‘வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோல் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்யமும் பல்லாண்டே!
பெரியாழ்வார் பாடி முடித்தார்.
அப்பா உங்கள் பல்லாண்டுப்பாசுரத்தில் ஆழி பாஞ்சன்யம் என சங்கையும் சக்கரத்தையும் அழகாக வாழ்த்திவிட்டீர்கள்! இந்தப்பாசுரம் பல்லாண்டு பலகாலம் எல்லோர் வாயினாலும் பாடப்படப்போகிறது.. என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் கோதை.
அண்ணலுக்கு கண் திருஷ்டி நேரக்கூடாதென்று நான் பாடினது கோதை. விஷ்ணு சித்தன் பெரியாழ்வார் ஆனதே இதனால்தானே! அதிருக்கட்டும் இன்று உன்னை ஒரு தோழி வந்து எழுப்ப வருவாள் என்றாஇயே இன்னும்காணோமே
தெரியவில்லை அப்பா ..வாய்ப்பேச்சோடுசரி..பாருங்களே ன் இன்னும் வரவில்லை.. கொஞ்சம் கூட வெட்கமில்லை அப்பா அவளுக்கு.. நேரம் ஆகிக்கொண்டு இருக்கிறது நானே போய் அவளை இரண்டில் ஒன்று கேட்டுவருகிறேன்..
வெள்ளைச் சுரி சங்கொடு ஆழி ஏந்தித்தாமரைக்கண்ணன்’ காத்திருப்பான் வா பெண்ணே என்று அழைத்துப்பார் கோதை வந்துவிடுவாள் கண்டிப்பாக
சிரித்தார் பெரியாழ்வார்
கோதையும் புன்னகை தவழ வெளியேறினாள்.
அவள் நினைத்தபடி தோழி தூங்கிக்கொண்டு இருந்தாள்.
கோதை திகைப்புடன், பாட ஆரம்பித்தாள்..
எங்களை...உன் தோழிகளான எங்களை
முன்னம் எழுப்புவான்.... முதன்முதலில் எழுப்புவதாக
வாய் பேசும்..வாயினால் சொல்லிவைத்த
நங்காய்.....நங்கையே!
நாணாதாய்... சொன்னபடி அழைக்கவரவில்லையே வெட்கமாக இல்லையோ உனக்கு?
நா உடையாய்..இனிக்கப்பேசும் நா உடையவளே
உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்.... உன் வீட்டு புழக்கடை(பின்பக்கம் -கொல்லைப்புறம்) யில் உள்ள குளத்தில்
செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து.....செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து..
ஆம்பல் வாய் கூம்பினகாண்... கரு நெய்தல் மலர்கள் கூம்பிவிட்டன(குவிந்துகொண்டு
வி ட்டன)
செங்கல்பொடி கூறை.... செங்கல்லைப்போல காவி நிற உடை அணிந்த
வெண்பல் தவத்தவர்.. வெளூப்பான பற்களை உடைய தவசீலர்கள்(சந்நியாசிகள்)
தங்கள் திருக்கோயில்... தங்களுடைய தெய்வ சந்நிதி்யில்
சங்கிடுவான் போகின்றார்.. சங்கம் முழங்கப்போகின்றார்கள்
சங்கொடு சக்கரம் ஏந்தும்தடக்கையன்... சங்கு சக்கரங்களை ஏந்தி நிற்கும் பெரிய கரங்களை உடையவன்
பங்கயக்கண்ணானை........தாமரைப்பூ போன்ற கண் உடையவனை
பாடேலோரெம்பாவாய்...பாடுவதற்காக எழுந்திராய் தோழியே!
கோதையின் குரலில் இனிய கீதம் உரிமைகலந்த அன்போடு ஒலிக்கவும் வெட்கம் விலகி உறக்கம் நீக்கிய நிலையில் ‘வந்தேன் கோதை.... இனியும் உறங்குவேனோ?நீ பாடும்போது நம்மாழ்வார் பெருமானின்,” பங்கயக் கண்ணனென்கோ, பவளச்சொல் வாயனென்கோ சங்குசக்கரத்தனென்கோ, சாதி மாணிக்கத்தையே.’ என்று அருளியதை நினைத்துக்கொண்டேன்... பெரியவாய கண்கள் என்னைப்பேதைமை செய்தனவே என்கிறார் பாணர்பெருமானும்.கண்ணழகன் கண்ணன்!
மேலும் திருமங்கை ஆழ்வாரின்,’ நெல்லில் குவளை கண்காட்ட நீரில்குமுதம் வாய் காட்ட,..’என்ற பாசுரமும் மனத்தில் வந்து மோதியது...
சரி சரி வா... நீராடப்போவோம் இன்று நான்,நாளை உனக்கு இளங்கிளியை அழைக்க ஒருத்தி காத்திருப்பாள்,ந்திருப்பள்ளி எழுச்சிப்பாடியே உனக்கு நாட்கள் ஓடுகின்றனடி கோதை!” என்று சிரித்தாள்.கோதையும் அதில் கலந்துகொண்டாள்.
****************************** ****************************** **
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!
. .
Tweet | ||||
தோழிக்கு என்னவொரு அன்பான ரசிக்க வைக்கும் பாடல்...! நன்றி...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அருமையான பாடல். எளிய விளக்கம்.
ReplyDeleteபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
இதுவரை பார்த்த பாசுரங்களிலே ஆண்டாள் எவ்வளவு அழகாக காலை பொழுதினை விளக்குகிறாள்.நுண்ணிய பார்வையுடன் ஒன்றையும் விடுவதில்லை .இந்த பாசுரத்திலேயே அந்த இனிய காலை அழகை நம் மனக்கண் முன் கொண்டு வைக்கிறாள்.
ReplyDelete'செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்,
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்'
என்னே அழகு ,எத்தகைய காட்சி
அவளிடம் உள்ள மற்றுமொறு குணத்தை காணலாம்.சலிப்படையாமல் தூங்கும் தோழியர்களை எழுப்பி உடன் அழைத்து செல்லாமல் போவதில்லை.எந்த சால்ஜாப்பும் அவளிடம் பலிக்காது.லேசில் விட மாட்டாள்.ஏளனம்,மெலிதான குறை கூறும் பாங்கு,புகழ்ச்சி,
கண்ணனின் பெருமைகளை உயர்ந்து .கூறி இழுக்கும் திறன் எல்லாவற்றையும் உபயோகப்படுத்தி எல்லோரையும் தன்னுடன் இருத்தி நோன்பினை சிறக்க செய்வாள்.
இந்த பாசுரத்தில் நாவுடையாய் என சிறப்பித்து கூறியதில் நாவிற்கு கண்ணனை தவிர பாட பேச வேறு வேலை இல்லை.
'சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!'
அவன் பெருமையை பாடாதோர் நாவு நாக்கல்ல.
அழகாக விளக்கி உள்ளீர்கள். மிக்க நன்றி.
வணக்கம்
ReplyDeleteஅருமையான பாடல் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பாடல்... அழகான விளக்கம்....
ReplyDeleteஅருமையான விளக்கம்.
ReplyDeleteஅந்தப் படம்.. அற்புதம்.