Social Icons

Pages

Sunday, December 22, 2013

நாயகப் பெண்பிள்ளாய்!

பெரியாழ்வார்    அன்று ஆயர்பாடியினைப்பற்றி  தாம் எழுதிய பாசுரம் ஒன்றை  மகளுக்கு வாசித்துக்காண்பித்தார்.


‘ஓடு வார் வி்ழுவார் உகந்தாலிப்பார்
நாடு வார்நம்பி ரானெங்குத் தான் என்பார்
பாடு வார்களும் பல்பறைகொட்ட நின்ரு
ஆடு வார்களும் ஆயிற்று ஆய்ப்பாடியே!


அதைக்கேட்டதிலிருந்தே ஆயர்பாடியைப்பற்றிய  கற்பனை கோதைக்குப்பெருகி இருந்தது.

திருவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாய்  மனத்தினில் கொண்டாள்.  கோபியர்களே தம் தோழிப்பெண்களாம்! திருக்குளமே யமுனையாம்! வடபத்ரசாயிப்பெருமானே  கிருஷ்ணபகவானாம்.

நேரமாகிவிட்டதே  இன்னமும்  தோழிப்பென் எழுந்திருக்கவே இல்லையே நேற்றே  புள்ளும் சிலம்பினகாண் என்று கூவி  ஒருத்தியை எழுப்பினோம்  இன்றும் போய் இன்னொருபெண்ணை  எழுப்பியாகவேண்டுமே!

பரபரத்தபடி புறப்பட்டவளை தந்தை  குறுக்கிடவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் சொன்னார்,,”கோதை! இன்று  உன் பாசுரம்  உன் தோழிப்பெண்ணை நீ எழுப்பும் வாயிலாக அங்கேயே வரப்போகிறது என நினைக்கிறேன்.. இங்கிருந்தபடியே அதை நான் கேட்டுக்கொள்கிறேன் நீயும் பாவை நோன்பிற்குப்புறப்படு அம்மா” என்று மகளை அனுப்பி வைத்தார்.

கோதையும்  நடந்தாள்.. வழியில் கீச்சு கீச்சென்று ஆனைச்சாத்தன் பறவைகள் தங்களுக்குள் கலந்துபேசி குரல்கொடுக்க ஆரம்பித்தது  வலிய ஓசைதான்  இதுகேட்காதோ அவளுக்கு அப்படி என்னதான் செய்கிறாளோ?தோழிவீட்டுவாசலுக்குப்போய்”கீசு கீசென்று ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?” என்று கேட்டாள்.
வெறும் பேச்சு இல்லை அரவம் =ஒலி! வலிய சத்தம்.

ம்ஹூம் அந்தப்பெண்  எழுந்துவரவே இல்லை.
“பேய்ப்பெண்ணே!” என்று சற்று  பொறுமை இழந்து அழைத்துப்பார்த்தாள்   என்ன அப்படி ஒரு பேய்த்தூக்கம்?
“காசும் பிறப்பும்கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?”

இப்படிக்கேட்டுப்பார்த்தாள் கோதை.ஆம்  ஆயர்குலப்பெண்கள் எழுந்து  தயிர்பானையைக்கடைகிறார்கள்.விடிவதற்குள் வெண்ணையை திரளவைத்து விடவேண்டும்  சூரியன் வந்தால் தயிர் சூடுபிடித்து வெண்ணை நெய்யாகிவிடும்.  விடிகாலையில் வெண்ணை எடுக்கவேண்டுமென பரபரப்பாய் அந்த வாசனை பொருந்திய  கூந்தலை உடைய ,கழுத்தில் அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் அணிந்த ஆயர்குலப்பெண்கள் தயிரைக்கடைகிறார்களே அந்த ஒலி கேட்கவில்லையா?

என்ன இது  இவள்  கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்தவளாயிற்றே  என்ன இப்படி தூங்குகிறாள்? இவளின் மனம் நான் அறிவேன்...நாராயணா கேசவா என்றால் ஓடிவந்துவிடுவாள்! எங்களுக்கெல்லாம் தலைமையான  தோழி அல்லவா?  தலைமைக்கர்வம் கொண்டுவிட்டாளோ இருக்கும் இருக்கும்...

“நாயகப்பெண்பிள்ளாய்!”

எங்களின் தலைநாயகியே!
கோதை சற்றே பரிவாய் அழைத்தாள்.

அப்படியும் ஒன்றும்  தாள் திறக்கக்  காணோம்  அவள் வெளியே வரக்காணோம்

ஓஹோ அப்படியா சேதி... கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொன்னால்  உன் உள்ளம் திறக்கும் வாயில் கதவும் திறக்கும் நான் அறிவேன் தோழி!

“நாராயணன் மூர்த்தி கேசவனைப்பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?”

முதல் பாடலில் நாராயணனே நமக்கே பறைதருவான் என்றாள்..  அவன்  நமக்கு வேண்டியதைத்தருவான், அவனே கேசவன். கேசி எனும் அரக்கனைக்கொன்ற ஜயசீலன். அவனைப்பற்றிய ஆழ்ந்த நினைவுகளில் நீ மூழ்கிக்கிடக்கிறாய் போலும் அதை நான் அறிவேன்.

அவ்வளவுதான் உள்ளே படுத்திருந்தபெண் சட்டென  எழுந்துவிட்டாள்.’நாராயணா என்னா நாவென்ன நாவே?’ ‘கேசவனை நேசமுடன் நினையா நெஞ்சென்ன நெஞ்சே?’
அவள் எழுந்துவிட்டதை கோதையுடன் வெளியே நின்றிருந்த மற்ற பெண்களும் உணர்ந்தார்கள் மகிழ்ச்சியுடன் கோதையைப்பார்த்தார்கள்.

கோதையும்,”தேசமுடையாய்  திறவேலோ ரெம்பாவாய்” என்று  ஆர்வமுடன் முடித்தாள்
கதவு திறந்தது.. வெட்கம் கலந்த முகத்தில்தேஜஸ் அடித்தது!

“மன்னித்துவிடடி கோதை நீ வருமுன் எழுந்துவிடத்தான் நினைத்திருந்தேன் ஆனால் கிருஷ்ணன் நினைவில் ஆழ்ந்து இரவெல்லாம் தூக்கமே இல்லை.. அப்படியே உறங்காத விழிப்பு நிலை மனதிற்கு.அதனால்தான்   ஒன்றும் கேட்கவில்லை ஆனால்  கேசவா நாராயணா என்றாயே அப்போதே  உணர்வுகள் விழித்தன  உயிர்நோன்பு இது  என தெரிவித்தன  எழுந்துவிட்டேன்”

“ஆம் தோழி அதை உன் முக ஒளி நிரூபிக்கிறது  இரவெல்லாம்  பகவானின் நினைவில் கிடப்பவளுக்கு முகத்தில் தேஜஸ்வராமல் என்ன செய்யும் உன்னைப்போய் பேய்ப்பெண்ணே பெரிய தலைவி என நினைப்போ கர்வம் பிடித்தவளே என்ற நிலையில் நாயகப்பெண்பிள்ளாய் என்றெல்லாம்  உரிமையோடு சொல்லிவிட்டென் மன்னித்துவிடு..

வா..யமுனைக்கு நீராடப்போகலாம் கிருஷ்ணவைபவத்தில் ஆழ்ந்துபோகலாம்”

தோழிப்பெண்களுடன் ஆண்டாள்  யமுனையை நோக்கிக்கிளம்பினாள்.

இந்தப்பாடல் திருப்பாவையின் 2ம் திருப்பள்ளி எழுச்சிப்பாடல். சென்றபாசுரத்தில் புள்ளின்சிலம்பு கோயில் சங்கின்பேரரவம்  ஹரி என்னும் நாம் சங்கீர்த்தனம்..  இந்தப்பாசுரத்தில் மேலும் மூவகை ஒலிகளைக்கேட்கின்றோம்..பறவையின் கீசுகீசென்ற ஒலி, ஆயர்குலப்பெண்களின் தயிர்கடையும் ஓசை,கேசவனின் மகிமையைக்கூறிப்பாடிவரும் இசையொலி! மூன்று ஒலிகளில் பாவைப்பெண் பெற்றது முக ஒளி அதுதான் தேசமுடையாள்!

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்

 

8 comments:

 1. வணக்கம்
  சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. Anonymous11:47 AM

  வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. பாசுரத்தை தெளிவாகவும் அழகாகவும் விளக்கி உள்ளீர்கள்.ஆர்வமுடன் தினந்தோறும் உங்கள் திருப்பாவை விளக்கங்களை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 4. பின்னூடமிட்டு ஊக்குவிக்கும் அனைவர்க்கும் மிக்க நன்றி இறைவன் நமக்கு நன்மையே அருள்வானாக!

  ReplyDelete
 5. பதினாறடியைப் படிக்கும் சாக்கில் எட்டடியில் தொலைத்ததை தேட முடிகிறது. உங்கள் தயவில். நன்றி .

  ReplyDelete
  Replies
  1. வாங்க அப்பாதுரை நசிகேத வெண்பா மன்னர் இப்படி என் தயவில் என்று சொல்லலாமா?! ஆனாலும் நன்றி!!

   Delete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.