Social Icons

Pages

Sunday, June 29, 2008

முகுந்தா!முகுந்தா!!

'முகுந்த் முகுந்த்' என்று மூச்சுக்கு முன்னூறு தடவை அழைக்கும் பவித்ரா ஒருவாரமாய் மௌனவிரதம் இருக்கிறாள்.

'அழுத்தக்காரி ....அவளோடு தசாவதாரம் சினிமா போகாமல் அறைநண்பன் ரிஷியோடு போய்விட்டேன் என்று கோபம் போலிருக்கு? '

நினைத்தபடி முகுந்த் பெருமூச்சுவிட்டான்..அன்று...." லுக் பவித்ரா...என்னதான் நாம மாஞ்சுமாஞ்சு லால் பாக்குலயும் கப்பன் பார்க்குலயும் ·'ஃபோரம்'லயும் கருடாமால்லையும் சுத்திசுத்திவந்து காதலிச்சாலும் நமக்குக் கல்யாணம் ஆகிறவைக்கும் என்னோட சில கொள்கைகளை நான் விடமுடியாத நிலைமை. அதன்படி புதுப்படம் ரிலீஸாகிற தினம் முதல்நாள் முதல் ஷோ போகத்தான் போறேன்.. இதுக்காக என் பிராஜக்ட் மேனேஜர் கிட்ட ஆபீஸ்ல அனுமதியும் வாங்கிட்டேன். நீ வர்றதுன்னா வா.. எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா நீ வரலேன்னா உடனே நான் போகாம இருக்க மட்டும் முடியாது ,பிகாஸ் என்னோட இருபத்திநாலு வருஷப்பழக்கமிது...எங்கம்மா வயித்துல இருந்த நாளிலிருந்து இது பழக்கமாயிடிச்சி.. ஸாரி பவி" என்று விவரமாய் சொல்லிவிட்டுத் தான் சினிமாபார்க்கப் போனான்.


பாதிசினிமால பாப்கார்ன் சாப்பிடும்போதுகூட பவித்ரா போன் செய்தாள்.

"என் அழகான ராட்சசியே சொல்லும்மா சொல்லு?:)"

"முகுந்த்..சரியா எனக்கு ஆஃபீஸ்ல அப்ரைஸல் நேரம். நீ இப்படி செய்வது நல்ல்லாவே இல்லை ஆமாம்மா...இதுக்குப் பழிக்குப்பழி ஆஃபீஸ் விட்டு நேரா என் ஹாஸ்டல் ரூம் போனதும் பயங்கர ஹாரர்மூவி சிடி பாக்க்கப்போறேன் ஆ..ம்..மா" என்றாள்.......மெய்யெழுத்துக்களை அழுத்தி உச்சரித்து தன் கோபத்தைக்காட்டியபடி.

" அதெல்லாம் எங்க தல படம் முன்னாடி ஜுஜுபி ..இது செம சூப்பர் படம் பவி! அதிலும் அசின் வர்ற சீன் இருக்கே.... 12.ம் நூற்றாண்டில் தையல்காரர்கள் இலலையோ என்னவோ என யோசிக்கவைக்கும் இந்த சீன்ல... அசின் லுக்ஸ் ஆ...ஆ.........awesome!

'ஹேய் அசின்(ங்)கமா பேசாத..... shutup yaar!" சிரித்தபடிதான் போனை வைத்தாள். கோபம்போலதெரியவில்லை அப்படி சில்லியாய் கண்டதுக்கும் முகம் சிணுங்கும் 19ஆம் நூற்றாண்டுப் பெண்ணும் இல்லை பவித்ரா.
சங்ககாலப் பெண் போல காதலனைக் காணாவிட்டால் 'பாலும் கசந்ததடி' எனப் பாடும் பாவை.

அன்பில் அட்லாண்டிக்,பாசத்தில் பசிபிக்என முகுந்திடம் உயிராய் பழகுபவள்.

அப்படிப்பட்டவளிடமிருந்து...ஒருவாரமா ஒருபோன்கால் இல்ல, மின்மடல் இல்லை ...

.'என்னாச்சு பவித்ராவுக்கு? நிஜமாவே கோவிச்சிட்டுதா கிளி?'

'இன்னிக்கு விட்றதா இல்ல நேராய் அவள்வேலைசெய்யும் ஆபீஸ்போய் கேட்டுடறென்'

முகுந்த் வீரமாய்க் கிளம்பினான். அங்கே கிடைத்த தகவல் அவள் ஆபீசுக்கே ஒருவாரமாய்
வரலையாம்............ லீவ் போட்டிருக்காளாம்...

அப்போ உடம்புதான் சரி இல்லை...
எட்டுகிலோ எடையா....என்ன ஏழுகிராம் எடைகூட இல்லாத அந்த உன் செல்போனை தூக்கவும் சக்தி இல்லையா பெண்ணே?

அப்பொழுதுதான் ஆபீஸ் வாசலில் அவள் தோழி அகிலாவைப்பார்த்தான்.

"அகிலா!அகிலா! " என்று நேருக்குநேர் படத்துப்பாடலாய்க் கூவி அழைத்தான்.

அகிலா சட்டென திரும்பவில்லை அவளால் அதுமுடியாது 90.5கிலோ எடை தி.மகால்!

முகுந்தைக்கண்டதும் கண்மலர" முகுந்த்! ச்சென்னாகிதீரா?' என்றாள். மண்ணின்மகள்..கன்னடமே பேசுவாள்
.
ரொம்பவும்' ஞே 'என விழித்தால் மட்டும் ஆங்கிலத்தை அனுமதிப்பாள்..

அவளுக்கு பவித்ராவின் காதலன் முகுந்த் என நன்கு தெரியும் ஓரிருமுறை மூவரும் அடிகாஸில் 'செட் தோசை' சாப்பிட்டிருக்கிறார்கள்.

"ச்சென்னகிதினி.. அதாவது நல்லாருக்கேன்..இதுக்குமேல பெங்களூர்வந்து ஒண்ணேகால் வருஷமே ஆகி இருக்கும். என்னை சோதிக்காதீங்க சிஸ்டர்.. ஆங்கிலம் அந்நியமொழி என்று இந்தியர்களிடம் கதைக்காத நீங்க, கொஞ்சமே கொஞ்சம் .தெரிஞ்ச உங்க மைசூர்தமிழ்லயாவது பதில் சொல்லுங்க எங்கே பவித்ரான்னு?'

" ஆமாவா ? பவித்ரா ஆபீஸ் வந்த் கொண்டில்லா.. .
நான் வேணா அவ ஹாஸ்டல்ரூம் போயி நிங்க தேடிக்கொண்டு வந்ததா சொல்லி அவளை மத்யானா மூறு கண்ட்டேக்கே லால்பாக் கண்ணாடிமனைகே வரச்சொல்லட்டுமா?'

புண்ணியமாப்போகும்! உன் பொன்னுடலும் சற்றே குறையும்! செய்யம்மா செய்.. என்று மனசு சொல்ல "மாடு தாயி மாடு"என்றது முகுந்தின் வாய்! (மாடு=செய் (கன்னடத்தில)

நிஜமாவே கோவிச்சிட்டாளா? இல்லைஉடம்புசரி இல்லையா?

அகிலா செய்த ஏற்பாட்டில் லால்பாக் வந்தாள் பவித்ரா.

கண்டதும் முன்பு காதல் வந்தது இப்போ கத்தல்தான் வந்தது முகுந்த்திற்கு.

"ஹலோ என்ன மேடம்! ஃபோன்ல பேசமாட்டிங்களாக்கும்? என்னை நினைவு இருக்குதா? என்பேரு முகுந்த். ஒருவருஷமா உன்னை துரத்தித்துரத்தி காதலிக்கறேன், கூடிய சீக்கிரம் நமக்கு பெத்தவங்க சம்மதமோட கல்யாணமும் நடக்க திட்டம் நடக்குது இந்த நிலைமைல உன்கிட்ட சொல்லிட்டு நான் தசாவதாரம் சினிமா போனால் அதுக்கு நீ நரசிம்ம அவதாரம் எடுக்கணுமா இப்படி?

மௌனமாய் பார்த்தாள் பவித்ரா.

அடப்பாவி பவி! ஒருவாரமா பாக்கலயே! இப்போ கண்டதும் முகுந்தா முகுந்தான்னு கட்டிப்பேன்னு நினச்சா? அதுக்குதானே லால்பாக் ப்ளான் போட்டிருக்கா உன் தோழி - அந்த கன்னடத்துப் பைங்கிளி?"


அது அது....

என்னாச்சு பவித்ரா? பொறுமை போகுது எனக்கு..

அது அது...எனகு பேசவே வரல

ஏன் அதான் பேசறியே?

அது அது...முகுதா முகுதா


என்ன கண்றாவிமொழி பேசறே இப்போ?

நா தமிதான் பேசறது

என்ன தமிதாவா? நமிதாதான் எனக்கு தெரியும்.வாவ் நமீதா!!!(..........){புள்ளீயிட்ட இடங்களில் முகுந்த் மனசு நினச்சதது என்னன்னு யாருக்குத் தெரியும்?:)}

ஐயொ முகுதா முகுதா எனகு ஒருவாரமா பேசவரல முனபோல
வாய்ல கூழாங்கல்லா அதை கடாசிட்டு ஒழுங்கா பேசு


இல இல

என்ன இலை? ஓ வெற்றிலையா உன் வாய்ல? நோ ப்ராப்ஸ்! அந்த புல் ஓரமா துப்பிடு...அப்புறமாவாவது உன் பேச்சு எனக்குப் புல்லரிக்கட்டும்!

எபடி சொலவே முகுதா?

என்ன பவி இது? ஆர் யூ மேட்? சரிஎழுதிக்ககாட்டு..

கைப்பையிலிருந்து தேடி ரிலையன்ஸ் பில்லை எடுத்தாள் அதன் பின்பக்கம் பேனாவில் ஏதோ எழுதித் தந்தாள்.

அதில் அவள் எழுதி இருந்ததை படித்ததும் ஆச்சரியமாய்,
" அப்படியா? ரியலி? ஸடனா உனக்கு மெய்யெழுத்தெல்லாம் சிக்கிக்கொண்டு விட்டதா அந்த ஹார்ரர் மூவிபார்த்த அதிர்ச்சியிலா ஆனது இப்படி? அதான் முகுதாமுகுதா என்கிறாயா? அடப்பாவமே மெய்மறந்த மேனகை பவித்த்ரா?",


ஆமா ரொப பயகரமான பட அது... நடுல அயோ நு வீறிடேன் அபோ இபடி ஆசுமுகுதா


வெல்!இந்தவியாதிக்கு என்ன மருந்து? ஒருபாட்டில் நிறைய மெய்எழுத்தை எழுதிப்போட்டு குலுக்கி உன் வாய்ல ஊற்றட்டுமா?

உனகு சிரிபா இருகா முகுதா இதுகுதான் நா எதுவு சொலல ஒரு வாரமா....

கோச்சிக்காத டியர் சரி வாவா..எனக்குத்தெரிஞ்ச நல்ல டாக்டர் மல்லேஸ்வரத்துல இருக்காரு, உடனே போகலாம் பைக்ல ஏறி உக்காரு.

பைக்கை ஸ்டார்ட் செய்தான்முகுந்த். ஆனால் அது ஸ்டார்ட் ஆகாமல்படுத்தியது. லால்பாக் வாசல் வரை நடந்துவந்து வெளியே பார்த்தால் பெட்ரோல்விலை ஏறினதை முன்னிட்டு பெங்களூர்ல ஆட்டோ ஸ்ட்ரைக்காம், ஒரு ஆட்டோவும் கிடைக்கவில்லை.

சட்டென எதிரில் மல்லேஸ்வரம் என்று போர்டுபோட்டு வந்த பஸ்சில் ஏறினர்.

சில்லறையா இல்ல என்கிட்ட, எல்லாம் ஐநூறா இருக்கு..பவி நீயே டிக்கட் வாங்கிடு என்ன?

பெங்களூர் பஸ்களின் சிஸ்டம்படி பெண்கள் செல்லும்முன்பக்கமாய் ஏறிய பவித்ரா , கண்டக்டர்" டிக்கட் எல்லிகே?"என்றதும் "மலெசுர" என்றாள்.


கண்டக்டர் குழம்பிப்போனவராய்," மலே ஜுரா? (மழைஜுரமா?) மையல்லி ஜுரானா?(உடம்புல ஜுரமா) அதுக்கே டாக்டரத்தர ஹோகி.." என்றார் கிண்டலாய்.

நல்லவேலையாய பின்புறம் இதனை கவனித்து முகுந்த் ஓடிவந்து அவள்கையிலிருந்த ரூபாய்நோட்டை வாங்கி சமாளித்தான்


"தாஙஸ் முகுதா? என்று பவித்ரா சொன்னதை ஏதோ அயல்நாட்டு மொழி என பஸ்ஸில் அதிசயமாய் சிலர்பார்த்தனர்.

பவித்ரா இங்க நீ ஏதும் பேசாமல் வாயேன் ப்ளீஸ்..

எபடிமுகுதா சாபிடாம இருகலா பேசாம இருகலாமா?

கஷ்டம்தான் உனக்கு...கலகலன்னு நீ பேசினாலேஅந்த அழகே அழகு..இதுக்குத்தான் காதலன் தசாவதாரம் சினிமாபோனால் கனிவாய் வாழ்த்து சொல்லி இருந்திருக்கணும் என்கிறது...நனவில்அழுத்திப் பேச முடியாத உனக்கு கனவு மெய்ப்படவேண்டும்...ஹ்ம்ம்....முத்தைத்திரு என்கிற அருணகிரியார் பாடலை இப்போ உன்னைப்பாடசொல்லி யாரும் கேட்டிடக்கூடாது..ஹஹ்ஹா


ஹே சிரிகாத...

டாக்டர் அவளை பரிசோதித்துவிட்டு மூக்குக்கண்ணாடியை கழற்றியபடி,


" இது'மெய்யோ போ·பியா'என்ற நோய் .அதாவது பயங்கரமான மயிர்க்கூச்செறியும் ஹாரர் படம்பார்க்கும்போது சிலருக்கு கண்முழி பிதுங்கி,முற்றிலும் தொண்டைஅடைத்து மெய் எழுத்தெல்லாம் சிறைபட்டுப்போயிடும் .... "


இதற்கு என்னசிகிச்சை டாக்டர் அமெரிக்கா போயித்தான் ஆபரேஷன் செய்யணும்னு சினிமா டாக்டர் மாதிரி சொல்லிடாதீங்க?"

நோ நோ...இது ஒருமனபிராந்தி

அப்போ பீர் அல்லது நல்ல ப்ராண்டி குடிக்க சொல்லவா?

யூ நாட்டி பாய்! இது ஒரு மனப்ரமைன்னேன்..தானே சரியாய்டும்


எப்போ டாக்டர்? இன்னும் மூணுமாசத்துல எங்களுக்குக் கல்யாணம் வேற!
\

"ஆமா டாகடர!! கலயாணதுகு நீ(ங்)க வா(ழ்த்)த வ(ந்)துடு(ங்)க
க(ட்)டாய (ம்)" என்றாள் பவித்ரா.

"ஆஹா அதுகென .. வதுடா போசு"என்ற டாக்டர் "ஐயாம் சாரி ..இந்த வியாதி கண்டேஜியஸ்தான் பாருங்க ஒருக்கணத்துல எனக்கும் தொத்திக்கிச்சு' என்றார் தமாஷாய்.

பவித்ராவை அழைத்துக்கொண்டு முகுந்த் தன்அறைக்கு வந்தான்.

"என்ன பெரிய படம் அது? ச்சும்மா உஜல்பா!(உஜல்பா= ஒன்றுமே இல்லாத என அர்த்தம்! இது எந்த மொழியுமில்லை...சொந்தமொழி:)) படத்துக்கு நீ பயந்து இப்படி ஆகி இருக்கணுமா? அச்சம்தவிர் தெரிஞ்சுதா? ம்ம்ம் இன்னிக்கு..ரண்டுல ஒண்ணு பாத்துடறேன்.. ஆமா .நீயும் மறுபடி அந்தப்படம் பாக்கபோறே என்கூட இப்போ, சம்ஜே? மனசிலாயீ? கொத்தாயித்தா?

நானா? நோ முகுதா நோ... பய பய எனகு

அட! ச்சும்மா இப்படி வந்து இந்த மதுரைவீரன் பக்கத்துல உக்காரு!

தயங்கிஅவன் அருகில் உட்கார்ந்துகொண்டாள் பவித்ரா.
படம் ஆரம்பமானது..

பார்த்துக்கொண்டே வந்த பவித்ரா " வேடா வேடா " என்றாள்

யார் வேடன்?

இல...மூவி பாக வேடா

படம் பாக்க வேண்டாமா?

ஆமாஆமா

எனக்குப் பாக்கணும்..நீ வேணும்னா கண்ண மூடிக்கோ.."

அடுத்த சில நிமிடங்களில் முகுந்தனுக்கு முகம் வியர்க்க ஆரம்பித்தது.

அம்மாடியோவ்...பயங்கரமா இருக்கே... பிசாசு இங்கயே வந்துட்டமாதிரி இருக்கு? உடம்பெல்லாம் ந நடு டுங்குதே..ஆ...
அய்யோ.....இதென்ன இப்படி என் மேல வந்து அட்டாக் பண்றதே
பிசாசு...யேய் யேய் விடு..உவ்....

" ஐய்யோ" என்று அலறினான்.அப்படியே மயக்கமாகி சோபாவில் சரிந்தான்.

திடுக்கிட்ட பவித்ரா"முகுந்த்த..என்னாச்சு முகுந்த்? இப்படிகூச்சல்போடறே, பயந்துட்டீயா நீயும்?"என்றாள்
அப்போதுதான்
சட்டென தனக்கு மெய்யெழுத்துக்கள் மீண்டுவந்ததை உணர்ந்தாள்.

"முகுந்ந்ந்ந்த் ஐ காட் இட் யா"என்று கைதட்டிக்கூவினாள்.

மயக்கம் தெளிந்த முகுந்த்,"பவிரா! எனகு பயமா இருகு....இபடி ஒரு சினிமா, என் வாகல பாததில.. முதல அத நிறுது...வேடா வேடா ...நிறுது நிறுது"என்றான்.

"ஐய்யோ..முகுந்தா முகுந்தா என்னாச்சு ? எனக்கு சரியாயிடிச்ச்ச்சே...உனக்கு இப்போ மெய்யெழுத்துப்போச்சே ஓ காட்!. இப்போ நீமாட்டிக்கிட்டியா... முகுந்தா! முகுந்தா..."--
மேலும் படிக்க... "முகுந்தா!முகுந்தா!!"

Sunday, June 15, 2008

அப்பாவின் நினைவில்....

இலையைச்செய்யமுடியும்
அதன் ஈரத்தை செய்ய முடியுமா
விசிறியைச் செய்யமுடியும்
காற்றைக்கொண்டுவரமுடியுமா
என்ற ஏதோ ஒருகவிஞனின் கூற்றாய்

'அப்பா...! '
உங்களைப்பற்றி நினைக்கலாம்,
ஆனால் நேரில்நின்று
பேசுவது போலாகுமா?
உங்களைப்பற்றிய
ஒலிப்பதிவில் குரலும்
ஒளிப்பதிவில் உடலும்முகமும் உண்டு
ஆனாலும் அதில் உயிருண்டா?
உணர்வுப்பரிமாற்றங்கள்
அருகில் இருக்கும்போதுதானே?
பிறந்த வீட்டு நினைவுகளை
அவ்வப்போது
அசைபோடும்மாடுகள்தான்
புகுந்தவீடுவந்துவிட்ட
பெண்கள்!
மேலும் படிக்க... "அப்பாவின் நினைவில்...."

Saturday, June 14, 2008

பெண்ணின் ராஜாங்கம்!

தமிழ் இலக்கியங்களின் சிறப்பே அதனை நாம் ஆழ்ந்து படிக்கும் போது அதில் வரும் சில அழகிய காட்சிகள் மனதைவிட்டு நீங்காமல் அப்படியே பதிந்துவிடுவதுதான்.

பெரும்புலவர் ஒருவர் தாம் எழுதிய கதையில் வரும் கதாநாயகியின் பெண்மைத்தன்மையை இப்படித்தான் அழகாக படம்பிடித்துக்காட்டுகிறார்.

அந்தக்கதையின் கதாநாயகி ஒருமகாராணி. தன்னுடைய சிறந்த நான்கு குணங்களை நாற்படையாகவும், தன்னுடைய ஐம்புலன்களையும் சிறந்த அமைச்சர்களாகவும் பெற்று ஆட்சி செய்வதாக தன் கவிதைகளில் வர்ணித்துள்ளார்.

ரத கஜ துரக பதாதி என்று சொல்லப்படும் நால்வகைப்படையும் அவளுடைய சிறந்த குணமாகிய அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு என்பவைகளாம் .

அடுத்து அவளுடைய மந்திரி சபையில் ஆலோசனைகூறும் அமைச்சர்களைக் கூறுகிறார்.

மெய்- அவளுடைய உணர்ச்சிமந்திரியாம்
வாய் - சுவைமந்திரி
கண்-காட்சி மந்திரி
மூக்கு- நுகர்ச்சி மந்திரி
செவி- கேள்வி மந்திரி

அமைச்சரவை இருந்தால் மட்டும்போதுமா அழகிய வெண்கொற்றக்குடை வேண்டாமா? அதுதான் அவளின் அழகிய முகம்!

அவளுடைய ஆட்சிக்கு வெற்றி முரசுதான் காற்சிலம்புகள்.அதன் ' சல்சல் ' என்ற ஓசைதான் முரசொலி. அத்துடன் அவளின் இருவிழிகளும் வேற்படை ,வாட்படைகளாம்!

இதன் கீழேதான் பெண்ணியல்பாகிய ராஜாங்கம் நடக்கிறது.
இந்த ராஜாங்கம் எப்படி நடக்கும் ? போர்முறை எப்படி இருக்கும்?
கேளுங்கள் அதையும்.....

நாணப்படை யானைமீது ஏறியபடி அவளை தலைகுனியவைக்கிறது.

அவள் வரும்போது 'வருகிறாள்மகாராணி' என்று காற்சிலம்புகள் முரசொலிக்கின்றன.

அப்போது "கண்ணே" எனும் குரல்கேட்கிறது.

உடனே செவி என்னும் பெயர் கொண்ட கேள்விமந்திரி, தன் இலாக்காவில் அந்த வார்த்தையை பதிவு செய்துகொள்கிறார்.
இப்படி ஒருகுரல் கேட்டதை காட்சிமந்திரியாகிய கனம் கண் அவர்களுக்குத் தெரிவிக்கிறார்.

உடனே காட்சி மந்திரி நிமிர்ந்து பார்க்கிறார்.

அடுத்தவினாடி அச்சம்படை(அதாவது தேர்ப்படை) வந்து அந்த மகாராணியை பயமுறுத்துகிறது.

அவள் அச்சத்தில் அழகுததும்ப நிற்கிறாள்.

உடனே குரல் கொடுத்த் ஆண்மகன் அச்சம்தவிர்க்க அங்கே வருகிறான்.

அவளது நுகர்ச்சிமந்திரியாகிய கனம் மூக்கு அவர்கள் தன் இலாக்காவில் அந்த ஆடவனின் மணத்தைப்பதிவு செய்து கொள்கிறார்.

அந்த அளவுக்கு அருகில் வந்துவிட்டான் அவன்!

அப்படியே அவளைக்கட்டிக்கொள்கிறான், உதடுகளைப்பார்த்தவன், உடனே கமலஹாசனின் சாகசம் செய்துவிடுகிறான் !

சுவைமந்திரியான வாய் அவர்கள் 'அதன் சுவை அலாதி 'எனப்பதிவு செய்கிறார்.

அடுத்து அவளை இறுக அணைத்துக்கொள்கிறான்.

உணர்ச்சி மந்திரியாகிய முதல் மந்திரி மாண்புமிகு மெய் அவர்கள், அந்தப்பெண்மை உணர்ச்சிக்கு முழு அனுமதி தருகிறார்.
நாணத்தை உடைக்கிறது படை.

பிறகு,,பிறகு...இனிய இரவுதான் விடியும்வரை..

இதுதான் அவள் ராஜாங்கத்தின் ஒருநாள் நடப்பு!

இந்த நடப்பையும் ராஜாங்க இலாக்காக்களையும் பிரித்து வைத்திருக்கிறார் ஒருபுலவர்.

யார் அந்தப்புலவர்?

அவர்தான் புகழேந்தி!
யார் அந்த மகாராணி?

நளனின் மனைவி தமயந்தி!

'இக்காட்சி தரப்படுவது நளவெண்பாவில்..

நாற்குணமும் நாற்படையா
ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா
வேற்படையும் வாளுமே கண்ணா
வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு!'மேலும் படிக்க... "பெண்ணின் ராஜாங்கம்!"

Monday, June 02, 2008

மானே மானே மானே உன்னைத்தானே!

எதற்கும் ஆசைப்படாத சீதா தேவி மானைக்கண்டு மட்டும் மயங்கியது மானுக்கே சிறப்பு! ராமாயணம் தோன்ற மையக்காரணமே மான் தான் என்பதையும் நாம் இங்கே நினைவில் கொள்ளலாம்.


அந்த காலத்து அரசியர்களது நந்தவனத் தோட்டத்தில் மான்கள் தான் முக்கிய இடத்தைப்பெற்றிருக்கின்றன. இலக்கிய நூல்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலும் தலைவன் - தலைவி காதலுக்கு மான்கள் உவமையாகப் பயன்படுத்தப்படிருக்கின்றன. 'குறுந்தொகை'யில் இவற்றை நிறையவே காணலாம்.


விலங்குகளில் பெண்மையைக் கண்ணில் கொண்ட பிராணி மான்தான். புராணகாலத்திலிருந்தே மான்களுக்கு ஒரு மரியாதையான செல்வாக்கு இருந்திருக்கிறது
"மானல்லவோ கண்கள் தந்தது?" என்று இந்தகாலத்திய கவிஞர் பெண்களைப்பற்றி அவளது கண்களை மான்களோடு ஒப்பிட்டு இருக்கிறார்! 'அன்புள்ள மான்விழியே' --இப்படி ஏராளப்பாடல்கள்!


'இந்தமான் உங்கள் சொந்தமான்' என்ற பாடலில் ஒருபெண்ணே தன்னை மானாக பாவித்துப்பெருமைப்படுகிறாள். இன்னும் மான் பாட்டு நிறைய இருக்கலாம்.


இறைவனை நோக்கி வழிபடும் அடியார்கள்'எம்மான் பெருமான்' என்றே பக்திப்பரவசமாய் அழைக்கிறார்கள்.


ரிஷிகள் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்களெல்லாம் தவம் செய்யும்போதும் தங்கி அமர்ந்துகொள்ளவும் மான்தோலையே உபயோகப்படுத்தினார்கள்.


மானம் பற்றிக்குறிப்பிடும்போது கவரிமானைத்தான் அடிப்படையாக வைத்துப் பாக்கள்புனையப்படுகின்றன .உதாரணத்திற்கு அனைவரும் அறிந்த திருக்குறளேஇருக்கிறது.


இப்படி அனைவராலும் போற்றப்படும் மான் ஒருவகையில் பாவப்பட்ட பிராணி என்றும் சொல்லத் தோன்றுகிறது. ஆமாம்,


மானைப்படைத்த இறைவன் புலியையும் படைத்ததுபற்றி இரக்கமனங்கள் நிறையவே சிந்திப்பதுண்டு.


அனைவரையும் வசீகரிக்கும் அபூர்வமான தோல் அமைப்பு மான்களுக்கு அதிலும் புள்ளிமானுக்கு உண்டு. இது இயற்கை அவைகளுக்கு கொடுத்துள்ள வரப்பிரசாதம்


புள்ளிமான் தவிர சாம்பல்நிறமான் ஒற்றைக்கொம்புமான் கலைமான் கவரிமான் எனப்பலவகைகள் இருக்கின்றன.

சாம்பல்நிற மான்கள் குட்டிக்காளைமாடுகள்போல இருக்கும் இதை அவ்வளவாய் யாரும் பார்த்து ரசிப்பதில்லை.

இந்தியாவின் எல்லா காடுகளிலும் இந்தவகை மான்கள் அதிகமிருக்கும்

இறைச்சிக்காக இவற்றைக்கொல்லுகிறார்களாம்

இந்தியக் காடுகளில் 5000புள்ளிமான்களுக்குஒன்று என இது இருப்பதாய் சொல்கிறார்கள்.(காட்டிலாகா அதிகாரி திருலதானந்த் இதை விளக்கினால் உதவியா இருக்கும்)

கவரிமான் இலக்கியங்களில் பெரிதும் சொல்லப்பட்டாலும் இதைபப்ற்றி மான் சரணாலய்ங்களில் விசாரித்த போது அப்படி ஏதும் இல்லை என்கிறார்களாம்.டைனோசர் போல முன்பு எப்போதோ இருந்திருக்கலாம்.

பொதுவாக மான்கள் இயல்பில் பயந்த சுபாவமுடையவை. மிகமிக சென்சிடிவ் என்கிறார்கள்.

எதிரிகளிடமிருது தன்னை காத்துக்கொள்ள மணிக்கு 150முதல்200மைல்வேகதில் ஓடினாலும் அதனிடம் மனதில் பயம் அதிகம் உண்டு. தைரியம் எதிர்த்துப் போராடுதல் என்பதெல்லாம் மான்களுக்கு இல்லைஅந்த பயம் காரணமாக்தான் தன் உடம்பில் வேற்றுப்பிராணிகள் கால் அல்லது பல் பட்டாலும் பதறிவிடும்.

கலைமான் என்பது இன்னொரு ஜாதி. இதற்கு அழகேஅதன் கொம்புகள்தான். நான்குவகை சிலசமயம் ஆறுவகையான்கொம்புகள் கூட இருக்கும். இந்தமான்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் நடக்கும் .கொம்புகளை முட்டி முட்டிஅவைகளை இழந்துவிடும்

டிஸ்கவரி ஆஃப் இண்டியா சானலில் இந்தகலைமான்கள் ஒன்றுகொன்று முட்டிக்கொண்டு மோதி காயப்பட்டு கொம்புகளை ஏன் இழக்கின்றன என்று சிலர்கேட்டபொழுது அவர்கள் சொன்னபதில்"எல்லாம் பெண்மானூக்காகத்தான் இப்படி ஆண்மான்கள் முட்டிக்கொள்கின்றன இப்படி மோதும்பொழுதில் அவற்றிர்க்கு அருகில் ஒருபெண்மான் இருக்கும் என்று ஆதாரபூர்வமாய் சொல்கிறார்கள்

இந்தப்போட்டியில் எந்த மான் ஜெயிக்கிறதோ அந்த மானோடுதான் பெண் மான் இணையுமாம்!(மானுக்குக்கூட ஆணிடம் வீரம்தான் பிடிச்சிரூக்கு:))

மான்கள்கூட்டம்கூட்டமாகதான் போகும்.
தனியாக எந்தமானாவது சென்றுவிட்டால் அந்தமானை வேறு எந்த மான்கூட்டமும் அவ்வளவு எளிதாக தங்கள்கூட்டத்தில் இணைத்துக்கொள்ளாது ,முட்டித்தள்ளும்

இந்த நிலை சிலநாட்களுக்குமட்டுமாம் பிறகு அந்த மான் கொஞ்சம்கொஞ்சமாய் வசியம்செய்து மற்றமான்களோடு சேர்ந்து கொண்டு விடுமாம்!

மான்களில் ஆண்மானுக்குதான் கொம்பு உண்டு(மயிலிலும் ஆண் மயிலுகே தோகை!!! ஆடவராட்சி எல்லா இடத்திலும்:))

நான்குவகைக்கிளைகள் இரண்டுவகைகிளைகள் ஒற்றைக்கொம்புமான் என்று முன்றுவகையான மான்கள் உண்டு' இந்தக்கொம்புகள் பார்க்க கம்பீரமாய் அழகாய் இருப்பதோடு மான்கொம்புகள் மானிடர்க்கு மருத்துவ ரீதியாய் நல்லபலனும்
தருகிறது.

புற்று நோய்தடுக்க உடம்பில் அடிபட்ட புண்களை ஆற்றுவதற்கு ரத்தம் சுத்திசெய்ய இதயத் துடிப்பை சரிசெய்ய மான்கொம்பு துகள்கள் புராணகாலத்திலிருந்தே உதவிக்கொண்டிருப்பதைஅறிகிறோம்.

கஸ்தூரி எனும் மருந்து மானிடமிருந்துதான் எடுக்கப்படுகிறது.

இது எல்லா மான்களிடமிருந்தும் கிடைக்காது குறிப்பிட்ட வயதான் மானின் கழுத்துப் பகுதியில் ஒரூபக்கம் வெட்டி எடுக்கப் படுகிறது.
சிலமான்கள் இறந்த உடனேயும் எடுத்துவிடுவார்கள்

மானின் இறைச்சிக்காக அவைகள் சமீபமாய் அநியாயமாய் கொல்லப்ப்படுகின்றன.இவற்றால்புள்ளி மான் இனமே அழிய வாய்ப்பு உள்ளது

மற்றநாட்டின் காடுகளைவிட இந்தியக் காடுகளில் தான் புள்ளிமான்கள் அதிகமாம்

மானை யாரும் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கக்கூடாது அப்படி ஆசைப்பட்டால் அரசிடமிருந்து லைசன்ஸ்பெற்றிருக்க வேண்டுமாம்.

சென்னை கிண்டி மான்கள் பராமரிக்கும் வளாகத்தில் வளர்கின்ற மான்கள் நம்மைப்போல சாதம் உப்புபோட்டுதயாரிக்கும் பலகாரமெல்லாம் உண்பதாய் சிலர் சொல்கிறார்கள் ...பெங்களூர் லால்பாக்கில் மான்களுக்கென்று தனிபகுதி உண்டு. கடலைகளை தடுப்புக்கம்பிவழியே நம்கையில்வைத்துக்
கொடுத்தால் தயங்கிவந்து பின்
எடுத்துக்கொள்ளும்!

காட்டுவிலங்குகளில் மான் தான் சாதுவானது(அதனால்தான் பெண்ணோடு ஒப்பிடுகிறார்களோ)

மான்கள் இருக்கும் பகுதியில் நாம் பிளாஸ்டிக் பேப்பர்களை போடாமலிருந்தால் அவைகள் அவற்றை தின்னாமல் ஆரோக்கியமாய் இருக்கும்.

புராணகாலம்மூதல் இன்றுவரை இந்தியாவிற்கு பெருமைதேடித் தரும் மான்களை விரும்பாதவர்கள் இருக்கமுடியாது.

ஆமா, இந்த அதியமான் சக்திமான் வேங்கைமான்...என்றெல்லாம் எப்படி வந்தன?:)
நடிகர்சல்மான்கானுக்கு சிலநாட்கள்முன்பு மான்விஷயத்தில் பேர் கான்!(GONE!)

சரி..ஒரு ஜோக்கோட பதிவை முடிச்சிடலாமா?:)

ஒருகோயிலில் ஒருத்தர் துள்ளிதுள்ளி ஓடிட்டு இருந்தாராம் . ஏன் அப்படி ஓடறார்னு கேட்டதுக்கு 'அவர் பக்திமான் அதான்' னு பக்கத்துல இருந்தவங்க சொன்னாங்களாம்!!

************************************************************************
மேலும் படிக்க... "மானே மானே மானே உன்னைத்தானே!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.