Social Icons

Pages

Sunday, July 13, 2008

வசந்தாவிற்காகக் காத்திருக்கிறேன்


எப்படியும் விஷயம் அறிந்து ஹைதராபாத்திலிருந்து அவள் பறந்தாவது வந்துவிடுவாள் என்று காத்திருக்கிறேன்.

நான் முற்றிலும் சிதலமாவதற்குள் வசந்தா வந்துவிட்டால் தேவலை. ஏனென்றால் அவள் வருகையினால் என் முடிவில்கூட ஏதாவது மாற்றம் ஏற்படலாம்.

"அதெல்லாமில்லை யார் வந்தாலும் சரி நான் நினைத்ததைத்தான் நடத்திக்கொள்வேன்"

வசந்தாவின் ஒரே தம்பி சந்துரு யாருடனோ உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தான்.
அவனுக்கு சிறுவயதிலிருந்தே மென்மையாகப்பேச வராது. மூன்று பெண்குழந்தைகளுக்கு பின் பிறந்த பிள்ளைஎன்பதால் அவனுக்கு வீட்டில் எல்லோரும் செல்லம் கொடுத்து அப்போதே குட்டிச்சுவராக்கி விட்டிருந்தனர்.

அவன் வீட்டில் எங்கே தங்கி இருந்திருக்கிறான்? பதினான்கு வயதில் சிகரெட் பிடித்தவனை அவன் தந்தை ரங்கசுவாமி அதட்டிக்கேட்க கோபித்துக்கொண்டு விட்டைவிட்டு ஓடிப்போனான். பிறகு ஐந்தாறு வருஷத்திற்குப்பிறகு திரும்பிவந்தான். படிப்பும் வரவில்லை. அவன் பழக்க வழக்கங்களும் சரி இல்லை.

அவன் கதை கிடக்கட்டும் எனக்கு இப்போது விசாரமெல்லாம் வசந்தாவைப் பற்றித்தான்.
வசந்தா வருவாளா?

கடைசியாக அவள் எப்போது ஊருக்குவந்தாள்? பத்துவருஷம் இருக்குமா? இருக்கும் இருக்கும்.

அப்போது அவளுக்கு முப்பத்தி எட்டு வயது. தந்தையின் இறுதிக் காரியங்களில் பங்குகொள்ள வந்தவள், தாழ்வாரத்தூணைக் கட்டிக்கொண்டு கதறியதை இப்பொழுதும் என்னால் மறக்கமுடியவில்லை.

வசந்தா ரங்கசுவாமியின் முன்றாவது பெண். ஜாதகக்கோளாறு என கல்யாணம் தள்ளிக்கொண்டேபோய் முப்பதுவயதை நெருங்கும்போது தான் நடந்தது.

ஆனால் அந்த தாமதமும் நல்லதாயிற்று. மூத்த இரண்டு மாப்பிள்ளைகளைவிட வசந்தாவிற்கு வாய்த்தவர்தான் பணக்கார மாப்பிள்ளை.

நல்லபடிப்பு, நல்ல உத்தியோகம் .வெளிநாட்டில் சிலகாலம் வேலை நிமித்தம் போய் தங்க வேண்டி இருக்குமென்று தந்தையின் மறைவுக்கு வந்தபோது வசந்தா தன் சகோதரர்களிடம் பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தாள். தன் ஒரே பிள்ளை திவாகரையும் அழைத்து வந்தவள்,
" பாருடா நான் முப்பது வருஷம் வாழ்ந்தவீடு இது! அந்த நாளில் என் தாத்தா பார்த்துப் பார்த்துக்கட்டிய வீடு "
என்று மகிழ்ச்சியுடன் கூவினாள் .அவள்குரலைப்போல அவள் பாதத்தின் கொலுசு சத்தமும் எனக்கு மிகவும் பரிச்சயம்.

ஏழு வயசிலிருந்தே வசந்தா பரதநாட்டியம் ஆடத்தொடங்கிவிட்டாள். கூடத்தில் இப்போதுகூட சலங்கை ஒலி சத்தம் கேட்பது போல பிரமை எனக்கு..

உள்ளூர் கோயிலில் பதினாலு வயதில் அவளின் நடன அரங்கேற்றம் நடந்தது.
'எத்தனை இடங்களுக்குப் போய் ஆடினாலும் நம் வீட்டுக்கூடத்தில் நடராஜர் படத்திற்கு எதிரே வெறும் கொலுசை மட்டும் மாட்டிக்கொண்டு நாட்டியமாடுகிற திருப்தி வேறெங்கும் கிடைக்காது 'என்பாள்.

'நடனம் முடிந்து கூடத்தில் அவள்மட்டும் தனியாக இருக்கும்போது தரையைக்குனிந்து பரிவுடன் வருடுவாள்.

'பாவம் வலிக்கிறதா உனக்கு ?' ரகசியமாய் தரைமீது இதழ் பதித்துக் கேட்பாள்.

எனக்கு உடம்பே சிலிர்த்துப்போகும்.

வசந்தா கல்யாணமாகிப்போகிறவரை வாசல்திண்ணையிலிருந்து கொல்லைக்கிணற்றடி எல்லையும் சுற்றுப்புற இடங்களும் சாணத்தில் மெழுகி மினுமினுக்கும்.இழைஇழையாய் அரிசிமாவுக்கோலங்கள். ஒரு இழையை முழுவதும் எறும்புகள் இழுத்துக்கொண்டுபோய்விடும்.

கூடத்தில் ஊஞ்சலில் இரும்பு வளையங்கள் கிரீச்கிரிச் என்று சதா ஓசைப்படுத்தியபடியே இருக்கும். அக்காக்கள் இருவரும் திருமணமாகிப்போய்விட, ஒரேதம்பி சந்துருவும் எப்போதாவதுதான் வீட்டுக்குவர ,அந்த நாட்களில் வசந்தாவின் பேச்சுத்துணை அவள் தந்தை ரஙகசுவாமிதான். ஏற்கனவே மனைவியை இழந்த நிலையில் தனது குழந்தைகளுக்குத் தாயுமானவராய் இருந்தவர் வசந்தாவிடம் மட்டும் உற்ற சிநேகிதனாகவும் இருந்தார்.

வாரம் ஒருமுறை இருவரும் சேர்ந்து கூடத்துச் சுவரில் மாட்டி இருக்கும் காளிங்க நர்த்தன க்ருஷ்ணர் படத்தையும் தங்க ரேக்குகளும் சிவப்பு பச்சைக்கற்களும் பதித்த நடராஜர்படத்தையும் மெல்லியதுணியால் சுத்தமாய் துடைப்பார்கள்.

ஹெச் எம் வி கிராமபோனை காமிரா உள்ளிலிருந்து சிரமப்பட்டு எடுத்துவந்து, என்சிவசந்தகோகத்தின் காபி ராக 'என்னதவம் செய்தனை?' என்ற பாட்டினைப் போட்டுக் கேட்டபடி ஒட்டடை அடிப்பார்கள்.

"ஏன்மா வசந்தா, புதுசா நீ வரைஞ்சிருக்கிற யசோதாகிருஷ்ணர் படத்தை ஃப்ரேம் செய்து சுவர்ல ஆணி அடிச்சிமாட்டலாமா ?"ரங்கசுவாமி ஆர்வமாய் கேட்பார்.
அவ்வளவுதான் ,வசந்தாவிற்கு முகம் சிவந்துவிடும்.

" ஆணியா? ஏற்கனவே சுவரில் கடிகாரம், படங்கள் மான்கொம்பு என ஏழெட்டு ஆணிகள் அடித்தாயிற்றுப்பா. பாவம் இந்த வீடு.. சிலுவையில் அறையப்பட்ட ஏசுபோல வாய்விட்டு அழமுடியாமல் தவிக்கிறது .மழை வெய்யிலிருந்து நம்மை ரட்சிக்கிற வீட்டில் வரவர அதிர்ந்து நடனமாடக்கூட மனசு வரமாட்டேன் என்கிறது."

வசந்தாவின் விரல்கள் மென்மையாய் சுவரை நீவிக்கொடுக்கும்போது எனக்கும் உற்சாகம் பொங்கும். இருபத்திமூன்று வயது வசந்தா அன்று தனியாக் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியபோது ரகு வந்தான்.
ஊருக்குப் புதியமுகம்.

வந்தவன் வசந்தாவைபார்த்ததும் , அவளது அழகை ,அண்மையில் ஆடிய நடனத்தை வானளாவப்புகழ்ந்தான். பேச்சினூடேதான் தெரிந்தது, ரகு, ரங்கசாமியின் பால்யநண்பரின் மகன் என்று. டில்லியில் வேலை செய்கிறானாம்.கிராமங்களின் இயற்கை அழகைப்பார்க்க சிலகாலம் வந்திருக்கிறானாம் எல்லாம் அவர்கள் பேசும்போது என் செவிகள் திறந்திருக்கவும் கேட்க முடிந்தது.

பேசியபடியே ஊஞ்சலை நெருங்கியவன், சட்டென வசந்தாவின் சிவந்த கன்னத்தை விரலால் தட்டியபடி, ஏதோகிசுகிசுப்பாய்கூறவும

அவள் வெட்கப்பட்டாள். ஓஹோ விஷயம் இப்படிப்போகிறதா? நான் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரித்து ரசித்தேன். எனக்கு மட்டும் தெரிந்த விதத்தில் அவர்கள் இருவரும் எத்தனையோ முறை மொட்டைமாடிக்குப்போகும் வழியில் இருக்கும் பூட்டிய அறையின் துருப்பிடித்த பூட்டைத்திறந்து மரக்கதவை லேசாய் நெட்டீத்தள்ளியபடி உள்ளே செல்வார்கள் .

அந்த அறைக்குள் வசந்தாவின் கொள்ளுத்தாத்தா எப்போதோ ஜில்லாபோர்ட் ப்ரெசிடெண்ட்டாய் இருந்த காலத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட வரவேர்பு பத்திரங்கள் அலமாரியில் குமிந்திருக்கும்.தவிர அந்த அறையில் தேக்குத்தொட்டில், நடைவண்டி,மரத்தாலான வண்ணம்போன ஆடுகுதிரை,.பழைய குடை கைத்தடி கால் உடைந்துபோன நாற்காலி வெண்கலப்பிடிகொண்ட பழைய ஆர்மோனியப்பெட்டி என்று உபயோகப்படுத்தாத பல பொருட்கள் சிதறிக்கிடக்கும்.

வைமு கோதைநாயகி வடுவூர்துரைசாமி புதுமைப்பித்தன் கல்கி என நாவல்கள் இன்னொரு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும். உடைந்தபோன பழைய நாளைய மூங்கில் சோபா சுவர்மூலையில் இன்னும் கொம்புகள் தேய்ந்தாலும் வீரம் தொலையாத காளைபோல
கம்பீரமாய் வீற்றிருக்கும். புதையல் போல தேடத்தேட இன்னும் பல சாமான்கள் கிடைக்கும்.

வசந்தா ரகுவுடன் அங்குபோய் உட்காருவாள். .மொட்டைமாடிக்கு ஓடிவந்ததில் மேல்மூச்சு வாங்கும் முன் நெற்றி வியர்க்கும். அதைவிரல் நுனியில் ஒற்றி எடுத்தபடி ரகு அவளருகில் அமர்வான். இருவரும் மணிக்கணக்காய் பேசிக்கொள்வார்கள்.அந்தக்கணங்களை வசந்தா மறந்தாலும் என்னால் இன்னும் மறக்கமுடியவில்லை.

"வசந்தா உன் புத்திசாலித்தனம் எனக்கு பிரமிப்பா இருக்கு..மில்டனையும் பேசறே கம்பனையும் கோடிட்டு காட்டறே..ரியலி அமேசிங்!!"
ரகுவின் ரகசிய வார்த்தைகள் எனக்குக்கேட்டுவிடும்.

அன்று சின்னதாய் ஒருமுத்தத்தின் சத்தம் கேட்கவும் விருட்டென வசந்தா எழுந்து நிற்பதை கவனித்தேன்.

"நோ ரகு கூடாது தப்பு மகா தப்பு"

" என்ன தப்பு வசந்தா? எனக்கு உன்னைப்பிடிச்சிருக்கு..மணிக்கணக்கா இந்த ரூம்ல உக்காந்து சினிமா இலக்கியம் விளையாட்டு என்று பலகதை பேசி இருக்கோம். இந்த ஒரு மாசத்துல எனக்கு உன்னை ரொம்பபிடிச்சி அது காதலாகிவிட்டதால் அதற்கு பரிசா உன்னை முத்தமிட்டேன் அது தப்பா?"

" ரகு! என் அப்பா கொடுத்திருக்கும் சுதந்திரத்தில் நான் மனம் விட்டு உங்ககிட்ட பேசிப்பழகினேனே தவிர அதில் காதல் இல்லை. ஆணும் பெண்ணும் நட்பாகவே இருக்கமுடியாதா ரகு? காதலும் காமமும் இல்லாத ஆண்-பெண்நட்புச்சூழ்நிலை எந்த காலகட்டத்தில்தான் உருவாகும்? இது ரொம்ப பழைய கலாசாரப்பண்பாடுகளில் ஊறிய குடும்பம். இங்கே காதல் நுழையமுடியாது அதுவும் நீயும் நானும் ஜாதிகளில் வேறுபட்டு இருக்கும் நிலையில் இது சாத்தியமே இல்லை..உன் மனசில் நான் கிளர்ச்சியை உண்டுபண்ணி இருந்தால் மன்னிச்சிடு ரகு" என்று சொல்லி வேகமாய் திரும்பினாள்.

அந்த வேகத்தில் காலடியில் பழைய செட்டியார்பொம்மை ஒன்று உருண்டு ஓடியது, மர கிலுகிலுப்பையும் தொட்டில்கயிறும் காலடியில் இடறி நின்றன. நடை வண்டி ஒன்று தீனமாய் நகர்ந்தது.

"பார்த்தாயா ரகு இந்த வீட்டின் பழமை இன்னும் வாழ்வது உனக்குத் தெரிகிறதா? " என்று கேட்டுவிட்டு கீழே போனாள்.

அதற்குப்பிறகு வசந்தா மொட்டைமாடிபக்கமே போகவில்லை.

ரகு நல்ல அழகனாய்த்தான் தெரிந்தான். படிப்பு குணம் எல்லாம் இருந்தும் வசந்தா அவன் காதலை ஏற்காமல் போனதில் எனக்கு வருத்தம்தான். 'காதலொருவனைக்கைப்பிடித்தே அவன் காரியம் யாவினும் கைகொடுத்து' என்றும் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றும் பாரதி சொன்னதாய் அன்று இதே வசந்தாதானே அதை நடனமாய் ஆடி மகிழ்ந்திருக்கிறாள்? பின்னர் ஏன் ஜாதியைக்காரணம் காட்டி ரகுவை மறுக்கிறாள்? எனக்கு விளங்கவில்லை.

ஆனால் ரகுவைவிட அழகனாய் குணமுள்ளவனாய் ஒரு சம்பந்தம் கிடைத்து வசந்தா கல்யாணம் முடித்து ஊரை விட்டுப்போனாள். போகும்போது என் தலையை வருடிவிட்டுத்தான் போனாள்.

"அடிக்கடி வந்து பாக்கறேன் என்ன? பல்கில்லுபோகாம, தோல் சுருங்காம களையா ஜோரா இப்படியே நீ இருக்கணும் சரியா?" என்றாள் செல்லமாய் அதட்டும் குரலில்.

நான் 'உம்' சொன்னது அவள் காதில் விழுந்ததோ இல்லையோ?

முன்பெல்லாம் வருடம் ஒருமுறை வருவாள். வந்ததும் நேராய் கொல்லைப் புறத்திற்கு வந்து கொட்டகைக்குள் புகுந்து லட்சுமியின் கழுத்தைக்கட்டிக் கொள்வாள், அதுவும் இவளைக்ண்டதும் கன்றுக்குட்டியோடு சேர்ந்து துள்ளிக்குதிக்கும்.என்னைப்போல லட்சுமிக்கும் வசந்தாவின் கொலுசுச்சத்தம் பழக்கமாகி இருக்கவேண்டும்!

"எல்லாம்பழைய கதை சார் !பத்துவருஷம் முன்பு நானும் ஊரைவிட்டுபோயிட்டேன் .. துபாய்ல வேலை செய்து சம்பாதித்ததை இங்கே பிசினஸ் செய்ய வந்திருக்கிறேன்...வீட்டைதிறந்து எல்லாசாமான்களையும் ஒழுங்குபடுத்தவே ஒருவாரமாச்சு.கிராமுமில்லாத நகரமுமில்லாத இந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் ஒரு சிமெண்ட் ஃபாக்டரி கட்டவும் நல்ல மவுசு ஊருக்கே வந்தது தெரிந்தது. எனக்கும் வீட்டை விற்க நல்ல சான்ஸ் கிடச்சிது ...அக்காக்கள் முவருக்கும் தெரியப்படுத்திவிட்டேன் ..மூத்த அக்காக்கள் ரெண்டு பேரும் மறுப்பு எதுவும்
சொல்லவில்லை... அவர்கள் பங்காய் ஏதாவது கொடுத்துவிடுவேன்... ஆனா கடைசி அக்கா, அமெரிக்கால பலவருஷம் இருந்து இப்போதான் ஹைதராபாத் வந்திருக்கா. வசந்தான்னுபேரு... அவள் இந்தவீட்டில் அதிக நாட்கள் தங்கி இருந்தவள்...அவகிட்ட போனில் விஷயத்தை சொன்னதுமே ஹோ என்று அழத் தொடங்கிட்டா,... சந்துரு வாழ்ந்த வீடுடா விற்காதடா என்று அலறினாள்.. பைத்தியக்காரி வசந்தா! வீட்டைவிலைக்குவாங்கியவர் இன்னும் சற்றுநேரத்தில் இந்த விட்டையே இடித்து ஃப்ளாட்கட்டப்போவதை அறிந்தால் உயிரையே விட்டுவிடுவாள் ஹ்ஹ்ஹா.."

சந்துரு நாராசமாய் சிரித்தான்.
என் உடம்பின் ஒவ்வொரு அணுவும் அதிரத் தொடங்கிற்று.

நான் சாகபோகிறேனா?

என்முடிவு உறுதியாகிவிட்டதா?

பத்துவருடம் முன்புவரை லட்சுமியின் கோமியம் எனும் பன்னீர்துளிகளில்குளியல் செய்து பசுஞ்சாணம் பூசிமெழுகப்பட்ட என் உடம்பு இன்னும் சில நிமிடங்களில் தூள்தூளாகப் போகிறதா?

ஐயோ அதற்குமுன் வசந்தாவைப்பார்க்க முடியுமா?
அந்த கொலுசொலியைக்கேட்டால் கூட போதும். ஒலிகள் என்றும் நிரந்தரம். இறந்தபின்னும் ஒருவரின் நினைவைப் பிடித்துவைத்துக்கொண்டு இருப்பது அவர்களின் ஜீவனுள்ள ஒலிகள்தானே?

"ம்ம் இடிக்கத்தொடங்கலாம்.ஆகட்டும்" சந்துரு உத்தரவு கொடுத்தான்.

ட்ராக்டர் போன்ற பெரிய கருவி ஒன்று என் மீது இடித்தது.

டேய்பாவி....மகாபாவி சந்துரு இந்தத் திண்ணைல உன் அப்பா சித்திரத்தேர் விழாவுக்கு ஊருக்கே சாப்பாடு போடுவார்.எத்தனைபேர் உட்கார்ந்து ஓய்வெடுத்துக் கதை பேசின இடம் உனக்குத் தெரியுமா? வசந்தா இந்த திண்ணைலதான் சின்ன வயசுல நடன ஒத்திகை செய்வாள். இதைப்போய் இடிக்கிறாயே?

ஆ அம்மா..

தீனமாய் நான் அலறுவது இங்கு யாருக்கும் கேட்காது,, கேட்கவும் வேண்டாம் .வசந்தாவிற்குமட்டும் கேட்டால்போதும்.

நான் முற்றிலுமாய் எனை இழப்பதற்குள் வசந்தாவை ஒரு தடவை பார்த்துவிட்டால்போதும்.

ஐயோ இரக்கமற்ற கல் நெஞ்சுக்காரர்கள் என்னை இடித்துக்கொண்டே வருகிறார்களே..சந்துரு! கொஞ்சம் நிறுத்தச்சொல்லேன்,

வசந்தா வந்துவிடட்டுமே?

"ம்ம் ஆகட்டும் க்விக் க்விக்"

சந்துரு அவசரப்படுத்தினான்

"டேய் சந்துரு! நான் வரும்வரைக்கும் உனக்குபொறுமை இல்லையா பாவி? போன்ல வரேன்னு சொன்னேனடா..? முழு வீட்டை கண்ணாலாவது பார்க்க ஓடிவந்தேன்.. அதுக்குள்ள ஆரம்பிச்சி தகர்த்திட்டியா? ஐயோ..வாழ்ந்த வீடு இன்னிக்கு இப்படி இடிக்கப்பட்டு வீழணுமா?இதைப்பார்க்கவா நான் ஹைதராபத்திலிருந்து ப்ளேன்ல பறந்து வந்தேன் ?"

கதறுவது யார் வசந்தாவா? இடிபாடுகளில் கண்ணில் அடிபட்டுவிட்டது சரியாய் பார்க்கமுடியவில்லை. எப்படியோ துழாவிப்பார்த்துவிட்டேன் ,

ஆமாம் வசந்தாவேதான்! அப்படியே தான் கொடிபோல இருக்கிறாள்.நடனம் இப்போதும் ஆடுகிறாளா என்ன? வயதான அடையாளமாய் உடல் பருமனே இல்லாமல் இப்போதும் சிக்கென காணப்படுகிறாள். பற்களைசற்றுமுன்தான் இழந்த என் பொக்கை வாயில் புன்னகை பிறக்கிறது.

வசந்தா கண் கலங்குகிறாள். கைகளைப் பிசைகிறாள்.

பதட்டமுடன் அங்கும் இங்கும் நடக்கிறாள் போலும்? ஜல் ஜல் என்ற அந்த கொலுசு சத்தம் ,இன்னும் சில நிமிடங்களில் முற்றிலும் சிதிலமாகி விழப் போகும் என் காதுகளில் தேனாய்வந்து பாய்கிறது! ஜல்ஜல்...

போதும்! இதுபோதும் எனக்கு!

இதை எதிர்பார்த்துத்தான் இத்தனை நாளாய் காத்திருந்தேன்.

12 comments:

 1. Anonymous4:29 AM

  வித்தியாசமான அணுகுமுறை. ரொம்ப நல்லா இருக்கு கதை.

  ReplyDelete
 2. சின்ன அம்மிணி said...
  வித்தியாசமான அணுகுமுறை. ரொம்ப நல்லா இருக்கு கதை..///

  வாங்க சின்ன அம்மிணி
  உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 3. அழகான நடை ஷைலஜா! ரொம்ப நல்லா நகர்த்திருக்கிரீங்க :) வாழ்ந்த வீடு நமக்கு கொடுக்கும் நியாபகங்கள் அதிகம் தான் :))

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. "எண்ணிய முடிதல் வேண்டும்' எனகிற உங்கள் வலைப் பூவுக்கு ஏற்றவாறு எதை எண்ணினாலும் அதை உயர்வுற முடிக்கிறீர்கள் ஷைலஜா. திண்ணையைப் பற்றி எழுத நினைத்தீர்கள். அற்புதமான கதையும் அருமையான கவிதையும்...வாழ்த்துக்கள்.

  ஜீவனுள்ள சிறுகதை.

  //வசந்தா இந்த திண்ணைலதான் சின்ன வயசுல நடன ஒத்திகை செய்வாள். இதைப்போய் இடிக்கிறாயே?

  ஆ அம்மா..

  தீனமாய் நான் அலறுவது இங்கு யாருக்கும் கேட்காது,, கேட்கவும் வேண்டாம் .வசந்தாவிற்குமட்டும் கேட்டால்போதும்.

  நான் முற்றிலுமாய் எனை இழப்பதற்குள் வசந்தாவை ஒரு தடவை பார்த்துவிட்டால்போதும்.

  ஐயோ இரக்கமற்ற கல் நெஞ்சுக்காரர்கள் என்னை இடித்துக்கொண்டே வருகிறார்களே..சந்துரு! கொஞ்சம் நிறுத்தச்சொல்லேன்,//


  ஜீவனற்றது எனக் கருதும் மக்களுக்கு நடுவில் எப்படி நாம் வாழ்ந்த வீடென்பது ஜீவனுள்ளது என்பதை மனதைத் தொடும் வகையில் படைத்திருக்கிறீர்கள்.

  திண்ணைத் தாத்தாவையும் இக்கதையையும் பாலபாரதியின் திண்ணையிலே பதிந்திட அல்ல அல்ல.. பொதிந்திட வேண்டுகிறேன்!

  ReplyDelete
 6. 05 PM
  Ramya Ramani said...

  அழகான நடை ஷைலஜா! ரொம்ப நல்லா நகர்த்திருக்கிரீங்க வாழ்ந்த வீடு நமக்கு கொடுக்கும் நியாபகங்கள் அதிகம் தான் //

  7:25 PM
  Ramya Ramani said...

  வாழ்த்துக்கள்

  //


  வாங்க ரம்யா..நன்றிவரவிற்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 7. //ராமலக்ஷ்மி said...
  "எண்ணிய முடிதல் வேண்டும்' எனகிற உங்கள் வலைப் பூவுக்கு ஏற்றவாறு எதை எண்ணினாலும் அதை உயர்வுற முடிக்கிறீர்கள் ஷைலஜா. திண்ணையைப் பற்றி எழுத நினைத்தீர்கள். அற்புதமான கதையும் அருமையான கவிதையும்...வாழ்த்துக்கள்.

  ஜீவனுள்ள சிறுகதை.//

  வாங்க ராமலஷ்மி..ரொம்ப மகிழ்ச்சி உங்க வரவில்! ஒரே ஊர்ல இருந்து இன்னமும் நாம் சந்திக்காமல் இருக்கோமேன்னு இருக்கு.சந்திச்சா நிறையவேதிண்ணை நினைவுகளைப்பேசுவோம்.
  கதையை பாராட்டினதுக்கு நன்றி.

  /ஜீவனற்றது எனக் கருதும் மக்களுக்கு நடுவில் எப்படி நாம் வாழ்ந்த வீடென்பது ஜீவனுள்ளது என்பதை மனதைத் தொடும் வகையில் படைத்திருக்கிறீர்கள்.//

  ஆமாம் வீட்டிற்கும் உயிர் இருக்கும் என்று எனக்குத்தோன்றியதை கற்பனை செய்து பார்த்தேன் இந்தக்கதை சில வருடங்கள் முன்பு அமுதசுரபி போட்டில பரிசு பெற்ற கதை!

  //திண்ணைத் தாத்தாவையும் இக்கதையையும் பாலபாரதியின் திண்ணையிலே பதிந்திட அல்ல அல்ல.. பொதிந்திட வேண்டுகிறேன்!//

  நீங்கள் சொன்னது போல செய்கிறேன் ராமலஷ்மி மிக்க நன்றி

  ReplyDelete
 8. அருமை ஷைலஜா...அதுவும் கடைசி வர்ணனைகள்...

  ReplyDelete
 9. அக்கா அசத்திட்டிங்க..அட்டகாசம் ;)

  ReplyDelete
 10. Ezhilanbu8:56 AM

  Romba nalla irukku shyla akka...

  ReplyDelete
 11. 7:46 PM
  கயல்விழி முத்துலெட்சுமி said...

  அருமை ஷைலஜா...அதுவும் கடைசி வர்ணனைகள்...//

  **********நன்றி முத்துலட்சுமி!

  //11:28 PM
  கோபிநாத் said...

  அக்கா அசத்திட்டிங்க..அட்டகாசம் //

  நன்றி கோபி.

  8:04
  //Ezhilanbu said...

  Romba nalla irukku shyla akka...

  8:26 PM //

  நன்றிம்மா ப்ரியா.

  ReplyDelete
 12. கலக்கலான கதை...இன்று வசந்தாவைப் போன்றவர்கள் நகைப்பு பொருளாக அல்லவா பார்க்கப்படுகிறார்கள்?.

  ReplyDelete

உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்!

 

Sample text

Sample Text

Smile is source to win a heart
.Smile is a name of lovely mood.
Smile creates greatness in personality.
So always have a Smile on your face.