மங்களூர்விமான விபத்தின் சோகம் இன்னமும் யார்மனதையும் விட்டு அகன்றிருக்காது. தீயில் கருகிய மொட்டுக்களும் மலர்களும் சருகுகளும் விட்டுச்சென்ற ஞாபக வாசனை
பல நாட்களுக்கு நம்மிடம் சுழன்று கொண்டு இருக்கும்.
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகளோடு யாரையாரையெல்லாம் சந்திக்கப்போகிறோம் என்ற மனமகிழ்ச்சியோடு அவர்கள் அன்று புறப்பட்டார்களோ?
சாலையில் ஒரு ரோஜாப்பூ கீழே கிடந்தாலும் அது யார்கூந்தலிலிருந்துவிழுந்ததோ என்று உதிரிப்பூவிற்காய் ஊசலாடும் நம் மனம், உயிரற்ற சடலங்களை கரிக்கட்டைகளாய் அன்று தொலைக்காட்சியில்பார்த்தபோது யார்பெற்ற பிள்ளையோ யாருடைய நேசத்துக்குரியவர்களோ என்றே தவித்துப்போனது.
கருப்புக்காட்டில் பூத்த அழகிய ரோஜாவாய் விபத்தில் தீயின் கோரப்பிடியிலிருந்தும் தப்பித்த அந்தப்பொருளையும் அன்று டிவி9என்னும் உள்ளூர் சானலில் காட்டினார்கள்.
ரோஜா வண்ணத்தில் அழகிய கைப்பைதான் அது! பெண்கள் உபயோகிக்கும் அந்தக் கைப்பை , தீயில் கருகாமல் கைப்பிடியில்மட்டும் லேசான காயங்களுடன் தெரிந்தது. அதனை ஒரு கோலில் எடுத்து உயரத்தூக்கிப்பிடித்து எடுத்துப்போட்டதை பலமுறை அன்று ஒளிபரப்பினார்கள்.
பார்த்துக்கொண்டே இருந்த போது அந்தக்கைப்பையின் பின்னணிக்கதை என்னவாக இருக்கும் என்று நினைத்தேன் .
எதையுமே இழந்த பிறகு அதன் மதிப்பு இரட்டிப்பாகும் என்று ஒரு அறிஞர் சொல்லியதுபோல
அந்தக்கைப்பை தன்னை வைத்துக்கொண்டிருந்தவரின் அருகாமையை இழந்து அனாதையாய் தவிப்பதுபோல தோன்றவும் அதன்மீதான என் பார்வை வித்தியாசமாகிப் போக ஆரம்பித்தது.
அதன்பாதிப்புதான் இந்த சிறுகதை! படித்துப்பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள்!
(தேவி 07-07-2010 இந்தவாரம் வந்துள்ளது இந்தக்கதை!)