Social Icons

Pages

Monday, June 24, 2013

கம்பனை ரசித்த கண்ணதாசன்!






இந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன்  கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின்  வலிமை குன்றாமல்  சுவைபடப்பாடல்களை எழுதியப்பெருமை  கண்ணதாசனுக்கு உண்டு.

ஒளியின்றி நிழல் இல்லை, வாசித்ததின் பாதிப்பின்றி படைப்பில்லை.
அப்படிக்கண்ணதாசனை  பாதித்தவன் கம்பன்.

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல  என்று முதலில்  அந்தப்புலவன் பெயர்தனை ஏன் வைத்தான் பாரதி என்றால். அறிவின் சிகரம் கம்பன்!  கல்வி சிறந்த தமிழ்நாடு  என்ற பாரதி ’கல்வி’ என்றதுமே உடனே உயர்கம்பன் பிறந்த தமிழ் நாடு என்றான்!! கம்பன் பிறந்த  உயர்தமிழ்நாடில்லை  உயர்கம்பன் பிறந்த தமிழ்நாடாம்!

கம்பனைப்பற்றி சான்றோர் பெருமக்கள் பலர்  புகழ்ந்து  வியந்து எழுதி உள்ளார்கள் . அப்படி எழுதிய  நூல்களில் நான் அண்மையில் வாசித்த புத்தகம்தான் கம்பன் களஞ்சியம் என்னும்  அருமையான புத்தகம்.இதனை எனக்கு அளித்தவர் சகோதரர் பேராசிரியர்பெஞ்சமின் லெபோ அவர்கள்  நூலாசிரியரும் இவரே!


 கம்பனின் புகழ்பாடி தமிழ் வளர்க்கும் இவர்  கம்பராமாயணத்தில் மூழ்கித்  திளைத்த தனது  இனிய அனுபவங்களை  இந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.
அவற்றில்  கண்ணதாசன் ரசித்த கம்பன் என்னும் தலைப்பில் சகோதரர்  எழுதியதை இன்று  கவிஞரின் பிறந்த நாளில்  நாம்  பார்க்கலாம்.


கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாக  மாறிய  அகலிகை  இராமனது பாதத்துகள் பட்டதும் மீண்டும் பெண்ணாக மாறுகிறாள்..அதற்கு முன்புதான் தாடகை என்னும் அரக்கியை  சுடுசரம் கொண்டு வீழ்த்தி வந்திருக்கிறான்  இராமன். அவனது கைவண்ணம் கண்டு  பிரமித்த  விஸ்வாமித்திரர்  இப்போது கால் வண்ணம் கண்டு  மகிழ்கிறார்.


அதனைத்தான்  கம்பன்,


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம் 
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன் 
 கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன் 


என்கிறார்!

இதனை கண்ணதாசன்  ‘பால் வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம்  விழிகள் கண்டு  மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்  என்று  பாடல் எழுதினார்.
 
கண்வண்ணம் அங்கே கண்டேன்
’கைவண்ணம்இங்கே கண்டேன்
பெண்வண்ணம் நோய் கொண்டு  வாடுகிறேன்

என்று ம் தொடர்கிறது!

கம்பனில் கவியரசர்  திளைத்து ரசித்த பகுதிகள்  ஏராளம்   விதி பற்றிய  பாடல் ஒன்றை கவிஞர் மிகவும் ரசித்திருப்பதை தியாகம்  படத்தில் வரும் இந்தப்பாடல்  சொல்கிறது.

நதி வெள்ளம் காய்ந்துவிட்டால்
நதி செய்த குற்றமில்லை
விதி செய்த குற்றமின்றி
வேறயாரம்மா?

சிறப்பான இந்தவரிகளுக்கு  பிறப்பெடுத்துக்கொடுத்தவை கம்பனின் காவியவரிகளே  என்கிறார்  நூலாசிரியர் திரு பெஞ்சமின் லெபோ.

ஆம்..
  முடிசூட்டல்  இராமனுக்கே என  தசரதன் முடிவு செய்கிறான்.  கூனி இதனைக்கேட்டு  வெகுண்டு எழுகிறாள்.

 கைகேயியைக்கண்டு அவளைத்தூண்டிவிடுகிறாள். அவளும் 
தசரதனிடம் முன்னர் கேட்ட வரங்களை நினைவுபடுத்தி அவற்றை இப்போது பெற்றுக்கொண்டு அதனபடி  பிறகுஅவள் பேசியவிதம் அனைவரும் அறிந்த கதைதான்

ஆனால்  அதுகேட்டு இலக்குவன் குதிக்கிறான் கோபத்தில்.

அதைக்கம்பனின்  தமிழ்  கூறுவதைப்பாருங்கள்..கோபத்தில் குதிப்பது இலக்குவன் என்பதை குதித்தாடும் சொற்கள்  கூவுவதில் தெரிகிறது அல்லவா?


வலக்கார் முகம்என் கையதாக அவ்வானுளோரும்
விலக்காரவர் வந்துவிலக்கினும் என்கை வாளிக்கு
இலக்கா எரிவித்துலகு ஏழினொடு ஏழும் மன்னர்
குலக்காவலு மின்றுனக்கு யான்தரக் கோடியென்றான்"

(தேவர்களே வந்தாலும் அவர்களை என் அம்புகளுக்கு இரையாக்குவேன்,
ஈரேழு உலகங்களையும் யான் அளித்து உனக்கு முடி நான் சூட்ட
நீ பெற்றுக்கொள்வாயாக! - இதுதான் இதன் பொருள்)


தம்பியின் கோபம் கண்டு நம்பி  திகைக்கிறான்.
அவனை  சமாதானப்படுத்துகிறான்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தான்
மதியின் பிழையன்று, மகன்பிழையன்று மைந்த
விதியின் பிழைஇதற்கு என்கொல் வெகுண்ட தென்றான்
-        



இப்படிக்கம்பனை  ஆழ்ந்து ரசித்த கண்ணதாசனின் தமிழ்ப்பங்கும்  அளவற்றது அல்லவா?

   கம்பன் களஞ்சியம் என்னும் இந்த நூலில்  மேலும் அருமையான  தகவல்கள்  உள்ளன்..நூலாசிரியர் திருபெஞ்சமின் லெபோ அவர்களின் கைவண்ணத்தில் நான் இங்கு கொடுத்துள்ளது கால்வண்ணமில்லை அதாவது  1/4 பகுதிகூட இல்லை! ஆகவே முழுவதும் வாசிக்க  இந்தப்புத்தகத்தை நீங்கள்  வாங்கிவிடுங்களேன்!

கம்பன் களஞ்சியம்
விலை 60ரூபாய்
ஆசிரியர் பேராசிரியர் பென்சமின் லெபோ

கிடைக்குமிடம்..

வானதி பதிப்பகம்
23 தீனதயாளு சாலை
தி நகர்
சென்னை 17





 
மேலும் படிக்க... "கம்பனை ரசித்த கண்ணதாசன்!"

Tuesday, June 11, 2013

தப்பு பண்ணியவர்கள்.





விடியலுக்கு இன்னும் சில நிமிடங்கள் இருக்கும் போதே சின்னசாமி அந்த பஸ் டெப்போவிற்கு வந்து விட்டான்.  முதல் நாள் இரவு கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டரும் நடந்தே வந்து அருகிலிருந்த ஊரிலிருந்து ரயிலில் பயணம் செய்து, நகரத்திற்கு வந்து, இறங்கிய போது கிராமவாசியான சின்னசாமிக்கு தன் ஐம்பது வயதின் பழைய சோற்றிலும், கேழ்வரகு கூழிலும் வளர்ந்திருந்த திடமான உடம்iபே தூக்கிப் போடுகிற மாதிரி இருந்தது.  சட்டெனக் கண்கள் கலங்கிப் போயின.
 
     பாவம், புவனாவுக்குப் பூஞ்சை உடம்பு.  அந்தப் புள்ளய நான் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பியிருக்கக் கூடாது.  கருக்கல்லுலேயே பட்டணம் இத்தினி பரபரப்பாயிருக்கும்னா, இது பட்டப் பகல்ல எப்படி இருக்கும்?  இந்தச் சூழ்நெலெயில என் பதினாறு வயசு மகளை இங்கிட்டுப் படிக்க அனுப்பின நான் பாவி, மகா பாவி!’’
 
     மனசு ஓலமிட்டது.
 
     ரயிலடியிலிருந்து விசாரித்துக் கொண்டு அந்த பஸ்டெப்போவிற்கு வந்தவன், ’ஹோஎன்றிருந்த அந்தப் பெரிய திடலில் அங்கும் இங்குமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை ஒவ்வொன்றாய் அருகில் போய் பார்க்க ஆரம்பித்தான். 
 
சின்னச்சாமியின் தோளிலிருந்து நீண்டு தொடை வரை தொங்கிய அந்தத் துணிப் பையில் உருண்டையாய் ஏதோ ஒரு முடிச்சு அவனை உரசிக் கொண்டே வந்தது.  பையை கெட்டியாய் ஒரு கரத்தில் பிடித்தபடி, பைத்தியக்காரனைப் போல டெப்போ முழுவதும் சுற்றி வந்தவன் கடைசியில் கண் மலர்ந்தான்.
 
     இதான்... இதான்... புவனா காலேசுக்குத் தெனமும் ஏறிப்போற பஸ்ஸு.  என் செல்வ மகளை எமனுக்கு பலி கொடுத்த வாகனம்...
 
சின்னசாமி நெஞ்சு பதை பதைக்க அந்த பஸ்ஸிற்குள் ஏறினான்.  இருட்டில் தட்டுத் தடுமாறி ஓர் இருக்கையில் அமர்ந்தான்.
 
     தோள் பையைத் தூக்கி மடி மீது வைத்துக் கொண்டான்.  விரல்கள் வாஞ்சையுடன் அந்த பைக்குள்ளிருந்த அந்த சிறு மூட்டையைத் தடவின.
 
            அம்மாடி புவனா... பலி கொடுக்கத்தான் உன்னைப் பட்டணத்துக்குப் படிக்க அனுப்பினேனா இந்தப் பாவி அப்பன்?  எனக்கென்ன தாயீ தெரியும் பட்டிணமும்ல, பாழாப் போற பஸ் பயணமும், பசங்களோட கிண்டலும் கேலியும்? நல்ல மனுசங்கன்னு நினைச்சி கிராமத்துக்கு வந்துக் கேட்டுக்கிட்டவங்க பாதுகாப்புல உன்னை அனுப்பி வச்சேன்மா.. நீயும், ’அப்பா! நான் நல்லா படிச்சி தம்பி, தங்கைங்களைக் காப்பாத்தணும்பான்னு ஆசையா இந்தக் குடியானத் தகப்பன்கிட்டே சொன்னே மவளே! வீட்டு வேலை செஞ்சிட்டு மேல் படிப்பும் படிக்கத் தான் மக பட்டிணம் போறான்னு நெனச்சி அனுப்பினேனே தவுர இப்புடி ஆறே மாசத்துல மேலு லோகம் போகவா தாயீ உன்னை நான் பிரிஞ்சி அனுப்புனேன்?
 
     பொறுப்பை ஏத்துட்டப் பெரிய மனுஷங்க இப்ப எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு கையை விரிக்கிறாங்க... உரசிப் பாக்குற வரைக்கும் பித்தளை கூட தங்கம் மாதிரி தான் மினுமினுப்பாயிருக்கும் போல இருக்குது... இப்புடி உன் உயிர் போவும்ன்னு முன்னமே தெரிஞ்சிருந்தா கிராமத்துலேயே கூழோ, கஞ்சியோ குடிச்சிட்டு வயல் வேலை செய்யட்டும்ன்னு உன்னை வளர்த்திருப்பேனே தாயீ... ஒண்ணுந் தெரியாத படிக்காத பட்டிக்காட்டு அப்பனா இருந்துட்டு இப்புடி உன்னைப் பறி கொடுத்துட்டேனே, புவனா... ஐயோ!  நான் என்ன செய்வேன் தாயீ.  உன் நெனப்புல தான் நீ செத்த இந்த ஆறாம் நாள் உன் சாம்பலோட இந்த பஸ்சில வந்து குந்தறேன்.  தாயீ... அம்மாடீ! இந்த பஸ்ஸுல தான் நீ அன்னிக்கு என்னவோ கலாட்டாவாமே... அதைச் செஞ்ச ஈவு இரக்கமில்லாதவங்களாலே ஓடற பஸ்சிலிருந்து கீழே இறங்கி, மண்டை உடைஞ்சி மரணமடைஞ்சி போனே?
     எல்லா வெவரமும் நாலு நாளா புத்தகத்துல பேப்பர்ல வந்திடிச்சி... இது நியாயமா’?ன்னு மாதர் சங்கமெல்லாம் போராடறாங்களாம்... என்ன செஞ்சி என்னம்மா?  போன உசுரு வரப் போவுதா என்ன?
 
     யோவ், யாருய்யா அது? டெப்போவுலேந்து பஸ்ஸை எடுத்து வெளியேக் கொணாந்து பஸ்டாண்ட் போவுறதுக்குள்ள ஏறி உக்காந்திட்டு இருக்கறது, இறங்குய்யா, இறங்கு இறங்கு...’’
 
     காக்கி சட்டை போட்டு வாயில் பீடியை செருகியபடி ஒருவர் வந்து அதட்டவும் சின்னசாமி மிரண்டு போய் கீழே இறங்கினான்.
 
     என்ன அது பைல?’’ சந்தேகத்துடன் காக்கிச் சட்டை அதைப் பிடுங்கி உள்ளேப் பிரித்துப் பார்த்து, அவருவருப்புடன்’’ “என்னயா மண்ணெல்லாம் சுமந்துட்டு... சீ...’’ என்று சீறி விட்டுப் போனான்.
 
     மண் இல்லப்பா... மனசு... என் பொண்ணு புவனாவோட மனசு.  அவ கடைசியாய் நடந்த தடம் இந்த பஸ்ஸுல இருக்கும்ன்னு தான் தேடிட்டு நான் வந்தேன்.  பசங்க எல்லாம் ஒட்டு மொத்தமா அவளைச் சீண்டி சித்திரவதை செஞ்சப்போ பஸ் டிரைவரும், கண்டக்டரும் வாயை மூடிக்கிட்டு இருந்தாங்களாம்... காரணம் பஸ்ஸுல அப்போ பயணம் செஞ்ச பையனுகளுல ஒருத்தன் ஒரு பெரிய தலையோட மவனாம்.  பயணிகளும் பயந்து ஒடுங்கிட்டாங்களாம்... எல்லாம் பத்திரிகைக் காரங்கதான் சொன்னாங்க...
 
     எத்தினி கனவுகளோட புவனா இந்த பஸ்ஸுல காலேசுக்குப் படிக்கப் போனாளோ, பாவம்... அவ... சாம்பலும் இதே பஸ்ஸுல ஒரு நாள் பிரயாணம் செஞ்சிட்டுப் பெறகு ஆத்துநீர் எதிலாச்சும் கரைஞ்சி போவட்டும்ன்னு தான் நான் சாம்பலைத் தூக்கிட்டு இப்போ பட்டணம் வந்துருக்கறேன்...!’’
 
     சின்ன சாமி கண்ணீருடன் நடந்தான்.  அந்தக் குறிப்பிட்ட பஸ்  புறப்படும் நிலையத்திற்கு விசாரித்துக் கொண்டு வந்தவன் சரியாய் காலை எட்டு மணிக்கு ஏறி அமர்ந்தான்.
 
     புவனா தினமும் அந்த நேரம்தான் பஸ்ஸில் ஏறி அரை மணி நேரப் பயணத்தில் தன் கல்லூரியை அடைவதாக ஒரு முறை கிராமத்திற்கு வந்தபோது சின்னசாமியிடம் சொல்லி இருக்கிறாள்.
 
     பஸ் புறப்பட்டது.
 
     சின்னசாமி கல்லூரி பெயர் சொல்லி டிக்கெட் கேட்டு வாங்கவும், பையன்கள் சிலர் உரக்க சிரித்து விட்டு பெரிசு காலேஜ் போய் படிக்கப் போவுதுடா...!  அதுவும் லேடீஸ்காலேஜ்!’’ என்று கிண்டல் செய்தனர்.
 
     அவர்களை வெறுப்புடன் ஏறிட்டான் சின்னசாமி.  பாவி பசங்களா.. உங்களில் ஒருத்தன் தானடா என் மக உயிரைப் பறிச்சிருக்கீங்க....
 
     அடுத்தடுத்த நிறுத்தங்களில் கல்லூரி மாணவிகள் ஏறும்போது பையன்களின் கேலியும், கிண்டலும் எல்லை மீறவும் சின்னசாமி கொதிப்புடன், “தம்பீங்களா... உங்க போக்குக்கெல்லாம் எல்லையே கெடையாதுங்களா?’’ என்று கேட்டு விட்டான் ஆற்றாமை தாங்காது.
 
     அவ்வளவு தான்... கட்டம் போட்ட சட்டையும், ஜீன்ஸும் அணிந்த இளைஞன் ஒருவன் டிரைவரிடம் ஸ்டாப்என்று கூச்சல் போடவும், பஸ்  சட்டென  நின்றது.
 
     அவன் சின்னசாமியின் அருகில் வந்தவன் ஆக்ரோஷமாய் பார்த்துவிட்டு, “, பட்டிக்காடு... யாரப்பாத்து என்ன  கேள்வி கேக்கறே?  அதிலும் எல்லைஎதுன்னா கேக்கற?’’ என்று கூச்சல் போடவும் நண்பர்கள்  தினா... விடுடா.. கண்ட்ரீப்ரூட்.... அழுக்கு வேட்டியும், பச்சை மேல் துண்டுமா, முகத்துல மூணு நாள் தாடியோட பாக்கவே பரிதாபமா இருக்கிறான்டா....’’ என்று தடுத்தனர்.
 
     இவனுகளைத் தாண்டா தட்டி வைக்கணும்... படிப்பு அறிவு இல்லாதவன் தான் பல் உடையற மாதிரி கேள்வி கேட்பான்.  வயசுப் பசங்க குஷியா இருந்தா பொறுக்க மாட்டானுங்க... இவங்க வயசுல போடாத ஆட்டமா நாம இப்பப் போட்டுட்டோம்?’’
 
     லீவ் இட் யா!’’
 
     விடறதா, அதெல்லாம் நடக்காது.  என் எல்லைஎதுன்னு கேட்டுட்டான் இல்லே, அதை இப்போ அவனுக்குக் காட்டணும்!’’
 

     சின்னசாமி மிரட்சியுடன் பார்க்கும்போது அவன் தோளைப் பற்றி நிற்க வைத்தான்.
 
மேல் துண்டை சட்டென உருவிக் கீழே போட்டான் தினா.
 
     பார்ரா... பெரிசுக்கு சிட்டிக்கு வரப்போ ஷர்ட் போட்டுட்டு வரணும்ன்னு தோணலே?  இடியட், இதுல வாய் மட்டும் நீளுது?’’
 
     தினா... விட்டுத் தள்ளு.’’
 
ஒரு பையன் இப்படி அலட்சியமாய் சிரித்தபடி சொல்லவும் சின்னசாமி அடிபட்ட புலிபோல சிலிர்த்து உடம்பை உதறிக் கொண்டான்.  கண் சிவக்க உதடு துடிக்க தினாவிடம், “துண்டை உருவுனதோட உன் திமிரை அடக்கிக்க தம்பீ.. பட்டிக் காட்டானுக்கு உடை நாகரிகம் தெரியாது தான்... ஆனா, உள்ளத்து நாகரிகம் தெரியும்... அதனால தான் உன்னைக் காயப்படுத்த நெனைக்கல... என் பேச்சை மீறினா நீ விபரீதத்த சந்திக்கணும்... ஆமா?’’   என்று அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.
 
     அவ்வளவுதான்... தினா ஆவேசமாய் சின்னசாமியின் தோளிலிருந்து அந்தப் பையை உருவிக் கீழே போட்டுவிட்டு, “இப்ப என்ன சொல்ற பெரிசு?’’ என்று இடக்காய் கேட்டான்.
 
     சட்டெனக் குனிந்து பையை எடுத்தவன் உள்ளிருந்த மூட்டையை வேகமாய்ப் பிரித்து மகளின் அஸ்தியை அள்ளி எடுத்து அதை அப்படியே தினாவின் வாயில் கொண்டு அழுத்தினான் சின்னசாமி.
 
     தினா திமிறத் திமிற அவன் கைகளை வலுவுடன் தன் கரங்களால் அழுத்திப் பிடித்தப்படி, “உப்பைத் தின்னவன் தண்ணி குடிக்கணும்; தப்பை பண்ணியவன் மண்ணைத் தான் திங்கணும்... ஆமாண்டா, இது என் செத்துப் போன மவளோட உடம்பு மண்.  அவளை எரிச்ச சாம்பல் மண்ணு.  உன்னை மாதிரி ஒருத்தன் அவளைக் கிண்டல் செஞ்சி, பஸ்ல ஓட ஓட விரட்டி, படிக்கட்டுல தள்ளி, அவளைத் தடுக்கிக் கீழே விழுந்து சாக வச்சிட்டான்...
 
     எத்தினி கனவுகளோட என் மவ கிராமத்த விட்டுப் பொறப்பட்டு இங்கே வந்தா தெரியுமாடா?  குடியானவன் குடும்பமும் விளங்க நான் நல்லா படிச்சி, முன்னேத்திக் காட்டறேன்னு லட்சியத்தோட இங்க வந்தா...  வீட்டு வேலை செஞ்சி சம்பாரிச்சி அதுல கெடக்கிற துட்டுல படிக்கிறேன்பான்னு புறப்பட்டு வந்தா... அவளை ஈவு இரக்கமில்லாம சாகடிச்சது உன்னை மாதிரி இளைய தலைமுறைப் பசங்க தான்.
 
     காசு, கடவுளோட கண்ணைக் கட்டிப் போடாதுடா... அது பாத்துக்கிட்டே தான் இருக்கும்... தெய்வம் நின்று கொல்லுமடா... நின்னு கொல்லும்!’’ என்ற சின்னசாமியின் நெகிழ்ச்சியான கூக்குரல் தினாவை மட்டுமல்லஅங்கு அனைவரையும் உலுக்கிப் போட்டது.
                    **************************************************************************
 
     இப்போதெல்லாம் அந்த ரூட்டில் செல்லும் அந்த பஸ்ஸில் ஈவ் டீஸிங்சுத்தமாய் இல்லை என்று பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
 
     சின்னசாமியை பேட்டி எடுக்க யாராரோ கிராமத்திற்கு வருகின்றனர்.  நன்றி கூறுகின்றனர்.
 
சின்னசாமியால்தான் எதுவும் பேச இயலவில்லை.
 
*****************************************************************************************************************
 
(இந்தக்கதை ஆறுவருடம் முன்பு தினமலர்  ராமரத்தினம் நினைவுச்சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு  பெற்ற கதை அந்த காலகட்டத்தில் ஈவ் டீசிங்  அதிகமாக  இருந்தபோது அதன்  பாதிப்பில் படைத்த கதை.  பெண்மணி மாத இதழ்  இந்தமாதம் இக்கதையை பரிசுபெற்ற சிறுகதைகள் என்ற  வரிசையில்  இம்மாதம் பிரசுரம் செய்துள்ளது)



(



--
***



--
 
 
மேலும் படிக்க... "தப்பு பண்ணியவர்கள்."

Saturday, June 01, 2013

குழந்தையும் நாமும்!



 

ஜூன்  1. உலக குழந்தைகள் தினம்
 
 1949ல் வெளிவந்த அட்லாண்டிக் மாத இதழ்  ஒன்று கண்ணில் பட்டது.
Miltred Howland   அவர்கள்  இப்படி  எழுதி உள்ளார் ஆங்கில வரிகளை
தெரிந்தவரை தமிழில்  மொழி பெயர்க்கிறேன்.( ஆங்கிலக்கவிதை  கீழே)
 
 தன் நிலையினின்றும் உயர்ந்து
விண்ணையும் தொடும் ஆற்றலை
 ஒரு குழந்தைக்கு
நாம் எப்படிக்கற்றுத்தருவோம்-மிகவும்
கீழான நிலையில் தாழ்ந்துவிட்ட நாம்?
 
 நாணயமாகவும்  கௌரவமாகவும் வாழ்ந்திரு
உண்மையின் பொருட்டே  உயிர் வாழ்ந்து
அதற்காகவே உயிர் விடுஎன்று ஒரு
குழந்தையிடம் எப்படிச்சொல்வோம்
பொய்யோடு பொய்யாய் வாழ்ந்துவிட்ட நாம்?
 
வாழ்க்கையின் சரியான பாதை அன்பின்
 வழிதான்என்று அவனிடம் எப்படிக் கூறுவோம்
.வெறுக்கவே கற்றுவிட்ட நாம்?
 
 பிரார்த்திக்கக் கற்றுக் கொடுக்கவும், அவனை
 பக்தனாக  மாற்றவும் எப்படித் துணிவோம்-
பிரார்த்தனையே செய்தறியாத நாம்?
 
 How shall we teach
A child to reach
Beyond himself
And touch the stars
We who stooped so much?
 
How shall we tell
A child to dwell
With honour ,live and die
For Truth
We who have lived a lie?
 
 How shall we say
To him' the way
Of life is through the gate
Of Love'
We, who have learned to hate?
 
How shall we dare
to teach him Prayer
and turn him toward the way
Of faith
We who no longer pray?
 
 
 
 

--

--
 
 
மேலும் படிக்க... "குழந்தையும் நாமும்!"
 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.