இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை குன்றாமல் சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை கண்ணதாசனுக்கு உண்டு.
ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.
அப்படிக்கண்ணதாசனை பாதித்தவன் கம்பன்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல என்று முதலில் அந்தப்புலவன் பெயர்தனை ஏன் வைத்தான் பாரதி என்றால். அறிவின் சிகரம் கம்பன்! கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதி ’கல்வி’ என்றதுமே உடனே உயர்கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்!! கம்பன் பிறந்த உயர்தமிழ்நாடில்லை உயர்கம்பன் பிறந்த தமிழ்நாடாம்!
கம்பனைப்பற்றி சான்றோர் பெருமக்கள் பலர் புகழ்ந்து வியந்து எழுதி உள்ளார்கள் . அப்படி எழுதிய நூல்களில் நான் அண்மையில் வாசித்த புத்தகம்தான் கம்பன் களஞ்சியம் என்னும் அருமையான புத்தகம்.இதனை எனக்கு அளித்தவர் சகோதரர் பேராசிரியர்பெஞ்சமின் லெபோ அவர்கள் நூலாசிரியரும் இவரே!
கம்பனின் புகழ்பாடி தமிழ் வளர்க்கும் இவர் கம்பராமாயணத்தில் மூழ்கித் திளைத்த தனது இனிய அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவற்றில் கண்ணதாசன் ரசித்த கம்பன் என்னும் தலைப்பில் சகோதரர் எழுதியதை இன்று கவிஞரின் பிறந்த நாளில் நாம் பார்க்கலாம்.
கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக மாறிய அகலிகை இராமனது பாதத்துகள் பட்டதும் மீண்டும் பெண்ணாக மாறுகிறாள்..அதற்கு முன்புதான் தாடகை என்னும் அரக்கியை சுடுசரம் கொண்டு வீழ்த்தி வந்திருக்கிறான் இராமன். அவனது கைவண்ணம் கண்டு பிரமித்த விஸ்வாமித்திரர் இப்போது கால் வண்ணம் கண்டு மகிழ்கிறார்.
அதனைத்தான் கம்பன்,
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன்
என்கிறார்!
இதனை கண்ணதாசன் ‘பால் வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன் என்று பாடல் எழுதினார்.
கண்வண்ணம் அங்கே கண்டேன்
’கைவண்ணம்இங்கே கண்டேன்பெண்வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
என்று ம் தொடர்கிறது!
கம்பனில் கவியரசர் திளைத்து ரசித்த பகுதிகள் ஏராளம் விதி பற்றிய பாடல் ஒன்றை கவிஞர் மிகவும் ரசித்திருப்பதை தியாகம் படத்தில் வரும் இந்தப்பாடல் சொல்கிறது.
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறயாரம்மா?
சிறப்பான இந்தவரிகளுக்கு பிறப்பெடுத்துக்கொடுத்தவை கம்பனின் காவியவரிகளே என்கிறார் நூலாசிரியர் திரு பெஞ்சமின் லெபோ.
ஆம்..
முடிசூட்டல் இராமனுக்கே என தசரதன் முடிவு செய்கிறான். கூனி இதனைக்கேட்டு வெகுண்டு எழுகிறாள்.
கைகேயியைக்கண்டு அவளைத்தூண்டிவிடுகிறாள். அவளும்
தசரதனிடம் முன்னர் கேட்ட வரங்களை நினைவுபடுத்தி அவற்றை இப்போது பெற்றுக்கொண்டு அதனபடி பிறகுஅவள் பேசியவிதம் அனைவரும் அறிந்த கதைதான்
ஆனால் அதுகேட்டு இலக்குவன் குதிக்கிறான் கோபத்தில்.
அதைக்கம்பனின் தமிழ் கூறுவதைப்பாருங்கள்..கோபத்தில் குதிப்பது இலக்குவன் என்பதை குதித்தாடும் சொற்கள் கூவுவதில் தெரிகிறது அல்லவா?
வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"
(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)
தம்பியின் கோபம் கண்டு நம்பி திகைக்கிறான்.
அவனை சமாதானப்படுத்துகிறான்
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
-
இப்படிக்கம்பனை ஆழ்ந்து ரசித்த கண்ணதாசனின் தமிழ்ப்பங்கும் அளவற்றது அல்லவா?
கம்பன் களஞ்சியம் என்னும் இந்த நூலில் மேலும் அருமையான தகவல்கள் உள்ளன்..நூலாசிரியர் திருபெஞ்சமின் லெபோ அவர்களின் கைவண்ணத்தில் நான் இங்கு கொடுத்துள்ளது கால்வண்ணமில்லை அதாவது 1/4 பகுதிகூட இல்லை! ஆகவே முழுவதும் வாசிக்க இந்தப்புத்தகத்தை நீங்கள் வாங்கிவிடுங்களேன்!
கம்பன் களஞ்சியம்
விலை 60ரூபாய்
ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் லெபோ
கிடைக்குமிடம்..
வானதி பதிப்பகம்
23 தீனதயாளு சாலை
தி நகர்
சென்னை 17
Tweet | ||||
ரசித்தேன்...
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு நன்றி...
காவியத் தாயின் இளைய மகன்...
காதல் பெண்களின் பெருந்தலைவன்...
பாமர ஜாதியில் தனி மனிதன்...
நான் படைப்பதனால் என் பேர் இறைவன்...
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...
அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன்...
அவர் மாண்டு விட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை...
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை...
கம்பன் களஞ்சியம் (ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் லெபோ)
ReplyDeleteஎன்ற தமிழ் இலக்கிய விமர்சன நூலைப் பற்றிய உங்கள் நூல் விமர்சனம் ரொம்பவும் எளிமையான சொற்களில். வாய்ப்பு கிடைக்கும்போது இந்த நூலை படிக்கிறேன். நன்றி!
கண்ணதாசன் பற்றிய பதிவை மிக ரசித்தேன். தலைமுறை தாண்டி பாடல்களை ரசிக்க வைத்த படைப்பாளி கண்ணதாசன். பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகாலங்கள் கடந்தும், தம் கவிதைகளால் வாழும் கவியரசரைப் பற்றிய அற்புதமான பதிவு. பகிர்விற்கு மிக்க நன்றி.நூல் அறிமுகத்திற்கும் நன்றி.
ReplyDeleteஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.
ReplyDeleteஅப்படிக்கண்ணதாசனை பாதித்தவன் கம்பன்.
கம்பன் களஞ்சியம் விமர்சனம் ரசிக்கவைத்தது..!
நல்ல நூலை அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
ReplyDeleteகண்ணதாசன் கண்டது யாவற்றையும்
ReplyDeleteஒளி பெறச்செய்தனன்.
நல் ஒலிதரச் செய்தனன்.
கண்ணதாசனின் கனகதாரா துதி
எண்ணங்களையெல்லாம் அன்னை பால் சென்றடையச்செய்யும்.
இந்து மதம் குறித்த சிந்தனைகள் யாவுமே
இதயத்தில் புனிதம் ஏற்றும்.
தத்துவத்தில் வித்தகன் அவன்.
வித்வத்தில் மூத்தவன் அவன்.
எத்திக்கும் தமிழ் ஒலித்திடவே
தித்திக்கும் பாடல் இயற்றியவன்.
அவனைப் போற்றுவோம்.
சுப்பு தாத்தா.
புத்தகப் பகிர்விற்கும், கண்ணதாசன் அவர்கள் பற்றிய இனிய சிந்தனைகளைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி அக்கா.
ReplyDeleteமிக்க நன்றி.உங்கள் பதிவு இப்போதே கம்பன் களஞ்சியம் வாங்க தூண்டுகோலாக அமைந்தது.
ReplyDeleteஎல்லா விவரங்களையும் கொடுத்ததிற்கு மேலும்
ஒரு நன்றி
நல்ல நூல் அறிமுகம்.....
ReplyDeleteநன்றி....
கம்ப ராமாயணத்தை பற்றி இகழ்வாக எழுத வேண்டுமென்று நினைத்து அதைப்படிக்க ஆரம்பித்த கண்ணதாசன் அதன் கவி நயத்தில் மூழ்கி விட்டதாக திரு சொக்கன் அவர்களின் தளத்தில் இன்று படித்தேன். அவரும் நீங்கள் சொல்லியிருக்கும்// கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன் // பாடலைப் பற்றி எழுதியிருக்கிறார்.
ReplyDeleteபடிக்க வேண்டிய புத்தகம். கட்டாயம் வாங்கிப் படிக்கிறேன்.
நூல் அறிமுகம் பளிச்சென்று இருக்கிறது! அருமை!
ReplyDeleteசங்கப் பாடல்கள் பலவற்றை எளிய தமிழில் திரைப்பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன் மட்டும்தான்! கம்பனையும் இப்படிப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பதை அறிந்து வியக்கிறேன். கூடவே நல்லதொரு நூலையும் அறிமுகப்படுத்தியிருக்கீங்கக்கா. உடனே வாங்கிப் படிச்சுடறேன்!
ReplyDelete
ReplyDeleteபலரது எழுத்துக்களை ரசிக்கும்போது அவர்களது எழுத்துக்கள் அறியாமலேயே ஒருவரை ஈர்க்கும்.. அந்த சாயல் அவரது எழுத்துக்களில் பிரதிபலிப்பதும் இயல்பே.
சுவாரசியமாக இருக்கும் போலிருக்கிறதே? கண்ணதாசன் ரசித்து சொன்னதை பெஞ்சமின் எழுதியிருக்கிறாரா அல்லது கண்ணதாசன் ரசித்ததாகச் சொன்னதை பெஞ்சமின் எழுதியிருக்கிறாரா? சென்னை வரும்போது வாங்க வேண்டிய லிஸ்டில் சேர்த்திருக்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் மிக்க நன்றி..
ReplyDelete@அப்பாதுரை.... கண்ணதாசன் ரசித்து சொன்னதை தன பெஞ்சமின் அவர்கள் எழுதி உள்ளார் என்றே நான் புரிந்துகொள்கிறேன்! நன்றி மறுபடி அனைவருக்கும் வழக்கம்போல தாமதமாக்கிவிட்டேன் ...இனியாவது உடனுக்குடன் நன்றி தெரிவிக்கிறேன்!
காலத்தால் அழியாத பாடல்கள் கண்ணதாசனுடையது அருமை...!
ReplyDeleteநல்லதொரு நூலை அறிமுகம் செய்திருப்பதற்கு நன்றி. நூலில் இருந்து எடுத்துக்காட்டிய பகுதிகள் அருமையாக ரசிக்கும்படி உள்ளன.
ReplyDeleteகவியரசரும் கவிச்சக்கரவர்த்தியும் தமிழ்த்தாயின் இரு வேறு காலக் கட்டங்களில் இதயமாய் இருந்தவர்கள். இவர்கள் பற்றிய பதிவு எம்முள் இன்பத் தேனைப் பெருக்கெடுக்க வைத்தது.
ReplyDeleteஒரு நூலை அறிமுகம் செய்வது என்பது வெறும் சொற்கள் மட்டும் அல்ல . நூலாசிரியர் மனநிலையில் இறங்கி..... உங்கள் ரசனையும் கலந்து.... அறிமுகத்தைப் படிக்கும் போதே நூலைப் படித்து விடவேண்டும் என்ற தாகத்தை ஏற்படுத்த வேண்டும்.அந்த சிறந்த பணியைத் திறம்படச் செய்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்...திரு பெஞ்சமின் லெபோவின் இந்த புத்தகத்தைத் தேடுவது தான் என் அடுத்த முயற்சி.
ReplyDelete