Social Icons

Pages

Wednesday, November 30, 2011

இடைச்சாதி நான் என்றான்!பாரதியின் எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான் என்னும் பாடலை அறியாதவர்கள் இருக்க முடியாது.இடைச்சாதி என்ற சொல்லாட்சி பாரதியை வெறுமனே அளித்திருக்கமாட்டார். அவர்கண்முன் கண்ணன் இப்படியெல்லாம் வந்திருக்கலாம்!


மும்மூர்த்திகளில் இடையன்(ப்ரும்மா விஷ்ணு சிவன்)

முத்தொழில்களில் இடையன்(படைத்தல் காத்தல் அழித்தல்)

திருப்பாற்கடலில் ஆதிசேஷனுக்கும் கடலுக்கும் இடையில் பள்ளிகொள்ளும் இடையன்


தேகத்தின் உள்ளுக்கும் புறத்துக்குமான ஆத்மாவில் உறைபவன்


பலராமனுக்கும் சுபத்ரைக்கும் இடையில் பிறந்தவன்


இடையர்குலத்தில்பிறந்தவன்


பசுக்களின்கூட்டத்திலிடையிலிருந்தவன்

யசோதையால் இடையில் கட்டுண்டவன்

இரண்டுமரங்களுக்கு (யஷர்கள்) இடையில் சென்றுமோட்சமளித்தவன்)

காளியனின் சிரசில் ஐந்துதலைகளுக்கு இடையில் நர்த்தனமாடியவன்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில்தூது சென்றவன்....

 முதலில் வரும் உறவைவிடவும் இடையில் வரும் நட்பை (குசேலர்)மதிப்பவன்.

இதைவிட பாரதிக்கு அதிகம்  தோன்றி இருக்கும்.

அடுத்து..பொய்யோ எனும் இடையாளொடும் இளையானோடும் போனான்..என்கிற, கம்பன் பாடலிலும்


காற்றுவெளியிடைக்கண்ணம்மா என்கிறது பாரதியின் பாட்டிலும் வரும் இடைபற்றியும் யோசிக்கவேண்டிவந்தது.


கம்பனின் பொய்யோ எனும் இடைக்கு அர்த்தம் புரிகிறது. இல்லையோ என்று பொய் சொல்லும்போன்ற இடைகொண்டதாலேயே சீதை இடையாள் ஆகிறாள். பிடி இடை என்பார்கள் .பிடி என்றால் யானையையும் சொல்வதுண்டு:)

காற்றுவெளியிடைகண்ணம்மா என்கிறாரே பாரதி,.என்ன அது?

காற்றுபோல கண்ணுக்குத்தெரியாத இடைகொண்ட கண்ணம்மாவா


காற்றுவெளியினில்  கண்ணம்மா என்றிருந்தால் காற்று சூழ்ந்த வெளி  என பொருள் கொள்ளலாம்.காற்றுவெளியிடை என்பதற்கு யாராவது நல்ல விளக்கம்  கொடுங்களேன்..

  இடைவேளைக்குப்பிறகு வரேன்:)

35 comments:

 1. Anonymous8:41 AM

  This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. Anonymous10:44 AM

  இடைச்சாதியில் ‘இடை’க்குப் விளக்கம் சொல்லியாச்சு.
  ‘சாதி’க்கும் விளக்கம் சொன்னால் நல்லது.

  ReplyDelete
 3. இடைசாதி- இதைவைத்து இவ்வளவு விளக்கமா.... நல்லா இருக்கு பகிர்வு.

  ReplyDelete
 4. nice
  pls visit my blog
  mydreamonhome.blogspot.com

  ReplyDelete
 5. Anonymous said...
  இடைச்சாதியில் ‘இடை’க்குப் விளக்கம் சொல்லியாச்சு.
  ‘சாதி’க்கும் விளக்கம் சொன்னால் நல்லது.

  10:44 AM

  <<<>ஆண்சாதி பெண்சாதி மாதிரி இதைப்பிரிவு என்று சொல்லலாம் இடைப்பட்ட பிரிவைச்சேர்ந்தவன் என்று பொருளாக இருக்கலாம்..அனானி அவர்களே என் சாதி அன்புதான்...மறுபடி முதலில் அனுப்பிய நான் பிரசுரிக்காதமாதிரியான மடல் அனுப்பவேண்டாம் என அன்போடு கேட்டுக்கறேன்.

  ReplyDelete
 6. புதுகைத் தென்றல் said...
  இடைசாதி- இதைவைத்து இவ்வளவு விளக்கமா.... நல்லா இருக்கு பகிர்வு.

  12:30 PM

  <<<<<<<<நன்றி புதுகைத்தென்றல்

  ReplyDelete
 7. வினோத் said...
  nice
  pls visit my blog
  mydreamonhome.blogspot.com

  2:10 PM

  >>>நன்றி வினோத் வரேன் உங்க வலைப்பூவினுக்கும்

  ReplyDelete
 8. //இதைவிட பாரதிக்கு அதிகம் தோன்றி இருக்கும்.//

  அவை அடக்கம். பாரதிக்கு கூட இவ்வளவு விளக்கமெல்லாம் தோன்றி இருக்காது.

  நமக்கு முன்னும் பின்னும் சுற்றியும் காற்று இருக்க, எங்கும் பரந்த காற்று வெளியின் இடையினில் நாமிருக்க, காற்று வெளியெங்கும் காதல் வெளியாகி களிக்கிறாரோ?

  ReplyDelete
 9. உள்ளிழுக்கும் காற்றுக்கும்
  அது உள் நிறைந்து பின் வெளிப்படும்
  தருணத்திற்கும்
  இடைப்பட்ட காலப்பொழுதுகளில் கூட
  கண்ணம்மாவின் காதலை எண்ணாமல் இருக்க முடியவில்லை என்கிறாரோ
  முண்டாசு கவி?

  காற்று வெளி (அண்டம்) இடை ( இல்லாமல்)
  முழுதும் நிறைந்து
  கண்ணம்மாவின் (மீதான) காதல்
  தவிக்க வைக்கிறதோ?

  விசுவின் வாழ்வே பேரானந்தத்தின் மூலம்
  உங்கள் பதிவுகளை படிக்க நேர்ந்தது
  நேர்ந்தது என்பதை விட
  பாக்கியம் கிடைத்தது எனலாம் சகோதரி..

  கண்ணனின் மேல் நீங்கள் கொண்டுள்ள தீரா காதல் கண்டு வியப்படைகிறேன்..
  இன்னமும் ஓரிரு சதவீதம் கூட உங்கள் பதிவுகளை படிக்கவில்லை..

  கண்ணன் ஒருவனே காதலன்..
  உலகின் அணைத்து உயிர்களும் அவனின் காதலிகள் என சொன்ன
  மீரா என் கண் முன் தோன்றுகிறார்..

  படிக்க படிக்க மென்மேலும் வியப்படைவேன் என்றே தோன்றுகிறது..

  பாரதிக்கு தோன்றியதோ இல்லையோ..
  அவரின் பாடலில் வரும்
  இடை பற்றி நீங்கள் சிந்தித்து தெளித்திருக்கும் துளிகள்
  ஒவ்வொன்றும் அற்புதம்..

  ஆழ்ந்து சிந்தித்து எதையும் ஆராய்ந்து பல கோணங்களில்
  யோசித்து எழுதி பிரமிக்க வைக்கும் பலரை கண்டு
  நான் "ஏன் நாம் இப்படி யோசிப்பதில்லை" "ஏன் எனக்கு இது தோன்றவில்லை" என
  என்னையே கேட்டுருக்கிறேன் ..
  என் பிரமிப்பு பட்டியலில் புதியதாய் நீங்கள்..

  வாழ்த்துக்கள் சகோதரி..

  கண்ணனை பற்றி எழுதுங்கள்..
  கவிதைகள்
  கதைகள்
  கட்டுரைகள்
  என மென்மேலும் எழுதுங்கள்..
  வாசிக்க,சிலாகிக்க ,படித்து அசைபோட்டு
  மனதில் தேக்கி வைத்து
  வார்த்தைகளின் இடைவெளிகளில்
  வாழ்ந்துவிட என்றே இந்த வாழ்க்கை..

  ReplyDelete
 10. ரசிகன் said...
  //இதைவிட பாரதிக்கு அதிகம் தோன்றி இருக்கும்.//

  அவை அடக்கம். பாரதிக்கு கூட இவ்வளவு விளக்கமெல்லாம் தோன்றி இருக்காது.>>>>?/


  ரசிகன் ! அக்கா மேல அதீத அன்பு இருக்கலாம் அதுக்காக பாரதிக்குக்கூட இவ்ளோவிளக்கம் தொன்றி இருக்காதுன்னு சொல்லலாமா? தீக்குள்விரலைவைத்தால் கண்ணனைத்தீண்டும் இன்பம் கண்ட மகாகவியல்லவோ அவர்?

  //நமக்கு முன்னும் பின்னும் சுற்றியும் காற்று இருக்க, எங்கும் பரந்த காற்று வெளியின் இடையினில் நாமிருக்க, காற்று வெளியெங்கும் ..//


  நல்ல கற்பனை இப்படியும் இருக்கலாம் ரசிகன்,

  ReplyDelete
 11. VenSan said...
  உள்ளிழுக்கும் காற்றுக்கும்
  அது உள் நிறைந்து பின் வெளிப்படும்
  தருணத்திற்கும்
  இடைப்பட்ட காலப்பொழுதுகளில் கூட
  கண்ணம்மாவின் காதலை எண்ணாமல் இருக்க முடியவில்லை என்கிறாரோ
  முண்டாசு கவி?

  காற்று வெளி (அண்டம்) இடை ( இல்லாமல்)
  முழுதும் நிறைந்து
  கண்ணம்மாவின் (மீதான) காதல்
  தவிக்க வைக்கிறதோ?


  >>>வாருங்கள் சகோதரரே உங்கள் விளக்கமும் நன்று,,காற்றில் ஏது இடைவெளி? நிறைந்ததுதான் நீங்கள் சொல்வதுபோல் அதனால்தான் அப்படி சொல்கிறார் போலும்!

  //..
  இன்னமும் ஓரிரு சதவீதம் கூட உங்கள் பதிவுகளை படிக்கவில்லை..//


  பழைய பதிவுகளில் ஒன்றில் ஆண்டாளுக்கு அவன்மேலிருந்த காதலை எழுதி இருப்பேன் முடிந்தால் அதை வாசியுங்கள்.

  //ஆழ்ந்து சிந்தித்து எதையும் ஆராய்ந்து பல கோணங்களில்
  யோசித்து எழுதி பிரமிக்க வைக்கும் பலரை கண்டு
  நான் "ஏன் நாம் இப்படி யோசிப்பதில்லை" "ஏன் எனக்கு இது தோன்றவில்லை" என
  என்னையே கேட்டுருக்கிறேன் ..
  என் பிரமிப்பு பட்டியலில் புதியதாய் நீங்கள்..

  வாழ்த்துக்கள் சகோதரி..
  ////

  எல்லோரும் யோசிக்கிறோம் சகோதரரே ..கதை இல்லாத மானுடம் உண்டா? கதை சொல்லத்தெரியாத மனிதன் உண்டா? அதை எழுதுவது சிலருக்கு வருகிறது அவ்வளவுதான்.அதுபோலத்தான் யோசிப்பதற்கும் ஏதாவது களம் கிடைத்தால் தானாய் வரும் என்னிடம் நீங்கள் பிரமிப்பதுப்போல் ஏதுமில்லை சராசரிசிந்தனை கொண்ட பெண் தான்!

  //வாசிக்க,சிலாகிக்க ,படித்து அசைபோட்டு
  மனதில் தேக்கி வைத்து
  வார்த்தைகளின் இடைவெளிகளில்
  வாழ்ந்துவிட என்றே இந்த வாழ்க்கை..

  10:44 PM

  //
  அழகாய் சொல்கிறீர்கள்/..நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக எழுதுகிறேன் நன்றி தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு.

  ReplyDelete
 12. இப்படியும் யோசிக்கலாமா..
  அர்த்தமெல்லாம் நல்லா இருக்கே..
  இது தெரியாம புரியாம பல பேரு ஏன் கொல வெறியோட அலையுறாங்க..
  உருப்படியா யோசிக்க வழிகள் இருக்குனு எனக்கு சொன்னதற்கு நன்றிகள்.

  ReplyDelete
 13. //Madhavan Srinivasagopalan said...
  இப்படியும் யோசிக்கலாமா..
  அர்த்தமெல்லாம் நல்லா இருக்கே..
  இது தெரியாம புரியாம பல பேரு ஏன் கொல வெறியோட அலையுறாங்க..
  உருப்படியா யோசிக்க வழிகள் இருக்குனு எனக்கு சொன்னதற்கு நன்றிகள்.

  11:25 PM

  /////

  கொலைவெறி பாட்டை ரசிக்கலாம் ஆனா பாரதி கம்பன்போன்ற மகாகவிகள் பாடிய பாடல்களை மறக்கக்கூடாது அல்லவா? இந்தப்பாடல்களில் கலைவெறி உண்டு மாதவன்.

  ReplyDelete
 14. Bharathi or Imayam. Avan paadal kadalai vida azhamana arthangal kondathu. Itharku vilakkam thamizhil ida muyarchikkiren. Arumaiyana pathivu Sago. Vaalthukkal.

  ReplyDelete
 15. இடை எனும் சொல்லுக்கு படையெடுத்தது போல
  இத்தனை விளக்கங்களா...
  முதல் நான்கு விளக்கங்கள் ஏற்கனவே நான் அறிந்தது.. மற்றவை புதியது...
  அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி...

  ReplyDelete
 16. துரைடேனியல் said...
  Bharathi or Imayam. Avan paadal kadalai vida azhamana arthangal kondathu. Itharku vilakkam thamizhil ida muyarchikkiren. Arumaiyana pathivu Sago. Vaalthukkal.

  12:13 AM

  //
  thankyou என்னாச்சு உங்க தமிழ் ஃபாண்ட்?

  ReplyDelete
 17. // மகேந்திரன் said...
  இடை எனும் சொல்லுக்கு படையெடுத்தது போல
  இத்தனை விளக்கங்களா...
  முதல் நான்கு விளக்கங்கள் ஏற்கனவே நான் அறிந்தது.. மற்றவை புதியது...
  அருமையான பதிவுக்கு நன்றி சகோதரி...

  12:46 AM

  ////

  வாங்கமகேந்திரன் இன்னும் கூட இருக்கலாம் அர்த்தங்கள்....கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 18. இன்னும் கூட அர்த்தம் தோன்றியிருக்கும் பாரதிக்கு :)) உங்கள் நகைச்சுவை உணர்வு தான் பகிர்வுக்கு உயிர்.

  இடைச்சாதி என்றால் இடையன், பிரம்மா சிவனுக்கு இடைப்பட்ட தொழிலைச் செய்பவன் என்ற விளக்கம் பிடித்திருந்தது.

  அப்புறம் எனக்குத் சும்மா தோன்றிய இன்னொன்று....இடைகொண்ட குலமாகிய மாதர்களைக் முதலில் கள்ளமாய்க் கவர்ந்து பின் ஆசானாகி ஆதி தத்துவத்ததயே விளக்குபவன் என்பதால் ....உள்ளம் கவர் இடையன் lol சும்மா சொன்னது தான்.

  ReplyDelete
 19. vensen அவர்கள் சொன்ன விளக்கம் அற்புதம்.

  ReplyDelete
 20. கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்றில் பறப்பது போல் உணர்கிறான் காதலன். காற்றுவெளியிடை உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்ற வரிகளுக்கு எனக்கு இப்படிப் பொருள் கொள்ளத் தோன்றியது. இடைச்சாதி என்பதை அலசிய விதம் பிரமிப்பு தந்தது. பிரமாதம்...

  ReplyDelete
 21. Shakthiprabha said...
  இன்னும் கூட அர்த்தம் தோன்றியிருக்கும் பாரதிக்கு :)) உங்கள் நகைச்சுவை உணர்வு தான் பகிர்வுக்கு உயிர்.

  இடைச்சாதி என்றால் இடையன், பிரம்மா சிவனுக்கு இடைப்பட்ட தொழிலைச் செய்பவன் என்ற விளக்கம் பிடித்திருந்தது.

  அப்புறம் எனக்குத் சும்மா தோன்றிய இன்னொன்று....இடைகொண்ட குலமாகிய மாதர்களைக் முதலில் கள்ளமாய்க் கவர்ந்து பின் ஆசானாகி ஆதி தத்துவத்ததயே விளக்குபவன் என்பதால் ....உள்ளம் கவர் இடையன் lol சும்மா சொன்னது தான்.

  1:08 PM

  வா சக்தி....நீ சொன்ன இட கொண்ட குலமாகிய மாதர்கள் என
  எனக்கும் தோன்றியது அப்புறம் எங்களூக்கு மட்டும்இடை இல்லையான்னு எந்த ஆணாவது சண்டைக்கு வந்துட்டாருன்னா என்ன செய்றதுன்னு அதை விட்டுட்டேன் பல இலக்கியபாடல்களில் ஆண் இடையும் வர்ணிக்கப்படுகிறது.

  உன் கருத்துக்கு நன்றி ஷக்தி

  ReplyDelete
 22. //Shakthiprabha said...
  vensen அவர்கள் சொன்ன விளக்கம் அற்புதம்.

  1:14 PM

  ////

  ஆமாம் சிந்தனையை நன்கு விரிக்கிறார்

  ReplyDelete
 23. //கணேஷ் said...
  கண்ணம்மாவின் காதலை எண்ணினால் காற்றில் பறப்பது போல் உணர்கிறான் காதலன். காற்றுவெளியிடை உன் காதலை எண்ணிக் களிக்கின்றேன் என்ற வரிகளுக்கு எனக்கு இப்படிப் பொருள் கொள்ளத் தோன்றியது. இடைச்சாதி என்பதை அலசிய விதம் பிரமிப்பு தந்தது. பிரமாதம்...

  2:55 PM

  /////
  வாங்க கணேஷ் பயணம் நல்லா ஆச்சா? வெளியிடைக்கு சரியா பொருள் வரலையே....வெளி என்பது புறம். அது பர்ந்தது எல்லைகள் அற்றது. அதன் இடையே என்கிறானே அதான் புரியவில்லை சூட்சம சொல் இங்கு ..நன்றி உங்க கருத்துக்கும்

  ReplyDelete
 24. நல்ல சுவாரஸ்யமான பதிவு. பலரின் பல்வேறு கருத்துக்களும் அருமையான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. பல விஷயங்களை அவரவர் பார்வையில் ஆரோக்யமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.

  அன்புடன் vgk

  ReplyDelete
 25. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  நல்ல சுவாரஸ்யமான பதிவு. பலரின் பல்வேறு கருத்துக்களும் அருமையான விவாதத்தை தொடங்கி வைத்துள்ளது. பல விஷயங்களை அவரவர் பார்வையில் ஆரோக்யமாக அறிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள்.

  அன்புடன் vgk

  3:29 PM

  ////

  மிக்க நன்றி திரு கோபாலக்ருஷ்ணன்

  ReplyDelete
 26. மிகவும் அற்புதமான அழகான சுவாரஸ்யமான விசயங்களை பொருதி கற்பனையோடு மகாகவியின் அந்த வரிகளுக்கு அர்த்தம் இதுவாகவும் இருக்குமோ அல்லது இதற்கு மேலாகுமோ?! என்றது அருமை...

  காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
  காதலை எண்ணிக் களிக்கின்றேன் .....
  "காற்றுவெளி" என்பது மகாகவி இப்பாடலுக்குத் தந்த தலைப்பு...
  "கண்ணம்மாவின் காதல்" என்று சில பதிப்புகளிலும் வெளியாகி யுள்ளதாம்.

  சரி இங்கே மகாகவி கூறும் காற்று வெளியிடை... அதற்கு முன்பு
  இப்பாடலின் சில வரிகளையும் பார்த்து விட்டு வருவோம்.

  "................................................................ - இந்த
  வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
  வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
  விண்ணவன் ஆகப் புரியுமே - இந்தக் (காற்று)"

  அடுத்ததாக .... கடைசி இரு அடிகள்

  "............................................................... - உயிர்த்
  தீயினிலே வளர் சோதியே - என்றன்
  சிந்தனை யே, என்றன், சித்தமே! இந்தக் (காற்று)"

  மகாகவி இங்கே கண்ணம்மா என்பது சக்தியை அவன் அவளை காற்று வெளியிடையிலே மிதந்து (மோனத்திலே / தியானத்திலே) அன்பால் அவளைப் பரவுகிறான்... அவளின் காதலில் திளைக்கிறான் அப்படி அவளின் காதலில் மூழ்கிய நிலையிலே இருந்து மாறாது எனை வேற்று நினைவின்றித் தேற்றியே இந்த புவியிலே பேரொளியில் கலந்து ஞானம் பெற்று விண்ணவனாய் ஆகப் புரியுமே நினது, அழகும், காதலும் என்கிறான்.... அவன் நோக்கம் அதுவாகவே இருந்தது....

  சரி கடைசியாக அவனுடைய ஆத்மாவான உயிர்த் தீயில் வளர்கின்ற சோதி அந்த கண்ணம்மா ஆம் அவள் தான் அன்னை சக்தி... என்றன் சிந்தனையே..என்றன் சித்தமே.... உடல் பொருள் ஆவி எல்லாமாகி ஒரு மோன நிலையில் நின்று பாடுகிறான்..... அவனின் ஆத்மா காற்று வெளியிடையிலே மிதந்த நிலையிலே நின்றே அன்னையின் காதலில் களிக்கிறது....

  பாரதி... ஞானக் கிறுக்கன், பகைவனுக்கும் அருளச் சொன்னவன்... யுக புருஷன், வேதாந்தக் கருத்துக்களை தந்து கவிதயில் கூறியதோடு மட்டுமல்ல அப்படியே வாழ்ந்தவன்... அவ்வாறே வாழும் போதே முக்தி அடைந்தவன்... அதை நாம் ஒவ்வொருவரும் கைகொள்ள வேண்டும் என்றே பரசிவ வெள்ளம் என்னும் பாடலில் அழகாகச் சொல்லியுள்ளான்.

  பர பிரமத்தொடு கலப்பதே நமது லட்சியம் என்பது வேதாந்தம்... அதற்கு பல நெறிகள் இருந்தும் அந்த பரபிரம்மம் இந்த உலகத்தை இயக்க சக்தியைப் படைத்தது... அதனாலே அச் சக்தியே நம்மை அந்த பரபிரமத்திடம் அழைத்துச் செல்லக் கூடியதும் என்று தீர்க்கமாக நம்பியே அவனது வாழ்வும் கவியும் இருந்தது.... இந்த வேதாந்தக் கருத்தை அவனின் பாடல்களில் எல்லாம் காணலாம். தாயாய் வணங்குதல் சிறப்பு, தந்தையை வணங்குதல் இன்னும் சிறப்பு, நண்பனாய் வணங்குவது இவைகள் யாவினும் சிறப்பு, ஆனால் காதலியாய் வணங்கும் பொது தான் எல்லாவற்றிலும் சிறப்பு... அதில் தான் எளிதிலே கலக்கலாம் அப்படியே, ஆண்டாளாய், மீராவை... பாரதி சக்தியை கண்ணம்மாவாக அவனின் காதலியாக புணர்கிறான்... பாரதி அறுபத் தாறிலேக் காணலாம்.

  "ஊழிக் கூத்திலே" மிகவும் அருமையாக பிரபஞ்சத் தத்துவத்தைக் கூறியும் இருக்கிறான்.

  சகோதிரி.... பின்னூட்டம் எழுதப் போய்.... காற்று வெளியாய் விரிந்து விட்டது....
  நல்லப் பதிவு... தாமதமாக வந்து விட்டேன்... பதிவிற்கு நன்றிகள். மீண்டும் வாசிக்காமல் அனுப்புகிறேன்!?..

  ReplyDelete
 27. அட! இடைச்சாதி என்பதற்கான பாரதியின் சிந்தனை ஒன்றுதான். கிருஷ்ணன் இடையர் குலத்தில் பிறந்தவர். அவ்வளவே. ஆனால் அந்த வார்த்தையில் இருந்து இவ்வளவு சிந்தனைகள் இருக்கலாம் என சொன்னது உங்கள் எழுத்து. எழுதுபவர் ஒன்றை நினைத்து எழுத, வாசிப்பவர் தனக்கென பல கருத்துகள் கொள்ள வைப்பதுதான் ஒரு எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. அதாவது ஒரு எழுத்து பிறரை சிந்திக்க தூண்ட வேண்டும். அதற்காக அனைவருமே சிந்திப்பார்கள் என சொல்ல முடியாது. ;)

  காற்றுவெளியிடை கண்ணம்மா என்பதில் பாரதியின் சிந்தனை எல்லாம் கண்ணமாவின் இடுப்பு மேல் எல்லாம் இல்லை, கண்ணமாவின் மீதான காதலில் இருக்கிறது. ;)

  கண்ணமாவுக்கும், பாரதிக்குமான காதலில் காற்று புகும் அளவே இடைவெளி இருக்கிறது என்பதை வலியுறுத்துவதாக இருக்கலாம்.

  எதற்கும் மொத்த பாடலை படித்தால் பாரதியின் கவித்துவம் புரியும். :)
  --------------------------

  சரி, இது குறித்து எவரேனும் எழுதி இருக்கிறார்களா எனத் தேடி பார்த்தேன்.

  நா. கண்ணன் தனது இணைய தளத்தில் இப்படி எழுதி இருக்கிறார்.

  //காற்று வெளியிடைக் கண்ணம்மா என்று ஆரம்பிக்கிறான். பாரதியின் காதல் எத்தன்மையது? காற்றின் இடைவெளி (மூச்சு விடும் பொழுது) நேரத்தில் கூட உன்னை மறப்பதில்லை என்கிறான். எப்படி உடல் மூச்சு விட மறப்பதில்லையோ அதுபோல் பாரதி கண்ணம்மாவை நினைக்காத பொழுதுகள் இல்லை என்பதாம். வேறு: காற்றின் இடைவெளி (மூச்சு விடும் நேரம்) எப்படி சிறியதோ அதுபோல் இடை கொண்ட கண்ணம்மா என்பது. மூன்றாவது, காற்றின் வெளி பரந்து நிற்கிறது. காற்று வெளி என்று இந்த அகிலத்தையே பாரதி கூறுகிறான். இந்த அகிலமெல்லாம் அவன் கண்ணம்மாவின் காதலை கண்டு, உணர்ந்து களிக்கின்றான். கண்ணம்மாவின் காதல் இல்லாத இடமேது என்பது பாரதியின் கேள்வி.//

  ReplyDelete
 28. //V.Radhakrishnan said...
  அட! இடைச்சாதி என்பதற்கான பாரதியின் சிந்தனை ஒன்றுதான். கிருஷ்ணன் இடையர் குலத்தில் பிறந்தவர். அவ்வளவே. ஆனால் அந்த வார்த்தையில் இருந்து இவ்வளவு சிந்தனைகள் இருக்கலாம் என சொன்னது உங்கள் எழுத்து. எழுதுபவர் ஒன்றை நினைத்து எழுத, வாசிப்பவர் தனக்கென பல கருத்துகள் கொள்ள வைப்பதுதான் ஒரு எழுத்துக்கு கிடைக்கும் மாபெரும் வெற்றி. அதாவது ஒரு எழுத்து பிறரை சிந்திக்க தூண்ட வேண்டும். அதற்காக அனைவருமே சிந்திப்பார்கள் என சொல்ல முடியாது. ;)


  ///<<<<...
  வாங்க ராதகிருஷ்ணன்..
  பாரதியின் இந்த இடைச்சாதி சொல்லாட்சி எத்தனை அருமை பாருங்க...பலரது சிந்தனையைத்தூண்டி இருக்கும்

  //காற்றுவெளியிடை கண்ணம்மா என்பதில் பாரதியின் சிந்தனை எல்லாம் கண்ணமாவின் இடுப்பு மேல் எல்லாம் இல்லை, கண்ணமாவின் மீதான காதலில் இருக்கிறது. ;)

  ///

  உண்மைதான்.


  //எதற்கும் மொத்த பாடலை படித்தால் பாரதியின் கவித்துவம் புரியும். :)
  --------------------------
  ///

  கவித்துவம் ரசனை மிகுந்ததாக இருக்கவும்தான் இதனைப்பற்றி எழுத ஆவல் வந்தது.நா.கண்ணன் மிகச்சிறப்பாக எழுதக்கூடியவர். அவர் எழுத்தினை இங்கு கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி தங்கள் வருகை கருத்துக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 29. //தமிழ் விரும்பி said...
  மிகவும் அற்புதமான அழகான சுவாரஸ்யமான விசயங்களை பொருதி கற்பனையோடு மகாகவியின் அந்த வரிகளுக்கு அர்த்தம் இதுவாகவும் இருக்குமோ அல்லது
  அப்படியே, ஆண்டாளாய், மீராவை... பாரதி சக்தியை கண்ணம்மாவாக அவனின் காதலியாக புணர்கிறான்... பாரதி அறுபத் தாறிலேக் காணலாம்.

  "ஊழிக் கூத்திலே" மிகவும் அருமையாக பிரபஞ்சத் தத்துவத்தைக் கூறியும் இருக்கிறான்.

  சகோதிரி.... பின்னூட்டம் எழுதப் போய்.... காற்று வெளியாய் விரிந்து விட்டது....
  நல்லப் பதிவு... ////

  வாங்க தமிழ் விரும்பி..ஞானக்கிறுக்கனைப்பற்றீய உங்கள் கருத்தையே பதிவாக இடலாம்போல அப்படி விரிவாய் தெளிவாய் அருமையாய் உள்ளதே...இன்னும் நிறைய அவன் பாடல்களைப்பற்றிப்பேசுவோம்.நன்றி வருகைக்கும் மிகச்சிறப்பான பின்னூட்டம் இட்டதற்கும்.

  ReplyDelete
 30. அருமையான சிந்தனை! விளக்கமான விரிவுரை!பலரது சிந்தனைகளை தூண்டி விட்டீர்!

  பொதுவாக படைப்பாளி எதையும்
  எண்ணிப் படைப்பதில்லை அவனை
  அறியாமல் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன!
  அதை இரசிக்கின்ற மனத்தோடு உள்ளவர்கள் சிந்தித்து
  உரைகாணும் போதுதான் அதில் உள்ள
  பொருள் நயங்களும், கருத்துச் சிறப்புகளும் வெளிப்படும் அதுகூட
  ஆளுக்கு ஆள் மாறுபடுவதும் உண்டு!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 31. புலவர் சா இராமாநுசம் said...
  அருமையான சிந்தனை! விளக்கமான விரிவுரை!பலரது சிந்தனைகளை தூண்டி விட்டீர்!

  பொதுவாக படைப்பாளி எதையும்
  எண்ணிப் படைப்பதில்லை அவனை
  அறியாமல் சொற்கள் இயல்பாக வந்து விழுகின்றன!
  அதை இரசிக்கின்ற மனத்தோடு உள்ளவர்கள் சிந்தித்து
  உரைகாணும் போதுதான் அதில் உள்ள
  பொருள் நயங்களும், கருத்துச் சிறப்புகளும் வெளிப்படும் அதுகூட
  ஆளுக்கு ஆள் மாறுபடுவதும் உண்டு!

  புலவர் சா இராமாநுசம்

  12:58 PM

  >>>>>>>>ஆமாம் புலவர் ஐயா..சற்றே சிந்தனையை விரிக்கலாம் என்ற யுத்தியில் இப்படிக்கொண்டுபோக நேர்ந்தது நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 32. எனக்குப் பிடித்த இரண்டு பாடல்கள் .
  அலச அலச , காதல் அதிகமாகவே செய்கிறது
  "தமிழ் மீது"

  ReplyDelete
  Replies
  1. நன்றி மிக,,தமிழே போதை அல்லவா அதான் அப்படிச்செய்கிறதுபோலும்!!!

   Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.