Social Icons

Pages

Sunday, November 21, 2010

திருக்கார்த்திகை மாதம்!

தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகைமாதம்! பன்னிரண்டு தமிழ் மாதங்களிலேயே கார்த்திகைக்கு மட்டுமே திருக்கார்த்திகை என்று பெயர் உண்டு. ஆதியிலிருந்தே மனிதன் அக்னியை தெய்வமாகக் கொண்டாடி வந்தான். பெரும்பான்மையான பண்டிகைகளில் நாம் விளக்கேற்றி வைப்பது இந்த அடிப்படையில்தான்.

ஒளியானது குறிப்பிட்ட அளவுள்ள சலனத்திலேயே நம் கண்ணுக்குத் தெரியும். இவ்வுலகில் நாம் கண்ணால் காண முடியாத ஒளியும், காதால் கேட்க முடியாத ஒலியும் உள்ளது. ஆந்தை பூனை இவற்றுக்கு இரவில் கண் தெரியும் மர்மம் இதுவே. நம் கண்ணால் பார்க்க இயலாத அளவுக்கு குறைந்த சலனம் உள்ள ஒளியை நாம் இருள் என்கிறோம். அளவுக்கு அதிகமான சலனம் உள்ள ஒளியும் மனிதனுக்கு இருளாகவே தெரிகிறது.

'தீப மங்கள ஜோதி நமோ நம...'

'அருட்பெரும் சோதி தனிப் பெரும் கருணை'

இறைவன் ஜோதி மயமானவன். சிவம் என்றால் சிவப்பு நிறம் என்று அர்த்தம். சிவம் என்னும் நாமம் தமக்கே உரிய செம்மேனி அம்மான் என்று பாடினார் திருநாவுக்கரசர். சூரியனை நாம் வழிபடுவதும் ஒரு இறைவழிபாடுதான். பின்பு அது ஒளி வழிபாடாகப் பரிணமித்தது. அந்த ஒளி வழிபாடே திரு விளக்கு வழிபாடாயிற்று. பின்னர் அதுவே திருக்கார்த்திகை தீபமாயிற்று.

தூண்டுச் சுடரளைய சோதி கண்டாய் என்கிறது தேவாரம். ஒரு சமயம் பிரும்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் தமக்குள் யார் பெரியவர் என்கிற போட்டி ஏற்பட சிவபெருமானோ தன்னுடைய அடி அல்லது முடியை காண்பவரே வெற்றி பெற்றவராவார் என்று தெரிவித்தார். பிரும்மன் அன்னப் பறவை வடிவம் கொண்டு வானில் பறந்து சென்று முடியைக் காண முயன்று தோற்கிறான். பகவான் விஷ்ணுவோ வராக அவதாரமெடுத்து பாதாள உலகம் சென்று மலரடியைக் காணமுடியாது போக முடிவில் இறைவன் ஜோதிவடிவமாகக் காட்சி அளித்த இடமே திருவண்ணாமலை. ஆகவேதான் இதை அக்னி ஸ்தலம் என்று கூறுவர். இங்கு ஏற்றப்படும் ஜோதியைக் காண பஞ்ச மூர்த்திகள் தப்பாமல் வருவதாய் ஐதீகம். இந்த ஜோதியைத் தரிசித்தால் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெருகுமாம். 'எமது உடல் ஒருமனை உள்ளம் ஒரு பாத்திரம் அதில் உணர்வாகிய நெய்யை ஊற்றி உயிரெனும் தீயை இட்டு பிராணன் எனும் காற்று நிரப்பி அறிவுச் சுடரை ஏற்றி அன்பினால் தூண்டிக் கொண்டே இருந்தால் ஆணவமாகிய மாய இருள் அகலும் பின்பு சிவ பரஞ்சோதி தரிசனம் கிட்டும்' என்று மிக அழகாக அப்பர் சுவாமிகள் கார்த்திகை தீப சரித்திரத்தை நமக்கு எடுத்து இயம்புகிறார்.

இவற்றிலிருந்து திருவிளக்கே இருள் அகற்றும் பெரும் பொருள் என்பது புலனாகிறது. நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கேற்றி நீங்காச் சிவபதம் அடைந்தார்.

கார்த்திகை தீபம் ஏற்றுவோம்! காலமெல்லாம் ஓளிமயமாய் வாழ்வோம்!
மேலும் படிக்க... "திருக்கார்த்திகை மாதம்!"

Tuesday, November 09, 2010

குடை வள்ளல்கள்!
சென்னையில் புயல் என்றால் பெங்களூருக்கு குளிர் எடுத்து விடும்! சின்ன வெயில் அடித்தாலும் டக் என்று வண்ணக்குடை விரிக்கும் வஞ்சியர் இங்கே அதிகம்! அதனால்தான் பெண்களூர் என்றே பலர் சொல்கிறார்கள்!அதென்னவோ மழைஜாக்கெட்டுகள் தொப்பிகள் பிளாஸ்டிக் ஓவர் கோட்டுகள் எத்தனை இருந்தாலும் ஒருகுடையின்கீழ் நாம் நடக்கும்போதுதான் மழையினின்றும் முழுபாதுகாப்பாய் உணர்கிறோம்.
.

காளான்குடை எல்லார்க்கும் தெரியும்.குடை மிளகாயை நன்றாகவே தெரியும்!

சில கல்யாணங்களில் காசியாத்திரையின்போது மாப்பிள்ளைக்கு மாமனார் அல்லது மைத்துனர் குடை பிடிப்பார்! பட்டன் வைத்து அதை அழுத்தியதும் பட் என விரியும் குடை எல்லாம் கூடாது கைப்பிடி வைத்த பழையநாள் கருப்புக்குடைதான் சரி இல்லையென்றால் இதுவே சம்மந்தி சண்டைக்கு சாக்காகிவிடும் அந்த ’சாக்கு’ இல்ல காரணமாகிவிடும் என்கிறேன்! இதுபிறகு பலர்வீட்டில் பரணில் ஒளிந்துகொண்டிருக்கும்!

அர்த்தராத்திரில குடைபிடிப்பதை அல்பமென்று பழமொழில காண்கிறோம். நடுராத்ரி மழைபெய்தா குடைபிடிச்சா என்ன தப்புன்னு தெரியல:)

குடை(குட)வரைகோயில் என்கிறார்கள்.
வண்டியும் குடை சாய்ந்தது என்கிறார்கள்!
குடையின் பொருள் எப்படியெல்லாம் மாறுபடுகிறது பாருங்கள்!

குடைநாயுடு என்று ஒரு சிறுகதையில் வரும் பாத்திரம் மிகவும் பிரசித்தம். கொடைவள்ளல்களை குடைவள்ளல்கள் என்பதும் குடையை கொடை என்பதும் பேச்ச்சுவழக்கில் சிலரிடம் உள்ளதை ரசித்துவிடலாம்!

சிலருக்கு மழை இல்லையென்றாலும் கையில் குடை இல்லாமல் வெளியே போக முடியாத பழக்கம் அல்லது அடிக்‌ஷன் போலாகிவிடும்! கேரளாவில் எப்போதுவேண்டுமாலும் மழைவருமாம் அதனால் பெரும்பாலும் எல்லாரும் குடையோடு செல்வார்கள் என்கிறார்கள்.

குடை விரித்து
மழைதடுக்கும்
மனிதர்களை
வெறுக்கிறேன்

என்று திட்டுகிறது ஒரு மழைக்காதலரின் புதுகவிதை!(நனைஞ்சி உடம்புக்குவந்தா என்ன செய்றதுன்னு அவர்கிட்ட கேட்கணும்!)
குடையும் செருப்பும் இல்லாமல் மாடுமேய்க்க கண்ணனை அனுப்பிவிட்டேனே என்று யசோதை வருந்துவதாக ஒரு பாடல் பெரியாழ்வார் திருமொழியில் வருகிறது. இதிலிருந்து குடை துவாபரயுகத்திலிருந்தே இருப்பது புலனாகிறது. ஆனால் அதற்கு முன்பே வாமன அவதாரத்துக்குழந்தை தாழங்குடையுடன் வருவதாக சிற்பங்களும் ஓவியங்களும் அவதாரக்குறிப்புகளும் நமக்கு காட்டுகின்றன.


சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்


நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு


என்கிறார் பொய்கையாழ்வார் பாம்பின் சிறப்பினைப்பற்றி திருமால் செல்லும்போது குடையாய் மேலே விரியுமாம். வசுதேவர் தலையில் சின்னக்கண்ணனை கூடையில் வைத்து யமுனையை மழையில் கடக்கும்போது குடைவிரித்ததும் அரவு தானே?

குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி என்கிறாள் ஆண்டாள், கண்ணனை நோக்கி.


குடையின் காலம் தான் என்ன?

ஞாபகக்குடையைவிரித்து கொஞ்சம் பின்னோக்கிப்போகலாம்.

புராணங்களில் வெண்கொற்றக்குடையின் கீழ் இருந்து அரசாண்ட மன்னர்களைப்பற்றியெல்லாம் விவரிக்கப்பட்டுள்ளது.
கண்ணகியின் கோ(சா)பத்தில் பாண்டியமன்னைன் குடை சாய்ந்ததே!

நடை அழகு அரங்கனுக்கு குடை அழகு வரதனுக்கு என்பார்கள். காஞ்சி வரதராஜப்பெருமானுக்கு குடைகள் பிடித்துத்தான் திரு உலாவில் செல்கிறார்கள் இதை வரதரின் அடியார் அரும்பக்தர் தொட்டாச்சார் கதையோடு இதையும் காஞ்சிக்குடைஅழகு பற்றியும் தனிப்பதிவாகவே போடலாம்.


’நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்*
ஆளுமே பெண்மை அரசு!'

என்கிறது நளவெண்பா. முகமே ஒரு பெண்ணிற்கு வெண்கொற்றக்குடையாம்! நாற்குணமும் நாற்படையாம்!

கம்பர் பாடலில் பட்டாபிஷேகத்தின்போது சக்கரவர்த்தி திருமகனுக்கு வெண்கொற்றக் குடைபிடிப்பதாக வருமபாடல் எல்லாருக்கும் தெரிந்ததே. .இன்னும் நிறைய இருக்கலாம்.

வரலாற்றினைப்பார்ப்போம்.

15 - ஆம் நூற்றாண்டிலிருந்து எகிப்து, அசீரியா, கிரீஸ், சீன மக்கள் குடையைப் பயன்படுத்தியதாக வரலாற்று நூல்களிலிருந்து நாம் அறிகிறோம்.


எகிப்தில் பாரசால் என்று அழைக்கப்படும் குடைகள் அநேக உருவங்களில் அமைக்கப்பட்டன. சில பாரசால் குடைகள் பனைமரத்து இலைகளைக்கொண்டும், பிடி நீளமாகவும் வர்ணமடிக்கப்பட்டும் இருக்கும். இதன்பெயர்பிய்யாணன். இப்போது போப் ஆண்டவர் செல்லும் போது அவர் பின் தூக்கிச் செல்கிறார்களே அதுபோல இருக்கும்.பழங்காலத்தில் சூரிய ஒளியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காகவே குடை பயன்படுத்தப்பட்டது. கொலகேசிய தாவரங்களின் இலைகளில் தண்ணீர் ஒட்டாமல் இருப்பதற்கு அதிலுள்ள பசை போன்ற பொருட்களே காரணம் ஆகும். இதைப் பார்த்த சீன மக்கள் தாங்கள் தயாரித்த குடைகளில் பசைகளைப் பூசி தண்ணீர் வழிந்தோட வைத்து மழைக்காலத்தில் பயன்படும் குடையைத் தயாரித்து பயன்படுத்தினார்கள்.16 - ஆம் நூற்றாண்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் குடை பிரபலமடைந்தது. இந்த காலக்கட்டத்தில் குடைக்கு அம்ப்ரெல்லா (Umbrella) என்ற பெயர் உருவானது. அம்ப்ரா என்ற லத்தின் வார்த்தைக்கு நிழல் (UMBRA) என்று பொருளாகும். ஐரோப்பாவில் குடை பிரபல்யமாக இருந்தபோதிலும் பெண்கள் மட்டுமே குடையைப் பயன்படுத்தினார்கள். ஜோனாஸ் கான்வே என்ற பெர்சியன் எழுத்தாளர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும்போது குடையைப் பயன்படுத்தினார். அதிலிருந்து ஆண்கள் மத்தியிலும் குடை பிரபலம் அடைந்தது. முதலில் ஐரோப்பாவில் குடைகள் தயாரிக்க மரக்குச்சிகளும், எண்ணெய் பூசப்பட்ட கலர் கேன்வாஸ்களும் பயன்படுத்தப்பட்டன.
வெயிலுக்கும், மழைக்கும் பாதுகாப்பாய் அமையும் குடையை முதலில் கண்டுபிடித்தவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால், பொதுவாக குடையும் ஒரு சீன கண்டுபிடிப்பே என்று நம்பப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் குடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதலில் பட்டால் செய்யப்பட்ட குடைகள் பின், காகிதம், தாளில் செய்யப்பட்டனவாம். இந்தத் தாளில் மெழுகையும், எண்ணெயயையும் ஊற்றி வைத்தனர் சீனர். காரணம் தண்ணீர் எண்ணெயில் ஒட்டாது, ஊறாது என்பதால். பண்டைய சீனாவில் குடைகளின் கம்பிகள், ஆதரக்கோல் அல்லது ஈர்க்கு, கைப்பிடி முதலியவை மரத்துண்டுகள், மூங்கில் ஆகியவற்றால் செய்யப்பட்டன. அரச குடும்பத்தினர் செந்நிறம், மஞ்சள் நிறம் கொண்ட குடைகளையே பயன்படுத்தினர். இதர பொதுமக்கள், சாதாரண குடிமக்கள் நீல நிற குடையை பயன்படுத்தினர். முதலில் செய்யப்பட்ட குடைகள் மடக்க முடியாததாகத்தான் இருந்தன. அதாவது எப்போதும் குடை விரிந்த நிலையிலேயே இருந்தன. மடக்கக்கூடிய குடைகள் கூட 1700 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குடைகள் கொரியா வழியாக ஜப்பானுக்கும், பட்டுப்பாதை வழியாக இன்றைய ஈரான் அன்றைய பெர்ஷியாவுக்கும், மேற்குலகுக்கும் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.பெர்ஷிய பயணியும், எழுத்தாளருமான ஜோனாஸ் ஹான்வே என்பவர் இங்கிலாந்தில் ஏறக்குறைய 30 ஆண்டுகள் குடையை எப்போதும் உடன் வைத்திருந்து பயன்படுத்தியதாக அறியப்படுகிறது.அது 1750ஆம் ஆண்டு

செல்வந்தர்கள் கோச் வண்டியில் போய்க்கொண்டு இருந்தார்கள் சாதாரண மக்களோ சொட்டச்சொட்ட நனைந்தபடி போய்க்கொண்டிருக்க ஹான்வே குஷியாக தன் குடையைப்பிடித்தபடி நடந்துபோனாராம்.குடையை அதிசயமாக கோச் செல்வந்தர்கள் பார்த்துவிட்டு தஙக்ளுக்கும் அதுபோல ஒன்று வேண்டும் என அவரிடம் கேட்டனர். கோச் வண்டிக்காக அதிகம் செல்வழிப்பதை நிறுத்தி ஹான்வே தயாரித்த குடைகளை அவர்கள் வாங்கினார்கள் இதனால் கோச் வண்டிக்காரரக்ளுக்கு வந்ததே கோபம். ஹான்வேயை துன்புறுத்த ஆரம்பித்தார்கள் தங்கள் வியாபாரம்போய்விட்டதே என்று கடுப்பானார்கள் ஆனால் ஹான்வே அஞ்சவில்லை அவர் காலத்தில் குடையின் புகழ் ஆஹா ஓஹோ என பரவியது மடக்கிப்பிரிக்கும் எளிமையான குடையை அவர்தான் கண்டுபிடித்தார்.

. 1830ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ஜேம்ஸ் ஸ்மித் அண்ட் சன்ஸ் என்ற கடைதான் குடைக்கான முதல் கடையாம்

குடைகளில்பலவிதங்கள் உண்டு சாதாரண பாமர ஏழையும்பயன்படுத்தும் கறுப்புக்குடை இது நடு கம்பியில் பிரம்பில் அல்லது கம்பியால் தொடுக்கப்பட்ட கறுப்புத்துணிப்போர்வையை உடையதாக இருக்கும்.

தாழங்குடை சம்பங்குடை பனங்குடை இப்படி சில வகைக்குடைகள்.

கேரளாவில் தாழங்குடை அதிகம். திருநெல்வேலி பக்கம் பனங்குடை

குடையோகம் என்று ஜோதிடத்தில் உண்டு. இதை ஒரு ஜோதிடப்பதிவரின் பதிவில் வாசிக்க நேர்ந்தது.


Chhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் தரும்.

இந்த அமைப்புள்ள ஜாதகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சுயநலமின்றி பாதுகாப்புத் தருவான்.

இன்பத்தில் பாதுகாப்பா? விளங்கவில்லையே என்று ஜோதிரைக்கேட்டதற்கு அவர் கூறினார்.’ இன்பமான சூழ்நிலையில், மனிதன் தகாத செயல்களைச் செய்து விடாமால் அவனைப் பாதுகாக்கும்! அதாவது அவனை நெறி பிறழாமல் பாதுகாக்கும்
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்.’

குடையோக ஜாதகத்தின் பலன்: ஜாதகன் பிறப்புமுதல் இறப்புவரை மகிழ்ச்சியாக இருப்பான். தனது உடன் பிறப்புக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருப்பான். அன்பு மிகுந்தவனாக இருப்பான். சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பவர்களின் மதிப்பைப் (செல்வாக்கைப்) பெற்றிருப்பான். அதீத புத்திசாலியாக இருப்பான். நீண்ட நாள் வாழ்ந்திருப்பான். அதைவிட முக்கியம், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.கடைசியாய் ஒரு குடைஜோக்!

.

காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.

குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார்.

உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.

இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.--பிகு.....குடைபற்றி என் சிற்றறிவுக்கு தெரிந்த வரை சின்னக்கூடை அளவாவது தகவல் கொடுத்திருக்கிறேனா?!
--
மேலும் படிக்க... "குடை வள்ளல்கள்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.