Social Icons

Pages

Friday, December 16, 2011

மார்கழித் திங்கள் அல்லவா?

நம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர். எண்ணிக்கைகளுள் வேர்போன்றது என்பது இந்த சொல்லின் பெயர். மற்ற எண்களுக்கு இல்லாத மகிமை இந்த எண்ணுக்கு உண்டு. இந்த எண்ணின் பெருக்கலினால் கிடைக்கும் எண்களை மேலும் கீழுமாய் வைத்துக்கூட்டினால் ஒன்பது என்னும் மூலாதார எண் வந்துவிடும்.அதனால் நவம் எனும் ஒன்பதிற்கு சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.

தமிழ்மாதங்கள் பன்னிரண்டில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது மார்கழிமாதம். எண்களில் ஒன்பதிற்கு எப்போதுமே பெரும் சிறப்பு உண்டு. நவராத்திரி நவரத்தினம் நவக்ரஹங்கள் இப்படி பலப்பல. மும்மதங்களுக்கும சிறப்பு இறைவழிபாட்டு மாதமாகும்.



மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு  தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.



 திருவரங்கத் திருநகரத்திற்கும் அருகே உள்ள  ஆனைக்கா நகருக்கும் மார்கழியில் மக்கள் வெள்ளமெனத் திரண்டு வருவார்கள். இவ்விடங்களில்
திருப்பாவையும் திருவெம்பாவையும்  ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஊரே விழாக்கோலம் கொண்டுவிடும்.

மார்கழிமாதத்தில் மட்டும் திருவரங்கம் கோயிலில் விஸ்வரூப தரிசனம் கிடையாது.

மார்கழியில் மட்டும் அனந்தசயனத்திலிருக்கும் பெருமாளுக்குத் துயில் எழுப்ப வேண்டி அதிகாலை முன்றரை மணிக்கே திருப்பள்ளியெழுச்சிப்பாடல்களாக ஆண்டாள் பாசுரங்களைப்பாடுவார்கள்.

மார்கழி உற்சவக்காலத்தில்அரையர் சேவையில் நாலாயிரதிவ்யப்ரபந்தப்பாடல்கள் அபிநநயத்துடன் அரங்கேற அதை அரங்கன் செவிமடுத்துக்கேட்பது கண்கொள்ளாகாட்சியாகும். தமிழுக்குப் பெருமையும் ஆகும்.

உற்சவதினத்தின் எட்டாம் நாள் அரங்கர் குதிரைவாகனத்தில் கோயிலின் கிழக்குப்பகுதியில் இருக்கும் மணல் வெளிக்கு வருகை தருவார். அங்கு நடைபெறும் நிகழ்வுக்கு வேடுபரி என்று பெயர். அப்போது முத்தரையர் இன மக்களுக்கு கோயிலில் மரியாதை செய்யப்படுகிறது. வருடத்தின் ஒவ்வொரு உற்சவ காலங்களிலும் இதுபோல ஒவ்வொரு சாதியினருக்கும் ஸ்ரீரங்கம் கோயிலில்  மரியாதை செய்யப்படுகிறது.


மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்.

இதைப்பெற்றுக்கொள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்துநிற்பார்கள். இவைகளின் மணமும் சுவையும் அலாதியானது.

மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் இன்று இப்படி முதல்வரியோடு திருப்பாவை பாடிய ஆண்டாளின்  இன்னொரு பாடலைப்பார்க்கலாமா?





’கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ,


திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ


மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே


விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே!’


கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.

கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.கமலம் என்றால் தாமரை.

பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.

மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!

இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?

ஆண்டாளின் திருவாய்மொழியில் நட்சத்திர அந்தஸ்து கொண்டபாடல் இது.

திருப்பாவை முப்பதும் பாடும் போது ஆண்டாள் சிறுமியாய் இருந்திருக்கவேண்டும்  செல்வச்சிறுமீர்காள்  என்பாள் தனது தோழிகளை ஆனால்  கற்பூரம் நாறுமோ பாடலின்போது அவள் பருவ மங்கையாக இருந்திருக்கவேண்டும் அந்தப்பருவத்தில் மனத்தில் தோன்றுவதை அந்த காலத்தில் ஒரு பெண் இப்படி துணிவோடு கேட்கிறாள் என்றால் ஆண்டாள் எப்படிப்பட்ட புரட்சிப்பெண்ணாக இருந்திருப்பாள்?!


'ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே! ' என்று எல்லோரும் வாழ்த்தியிருந்தும் அவளுடைய நாச்சியார் திருமொழி பரவலாகக் கொண்டு செல்லப்படவில்லை.நாச்சியார் திருமொழியில் மொத்தம் நூற்று நாற்பத்து மூன்று பாடல்கள்.அதைக் குறிப்பிட்டு வாழ்த்தியபோது திருப்பாவை என்ற ஒன்றை அவள் செய்ததே மறந்துவிட்டது பரவசப்பட்ட பாவலருக்கு.அதனால் தான் 143 மட்டுமே அவள் செய்தது என்று சொல்லிவிட்டார்.


ஏழாம் திருமொழியில் 'கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச்செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ என்கிறாள்.

அடுத்து,



'உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்

கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே

பெண்படையருன் மேல் பெரும் பூசல் சாத்துகின்றார் '



என்று காதலன் கையிலிருக்கும் பொருளிடம் அவன் அணுக்கத்துக்குப் பொறாமை தெரிவித்துப் பாடுவதில் 'வாயமுதம் ' என்கிற பதத்தில் ஒலிக்கிற வேட்கையை
கொள்கிறாள் ஆண்டாள்

மானிடவர் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே! என்று துணிந்து பாடிய ஆண்டாள் அந்த நாளிலேயே தோன்றிய ஒரு பெண் நவீனகவிஞர்!

காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல் தானே பெரிய புனிதம்!


கதைகள் எப்போதும் சுவாரசியமானவைதான்.

ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரசியமானது,சுவையானது!


ஒவ்வொரு இலக்கியத்தின் பின்னும் அதை எழுதியவன் மறைந்து நிற்கிறான் என்கிறார் ஹட்ஸன்.( ...behind the every book that is writer lies the Personality of man who wrote it.... =Hudson .."An introduction to the study of literature" அவ்வாறே ஆண்டாளின் ஒவ்வொரு பாடலுக்குப்பின்னும் அவளது மனநிலை மறைந்திருக்கும்.!

அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதி நவீன சங்கதிகளை மட்டும் தான் அவள் தன் பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள்.

அதற்கு சாட்சி இந்தப்பாடல்.

ஆண்டாளுக்கு, அவளது காதலனான மாலவன் உதட்டில் முத்தமிட வேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.


'செய்ய வாய் ஐயோ என்னைசிந்தை கவர்ந்ததுவே' என்று அமலனாதிபிரானே அலறி இருக்கும்போது ஆண்டாள் எம்மாத்திரம்?

யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது. அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!


அதை வைத்து தானே எப்போதும் வாயில் வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவை தெரிந்திருக்குமே!(புல்லாங்குழலும் தான் அவன் திருவாயில் படுகிறது கையிலேயே இருக்கிறது ஆனால் கோதை அதனை ஏன் கேட்கவில்லை?  அதைப்பிறகு பார்க்கலாம்!

{சரி பெரியபிராட்டியிடம் கேட்கலாமா என நினைக்கிறாள். திருப்பாவையிலேயே "மைத்தடங்கண்ணினாய் நீ உன் மணாளனை எத்தனைபோதும் துயிலெழ ஒட்டாய் காண்" என்று விரட்டியவள் ஆண்டாள்.இப்போதும் அவளிடம்போய்"என் பிரியக்காதலனின்உன் அருமைக்கணவனின் சிவந்த அதரசுவை எப்ப்டியம்மா இருக்கும்?" எனக்கேட்டால் சக்களத்தி சண்டைக்கு வரமாட்டாள் என்பது என்ன நிச்சயம்?}



அதனால் சங்கிடம் கேட்டுவிடுவதே நல்லது எதுக்கு வம்பு என நினைக்கிறாள்.

புல்லாங்குழலை ஏன் கேட்கவில்லை தெரியுமா



பணர் மருதம்சாய்த்து ஈர்த்தான் கரத்தில் இருந்ததாம் சங்கு.




 அதனால் புல்லாங்குழல் பிறகுதான்.புல்  லாங்  கா இருந்தாலும் சிக்கென்ற சங்கு மூர்த்தி சிறிது ஆனால் கீர்த்தி பெரிது!

சக்கரமானது பகைவரை அழிப்பதற்காக அவ்வப்போது பகவானின் கையை விட்டு நீங்கி, தன் செயலை முடித்து, மீண்டு வந்து பகவானின் கையைச் சேரும். இப்படி, கண நாழிகை நேரமேனும் பகவானை விட்டு நீங்கியிருக்கும்படி நேர்கிறது சக்கரத்துக்கு. ஆனால், சங்கின் நிலை அப்படி அல்ல. அது, பகவானின் கையை விட்டு எப்போதும் நீங்காதது. எந்த நேரமும் பகவானின் கையிலேயே இருக்கும். 'அகலகில்லேன் நிறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்' என்று நம்மாழ்வார் பாடியபடி, பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.




அந்தப் பாஞ்சஜன்யப் பெருஞ் சங்கம், இன்னொரு பேறும் பெற்றது. எதிரிகளைக் கலங்கடிக்க, இந்த சங்கத்தினை தன் வாயில் வைத்து ஊதி, பேரொலி எழச் செய்வான் கண்ணன். இப்படி, கண்ணனின் திருப் பவளச் செவ்வாயில் படும் பேற்றினைப் பெற்றது, வெண்சங்கம்.






உண்பது சொல்லில் உலகு அளந்தான் வாயமுதம் கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே என,

ஊனும் உறக்கமும் இந்த சங்குக்காரருக்கு அவன் இதழ் மீதே இருப்பதால் சங்கே ...ஐயா  சங்கையாவே... பெரியவர்!

ஆண்டாள்  புத்திசாலிப்பெண் அல்லவா அதனால்தான், பெரிதினும் பெரிது கேட்டிருக்கிறாள்!

(மார்கழியில்  மேலும் ஆண்டாளை வாரணம் ஆயிரம் சூழ  கொண்டுவருவோம்!)



47 comments:

  1. ஹையா... திரட்டிகளில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன் அக்கா... இம்முறை எனக்குத்தான் பொற்கிழி!

    ReplyDelete
  2. -பெண் கவிஞர் என்றால் முதலிடம் ஆண்டாளுக்குத்தான். என்ன அழகான தமிழ்! படிக்கப் படிக்க சலிக்காதது. ஆனால் பாருங்கக்கா... நிறையப் பேர் ஆண்டாள் படலைப் பாடும் போது ‘ரெம்பாவாய்’ என்று முடிப்பாங்க. எனக்கு எரிச்சலும் கோபமுமா வரும். அழகா அசை பிரிச்சு ‘எம்பாவாய்’ன்னு முடிக்க வேண்டாமோ?
    -மார்கழி மாசம்னா வீட்டு வாசல்கள்ல சாணி வெச்சு பறங்கிப் பூ வெச்சு கோலம் போட்றதை என் சின்ன வயசுல பாத்திருக்கேன். இப்ப அதெல்லாம் காணோம்...
    -அதென்னமோ தெரியல... ஆண்டாள் பாட்டுக்கள்லயும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்துலயும் அழகு தமிழ் கொஞ்சி விளையாடுது. கொடுத்து வெச்ச மகாவிஷ்ணு!
    -நிறைய ஞாபகங்களைக் கிளறி விட்டுடுச்சுக்கா உங்க பதிவு. (நானும் ஆண்டாள் பாட்டு ரெண்டை ஒரு பதிவாப் போடலாம்னு இருக்கேன்)

    ReplyDelete
  3. 143 க்கு அப்பவே 'பொருள்' தெரிஞ்சுருக்குமுன்னு தோணுதே!

    I

    LOVE

    YOU

    பதிவு ( வழக்கம்போல்) அருமை!

    புல்லாங்குழல் உதட்டுக்கு வெளியே!

    சங்கு...... போங்க....வெக்கமா இருக்கு:-)

    ReplyDelete
  4. ம்ம்ம்ம் சொல்லவிட்டுப்போச்சு.

    திருமலை திருப்பதியில் கூட மார்கழிக்கு சுப்ரபாதம் இல்லை. 'பாவை'க்கே முன்னுரிமை!

    ReplyDelete
  5. ஆஹா.. அற்புதமான பாடல்கள்... அழகான விளக்கங்கள்....
    சுவாமி விவேகானந்தர் கூறுவார்... இறைவனை அன்னை, தாய், தந்தை, நண்பன் என்று பல வகையிலே உறவு பாராட்டி வழிபாட்டு ஒன்றிடலாம்.... ஆனால், அவனை தனது காதலனாக வழிபாட்டு ஓன்று படுவதே மிகவும் உன்னதமானது.... அப்படி இறைவனை காதலனாக வழிபட்டு அந்தப் பேரொளியில் கலந்த இந்தியப் பெண்கள் பன்னிருவரின் பெயர் வரிசையை நான் வாசித்திருக்கிறேன்...

    மீராவும்... ஆண்டாலும் நினைவில் நின்றாடுகிறது....
    தெய்வப் புலவரும் தனது இன்பத்துப் பாலிலே அழகாகச் சொல்வார்....

    "பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
    வாலெயிறு ஊறிய நீர்."

    பரந்தாமனின் செவ்வாய் மணம் அறிய துடித்த ஆண்டாளின் காதல் தான் எவ்வளவு அன்யோன்யமானதாக இருந்திருக்கிறது என்பதற்கு அருமையான சான்று...
    இது ஊனோடு உயிர் கலந்தது போல் அல்ல.. உயிரோடு உயிர் கலந்ததே...

    பீடுடைய மாதமாம் (பெருமை பொருந்திய மாதம்) மார்கழி பற்றியும்...
    புரட்சிப் பெண் ஆண்டாளின் பாடல்களுக்கு விளக்கமும்; திருவரங்க பெருமானின் மேனியும் விளக்கிய அற்புதப் பதிவு...

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி...

    ReplyDelete
  6. அன்புநிறை சகோதரி,

    மார்கழித் திங்களின் தொடக்கக் கட்டுரை இனிது.
    முரளியின் பெருமையும் முரளிதரனின் பெருமையும்
    பறைசாற்றிய கட்டுரை அழகு..

    ReplyDelete
  7. மார்கழி மாதம் முழுவதும் கண்ணிற்கும் கருத்திற்கும்
    விருந்துண்டு என்பதை மிக அழகாகக் கோடிட்டுக்
    காட்டி இருக்கிறீர்கள்.
    மனம் கவர்ந்த அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    ReplyDelete
  8. maargazhi maasam reminds me of my krishna, then aandal, then shylaja, finally comes thiruppaavai.


    I was expecting a post from you and u never disappointed me. Thankyou :)

    ReplyDelete
  9. இவ்வளவு அழகாகவும் சுவைபடவும் மார்கழி துவக்கத்திலேயே ஆண்டாளின் பெருமையை எழுதி என்னை பரவசப்படுத்திவிட்டீர்கள்
    பூமிப்பிராட்டிதான் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தாள் என்றும் அவள் அருளிய திருப்பாவை உபநிடதங்களின் சாரம் என்று சொல்லப்படுவதுண்டு. பெரியவாச்சான் பிள்ளை என்கிற பெரியவர் ... "உபநிஸத்து தமிழானபடி' என்கிறார் .
    திருப்பாவையின் பெருமை சொல்லில் அடங்காதது.

    .நிறைய விஷயம் உங்கள் கைவசம் உள்ளது. இந்த மாதம் முழுவதும்
    ஒவ்வொரு பாசுரமாக எழுதுங்களேன்.உங்களுக்கும் புண்ணியம் எங்களுக்கும் மன நிறைவு.

    திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களுக்கும் தினமும் உங்கள் பாணியில் அதன் அர்த்தத்தையும் மறைந்து இருக்கும் கருத்தையும் எங்களுக்கு சொல்லி ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் சொன்னபடி அரங்கனின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பம் அடையலாமே.

    ReplyDelete
  10. முதலில் மார்கழி மாததிற்கு அருமையான விளக்கம்,பிறகு கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, பாசுரத்திற்கு அற்புதமான விளக்கம்.

    //பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.//

    அருமை.
    நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  11. //புல் லாங் கா//

    ஹா..ஹா..அருமை..

    ReplyDelete
  12. திருப்பாவை வாழ்த்துக்கள்..
    (புதுசா, நாமளும் கெளப்பி விடுவோம்.. ஆனால் அர்த்தத்தோடதான்..)

    ReplyDelete
  13. ஆண்டாளின் காதல் பாடல்கள் மனதில் பதிகிறது.நல்லதொரு தொகுப்பு மார்கழித் திங்களில் !

    ReplyDelete
  14. வணக்கம்! திருவரங்கமும் தமிழும் இணை பிரியாதவை. தங்கள் கட்டுரையின் இலக்கிய நடையே இதனைச் சொல்லும்.

    ReplyDelete
  15. சுவாரசியமான பதிவு. நல்ல ஆராய்ச்சி.

    எனது சிறு வயதில் எங்கள் தெருவில் மார்கழியில் காலை வேளை தெருவில் பாடி செல்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை பாட(ம்) சொல்லி தருவார்கள். அந்த நாள் நினைவுகளை மீட்டு தந்தது உங்கள் பதிவு. நன்றி.

    ஒன்பதாம் எண்ணின் சிறப்பை சரியான கோணத்தில் தொட்டு சென்றிருக்கிறீர்கள். இது (9) பற்றி விளக்கமாக நானும் எழுத எண்ணி இருந்தேன்.

    உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் குறித்த அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்த இணைப்பில்..
    http://vaazhveperaanantham.blogspot.com/2011/03/blog-post_15.html

    ReplyDelete
  16. மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்

    ஆஹா.. ஞாபகப்படுத்திட்டீங்களே..

    ReplyDelete
  17. கணேஷ் said...
    ஹையா... திரட்டிகளில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன் அக்கா... இம்முறை எனக்குத்தான் பொற்கிழி!

    6:54 AM

    >>>கணேசரின் முதல்வரவு எதிர்பார்ப்பதே எதிர்பார்த்ததே!!! திரட்டில இணைத்து ஓட்டும்போட்ட அன்புக்கு கைமாறாய் நன்றி சொன்னா உங்களுக்குப்பிடிக்காது.அதனால பொற்கிழியே கொடுத்துடறேன்!!

    ReplyDelete
  18. கணேஷ் said...
    ஹையா... திரட்டிகளில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன் அக்கா... இம்முறை எனக்குத்தான் பொற்கிழி!

    6:54 AM

    >>>கணேசரின் முதல்வரவு எதிர்பார்ப்பதே எதிர்பார்த்ததே!!! திரட்டில இணைத்து ஓட்டும்போட்ட அன்புக்கு கைமாறாய் நன்றி சொன்னா உங்களுக்குப்பிடிக்காது.அதனால பொற்கிழியே கொடுத்துடறேன்!!

    ReplyDelete
  19. கணேஷ் said...
    ஹையா... திரட்டிகளில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன் அக்கா... இம்முறை எனக்குத்தான் பொற்கிழி!

    6:54 AM

    >>>கணேசரின் முதல்வரவு எதிர்பார்ப்பதே எதிர்பார்த்ததே!!! திரட்டில இணைத்து ஓட்டும்போட்ட அன்புக்கு கைமாறாய் நன்றி சொன்னா உங்களுக்குப்பிடிக்காது.அதனால பொற்கிழியே கொடுத்துடறேன்!!

    ReplyDelete
  20. கணேஷ் said...
    -பெண் கவிஞர் என்றால் முதலிடம் ஆண்டாளுக்குத்தான். என்ன அழகான தமிழ்! படிக்கப் படிக்க சலிக்காதது. ஆனால் பாருங்கக்கா... நிறையப் பேர் ஆண்டாள் படலைப் பாடும் போது ‘ரெம்பாவாய்’ என்று முடிப்பாங்க. எனக்கு எரிச்சலும் கோபமுமா வரும். அழகா அசை பிரிச்சு ‘எம்பாவாய்’ன்னு முடிக்க வேண்டாமோ?//

    >>> எம்பாவாய் என்று எந்த ஆணாவது சொன்னா என்னய்யா நான் உன்பாவையான்னு கோச்சிட்டா என்ன பண்றதுன்னும் இருக்கலாம்:):)


    -//மார்கழி மாசம்னா வீட்டு வாசல்கள்ல சாணி வெச்சு பறங்கிப் பூ வெச்சு கோலம் போட்றதை என் சின்ன வயசுல பாத்திருக்கேன். இப்ப அதெல்லாம் காணோம்...
    //



    இருக்கே ஸ்ரீரங்கம் மாதிரி சில் ஊர்ல இருக்கு இன்னமும்.

    //-அதென்னமோ தெரியல... ஆண்டாள் பாட்டுக்கள்லயும், நாலாயிர திவ்யப் பிரபந்தத்துலயும் அழகு தமிழ் கொஞ்சி விளையாடுது. கொடுத்து வெச்ச மகாவிஷ்ணு!
    //


    ஆமா கணேஷ் தமிழுக்குப்பின்போவார் அண்ணல்..திருவீதி உலாவில் பிரபந்தம் சொல்பவர்கள்-முன்னே செல்ல நடுவில் இறைவன் கடைசில வேதம் கைகட்டிக்கொண்டு சொல்லிப்போவார்கள் .

    தமிழ் என்றும் முன்னே தான்.



    //நிறைய ஞாபகங்களைக் கிளறி விட்டுடுச்சுக்கா உங்க பதிவு. (நானும் ஆண்டாள் பாட்டு ரெண்டை ஒரு பதிவாப் போடலாம்னு இருக்கேன்)//

    அட போடுங்க வாசிக்க இருக்கோமே பலபேரு நன்றி கணேஷ்

    7:10 AM

    ReplyDelete
  21. //துளசி கோபால் said...
    143 க்கு அப்பவே 'பொருள்' தெரிஞ்சுருக்குமுன்னு தோணுதே!

    I

    LOVE

    YOU

    பதிவு ( வழக்கம்போல்) அருமை!

    புல்லாங்குழல் உதட்டுக்கு வெளியே!

    சங்கு...... போங்க....வெக்கமா இருக்கு:-)

    7:41 AM

    ///

    அடடே என்ன வெட்கம்? ஆண்டாள்பதிவுல ஷை கூடாது!!! 143 குறும்பு ஆசைப்படத்த நினவு படுத்திச்சி......மேலான வருகை+கருத்துக்கு நன்றி துளசிமேடம்.

    ReplyDelete
  22. //
    துளசி கோபால் said...
    ம்ம்ம்ம் சொல்லவிட்டுப்போச்சு.

    திருமலை திருப்பதியில் கூட மார்கழிக்கு சுப்ரபாதம் இல்லை. 'பாவை'க்கே முன்னுரிமை!

    7:45 AM

    ///// அப்படியா? தெரியாதே...தெலுங்கு ஊர்லயும் மார்கழில பாவைக்கு முதலிடமா பெருமையாய் இருக்கு

    ReplyDelete
  23. தமிழ் விரும்பி said...
    ஆஹா.. அற்புதமான பாடல்கள்... அழகான விளக்கங்கள்


    பரந்தாமனின் செவ்வாய் மணம் அறிய துடித்த ஆண்டாளின் காதல் தான் எவ்வளவு அன்யோன்யமானதாக இருந்திருக்கிறது என்பதற்கு அருமையான சான்று...
    இது ஊனோடு உயிர் கலந்தது போல் அல்ல.. உயிரோடு உயிர் கலந்ததே...

    பீடுடைய மாதமாம் (பெருமை பொருந்திய மாதம்) மார்கழி பற்றியும்...
    புரட்சிப் பெண் ஆண்டாளின் பாடல்களுக்கு விளக்கமும்; திருவரங்க பெருமானின் மேனியும் விளக்கிய அற்புதப் பதிவு...

    பகிர்வுக்கு நன்றிகள் சகோதிரி<<<>

    அழகான குறள் விளக்கம் அருமையான ரசனை உணர்வுடன் இட்ட பின்னூட்டம் இவைகளுக்கு உங்களுக்கு நாந்தான் நன்றி சொல்லவேண்டும் திரு தமிழ்விரும்பி

    ReplyDelete
  24. //மகேந்திரன் said...
    அன்புநிறை சகோதரி,

    மார்கழித் திங்களின் தொடக்கக் கட்டுரை இனிது.
    முரளியின் பெருமையும் முரளிதரனின் பெருமையும்
    பறைசாற்றிய கட்டுரை அழகு..

    8:33 AM

    //

    நன்றி மகேந்திரன்///பறை சாற்றிய என்ற சொல்லில் பறை இதை ஆண்டாள் திருப்பாவையில் கூறி இருப்பதையும் பார்க்கவேண்டும்.நேரமிருந்தால் இதுபற்றி பதிவிடுகிறேன்

    ReplyDelete
  25. //Ramani said...
    மார்கழி மாதம் முழுவதும் கண்ணிற்கும் கருத்திற்கும்
    விருந்துண்டு என்பதை மிக அழகாகக் கோடிட்டுக்
    காட்டி இருக்கிறீர்கள்.
    மனம் கவர்ந்த அழகான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 3

    9:09
    ///

    ஆமாம் ரமணி மார்கழிமுழுவதும் இறை சிந்தனையில் மனம் சுறுசுறுப்பாக இயங்கும் என்பார்கள்..அவன் அருள் கொண்டு அவன் தாள் வனங்கி மேலும் எழுத முயற்சி செய்கிறேன் நன்றி மிக.

    ReplyDelete
  26. Shakthiprabha said...
    maargazhi maasam reminds me of my krishna, then aandal, then shylaja, finally comes thiruppaavai.


    I was expecting a post from you and u never disappointed me. Thankyou :)

    10:49 AM

    >>>>>>
    நன்றி சக்தி...படிச்சி பாராட்டறயே இந்த உன் நல்ல மனம் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கேன்.

    ReplyDelete
  27. // KParthasarathi said...
    இவ்வளவு அழகாகவும் சுவைபடவும் மார்கழி துவக்கத்திலேயே ஆண்டாளின் பெருமையை எழுதி என்னை பரவசப்படுத்திவிட்டீர்கள்
    பூமிப்பிராட்டிதான் ஸ்ரீ ஆண்டாளாக அவதரித்தாள் என்றும் அவள் அருளிய திருப்பாவை உபநிடதங்களின் சாரம் என்று சொல்லப்படுவதுண்டு. பெரியவாச்சான் பிள்ளை என்கிற பெரியவர் ... "உபநிஸத்து தமிழானபடி' என்கிறார் .
    திருப்பாவையின் பெருமை சொல்லில் அடங்காதது.

    .நிறைய விஷயம் உங்கள் கைவசம் உள்ளது. இந்த மாதம் முழுவதும்
    ஒவ்வொரு பாசுரமாக எழுதுங்களேன்.உங்களுக்கும் புண்ணியம் எங்களுக்கும் மன நிறைவு.

    திருப்பாவையில் உள்ள முப்பது பாடல்களுக்கும் தினமும் உங்கள் பாணியில் அதன் அர்த்தத்தையும் மறைந்து இருக்கும் கருத்தையும் எங்களுக்கு சொல்லி ஸ்ரீஆண்டாளே திருப்பாவையின் முடிவில் சொன்னபடி அரங்கனின் அருளால் நீங்காத செல்வத்தைப் பெற்று இன்பம் அடையலாமே.

    12:53 PM

    /////வாங்க பார்த்தசாரதி.அருமையான பின்னூட்டம் வாசிக்கவே சற்று பரவசமாய் இருந்தது நிஜம்.தாங்கள் கூறியதை நிறைவேற்ற ஆவல் நிறைய இருக்கிறது நேரம்தான் முரண்டு பிடிக்கிறது ஆனாலும் கோதையை கோதை தமிழை அரங்கனைப்பற்றி எழுதக் கொடுத்துவைத்திருக்கவேண்டுமே.
    அரங்கன் துணைபுரிய கண்டிப்பாக மேலும் எழுதுகிறேன் நன்றி.

    ReplyDelete
  28. RAMVI said...
    முதலில் மார்கழி மாததிற்கு அருமையான விளக்கம்,பிறகு கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, பாசுரத்திற்கு அற்புதமான விளக்கம்.

    //பரந்தாமன் மார்பிலிருந்து அகலாமல் எப்படி மகாலட்சுமி உறைகிறாளோ அப்படி, ஒரு நொடிப்பொழுதும் பகவானின் கரத்தை விட்டு நீங்காத வரம் பெற்றது வெண்சங்கம்.//

    அருமை.
    நன்றி பகிர்வுக்கு.

    3:03 PM

    >>>>>>>


    ரசித்து கருத்து கூறியதற்கு நன்றி ராம்வி.

    ReplyDelete
  29. RAMVI said...
    //புல் லாங் கா//

    ஹா..ஹா..அருமை..

    3:04 PM

    >>>>>கடி இப்படி அடிக்கடி வரும்:):)

    ReplyDelete
  30. ..Madhavan Srinivasagopalan said...
    திருப்பாவை வாழ்த்துக்கள்..
    (புதுசா, நாமளும் கெளப்பி விடுவோம்.. ஆனால் அர்த்தத்தோடதான்..)

    3:24 PM

    ஆஹா நீங்கள்லாம் இன்னும் இளரத்தம் மாதவன் தூள் கெளப்புவீங்க கொடுங்க வாசிக்கிறோம் ஆர்வமாய் இருக்கேன் நன்றி

    ReplyDelete
  31. // தி.தமிழ் இளங்கோ said...
    வணக்கம்! திருவரங்கமும் தமிழும் இணை பிரியாதவை. தங்கள் கட்டுரையின் இலக்கிய நடையே இதனைச் சொல்லும்.

    4:25 PM

    //

    நன்றி திரு இளங்கோ இன்னும் இலக்கிய நயமுடன் எழுத முயலுவேன் தங்களைப்போல் ஆர்வலர்கள் வாசிக்கிறார்கள் எனில்

    ReplyDelete
  32. //ஹேமா said...
    ஆண்டாளின் காதல் பாடல்கள் மனதில் பதிகிறது.நல்லதொரு தொகுப்பு மார்கழித் திங்களில் !

    4:05 PM

    // மிக்க நன்ரி ஹேமா.

    ReplyDelete
  33. //ரசிகன் said...
    சுவாரசியமான பதிவு. நல்ல ஆராய்ச்சி.

    எனது சிறு வயதில் எங்கள் தெருவில் மார்கழியில் காலை வேளை தெருவில் பாடி செல்வார்கள். திருப்பாவை, திருவெம்பாவை பாட(ம்) சொல்லி தருவார்கள். அந்த நாள் நினைவுகளை மீட்டு தந்தது உங்கள் பதிவு. நன்றி.

    ஒன்பதாம் எண்ணின் சிறப்பை சரியான கோணத்தில் தொட்டு சென்றிருக்கிறீர்கள். இது (9) பற்றி விளக்கமாக நானும் எழுத எண்ணி இருந்தேன்.

    உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் குறித்த அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்த இணைப்பில்..
    http://vaazhveperaanantham
    ///

    வாங்க ரசிகன் அதென்ன என் கோணத்தில்?:) ஏதோ டகாலக்கடி பண்றேன் நானே என்னைப்போய் புகழ்ந்துட்டு?:) உங்க பதிவை வாசிக்கறேன்.. மார்கழி நினைவுகள் உங்களுது நன்றாக இருக்கிறது நன்றி

    ReplyDelete
  34. //ரிஷபன் said...
    மார்கழிமாதத்தில்மட்டுமே கோயிலில் சம்பாரதோசையும், செல்வரப்பமும் கூடுதல் பிரசாதங்களாய் கிடைக்கும்

    ஆஹா.. ஞாபகப்படுத்திட்டீங்களே..

    6:10 PM

    /////

    ஆமா மார்கழில ஒருநாள் அங்க வரப்போறேன் உங்களுக்கும் ச தோ செ அ வாங்கித்தரேன் என்ன?:)

    ReplyDelete
  35. அழகான பாடல்கள். அருமையான விளக்கங்கள்.
    பகிர்விற்கு நன்றி சகோதரி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete
  36. மார்கழிக் காலையில் நடக்கவோர் மனங்கவர் சாலையாக தங்கள் பதிவு...

    ReplyDelete
  37. மார்கழி மாதத்திற்கு ஏற்ற மகத்தான பதிவு. சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாகிய ஆண்டாளின் படம் அழகோ அழகு! கிளி கொஞ்சுகிறது. கிளி கொடுத்த பதிவல்லவா? ;)))))

    ReplyDelete
  38. //மாதங்களில் நான் மார்கழி என்றார் க்ருஷ்ணபகவான்.கண்ணன் மேல் கொண்ட பக்தியில் அவருக்கு தாசனான கண்ணதாசனும் மாதங்களில் அவள் மார்கழி என்று பெண்ணை சிறப்பித்தார்.//

    அருமையான தகவல்கள். பதிவு முழுவதுமே ரொம்ப நல்லாயிருக்கு.

    Udanz 4 Indli 2 vgk

    ReplyDelete
  39. ,,,.திண்டுக்கல் தனபாலன் said...
    அழகான பாடல்கள். அருமையான விளக்கங்கள்.
    பகிர்விற்கு நன்றி சகோதரி!
    என் வலையில் :
    "நீங்க மரமாக போறீங்க..."

    9:05 PM

    ...நன்றி தனபாலன்

    ReplyDelete
  40. ..கே. பி. ஜனா... said...
    மார்கழிக் காலையில் நடக்கவோர் மனங்கவர் சாலையாக தங்கள் பதிவு...

    6:14 AM

    ...


    நன்றி திரு ஜனா,

    ReplyDelete
  41. வை.கோபாலகிருஷ்ணன் said...
    மார்கழி மாதத்திற்கு ஏற்ற மகத்தான பதிவு. சூடிக்கொடுத்த சுடர் கொடியாளாகிய ஆண்டாளின் படம் அழகோ அழகு! கிளி கொஞ்சுகிறது. கிளி கொடுத்த பதிவல்லவா
    <<<<<


    நன்றி திரு வைகோ ஸார்,,,,ஆண்டாள்னாலே கிளி தானே?:

    ReplyDelete
  42. திருவாண்டார் கோவில் எனும் ஊரில், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய பெருமாள் கோவிலுக்கு நண்பர்களோடு (ரங்கா, பிரபு) போயிருந்தேன். ஆண்டாள் சன்னதியில், ரங்கா பக்தி பெருக்கில் "மார்கழி திங்கள்..." பாடினார். நானும் ஆர்வமாகி எனக்கு தெரிந்த சினிமா பாடல் " கோதை ஆண்டாள் மனதை ஆண்டாள். கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்" என்ற வரியை பாடினேன். கல்லூரி மாணவனான பிரபு குஷியில் பாட துவங்கினான்.... "ஆண்டாளு.. அண்ணா நகரு ஆண்டாளு..." நாங்கள் இருவரும் முறைக்க, அத்தோடு நிறுத்திக் கொண்டான்.

    ஆண்டாள் என்றதும் நினைவுக்கு வரும் சமீபத்திய அனுபவம் இது.

    ReplyDelete
  43. மார்கழி மாதத்தில் மகத்தான பதிவு ... என்னுடைய வலைத்தளத்தில் உங்களை இந்த வருடத்தில் நான் - தொடர் பதிவு ... எழுத அழைத்துள்ளேன் ... !

    ReplyDelete
  44. மார்கழி மாத வாழ்த்துக்கள் ஷைலஜா

    ReplyDelete
  45. //உங்கள் கோணத்தில் இல்லை என்றாலும் ஒன்பதாம் என் குறித்த அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் இந்த இணைப்பில்..
    http://vaazhveperaanantham.blogspot.com/2011/03/blog-post_15.html//

    நீங்க இன்னும் இதை படிக்கலை போலருக்கே! கமெண்ட்டை காணோம்.

    ReplyDelete
  46. அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இருந்து எழுதுகிறேன் . தாங்கள் அளித்திருக்கும் இந்த விளக்கம், நான் எழுத போகும் கட்டுரைக்கு நல்ல க்ரியாஊக்கியாக இருந்தது
    நன்றி .

    கே.பி.ரோஹித்கணேஷ்
    திருச்சி
    உறையூர்

    ReplyDelete
  47. அன்புள்ள சகோதரியாருக்கு வணக்கம். நான் உறையூரில் இருந்து எழுதுகிறேன் . தாங்கள் அளித்திருக்கும் இந்த விளக்கம், நான் எழுத போகும் கட்டுரைக்கு நல்ல க்ரியாஊக்கியாக இருந்தது
    நன்றி .

    கே.பி.ரோஹித்கணேஷ்
    திருச்சி
    உறையூர்

    ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.