Social Icons

Pages

Friday, July 31, 2015

ஆளவந்தார், ஆளவந்தார்!

ஆளவந்தார்!  1.
இவருடைய திருநட்சத்திரம் இன்று.நாலாயிர திவ்யபிரபந்தம் எனும் தமிழ் வேதத்தை மீட்ட நாதமுனிகளின் பேரர்  தான்,  அறிவின் வலிமை மிக்க அந்த சிறுவன்.

யமுனைத்துறைவர்  என்பது  அந்த சிறுவனுக்குப்பெயர். 

மகாபாஷ்யபட்டரிடம் கல்வி பயின்ற காலத்தில்  தன் குருவை  கப்பம் கட்ட வைத்த   பாண்டிய அரசபையின் புலவர்  ஆக்கியாழ்வானிடம்  தானே  வாதாட  தீர்மானித்தான்
.
 ஆக்கியாழ்வான் அனுப்பிய தூதுவனிடம் யமுனைத்துறைவன் சொன்னான்.

” ஒரு பெரும் கல்வியாளருக்கு சமமாக நானும் வாதாடப்போகிறேன் ஆகவே நான் அரசவைக்கு வருவதற்கு பல்லக்கு அனுப்புங்கள்” என்றதும் அரசனும் அதை நிறைவேற்ற  சித்தமானான்.

மகாபாஷ்யப்பட்டர் பதறிப்போனார்,”குழந்தாய்! உனக்கு  யாரிடம் வாதாடப்போகிறோம் என்று நிஜமாகவே தெரிந்திருக்கிறதா?உன்னிடம் பாடசாலைப்பொறுப்பை விட்டு சற்று நேரம் நான் வெளியே சென்றபோது கப்பம் கேட்டுவந்த அரசுப்பணியாளிடம் நீ  விவரம் தெரிந்து  வாக்களித்துவிட்டாய்! ஆக்கியாழ்வான் தன் தர்க்கவாதத்திறமையால் பல கல்வியாளர்களை ஒளிமழுங்கச்செய்து அவர்களீடம் கப்பம் வசூல் செய்பவர்  கையில் பணம் இல்லாததால் மூன்றுவருடக் கப்பத்தொகை நின்றுவிட்டது நானும் வழிதெரியாமல்  தவிக்கிறேன். “

“குருப்பெருமானே  கவலைவேண்டாம்   குள்ளநரியை பயமுறுத்த சிங்கம் செல்லவேண்டுமா என்ன? வந்தவன் உங்களை அவமானப்படுத்துவதுபோலப்பேசினான் ,என்னால் அதைப்பொறுக்கமுடியவில்லை.. ஆக்கியாழ்வானுக்கு தைரியமும் உறுதியும் இருந்தால்  தங்கள் மாணவரான என்னிடம் வாதாடிப்பார்க்கசொல்’என்று சொல்லி அனுப்பினேன். அரசனும்  பல்லக்கு அனுப்புவிட்டான்  ஆசிர்வாதம் செய்யுங்கள் குருவே நான் சென்று வருகிறேன்”

ஒரு  பெரும்புலவர்போலவே கம்பீரமாக பல்லக்கில் அமர்ந்தான் யமுனைத்துறைவன் பல்லக்கில் அவன் பவனி செல்வதை சாலையில் அனைவரும் பார்த்தனர் அரசவையும் வியப்போடு காத்திருந்தது வரப்போகும் சிறுவனைக்காண்பதற்கு. ஆக்கியாழ்வான் மட்டும் ஆணவம் குன்றாது அமர்ந்திருந்தான்.

சிறுவனைப்பார்த்ததுமே  அரசியாருக்கு  மனதில் உற்சாகம் பெருகியது அந்த  ஒளி பொருந்திய கண்கள் அதன் விளைவால் பிரகாசமான முகம் அமைதியான புன்னகை அதிராத நடை என்று  யமுனைத்துறைவன் அரசவையில் நுழைந்ததும் அரசியார் சொன்னாள்”இந்தச்சிறுபிள்ளை ஆக்கியாழ்வானின் கர்வக்கோட்டையை உடைத்துவிடுவான்:”

“என்ன அரசியாரே  சிறுவனைப்பார்த்ததும் தீர்மானித்தேவிட்டாயா? நம் அரசவைப்புலவர் ஆக்கியாழ்வானை யாராலும் வீழ்த்த முடியாது என்ன பந்தயம் கட்டுகிறாய்?’ அரசன் சீறினான்.

“நான் தோற்றால் உங்கள் அடிமைக்கு அடிமையாகிறேன் “

“சரி நான் தோற்றால் என் அரசில் பாதியைத்தருகிறேன்”

அரச தம்பதிகள் இப்படிப்பிணங்கிக் கொண்டிருக்க, ஆக்கியாழ்வான்  கிண்டலாக,:இந்தச்சிறுவனா என்னை ஆளவந்திருக்கிறான்?” எனக்கேட்க அரசியார்,” ஆம் அவன்  உம்மை வென்று ஆள்வதற்குவந்தவன்  தான்” என்றாள்  உறுதியான குரலில்,.

தர்க்கவாதம் தொடங்கியது..

ஆக்கியாழ்வான் இலக்கணத்திலும் அமரகோசம் போன்ற நூல்களிலும்  எளீயகேள்விகளைக்கேட்டான், அவற்றிர்க்கு  உடனடி பதில் வரவும் பிறகு கடுமையான பல கேள்விகளைக்கேட்டான். பதில் அளித்து முடித்த யமுனைத்துறைவன்,”நான் சிறுவன் என்பதால் என்னை இளக்காரம் செய்கிறீர் போலும். ஜனகரின் அவையில்  அஷ்டவக்கிரர் என்று ஒரு மகரிஷி பந்தியைத்தோல்வியுறச்செய்தாரே  அப்போது அவர் முதியவரா  அல்லது சிறுவரா?  ஒரு மனிதனின் உருவத்தைக்கண்டு அவன் கல்வியை நீர் அளவிடுகிறீர்! அப்படியானால் உம்மைவிடப்பெரிய பொலிக்காளையைத்தான் பெரும் புலவர் என்று சொல்லவேண்டும்!” என்றான்.

 ஆக்கியாழ்வானுக்கு  இந்த அவமதிப்பான பேச்சைக்கேட்டதும் கொதிப்பு உண்டானாலும் சமாளித்தபடி,”சரி சரி  நீ என் கேள்விகளுக்கு சரியாகத்தான்  பதில் சொன்னாய் இப்போது நீ என்னிடம் கேட்க ஆரம்பிக்கலாம் விடை அளிக்கிறேன்” என்றான்  வெறுப்பான குரலில்.

“அதிகம் கேள்விகள் இல்லை  வெறும் மூன்றே வாக்கியங்கள் அதை உங்கள் முன் வைப்பேன் அதை மறுத்து நீங்கள் பேசவேண்டும்”

“சர்  உடனே சொல்”

“நல்லது முதல் வாக்கியம்… உங்கள் தாய் மலடி.

இல்லை என்று இதை முடிந்தால் மறுத்துப்பேசுங்கள்”

“சிறுவா உன் புத்தியைக்காட்டிவிட்டாயே என் தாய் மலடி எனில் நான் எப்படிப்பிறந்திருப்பேன் முட்டாளே?”

“பொறுமை பொறுமை.. இரண்டாவது வாக்கியம். ’பாண்டிய அரசன்மிகவும் நீதிமான்  ’இதையும் மறுத்துக்கூறுங்கள்”

“என்ன என்ன !  அரசனை நீதிமான் என்பதை மறுப்பதா  ?எதிரில் அரசன் அமர்ந்திருக்கிறான் அவனை நீதிமான அல்ல என்று சொல்வதா?  இந்தப்பையன் என்னை அழிக்கவந்திருக்கிறானோ?’ ஆக்கியாழ்வானின் மனம் ஓலமிட்டது.

மூன்றாவது வாக்கியம் என்னவாக இருக்குமோ என அரச சபையே ஆர்வமாகக் காத்திருந்தது.யமுனைத்துறைவன் புன்னகை  மறையாமல்  சொல்ல ஆரம்பித்தான்,

“கடைசி வாக்கியம்.. அரசியார்  பதிவிரதை..இதையும் மறுத்துப்பேசவேண்டும்”?”

ஆ! இதென்ன சோதனை!

ஆக்கியாழ்வான் கொதித்து எழுந்தான்.

 ”அற்பப்பயலே என் வாயை மூடவைக்கவேண்டுமென்று நீ என்னவேண்டுமானாலும் கேட்பாயா? அரசன் நீதிமான அல்ல என்றும் அரசி பதிவிரதை இல்லை என்றும் அரசனிடம் பரிவுள்ள  யாராவது சொல்வார்களா? இந்தவாக்கியங்களை நீயே மறுத்துப்பேசு பார்க்கலாம்  இல்லையானால் இந்த அரசவையில்  உயிரை இழப்பாய்! அரசனையும் அரசியையும் அவர்கள் இருப்பிடத்திற்கே வந்து பழிக்கிறாயா உனக்கு எத்தனைத்திமிர்?”

அரசவை சலசலத்தது அரசியார் மட்டும்  சிறுவனின் தேஜசான  முகத்தைப்பார்த்தபடி அவன் பதில்களுக்காக ஆர்வமாய் காத்திருந்தாள்,

“நானே சொல்கிறேன் அனைவரும் கேளுங்கள்”  யமுனைத்துறைவன் ஆரம்பித்தான்,.

“என் முதல் வாக்கியத்துக்கு இது மறுப்பு..நமது சாஸ்திரங்களில் ஒருமகவைப்பெற்ரவள் மலடி ஆகிறாள். ஒருமரம் தோப்பல்ல. ஒருபிள்ளையும் பிள்லையல்ல என்பது உலக வழக்கு.  உங்கள் தாய்  ஒரே ஒருமகனைப்பெற்றிருப்பதால் அப்படிச்சொன்னேன்… அடுத்து இரண்டாவது வாக்கியத்திற்கான மறுப்பு..  இது கலியுகம்  இங்கு தர்மம் ஒருகாலிலும் அதர்மம் மூன்றுகால்களிலும் நிற்கிறது.நமது புனித நூல்களில்,”ஒரு அரசன் தன் குடிமக்களை நன்கு காக்கும்போது, அவர்களின் புண்ணியத்தில் ஆறில் ஒருபங்கும், நன்கு காக்காத போது பாவத்தில்  ஆறிலொரு பங்கும் ஏற்க நேரிடுகிறது. ஆகவே சாஸ்திரங்கள்படி பார்க்கும்பொழுதில் ஓர் அரசன் அநீதிமான் ஆகவும் ஆக நேர்கிறது.
அடுத்து  மூன்றாம் வாக்கியத்திற்கான மறுப்பு.. அரசன் தனது செங்கோல் வலிமையில் அக்கினி வாயு சூரியன் யமன் சந்திரன் குபேரன் வருணன் இந்திரன் ஆகிய தேவர்களின் அம்சம் கொண்டு விளங்குகிறான். ஆகவே அரசி என்பவள் அரசன் என்ற தனிமனிதனுக்கு மட்டும் வாழ்க்கைப்படவில்லை இந்த அஷ்டதிக் பாலகர்களுக்கும் அவள் மனைவி ஆகிறாள்.இத்தனை தேவர்களுடன் தொடர்பு கொண்டவளை பதிவிரதை என்று சொல்லமுடியுமா?”

யமுனைத்துறைவனின் இந்த மறுமொழிகளைக்கேட்டு அவை ஆனந்தத்தில் ஆரவாரமானது. ஆக்கியாழ்வானும் வியந்துபோனான்.
அரசனும் அரசியும் மகிழ்ந்து எழுந்து,” ஆளவந்தாரே ஆளவந்தாரே” என்ற அவையினரின் கோஷத்தோடு தாங்களும் கலந்துகொண்டனர்.

“இந்த இளம் சூரியன் முன்பு  ஒரு தாரகை மங்கிவிட்டது. ஆம் உங்கள் வாதத்திறமையும் கல்வித்திறமையும்  அபாரம் அபாரம்! நான் பந்தயம் கட்டியபடி அரசில் பாதியைத்தருகிறேன் இனி அதனை நீரே ஆள வேண்டும் .உம் பெயரும் இனி ஆளவந்தார் என ஆகட்டும்!”


பன்னிரண்டு வயதில்  பாண்டியப்பேரரசின் பாதிப்பங்கைப்பெற்ற  யமுனைத்துறைவன்  பாடசாலையைத்துறந்தார்,ஆளவந்தார் ஆகி ராஜ்ஜியபரிபாலனம் செய்ய ஆரம்பித்தார்.
(தொடரும்)

மேலும் படிக்க... "ஆளவந்தார், ஆளவந்தார்!"

Saturday, July 04, 2015

விவேகானந்தயுகம் மலரட்டும்!


குழந்தைபுரத்திற்கு  அப்படி ஒரு பெயரை  யார் வைத்தார்களோ தெரியவில்லை ஆனால்  பெயருக்குப்பொருத்தமான குழந்தை உள்ளம் கொண்டமக்கள் வாழும்  சிற்றூர்தான் குழந்தைபுரம்.


இதோ  இன்றைக்கு அதிகப்படியான குதூகலத்துடன்  குழந்தைகள்போலவே பெரியவர்களும்  ஊரில் வலம் வரக்காரணம்  இருக்கிறது.  ஆடிமாதத்தின் கடைசிவெள்ளிக்கிழமை என்பதால் வருடாவருடம் நடக்கும்  கிருஷ்ணன்கோவில் தேரோட்டமும் ரம்ஜான்  திருநாளும் ஒன்றாக அமைந்துவிட்டதுதான்!


பாலகிருஷ்ண விக்கிரஹத்தை  தேரில் எழுந்தருளப்பண்ணி  தேர் உலா இன்னும் சற்று நேரத்தில் புறப்பட இருக்கிறது.காலை மணி ஆறுக்கே  தேரருகே பெரிய ஏணியைவைத்து ஏறி கலசங்களுக்குசீரியல் செட்டைப்பொருத்தி்க்கொண்டிருந்தான் அப்துல்லா.

கீழே ஏணியை அழுத்தமாய் பிடித்துக்கொண்டு நின்றிருந்த சந்துரு,” டேய்  பத்திரம்டா..கீழே விழுந்துடபோறேன்னு கவலையா  இருக்கு ..இத்தனை நாளா நோன்புன்னு விரதம் இருந்த நீ  இன்னிக்கு பெருநாளுக்கு  வீட்டில் சந்தோஷமா  சாப்பிட்டுக்கொண்டு இருக்காமல்  இங்க  வந்துட்டியேடா?” என்றான் கவலையும் அக்கறையும் கொண்ட குரலில்.“ஏண்டா  ஊர்ப்பாசத்துல நீ  படிச்சும்  வேலைக்கு வெளியூர்போகாமல்  உங்கப்பாவுக்கு உதவியா  இந்த பாலகிருஷ்ணன் கோவிலில்  தொண்டு செய்வாயாம்  இதே ஊர்க்காரனான நான்  சென்னைக்கு வேலைக்குபோயிட்டேன். பெருநாள் சமயம் மட்டும்  லீவுக்கு ஊர் வருகிறவன்இந்த வேலைகூட செய்யலேன்னா  எப்படிடா? நீதானே  பள்ளிகூட நாளிலேயே அடிக்கடி சொல்வியே ருக் வேதகாலத்திலேயே முழங்கிய
 ‘ஸங்கச்சத்வம், ஸம்வதத்வம்
ஸம்வோ மனாம்ஸி ஜானதாம் ’ அதாவது ‘
ஒன்றுறப் பழகுவோம், ஒன்றுற மொழிவோம் 
ஒன்றுற மனத்தால் உணர்ந்திடுவோம் நாம் ’ அப்படீன்னு?”
“ஆமாண்டா அப்துல்லா...  அன்புதான் நம் மதம் அன்பாக மட்டும்
பழகுவதுதானே  இந்த இருபத்தி ஆறுவயசிலயும் நம்மைமட்டுமல்ல நம்ம  ஊர்ல எல்லாரையும் ஜாதிமதம் வித்தியாசம் பார்க்காமல் இணைச்சிவச்சிருக்கு. ..?
உயிரில் என்ன சிறுசும் பெரிசும் 
பயிரில் என்ன பழசும் புதுசும் 
வயிறில் என்ன மேலும் கீழும் 
பயிலும் அன்பே பரமெனக் கொண்டால்? 

கவிதைவாசித்தோமே  மறந்துவிட்ட்டாயா என்ன?


ஆங்..மறந்துட்டேனே  நேத்து  துபாய்லேருந்து வில்லியம்ஸ் போன் பண்ணினாண்டா..”
“யாரு நம்ம  தோஸ்தா?  அவந்தான் அஞ்சாங்கிளாஸ்லயே  அவன் அப்பாகூட அயல்நாடுபோய்ட்டான்..ஆனாலும்  நம்மகூட  போன்ல  தொடர்பு வச்சிட்டே தான இருக்கான்...என்னவாம் வரானாமா  தேரோட்டத்திருவிழாக்கு?”
“இல்லைடா  அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்  ஆனா கூடிய சீக்கிரம் வருவேன்னு சொன்னான்  ..கவிதை கதையெல்லாம்  எழுதறானாம்.. ஊர்நேசன்  என்கிற புனைபெயரில்!  இணையத்துல  ப்ளாக் ல குழந்தைபுரம் பத்தி பெருமையா  எழுதி இருக்கானாம் அதை படிச்சிட்டு  தனியார் டிவிக்காரங்க யாரோ அவனோட தொடர்பு கொண்டு  எல்லா விவரமும்  கேட்டுவிட்டு இன்னிக்கு  நடக்க இருக்கிற தேரோட்டத்தை  படம்பிடிக்க  ஊருக்கு வராங்களாம்..தமிழ்த்தேனி என்கிற  டிவி சானலாம். இயக்குநர்பேரு நல்ல தம்பியாம்  ..காமிராக்காரங்களோட வருவார்ன்னு சொன்னான்”

“ஆஹா!  குடத்திலிட்ட விளக்காய்  யாருக்கும் தெரியாம  இருக்கிற குழந்தைபுரத்துக்கு  டார்ச்சும் டமாரமும் அடிச்சிட்டானா  நம்ம  தோஸ்த்?:)

“வந்தாரை வரவேற்கும் தமிழகத்தில் இருக்கிறோம் ..வரவேற்போமே  என்ன சொல்றே?”


சந்துரு  பெருமையுடன் கேட்டபோது அப்துல்லாவின் தங்கை  சலீமாபேகம்  பூக்கூடையுடன் மூச்சிறைக்க  ஓடிவந்தாள்.


.”சந்துருண்ணா!  நேத்திக்கே டவுன் சந்தைக்குப்போயி  பூமார்க்கெட்ல  அள்ளிட்டுவந்திட்டேன்..பாலகிருஷ்ண சாமிக்கு  துளசிமாலை  கட்டிட்டேன்  ...உதிரிப்பூ அர்ச்சனைக்கு தனியா எடுத்து வச்சிட்டேன்..  “ என்றாள்.


“ஏம்மா ...வீட்ல இன்னிக்கு பாயசம்  வைக்கற வேலை இருக்கும்.உங்களோட  முக்கியமான  பண்டிகை..நோன்பு முடிச்சி  நல்லா சாப்பிடற நாளிலும்  இப்படி  கோயிலுக்காக  பூக்கட்டி நேரம் செலவழிக்கணுமா ?” ”ஆமாண்டா  இவ பத்து மணி வரைக்கும் தூங்குவா...இவளாவது அம்மாக்கு உதவியா பாயசம் வைக்கிறதாவது? பதினாலு வயசுக்கு  பொறுப்பே கிடையாதுன்னு அம்மா  திட்டிட்டே இருக்காங்க..ஏதோ இந்தப்பூகட்டற வேலையாவது செய்யுதேன்னு நான் சந்தோஷப்படறேன்..” என்று அப்துல்லா கிண்டல் செய்ய  சலீமாபேகம்  செல்லக்கோபமாய் அவனை அடிக்க கை ஓங்க  சந்துரு அவள் தலையைத்தட்டி  ‘நீ போம்மா இவனை நான்  கவனிச்சிக்கிறேன்’என்று ஜாடையில் சொல்லி கண்ணடிக்க  எல்லாவற்றையும்  ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் கோவிலுக்குள்ளிருந்த  பாலகிருஷ்ணன்.காலை மணி எட்டுக்கு தேர் நிலையைவிட்டுக்கிளம்பத்தயாரானது.  திருவாரூர் தேர் அளவு பெரிதில்லை என்றாலும் கோரதம்  என்று சொல்கின்ற அளவிலான அழகானதேர்தான்.முன்பக்கம்  பாய்ச்சலுக்குதயாராகும் நிலையில்  இருபக்கமும் குதிரை பொம்மைகள்..  மேலே வண்ணக்கலசங்கள். சீலைத்தோரணங்கள். பூஅலங்காரங்கள். தேர் மையத்தில்  உயர்ந்த மரப்பீடம்
அதன் மீது கையில்குழலுடன் பாலகிருஷ்ண விக்கிரகம். துளசிமாலை மணக்க காட்சி அளித்தவரின் அருகே  விக்கிரகம் தேர் ஆட்டத்தில்  நகராமலிருக்க  அதனை இறுகப்பிடித்தபடி சந்துருவின் அப்பா  ஆராவமுதன்.

.
வில்லியம்ஸ் சொன்ன  தமிழ்த்தேனி  தொலைக்காட்சி நிலையமிருந்து   இருவர் வந்திருந்தனர்


நல்லதம்பி என்னும் நடுவயதுக்காரர் சந்துருவிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார் .ஒளிப்படக்கருவிகளுடன் உடன் வந்திருந்த வரை,”பேரு  ஷாஜகான்”என்றார்.


கேட்டதும் அப்துல்லாவும் சந்துருவும்  ஒருவரை ஒருவர்  மகிழ்ச்சியுடன் பார்த்து சிரித்துக்கொண்டனர்.  சந்துரு  சொல்லத்தயங்கிய விஷயத்தை அப்துல்லா  போட்டு உடைத்தான்..”நல்லதம்பி சார்...எங்க ஊர் இதுவரை விளம்பரத்தை விரும்பினதே  இல்ல...  இப்போ எங்க  ஊர்க்காரபையன்  சொன்னானேன்னு  தான் உங்களை  காமிராவோட இங்க அனுமதிக்கிறோம்..தேர் வடம் பிடிக்க  ஊர் ஜனம் எல்லாம் வரும்.இன்னிக்கு ரம்ஜானும் சேர்ந்துவந்துவிட்டதால்   தேர் திரும்ப நிலைக்குப்போகிற வரைக்கும்  கூட்டம்  அதிகமில்லாமல்போகலாம்..மற்றபடி  எங்களூடையது இயல்பான வாழ்க்கை.பாரதி சொன்னமாதிரி,’பாரத பூமி பழம் பெரும் பூமி. நீரதன் புதல்வரிந் நினைவகற் றாதிர்! ’ என்கிற  சிந்தனைதான்  அனைவர்க்கும்  பாரதநாட்டின்  புதல்வர்களாகத்தான் அனைவரையும்  பார்க்கிறோம். இதைமட்டும் நீங்கள் தெரிவித்துக்கொண்டால் போதும்.இன்னொரு சின்ன வேண்டுகோள்..தேரோட்டம்  முடிந்ததும்  நீங்கரண்டுபேரும்  எங்கள்  வீடுகளில்  சாப்பிட்டுவிட்டுப்போகவேண்டும்” என்றான் 

.
“ஓ அதுக்கென்ன?’ என்றாரே தவிர நல்லதம்பியின்  செயல் அடுத்த  சில நிமிஷங்களிலேயே  திகைப்பைவரவழைத்தது.
ஒரு பெரிய  காரில்  ஏழெட்டுபேர்  வந்திறங்கினர்.

நல்லதம்பியை நோக்கி வந்தனர்.


அப்துல்லா குழப்பமாய்,”யார் சார் அவங்க?” என்று கேட்டான்.


“அஹ் அஹ்து  ஒண்ணுமில்ல  தம்பி.எல்லாம் படபிடிப்பைச்சேர்ந்தவங்கதான்..”


“வில்லியம்ஸ் சொன்னாரே  இயக்குநரும் காமிராக்காரரும்தான் வருவாங்கன்னு?”


”உதவியாளர்கள் ரெண்டுபேர்  தேவைப்படும் தம்பி...மத்தவங்க  என் சொந்தக்காரங்க  ஷாஜகானின்  சொந்தக்காரங்க  கொஞ்சபேர்  அவ்வளவுதான்”


“வேணாம் சார்..படப்பிடிப்பை நிறுத்திட்டுப்போங்க..அந்நியர்களை நாங்க  இந்தமாதிரி விழாக்களில் அனுமதிப்பதில்லை”


“என்னப்பா தம்பி கோவில்  சாமி எல்லாம்  பொதுதானே? உங்க ஊர்பத்திக்கேள்விப்பட்டு ஆசையா வந்திருக்கிற விருந்தினர்கள அவங்க”
அப்துல்லா  முகம் கடுமையானதை கவனித்த சந்துரு தேர்வேறு நகரத்தொடங்கிவிட்டதால்,”  விடு அப்துல்லா...  பார்த்துட்டுப்போகட்டும்” என்றான்  அரைகுறை மனத்துடன்.


ஊர்பள்ளிக்கூடத்து வாத்தியார்  சிவநேசன்  வேறு  இடையில் புகுந்து  சமாதானம் செய்யவும் அப்துல்லா பதில் சொல்லாமல் நகர்ந்தான்.


“கோவிந்தா கோவிந்தா..”  கூட்டம் கூச்சல்போட்டது  வடமிழுக்க  வலிமை சேர்த்து  வியர்க்கவிறு விறுக்க  ஜாதிமத பேதமின்றி அனைவரும்  ஒன்றுகூடியதை  தொலைக்காட்சி நிறுவன ஒளிப்பதிவாளர்  படமெடுக்க  ஆரம்பித்தார்.


ஊர்மக்களே  ஆயிரம்பேருக்குமேலிருப்பார்கள் ஆகவே மக்கள் வெள்ளத்தில் கலந்துவிட்ட புதிதாய் வந்தகூட்டத்தை  யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை..


“கோவிந்தா  கோவிந்தா” 

“என்னய்யா இது ரம்ஜானும் அதுவுமா   இங்க வந்து நின்னுக்கிட்டு  கோவிநதா  கூவசொல்றே? வூட்டுல  பிரியாணி  யும் பாயசமும் பொண்டாட்டி கையால இனிப்பு வகைகளும்  தின்னுட்டு இருக்கவேண்டியவனைஇங்க  அளைச்சிட்டுவந்து கொடுமைடா..” என்றான் ஒருவன்.

“யாருப்பா  அது  தேர் வடம் இழுக்கறப்போ  கோவிந்தா  தான் சொல்லணும்..இதுக்கென்ன  அலுப்பு?”  என்றார் ஊர்க்காரபெரியவர் ஒருவர்.

“ஏன் அல்லான்னு சொன்னா  உங்க சாமிக்கு ஆவாதா  தேருதான்  ஓடாதா?”

“யாருப்பா  ஊருக்கு புதுசா? எங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்...ஆனா கோவில் தேர் அதனால அப்படி சொன்னேன் உன் இஷ்டம்ப்பா  தம்பி..”

“யாருக்கு யார்  தம்பி?  யோவ் பெருசு, நெத்தில பட்டையா நாமபோட்டுக்கிட்டு என்னத்தம்பிங்கறீங்க?’

“என்னப்பா சண்டைபிடிக்கன்னே  வந்தீங்களா?  உங்களை யாரு  ஊருக்குள்ள விட்டது?” என்று  அப்துல்லாவின் நண்பன் ரஹ்மான்  கூச்சலிட்டான்.

“அப்போ..அப்போ..நாங்க சண்டைக்காரங்களா?  ஊரைப்பாக்கவந்தா  என்னவோ  கண்டபடி பேசறீங்க?”

“அதானே  நாம் கார்லேருந்து  எறங்குறப்பவே  கோயில்காரவங்க பார்த்த பார்வை சரி இல்ல..”

“டேய்  அன்பு...என்னவோ  ஊராம் ஒத்துமையாம்  பெருமையடிச்சிக்கிறாங்க...இதை  உன் அண்ணன் நல்லதம்பி படமெடுத்து காட்டப்போறானாம்..  நம்ம பங்குக்கு  கலாட்டாவை ஆரம்பிக்கலாமா?’
என்றான்  ஆண்டவன்அருள் என்னும் இளைஞன்.

தேர் நகர்ந்துகொண்டே இருந்தது..பட்டாசு வெடிச்சத்தம் காதைப்பிளந்துகொண்டிருந்ததால்  பலருக்கு  புதிதாய் வந்தவரக்ளின்  பேச்சு காதில் விழவில்லை 
ரஹ்மான்   அப்துல்லாவை செல்லில் அழைத்து  விஷயத்தை சொல்லிவிட்டான்
உடனே  அப்துல்லா சந்துருவுடன்  நல்லதம்பியை நோக்கி விரைந்தான்.”சார்  ..உடனே கிளம்புங்க” என்றான் கண்டிப்பான குரலில்.

“ஏன்  தம்பி ஏன் என்னாச்சு?” பதறினார் நல்ல தம்பி.

அதற்குள்  கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுவிட்டது தேர்வடம்  சட்டென கீழே  விழுந்தது  ..வடம் பிடித்த கரங்கள் பல  வன்முறையில் இறங்க ஆரம்பித்தன.

அப்துல்லா  சந்துருவிடம்,”என்னடா  இது  , தேரை நகர்த்தவிடாமல்  இப்படி  கலாட்டா பண்றாங்க?” என்றான் எரிச்சலுடன்.

மறுபடி நல்லதம்பியிடம்பேச நகர்ந்தவன் அவர்  ஒளிப்பதிவாளர் ஷாஜகானுடன் சேர்ந்து  கூட்டத்தின்  வன்முறைகளை  மும்முரமாய் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

“பாத்தியாயாடா  சந்துரு...மக்களைத்தூண்டிவிட்டு  தீவிரவாதத்தை  பிரசாரம் செய்வதே  இவங்கமாதிரி சில மீடியாக்காரங்கதான். முதல்ல  ஒளிப்பதிவை நிறுத்த சொல்லணும்” என்று  வீறிட்டவன்  அதை செயலில் காட்டினான்.
ஆனால் நல்லதம்பி  ,” இல்லப்பா..இதெல்லாம்  ஒளிபரப்ப மாட்டோம்... “என்று  சமாளிக்கவும் அப்துல்லா  ஆத்திரத்துடன்  ஷாஜகானின் கையிலிருந்த   வீடியோ காமிராக்கருவியைப்  பிடுங்கி  தூர  வீசினான்

சொல்லி வைத்தமாதிரி   வன்முறை செயலில் ஈடுபட்டவர்கள் சட்டென  அமைதியாகிக்கலைய ஆரம்பித்தனர்.

நல்லதம்பி  கோபமுடன்,”  என்னப்பா  இளைஞர்களான உங்களுக்குப்பொறுப்பு இல்லையா  இப்படியா  விலைஉயர்ந்த  பொருளை வாங்கிக்கீழே வீசி எறிவீங்க?’ என்று கத்தினார்.
அதற்குள் ஊர்மக்கள்கூட்டம் அங்கே குழுமியது.

“போயிடுங்க  அவ்வளவுதான் சொல்வேன்” என்று கையை உயர்த்திக் கூச்சல்போட்டான் சந்துரு.

“குழந்தைபுரம் பற்றி வெளி உலகுக்கு  அறிமுகப்படுத்த ஆசையாய் வந்த எங்களை அவமானப்படுத்தி அனுப்பறீங்க இல்ல?  ” சீறினார்  நல்லதம்பி.

அப்துல்லாவிற்கும்  எரிச்சல் தலைக்கேறினாலும் நிதானமாய் பேச ஆரம்பித்தான்.

“ இதான்  எங்க ஊரைப்பற்றிய உங்கள் அறிமுகம்னா  எங்களுக்கு அது தேவை இல்லை.மின்சாரத்தை உபயோகித்து ஒருவரை கொலை செய்யலாம்  ஒருவீட்டை பி்ரகாசிக்கச்செய்யலாம் ஒருகுழந்தையை நீரில் மூழ்கடிக்கச்செய்யலாம் அல்லது அதைக்கொண்டு தாகம் தணிக்கலாம்.ஒருவரின் சொந்த மனத்தில் உள்ள  எண்ணங்கள்  தான் நல்லதையும் கெட்டதையும் தீர்மானிக்கின்றன.உங்க எண்ணம் நல்லதாக இல்லை.பெயரில் மட்டும்தான் நீங்கள் நல்லதம்பி,செயலில் இல்லை..உங்கள் நோக்கம்  எங்களுக்குப்புரிந்துவிட்டது.  தண்ணீர் அடித்து தண்ணீர் விலகாது. எங்க  ஒற்றுமையை  யாராலும் அழிக்கமுடியாது. உங்களால் எங்க  ஊருக்கு விளம்பரம் தேவை  இல்லை..அலுமியத்தட்டில் கூழைக்குடிக்கலாம்  தங்கத்தட்டில் விஷத்தை அருந்த முடியுமா? உங்க  வரவு தங்கத்தட்டுதான்.செயல்கள் விஷம். இந்த ஊரில்  பெரியவர்கள் வழிநடத்தலில்  இளைஞர்கள் நாங்கள் பலகாலமாய்  ஒற்றுமையாய் இருக்கிறோம்.மதத்தின் பெயரால் ஓர் இனத்தை இழிவு படுத்துவதையும், தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்கள் என்று  ஒதுக்குவதையும் அன்றே விவேகாநந்தர்  கண்டித்தார். மனிதனுக்கு மனிதன் சகோதரனாக  கருதும் நாள் என்று வருமோ என்று அங்கலாய்த்தார்.
‘உன் இதயத்துக்குள்  பார் அங்கு ராமும் ரஹீமும் இருவரும் இருப்பதைக் காண்பாய்’ என்று  அன்றே  பல நூறு ஆண்டுகள் முன்பே கபீர் பாடிச்சென்றார்.அவர் அறிந்திருக்கமாட்டார்  பின்வரும் காலங்களில் மனிதனுக்கு இதயமே இல்லாமல்போகும் என்று.  மதவெறுப்பை அரசியல் பண்ணும் அரசியல்வாதிகளிடம் கொடுத்துவிட்டு  நாடு நிலை குலைந்து கொண்டிருப்பதைக்கண்முன் காணுகிறோம். அதனால்தான்  இங்கே அரசியல்  வாடையே  படாமல்  கண்ணின் இமையாக  எங்களை வளர்த்து ஆளாக்கி இருக்கிறார்கள்  எங்கள் பெற்றோர்கள். எங்களை யாராலும் பிரிக்கமுடியாது.  தீயசக்திகளை நாங்கள்  எங்கள் எல்லையில்  பரவ விட மாட்டோம். ஊரை நேசிக்கிறவர்களால்தான் ஒருநாட்டை நேசிக்க முடியும்.. நாங்க நாட்டை நேசிக்கிறோம்  விவேகானந்த யுகம் மலரும் என்றாவது என்று காத்திருக்கிறோம். அதற்கான முயற்சியை ஓசைப்படுத்தமால்  செய்துவருகிறோம் ் எங்களுக்கு விளம்பரம் தேவை இல்லை   இப்படிப்பேசுவதால் நாங்கள்  வேதாந்திகள் என்றால் அதுவும் பெருமைதான்  விவேகானந்தர்  சொல்வதுபோல


When a man has reached the highest, when he sees neither man nor woman, neither sex, nor creed, nor colour, nor birth, nor any of these differentiations, but goes beyond and finds that divinity which is the real man behind every human being - then alone he has reached the universal brotherhood, and that man alone is a Vedantist.

ஆண் பெண் என்று பாராதவராய் 
பால் வேறுபாடு, சமய வேறுபாடு 
நிற வேறுபாடு, பிறவியினால் வேறுபாடு 
என்று எந்த விதத்திலும் 
பிரிவினை நோக்கமில்லாதவராய்  
அனைத்தையும் கடந்தவராய் 
ஒவ்வொரு மனித ஜீவனுள்ளும் இருக்கும் 
உண்மையான மனிதன் என்னும் 
அந்தத் தெய்விகத்தையே காண்பவராய் 
ஒருவர் ஆகும்போதுதான் 
அவர் உலக சகோதரத்துவம் என்பதை 
அடைந்தவராகிறார்; மேலும் 
அவர் ஒருவரையே வேதாந்தி 
என்று சொல்ல இயலும்...
    தமிழிலும்   அந்த வங்கத்து சிங்கம் சொன்னதை   விளக்கிவிட்டேன். புரிந்திருந்தால்தயவு செய்து  கிளம்புங்கள். “ என்று முடித்தான்.
**********************************************************


மேலும் படிக்க... "விவேகானந்தயுகம் மலரட்டும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.