இதயத் துள்ளவன் நாவில் இருப்பவன்
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்
பாருயர் விசும்பு பாதளம் அளந்தோன்
வெண்சங்கு ஊதும் செவ்வாய்க் கரியவன்
கண்ணும் கையும் சிவந்த சேடியன்
செம்பொன் மாமணி திரள்முத் தணிந்தோன்
அம்பும் வாளும் ஆழியும் கதையும்
வேலும் ஏந்திய வீரன்
ஞாலம் காப்பவன் அருள், இலவசமே!
(மரபில் இது முரண்தொடை எனப்படும் வகையினைச் சேர்ந்தது.)
மரபுபற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் கவிதை விளக்கம்.
மோனை ,எதுகை, முரண், இயைபு ,அளபெடை அந்தாதி, செந்தொடை என வகைகள் உண்டு.
எதுகை மோனை பலர் அறிந்திருக்கலாம், முரண் எனப்படுவது ஒரே வரியில் வார்த்தைகள் முரணாகி, அதாவது வேறுபட்டு வருவது. கதிருடன் மதியினை என்னும் வரியில் கதிர்= சூரியன். மதி =சந்திரன்.
இதயத்துள்ளவன் நாவில் இருப்பவன். இதயம் என சொல்லிவிட்டு நா என்பது முரண்.
காரிருள் சீய்க்கும் கவின்மிகு சோதியன்...இதில் இருள் சோதி என இரண்டும் முரண்.
மீதத்தை கவிதை படிப்பவர்களிடம் விட்டுவிடுகிறேன்!! ஒரேவரியில் 2அல்லது 3, 4 முரண்களும் வரலாம் இதில் வந்திருக்கிறது.கடை இருவரிகள் கணக்கில் கிடையாது!
Tweet | ||||
முரன்தொடை கொஞ்சும் அழகிய நேரிசை ஆசியப்பா.
ReplyDeleteகடைசி சீர் 'இலவசமே' ஓர் அற்புதமே!
என் இதற்கு வாக்கு உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ரெம்ப நல்ல இருக்குங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அப்படியே ஒரு அருஞ்சொட் பொருள் தந்தீங்கன்னா நல்லா இருக்கும்..
கரியவன்னு சொல்லிட்டு வேலவன்னு சொல்றீங்க... ஒரு வேள எல்லா கடவுள்களையும் சொல்றீங்களா?
நீண்ட நாளைக்குப் பின் ஒரு அழகிய மரபுக் கவிதை கிடைத்தது. வாழ்த்துகள். அதுநிற்க, வண்ணதாசனின் தனுமை என்ற சிறுகதை படித்தீர்களா...?
ReplyDeleteநல்ல ஆசிரியப்பா attempt ஷைலஜா அவர்களே!
ReplyDelete//பாருயர் விசும்பு பாதளம் அளந்தோன்// என்று மூவடிகளையும் ஒரே அடியில் கொண்டு வந்து விட்டீர்கள்! :-)
வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
நன்றி ஓகை.
ReplyDeleteசிறில் அலெக்ஸ்! கரெக்டா பிடிச்சீங்க கரியவன் வேலவன் என்று!
இடையனாய் கண்ணன் கழி கம்பு வேலோடு இருந்ததாய் ஒரு பழைய பாடலில் படித்தேன்..எதற்கும் இதுபற்றி தீரவிசாரித்து தவறெனில் நீக்கி விடுகிறேன் சுட்டிக்கட்டியதற்கு நன்றி அருஞ்சொற் பொருளுக்கு அவசியமிருக்காதே அலெக்ஸ்! மிக எளியவரிகள்தானே இல்லயா?
ஷைலஜா
சூர்யகுமார்! வருகைக்கும் கவிதை விமர்சனத்திற்கும் நன்றி. வண்ணதாசனின் தனுமை எத்தனை முறை படித்தேன் என்று கேளுங்க!
ReplyDelete**************************************************
கண்ணபிரான் ரவிசங்கர்!ஆமாம் நீங்க குறிப்பிட்ட வரியில் 3முரண்களைக் கொண்டு வரமுடிந்தது. நன்றி உங்களுக்கும்.
ஷைலஜா,
ReplyDeleteமுரண் தொடை மிக அழகாக அமைந்திருக்கிறது.
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி ஜெயஸ்ரீ!
ReplyDeleteஷைலஜா
//இடையனாய் கண்ணன் கழி கம்பு வேலோடு இருந்ததாய் ஒரு பழைய பாடலில் படித்தேன்..எதற்கும் இதுபற்றி தீரவிசாரித்து தவறெனில் நீக்கி விடுகிறேன்//
ReplyDeleteஅச்சச்சோ நீக்கி விடாதீர்கள்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி", என்ற ஆண்டாள் பாசுரம் பாருங்கள்!
அதில்,
"குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்று வேல்கையன் வேலவனாகவே, கண்ணனைப் பாடுகிறாள்!
அதனால ஷைலஜா ஜி, மாத்தாதீங்க ஜி, அப்படியே இருக்கட்டும் ஜி, அச்சா ஜி! :-)))
"குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
ReplyDeleteவென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்று வேல்கையன் வேலவனாகவே, கண்ணனைப் பாடுகிறாள்!//
kannabiran, RAVI SHANKAR (KRS)
காயிலே புளிப்பதென்னே கண்ணபெருமானே!
கோதையவள் வார்த்தை தந்து
கலக்கம் நீக்கியதென்ன கண்ணபிரானே?!
பஹூத் தன்யவாத்ஜீ!
ஷைலஜா
முரண் தொடை அழகாய் வந்துள்ளது!!!
ReplyDelete/வெண்சங்கு ஊதும் செவ்வாய்க் கரியவன்/
வண்ணக் கலவை? :))
அருட்பெருங்கோ!
ReplyDeleteவெண் சங்கு......இங்கு வெண்மை நிறமும்
செவ்வாய்..... உதட்டின் சிவப்பும்.,
கரியவன்..... திருமால் மேனியின் கருமை நிறமும் ..என இந்த வரியில் 3 (நிற)முரண்கள்.
(கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்..ஆண்டாள் பாசுரம்)
நல்ல பா. இதுதான் போட்டிக்கு வந்திருக்கும் முதல் மரபுப்பா என நினைக்கிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDelete// அச்சச்சோ நீக்கி விடாதீர்கள்!
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி", என்ற ஆண்டாள் பாசுரம் பாருங்கள்!
அதில்,
"குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்று வேல்கையன் வேலவனாகவே, கண்ணனைப் பாடுகிறாள்!
அதனால ஷைலஜா ஜி, மாத்தாதீங்க ஜி, அப்படியே இருக்கட்டும் ஜி, அச்சா ஜி! :-))) //
மாலவனை வேலவனாக்குவதில் ரவிக்கு அத்தனை மகிழ்ச்சி. உங்கள் விருப்பம் போலவே ஆகுக. "விகட சக்கரத் தாமரை நாயகன்" தம்பிதானே வேலவன். :-) ஆகையால் பிழையில்லை.
ஷைலஜா "கூர்வேல்க் கொடுந் தொழிலன் நந்தகோபன்" என்றுதானே ஆண்டாள் பாடுகிறார். ரவி எடுத்தாண்ட வேலும் ஆண்டாள் சொன்ன வேலே. வேறெந்த ஆழ்வாரும் வைணவரும் வேலவன் என்று கரியனைப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆண்டாள் பழந்தமிழ்ப் பெண். ஆகையால் வேல் என்பது காக்கும் கருவி என்ற வகையில் பாடியிருப்பார். ஆனால் வேலவன் என்பது முருகனுக்கான பெயர் என்பதால் பிற்காலத்தில் அந்தப் பதத்தை மற்ற தெய்வங்களுக்குப் பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஏன்? இன்று மாலவன் என்றும் வேலவன் என்றும் சொல்லப்படும் தெய்வங்கள் ஒரே தெய்வமாகக் கூட இருந்திருக்கலாம். காலப்போக்கில் மாறியிருக்கலாம்.
கவிதை அருமை..
ReplyDeleteகண்ணன் கையில் வேல் என்பதும் ஓர் முரண் எனக் கொள்வோம்..
"கூர்வேல்க் கொடுந் தொழிலன் நந்தகோபன்" என்றுதானே ஆண்டாள் பாடுகிறார். ரவி எடுத்தாண்ட வேலும் ஆண்டாள் சொன்ன வேலே. வேறெந்த ஆழ்வாரும் வைணவரும் வேலவன் என்று கரியனைப் பாடியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆண்டாள் பழந்தமிழ்ப் பெண். ஆகையால் வேல் என்பது காக்கும் கருவி என்ற வகையில் பாடியிருப்பார் "என்று கூறும் ராகவன் அவர்களே.. எனக்கும் இப்படித்தான் தோன்றுகிறது. வேல் கொண்ட வீரனாய் படித்த பழம்பாடல் ஒன்று இன்னமும் நினைவில் வரவில்லை திருவரங்கத்தில் வேடு பரி என கோயிலில் வைபவம் நடக்கும் அப்போது எல்லா ஆயுதமும் தயாராய் இருக்கும் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஅஷ்டபிரபந்தத்தில் திருவேங்கட மாலையில் பிள்ளைப் பெருமாள் ஐய்யங்கார் இப்படிப் பாடுகிறார்.
(இவரை திவ்வியகவி என்பார்கள்.)
'கோள்கரவு கற்றவிழிக் கோதையர்கள் பொற்றாளும்,
வேள் கரமும். அம்பஞ்சு ஆர் வேங்கடமே....'
வேல் அல்ல வேள்!
வேல் எனில் தெரியும் வேள் என்றால் மன்மதனாம்.
இவரே யமகம் ஒன்றில்.
'அரைக்கு அலை வேலை உடுத்த மண்பல் பகல் ஆண்டு, பற்றல்- அரைக் கலை வேலை உடை வேந்தர் வாழ்வு எண்ணல்; ஐவரையும் அரைக்கலை, வேலை அவர்க்கே புரிவை, என்றாலும் நெஞ்சே! அரை கலை வேலை அரங்கனுக்கு ஆட்பட ஆதரியே.' என்கிறார்.
இதற்கு முழுஅர்த்தமும் விளங்கவில்லை தெரிந்தவர்கள் சொன்னால் மகிழ்ச்சி.
வே எனில் மூங்கில் வேய்ங்குழல் எனவும் சொல்லலாம். வேலை என்பது கடல் தொழில் பொழுது என மூன்று பொருளில் வரும்.
நன்றி ராகவன் ,, ஓகை இதற்குமுன் போட்டிகளுக்கு மரப்புப்பா எழுதி இருக்கிறார். அவர் அதில் வல்லவர்!
சாத்வீகன் !கண்ணன் கை வேல் முரண் எனக்கொள்வதா? முடியாதே, வேல் போற்றி என ஆண்டாள் பாடிவிட்டாளே?:)
பரிசும் உங்களுக்கு இலவசமே!
ReplyDeleteஇல்லாவிட்டாலும்,
இலவசமாக இல்லாவிட்டாலும்
அருளுக்கு உறுதி!
கண்ணன் கை வேல் ஆராய்ச்சி நன்று.. ஒரு தனி பதிவே இடும் அளவுக்கு அமைந்துள்ளது...
ReplyDeleteமரபுக்கு மறுமொழியளித்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.. அருமையான ஆசிரியப்பா.
வெண்மைக்கு கருமையை முரணாகக் கொள்ளலாம்...
ReplyDeleteசிவப்பு???
தெரிஞ்சுக்கதான் கேட்கறேன் சொல்லுங்க!!
//ஜீவா(Jeeva) said...
ReplyDeleteபரிசும் உங்களுக்கு இலவசமே!
இல்லாவிட்டாலும்,
இலவசமாக இல்லாவிட்டாலும்
அருளுக்கு உறுதி! //
அருள்!அது போதும் ஜீவா! வருகைக்கு நன்றி
//சட்னி சாம்பார் said...
ஏ யாருப்பா நீங்க, மரபுக்கவிதையை படிச்சு விளக்கம், கருத்து, திருத்து எல்லாம் சொல்லி பிரிக்கிறீங்க.
தமிழ்வாத்தியார் ஊட்டு புள்ளைங்களோ.//.
ஹலோ சட்னி சாம்பார்!
யாரைக் கேக்றீங்க இப்டீ? நான் இல்லப்பா...தமிழ்மீது ஆர்வம் கொண்ட ஒரு பெண் அவ்வளவுதான்,மரபுக்கவிதையைத் தான் பிரிச்சி கருத்து விளக்கம் கேக்கமுடியும் புதுக்கவிதை தான் எளிதில் புரிந்துவிடுமே? என்னவோ போங்க நீங்க வாக்களிக்கப்போறதா வாக்கு கொடுத்ததுக்கு நன்றி.
சாத்வீகன்! உங்க பதிவுல மரபுப்பா அளித்தேனே சுமாரா இருக்கா?:)
அருட்பெருங்கோ!
நிறம் ஒன்று இரண்டு மூன்று என எல்லாமே மாறுபடுவதால் அவை அனைத்தும் முரண்..
ஷைலஜா
உங்கள் தமிழார்வம் வியக்க வைக்கிறது. உங்களுக்கும், இத்தகைய படைப்புகள் வருவதற்கு உதவும் தேன்கூடு போட்டிக்கும் ஒரு ஜே!
ReplyDelete