Social Icons

Pages

Saturday, November 18, 2006

சருகு.

நிறம் மாறும்வரை
மரக்கிளையோடு
பற்றி இருக்கும்
'அற்றது பற்றெனில்
உற்றது வீடு'
என்பதைஅறிந்தாற்போல்
இளமைப்பசுமையை
காலக் கரைசலில்
இழந்துவிட்டு
இனி வரும்மரணத்திற்கு
இசைவாகக்
காத்திருக்கும்
அடித்த பெருங்காற்றில்
அப்படியே உடல் சரியும்
பழுத்த இலை பார்த்து
பச்சை இலை
பரிகாசமாய் சிரிக்கும்
வளர்த்த வேருக்கு
வாழ்க்கை முடியுமுன்
வணங்கி நன்றி சொல்ல
விரைந்து தரை தொடும்
பழுத்த இலைதான்
நாளை சருகாகி
உரமாகப் போவதை
இளமை கர்வத்தில்
காற்றோடு கைகுலுக்கும்
பச்சை இலைதான்
அறியுமா என்ன?
மேலும் படிக்க... "சருகு."

Thursday, November 16, 2006

காதலியின் கடிதம்.

பத்திரமாய் இருக்கிறது
பாதுகாப்புப் பெட்டறையில்
உன் கடிதம்.
அவ்வப்போது
எடுத்துப் பார்க்கிறேன்
பிரிக்கும்போதே
மடிப்புகளில் விரிசல்
பழுப்பேறிவிட்டாலும்
பழைய தாளிலும்
உன் பளிங்கு உடல் வாசம்.
முத்தான கையெழுத்து
உன் முறுவலைப்போல.
ஒவ்வொருவருக்கும்
கையெழுத்து
பிரத்தியேகமாம்
தனி மனித அந்தரங்கம்
மன நிஜத்தின் நிழல்.
கையெழுத்தில் அவரவர்தம்
தலையெழுத்தைக் கூறலாமாம்
எனக்குத் தெரியவில்லை
சிலவிஷயங்கள்
தெரியாமலிருப்பதே
நல்லதுதான்.
கவிதையாய் எழுதிவிட்டுக்
கடிதமெனச் சொல்வாய்
கவிதைக்குத்தான் பொய் அழகு
வாழ்க்கைக்கு அல்ல
உண்மைகளை உதறிவிட்டு
ஒருநாள் சென்றுவிட்டாய்
மறந்தேதான் போனாயா
மறைந்தேதான் போனாயா?
என்றாவது நீவருவாயென்று
காத்திருக்கிறது
என்னோடு
உன் கடிதமும்


**********************
மேலும் படிக்க... "காதலியின் கடிதம்."

Tuesday, November 14, 2006

மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)

வட்டக் கருவிழிச் சுட்டும் சுடரொளியென்
வாழ்க்கை ஸ்வரத்தினிலே-பல
மெட்டுக்கள் பாடவே இசைந்திங்கு வந்திட்ட
மேன்மைத்திரு உருவே!

கூண்டுக்கிளியென குமைந்து கிடக்கையில்
கூவியே வந்தவளே-நாங்கள்
வேண்டித் தவம் செய்து விரும்பியதும்
வரமான பெரும் பலனே!

பெண்மைக் கிங்கு தாய்மை நிறைவென்ற
பேச்சினை நிஜமாக்கியவளே-இன்று
உண்மையில் என் மனம்மகிழக் காரணமாய்
ஊர் வாயை அடைத்தவளே!

சந்ததிச் சங்கிலி தொடர்ந்திட வந்திட்ட
சந்திரப் பேரொளியே-இங்கே
வந்திடு என் கையில் இனியெந்தன்
வாழ்வும் உன் வசத்திலே!
மேலும் படிக்க... "மேன்மைத் திரு உருவே!(குழந்தைகள் தினம்)"

Thursday, November 09, 2006

அருள் இலவசமே!(மரபுக்கவிதை.தேன்கூடு போட்டி)

கதிருடன் மதியினை நிகரும் காட்சியன்
இதயத் துள்ளவன் நாவில் இருப்பவன்
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்
பாருயர் விசும்பு பாதளம் அளந்தோன்
வெண்சங்கு ஊதும் செவ்வாய்க் கரியவன்
கண்ணும் கையும் சிவந்த சேடியன்
செம்பொன் மாமணி திரள்முத் தணிந்தோன்
அம்பும் வாளும் ஆழியும் கதையும்
வேலும் ஏந்திய வீரன்
ஞாலம் காப்பவன் அருள், இலவசமே!

(மரபில் இது முரண்தொடை எனப்படும் வகையினைச் சேர்ந்தது.)

மரபுபற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் கவிதை விளக்கம்.
மோனை ,எதுகை, முரண், இயைபு ,அளபெடை அந்தாதி, செந்தொடை என வகைகள் உண்டு.
எதுகை மோனை பலர் அறிந்திருக்கலாம், முரண் எனப்படுவது ஒரே வரியில் வார்த்தைகள் முரணாகி, அதாவது வேறுபட்டு வருவது. கதிருடன் மதியினை என்னும் வரியில் கதிர்= சூரியன். மதி =சந்திரன்.
இதயத்துள்ளவன் நாவில் இருப்பவன். இதயம் என சொல்லிவிட்டு நா என்பது முரண்.
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்...இதில் இருள் சோதி என இரண்டும் முரண்.
மீதத்தை கவிதை படிப்பவர்களிடம் விட்டுவிடுகிறேன்!! ஒரேவரியில் 2அல்லது 3, 4 முரண்களும் வரலாம் இதில் வந்திருக்கிறது.கடை இருவரிகள் கணக்கில் கிடையாது!
மேலும் படிக்க... "அருள் இலவசமே!(மரபுக்கவிதை.தேன்கூடு போட்டி)"

Monday, November 06, 2006

ஒன்றா இரண்டா இலவசம்?

'செல்லமே' என்பாய்
சிணுங்கிச் சிரிப்பதை
ரசித்தே நிற்பாய்!

கள்ளப்பார்வையில் பல
காவியங்கள் வரைவாய்!
உள்ளம் குளிரக் குளிர
உற்சாகமாய்ப் பேசுவாய்!

மெல்லமெல்லவே என்
வெட்கத்தைக் களைந்தெடுப்பாய்
அள்ளியெடுத்தே
ஆலிங்கனமும்செய்வாய்!!

தங்கச் சரம் நகர்த்தி
சங்குக்கழுத்தினிலே
சட்டென விரல் பதிப்பாய்!!

அங்கமே துடித்து நிற்க
பொங்கும் வெட்கத்தில்
பூரித்தமுகந்தன்னை உன்
கைக்குள் சிறைவைப்பாய்!!

உறங்கும் அழகைப் பார்க்க
அருகிலேயே நீ
உறங்காது உட்கார்ந்திருப்பாய்!!

மேனிக்குள் எங்கெங்கெல்லாம்
வெட்கம் புதைந்துள்ளதென்பதை
நீ தொட்ட பிறகுதானே
நான் உணர்ந்து கொண்டேன்?

கசங்கிய போர்வையைக்
கண்ணுறும் போதிலெல்லாம்-நவ
ரசங்களின் காட்சிப்பின்னல்
ரயில் போல ஒடக்கண்டேன்!

'ஒரு முத்தம் கொடுத்தால் உனக்கு
இருமுத்தம் இலவசம்' என்றாய்
கணக்கென்ன கண்ணா-இந்தக்
கருவூலம் உனக்குத்தானே?
மேலும் படிக்க... "ஒன்றா இரண்டா இலவசம்?"

Friday, November 03, 2006

குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)

மழை வேண்டி யாகம் செய்வர்
யாகத் தீ சுற்றி வலமும் வருவர்
நிலமகளை பூமித் தாயென்று
பூஜிப்பர்
தன்னில் காணா இறைவனை
விண் நோக்கி தியானிப்பர்
காற்றுக்கு உண்டா கைகுவித்து
வரவேற்பு?
இலவசங்கள் என்றைக்குமே
இரண்டாம்பட்சம்தான்.
மேலும் படிக்க... "குறையொன்று உண்டு(தேன்கூடு போட்டிக்கு)"

Wednesday, November 01, 2006

இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)

ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'சுட்டும்விழி சுடரே' என்கிறது.

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே. ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில் எங்கிருந்தோ அந்த தொழுநோயாளி ஓடிவந்து என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை. எனக்கு எல்லாமே சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"

"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"

விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.

அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும் போனபோது அவளை வீட்டுவாசல் திண்ணையில் பார்த்தேன். .

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டு வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,
"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் நானும்..நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட் ஜனங்க வசிக்கறஇடம் .இங்க ஊர் பேர் தெரியாத அந்த தீஞ்சிபோன முகத்துக்காரப் பொம்பளைய அழைச்சிட்டு வரணுமா நீங்க? "

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைசிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை..எனக்கு விலைமதிப்பு பெறுமானது தான்முக்கியம்"

"ரவி! நீ வெறுக்கிற இலவச இணைப்பு நாந்தாம்பா.."

என்ன உளற்றீங்க ?"

"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..
இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,
'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை சத்திய வாக்கா நாம் நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவேஇருந்தா ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக அது தீவிபத்தாகவும் உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோட சேலைல நெருப்பு பிடிச்சிபரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் தோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது.ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனமாசம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்..வற்புறுத்தி அழைச்சிட்டு வந்தேன்.'உன் பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும் வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்னைப் பெத்த தாயா அவங்க? கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோதுஅந்த அறையின்சுவரில் மாட்டப்படிருந்த நிலைக் கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கிறேன்.

அகத்தின் அழகை கண்ணாடி பிரதிபலிக்கிறது முகம் வழியே.

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன் வேறுபக்கமாய் நகர்கிறான்.
நான் , அவனைத் தொடர்கிறேன்.
****************************************************************
மேலும் படிக்க... "இலவச இணைப்பு (தேன்கூடு போட்டிக்கு)"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.