Social Icons

Pages

Saturday, December 31, 2011

புத்தாண்டே வருக!






வாடையும் பனியும் சூழ்ந்த


மார்கழித்திங்கள் நாளில்

நாடெல்லாம் புதுமை செய்ய

காடெல்லாம் விளைந்து செழிக்க

தேடிவந்ததிங்கு தேன்சுவைப் புத்தாண்டு!

வீடெல்லாம் நிறைந்த தூசி

ஓடிடப் பெருக்கித்தள்ளி

பாடி நாம் பரவசமாய்

ஆடிக் கொண்டாடியே வரவேற்கும் புத்தாண்டு!!





செந்தமிழ் நாட்டிற்கென்றே

சிறப்புற அமைந்தபொங்கல்

வந்ததும் விளைவுபொங்கத்

தருவதும் புத்தாண்டு!



இத்தாரணியில் நாம் என்றும் இனிதே வாழ

புத்தாண்டில் உறுதிமொழி இப்படியே எடுப்போம்!





"அறிவெனும் நீரைப்பாய்ச்சி

அன்பெனும் பயிரை நடுவோம்

நெறி எனும் வேலி போட்டு

நெஞ்செனும் நன்னிலத்தில்

வெறி என வளரப் பார்க்கும்

வேற்றுமை களைந்திட்டு

அறுவடை நாம் செய்வதெல்லாம்

அளவிலா மகிழ்ச்சி தானே?"





மேலும் படிக்க... "புத்தாண்டே வருக!"

Friday, December 30, 2011

நானும் 2011ம்.

நானும் 2011ம்  என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுத  அனந்து  அழைத்துள்ளார்.  கேள்விகள் சிக்கலாக இல்லை ஆகவே தைரியமாய் களத்தில் குதித்துவிட்டேன்.

ம்


நானும்..







படித்ததில் பிடித்தது :  சமீபத்தில் படித்ததில் பிடித்தது என்று நெம்பர்40 ரெட்டைத்தெரு ..இராமுருகன் எழுதிய நாவலை சொல்வேன். பொதுவா கேட்டா   பெரியலிஸ்ட்டே இருக்கு!



வாங்கிய பொருள் .....குளீர் நடுக்குதே பெங்களூர்ல  விருந்தாளிங்க வந்தால்  கம்பளி புதுசு தேவைன்னு  க்வில்ட் ஒண்ணு வாங்கினோம்,.
 

சென்ற இடம் :   மேலைநாடுகள் சில.  ஆனாலும் சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?!





ரசித்த படம் : காஞ்சனா  பயமா இருந்தாலும் பிடிச்சது.



உருகிய படம் :  படம் பார்த்து உருக மெழுகுவர்த்தியா என்ன?::) கொஞ்சம் ஒன்றிப்போனது எங்கேயும் எப்ப்போதும் படத்தில்.





சிரித்த படம் ... முழுநீள சிரிப்புப்படம்  இப்போ ஒண்ணும் பார்க்கலயே!  விவேக் வடிவேலு காமெடி பிடிக்கும்.





பிடித்த பாடல் : எம்மா எம்மா ( ஏழாம் அறிவு ) எப்பவும் பிடிச்சது  ரன் படத்து பொய் சொல்லக்கூடாது காதலி. அப்புறம் மாலையில் யாரோ  என்கிற ஷத்ரியன் படப்பாடல்,  காற்றினிலே வரும் கீதம் இப்படி பல..




மிகப்பெரிய சந்தோசம் : எழுத்தாளர்களுக்கு வேற என்னங்க பெரிய சந்தோஷம்?  படைப்புகள் வெளிவந்தால் அதுதான்.  தென்றல் இதழ்ல  பரிசுக்கதை  தேர்வானது  சந்தோஷம்.(கதை  ஜனவரி ல வலைப்பூவில்  ரிலீஸ்!)

புதிய நண்பர்கள் :  சிலர் அறிமுகம் ஆகி இருக்கிறார்கள்.



சாதனை : ஆஹா அதெல்லாம்  பெரிய வார்த்தை! miles to go before i  sleep..



வருத்தம் : குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைப்பற்றிக்கேள்விப்பட்டால்  மனம் மிக வருத்தம் அடையும்.



ஆச்சர்யம் .. ஷக்திப்ரபா (எனது பெங்களூர் தோழி) வரவர வலைப்பூவில்  ஆழ்ந்து நிறைய எழுதுவது ..ஆனால்  மகிழ்ச்சிகலந்த ஆச்சர்யம் அது!!!
 
அவ்வ்வளோதான் முடிச்சிட்டேன்!


அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!






மேலும் படிக்க... "நானும் 2011ம்."

Saturday, December 24, 2011

அன்புப்பூ ஒன்று வந்தது!





அகிலத்தைக்காத்திட்டு அன்பினைப் பரப்பிட


அன்புப்பூ ஒன்று பூமிக்கு வந்தது- அது

ஆனந்தச் சிரிப்புடன் அழகாய் மலர்ந்திட்டு

அனைவரையும் கவர்ந்தது.





மனிதாபிமானத்தை மக்களுக்குச் சொல்லி

மன்னிக்கும் குணத்தை மனதார ஏற்று -நல்

மனிதனாக வாழ வழி வகுத்துத்தந்தது,

மனமகிழ்ச்சிக்கு வித்திட்டது.





தன்னிரு கரங்களில் சிலுவையைத்தாங்கிடினும்

கண்ணிரண்டில் கருணையே காட்டி நின்றது- அந்த

எண்ணிலாப்பெருமை கொண்ட இறைவன் யேசு

மண்ணில் உதித்த நாள் இன்று!





மேலும் படிக்க... "அன்புப்பூ ஒன்று வந்தது!"

Thursday, December 22, 2011

வாரணம் ஆயிரம்!

கனவா கனாவா?
எது சரியான சொல் என்ற ஆராய்ச்சியில் இரண்டுமே சரி என்பதுபோலத்தெரிகின்றன. மங்கியதோர்நிலவினிலே கனவினிது கண்டேன் என்கிறார் பாரதி.

இன்பக்கனா ஒன்று கண்டேன்  என்ற பாடலில் கனா தான் வருகிறது!

ஆண்டாள் கனா என்கிறாள்.

பூமாதேவியின் அவதாரமான ஆண்டாள் கண்ணனை நினைத்துப்பாடிய பாடல்கள் நாச்சியார் திருமொழி என்ற பெயரில் வருகிறது.

வாரணமாயிரம் எனத்தொடங்கும் பத்து பாசுரங்களில் கண்ணனுடன் தனக்குக் கல்யாணம் ஆனதாகக்
கனாக்கண்டதை தோழியிடம் கூறுகின்றாள்..இதில் நிச்சயதார்த்தம் கையில் காப்பு கட்டுதல் பாணிக்ரஹண்ம் எனதிருமணச் சடங்குகள் அனைத்தும் சுருக்கமாக வருகின்றன.



மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்


கைத்தலம் பற்றக்* கனாக்கண்டேன் தோழிநான்.... என்று ஆண்டாளும்





 வந்தென்னைக் *கரம்பற்றிய* வைகல்வாய்

இந்தஇப் பிறவிக் கிருமாதரைச்

சிந்தையாலும் தொடேன் என்று செவ்வரம்
 தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்


 என்று கம்பனுடைய சீதையும் சொல்லும் கரம்பற்றும் வைபவத்தை  பாரதி தனது புரட்சிகரமான கண்ணோட்டத்தில் பெண்ணிற்கு அவன் தரும் முக்கியத்துவத்தில்




 காதல் ஒருவனைக் *கைப்பிடித்தே* - அவன்

 காரியம் யாவிலும் கைகொடுத்தே




என்று அழகாக   திருப்பிப்போட்டுவிட்டான்!
தேர்ந்தெடுக்கும் உரிமையை பெண்ணிற்குத்தருகிறான் எங்கள் பாரதி.



 பாணி-கிரஹணம் தானே? பற்றுகிற காரணத்தால்தானே சூரிய சந்திர கிரஹணங்கள்?


 மாங்கல்ய தாரணம் பாணிகிரஹணத்தின் ஒரு பகுதி யாக  இருக்கவேண்டும்
மாங்ல்ய தாரணம் செய்வதாய் என்று பேசும் திருமண அழைப்புகள் எங்கும் இல்லை!


 பாணிகிரஹணம் செய்துகொள்வதாய் என்றுதானே திருமண

 அழைப்பில் இருக்கும்!

பாணிக்ரஹணம் பிறகு பார்க்கலாம்  வாருங்கள் முதலில் மாப்பிள்ளை அழைப்பிற்கு!




  முதல் பாடல் ஜானவாசம்(மாப்பிள்ளை அழைப்பு) என்று கொள்ளலாம். அந்தகாலத்தில்  யானை  குதிரை
 மீது மாப்பிள்ளை வருவது  இருந்திருக்கிறது இன்றும் வட இந்தியாவில் குதிரை மீது மணமகன் அம்ர்ந்துவரும் ஊர்வலம் அமர்க்களமாய் நடக்கிறது.

காலப்போக்கில்  தென்னகப்பக்கங்களில்அன்னம் அல்லது தோகை மயில் முகப்பினைக்கொண்ட கார் என்றாகிவிட்டது.:)

வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்றதிர்
பூரண பொற்குடம் வைத்துப்புரமெங்கும்
தோரணம் நான் கட்ட கனாக்கண்டேன் தோழீ  நான்

இதுதான் பாடல்.

என் பிரிய தோழியே! ஆயிரம் யானைகள்(வாரணம்) சூழ்ந்துவர வீதிகளில் நாராயணன் ஊர்வலமாக வருகின்றான். இதை அறிந்து அவனைக்காணவும் வணங்கவும் ஒவ்வொரு வீடுகளும் பூரணபொன்கும்பங்களாலும்(நீர் நிறைந்த பொன்குடங்கள்) தோரணங்கள் கட்டியும் அலங்கரிக்கப்படுவதை நான் கனவில் அனுபவித்தேன்!





வாரணம் என்றால்யானை



பன்மையில் சொல்லவேண்டுமானால் யானைகள்.,



பாடலில் வாரணங்கள் ஆயிரம் என வரவேண்டும் (,யாப்பிற்காக எண் வழுவமைதி) ஆயிரம் சூழ வலம் செய்து, என்று வருகிறது.

 ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
எனும் திரைப்பாடல் நினவுக்கு வருகிறதா?
 ஒவ்வொரு கதவாய் தட்டினான் மன்னன்
என்பது சரியா ஒவ்வொரு கதவுகளாய் தட்டினான் மன்னன் என்பது சரியா?

சரி அதை விடுங்கள்!
இந்தப்பாடலைப்பார்ப்போம்.



நாரணநம்பி ( சிறந்த கல்யாண குணங்களை உடைய நாரணன்) எதிரில்நடக்கின்றான்

(எனவே எதிர்கொண்டழைக்க)



பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்டக் கனாக் கண்டேன்



நீர் நிறைந்த தங்கக்குடங்களை பூரண கலசங்களாய்வைத்தபடி அவ்னை வணங்க மக்கள் காத்திருக்க,

எங்கும் அலங்காரத் தோரணம் நட்டிருப்பதாக கனவுகண்டேன்



தோழீ ( தோழியின் மீதான விழிப்பு தோழீ)



நான்’



இப்படி ஆண்டாள் சொல்வதாக பாடல் அமைந்திருக்கிறது.



----------------------------------------------------------------

ஆண்டாளின் அறிவுக்கூர்மைதான் வாரணம் , அதுவும் ஆயிரம் வாரணம்.



அதாவது பெருகிய அறிவுக்களம். (யானை அறிவுக்கு உருவகம், விலங்குகளின் நல்ல அறிவுடையது யானை)



வெளியெங்கும் விரிகிறது. அவள்பார்வை.



விரிதலின் முடிவு ( இதற்கு உருவகம் நாரணன் நம்பி) உணர்வுகளுக்கு அருகிலேயே,எதிரிலேயே உள்ள தளத்தில், ஆனால் அந்தத் தளமும் இயங்கிக்கொண்டேயுள்ளது.





பேரானந்தவெளியில் அகமிருக்க, அவள் புறமெங்கும் வெளியாய், ஆனந்தம் விரிகிறது.புறத்திலும் ஆனந்த வெள்ளம்!

எதிரில் மனம் கவர்ந்த மதுசூதனன் வருகின்றான். ஆனந்த எல்லை அது!



அவள் தன் அனுபவத்தைசொல்லெடுத்து சேர்த்து வார்த்தைகளாக்கி சொல்லவேண்டியதால் - வார்த்தைகளின் உட்பொருளாய்-மனக்கண்ணின் தரிசனமாய்- அவளுடைய கனவுக்காதலை தோழியிடம் சொன்னாள் என்பது நேரடிப் பொருளானது.



ஆண்டாள் உலாவிய தளங்கள் வித்தியாசமானவை. அதில் அவள் பெற்ற அனுபவங்கள் வித்தியாசமானவை



அகத்தின் ஆனந்தமே புறத்தில்பேரானந்தமாக அதன் பூரணத்தை அலங்காரத்தோரணங்களான வார்த்தைகள் வழியாக தோழியிடம் கூறுவதாக நம் கற்பனையும் விரிகிறது!











மேலும் படிக்க... "வாரணம் ஆயிரம்!"

Friday, December 16, 2011

மார்கழித் திங்கள் அல்லவா?

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவம் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.

தமிழ்மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது மார்கழிமாதம். எண்களில் ஒன்பதிற்கு எப்போதுமே பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரி நவரத்தினம் நவக்ரஹங்கள் இப்படி பலப்பல. மும்மதங்களுக்கும சிறப்பு இறைவழிபாட்டு மாதமாகும்.



மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு  தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.



 திருவரங்கத் திருநகரத்திற்கும் அருகே உள்ள  ஆனைக்கா நகருக்கும் மார்கழியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். இவ்விடங்களில்
திருப்பாவையும் திருவெம்பாவையும்  ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஊரே விழாக்கோலம் கொண்டுவிடும்.

மார்கழிமாதத்தில் மட்டும் திருவரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனம் கிடையாது.

மார்கழியில் மட்டும் அனந்தசயனத்திலிருக்கும் பெருமாளுக்குத் துயில் எழுப்ப வேண்டி அதிகாலை முன்றரை மணிக்கே திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக ஆண்டாள் பாசுரங்களைப்பாடுவார்கள்.

மார்கழி உற்சவக்காலத்தில்அரையர் சேவையில் நாலாயிரதிவ்யப்ரபந்தப்பாடல்கள் அபிநநயத்துடன் அரங்கேற அதை அரங்கன் செவிமடுத்துக்கேட்பது கண்கொள்ளாகாட்சியாகும். தமிழுக்குப் பெருமையும் ஆகும்.

உற்சவதினத்தின் எட்டாம் நாள் அரங்கர் குதிரைவாகனத்தில் கோயிலின் கிழக்குப்பகுதியில் இருக்கும் மணல் வெளிக்கு வருகை தருவார். அங்கு நடைபெறும் நிகழ்வுக்கு வேடுபரி என்று பெயர். அப்போது முத்தரையர் இன மக்களுக்கு கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது. வருடத்தின் ஒவ்வொரு உற்சவ காலங்களிலும் இதுபோல ஒவ்வொரு சாதியினருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில்  மரியாதை செய்யப்படுகிறது.


மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்.

இதைப்பெற்றுக்கொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்துநிற்பார்கள். இவைகளின் மணமும் சுவையும் அலாதியானது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின்  இன்னொரு பாடலைப்பார்க்கலாமா?





’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,


திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ


மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே


விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’


கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.

கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை.

பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.

மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

ஆண்டாளின் திருவாய்மொழியில் நட்சத்திர அந்தஸ்து கொண்டபாடல் இது.

திருப்பாவை முப்பதும் பாடும் போது ஆண்டாள் சிறுமியாய் இருந்திருக்கவேண்டும்  செல்வச்சிறுமீர்காள்  என்பாள் தனது தோழிகளை ஆனால்  கற்பூரம் நாறுமோ பாடலின்போது அவள் பருவ மங்கையாக இருந்திருக்கவேண்டும் அந்தப்பருவத்தில் மனத்தில் தோன்றுவதை அந்த காலத்தில் ஒரு பெண் இப்படி துணிவோடு கேட்கிறாள் என்றால் ஆண்டாள் எப்படிப்பட்ட புரட்சிப்பெண்ணாக இருந்திருப்பாள்?!


'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.


ஏழாம் திருமொழியில் 'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்கிறாள்.

அடுத்து,



'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் '



என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் 'வாயமுதம் ' என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை
கொள்கிறாள் ஆண்டாள்

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!


கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.

ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.


'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!


அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை?  அதைப்பிறகு பார்க்கலாம்!

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}



அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

புல்லாங்குழலை ஏன் கேட்கவில்லை தெரியுமா



பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.




 அதனால் புல்லாங்குழல் பிறகுதான்.புல்  லாங்  கா இருந்தாலும் சிக்கென்ற சங்கு மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது!

சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். 'அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்' என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.




அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.






உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,

ஊனும் உறக்கமும் இந்த சங்குக்காரருக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ...ஐயா  சங்கையாவே... பெரியவர்!

ஆண்டாள்  புத்திசாலிப்பெண் அல்லவா அதனால்தான், பெரிதினும் பெரிது கேட்டிருக்கிறாள்!

(மார்கழியில்  மேலும் ஆண்டாளை வாரணம் ஆயிரம் சூழ  கொண்டுவருவோம்!)



மேலும் படிக்க... "மார்கழித் திங்கள் அல்லவா?"

Wednesday, December 14, 2011

வானும் கடலும்!

மேகத்திரள்கள்


எழுகின்ற அலைகள்!


நட்சத்திரங்களோ

ஆழ்கடல்முத்துக்கள்!


பிறைநிலாதான்

கவிழும் படகு!


சாயம் இழக்கா

சமுத்திர வர்ணம்!


தலைகீழ்கடல்தான்

இரவுவானம்!



மேலும் படிக்க... "வானும் கடலும்!"

Saturday, December 10, 2011

பாரதி நீ இன்றிருந்தால்..?

பாரதி!


நீ இன்றிருந்தால்

என்ன செய்வாய்?


தேமதுரத்தமிழோசையினை

உலகமெலாம் பரவச்செய்ய வேண்டும் என்றாய்

தமிழ்த் தொலைக்காட்சிகளில்

தடுமாறும் தமிழினைக்கேட்டுவிட்டால்

திரும்பிப்பார்க்காமல் போய்விடுவாய்!


பாரதியின் கவிதைத்தோட்டத்தில்

ஏகாதிபத்தியக்கழுகுகள்

அமர்ந்து ஆட்சிஒலியை இசைத்தாலும்

அவற்றில் ஒன்றால்கூட

உன்னைப்போல்

ஆன்மாவைத்தொடமுடியவில்லை.


கந்தல்கோட்டணிந்தகவிஞனே

நீ

பாரதவீணையின்

சுதந்திரத்தந்திகளைப்

பாழாக்கிய வெள்ளைக்கரங்களை

எரிமலை எழுதுகோலால்

தகர்த்து எறிந்தவன்!

இன்று அந்த நல்லதோர் வீணையில்

நலிந்துகிடக்கின்ற

ஊழல் புழுதிகளைக்கண்டால்

உன் நாடிநரம்புகள் துடிக்குமையா!


எண்ணியமுடிதல்வேண்டும் என்றாய்


’என்றும் அதுபகல்கனவு’ என

அடுத்த வாக்கியம் அமைத்திருப்பாய்!

ஏனெனில் யாரும் இங்கு

எண்ணுவதே இல்லை!



வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத்தாயை


வணங்குதல் என்போம் என்றாய்



வந்தே மாதரம் என்பது

 ‘வந்து ஏமாத்தறோம்’ அல்லது


வந்து மாத்தறோம்(ஆட்சியை)

 என்றாகிவிட்டதை அறிவாயா?



சுதந்திரம்கிடைக்குமுன்னே

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாய்

களி நடனம்புரிந்தாயே!

வா பாரதி,வந்து எங்கள் சட்டசபைக்குள்

பார்வைக் கணைகளைஓடவிடு.

கூச்சல் இரைச்சல் கொட்டாவி குழப்பம்

சிலநேரம் கைகலப்பு

சட்டென்ற வெளிநடப்பு

இவைகளோடு முன்னெல்லாம்

பாதரட்சை கூட பறந்திருக்கிறது!


எல்லோரும் இந்நாட்டுமன்னர் என்றாய்

உண்மைதான்!

ஐந்தாண்டுக்கு ஒருமுறை

வாக்குச்சாவடியில்மட்டும்

நாங்கள் மன்னர்கள்தான்!

ஓட்டுகேட்கும்போது

அரசியல்வாதிகளின் ஒத்திகைக்கே

ஆஸ்கார்விருதுகொடுக்கலாம்!

ஆம்

தேர்தல் நாடகத்தில்

பிச்சை எடுப்பதுபோல கைகுவிப்பார்,

 எங்கள் முன்னே!

இச்சையாய் அவருக்குப் பதவி

கிடைத்தபின் நன்கு குவிப்பார் பொன்னே!


’ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்

.. ஜன்மம்இத்தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே - அன்றி

.. வேறு குலத்தின ராயினும் ஒன்றே’

என்றஎங்கள் பாரதியே!

 இன்றைய அரசியல்வாதிகளோ

ஜாதி-மதங்களைப் பார்ப்பார் ! - அதைச்

 சாற்றியே தேர்தலில் வெற்றியைச் சேர்ப்பார்!

நித்தம் மாறுவார் கட்சி! - அதில்

.. நேர்த்தியாய் செய்வார்புரட்சி!


பள்ளிச்சாலைகள் செய்வோம் என்றாயே பாரதி!

இன்று

கல்விச்சாலையிலெல்லாம் பணம் தான் ஆட்சி

.கையில்  காசிருந் தால்தான்  மனிதனுக்கு மாட்சி!


நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,


நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவதில்லையாம்

 என்றுபுதுமைப்பெண்களை நிலைநிறுத்தினாய்

ஆனால் பாரதி நீ

விருப்பியதுஒன்று

ஆனல் இன்றுநடப்பதே

சில இடங்களில்

வேறொன்று!

உடைகளில்மட்டும்

புதுமை செய்யும்

சிலபெண்களைக்கண்டால்

பொங்கி எழுந்திடுவாய்


எட்டயபுரத்து முண்டாசுக்கவிஞனே

நீ ஒருதீர்க்கதரிசி!

ஆன்மாவிலிருந்து

ஆகாயத்திற்கு விடியல்களை

வினியோகித்தவன்!

அதனால்தான் சிங்களத்தீவினுக்கு

பாலம்அமைக்கச்சொன்னாய்!

இன்று இலங்கைத்தீவின்

எம்இன மக்களுக்காய்

கண்ணீர் வடித்தபடி

மனத்தாலேயே ஒரு

துயரப்பாலம் கட்டிவருகிறோம்


ஒன்றுபட்டாலுண்டு வாழ்வே - நம்மில்


ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த

ஞானம் வந்தால் பின்நமக் கெது வேண்டும்"

என்று நீ பாடினாய்

ஞானம் இன்னும் வராததால்

ஆறுக்கும் நதிக்குமாய்

அடித்துக்கொள்கிறோம்

இங்கிதைக்கண்டால்

உன் கண்கள்தான் கடலாகும்.

 இன்றுசென்று விடு 

என்றாவது

அன்பினால் பாரதம்

ஒன்றாகி ஒற்றுமையாய்

வென்று உயரும்போது

மீண்டு(ம்)  வா பாரதி!
****************************

(டிசம்பர்11..மகாகவியின் பிறந்தநாளுக்கு கவிதை சமர்ப்பணம்)



மேலும் படிக்க... "பாரதி நீ இன்றிருந்தால்..?"

Thursday, December 08, 2011

அரங்கபவன்.(சிறுகதை)

நீண்ட நாளாய் ஓர் ஆசை. சொன்னால் சிரிப்பீர்கள். அதனாலேயே மனைவி, மகனிடமும் ’தெற்கு வாசல்’ வரை போய் வருகிறேன் என்று சொல்லிக் கிளம்பி வந்து விட்டேன். ஏனென்றால் நீங்களெல்லாம் என் ஆசை என்னவென்று கூறிச் சிரித்துவிட்டுப் போய் விடுவீர்கள். ஆனால், என் மனைவி ஆனந்தியும் மகன் பரத்தும் மானம் போய்விட்ட மாதிரி கூச்சல் போடுவார்கள்.




“உங்கப்பாக்கு  புத்தி கெட்டுப் போயிடுத்துடா பரத்! ஊர் சுத்திப் பாக்க வந்த இடத்தில் இவர் ஆசையைப் பாரேன். கர்மம், கர்மம்!’’ என்று கண்டிப்பாய் தன் ’டை’ அடித்த தலையில் ஓங்கி கையை வைத்து அடித்துக்கொள்வாள்

பரத், “டாட்! இட்ஸ் டூ மச். ஒரு ஸாப்ட்வேர் நிறுவனத்தில் பெரிய பதவியில இருக்கற எனக்கு, அப்பாவா லட்சணமா நடந்துக்குங்க, ப்ளீஸ்’ என்று அதட்டலுடன் கெஞ்சுவான்.




சாதாரணமாய் நான் பொய் சொல்பவனல்லன்.  இன்றைக்குத்தான் மனைவி, மகனிடம் ’பொய்’ சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டேன். என்ன செய்வது? சில நேரங்களில் ’உண்மை’யை ஒதுக்கத்தான் வேண்டியிருக்கிறது, சில நன்மைகளின் பொருட்டு.



மாம்பலத்திற்கு ரங்கநாதன் தெரு போல ஸ்ரீரங்கத்திற்கு தெற்கு வாசல், ஏறக்குறைய நூறு கடைகள் இருக்கலாம். நீண்ட தெரு. ராஜ கோபுரத்தின் வாயிலில் ஆரம்பமாகி, இடையில் இரண்டு நான்கு கால்மண்டபங்கள் இரண்டு கோபுரங்கள் என்று பெரிய கோயில் வாசலோடு தெரு முடிவடைந்துவிடும். அரை கிலோ மீட்டர் தான் மொத்தத் தெருவுமே. இதற்குத் ’தெற்கு வாசல்’ என்று பெயர்.  அப்போது இருந்ததற்கும் இப்போது இருப்பதற்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை.



சில கடைகள் மட்டுமே காலத்திற்கு ஏற்ற மாதிரி சற்றுக் கோலம் மாறி நாகரிகமாய்க் காட்சியளிக்கின்றன. மொட்டை கோபுரம், ராசக் கோபுரமானதும் ஊருக்கே மவுசு அதிகமாகித்தான்விட்டது. முன்பு ஜனத்திரள் இத்தனை இல்லை. தெற்கு வாசலில் கையை வீசிக்கொண்டு காலாற நடக்கலாம். சைக்கிள் ரிக்ஷாக்கள்தாம் இடித்துக்கொண்டு போகிற மாதிரி வரும். இப்போது நிறைய ஆட்டோக்களும் சொற்பக் கார்களும் வலம் வருகின்றன.



’சுந்தரா லஞ்சு ஹோம்’ என்ற ஹோட்டல் கோபுரத்தடியில் அந்த நாளில் புகழ் பெற்றது. நானும் பட்டாபியும் காலை நேரத்தில் இங்கு வந்து ஒரு காபி குடிக்காமல் போனதில்லை. இப்போதும் ஹோட்டல் அப்படியேதான் இருக்கிறது, பெயர் மட்டும் மாறிவிட்டது. வாசலில் பெரிய போர்டுவைத்திருக்கிறார்கள்.




’இட்லி, பொங்கல் – கொத்சு, பூரி – கிழங்கு டிபன் ரெடி!’



கொட்டை கொட்டையாய் சாக்பீஸினால் எழுதப்பட்ட எழுத்துகளே சாப்பிட்டு விட்டுப் போயேன் என்று சொல்கிற மாதிரி இருந்தது. எனக்கும் காலை நேரப் பசி வேளைதான். ஆனால், என் ஆசையை அல்லது பசியைத் தீர்த்துக்கொள்ள நான் சொல்ல வேண்டிய இடம் இதுவல்லவே?



சாலை நடுவே நாலுகால் மண்டபம் வருகிறது. அதன் மேல் சின்னதாய் கோபுரம். ஸ்ரீரங்கத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோபுரம். கால் தடுக்கிற பக்கமெல்லாம் வாய்க்கால்கள். ஆனால், வாய்க்கால்களெல்லாம் வறண்டு கிடப்பது தான் வேதனையாயிருக்கிறது.



காவிரியில் கூட நீரைக் காணோம். டவுனிலிருந்து பேருந்தில் வருகிற போது பாலத்தடியில் நூலாய் ஓடிக் கொண்டிருந்தது நீர். அதிலும் நாலு பேர் குளித்து, துணி துவைத்துக்கொண்டிருந்தார்கள்.



கல்லூரி நாள்களில் ஸ்ரீரங்கத்திலிருந்து டவுனுக்குப் பயணிகள் ரயிலில் வரும்போது ஆடி மாதம் பெருக்கெடுத்தோடும் காவிரியாற்றில், ரயில் பெட்டியிலிருந்து ஒரு முறை தாவிக் குவித்த அனுபவத்தை நினைத்துக்கொள்கிறேன். என் வீர தீர சாகசத்தை பெண்கள் பெட்டி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி ரசித்ததாய் பின்ன்ர் உத்தரவீதி  ஜலஜா சொன்னபோது உச்சி குளிர்ந்து போயிற்று.





ஜலஜா இப்போது எங்கிருக்கிறாளோ? . அந்த நாளில் அவளிடம் ஓர் ஈர்ப்பு இருந்தது வாஸ்தவம். அவளுக்கும் இருந்தது என்பதை அந்த ஓரக்கண் பார்வையும் வெட்கச் சிரிப்பும் தெரிவித்திருக்கின்றன. ஒரே ஊர், ஒரே தெருவாக இருந்தாலும் அந்த நாளில் எல்லாம் வயதுப் பையன்கள், வயசுப் பெண்களிடம் லேசில் பேசி விட முடியாது. கதை கட்டி விடுவார்கள்.



வைகுண்ட ஏகாதசி கூட்ட நெரிசலில் கோயிலில் என் அருகிலேயே வந்து நிற்க வேண்டி வந்த போது, ஜலஜா மெல்ல என் கை விரல்களை அழுத்தி, “ரங்காச்சு உனக்கு இந்த ஸ்கை ப்ளூ ஷர்ட் நன்னாருக்குடா’’ என்ற போது அந்தக் கணமே அவளை எங்காவது கடத்திக்கொண்டு போகலாம் போல இருந்தது. இப்போதைய நாள்கள் மாதிரி செல்போனா… ஒன்றா, அப்போதெல்லாம் காதல் நெஞ்சங்கள் மனம் விட்டுப் பேசிக்கொள்ள?



இதுபோல எத்தனையோ காதல் விதைகள் உள்ளே பூமியோடேயே அழுந்திப் போனதுண்டு! விருட்சமானவற்றை விரல் விட்டு எண்ணி விடலாம்.



ஆனால், தெற்கு வாசல் தெருவில் எங்காவது நரைத்த தலையும், தடித்த மூக்குக் கண்ணாடியுமாய் இடுப்பு பெருத்த ஜலஜா சிக்கமாட்டாளா என்று பார்வை அலைவதைத் தடுக்க முடியவில்லை. என்னை மாதிரி அவளும் ஊர் ஞாபகத்தில் இங்கு வரக்கூடாதா என்ன?



முப்பது வருஷமாச்சு, ஊரை விட்டு வெளியே போய், முதலில் டெல்லி, பிறகு மும்பை, கடைசியில் இப்போது பெங்களூர் வாசம். ஆனந்தியின் ஆணைப்படி ரிடையர் ஆன பணத்தில் பெங்களூரு புறநகர்ப்பகுதியில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் வாங்கி குடி போயாகிவிட்டது.



பரத்திற்கு மகாத்மா காந்தி சாலையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணி. பெங்களூரு டிராபிக் ஜாமில் தன் கார் அடிக்கடி மாட்டிக்கொள்வதாக பரத் அன்றாடம் வந்து புலம்புவான். இப்போது சேர்ந்தாற்போல் நாலு நாள் லீவு கிடைக்கவும் ஆனந்தியின் அரை மனச் சம்மதத்திற்குப் பிறகு திருச்சி டூர் போடப்பட்டது. இன்று விடியற்காலை டவுனில் இறங்கி, பிரபல ஹோட்டல் ஒன்றில் அறையெடுத்தாயிற்று.



ஏழு மணிக்கெல்லாம் நான் டவுனில் ஒன்றாம் எண் பேருந்தைப் பிடித்து ஸ்ரீரங்கத்துக்கு வந்துவிட்டேன்.



இதோ இன்னும் ஐந்து நிமிடத்தில் நான் ஆசைப்பட்ட இடத்திற்குப் போய்விடலாம். அதற்குள் பழைய நண்பர்கள் கிச்சு, ரங்கமணி, பட்டாபி, வேணு என்று யாராவது ஒருவராவது கிடைக்க மாட்டார்களா என மனம் ஏங்கியது. முப்பது வருஷத்தில் அவர்கள் எத்தனை முறை ஸ்ரீரங்கம் வந்தார்களோ, நான்தான் பல முறைகள் இங்கு வர முயன்றும் தட்டிப் போய்விட்டது.



முதலில் கோயில் போய் ரங்க தரிசனம் முடித்து வரலாமா? அதற்குள் நான் போக வேண்டிய இடத்தில் பூட்டுப் போட்டுவிட்டால்…?



பெருமாள் ஒன்றும் நினைத்துக்கொள்ள மாட்டார். அவரிடம் என் ஆசை நினைவுகளோடு போய் அசிங்கமாய் நிற்பதைவிட, அதைத் தீர்த்துக்கொண்டு செல்வதே உத்தமம்.



பாத்திரக் கடைகள், மளிகைக் கடைகள், நாட்டு மருந்துக் கடைகள், இனிப்புக் கடைகள், ஜவுளிக் கடைகளைக் கடந்து, பாதாள கிருஷ்ணன் கோயிலையும் தாண்டி விட்டேன். பூத்தட்டு (ரங்கநாதர்கோயிலில் தேங்காய் உடைக்கமாட்டார்கள்.பள்ளிகொண்டபெருமானின் உரக்கம் கலைந்துவிடும் என்று) விற்கும் கடையில் கீழ்த்தட்டில் நாலடிக்கு நாலடியில் கம்பிக்கூண்டு ஒன்று இருக்கும் அதில் புனுகுப்பூனை ஒன்று கேட் வாக் செய்தபடி இருக்கும், இப்போது அதைக்காணவில்லை.

கடைக்கு வலப்புறமாயிருக்கிற அந்த இடத்திற்கு வந்தேன்.



நல்லவேளை அந்த இடம் மாறவில்லை. தெற்கு வாசலின் பரபரப்பான சூழ்நிலையில் அமைதியான அந்த இடம் ரொம்பப் பெரியதில்லை; சிறு வீடு போலத்தான் இருக்கும்.



வாசலில் சோகையாய் ஒரு பலகை. அதில் ’அரங்க பவன்’ என்று எழுதியிருக்கும். உற்றுப் பார்த்தாலே தவிர, அந்தப் பெயர்ப் பலகை பலர் பார்வைக்குத் தெரிய வராது.



இப்போதும் அதே பலகைதான். இன்னமும் மரம் உளுத்துப் போய் எந்நேரமும் உடைந்து விழத் தயாராய் இருக்கிறது. அழுக்குத் தரையில் மிதியடியாக ஒரு கோணிப்பை.



செருப்பைக் கழற்றிவிட்டு பாதம் தட்டி உள்ளே நுழைந்தால் வராண்டாவில் சிறு மேஜையும் நாற்காலியும், மேஜையின் இழுப்பறைதான் கல்லாப்பெட்டி. இப்போதும் அதை மேஜை, அதே நாற்காலி! மேஜை மீது கண்ணாடிச் சட்டத்திற்குள் ரத்ன அங்கியில் ரங்கநாதர். ஊதுபத்திப் புகை, பருவப் பெண்ணாய் நெளிந்து போய்க் கொண்டிருந்தது. கல்லாப் பெட்டியைத் திறந்தபடி நாற்காலியில்…



நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரைக் கண்டதும் என் விழிகள் திகைப்பில் விரிந்தன.



வாய் குதூகலமாய் கூச்சலிட்டது… “பாண்டு மாமா!’’



நரைத்த தாடியை நீவிவிட்டபடி கண்ணை இடுக்கிக்கொண்டு நிமிர்ந்தார் பாண்டுரங்கன். அந்த அரங்க பவன் ஹோட்டலின் உரிமையாளர். இப்போது பாண்டு மாமாவுக்கு எழுபது வயதிருக்குமா? இருக்கும்… இருக்கும். என்னை நினைவிருக்கிறதோ, இல்லையோ?



“மாமா! நான்தான் ரங்காச்சூ! வடக்குச் சித்திரை வீதி ஆராவமுதன் பையன். சின்ன வயசிலேந்து என் இருபத்தி ஒன்பதாவது வயசு வரை தினம் உங்க ஹோட்டலில்தான் ரவா தோசை சாப்பிட வருவேன். உங்காத்து மாமிகூட என்னை ’ரவா தோசை ரங்காச்சு’ன்னு செல்லமாக் கூப்பிடுவாளே…?’’



“அப்படியா! நேக்கு நெனவில்லை. யாராரோ வரா…. போறா… வயசு வேற ஆறது…. ஒண்ணும் நெனவுல இருக்கறதில்ல…’’



“முப்பது வருஷம் கழிச்சு உங்க ஹோட்டல் ரவா தொசையை சாப்பிட வந்திருக்கேன், மாமா!’’



“ஓஹோ?’’



பாண்டு மாமாவின் சுபாவம் இதுதான். ’வந்தா வா, போனாப் போ’தான். மாமா மாறவே இல்லை.



ஹோட்டலுக்குள் போனேன். ஒரே இருட்டுக் கூடம். அதே இருபத்தி ஐந்து வாட்ஸ் பல்புதான். இன்றைக்கும். ஒரு ட்யூப் லைட் போட மாட்டாரோ? அந்தச் சின்னக் கூடத்தில் முன்பு இருந்த மாதிரி அதே ஆஸ்பத்திரி பெஞ்சும், அதையொட்டிய நீள மர மேஜையும்.



கூடத்தைத் தாண்டினால் சமையற்கட்டு. முன்பு அங்கு ஒரே புகை மண்டலமாய்த் தெரியும். இப்போது அது இல்லை. காஸ் அடுப்பு வைத்துக்கொண்டு விட்டார்கள் போலும்.



நல்ல வேளை, இல்லாவிட்டால் புகையில் மாமிதான் வெந்து நொந்து போயிருப்பாள்.



ஆமாம், எங்கே மாமியைக் காணோம் என நினைக்கும்போதே ’லொக் லொக்’ என்ற இருமல் சப்தம் கேட்டது.



மடிசார் புடவையுடன் மாமி எதிரே வந்துவிட்டாள்.



“மா… மாமீ? நான் ரங்காச்சு வந்திருக்கேன். ரவா தோசை ரங்காச்சுன்னு சொல்வேளே… ஞாயகமிருக்கா?’’ என்றேன் ஆர்வமாய்.



மாமி தனது தேசல் உடம்பை லேசாய் நிமிர்த்தி சின்ன சிரிப்புடன், “வாப்பா… ஊரையே மறந்து போய்ட்டியா, இப்பதான் வரே… நன்னாயிருக்கியா?’’ என்று கேட்டாள்.



“உங்க ஆசீர்வாதம் மாமி ஷேமமா இருக்கேன். நீங்க எப்படி இருக்கேள்? உங்க பொண்ணு செஞ்சி லட்சுமிக்கு கல்யாணம் ஆகி  அவ இப்ப பாட்டிகூட ஆகியிருப்பாளே?  சின்னவ ஸ்ரீவரமங்கை எங்கே இருக்கா? உங்க கடைசிப் பையன் தேசிகன் எங்கே வேலை பார்க்கறான்?’’



அடுக்கடுக்காய் நான் கேட்ட கேள்விகளுக்கு மௌனமே பதிலாக வந்தது.



“மா… மீ?’’



“ஒண்ணும் சொல்றாப்படி இல்லே ரங்காச்சு. மாமா பிடிவாதம் அப்படியே இருக்கு. அவர் மாறினாத்தான் எங்க வாழ்க்கை மாறும். ஸ்ரீரங்கத்துல இப்போ இந்த இடம் கொள்ளை விலை போகும். இதை வித்திருந்தா செஞ்சிய யாருக்காவது ரெண்டாம் தாரமா கொடுத்திருக்கலாம். ஸ்ரீவரமங்கையை ஒரு டிகிரி படிக்க வச்சு நல்ல உத்தியோகத்துக்கு அனுப்பியிருக்லாம். தேசிக்கு என்ஜினீயரிங் படிப்புக்கு உதவியிருக்கலாம். ஒண்ணும் பண்ணல. அதனால எல்லாரும் அப்படியே இருக்கோம்’’ என்று மாமி விரக்தியாய் முடித்த போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.



“ஸாருக்கு என்ன வேணும்? பொங்கல், இட்லி, ரவா, தோசை?’’ கேட்டபடி மடித்துக் கட்டிய வேட்டியும், மார்பில் காசித் துண்டுமாய் வந்த இளைஞனிடம்…



“தேசீ! ரவா தோசை இரண்டு மொறு மொறுன்னு வார்த்துடுடா… ரங்காச்சு அதுக்குத்தான் நம்ம ஹோட்டலுக்கு வந்திருக்கான்… தப்பு தப்பு…. வந்திருக்கார்… நான் அசடு மாதிரி அன்னித்து ரங்காச்சு மாதிரியே பேசறேன்’’ என்று கைகளைப் பிசைந்தாள் மாமி.



“மாமி! நான் என்னிக்கும் ஒரே ரங்காச்சுதான் மாமி இல்லேன்னா டவுன்லேந்து இங்கே ஓடி வருவேனா, உங்க கையால ரவா தோசை சாப்பிட?’’



வாழை இலை விரித்து; தோசை போடப்பட்டது. தொட்டுக்கொள்ள கெட்டிச் சட்னி. கடப்பா.



இரண்டு தோசை சாப்பிட்டதும் வயிறு நிரம்பிவிட்டது.



“பொங்கல், இட்லி சாப்பிடலயா?’’



“வேண்டாம் மாமி…. ரொம்பிடுத்து வயிறு…’’



“காப்பி?’’



“சரி.. அரை லோட்டா சாப்பிடறேன். இப்பல்லாம் அதிகம் காபி சாப்பிடறதேயில்லை. அதான்…’’



எல்லாம் சேர்த்து பில் ஏழு ரூபாய் வந்தது.



“ஏழு ரூபாயா? ஏழே ரூபாயா மாமி? தப்பா கொடுத்துட்டேளா?’’



“இல்லையே… ஒரு தோசை மூணு ரூபா. காபி ஒரு ரூபா.’’



“இந்தக் காலத்திலும் இப்படியா வியாபாரம் இங்கே? ஸ்டார் ஹோட்டல்ல இது எழுபது ரூபா மாமி!’’



“இது அதே சாதா ஹோட்டல் தானப்பா. நாங்களும் அதே சாதாரண மனுஷாள்..’’



“மாமி சாதாரணமாயிருப்பது சாமான்யக் காரியமில்லை. ஊர் உலகம் மாறினாலும் மாறாத உங்க கொள்கை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கே. என் ஆசையும் பூர்த்தியாச்சு. நான் வரட்டுமா?’’



கையலம்பி விட்டு, பாண்டு மாமாவின் கல்லாப் பெட்டிக்கு வந்து பில்லோடு ஐந்நூறு ரூபாய் நோட்டை வைத்தேன்.



மாமா நோட்டை முகத்துக்கு நேராய் விரலால் தட்டிப் பார்த்துவிட்டு, “ஐந்நூறு ரூபா நோட்டா? சில்லறை இல்லே… சில்லறையா கொடு’’ என்றார்.



“இல்ல மாமா சில்லறை. எல்லாமே ஐந்நூறு ரூபாய் நோட்டா இருக்கே…’’ – பர்ஸைப் பிரித்தபடி சொன்னேன்.



“எனக்குத் தெரியாது. சில்லறையாத் தந்துட்டு வெளில போ…’’ அழுத்தமாய் பாண்டு மாமா சொல்லவும், உள்ளிருந்து மாமி, “ஏழு ரூபா தானே? விடுங்கோ. நம்ம ஊர்ப் பையன்’’ என்றாள், தயங்கிய குரலில்.



“எந்த ஊர்ப் பையனா இருந்தா எனக்கென்னடி? ஏழு ரூபாயை வச்சுட்டு அந்தண்டை போகச் சொல்லு.’’ .



நான் சட்டென, “மாமா! ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை மீதம் இல்லேன்னா பரவால்ல.. நீங்களே வச்சுக்கோங்க…’’ என்றேன், இந்த சாக்கில் அவர் குடும்பத்திற்கு உதவலாமென நினைத்து.



அவ்வளவுதான் பாண்டு மாமா ஓர் உஷ்ணப் பார்வையுடன் நோட்டை வீசி என் மீது எறிந்துவிட்டு…“உள்ளே மாமி புலம்பினாளாக்கும்? உதவ வந்துட்டியா இப்போ? ஒண்ணும் தேவையில்லே. ஏழு ரூபாயைக் கொண்டு வச்சிட்டுப் போய்ச் சேரு…’’ என்றார் உரத்த குரலில்.



“சரி மாமா… பக்கத்துக் கடைல மாத்திண்டு வந்து தரேன்…’’ என்று வெளியே வருகிறேன்.



’சுள்’ என்று வெயில் முகத்தில் அடிக்கிறது.



நிமிர்த்து வானத்தைப் பார்த்த போது சூரியனாக பாண்டுரங்க மாமா தெரிந்தார்.
**********************************************************************************


http://www.youtube.com/watch?feature=endscreen&v=nCk3swsgV7c&NR=1

இந்த சுட்டியில்  ஸ்ரீரங்கம் காட்சிகள் சில இருக்கின்றன!



பின்குறிப்பு..


2008ம்வருஷம் இலக்கியபீடம் பத்திரிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.


மேலும் படிக்க... "அரங்கபவன்.(சிறுகதை)"

Saturday, December 03, 2011

நடை உடை பாவனை!

அனிதா வீடுவந்தபோது அவள் அப்பாபெரியசாமி ஆடவர்மலர் பத்திரிகையில் ஆழ்ந்திருந்தார்.


“டாட்! இந்த 2020வருஷத்திலும் கையில் வச்சிட்டு புக் படிக்கிற பழக்கத்தை விடலையா நீங்க? அதான் உங்க வாட்ச்லயே 2011ன் ஆப்பிள் மறைந்து  தமிழ்ப்பெண் ஆ.ரஞ்சனா என்பவர் கண்டுபிடிச்ச  ஆரஞ்ச் இருக்குதே அதுலபடிக்கவேண்டியதுதானே?” என்றாள், தனது பேனாபோன்ற ஒரு சாதனத்தைத் திறந்து அதில் ஃபேஸ்(புக்)பார்த்தபடி.



“என்னதான் சொல்லும்மா புஸ்தகம்னா நாங்க அந்த நாள்ள குமுதம் விகடன்லாம் கைல எடுத்துவச்சிட்டு ஆழ்ந்து படிக்கிற சுகம் இருக்கே அதுக்கு ஈடு ஆகாதுஅனிதா…” என்று ஆரம்பித்தவரைக் குறுக்கிட்டாள் அனி.



‘கால் மீ ‘அனி’ டாட்! நான் இதை முதல்லயே இந்தக்கதையை எழுதப்போகும் ஷை(லஜா ஆண்ட்டி)கிட்டயும் சொல்லி எச்சரிச்சிட்டேன்…இந்த 2020ல அ, னி , தா ன்னு இவ்ளோ பெரிய பெயரை யாராலும் கூப்பிடமுடியாதுன்னுதான் நான் அனி ன்னு மாத்திக்கிட்டேன்..இன்ஃபாக்ட் இருபத்தி ரண்டு வருஷம் முன்னாடி எனக்கு நீங்க உங்க மாம் பெயரான அபிதகுசலாம்பரி என்கிற பெயர் வைக்க நினச்சிங்களாமே?அம்மாதான் பிடிவாதமா அனிதான்னு வச்சதா கேள்விப்பட்டேன்.ரெடிகுலஸ் என்ன இதெல்லாம்? அந்தகாலம் மாதிரியே பெண் அடிமைகளா இருப்பாங்கன்னு நினச்சீங்களா?”



மகள் போட்ட போட்டில் பெரியசாமி பேசாத சாமியாகி விட்டார்.ஆடவர்மலரில் ‘என் சோகக்கதையக்கேளு ஆண்குலமே ‘என்ற தலைப்பில் ஏகப்பட்ட ஆண்கள் கண்ணீர்வடித்து எழுதிய கதைகளைப்படிக்க முடியாமல் போனதில் தானும்கண்ணீர்வடித்தார்.
ஆரஞ்சில் டமில் ஸ்மெல்  (தமிழ்மணம்)  முகர அமர்ந்தார்.மனம் அதிலும் லயிக்கவில்லை

தனக்குதிருமணம் ஆகும் முன்பு எப்படி இருந்தோம் என நினைத்துப்பார்க்க ஆரம்பித்தார்…

அசைபோடும் பழைய நினைவுகளேஅவரது தனிமைக்குத் துணை.



லஞ்ச் டாட் காமில் மதிய உணவுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு டிவியை ஆன் செய்தார்…



ஏன்ஷியட் நெட் ஒர்க்ஸ் சானலில் பனிக்கால உடையில்உடல் முழுக்க மூடி இருந்த  நடிகர்தனுஷ்  கடும்கோடைகால உடையிலிருந்த   ஸ்ருதிஹாசனை நினைத்துப்பாடிக்கொண்டிருந்தார்.

ஒய் திஸ் கொலைவெறிடி?



சட்டெனத்திரும்பின அனிதா டிவியைப்பார்த்து அலறினாள்.



“ஓ மை காட்!  டிவில ஏன் இப்படி பழையபடமாவே வைக்கிறாங்க? டாட் இதெல்லாம் உங்ககாலப் படம்!நீங்கதான் பாக்கணும்! நான் பப்க்குப்போகப்போறேன் ..மாம் வந்தா பிஸ்ஸாஅல்லது ஸ்பெக்கடி சமைச்சிவைங்கஇல்லேன்னா ஹாங்காங் நுடுல்ஸ் செய்யுங்க… மாம்ஸுக்கு அதான் பிடிக்கும்…. ஆமா எங்கபோனான் என் அருமைத்தம்பி டாம்?”



“தாமோதரனா? என்னம்மா அவன்பெயரையும் இப்படி சுருக்கிட்டே? எங்கப்பா நினைவாய் வச்சபேரு.. இப்போ அவன் டென்த் க்ரேட் ஆச்சேம்மா சின்சியரா படிக்க ப்ரண்ட்வீடுபோனான்”


‘வாட் ?மணி ராத்திரி பத்தாகுது இன்னும் டாம் வீடுவரலையா? என்ன டாட் நீங்க பொறுப்பே இல்லாம இருக்கீங்க? ஒரு வயசுப்பையன் இருட்டி இவ்வளோநேரம் வெளில இருக்கான்னு கவலையே இல்லையா? மம்மி ஆபீஸ்போய் உழைப்பாங்களா இல்ல டாம் பத்தி கவலப்படுவாங்களா? நீங்க இப்படி ஆடவர் மலர்புக்படிச்சிட்டு ஆணீயம் பேசிக்கிட்டு இருக்கறது நல்லாவே இல்ல… நைட் மம்மி வந்ததும் உங்களுக்கு நல்ல டோஸ் இருக்கு….சரி நான் கிளம்பறேன், பப்ல ஜீ(வா), ஜா(னி) ஜோ(தி) ரி(ஷி) எல்லாம் வெயிட் செய்துட்டு இருப்பாங்க..பை டாட்’



அனி அந்த சொகுசுக் காரில் ஏறி உட்கார்ந்து ரிமொட்டை எடுத்துக்கொண்டாள்.. நகரப் போக்குவரத்து சந்தடி ரிமோட்டை ஆஃப்செய்யவைத்தது.



.”ச்சேசே ப்ளடி ட் ராஃபிக்…..” என்று அவளே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.



கார்கணிணித்திரையில் தர்ம் சிரித்தான்… “ ஹாய் ஹண்ட் சம்!மை ப்ரின்ஸ்! என்றைக்காவது நீ என்னை ஏறெடுத்துப்பார்த்து ஐலவ்யூ சொல்லத்தான் போறேடா? என்கிட்ட என்ன இல்ல,…பழைய நடிகை  அனுஷ்கா  மாதிரி இருக்கேன்னு நீயே ஒருவாட்டி சொல்லி இருக்கே! ஐஞ்சடி அஞ்சங்குல உயரமும் இந்த ரோஜாப்பூநிறமும், கடைஞ்சிஎடுத்த தேகமும் எல்லா காளைகளையும் மயக்கும்போது நீ மட்டும் என்னடா விஸ்வாமித்ர தபஸ் செய்றே? நான் மேனகையா மாறணும்னு நீ எதிர்பார்த்தா ஐயாம் ரெடி யார்!”



திரை நோக்கி பறக்கும் முத்தமிட்டாள்.



அனி யின் புத்தபுது ஜப்பானிய டொகொமோ மாடல்

7 ஜிசெல்போன் திரையில் ஜோ(தி) வந்தாள்.



“வாட்ஸ் அப் டீ?”



“ஹேய் அனி…உன் ஆளு , இங்க மர்லின் மால் வந்திருக்கான்..அவன் காரை நான் பார்த்திட்டேன்....அன்பேசிவம்னு காரின் பின் கண்ணாடில கொட்டையா எழுதி இருக்கு, கார் ஜன்னல்ல  பட்டை பட்டையா விப்பூதிதான் அடிக்கல..சாட்சாத் அவனேதான்..'


"ரியலி?'

”யெப் உடனே இங்க வா அனி"



*********************************



மர்லின்மாலுக்குள் அனி நுழையும்போது மெக்டொனால்ட்ஸ் வாசலில் ஆனியன் ரிங்சுடன் வந்து வழிமறித்தான் வா(சன்).



சிந்தெடிக் இழைகள்மின்னும் உடையுடன் தெரிந்தான் சராசரிக்கும் அதிகமான உயரம் ஆனால் ஆண்மையின் கம்பிரம் அதில் அதிகமாகவே இருந்தது.முகவெட்டில் பழைய நடிகர்சிம்பு. சிரிப்பில் பழம்பெரும் நடிகர் விஜய்,துறுதுறுப்பில் பழையசூர்யா மொத்தத்தில் 2020ன் புதுமுகம் சாகர் போல அட்டகாசமாய் இருந்தான்.



“ ஹேய் அனி உனக்காகவே நான் வாழ்கிறேன்” என்றான் போதையான குரலில்.



“முதல்ல வழிவிடு…நான் அர்ஜண்டா போகணும்”



“அனி மை ஹனி!மை ப்ரெட்டி கேர்ல்! என் இனிய அழகுதேவதையே…!எவ்வளவு காலம் ஆனா என்ன தமிழ்ப்பெண்களுக்கு என்றுமே தனி அழகுதான்.உன் நினைவில் தான் நான் இருக்கேன் !அனி !இன்னும் நான் யார்கூடவும் டேட்டிங் வச்சிக்கல… பிகாஸ் உன்கூடத்தான் வாழணும்னுதான்..அனி!நான் டேட்டிங் கேட்டால் உடனே ஓடி வர ஆயிரம் பேர் இருக்காங்க ஆனா எனக்கு அவங்க வேண்டாம்.லுக் அனி ! நான் நாலுகோடி(டாலர்) சொத்துக்கு ஒரே வாரிசு.என்னை ஏன் நீ கல்யாணம்செய்துக்கக்கூடாது?”



“ஹலோ ஹலோ கொஞ்சம் அடங்கு….நான் தான் தர்மை லவ்பண்றேன்னு உனக்கு தெரியுமில்ல?”



“அதனால் என்ன அனி~ இ து  2020… அவனைக் காதலிச்சிக்கோ.. என்கூட டேட்டிங் வச்சிக்கயேன்..”



“வா! நான் மாடர்ன் கேர்ல்தான்… ஆனா உண்மையான காதலை மதிக்கிறவள். இன்னிக்கு விஞ்ஞானம் அசுரவேகத்துல வளர்ந்து மனித உறவுகளை சீரழிச்சிட்டிருக்கு… ஆண் பெண் இணைப்பை பயாலஜிகல் ஈவெண்ட்டா பாக்றாங்க ஆனா நான் மனசோட சம்பந்தப்படுத்திப் பாக்றேன் எனக்கு ட்ரூ லவ் தான் பெருசு என்னால் உன்மனசு கெட்டுருந்தா ஸாரி..குட்பை”



வாசனை ஒருவழியாய் கழற்றிவிட்டு ஜோதியை   ஐபோனில் கூகுளில் சர்ச்சில் போட்டு தேடினாள்.  அவள் அப்போதுதான் ரெஸ்ட்ரூமிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தாள்.



“ஜோ! நான் 'டாய்ஸ் ஆர் அஸ்' கடைவாசலில் நிக்கறேன்” தகவல் கொடுத்தாள்



“யா யா…என் செல்லுல நானும் உன்னைப்பார்த்துட்டேன்.. அங்க வரேன் இரு”



ஜோ வந்ததும்

“அனீ….இந்த காம்ப்லெக்சில் தர்ம் இருகிற இட ம் சின்னகோயில் .அதுக்கு கார்லதான் போகணும்டி ..24வது மாடி”என்றாள்.



”கூகுளில் கோயிலைத்தேடினியா?”



“தேடி அங்க அ வ னைப் பார்த்தும் ஆச்சி… வா போகலாம்”



ஹைட்ரஜன் திரவஎஞ்சினை இருதயப்பகுதியில் தாங்கி இருந்த அந்த அதிநவீன சொகுசுக்கார் வேகமாக மேல் தளம் ஏறியது. பார்க்கிங் ஸ்லாட்டில் காரை செருகிவிட்டு இருவரும் மூச்சிறைக்க வந்தார்கள்,



அங்கே இருந்த சின்ன பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து நெற்றியில் விபூதிப்பட்டை,இடுப்பில் பட்டு வேஷ்டியுடன் பாலும்தெளிதேனும் தருவதாகவும் பதிலுக்கு சங்கத்தமிழ் மூன்றும் தரும்படியும் மெய்மறந்து பி்ள்ளையாரிடம் கேட்டுக்கொண்டிருந்தான் தர்ம்.



“ஹாய் தர்ம்?”



யார் இந்த கணபதி பூஜையில் கரடி என அதிர்ந்து நிமிர்ந்தான் தர்ம்.



அனிஅவன் அருகில் சென்றாள்..

அப்போதுஜோ  சின்னதாய் விசில் அடித்தாள். ’மச்சி(னி) நான் ஜூட் விட்டுக்கறேன். மாப்பிள்ளையை அமுக்கிடு’  என்று கூறி  நகர்நதாள்.



“தர்ம்  ஐ லவ் யூ.. நம்ம கல்யாணம் எப்போன்னு சொல்லேன் ப்ளீஸ்?” அனாவசியமாய் சுற்றி வளைக்காமல் நேராய் கேட்டுவிட்டாள்.



“லுக் மிஸ் அனிதா…எனக்கு இந்தக்கண்டதும்காதலில் நம்பிகை இல்ல…உன் பார்வைல நான் முப்பதுவருஷம் முன்னாடி இருந்திருக்கவேண்டிய மனுஷன் தான்..அப்படியே இருக்கட்டும்…என்னால உங்க மாடர்ன் லைஃபுக்கு ஈடுகொடுக்கமுடியாது…இதை பலதடவை சொல்லியும் இப்படி நான் எங்கே போனலும் தொடர்ந்து வந்து இப்படிக் கேட்டுதொல்லை பண்றீங்களே?”



“தர்ம் .நீ இல்லாம என்னால் வாழவே முடியாது உன் உருவம் என்மனசிலயே பதிஞ்சிருக்கு அங்க வேற யார்க்கும் இடம்இல்லை”



“இந்த வசனமெல்லாம் பழைய தமிழ்சினிமாக்கு லாயக்கு… என்னைவிடு தாயே !நான்போறேன் “



பட்டு வேஷ்டிதடுக்கத் தடுக்க எழுந்த தர்ம் வேகமாய் எஸ்கலேட்டரில் இறங்கி ஓடி பேஸ்மெண்ட்டிலிருந்து காரில் ஏறிக் கொண்டான்.



அனிதா திகைப்புடன் அப்படியே நின்றவள் தன் செல்போனில் அவன்கார்போகும்பாதையை கவனித்தாள்.



கார் ஜெய்நகர் பகுதியில் பத்மஜா வீட்டுவாசலில் நிற்கவும் அதிர்ந்தாள்



“வாட் த ஹெல் இவன் கார்போய் அவ வீட்ல நிக்குது?’



பத்மஜா மௌண்ட்கார்மல் கல்லூரியில் அனியுடன் படித்தவள்.பக்கா பட்டிக்காடு. பாவாடை தாவணி என்று அணிந்து பாவயாமி ரகுராமம் பாடிக்கொண்டிருப்பாள். தன் பெயரை யாராவது பத்து என்று அழைத்தால்,"அபசாரம் ...சுவாமிக்கு ஆகாது" என்று புலம்புவாள்.

அவள்வீட்டிற்கு தர்ம் ஏன் போகிறான்?



அடுத்த பத்தாவது நிமிடம் அனி ,தர்ம் முன் ப்ரசன்னமானாள்.

“தர்ம் திஸ் ஈஸ் டூ மச் .இந்த bad m a ja க்காகவா என்காதலை நீ நிராகரிச்சே ?இவ என்னைவிட எதில உ சத்தி ? பலூன் மாதிரி இருக்கா இந்த பேட்மஜா?”



“பத்மஜா என்றால் பத்மமான தாமரையில் அமர்ந்திருக்கும் திருமகள்.என்று பெயர் .உனக்கு செம்மொழி தமிழும் சரியா தெரியாது தேவமொழி சம்ஸ்க்ருதமும் புரியாது…நுனிநாக்குல ஆங்கிலம் பேசும் நவநாகரீக மங்கை நீ!” தர்ம் சீண்டினான்.



“ ஏய், பேட்மஜா! என் ஆளுடிஅவன் விடு அவனை” என பத்மஜாவை பிடித்துத்தள்ளினாள் அனிதா.



“ மிஸ் அனிதா இதப்பாருங்க….நான்பொறுமையான ஆண்பிள்ளைதான் ஆனா என் காதலிமேல யார் கைவச்சாலும் வெட்டிடுவேன் ஆம்மா?”



தர்ம் உறுமவும் அனிதா அவமானத்தில் முகம் சிவக்க வீடுவந்தாள்.



ஆனால் மறுநாளே ஒரு விபரீதமுடிவெடுத்தாள்.

***************************************************



டிசம்பர்மாதத்திய பனிப்புகை, சாலையில் பரந்து சூழ்ந்திருக்க

அந்த நடுநிசியில் அனி, காரில் ஏறி புறநகர்ப்பகுதியில் இருந்த அந்த மேலைநாட்டுவாசனை கொண்ட காலனிக்குள் காரை செலுத்தினாள் தர்ம் வீட்டுவாசலில் காரை ஓசைப்படாமல் நிறுத்தினாள்.



மெல்ல காம்பவுண்டுக்குள் குதித்தாள்.



நல்ல வேளை வள்கம் சொல்லும் நாய்கள் ஏதுமில்லை



மெல்லிய கான்வாஸ் ஒலியோடு இருபக்கமும் கண்களைத் துழாவினாள், ஹாலின் ஜன்னல் வெண்டிலேட்டரின் கண்ணாடிகளை ஓசையின்றி அகற்றினாள்



மெல்ல உள்ளே உடலை நுழைத்து வளைந்து இறங்கினாள்.



ட்ராயிங் ஹால் ரீடிங் ஹால் அடுத்து வீடு நடுவில் தெரிந்த மாடிக்குச்செல்லும் படிகளில் ஏறி சன்ன நீல நிற வெளிச்சம் தெரிந்த பெட்ரூமுக்குள் போனாள். அங்கு கட்டிலில் கழுத்துவரை கம்ஃபர்ட்டரைப் போர்த்திக்கொண்டு தர்ம் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தான்.



அனி அவன் அருகில்வந்து நின்றாள்.



“ஹேய் ஹாண்ட்சம் .தூக்கத்திலயும் நீ அழகுடா செல்லம்!இந்த அழகு எனக்குக்கிடையாதா?அப்படி என்றால் அந்த பேட்மஜாக்கும் கிடைக்கக் கூடாது ,, காதலுக்காக கொலையும் செய்வா அனிதா.,ஆமா.. ஒழி நீ செத்துப்போ உனக்கு என்கையால்தான் முடிவு”

குனிந்து பலத்தையெல்லாம்திரட்டி கைகளை அவன்கழுத்தில் வைக்கும்போது அவள் கழுத்தை ஒரு வலியகரம் சட்டெனப் பற்றியது



“அவுட்ச்!” சன்னமாய் கூவியபடி திரும்பினாள்.



அவளைஅப்படியே ஓசைப்படாமல் வரும்படி ஜாடைகாட்டி அடுத்த அறைக்கு இழுத்துப்போன உருவம் அங்கு லைட்போட்டது .



வெளிச்சதில் அனிபார்த்தாள். அது ஒரு பெண். ஜீன்ஸும் டிஷர்ட்டும் அணிந்து நரைத்தபாப்தலைக்கு கணிசமாய் டை அடித்திருந்தாள்.வயது அறுபதுகளில் இருக்கலாம்.

பெரியசாமி அந்த நாளில் தான் மிகவும் சிலாகித்துரசித்ததாய் சொன்னதால் அனிதா ’நெய்ல்டாப்’பில் கஷ்டப்பட்டுப்பார்த்த ஏய் படத்து நடிகை நமீதாபோலவும் கணிசமாய்த் தெரிந்தாள்.



“நான் தர்ம்மின் மாம்..நீ யார்?” என்றாள் அதட்டும்குரலில்



“நான் ,நா…ன்…” திணறினாள் அனி.





“பார்த்தா நல்லபடிச்சபொண்ணா தெரியற… நீ காரைநிறுத்தி உள்ளகுதிச்சி ஹால்ஜன்னல் கண்ணாடிகளைநகர்த்தி என் சன்னோட ரூம் போகிற வரை நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன் ..இங்க எல்லாஇடத்திலும் அலார்ம் இருக்கு..விரல அமுக்கினா போலீஸ் வந்துடும் ..செக்யூரிடி துப்பாக்கி உன்மேல நீண்டுடும ஆ னா நான் செய்யல பிகாஸ் உன் துணிச்சல் எனக்குப்பிடிச்சிருக்கு. ப்ரேவ்கேர்ல்! உன்னைமாதிரி நானும் துணிச்சல்காரிதான்

சரி எதுக்குவந்தே ?ஏன் என் பையனைக்கொலைசெய்ய நினச்சே?”



அனி தயங்கிப்பிறகு விவரம் சொன்னாள்.கடைசியில்

“அத்தை என்னைப் புரிஞ்சுக்குங்க உங்க மகனை உயிராகக் காதலிக்கிறேன்…தர்ம் இல்லேன்னா எனக்கு வாழ்வேஇல்ல”கண் பனித்தாள்.



“ரொம்பதமிழ் சினிமா பார்த்திருக்காங்க உன் அம்மா,நீ வயத்துல இருக்றப்போன்னு நினைக்கிறேன்..தர்ம் மீது நீ கொண்ட காதலை நான் மதிக்கிறேன் …சரி இப்போ என்னோடுவா” என்றாள்.


அவளோடு அந்த அறையில் நுழைந்த அனி, அங்கு நிறைய சோதனைகுழாய்கள் பிப்பெட்டுகள்,ப்யூரெட்கள் இருப்பதையும்பார்மலின் நெடி அடிப்பதையும் உணர்ந்தாள். .கண்ணாடிஜாடிகளில் ரசாயனதிரவத்தில் தவளைகள் மிதந்தன சதைத்துணுக்குகள் பாலிதீன்பைகளில் ..மூட்டைமூட்டைகளாய்.

குரங்கு ஒன்று விட்டத்திலிருந்து க்ர்ர் என்று அசிங்கமாய் சிரித்தது. கேரட்டைக்கடித்துக்கொண்டு வெள்ளை முயல்கள் இரண்டும் கூண்டிற்குள் ஓட்டப்பந்தயம்
 நட த்தின. ஒரமாய் சின்ன மேஜைமீது சாதுவாய் வெள்ளைஎலி சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்தது.



“மேடம் நீங்…. நீங்க?”குழப்பமும் திகைப்புமாய் அனி கேட்டாள்.



“நான் ஒரு சயின்டீஸ்ட் பேர் குந்தளா தேவி.செல்லமா’குந்த்!’ அனி! என்கதை ரொம்ப சோகமானது  எனக்கு கல்யாணமாகி  பிறந்த குழந்தை இறந்துபோனது அதில் ரொம்பமனம்
 உடைஞ்சிபோனேன்.

அ ப்போது என் கவனத்தை திசைமாற்ற க்ளொனிங் துறையில் கவனம் செலுத்தினேன். என் கணவரும் இதுக்கு சம்மதித்தார். என்னோட ரண்டாவது குழந்தையை க்ளோனிங் முறைலதான் பெற்றேன் அவன்தான் தர்ம்… அடுத்து அர்ஜ் ,பீம் .நகுல், சகா ன்னு மொத்தம்
அஞ்சுபையன்கள் எனக்கு .

எல்லாருமே ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருப்பாங்க .அதனால குழப்பம் வேண்டாம்னு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு ஊ ர்ல அனுப்பி படிக்கவச்சிட்டேன். தர்ம் மட்டும் இங்க பெங்களூர்ல என்கூட இருக்கான்..வருஷம் ஒருமுறை எல்லாரும் இங்க வருவாங்க.. ஒருவாரம் வீட்லயே இருப்பாங்க சேர்ந்து வெளில போக மாட்டாங்க…..இப்போ இங்க தான் இருக்காங்க….



அனி! உனக்கு தர்ம் கிடைக்கலேன்னா என்ன, மீத நாலுபேர்ல யாரையாவது செலெக்ட் செஞ்சிக்கோயேன்? எல்லாருமே தர்ம் போலவே க்ளோனிங் கைஸ்! ஒரே வார்ப்புல செய்த பொம்மைகள் மாதிரி இருப்பாங்க.. அவங்களில் ஒருத்தனுக்கு பழையநடிகை ஐஸ்வர்யாராய் மாதிரி இருக்கற உன்னைப்பிடிச்சிடும். நான் கல்யாணம் செஞ்சிவைக்கிறேன்…”



குந்தளாதேவி இபடிச்சொல்லும்போது, “ஹாய் மாம் யாரோட பேசிட்டு இருக்கிங்க?’ எனக்கேட்டபடி வந்த நால்வரையும் பார்த்தாள் அனி, அடுத்தகணம் மயக்கம்போட்டு விழுந்தாள்.







*****பிகு:)************************************************************
இது பழைய பதிவு புதிய காப்பி!!

ஓண்ணு ரண்டுவார்த்தைகள்+தலைப்பில் மட்டும் மாற்றம் செய்து மீள்பதிவு! .

படத்திலிருக்கிற பெண் அழகா இருந்தா நன்றி  பிலாசபி பிரபாகரனுக்குத்தான்  நைசா அவர் பதிவிலிருந்துதான் சுட்டேன்!!!



மேலும் படிக்க... "நடை உடை பாவனை!"

Thursday, December 01, 2011

புன்னகைக்கும் மத்தாப்பு!!

போதுமுந்தன் பொல்லாப்பு!



புன்னகைக்கும் மத்தாப்பு!



பூவை யார் திறப்பதுவாம்?



பொழுதையார் விரிப்பாராம்?




மோதுகின்ற மேகமெல்லாம்



மொத்தம் கவிழ்ந்தாலும்


சின்னப் பறவையின்


சிறகுச் சீண்டலினால்


மொத்தம் கவிழ்ந்து கதிர்


முத்தாய் இறைத்துவிடும்!


மூடிவிட்ட இமைகளோ


முடங்கிவிட்ட மனமோ


முத்தத்தால் இதயம்



முகையவிழ்ந்து நிற்பதுபோல்



மன்னவனின் வருகையது


மண்மகள் கண்ணிற்கு


சத்தமின்றித் தன்னாலே


சடுதியில் நடக்கவேண்டும்!



கதிரவன் வருவதும்


கவிதை பிறப்பதுவும்



மௌனத்தின் ஜனனத்தில்.!



உன்னதங்கள் அவையென்று


உலகமும்தான் அறிந்திடுமே!















மேலும் படிக்க... "புன்னகைக்கும் மத்தாப்பு!!"

Wednesday, November 30, 2011

இடைச்சாதி நான் என்றான்!



பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.



இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!


மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)

முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)

திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்


தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்


பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்


இடையர்குலத்தில்பிறந்தவன்


பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்

யசோதையால் இடையில் கட்டுண்டவன்

இரண்டுமரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்றுமோட்சமளித்தவன்)

காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்....

 முதலில் வரும் உறவைவிடவும் இடையில் வரும் நட்பை (குசேலர்)மதிப்பவன்.

இதைவிட பாரதிக்கு அதிகம்  தோன்றி இருக்கும்.

அடுத்து..



பொய்யோ எனும் இடையாளொடும் இளையானோடும் போனான்..என்கிற, கம்பன் பாடலிலும்


காற்றுவெளியிடைக்கண்ணம்மா என்கிறது பாரதியின் பாட்டிலும் வரும் இடைபற்றியும் யோசிக்கவேண்டிவந்தது.


கம்பனின் பொய்யோ எனும் இடைக்கு அர்த்தம் புரிகிறது. இல்லையோ என்று பொய் சொல்லும்போன்ற இடைகொண்டதாலேயே சீதை இடையாள் ஆகிறாள். பிடி இடை என்பார்கள் .பிடி என்றால் யானையையும் சொல்வதுண்டு:)

காற்றுவெளியிடைகண்ணம்மா என்கிறாரே பாரதி,.என்ன அது?

காற்றுபோல கண்ணுக்குத்தெரியாத இடைகொண்ட கண்ணம்மாவா


காற்றுவெளியினில்  கண்ணம்மா என்றிருந்தால் காற்று சூழ்ந்த வெளி  என பொருள் கொள்ளலாம்.காற்றுவெளியிடை என்பதற்கு யாராவது நல்ல விளக்கம்  கொடுங்களேன்..

  இடைவேளைக்குப்பிறகு வரேன்:)





மேலும் படிக்க... "இடைச்சாதி நான் என்றான்!"

Tuesday, November 29, 2011

மெய் மறந்த காதல்!




'ப்ரபாகர் ப்ரபாகர்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா  இரண்டுநாட்களாய் மௌனவிரதம் இருக்கிறாள்.


'அழுத்தக்காரி ....அவளோடு் லேட்டஸ்டாய்  வித்தகன்  சினிமா போகாமல் மன்னைமாதவனோடும் அனந்துவோடும் சேர்ந்து  போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு..' வேலாயுதம் கூட்டிப்போய்   வேண்டியமட்டும் வாங்கிக்கட்டிக்கிட்டேன் அதான்  வித்தகனுக்கு மல்டிப்ளசுக்கு வரசொல்லவில்லை. படம் பவித்ராக்குப்பிடிக்கலைன்னா   கல்யாணம் ஆகுமுன்பே   டைவர்ஸ் செய்துவிடுவாள் என்கிற பயம்தான்! செல்போனை செல்லாதபோனாய் ஆக்கிவிட்டாள்.எப்போதும் ஸ்விட்ச்ட் ஆஃப் என்கிறது அது!

யோசித்தபடி உன்னோடு பேசாத கணங்கள் என்ற தலைப்பில் ப்ரபாகர்  புதுக்கவிதை எழுதப்பார்த்தான்.வரவில்லை. கோபமாய் ஐபோனில் யு ட்யூப்பில் எதையோதேடினான்.. ஒய்திஸ்கொலைவெறிடி என்றார் தனுஷ்.

  அடப்ப(பா)வி! என்கூட பேசாமலே இருக்கியே..  ஒய் திஸ் கொலைவெறிடி?

இப்படித்தான் காதலிக்க ஆரம்பித்த புதிதில் தசாவதாரம் சினிமாவிற்கு  ப்ரபாகர் போய்விட்டான் என்று கோபித்துக்கொண்டாள்

. கொஞ்சம் (தசா) அவதாரகாலத்துக்குப்போய்வரலாம் வாங்க...


அன்று....

" லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் ,·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் கோபாலன் மால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.

இடைவேளையில் மெக்டொனால்ட்டில் விரல் வறுவல்(ஃபிங்கர் சிப்ஸ்)  சாப்பிடும்போது் பவித்ரா போன் செய்தாள்.

்" ஹாய்  பவி...!" ஆசையாய் அழைத்தான்.

"ப்ப்ப்ரப்ப்பாக்கர்ர்ர்.!.சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ...  ஆம்ம்ம்மா” என்றாள்.பவித்ராவிற்குக்கோபம் வந்தால் மெய்யெழுத்துக்கள்  பட்டாசாய் வெடிக்கும்!

பவி தொடர்ந்தாள்.

 உன்னைப்பழிவாங்க நைட் என் ஹாஸ்டல்ரூம்போனதும்  என் ஃபேவரிட் ஆக்டர் Tom Cruise


நடிச்ச  ஒரு ஹாலிவுட்மூவி பாக்கப்போற்ற்றேன். 


" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!



'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள்.

அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்எனபவித்ரா,  ப்ரபாகரிடம் உயிராய் பழகுபவள்.

அப்படிப்பட்டவளிடமிருந்து  இப்போது ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...குறுஞ்செய்தி இல்லை!முக நூலில் ட்விட்டரில் என்று எங்கும் தேடி பவியைக்காணா மனமும் வாடுதே என்று ப்ரபாகர் பாடினான்.

.'என்னாச்சு பவித்ராவுக்கு?   இப்போ நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி்,'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'


ப்ரபாகர்  கிளம்பினான்.

 அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கேஇரண்டுநாளாய் வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...



அப்போ உடம்புதான் சரி இல்லை...

 உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே? அதனால்தான்  ஆஃப் செய்து வைத்திருக்கிறாயா?

அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.

"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப் பாடலாய்க் கூவி அழைத்தான்.

அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 99.5கிலோ எடை தி.மகால்!

மெல்லத்திரும்பியவள், ப்ரபாகரைக்கண்டதும் கண்மலர" ப்ரபாகரா! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்,.ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..

அவளுக்கு பவித்ராவின் காதலன் ப்ரபாகர் என நன்கு தெரியும் .

்"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல கன்னடத்துல பேச வச்சி என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'



" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .நீங்க லேடீஸ் ஹாஸ்டல் பக்கம்  வர்முட்யாது. அதுக்கே நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி   தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'



புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்!மூணு மணிக்கு லால்பாக் க்ளாஸ் ஹவுசுக்கு அவளை வரச்சொல்லு. மாடு(செய்) அகிலா மாடு”என்றான்.

“நாட்டிபாய்! மாடுன்னா கன்னடத்துல செய்..ஆனா  தமிழ்ல  என்னன்னும் தெரியுமே..யானைன்னு சொல்லாதவரை ஒல்லேது(நல்லது) என்று நகர்ந்த அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.

ஒன்றும் இளைப்பாய் தெரியவில்லை.அனுஷ்கா உயரத்தில் ஆப்பிள் கன்னத்தில் ஜோதிகா கண்களில் துறுதுறுவென்றே தெரிந்தாள்.

"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு ப்ரபாகர். மூணுவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட சென்னைல கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் வித்தகன் சினிமா போனால் அதுக்கு நீ இப்படி மெத்தனமா  நடந்துக்கணுமா?



 சத்தமேயின்றி மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.



“அடப்பாவி பவி! 48மணிநேரமா பாக்கலயே! இப்ப கண்டதும் ப்ரபாகர்னு ஓடிவந்து கட்டிப்பேன்னு நினச்சா என்னவோ சிலைமாதிரி நிக்கற?”


பவித்ரா தயக்கமுடன்,”அது அது....”என்றாள்.



என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..



அது அது...எனகு பேசவே வரல



ஏன் அதான் பேசறியே?


அழுத திருதமா  நாக புரட வரல


வாட்? என்ன மொழி பேசறே?


 தமிதா



என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.ஹ.. இப்போ நமீதா போயி லஷ்மிராய் வந்தாச்சி!

ஐயொ பெரபாகர பெரபாகர எனகு  பேசவரல முனபோல..


வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு


இல இல

என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!

எபடி சொலவே பெரபாகர?



என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்காட்டு..



கைப்பையிலிருந்து தேடி ஏதோ துணிக்கடை பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.



அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,

" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா,ஹாரர் மூவி பார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி?  போன் செய்யாதகாரணமும் இதுதானா, குறுஞ்செய்தி  மின்மடல் எல்லாம் அனுப்ப மனசு  தயங்கி குறுகுறுத்ததால்  எதுவும் அனுப்பலையா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",


ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசு

வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா அல்லது புலவர் சா. ராமானுசம் அவர்களிடம்  உன்னை நல்ல தமிழ்கற்றுக்கொள்ள அனுப்பட்டுமா?



உனகு  என  நெலமை புரியாதா ?   இதுகுதான் நா எதுவு சொலல ரடு நாளா உனகிட....சகதிபிரபா  கிட  சொனபோ அவ ஆறுதலா  யு விலபி ஆலரைடுன்னு இதமா  சொனா..நீ  கிடல் செயறே..



கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.



பைக்கை ஸ்டார்ட் செய்தான் ப்ரபாகர். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது.

“நீ எதுல வந்தே பவி?உன் ஆக்டிவாலயா?

 இல..அது ரிபே(ர்) அகிலா அவ (ஸ்க்)கூ(ட்)டில    லாலபாகல கொடு விடு போயிடா

 லால்பாக் வாசல் வரை  இருவரும் நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.



சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.



சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?



பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.

கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.(டாக்டர்கிட்டபோங்க)." என்றார் கிண்டலாய்.



நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து ப்ரபாகர் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்

"தாஙஸ பெரபாகர? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.



பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..



எபடி இல  எபடிகற? சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?



கஷ்டம்தான் உனக்கு.. ம்ம்...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால்,வித்தகன் கண்டுவந்தால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்தரு பத்தித்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா


்ஹே சிரிகாத..

 அவளை பரிசோதித்துவிட்டு " இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "  என்று வழக்கம்போல் மூக்குக்கண்ணாடியைக் கழற்றியபடியே டாக்டர் சொன்னார்.

”இதற்கு என்னசிகிச்சை டாக்டர்? அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"

நோ நோ...இது ஒருமனபிராந்தி

அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?

யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்


எப்போ டாக்டர்? இன்னும் மூணுவாரத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!

\"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க ,க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.

"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.

பவித்ராவை அழைத்துக்கொண்டு ப்ரபாகர் தன்அறைக்கு வந்தான்.



"என்ன பெரிய படம் அது? காஞ்சனா படத்தைவிடவா? படுபயங்கரமான  அந்தப்படத்தை   என் ஃப்ரண்ட்ஸ் ராஜேஷ் சசிகுமார்  ரசிகன்லாம் கூட பார்க்கமுடியாதுப்பான்னு ஓடிட்டாங்க.. ஆனா நான் தனியா   சிடிலபார்த்தேன்..அப்படி ஒருவீரன்கிட்ட நீ   பேசிட்டு இருக்கே பவி! அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?



நானா? நோ  நோ... பய பய எனகு



அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!



தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.






 பவித்ரா " வேடா வேடா " என்றாள்.


 வேடா?யார் வேடன்?




இல...மூவி பாக வேடா



படம் பாக்க வேண்டாமா?



ஆமாஆமா



எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."

டிவிடி ப்ளேயரில் 1408 என்னும்  அந்தப் பேய்ப்படம்  ஆரம்பமானது.ஸ்டிஃபன்கிங் எழுதியது.

ஹ என்ன பெரிய ஹாலிவுட்படம்னா  உடனே பயப்படணுமா?

  ப்ரபாகர் கிண்டலாய் சிரித்தான்.



அடுத்த சில நிமிடங்களில் அவனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

இன்னும் சில நிமிடங்கள் ஆனதும்...


அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...ஐயொ..அம்மா... ரத்தவாந்தி எடுத்துடுவேன் போலிருக்குதே.....

 என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.

பவித்ரா  படத்தில் ல்யித்திருந்தவள் திரும்பினாள்.
" ஐய்யெய்யோ.என்னாச்சு ப்ரபாகர் ஏன் இப்படிகூச்சல்போடறே,முத தடவை பயமாத்தான் இருக்கும் ஆனா  இப்போ நான்  சுத்தமா பயப்படாம ரசிச்சி  பாக்கறேன்..ஆமா என்ன பயந்துட்டீயா நீயும்?"என்றாள்

அப்போதுதான்

சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.



"வாவ்வ்வ்வ்வ்வ்! ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.



மயக்கம் சற்று தெளிந்த ப்ரபாகர் கண்விழித்தான்.

,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.



"ஐய்யோ..ப்ரபாகர் உனக்கு என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ மை  காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா...  “

--









மேலும் படிக்க... "மெய் மறந்த காதல்!"

Monday, November 21, 2011

அகமும் புறமும்.












ஆபீசிற்குள் நுழைந்த அரைமணியில் செல்போன், 'நீ நடந்தால் நடை
அழகு’ என்கிறது.பழையபாட்டுதான் ஆனால் அழகென்ற சொல் பலமுறைவருவதால் எனக்கு இந்தப்பாட்டுப்பிடிக்கிறது.  அழகின் ரசிகன் நான்!

'காபி'னைவிட்டு நழுவி காரிடருக்கு நடந்தபடியே போனில்,"விஜி! வீட்டைவிட்டு புறப்படறப்பவே சொன்னேன் இல்ல, இன்னிக்கு முக்கியமான மீட்டிங்னு? இன்னும் பத்து நிமிஷத்துல நான் அதுக்குத் தயாராகணும்..இப்பொ எதுக்கு போன் செய்றெ? என்கிறேன் கொஞ்சம் கோபத்துடனே.

 ஏற்கனவே காலை ஆபீசிற்குப் புறப்பட காரை எடுத்து வெளியே வந்தபோது, சாலையில்  ஃப்ளாட்டின் எதிர் மரத்தடியிலிருந்து அந்த தொழுநோயாளி ஓடிவந்துகார் கதவின் ஜன்னல் அருகே வந்து  என்னிடம் பிச்சைக்குக் கை ஏந்தியபோது 'போபோ'என்று சீறிவிழுந்ததின் தாக்கம் இன்னமும் முற்றிலுமாய் மறையவில்லை.  அசிங்கம் பிடித்த அந்த தொழுநோய்க்காரனைப்பார்க்கவே பிடிக்கவில்லை.எனக்கு எல்லாமே  என்னைப்போல் சுத்தமாய் அழகாய் இருக்கவேண்டும்.

எதிர்முனையில் அழகி- என்மனைவி- பேச ஆரம்பிக்கிறாள்.

"தெரியுங்க .ஆனாலும் முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்ட்டேன்.. உங்கப்பா ஊர்லேந்து கொஞ்சநேரம் முன்னாடி வந்துட்டாரு.."

"அதான் அன்னிக்கே போன்ல சொல்லி இருந்தாரே ' மகேஷ் பிறந்த நாளுக்கு சென்னைக்கு முதநாளே வந்துடறேன்'ன்னு?'..இத சொல்லவா போனு?"


"ஐயோ..அவர்மட்டும்வரலேங்க கூடவே அந்தபொம்பளயும் வந்திருக்காங்க"


விஜி இப்படிச்சொன்னதும்"வ்வாட்?" என்கிறேன் எரிச்சலாய். உடனேயே விஜி குறிப்பிட்ட அந்தப்பெண்ணின்முகம் கண்முன் வந்து நிற்கிறது. அந்த தீய்ந்துபோனகன்னங்களும் மோவாயும் , எரியும் நெருப்பில் உருக்குலையும் ப்ளாஸ்டிக் தாளாய் கழுத்தும் ,சிதிலமானநெற்றியும் ....ய்யக்...நினைத்தாலே குமட்டிக்கொண்டு வருகிறது.


அவளைப் போய் எதுக்கு கிராமத்திலிருந்து இழுத்திட்டுவந்திருக்கிறார் அப்பா?

போனமாதம் கிராமத்துக்கு வாரவிடுமுறைக்கு நான் மட்டும்  சிலமணிநேரங்கள் தங்கிவருவதற்காக போனபோது அவளை வீட்டுவாசலில் திண்ணையில் பார்த்தேன். .குமட்டிக்கொண்டு வந்தது.

"யாருப்பா அவங்க கோரமா, பாக்கவே அருவெறுப்பா இருக்கு?"

"வேண்டப்பட்டவங்கதான் ரவி"

அப்பா அண்மையில் ஓய்வுபெற்ற பள்ளி வாத்தியார் .அதிகம் பேசமாட்டார் அதுவும் நாலுவருஷம்முன்பு அம்மா போனதிலிருந்து பேச்சையே குறைத்துவிட்டார். அப்பா பார்க்கவும் அழகாயிருப்பார். பலர் என் அண்ணன் என்று நினைத்துக்கொண்டு அப்பாவிடம் பேச ஆரம்பிப்பார்கள்! நேர்மை நாணயம்  அன்பு  இரக்கம்  போன்ற குணங்களால் ஒரு மனிதனின் முகம் பொலிவாக இருக்கும் என்றால் அதற்கு என் அப்பாவையும்  உதாரணமாய் சொல்லலாம்!என்னோடு சென்னைக்குவந்து தங்கச்சொல்லி பலமுறை கெஞ்சிப் பார்த்துவிட்டேன்.

"வீடு நிலம் இருக்குதேப்பா..எல்லாத்தியும் கவனிச்சிட்டு நான் உடம்புக்கு முடியறவரைக்கும் இங்கயே இருக்கேன்,, ஏதும் விசேஷம்னா உன் இடத்துக்கு அவசியம் வரேனே?'என்றார் .

வற்புறுத்த முடியவில்லை .அப்பாவின் முடிவுகளில் அர்த்தம் இருக்கும்.

அதனாலே அப்பாவிடம் அந்தப் பெண்மணிபற்றி அதிகம் கேட்கவும்தயக்கம்.

ஆனால் போனவாரம் கிராமத்திலிருந்து என்னைப்பார்க்க வந்த என் பள்ளி நண்பன் ப்ரகாஷுடன் பேசும்போது தெரிந்தது அந்தப்பெண்மணி இன்னமும் அப்பாவோடுதான் இருக்கிறாள் என்பது.

விஜி கூட கிண்டலாய் ,"உங்கப்பாவோட அந்த நாள் கேர்ல் ஃப்ரண்டோ என்னவோ ?வயசு காலத்துல அந்தம்மா அதிரூப சுந்தரியா இருந்திருக்கலாம்... இப்பொ பழய நெனப்புல இழைய வந்திட்டாங்க போல இருக்கு...ஆனாலும் அறுபதுவயச நெருங்குற உங்கப்பாக்கு புத்தி இப்டிபோகவேணாம் ?" என்றாள்.

விஜி சொல்வது நிஜம்தானோ?

"சரி, நீ போனை வை..நான் வீட்டுக்கு வந்து அப்பா கிட்ட பேசிக்கறேன்"

மதியம் லீவுபோட்டுவிட்டு   அதிரடியாய் வீட்டிற்குவருகிறேன்.

அழைப்புமணியை அடித்தேன் கதவுதிறந்தது கதவுக்குபின்னால் ....

அந்த கோரமுகம் கண்டு எரிச்சலுடன்முறைக்கிறேன்.

"விஜ்ஜீஈஇ எங்க தொலைஞ்சே?" எட்டூருக்குக் கேட்கிற மாதிரி கத்துகிறேன்.

"என்னங்க ?"என்று விஜி ஓடிவருகிறாள்.

"குழந்தயக் குளிப்பாட்டிகிட்டு இருந்தேன் ..காலிங்பெல் சத்தமே கேக்கல எனக்கு... உங்கப்பா ரூம்ல தூங்கறார் போல்ருக்குது...?"

நான் எரிச்சலுடன் அப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைகிறேன்.

சின்னதாய் குறட்டைவிட்டபடி தூங்கிக் கொண்டிருந்தவரை தட்டி எழுப்பி," என்னப்பா இதெல்லாம் தேவையா உங்களுக்கு?" என்று கடுப்புடன் கேட்கிறேன்.

அப்பா இடுப்பு வேஷ்டியை இறுகக் கட்டியபடியே எழுந்து உட்கார்ந்தவர்,

"அடடே ரவி வந்திட்டியாப்பா ?சாயந்திரம்தான் நீ வருவேன்னு விஜி சொன்னா..சரி ,குட்டிதூக்கம் போடலாம்னு படுத்தென் .நாளைக்கு உன்பையன் பிறந்தநாளுக்கு நான் ஃப்ரெஷா சுறுசுறுப்பாத்தெரியணுமில்ல?" என்கிறார் புன்னகைத்தபடி.

"ஆ! ரொம்பவே சுறுசுறுப்பாத்தான் தெரியறீங்க !வாலிபம் திரும்புதில்ல உங்களுக்கு? ஏன்ப்பா, தெரியாமத்தான் கேக்கறேன் அந்த பொம்ளைய எதுக்கு இங்கயும் கூட்டிவந்தீங்க? இதெல்லாம் ஸோஃபிஸ்டிகேட்டட் ஃப்ளாட்ஸ்.ரொம்ப டீசண்ட்டான ஜனங்க வசிக்கறஇடம் .இங்க  அந்த தீஞ்சிபோன அசிங்க முகத்துக்காரப் பொம்பளை எதுக்கு வந்திருக்கா?”

"ரவி..அவங்க வரேன்னு சொல்லலப்பா...நாந்தான் அழைச்சிட்டுவந்தேன்.."

"விலைகொடுத்து வாங்கற பொருளோட சில நேரங்களில் ஒட்டிக்கிட்டு வருமே ஒண்ணு , அதுமாதிரி இலவச இணைப்பா? இலவச இணைப்பெல்லாம் எனக்குத்தேவைஇல்லை.”

"ரவி! விலை மதிப்பில்லாத பொருள் கூட ஒட்டிக்கிட்டு வந்திருக்கிற இலவச இணைப்பு நாந்தான்ப்பா”

”என்ன உளற்றீங்க ?"


"ரவி... சொல்லாம இனியும் மறைக்கமுடியாது. சில தர்மங்களை நிலை நிறுத்தணும்னா கொடுத்த வாக்கைக் காப்பாத்த முடியாம போகக்கூடும்னு சொல்வாங்க..இப்போ அது நிஜம்னு நிரூபணமாகுது..ஆமாம்ப்பா... முப்பதுவருஷம்முன்னாடி உங்கம்மா பிரசவத்துல வயித்துலேயே இறந்துபோன குழந்தையைத்தான் பெத்தெடுத்தா..

இனிமேகுழந்தை பிறக்க வாய்ப்பில்லைனு டாக்டர்சொல்லிய அந்த நேரத்துல உங்கம்மாவோட சிநேகிதி கமலா ,'என் புருஷன் மூணுமாசம் முன்னாடி ,குழந்தைவயத்துல இருக்கறப்போவே செத்துட்டாரு.நானும் அனாதை உறவுன்னு யாருமில்ல.. இப்போ உன் குழந்தையை நீ இழந்த சமயத்தில எனக்கும் குழந்தை பொறந்திருக்கு இது இனி உன்குழந்தையா வளரட்டும்..நான் அம்மான்னு சொந்தம் கொண்டமாட்டேன்..நீங்க ரண்டு பேரும் தான் குழந்தைக்கு அப்பா-அம்மா.இதை  நாம் எல்லாருமே சத்திய வாக்கா  நினைச்சிக்கணும் ".ன்னு சொல்லி எங்க கைல உன்னைக் கொடுத்தா...பாலூட்டி உன்னை வளர்க்க கூடவே இருந்தா...

 ஒன்றரைவயசு குழந்தையா இருக்கறப்போ கார்த்திகை தீபம் அன்னிக்கு விளக்குல விளையாட்டா நீ ஏதோ செய்யப் போக  உன்னைக் காப்பாத்த செய்தமுயற்சில கமலாவோடநைலக்ஸ் சேலைல நெருப்பு பிடிச்சி வேகமா பரவி தலையிலிருந்து பாதம் வரைக்கும் உடம்புதோல், தீக்கு இரையாயிடிச்சி. அவங்க உயிரைத்தான் எங்களால காப்பாத்தமுடிஞ்சிது. ஆனா ஆஸ்பித்திரிலிருந்து திரும்ப வீடுவராமல் எங்ககிட்ட எதுவுமே சொல்லாம,எங்கயோ போனவளை போனவாரம் திருச்செந்தூர்ல கோயில் வாசல்ல பிச்சை எடுத்துட்டு நிற்கிறபோது பாத்தேன்.”மன்னிச்சிடுங்க அண்ணா...இந்தமுகத்தோட உங்கவீட்ல இருக்கக்கூடாது குழந்தை பயப்படுவான்னுதான் சொல்லாம ஓடிப்போனேன்”ன்னா...வற்புறுத்தி கிராமத்துவீட்டுக்குஅழைச்சிட்டு்ப்போனேன்.’உன் பேரனுக்குப்பிறந்தநாள்வரப்போகுதும்மா.. பேரனை ஒருவாட்டிப் பாத்துட்டுப்போ'ன்னுசொன்னேன் தயங்கித்தான் கமலாவும்-அதாவது-உன் அம்மாவும்  வந்திருக்கா இங்க.."

அப்பா நீண்ட நேரம் பேசிய களைப்பில் பெருமூச்சு விடுகிறார். விஜி திகைப்புடன் என்னையே பார்க்கிறாள்.நான் வேதனையுடன்," என்..   என்னைப்பெத்த  தா... தாயா அவங்க? ஐயோ கடவுளே!" என்று கதறி நிமிர்ந்தபோது  அந்த அறையின் நடுசுவரில் அலங்காரத்திற்காக மாட்டப்படிருந்த அழகிய நிலைக் கண்ணாடி. புறம் காட்டியதாய் தெரியவில்லை. என அகத்தின் அழுக்கை  தான் பிரதிபலிக்கிறது..

பரிதவிப்புடன் ஹாலிற்கு ஓடிவருகிறேன், அங்கே என் அம்மா இல்லை.வீட்டில் எங்குமே இல்லை.

வெளியே சாலைக்கு வேகமாய் வந்த என்னைப் பார்த்ததும், எதிரே மரத்தடியில் உட்கார்ந்திருந்த அந்த தொழு நோயாளி பயத்துடன்   வேறுபக்கமாய் நகர்கிறான்.

நான் , அவனைத் தொடர்கிறேன்.

****************************************************************









மேலும் படிக்க... "அகமும் புறமும்."

Friday, November 18, 2011

குலம் தரும்!




விளையாட்டுப்போல ஆறுவருடங்கள்.! இரண்டாயிரம் நாட்கள்.!காலக்கணக்கை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மாபெரும் கனவல்லவா நனவாகி விட்டிருக்கிறது?

மணவாளனுக்கு அந்தக் கோபுரத்தை பார்க்கிறபோது அதன் நீள அகல பௌதீகப் பரிமணங்களை எல்லாம் தாண்டி மஹாபலிக்கு முன்னாலே திருவிக்ரமனாக நெடிதுயர்ந்து நின்ற நெடுமாலே நினைவுக்கு வந்தார். இருநூற்று முப்பத்தாறடி உயரத்தில் பதிமூன்றடுக்கு கோபுரம்! ஊரில் உள்ள 21 கோபுரங்களுள் இதன் சிகரப்பகுதி மட்டும் மொட்டையாக நின்றது.. இன்று ராஜகோபுரமாய் விண்ணைத் தொட்டு நிற்கிறது!

ஒரு சின்னதிலிருந்து ஒரு பெருசு. விதைக்குள்ளிருந்து விகசித்துக் கொண்டு விருட்சம் வெளிப்படுகிறதே அதுபோல்!

மனிதனுக்கு லட்சியம் என்று ஒன்று இருக்கணும் அந்த லட்சியம்-இலக்கு- உன்னதமாக இருக்க வேண்டும் இருந்துவிட்டால் அது நிறைவேறியே தீரும் அதற்கு சாட்சி இந்தக் கோபுரம் மணவாளன் பெருமூச்சு விடுகிறான். அவனுக்குக்கூட ஓர் ஆசை,ஒருகனவு ,ஒரு லட்சியம் இருக்கிறது ரொம்பக் காலமாக இருக்கிறது அதை வாய்விட்டு யாரிடமும் அவனால் சொல்ல இயலவில்லை சொல்லி என்ன பயன்? ஏழை கனவு காணக்க்கூடாது அவனுக்கு அந்த உரிமை இல்லை அவன் அப்பாகாலத்தில் குடும்பம் ரொம்ப செழிப்பாகத்தான் இருந்தது அந்தப் பரம்பரையில்வந்த தோஷம்-ஒருவேளை-அதுவே வியாதியாகப்போயிற்றோ?

மணவாளனுக்கு இன்னமும் எட்டுக்கல் விட்டெறிகிற நினைப்பு.

"மணவாளா! கோபுரத்திருப்பணிக்கு ஒரு சீட்டு வாங்கிக்கிறியா? "கேட்டவர் இளையாழ்வார்

தபாலாபிசில் வேலை பார்த்து சமீபத்தில் ரிடையர் ஆனவர் எந்த நேரமும் அவர் கையில் நன்கொடை ரசீதுடன் ஊரில் வளைய கொண்டிருந்தார்.

"வாங்கணும் சாமி கட்டாயம் வாங்கணும்" என்றான் மணவாளன்.
"பத்துருவா தான் ஒருசீட்டு கிழிக்கட்டுமா?'

"இப்பொ வேண்டாம் சாமி கையிலே பணமில்லை,,ஒரு சீட்டு என்ன சாமி நூறு சீட்டு வாங்கறதா நேர்ந்துட்டு இருக்கேன்"


இளையாழ்வார் தபாலாபீசில் சேமிப்புக்கணக்கு இன்ஷ¥ரன்ஸ் எல்லாம் வரவு செலவு செய்பவர் அவர் மனசு கணக்கு போட்டது ஓராயிரம் ரூபாயாவது இவன் இந்த ஜன்மத்தில் சேர்க்கிறதாவது?அப்பன் பாட்டன் காலத்திலே வகையாய் வாழ்ந்துடாங்க இல்ல அந்த நினைப்பு விடல்ல... பாவம் மணவாளன்..

அவர் வேறு ஆள் பார்க்க நகர்ந்துவிட்டார்.

அன்னிக்கு சொல்லியாயிற்று இளையாழ்வாரிடம் ..ஏண்டா அப்படிச் சொன்னோம் என்று மணவாளனுக்குத்தோன்றவே இல்லை ஆயிரம் ரூபாய் என்பது பெரிய தொகையா?பெரிய பெருமாள் மனசு வச்சா தாயார் கடைக்கண் பார்த்தா ஆயிரம் என்ன லட்சம் கூட தீயினில் தூசாகும்!
திருமங்கை மன்னர் ஒருராத்திரியிலெயே மதில் கட்டினாராம
அம்மாடியோவ்! அவங்க எல்லாம் மனுஷங்க இல்ல...தெய்வம்!

மணவாளன் பெருமூச்சு விடுகிறான்

"அப்போவ்"

கனவு கலைகிறது

எதிரே மகள், பெயர் நப்பின்னை இதுலே எல்லாம் குறைச்சல் இல்லை

வாய்த்தபெண்டாடியின் பெயர் நாச்சியார் மகன் நம்பி-தாத்தாவின் பேர் கடைகுட்டி வகுளாபரணன்.

இந்த நம்பிப்பயல் ஸ்டேட் ·ப்ஸ்ட் வருவாவானென்று மணவாளன் கனவு கண்டான் கடைசியில் என்னவென்ரால் அவன் நம்பரே பேப்பரில் வரவில்லை ஒருதடவை இரண்டுதடவை உஹும் அவன் நம்பர் வரவே இல்லை.

கடைசியில் நம்பி டூரிஸ்ட் பஸ் ஏதும் வராதா யாராவது வடநாட்டுக்காரன் அதிர்ஷ்டவசமாய் வெளினாட்டு ஆசாமி கிடைக்க மாட்டானாஎன்று அலைகிற டூரிஸ்ட் கைடாகப் போய்விட்டான்

தானாகக் கைவந்த கலை-கேட்டுக்கேட்டுப் பழகிய பழம் பெருமைகளை புது மெருகுடன் உடைசல் ஆங்கிலம் தெலுங்கு இந்தியுடன் சமயத்திற்குத்தக்கவாறு எடுத்துச் சொல்லி ஒருநாளில் அதிக பட்சம் முப்பதுரூபாய் சமபாதித்து காலத்தை கழித்துவருகிறான்


"அப்போவ்' மறுபடி கூவினாள் நப்பின்னை

"என்னம்மா?'

"ஸ்கூல் ·பீஸ் கட்டணும் நாலைக்கு கட்டாட்டி பேரை அடிச்சிருவாங்களாம்.."

மணவாளன் அவளை நிமிர்ந்து பார்த்தான்



நப்பின்னையின் கண்கள் அழகாய்ப் பெரிதாய் காதளவு நீண்ட கண்கள்-அவனைப்போலவே அவளும் கனவு காண்கிறாள் என்பதை நினைவூட்டின
"நாளைக்குத்தானேகட்டணும் கட்டிட்டாப் போச்சு?"

"போங்கப்பா! நீங்க இப்படித்தான் சொல்வீங்க ஆனா முடியலன்னு கடேசில கட்டமாட்டிங்க" சிணுங்கியபடியே அவள் நகர்ந்தாள்

இந்தப்பெண்கூட என்னை எவ்வளவு நன்றாக எடை போட்டு வைத்திருக்கிறது?

நம்பி அவசரவசரமாக வந்தான்
"அப்பா இருபது ரூபா குறையுது,,, உங்கிட்ட இருக்குமா?; என்று கேட்டான்

"என்னப்பா என்ன விஷயம்?"

நம்பி பதில் சொல்வ்சதற்குள்"நமஸ்காரண்டி" என்றபடியே ஒரு நடுத்தரவயது மனிதர் உள்ளே நுழைந்தார்

"பாவம்பா..ஆந்திராக்காரராம்..நம்ம ஊருக்கு வந்த இடத்துல இவர் பையை எவனோ திருடுட்டானாம். கோயில்ல மண்டபத்துல தவிச்சிடிருந்தாரு...யாரும் இவர லட்சியம் செய்யல.. நாந்தான் பாத்து விவரம் கேட்டேன்...என் கையிலே இருபது ரூபா இருக்குது நீங்க ஒரு இருபது ரூபா கொடுத்தா டிக்கட் வாங்கி சொந்தக்காரங்க ஊருக்கு- பக்கத்துலதானாம்- போயிட்றராம் ..ஊரு போயிச் சேர்ந்ததும் பணம் திருப்பிடுறேங்கறாரு.."



மணவாளன் பெருமூச்சு விட்டான்.

புலிக்குப்ப்பிறந்தது பூனையாகுமா?


என்னைப்போலவே நீயும் பைத்தியக்கரானாய் இருக்கியேடா? அவனவன் ஆளுகிடச்சா தேட்டை போட்றான் நீ என்னடான்னா கைக்காசை எடுத்து தானம் கொடுக்கிறேங்கறே.... வம்சாவளிடா எல்லாம் வம்சாவளி...


அப்பாவின் மௌனம் மகனுக்குப் புரிந்து போனது

கடைசியில் அந்த ஆந்திரவாடு இருபதுருபாயோடுதான் புறப்பட்டுப்போனார்

கும்பாபிஷேகத்துக்கு நாள்கூட வைத்துவிட்டர்கள் இப்போது மணவாளன் அந்த ஆயிரம் ரூபாயை கோபுரத்திருப்பணிக்குச் செலுத்திவிட பரபரக்க ஆரம்பித்தான்.

திண்ணையில் படுத்தபடியே ஆகாயத்தைப் பார்த்தவனுக்கு ஒருவழியும் புலப்படவில்லை. இந்தத்திருப்பணிக்கு எங்க வம்சத்துக் காணிக்கை எப்படியாவது போய்ச்சேரணும் பணம் செலுத்தறதா நேர்ந்துட்டிருக்கக்க்கூடாது அப்படி நேர்ந்துக்கிட்ட பிறகு அதை செலுத்தாம இருந்தா அது பேரன் பேத்திகாலம் வரைக்கும் தொடர்ந்துகிட்டு இருக்குமாம்.



அழகியமணவாளா! நம்பெருமாளே! உன் திரு உள்ளம் என்னவோ?


'குலம் தரும் செல்வம் தரும்

அடியார்படுதுயராயினவெல்லாம்..'

வாய் பாசுரம் முணுமுணுத்தபடி இருக்க கண் மூட ஆரம்பித்தது ஆனால் இனந்தெரியாத துயரம் ஒன்று

பெருமூச்சாய் வெளிப்பட்டு அதுவே மெல்ல மெல்ல விம்மலாகி உள்ளேயே அமிழ்ந்து நெஞ்சை அடைக்க ஆரம்பித்துப் பிறகு தூக்கத்தில் கொண்டு விட்டது.

எத்தனை நேரமாயிற்றோ திடீரெனத் தன்னை யாரோ வந்து உலுக்கவும் விழித்தான்


"ஏய் என்ன தூக்கம் இன்னமும்?'

குரல் மிக அருகாமையி;ல் அவனைக்கிட்டத்தட்ட அணைத்துக் கொண்டு ரொம்பவும் அந்நியோன்னியமாய் அதட்டியது மனவாளன் அந்தகுரலைத் துழாவிப்பார்த்தான் எங்கோ கேட்ட குரல்! ஆத்மாவை ஊடுருவும்குரல் !அந்தக்குரலுக்குள் பழமை நெடி வீசிற்று.

"ஏய் என்னைதெரியல....மணவாளா என்னடா,என்ன முழிக்றே?'

மணவாளன் எழுந்து உட்கார்ந்தான் இப்போது அவனுக்குத்தெரிந்து போயிற்று

"நீ நீ ...குல சேகரன் இல்ல?"என்ற்வன் சட்டென குதூகலமாகிப்போனவனாய் மனைவியை அழைத்து," ஏய் நாச்சி இங்க வாயேன் இது யார் தெரியுமில்ல,,, குலசேகரன் முழுப்பேரு குலேசுதான் நான் கூப்டுவேன்... நாச்சி !நானும் இவனும் அந்தநாளில் அடிச்சிருக்குற கொட்டம் கணக்கு வழக்கில்ல .."என்றான்

மறுபடி குலேசைப்பார்த்து," குலேசு பம்பாய்க்கில்ல போனே? எப்படி இருக்கே புள்ளை குட்டிங்க சுகமா?" என்று கேட்டான்


" எல்லாரும் நலம்...மணவாளா!உன்னை இவ்ளவு நாள் கழிச்சிப்பார்க்கிறபோது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? நம்ம ஊரே மாறிப்போயிருக்குடா இப்போ... ஆனா நீமட்டும் மாறவே இல்ல"


மணவாளன் மெல்லச் சிரித்தான்

"சரி கிளம்பு ?"என்றான் குலசேகரன்

"எங்கே?"

"முதலிலே கொள்ளிடத்திலே குளிக்கணும்.. எம்பெருமான் சேவை பண்ணீக்கணும் அப்புறமா கோபுரத்திருப்பணிக்காக ஒரு சின்னத்தொகை கொண்டுவந்திருக்கேன் அதை செலுத்திடணும் அவ்வளவுதான் மணவாளா"

"ஓ!புறப்படலாமே? நாச்சி! மதியத்துக்கு சாப்பாடு தயார் செய்துவை." என்றவன் ஏதோ நினைவு வந்தவனாய் உட்புறம் சென்று சமையற்கட்டில் மனைவியிடம் "வராதவன் வந்திருக்கான், ஒருபாயசம் படைச்சாதான் மரியாதை.." என்று நெளிந்தான்.

நாச்சியாரம்மாள் தலையை அசைத்தாள். ஆனல் அவள் எப்படி பாயசம் வைப்பாள் என்பது மணவாளனுக்குப் புரியாத புதிராக இருந்தது பிள்ளையாண்டானோ கிடைத்த இருபதை அந்த ஆந்திரக்காரனுக்கு தானம் வார்த்து விட்டான், தானும் பைசா காசு கொடுக்கவில்லை
செப்படிவித்தை செய்தாலே ஒழிய அடுப்பில் பால் பொங்கவே வழி இல்லை ஆயினும் நாச்சியார் தலை அசைத்ததிலிருந்து ஒருபாரம் நீங்கிய நிம்மதி நண்பர்கள் கொள்ளிடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்

வழிநெடுக பழைய கதையெல்லாம் குலசேகரன் விவரித்தான்.

பம்பாயில் சொந்தவீடு ஒரு கார் மகன் அமெரிக்காவில் படிக்கிறானாம்...

கேட்கக்கேட்க மணவாளனுக்குப் பெருமையாக இருந்தது.

ஒருகாலத்தில் கோபுரமாயிருந்த தன்னுடைய வம்சம், குப்பை மேடாகிவிட்டதையும் ஒருகாலத்தில், குப்பைமேடாயிருந்த் குலசேகரனின் வம்சம் இப்போது கோபுரமாகி விட்டதையும் எண்ணிப்பார்க்கிறபோது அந்த வியப்பு பெரிய வினாக் குறீயாக மாறிற்று.

"மணவாளா! ஒரு பத்தாயிரம் ரூபா கோபுரத் திருப்பணிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன் ஆனாலும் பாருடா எனக்கு உன்னைப் பார்த்தா பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் கூட இருக்கு. என்னால தரமுடிஞ்சதெல்லாம் வெறும் பத்தாயிரம் ரூபாய்தான் ..ஆனா நீ, உன் உழைப்பை ரத்தத்தை வேர்வையை மூச்சை என்று எல்லாத்தியும் ஆத்மார்த்தமாய் பெருமாளுக்குச் செலுத்தி இருக்கியேடா!நானெல்லாம் காசுபணம் என்று ஊரைத் துறந்து போனவன் ஆனால் நீ அப்படி இல்லடா....பொறந்தமண்ணை மதிச்சி அதுக்கு உயிரைக்கொடுக்க வாழ்ந்திட்டு இருக்கிறவன்.”

மணவாளனுக்கு இந்தப்பேச்சு சற்று சமாதானமாக இருந்தாலும் நேர்ந்துகிட்டதை தன்னால் நிறைவேற்றமுடியாது என்பதால் ஏற்பட்ட ஏக்கம் பெருமூச்சாக வெளிப்பட்டது.

 "மணவாளா !என்னால இந்தப் பத்தாயிரம் ரூபா இப்போ கொடுக்கமுடியுதுன்னா அதுக்கு யார் காரணம் தெரியுமா?" தொடர்ந்து  வினவினான் குலசேகரன்

மணவாளன் விழித்தான்

"நீதான் காரணம், உங்ககுடும்பம் காரணம் ! நீங்க ஏத்தி வச்ச விளக்கு கார்த்திகை தீபமாய் எரியுதுடா.."

"குலேசு, நீ என்ன சொல்றே?"

"ஏண்டா? மறந்திட்டியா? அப்போ நான் பம்பாய் போகிறபோது உங்கப்பா என்னை ஆசிர்வாதம் செய்து பணம் கொடுத்தாரே,ஞாபகமில்லயா உனக்கு?"

"அப்படியா? இருக்கலாம்... அவர் காலத்தில் செயலாய் இருந்தாரு கொடுத்தாரு.."


"அந்தப்பணத்தில் தாண்டா என் வாழ்க்கையே உன்னதமான நிலைக்கு வந்தது..அட..பணத்தைவிட்டுத்தள்ளு.. உங்கப்பாவிடம் பெற்ற ஆசிர்வாதம் தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவிட்டிருக்குதடா.... மணவாளா..உங்க குடும்பத்துக்குப்பட்ட கடனை எப்படி அடைக்கபோறேனோ தெரியல... பெரியவர்களுக்குச் செய்தால் அதுவே பெருமாளுக்குச் செய்தமாதிரி என்பார்கள். உங்கப்பா பெரியவர் உயர்ந்தவர் அவரோட குடும்பத்துக்குப் பட்ட கடனை இப்போ நான் செலுத்தபோறேன்.. என்னால தரமுடிஞ்சது பணம்தான் அதை உன்னிடம் தருகிறேன் நீ அதை உன் அப்பா பெயரில் கோபுரத்திருப்பணிக்கு செலுத்துவியாடா?"


மணவாளனுக்கு கண்களில் நீர் சுரந்தது.

அவனுடைய தெய்வம் தனது கோபுரத் திருப்பணிக்கு அவன் நேர்ந்து கொண்டதை எவ்வளவு அழகாய் கணக்காய் வசூல் செய்து கொள்ளத் திட்டமிட்டுவிட்டது?
எதிரே குலசேகரன், கோபுரமாய், தன்னுடைய கனவின் நனவாய், ஆதர்சமாய் நிற்கக் கண்டான்.
***************************************************************************************************************


(கல்கியில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் சிறப்புமலரில் பிரசுரமான  (நான் எழுதிய கதைகளில் கொஞ்சம் எனக்கேப்பிடித்த கதை)இது!

மேலும் படிக்க... "குலம் தரும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.