Social Icons

Pages

Monday, December 30, 2013

தூயோமாய் வந்தோம்....






நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
     கோயில் காப்பானே! கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
     ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறை
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
     தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
     நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய்
     இதுவரைக்கும் தோழிகளை எல்லாம் எழுப்பியாயிற்று இனி  நந்தகோபன் அரண்மனைக்குச்செல்லவேண்டியதுதான் என  நினைத்தபடி கோதை நடக்கிறாள்

  கோதை  நேராக  அந்த   வாயிற்காப்பானைப்பார்த்து சொல்கிறாள்.


நாயகனாய் நின்ற = எங்க ஆயர்களுக்கு எல்லாம் தலைவனாய் நின்ற

நந்தகோபன் உடைய கோயில் காப்பானே! = நந்தகோபனின் அரண்மனையைக் காப்பவனே! - வெளிக் காவலர்கள்!


கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே! = கொடிகள் கட்டப்பட்டுள்ள வாயி்லைக் காப்பவர்களே! -

மணிக் கதவம் தாள் திறவாய் =  அழகியகதவைத் தாழ் திறந்து விடுங்கள்!
ஆயர் சிறுமியரோமுக்கு = ஆயர் சிறுமியரான எங்களுக்கு
அறை பறை = (நோன்புப் பொருளான) அடிக்கும் பறையைத் தருகிறேன்- என்று

மாயன் =மாயங்கள் செய்யும்கண்ணன்
மணிவண்ணன் = கருநீல மணி வண்ணன்
நென்னலே வாய் நேர்ந்தான் = நேற்றே வாக்கு கொடுத்தான்
தூயோமாய் வந்தோம் = நாங்களும் தூய்மையாய் வந்துள்ளோம்  உடல் மனம்  என்று இரண்டிலும் தூய்மையாக....
துயில் எழப் பாடுவான் = அனைவரும் விழித்து எழ,  திருப்பள்ளி எழுச்சி பாடுகிறோம்!

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! = அம்மானே! வாயிற்காப்பானே.. இது தான் எங்க நோன்பின் ஆரம்பம்! "வீட்டுக்கு" (கோயிலுக்கு) வந்திருக்கோம்! எங்கள் முதல் முதல் நோன்பு நிலை! அதை மாற்றவேண்டாம்

நீ நேய நிலைக் கதவம் நீக்கு! = வாயிற்படியுடன்  இணைந்துள்ள திருக் கதவம் திறப்பித்து, எங்களை உள்ளே அனுமதியுங்கள்!


நேய  நிலைக்கதவம்..  நேசமாய்  நிலையும் கதவும் நெருங்கிப்பொருத்தி இருப்பதாகவும் கொள்ளலாம்..
 நேய நிலைக்கதவம்... இதுவே பாசுரத்தின் உயிர் நிலையாகும்.. நீக்கினால் கண்ணன்  தரிசனம் கிட்டும் என்பதாகும்  தரிசனம்  கிடைத்தால் நாங்கள் உய்வோம் என்பதாகும்..


பாசுரத்தின் உள்ளுறை பொருள்...ஆசாரிய (குரு) சம்பந்தம்  உள்ளவர்களை முன்னிட்டு  தொழவேண்டும் என்பது பாசுர உட்கருத்து. 
     
மேலும் படிக்க... "தூயோமாய் வந்தோம்...."

எல்லே இளங்கிளியே!

என் சிறுக்குட்டன் எனக்கோர் இன்னமுது எம்பிரான்
தன் சிறு கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்
அஞ்சன வண்ணனோட ஆடல் ஆட உறுதியேல்
மஞ்சில் மறையாதே மாமதீ! மகிழ்ந்து ஓடி வா!

”அப்பா  உங்களுடைய இந்தப்பாடலில்   குட்டன் என்பது தமிழ்ச்சொல்லா  அப்பா?”

“ஆம்  கோதை  ..நமது தென் தமிழக மக்கள்  சிறுபிள்ளை என்பதை குட்டன் என்று சொல்வோம் பிற்காலத்தில் இது தமிழ் வழக்கில் இருக்குமோ மாறி வேறு மொழிக்குத்தாவுமோ ஆயினும் நம் தென் தமிழ் என்றும் தேன் தமிழ்!”

”நான்  திருமணமாகி   பிறகு எந்த ஊர் செல்லப்போகிறேனோ ஆனாலும் எனக்கு  உங்கள்மூலம் கற்ற தமிழின் சாயல் பிறந்துவளர்ந்த ஊரின் பேச்சு  வழக்கம்  மனதைவிட்டுப்போகாது அப்பா”

“நல்லதுகோதை  இன்று  யார்விட்டுப்பெண்ணை எழுப்பப்புறப்படுகிறாய்?’

“எல்லாம்  ஒரு கிளிப்பேச்சைக்கேட்கத்தான்.. அவள் கிளிமொழியாள் மேலும் இளமையானவள்...  ஆயிரம் கேள்விகேட்காமல் எழுந்துவரமாட்டாள் என்று  தெரியும்  ஆனாலும் அவள் மனம் கண்ணனையே நினைத்து நினைத்து அவன் பெயரையே  திரும்பத்திரும்பக்கூவும் கிளியாகி இருக்கிறது போய் அவளை எழுப்பி  நோன்பிற்குக்கூட்டிப்போகவேண்டும்”

“உன் திறமையைக்காட்டு கோதை  அவள்  எழுந்துவந்துவிடுவாள்”
சிரித்தபடி பெரியாழ்வார் மகளை அனுப்பிக்கொடுத்தார்.

நினைத்தது சரிதான் கிளி  உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது..பக்தை நெஞ்சமோ அந்த தத்தையின் நெஞ்சம்?

எழுப்பிப்பார்ப்போம்... கோதை  பாட ஆரம்பித்தாள்  தோழிப்பெண்களும் கூடவே  பின்குரல்கொடுத்தார்கள்.



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?!
சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்!
வல்லை உன் கட்டுரைகள்! பண்டே உன் வாயறிதும்!
வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை?!
எல்லாரும் போந்தாரா? போந்தார்! போந்து எண்ணிக் கொள்!
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்!


கோதையும் அவள்  தோழிகளும்...

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?' என்றனர். (ஏலே என்ற சொல் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களையும் செல்லமாக அழைக்க பயன்படுவது. தென் மாவட்ட மக்கள் இச்சொல்லை பயன்படுத்துவர்)

உறங்கும் பெண்....
(உறங்கிக் கொண்டிருந்தவள் வேகமாக எழுந்து ஏற்கனவே தயாராகி விட்டவள் போல நடித்து), ""தோழியரே! இதோ புறப்பட்டுவிட்டேன். ஏன் தொணதொணக்கிறீர்கள்?''((கூச்சல்போடுகிறீகள்?) என்றாள்சில்லென்று அழையேன்மின்! நங்கைமீர் போதர்கின்றேன்

அதற்கு தோழிகள், ""உன்னைப்பற்றி எங்களுக்கு தெரியாதா? உன் பேச்சுத் திறமையை நாங்கள்  ஏற்கனவேஅறிவோம்'' என்றனர்.வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்! = ! (வல்லை)! வல்லிய மோனே-ன்னு மலையாளத்திலும் வல்லை உண்டு!
உன் பேச்செல்லாம் முன்னாடியே உன் வாய் அறியும்!

அதற்கு அந்தப் பெண், ""நீங்களும் சாதாரணமானவர்களா? சாமர்த்தியசாலிகள். ஒருவேளை நான்தான் "புரட்டி பேசுபவள்' என்றால் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன்,'' என்று கோபித்தாள் செல்லமாக.

வல்லீர்கள் நீங்களே! நானே தான் ஆயிடுக


தோழிகள் அவளிடம், ""இங்கு எல்லோரும் வந்துவிட்டார்கள். நீ மட்டும் கிளம்புவதற்கு ஏன் தாமதம்? உன்னிடம் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது?'' என்றனர் 
 
 
ஒல்லை நீ போதாய்! உனக்கென்ன வேறுடையை


.உடனே அந்தப்பெண், ""என்னைத் தவிர எல்லாரும் வந்துவிட்டதுபோல் பேசிக் கொள்கிறீர்களே! எல்லாத்தோழிகளும் வந்துவிட்டார்களா?'' என்றாள்.எல்லாரும் போந்தாரா?


அதற்கு அவர்கள், ""எல்லோரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வந்து எண்ணிக்கொள். “ என்றனர்   போந்தார்! போந்து எண்ணிக் கொள்


குவலயாபீடம் என்ற வலிமை மிக்க யானையைக் கொன்றவனும், எதிரிகளை அழிக்க வல்லவனும், மாயச் செயல்களை புரிபவனுமான கண்ணனை பாடுவதற்கு விரைவாக எழுந்து வா,'' என்றனர்


வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனை  என்றேனே  புரிந்ததா கிளிப்பெண்ணே? விவரிக்கிறேன் கேள்...

கிருஷ்னனைப்போல வல்லான் ஒருவன் இருந்தான்.்பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் அவன் கிருஷ்ணன் போல வேஷம் போட்டுக்கொண்டு சங்கு சக்கரங்களை மரக்கட்டையால் பண்ணிக்கொண்டு  மர கருடனும் செய்துகொண்டு நாந்தான் கிருஷ்ணன் எனகூவிக்கொண்டு மக்களை ஏமாற்றி அவர்களின் செயல்களை செய்யவிடாமல் துன்புறுத்தினான். அவனை நாரதர் எப்படியோ கிருஷ்னன் முன்பு அவனைக்கொண்டு நிறுத்த அவன் கிருஷ்ணரையே எதிர்த்து ஆணவமாய் சண்டையிட்டான்.சக்ராயுதத்தால் அவனை அழித்தான்.மாற்றாரான அநேகப்பகைவர்களை  ஒழித்துக்கட்டியவன் வல்லான்! மாயன் தான். நாரதரைக்கேள்  சொல்வார்.. கிருஷ்ணனது திருமாளீகையில்   அவனைக்கண்டார்  அடுத்து கோபிகள் இருப்பிடம் சென்றார் அங்கும் அவன் இருந்தான்.   இன்னொரு திருமாளிகைக்குப்போனார் அங்கும் கண்ணன்  யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்.   எங்கும் கண்ணன் எதிலும் கண்ணன்!  மாயன் அவன்!

“நன்றி கோதை....உங்களுடன் அந்த மாயனைப்பற்றி கூவாமல் நான் கிளிபோல் குரல்கொண்டு என்னபயன் நானும் வருகிறேன் உங்களுடன்:” என்று அந்த இளம் கிளி இணைந்துசெல்லத்தயாரானது!





(இப்பாடல் அம்மானைப்போல  அமைந்துள்ளது.  அம்மானை   ஆட்டத்தில் ஒருத்தி பாடியபடி கேள்வி கேட்க இன்னொருத்தி பதில் சொல்வாள்  அது கேள்விக்கான பதிலாகவும் இருக்கும் பதிலுக்கான கேள்வியாகவும்:)
--

 
Reply
Forward
 
மேலும் படிக்க... "எல்லே இளங்கிளியே!"

Sunday, December 29, 2013

நங்காய் எழுந்திராய்!

 
 
 
 
 
‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு 
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோல் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே!

பெரியாழ்வார்  பாடி முடித்தார்.


அப்பா  உங்கள் பல்லாண்டுப்பாசுரத்தில்   ஆழி   பாஞ்சன்யம் என சங்கையும் சக்கரத்தையும் அழகாக    வாழ்த்திவிட்டீர்கள்! இந்தப்பாசுரம் பல்லாண்டு  பலகாலம்  எல்லோர்  வாயினாலும் பாடப்படப்போகிறது.. என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் கோதை.

அண்ணலுக்கு  கண் திருஷ்டி நேரக்கூடாதென்று நான் பாடினது கோதை.  விஷ்ணு சித்தன் பெரியாழ்வார் ஆனதே இதனால்தானே!  அதிருக்கட்டும்  இன்று உன்னை ஒரு தோழி வந்து எழுப்ப வருவாள் என்றாஇயே இன்னும்காணோமே


தெரியவில்லை அப்பா ..வாய்ப்பேச்சோடுசரி..பாருங்களேன் இன்னும் வரவில்லை.. கொஞ்சம் கூட வெட்கமில்லை அப்பா அவளுக்கு.. நேரம்  ஆகிக்கொண்டு  இருக்கிறது நானே போய்  அவளை இரண்டில் ஒன்று கேட்டுவருகிறேன்..

வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித்தாமரைக்கண்ணன்’ காத்திருப்பான்  வா  பெண்ணே என்று அழைத்துப்பார் கோதை வந்துவிடுவாள் கண்டிப்பாக

சிரித்தார் பெரியாழ்வார்

 கோதையும் புன்னகை தவழ வெளியேறினாள்.

அவள் நினைத்தபடி  தோழி  தூங்கிக்கொண்டு இருந்தாள்.

கோதை  திகைப்புடன்,  பாட ஆரம்பித்தாள்..


எங்களை...உன் தோழிகளான எங்களை

முன்னம் எழுப்புவான்.... முதன்முதலில் எழுப்புவதாக

வாய் பேசும்..வாயினால் சொல்லிவைத்த
 நங்காய்.....நங்கையே!

நாணாதாய்... சொன்னபடி  அழைக்கவரவில்லையே  வெட்கமாக  இல்லையோ உனக்கு?

நா உடையாய்..இனிக்கப்பேசும் நா உடையவளே


உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்....  உன் வீட்டு  புழக்கடை(பின்பக்கம்  -கொல்லைப்புறம்)  யில் உள்ள குளத்தில்

செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து.....செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து..

ஆம்பல் வாய் கூம்பினகாண்...  கரு நெய்தல் மலர்கள்  கூம்பிவிட்டன(குவிந்துகொண்டு
விட்டன)

செங்கல்பொடி கூறை....  செங்கல்லைப்போல காவி நிற  உடை அணிந்த

வெண்பல் தவத்தவர்.. வெளூப்பான பற்களை உடைய  தவசீலர்கள்(சந்நியாசிகள்)

தங்கள் திருக்கோயில்... தங்களுடைய தெய்வ சந்நிதி்யில்

சங்கிடுவான் போகின்றார்.. சங்கம் முழங்கப்போகின்றார்கள்

 சங்கொடு  சக்கரம் ஏந்தும்தடக்கையன்...  சங்கு சக்கரங்களை ஏந்தி நிற்கும் பெரிய கரங்களை உடையவன்

பங்கயக்கண்ணானை........தாமரைப்பூ போன்ற கண் உடையவனை

பாடேலோரெம்பாவாய்...பாடுவதற்காக எழுந்திராய் தோழியே!


கோதையின் குரலில் இனிய கீதம் உரிமைகலந்த  அன்போடு  ஒலிக்கவும் வெட்கம்  விலகி உறக்கம் நீக்கிய நிலையில்  ‘வந்தேன் கோதை....  இனியும் உறங்குவேனோ?நீ பாடும்போது நம்மாழ்வார் பெருமானின்,” பங்கயக் கண்ணனென்கோ, பவளச்சொல் வாயனென்கோ   சங்குசக்கரத்தனென்கோ, சாதி மாணிக்கத்தையே.’ என்று  அருளியதை நினைத்துக்கொண்டேன்...  பெரியவாய  கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே  என்கிறார் பாணர்பெருமானும்.கண்ணழகன் கண்ணன்!
 
 
மேலும் திருமங்கை ஆழ்வாரின்,’ நெல்லில் குவளை கண்காட்ட நீரில்குமுதம் வாய் காட்ட,..’என்ற பாசுரமும்  மனத்தில் வந்து மோதியது...
  சரி சரி  வா...   நீராடப்போவோம்   இன்று நான்,நாளை  உனக்கு  இளங்கிளியை   அழைக்க ஒருத்தி  காத்திருப்பாள்,ந்திருப்பள்ளி எழுச்சிப்பாடியே  உனக்கு  நாட்கள்  ஓடுகின்றனடி கோதை!” என்று சிரித்தாள்.கோதையும் அதில் கலந்துகொண்டாள்.


**************************************************************


 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
. .
மேலும் படிக்க... "நங்காய் எழுந்திராய்!"

Saturday, December 28, 2013

போதரிக்கண்ணினாய்!

 
 
 
 
 
என்னம்மா கோதை  இன்று மிகவும்  படபடப்பாக இருக்கிறாயே?
 
பெரியாழ்வார்  வியப்புடன் மகளைப்பார்த்துக்கேட்டார்.
 
ஆமாம் அப்பா....  ராமனை சினம் கொள்ளவைத்த ராவணனை நேற்றெல்லாம் நினைத்தபடி இருந்தேன்.. இன்று காலை எழும்போதே   பொல்லா அரக்கர்கள் சிலரின் நினைவுவேறுவந்துவிட்டது...”
 
அதனால் என்ன  அம்மா? பள்ளத்தில் மேயும் பறவியுருக்கொண்டு கள்ள அசுரன் வருவானைத்தான் கண்டு, புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று நான் முன்பே  அவன்  பெருமையைபபடிவிட்டேன்.  பொல்லா அரக்கர்கள் தான் சிலர்!
 
 அவர்களின்  அரக்க குணத்தை  வேரோடு அழித்தவனின்  கீர்த்தியைப்பாடினால் மனம் நிதானம் அடையும்...போய்வாகோதை நோன்புக்கு நேரமாகிவிட்டதே  இன்னமும் உறங்கும் உன் தோழிகளை எழுப்பிவிடு...”
 
சரி அப்பா
 
 
கோதை  அந்த அழகான கண் கொண்ட தன் தோழிப் பெண்ணின் இல்லம் முன்புவந்து நின்றாள்
 
 
 
புள்ளின் வாய்க்கீண்டானை பொல்லா அரக்கனைக்கிள்ளிக்களைந்தானை என்று  ஆரம்பித்தாள் இன்னமும் நேற்றைய  ராம சினம் நெஞ்சிலேயே இருந்தபடியால்,,
 
 கொக்கின் உருவங்கொண்டு  அசுரன் ஒருவன்சென்று யமுனைக் கரையில் கண்ணபிரானை விழுங்கிவிட, அவனது நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்கவே, அவன் பொறுக்கமாட்டாமல் கண்ணனை வெளியே உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில், கண்ணன் அவன் வாயலகுகளைத் தனது இரு கைகளினாலும் பற்றி விரிவாகக் கிழித்திட்டனன்
 
 
“கிள்ளிக் களைந்தானை” என்ற சொற்போக்கால் இறையும் வருத்தமின்றிக் களைந்தமை தோற்றும்.  கிராமங்களில் பூச்சி பட்ட இலைகளைக் கிள்ளிப் போடுவது  போலக் களைந்தான்.
 
பொல்லா அரக்கன் என்றது ஏன்? அரக்கர்குலத்தில் பிறந்த விபீஷணன் ராமனிடம் சரணாகதி செய்தவன் அவன்  பொல்லா அரக்கன் அல்ல.  ஆகவே அப்படிச்சிலரைத்தவிர்த்து  சொல்ல நினைத்தவள்  பொல்லாதவர்களான அண்ணலுக்கு  ஊறுவிளைவித்தவர்களை அப்படிக்குறிப்பிடுகிறாள்.
 
 
கீர்த்திமைப்பாடிப்போய்....  இப்படிப்பட்ட பெருமானின்  மகிமைகளை(கல்யாண குணங்களை) ப்பாடிச்செல்வோம்
 
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்... நமது தோழிப்பெண்கள் எல்லாரும் நோன்பு நோற்குமிடத்துக்குப்போய்விட்டனர்.
 
 
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று!

இதற்கு ஆன்மீக விளக்கமும் அளிக்கப்படுவதுண்டு!
வெள்ளி என்பது காதல் கிரகம் (வீனஸ், சுக்கிரன்)
வியாழன் என்பது அறிவுக் கிரகம் (ஜூப்பிடர், குரு)

இங்கே பெண்கள் இன்னும் தூங்கிக் கொண்டிருக்க, அவர்களை எழுப்புகிறாள் கோதை!  கண்ணனுடனான  பிரேமைக்கு  காதல் போதும் அறிவு அடங்கும்.. பக்தியில் காதல்  எழுந்துவிட்டதாம் அறிவு உறங்கிவிட்டதாம்!

முன்னுள்ள பிரம்ம முகூர்த்தம் என்னும் காலத்தில், வானிலே விடி வெள்ளி தெரியும்!

விஞ்ஞான விள்க்கமாக சிலர் இப்படியும் சொல்கிறார்கள்.

அதிகாலை சூரியன் உதயம் ஆவதற்கு சற்று முன்னர், அதிக வெளிச்சம் இல்லாததால், பூமிக்கு மிக அருகில் உள்ள வெள்ளிக் கிரகம் (Venus) ஒரு நட்சத்திரம் போல தெரியும்! வெறும் கண்ணாலேயே பார்க்கலாம்!

ஆனால் வியாழன் (Jupiter)?
அவ்வளவு சீக்கிரம் தெரியாது! தன் சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வரும் போது மட்டுமே தெரியும்!
 
புள்ளும் சிலம்பினகாண்...பறவைகளும்  குரல் கொடுத்துவிட்டன.
 
 
போது அரிக்கண்ணினாய்...
 
; - போது – உலாவுகின்ற, அரி கண்ணினாய் - மானினுடைய கண்போன்ற கண்ணையுடையவளே!  என்பது ஒரு பொருள்; (பல பொருளொரு சொல்லாகிய ஹரிஎன்ற வட சொல், அரி எனத் திரிந்தது.) போது – என்றுபூவாக, குவளைப்பூவையும் மான் கண்ணையுமொத்த கண்ணையுடையவளே!  இரண்டாம் பொருள்.  அரி என்று வண்டாய் பூவிற்படிந்த வண்டுபோன்ற கண்ணுடையவளே!’  மூன்றாம் பொருள்.  அரி என்று சத்ருவாய், புஷ்பத்தின் அழகுக்குச் சத்ருவான கண்ணழகுடையவளே!
 
 
குள்ளக்குளிர – ‘கத்தக்கதித்து’ ‘பக்கப்பருத்து’ ‘தக்கத்தடித்து’  ‘கன்னங்கறுத்து’ ‘செக்கச் சிவந்து’ என்பன போன்ற ஒருவகைக் குறிப்பிடைச்சொல்.  .
,
குடைந்திநீராடாதே... துளைந்து நீராடாமல்
பள்ளிக்கிடத்தியோ..படுத்துக்கிடக்கலாமோ

பாவாய்..பெண்ணே
நீ நன்னாளால்....நல்லநாளில் நீ

கள்ளம் தவிர்ந்து.....கிருஷ்ணனை நீமட்டும் தனியே நினைத்து  சுகம்பெறும் அந்த கள்ளத்தனத்தை நீக்கி
கலந்தேலோரெம்பாவாய்...எல்லோருடனும் கலந்து அனுபவிக்க வாராய்!

“வந்துவிட்டேன் கோதை!” என்று  அந்த அழகியகண்ணைக்கொண்ட பாவை கதவைத்திறந்துவெளியே வந்தாள்!



புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்!
 
 
. .
Reply
Forward
 
மேலும் படிக்க... "போதரிக்கண்ணினாய்!"

Friday, December 27, 2013

மனத்துக்கினியானை.......

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ? என்கிறார் நம்மாழ்வார்..  ராம நாமம்  மனதிற்கு இதம்  குலசேகரப்பெருமானுக்கு  ராமகாதை கேட்பது  மிகவும் விருப்பம் அப்படியே  அதில் ஆழ்ந்துவிடுவார் உணர்ச்சிவசப்பட்டுவிடுவார்.

மனத்திற்கு இனியன்  ராமன்  ..

(.தன்னைக்காட்டிற்குபோகப்பணித்த  கைகேயிடமும் பணிவுடன’இராமன் “மன்னவன் பணியென்றாலும் நின்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ’ என்று  அன்றலர்ந்த தாமரைமுகத்துடன் கானகம் சென்றவன்  ராமன் மனத்துக்கு இனியன்.)


  ஏழை ஏதலன் கீழ்மகன் என்னா திரங்கி மற்றவற் கின்னருள் சுரக்க  நடப்பவன் இராமன்.
அவனுக்கும் சினம் வந்தது  சீதையை ராவணன்  கவர்ந்து சென்றபோது.  போரில்  இன்றுபோய் நாளைவா எனப்பகைவனுக்கு   கருணை காட்டிய இனியன்.  அப்போதாவது சரணாகதி செய்வானோ ராவணன் எனக்காத்திருந்தான் ஆனால் அவனுக்கு அந்தக்கொடுப்பினை இல்லை..ஆகவே சினம் கொண்டான்..


தனமருவு வைதேகி பிரியலுற்று
தளர்வெய்தி சடாயுவை வைகுந்தத் தேத்தி
வனமருவு கவியரசன் காதல் கொண்டு
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்
சினமடங்க மாருதியைச் சுடுவித்தான்

 
என்கிறார் ஆழ்வார் பெருமான்..சினமடங்க.....  ஆம் ராமனுக்கும் கோபம் வந்தது.”

“என்ன  அப்பா இன்று ராமனிடத்தில் மிகவுமாழ்ந்துவிட்டீர்களோ?”
கோதை  சிரித்தபடி கேட்டாள்.
“ஆமாம் கோதை மனத்துக்கு இனியவர்களை  நினைத்தாலே  நா இனிக்கிறது..குலசேகர ஆழ்வாரைப்போல  நான் ராமனைப்பாடவில்லை எனினும்  அந்த இனியனை  அடிக்கடி நினைத்து மகிழ்வேன்.... அதனால்தான்  இன்று எழுந்ததுமுதல் அவன் நினைவாகவே இருக்கிறேன்..”

மனதுக்கு இனியன் ராமன் எனக்கும் தான் அப்பா....என் கண்ணனும் மனதுக்கு இனியன் . அதரம் மதுரம் நயநம் மதுரம்! நீங்களே கண்ணுக்கினியான் என கண்ணனைப்பாடி இருக்கிறீர்கள். திருமங்கை தன்னடியார்க்கு இனியன் என்கிறார்.   அவனை நினைத்தபடி  தோழிகளை அழைக்கப்போகிறேன்”

“நல்லது கோதை  ...பனி விலகுமுன் போய்வா”

இனி கோதை  தோழியை அழைத்த பாடலும் அதன் விளக்கமும்

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடைப் பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தானெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்தில்லத்தாரும் மறிந்தேலோ ரெம்பாவாய்

--

 முன் பாட்டில் கன்று, கறவை என்பவை இணைந்து கற்றுக் கறவை ஆனது போல் இங்கு கன்று எருமை இரண்டும் கலந்து கற்றெருமையாயிற்று. மனிதர்களுக்குள்ள எரிச்சலையும் [வெப்பம்] , நீர் வேட்கையையும் [தாகம்] உணர்ந்து மழைக்குரிய [பர்ஜன்ய] தேவதை மழையைப் பொழிகிறது என்பதைத் தெரிவிக்க இரங்கி [இரக்கப்பட்டு] என்கிறாள். மனிதர்களை உலகின் சக்திகளாய் விளங்கும் தெய்வங்களுக்குக் குழந்தைகள் என்கிறாள். எருமை மேகமாகவும் பால் கறக்கப்படும் அதன் மடியை அம்மேகத்தில் நீர் தங்கும் பாகமாகவும் காம்புகளை அம்மேகத்தின் மழை பொழியும் கண்களாகவும் கூறுகிறாள்.

இங்கே நங்காய் என்றது இவள் உடன் பிறந்தவன் பெருமையை நற்செல்வன் என்று கூறியதால் அண்ணனும் தங்கையும் வழி வழியாக தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதைக் குறிக்கும் [செல்வன் -நடப்பவன்]

இப்பொழுது நன்றாகப் பொழுது விடிந்துவிட்டது. வீட்டின் கூரையில் படிந்திருந்த பனி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கீழே சொட்ட ஆரம்பித்துவிட்டது என்பதை ‘பனித்தலை வீழ’ என்று குறிப்பிடு்கிறாள்.
மனத்துக்கினியானை   தந்தைகூறியதுபோல நினைத்துக்கொள்கிறாள்.. இனியாவது எழுந்திரேன் இன்னும் என்ன பெரிய தூக்கம்  மற்ற வீட்டவர்கள்   அனைத்து வீடுகளினின்றும் எல்லாரும் வந்தாயிற்று தெரிந்துகொள் தோழி எழுந்துவா நீராடப்போகலாம் என்பதாக முடிக்கிறாள்.

ஸ்ரீராமஜெயம்!
மேலும் படிக்க... "மனத்துக்கினியானை......."

Thursday, December 26, 2013

சிற்றாதே பேசாதே!

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும்
முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

அப்பா   !பூதத்தாழ்வார் பாடல் அல்லவா இது!  அழகான   பாசுரம்!
 
ஆமாம் கோதை...  ஆழ்வார்  திருவடியைப் பற்றிவணங்கி நீ இன்றைய  பாசுரத்தை சொல்லேன் கேட்கிறேன்”



 
 
 
 
 
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!
 
 
”கோபாலனை நினைவுகூர்ந்தாய் கோதை!  அவன் மாடுமேய்க்கப்போனால்  திரும்பிவரௌம்வரை யசோதை   காத்திருப்பாளாம்!   ஆநிரை காத்தல்  பண்டைய  தமிழர்  தர்மம்..பாசுர விளக்கத்தை நீயே சொல்லேன் கோதை”
 
 
 
 
சொல்கிறேன் அப்பா    ...மனத்தில்   கட்டமிட்டு  இருக்கிறேன் அதை அப்படியே தருகிறேன்.
 
 
கன்று கறவை-கன்றாகிய பசுக்களின்னுடைய
பல கணங்கள்-பல திரள்களை
கறந்து-கறப்பவர்களும்
செற்றார்-சத்துருக்களினுடைய
திறல் அழிய-வலி அழியும்படி
சென்று-(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)
பொன் கொடியே-பொன்கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புனமயிலே-புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்
(இஷ்டப்படி திரிகிற) மயின் போன்ற சாயலையுமுடையவளே!
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
 
 
 சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி! =
சிற்றுதல் = சிணுங்குதல்; முணுமுணுத்தல்; எவ்வளவு அழகான தமிழ்ச் சொல்!
பெண்டாட்டி = பெருந்தனக்காரி! பெருமாட்டி!   இதெல்லாம் சரியா அப்பா?”
 
 
 
 ஆஹா  அருமை  கோதை  இதில்  செற்றார் திறல் அழிய என்றாயே  அது நன்று
 இப்படிக் கறவைகளைப் போற்றாமல் அதுகளுக்குக் கொடுமைகள் செய்யும் பகைவர்கள்! அவர்கள் திறலை அழித்து, போர் (செரு) புரியும் கோவலர்கள்! அவர்களே கோ-காவலர்கள்!

எற்றுக்கு உறங்கும் பொருள்-எங்களுடன்  புறப்படாதே உறங்குகைக்கு  ஒரு பிரயோஜனமும் உண்டோ? அடையாரோடு  கூடி இருக்காமல் கைவல்யம் போலே  இருக்கும் நிலைதான் என்ன? கைவல்யம்= தனியே அனுபவிக்கும் பகவத்ப்ரேமை தனக்கு மேற்பட்ட ஆனந்தம் இல்லை எனும்படியான நிலை.  “
 
 
 
மிகச்சரி அழகான பாசுரம் இது!
இந்தப்பாடலில் பசுக்கள் என்பது ஜீவாத்மாக்கள்.
அவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இருப்பினும் அப்பசுக்களை அடங்கக் கறக்கும் சாமர்த்தியம்  உள்ளவன் கண்ணனே என்பதால்  பரமாத்மா ஒருவனே ஆகிறான். அப்பரமாத்மா  ஜீவாத்மா எல்லாரையும் ஞானம் அடையச்செய்யக்கடவர்.  அந்த ஞானத்தை அடைய அவர்கள் தொண்டு செய்யவேண்டும். பசுக்கள் பாலை  உலகில் உள்ளார்க்கு அளித்துத்தொண்டு செய்வதுபோல என்று உட்பொருள் கூறப்படுகிறது. (பால்--ஞானம், பால் கறத்தல்-ஞானம் அடையச்செய்தல், பாலைப்பசு உதவுதல்-தொண்டுசெய்தல்)“

 
 ”உட்பொருளாய்  நான்  வைத்துப்பாடினதை அழகாக   எடுத்துரைத்த என் தந்தையே  உம்மை எம் அரங்கன்  என்றும் காக்க  வேண்டிக்கொள்கிறேன்!”

 **********************************************************************
 
 
மேலும் படிக்க... "சிற்றாதே பேசாதே!"

Wednesday, December 25, 2013

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!





கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்
ஒத்துப்பொருந்திக்கொண்டு உண்ணாதுமண்ணாள்வான்
கொத்துத்தலைவன் குடிகெடத்தோன்றிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆயர்களேறுஎன்புறம்புல்குவான்


பெரியாழ்வார் தான் அருளியபசுரத்தைப்பாடி முடிக்கவும் கோதை கேட்டாள்.

“அப்பா!   ஆயர்கள் ஏறு என்னும் கண்ணன்  உங்களின் பின்பக்கம்  வந்து உங்களைக்கட்டிக்கொள்கிறான் என்கிறீர்கள். எனக்கும் கண்ணன்  அருகில் வருவானா  அப்பா?”

‘என்னம்மா சந்தேகம,?
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை யும் எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி’ வழிபட்டால் அவன்  நம்மைத்தேடிவருவான் அம்மா”

“உண்மைதான் அப்பா... இன்றுநான்  காலையில்  போய் எழுப்பியது    இறை அனுபவத்தில்  மிகவும் பற்றுள்ள  ஒரு அனுபவ ரசிகையை!  ”

“அப்படியா? “

“ஆமாம் அப்பா..அவள் நோன்பு நோற்று  இடைவிடாமல்  சுகம் அனுபவிக்கும் அதிர்ஷடசாலி..அந்த  கிருஷ்ண அனுபவத்தில் பரவசமாக இருந்தவளை அழைக்கப்போனேன்..  இவளும் ஒரு நாயகப்பெண் பிள்ளாய்தான்  அதனால் அம்மனாய்!  அம்மா! தலைவியே என்று  மெல்ல அழைத்தேன்...”

“நல்லது கோதை ! உன்னதப்பெண்ணாக அவள் இருக்கவேண்டும் அடைய அரிய ஆபரணம் போன்றவள்”

“ஆமாம்  அதனால்தான்  அவளைப்பிறகு அருங்கலமே  என்றும் விளித்தேன்..ஆனால் பாருங்கள் அப்பா முதலில்வாசல்கதவினையே யாரும் திறக்கவில்லை..  ஒரு பதில்  வார்த்தைகூட பேசவில்லை..”

“அடடா  அப்புறம்?”

“முதல்பாசுரத்தில்  நான்  அழைத்த நாராயணனைப்பற்றி  மறுபடி சொன்னேன்..வாசனை உள்ள துளசிமாலை அணிந்திருக்கும் நாராயணன் நாமாகப்போற்ற நமது நோன்புக்கு வேண்டிய பறையைத்தரும்  புண்ணிய மூர்த்தியாவான்... “  என்று  இடையில்   அண்ணலைப்புகழ்ந்தும் அவள் அசையக்காணோம் என்று தெரியவும்  , முன்னொரு காலத்தில் எமன் வாயில் விழுந்த கும்பகர்ணனும் தனது  பெரிய  தூக்கத்தை உனக்குக்கொடுத்துவிட்டானா என்ன? மிகவும் சோம்பல் உடையவளே” என்றேன்

“தூக்கம கலைந்திருக்குமே? “

“கலைந்ததோ  கலக்கம்  தெளிந்ததோ   நானும் ‘தேற்றமாய் வந்து திற’ என்று பாடி முடித்தேன் உடனே  கதவைத்திறந்துவிட்டாள் அப்பா!”

“கோதை! நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவள் இறைவனையே  உபாயமாக  பற்றீ இருக்கும் அடியாருக்கு அறிகுறி. இவர் பிற விஷயங்களில் கவனம் செலுத்தமாட்டார். 


  பேய்ப்பெண்ணே  என்று செல்லமாய் திட்டினாய் முன்பு. இப்போது தோழியிடம் உரிமையுடன். நல்ல பரிகாச வரிகளைத்தான் அமைத்திருக்கிறாய்   குறும்புக்கார கோதைதான்..கும்பகர்ணனை  கொண்டுவந்திருக்கிறாய்....ரசித்தேன்..

இந்தப்பெண் சாதாரணஉறக்கத்தில் ஆழ்ந்தமாதிரி தெரியவில்லை..கிருஷ்ணபக்தி என்னும் போதை உடலில் ஏறி  இருக்க அதையே சுவர்க்கமாக அனுபவிக்கிறாள்.. அந்தபக்திக்காதலை அவள் மட்டுமே அனுபவிப்பதால் அதை எல்லோரும் அனுபவிப்போமே என்று அழைத்திருக்கிறாய்! துயிலெழுந்து வந்து   தலைமை தாங்கி எங்களை ஆற்றுப்படுத்து  என்பதான  கோரிக்கை  உன்னுடையது..தனியாக  பக்திசுகம் அனுபவித்தைவிடவும் மற்றவர்களுடன் பக்திப்பெருவெள்ளத்தில் பங்கு கொள்ள வைப்பதே பாகவதப்பெரு நெறி என்பதாகும்...முந்தைய  பாட்டு ஒன்றில் நாயகப்பெண்பிள்ளை  என்றாய்  என்ன ஆச்சர்யமான அர்த்தம்  தெரியுமா  நயதி இதி நாயக  தலைமை ஏற்று நடத்திச்செல்லும் திறமை உடையவளையே நீ  அழைத்தாய்!பிள்ளைகளை எல்லாம் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு தூயபக்தியை வழிகாட்ட திறமைமிக்க தலைமை வேண்டும் இல்லாவிட்டால் மழலைப்பட்டாளம் திக்கு தெரியாமல் போய் விழுந்துவிடும்..தலைமைப்பண்பென்றால் அதில்  ஆழ்ந்த தேர்ச்சி வேண்டும் அதன் முதிர்ச்சி  முகத்தில் தெரியும் அதான் தேசமுடையாய் என்றாயோ? ஆனால்  இந்தப்பாட்டில்  அருங்கலமே  என நீ போற்றி மகிழும் பெண்ணாக  இருக்கிறாள்  கோதை உன்பாதை சரியனாதுதான் அம்மா!  நாளை  உலகம்   கோதை கண்ட பாதை என  உன்னைப்பற்றி  எழுதும்”

“ என் பாதைக்கான  வழிகாட்டி நீங்கள் தானே அப்பா?  அதனால் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளாய் வாழியே’ என்று உலகம் என்னப்போற்றிப்பாடுவதையே நான் விரும்புகிறேன்!”

பெரியாழ்வார்  பிரமிப்புடன் மகளைப்பார்த்தபடியே இருந்தார்!

நோற்றுச்சுவர்க்கம் புகுகின்றவம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல்திறவாதார்
நாற்றத்துழாய்முடி நாராயணன், நம்மால்-
போற்றப்பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள் -
கூற்றத்தின்வாய்வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றுமுனக்கே பெருந்துயில்தான்தந்தானோ
ஆற்றவனந்தலுடையாயருங்கலமே!
தேற்றமாய்வந்து திறவேலோரெம்மாவாய்!
 


 
 
. .

--
 
 
மேலும் படிக்க... "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!"

Tuesday, December 24, 2013

மணிக்கதவம் தாள் திறவாய்!

கோதை  தன் தோழியை எழுப்ப  அந்தப்பெரியவீட்டுவாசலுக்கு வந்து நின்றாள்.
அவள் கிருஷ்ணபக்தை அவன் அருளால்  வசதியாக வாழ்பவள். ஊரில் பெரிய வீடு அவளுடையதுதான்.
வீடா  அது?  தூமணிமாடம்  கொண்டது சுற்றிலும் விளக்கெரிந்துகொண்டிருப்பது. அகில்தூபப்புகை மணம் கமழ்வது..  அங்கு  ஓர் அழகிய பஞ்சணை மீது  உறங்கிக்கொண்டிருக்கிறாள் தோழி.. வசதியான வீட்டுப்பெண்ணாம்    காலை சீக்கிரம் எழுந்து பழக்கம் இல்லைபோலும்.
 
இத்தனைக்கும்  அவள் அப்பா்வை   உரிமையுடன்  மாமன் என்றழைப்பாள் கோதை 
 மாமன்  மகளே உன் வீட்டின் நவரத்தினமணியிலான  கதவைத்திற.  என்று  கேட்டுக்கொண்டாள்.

அவள் எழுந்தமாதிரி தெரியவில்லை  ஆகவே அவள்தாயிடம்”மாமீர் அவளை  எழுப்பீரோ”  என்று  விண்ணப்பித்தாள்.

மாமி மகளிடம் இதை சொன்னமாதிரி தெரியவில்லை ஆகவே கோதை சற்று பொறுமை இழந்தாள்.”  மாமீ உங்க பெண் என்ன ஊமையா செவிடா  சோம்பல் காரணமாய் உறங்குகிறாளா அல்லது எழுந்திருக்க இயலாமல் காவலிடப்பட்டாளா? நன்கு உறங்கும்படி மந்திரித்துதான் விடப்பட்டாளா? “

மகளும் தாயும்  திடுக்கிட்டு  ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

மாமாயன் மாதவன் வைகுந்தன்  நாமம்  பலவும் சொல்வோம் கேட்டுவிட்டால்  நீ  வரமாட்டாயா என்ன எழுந்து வா  தோழி.
 
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரியபாரதம் கைசெய்து ஐவர்க்கு திறங்கள் காட்டியிட்டுச் செய்துபோன மாயங்களும்,நிறந்தனூடு புக்கு எனதாவியை நின்று நின்று உருக்கியுண்கின்ற இச்சிறந்தவான்சுடரே
உன்னை என்று கொல் சேர்வதுவே!
 
 
(திருவாய்மோழியில் நெஞ்சுருகி அருளிச் செய்கிறார் நம்மாழ்வார்.  மாமாயன்  அவன்!
 
 
மாதவன்...மகாலக்ஷ்மியின்  கணவன்.
திருமகளுடனேயே எப்போதும் காண்கின்றவனென்பதை சூசகமாக ஆசமனம் செய்தபிறகு பவித்திரவிரலால்(மோதிரவிரல்)வலக்கண் ஆரம்பத்தில் மாதவாய நமஹ  என்று தொடுகிறார்கள்.
 
 
வைகுநதன்!...
நாக்கொண்டு மானிடம் பாடேன், நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் சென்று,என்றும் - பூக்கொண்டு
வல்லவா றேத்த மகிழாத, வைகுந்தச்
செல்வனார் சேவடிமேல் பாட்டு.
 
 

 ஸ்ரீவைகுண்ட நாதனுடைய திருவடிகள் மேல் கவிபாடுதற்கே ஏற்றநாவைக் கொண்டு மானிசரைப் பாடுதல்  மாட்டேன் என்கிறார் திருமழிசை. அப்படிப்பட்ட  வைகுந்தன்..
 
அவன்   நாமங்கள்  ஆயிரம்  உண்டே அவற்றைக்கூறி  முக்தி அடைவோம்  வா!
 
வந்தேன் கோதை என மணிக்கதவம் தாள் திறந்தாள் அந்தப்பெண்.
******************************************************

இந்தப் பாசுரம்சொகுசாய் வாழும் மக்களை சோம்பல் வாழ்க்கையினின்றும்  எழுப்பி அவர்களை நல்வழிக்குக்கொண்ர்தல் எவ்வளவு கடினம் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது
 
ஏமப்பெருந்துயில்...  ஏமம் என்னும் சொல் காவல் என்னும் பொருளில் குறளில் உள்ளது.
 
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து
 
 
ஏமப்பெருந்துயில் என்பது  நவீன ஹிப்னாடிசம் மெஸ்மரிசம் போல  வசிய நித்திரை என்பதாகும் என்கிறது ஒரு திருப்பாவை உரை.
 
கம்பராமாயணத்தில்  சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையினைக்கான வரும்போது  அசோகவன அரக்கிகளை மந்திரத்தால் உறங்கச்செய்தாராம்.
கம்பர்  ஆழ்வார் பாடல்களில் ஆழ்ந்தவர் என்பதை இந்தப்பாடல்  காட்டுகிறது.
 
காண்டற் கொத்த காலமும் ஈதே தெறுகாவல்
தூண்டற் கொத்த சிந்தையினாரும் துயில்கில்லார்
வேண்டத்துஞ்சார் என்றொரு விஞ்சை வினை செய்தான்
மாண்டற்குற் றாராம்என எல்லாம் மயர்வுற்றார்
 
விஞ்சைவினை  என்றால் மந்திரம் 
 
தூமணிமாடம் என்பது குற்றமற்ற திருமேனியையும்  சுற்றும் விளக்கெரிவது அத்திருமேனியில் பிரகாசிக்கும் ஞானத்தையும் குறிப்பிடுவது. தூபம்..ஞான தூபம் இது கமழ்வது அனுஷ்டானத்திலே
 
துயிலணைமேல் கண் வளரும் என்கிறாள் பாருங்கள்...கிருஷ்ண நினைவில்  துயில்வதும்போல பாவனை  மனக்கண்ணில் அவனைக்காணுதம்  அதன் நீட்சி கண் வளர்தல்..
 
தூமணி மாடம்  மணிக்கதவம்  என  இருமுறை மணி என்ற சொல் வருகிறது.
மணி என்பது  நவரத்தின மணியை மட்டுமல்ல அழகான என்றும் பொருள்கொண்டுவரும்.
மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே! 
 
 
 
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர் அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.
 
பாடலின் தத்துவம்..
 
இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த க்ருஷ்ணனுக்கு ப்ரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்
 
மேலும் படிக்க... "மணிக்கதவம் தாள் திறவாய்!"

Monday, December 23, 2013

தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்......


பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம்

மல்லாண்ட  திண்தோள் மணிவண்ணா

பெரியாழ்வார்   பாசுரம்  சொல்லிக்கொண்டே துளசிதளத்தை  பூக்கூடையில்  இட்டபடி மகளைப்பார்த்துக்கேட்க ஆரம்பித்தார்

என்னம்மா  கோதை இன்றைக்கும்   உன் தோழிகளை அழைக்கும்போதே  பாசுரத்தையும்  சொல்லப்போகிறாய் என நினைக்கிறேன் அப்படித்தானே?

பெரியாழ்வார் சிரித்தபடி கேட்டார்.

ஆமாம் அப்பா  !  மல்லாண்ட திண்  தோளனை மனதார நினைத்தபடி இன்றையப்பொழுதை ஆரம்பித்துவிட்டீர்கள்  நானும் எருமை, சிறுபுல் மேய  புறப்பட்டுவிட்டதை தொண்டரடிப்பொடி சொன்னாரே,’மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்.என்று திருப்பள்ளி எழுச்சி பாசுரத்தில்  அவர் மேதிகள் என்றதை நான் நேரடியாக எருமை என்றே சொல்லப்போகிறேன்..வந்து முழுபாசுரத்தையும் உங்களுக்கு அளிப்பேன்.

நல்லது அம்மா சென்று வா!

கோதை  அந்ததோழியின் வீட்டுவாசலுக்குவந்துநின்றாள்” பாவாய் எழுந்திராய்!”என்று அழைத்தாள். இந்த ஊரில்  உன்னைப்போல அழகி யாருமில்லை  பிரும்மன் உன்னைப்பார்த்துப்பார்த்துப்படைத்தானோ! அத்தகைய அழகு கொண்ட நீ வெளியே வா உன்னைபபர்க்கவேண்டும் பாவாய் எழுந்திராய்!

அந்தப்பாவையும் கேட்டாள் “எதற்கு என்னை அழைக்கிறாயடி கோதை?”

மறந்துவிட்டாயா பாவாய்?  நீராடப்போகவேண்டாமா?கீழ்வானம் வெளுத்துவிட்டது.  எருமைகள் எல்லாம்  கூட்டம் கூட்டமாக  சென்று பனி நிறைந்த சிறிய அருகம்புல்லைத்தின்னப்போகின்றன் வந்துபாரேன்..”

அப்படியா?

ஆமாம்  கிருஷ்ணனையே நினைத்துக்கொண்டிருக்கும் உனக்கு  இவை கண்ணில்படுமா என்ன  அவன் நினைவிலான குதூகலம்  உன் கண்ணில் தெரிகிறதே  உள்ளத்தின்  அழகை  முகம் காட்டத்தவறுமா? கண்ணன் நினைவில் மகிழ்ச்சி  உள்ள பெண்ணே!  அடி கோதுகலமுடைய பாவாய்!
 

வரவேண்டியவர்கள் எல்லாம் வந்துவிடடர்களா கோதை?’’

நீராடப்புறப்படும் மிகுதியான பெண்களையும் முன்னமயேபோகாமல்தடுத்து
உன்னைக்கூவுவான் வந்து நின்றோம்(உன்னைக்கூபிடுவதற்காக வந்து வாசலில் நிற்கிறோம்)

மா(குதிரை)வடிவில் வந்த அசுரனின்
 வாயைப்பிளந்தவனை,
மல்லரை மாட்டிய(கம்சனால் அனுப்பப்பட்ட மல்லர்களை  அழித்தவனுமான  அவனிடம் நாம் வேண்டுவதை(பறை) பெறுவோம்.

தேவர்களுக்கெல்லாம்  தலைவனான  திருமாலை..ஆழ்வார் பெருமானும் அருளினாரே ‘அயர்வறும் அமரர்கள் அதிபதியவன்’என்று அந்த
தேவாதிதேவ்னை சென்றுநாம் சேவிப்போம்

ஆம் கோதை   சென்று நாம் சேவிப்போம்  அப்போது அவன் என்ன சொல்வானடி கோதை?

ஆ!  வா  !என்று அன்பாய் அழைப்பான்..  ஆராய்ந்து  நமக்கு அருள்வான் 

*****

பூதத்தாழ்வார் பெருமானின் பாசுரம்  இங்கே  மனதில் கொள்ளத்தக்கதாக இருக்கிரது.

மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும்
நினைப்பரிய நீளரங்கத் துள்ளான், - எனைப்பலரும்
தேவாதி தேவ னெனப்படுவான், முன்னொருனாள்
மாவாய் பிளந்த மகன். ...



எல்லாரும் கிருஷ்ணானுபவம் எனும்  பக்திக்குளத்தில்  குள்ளக்குளிர நீராடப்புறப்பட்டார்கள்

கிழக்கு  வெளூப்பது.... ஸத்வகுனம் தலையெடுப்பதற்கான அறிகுறி
எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாக்க்கூறுவது

பாசுரம் எட்டாம் நாள்.


கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்து -உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
--
 
 
மேலும் படிக்க... "தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்......"

Sunday, December 22, 2013

நாயகப் பெண்பிள்ளாய்!





பெரியாழ்வார்    அன்று ஆயர்பாடியினைப்பற்றி  தாம் எழுதிய பாசுரம் ஒன்றை  மகளுக்கு வாசித்துக்காண்பித்தார்.


‘ஓடு வார் வி்ழுவார் உகந்தாலிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குத் தான் என்பார்
பாடு வார்களும் பல்பறைகொட்ட நின்ரு
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!


அதைக்கேட்டதிலிருந்தே ஆயர்பாடியைப்பற்றிய  கற்பனை கோதைக்குப்பெருகி இருந்தது.

திருவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாய்  மனத்தினில் கொண்டாள்.  கோபியர்களே தம் தோழிப்பெண்களாம்! திருக்குளமே யமுனையாம்! வடபத்ரசாயிப்பெருமானே  கிருஷ்ணபகவானாம்.

நேரமாகிவிட்டதே  இன்னமும்  தோழிப்பென் எழுந்திருக்கவே இல்லையே நேற்றே  புள்ளும் சிலம்பினகாண் என்று கூவி  ஒருத்தியை எழுப்பினோம்  இன்றும் போய் இன்னொருபெண்ணை  எழுப்பியாகவேண்டுமே!

பரபரத்தபடி புறப்பட்டவளை தந்தை  குறுக்கிடவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் சொன்னார்,,”கோதை! இன்று  உன் பாசுரம்  உன் தோழிப்பெண்ணை நீ எழுப்பும் வாயிலாக அங்கேயே வரப்போகிறது என நினைக்கிறேன்.. இங்கிருந்தபடியே அதை நான் கேட்டுக்கொள்கிறேன் நீயும் பாவை நோன்பிற்குப்புறப்படு அம்மா” என்று மகளை அனுப்பி வைத்தார்.

கோதையும்  நடந்தாள்.. வழியில் கீச்சு கீச்சென்று ஆனைச்சாத்தன் பறவைகள் தங்களுக்குள் கலந்துபேசி குரல்கொடுக்க ஆரம்பித்தது  வலிய ஓசைதான்  இதுகேட்காதோ அவளுக்கு அப்படி என்னதான் செய்கிறாளோ?



தோழிவீட்டுவாசலுக்குப்போய்”கீசு கீசென்று ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?” என்று கேட்டாள்.
வெறும் பேச்சு இல்லை அரவம் =ஒலி! வலிய சத்தம்.

ம்ஹூம் அந்தப்பெண்  எழுந்துவரவே இல்லை.
“பேய்ப்பெண்ணே!” என்று சற்று  பொறுமை இழந்து அழைத்துப்பார்த்தாள்   என்ன அப்படி ஒரு பேய்த்தூக்கம்?
“காசும் பிறப்பும்கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?”

இப்படிக்கேட்டுப்பார்த்தாள் கோதை.ஆம்  ஆயர்குலப்பெண்கள் எழுந்து  தயிர்பானையைக்கடைகிறார்கள்.விடிவதற்குள் வெண்ணையை திரளவைத்து விடவேண்டும்  சூரியன் வந்தால் தயிர் சூடுபிடித்து வெண்ணை நெய்யாகிவிடும்.  விடிகாலையில் வெண்ணை எடுக்கவேண்டுமென பரபரப்பாய் அந்த வாசனை பொருந்திய  கூந்தலை உடைய ,கழுத்தில் அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் அணிந்த ஆயர்குலப்பெண்கள் தயிரைக்கடைகிறார்களே அந்த ஒலி கேட்கவில்லையா?

என்ன இது  இவள்  கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்தவளாயிற்றே  என்ன இப்படி தூங்குகிறாள்? இவளின் மனம் நான் அறிவேன்...நாராயணா கேசவா என்றால் ஓடிவந்துவிடுவாள்! எங்களுக்கெல்லாம் தலைமையான  தோழி அல்லவா?  தலைமைக்கர்வம் கொண்டுவிட்டாளோ இருக்கும் இருக்கும்...

“நாயகப்பெண்பிள்ளாய்!”

எங்களின் தலைநாயகியே!
கோதை சற்றே பரிவாய் அழைத்தாள்.

அப்படியும் ஒன்றும்  தாள் திறக்கக்  காணோம்  அவள் வெளியே வரக்காணோம்

ஓஹோ அப்படியா சேதி... கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொன்னால்  உன் உள்ளம் திறக்கும் வாயில் கதவும் திறக்கும் நான் அறிவேன் தோழி!

“நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?”

முதல் பாடலில் நாராயணனே நமக்கே பறைதருவான் என்றாள்..  அவன்  நமக்கு வேண்டியதைத்தருவான், அவனே கேசவன். கேசி எனும் அரக்கனைக்கொன்ற ஜயசீலன். அவனைப்பற்றிய ஆழ்ந்த நினைவுகளில் நீ மூழ்கிக்கிடக்கிறாய் போலும் அதை நான் அறிவேன்.

அவ்வளவுதான் உள்ளே படுத்திருந்தபெண் சட்டென  எழுந்துவிட்டாள்.’நாராயணா என்னா நாவென்ன நாவே?’ ‘கேசவனை நேசமுடன் நினையா நெஞ்சென்ன நெஞ்சே?’
அவள் எழுந்துவிட்டதை கோதையுடன் வெளியே நின்றிருந்த மற்ற பெண்களும் உணர்ந்தார்கள் மகிழ்ச்சியுடன் கோதையைப்பார்த்தார்கள்.

கோதையும்,”தேசமுடையாய்  திறவேலோ ரெம்பாவாய்” என்று  ஆர்வமுடன் முடித்தாள்
கதவு திறந்தது.. வெட்கம் கலந்த முகத்தில்தேஜஸ் அடித்தது!

“மன்னித்துவிடடி கோதை நீ வருமுன் எழுந்துவிடத்தான் நினைத்திருந்தேன் ஆனால் கிருஷ்ணன் நினைவில் ஆழ்ந்து இரவெல்லாம் தூக்கமே இல்லை.. அப்படியே உறங்காத விழிப்பு நிலை மனதிற்கு.அதனால்தான்   ஒன்றும் கேட்கவில்லை ஆனால்  கேசவா நாராயணா என்றாயே அப்போதே  உணர்வுகள் விழித்தன  உயிர்நோன்பு இது  என தெரிவித்தன  எழுந்துவிட்டேன்”

“ஆம் தோழி அதை உன் முக ஒளி நிரூபிக்கிறது  இரவெல்லாம்  பகவானின் நினைவில் கிடப்பவளுக்கு முகத்தில் தேஜஸ்வராமல் என்ன செய்யும் உன்னைப்போய் பேய்ப்பெண்ணே பெரிய தலைவி என நினைப்போ கர்வம் பிடித்தவளே என்ற நிலையில் நாயகப்பெண்பிள்ளாய் என்றெல்லாம்  உரிமையோடு சொல்லிவிட்டென் மன்னித்துவிடு..

வா..யமுனைக்கு நீராடப்போகலாம் கிருஷ்ணவைபவத்தில் ஆழ்ந்துபோகலாம்”

தோழிப்பெண்களுடன் ஆண்டாள்  யமுனையை நோக்கிக்கிளம்பினாள்.

இந்தப்பாடல் திருப்பாவையின் 2ம் திருப்பள்ளி எழுச்சிப்பாடல். சென்றபாசுரத்தில் புள்ளின்சிலம்பு கோயில் சங்கின்பேரரவம்  ஹரி என்னும் நாம் சங்கீர்த்தனம்..  இந்தப்பாசுரத்தில் மேலும் மூவகை ஒலிகளைக்கேட்கின்றோம்..பறவையின் கீசுகீசென்ற ஒலி, ஆயர்குலப்பெண்களின் தயிர்கடையும் ஓசை,கேசவனின் மகிமையைக்கூறிப்பாடிவரும் இசையொலி! மூன்று ஒலிகளில் பாவைப்பெண் பெற்றது முக ஒளி அதுதான் தேசமுடையாள்!

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்

 
மேலும் படிக்க... "நாயகப் பெண்பிள்ளாய்!"

Saturday, December 21, 2013

புள்ளும் சிலம்பின காண்!

                                                                
கோதை  எங்கேயம்மா  கிளம்பிவிட்டாய்?

குளித்துமுடித்து  வாசலில்கோலமிட்டு சாண உருண்டைமீது பரங்கிப்பூவை வைத்துவிட்டு வெளியே கிளம்பிய மகளை ஏறிட்டார் பெரியாழ்வார்.

 
 
பின்ன என்ன அப்பா விடிந்தும் இன்னும் பாவையர் சிலர் எழுந்திருக்கவில்லை அவர்களை  எழுப்பப்போகிறேன்  இனி வரப்போகிற 10 பாசுரங்கள்  உறங்கும் என் தோழியர்களுக்காகத்தான்..
கேளுங்கள் அப்பா இன்றைய பாசுரத்தை..
 
 
புள்ளும் சிலம்பின காண்! புள் அரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய் முலை நஞ்சுண்டு,
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி,
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை,
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து, "அரி" என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து, குளிர்ந்து, ஏல்-ஓர் எம் பாவாய்!


அருமையாக  எழுதி இருக்கிறாய் கோதை! பட்சிராஜனை  முன் வைத்து ஆரம்பித்த  விதம் அழகு.பெருமானின் திருவடியைத்தாங்கும் பேறுபெற்ற பறவை அரசன் கருடன். திருவரங்கம் கோவிலில் கருடன் சந்நிதியை அடைத்துக்கொண்டு பிரும்மாண்டமாய் காட்சிதருவார் அண்ணல் எப்போது அழைத்தாலும் பறக்கத்தயாராக அவன் சந்நிதி நோக்கி கைகுவித்தபடி இருக்கும் பட்சிராஜனின் பணிவும் பக்தியும்  பெருமைக்குரியது..

சரீரம் என்கிற மரத்தில் இரண்டு பட்சிகள் இருக்கின்றன. உடலும் உயிருமாக சேர்ந்து இருக்கின்றன.இரண்டும் ஒன்றுக்கொன்று இணைபிரியாமல் இருக்கின்றன..ஒரு பட்சி  சிற்றின்பதுக்கங்களை அனுபவிக்கிறது, மற்றொன்று கர்மத்தொடர்பு இல்லாததால் ஒளியோடு  இருக்கிறது. ஒருபட்சி ஜீவாத்மா. கர்மசம்பந்தமான  பட்சி பரமாத்மா,  இப்படி வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்புள் தான்  அந்தப்பட்சி தான் சிலம்புகிறது நம்மை எழுப்புகிறது.. மகாபாவிகளான நம்மை ஏதாவது ஒரு நேரத்தில்  கரைசேர்க்க எழுப்புகிறது..

 அருமையான  விளக்கம் அப்பா... மேலும் பாசுர  அர்த்தம் கேளுங்கள்..
புள்ளும்சிலம்பின காண் = புள் என்றால் பறவை! பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன!  சிலம்பு!கொலுசு என்றால் நடந்தால் தொடர்ந்து ஒலிக்கும் நடக்கையில் ஆனால்
சிலம்பில் பரல்கள் குறைவு அதுனால நடக்கும் போது சத்தம் வரும், ஆனால் விட்டுவிட்டுத்தான் வரும்.. அதே போலத் தான், பறவைகளும் விட்டு விட்டுக் கூவுகின்றன அதாவது சிலம்புகின்றன..குக் கூ..குக்கூ....

புள் அரையன் கோயிலில் = பட்சி+ராஜன் = புள்+அரையன்! பெரிய திருவடி,பறவைகளில் ஆழ்வார் கருடாழ்வார்.
புள்+அரையன் = பறவைக்கு எல்லாம் அரசன் = கருடன்! ‘இருஞ்சிறைப்புள் ஊர்ந்தான்..’ ஆழ்வார் வாசகம்
வெள்ளை விளிசங்கின். பேரரவம்...வெண்மையான சங்கின்   பெரும்நாதத்தை(ஒலியை)
கேட்டிலையோ?...கேட்கவில்லையா
பிள்ளாய் எழுந்திராய்.....பெண்ணே  எழுந்திரு
பேய்முலை நஞ்சுண்டு,,, பேய்மகளாம் பூதனையின் முலைப்பாலை உண்டு அவளை அழித்து பொய்கைஆழ்வாரும்  பூதனையைப்பேய் என்பார்’ சூர் உருவின் பேய் அளவு கண்ட பெருமான்’ என்பதாக..
கள்ளச் சகடம் கலக்கு அழிய = வண்டிச் சக்கரமாய் வந்தான் சகடாசுரன்!  அவன் கலங்கும்படி அழித்து
கால் ஓச்சி = காலால் ஓங்கி உதைத்து

வெள்ளத்து அரவில் = பாற்கடல் வெள்ளத்தில், அரவமான பாம்பின் மீது ‘மனத்து உள்ளான் மாகடல் நீர் உள்ளான்..” என்பது பேயாழ்வார் வாக்கு..
துயில் அமர்ந்த வித்தினை =  உறங்கியபடி அமரும் வித்து

பரமபதத்தில் அமர்ந்த கோலம்! பாற்கடலில் கிடந்த கோலம்! ஒருசேர சொல்கிறேன் அப்பா
வெள்ளத்து அரவில் =  பாற்கடலில்துயில்! 
 வித்தாக..பரமபதத்தில் அமர்ந்தகோலம்
 
சரிதானே அப்பா?
 
 
மிகச்சரி கோதை..  கடைசிவரியை நான் விளக்குகிறேனே...
உள்ளத்தில் கொண்டு...மனதினில்  ஏற்றுக்கொண்டு அவனை அமரவைத்து
முனிவர்களும் யோகிகளும்...தியானம் செய்யும் ரிஷிகளும் யோகாப்பியாசம் செய்யும் கைங்கர்ய சீலர்களும்...
 
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்....நிதானமாக எழுந்து(உறங்கி எழுகையில் நிதானம் தேவை அது இதயத்திற்குநல்லது) ஹரி ஹரி என்று சொல்லும் பேரொலியானது(ஹரி நாமம்  உரக்க சொல்லவேண்டும்)
 
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்....மனதில் புகுந்து குளிர்கிறது  இனியாகிலும் எழுந்து வாருங்கள் பெண்களே!.....  

முடித்துவிட்டேன் கோதை இனி நீ நோன்புக்குப்புறப்படு அம்மா!
 
 
 நல்லது அப்பா..பாவை நோன்பிற்கு  தோழியர் தயாராகி எழுந்துவிட்டார்கள்..நானும் புறப்படுகிறேன்...
 
மேலும் படிக்க... "புள்ளும் சிலம்பின காண்!"

Friday, December 20, 2013

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை...

”கோதை ! அம்மா  கோதை!”  உரக்க அழைத்தும்  கோதை தன்னைத்திரும்பிப்பார்க்கக்காணோமே என்று பதறிக்கொண்டு அவள் அருகில் சென்றார் பெரியாழ்வார்.



முற்றத்துத்திண்ணையில்  முல்லைக்கொடி அருகே அமர்ந்திருந்தாள் கோதை.

பெரியாழ்வார் மகளைப்புதிதாய்  பார்ப்பதுபோல பார்த்தார். தாய்மைப்பரிவுக்கு தன் சேய் தினம் தினம்  புதிதுதான்!

 நல்லவேளை  மையிடாவிட்டாலும் மலர்ந்த கண் விழித்திருக்கிறது   பூச்சூடாவிடினும்  கூந்தல்  மணத்துச்செழித்திருக்கிறது நெய்யும்பாலும் உண்ணாவிடினும் உடல் வளமாகவே இருக்கிறது.  வாய் மட்டும் எதையோ முணுமுணுக்கிறது  .

‘வாயுள்வையகம்கண்ட மடநல்லார்
ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்
பாயசீருடைப் பண்புடைப்பாலகன்
மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.

ஆஹா  எனது  பாசுரத்தையல்லவா  மகள் பாடிக்கொண்டிருக்கிறாள்!

பாடி முடித்து நிமிர்ந்த கோதை,”என்னப்பா  அப்படிப்பார்க்கிறீர்கள்?’என்க்கேட்டாள்.

“ஏனம்மா  நான்  கோதையெனக்கூவியது கேட்கவே இல்லையா ?’

“எப்படியப்பா கேட்கும் வாய் பாடும்போது மனம் கேசவனையே சிந்திக்கிறது. அதனால்  வேறெதிலும்  சிந்தனை செல்வதில்லை..”

“என் பாட்டைப்பாடினாய்  மாயனென்று முடித்தாய்  கேட்டேன் கோதை”

“மாயனைக்கொண்டே இன்று  என் பாசுரத்தைத்  தொடங்குகிறேன் அப்பா..”

“அப்படியா  குழந்தாய் நல்லதம்மா..அவன் மாயன் தான்!பகவானுக்கு இரண்டு முகவரிகள். அதைக்கொண்டு இரண்டு முக்கிய திருநாமங்கள் ஒன்று வைகுண்டபதி அது நித்யவிபூதி. இன்னொன்று
லீலாவிபூதியான மாயத்திற்கு அதிபதி அதனால் மாயன். நம்மை சதா தேடுபவன்.வைகுண்டத்தில் அவன் நம்மைதேட முடியுமா இந்த மாயமான  பிரபஞ்சத்தில்தானே தேடமுடியும் . உலகமெனும் பெரும் பரப்பில் எங்கோ ஒரு சிறுதூசாக இருக்கும் நம்மை அவன் ஆசையோடு தேடிக்கொண்டிருக்கிறான் ஆகவே அவன்  நம்மைத்தேடும்மாயன் தான்.”

(மாயன்.. இன்னும் சில விளக்கங்கள்..)



 வசுதேவர் சிறையில் தமக்குப்பிறந்த  குழந்தை கையில் சங்கு சக்கரமுடன் காட்சி அளிக்கவும்,’மாமாயா அவற்றை மறைத்துக்கொள்வாயாக”என்று கம்சனுக்கு பயந்துவேண்டிக்கொள்ள அக்குழந்தையும் அவற்றை மறைத்து சாதாரணக்குழந்தையாக காட்சி கொடுத்தது.இதென்ன மாயம் என தேவகியும் வசுதேவரும் வியந்துபோக அதனாலே மாமாயன் எனப்பட்டான் என்கிறார் வியாக்கியான சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளையும். மேலும் ஒரு பிறப்பிலேயே(அவதாரத்திலேயே) இரண்டு தாயார் இரண்டு தகப்பனார் இரண்டு குலங்களை அடைந்து அந்தகுலங்களுக்குத்தக்கபடி இரண்டு பெண்களை மணந்துகொண்ட மாமாயனல்லவோ கண்ணன்?
இதையே கூரத்தாழ்வார்”த்வே  மாதரௌச பிதரௌச குலே அபித்வே’என்று அருள்கிறார்.
மேலும்பல மாயச்செயல்களைப்புரிந்தவன் ஆகவே மாயன்.)


“அப்பா பாசுரத்தைக்கேளுங்கள்..”


மாயனை, மன்னு வட, மதுரை மைந்தனைத்,
தூய பெரு நீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்,

தூயோமாய் வந்து, நாம் தூமலர் தூவித், தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்கப்,
போய பிழையும், புகு தருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பு ஏல்-ஓர் எம் பாவாய்!



“ஆஹா  கோதை  அவனை வடமதுரை மைந்தன் என்றாயே பொருத்தம்தான்..வடமதுரையை ஸ்ரீவைகுண்டமாக்கி அதில்பிறந்தவன் எல்லோருக்கும் அவன் பிள்ளை...மல்லைமுதூர் வடமதுரை என வர்ணிக்கிறார் நம்மாழ்வார். ”

(மைந்தன் என்பதை மிடுக்கன் என்றும் சொல்லலாம்.. தந்தைகாலிற் பெருவிலங்கு தானவிழ நல்லிருட்கண் வந்த எந்தை’ என்று தாய் தந்தையின் கால் விலங்கு கழல வந்து அவதரித்த பிள்ளை என்று கூறுகிறது ஜீயர் ஒருவரின் அரும்பத உரை.)

“அப்பா  தூயப்பெருநீர் யமுனைத்துறைவனை என்று எழுதியதை நானே ரசித்தேன்... தூய்மையுடன் பெருமை கொண்ட  நீர் யமுனை  கிருஷ்ணனின் பாதம் வேறு எங்காவது  தானே வலியப்போய் படிந்திருக்கிறதா? வீட்டில் பாதியும் யமுனைக்கரையில் பாதியுமாய் நேரம் கழித்த கண்ணனுக்கு உகந்த நதி யமுனை. அவன் ஸ்பரிசம் பட்டதாலேயே தூய்மை பெற்ற யமுனை. வசுதேவர் கிருஷ்ணனை  கம்சனுக்குதெரியாமல்  கொண்டுவர நதியில் கால்வைத்தபோது  ஆழத்தை அடக்கிக்கொண்டு வாகாக  வற்றி வழிவிட்ட யமுனை. அதனாலும் தூய யமுனை! ”

“அருமை கோதை.. ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை என்று சொன்னாயே அற்புதம்..  சாதாரண விளக்கு காற்றடித்தால் அணைந்துவிடும் மணி விளக்கு எதனாலும் அணையாது.  ஒருவீட்டு விளக்கு என்றில்லாமல் ஆயர்குலத்திற்க்கெல்லாம்  விளக்கு. அத்தனை ஒளி உள்ளவன்.ஆயர்குலத்தில் தோன்றும்  என்று சொல்லியவிதம் சிறப்பு அவதாரங்கள் தோன்றும் மனிதர்கள்தான் பிறப்பார்கள். கண்ணன்  ஆயர்குல தீபம்.யதுகுலரத்ன தீபம்”

“தாயைக்குடல்விளக்கம் செய்த தாமோதரனை....!கௌசலை  ராமனைப்பெற்று பெருமைகொண்டாள்.
‘என்ன நோன்பு நோற்றாள் கொலா இவனைப்பெற்ற வயிறுடையாள்’என்று பின்னர் உலகம் புகழும் வண்ணம் பெருமை  கொண்டவள் கௌசல்யா.  யசோதையோ கண்ணினுண் சிறுத்தாம்பினால் அவனைக்கட்டிவிட்டாள். அதற்குத்தயாராய்  வயிற்றைக்காட்டிக்கொண்டு நின்றான் கிருஷ்ணன். அடியார்க்கு எளியன் என்பதை இதைவிட  எப்படி அவன் காட்டிவிடமுடியும்? தன் பிறப்பினால் பெற்ற வயிற்றுக்கும் ,தாங்கும் வயிற்றுத்தழும்பினால் வளர்த்த தாய்க்கும் பெருமை சேர்த்துவிட்டான்”



“ஆக  பாவையர்களான நீ்ங்கள் நோன்பிற்கு  ஒரு சிற்றடி எடுத்துவைத்தால்போதும்  எளியனான கண்ணன் இறங்கிவந்து எதிரில்நிற்கப்போகிறான் கோதை”

“ஆமாம் அப்பா அதனால்  தூய்மையுடன் அவனை அடைந்து..அதாவது அகம்-புறம் இரண்டிலும் தூய்மையாக...”

“உண்மை..தூமலர் தூவி..இதயப்பூவைத்தூவி... ஆத்ம புஷ்பமே இதர புஷ்பங்களைவிடச்சிறந்தது”
விபீஷணன் சரணமடைய வந்தபோது ஒருமுழுக்கிட்டுவரவில்லை அர்ஜுனன் யுத்தத்தின் நடுவில் முழுக்கிட்டு கீதை உரைகேட்கவில்லை.. த்ரௌபதியும் முழுகின பிறகா சரணாகதி செய்தாள்? பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பச்யதாப்ரயச்சதி| ததஹம்.....அச்நாமி  ..இலைஅல்லது பூ அல்லது பழம் அல்லது நீரையாவது எனக்கு பக்தியுடன் இடுவானாகில் அதை நான் ஏற்கிறேன் என்கிறான் கண்ணன்.பக்தியே முக்கியம்.
தொழுது... வணங்கி, வாயினால்  பாடி கிருஷ்ண கானமே வாய் படைத்த பலன்! மனத்தினால் சிந்திக்க..
 மனமின்றி சிந்தித்தல் ஆகுமோ? ஆக  த்ரிகாரணங்களில் ஈடுபட்டு அவனைச் சரணாகதி செய்யவேண்டும்”

“போயபிழையும்..இதற்கு முன் செய்த பாவங்களும், புகுதருவான் நின்றனவும்...இனிமேல் நம்மை அறியாமல் நேரிடத்தக்க பாவங்களும்  தீயினில்  தூசாகும்...நெருப்பில் விழுந்த தூசிபோல் காணாமல்போகும் செப்போலோ ரெம்பாவாய்.....  சொல்லுங்களேன் என்பாவைப்பெண்களே!”

தந்தையும் மகளும் மனநிறைவுடன்  மாதவன் கோயில் செல்ல ஆயத்தமானார்கள்.

**************************************
மாயோன் மேய காடுறை உலகமும்,
சேயோன் மேய மைவரை உலகமும்..


தொல்காப்பியம்

 
மேலும் படிக்க... "மாயனை மன்னு வடமதுரை மைந்தனை..."

Thursday, December 19, 2013

ஆழிமழைக்கண்ணா!

பெரியாழ்வார்  இன்றைக்கு சீக்கிரமே எழுந்துவிட்டார் உண்மையில் அவர் தூங்கவே இல்லை ..மகளுக்கு முன்பாய்  எழுந்து அவளிடம் தான் எழுதிய ஒருபாடலைக்காட்டவேண்டும் என்னும் பரபரப்பு.அதிலும் தமிழுக்கே  அழகுதரும் ‘ழ’ என்ற எழுத்தை வைத்து  தான் எழுதிய பாசுரத்தை  வாசித்துக்காட்டும் ஆவலில்  இருந்தவரை  கோதை நோக்கினாள்.
 
 
“என்ன அப்பா  இன்று தங்கள்முகத்தில்  இத்தனை  சுறுசுறுப்பு! கண்கள் அலைபாய்கின்றன வாய் ஏதோ சொல்லத்துடிக்கின்றன?”
 
மகள் கேட்கக்காத்திருந்தவர்போல  ஆழ்வார் பெருமான்    சொல்ல ஆரம்பிக்கிறார்.
 
குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்
      கோவிந்தனுடைய கோமள வாயிற்
குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்
      கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
      விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயினராகிச்
      சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே             
 
”ழகரத்தை  பத்து முறை  பயன்படுத்தி எழுதினேன் அம்மா! ”என்றார் பரவசமாக
 
“அப்படியா  அப்பா! நீங்கள் எட்டடிபாய்ந்தால் நான் பதினாறடி பாயமாட்டேனா என்ன?!  கேளுங்கள் இன்றைய பாசுரத்தை” என்று குறும்புதவழ  சொன்னாள்  கோதை. புன்னகை மாறாமல்  ஆழ்வாரை ஏறிட்டுவிட்டு பாசுரத்தை வாசித்தாள்.
 
 
 
 
“ஆஹா!  கோதை!! என் பாட்டினில் ‘ழ’ பத்துமுறைதான் வருகிறது உன் பாட்டிலோ 11 முறை வருகிறது! பூமகளை  பூமனிதன்  வெல்லமுடியுமா  ? அருமை அம்மா!”
 
”அப்படியில்லை அப்பா...  உங்களிடம் நான் கற்ற பயிற்சியின் தேர்ச்சியே இது! அப்பா! நான்  அண்ணலை கண்ணா என்று  செல்லமாய் அழைக்கலாம் தானே?’
 
“கூடாது என்றால் நீ  அழைக்காமலா போய்விடுவாய் கோதை?”
 
“போங்கள் அப்பா...சின்னக்கண்ணனைக்கொஞ்சிக்கொஞ்சி உங்களுக்கு எப்போதும் குறும்புதான்.
பக்தியும் ஞானமும்  பிரேமையாக வரவேண்டும். சிருங்காரம் சேரும்போது  அந்நியோன்னியம் அதிகரிக்கும் அன்பு ததும்பும்   பக்தி என்றால் காதல்.  பெருமானிடம் நாம் கொள்ளும் காதல். கண்ணனுக்கே ஆமது காமம்..அதனால்தானே ஆழ்வார்பெருமான்கள் சிலர் நாயகிபாவத்தில்  அண்ணலை தன் வசமாக்குகிறார்கள்.? நானோ நிஜத்தில் பெண்.நான் எப்படி  பிரேமையின்றி  பாடல் எழுத முடியும்? ஆனால் பிரேமையே  எல்லா  பாடல்களிலும் ஆக்கிரமிக்காது அப்பா. வேத சாரத்தைப்பிழிந்துதர நினைக்கிறேன்...சரி  பாடலை நான் விளக்குவதைவிட  என்பாடலைக்கேட்ட  ஒரு  பக்தையின்  விமர்சனமாக  இனி கேளுங்கள் அப்பா...”
 
“உத்தரவு தாயே!”
********************************************************
 
ஆயர்பாடித்திருநகரில் மார்கழி பிறந்துவிட்டது  பனி இல்லாத மார்கழியா?பனிக்காலம் வந்தால் மழை இருக்காது அடுத்து கோடைவந்தால் மழைக்கே இடமில்லை. மழை இல்லாவிட்டால்  மாடு கன்று மக்களின் கதி என்ன? முதல்பாட்டிலேயே  பாவையரை நீராட வரச்சொல்லி அழைத்தாயிற்று  யமுனையோ வற்றிக்கிடக்கிறது  மழை பெய்தால் நீர்நிலை நிறையும் நாட்காலே நீராடலாம். பரமனடி பாடலாம். நெய் உண்ணாமல் பால் உண்ணாமல் மை எழுதாமல் பூச்சூடாமல் வம்பு பேசாமல் புலன்களைக்கட்டிவைத்து புருஷோத்தமனை வழிபடலாம்.  எல்லாவற்றிர்க்கும் மழை பிரதானம் அல்லவா? தோழிகள்  கேட்பார்களே”ஏனடி  கோதை நீராட அழைக்கிறாயே  யமுனையில் மண்ணில்தான் புரளவேண்டும்.”என்று பரிகாசம் செய்வார்களே!
 
மழைதெய்வத்தை வேண்டிக்கொள்வோம் என முடிவெடுக்கிறாள் கோதை
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.
 
.
ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்!



இதுல வரும் ஆழி-மழை-கண்ணா யாராக இருக்கும்?


கண்ணா என்பது அன்பாக விளிக்கும் சொல்லும் கூட! அதிலும் பெண்களுக்கு  மனதுக்குப்பிடித்தவர்களை  இப்படி அழைக்க மிகவும் பிடிக்கும்!

 மழைக்கண்ணனாமே அப்படியானால் நீர்த் தெய்வம் வருணனா? இல்லை மழைத் தெய்வம் இந்திரனா? :)

* இந்திரனா? அவனைத்தான் அன்று  தோற்கடித்து கோவர்த்தன மலையைத் தூக்கி குன்றுக் குடையாய் எடுத்தாய் குணம் போற்றியாகிவிட்டதே.. கண்ணனின் எதிரி அவள் எதிரியும் தானே? அவனைப் போய் கூப்பிடுவாளா? :)

* வருணனா? அவனோ  அன்று  கடலில் அலையே இல்லாமல் பண்ணியபோது  ராமனிடம் சரணடைந்தவன் ஆயிற்றே ! சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! மனத்துக்கு இனியான் இராமன்! ! அந்த  இராமனின் எதிரி  வருணன் அவள் எதிரியும் தானே?   பிறகு  கோதை,  வருணனைக் கூப்பிடுவாளா? :)


எப்போது குன்றம் வணங்கிக் குன்றம் எடுத்தானோ, அப்போதே இந்திரனையும் வருணனையும் அடக்கி, மழைக்கும் அவனே நேரடியான அதிபதி ஆகி விட்டான்! சாதாரணப்பெண்ணா கோதை  அறிவால் வாழ்பவள் அல்லவா?எனவே கண்ணனையே மழைக் கடவுளாக  அழைக்கிறாள்!
 
கண்ணனின் கண்களில்  கருணை மழை எப்போதும் உண்டே! உண்மையான பக்தர்களைக்காணும்போது அவன் கண்களில் ஆனந்த மழையென  நீர் பொழியுமாம். எப்படி என்கிறீர்களா?
 
குசேலர் அன்று கிருஷ்னனின் திருமாளிகைக்கு வருகிறார்.தன் நண்பனும் பக்தனுமான  குசேலன் வருவதை அறிந்த  கிருஷ்ணன் அதிவேகமாய்   எழுந்து நடக்கிறான்.  எதிர்கொண்டு அழைத்து பக்தனை  இறுக அணைக்கிறான்.
ப்ரீதோவ்ய முஞ்சத் அபீந்தூன் நேத்ராப்யாம் புஷ்கரேக்ஷண:
பரமபக்தனானான். செந்தாமரைமலர்கள் போன்ற இருகண்களாலும் ஆனந்தக்கண்னீரை வர்ஷித்தான். குசேலருக்கு வரப்போகிற பெரிய ராஜ்ஜியத்திற்கு பட்டாபிஷேகம் செய்தது போலிருந்தது என்கிறார்  சுகப்பிரம்மம்  .அவரது  வாக்கினால் வந்த விஷயம் இது ! ஆழிமழைக்கண்ணா என் ஆண்டாள் விளித்தது சரிதானே!
 
.ஆழி என்பதற்கு  அநேக அர்த்தங்கள்
 
 பொய்கைபெருமான்  அருள்வாரே முதல்பாடலிலேயே
 
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக்கதிரோன் விளக்காக செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று
 
என்கிறார்
 
இதில் முதல் ஆழி  சக்கரம் இரண்டாம் ஆழி கடல்.
ஆழி எனும் சக்கரம் பெருமானின் பஞ்ச ஆயுதங்களில் தலைமையானது.சக்ராயுதம்  தான் சக்கரத்தாழ்வார் என்றும்  போற்றப்படுகிறார். சுதர்சன சக்கரம் வலிமையானது துன்பம் போக்கக்கூடியது.  சக்கர பிம்பத்தில் அதைச்சுற்றி ஒருவளையமும் தீக்கொழுந்துகளும்   இருக்கும். சூர்யகோடி ஸம்ப்ரபம்  என்பார்கள் . அத்தகைய  ஒளியும்  வலிமையும் கொண்டது.
 
 
 
 
ஆழிமழைக்கண்ணா என்னும் ஆரம்ப வார்த்தைக்கு கடல்போன்ற கம்பீரமான  தோற்றத்தை உடைய மழைக்குத்தலைவனான  கண்ணனே!
ஒன்றும் நீ கைகரவேல்... நீ ஒன்றையும் ஒளிக்கக்கூடாது
ஆழி உள் புக்கு = கடலில் புகுந்து முகந்து கொடு = அள்ளிக் கொண்டு
 ஆர்த்து ஏறி = சத்தமாக/அணிந்து ஏறி
ஆர்த்தல் = ஒலி எழுப்பல் எனக் கொள்ளலாம்!

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் = ஊழிக் காலத் தோற்றம் போல், மேகம் கறுத்து....காளமேகப்பெருமான்.
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில் = பாழி என்றால் வலிமை/குகை! அம் என்றால் அழகு! வலிமையான, அதே சமயம் அழகான தோள்! மல்லாண்ட திண் தோள் என்கிறார் ஆண்டாளின் அப்பாவும். தோள் கண்டார் தோளே கண்டார் என்கிறார் பின்வந்த கம்பரும். ஆணுக்கு அழகு தோள்.

பற்மநாபன்=பற்பநாபன்! தமிழாக்குகிறாள் கோதை! நாபிக்கமலத்தையுடையவன்..

ஆழி போல் மின்னி = சக்கரத்தின் ஒளியைப் போல மின்னி,,,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து = சங்கின் ஒலியைப் போல இடி இடித்து(வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ  என்பாள்  பிறகு ஒருபாட்டினில்.. சங்குக்கு அழகு முழங்குவது)

முதலில் மின்னல்! அப்புறம் இடி- என  விஞ்ஞானம்  கற்பிக்கிறாள் கோதை!
ஒளி, ஒலியை விட வேகமாகச் செல்ல வல்லது!

தாழாதே சாரங்கம் உதைத்த சர மழை போல் = சாரங்க வில்லில் இருந்து புறப்பட்டு விழும் அம்பு போல, சரம் சரமா சேர்ந்து குத்துகிறது மழை!
 
 வாழ உலகினில் பெய்திடாய்! =  அம்புச்சரமாய் மழை மட்டும் வரட்டும் அது அழிவாகாமல் நல்லபடியாய்  பெய்து நாங்கள்  எல்லாரும் வாழ,  மழை பெய்யட்டும்!
 
 

இந்தப் பாசுரத்தில், பெருமானின் பஞ்சாயுதங்களில்,
மூன்றைச் சிறப்பித்தும் சொல்லி விடுகிறாள்!
1. சுதர்சனம் என்னும் திருவாழி (சக்கரம்)
2. பாஞ்சசன்னியம் என்னும் சங்கு
3. சாரங்கம் என்னும் வில்
 

நாங்களும் மார்கழி நீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய் = மழை பெய்தால் தானே,  ஆன்மீக விஷயமெல்லாம் ஒழுங்கா நடக்கும்! மகிழ்ச்சிவரும்? மார்கழியில்  மகிழ்ந்துநீராடுவோம்   எம் தோழிப்பெண்களே!


ஆழிம‌ழைப்பாட‌லை ம‌ழைவேண்டிபாட‌லாம் என்கிறார்க‌ள்
.
மேலும் படிக்க... "ஆழிமழைக்கண்ணா!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.