு ஏற்படவும், மொபைல் போனில், நரேந்திரனை தொடர்பு கொண்டான். போன், 'ஸ்விட்ச் ஆப்' என வரவும், வீட்டிற்கு போன் செய்தான். ஒரு பதிலும் இல்லை; 'விடுமுறைக்கு எங்காவது வெளியில் போய் விட்டனரா...' என, நினைத்த கணேசனை மேலும், யோசிக்க விடாமல் துக்கம் கேட்கும் கூட்டம் அலைமோதியது.

கணேசனின் மனைவியும், குழந்தைகளும் ராமநாதனின் காலடியை விட்டு நகரக் காணோம்.

''கணேசா... உறவுன்னு சொல்லிக்க நான் ஒருத்தி தான் உள்ளூர்ல இருக்கேன்... டில்லி, மும்பையில இருக்கிற தூரத்து சொந்தங்களுக்கு தகவல் தெரிஞ்சாலும், அவ்வளவு தூரத்திலிருந்து உடனே வர முடியுமோ, என்னவோ. ஏன் தாமதிக்கணும்? இன்னிக்கே எடுத்துடலாமே...'' என்று, அத்தை பட்டென்று கேட்கவும், கணேசனுக்கு சற்று எரிச்சலானது.

''இல்ல அத்தை... அப்பாவோட பிரண்ட் வரணும்,'' என்றான்.

''யாரு அது, எங்க இருக்கார்?''

''அமெரிக்காவுல இருக்காரு...''

''அமெரிக்காவா... அப்போ ரெண்டு நாளாவது ஆகுமே... அதுவரை வச்சிருக்கணுமா... பகல்ல இறந்தா, மூன்றரை மணி நேரந்தான் வைச்சுருக்கணும்; அதுக்குமேல் வச்சிருந்தா, இறந்தவர், வாழ்ந்த போது செய்த புண்ணியங்களுக்கு பலன் இருக்காதுன்னு சொல்வாங்க. இறந்தவரோட இறுதி பயணத்தை தாமதப்படுத்த யாருக்கும் உரிமை இல்லன்னு தர்மசாஸ்திரம் சொல்லுது,'' என்றாள் அத்தை அழுத்தமாக!

''அத்தை... சாஸ்திரம், சம்பிரதாயங்களை மீறியது நட்புங்கிற உறவு. அவர் வர்ற வரைக்கும் அப்பா இங்கே தான் இருப்பார். அதை மீறி, நான் தகனம் செய்தால், அப்பாவோட ஆத்மா சாந்தி அடையாது. அது எனக்கு தெரியும்,'' என்று உறுதியான குரலில் சொல்லி, ஐஸ் பாக்சுக்கு சொல்ல, மொபைல் போனில் எண்ணை அழுத்தியபடி, வாசலுக்கு வந்தான் கணேசன்.

அப்போது, சர்ரென பெரிய கார் ஒன்று, வாசலில் வந்து நின்றது. காரிலிருந்து இறங்கியவரை கண்டதும், கண்கள் விரிய, ''பரமசிவம் மாமா... நீங்களா...'' என்றான்.

''ஆமாம்... நானே தான்; சர்ப்ரைசா இருக்கட்டும்ன்னு தான் யாருக்கும் தகவல் சொல்லாம புறப்பட்டோம். மொபைல் போனையும் அணைச்சு வச்சோம். பின்ன... என் தோஸ்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேணாமா... வயசானாலும், நட்பு மட்டும் தான் இளமையா இருக்கும். ஒரு விஷயம் தெரியுமா... நரேந்திரனின் புராஜக்ட், திட்டமிட்டதுக்கு முன்னரே முடிஞ்சு போச்சு. இனிமே, அவன் நிரந்தரமா இந்தியாவுல தான் இருக்கப் போறான். எனக்கும், ராமநாதனை விட்டு அமெரிக்காவுல இருக்க முடியல. சொர்க்கமா இருந்தாலும், என் நண்பன் பக்கத்துல இருக்கிறத போல இருக்குமா... எல்லாத்தையும் நேர்ல சொல்லி, என் நண்பனை திக்கு முக்காட வைக்கணும்ன்னு தான், ரகசியமா கிளம்பி வந்தேன்.
''இன்னிக்கு நட்சத்திரப்படி, உன் அப்பாவோட, 70வது பிறந்த நாள்; ஏகாதசியில வாய்த்திருக்கிறது ரொம்ப விசேஷம். ஆமா, வீட்ல என்ன விசேஷமா; ஏகப்பட்ட தலை தெரியுதே...
''
பரவசமாய் பேசிய பரமசிவத்தை கலங்கிய கண்களுடன், கணேசன் இறுக கட்டிக் கொள்ள, திடுக்கிட்டவர், ''கணேசா... என்ன ஆச்சு...'' என்றார்.
கணேசனுக்கு அதுவரை அடங்கியிருந்த துக்கம் பீறிட்டு கிளம்பியது.
அதற்குள் வீட்டிற்குள் ஓடிய நரேந்திரன், அங்கிருந்தே, ''அப்பா... மாமா நம்மை விட்டு போயிட்டார்ப்பா...'' என, கதறினான்.

பரமசிவம் பதற்றமாய் உள்ளே வந்தவர், உடல் குலுங்க, நண்பனின் தலைமாட்டில் அப்படியே சரிந்து உட்கார்ந்தார். நண்பனிடம் பேசுவதற்கு ஆயிரம் ஆயிரம் விஷயங்களுடன் வந்தவருக்கு இப்போது பேச்சற்று தொண்டை அடைக்க, கண்ணீர் தாரை தாரையாக வழிய, சிலையாக அமர்ந்திருந்தார்.

''கணேசா... சாஸ்திரிக்கு சொல்லிடலாமா...'' என்று மறு படியும் குரல் கொடுத்தாள், அத்தை.

அடுத்த சில நிமிடங்களில், சாஸ்திரி வந்து இறங்கினார்.

''காரியத்தை ஆரம்பிக்கலாமா... இறந்து போனவரின் பிள்ளைகள் எல்லாம் இப்படி வந்து நில்லுங்க...'' என, சாஸ்திரி கூற, அவரை நோக்கி நடந்தான், கணேசன். 

அதுவரை, பிரமை பிடித்தது போன்று அமர்ந்திருந்த நரேந்திரன், சட்டென ஓர் அறைக்குள் சென்று, வேட்டி கட்டி வந்தவன், வெற்று மார்புடன் கணேசன் அருகில் போய் நின்று, ''வந்துட்டோம்... இனி, நீங்க காரியத்தை ஆரம்பிங்க...'' என்றான்.

ஷைலஜா
Advertisement
  

சென்றவார தினமலரில் வந்த கதை
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32162&ncat=2
மேலும் படிக்க... "நட்பென்பது......"

Sunday, May 15, 2016

நன்னயம்!

 இன்றைய தினமலர் வாரமலரில் எனது சிறுகதை நன்னயம்  !


மேலும் படிக்க... "நன்னயம்!"

Saturday, April 23, 2016

புத்தக வீடு!

“There is no friend as loyal as a book.”  என்கிறார் Ernest Hemingway.
வாசித்தல் தவமா தாயின் மடியா, வாசித்தல் சுவாசித்தலா சுகமான அனுபவமா  என்பதையெல்லாம்  கவிதைவரிகளாய் பலர் எழுதிவிட்டனர். புத்தகம் வாசிப்பதே இப்போது குறைந்துபோய்விட்டது என்றும் சிலர் புலம்புகிறார்கள்.முன்பெல்லாம்  ரயில் பஸ்பயணங்களில்  புத்தகம் வாசிக்காமல்  செல்லும் பயணிகள்  மிகக்குறைவு.தினத்தந்தி போன்ற நாளிதழாவது சிலர் கைகளில் தவழும் இப்போது அந்தப்பழக்கம் கைபேசியால் கைவிடப்பட்டுவிட்டாலும் முற்றிலும் மறையவில்லை. அடிக்கடி  பயணம் மேற்கொள்வதால்  என்னால் இதனை உறுதியாகவும் சொல்ல இயலும். புத்தகம் வாசிப்பவர் இல்லாமலா  கடைகளில்  இத்தனை  மாத வார இதழ்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்? இயற்கை சக்திகள் போல  இயல்பானதாக  என்றும் இருப்பது  புத்தகம் வாசிக்கும் பழக்கமும். இணையமும் kindle  இன்னபிற நவீன சாதனங்கள்  வந்தாலும்  ஒரு புத்தகத்தை கையில் எடுத்துவைத்துக்கொண்டு  அதை மெல்லப்பக்கம் பக்கமாய் திருப்பி  வாசிக்கும் அனுபவத்திற்கு ஈடு இணை ஏது?
 என் அப்பா  எந்தப்புத்தகமானாலும் அதை பிறந்த குழந்தையைப்போல  புத்தகத்திற்கு வலிக்காமல் மென்மையாய் எடுப்பார்.  சடசடவென பக்கங்களைப்புரட்டுவது, புத்தகத்தை  பாய்போல சுருட்டுவது, பக்க ஓரங்களை மடிப்பது, அவசரவசரமாய்  கடைசிபக்கத்திலிருந்து  ஆரம்பித்து  விரைந்து படிப்பது, படித்ததும் புத்தகத்தை தொப் என தூக்கிக்கடாசுவது என்பதெல்லாம் அப்பாவிற்கு  சுத்தமாய் பிடிக்காது. அவர் வாசிக்கும் அழகைப்பார்க்கவே நானும் என் உடன்பிறப்புகளும் தூர நின்று கவனிப்போம்.

பூஜைக்கென்று  தியானத்திற்கென்று  படுக்கவும்சமைப்பதற்ககும் என்றும் குளியல் இத்தியாதிகளுக்கு என்று பிரத்தியேக இடம் உள்ளதுபோல புத்தகங்களுக்கென்று நாம்   வீட்டில்இடம் ஒதுக்கி இருக்கிறோமா! 
  
புத்தகங்களுக்காகவே வாழ்ந்தவர்கள் வாழ்கிறவர்கள் பலர்.

கர்னாடகாவில் ஒருவர் புத்தகங்களூக்கு என்றே  வீடு கட்டி இருக்கிறார்  ஸ்ரீரங்கப்பட்டிணம் அருகே பாண்டவபுரா என்னும் இடத்தில் வீடுமுழுக்க புத்தகங்கள்  நூலகம் எனலாம் பழையவேதங்கள் முதல் மென்பொருள்  (கணிணி) பற்றிய பல்வகைப்புத்தக்ங்கள் ஷேக்ஸ்பியர்முதல் ஹாரிபாட்டர்வரை என சம்பத்தித்ததில் தனக்கென ஒருவண்டிகூடவாங்கிக்கொள்ளாமல் புஸ்தகங்களாகவாங்கிவிடுவார் அங்கேகவுடா.
வயது 68 தனியார் நிறுவனத்தில்  பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
வேலையில் இருந்தபோது போனஸ்  உபரிப்பணம் என்று கிடைப்பதை புஸ்தகங்களாகவாங்கிவிடுவாராம்.
“என் கணவர் ரயில்வே ஸ்டேஷன்லிருந்து சாக்கு மூட்டையில் புஸ்தகங்களாக  தோளில் சுமந்து வருவார்..இவருடன் வேலைபார்த்தவர்கள் எல்லா கார் ஸ்கூட்டர் நிலம் என்றுவாங்கிவார்கள் இவருக்குப்புஸ்தகங்கள்தான் எல்லாமே” என்கிறார் இவர் மனைவி விஜய லஷ்மி.


“என்னிட நாலுபாண்ட் நாலுஷர்ட் தான் இருக்கின்றன,. பத்துவருஷம் முன்பு ஒருநிலத்தை பத்துலட்சத்துக்கு(இப்போது அதன் மதிப்பு ஒருகோடிக்குமேல்) விற்று நூலகத்தை கவனிக்க  விருப்பஓய்வும் பெற்றுக்கொண்டேன்” என்கிறார் அங்கே கவுடா
ஹரிகோட்டா என்ற பிசினஸ் புள்ளி ஒருமுறை கிருஷ்ணராஜ் சாகரில் கோவிலை புனருத்தாரணம் செய்யவந்தபோது இந்த நூலகத்தையும் வந்துபார்த்தாராம் அப்போது 70000 புத்தகங்கள் இருந்தனவாம். அவரே இந்த இடத்தில் 2005ல் நூலகமாய் கட்டிக்கொடுத்தாராம்.
அப்போதைய முதலமைச்சர் அங்கேகவுடாவைப்பாராட்டி 2கோடி நன்கொடைதருவதாக வாக்களித்தாராம் ஆனால்கிடைத்தது 25லட்சம் மட்டுமே!
பல எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் படிப்பாளிகள் இங்குவந்துபோகின்றனர். வெளிநாடுகளிலிருந்தும் சிலர் வந்துபோகிறார்கள்.
அமெரிக்காவிலிருந்து இங்கேவந்து இந்த நூலகத்தைப்பார்த்த ரன்மல்ஸ்மித் என்பவர் பார்வையாளர்கள் புத்தகத்தில்,” இந்தியாவில் உயர்ந்தது தாஜ்மகால்மட்டுமல்ல இந்த நூலகமும்தான் .தாஜ்மஹாலைவிடவும் உயர்ந்தது என்பேன் அங்கே கவுடாவிற்கு எந்த உதவும் கிடைக்காதது துரதிர்ஷடம்தான்’என எழுதி உள்ளார்.

இந்த நூலகத்தில் காந்தீஜிபற்றிய 2500புத்தகங்களும் பகவத்கீதை பற்றி 2500புத்தகங்களும் 250000 உலக இதழ்கள் உலகநாடுகள்பற்றி 7000வரைபடங்கள் வேதங்கள் உபநிஷத்துகள் புராணங்கள் இவைபற்றி 2000 நூல்கள் ஆங்கில எழுத்தாளர்களின் 2லட்சம் புத்தகங்கள் இந்துகிறிஸ்துவ ஜைன இஸ்லாமிய புத்தகங்கள் பிரபலங்களின் அபூர்வபுகைப்படங்கள் பழையகால நாணயங்கள் கன்னடமொழி நாவல்கள் சிறுகதை தொகுப்புகள் கவிதைகள் கலை இலக்கியபுத்தகங்கள் தவிர தமிழ் மராட்டி ஒடிசி உருது பெர்சியன் அராபிக் தெலுகு வங்காளம் சீனா ரஷ்ய மொழி புத்தகங்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.


-

மேலும் படிக்க... "புத்தக வீடு!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.