வரமாகி உரமாகி உறவுக்கு நற்
கரமளிக்கும் புத்தாண்டே வருக! வாழ்க!
தரமான வாழ்வை என்றும் மக்கள்
தாராளமாய்ப் பெற தயக்கமின்றி தருக!
சொத்தாகி சுகமாகிப்பொருளை அள்ளிச்
சுற்றமெல்லாம் களிக்கச் சுவையாய் வருவாய்!
கொத்தாகிக்குலையாகிப்பூக்கள் பூக்கும்
கோடையிலே பொலிவுறவே கர ஆண்டே வருக!
இயற்கைத்தாய் சீறிடாமல் எம்மைக்காப்பாய்!
இலங்கைவாழ் எம்மக்கள்தம்மைக்காப்பாய்!
அயர்வின்றி பெருகிடவும் மனிதநேயம்
அருகுபோல் வேருன்றி உலகம் எங்கும்
வியனுறவே வளர்ந்திடவே செய்வாய் தாயே!
வேற்றுமைகள் போக்கிடவே வளங்கள் சேர்ப்பாய்!
செயற்கைக்கோள்விஞ்ஞானசெயல்கள் யாவும்
சீர்பெற்று ஓங்கிபுகழ் அடையச்செய்வாய்!
சித்திரையில் கால் ஊன்றி வந்தத்தாயே!
செந்தமிழ்போல் எமையெல்லாம் செழிக்க வைப்பாய்!
இத்தரையில் புல்பூண்டு அனைத்தும் வாழ
இதமான மழையைப் பின் தருவாய் நீயே!
முத்தாக மலராகத்தோன்றும் எங்கள்
முத்தமிழ்போல் நிலைவாழ்வு அளிப்பாய் தாயே!
வித்தாக மனிதநேயம் மனிதமனத்தின் உள்ளே
சத்தாக இருந்திடவே செய்திடுவாய் தாயே!