போன புதன்கிழமை சிற்றஞ்சிறுகாலையிலேயே ஸ்ரீரங்கத்துக்குள் நுழைந்துவிட்டேன் ஆமாம் பெங்களூரில் அந்திமாலையில் ரயில்புறப்பட்டால் அப்படித்தான் 3 30க்கு கோட்டை ஸ்டேஷனுக்கு கொண்டுவந்துவிடுகிறது. அங்கிருந்து நிமிஷத்துக்கு ஒரு பஸ் அந்தக்காலையில்குளித்து சந்தனம் தரித்து பளபளவென்று வந்து நிற்கிறது! ஏறிக்கொண்டு தூரத்து உறவினர் வீட்டு திருமணத்துக்காக கல்யாண மண்டபம் போனதையும் அக்காரவடிசலையும் அமிர்தம்போல புளியோதரையும் சுவைத்ததையும் சொல்லவரவில்லை..
அரங்கனைக்கண்குளிர சேவித்ததை சித்திரைவீதி உலா வந்து ஏன்ஷியண்ட் எல்டர்ஸ்களை வாசல் திண்ணையில்கண்ணாரக்கண்டு அளவளாவி அவர்கள் அளித்த என்னரங்கப்பெருமாள் காலண்டர்களை சேகரித்துக்கொண்டு தெற்குவாசலில் பன்னீர்சோடாவை ஒன்றுக்கு மூன்றாக உள்ள தள்ளி(பெங்களூரில் பன்னீர் சோடாவையே காணாததால் அப்படி ஒரு பர(ற)ப்பு:)) ராஜகோபுரம் அருகே பழைய பாலுஸ்யூடியோ(அந்த நாளில் ஸ்டூடியோவில போட்டொ எடுத்துக்கொள்ள போனபோது அவர் காமிராமீது போர்த்திய கறுப்புத்துணீயை எடுத்தபடியே என்னைப்பார்த்து ஏழெட்டுதடவைகண் அடித்ததும் வெறுப்பில் நான் கூட வந்த என் சின்ன அத்தையிடம் முணுமுணுக்க”அவர் கண்ணே அப்படித்தாம்மா சில பேருக்குஅதுஒருவியாதி என்று சமாதானம் செய்ததும் நினைவுக்கு வந்தது:):) வா சலில் வற்றக்குழம்பு வைக்ககல்சட்டி வாங்கினதையும் சிரிக்கின்ற காந்திசிலையையும் விவரித்துக்கட்டுரை எழுதலாமென்றிருந்தேன் ஆனால்அன்று மாலை கல்யாண மேள சத்ததையும் மீறி தம்பி சென்னையிலிருந்து வீறிட்டான் போனில்//அப்பா கீழே விழுந்து அடிபட்டு எலும்பு முறிவாகி இருக்கு நீ உடனெ புறப்பட்டுவா எனறான் பதட்டமாய்.. அவ்வளவுதான் பட்டுப்புடவையைக்கூட மாற்றாமல்சென்னைக்குப்போகிற கல்யாணப்பார்ட்டியுடன் காரில்பயணமாகிவிட்டேன்.
வியாழன் இரவு சென்னை சென்றதும் அப்பாவை நர்சிங்ஹோம் சென்று பார்த்தேன் உறவுக்கூட்டமேபடை திரண்டிருந்தது தவிர அப்பாவின் வாக்கிங் நண்பர்கள் அனைவருமே 80+! என்னைப். பார்த்ததும் சிரித்தார்.“கொஞ்ச நா்ளைக்கு நான் வி ஐபி!” என்றார்.
இடுப்புபக்கமாய் எலும்பு முறிவு. நாளை ஆபரேஷன் செய்தே ஆகவேண்டும் என்றார் டாக்டர்.
அப்பா கேட்டார். அந்த நேரம் தியானம் செய்ய அனுமதி உண்டா ஏனென்றால் எனக்கு ஆபரேஷன் என்றால் கொஞ்சம் பயம் மேலும் தியானம் பல வலிகளுக்குத்தீர்வு!
டாக்டர் சிரித்தபடி போய்விட்டார்.
மறுநாள் ஆப்ரேஷன் தியேட்டர் போகுமுன்பு என் தம்பிகளின் உதவியுடன் முகத்தை ஷேவ் செய்து ஆஃப்டர் ஷேவ் லோஷன் அப்பிக்கொண்டார். நன்றாய் தலையை வாரி பவுடர்போட்டுக்கொண்டார்..நெற்றியில் வழக்கம்போல பாபா விபூதியும் அகிலாண்டேஸ்வரி குங்குமமும் தரித்துக்கொண்டார். கண்ணாடிகொண்டுவரச்சொல்லி தன்னை பார்த்துக்கொண்டார் என் தம்பியின் எட்டுவயதுப் பையன் ’என்ன தாத்தா நீ ஆபரெஷன் தியேட்டர்போகப்போறியா இல்ல சினிமாதியேட்டர்போகப்போறியா?’ என்று கேட்டான்.
அதில்லப்பா வியாதியஸ்தர்னா கசங்கின தலை அயர்ன் செய்யாதசட்டை தாடி பாழ் நெற்றி சோக புன்னகை ன்னு முத்திரை குத்திடறாங்க.... அப்படி இருக்க நான் விரும்பல பாரதி என்ன சொல்லி இருக்கார்?
உனக்கே என் ஆவியும் உள்ளமும் தந்தேன்
மனக்கேதம் யாவினையும் மாற்றி எனக்கே நீ
நீண்ட புகழ் வாணாள் நிறை செல்வம் பேரழகு
வேண்டு மட்டும் ஈவாய் விரைந்து
பேரழகாஇல்லைன்னாலும் கொஞ்சம் அழகா இருக்கவேண்டாமா?” எனக்கேட்டுபுன்னகைத்தார்.
கூடவே தம்பியின் மொபைலில் இப்படி என்னுடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்!
வயது 84 ஆகிறதே சக்கரை பிபி இல்லாவிடினும் ஆபரேஷன் நல்லபடியா ஆகணுமே என நாங்கள் கவலைப்பட்டதை அப்பாவின் பேச்சு சற்று நீக்கியது ஆபரேஷனும் நல்லபடியாக முடிந்தது..
அட இத்தனை சீக்கிரம் ஆபரேஷன் ஆகிட்டதா நான் என்னவோன்னு பயந்தேனே இனிமே அடி்க்கடி அடிபட்டுக்கலாம் போல இருக்கே..எல்லாரும்கொஞ்சம் ஸ்பெஷலாகவே நம்மை கவனிக்கி்றாங்க என்று ஜோக்கடித்தார்.
அப்பாவுடன் மருத்துவ மனை அறையில் பலமணி நேரங்கள் இந்த நான்குநாட்களில் பேசியதில்பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.
“ நிறையப் படித்தபிறகுதான் தெரிகிறது நாம் ஒண்ணூமே படிக்கவில்லை என்று” என்றார்.
கம்பனை பாரதியை ஆழ்வார்பெருமக்களை தாம் வியந்து போற்றீய கிவாஜ, திருலோக சீதாராம் சுகிசுப்ரமண்யம் ந பிச்சமூர்த்தி போன்ற உன்னதமனிதர்களை நினைவுகூர்ந்தார்...
ஆனாலும் அப்பாவுக்கு என்றைக்கும் செல்லப்பிள்ளை கவிஞர்ஸ்ரீரங்கம் மோகனரங்கந்தான்,...”என்னமா எழுதறான்மா தலைமாட்டில் அவனோட ஹிந்துமதம் அறிமுகம் புக் தான் வச்சிருக்கேன் பாரதிபக்கத்துல... அவன் போயி இந்த இந்தியன்பாங்குல ஏன் உக்காந்திருககான்? அவன் எங்கயோ இருக்கவேண்டியவன் எங்கயோ இருக்கவேண்டியவ்ன்!” என கண்பனித்தார்... மோகனரங்கன் ஆபரேஷன்முடிந்து அவரைப்பார்க்க வந்தபோது சாதாரணமாய் வீட்டில் சமீபகாலமாய் காது சரியாகக்கேட்பதில்லை என்பதால் அதிகமாகப்பேசாத அப்பா அரங்கனாரிடம் நிறையவே பேசிவிட்டு ,”என்ன நான் பிரவசனம் (உபந்நியாசம்) செய்கிறமாதிரி இருக்கா?” எனக்கேட்க அதற்கு அரங்கனார்,”பிறவசனம்(வெட்டிப்பேச்சு) விடவும் பிரவசனமதேவலை” எனச்சொல்ல அதில் பூரித்துப்போனார்! சிலபேர் ராசி பாருங்க நாம ஏதேதோ சொல்வோம் ஆனா நம்மை கண்டுக்கமாட்டாங்க:!
‘நிங்க அரசியல்வாதியா இல்ல பிரபலபுள்ளீயா இவ்வளோபேர்வந்துபாக்கறாங்க? “ ஆஸ்பித்திரி சிப்பந்தி கேட்டார் அப்பாவிடம்
அப்பா சொன்னார் ...எல்லாருக்கும் நான் நிறையக்கொடுத்திருக்கேன்ப்பா
அப்படியா அவளோபணக்காரரா நீங்க?
ஆமாம்ப்பா மனசுல பெரிய பணக்காரந்தான் அன்பைவாரிக்கொடுத்துருக்கேன்ப்பா அதான் திருப்பிக்கொடுக்க இப்போ வந்துருக்காங்க...
ஆஸ்பித்திரி சிப்பந்திக்கு புரியவில்லை. ஆனாலும், ஒரு விஷயம் போகிறபோக்கில் சொல்லிப்போனார்.” பக்கத்துரூம்ல ஒரு இளம்வயசுப்பையன் மண்டைல அடிபட்டுக்கிடக்கான்.. அவன் பொண்டாட்டிவீட்டுல தன் பொண்ணு வேற மதத்து்காரப்பையனைக்கட்டிக்கிட்டான்னு பொண்ணுவீட்டுக்காரங்க பையன் தனியா போவிறப்போ சாத்திடடுபொண்ணை கடத்திட்டுப்போயிட்டாங்க ப்ரண்ட் ஒருத்தன் கொண்டுவந்துச் சேர்ந்திருக்கான் பாவம்.. யாரும் பாக்கவரல அனாதையாகிடக்கான் பரிதாபமா இருக்குது் ஜாதி மதச்சண்டை நம்ம நாட்டுல எப்பதான் ஓயுமோ?’
கடைசி வாக்கியம் காதில் சுழன்றுகொண்டே இருக்க,
இன்றுகாலை ப்ருந்தாவன் ரயிலில் ஏறினேன்//எதிர் சீட்டில் முதியவர் ஒருவர் கையில் உத்தராட்சமாலையை உருட்டி ஜபித்தபடி அமர்ந்திருந்தார்.
அவர் அருகே இஸ்லாமிய முதியவர் மணிமாலை ஒன்றைக்கையில் வைத்து ஜபித்தபடி இருந்தார்.. இருவரும் தனித்தனியே பயணம் செய்ய வந்த ரயில் பயணிகள்தான்!.
. பிறகு சில நிமிஷங்களில் ஜன்னல்வழி அடித்த காற்றில் இஸ்லாமியப்பெரியவர் அருகிலிருந்த சைவப்பெரியவரின் தோளில் தனது வெண் தாடி சாமரம் வீச உறங்கிக்கொண்டிருந்தார்.
*************************************************************************************************************************************************************************************************
பிகு இன்று என் அப்பாவின் பிறந்த நாள் என்பதால் நீண்ட நாளைக்குப்பிறகு பதிவாக எழுதிவிட்டேன்! யாரும் வாசித்து திரட்டிகளில் சேர்த்தால் நன்றி முன்கூட்டியே!