Social Icons

Pages

Tuesday, February 21, 2012

மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!

பிப்ரவரி 21.


ஸ்ரீஅரவிந்த அன்னையின் பிறந்த நாள் இன்று.






அன்னையின் அருள் அவரை ஒருமுறை நினைத்தவருக்கு எளிதாகக்கைகூடும்.








புதுச்சேரியில் அரவிந்த ஆஸ்ரமத்தில் மகாசமாதிஅருகே நாம் கண்மூடி அமைதியாய்நிற்கும்போதுஅரூபமாக அன்னையும் அரவிந்தரும் ஆசிவழங்குவதை ஆத்மார்த்தமாக உணரமுடியும். அந்த சமாதியில் விரல்தொட்டு வணங்கும்போது உடலில் தெய்வீகமின்அலை ஏற்படுவதை அனுபவித்து மெய்சிலிர்க்க இயலும்!



மலர்களை வைத்து அன்னையை நாம் வழிபடுவது மலர்போன்ற மென்மையான மனமும் மலர்போன்ற மலர்ந்த மனத்தையும் நமக்கு உண்டாக்கிவிடும்!

ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்வது வெற்றிகளை விட தோல்விகளே மனமாற்றத்திற்கான குறுக்கு வழியாக மாறும் என்பதாகும்.இப்படிச் சொல்வதனால் தோல்வியே வெற்றிக்குத்தானாக அழைத்துக் கொண்டுபோகும் என்பதல்ல. தோல்வி தந்த பாடத்தைச் சரியாகக்கற்றுக் கொண்டால், அந்தப் படிப்பினையே வெற்றிக்கான ஆதாரமாக, படியாக
இருப்பதென்னவோ உண்மை.







மாற்றத்திற்கான விதை நமக்குள்ளேயே தான் இருக்கிறது.விதை முளைப்பதற்குஉதவியாக நம்முடைய அணுகுமுறை, மன நிலை பொருந்தி வருகிறதா என்பதே கேள்வி.இறைக்கருணை இல்லாவிடில் எதுவும் சாத்தியமில்லை நாம்தான் அறியாமை இருளில் மூழ்கிக்கிடக்கிறோமே அதனால்தான்வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வாய் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அசதோ மா சத் கமய



தமஸோ மா ஜ்யோதிர் கமய



ம்ருத்யோர் மா அம்ருதம் கமய



ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:










பராசக்தியின் அம்சமான அரவிந்த அன்னையின் அமுதமொழிகள் சில...



 என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போதும் இருக்கிறேன்.



பயம் என்பதே எப்போதும் கூடாது,. அச்சமற்றவனுக்கே வெற்றி.



எப்போதும் நான் உனக்கு உறுதுணையாய் இருந்து உன்னை ரட்சிப்பேன். ஒருபோதும்பயப்படக்கூடாது தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும் ஆபத்து ஏற்படின் என்னை அழைக்கும் சக்தி உனக்கு இருக்கவேண்டும்



இறைசக்தியைப்பற்றி மட்டுமே நினை அது உன்னுடன் இருக்கும்}



அன்னை கூறிய சில கதைகள்...........


ஒரு கிராமத்துப்பண்ணை வீட்டில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது.

அது 150 ஆண்டுகள் இடைவிடாமல்ஓடி சரியான நேரத்தைக்காட்டிவந்தது.

ஒவ்வொருநாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்ததும் முதலில் அந்தகடிகாரம் அருகில் சென்று அது சரியாக ஓடுகிறதா என்றுபார்ப்பார்.

ஒருநாள்காலை அவர் இப்படி நின்றுபார்த்தபோது திடீரென கடிகாரம் பேசத்தொடங்கியது.


 150 ஆண்டுகளாக நானும் வேலை செய்துவருகிறேன் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன் எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது எனக்கு ஓய்வு வேண்டாமா : என்று கேட்டது.


;உன்னுடைய புகார் சரி இல்லை என் அருமை கடிகாரமே என்று ஆரம்பித்த விவசாயிதொடர்ந்தார்,

உன்னுடைய ஒவ்வொரு டிக்கிலும் ஒருவினாடி ஓய்வு இருப்பதை நீ மறந்துவிட்டாயே: !


கடிகாரம் ஒருநிமிடம் யோசித்தது பிறகு மறுபடி தன்பணியைத்தொடர்ந்தது.
இந்தக்கதை கூறும் நீதி என்ன

ஓர் ஒழுங்குமுறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடுகொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்குமுறையே அதிகபளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கிவிடும் என்பதுதான்!

**********************************


பெர்ஷியாவில் தேன் விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்துவந்தாள்.
அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள்.

அவளுடைய கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமாக வந்து தேன் வாங்குவது வழக்கமாகிவிட்டது.

இதைப்பார்த்து என்ரிச்சலைடைந்த ஒருமனிதன் அதே வியாபாரத்தை தானும் செய்ய நினைக்கிறான்

கடை வைத்து வரிசையாக தேன்குடங்களைக்கொண்டுவந்து அடுக்கினான் அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான் .

ஒருவர் இதைகவனித்துக்கூறினாராம், கடுமையான இவன்முகம் விஷத்தைவிற்கிறமாதிரி இருக்கிறதே!

சிரித்தபடியே இருந்த அந்த தேன்விற்கும்பெண்மணி இயற்கையாகவே முகமலர்ச்சியுடன் இருந்தாள் .அவள் வாடிக்கையாளர்களுக்கு தேனைமட்டும் விற்கும்பெண்ணாகத்தெரியவில்லை அதற்கும் மேலானவளாக உலகின் அதிகமுகமலர்ச்சி உள்ளபெண்ணாகத்தெரிந்தாள்.

நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை, ஒருவரோடு ஒருவர் தோழமையுடன் இருக்கவேண்டும்.

அந்த தேன் விற்கும்பெண்போல இயற்கையான முகமலர்ச்சியைக்கொண்டிருக்கவேண்டும் .அந்த மலர்ச்சியே தோழமையை அதிகப்படுத்தும்!

**********************************************************************

ஸ்ரீ அரவிந்த அன்னையின் அருள் தோழமைகளுக்கு என்றும் கிடைத்திட இந்நாளில் அன்னையிடம் வேண்டிக்கொள்கிறேன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ
ஓம் ஆனந்த மயி சைதன்யமயி சத்யமயி பரமே!









--














--







மேலும் படிக்க... "மலர்போல ,மலர்போல மனம் வேண்டும் தாயே!"

Monday, February 20, 2012

பித்தா !பிறைசூடி!

ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு



நன்மையொடு தீமையிலை நாடுவது ஒன்று இல்லை


சீலம் இலை தவம் இல்லை விரதமொடு ஆச் சிரமச்


செயல் இல்லை தியானம் இல்லை சித்தமலம் இல்லை


கோலம் இலை புலன் இல்லை கரணம் இல்லை;

குணம் இல்லை குறி இல்லை குலமும் இல்லை


பாலருடன் உன்மத்தர் பிசாசர்குணம் மருவிப்

பாடலினொடு ஆடல் இவை பயின்றிடினும் பயில்வர்

என்கிறார் சிவஞான சித்தியார். ஞான நிஷ்டை  உடையவர்கள் மானிட உடல் பெற்றிருந்தும் அந்த சரீரத்துடன் தொடர்பின்றி அருள்வசப்பட்டிருப்பார். அவர் செய்யும் செய்கைகள் உலகினர்க்கு பாலகர் பித்தர் முதலானவர் செய்யும் செய்கைகள் போலத்தோன்றும்..அபிராமிபட்டரின் நிலைமை இப்படித்தான் ஆகி இருந்தது.

ஆனால் இறைவனே பித்தனாமே  எப்படி அது?




பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பது பழமொழி.அன்னை தன் குழந்தைமீது அன்பு மிகுதியால் பித்தாகிறாள் அண்ணலும் நம் மீது கொண்ட அன்பினால் பித்தன் ஆகிறான். உயிர்கள் மீது கொண்ட கருணை மிகுதி அவனை பித்தன் என்ற பேரைக்கொடுக்கிறது. தாய் தன் குழந்தை செய்யும் தவறுகளை எல்லாம் மன்னித்துவிடுகிறாள். தாயினும் சாலப்பரியும் இறைவன் பெரும் பித்தன் தான்.

அவருக்குத்தான் எத்தனை துன்பங்கள்!

  செருப்படிக்கடிகள் செம்மாந்திருந்தும்
தொல்புகழ் விசயன் வில்லடி பொறுத்தும்
அருந்தமிழ் வழுதி பிரம்படிக் குவந்தும்,
எளியரின் எளியர் ஆயினர்
அளியர் போலும் அன்பர் தமக்கே!

என்கிறது திருவாரூர் நான்மணிமாலைப்பாடல்.
இப்படி எளிமையாய் அன்பர்களை ஆட்கொள்ளும் இவரை பித்தன் என்பதில் என்ன தவறு?

"முன்னமவனுடைய நாமம் கேட்டாள்; மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்; பின்னையவனுடைய வாரூர் கோட்டாள்; பெயர்த்துமவனுக்கே பிச்சியானாள்" என்றபடி பித்தனிடம் பிச்சியாகும் நிலைதான் உண்மை பக்தனுக்கு!


திருவாசகத்துப்பாடலில்  பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறை பெரும்பித்தனே   என்கிறார் மாணிக்க வாசகர்!

சிவபெருமான முதலில் முதியவர் வடிவத்தில் தம்மை ஆட்கொள்ள வந்தது தெரியாமல் சுந்தரமூர்த்தி நாயனார் அண்ணலை பித்தன் என்கிறார்கோபமாக  பிரான் அதனை பொருட்படுத்தாமல் வலிந்து ஆட்கொண்டதும் அவருடைய அருட்பெரும் பித்தை அறிந்துகொண்டவர் அவரைப்போற்றிப்புகழ்ந்து

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா


எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே ’

என்று கண்பனிக்கிறார்!






மேலும் படிக்க... "பித்தா !பிறைசூடி!"

Tuesday, February 14, 2012

எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)

பாதித்தூக்கத்தில் மனைவியை எழுப்பினான் சாரங். அந்தக்கணம் அவனது மகிழ்ச்சியை யாருடனாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. ஆப்த நண்பன் ஆதித்யாவிடம் சொல்லலாம் என்றால் அவன் ஊரில் இல்லை

சுமதியை விட்டால் இப்போது அவனுக்கு வேறுயாருமில்லை.சுமதிக்கு கண்டிப்பாய் சந்தோஷமாக இருக்குமென்று நம்பினான். பல நாட்களாக அவளும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறாள். ' எத்தனை நாளைக்கு இப்படி குறும்படம் வெறும்படம்னு எடுத்துட்டே இருப்பீங்க என்னதான் இதுல நீங்க அவார்ட் வாங்கினாலும் ஒரு பிசி ஸ்ரீராம் மாதிரி ஒரு பாலுமகேந்திரா மாதிரி சினிமாக்கு காமெராமேனாப்
போயி பேர்வாங்கணும்..அதான் என் ஆசை '

'சுமதி..உன் ஆசை நிறைவேறப்போகுது! ' என்று சொல்ல ஆரம்பிக்கும்போதே திக்குமுக்காடினான் சாரங்..

அவன் எதிர்பாராத வகையில் சற்றுமுன் அந்த பிரபல இயக்குநர் அவனுக்கு'செல் 'லில் சொல்லிய

வார்த்தைகள் இன்னமும் அவன் காதில் ஒலிக்கின்றன

'சாரங்! என்னோட புதுப்படத்துக்கு நீங்கதான் காமெரா மேன்!. நீரஜ் ஹீரோ. !ஹீரோயினாக ஒரு புதுமுகம், பேரு ஸ்படிகா, பம்பாய் இறக்குமதி. அடுத்தவாரம் பூஜை . மற்றவை மெயில்ல மானேஜர் அனுப்புவார்..ஓக்கே ? '

'த்..த.. தாங்க்யூ டைரக்டர் சார்! '

அவ்வளவுதான், இயக்குநர் அதிகம் பேசமாட்டார் ஆனால் அவரது படம் பலரால் பேசப்பட்டுவருகின்றன

அவரது இயக்கத்தில் பணிபுரிய எனக்கு ஒரு வாய்ப்பா ?

சாரங்கால் இன்னமும் நம்பமுடியவில்லை.

சுமதி சட்டென எழுந்து உட்கார்ந்தவள், ' என்னங்க...என் கசின் ரம்யாவோட குழந்தை ராகுலை நாம தத்து எடுக்கலாம்னு நான் சொன்னதை இப்போவாவது ஏத்துக்கிட்டாங்களா ? பதினெட்டு வருஷமா நான் தவிச்ச தவிப்பு போதுங்க...வயசு நாப்பது எனக்கும் ,உங்களுக்கு நாப்பத்திமூணும் ஆகுது....இனிமே குழந்தைபாக்கியமெல்லாம் கண்டிப்பா எனக்குக் கிடைக்கபோறதில்ல..கடவுள்மனசு கல்லுன்னு நல்லா தெரிஞ்சிபோச்சு. அதனால காதும் காதும் வச்ச மாதிரி வீட்டோட வச்சி தத்து எடுத்துக்கிடலாம்....சரிதானே ? ' என்று ஆவலும் அதட்டலுமாய் கேட்டாள்

அவரவர் கவலை அவரவர்க்கு.

பெருமூச்சு விட்டான் சாரங்

குழந்தை இல்லாதது சமூகத்தில் பெரியகுற்றமா என்ன ? திரும்பத் திரும்ப என்மனைவி என்குழந்தை’ என்றே
சுயநல வாழ்க்கைதான் வழவேண்டுமா ? மனசை உற்சாகப்படுத்திக்கொள்ள மாற்றுவழிகள் எவ்வளவோ இல்லையா என்ன ?

இல்லாததற்கு ஏங்குவதே இயல்பாகித்தான் போகுமோ ?

சாரங்கின் முகம் போனபோக்கைப்பார்த்து 'விஷயம் அது இல்லையா ? ' ஏமாற்றமாய் சுமதி கேட்டாள்

'சரி அது உன் விருப்பம் ஆனால் நான் சொல்லவந்தது.... ' என்று ஆரம்பித்தான். ஆனாலும் அவளை எழுப்பும்போது இருந்த வேகம் இப்போது இல்லையெனினும் நிதானமாய் சொல்லிமுடித்தான்

'இதுவும் நல்ல விஷயம்தாங்க...உடனே ஊருக்கு உங்கப்பாக்கு போன் போட்டு சொல்லுங்களேன் '

'வேணாம் '

'இன்னமும் உங்கப்பா பேர்ல வருத்தமாக்கும் ? அன்னிக்கு உங்க காதலை பலிகொடுக்கவைத்து என்னை உங்கதலையில கட்டினது மகாபாவம் தாங்க.. '

'ஹலோ ? அம்மாதாயே! பதினெட்டுவருஷம் முன்பு நடந்த கதையை நீ இப்போ கிளறாதே.நான் உன்கிட்ட உண்மை சொல்லிட நினைத்து சொன்னேனே தவிர இழந்த காதலையே நினைச்சி மருகிப்போகலை..கடந்துபோறமேகம் மாதிரி
வாழ்க்கையில் அதுவும் ஒண்ணுனு என்னை நானே தேத்திட்டேன். அந்தப்பொண்ணும் வேற யாரையோ கட்டிக்கப் போவதாய் எனக்கு கல்யாணப்பத்திரிகையும் அனுப்பிட்டா.. சரிசரி இப்போ நான் திரைப் படத்துக்கு காமெரா மேனா நிச்சயமாகி இருக்கிற விஷயத்தை நீயாரிடமும் சொல்லகூடாது, படத்தின் பூஜைமுடியட்டும்,அதுவரை
கப்சிப்புனு இருக்கணும் இந்த சினி ஃபீல்டுல கடைசிவரைக்கும் எதுவுமே நிச்சயமில்லை '

'ஆமாம் .நான் யார்ட்டயும் சொல்லமாட்டேங்க.. நாளைக்குக் கோயிலுக்கு போயிட்டு கடவுளுக்கு மட்டும் மெளனமா என் நன்றியை சொல்லிட்டு வரேன்.. '

'கொஞ்சமுன்னாடிதான் கடவுள் மனசு கல்லுன்னு திட்டினபோல இருக்கே ? '

' அதனால் என்ன, உங்கமேல இப்போ கருணை காட்டி இருக்காரே ? '

சுமதி தன் வயதைமீறி சின்னப்பெண்போலதுள்ளிக் குதித்தாள்

மறுநாள் விவரமான மின்னஞ்சல் கண்டு அதன்படி சாரங் இயக்குநரின் இருப்பிடத்திற்குச் சென்றான்

'வாங்க சாரங்... ' வரவேற்றார் இயக்குநர். இதமான அன்பான அவரது வரவேற்பில் குளிர்ந்தான் சாரங்.

'வணக்கம் ...ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு... ' என்றான் சாரங்.

உதவி இயக்குநர் ஒருவர் சாரங்கின் அருகில் நின்றவர் அவன் காதோரம் ' சாரங்! உங்களோட லேடஸ்ட் குறும்படம் 'உனதுவிழியில் எனதுபார்வை ' பார்த்து டைரக்டர் அசந்துபோட்யிட்டார். 'என்னடா காமெரால பேசறான்..ஓவியம்மாதிரி காட்சிகளை அள்ளிட்டுவந்திருக்கான்! எப்படி இவனைப்பத்தி நீங்க யாருமே என்கிட்ட சொல்லலே ? 'னு சத்தம்போட்டார்...சாரங்..நீங்க இந்தபடத்துக்குள் நுழைவதின் மூலம் எங்கயோ போகப்போறீங்க அது நிச்சயம் ' என்றார் கிசுகிசுப்பான உற்சாகமான குரலில் .

சாரங் புன்னகையுடன் தலை அசைத்தான். எல்லாம் கனவுமாதிரி இருந்தது.

வாழ்க்கையில் நல்ல சந்தர்ப்பங்கள் எல்லாம் மழைமாதிரி எதிர்பாராத தருணங்களில் தான் வருமோ ?

அந்த ஐந்துநட்சத்திர ஹோட்டலில் மேல்தளத்தின் பிரத்தியேக ஹாலில் பேச்சு வார்த்தைகள் நடந்துமுடிந்ததும் டைரக்டர் அனைவரிடமும் சில புகைப்படங்களைக் காட்டினார்

'இதான் நம்ம படத்து ஹீரோயின் ...பம்பாய்ல வளர்ந்த பொண்ணு. ஆனாதமிழ் பேசுது..நல்ல முகவெட்டு .பாருங்க அந்த நாள் சரோஜாதேவிமாதிரி எக்ஸ்ப்ரஸிவ் ஐய்ஸ்! எடுப்பானமூக்கு..மும்பாய்மாடலிங்பண்ணுது,...பதினேழுவயசுதான். பழையசாவித்திரிமாதிரி துறுதுறுன்னு இருக்கு..புது அமலாபால் மாதிரி இளமை வழியுது! கண்டிப்பா இந்தபொண்ணு தமிழ் நாட்டை ஒருகலக்கு கலக்கப்போகுது! '

எல்லாரும் ஆர்வமாய் அந்தப்புகைபடங்களை கையில் வாங்கிப் பார்த்துவிட்டு தலை அசைத்து ஆமோதித்தனர்

சாரங் இயக்குநரின் முகத்தையே பார்த்து பிரமிப்புடன் அமர்ந்திருந்தான்

அடேயப்பா, போட்டோவைப்பார்த்து எதிர்காலத்தைச் சொல்லும் அளவுக்கு அனுபவம் வாய்ந்த டைரக்டரின் கீழ் பணிபுரிவது எனக்கும் பெருமைதான்.

'என்ன சார்ங்..நீங்கதான் போட்டோவை முக்கியமாபாக்கணும்... உங்க காமிரா கண்ணுல தான் குத்தம் குறையெல்லாம் கரெக்டா தெரியும்.. ' என்றார்

இயக்குநர் சிரித்தபடி அதற்குள் அவருக்கு மொபைலில் யாரோ அழைக்க காரிடாரில் ஓரமாய் நடந்துசென்று பேச
ஆரம்பித்துவிட்டார்

சாரங் நிதானமாய் அந்த போட்டோக்களில் ஒன்றை கையில் எடுத்தான்.

அடுத்தகணம் விழி குத்திட நின்றான்

. 'வசுதா ? '

மனசு கூவியது .

நல்லவேளை யாரும் அவனது முகமாற்றத்தை கவனிக்கவில்லை

'ஸ்படிகா ! புதுமுகம்! . சொந்தப்பேரே நல்லாஇருக்குன்னு டைரக்டர் அதையே ஒக்கேபண்ணிட்டார் '

உதவி இயக்குநர் திலக் சொன்னார்

சாரங் நெற்றிவியர்வையைத்துடைத்துக்கொண்டான்.

'சாருக்கு ஏசிலகூட வியர்க்குது டைரக்டர்கிட்ட முதல் அனுபவம் அதான்னு நினைக்கிறேன் டோண்ட் ஒர்ரி மிஸ்டர்சாரங். ரொம்ப ஃப்ரீயா இருக்கலாம்.
செட்டுக்கு வந்துட்டா மனுஷர் பம்பரமா சுத்துவார்.நல்ல கலைஞர்களை என்கரேஜ் செய்வார் நம்ம டைரக்டர் ' 'அதனால்தான் உயரத்திலிருந்து அவர் இறங்காமல் இருக்கிறார்.. கர்வமோ,தலைகனமோ இல்லாத அற்புத மனிதர் நம்மடைரக்டர் '

'அடுத்தவர்களை மதிக்கத்தெரிந்தவர் '

ஆளாளுக்குப் புகழ்ந்தார்கள்,பிறகு அனைவரும் டின்னர்மேஜை நோக்கிவிரைந்தார்கள்

சாரங் ஸ்படிகாவின் போட்டோவைப் பார்த்ததுமே அது வசுதாவின் வாரிசு என்பதை உணர்ந்துகொண்டுவிட்டான்.

அந்தப் பெரியவிழிகளும் கூரிய நாசியும் கதுப்புக் கன்னங்களும் குறும்புப்புன்னகையும் வசுதாவிற்கே உரிய சிறப்பு அம்சங்கள்.

எத்தனைமுயன்றும் சாரங்கிற்குத்தனது பழைய நினைவுகளை நோக்கி மனம் திரும்பிப்போவதைத் தடுக்க இயலாமல் தவித்தான்

பழையவிஷயங்கள் எல்லாவற்றையும் மனம் மறந்துவிடுவதில்ைலை. மறக்கச்சொல்லி மனதிற்கு ஆணை பிறப்பித்தாலும் அது பல நேரங்களில் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். இப்போது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டான் சாரங்.

வசுதா!

அவளைப்பார்த்து பேசும்வரை சாரங்கனுக்கு(அப்போது சாரங்கன் என்றமுழுபெயரில் தான் அழைக்கப்பட்டான். பிறகு குறும்படங்களுக்கு பணிபுரியபோனபோது சாரங் என்றானது) பெண் என்றாலே அலர்ஜி. அம்மாவைத்தவிர அதிகம் வேறு
பெண்களூடன் பேசிபழக்கமில்லாதவனாய் அதை விரும்பாதவனாயும் இருந்தான்.

பெண்ணுடன் நட்பு கொள்வதற்கு அழகுமட்டும் போதாது வேறு ஏதோ ஒரு ஈர்ப்பும் தேவை என்பதை உணரவைத்தவள் வசுதா.

கரூர் அருகே அமராவதி நதி பாயும் அந்த கிராமத்தின் பசுமைக்காட்சிகளை

தனது காமிராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்

சாரங்கன்.. கல்லூரி நாளிலிருந்தே புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் கொண்டவன். அப்போதெல்லாம் வாரவிடுமுறைகளில் தோளில் காமிராவை மாட்டிக் கொண்டு ஊர் ஊராக புறப்பட்டுப் போய்விடுவான் சென்னையில் ஒரு

கம்பெனியில் வேலைக்கு சேர்ந்த பிறகு மாதத்தில் ஒரிரு முறைமட்டுமே அப்படிப்போகமுடிந்தது. நண்பன் ஆதித்யா உறவினர்

வீட்டுக் கல்யாணத்திற்கு கரூர் போய்வந்தவன் அருகிலிருந்த ஒருகிராமத்தின் பெயரைச் சொல்லி சாரங்கனிடம் அதை அவசியம் அவன் போய்ப்பார்த்து அங்குஉள்ள இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படங்கள் எடுக்கலாமென்று சொல்லி இருந்தான்.

தோப்பு ஒன்றில் ராணுவவரிசையாய் நின்றிருந்த தென்னைமரங்களை எல்லாம் ரசித்துப்பார்த்தபடி வந்தவன் சட்டென பாதிவளர்ச்சியிலேயே ஊஞ்சல்போல இறங்கி வளைந்து மறுபடி மேலே சென்று கொண்டிருந்த ஒருமரத்தின் கீழ் வளைவின் மீது அமர்ந்தபடி ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் அதிர்ந்தான்.

தன்னந்தனியாய் யாருமில்லாத இடத்தில் அழகான இளம்பெண் மும்முரமாய் புத்தகம் படிப்பது வினோதமாய் இருந்தது. அந்த வளைந்தமரத்தை புகைப்படம் எடுக்க விரும்பியவன் அதன் மீது அவள் அமர்ந்திருக்கவும் தயக்கமாய் அவளையே ஏறிட்டான்.

மஞ்சளில் அரக்குபூக்கள் போட்ட பாவாடையும் அரக்கு தாவணியும் மஞ்சள் ஜாக்கெட்டும் அணிந்திருந்த அவள் அந்த அந்திவானச் சிவப்பின் கீழ் தேவதையாய்த் தெரிந்தாள்

சாரங்கன் வந்ததையே அறியாதவளாய் புத்தகத்தில் மூழ்கி இருந்தாள் அவன்

நினைத்திருந்தால் அவளுடைய அழகை அவள் அறியாமலேயே தனது காமெராவில் கவர்ந்திருக்கமுடியும். ஆனால் அது அவனது சுபாவம் அல்ல

கல்லூரியிலேயே சகமாணவிகளால் மிகவும் மதிக்கப்பட்டவன் சாரங்கன் படிப்பு உண்டு தனது காமெரா உண்டு என்றுதானிருப்பானே தவிர எந்தக் குறும்பும் செய்யாதவன்..முக்கியமாய் இளம் பெண்களை சீண்டி விளையாடுவதை விரும்பாதவன் நண்பர்கள் அவனை ரிஷி என்பார்கள் செல்லமாக

காமெராவுடன் அவளைக்கடந்து நடந்தவனை. 'ஹலோ ? ' என்று ஒரு குயில் அழைத்தது.

அழகான பெண்களுக்கெல்லாம் குரலும் அழகாய்த்தான் இருக்குமோ ?

திரும்பினான் சாரங்கன்.

'ஊருக்கு புதுசா ? ' கேட்டாள் குறும்புச் சிரிப்புடன்.

தலை ஆட்டினான்

'காமெரா வச்சிட்டு சுத்தறீங்க.இயற்கை அழகை படம்பிடிக்க வந்தீங்களா ? '

'ஆ ஆமாம்.. இந்த கிராமம்பத்தி சென்னைல என் ஃப்ரண்ட் சொன்னார்

அழகான இயற்கைக்காட்சிகள் இருக்கிறதாமே, அதான் படம் பிடிக்க வந்தேன் '

'

'அதென்ன எல்லா புகைப்படக்காரர்களுமே அழகைத்தான் படம்பிடிப்பீர்களா ? '

வம்புக்கு இழுப்பதுபோல அவள் தன்னைக் கேட்பதாய் சாரங்கன் நினைத்தான் .

'அழகு ஒரு நிறைவு அது, மனசுக்கு சந்தோஷம் தருவதால் அழகை ரசிக்கிறோம் ' என்றான்

'சந்தோஷம் தான் எதற்குமே எல்லையா ?சந்தோஷம் என்றால் நிறைவுன்னா பிறகு தேடல் தொடருமா ? தேடல் இல்லைன்னா புதுமைகளை சாதிக்கத்தான்முடியுமா ? '

சாரங்கனுக்கு அந்தப்பெண்ணின் பேச்சு வித்தியாசமாய்பட்டது.அவள் தொடர்ந்தாள்

'தோல்வியிலும் சோகத்திலும் தாக்கம் ஏற்பட்டு சிந்திக்கமுடிகிற அளவுக்கு மகிழ்ச்சியில் அது சாத்தியமா சொல்லுங்க ? '

நீங்க சொல்வது உண்மைதான்..இப்படி ஒரு கோணத்துல நான் சிந்திக்கவே இல்லை. '

'தப்பா நினைக்காதீங்க... என் சுபாவம் எதையும் வெளிப்படையா சொல்லிடுவேன்... '

'பரவாயில்லை '

'.ஆனாலும் போலித்ததனமாய்ப் பேச எனக்குபிடிக்கறதில்ல...ஆமா உங்க பேர் என்ன ? '

'சாரங்கன் '

'ப்ருந்தாவன சாரங்கா ராகம் நினைவுக்கு வருகிறது! என் பெயர் வசுதா.இந்த சின்ன கிராமத்துல ஒரு பள்ளிக்கூட வாத்தியாரின் ஏகபுத்திரி. ’

'வசுதா! பேரும் அழகாய்த்தான் இருக்கு! ' மனசுக்குள் சொல்லிகொண்டவன், 'அதென்ன புத்தகம் கையில் ? பாடபுஸ்தகமா ? ' என்றுகேட்டான்

' பாடம்படிக்கத்தான் தோப்புக்குவரணுமா ? நான் பிஏ இலக்கியம் போனவருஷம் கரூர்காலேஜில் படிச்சிமுடிச்சிட்டேன்..இது கதை புத்தகம். '

'வாசிப்பதில் உங்களுக்கு விருப்பம் அதிகமோ ? '

'வாசிப்பது சுவாசிப்பதுபோலத்தான்.ரொம்பப் பிடிக்கும் '

'எனக்கு போட்டோகிராஃபி போல உங்களுக்கு ரீடிங் ஹாபி போல இருக்கு ? '

'ஆமாம் அவரவர்களுக்கென்று ஏதோ சிலவிஷயங்கள் பிரத்தியேகமாய்ப் பிடித்துப்போய் விடுகிறது இல்லையா ? அப்படிபிடித்த விஷயங்களை தனிமையில் அசை போடுவது எனக்குப் பிடிக்கும் ஆனால் தனிமையே நிரந்தரமென்று ஒதுங்கி நின்று போய்விடக்கூடாது என்பார் என் அப்பா.மனசை நதிபோல ஓடவிட்டுட்டே இருக்கணும் என்பார்.அதை தேக்கி நிறுத்திக் குளமா மாற்றிட்டா பாசி படியும் நாற்றமடிக்க ஆரம்பிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் வரையில் நதிக்கு இருக்கும் சிறப்பு தனித்துத் தேங்கும் போது நீங்கிவிடுகிறது என்பார்.அதனால் அப்பப்போ இப்படி தோப்பு ,தனிமை, புத்தகம்... ' சிரித்தாள் இயல்பாக.

'இலக்கியமாணவி என்பதை நிரூபிக்கிறீங்க நல்லாப் பேசறீங்க வசுதா..நான் அதிகம் புக் படிக்கற தில்ல பாரதி கவிதைகள்மட்டும் ஓரளவுமனப்பாடம். இப்போ நீங்க வாசிக்கிறது என்ன புத்தகம்னு நான் தெரிஞ்சிக்கலாமா ? '

'பிரிவோம் சந்திப்போம் சுஜாதாவின் நாவல்....பத்தாவது தடவையா விரும்பி ரசிச்சிப் படிக்கறேன் ..பிடிச்ச பாடலை டேப்பில திரும்பத் திரும்ப போட்டுக் கேட்கிற மாதிரிதான் இதுவும்..மனக்குதிரையை கடிவாளம் போட்டு ஓரிடத்தில் நிறுத்திவைக்கிற அக்கறை வாசிப்பிற்கும் தியானத்திற்கும் உண்டுன்னு சொல்வாங்க”

' இந்த நொண்டிக்குதிரைக்கு கதை பற்றி எதுவும் அதிகம்   தெரியாது   ஸாரி”

சாரங்கன் சிறுவயதில் போலியோ பாதிப்பில் சூம்பிப் போன தனது வலது காலைக் காட்டியபடி இப்படிச் சொல்லவும் கண்களில் கோபம் பொங்க அவனைப் பார்த்தாள் வசுதா.

' தயங்கித் தயங்கி நீங்க பேசும்போதே நான் நினச்சேன்..எதை நினச்சி நீங்க ஒதுங்கிப்போகக்கூடாதுன்னு நானே வலிய அழைச்சிப் பேசினேனோ அதையே நினைச்சிக் குமைந்து போறீங்க...இருளைக்கூட ' குறைந்த ஒளி 'அப்படின்னு பாரதி சொல்கிறார். இருட்டைக் கண்டு மிரண்டு போகிறவங்க கண்டிப்பா கோழைங்கதான்..உடல் ஊனம் வெளியே தெரியுது

எத்தனைபேர் மன ஊனத்தோடு இருக்காங்க அவங்களோடப் பழகி அடிபடுகிறவரை நம்மால் எதையும் உணரமுடிவதில்லை .சாரங்கன், உங்களைமாதிரி நம்மைபத்தி என்ன நினப்பாங்களோன்னு மத்தவங்களை கவனிக்கறது உடல்
ஊனமுள்ளவங்க கிட்ட இருக்கிற கெட்டபழக்கம். எதையுமே.கற்பனை செய்து கவலைப்படுவதைவிட வெளிப்படையாபேசி நேருக்குநேர் சண்டைபோடறதுல தப்பு இல்லே என்பதுஎன் அபிப்பிராயம். அதனால நொண்டிக்குதிரையா இருக்கலாம் தப்பில்ல நம்பினவங்களுக்கு மண்குதிரையாகத்தான் இருக்ககூடாது...தெரியுமில்லையா பழமொழி, 'மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கின மாதிரி ' அப்படீன்னு ? '

'தாங்க்ஸ் வசுதா!வாழ்க்கை சொல்லித்தரும் வலியை மனிதன் புரிஞ்சிட்டா எந்தவலியையும் பொறுத்துக்கமுடியும்னு நான்
கேள்விப்பட்டிருக்கேன்.வலியிலிருந்து பிறப்பதுதான் வலிமை. ஆனாலும் சமூகத்தின் அனுதாபப் பார்வையினாலே நாங்கள் சில நேரங்களில் பரிகாசமாய் காயப்படுவதை தவிர்க்கவும் முடிவதில்லையே ? அதனால்தான் ஒரு தாழ்வுமனப்பான்மை ஏற்படுகிறது. அவர்களாய் எங்கள் ஊனம் தெரிந்து பேசுமுன்பாய் நாங்களாக இப்படி முந்திக் கொள்கிறோம் '

'இங்கதான் தப்பு. முதல்ல நாம் நம்மை நேசிக்கப் பழகணும்.நம்மை நாமே வெறுத்தால் அது மத்தவங்களுக்கு சாதகமாய் போய்விடும். ..ஸாரி..அதிகமாய்ப்பேசறேன்னு நினைக்கிறேன்..விட்டீங்கன்னா அருவிமாதிரி பொழிவேன்!
சொற்பொழிவே செய்துடுவேன்... ' சிரித்தபடி அவன் அருகில் வந்து நின்றுகொண்டாள்.பிறகு, ' சரி, .எங்கள்கிராமத்துக்கு
விருந்தாளியாய் வந்திருக்கிற உங்களை எங்க வீட்டுக்குக் கூட்டிப்போனால் என் அப்பா ரொம்ப சந்தோஷப்படுவார். புகைபடக்கலைஞர் என்றால் இன்னமும்
மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா என்கூட வீட்டுக்கு வரலாமே ? '

சாரங்கன் , 'எனக்கும் இப்படி ஒரு புத்திசாலிப்பெண்னைப் பெற்ற தகப்பனாரைப்பார்க்கணும்தான் ' என்றான்.அவனுக்கே வியப்பாயிருந்தது தனது பேச்சில் தெரிந்தமாற்றம்.

அது வீடாஅல்லது நூலகமா என்று வியக்கும் அளவிற்கு வீட்டில் புத்தகங்கள்அழகாய்

அடுக்கப்பட்டு அந்த சிறு வீட்டின் எல்லா அலமாரிகளிலும் நிறைந்திருந்தன.

நிகண்டு,அபிதான சிந்தாமணி, தேவாரம் திருவாசகம் பைபிள் குர்ரான்

பெளத்தமத சாரங்கள் தாகூர் டால்ஸ்டாய் ஷேக்ஸ்பியர் கம்பன் ரூஸ்வெல்ட் ரஸ்கின்

வால்டேர் பாரதி என்று புத்தகவரிசைகள்.

உன் நண்பர்களைச் சொல்லு உன்னைபற்றி சொல்கிறேன் என்பது போல படிக்கும் புத்தகங்களை வைத்தும் அவர்களைப்பற்றிக் கணிக்கலாமென சாரங்கன் தான் கேள்விப்பட்டதை நினைத்துக் கொண்டான்.

வசுதாவின் அப்பா தன் மகள் அறிமுகம் செய்ததும் சாரங்கனை அன்போடு வரவேற்று, ' என் பெண் எல்லாருடனும் வலியபோய் பேசிவிடமாட்டாள் அவளே
உங்களிடம் பேசி வீடுவரை அழைத்து வந்திருக்கிறாள் என்றால் கண்டிப்பாய் சாரங்கன் வித்தியாசமான ஒரு இளைஞராயிருக்கவேண்டும். ':என்றார்

சாரங்கன் பணிவும் வெட்கமுமாய் புன்னகைத்தான்

அந்தச் சிறுவீட்டில் டிவீ யைத்தவிர வேறு டெலிபோன்,.ஃப்ரிட்ஜ் இன்னபிற நவீன சாதனங்கள் எதுவுமே இன்றி எளிமையாய் காட்சி அளித்தது.

வசுதா உள்ளே சென்று காபியோடு கைமுறுக்கும் தேங்காய்பர்பியும் கொண்டுவந்து வைத்தாள்

'சாப்பிடுங்க தம்பி..அடிக்கடி வாங்க நம்மூருக்கு..நம்ம வீட்ல தங்கிக்குங்க ..அருகில் பல இடங்கள் பார்ப்பதற்கு இருக்கு நான் கூட்டிப்போகிறேன் வாங்க,.ஒண்ணும் கூச்சப்படவேண்டாம் '

அன்பில் அவனை ஆட்கொண்டார் வசுதாவின் அப்பா பரசு.ஐம்பது வயதிருக்கும். மெலிந்த தேகம்.வெள்ளைக் கதர்வேஷ்டி கதர் சட்டையில் எளிமையாய்த் தெரிந்தார். பேச்சிலும் செய்கையிலும் நிதானம் நிழலாய்ப்
பரவி இருந்தது.



உன்னதங்கள் எல்லாமே அமைதியானவை தானோ ?

சாரங்கன் அடுத்த சில நாட்களில் மறுபடி அந்த கிராமத்திற்குவந்தான்.

பரசுவும் வசுதாவும் அவனை கிராமத்தின் வித்தியாசமான பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவன் எடுத்த சில புகைப் படங்களை பத்திரிகையில் போட்டிக்கு அனுப்பினான்

ஒரு பழுத்த கிழவி ஒலை முடைந்துகொண்டிருந்த காட்சியை அவன் படம் பிடித்து

'சருகு முடையும் ஓலை 'என்ற தலைப்பில் அனுப்பி இருந்தான் அதற்கு முதல்பரிசு

கிடைத்ததில் பரசுவும் வசுதாவும் மிகவும் மகிழ்ந்துபோயினர்.

மெல்லமெல்ல சாரங்கனின் வருகை அதிகரித்தது எந்தக்கணத்திலும் அவன்

வசுதாவிடம் எல்லைமீறாமல் கண்ணியமாகவே நடந்து

கொண்டதை பரசுவும் கவனித்தார். அன்று அவனிடம் தன் விருப்பத்தை கேட்டுவிட்டார்.

சாரங்கன் திகைப்புடன், ' என்னைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டுதான் இப்படிக்கேட்கிறீர்களா சார் ? ' என்றான்.சாரங்கனுக்கு அவனது கால் ஊனம் பற்றிய கவலை நிறையவே உண்டு.

' என் நம்பிக்கைக்கு பாத்திரமான நபராக நீங்கள் இருக்கிறீர்கள்

சாரங்கன். உங்களைவிட என் பெண்ணுக்குப் பொருத்தமான துணைவர் யாரும் கிடைக்கமுடியாது. பழகின சில நாட்களிலேயே ஒரு சிலரால் தான் மனசை அடையமுடியும்.மனசு ஒரு கோட்டை.அதற்கு நம்பிக்கையின்மை,சந்தேகம் இன்னபிற தடைகளாய் பலகதவுகள் இருக்கும்.அதையெல்லாம் தகர்த்து நீங்கள் என்மனசின் உள்ளே வந்திருக்கீங்க...தடைகள் விலகினால்தான் மகிழ்ச்சி புகுந்துகொள்கிறது மகிழ்ச்சி மனதுக்கு உறுதியைக் கொடுக்கிறது.மனதில் உறுதி வேண்டும் என்று பாரதி கேட்டது இதற்குத்தான்.மனதில் உறுதி வந்துவிட்டால் வாக்கினிலே இனிமை வரும் ' நினைவு நல்லதாகும் நெருங்கிய பொருள் கைவசப்படும் '

பரசு பேசப்பேச வசுதா மெளனமாய் அவனையே பார்த்தாள் இப்போது அவளது பார்வையில் இனந்தெரியாத நாணம் கவிழ்ந்திருந்ததை சாரங்கன் கவனித்தான்.

அந்தமெளனம் ஆயிரமாயிரம் வார்த்தைகளை அவனுக்குக் கண்வழியே அஞ்சல் செய்தது.

சாரங்கன் புன்னகையுடன் தலை அசைத்தான்

சென்னை சென்றதும் பெற்றோரிடம் சொல்ல அவர்களின் சம்மதம் கிடைத்துவிட்டதாயும் விரைவில் நிச்சயதாம்பூலம் செய்யவருவதாயும் கடிதம் போட்டுவிட்டான்

வசுதா அப்போதுதான் அவனுக்கு முதன்முதலாக ஒரு கடிதம் எழுதினாள்.தன்

காதலைக் கொட்டி கவிதையாய் எழுதி அனுப்பினாள்

சாரங்கனும் அவளது நேசத்திற்கு நன்றிகூறி பதில்போட்டான்.இடையில் அலுவலக விஷயமாய் சென்னையிலிருந்து அவன் டில்லிக்கு மூன்று மாதங்கள்
போகவேண்டிவந்தது. அப்போதெல்லாம் அவனால் கிராமத்திற்கு வர இயலாமல் போனது. அந்த நாட்களில் வசுதாதான் மிகவும் அவஸ்தைபட்டாள். பெண்ணின் காதல் இப்படித்தான். காதலில் வீழ்ந்துவிட்டால் காணும்பொருளில் எல்லாம்  காதலன் முகம் தேடும்.

நேற்று இல்லாத மாற்றம் என்னது காற்று என் காதில் ஏதோ சொன்னது...  இதுதான் காதல் என்பதா?


பரசு தன் மகள் சினிமாப்பாட்டை அதிசியமாய் முணுமுணுப்பதை ரசித்தார்.

நல்ல சிநேகிதத்தை காதலாய் மாற்றி அதற்கு உரமிட்டவர் பரசு

.

அன்று பெரியாழ்வார் மகளுக்கு அரங்கனைப் பற்றிச் சொல்லி அவள் மனசில் ஆழ்ந்த காதலை ஏற்படுத்தியமாதிரியான உணர்வில் இன்று திளைத்துபோனார்..

.கடிதங்கள் காதல் பாலங்களாயின.

அன்று பரசுவின் முகவரிக்கு ஒரு கடிதம் வந்தது.

பிரித்துப் படித்தார்.

சாரங்கனின் அப்பாவிடமிருந்து வந்த அந்தக் கடிதம் அப்படி ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போடுமென இருவருமே எதிர்பார்க்கவில்லை

அதிகம் பாதிக்கபட்டவராய் பரசு தான் புலம்பினார். 'அம்மாடி வசுதா. தாயில்லாப்பெண்ணா வளர்த்த உன் மனசுல ஆசைத்தீயை கொழுந்துவிட்டு எரியவச்ச பாவிம்மா நான்.கடைசில இப்படி ஆகும்னு நான் நினைக்கவேஇல்லையே அம்மா ? யாருக்கோ ஜாயிண்ட் கையெழுத்துபோட்டு இருந்த சொற்ப சொத்து பணமெல்லாம் இழந்து ஜெயிலுக்குப் போகவேண்டி இருந்த நிலைமையில் உதவினவரின் மகளுக்கு சாரங்கனைக் கல்யாணம் செய்யபோவதாயும் நடந்தவைகளுக்கு மன்னிப்பு

கேட்டும் கடிதம் எழுதி இருக்காரேம்மா மனுஷர் ? வெறும் வார்த்தைகளில் வாழ்க்கையைத் தீர்மானித்துவிட்டார் .

சாரங்கன் எதுவுமே எழுதவில்லை, அவன் சாது. அவனால் அப்பாவின் பேச்சைத் தட்ட

முடிந்திருக்காது... ' என்று கதறினார்.

தனக்குக் கொடுப்பினை இல்லையென்பதைத் தெரியப்படுத்தி சாரங்கனின் அப்பாவிற்கு பதில் கடிதமும் எழுதிபோட்டார்.

அடுத்த சில நாட்களில் வசுதாவிடமிருந்து அவளது திருமண அழைப்பிதழ்

சாரங்கனுக்கு வந்துசேர்ந்தது.அதில் சின்னதாய் ஒரு கடித இணைப்பில், ' இது இன்ஃப்ர்மேஷன் தான் இன்விடேஷன் அல்ல ' என்று ஆங்கிலத்தில் ஒரே வரியில்

கைப்பட எழுதி இருந்தது அதில் வசுதாவின் கோபம் சாரங்கனுக்குப் புரிந்தது

,அதன் நியாயமும் புரியவே அவன் வேறுவழியின்றி அமைதியாகிப் போனான்.


***************************************************************************


'சார்ங்..டின்னர் சாப்பிடப் போகலயா கமான்.. ? ' இயக்குநர் உரத்த குரலில்

கேட்கவும் சாரங் வசுதவின் நினைவுகளிலிருந்து மீண்டான்.

அவர் தனது மொபைல் போனை ஷர்ட் பாகெட்டில் வைத்தபடி சாரங்கனின் தோள் தொட்டு மேஜை அருகே அழைத்துக் கொண்டு போனார்.

சாப்பிடும்போது அவர், 'சாரங்..நீங்க ஸ்படிகாவை கொஞ்சம் ஸ்னாப்ஸ் எடுக்கணும்...நாளைக்கு விஜயாகார்டனில் பூஜை முடிச்சதும் ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறேன்..எந்தப்பத்திரிகை மீடியாவையும் நான் பூஜைக்குஅழைக்கப்போகிறதில்லை..போன தடவையே என்படத்தில் நடிச்ச புதுமுகம்கிட்ட நிருபர்கள் ஏதோ கேள்விகேட்டு குடைஞ்சிட்டாங்க,அதனால

இந்தமுறை நான் யாரையும் புதுமுகத்தை போட்டோ எடுக்கவோ பேட்டி எடுக்கவோ அனுமதிக்கப் போவதில்லை..நீங்க எடுக்கபோகும் போட்டோக்களை மட்டும் அவங்களுக்கு அனுப்பிடலாம் டிஜிடல்காமெரால பத்து ஸ்னாப்ஸ் தட்டி கம்ப்யூட்டர்ல லோட் பண்ணி அதை அப்படியே பத்திரிகைக்காரங்களுக்கு அனுப்பிடலாம்.காலைல ஹோட்டல் பத்மால ஸ்படிகாவைபோய்ப்பார்த்து போட்டோஸ் எடுதுமுடிச்சிடுங்க ..மானேஜர் நீங்க வருவதுபத்தி அவங்களுக்கு தெரிவிச்சிடுவாங்க ஓகே ? ஆல் த பெஸ்ட் சாரங்! ' என்று படபடவெனப்பேசிவிட்டு கைகுலுக்கி விடை பெற்று நகர்ந்தார்.

சாரங்கிற்கு பழம் நழுவிப்பாலில் விழுந்தமாதிரி இருந்தது .நாளை

ஸ்படிகாவைபார்த்ததும் சொல்லிவிடவேண்டும், ' இது பருந்துகள் இருக்கும் கூட்டம் இங்கே கிளிகள் எல்லாம் இரையாகும் ' என்று ' வசுதாவின் பெண் என்பதால் அவளும் கெட்டிக்காரியாகத்தான் இருப்பாள் புரிந்துகொள்வாள்.

மறுநாள் சாரங் சரியான நேரத்திற்கு அங்கு சென்றுகதவைத் தட்டினான்,திறக்கப்பட்ட கதவிற்குப்பின்னே நிலா ஒன்று நின்றுகொண்டு 'ஹாய் நான் ஸ்படிகா..டைரக்டர் நேத்திக்கே சொல்லி இருந்தார்..படத்தின் காமெராமேன் ஷாரங் என்பவர் இன்னிக்குவருவார்ன்னு...ஆக்ட்சுவலி ஐயாம்
வெயிடிங் ஃபார் யூ சார்! வாங்க.. ' என்று வரவேற்றாள். பழகும் பண்பில் அழகுகூடும் என்றால் என்றால் அது இந்தப் பெண்ணிற்குப் பொருந்துமென சாரங் நினைத்துக் கொண்டான்.

வசுதாவைபோலவே ஹிப்போக்ரசி இல்லாத பேச்சு!

பதினெட்டுவருட முன்பு சந்தித்த கிராமத்துப் பெண் வசுதா இன்று மாடர்ன் உடையில் அதே சிரிப்பும் வெளிப்படையான பேச்சுமாய் தன் எதிரே நிற்பது போலத் தோன்றியது

எப்படிக்கேட்பது இவளிடம் உன் அம்மா பெயர்வசுதாதானே என்று ?

அவன் தயங்கும்போதே , ஸ்படிகா, ' சார்..அம்மா இங்கே பக்கத்துல கடைக்கு ஏதோ தமிழ்ப்புத்தகம் வாங்கப் போயிருக்காங்க,ஷி ஈஸ் ஃபாண்ட் ஆஃப் புக்ஸ்!
பம்பாய்ல அதிகம் தமிழ் புக்ஸ் கிடைக்காதா அதான் சென்னை வந்ததும் அள்ளிட்டுவரக் கிளம்பிட்டாங்க.. திரும்பி வரும் நேரம்தான்... இருந்து பார்த்து பேசிட்டுப் போங்க சார் ப்ளீஸ் ? ' என்று அவன் சந்தேகத்தை உறுதிபடுத்தினாள்.

வசுதா அடுத்த சில நிமிஷங்களில் உள்ளே நுழையும்போது, சாரங் அந்த ஹோட்டல் அறையை ஒட்டிய பால்கனியில் நின்று ஸ்படிகாவை அங்கே நிறுத்திவைத்து புகைப்படம் எடுக்கக் கோணம் பார்த்துக் கொண்டிருந்தான்.

வசுதா வந்துவிட்டாள்.

'ஹாய்ம்மா!..காமெரா மேன் வந்து ஏழெட்டு ஸ்னாப்ஸ் எடுதுட்டார்மா..இன்னும் ரண்டு எடுக்கணுமாம் பால்கனில... ' என்று குழந்தை போலக் குதித்தபடி கூவினாள் ஸ்படிகா.

'சரி..முடிச்சதும் நீ ஜிம்முக்குப் போகணும் மறந்துடாதே ஸ்படிகா.. ' வசுதாவின் குரல் பால்கனியில் நின்ற சாரங்கின் செவியைத்தழுவியது.

'சார்.! ஆங்கிள் சரியா இருக்கா?.ரெடியா ? ' ஸ்படிகா கேட்டபடி அருகில் வந்தாள்

சாரங் சொன்ன கோணத்தில் நின்றாள்

'ஆச்சும்மா ' என்று சாரங் சொன்னதும், 'தாங்க்ஸ் சார்..நான் ஜிம்முக்குப் போகணும் அம்மாவும் 'புக் 'கடைலிருந்து வந்துட்டாங்க நீங்க அவங்ககிட்ட பேசுங்க...பைபை ' என்று கை அசைத்து விடை பெற்று வெளியேறினாள்.

சாரங்கிற்கு மனதோடு கால்களும் தயங்கின.

அதற்குள் வசுதாவே பால்கனிக்கு வந்தவள்,சாரங்கைப்பார்த்ததும் ஒருக்கணம்நெற்றியைத்தேய்த்தபடி  யோசித்தாள்

நாற்பதை நெருங்கும் வயதிலும் இளமையை அதிகம் இழக்காத அவளூடைய முகத்தை நேருக்கு நேர் பார்க்கவே கூசினான் சாரங்.

வசுதா சட்டென அவனது வலது காலைக் குனிந்துபார்த்தவள் உடனே, ' 'ஓ நீங்கதான் டைரக்டர் சொன்ன காமெரா மேன் ஷாரங்கா ? என்றாள் வெறுப்பான குரலில்.

'ஆமாம் வசுதா..உன் பெண் போட்டோவை நேத்திக்குத் தான் பாத்தேன் உடனேவே அது உன் பெண்தான்னு புரிஞ்சது.

உடனேயே எனக்கு மனசு துடிச்சது.வசுதா, நீ கெட்டிக்காரி, புத்திசாலி .ஆனாலும் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் உன் பெண் காலடி வைக்க நீ எப்படி சம்மதித்தாய் ? இங்கே இளமை ரசிக்கமட்டும்தான் ஆராதிக்க அல்ல என்று
உனக்குத் தெரியாதா ? ஆண்களின் ஆளூமையில் இருக்கிற உலகத்தில் எந்த தைரியத்தில் உன் குழந்தையை நடிக்க
அனுமதிக்கிறாய் ? வேண்டாம் வசுதா ..ஸ்படிகாவை அழைத்துக் கொண்டு திரும்பப்போய்விடு.... '

சாரங் உணர்ச்சிவசப்பட இப்படிச் சொன்னதும் முகம் சிவக்க அவனைப்பார்த்தாள் வசுதா .

'எங்கே போவது ? காதல் கனவை நனவாக்காமல் அப்பா சொல்கேட்டு கோழையாய் காதலியை மறந்தவன் பின்னாடியா அல்லது அவனைப் பழி வாங்க அவசர அவசரமாய் அந்தக் காதலி கல்யாணம் செய்து கொண்டு அவனிடம்
வெளிப்படையாய் பேசுவதாய் எல்லா உண்மயையும் சொன்னதில் சந்தேகம் கொண்டு ஆறுமாதக் கைக்குழந்தையுடன் பெண்டாட்டியை நடுராத்திரில பம்பாய் ரயிலடில விட்டு ஓடிப்போன புருஷனைத் தேடிப் போவதா ? தாயில்லாப்பெண்ணாய் வளர்த்தவளின் வாழ்க்கை தன்னால் இப்படிப் பாழாகிவிட்டதே என்று மாரடைப்பில் கண்மூடிப் போன அப்பாவின் பின்னாடியே தற்கொலை செய்து கொண்டுதான் போவதா ? ஆண்களுக்கு காதல் ஒரு ஆட்டொகிராஃப் புத்தகம்..அப்பப்போ புரட்டிப்பார்க்கலாம்..மனைவிகிட்டே மனம்விட்டு அதை
பகிர்ந்துக்கலாம்...தோளில் ஒரு பைமாட்டிட்டு பழைய காதலியைத் தேடிபோய் பார்த்துவிட்டுகூட வரலாம். ஆனா காதலனின் ஸ்பரிசம்கூடப்படாத பெண்கள் உண்மை சொன்னால் அதை எல்லா ஆண்களாலும் ஜீரணிக்கமுடிவதில்லை...பதினெட்டுவருஷம் பம்பாயில் தன்னந்தனியா கைகுழந்தையை வச்சிட்டு என் இளமையையும் பாதுகாத்துட்டு மானத்தோடுதான் வாழ்ந்தேன். சகலமும் தெரிஞ்சவளாகப் பெண் இன்னிக்கு இருக்கணும்..விவரம் தெரியாதவளாய் இருந்தால் உலகம் ஏமாற்றும் .மனதில் உரத்துடன் உடலில்பலத்துடன் வாழ்க்கையை ஏத்துட்டு, சிலநல்ல உள்ளங்கள் செய்த உதவியினால் மானத்தோடு மகளையும் வாழவச்சிட்டு இருக்கேன். என் மகள் என்னைப்போல் தான் இருப்பாள். எல்லா இடத்திலும் நன்மைகளும் இருக்கு தீமைகளும் இருக்கு. பகுத்தறிந்து நல்லபாதையில் செல்ல மனம் என்கிற கடிவாளமும் இருக்கு..உங்கள் அட்வைஸ் எனக்குத் தேவை இல்லை..நீங்கள் போகலாம் 'என்றாள் உஷ்ணமானகுரலில்.

'வசுதா ? ' கண்ணோடு வாய் கெஞ்சியது சாரங்கிற்கு. தொடர்ந்து ஏதோ பேச வந்தவனைப் பார்த்து 'பட் ' என்று இரு கை சேர்த்து குவித்தாள் வசுதா.பிறகு வாசல்கதவு நோக்கி கை காட்டினாள்.

சாரங் மெளனமாய் நடந்தான். சற்றுமுன் வசுதா பேசிய வார்த்தைகள் சாட்டையடியாய் நெஞ்சில் வந்து விழுந்தன.

வசுதாவின் வாழ்வில் தான் மண்குதிரையாய் இத்தனை நாளும் இருந்திருக்கிறோம் எனும் நினைப்பே அவன் நெஞ்சைப் பிழிந்தது.

இனியாகிலும் அவளது நாவிலிருந்து சவுக்கடி பெற்றாகிலும் வண்டிக் குதிரையாய் வசுதாவின் வாழ்க்கைப் பயணத்தில்
முன்னேற்றிச் செல்ல மனம் தீர்மானித்தது.

ஹோட்டலைவிட்டு வெளியே வரும்போது சாரங்கின் வாய், தான் படித்த பாரதி பாடலை முணுமுணுத்தது.

'பெண்டுகளைத் தாய் போற் பிரியமுற ஆதரித்து

நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்

பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்

எங்கிருந்தோ வந்தான்.... '

****









--
மேலும் படிக்க... "எங்கிருந்தோ வந்தான்.....(சிறுகதை காதலர்தினத்திற்கு)"

Monday, February 13, 2012

காதல் நதிகள்!

காதல்நதிகள் பெண்கள்!

இடியொடு மின்னல்

பின்னர்வரும் மழையின்

சின்னத்தூறலிலும்

சிலிர்த்துப்போகிறோம்.



விழிமணிகள் விரித்து

விந்தைமனவெளியினில்

பார்த்திட்டகோலங்களை

பத்திரமாய் காக்கின்றோம்





ஐந்துவிரல்களை

அழுத்திப்பிடித்த கரங்கள்

கண்டங்கள் அனைத்தையும்

கொண்டுசேர்த்தகடல்கள்

அந்ததொடுதலில் அன்று

மெல்லச்சரிந்ததில்

குன்றுமணலாய்

எங்கள் தாபஏரிகள்



பல்கிபெருகி

வளைந்து நெளிந்து

பாய்ந்து ஓடி

இன்று

அடங்கிக்கிடக்கும்

காதல்நதிகள்!

மேலும் படிக்க... "காதல் நதிகள்!"

Thursday, February 09, 2012

விருதுகளும் விஸ்வரூபங்களும்!

ரோம் நகரத்தின் போப்பாண்டவர் லிஸ்டியஸ் தனது ஸிஸ்டேன் பிரார்த்தனைக்கூடத்தின் கூரையில்(விதானத்தில்) ஆண்டவனின் படைப்பினை சித்திரமாக பார்க்க விரும்பினாராம். உலகப்புகழ்பெற்ற கலைஞராயிருந்த மைக்கேல் ஆஞ்செலோ அவரது விருப்பத்தைப்பூர்த்தி செய்தாராம்.

கூரைச்சித்திரங்களைப்பார்த்த போப்பாண்டவர்,” ஆஹா! நான் கூரையைப்பார்க்க வந்தேன் எனக்கு தெய்வ தரிசனமே கிடைத்தது!” என்றாராம்!

 நம் தமிழ் நாட்டிலும்12ம் நூற்றாண்டு தென் தமிழ் நாட்டு மன்னன் இரண்டாம் ராஜராஜ சோழன் 63 நாயன்மார்களின் சரித்திரத்தை சிற்ப வடிவத்தில் காண ஆசைப்பட்டான். தாராசுரம் கோவிலில்அந்த சிற்பங்கள் இருக்கின்றன. அவன் ஆசைப்பட்டதற்கு மேலாகவே சிற்பிகள்  அதனை பூர்த்தி செய்து வைத்தனர்.  மெய் சிலிர்த்த  மன்னன், “கண்டறியாதன கண்டேன்!” என்றான்.

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோயிலில் இப்படி அற்புதச்சிற்பங்களை வடித்தவர்களின் பெயர்கள் எங்கும் பொறிக்கப்படவைல்லை. இந்தக்கோயிலின் பிராகாரத்தைச்சுற்றி வரும்போது ஒன்பது நூற்றாண்டுகள் கடந்தும்  சிற்பிகளின் நேர்முக தரிசனம் கிடைக்கும். பன்முகம் கண்ட சிற்பிகளின்  கைவண்னத்தில் மிளிரும் அற்புத சிற்பங்கள் நம் கண்ணையும் மனசையும் கட்டிப்போட்டிவிடும். பெரிய புராணத்தைக்கரைத்துக்குடித்தவர்களாக சங்கீத நாட்டிய வல்லுனர்களாக கழைக்கூத்தாடிகளாக வாழ்வின் கணங்களை ரசித்தவர்களாக நாகரீகத்தின் உன்னதத்தை எட்டியவர்களாக இருப்பவர்களால் தான் இவையெல்லாமாகவே  இருக்க இயலும். வெறும் வழிப்பாட்டுக்கட்டிடமாக தோன்றவில்லை கல்லெல்லாம்  கதை சொல்கிறது,மானுடத்தின் மகத்துவத்தைக்கொண்டாடக் கட்டப்பட்டதாக தோன்றுகிறது.
சிற்பிகள் யாரும் எங்குமே  தங்கள் பெயர்களை பொறிப்பதில்லை!



தஞ்சை  பெரிய கோயிலுக்குப்போயிருக்கிறீர்களா? அங்கேகலைக்கூடத்தின் நான்குபிரிவில் ஒரு பகுதியில் நாயக்கர் கொலு மண்டபத்தில் புராதன தெய்வச்செப்புத்திருமேனிகளைக் கண்டிருக்கிறிர்களா? பல்லவர் ஆரம்பகால பிற்கால சோழ மற்றும் விஜயநகரபாணி சிற்பங்களின் அழகை வெறும் வார்த்தைகளில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லைதான். செப்புச்சிலைகளிலேயே ஒப்பில்லாத கலை நுணுக்கங்கள்!

  நுழைவாயிலில்                    கஜசம்ஹாரமூர்த்தியின்  சிற்பம் அப்படியே நாவுக்கரசரின்,

உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட



விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்


தரித்திட்டார் சிறிது போது தரிக்கிலர் ஆகித் தாமும்


சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே.






என்கிற பாடலை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது !தாருகாவனத்து முனிவர்கள் சிவனை ஒழிக்க யானையை அனுப்ப சிவன் அதனைக்கிழித்து தோலைப்போர்த்தி தாண்டவம் ஆடியபோது அதனைக்கண்டு பயந்த பார்வதி குழந்தை முருகனை அதனின்று மறைக்க அதுகண்டு சிவன் சிரிக்க...... எல்லா பாவங்களும் சிலையில் வடித்த சிற்பிக்கு தெய்வ அருள் இருந்திருக்கவேண்டும் இல்லாவிடில் வெறும் கல்லில் உணர்ச்சிகளைக்கொண்டுவருதல் சாத்தியமில்லை! கல்லிலே கலைவண்ணம் கொண்டுவந்த உன்னதமனிதர்கள்!  செய்யும் தொழிலே தெய்வம் என்றிருந்த விளம்பரம் விரும்பாத மாபெரும் கலைஞர்கள் இந்த மாமேதைகள் காலத்தால் அழியாத பொக்கிஷங்களை நமக்கு விட்டுச்சென்றுவிட்ட தியாகிகள்! இவர்களின் பெயர்களை நாம் அறிந்திருக்கவில்லை இந்த விஸ்வரூபங்களுக்கு எந்த விருதும் வழங்கவில்லை.

 அதிகம் தகுதிகள் ஏதுமில்லாத எனக்கு விருதென்றால்வாங்கிக்கொள்ள சற்று கூச்சமாக இருக்கிறது. அதனாலே பெற்ற விருதுகளை சற்று நேரத்திற்கு வலைப்பூவில் இட்டுவிட்டு பிறகு எடுத்துவிடுவது வழக்கம். மனம் மகிழ்ந்து ஒருவர் எதைக்கொடுதாலும் நாம் அதை மதிக்க வேண்டும்.

அந்த வகையில்.....


'லீப்ச்டர்' என்கிற,  வலைப்பதிவாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஜெர்மானிய விருது இது. இதன் அர்த்தம் 'மிகவும் பிடித்த' என்பதாகும். இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5  இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும். அந்த விருதினைமறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி விடவேண்டுமாம்.  கணேஷும் ஷக்தி ப்ரபாவும் எனக்கு இந்தவிருதினைத் தந்திருக்கிறார்கள்  இருமுறை  கிடைத்துவிட்டதில் மகிழ்ச்சி இருவருக்கும் மிக்க நன்றி.


நான்  அஞ்சுபேருக்கு அதுவும் 200க்குகுறைந்த உறுப்பினர்கள் கொண்ட பதிவர்களுக்கு  எங்கே போவது?:) எல்லோரும் முந்திக்கொண்டு அழைத்து முடித்துவிட்டார்கள் ஆகவே இரட்டை விருது பெற்ற மகிழ்ச்சியில் கொடுத்த இருவருக்கும் நன்றி கூறி முடிக்கிறேன்!
மேலும் படிக்க... "விருதுகளும் விஸ்வரூபங்களும்!"

Tuesday, February 07, 2012

கோல மயில் மீதேறி.....

கோல மயில் மீதேறி ஏன் இங்கு வந்தாய்?

கோரும் அடியார்கள் வினை தீர்த்தருள நின்றாய்!



பாயுமொளி போலவோ உன்கருணை உள்ளம்?

பார்க்கத்தான் வந்ததிங்கு பக்தர்பெருவெள்ளம்!



பூசத்திற்கே இன்று உன்னால்தானே மகிமை?

 புகழ்ந்துன்னைப் பாடுவதே எங்களுக்கு பெருமை!



பக்தர்களுக்கு அருள்வதுதானே உன் வாடிக்கை?

பணிவான உள்ளங்களே இங்குனக்குக் காணிக்கை!



ஈசனுக்கு உபதேசம் செய்தவனும் நீயோ?

ஈன்றவள் போல் காப்பதனால் நீ எங்கள் தாயே!



வற்றாத நதிபோலும் பெருகுமோ உந்தன் அருள்?

வந்து விடும் புதுஒளியில் மறையுமே எங்கள் இருள்!


பாமாலை பலகொண்ட உனக்குண்டோ ஈடு?

(உனை)பாடுவதால் பக்தர்க்குக் கிடைக்கும் மறுவீடு!


மேலும் படிக்க... "கோல மயில் மீதேறி....."

Thursday, February 02, 2012

சில்லென்று ஒரு நாடகம்!!

எம்டி அறையினின்றும் ப்யூன் ரங்கசாமி தன் அருகில் வந்து நிற்பதுகூடத் தெரியாமல்  facebook ல் மூழ்கி இருந்தான் கார்த்திக் .


உகாண்டா சினேகிதி நிமேகிமியுடன் மனம்விட்டு பேசிக் கொண்டிருந்தபோது அவள் இசகு பிசகாய் ஒரு கேள்வி கேட்டுவிட்டாள்.

'கார்த்திக் ஆர் யூ மேரிட்?'

இதற்கு அவளுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தான்.

செல் , 'வள்' என்றது. வீட்டிலிருந்து 'கால்' வந்தால் செல்லில் அல்சேஷன் குரைக்கும்.

"என்ன சந்திரா ஆபீஸ்ல மும்முரமா வேலை செய்யறபோதுதான் போன் செய்யணுமா?"

"உங்களுக்குக் கல்யாணம் ஆனதே மறந்து போயிருக்குமே?" என்று எதிர்முனை சந்தேகமாய் கேட்கவும் நிமேகிமிக்கு 'சற்று நேரத்தில் வருகிறேன்' என்று தகவல் கொடுத்துவிட்டு "என்ன என்ன?" என்றான் லேசான கிலியுடன். சந்திரா ஏதும் மாயக்கண்ணாடி வழியே நோட்டமிடுகிறாளோ?

"நினைவிருந்தா என் நினைவும் வந்திருக்கும் .. காலைல நீங்க ஆபீஸ் போறப்போ நான் சொன்னதும் நினைவுக்கு வந்திருக்கும் இப்போ?"

"என்ன சொன்னே?"

"அதானே? 'நினைவிருக்கு சந்தும்மா'ன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்தேன்...ஹ்ம்ம் அது ஒருகனாக்காலம்!"

"ஹலோ சீக்ரம் சொல்லு...டோ ண்ட் வேஸ்ட் மை ப்ரஷியஸ் டைம்.. ஐயாம் பிசி யார்!"

"இந்த அலட்டலுக்கு ஒண்ணும் குறைவில்ல... சரிசரி சொல்லிட்றேன் ஆபீஸ் விட்டுவரப்போ நல்லநயம் புளியா அரைகிலோ ஃபுட் வோர்ட்லேந்து வாங்கி வாங்க என்ன?"

"அடச்சே புளிச்சிபோன விஷயம் பேச இப்படி ஒரு கால் வெஸ்ட் பண்ணனுமா? "

"என்ன மூணுமுணுக்கிறீங்க சரியா காதுல விழலயே பக்கத்துல ஏதும் ஃபிகரோ?"

"ஐயோ சந்தேகரா! என் காபின்ல இப்போ பக்கத்துல ப்யூன் ரங்கசாமிதான் வந்து நிக்கறான். நீ போனை வை முதல்ல.."

செல்லை வீசி மேஜைமீது எறிந்தான் கார்த்திக். "சாருக்கு வீட்டிலேந்து போனாக்கும்?"என்றான் ரங்கசாமி கிண்டலாய்.சரியான மோப்ப நாய் பாம்புச்செவி!

"சரிசரி எங்க வந்தே?" கார்த்திக் செயற்கை சிரிப்புடன் கேட்டான். கண், கணிணி கன்னியிடம் சாட்டிங்கினைத் தொடர கீ போர்டினை மேய்ந்தது.

"சார், கம்பூட்டர்ல யாரோ' உம்மா' கொடுக்குற மாதிரி சத்தம் வர்து பாருங்க...இஞ்சினீரிங் படிச்சி பெரிய உத்தியோகம் பாத்துகிட்டு நெட்டுல உலக மக்களோட பேசிக் களிக்கிறீங்க ! ஹ்ம்..எங்கள மாதிரி ஆளுங்கதான் மானேஜர் ரூமுக்கும் இங்க வேலை செய்யறவங்க காபினுக்கும் அலைஞ்சி அலைஞ்சி தேஞ்சி போய்ட்றோம்.."

"ரங்கசாமி.ஒவரா பேசாதே.. இந்த டேபில்ள நீ ஒருநாள் உக்காந்து பாரு எவ்ளோ சிக்கல் என் வேலைலன்னு உனக்குப் புரியும்"

"சிக்கலும் உண்டு 'கிக்'கும் உண்டுங்க எல்லாம் எனக்கும் தெரியும்"

"சரிப்பா..இங்க வந்த விஷயம் சொல்லு?"

"உங்கள கையோட ரூமுக்குவரச்சொல்லி எம்டி சொன்னாரு"

"அடப்பாவி அதை இப்பொ சொல்றியே வந்ததும் சொல்லி இருக்க வேணாமா ?"

"எப்படியும் அந்தாளு கடுகடுன்னுதான் இருக்கபோறாரு . அதுக்கு ஏன் நிங்க இங்க சாடிங்ல கிளுகிளுப்பா பேசிட்டுருக்கறதைவிட்டு ஓடணும்னு தான் சும்மா இருந்தேன்."

"இருந்தாலும் அவர் விஸ்வருபம் எடுத்துட்டாருன்னா என்ன செய்யறது.. அதுசரி அவரு என்னைமட்டும் கூப்பிட்டு இருக்காரா இல்லே எல்லா ஸ்டாஃபுங்கலையுமா?"

"இல்லியே உங்களைத் தான் சொன்னாரு..?. ஒருவேள நீங்க ஆபீஸ் நேரத்துல இப்டிஃபேசுபுக் ட்விட்டருன்னு உலாத்தறது அவருக்கு தெரிஞ்சிடிச்சோ என்னவோ?"

"அப்பா ரங்கசாமி !உனக்கு எம்டியே பெட்டர் !"கைகுவித்தபடி எழுந்தான் கார்த்திக்.

'என்னவாயிருக்கும்? வேலை விஷயத்துல என்னிடம் யாரும் குறை காணவே சான்ஸ் இல்ல.எட்டுமணி நேர வேலையை பளிச்சுனு ஆறு மணிநேரத்துல முடிச்சிடுவேன் .அப்புறம்தான் நெட் உலா போவது வழக்கம் . மன்மதன் மாதிரி பேசுவேனே தவிர பெண்கள் விஷயத்தில் அடியேன் சொக்கத்(916?) தங்கம். உத்தமபுருஷன்(சந்திராவுக்குமட்டும் நான் ஜேப்பி! ஜேப்பின்னா என்னவா? அதை அவளே பிறகு விளக்குவா அதுவரை வெயிட்டுங்க)

'என்னவாகத்தான் இருக்கும்? ஆபீசில் சிலருக்கு நான் பேர் வைப்பதுவழக்கம் .எல்லாம் ஒரு ஜாலிக்குத்தான்! ' ஃபன்!'

ப்ராஜக்ட் லீடர் ராஜேந்திரனுக்கு அவரது பரந்த உருவம் காரணமாய் கஜேந்திரன். ப்ரோக்ராமர் ஸ்நேகாஅடிக்கடி சீறிவிழுவதால் ஸ்நேக்(snake) கா. சீதாவிடம் அடிக்கடி காதல்தூதுவிடும் பீதாம்பரத்திற்கு சீதாம்பரம் . வாஸ்து பற்றியே பேசும் வாசுதேவனுக்கு வாஸ்துதேவன் . தலையில் நிறைய ஹேர்பின் குத்திவரும் சித்ராவுக்கு பின்லேடி என்றும் பெயர்வைத்தது நான்தான் என்று எம்டி சுதாகரனுக்கு யாரும் போட்டுக்கொடுத்து விட்டார்களா?

அப்படியானால் சுதாகரன் இனி சுதா'காரன் 'ஆகிவிடுவார்!'

எம்டியின் அறைக் கதவருகே போய்நின்றவன் ஆஞ்சநேயக்கவசம் சொல்லியபடியே கதவைத்தட்டி"மே ஐ கமின் சார்?"என்று பூமிக்கடியில் தோண்டின குரலில் கேட்டான்

ஹ்ர்ம்ம்

உள்ளிருந்து உறுமல் கேட்டது

பயந்தபடி கதவை மெதுவாகத் தள்ள நினைத்துக்கொண்டே படபடப்பில் வேகமாய்த் திறந்துவிட்டான்.

ஆடமாடிக் கதவு இவனை உள்ளே தள்ளியதும் வந்தவேகத்தில் தானே போய்மூடிக்கொண்டது

.ஸாரி என்று வழிந்தான்.

அந்த ஏராளஅறையின் தாராள தேக்குமரமேஜை ,அதன்மீது நான்கு நிறத்தில் நான்கு தொலைபேசிகள்ஃபைல்கள் கம்ப்யூட்டர் .  லாப்டாப். ஐபாட்.

கடைசியாக் குறிப்பிட்டதில் ஏதோ பார்வையிட்டுக்கொண்டிருந்தவர் குரல்கேட்டுத் திரும்பினார்.இலவசமாய் கொடுத்தாலும் புன்னகையை வாங்கத் தயாரில்லாதவர்போல முகத்தில் கடுகடுப்புடன்நிமிர்ந்தார்.

"ஹ்ம்ம் உட்கார் "என்றார்.

"சார்?" தயக்கமாய் கேட்டபடி அந்த பெரிய சுழல் நாற்காலியின் நுனியில் கார்த்திக்அமரவும் நாற்காலி முன்னோக்கி நகர்ந்து மேஜையில் மோதிக்கொண்டது.கார்த்திக்கின் தடித்த மூக்குக்கண்ணாடி நழுவி வாய்க்குவந்து விழுந்தது.

"எக்ஸ்ட்ரீம்லி ஸாரி" பயத்துடன் மேஜையில் கவிழ்ந்துகொண்ட பேப்பர்வெயிட்டைநிமிர்த்தி வைத்தான்.அது பம்பரமாய் சுற்றியது.

"ஹஹ்ஹாஹா!"கைதட்டி சிரித்தார் சுதாகரன்.

திருட்டுமுழி முழித்த கார்த்திக்கிடம்"சரியான ஜோக்கர்பா நீ !அசப்புல நீ நடிகர் சோ இளம் வயசுல இருந்த மாதிரியே இருக்கறே..அதே உருண்டைமுழி; மூக்குக்கணாடி! ஹெஹே"

இதுக்கு எதுக்கு இழவு சிரிப்புடா மடையா என்று மனசுக்குள் நினைத்த கார்த்திக் எரிச்சலை அடக்கி 'சோ'கமாகவே விழித்தான்

சுதாகரன் ஒருவழியாய் சிரிப்பதை நிறுத்தி "கார்த்திக் உன்னை எதுக்குஅழைச்சேன் தெரியுமா? வர்ரவாரம் நம்ம ஆபீசின் ஆண்டுவிழா வரபோகுது.. இது சில்வர் ஜுப்ளிவருஷம் என்பதால் சிறப்பாக நடத்த திட்டம். தமிழ் நாடுமுழுவதும் இருக்கும் நம் கிளைகள் எல்லாம் சேர்ந்து இங்கே சென்னைக்குவந்து மூணுநாள் விழா நடத்த தீர்மானம். கடைசிநாள் நாடகபோட்டி நடக்கபோகுது. காலையிலிருந்து இரவுவரைக்கும் லஞ்ச் ப்ரேக் தவிர்த்து தொடர்ந்து ஏழுநாடகங்கள் நடக்கபோகிறது .நம் சென்னை தலமை ஆபீசின் சார்பில் நடக்கப் போகும் நாடகத்தை நீதான் எழுதி இயக்கணும்.சில்லுனு ஒருநாடகம் உன் பொறுப்பில் அசத்தலா வரணும் ."

திகைப்பில் ,'நாநானா?" என்றான் கார்த்திக்.

"ஆமாஆமா.,உன் ப்ளாக் பார்த்தேன் சமீபத்துல. ஆபீஸ்ல பீதாம்பரம்தான் உன் வலைப்பூ பத்தி சொன்னாரு.போனவருஷம் தமிழ்மணத்தின் சிறந்த வலைப்பதிவர் நீதானாமே! கங்கிராட்ஸ்! நானும் எல்லாம் பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்.. ரொம்ப அருமையா சிரிக்க சிரிக்க எழுதி இருக்கே! அப்போவே திர்மானம் செய்துட்டேன் ஆபீஸ் நாடகம் உன் கையிலதான்னு .."

'சார் அது அது வந்து சும்மா ஆபீசில் பொழுதுபோகாத நேரத்துல..."

"ஆபீஸ்ல வேலை செய்யாம இப்டி வலைல விழுந்து கிடக்கிறியா இடியட்னுநான் திட்டமாட்டேன், மை பாய்! நானும் இளமையைக்கடந்து அரை செஞ்சுரி போட்டவன் தான். கார்த்திக் !நீ காலேஜ் நாடகத்துல எழுதி இயக்கி நடிச்சி ப்ரைஸ் வாங்கின தகவல் சொல்லுதேப்பா உன்னால முடியும்னு .இப்போல்லாம் ஸ்டேஜ் நாடகமெல்லாம் அபூர்வமாயிடிச்சேப்பா உன்னைமாதிரி துடிப்புள்ள இளைஞர்கள்தான் அதை மறுபடி உயிர்பெறச் செய்யணும்.."

'ஸார்! குருவி தலைல பனங்காய்! காக்கா சிறகுல கருங்கல்! எறும்பு மேல எக்லர்ஸ் சாக்லேட்.. பயமாயிருக்கு"

"சரித்திர நாடகம்னா பயப்படணும் , வசனம் சரியா வரணும்னு கவலைப்படணும் .இது சும்மா காமெடி நாடகம்தானே.... உனக்கு இதெல்லாம் அல்வா. ஜமாய் ராஜா! நாளைக்கே ரிகர்சல் ஆரம்பி .நம் ஆபீஸ் ஸ்டாஃப் எல்லாரையும் உதவிக்கு வச்சிட்டு சீக்கிரமா ஆரம்பிச்சிடு ..ஒகே நீ போகலாம் இப்போ?"பேசி முடித்ததும் சுதாகாரனாகிவிட்டார் மறுபடி.

கார்த்திக் அங்கிருந்து வெளியேவரும்போது மனசு கேட்டது 'கார்த்திக் நீ நகைச்சுவையாய் சில்லுனு நாடகம் எழுதி இயக்கி நடிக்கணுமா இதைவிட ட்ராஜடி வேறு உண்டா?'

ஆனால் சக ஊழியர்கள் அனைவரும் அவன் விஷயம் சொன்னந்தும் சுகப்ரசவத்தில் ஆண்குழந்தைபிறந்த தம்பதியர்க்கு வாழ்த்து சொல்வதுபோல் கைகுலுக்கி 'கங்கிராஜுலேஷன்ஸ்!' என்றனர் கோரஸாய்.

"நாங்க எல்லாரும் ஒத்துழைக்கிறோம்டா" என்றான் வெங்கட்.

"ஷ்யூர் கார்த்திக்!" என்றாள் சீறாமல் ஸ்னேகா.

சீதா ,அருணா ,ராதிகா, நந்தினி நால்வரும் ஸ்நேகாவுடன் சேர்ந்து ஐம்பெரும்பெண்மணிகளாய் வாழ்த்தினர்.

நயாகாரா நடுவில் நின்றார்போல் சிலிர்த்தான் கார்த்திக்.

அந்த ஐந்துபேரையும் ஒன்றாய் பார்த்ததும் 'கண்டேன் கருவை' என்று உணர்ச்சிவசப்பட்டவனாய் கத்தினான்.

'ஐயோ!' என்று தனது இரண்டுமாத கர்ப்ப வயிற்றினை சேலைத்தலைப்பில் மூடிவெட்கப்பட்டாள் அருணா.

"நாடகக்கரும்மா! நீங்கவேற ?" வெங்கட் விளக்கினான்.

ஐந்துபெண்கள் !ஒரு ஆண்!

யோசித்தான்.

ஆஹா! கதை ரெடி!

குதூகலகமாய் வீடு வந்தவனிடம் சந்திரா கேட்டாள் " என்ன ஜொள்ளுபார்ட்டி என்னும் ஜேப்பி!புளி வாங்கிவந்தீங்களா?"

"யு மீன் டைகர்? இம்பாசிபிள்மா"

"போதுமே ..உங்க ஜோக்கைரசிக்கத்தான் ஆபீஸ்ல ரசிகைபட்டாளம் தவிப்பாங்களே.. அதுகிடக்கட்டும்...புளி அதான் சமையல் புளி,வாங்கிவரச் சொன்னேனே...மறந்திட்டீங்களா? நெனச்சேன். இந்த அத்வானத்துல வீட்டைக்கட்டிக் குடிவந்துட்டோ ம் பக்கத்துல கடை ஏதும் இல்ல..இரண்டுவாலுகுழந்தைகளோட நான் எங்கபோறது?"

"ஆபீஸ் வேலைல மறந்தே போயிட்டேன்மா"

"நான் எது சொன்னாலும் காதுல ஏறாது.. ஆனா அடுத்த தெரு லதா ஒருநாள் பிசாத்து பாத்ரூம் தேய்க்கிற ப்ரஷ்வாங்கிவரச்சொன்னால் டாண் னு வாங்கிவருவீங்க.என்னவோ போங்க ரண்டு குழந்தங்க அதாவது நினைவிருக்கும்னு நினைக்கறேன்"

"யார்க்கு லதாக்கா? நம்பவே முடில்ல! இப்பத்தான் வயசுக்குவந்தவ மாதிரி  டக்கரா இருக்கா?"

"நான், ரண்டு குழந்தங்கன்னு சொன்னது உங்களுக்கு ..ஆறுகழுதைவயசுஆவுது உங்களுக்கு ஒருகழுதைக்குவயசு ஆறு."

"ஸோ வாட் சந்திரா? ஐயாம் யங் அட் ஹார்ட் .கண்ணாடி கழட்டினா ரொம்ப இளமையா இருக்கேனாம்!"

"யாரு" ஆபீஸ் காரிகைகள் சொன்னாங்களாக்கும்? 'ஹி' ன்னு பல் இளிப்பீங்களே அவங்களைக்கண்டா?":

"எல்லார்கிட்டயும் நான் ஜோவியலாப் பேசறேன்"

"என்கிட்டஒருநாளும் ஜோக் அடிச்சதே இல்லையே...பொண்டாட்டிகிட்ட பேசவே நேரம் கிடையாதாம்இதுல ஜோக் எங்க ஜோக்!..."

லட்சார்ச்சனை ஆரம்பமாகவும் கார்த்திக் பாத் ரூமுக்குள் பதுங்கினான்

மறுநாள் ஆபீசில்நுழையும்போதே ஸ்நேகா ஆர்வமாய் ,

"கார்த்திக்!ஸ்க்ரிப்ட் ரெடியா எனக்கு என்ன ரோல் ? மெயின் ரோல்எனக்குத்தானே ?பிச்சிட்றேன்" என்றாள்.

"எதை ஸ்க்ரிப்டையா?"

"ஹையோ! நாட்டி கை!"

"கோபமா வரணுமே மேடத்துக்கு?"

"இனிமே வராது நாடகத்துல உணர்ச்சியக்கொட்டி நடிக்கணுமே நான்?"

"ஓ ரொம்ப் இன்வால்வ் ஆகிறீங்க போல?"

ஸ்நேகாவைப்போலவே மற்ற பெண்களும் தங்களது இருபதுப்ளஸ் வயதுக்கே உரிய துடிப்புடன் கார்த்திக்கிடம் நாடக விவரம் கேட்டனர்.

"நாடகம் ஸ்க்ரிப்ட் ராவோடுராவா எழுதிட்டேன். ஆமா,ரிகர்சல் எங்கே வச்சிகறதுடா வெங்கட்?"

"உன் வீட்லதான்.,ஊர்கோடில அமைதியாயிருக்கு. மொட்டைமாடில ஒத்திகையை ஆரம்பிக்கலாம்டா"

"ஓகே! நானும் வீட்ல கண் எதிரில் இருந்தா மிஸஸ்டவுட்ஃபயருக்கும் நிம்மதியா இருக்கும். என் வீடுதான் ஒத்திகைக்கு சரியான இடம்."

சந்திரா அரைகுறைமனதாய் சம்மதித்தாள்

"ஒத்திகை மட்டும் பண்ணுங்க சும்மா அந்த மினுக்கிங்க கிட்ட வழிய வேணாம்"என்று கண்டிஷன் போட்டாள்.

மறுநாள் கதையை விவரிக்கத் தொடங்கினான் கார்த்திக்.

"அதாவது குடும்பத்தலைவர் பாஞ்சலனுக்கு ஐந்து -ஹிந்தில பாஞ்ச் -மனைவிகள்.ஐந்துபேருமே அல்ட்ரா மாடர்ன் லேடீஸ். நகரின் பெரிய க்ளப்பில் அவங்க எல்லாரும்சீட்டு ஆடிதோத்துப் போயிடறாங்க .வீடு நிலம் பொருள் எல்லாம் அடமானம் வச்சும் கடன் அடையல கடைசியா கட்டின கணவனையே அடமானம் வைக்கும் நிலமை.

எதிர் அணித்தலைவி தன் மாமியின் சூழ்ச்சியோடு தங்கை துரியாவை அழைத்து ஐந்து பெண்மணிகளின் ஒரே கணவரான பாஞ்சாலனை க்ளப்புக்கு அழைத்துவரசொல்லி ஆணையிடுகிறாள்.

துச்சா பாஞ்சாலனை பஞ்சகச்சம் வேஷ்டியோடு அப்படியே அழைத்துவர ."துரியா அவனது துகிலை உரிக்கவா?" என்றாள் துச்சா பழைய பகையை நினைவில் கொண்டு.

பாஞ்சாலன் பரிதாபமாய்க் கெஞ்சுகிறான் தன்மனைவிகளை ஆற்றாமையாய் பார்க்கிறான் ஆனாலும் சகுனியும் துரியாவும் சிரிக்க சிரிக்க பாஞ்சாலனின் வஸ்திரத்தை உருவுகிறாள் துச்சா.பாஞ்சாலன் 'ஹேராதே'என்று செல்லில் தனது சகோதரிபோன்ற அந்த பிரமுகப்பெண்மணிக்கு தகவல் தருகிறான் அவள் ஏதோ செல்லில் சொல்லவும் பாஞ்சாலன் க்ளப்பில் எல்லாரையும் பார்த்து ஆவேசமாய் கத்துகிறான்.

நான் வேஷ்டி கட்டியதால்தானே எனக்கு இந்த கதி இனி நான் வேஷ்டியே கட்டப்போவதில்லை என்று பேசுவதை சட்டென நிறுத்துகிறான்.

க்ளப் அதிர்கிறது ஆண்கள் வெட்கத்தில் தலைகுனிகிறார்கள்.

பாஞ்சாலன் தொடர்கிறான் 'இனி நான் பேண்ட் தான் அணியபோகிறேன் இதுதான் பாஞ்சாலன் சபதம்'என்கிறான் திரை போடப்படுகிறது.எப்படி கதை?"

"இந்த பாதிப்பில ஒருகதை கேட்டமாதிரிஇருக்கே...காலேஜ்நாளில் டீவில பூஊஉம்னு சங்கு ஊதிட்டே ஒரு நிகழ்ச்சி பார்த்தமாதிரி இருக்கே?"

வெங்கட் குழப்பமாய் கேட்டான்.

"மஹாபாரதத்தின் உள்டா தான் ..நவின பாணில முயற்சித்தேன். வேற என்னடா செய்வது அவசரத்துக்கு என் கற்பனை இப்படித்தான் போனது.."

வெங்கட் கண் பனித்தான்.

"காமெடிகதைக்கு அழறியேடா வெங்கட்?"

"அஞ்சுபொண்ணூங்களைக் கட்டிட்ட பாஞ்சாலனுக்காக இந்தக்கண்ணீர்டா"

"பாஞ்சாலன் நீதான் வெங்கட்"

'ஐயோநானா அஞ்சுபேருடா... அஞ்சியே ஒத்திகையில செத்துடுவேன்"

"கமான் வெங்கட்..இன் ஃபாக்ட் நான் நடிக்கலாம் ;ஆனாஎழுதி இயக்கி நடிக்கவும் முடியாதுடா மேலும் ஐந்து பெண்களுக்கு நான் கணவன்னா என் மனைவி அதை நாடகம்னாலும் சம்மதிக்கமாட்டா."

"பீதாம்பரம் ரவி குமார் கணேஷ் இவங்களைக் கேட்டுப்பாத்தியா?"

"அவங்கதமிழ் உச்சரிப்பு சரியா இல்லடா வெங்கட்...மேலும்இந்த நாடகம் மட்டும் வெற்றி அடைந்தால்நாமே சுயமாய் ஒரு குழு தொடங்கிடலாம்"

"சரி"

ஜீன்சில், சூடிதாரில், லோஹிப் சேலையில் என்று ஐந்து இளம் பெண்களும் வீட்டில் நுழையவும், சந்திராவின் கண்கள் கார்த்திக்கின் மீது தாவிக்கொண்டே இருந்தது. அவனோ நாடக டென்ஷனில் பரபரத்துக் கொண்டிருந்தான் இதில் நந்தினி என்னும் இருபத்திஓருவயது இளமைப்புயல் 'ஆண்ட்டி' என்று சந்திராவை அழைத்துவிட்டாள்

சந்திரா தனியே கார்த்திக்கை சமையல் அறைக்குத்தள்ளிக் கொண்டுபோய் கைமா செய்ய ஆரம்பித்தாள்.

"ஆண்ட்டியாமே அந்த ஜீன்ஸ் சுந்தரிக்கு நான்? எத்தனை கொழுப்பு இருக்கணூம்?சோடாப்புட்டி போட்டுகிட்டு கொஞ்சம் கிராமத்துப்பெண்ணா அடக்க ஒடுக்கமா தேவர்மகன் ரேவதிமாதிரி இருக்கறதுனால என்னை ஆண்ட்டின்னு கூப்பிடணுமா? நானும் மேக் அப் போட்டுக்கிட்டா அமலாபால் ரேஞ்சுல இருப்பேன்....சொல்லிவைங்க உங்க ஆபீஸ் அழ்ழ்ழகிங்ககிட்ட க்கும்?"

திருமதிதுச்சா துரியா சகுனிமாமி கதாபத்திரங்களுக்கு முறையே பீதாம்பரம் விட்டல் டேனியல் ஆகியோர் பெண் வேடமணிய ஒருவழியாக சம்மதித்தனர்.

முதல் இரண்டு நாட்கள் ஒத்திகை சரியாக அமையவில்லைதான் ஆனால் பிறகு அனைவரும் ஈடுபாட்டுடன் நடிக்கவும் மிகவும் திருப்தியானது கார்த்திக்கிற்கு.

அன்று மொட்டைமாடியில் ஒத்திகை முடிந்ததும் 'சபாஷ் ஒண்டர்ஃபுல்!" என்று குரல் வந்தது.

எல்லாரும் திகைப்புடன் திரும்பிப் பார்த்தனர்

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டு கைதட்டினான் .

கார்த்திக்கைப்பார்த்து,"என் பேரு சுரேஷ்.இங்க ஒருமாசம் முன்பு குடிவந்தேன் ..உங்க ஒத்திகையை தினமும் பார்த்து பிரமிக்கிறேன் அனுபவம் வாய்ந்த நடிகர்களா என்ன அனாயாசமா நடிக்கறீங்களே?' என்றான்

"நன்றி சுரேஷ்! எல்லாரும் எங்க அபீஸ் மக்கள்தான் !ஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு எங்க சார்புல சில்லுனு ஒரு நாடகம் போடணும்னு எம்டி சொன்னார் அதான்...". "ஓ அப்படியா?ஆல்தி பெஸ்ட்!"

கார்திக்கிற்கு உற்சாகமாயிருந்தது.

ஆயிற்று இன்னும் இரண்டே நாளில் ஆபீஸ்விழாநிகழ்ச்சிகளைத்தொடங்கவேண்டும்

அப்போதுதான் ஆபீஸ் முழுமைக்கும் அந்தத் தகவல் வந்தது .

டில்லியில் போர்ட் மீட்டிங்கிற்கு சென்ற கம்பெனி சேர்மென் மாரடைப்பில் திடீரென இறந்துவிட்டாராம் அதனால் விழா நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து என்று.

துக்கமும் சோகமுமாய் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு ஆபீசிலிருந்து கார்த்திக் வீட்டிற்கு வந்தான் . சந்திராவிஷயம் கேட்டு அதிர்ச்சியில் அதிசயமாய் அமைதியாகிவிட்டாள்.

மொட்டைமாடியில் ஒத்திகை நடந்த இடத்தைப் பார்த்து மலரும் நினைவுகளை அசைபோட்டான் .ஒத்திகையின் போது எல்லாரும் எவ்வளவு குதூகலமாய் ,அந்நியோன்னியமாய் பழகினோம்? ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நம்பிக்கை, சேர்மனின் இழப்பு என்னும் சுனாமியால் அடித்துக்கொண்டு போய்விட்டதே?


 "கார்த்திக்! எப்போ உங்க நாடக அரங்கேற்றம்? என்னைமாதிரி வெளி ஆட்கள் பார்க்க அனுமதி உண்டா?"

பக்கத்துவீட்டு மொட்டைமாடியில் நின்றபடி ஆர்வமாய் சுரேஷ் கேட்டான்.

"இல்ல சுரேஷ் நாடகம் கான்சல்ட் கம்பெனி சேர்மன் இறந்துட்டாராம்"

சொல்லிவிட்டு கண்கலங்குவதை மறைக்க முகத்தைத் திருப்பிக் கொண்டான் கார்த்திக்.

"அப்படியா? கார்த்திக்! இஃப் யு டோ ண்ட் மைண்ட் அந்த நாடகத்தை 'ஹாய் டிவி 'ல ஒளிபரப்பிடலாமா? அந்த டீவியின் உரிமையாளர்ல நானும் ஒருத்தன் தான். இப்படி ஒருநகைச்சுவை நாடகத்தை நான் இதுவரை பார்த்ததே இல்லை.எல்லாரும் அருமையா நடிச்சதை ஒத்திகையில தினமும் பார்த்தேன். இது பலலட்சம் மக்களுக்குப் போய்ச் சேரணும் ..அதற்கு எங்க 'ஹாய்டீவி' உதவும் ...என்ன சொல்றீங்க?"என்று சுரேஷ் கேட்டான்.

கனவுகளில் மிதக்க ஆரம்பித்தான் கார்த்திக்!*******************************************************************************
(குமுதம் ஜங்ஷனில்எப்பொதோ  நான் எழுதிய கதை!)




மேலும் படிக்க... "சில்லென்று ஒரு நாடகம்!!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.