எத்தனை மலர்கள் எத்தனை இலைகள்!
எத்தனைபறவைகள் எத்தனை உயிர்கள்!
மரங்கள் இருந்தால்..?சுற்றுச்சூழல்பற்றி ஒரு சிறுமி எழுதியகவிதை இது.
மரங்கள் இருந்தால் என்றுமுடிக்கிற போது அந்தச்சிறுமியின் கவலை நமக்குப்புரிகிறது.
"மரம் செடிகொடி சுத்தமான நீர் காற்று என்று
வருங்காலக்குழந்தைகளுக்கு நாம் அனுபவித்த இயற்கைசெல்வத்தை அப்படியே விட்டுப்போகப்போகிறோமா இல்லையா நாம்?" என்னும் விடைதெரியாத கேள்வியும் எழுகிறது.
காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்சபூதங்கள் அடங்கிய இயற்கை, மனிதன் இல்லாமல் வாழ்ந்துவிடும். ஆனால் மனிதனால்தான் இயற்கை இல்லாமல் வாழமுடியாது.
தண்ணீரும் காற்றும் உணவுமின்றி மனிதன் வாழ்வது சாத்தியமே இல்லையே.
ஒருபக்கம் மரங்களைவெட்டுகிறோம்.
இன்னொருபக்கம் மலைகளை இடிக்கிறோம்
காற்றை மாசுபடுத்தி பிராணவாயுவை அழித்துவருகிறோம்.
'க்லூரோஃப்ளூரோ கார்பன்' என்னும் ரசாயனபுகையை நாம் அன்றாடம் வீட்டில் உபயோகிக்கும் ஏசி, ஃப்ரிட்ஜ் புகையூட்டும்கருவிகள் இன்னபிற சாதனங்கள் வெளிவிடுவதால் இது விண்வெளியை அடைந்து ஓசோனைப்பெரிதும் அழித்துக்கொண்டிருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களை ஓரளவு உபயோகத்திலிருந்து குறைத்துக்கொண்டுவிட்டாலும் முற்றிலும் நாம் அதை அழித்துவிரட்டவில்லை.
மெல்லமெல்ல நாம் இழக்கும் பொகிஷங்கள்தான் எத்தனை?
கார்ல்மார்க்சின்
எதை நீ இழந்தாலும் அதன் மதிப்பு இரண்டாகிவிடுகிறது என்பதை எப்போது உணரப்போகிறோம்?
' இதற்கு நான் மட்டும்என்ன செய்வது இது நாட்டின் பிரச்சினையல்லவா?' என்று நாம் ஒவ்வொருவரும் நினைத்து செயல்படுத்த மட்டுமல்ல செயலுக்கான எண்ணங்களுக்கே இடம்கொடுக்க தவறுகிறோம்.
ஒருகதை உண்டு, இது பலருக்குத் தெரிந்தகதைதான் ஆனாலும் இங்கே கொஞ்சம் நினைத்துப்பார்க்கலாம்.
வானத்தில் மேகம் ஒன்று உலா போய்க்கொண்டிருந்தது.மேலிருந்தபடியே கீழே பூமியை
பார்த்துக்கொண்டே வந்த மேகம் அங்கே வயலக்ளில் பயிர்கள் எல்லாம் பரிதாபமாய் வாடி இருப்பதை கவனித்து கவலைகொண்டது.
இன்னும் உற்றுப்பார்த்தபோது செடிகொடிகள் எல்லாம் 'தாகம்!தாகம்! தண்ணீர்! தண்ணீர் 'என கூக்குரலிடுவதுபோல உணர்ந்தது.
உடனே பயிர் செடிகொடிகளுக்கு உதவ நினைத்த மேகம் நகர்ந்துபோய்க்கொண்டிருந்த தென்றலை அழைத்து,'எப்படியாவது இவைகளின் உயிரைக்காப்பாற்றேன்' எனக்கேட்டுக்கொண்டது.
தென்றல் அலட்சியமாய்' ஆகட்டும்பார்க்கலாம்' எனசொல்லிப்போனது.
சற்றுதூரத்தில் நகர்ந்துகொண்டிருந்த நதியினைக்கேட்டது.
அதுவும் ,'நிற்க நேரமில்லை எனக்கு நானே ஓடிக்கொண்டிருக்கிறேனே' எனப் போனது.
மலையிடம் கெஞ்சவும் அது,' நான் இங்கிருந்தபடியேதான் பார்க்கமுடியும்' என்றது.
பயிர்களின் பரிதாபக்குரல் மேகத்தின்காதுகளில் விழுந்து அது துடித்தது.
"ஐயோ நீர் வேண்டித்தவிக்கிறதே எல்லாம்,யாருமே உதவத்தயாராய் இல்லையே?" என்று மனம் வாடியது.
பிறகு அதுவே," உதவநினைகக்ணும் என்றால் நாமேதான்அந்தச்செயலை செய்யத்தயாராக்ணும் "என்றுதீர்மானிக்கிறது.
உடனே அது மேலே உயர்ந்தது.
குளிர்ச்சி அடைந்தது.
தன் அழகான் பஞ்சுப்பொதி உடல்கரைவதைப்பற்றி கவலைப்படாமல் பல உயிர்களைக்காப்பாற்றுகிறோம் என்னும் மகிழ்ச்சிநிறைவில் தான் கரைந்துமரணத்தை தழுவிக்கொண்டு மழையைபூமிக்குஅளித்து மறைந்தது.
நாம் மேகமாய் மாறமுடியாவிட்டாலும் மனிதனாய் நம் எண்ணங்களை உயர்த்தி சின்னசின்ன செயல்களில் நமது அக்கறைகளை ஆரம்பித்து இயற்கைவளத்தைக்காபபற்றலாமே?
மரங்கள் வெட்டுவதை தடுப்போம்
மணல்கொள்ளையை தடுப்போம்
எரிசக்தியை சேமிப்போம்
வீட்டில் அவசியமின்றி எரியும் மின்விளக்கை
வீணாக்கும்குழாய்நீரை கவனிப்போம்
பிளாஸ்டிக்கின் உயோகத்தைநிறுத்துவோம்.
ஆடம்பரவிழாக்களில் அதிகம் மின் சக்திவீணாவதைக்குறைப்போம்
மழைநீரை சேமிக்கப்பழகுவோம்
மூலப்பொருட்களைபாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பரப்புவோம்


ஓசோனில் விழுந்திருக்கும் ஓட்டையை தனது இதயத்தில் விழுந்த ஓட்டையாக நாம் நினைத்துக்கொண்டால் இயற்கையை எப்படியாவது பாதுகாத்துவிடுவோம்.
பசுமையும் வளமும் கொண்ட சுற்றுப்புற சூழ்நிலைதான் நாம் நமது வருங்காலசந்ததியினருக்கு சேர்த்துவைக்கப்போகும் அரும்பெரும் சொத்து ஆகும்.
*********************************************